பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் காரல் மார்க்சின் 143-வது நினைவு நாளையொட்டி மார்க்ஸ் – எங்கெல்ஸ் எழுதிய “புனிதக் குடும்பம்” என்ற நூலின் ஒரு பகுதியை இங்கு வெளியிடுகிறோம்.
***
தொடக்க காலத்தில் மனிதனின் நற்பண்புகள், எல்லா மனிதர்களுக்கும் சம அளவில் கொடுக்கப்பட்ட அறிவு, அனுபவம், பழக்கவழக்கம், கல்வியின் சர்வவல்லமை, புறச் சூழல் மனிதன் மீது செலுத்துகிற தாக்கம், தொழிலின் மாபெரும் முக்கியத்துவம், ஆனந்தமாக இருப்பதை நியாயப்படுத்துதல் இதரவை பற்றிய பொருள்முதல்வாதத்தின் போதனைகளிலிருந்து, அது கம்யூனிசத்தோடும் சோஷலிசத்தோடும் எவ்வாறு கட்டாயமாக இணைக்கப் பட்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்வதற்கு மிகச் சிறந்த நுண்ணறிவு தேவைப்படாது.
மனிதன் தன்னுடைய அறிவு, புலனுணர்வு இதரவை அனைத்தையும் புலன்களின் உலகத்திலிருந்தும் அதிலிருந்து பெறப்பட்ட அனுபவத்திலிருந்தும் அடைகிறானென்றால் இனி செய்ய வேண்டியது என்னவென்றால் அனுபவ உலகத்தை -அதில் உண்மையிலேயே மனிதப் பண்புடையவற்றை மனிதன் அனுபவிப்பதற்கும் அதனுடன் நெருக்கமேற்படுத்திக் கொள்வதற்கும், அவன் தன்னை மனிதனாக உணர்ந்து கொள்ளக் கூடிய வகையிலும் – மாற்றியமைக்க வேண்டும். சரியான முறையில் புரிந்து கொள்ளப்பட்டால் நலன்களே எல்லா ஒழுக்க நெறிகளுக்கும் இலட்சியம் என்பதால், மனிதனின் தனிப்பட்ட நலன் மனித குலத்தின் நலனோடு பொருந்துமாறு செய்ய வேண்டும்.
பொருள்முதல்வாதக் கருத்தின் படி மனிதன் சுதந்திரம் இல்லாதவன் என்றால் – அதாவது ஏதாவது ஒன்றை ஒதுக்குகிற எதிர்மறைச் சக்தியின் மூலமாக இன்றி, தனது உண்மையான தனித்தன்மையை உறுதியாகக் காட்டுகின்ற நேரடியான சக்தியின் மூலமாகவே மனிதன் சுதந்திரம் உடையவனாகக் கருதப்படுகிறான் – குற்றங்களுக்காக, தனி மனிதனை தண்டிக்கக் கூடாது; குற்றங்களின் சமூக-விரோதப் பிறப்பிடங்கள் அழிக்கப்பட வேண்டும்; ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுடைய உயிராற்றலின் இன்றியமையாத வெளிப்பாட்டுக்குரிய சமூக வாய்ப்புக் கொடுக்கப்பட வேண்டும். மனிதன் புறச்சூழலால் உருவாக்கப்படுகிறான் என்றால் அந்தப் புறச்சூழல் மனிதப் பண்புடையதாக்கப்பட வேண்டும். மனிதன் இயற்கையாகவே கூடி வாழ்பவன் என்றால் அவன் தன்னுடைய உண்மையான இயல்பை சமூகத்தில் மட்டுமே வளர்த்துக்கொள்ள முடியும்; அந்த இயல்பின் சக்தியை தனிப்பட்ட தனிநபரின் சக்தியால் அளக்கக் கூடாது; சமூகத்தின் சக்தியினால் அளக்க வேண்டும்.
(1844 செப்டம்பர் – நவம்பரில் எழுதப்பட்டது)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











