கேள்வி பதில்: சாதியற்றோர் சான்றிதழ் – சாதிவாரிக் கணக்கெடுப்பு – தலித் மக்கள் எழுச்சி

களத்தில் இவ்வியக்கத்தின் அரசியல் உள்ளடக்கம் குறித்து பல்வேறு கேள்விகள், சந்தேகங்கள், மாற்றுக்கருத்துகளை மக்கள், ஜனநாயக சக்திகள் பலரும் தோழர்களிடம் முன்வைக்கின்றனர். இது பற்றியான ஆரோக்கியமான விவாதம் சமூகத்தில் கட்டமைக்கப்பட வேண்டும் என்பதே எங்களின் நோக்கமும். எனவே, அதற்கான தொடக்கமாக களத்தில் தோழர்கள் எதிர்கொண்ட கேள்விகளையும் அதற்கான விளக்கங்களையும் இங்கு தொகுத்து பதிவிடுகிறோம்.

(சென்ற இதழின் தொடர்ச்சி)

“சாதி, மதம் கடந்து காதலிக்க – மணம் முடிக்க வேண்டும் ஜனநாயகம்!”
இயக்கத்தின் சூடேறிய கேள்விகள்!

“சாதி சான்றிதழை ஒழித்துவிட்டால், சாதி ஒழிந்துவிடும்” என்பது போன்ற வாதங்கள் பொதுவாக இட ஒதுக்கீட்டிற்கு எதிரான மனநிலையிலிருந்து முன்வைக்கப்படுகின்றன. அதேசமயம், உண்மையாகவே சமத்துவ உணர்விலிருந்தும் சிலர் தங்களை சாதியற்றோர், மதமற்றோர் என பதிவு செய்து சான்றிதழ் பெற விரும்புகின்றனர், முயற்சிக்கின்றனர். சான்றாக, இயக்குநர் வெற்றிமாறன் சாதியற்றோர் சான்றிதழ் வாங்க முயற்சித்ததாக தெரிவித்த போது கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார். இவ்விவகாரத்தை எப்படி பார்க்க வேண்டும்?

“சாதி சான்றிதழை ஒழித்துவிட்டால், சாதி ஒழிந்துவிடும்”, “பள்ளிகளில் சாதி கேட்பதை நிறுத்திவிட்டால் சாதி ஒழிந்துவிடும்” என்பது போன்ற வாதங்கள் நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டே வருகின்றன. இட ஒதுக்கீடு மீதான ஆதிக்க சக்திகளின் வன்மத்திலிருந்தும் மேட்டுக்குடி வர்க்கப் பார்வையிலிருந்துமே இவ்வாதங்கள் பெரும்பான்மையாக முன்வைக்கப்படுகின்றன.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சாதி அடிப்படையிலான ஒடுக்குமுறையாலும் தீண்டாமைக் கொடுமையாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் முன்னேறுவதற்கான வாய்ப்பை வழங்கும் சீர்திருத்த நடவடிக்கையாகத்தான் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது. இந்த இட ஒதுக்கீட்டை பெறுவதற்கான நிர்வாகக் கருவியாகவே சாதி சான்றிதழ் செயல்படுகிறது.

ஆனால், இன்றளவும் இருளர் உள்ளிட்ட பழங்குடியின மக்களுக்கு சாதி சான்றிதழ் பெறுவது என்பது பெரும் போராட்டமாகவே உள்ளது. பழங்குடியின குழந்தைகள் பலர் சாதி சான்றிதழ் பெற முடியாமல் கல்வியைத் தொடர முடியாத அவலங்களும் அரங்கேறுகின்றன.

இத்தகைய சமூக சூழலில், “சாதி சான்றிதழை ஒழித்துவிட்டால், சாதி ஒழிந்துவிடும்” என்று பேசுவது பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு கிடைக்கும் கொஞ்சநஞ்ச உரிமைகளையும் பறிப்பதை நோக்கமாகக் கொண்டதே என்பதை தனியாக விளக்க வேண்டியதில்லை.

அதேசமயம், சாதியற்றோர், மதமற்றோர் எனும் சான்றிதழ் பெற முற்படுபவர்களையும் இதே தராசில் வைத்துப் பார்ப்பது பொருத்தமாக இருக்காது. சாதியற்றோர், மதமற்றோர் என சான்றிதழ் பெறுவது என்பது சாதியற்ற ஒரு பொதுப் பண்பாட்டை நோக்கி முன்னேறுவதற்கான தொடக்கக்கட்ட முயற்சி.

சாதியற்றோர் சான்றிதழ் என்பது ஒருவரின் சமத்துவ உணர்வை சட்ட ரீதியாக அங்கீகரிக்கும் உரிமை. அதிலும், சாதியற்றோர் சான்றிதழ் பெறுபவருக்கும் இட ஒதுக்கீடு வழங்குவதன் மூலம் பலரும் தங்களை சாதியற்றோராக அறிவித்துக்கொள்ள முன்வருவார்கள்.

அதேசமயம், இந்த கட்டமைப்பிற்குள் சாதியற்றோர் சான்றிதழ் வாங்குவதற்கும் பல கட்டப் போராட்டங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் இதுவரை சாதி, மதமற்றோர் சான்றிதழ் வழங்குவதற்கான அரசாணை எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. இதனால், சாதியற்றோர் சான்றிதழ் பெறுவது அரிதினும் அரிதாகவே நடைபெறுகிறது.

சாதி – மதமற்றவர் எனும் சான்றிதழ் பெற்ற முதல் இந்தியரான சினேகா பார்த்திபராஜா

சமீபத்தில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில், சாதி, மதமற்றோர் சான்றிதழ் வழங்க வேண்டி தொடுக்கப்பட்ட வழக்கில், இந்து மத சடங்குகளின்படி மதத்தை துறந்தால்தான் சாதி மதமற்றோர் சான்றிதழ் வழங்க முடியும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மதமற்றவராக தன்னை அறிவிக்க விரும்பும் ஒருவரை மதச் சடங்குகள் மூலம் அதனை நிரூபிக்கச் சொல்வது எவ்வளவு பெரிய முரண்? எவ்வளவு பிற்போக்கானது?

இந்திய அரசியலமைப்பின்படி, ஒருவர் சாதி, மத அடையாளங்களை துறப்பதற்கு உரிமை உள்ளது. மேலும், அது ஒருவரின் தார்மீக உரிமையும் கூட. எனவே, சாதி சான்றிதழ், இட ஒதுக்கீடு பெறுவதற்கான ஒடுக்கப்பட்ட மக்கள் போராட்டத்திற்கு துணை நிற்பதுடன், சாதி மதமற்ற ஒரு சமத்துவ சமூகப் பண்பாட்டை உருவாக்குவதற்கான முயற்சிகளையும் நாம் ஒருங்கிணைந்தே மேற்கொள்ள வேண்டியுள்ளது.

இவ்வியக்கத்தின் ஐம்பெரும் முழக்கங்களில் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று முன்வைத்திருக்கிறீர்கள். சாதிவாரிக் கணக்கெடுப்பு பொதுவில் சமூக நீதிக்கானதாக பார்க்கப்படுகிறது. ஆனால், ஆனந்த் தெல்தும்டே போன்றோர் இதில் மாறுபட்ட கருத்துகளை தெரிவிக்கின்றனரே, இதை எப்படி புரிந்துகொள்வது?

பிற்போக்குப் பார்ப்பனிய சாதியப் படிநிலை அமைப்பைக் கொண்ட இந்திய சமூகத்தில், படிநிலைச் சாதிய அமைப்பிற்கேற்பவே மக்கள் சமூக – பொருளாதார நிலையைப் பெற்றிருக்கின்றனர்.

ஆனால், இன்றளவில் இந்தியாவில் மொத்தம் எத்தனை சாதிகள்-உட்சாதிகள் உள்ளன? சாதி ரீதியாக மக்கள்தொகை எண்ணிக்கை என்ன? தாழ்த்தப்பட்ட – பிற்படுத்தப்பட்ட – மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூக பொருளாதார நிலை என்ன? என்பவை குறித்த எந்தத் தரவுகளும் ஒன்றிய அரசிடமோ அல்லது மாநில அரசுகளிடமோ இல்லை.

பிரிட்டீஷ் ஆட்சியில் 1931-இல் எடுக்கப்பட்ட சாதிவாரியான கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே இதுவரை இந்தியாவில் இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

2011-இல் எடுக்கப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் போது மக்களிடம் சாதி குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டிருக்கின்றன. அதன்படி, இந்தியாவில் மொத்தமாக 46 லட்சம் சாதிகள், அதன் துணை சாதிகள், சாதி பெயர்கள், குலங்கள் குறித்த தகவல்கள் மக்களால் அளிக்கப்பட்டிருந்தன. இவை குறித்த எந்தத் தரவுகளும் ஒன்றிய அரசால் இதுவரை வெளியிடப்படவில்லை.

இந்நிலையில், இட ஒதுக்கீடு தொடர்பான வழக்குகளில் நீதிமன்றங்கள் பிற்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கை குறித்த புள்ளிவிவரங்களை தொடர்ந்து கோருகின்றன.

இது, இந்தியாவில் சாதிவாரியாகக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலுப்படுத்துகின்றது. 2024 நாடாளுமன்றத் தேர்தலின் போது சாதிவாரிக் கணக்கெடுப்பு விவகாரம் முக்கிய வினையாற்றியது. ராகுல் காந்தி தனது தேர்தல் பிரச்சாரத்தின் முக்கியமான ஆயுதமாக சாதிவாரிக் கணக்கெடுப்பை முன்னெடுத்தார். தெலுங்கானாவிலும் பீகாரிலும் சாதிவாரிக் கணக்கெடுப்புகள் (Caste Surveys) நடத்தப்பட்டன. இவை பிற மாநிலங்களிலும் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென்ற கோரிக்கையைத் தீவிரப்படுத்தின.

ஆனால், ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பலை பொறுத்தவரை சாதிவாரிக் கணக்கெடுப்பை, தான் பிரச்சாரம் செய்யும் ‘இந்து ஒற்றுமைக்கான’ அச்சுறுத்தலாகவே பார்க்கிறது. பிரதமர் மோடி கூட சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோருபவர்கள் மீது “நகர்ப்புற நக்சல் மனநிலை கொண்டவர்கள்” என்றும் “இந்தியாவை பிளவுபடுத்துபவர்கள்” என்றும் வெறுப்பைக் கக்கியுள்ளார்.

சமூக செயற்பாட்டாளர் ஆனந்த் தெல்தும்டே.

ஆனால், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பல் திடீரென்று சாதிவாரிக் கணக்கெடுப்பிற்கு எதிரான தனது நிலைப்பாட்டிலிருந்து “அந்தர் பல்டி” அடித்தது. அடுத்துவரும் மக்கள்தொகைக் கணக்கெடுப்புடன் சாதிவாரிக் கணக்கெடுப்பும் நடத்தப்படும் என்று அறிவித்தது.

இந்த பின்னணியிலிருந்துதான் சாதிவாரிக் கணக்கெடுப்பின் மீதான அச்சங்கள் எழுப்பப்படுகின்றன.

ஏனெனில், பா.ஜ.க. திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதற்கு பின்னணியில், சரிந்துவரும் தனது மக்கள் அடித்தளத்தை தக்கவைக்க வேண்டும் என்ற உத்தியும், தனது சித்தாந்த மற்றும் அரசியல் ஆதாயத்திற்காக, தாழ்த்தப்பட்ட – இதர பிற்படுத்தப்பட்ட மக்களை சாதி ரீதியாக பிரித்தாளுவதற்கான சூழ்ச்சியும் அடங்கியுள்ளது. பாசிச கும்பல் தனது பிளவுவாத அரசியல் நோக்கத்திற்காக சாதிவாரிக் கணக்கெடுப்பையும், இட ஒதுக்கீட்டையும் பயன்படுத்துவதற்கான அபாயம் உள்ளது. இது தொடர்பாக புதிய ஜனநாயகம் ஜூலை 2025 இதழில், “பா.ஜ.க-வின் சாதிவாரிக் கணக்கெடுப்பு: சாதி முனைவாக்கத்திற்கான கருவி” என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

ஆனால், சமூக செயற்பாட்டாளர் ஆனந்த் தெல்தும்டே பா.ஜ.க. மேற்கொள்ளும் சாதிவாரிக் கணக்கெடுப்பினால் ஏற்படும் விளைவுகள் குறித்து எச்சரிக்கும் அதேவேளையில், காலனியாதிக்கக் காலத்திலிருந்து தற்போதுவரை ஆளும் வர்க்கங்கள் சாதிவாரி மற்றும் மக்கள்தொகைக் கணக்கெடுப்புகளையும், இட ஒதுக்கீடுகளையும் எவ்வாறு தங்கள் அரசியல் லாபத்திற்காக பயன்படுத்துகின்றன என்பதை விளக்குகிறார். ‘சமூக நீதி’ என்ற பெயரில் ஆளும் வர்க்கங்கள் இவற்றை தங்களுடைய அரசியல் லாபத்திற்காக பயன்படுத்துவது சாதி, மத அடையாளங்களை மேலும் ஆழப்படுத்துகிறது என்று எச்சரிக்கிறார். சாதிவாரிக் கணக்கெடுப்பு – இட ஒதுக்கீடு போன்றவைதான் சமூக நீதிக்கான ஒரே தீர்வு என்ற ‘புனிதப்படுத்தலை’ கேள்விக்குள்ளாக்குகிறார்.

இந்த வகையில் அவர் முன்வைக்கும் கருத்துகள் பரிசீலிக்கப்பட வேண்டியவையே.

அதேசமயம், மக்கள் பல சாதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்தியா போன்ற பின்தங்கிய சமூகத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான கொள்கைகளை வகுப்பதற்கும் இட ஒதுக்கீடு வழங்குவதற்கும் இதுபோன்ற கணக்கெடுப்புகள் முக்கியத்துவமுடையதாகும். அதிலும் மறுகாலனியாக்கக் காலகட்டத்தில் மக்கள் சமூகப் பொருளாதார ரீதியாக பல்வேறு மாற்றங்களை சந்தித்து வருகின்றனர். இட ஒதுக்கீட்டிற்கான போராட்டங்கள் அதிகரித்து வருவதையும் இதன் பின்னணியில் இருந்தே பார்க்க வேண்டும். எனவே, தற்போதைய சூழலில் சாதிவாரிக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானதும் நிறைவேற்றப்பட வேண்டியதுமாகும்.

ஆனால், சாதிவாரிக் கணக்கெடுப்பு என்பது தேர்தல் அரசியலுக்கான கருவியாகவோ அல்லது பிளவுவாத அரசியலுக்கான ஆயுதமாகவோ அல்லாமல், அறிவியல் மற்றும் ஜனநாயகப்பூர்வமாக  நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இந்த அடிப்படையில் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தி, அத்தரவுகளை மக்கள் நலனுக்காகவும் சமூக சீர்திருத்தத்திற்காகவும் பயன்படுத்துவது என்பது  நிலவுகின்ற கட்டமைப்பில் சாத்தியமற்றது என்பதையே இத்தனை ஆண்டுகால அனுபவம் உணர்த்துகிறது. இங்குதான் பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு எனும் மாற்றுக் கட்டமைப்புக்கான தேவையும் போராட்டமும் முக்கியத்துவம் பெறுகிறது.

மதுரையைத் தமிழ்ப் பண்பாட்டுத் தளமாக அறிவிக்க வேண்டிய தேவை என்ன?

இந்தியாவின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. பாசிச கும்பல் தனது இந்துராஷ்டிரக் கனவிற்காக இந்தியாவின் பன்மைத்துவத்தை அழித்து ஒற்றைத்துவத்தை நிறுவத் துடிக்கிறது. அதற்காக, ஒரே நாடு – ஒரே தேர்தல், ஒரே வரி, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே பண்பாடு என்ற சர்வாதிகாரத்தை நிலைநிறுத்தி வருகிறது. பார்ப்பனிய எதிர்ப்பு மரபைக் கொண்ட தமிழ்நாட்டைக் குறிவைத்தும் பல்வேறு காய்நகர்த்தல்களை மேற்கொண்டு வருகிறது.

கீழடி அகழாய்வு.

பாசிச கும்பலின் இந்த ஒற்றைமயமாக்கலுக்கு எதிராக, அந்தந்த மாநிலங்களில் உள்ள முற்போக்கு, ஜனநாயக, சமத்துவ மரபுகள், பண்பாடுகளை உயர்த்திப் பிடிப்பது என்பது இன்றைய சூழலில் மிகவும் முக்கியமானது.

அந்தவகையில், தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியும் பல்வேறு வகையான சிறப்புகளைக் கொண்டுள்ளன. அதில் குறிப்பாக, மதுரை மண்டலம் என்பது தமிழர் நாகரீகத்தின் தொட்டிலாக விளங்குகிறது. கீழடி தொல்லியல் புதையல்கள், பழங்காலத் தமிழ் கல்வெட்டுகள், சமணர் குகைகள் போன்றவை இதற்கான சான்றாதாரங்களாகும்.

ஆளும் வர்க்கத்தைப் பணிய வைத்த இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம், ஜல்லிக்கட்டு போராட்டங்களின் தொடக்கப்புள்ளி மதுரையே. டங்ஸ்டன் சுரங்கத் திட்ட எதிர்ப்புப் போராட்டத்தில் பாசிச கும்பலை மண்டியிடச் செய்ததுடன், சிப்காட், கிரானைட் எதிர்ப்பு என கார்ப்பரேட் எதிர்ப்புப் போராட்டங்கள் உறுதியாக நடைபெறும் களமாகவும் மதுரை திகழ்கிறது.

திருப்பரங்குன்றம், பறம்பு மலை என மதநல்லிணக்க அடையாளங்களின் தாய் மண்ணாகவும், பார்ப்பனிய எதிர்ப்பு நாட்டார் தெய்வ, குல தெய்வ வழிபாடுகளின் அடையாளமாகவும் மதுரை திகழ்கிறது.

இத்தகைய சிறப்புமிக்க  மதுரை மண்டலத்தைத் தமிழ்ப் பண்பாட்டு மண்டலமாக அறிவிப்பது இம்மரபுகளை அழித்தொழிக்கத் துடிக்கும் பாசிசக் கும்பலுக்கு அடிக் கொடுப்பதாக அமையும்.

குறிப்பாக, பாசிச பா.ஜ.க. கும்பல், மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார தென் மாவட்டங்களில் தலித் மக்களைக் குறிவைத்து சாதியத் தாக்குதல்களைக் கட்டவிழ்த்து விடுவது; திருப்பரங்குன்றத்தில் மதக்கலவரத்தைத் தூண்ட முயற்சிப்பது; ஜனநாயக சக்திகள் மீது வன்முறைகளை ஏவுவது; கார்ப்பரேட் திட்டங்களுக்கான குவிமையமாக மாற்றுவது என அதனைத் தனது சோதனைக்களமாக மாற்றத் துடிக்கிறது. இதன் மூலம் தமிழ்நாட்டில் வேரூன்றத் திட்டமிடுகிறது. எனவே, தென்மாவட்டத்தில் பாசிச கும்பலை வீழ்த்துவதானது தமிழ்நாட்டில் அதன் குதிகால் நரம்பை அறுத்தெறிவதாகும்.

இந்த அடிப்படையிலிருந்தும் மதுரையைத் தமிழ்ப் பண்பாட்டு மண்டலமாக அறிவிப்பதை இணைத்துப் பார்க்க வேண்டும்.

மேலும், ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பாசிச கும்பல் தான் ஆளும் உத்தரப்பிரதேசம், குஜராத், அசாம் போன்ற மாநிலங்களை இந்துராஷ்டிரத்திற்கான சோதனைச்சாலைகளாக மாற்றி வருகிறது. இதற்கு எதிராக, பாசிச கும்பலுக்குக் கிலியூட்டும் தமிழ்நாட்டின் பண்பாட்டை உயர்த்திப்பிடிக்கும் வகையில் மதுரையைத் தமிழ்ப் பண்பாட்டு மண்டலமாக அறிவிப்பது பாசிச எதிர்ப்பில் ஒரு முன்மாதிரியை உருவாக்குவதாக அமையும்.

தலித் மக்களிடையே எழுச்சி ஏற்பட்டுள்ளதாகச் சொல்கிறீர்கள். இந்த எழுச்சி தமிழ்நாட்டில் மட்டும்தான் ஏற்பட்டுள்ளதா அல்லது இந்தியா முழுவதும் ஏற்பட்டுள்ளதா?

கோரேகான் கிராமத்தில் திரண்டெழுந்த மக்கள் வெள்ளம்.

சாதி ஆதிக்கத்திற்கு எதிராகத் தலித் மக்களிடையே ஏற்பட்டுள்ள இந்த எழுச்சியானது தமிழ்நாட்டில் மட்டும் ஏற்பட்டுள்ளதாகப் பார்க்க முடியாது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தலித் மக்களிடையே எழுச்சியைப் பார்க்க முடிகிறது.

இந்தியாவில் மறுகாலனியாக்கக் கொள்கைகளின் விளைவாக நகரமயமாக்கல், விவசாய நசிவு போன்றவை தீவிரமாக நடைபெறும் இடங்களில் இவ்வெழுச்சி துலக்கமாகத் தெரிகிறது. சான்றாக, 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு தரவுகளின்படி, இந்தியாவிலேயே அதிகமாகத் தமிழ்நாட்டில்தான் 48.5 சதவிகித மக்கள் நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர். அதைத் தொடர்ந்து கேரளா, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்கள் உள்ளன. இம்மாநிலங்களில் தலித் மக்களின் போராட்டங்களும் சமத்துவத்திற்கான குரலும் அதிகரித்து வருவதைக் காண முடியும்.

அதேசமயம், சமத்துவத்திற்கான குரல் மேலோங்கி வருவதைச் சகித்துக்கொள்ள முடியாத ஆதிக்க சக்திகள் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது சாதியத் தாக்குதலைத் தீவிரப்படுத்துகின்றன.

குறிப்பாக, 2014-இல் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியா முழுவதுமே தலித் மக்கள் மீதான தாக்குதல் தீவிரமடையத் தொடங்கியது. ‘பசுவதை’ எனக் கூறி காவிக் குண்டர்களால் அரங்கேற்றப்படும் படுகொலைகள், தலித் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள், அவர்கள் உரிமைகளைப் பறிக்கும் நீதிமன்றத் தீர்ப்புகள், சட்டத்திட்டங்கள் எனப் பல்வேறு வகைகளில் தலித் மக்கள் மீதான ஒடுக்குமுறைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ஆனால், இத்தாக்குதல்கள் தலித் மக்களின் எதிர்ப்பையும் எழுச்சியையும் மேலும் தூண்டும் விதமாகவே அமைகின்றன. அறிஞர்கள் சிலர், இதனை நேரடியாகத் தலித் மக்களின் எழுச்சி என்று வரையறுக்காவிட்டாலும், “2015-க்குப் பிறகு தலித் மக்களிடையே விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. தலித் அரசியல் புதிய மாற்றத்தைக் கோருகிறது” என்று குறிப்பிடுகின்றனர். 2014 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் நடந்த பல சம்பவங்களை இதற்கான சான்றாகச் சுட்டிக்காட்டுகின்றனர்.

உனாவில் இந்து மதவெறிக் கும்பலின் தாக்குதலைக் கண்டித்து குஜராத் தாழ்த்தப்பட்ட மக்கள் அகமதாபாத் நகரில் நடத்திய ஆர்ப்பாட்ட ஊர்வலம்.

குறிப்பாக, ஒன்றியத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு குஜராத் மாநிலம் உனா பகுதியில் தலித் மக்களிடையே ஏற்பட்ட எழுச்சி மிக முக்கியமானது. 2016-ஆம் ஆண்டில் உனா தாலுகாவின் மோடா சமாதியாலா கிராமத்தில் செத்த மாட்டின் தோலை உரித்ததற்காகத் தலித் இளைஞர்களை இந்து மதவெறியர்கள் மிகக் கொடூரமாகத் தாக்கினர்.  இத்தாக்குதல் குஜராத் தலித் மக்களிடம் பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியது. இதற்கெதிராகக் கிளர்ந்தெழுந்த தலித் மக்கள் அரசு அலுவலகங்களில் மாட்டுத் தோல்களையும் எலும்புக் கூடுகளையும் வீசியது பாசிச கும்பலுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியது. தலித் மக்களின் போர்குணமிக்க இப்போராட்டம், ஆர்.எஸ்.எஸ்-இன் இரும்புக் கோட்டையாகப் பார்க்கப்படும் குஜராத்தில் ஜிக்னேஷ் மேவானி ஒரு தலித் இயக்கத்தைக் கட்டியமைப்பதற்கான வழியேற்படுத்திக் கொடுத்தது.

இச்சம்பவத்திற்கு முன்னதாக, ஹைதராபாத் மத்தியப் பல்கலைக்கழகத்தில் காவிக் கும்பலின் ஒடுக்குமுறையை எதிர்த்துப் போராடிய ஆராய்ச்சி மாணவர் ரோகித் வேமுலா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ரோகித் வெமுலாவின் தற்கொலை நாடெங்கும் இந்து மதவெறிக் கும்பலுக்கு எதிராக மாணவர்களையும் அறிவுத்துறையினரையும் வீதிக்கு அழைத்து வந்தது. இன்று, பத்தாண்டுகள் கடந்த பின்னும் கல்வி நிலையங்களில் தீண்டாமைக் கொடுமைகளைத் தடுப்பதற்கான “ரோகித் வெமுலா சட்டத்தை” இயற்றக்கோரி போராட்டங்கள் நடந்து வருகின்றன.

அதேபோல், 2017 மே மாதத்தில் உத்தரப்பிரதேசத்தில் சஹரான்பூர் பகுதியில் தாகூர் ஆதிக்கச் சாதி வெறியர்களின் அடக்குமுறைக்கு எதிரான தலித் மக்களின் போராட்டம் முக்கியத்துவமுடையது. இந்தப் போராட்டத்தில் சந்திர சேகர் ஆசாத் உருவாக்கிய பீம் சேனா முக்கியப் பங்காற்றியது.

இதற்கடுத்து, 2018-இல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராகத் தலித் அமைப்புகள், மக்கள் நாடுதழுவிய அளவில் போராட்டத்தில் இறங்கினர். இந்து மதவெறியர்களின் கோட்டையான இராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் தலித் மக்கள் பெரும் எதிர்ப்பினை வெளிப்படுத்தினர். போராட்டக்களம் தோறும் போலீசு கடுமையான தடியடி, துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் மொத்தம் ஒன்பது பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதில், போலீசு மட்டுமின்றி, பல இடங்களில் பார்ப்பனிய ஆதிக்கச் சாதியினரும் துப்பாக்கிச் சூட்டை நடத்தியது அக்கும்பலின் சாதிய வன்மத்தைக் காட்டுகிறது.

அதேபோல், இதே 2018-ஆம் ஆண்டில் பாசிச கும்பலால் கட்டவிழ்த்துவிடப்பட்ட பீமா கொரேகான் கலவரத்தைத் தலித் மக்களின் எழுச்சியின் மீதான தாக்குதலில் ஒன்றாகத்தான் பார்க்க வேண்டியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் அமைந்துள்ள கோரேகான் கிராமத்தில் 1818-ஆம் ஆண்டு நடந்த போரில் சில நூறு வீரர்களைக் கொண்டிருந்த ஆங்கிலேய மகர் படைப் பிரிவு ஆயிரக்கணக்கான வீரர்களைக் கொண்டிருந்த சித்பவன் பார்ப்பனர்களான பேஷ்வா படையை வெற்றிக் கொண்டது.

பார்ப்பனிய சாதி ஆதிக்கத்திற்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்கள் நடத்திய இந்த வீரப் போரின் நினைவுச் சின்னமாக இந்த இடத்தில் பீமா கோரேகான் வெற்றித்தூண் நிறுவப்பட்டது. இந்த வெற்றிநாளின் 200-ஆம் ஆண்டையொட்டி “எல்கர் பரிஷத்” என்ற (எல்கர் என்றால் உரத்த அறிவிப்பு அல்லது உரத்த அழைப்பு என்று பொருள்) மாநாடு டிசம்பர் 1, 2017 அன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் இலட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். 250-க்கும் மேற்பட்ட தலித் மற்றும் இடதுசாரி அமைப்புகள் கலந்துகொண்டன. “பீமா கோரேகான் போரில் ஒடுக்கப்பட்ட மக்கள் பார்ப்பன சாதி ஒடுக்குமுறையை ஏவிய பேஷ்வாக்களுக்கு எதிராகப் போராடியது போலத் தற்போது நமது நாட்டில் ஆட்சியில் இருக்கும் மோடி அரசின் பார்ப்பன பாசிசத்திற்கு எதிராகப் போராட வேண்டும்” என்று மாநாட்டில் அறைக்கூவல் விடுக்கப்பட்டது.

இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத காவிக் கும்பல் ஜனவரி 1, 2018 அன்று  பீமா கோரேகான் போரின் நினைவு நாளை கொண்டாட வந்த மக்கள் மீது கொடூரமான தாக்குதலைத் தொடுத்தது. கிட்டத்தட்ட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட காவிக் குண்டர்கள் இத்தாக்குதலில் ஈடுபட்டனர். சிறுவர்கள், பெண்கள் என அனைவர் மீதும் கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர், பலர் படுகாயமடைந்தனர். இந்த கலவர வழக்கில்தான் சமூக செயற்பாட்டாளர்கள், அறிவுஜீவிகள், வழக்கறிஞர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள், ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள் என 16 பேரைக் பொய்க் குற்றச்சாட்டின் கீழ் ஊபா எனும் கருப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையிலடைத்தது பாசிச மோடி அரசு.

இதன் பிறகு 2020-இல் உத்தரப்பிரேதசம் மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் 19 வயது தலித் பெண், தாகூர் ஆதிக்கச் சாதிவெறியர்களால் கொடூரமான முறையில் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார். குற்றவாளிகளுக்கு ஆதரவாக உத்தரப்பிரதேச போலீசு படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை இரவோடு இரவாக எரித்தது. இச்சம்பவம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இந்தியா முழுவதும் எதிர்ப்புக்குள்ளானது. ஆதிக்கச் சாதிவெறியர்கள் சாதிய ஒடுக்குமுறையின் கருவியாகப் பாலியல் வன்முறையைக் கையாளுகிறார்கள் என்பதற்கான சாட்சியமாக ஹதராஸ் சம்பவம் மாறியது.

அதேபோல், பாசிச மோடி அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான டெல்லி விவசாயிகளின் போராட்டத்தின்போது (2020-2021) ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த ஜாட் விவசாயிகளுடன் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த விவசாயக் கூலிகளும் ஒன்றிணைந்து போராடியது முக்கியத்துவமுடையது.

அதேபோல், மேற்குவங்கத்தில் தலித் மக்கள் நடத்திவரும் ஆலய நுழைவு போராட்டம், பார்ப்பன கும்பலிடமிருந்து பௌத்த தளங்களை மீட்பதற்காக வட மாநிலங்களில் நடந்துவரும் போராட்டம், மகாராஷ்டிராவின் அஹில்யாநகர் மாவட்டத்தில் உள்ள சவுண்டாலா கிராமம் தன்னைச் சாதியற்ற கிராமமாக அறிவித்துத் தீர்மானம் நிறைவேற்றியது ஆகியவையும் தலித் மக்களின் எழுச்சியின் அங்கங்களே.

இவ்வாறு, பாசிசக் கும்பலின் தாக்குதல்களுக்கு எதிரான தலித் மக்களின் எழுச்சியானது இந்தியா முழுவதும் பல்வேறு வடிவங்களில் வெளிப்பட்டு வருகிறது.


வெற்றிவேல் செழியன்

(புதிய ஜனநாயகம் – மார்ச் 2026 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க