‘சுதந்திர இந்தியாவில்’ புறக்கணிக்கப்படும் கிருஷ்ணகிரி மலை கிராமங்கள்!

அடிப்படையான குடிநீர் கூடக் கிடைக்காத நிலையில், ஊராட்சி நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஐந்து அடிப் பம்புகளின் மூலமே கிராம மக்கள் தங்களுக்கான குடிநீரை பெற்று வருகின்றனர். ஆனால், அந்தப் பம்புகளும் போதிய பராமரிப்பு இல்லாததால் பழுதடைந்து போயுள்ளன. ஓர் அடிப் பம்பில் கைப்பிடி கூட இல்லாததால் இரும்பு கம்பியை செருகி மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதால் மக்கள் கடும் தண்ணீர் பற்றாக்குறையைச் சந்தித்து வருகிறார்கள்.

‘சுதந்திர இந்தியாவில்’ – ‘தேர்தல் ஜனநாயக ஆட்சியில்’
கிருஷ்ணகிரி மாவட்ட மலை கிராமங்களுக்கு
அடிப்படை வசதிகள் கூடக் கிடைக்காத அவலம்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் உள்ள தளி சட்டமன்றத் தொகுதியில் அஞ்செட்டி என்ற கிராமமும் அதனைச் சுற்றிலும் 100-க்கும் மேற்பட்ட மலை கிராமங்களும் உள்ளன. அஞ்செட்டி ஊராட்சிக்குட்பட்ட மாவனட்டி மலை கிராமத்தில் 500 குடும்பங்களும் அவற்றில் சுமார் இரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களும் பல தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்றனர். ஆனால், இக்கிராம மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் ஆளும் அரசுகளால் செய்துத்தரப்படவில்லை.

இக்கிராமத்தில் உள்ள குடியிருப்பின் தெருக்களில் கழிவுநீர் கால்வாய் பராமரிப்பின்றி இருப்பதால் வீடுகளில் இருந்து வெளியேறும் சாக்கடை கழிவுநீர் தெருக்களில் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு சுகாதாரச் சீர்கேடுகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

தெருவிளக்குகள் இல்லாததால் இரவு முழுவதும் கிராமம் இருள் சூழ்ந்த நிலையிலேயே உள்ளது. இதனால் கிராமத்தில் உள்ள முதியவர்கள் இரவு நேரங்களில் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

அடிப்படையான குடிநீர் கூடக் கிடைக்காத நிலையில், ஊராட்சி நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஐந்து அடிப் பம்புகளின் மூலமே கிராம மக்கள் தங்களுக்கான குடிநீரை பெற்று வருகின்றனர். ஆனால், அந்தப் பம்புகளும் போதிய பராமரிப்பு இல்லாததால் பழுதடைந்து போயுள்ளன. ஓர் அடிப் பம்பில் கைப்பிடி கூட இல்லாததால் இரும்பு கம்பியை செருகி மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதால் மக்கள் கடும் தண்ணீர் பற்றாக்குறையைச் சந்தித்து வருகிறார்கள்.

மேலும், இக்கிராமத்தில் முறையான சாலை வசதியும் இல்லை. கிராமம் முழுவதும் உள்ள தெருக்கள் மண் சாலைகளாகவே உள்ளன. அவையும் மேடும் பள்ளமுமாகப் பழுதடைந்து போயிருப்பதால் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் மழைக் காலங்களில் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகிறார்கள்.

இக்கிராம மக்களுக்கு அரசின் திட்டங்களும் முழுமையாகச் சென்று சேர்வதில்லை. அஞ்செட்டி மட்டுமின்றி, சுற்றிலுமுள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பெரும்பாலானவற்றில் இதே நிலைதான் நீடிக்கிறது.

‘சுதந்திர இந்தியாவில்’ ‘தேர்தல் ஜனநாயகத்தின் ஆட்சியில்’ இந்தியாவின் மலை கிராமங்களின் அவலநிலை இதுவே ஆகும்.  இது, ஆளும் அரசுகள் மலை கிராம மக்களைப் புறக்கணித்து வருகின்றன என்பதை வெட்டவெளிச்சமாக்குகிறது.

ஆளும் தி.மு.க. அரசு மக்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்து கொடுத்து அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக்கொள்கிறது.

மக்களின் கோரிக்கைகள்:

  1. அஞ்செட்டி ஊராட்சிக்கு உட்பட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் அனைத்திற்கும் கழிவுநீர் கால்வாயை சீரமைத்துத் தர வேண்டும்! புதிய கழிவு நீர் கால்வாய்கள் கட்டித்தரப்பட வேண்டும்!
  2. சுகாதாரமான குடிநீர் வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும். பழுதடைந்த அடிப் பம்புகளை சீரமைப்பதுடன் புதிய அடிப் பம்புகள் அமைத்துத்தரப்பட வேண்டும்!
  3. அஞ்செட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் தெரு சாலைகளை சீரமைத்தும், புதிய சாலைகளை அமைத்தும் தர வேண்டும்!
  4. மாவனட்டி போன்ற மலை கிராமங்களுக்குப் புதிய தெரு விளக்குகள் அமைத்தும், ஏற்கெனவே உள்ள தெரு விளக்குகளை சீரமைத்தும் தர வேண்டும்!
  5. அஞ்செட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மலை கிராமங்களுக்கு நூலகம் அமைத்துத் தர வேண்டும்! ஏற்கெனவே உள்ள நூலகங்களை சீரமைத்து செயல்பாட்டிற்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்!
  6. அஞ்செட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மலை கிராமங்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் முறையாகச் சென்று சேர்வதற்கு மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!

வேண்டும் ஜனநாயகம்!

தகவல்
தோழர் இரஞ்சித்,
கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்.
8754674757

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க