யா.ஒத்தக்கடை ஆரம்ப சுகாதார நிலையத்தை
அனைத்து மருத்துவ வசதிகளுடன்
24×7 மணி நேரமும் சிகிச்சையளிக்கும்
தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்து!

வேண்டும் ஜனநாயகம்!!

தெருமுனைக் கூட்டம்

நாள்: 06.04.2026 திங்கள் | நேரம்: மாலை 5 மணி | இடம்: யா.ஒத்தக்கடை, நரசிங்கம் சாலை

ன்பார்ந்த உழைக்கும் மக்களே!

நமது யா.ஒத்தக்கடையில் எவர்சில்வர் பட்டறைத் தொழிலாளிகள், கட்டிடத் தொழிலாளிகள், ஓட்டுநர்கள், சிறு வியாபாரிகள், தூய்மைப் பணியாளர்கள், மருத்துவமனை மற்றும் நீதிமன்றத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் என அடிப்படை வர்க்கமான உழைப்பாளிகள் நிறைந்த ஊர். இங்கு மட்டுமின்றி இதைச் சுற்றியுள்ள பல்வேறு ஊராட்சிகளிலும் விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள் நிறைந்த கிராமங்கள் உள்ளன. இவர்கள் அனைவரும் தங்களது மருத்துவ பிரச்சினைகளுக்காக ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகளையே நம்பியிருக்கின்றனர். ஆனால் தேவைப்படும் மருத்துவ சிகிச்சை வசதிகள் கிடைக்காமல் வேறு வழியின்றி தனியார் மருத்துவமனைகளை நோக்கி தள்ளப்படுகின்றனர். தங்களது அன்றாட வருமானமே வாழ்க்கைக்கு போதாத நிலையில், தவிர்க்கவே முடியாத மருத்துவ செலவுகளால் கடனாளியாக்கப்படுகின்றனர்.

யா.ஒத்தக்கடை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவல நிலை!

யா.ஒத்தக்கடை மற்றும் சுற்றியுள்ள கிராமப்புற மக்கள் தொகையின் தேவைக்கு ஆரம்ப சுகாதார நிலையம் போதுமானதில்லை. அப்படி இருக்கும்போது இருக்க வேண்டிய மருத்துவ பணியாளர்களில் ஒரு டாக்டர் உட்பட செவிலியர், சுகாதார ஆய்வாளர் என ஏழு பேர் இல்லாத நிலையில் தான் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருவதாக, அரசே தெரிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எங்களுக்கு அளித்த பதிலில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோக மதியத்திற்கு மேல் டாக்டர் இருப்பதில்லை, செவிலியர்களே பிரசவம் பார்ப்பது, வாரம் தோறும் பரிசோதனைக்காக வரும் கர்ப்பிணி பெண்களை இடவசதி இல்லாமல் படிகளில் உட்கார வைப்பது மற்றும் ஸ்கேன் வெளியில் தான் எடுத்து வர வேண்டுமாம், இரவில் விஷக்கடிக்கு மருத்துவம் கிடையாது, நாய் கடிக்கு போதுமான அளவு மருந்து இல்லை, சர்க்கரை நோயாளிகள் வெறும் வயிற்றில் எடுக்க வேண்டிய ரத்தப் பரிசோதனையை வெளியில் தான் எடுத்துக் கொள்ள வேண்டும், குடிநீர் வசதி இல்லை, வெறும் 50 மீட்டர் தூரத்தில் உள்ள மலைச்சாமிபுரம் மக்களை 10 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மாயாண்டிபட்டிக்கு போகச் சொல்வது என மக்கள் ஏகப்பட்ட புகார்களை தெரிவிக்கின்றனர்.

அதிகரித்துள்ள மக்கள் தொகைக்கு ஒத்தக்கடை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் போதுமா?

மிக வேகமாக விரிவடைந்து வருகிற ஒத்தக்கடையிலும் சுற்றியுள்ள ஊராட்சிகளிலும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மதுரைக்கு மிக அருகில், மதுரை சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மையமான இடமாக இருப்பதால் தினமும் ஆயிரக்கணக்கானோர் இங்கு வந்து செல்கின்றனர். இவ்வளவு மக்கள் குவிந்துள்ள நிலையில்,தேவைக்கேற்ப மருத்துவ வசதிகள் இல்லாததால், 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு ஓட வேண்டிய நிலை உள்ளது.

முன்னேறிய மருத்துவ கட்டமைப்பும் சிகிச்சையும் யாருக்கு?

இந்தியாவிலேயே சுகாதாரக் கட்டமைப்பிலும், மருத்துவ சிகிச்சையிலும் நமது தமிழ்நாடு சிறந்து விளங்குவதாக சொல்லப்படுகிறது. இதற்காக பல்லாயிரம் கோடிகள் ஒதுக்கப்பட்டு புதுப்புது திட்டங்களும் அறிவிக்கப்படுகின்றன. இவையெல்லாம் அறிவிப்புகளிலும், அரசாங்க கோப்புகளிலும் இருந்தால் மட்டும் போதுமா? நடைமுறையில் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதாக, பயன்படக்கூடியதாக இருக்க வேண்டும். முக்கியமாக அரசு மருத்துவமனைகளையே நம்பி இருக்கும் அடிப்படை உழைக்கும் மக்களுக்கும், கிராமப்புற மக்களுக்கும் கிடைப்பதாக இருக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசே! சுகாதார துறையே!!

  • யா.ஒத்தக்கடை மற்றும் சுற்றியுள்ள மக்களுக்கான தேவையில், தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகளில் மிக முக்கியமானது, உயிராதாரமானது மருத்துவ பிரச்சனை. ஆகவே ஒத்தக்கடை ஆரம்ப சுகாதார நிலையத்தை தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும்.
  • மதுரை மாவட்ட ஆட்சி தலைவர் மாற்று இடம் தேர்வு செய்ய சொல்லியும் தேர்வு செய்யாத வருவாய் துறையே உடனடியாக மாற்று இடம் தேர்வு செய்.
  • 24 மணி நேரமும் இயங்க வேண்டும்.
  • போதுமான கட்டிட வசதியும் ஏற்படுத்தி தர வேண்டும்.
  • பணியாளர்கள் கருவிகள் உட்பட அனைத்து வசதிகளையும் உடனே ஏற்படுத்த வேண்டும்.
  • அரசு மருத்துவமனைகளை தனியார்மயமாக்கும் கொள்கையை கைவிட வேண்டும். ஆகிய கோரிக்கைகளுக்கான போராட்டத்திற்கு திரள்வோம் நமது ஒத்தக்கடை அரசு மருத்துவமனையை பாதுகாப்போம்!

மக்கள் அதிகாரக் கழகம்,
மதுரை கிழக்கு மாவட்டம்.
8438631587

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க