
06.04.2026
உயிருக்குப் பாதுகாப்பற்ற நிலையில் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்:
மாணவர்களிடம் வசூலித்த கட்டணம் எங்கே?
உடனடியாக அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்து!
பத்திரிகைச் செய்தி
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக நிர்வாகத்தின் மிக மோசமான பராமரிப்பு மற்றும் ஊழல் நிறைந்த மெத்தனப் போக்கினை கண்டித்து இந்த கண்டன அறிக்கை வெளியிடப்படுகிறது.
அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் இன்று (06.04.2026) வகுப்பறையில் மேற்கூரை விழுந்து மாணவர் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த நிலையில் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் பல்கலைக்கழக வகுப்பறைகளில் இருக்கும் மாணவர்கள் அச்சத்தில் கல்வி பயிலும் நிலைமை உருவாகியுள்ளது.
பராமரிப்பு கட்டணம் (Infrastructure and Class amenities) என்ற பெயரில் பகல் கொள்ளையடிக்கும் பல்கலைக்கழகம், ஒவ்வொரு மாணவரிடமிருந்தும் ஆண்டுக்கு ₹20,000 வசூலிக்கிறது. அந்தப் பணம் யாருடைய பைக்குச் செல்கிறது? கழிப்பறைகள் பயன்படுத்த முடியாத அளவிற்குச் சுகாதாரமற்ற நிலையில் இருக்கிறது. எவ்வித அடிப்படை கட்டமைப்பும் முறையாக இல்லை. கழிவறை துவங்கி வகுப்பறைகள் வரை ஒரு பாதுகாப்பற்ற சூழல்தான் மாணவர்களுக்கு இங்கு இருக்கிறது. மாணவர்களிடம் கட்டணம் வசூல் செய்வதில் காட்டும் தீவிரம் இப்படி சீரழிந்த நிலையில் இருக்கும் பல்கலைக்கழக அடிப்படை கட்டமைப்பைச் சரி செய்வதில் இல்லை. மெத்தனப் போக்குடன் மாணவர்கள் பாதுகாப்பு குறித்து துளியும் அக்கறையில்லாமல் தான் நிர்வாகம் இருக்கிறது.
பல்கலைக்கழகத்தின் இந்த மெத்தனப் போக்கினை புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி கண்டிக்கிறது.
கோரிக்கைகள்:
- பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்து வகுப்பறைகள் மற்றும் கட்டிடங்களின் உறுதித்தன்மையை உடனடியாக ஆய்வு செய்து, போர்க்கால அடிப்படையில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
- கழிப்பறைகளைச் சுகாதாரமான முறையில் பராமரிக்கவும், பாதுகாப்பான குடிநீர் மற்றும் வகுப்பறை சூழலை உறுதி செய்யவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மாணவர்களிடம் வசூலிக்கப்படும் மேம்பாட்டுக் கட்டணம் எவ்வாறு செலவிடப்படுகிறது என்பதற்கான வரவு-செலவு கணக்கை நிர்வாகம் பகிரங்கமாக வெளியிட வேண்டும்.
- பல்கலைக்கழகத்தின் அனைத்து அதிகார அமைப்புகளிலும் (உதாரணத்திற்கு ஆட்சி மன்றக் குழு மற்றும் ஆட்சி மன்ற பேரவை) மாணவர்களின் பிரதிநிதிகள் இருப்பதை உறுதி செய்திட வேண்டும்.
![]()
இவண்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக கிளை.
9444836642
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











