சாத்தான்குளம் கொட்டடி கொலை வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்ட அதே நாளில், மற்றொரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 13 போலீசாரை தென்காசி மாவட்ட நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சந்தைப்பேட்டையை சேர்ந்தவர் மசூது (வயது 40). கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி போலீசு நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நடந்த வழிப்பறிக் கொள்ளை சம்பவம் தொடர்பாக, மசூது மற்றும் அவருடன் சென்ற இரண்டு பேரை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றிருந்தனர். விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மசூது நீண்ட நாட்கள் ஆகியும் திரும்பவில்லை.
இந்நிலையில் மசூதுவின் மனைவி அசனம்மாள், 2006-ஆம் ஆண்டு கடையநல்லூர் போலீசில் தனது கணவர் மசூதை காணவில்லை என்று புகார் கொடுத்ததுடன், உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவும் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் அப்போதைய நெல்லை மற்றும் தற்போதைய தென்காசி மாவட்டம் கடையநல்லூர் போலீசார், கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி போலீசார் ஆகிய இரண்டு மாவட்ட போலீசார் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டதை அடுத்து, வழக்கு சி.பி.சி.ஐ.டி போலீசருக்கு மாற்றம் செய்யப்பட்டது. சி.பி.சி.ஐ.டி போலீசார் நடத்திய விசாரணையில் மசூது கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து அப்போதைய ஏ.டி.எஸ்.பி பிரதாப் சிங், டி.எஸ்.பி.க்கள் ஈஸ்வரன், சந்திரபாபு, இன்ஸ்பெக்டர்கள் லட்சுமணராஜ், முருகன், எஸ். ஐக்கள் மாடசாமி, சத்யராஜ், எஸ்.எஸ்.ஐ பரமசிவம், தலைமை போலீசார் ரத்தினசாமி, பாஸ்கரன், மைக்கேல் சந்திரன், முத்து, ஸ்டீபன் ஆகிய 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
சி.பி.சி.ஐ.டி போலீசார் 2011-ஆம் ஆண்டு குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் மொத்தம் 52 சாட்சிகள் சேர்க்கப்பட்டு, 36 பேர் மட்டுமே விசாரிக்கப்பட்டனர்.
இந்த வழக்கு தென்காசி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மனோஜ் குமார், நேரடி சாட்சிகள் முறையாக நிரூபிக்கப்படாத நிலையில் வழக்கில் தொடர்புடைய அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கினார்.
குற்றம் சாட்டப்பட்ட 13 போலீசாரில் இன்ஸ்பெக்டர் முருகன், எஸ்.ஐ மாடசாமி ஆகிய இருவரும் இறந்துவிட்டனர். ஈஸ்வரன் அண்ணாநகர் துணை ஆணையராக பணிபுரிந்து வருகிறார். மற்ற அனைவரும் ஓய்வு பெற்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.
ஜெய்பீம் திரைப்படத்தை நினைவூட்டும் மேற்படி சம்பவம் நடந்து 20 ஆண்டுகள் கழித்து வழங்கப்பட்ட தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் ஒட்டுமொத்தமாக விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் நீதி கேட்டு வழக்குத் தொடுத்த மசூதுவின் மனைவி அசனம்மாள் இறந்து போய்விட்டார். அவரோடு சேர்ந்து நீதியும் புதைக்கப்பட்டு விட்டது.
குற்றம் சுமத்தப்பட்ட போலீசார் அனைவரும் விடுதலை செய்யப்பட்டு விட்டனர். அப்படியானால் மசூது எப்படி இறந்தார்? இதுதான் இந்த கட்டமைப்பில் ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்படுகின்ற நீதி!
சாத்தான்குளம் தீர்ப்பு என்பது விதிவிலக்கானது. அதிகாரத்தில் இருக்கும் குற்றவாளிகளுக்கு சட்டம் தன் வாசலைத் திறந்தே வைத்துள்ளது. அதில் எந்த சந்து, பொந்துகளிலும் அவர்கள் பயணப்பட்டு வெளியேறி விடலாம். மாறாக, உழைக்கும் மக்கள் நீதிமன்ற படிக்கட்டுகளில் ஏறி நீதியைப் பெற்று விடலாம் என்பது சாத்தியமில்லாதது. சட்டம் ஆளும் வர்க்கத்திற்கானது. பணத்திற்கும், அதிகாரத்திற்கும் எப்பொழுதுமே வளைந்து கொடுக்கக் கூடியது. இந்த கட்டமைப்பிற்கு வெளியே உழைக்கும் மக்களின் போராட்டத்தின் வழியாக மட்டுமே, எளிய மக்களுக்கான நீதியை நாம் நிலைநாட்ட முடியும்.
மக்கள் அதிகாரக் கழகம்,
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள்.
9385353605
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











