சாத்தான்குளம் தந்தை-மகன் கொட்டடிப் படுகொலை வழக்கில் கடந்த ஏப்ரல் 6 அன்று மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைக் கண்டு முதலாளித்துவ ஊடகங்கள் உற்சாகமாகக் கைதட்டுகின்றன. “நீதி வென்றது! சட்டம் தன் கடமையைச் செய்துவிட்டது!” என்று தொலைக்காட்சித் தொகுப்பாளர்கள் கூறுகின்றனர். இதன் மூலம், ஒன்பது போலீசு துறையினருக்கும் சிறைத் தண்டனையோடும் அபராதத்தோடும் கூடிய இரட்டைத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பதை, நீதித்துறை தன்னிச்சையாக வழங்கிய நீதியின் அடையாளமாகச் சித்தரிக்கின்றனர்.
அரசின் சொந்த போலீசு படையைச் சேர்ந்த ஒன்பது பேர் குற்றவாளிகளாகக் கூண்டில் நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்பட்டிருப்பதை, வீதிகளில் கொதித்தெழுந்த மக்கள் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றியாக நாம் வரவேற்கிறோம். நீதிமன்றம் தானாக விழித்துக்கொண்டு இந்தத் தீர்ப்பை வழங்கவில்லை; மக்களின் கோபமும் தொடர்ச்சியான அமைப்பு ரீதியான போராட்டமுமே இப்படியொரு தீர்ப்பை வழங்கக் கட்டாயப்படுத்தின என்பதை நாம் மறந்துவிடலாகாது.
அத்துடன், இந்தத் தீர்ப்பு ஒரு தொடக்கம் மட்டுமே என்பதையும், தொடர் மக்கள் போராட்டங்கள் மூலமே நீதியை இறுதியில் நிலைநாட்ட முடியும் என்பதையும் நாம் தெளிவாக உணர வேண்டும்.
லாக்-அப் மரணம் அல்ல; அரசப் படுகொலை!
கோவிட் பெருந்தொற்றுக் காலம் என்பது கார்ப்பரேட்டுகளுக்கு எந்தத் தடையும் இல்லாமல், எளிய மக்கள் மீது மட்டும் ஊரடங்கு வன்கொடுமை கட்டவிழ்த்துவிடப்பட்ட காலம். அந்தக் காலகட்டத்தில், ஒரு சிறு கடையைத் திறந்து வைத்திருந்ததற்காக ஜெயராஜும் (59) அவரது மகன் பென்னிக்ஸும் (31) கைது செய்யப்பட்டு, மிகக் கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டனர். இது விதிவிலக்காக நடந்துவிட்ட சம்பவமோ, ஒரு விபத்தோ அல்ல; உழைக்கும் வர்க்கத்திடம் போலீசு நடந்துகொள்ளும் இயல்பே இதுதான்.
இவ்வழக்கில் 2020 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் சி.பி.ஐ. தாக்கல் செய்த குற்றப்பத்திரிகைகள், அவ்விரு அப்பாவிகள் மீது சாத்தான்குளம் போலீசு நடத்திய கொடுந்தாக்குதல் குறித்த உண்மைகளை அம்பலப்படுத்தின. சாத்தான்குளம் போலீசு நிலையத்தில் ஏழு மணி நேரத்திற்கும் மேலாக ஆடைகள் களையப்பட்ட நிலையில், ஈவிரக்கமற்ற முறையில் இருவரும் சித்திரவதை செய்யப்பட்டனர். அந்த போலீசு நிலையச் சுவர்களிலும் லத்திகளிலும் படிந்திருந்த இரத்தக் கறைகள் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரின் டி.என்.ஏ-வுடன் ஒத்திருப்பதை சி.பி.ஐ. உறுதி செய்தது. ஆய்வாளர் ஸ்ரீதர் “தொடர்ந்து அடிங்க” என்று சக போலீசுகாரர்களைத் ஏவியதும், அந்தக் கொடூரமான தாக்குதலால் இருவரின் ஆசனவாயிலும் அதீத இரத்தக் கசிவு ஏற்பட்டு, ஒரே நாளில் ஏழு லுங்கிகள் வரை மாற்ற நேர்ந்த அவலநிலை ஏற்பட்டதும் குற்றப்பத்திரிகையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பென்னிக்ஸ் உடலில் 13 காயங்களும், ஜெயராஜ் உடலில் 17 காயங்களும் இருந்தன. அந்த அளவுக்குக் கொடூரமான காயங்கள் ஒருவரைச் சாகடித்துவிடும் என்று தெரிந்தும்கூட இப்படித் தாக்கியிருக்கின்றனர். இதனால், ஜூன் 22 இரவு பென்னிக்ஸும், ஜூன் 23 அதிகாலை ஜெயராஜும் அடுத்தடுத்து மரணமடைந்தனர். இதை “லாக்-அப் மரணம்” என்று கூறுவது அதன் கொடூரத்தையும் வர்க்கத்தன்மையையும் மட்டுப்படுத்துவதாகத்தான் இருக்கும். மாறாக, இது திட்டமிட்டு நடத்தப்பட்ட அரசப் படுகொலை என்பதே சரி. சாமானியர்களின் உயிரை ஆளும் வர்க்கம் எந்தளவுக்குக் கிள்ளுக்கீரையாக நினைக்கிறது என்பதற்கான துலக்கமான எடுத்துக்காட்டாக இந்தக் கொலைகள் உள்ளன.
கட்டமைப்பு ரீதியான கூட்டுச்சதி
போலீசை சேர்ந்த குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டிருப்பதை நாம் வரவேற்கிறோம். ஆனால், அந்த ஒன்பது பேர் மட்டுமே இந்தப் படுகொலைக்குப் பொறுப்பானவர்கள் என்று கூற முடியுமா? ஒட்டுமொத்த முதலாளித்துவ அரசுக் கட்டமைப்பும் – அதன் மருத்துவ அமைப்பும், நீதித்துறையும், நிர்வாக இயந்திரமும் – இந்தக் கொலைக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ உடந்தையாக இருந்தனர். நீதிமன்றம் அவர்களைத் தப்ப விட்டுள்ளது என்பதே உண்மை.
இரத்தம் சொட்டச் சொட்ட நின்ற தந்தையையும் மகனையும் பரிசோதித்த மருத்துவர் வினிலா, அவர்களின் உடலில் தெரிந்த காயங்களைப் பதிவு செய்யாமல், “நீதிமன்றக் காவலுக்குத் தகுதியானவர்கள்” என்று போலியாகச் சான்றிதழ் வழங்கினார். அத்தோடு நிறுத்திக்கொள்ளாமல், இரத்தம் படிந்த ஆடைகளை அழித்து, சாட்சியங்களை மறைப்பதிலும் துணை போயிருக்கிறார். ஆனால், இன்று வரை அவர் மீது எவ்விதத் துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
சாத்தான்குளம் நீதித்துறை நடுவர் சரவணன், குற்றஞ்சாட்டப்பட்ட இருவரையும் நேரில் அழைத்துப் பரிசோதிக்காமல், தனது வீட்டு மாடியில் நின்றபடியே 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இரத்தம் தோய்ந்த ஆடைகளுடன் மரண விளிம்பில் நின்று கொண்டிருந்தவர்களை முறையாக விசாரிக்காமல், போலீசுதுறையின் அழுத்தத்திற்கு அடிபணிந்தும் தமது இயல்பான அதிகாரவர்க்கத் திமிரோடும் வழங்கிய அந்த உத்தரவு தந்தை மற்றும் மகனின் மரணத்திற்கு நேரடிக் காரணம் இல்லையா? இவர் மீதும் இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
போலீசு நிலையம் அமைந்துள்ள இடத்திலிருந்து நூறு மீட்டருக்கும் குறைவான தொலைவில் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் இருந்தும், “கட்டளை மற்றும் பொறுப்பு” விதியின் கீழ் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. விசாரிக்கச் சென்ற மாஜிஸ்திரேட் பாரதிதாசனிடம், போலீசு மகாராஜன் என்பவர் “உங்களால் ஒன்றும் புடுங்க முடியாது” என்று நீதிபதியையே அச்சுறுத்தினார். இந்த அளவுக்கு ஒரு போலீசுகாரர் ஒரு நீதிபதியை நேருக்கு நேர் அச்சுறுத்துகிறார் என்றால், அந்தத் திமிர் எங்கிருந்து வருகிறது? “இந்த அரசு இயந்திரம் எப்போதும் நம்மைக் காப்பாற்றும்” என்ற ஆழமான நம்பிக்கையிலிருந்து தானே… அது பொய்யில்லை என்பதை, இன்று வரை தண்டிக்கப்படாத ஒவ்வொரு அதிகாரியும் தொடர்ந்து நிரூபித்துக் கொண்டே இருக்கின்றனர்.
கொடுமையான சித்திரவதைக்குப் பிறகும் கூட, தந்தை – மகன் இருவரையும் தங்களின் இரத்தக் கறையைத் தாங்களே சுத்தப்படுத்த போலீசார் கட்டாயப்படுத்தியுள்ளனர். மறுநாள் காலை, ஒரு தூய்மைப் பணியாளரை வைத்து மீதமிருந்தவற்றையும் கழுவியுள்ளனர். எனவே, இது ஒரு தனிநபரின் குற்றமல்ல; அரசுக் கட்டமைப்பின் பல்வேறு துறைகளும் சேர்ந்து ஈடுபட்ட திட்டமிட்ட கூட்டுச்சதி.
மரண தண்டனை: மனிதாபிமான வாதம் சரியா?
சாத்தான்குளம் படுகொலையில் ஒன்பது போலீசுக்கும் இரட்டைத் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டிருப்பதை நாம் வரவேற்கிறோம். ஆனால், யாருக்காக இருந்தலும் மரண தண்டனையை ஆதரிக்கக் கூடாது என்ற வாதங்கள் சமூக வலைத்தளங்களில் வைக்கப்படுகின்றன. இது வர்க்கப் பார்வையற்ற சாதாரண மனிதாபிமான வாதம் ஆகும். ஏனெனில், அரசு எந்திரம் என்பது அடிப்படையில் ஆளும் வர்க்கத்தின் வன்முறைக் கருவியாகும். மூலதனத்தின் நலன்களுக்கு ஆபத்து வரும்போது, தான் வகுத்துக்கொண்ட சட்டங்களையே மதிக்காமலும், எந்தச் சட்ட அங்கீகாரமுமின்றியும் மக்களைக் கொன்று குவிக்க இந்த அரசு ஒருபோதும் தயங்கியதில்லை. இதற்கு ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு ஒரு இரத்தக்களரியான சான்று.
சாதாரண மனிதர்கள் செய்யும் குற்றங்களுக்கும், அரச பயங்கரவாதத்தை ஏவி சாமானிய மக்கள் மீது கொலை, கொள்ளை, வன்புணர்வு ஆகியவற்றை நிகழ்த்தும் அதிகார வர்க்கத்து மிருகங்களுக்கும் இடையில் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் உள்ளது. இத்தகைய குற்றவாளிகளுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்படுவது என்பது ஒரு குறைந்தபட்ச நீதியாகும். இது மற்ற போலீசு துறையினருக்குள் ஒரு குறைந்தபட்ச அச்சத்தையாவது உருவாக்கும்.
ஆனால், தூக்குத் தண்டனையோடு நாம் நின்றுவிடக் கூடாது. இத்தகைய குற்றவாளிகளின் சொத்துக்களைப் பறிமுதல் செய்து, அவற்றைப் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குப் பிரித்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நாம் வலுவாக முன்வைக்க வேண்டும். அதிகாரத் திமிரை அசைத்துப் பார்க்க அவர்களின் பொருளியல் பலத்தை நொறுக்கும் கோரிக்கையை முன்வைக்க வேண்டும்.
ஸ்டெர்லைட் படுகொலையும், சாத்தான்குளமும்:
ஒரே அரசின் இரண்டு முகங்கள்
ஸ்டெர்லைட் முதலாளிகளைக் காக்க மக்களைச் சுட்டுக்கொன்ற இதே அரசு எந்திரம்தான் இன்று சாத்தான்குளத்தில் ஒன்பது போலீசை தூக்கிலிடும் முடிவுக்கு வந்திருக்கிறது. ஆனால், ஸ்டெர்லைட் படுகொலையில் தொடர்புடைய எந்தவொரு உயர் அதிகாரியும் எந்த போலீசும் இன்றுவரை கடுமையாகத் தண்டிக்கப்படவில்லையே, ஏன்? இந்த வேறுபாடு எங்கிருந்து வருகிறது.
சாத்தான்குளத்தில் ஒரு சிறு வணிகரின் மரணம் அரசுக்கு மிகப்பெரும் நெருக்கடியைக் கொடுத்தது; மக்கள் போராட்டம் வெடித்தது. அந்த நிலையில் தவிர்க்க முடியாமல் சிலரைக் கைது செய்யவும் விசாரிக்கவும் வேண்டிய நெருக்கடி உருவானது. இதனூடாக சிலரைப் பலிகடாவாக்கி கட்டமைப்பைத் தற்காத்துக்கொள்வதே அரசுக்கு சாத்தியமான வழியாகத் தெரிந்தது. இந்த வழக்கிலும் மேல்முறையீட்டுக்கும், தண்டனைக் குறைப்புக்கும் எல்லா வகையான லாபிகளையும் அதிகார வர்க்கம் செய்யும். இனியொரு வழக்கில் இப்படியொரு தீர்ப்பை வழங்க விடக்கூடாது என கங்கணம் கட்டிக்கொண்டு அலையும். ஆனால் ஸ்டெர்லைட்டில் நிலைமை வேறு; அங்கு அரசு நேரடியாக ஒரு பெரும் கார்ப்பரேட் நிறுவனத்தின் நலனுக்காக உழைக்கும் மக்களைக் கொன்று குவித்தது. அங்கு அதிகார வர்க்கத்தைத் தண்டிப்பது என்பது கார்ப்பரேட் நலனுக்கு எதிரானது. எந்த வகையிலும் அதற்கு ஊறு நேராமல் கையாள வேண்டும் என்பதே அதிகார வர்க்கமும் கார்ப்பரேட்டுகளும் விரும்புவர். ஒருவேளை, ஸ்டெர்லைட் படுகொலைக் குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும் என்று மக்கள் போராட்டம் வெடிக்குமானால், கொல்லப்பட்டோருக்கான குறைந்தபட்ச நீதியையேனும் நிலைநாட்ட முடியும். இரண்டு சம்பவங்களிலும் அரசின் வெவ்வேறு முகங்கள் தெரிகின்றன; ஆனால் இரண்டின் பின்னாலும் ஒரே வர்க்க சார்புநிலைதான் இயங்குகிறது.
நீதியை நிலைநாட்டியது மக்கள் போராட்டமே!
போலீசுதுறை வழக்கம் போல் இந்த படுகொலையை உடல்நலக் குறைபாட்டால் ஏற்பட்ட மரணமாகச் சித்தரித்து மூடி மறைக்கவே முயன்றது. அந்த அதிகாரத்தின் தடைக்கற்களைத் தகர்த்தது சாமானிய மக்களின் போராட்டம்தான்; வேறு யாருமில்லை.
சாத்தான்குளம் மட்டுமில்லாமல், தமிழ்நாடு முழுவதும் வணிகர் சங்கங்களும், மருந்துக்கடை உரிமையாளர்களும், இடதுசாரி கட்சிகளும் முன்னெடுத்த கடையடைப்புப் போராட்டங்கள் இந்தக் கொடுமையை பொதுவெளியில் நிலைநிறுத்தின. உலக அளவில் ஓங்கி ஒலித்த “ஜெயராஜ் – பென்னிக்ஸுக்கு நீதி வேண்டும்” (Justice for Jayaraj and Bennix) என்ற கண்டனக் குரல் அரசுக்கு சர்வதேச அழுத்தத்தை உருவாக்கியது. அந்தத் தொடர் மக்கள் அழுத்தமே சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையைத் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்கத் தூண்டியது; அதே அழுத்தம்தான் தமிழ்நாடு அரசை வேறு வழியின்றி இவ்வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கவும் கட்டாயப்படுத்தியது.
பெண் தலைமை போலீசு ரேவதி துணிச்சலோடு உண்மைகளை அம்பலப்படுத்தினார். ஊடகங்கள் இதைத் தனிநபர் தைரியமாகச் சித்தரிக்கின்றன. ஆனால், அவர் சாட்சியமாக முன்வர முடிந்ததற்குக் காரணம், மக்களின் தொடர் போராட்டம் உருவாக்கிய பாதுகாப்பான அரசியல் சூழலே என்பதை ஊடகங்கள் வசதியாக மறைத்துவிடுகின்றன. இந்தத் தீர்ப்பு கறுப்பு அங்கி அணிந்த நீதிபதிகள் தாமாக முன்வந்து வழங்கிய கருணையல்ல; வீதியில் இறங்கிய உழைக்கும் மக்களின் சமரசமற்ற போராட்டத்தின் விளைவே.
“பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்” என்ற அதிகாரப்பூர்வமற்ற சட்டவிரோதக் கும்பலும் சாத்தான்குளம் படுகொலையில் பங்கேற்றதாக நேரில் கண்ட சாட்சிகள் தெரிவித்தனர். இந்த அமைப்பு, அரசு எந்திரம் தனது சட்ட வரம்புகளுக்கு வெளியே நின்று உழைக்கும் மக்களை ஒடுக்குவதற்காகப் பயன்படுத்திய அடியாள் படையே ஆகும். மாபெரும் மக்கள் கொந்தளிப்பின் காரணமாக மட்டுமே, 2020 ஜூலை 8 அன்று தமிழக அரசு வேறு வழியின்றி இந்த அமைப்பிற்கு மாநிலம் முழுவதும் தடை விதித்தது. அதுவும் மக்கள் போராட்டத்தின் வெற்றியே என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
மேல்முறையீடுகள் வரும் –
தொடர் போராட்டமே தீர்வு!
மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பை ஒரு தொடக்கமாக மட்டுமே புரிந்துகொள்ள வேண்டும். சட்ட விதிகளின்படி இந்தத் தண்டனை உயர்நீதிமன்றத்தின் உறுதிப்படுத்தலுக்குச் செல்ல வேண்டும். குற்றவாளிகள் உயர்நீதிமன்றத்திலும் அதன்பிறகு உச்சநீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்வர்; சீராய்வு மனு, மறுசீராய்வு மனு என நீண்ட ‘சட்டப்’ போர் நடைபெறும். ஒவ்வொரு படியிலும் ஆளும் வர்க்கம் சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கும்; இறுதியில் ஆளுநர் அல்லது குடியரசுத் தலைவரிடம் கருணை மனு தாக்கல் செய்யப்படும். ஒவ்வொரு நிலையிலும் தண்டனை குறைக்கப்படும் அல்லது தள்ளுபடி செய்யப்படும் ஆபத்து கூட உள்ளது.
போலீசு நிலையத்திலேயே பதிவான ஆதாரங்கள் இருந்தும், சி.பி.ஐ. விசாரணை நடந்தும் கூட, கீழமை நீதிமன்றத் தீர்ப்பைப் பெறுவதற்கே ஆறு ஆண்டுகள் ஆகியிருக்கின்றன என்றால் – உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம், கருணை மனு என அனைத்தையும் கடந்து தண்டனை நிறைவேற்றப்பட வேண்டுமென்றால் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்?
எனவே, மேல்முறையீடுகள் மூலம் தண்டனையைக் குறைப்பதற்கோ தப்பிப்பதற்கோ குற்றவாளிகள் முயற்சிப்பர் என்பதை மனதில்கொண்டு, தொடர் மக்கள் போராட்டங்கள் மூலமே நீதியை நிலைநாட்ட முடியும் என்ற உறுதியோடு நாம் செயலாற்ற வேண்டும். ஒன்பது குற்றவாளிகளுக்கும் தக்க தண்டனை கடைசி வரை கிடைப்பதை உறுதிசெய்ய, பரந்துபட்ட மக்கள் போராட்டங்களை இன்றும் கட்டியமைக்க வேண்டியது நம் கடமை.
வீதிகளில் இறங்கும் நமது சொந்த பலத்தின் மீது
நம்பிக்கை வைப்போம்!
சாத்தான்குளம் வழக்கு நமக்கு உணர்த்தும் பாடம் ஒன்றே ஒன்றுதான். இத்தகைய மரண தண்டனைகள் அதிகார வர்க்கத்தின் திமிரைத் தற்காலிகமாக அசைத்துப் பார்த்தாலும், அவர்களுக்கு நிரந்தரமான உண்மையான அச்சத்தை ஏற்படுத்துவது வெறும் சட்டப் புத்தகங்களோ நீதிமன்றங்களோ அல்ல; உழைக்கும் மக்களின் வீதிப் போராட்டங்களும், வர்க்க ரீதியான திட்டமிட்ட அமைப்பாக்கமும் தான்.
முதலாளித்துவ அரசுக் கட்டமைப்பு தன் இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்காக எந்த அளவிற்கும் தரம் தாழ்ந்து செயல்படும். மக்கள் கிளர்ந்தெழும்போது தனது சொந்த போலீசுபடையையே பலிகடாவாக்கவும் தயங்காது. ஆனால், அதே மக்கள் தங்களின் வாழ்வாதார உரிமைகளுக்காகப் போராடும்போது, அவர்கள் மீது எல்லாச் சட்டங்களையும் மீறி, துப்பாக்கிக் குண்டுகளை ஏவவும் இந்த அரசு தயங்காது என்பதை வரலாறு நெடுகிலும் நாம் பார்த்துள்ளோம்..
லாக்-அப் மரணங்களைத் தடுப்பதற்கான வழி, இந்த முதலாளித்துவ போலீசு கட்டமைப்பை ‘ஜனநாயகப்படுத்துவதில்’ இல்லை; மாறாக, ஒடுக்குமுறைக்கான இந்தக் கருவியையே தகர்த்தெறிந்து, உழைக்கும் மக்களின் கைகளில் அரசதிகாரத்தை வென்றெடுப்பதில்தான் உண்மையான தீர்வு இருக்கிறது. உழைக்கும் மக்களின் கைகளில் அரசதிகாரம் வரும்போது, இத்தகைய அரசப் பயங்கரவாதிகள் மக்கள் மன்றத்திலும் புரட்சிகர நீதிமன்றங்களிலும் நிறுத்தப்பட்டு உழைக்கும் வர்க்கத்தால் நேரடியாகத் தண்டிக்கப்படுவார்கள்.
அதுவரை, நீதிமன்றங்களையும், முதலாளித்துவ அரசமைப்பின் ‘கருணை’யையும் நம்பிக் காத்திருப்பதை விட, வீதிகளில் இறங்கும் நமது சொந்தப் பலத்தின் மீதும் அமைப்பு ரீதியான வர்க்கப் போராட்டத்தின் மீதும் நம்பிக்கை வைப்போம்! மக்களின் போராட்டங்களே உண்மையான நீதிக்கான திறவுகோல்!
![]()
ஆதினி
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











