ஒழித்துக்கட்டப்பட்ட நூறு நாள் வேலைத் திட்டம்: நாடு முழுவதும் விவசாயிகள் – தொழிலாளர்கள் போராட்டம்!

பழைய சட்டத்தை ரத்து செய்ததைக் கண்டித்தும், புதிய சட்டத்திற்கு எதிராகவும், நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான விவசாய மற்றும் கிராமப்புற தொழிலாளர்கள் மே 15 அன்று வீதிகளில் இறங்கி வேலைநிறுத்தப் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

0

பாசிச மோடி அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம், 2005 (நூறு நாள் வேலைத் திட்டம்)-ஐ ரத்து செய்து, விபி-கிராம்ஜி (VB-GRAMG) எனும் புதிய சட்டத்தை நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் நிறைவேற்றியது. பின்னர் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று இது சட்டமாகிய நிலையில் ஜூலை 1 ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று மோடி அரசு அறிவித்துள்ளது.

பழைய சட்டத்தை ரத்து செய்ததைக் கண்டித்தும், புதிய சட்டத்திற்கு எதிராகவும், நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான விவசாய மற்றும் கிராமப்புற தொழிலாளர்கள் மே 15 அன்று வீதிகளில் இறங்கி வேலைநிறுத்தப் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

போராட்டம் குறித்து விவசாய மற்றும் கிராமப்புற தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பு (Joint Platform of Agricultural and Rural Workers’ Unions) மற்றும் ‘என்.ஆர்.இ.ஜி.ஏ சங்கர்ஷ் மோர்ச்சா (NREGA Sangharsh Morcha) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப், உத்தரப்பிரதேசம், ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் இந்த ஒருங்கிணைந்த வேலைநிறுத்தங்கள் மற்றும் பேரணிகளில் பங்கேற்றுள்ளனர்.

மேலும் ஆயிரக்கணக்கான கிராம ஊராட்சிகளில் தொழிலாளர்கள் பேரணிகளை நடத்தி, கிராம ஊராட்சிகள் மற்றும் ஒன்றிய அதிகாரிகளிடம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தை மீண்டும் அமல்படுத்தவும், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விபி-கிராம்(ஜி) — VB-GRAM(G) — சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரியும் மனுக்களை அளித்தனர்.

​மேலும் மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு (Platform of Central Trade Unions) மற்றும் சம்யுக்த கிசான் மோர்ச்சா ஆகிய அமைப்புகளும் நூறு நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களுக்கு தங்களது முழு ஆதரவைத் தெரிவித்ததுடன், தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக வீதிகளில் இறங்கிப் போராடியுள்ளனர் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

​2014 ஆம் ஆண்டு முதல் பாசிச மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தைத் திட்டமிட்டுப் பலவீனப்படுத்தி வந்தது. அதாவது நூறு நாள் வேலைத் திட்டத்திற்கு ஒதுக்க வேண்டிய நிதியை படிப்படியாகக் குறைத்தது. இதன்மூலம், ஆயிரக்கணக்கான மக்களைத் திட்டத்திலிருந்து வெளியேற்றி இத்திட்டத்தை ஒழித்துக் கட்டுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தது. சான்றாக ஏப்ரல் 2025-இல் உருவாக்கப்பட்ட 26.5 கோடி மனித-நாட்கள் (ஒரு நபர் ஒரு நாள் செய்யும் வேலை என்ற அடிப்படையிலான கணக்கீடு) வேலையுடன் ஒப்பிடுகையில், ஏப்ரல் 2026-இல் வெறும் 21.3 கோடி மனித-நாட்கள் வேலை மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது. இது 20 சதவீதத்திற்கும் அதிகமான சரிவைக் குறிக்கிறது. அதன் நீட்சியாகத்தான் பழைய சட்டத்தை ரத்து செய்துவிட்டு புதிய சட்டத்தை தற்போது கொண்டுவந்துள்ளது.

​மேலும், கட்டாயமாக்கப்பட்ட ஆதார் அடிப்படையிலான பணம் செலுத்தும் முறை (ABPS), முக அங்கீகார தொழில்நுட்பம் (facial technology), புவிசார் குறியிடல் (geo tagging) மூலம் டிஜிட்டல் முறையைத் திணித்துள்ளது. இதன் மூலம் இத்திட்டத்தை அணுகுவதைக் கடினமாக்கியும், கிராமப்புற மக்களை இத்திட்டத்திலிருந்து வெளியேற்றியும் வருகிறது.

நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதாகக் கூறி பாசிச மோடி அரசு கொண்டுவந்துள்ள ‘பிஎம் கதி சக்தி’ (PM Gati Shakti) திட்டத்தின் கீழ் தொழிற்கூடங்கள், பெரிய பாலங்கள், பெரிய தேசிய நெடுஞ்சாலைகள், ரயில்வே பாதைகள் கட்டப்பட்டு வருகின்றன. இவற்றிற்கான ஒப்பந்தங்கள் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

இவற்றிற்கான கட்டுமான வேலைகளுக்கு மிகக்குறைந்த ஊதியத்தில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர். எனவேதான், பாசிச மோடி அரசு புதிய சட்டத்தை நிறைவேற்றி, அதன் மூலம் லட்சக்கணக்கான கிராமப்புறத் தொழிலாளர்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பலிகொடுக்கத் தயாராகி உள்ளது. அதாவது விபி-கிராம்ஜி சட்டம் கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபத்திற்காகக் கொண்டுவரப்பட்டதென்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.

​நாடு தழுவிய வேலைநிறுத்தத்தின் மூலம், விவசாய மற்றும் கிராமப்புற தொழிலாளர்கள் ஒன்றிய அரசுக்கு நான்கு முக்கிய கோரிக்கைகளை வைத்துள்ளனர்.

  • விபி-கிராம்ஜி VB-GRAM(G) சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் மற்றும் வலுப்படுத்தப்பட்ட வடிவத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.
  • ​ வலுப்படுத்தப்பட்ட சட்டகத்தின் கீழ், ஆண்டுதோறும் சந்தை பணவீக்கத்திற்கு ஏற்ப மாற்றியமைக்கப்படும் வகையில், குறைந்தபட்ச ஊதியமாக ₹700 உடன் குறைந்தது 200 நாட்கள் வேலை வழங்கப்பட வேண்டும்.
  • முக அங்கீகாரம் உட்பட, பணம் செலுத்தும் மற்றும் வருகைப் பதிவு அமைப்புகளுக்கான மக்களைப் புறக்கணிக்கும் தொழில்நுட்பங்களைத் திரும்பப் பெற வேண்டும்.
  • ​மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டப் பணிகள் மற்றும் அதனைச் செயல்படுத்துவதற்கு கிராம சபைகளை முக்கிய பங்குதாரர்களாக மாற்றி அவர்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும்.

​மேற்கு வங்கத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை மீண்டும் தொடங்க கல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட போதிலும், டிசம்பர் 2021 முதல் கடந்த நான்கு ஆண்டுகளாக அத்திட்டத்தை மோடி அரசு முடக்கி வைத்துள்ளது. இதன் மூலம் லட்சக்கணக்கான கிராமப்புற தொழிலாளர்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக வேறு மாநிலங்களுக்குச் செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களாக மாற்றப்பட்டனர். குறிப்பாக பெண்கள் மற்றும் முதியவர்களை வேறு வழியின்றி பெரும் கார்ப்பரேட் நிறுவன முதலாளிகளிடம் குறைந்த ஊதியத்தில் அடிமை போல் வேலை பார்க்கின்ற பொருளாதாரச் சுரண்டலுக்குள் அவர்களை பாசிச மோடி அரசு தள்ளியுள்ளது.

குறிப்பாக மேற்கு வங்கம், ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இந்த வேலைநிறுத்தத்தில் தொழிலாளர்களின் பங்கேற்பு மிக வலுவாக இருந்தது. இங்கு லட்சக்கணக்கான விவசாய மற்றும் கிராமப்புற தொழிலாளர்கள் உள்ளூர் அரசு அலுவலகங்களுக்கு வெளியே பல்வேறு வடிவங்களில் போராட்டங்களை நடத்தி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட், அசாம், ஒடிசா மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களிலும் இந்த வேலைநிறுத்தம் நடைபெற்றுள்ளது.

1990களில் தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் கொள்கை அமல்படுத்தப்பட்டதினால் கிராமப்புறங்களில் வேலையின்மை ஏற்பட்டு பஞ்சம் தலைவிரித்தாடியது. இந்த நிலைமையைச் சமாளிக்கவும் மக்களின் கொந்தளிப்பைக் கட்டுப்படுத்தவும் கொண்டுவரப்பட்ட திட்டமே நூறு நாள் வேலைத் திட்டம்.

ஆனால் தற்போது அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபத்திற்காக மக்களுக்குக் கிடைத்துவந்த சொற்ப ஊதியத்தையும் ஒழித்துக்கட்டி, அவர்களின் வயிற்றில் அடித்துள்ளது பாசிச மோடி அரசு.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க