26.05.2026

கிருஷ்ணகிரி – குடிநீர், மின்சாரம் தட்டுப்பாடு: காலி குடங்களுடன்
சேசுராஜபுரம் கிராம மக்கள் சாலை மறியல்!

பத்திரிகைச் செய்தி

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே, கடந்த இரண்டு வாரங்களாக முறையான குடிநீர் வழங்கப்படாததைக் கண்டித்து, சேசுராஜபுரம் கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தேன்கனிக்கோட்டையிலிருந்து அஞ்செட்டி வழியாக, தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் செல்லும் முக்கியச் சாலையில் அமைந்துள்ளது சேசுராஜபுரம் கிராமம். இந்த கிராமத்திற்குக் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக முறையான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை எனப் பொதுமக்கள் மிகக் கடுமையான குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.

குடிநீர் தட்டுப்பாடு ஒருபுறமிருக்க, மற்றொரு புறம் முறையான முன்னறிவிப்பின்றி, அடிக்கடி மின் விநியோகமும் தடைப்பட்டு வருகிறது. இதனால் இரவு நேரங்களில் மலை சார்ந்த பகுதி என்பதால் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

மேலும் அத்தியாவசியத் தேவைகளுக்குக் கூட தண்ணீரின்றி, குழந்தைகள், முதியவர்கள் என ஒட்டுமொத்த கிராம மக்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இது தொடர்பாக பலமுறை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளிடமும், அதிகாரிகளிடமும் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், அதிகாரிகள் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகின்றனர் என்பதை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.

அதிகாரிகளின் இந்த அலட்சியப் போக்கைக் கண்டித்து நேற்று காலை சேசுராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் அஞ்செட்டி – ஒகேனக்கல் சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் குதித்தனர்.

பொதுமக்களின் இந்த திடீர் சாலை மறியல் காரணமாக, ஒகேனக்கல் செல்லும் அந்த முக்கியச் சாலையில் இருபுறமும் வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்று, போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகளிடம் “பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்தால் மட்டுமே, மின்சார தடை பிரச்சனையைத் தீர்க்க வழிவகை செய்தால் மட்டுமே போராட்டத்தைக் கைவிடுவோம்” எனப் பொதுமக்கள் உறுதியாகத் தெரிவித்துள்ளனர்.

குடிநீர் மற்றும் மின்சாரத்திற்காக பொதுமக்கள் சாலையில் இறங்கிப் போராடி வரும் நிலையில் மக்களின் கோரிக்கையைப் புறக்கணிக்காமல் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக்கொள்கிறது.


இவண்,
தோழர் இரஞ்சித்,
கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர்

மக்கள் அதிகாரக் கழகம்.
8754674757

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க