இந்தியாவின் ஐ.டி. துறையானது சுமார் 191 பில்லியன் டாலர் சந்தை மதிப்புடைய சேவைகளை உலகெங்கிலும் வழங்கி வருகிறது. ஏறத்தாழ 5 மில்லியன் மனித வளத்தைக் கொண்டது இத்துறை.
மீப்பெரும் மின்தரவு மற்றும் பகுப்பாய்வு முறைமைகள் (Big Data Analytics) முதல் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) வரை நான்காம் தொழில்நுட்பப் புரட்சிக்கான அடிப்படையைக் கொண்டிருப்பது இத்துறைக்கான தேவை வளர்வதற்கான அடிப்படையாக உள்ளது.
இத்துறையில் வேலை செய்பவர்களுக்கு, ஆகப் பெரும்பான்மை நடுத்தர வர்க்கம் கனவுகாணும் வாழ்க்கைத் தேவைகளை, வேலைக்குச் சேர்ந்த குறுகிய காலகட்டத்திலேயே பூர்த்தி செய்துகொள்வதற்கான வாய்ப்புகள் இத்துறையில் இருக்கின்றன.
நடுத்தர வர்க்கத்தினரின் கனவுகளான சொந்தக் கார் வாங்குவது, வீடு வாங்குவது, வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்களை வாங்குவது முதலியன இத்துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு சில ஆண்டுகளிலேயே கிடைக்கப்பெறும் சாத்தியக்கூறு உள்ளது. இதற்கேற்ற வகையில், வங்கிகளும் தமது கிரெடிட் கார்டு சேவையை இத்துறையினரிடையே நன்கு பிரபலப்படுத்தி, அவர்களை இந்நுகர்வு கலாச்சாரத்தை நோக்கி இழுத்து இம்மோகத்தின் பின் ஓடத் தூண்டுகின்றன.
இவற்றுக்காகவே, தங்களை இயந்திரம் போல பாவித்து காலநேரம் பாராது உழைத்து வருகிறார்கள் ஐ.டி. ஊழியர்கள்.
மேலும், இத்துறையில் வேலை பார்க்கும் தொழிலாளிகளிடம் பிற துறையில் கணிசமாகக் காணவியலாத வேலைமுறை உண்டு. அதாவது, தான் வேலை செய்யும் அலுவலகத்திற்குச் செல்லாமல், மடிக்கணினி மூலம் அன்றைய தினத்திற்கான வேலையை வீட்டில் இருந்த படியே செய்ய முடியும்.
இந்த வேலை முறையானது, உற்பத்தித்துறை, கட்டிட வேலை போன்றவற்றிலோ அரசு வேலையில் ஈடுபடுவோருக்கோ கூட இதுநாள் வரை கிட்டியது இல்லை; கிட்டப்பெறுவதற்கான அடிப்படையும் இல்லை.
8 மணிநேரம் வேலை செய்யும் ஓர் ஆலைத்தொழிலாளி, தனது வேலைக்கு உரிய நேரத்தில் கிளம்பித் தயாராக வேண்டும். கால தாமதம் ஏற்பட்டு அவர் உரியநேரத்திற்கு வராமல் போனால், அவருக்கு அன்றைய தினத்திற்கான கூலி கிடைக்காது (ஆகப் பெரும்பான்மை ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு). ஆனால், தனது சோர்வு காரணமாகவோ அல்லது தாமதமாக கிளம்ப நேரிட்டாலோ, ஓர் ஐ.டி. தொழிலாளி ஒரு முன்னறிவிப்பை மட்டும் தனது மேலாளரிடம் தெரிவித்து விட்டு, வீட்டில் இருந்தபடியே தனது வேலைகளைத் தொடர முடியும்.
அநேக நேரங்களில், தமது வீட்டுவேலைகளை கவனித்துக் கொள்ள வீட்டில் இருந்து வேலைசெய்யும் (WFH) இவ்வேலைமுறை ஐ.டி. தொழிலாளர்களுக்கு ஒரு வரமாகவே இருந்து வருகிறது.
***
கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி இந்தியா முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட காலத்திலும் கூட, தமது பெரும்பான்மை தொழிலாளர்களை இந்த வேலைமுறை மூலம் வேலைசெய்யும் வலைபின்னலுக்கு ஐ.டி. நிறுவனங்களால் கொண்டுவர முடிந்தது.
ஊரடங்கின் துவக்கத்தில், ஐ.டி. துறையைச் சேர்ந்த பல்வேறு வர்க்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்களும் தமது குடும்பத்துடன் நேரம் செலவிடுவதற்கான நேரம் கிடைத்தது; தனது பிள்ளைகளின் படிப்பு மீது அக்கறை காட்ட இயன்றது என்றவாறெல்லாம் இவ்வேலைமுறையை விதந்தோதினர். ஆனால், ஊரடங்கு நீடிக்க நீடிக்க, வெளியே செல்ல இயலாமல் நான்கு சுவருக்குள் அடைபட்டிருப்பதும், பெருகிவரும் வேலை அழுத்தமும் சேர்ந்து ஒரு மன அழுத்தத்தை அவர்கள் மீது உருவாக்கின.
மேலும், முன்னர் சராசரியாக 7-8 மணிநேரம் வேலைசெய்த ஐ.டி தொழிலாளிகள் இப்போது ஊரடங்கு காலகட்டத்தில் 12-13 மணிநேரம் வேலைசெய்யப் பணிக்கப்பட்டனர். அலுவலகம் சென்ற நாட்களில் கூட அவர்களுக்கு தேநீர் இடைவேளை, உணவு இடைவேளை ஆகியவற்றிக்கு முறையே அரை மணிநேரம், ஒரு மணிநேரம் என்று இடைவேளை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
ஆனால், இந்த ஊரடங்கு காலகட்டத்திலோ, தலைமை நிர்வாகம் தனது கீழ் வேலைசெய்யும் அலுவலர்களுக்கு ஏற்படுத்திய வேலை அழுத்தத்தின் விளைவாக, தொழிலாளர்கள் சரியான நேரத்தில் உணவருந்தாமல்அதிக நேரம் கணினியில் – ஆன்லைனில் இருப்பதை உறுதி செய்ய வேண்டுமெனக் கட்டாயப்படுத்தப்பட்டனர். ஒரு சிறிய இடைவேளை எடுத்தால் கூட, உடனே ஒரு மின்னஞ்சல் அனுப்புவது, அதற்குக் குறிப்பிட்ட நிமிடத்தில் விடை தராவிடில் போன் செய்வது என இடைவெளியற்ற சுரண்டல் வடிவாக இந்த WFH வேலை முறை பரிணமித்துள்ளது.
ஒரு தொழிலாளி இந்த WFH வேலைமுறையில் முறையாக வேலை செய்கின்றாரா என்பதை பரிசோதித்தறிய பல்வேறு புதிய தொழில்நுட்பச் செயலிகள் வலம்வரத் துவங்கியுள்ளன. சாதாரணமாக, ஒரு புராஜெக்ட் முடிப்பதற்கு 2 வார காலம் ஆகுமென்றால், இந்த ஊரடங்கு காலகட்டத்தில், அந்தக் குறிப்பிட்ட வேலையை 10 நாட்களுக்குள் முடித்துக் கொடுக்க தனது அணிகளை நிர்பந்திக்குமாறு ஐ.டி நிறுவனங்களின் தலைமை நிர்வாகம் தமது மேலாளர்களுக்கு கட்டளையிட்டது. இதன் விளைவாக, குறிப்பிட்ட வேலைநேரம் என்ற வரைமுறை இல்லாமல் இராப்பகலாக, மேலாளர்களுக்குத் தனது வேலை குறித்து தெரிவிக்கும் சூழ்நிலைக்கு தொழிலாளர்கள் தள்ளப்பட்டனர். (புரொஜக்ட்டின் காலக்கெடுவைப் பொருத்து இவ்வழுத்தம் மாறுபடுகிறது).
இத்தகைய, ஒய்வு – உறக்கமில்லாத கடும் வேலைப்பளுவுக்கு இடையில் வேலை பார்க்கும் ஐ.டி. தொழிலாளிகள், தமது ஆரோக்கியத்தைப் பேணிக் காக்க இயலாது தவித்தனர். குறிப்பாக, சென்னையில் ஓர் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்த ஐ.டி தொழிலாளின் ஒருவர், ஏற்கனவே தனக்கு உடல் நிலை சரியில்லாத போதிலும் 12-13 மணி நேரம் பணிபுரிந்தார். அந்நிலையில் நிர்வாகத்தின் தொடர்ச்சியான, கடும் வேலைப்பளுவைத் தாங்க இயலாமல் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு, வேறேதும் தொழில்செய்து பிழைத்துக் கொள்வதாகக் கூறி தனது சொந்த ஊருக்கே சென்று விட்டார்.
இது போன்றதொரு பரந்துபட்ட வேலை பணிச்சுமை சூழல்தான் தற்போது ஐ.டி துறை எங்கும் நிலவி வருவதைக் காண முடிகின்றது. இச்சூழலுக்கு எந்த வகையிலும், குறைந்தபட்ச எதிர்ப்பைக் கூட பதிவு செய்யாமல் பல ஐ.டி. தொழிலாளிகளை வேலைசெய்யத் தூண்டுவது எது?
***
இதற்கான காரணம், நாம் ஏற்கனவே, குறிப்பிட்டுள்ள வெவ்வேறு வர்க்க அடுக்குகள் கொண்ட ஐ.டி தொழிலாளிகளிடம், தமது வாழ்வாதாரத்தைப் பேணிக்காப்பது, வங்கிக் கடன்களை அடைப்பது, கிரெடிட் கார்டு கணக்குகளை கட்டிமுடிப்பது என்பன போன்ற பல்வேறு காரணங்களால், எப்பாடுபட்டாவது வேலையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியிருப்பது தான்.
ஐ.டி. தொழிலாளிகளின் ஓய்வு, உறக்க நேரம் உட்பட அவனது மொத்த மூளை உழைப்புச் சக்தியையும் இப்படி சக்கையாகப் பிழிந்து சுரண்டி எடுப்பதன் வாயிலாக, முதலாளித்துவ வர்க்கம் தனது தொழிலாளிகளின் உற்பத்தித்திறனை அதிகரித்துள்ளதாய் கூறுகிறது. இதன் தொடர்ச்சியாகவே, இன்போசிஸ், ஹெச்.சி.எல். போன்ற நிறுவனங்கள் இந்த ஊரடங்கு காலகட்டத்தில், தமது நிறுவனத் தொழிலாளர்களின் உற்பத்தித்திறன் முன்னைக் காட்டிலும் கணிசமான சதவீதம் அதிகரித்துள்ளதை கண்டு புளகாங்கிதமடைந்துள்ளன.
மேலும், இந்த கொரோனா நோய்த்தொற்றுச் சூழல் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாக, ஏற்கனவே உலகெங்கிலும் மந்தமாகியிருந்த பொருளாதாரம், மேலும் தீவிரமாக வீழ்ச்சியடையத் துவங்கியது. இந்தச் சூழலைக் காரணம்காட்டி உலகெங்கிலும் உள்ள முதலாளி வர்க்கம் தமது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி வேலைநீக்கம் செய்வது அதிகரித்துள்ளது. மேலும், இந்தப் பொருளாதாரம் மீண்டு எழுவதற்கான எந்தவித அறிகுறியும் தென்படாத நிலையில், வேலையிழந்தோருக்கு மீண்டும் வேலை கிடைப்பதற்கான எவ்வித அடிப்படையும் தென்படவில்லை.
இந்த உலகளாவிய புறச்சூழலை சாதகமாக்கி, இந்திய ஐ.டி. முதலாளி வர்க்கம், வேலை செய்ய மறுத்தாலோ, தயக்கம் காட்டினாலோ, எவ்வித முன்னறிவிப்புமின்றி வேலைநீக்கம் செய்துவிடுவதாக மிரட்டிப் பணிய வைத்து ஐ.டி. ஊழியர்களைச் சுரண்டி வருகின்றனர்.
8 மணி நேரம் வேலை, 8 மணி நேரம் உறக்கம், 8 மணி நேரம் ஓய்வு என்னும் உரிமையென்பது தொழிலாளி வர்க்கம் தனது வியர்வையும் இரத்தமும் சிந்திய போராட்டங்களின் விளைபயனாக உதித்தது.
ஆனால், ஐ.டி. தொழிலாளி வர்க்கம் ஆட்படும் இந்த நவீன சுரண்டல் முறையானது, தொழிலாளியின் தார்மீக ஒய்வு, உறக்க நேரத்தையும் உறிஞ்சிக் கொழுத்து, குறைந்த கூலி கொடுத்து, தனது மூலதனத்தைப் பெருக்க முனையும் முதலாளி வர்க்கத்தின் லாபவெறியை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது. அத்துடன், தொழிலாளி வர்க்கம் தனது உரிமைகளை இழந்து ஒரு கொத்தடிமை போன்ற வேலைமுறைக்கு செல்லும் அபாயத்தை துலக்கமாக புலனாக்குகிறது.
“சொல்வதைச் செய்; இல்லையேல் வெளியேறு (Do as instructed else get out)” என்று முதலாளித்துவம் தொழிலாளி வர்க்கத்தின்மீது தற்போது தொடுத்துவரும் தாக்குதலை முறியடிக்க, ஐடி துறை ஊழியர்கள் சங்கமாக அணிதிரள்வது முன்னெப்போதைக் காட்டிலும் அவசியமாக உள்ளது.
வாயில் வடை சுடுவது மோடிக்கு கைவந்த கலை என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததுதான். இந்திய அரசின் சார்பில் வெளியிடப்படும் கோவிட்-19 தாக்குதல் குறித்த அறிக்கைகளும்கூட வாயிலேயே வடை சுடுகின்றன. கடந்த 20-05-2020 அன்று மத்திய அரசின் சுகாதார அமைச்சகத்தின் சார்பில் ஊடகங்களுக்கு கொடுக்கப்பட்ட செய்தியறிக்கை இந்தியாவின் கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து ஊதிப் பெருக்கிக் காட்டப்பட்டுள்ளன.
சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால்.
மோடி அரசின் சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் இந்தியாவின் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்பை நிகழ்த்தினார். அதில் பேசுகையில் இந்தியாவில் கோவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 61,149-ஆக இருப்பதாகத் தெரிவித்தார். மேலும் இதுவரை இந்தியாவில் இந்நோய்க்கு 3,303 பேர் பலியாகியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த பத்திரிகையாளர் சந்திப்பு முழுவதும், இந்தியாவில் கோவிட்-19 சோதனை விகிதம் குறித்த புள்ளி விவரங்களை எண்ணிக்கையில் பேசாமல், அதிகமாகப் பாதிக்கப்பட்ட பிற நாடுகளுடன் ஒப்பிட்டு, இந்தியா மிகவும் சிறப்பாக செயல்படுவதாகக் காட்டுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருந்தது.
இந்தியாவில் மொத்த மக்கள் தொகையை ஒப்பிடுகையில், 1 லட்சம் பேரில் 7.9 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு இருப்பதாகவும், உலக சராசரியைப் பொறுத்த வரையில் கோவிட்-19 பாதிப்பு, 1 லட்சம் பேருக்கு 62 பேர் என்ற விகிதத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார். இந்தியாவை விட அதிக அளவிலான பாதிக்கப்பட்டவர்களைக் கொண்ட நாடுகளின் மக்கள் தொகையில் 1 லட்சம் பேரில் சராசரியாக 100 முதல் 496 பேர் வரை பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அதிகம் பாதிக்கப்பட்ட 15 நாடுகளின் மக்கள் தொகையையும் இந்தியாவின் மக்கள் தொகையையும் ஒப்பிட்டுக் கூறிய லாவ் அகர்வால், இந்தியாவை விட அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ள 15 நாடுகளின் மொத்த மக்கள் தொகையும் சேர்த்து 143 கோடிதான் என்றும் இந்தியாவில் மட்டும் 137 கோடி பேர் இருப்பதாக தெரிவித்தார். இந்த மதிப்பீட்டின் படி பார்க்கையில் இந்த 15 நாடுகள் பட்டியலில் சீனா இடம் பெறவில்லை என்று தெரிகிறது.
இந்த நாடுகளில் மொத்தமாக 36 லட்சம் பாதிப்புகளும் 2.7 லட்சம் மரணங்களும் பதிவு செய்யப்பட்டிருக்கையில், இந்தியாவில் இதுவரை 1 லட்சம் பேர்தான் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், 3300 பேர் மட்டுமே மரணித்திருப்பதாகவும் ஒப்பிட்டார். அதாவது இந்த 15 நாடுகளில் இந்தியாவை விட 34 மடங்கு அதிகமான பாதிப்புகளும், 87 மடங்கு அதிகமான மரணங்களும் நிகழ்ந்திருப்பதைச் சுட்டிக் காட்டியிருக்கிறார் லாவ் அகர்வால்.
இந்தியாவில் தற்போது பாதிப்புக்குள்ளாகியிருக்கும் இருக்கும் சுமார் 61,000 பேரில் 2.94% பேர்களுக்கு மட்டுமே ஆக்சிஜனேற்றம் தேவைப்படுகிறது. தீவிர சிகிச்சைப் பிரிவில், 3% பேர் மட்டுமே இருக்கின்றனர். இதில் 0.45% பேருக்கு மட்டுமே வெண்டிலேட்டர் அவசியம் இருப்பதாகவும் லாவ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களில் 6.39% பேருக்கு மட்டுமே மருத்துவமனைத் தேவை இருப்பதாகவும் தெரிவித்தார்.
அதே போல உலக அளவில் கோவிட்-19 மரண விகிதம் ஒரு லட்சம் பேருக்கு 4.2 பேர் என்ற அளவில் இருக்கிறது. ஆனால் இந்தியாவில் அது ஒரு லட்சம் பேருக்கு 0.2 பேர் என்ற அளவில் இருப்பதாகக் கூறினார். இந்தியாவை விட அதிக பாதிப்புகளைக் கொண்ட பிற 9 நாடுகளில் மரண எண்ணிக்கை லட்சத்திற்கு 10-க்கும் அதிகமாக இருப்பதாகக் கூறியிருக்கிறார் லாவ் அகர்வால்.
பாதிப்புகள் இந்தியாவில் குறைவாக இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியிருப்பது, நமக்கு மகிழ்ச்சியைத் தரலாம். ஆனால் இதனை சோதனை விகிதத்தின் அடிப்படையில் ஒப்பிட்டால் மட்டுமே உண்மையான நிலைமை தெரியவரும்.
மொத்தம் 33 கோடி மக்கள் தொகை கொண்ட அமெரிக்கா, கடந்த செவ்வாய்க்கிழமை (19.05.2020) வரை சுமார் 1.26 கோடி பேருக்கு சோதனையை மேற்கொண்டுள்ளது. அதாவது தனது மொத்த மக்கள் தொகையில், 3.8% பேருக்கு கோவிட்-19 பரிசோதனை நடத்தியுள்ளது அமெரிக்கா. இந்திய மக்கள் தொகையான 135 கோடி பேரில் இதுவரை 25 லட்சம் பரிசோதனைகளை மட்டுமே இந்தியா மேற்கொண்டுள்ளது. இது மொத்த மக்கள் தொகையில், 0.19% மட்டுமே ஆகும்.
இங்கு பரிசோதனை விகிதத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்வது முக்கியமானது. ஒரு நாட்டில் குறைவான அளவிலேயே கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது எனில், ஒன்று அந்நாடு வைரசைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும். அல்லது போதுமான அளவில் சோதனைகள் மேற்கொள்ளப்படாமல், இருந்திருக்க வேண்டும்.
இந்தியாவின் உறுதிசெய்யபட்ட பாதிப்புகள் குறைவாக இருப்பதன் காரணம், குறைவான பரிசோதனைகள் தான். இதனை உலகளாவிய அளவில் கோவிட்-19 புள்ளியியல் விவரங்களைக் கணக்கெடுக்கும் “வேர்ல்டோமீட்டர்” என்ற இணையதளம் வெளியிட்டுள்ள புள்ளி விவரக் கணக்கு உறுதி செய்கிறது. அந்த தளம் கொடுத்துள்ள தரவுகளின் படி, இந்திய மக்கள் தொகையில், 10 லட்சம் பேரில் 1800 பேர் என்ற விகிதத்தில்தான் பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் அமெரிக்காவில் 10 லட்சம் பேரில் 38000 பேர் என்ற விகிதத்தில் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட 25 லட்சம் பரிசோதனைகளில் 1 லட்சம் பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது 4% பாதிப்பு. இந்தியாவில் பரிசோதனை விகிதம் குறைவாக இருக்கும் வரையில் இங்கு கோவிட்-19 பாதிப்புகள் குறைவாகவே வெளியே தெரியவரும். எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமான பரிசோதனை மேற்கொள்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு முழுமையான பாதிப்பு நிலவரம் வெளியே தெரியவரும்.
இந்தியாவில் நடத்தப்படும் குறைவான பரிசோதனைகளிலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறதே ஒழிய குறைந்தபாடில்லை. ஆனால் ஆளும் பாஜக அரசோ கொரோனாவோடு இருக்கப் பழகிக் கொள்ளுங்கள் என்று மக்களை அறிவுறுத்தியிருக்கிறது. மருத்துவ வசதிகளையும், பரிசோதனைகளையும் அதிகரிக்கக் கோரி போராடப் போகிறோமா அல்லது மரணத்தை எதிர்நோக்கி காத்திருக்கப் போகிறோமா ?
உலக நாடுகளையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா நோய்த்தொற்று இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இந்திய அரசோ ஊரடங்கு மூலம் ஆகப் பெரும்பான்மையான மக்களை வீடுகளில் அடைத்து வைத்திருப்பதையே, நோய்த் தொற்று பரவலின் தாக்கத்தை குறைக்கும் முதன்மை நடவடிக்கையாக கடைபிடித்து வருகிறது. மக்களுக்கு போதிய நிவாரணம் வழங்கப்படவில்லை என்பதோடு இத்தகைய சூழல் காரணமாக, நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார நடவடிக்கையும் பெரிய அளவில் முடங்கியுள்ளது.
குறிப்பாக, நடப்பு நிதியாண்டின் (FY 2019-2020) இறுதிக் காலகட்டத்தில் இந்த நோய்த்தொற்று பரவியதால், அரசின் வருவாய்க்கான மூலங்கள் முற்றிலும் சுருங்கின. பல்வேறு நிதி நடவடிக்கைகள், குறிப்பாக, நிதியாண்டுக்கான வரி செலுத்துவது / வாங்குவது தொடர்பான நடவடிக்கைகள் பெரிதும் முடங்கிப் போயுள்ளன.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 26-ஆம் நாள் டிவிட்டர் வலைதளத்தில் இந்திய வருவாய் துறையின் (Indian Revenue Service – IRS) அதிகாரபூர்வ பக்கத்தில், 50 இந்திய வருவாய்த் துறை அதிகாரிகளால் சேர்ந்து உருவாக்கப்பட்ட ஓர் அறிக்கை வெளியானது. நிதி திரட்டும் ஆதார வழிகள் மற்றும் கோவிட்-19 தடுப்பு நடவடிக்கை (F.O.R.C.E) என்ற பெயரிலான இந்த அறிக்கையானது, பல்வேறு துறைகளில் வரி வருவாயை அதிகரிப்பதற்கான பரிந்துரைகள் அடங்கிய ஓர் ஆய்வறிக்கை ஆகும்.
அந்த ஆய்வறிக்கை கூறும் பரிந்துரைகள் யாவை? மத்திய நிதியமைச்சகம் மற்றும் மத்திய நேரடி வரிகள் வாரியம் (Central Board of Direct Taxes) ஆகியன மறுநாளே அதற்கெதிராக நடவடிக்கைகள் எடுப்பதற்கான காரணம் என்ன?
43 பக்கங்களைக் கொண்ட பல்வேறு பரிந்துரைகள் அடங்கிய அவ்வறிக்கை, கொரோனா நோய்த் தொற்றின்போது பல்வேறு நாடுகள் தங்களது பொருளாதாரத்தை மீட்டெடுக்க, புனரமைக்க, நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ள முன்னெடுக்கும் நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், இந்தியாவில் அரசின் வருவாயை அதிகரிப்பதற்கான குறுகிய, இடைக்கால, நீண்டகால இடைவேளைகளில் மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகளை தமது பரிந்துரைகளாக அவ்வறிக்கை கொண்டிருந்தது.
அவற்றில் பிரதானமாக, ஒரு பரிந்துரையானது பெரும் பணக்காரர்களைப் பற்றியது. அவற்றில்,
ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டுவோருக்கு தற்போது இருக்கும் 30 சதவீத வரியை 40 சதவீதம் வரை உயர்த்தலாம். அல்லது,
ஐந்து கோடி ரூபாய் மற்றும் அதற்கும் மேல் நிகர சொத்து மதிப்பு வைத்திருப்பவர்களுக்கு செல்வ வரி (Wealth Tax) மறு அறிமுகம் செய்வதன் மூலம் வரி விதிக்கலாம்.
– என இரு முக்கிய பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
மேலும், இந்த வரி விதிப்பின் மூலம் இந்திய அரசிற்கு ரூ. 50,000 கோடி வரி வருவாய் வருவதை வைத்து, பொருளாதாரத்தில் தமக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்த, அதிக செலவு தரும் 5 முதல் 10 திட்டங்களை அரசு கண்டறிய வேண்டும்; அந்தத் திட்டங்களுக்கான மொத்த செலவு மதிப்பையும் அரசு ஒரு பொது இணையதளம் உருவாக்கி வெளியிட வேண்டும்; அந்தத் திட்டங்களுக்கு ஆகும் மொத்த செலவையும், இந்த மேற்கூறிய வரி விதிப்பின் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு, மொத்தமாக இந்த திட்டங்களுக்கு மட்டுமே தனியாகச் செலவிட வேண்டும்; மேலும், இந்தத் திட்டங்களுக்கு ஆகும் செலவினங்களையும் இந்த இணையதளத்தில் அரசு வெளியிட வேண்டும் – எனப் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
மேற்கூறிய இந்த முக்கிய பரிந்துரையானது, பெரும் பணக்காரர்களுக்கு வரி விலக்கு செய்வதையே வாடிக்கையாக கொண்டுள்ள நிதி அமைச்சகத்திற்குக் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தற்போது ஆளும் பா.ஜ.க., இதற்கு முன்னர் ஆட்சி செய்த காலத்தில்தான் இந்தச் செல்வ வரியானது ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாகவே, நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், இந்தப் பரிந்துரை அறிக்கையைத் தயாரித்த 50 ஐ.ஆர்.எஸ். அதிகாரிகளின் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
அறிக்கையின் மற்றுமொரு முக்கிய பரிந்துரையானது, பரம்பரை சொத்து வரியை மறுஅறிமுகம் செய்வது பற்றியது. பரம்பரை சொத்து வரியானது, மேலை நாடுகளில் சுமார் 55 சதவீதம் வரை வரி விதிப்பு செய்யப்படுகின்றது. இந்தியாவிலும் கூட 1985 வரை நடைமுறையில் இருந்த பரம்பரை சொத்து வரி விதிப்பானது, நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் உள்ளது என்று கூறி, பின்னர் ரத்து செய்யப்பட்டது.
இந்த வரி விதிப்பை மறுஅறிமுகம் செய்யும்போது, செல்வம் ஒரு குறிப்பிட்ட பிரிவினரிடம் குவிவது பெருமளவில் குறையும்; மேலும், இத்தகைய முடங்கியிருந்த செல்வம் வரி விதிப்பின் மூலம் பரவலான பயன்பாட்டிற்கு வருவதற்கான வாய்ப்புள்ளது; இதுதவிர, தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் முன்னர் இருந்த பல்வேறு நடைமுறை சிக்கல்களின்றி, இவ்வரி விதிப்பை அமல்படுத்த முடியும் – என்பதாக ஒரு பரிந்துரை இடம் பெற்றுள்ளது.
மேற்கூறிய பரிந்துரை எந்த வர்க்கத்தின் நலனைப் பாதிப்புக்குள்ளாக்கும் என்பதை அறிந்த மத்திய அரசும், மத்திய நேரடி வரிகள் வாரியமும் (Central Board for Direct Taxes) இந்திய வருவாய்த் துறையின் டிவிட்டர் வலைதளத்தில் வெளியான அறிக்கையானது, இத்துறையின் கருத்தாக கருத இயலாது – என அறிக்கை வெளியான மறுநாளே கூறியிருப்பதன் மூலம், இந்த அரசாங்கம் யாருக்கானது என்பதைத் தெளிவாக்கியது.
ஊரடங்கின்போது ஆகப் பெரும்பான்மை மக்களை வீட்டுக்குள் முடக்கியபோது, அரசின் பல்வேறு பொருளாதார மூலாதாரக் கூறுகளும் முடங்கியபோது, கொரோனா பாதிப்பின்போது இயங்கிய பொருளாதாரம் என்பது டிஜிட்டல் / ஆன்லைன் / இணைய வர்த்தகத்தின் பொருளாதாரம் சார்ந்ததுதான். இச்சூழலானது, தமது தேவைகளுக்காகப் பல்வேறு ஆன்லைன் சேவைகளை வழங்கும் நிறுவனங்களான, அமேசான் (Amazon), நெட்பிளிக்ஸ் (Netflix), சூம் (Zoom), ஸ்விக்கி (Swiggy), சொமேடோ (Zomato) போன்ற நிறுவனங்களைத்தான் பெரிதளவில் மாத வருவாய் உள்ள மக்களை சார்ந்திருக்குமாறு செய்கிறது. ஆகவே, இந்தக் காலகட்டத்தில், அது தழைத்தோங்கும் பொருளாதாரமாக வளர்ந்து வருகிறது.
ஆகையால், தமது தொழிலைப் பெருமளவு விரிவுபடுத்த வாய்ப்புள்ள இத்தகைய நிறுவனங்களின் மீதான வரி விதிப்பை ஒரு சதவீதம் உயர்த்துவதன் மூலம், வரி வருவாயைப் பெருக்க இயலும் என அவ்வறிக்கை பரிந்துரை செய்திருப்பது மிகவும் ஏற்புடையதாகும். ஏனெனில், பல்வேறு அரசு / தனியார் துறைகளிலிருந்தும், கொரோனா நிவாரண நிதியாக பல்வேறு மக்களும் தம்மால் முடிந்த பங்களிப்பைச் செய்து வரும் வேளையில், இந்த நிலைமையில் இயங்கிவரும் ஒரே தொழிலான விளம்பரச் சேவைகளுக்கு 6-இலிருந்து 7 சதவீதம் வரி விதிப்பை அதிகரிப்பதும், இணைய வர்த்தக நிறுவனங்களிடம் 2-இலிருந்து 3 சதவீதமாக வரி விதிப்பை அதிகரிப்பதும் அநியாயமானது என்று கருத இயலாது.
இந்த அறிக்கை டிவிட்டர் வலைதளத்தில் கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி இரவு 10 மணியளவில் மக்கள் கருத்திற்காக வெளியிடப்பட்டது.
இந்த அறிக்கை வெளியான மறுநாள் மாலை 5 மணியளவில் மத்திய நேரடி வரிகள் வாரியமானது, இவ்வறிக்கை வெளியாவதற்கு காரணமாக இருந்த 50 ஐ.ஆர்.எஸ். அதிகாரிகளின் மீது தன்னிலை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.
இதன் தொடர்ச்சியாக, ஏப்ரல் 28-ஆம் தேதி, இந்த அறிக்கையைத் தங்களுக்கு கீழுள்ள இளம் அதிகாரிகளைத் தயார் செய்யுமாறு கோரியதாக துபே மற்றும் பகதூர் ஆகிய இருவர் மீதும், மேலும் இந்த அறிக்கையை டிவிட்டர் வலைதளத்தில் மக்கள் அறியும்படி வெளியிட்ட பூஷண் என்பவர் மீதும் நடத்தை விதிமுறைகளை மீறியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை உருவாவதற்கு முன்னோடிகளாக இருந்த, வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கும் இந்த 3 அதிகாரிகளும் சுமார் 10 ஆண்டு காலமாக இந்த துறையில் பணியாற்றியுள்ளனர். மேலும், அவர்கள் இந்த அறிக்கையை ஏப்ரல் 23-ஆம் தேதி அன்றே மத்திய நேரடி வரிகள் வாரியத்திடம் தாக்கல் செய்துள்ளனர். இதற்கு எந்தவித கருத்தையும் மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவிக்காத நிலையில், அவர்கள் ஏப்ரல் 26-ஆம் தேதி டிவிட்டரில் வெளியிட்டுள்ளனர்.
இந்த ஊரடங்கு காலகட்டத்தில், ஏற்கெனவே பல்வேறு மாநிலங்கள் போதிய வரி வருவாய் இல்லாமல் மத்திய அரசிடம் தொடர்ந்து அதிகளவு நிவாரண நிதியைக் கோரி நிர்பந்தித்து வரும் வேளையில், இந்த அறிக்கையில் உள்ள பரிந்துரைகளை ஏற்கத்தக்கவை / ஏற்கத்தகாதவை என்றுகூட பரிசீலிக்காமல் அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கதாகும்.
மேலும், இந்த அறிக்கை வெளியாவதற்கு உதவி புரிந்த 50 ஐ.ஆர்.எஸ். இளம் அதிகாரிகளில் கணிசமானோர் இத்துறைக்கு வந்து 2 முதல் 5 ஆண்டுகள் அனுபவம் உடையவர்கள். ஆக, தனது துறையின் (ஐ.ஆர்.எஸ்) வருவாயை அதிகரிப்பதற்கான சில பரிந்துரைகள் செய்வதென்பது, அந்தத் துறை இயங்குவதற்கான அடிப்படையான முன்முயற்சியாகும். அதனைக்கூட மறுப்பதென்பது, அரசின் அதிகாரத் திமிரையும், அரசின் பல்வேறு துறைகள் எவ்வாறு முடங்கியுள்ளன என்பதை உணர்த்துகிறது.
அமெரிக்காவில் வரி வருவாய் குறைந்துள்ளதன் விளைவாக, கொரோனா தாக்குதல் தீவிரமடைந்துள்ளதோடு, அடிக்கட்டுமான அமைப்பே நெருக்கடியில் இருப்ப்தை பல பொருளாதாரவாதிகள் சுட்டிக் காட்டுகின்றனர். இதன் விளைவாக, சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகள் தீவிரமடைகின்றன. எனவே, முதலாளித்துவ நாடுகளில் கூட சந்தைகளை இயங்க வைக்க முடியாமல் அரசுகள் தடுமாறுகின்றன. எனவே, சந்தைகளை இயங்க வைக்கவும், சந்தைகளின் ஆதாயங்களைப் பரவலாக விநியோகிக்கவும் தவிர்க்கவியலாமல் பெருமுதலாளிகளது செல்வத்தின்மீதும், கார்ப்பரேட் தொழில் நிறுவனங்களின் மீதும் வரி விதிப்பு வீதத்தை அதிகரிப்பது மிகமிக அவசியத் தேவையாக உள்ளது.
அரசாங்கத்தால் வரி குறைவாக உறிஞ்சப்படும்போது, தொழில் நிறுவனங்கள் தங்கள் லாபத்திலிருந்து அதிகமாக மறுமுதலீடு செய்யும் என்று வரி அதிகரிப்பை எதிர்ப்பவர்கள் கூறுகின்றனர். இருப்பினும், இது எந்த வகையிலும் உண்மையில்லை என்று ஏற்கெனவே பல பொருளாதாரவாதிகள் நிரூபித்துள்ளனர். தொழில் நிறுவனங்கள் தங்களது லாபத்தை மறு முதலீடு செய்யாமல், வெள்ளையாகவும் கருப்பாகவும் இந்தச் செல்வத்தை வரியில்லா சொர்க்க நாடுகளுக்குக் கடத்திச் சென்று பதுக்குகின்றன என்பதே உண்மை.
கோடீசுவர முதலாளிகள் மீதும், அவர்களது கார்ப்பரேட் நிறுவனங்கள் மீதும் உலகளாவிய குறைந்தபட்ச வரிவிதிப்பை அனைத்து நாடுகளும் செயல்படுத்தப்படுத்த வேண்டுமென கொரோனா தாக்குதல் நிலவும் இத்தருணத்தில் பல்வேறு பொருளாதாரவாதிகளும் ஜனநாயகவாதிகளும் கோரி வருகின்றனர். ஆனால், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு பல லட்சம் கோடி மக்கள் வரிப் பணத்தை வாரிவழங்கிய மோடி அரசு, இந்த நோய்த்தொற்று நெருக்கடி காலகட்டத்தில், அவர்களிடம் இருக்கும் கொள்ளை லாபத்தில் ஒரு சிறு சதவீதத்தை வரி என்ற வகையில் போட்டு வசூலிக்க வேண்டுமென பரிந்துரைத்தால்கூட, அதைக் கண்டு பதற்றமடைந்து எதிர்வினையாற்றுகிறது.
இந்த அறிக்கை தொடர்பான மோடி அரசின் இந்த நடவடிக்கையானது, எவ்வாறு அரசின் அனைத்து துறைகளும் கார்ப்பரேட் நலன்களின் சேவகனாக, தொங்கு சதையாக மாற்றப்பட்டு வருகின்றது என்பதைப் பறைசாற்றுகிறது. ஆக, ஒட்டுமொத்ததில், இந்த அரசுக் கட்டமைப்பை வைத்துக்கொண்டு பெரும்பான்மை மக்களுக்கு குறைந்தபட்ச நன்மை செய்வதுகூட சாத்தியமற்றது என தொடர்ச்சியாக நிரூபிக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக, அரசின் ஒவ்வொரு உறுப்பும், எவ்வாறு தான் ஏற்றுக்கொண்ட வேலைகளைச் செய்ய இயலாமல் போய், மக்களுக்கு எதிரானதாய் மாற்றமடைந்து வருகிறது என்பதை அரசின் தொடர்ச்சியான இந்த நடவடிக்கைகள் மேலும் மேலும் அப்பட்டமாகத் தெளிவாக்கிக் கொண்டு வருகிறது. ஜனநாயக சக்திகள் இதை புரிந்து கொண்டு மக்களுக்கான உரிமைகளை மீட்டெடுப்பது குறித்து முன்வரவேண்டும்.
மே 22 அன்று மக்கள் அதிகாரம் கோவை பகுதி சார்பாக தூத்துக்குடி தியாகிகளின் 2 -ஆம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியை மக்கள் அதிகாரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் மூர்த்தி தலைமையேற்று நடத்தினார். இதில் புரட்சிகர இளைஞர் முன்னணி கோவை மாவட்டப் பொறுப்பாளர் தோழர் மலரவன், தி.மு.க. பகுதிப் பொறுப்பாளர் திரு. ராஜன், திராவிடர் விடுதலை கழக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் நேருதாஸ், சமூக ஆர்வலர் திரு கோவை கதிர் மற்றும் திரளான பகுதி மக்கள் பங்கேற்றனர்.
தோழர் மூர்த்தி தனது தலைமை உரையில் ஸ்டெர்லைட் ஆலை பற்றிய விபரங்களையும், அதை மூடக்கோரி நடந்த போராட்டத்தையும் பற்றி சுருக்கமாக விளக்கிக் கூறினார். மக்கள் அதிகாரம் தோழர் ஜூலியஸ் மக்களின் பிரச்சினைகளுக்கு இந்த அரசு கட்டமைப்புக்குள் எந்தத் தீர்வும் கிடைக்காது என்பதையும், பல்வேறு அமைப்புகளாக செயல்பட்டாலும் ஒற்றை நோக்கத்திற்காக இணைந்து வேலைசெய்ய வேண்டியதன் அவசியத்தை பற்றியும் பேசினார்.
தோழர் மலரவன், மக்களுக்கு எதிரான ஒரு அரசமைப்பு அது எத்தகைய பலம் வாய்ந்ததாக இருந்தாலும், மக்களின் போராட்டம் அவற்றையெல்லாம் தகர்த்தெறியும் என்று விளக்கினார். தோழர் நேருதாஸ் மற்றும் கோவை கதிர் ஆகியோர் இன்றைய சமூக நிலைமைகள் பற்றியும் அரசியல் நிலைமைகள் பற்றியும் விளக்கிப் பேசினார். மக்கள் அதிகாரம் தோழர் ராஜன் புரட்சிகர பாடலைப் பாடினார். நிகழ்ச்சி சிறந்த முறையில் பகுதி மக்களின், குழந்தைகளின் பங்கேற்புடன் நடைபெற்றது. மக்கள் தோழர்களை உற்சாகப்படுத்தினர்.
தூத்துக்குடி தியாகிகளின் நினைவஞ்சலி நிகழ்வானது பகுதி மக்களுக்கு இந்த மக்கள் விரோத அரசுகள் குறித்த விழிப்புணர்வை ஊட்டுவதாகவும், மக்கள் போராட்டமே பிரச்சினைகளுக்குத் தீர்வு தரும் என்பதை உணர்த்துவதாகவும் இருந்தது.
This slideshow requires JavaScript.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் : மக்கள் அதிகாரம், கோவை.
***
ஸ்டெர்லைட்எதிர்ப்புபோராளிகளின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு புவனகிரி வட்டம் பெரியகுப்பம் கிராமத்தில், மாணவர்கள் – இளைஞர்கள் என அனைவரின் பங்கேற்புடன் நடைபெற்றது.
This slideshow requires JavaScript.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
1995ம் ஆண்டு நவம்பர் மாதம் 29ம் தேதி 4 மணிக்கு நான் சங்க அலுவலகத்திலிருந்த போது நான் உட்பட 5 பேரின் வேலைநீக்க உத்தரவு தரப்பட்டது. ஆனால், நாங்கள் வேலைநீக்கம் செய்யப்படுவோம் என்பதை உணர்ந்தே இருந்தோம். தொழிற்சங்க நடவடிக்கைக்காக அந்த வேலைநீக்கம் நடைபெற்றது. அன்றைய தினம் எங்களுக்கு அது ஒன்றும் பேரதிர்ச்சியாக இல்லை.
ஏனென்றால், அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த ஏறக்குறைய 90 சதவிகிதமான தொழிலாளிகளும் அவர்களது குடுத்தினர்களும் அதை தங்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதாலாகவே உணர்ந்தார்கள். மீதமுள்ள 10 சதவிகிதம் பேரும் இந்தப் பெருவாரியான கருத்துக்களுக்கு முன்பு தங்களது கருத்தை வெளியில் சொல்லவில்லை. அந்த 10 சதவிகிதம் பேரில் பெருவாரியானவர்கள் சங்பரிவாரின் ஆதரவாளர்கள்.
நாங்கள் வேலைநீக்கம் செய்யப்பட்ட அன்று மாலை வாயிற்கூட்டத்தில் நான் பேசினேன். பைபிளில் உள்ள ஒரு வாசகத்தை அப்போது நான் அவர்களிடம் சொன்னேன். உத்தேசகமாக அந்த வார்த்தை இயேசு சிலுவையேற்றி அழைத்துச் செல்லப்பட்ட போது அவருக்காக அழுத மக்களைப் பார்த்து அவர் எனக்காக அழாதீர்கள், உங்களுக்காகவும் உங்கள் குழந்தைகளுக்காகவும், உங்கள் சந்ததியினருக்காகவும் அழுங்கள் என்று பேசியதாக என் நினைவில் இருந்ததைச் சொன்னேன்.
எல்லோர் தலையும் கவிழ்ந்திருந்தது. பலர் கண்ணீர் வடித்தார்கள். அப்போது எங்களில் யாருக்கும் 35 வயதைத் தாண்டவில்லை. எனக்கு வயது 32. எங்களில் இளையவருக்கு 29 வயது இருக்கும். திருமணமாகி 6 மாதங்கள் கூட ஆகவில்லை. ஆனால், நாங்கள் எல்லோரும் மிகவும் பாதுகாப்பாக உணர்ந்தோம். எங்களை வருடுகிற பார்வைகள், தங்களை விடவும் எங்களை நேசித்ததை நாங்கள் அறிவோம்.
நாங்கள் பணிபுரிந்த நிறுவனத்தையும் அதேசமயம் நாங்கள்தான் வேலைநீக்கம் செய்யப்பட்டவர்கள் என்று தெரியாமலும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள் எங்கள் கைகளைப் பிடித்துக் கொண்டு ‘உங்க கம்பெனில கொஞ்ச பேர டிஸ்மிஸ் பண்ணிட்டாங்களாமே, அவர்களை கொஞ்சம் நல்லா பாத்துகோங்கப்பா’ என்று சொன்னபோது உலகமே எங்களுக்கு ஆதரவாக நிற்பது போன்ற உணர்வை நாங்கள் பெற்றோம். இதையெல்லாம் சொல்வதற்கு வேறு ஒரு காரணம் இருக்கிறது. இன்று அதுபோல ஒரு நிலை இருக்கிறதா?
இன்று ஊடகங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆட்குறைப்பு, சம்பளக் குறைப்பு, சம்பளம் இல்லாத கட்டாய விடுப்பு இவையெல்லாம் தூக்கத்தைப் பிடுங்கிக் கொண்டிருக்கிறது. சம்மந்தப்பட்டவர்களின் குடும்பங்கள் என்ன மாதிரியான மனஉளைச்சலுக்கும் நெருக்கடிக்கும் உள்ளாவார்கள் என்று கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.
எங்கள் விசயத்தில் ஒரு போராட்டம். ஒரு நீண்ட நெடிய விசாரணை. அதன்பிறகு விளக்கம் கேட்பு. அதன் பின்பு வேலைநீக்கம் என்றிருந்தது. ஆனால், நேற்றைய தினம் ஆனந்த விகடன் குழுமத்திலுள்ள தொழிலாளிகளை திடீரென அழைத்து நாளை முதல் உங்களில் 176 பேரை வீட்டுக்கு அனுப்புகிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள்.
சுமார் 600 பேர் வேலை செய்கிற அந்த நிறுவனத்தில் இந்த முடிவுகளை எடுத்த சில பேரைத் தவிர, கடந்த 24 மணி நேரமாக ஒவ்வொரு குடும்பத்திலும் அது தங்கள் பெற்றோராக, தங்கள் பிள்ளையாக, தனது கணவராக அல்லது தனக்கு மருகமளாகவோ, மருமகனாகவோ இருக்கக் கூடாது என்று வேண்டிக் கொண்டிருப்பார்கள்.
இது எத்தனை பெரிய கொடூரம். 176 பேர் என்று நிச்சயிக்கப்பட்ட பிறகு, வேறு யாருக்காகவாவது வந்துவிட வேண்டும் என்று மனிதத்தைச் சிதைக்கிற ஒரு சிந்தனைக்கு தூண்டும் இந்த முடிவை எவ்வித தயக்கமுமின்றி அந்த நிர்வாகம் எடுத்திருக்கிறது.
மொத்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு இவர்கள். கடந்த மாதமோ அதற்கு முன்பாகவோ இந்த நிறுவனம் தொழிலாளிகளை அழைத்து உங்களில் யாரையும் வீட்டிற்கு அனுப்பப் போவதில்லை. அதன் காரணமாகவே 30 சதவிகிதம் வரை சம்பளத்தை வெட்டுகிறோம் என்று உத்தரவாதம் கொடுத்திருக்கிறார்கள். இப்போது மூன்றில் ஒரு பகுதியை வெளியேற்றப் போகிறார்கள். இது திடீரென இறங்கிய இடி. யாரும் எதிர்பாராத ஒரு பெரும் திடீர் தாக்குதல்.
தங்களின் எந்த நேரடிக் காரணத்திற்காகவும் அவர்கள் வேலையை விட்டு அனுப்பப்படவில்லை. லாபம் குறைந்துவிடக்கூடாது என்பதற்காகவே அவர்கள் வேலையை விட்டு அனுப்பப்படுகிறார்கள்.
பத்திரிக்கைகள் உருக்கமாக எழுதும் விழுமியங்கள், கருணைகள், அன்பு இவற்றிற்கெல்லாம் எந்த அர்த்தமும் கிடையாது. ஒரேயொரு அர்த்தத்தைத் தவிர. அதுதான் லாபம். அந்த லாபத்திற்கு முன்பாக அனைத்து மனித மாண்புகளும் விழுமியங்களும் அடித்து நொறுக்கப்படும். சிதைத்து அழிக்கப்படும்.
அந்த நிறுவனத்தின் தலைவர் சொன்னதாக சமீபத்தில் ஒரு கருத்தை பார்க்க நேர்ந்தது. “உங்கள் தொழிலாளிகளை வைத்திருப்பதற்கு வாய்ப்பில்லை எனில் அவர்கள் எத்தனை நல்லவர்களாக இருந்தாலும் அவர்களைக் குறைப்பதற்கு இரண்டு முறை கூட யோசிக்காதீர்கள்”. இதன் பொருள் உங்கள் லாபத்திற்கு பாதிப்பு வருமெனில் அவர் எத்தனை திறமையானவராக இருந்தாலும் சரி, எத்தனை நல்லவராக இருந்தாலும் அவரை வெளியே துரத்திவிடுங்கள், தாமதிக்காதீர்கள், இன்னொரு முறை கூட யோசிக்காதீர்கள் என்பதுதான்.
மனிதர்கள் முக்கிமல்ல, லாபம் மட்டும்தான் முக்கியம் என்பதுதான். ஒப்பீட்டளவில் நிரந்தரமான வேலை ஆனந்த விகடனில் பணிபுரிவது என்று ஊடகவியலாளர்களால் நம்பப்பட்டது. ஆனால், அந்த நிறுவனமே இப்படி செய்கிறது. மற்ற நிறுவனங்கள் இதையெல்லாம் செய்யாது என்று நம்புவதற்கு எந்தவிதமான தர்க்கமும் இடமளிக்கவில்லை.
இந்தப் பின்னணியில் இப்போதுள்ள நிலையில் இதிலுள்ள பலராலும் மாற்று வேலை தேடுவது சாத்தியமா என்ற கேள்விக்கு நம்பிக்கையோடு ஒரு பதிலை சொல்ல முடியவில்லை.
மத்திய பாஜக அரசு ஏதோ தொழிலாளிகளுக்கு ஆதரவாக இருப்பது போன்று கொரோனா காலத்தில் யாரையும் வேலைநீக்கம் செய்யக் கூடாது, சம்பளப் பிடித்தம் செய்யக் கூடாது என்று உபதேசித்துவிட்டு தன் பணி முடிந்ததாக ஒதுங்கிக் கொண்டது.
உலகின் பல முதலாளித்துவ நாடுகள் 60% முதல் 100% வரை தொழிலாளர்களின் சம்பளத்தை, இன்னும் சொல்லப்போனால் தொழிலாளர்களுக்கு ஆகிற செலவைக் கூட ஏற்றுக் கொண்டுள்ளன. ஆனால், இந்தியாவில் தொழிற்சங்க இயக்கமும், ஊடகவியலாளருக்கான அமைப்புகளும் பெருமளவிற்கு போராட்ட குணங்களை அதற்கு தேவையான அளவில் கொண்டிருக்காத நிலையில் மிக இயல்பாக கடந்து போய்க் கொண்டிருக்கிறோம்.
இதை அனுமதிப்பது சரியல்ல, நியாயமல்ல. அவர்கள் எல்லாம் யார் வீட்டுப் பிள்ளைகளோதான். ஆனால், அவர்கள் தாக்கப்படும்போது, நிராதரவாக விடப்பட்டால், நாளை நமது பிள்ளைகளுக்கு ஏற்படும்போது கேட்பதற்கு யாரும் இருக்கமாட்டார்கள்.இவையெல்லாவற்றையும்விட இந்த வேலைநீக்கங்கள் சட்ட விரோதம்.
வாசகர்களும் விளம்பரதாரர்களும் குறைந்தபட்சம் அவர்களின் செயலியிலாவது தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யவேண்டும்.
இதற்கெதிராக அனைவரும் சாத்தியமான அனைத்து வகைகளிலும் வழிகளிலும் குரல் எழுப்ப வேண்டும்…
கே.கனகராஜ், மாநிலச் செயற்குழு உறுப்பினர். CPIM
***
விகடனில் நடைபெற்றுவரும் ஊழியர்கள் வேலை நீக்கம் தொடர்பாக, சி.பி.எம். மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ் எழுதியுள்ள பதிவு…
கோவிட் 19 கொரோனா நச்சுக் கிருமியின் பெரும் தொற்றானது உலகளவில் பல லட்சம் மக்களைப் பாதித்தும், பல்லாயிரக்கணக்கான மக்களைப் பலிகொண்டும் வரும் அபாயச் சூழல் தொடர்கின்றது.
இலங்கையில் இதுவரை ஆயிரம் பேருக்கு மேல் இவ்வைரஸ் கிருமித் தொற்றுக்கு உள்ளானதுடன், 09 பேர் மரணமடைந்தும் உள்ளனர். இத் தொற்று சரியான முறையில் கையாளப்படாது விடப்படுவதனால், பாரிய அழிவுகள் ஏற்படக்கூடிய அபாய நிலை காணப்படுகின்றது.
இதுவரை இப் பெருந்தொற்றினாலும், அதன்மீதான அச்சத்தினாலும், அதைத் தடுக்க முன்னெடுக்கப்படும் ஊரடங்கு மற்றும் முழு முடக்கம் போன்ற நடவடிக்கைகளினாலும் நாட்டின் பொருளாதார, சமூகத் தளங்களில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
இதில் அதிகம் பாதிப்பை எதிர்கொள்வோர், ஏகப் பெரும்பான்மையினரான உழைக்கும் மக்களே ஆவர். வருமான முடக்கம், உணவுப் பொருட்களின் விலையேற்றமும் தட்டுப்பாடும், விவசாய உற்பத்திகளுக்கான சந்தை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படாமை, வேலையிழப்பு போன்ற பல்வேறு நெருக்கடிகள் இவர்களைப் பாதிக்கின்றன.
அரசாங்கம் வழங்குகின்ற 5,000 ரூபா நிதியானது அனைவருக்கும் சரியான முறையில் சென்றடையவில்லை. குறிப்பாகப் பல்வேறு வகையிலும் ஏமாற்றப்பட்டுவரும் லட்சக்கணக்கான பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு இவ் ஐய்யாயிரம் ரூபா நிவாரண நிதியானது மறுக்கப்பட்டுள்ளமை கண்டனத்துக்குரியது. இதிலும் ஆரம்பத்தில் சமுர்த்தி ஊடாகக் கடனாக வழங்கப்பட்ட நிதி தொடர்பான குழப்பம் மக்கள் மத்தியில் நிலவி வருவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
அதேவேளை, அரசின் கொரோனா நிதியத்திற்கு இதுவரை நூறு கோடி ரூபாவுக்கு மேல் சேர்ந்துவிட்டபோதும், அதனைத் தேர்தல் உள்நோக்கத்துடன் ஜனாதிபதி தலைமையிலான ஆட்சியாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந் நிதியத்திற்கு அரசாங்க ஊழியர்கள் தமது ஒரு மாத கால சம்பளத்தை வழங்குமாறு ஜனாதிபதியின் செயலாளரால் விடுக்கப்பட்ட அறிவிப்பானது மிகவும் அபத்தமான ஒன்று.
அதாவது, பல்வேறு ஊழல் மோசடிகளையும் செய்து மக்களின் பணத்தைச் சுருட்டிய அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஆகியோரிடமிருந்து ஒரு சதத்தைத்தானும் மீட்க முடியாத இவ் ஆட்சியாளர்கள். அத்தகைய குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் எவருக்கும் எதிராக இதுவரை சிறியதானதொரு விசாரணையைக்கூட முன்னெடுக்காத நிலையில், பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்தது போல, பல்வேறு நெருக்கடிகளுடன் அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவின் சுமையையும் கடன் தொல்லையையும் எதிர்கொண்டு போராடும் அரச ஊழியர்களிடம் அவர்களின் வருமானத்தைக் கோருவதை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
மேலும், இன்றைய அரசாங்கம் கொரோனா பெருந்தொற்றின் மறைவில் இனவாத, இராணுவ மயமாக்கல் நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கின்றமை கண்கூடு. இருபதுக்கு மேற்பட்ட இராணுவ அதிகாரிகள் சிவில் நிர்வாக உயர் பதவிகளுக்கு இதுவரை நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
அதேநேரம் கொரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்கான செயலணிக்கு மருத்துவத் துறையைச் சேர்ந்தோரைத் தலைமையாக நியமிக்காமல், இராணுவத் தளபதியை நியமித்ததன் மூலம் அது இன்னும் ஆழமாக வெளிப்படுத்தப்பட்டது. ஆனால், முறையான விழிப்புணர்வோ, பாதுகாப்பு முன்னேற்பாடுகளோ இன்றிப் படையினர் இப் பணியில் ஈடுபடுத்தப்பட்டதன் மூலம், இன்று எமது நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இரட்டிப்பாக இவர்களின் இச் செயல் வழிவகுத்துள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு, மீண்டும் முழு வீச்சுடன் திட்டமிட்டுக் கட்டவிழ்த்து விடப்பட்ட சிங்கள பௌத்த பேரினவாதப் பிரச்சாரம் இப்போதும் தொடர்கின்றது. குறிப்பாக இந் நெருக்கடி நேரத்திலும் முஸ்லீம் மக்களுக்கு எதிராகப் பல இனவாத முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. கைதுகளும் விசாரணைகளும் தடுத்துவைத்தல்களும் முடுக்கிவிடப்பட்டு, சிங்கள மக்கள் மத்தியில் அச்சமும் வெறுப்பும் பரப்பப்படுகின்றன. இஸ்லாமிய பண்பாட்டு நடைமுறைகளில் தலையிட்டு முன்பு பெண்களின் ஆடை தொடர்பாக கட்டுப்பாடுகளை விதித்ததுபோல், இப்போது இறந்தோரைப் புதைக்கும் அவர்களின் வழக்கத்தில் கை வைக்கின்றனர்.
அதேவேளை தற்போதைய கோட்டாபய மகிந்த அரசாங்கமானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் இணங்கிப் போவது போலவும், அடுத்த பாராளுமன்றத்தில் அரசியல் தீர்வு பற்றிப் பேசப் போவதாகவும், சிறைகளில் இருந்து அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதுபோலவும் காட்ட முனைவது, அடுத்து வரும் பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு கிழக்கு மக்களின் வாக்குகளை இலக்குவைத்த ஏமாற்று நாடகமேயாகும்.
ஆனால், மலையகத் தமிழ் மக்களுக்கு கொடுத்த ஆயிரம் ரூபா சம்பளம் வழங்குவதான வாக்குறுதி இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை. ஏனெனில், எந்தவொரு ஆட்சியாளரும் தோட்டத் தொழிலாளர்களைத் தொடர்ந்தும் கொத்தடிமைகள் போல நடத்திவரும் தோட்டக் கம்பனிகளின் இலாபத்திற்குப் பாதிப்பு ஏற்படுத்துவதை விரும்புவதில்லை.
2015 க்கு முந்திய நிலையைப் போன்று, மீண்டும் இவ் ஆட்சியாளர்களின் குடும்ப சர்வாதிகாரப் போக்கு தொடர்வதுடன், எதிர்வரவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பாண்மையைப் பெறுவதன் ஊடாகத் தமது எதேச்சாதிகாரத்தைத் தொடர்வதை நோக்காகக் கொண்டே அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.
எனவே, இவ் அரசாங்கத்தின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக, இலங்கையின் தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், அன்றாட உழைப்பாளர்கள், அரசாங்க தனியார் துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் என அனைத்து உழைக்கும் மக்களும், ஒடுக்கப்படும் தேசிய இனங்களான தமிழ், முஸ்லீம், மலையகத் தமிழ் மக்களும் ஒன்றுபட்டு நிற்கவேண்டும். இந்நிலையில் எமது புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி உழைக்கும் மக்களுடன் நின்று அவர்களின் கோரிக்கைகளுக்காக உறுதியுடன் போராடும்.
இவ் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் அரசியற் குழு சார்பாக அதன் பொதுச்செயலாளர் சி. கா. செந்திவேல் அவர்களால் வெளியிடப்படுகின்றது.
சி.கா. செந்திவேல்,
பொதுச் செயலாளர்,
பு.ஜ.மா.லெ கட்சி.
கொரோனோவால் பாதிக்கப்பட்ட கூலித்தொழிலாளர்களின் வாழ்நிலை உண்மைகளை எந்த ஊடகங்களும் கூறுவதில்லை.மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள அப்பளத் தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களின் வாழ்நிலையைப் பற்றி நேரில் சந்தித்து தகவலை சேகரித்தோம்.
இதோ அவர்களின் வாழ்க்கை அவலங்கள்:
இப்பகுதியில் பெரும்பாலும் அப்பளக் கூலித்தொழிலாளர்கள். நாங்கள் இந்த 40 நாட்களில் சொல்லிமாளாத துயரத்தை சந்தித்துள்ளோம். எங்கள் சொந்தக்காரர்கள் தெரிந்தவர்கள் என இவர்களிடம் கடனை வாங்கி தான் பிழைப்பை நடத்துகிறோம். இந்த கொரோனோ ஓழியும் வரை எல்லோரையும் வீட்டிற்குள் இருக்க சொன்னார்கள். நாங்கள் அதை ஏற்றுக் கொள்கிறோம். நாங்கள் வேலை இழந்து வருமானம் இழந்து நிற்கிறோம். அதற்கு அரசு சரியான நிவாரண நிதி மற்றும் மளிகை பொருட்களை விநியோகம் செய்ய வேண்டும். ஆனால் அதற்கு நேரெதிராக இந்த அரசு கொடுத்த 1000 ரூபாய் 3 -வாரம் கூட தாங்க வில்லை எப்படி குடும்பம் நடத்துவது. இதே தொகையை நாங்கள் எடப்பாடிக்கு தருகிறோம் முதலில் அவர் இதை வைத்து குடும்பம் நடத்தட்டும் அப்புறம் எங்களுக்கு தரட்டும் என கொந்தளித்தனர்.
அரிசி என்று எதையோ கொடுத்தார்கள் கோழி கூட கொத்த மாட்டேங்குது இதை நாங்கள் எப்படி சமைத்து சாப்பிடுவது.தொடர்ந்து அவர், கொரோனோவுக்கு முன் ரேசனில் விநியோகிக்கப்பட்ட அரிசி கூட நல்லதாக தான் இருந்தது. இப்போது விநியோகித்த அரிசி மிகவும் கேவலமாக உள்ளது என அவர் சொல்லி முடிப்பதற்குள் ஒரு பெண்மணி, எங்கள் குடும்பம் இந்த அரிசியை தான் பொங்கி சாப்பிடுகிறோம் வேற வழி இல்லைங்க தம்பி என்றார்.
இப்போது தான் கொரோனோவின் தாக்கம் அதிகமாக இருக்கிறது என மருத்துவர்கள் கூறுகிறார்கள், ஆனால் அரசு இப்போது விமான நிலையம், பேருந்துகள்,போக்குவரத்து என அனைத்தையும் இயங்க வைத்துவிட்டார்கள் எங்களுக்கு மிகவும் அச்சுறுத்தலாக இருக்கிறது. ஏற்கனவே நாங்கள் வறுமையில் வாழ்கிறோம் இப்போது கொரோனோவுடன் சாவதா? ஏற்கனவே நாங்கள் அப்பள உற்பத்தியாளர்களிடம் அட்வான்ஸ் தொகை வாங்கி உள்ளோம். மகளிர் சங்கம், விடிவெள்ளி, சேமம் என அனைத்திலும் கடனை வாங்கியுள்ளோம். அது போக இப்போது வெளிக்கடன் வேறு வாங்கி உள்ளோம். இனி இந்த ஊரடங்கு முடிந்தாலும் எங்கள் கேவலப்பட்ட பிழைப்பு முடிவுக்கு வராது. நாங்கள் இனி வேலை செய்து பணத்தை மிச்சம் செய்து கடனை அடைப்பதா?, வாடகை கொடுப்பதா?, இல்லை எங்கள் வயிற்றை நிரப்புவதா?.
இந்த அரசு எங்கள் கடன் தொகையை அனைத்தையும் தள்ளுபடி செய்தால் தான் எங்கள் வாழ்வு தழைக்கும். இதனை அரசிடம் கோரிக்கையாக வைக்கிறோம்.
எல்லா கடைகளும் மூடி எங்களோட வயிற்றில் அடித்த இந்த அரசு டாஸ்மாக் கடை மட்டும் திறந்து இன்னும் எங்கள் குரல்வளையை நெறிக்க பார்க்கிறது. இந்த 40 நாளில் அரை வயிற்று கஞ்சியை குடித்தாலும் நிம்மதியாக இருந்தோம் ஆனால் இந்த டாஸ்மாக் திறந்த இரண்டு நாளில் என் கணவன் என்னை அதிகம் துன்புறுத்தி விட்டார். உங்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம் இந்த டாஸ்மாக் கை மட்டும் தயவுசெய்து திறக்காதீர்கள் என வேண்டுகோளாக அரசுக்கு வைத்தார்கள்.
அப்பளம் உற்பத்தியாளர்கள்:
நாங்கள் இந்த 40 நாட்களில் எங்களுடைய வாழ்க்கை மிக மோசமாக இருந்தது. அரசு போதுமான நிவாரண நிதியோ பொருளோ தரவில்லை. நாங்கள் ஏற்கனவே வங்கியில் வாங்கிய கடன் தொகையை செலுத்த திணறுகிறோம். இரண்டு மாதம் கழித்து வட்டி கட்டலாம் என வங்கிகள் சொன்னாலும் அதற்கும் சேர்த்து தான் வட்டி கேட்பார்கள்.
இது போதா குறைக்கு மீண்டும் கடன் வாங்கும் நிலமையை அரசே ஏற்படுத்தி கொடுக்கிறது. பெரிய பெரிய பணக்காரர்களுக்கு கடனை தள்ளுபடி செய்யும் அரசு எங்களைப் போன்றோர்களின் கடனை தள்ளுபடி செய்தால் இனி வரும் நாட்களில் நாங்கள் மீள்வோம். இல்லையேல் கடினம்தான்.
எங்கள் உற்பத்தியாளர் சங்கத்தில் இருந்து 60 பேர் சேர்ந்து ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று தொழிலை தொடங்குவதற்கு அனுமதி கேட்டோம். அதற்கு அவர், (FSSAI ) “உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆனையம்” சான்றிதழ் இருந்தால் நீங்கள் உற்பத்தியை தொடங்கலாம் என கூறினார்.
அதே பகுதியில் உள்ள அ.தி.மு.க உறுப்பினரின் உணர்வை அவருடைய பேச்சு வழக்கில் தருகிறோம்:
தம்பி நாங்க இந்த 40 நாளையும் ரொம்ப அவதிப்பட்டு தான் தாண்டிருக்கோம். இந்த 40 நாளும் வீட்டில் இருந்த மாதிரி இல்ல ஏதோ ஜெயில்ல இருந்த மாதிரி இருந்துச்சு தம்பி. கவர்மெண்ட் கொடுத்த 1000 ரூபா எந்த மூலைக்கு காணும். 1 சிலிண்டர் வெலையே 800 ரூபாங்கிறான் மீதியை வச்சு கடலை உடல வீட்டு சாமான வாங்கிரலாமா? இதுக்கலாம் பணத்த யார் கொடுப்பா?
நானும் அ.தி.மு.க காரேன் தான் தம்பி அதுக்காக சொந்த கட்சி செய்றதெல்லா சரின்னு சொல்ல முடியுமா. தப்புன்னா தப்புதா தம்பி. இவங்களாம் மக்கள எப்படித்தான் பாக்குறாங்கனு தெரியல. நா நெறைய பேப்பரு படிக்கிறேன் அதுல இருந்து தான் சொல்றே தம்பி. இங்க நடக்குறது ஆட்சியே இல்ல ஏதோ சர்வாதிகார ஆட்சி மாதிரி இருக்கு தம்பி.
வெறும் 1000 ரூபாவும் புளுத்துப்போன அரிசியை கொடுத்துட்டு வீட்டவிட்டு வெளியவராத அப்டின்னா எப்பிடிப்பா. இதுல வேற கொறைஞ்சது 50 ரூபாக்காவது பொறிகடல சோப்பு போல சாமான் வாங்குனா தான் அரிசி பருப்பு தருவேன்னுங்குறான். இருக்குறவன் வாங்குறான் அந்த பணமும் இல்லாதவேன் என்னா பன்னுவான் அவன் பட்டினியா கெடந்து சாகனுமா?…நான் நகையை அடமானம் வைச்சு தான் இந்த 40 நாள் கழிச்சு இருக்கேன்.
ஊரடங்கு முடிஞ்சு எங்க தொழில்ல தொடர்ந்தாலும் கஷ்டம் தாங்க. பழைய மாதிரி தொழிலு நடக்க 6 மாசம் ஆகுங்க. அதுவரைக்கும் நான் என் பிள்ளைகளுக்கு பீஸ் கட்டுவேனா?, கரண்ட்டு பில்லு கட்டுவேனா?, சாப்பிடுவேனா?, கடனத்தான் கட்டுவேனா…?
எங்க பகுதியில்ல “நலவாரிய திட்டத்தில்” முதல் தவணையா 1000 ரூபா கொடுத்தாங்க அதுவும் கட்டுமான தொழிலாளர்க்கு மட்டும் தான். கொரோனோ..வ ஒழிக்க முடியாமத்தான் இப்ப மக்கள வெளிய விட்டாங்க தம்பி. கொரோனோவோட வாழ்ந்து செத்துப்போன்னு அரசு நம்மளை கைவிரிச்சுருச்சு தம்பி என ஆதங்கத்துடனும் வேதனையுடனும் கூறி முடித்தார்.
***
இங்குள்ள அப்பளத் தொழிலாளர்கள் பெரும்பாலும் பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கியே உள்ளனர். எடப்பாடி அரசு கொடுத்த 1000 ரூபாய் 1 வாரத்திற்கே போதாது என்னும் சூழ்நிலையில் இவர்கள் அந்த தொகையை 3 வாரம் சமாளித்து இருக்கிறார்கள் என்றால் இதை நாம் எப்படி பார்ப்பது.
அடிப்படை தேவைகளை சுருக்கிக் கொண்டு அசைவ உணவுகளை தவிர்த்து ஊட்டச்சத்து குறைபாடுடன் வாழ்கிறார்கள். அதற்கு எடுத்துக்காட்டாக புளுத்துப்போன அரிசியை அவர்கள் பொங்கி சாப்பிட்டதாக கூறியதும் முக்கியமான ஒன்று.
எங்களுக்கு வேறோன்றும் இந்த அரசு செய்ய வேண்டாம் எங்களுடைய கடனை தள்ளுபடி செய்தால் போதும் என்பது தான் அவர்களுடைய பிரதான கோரிக்கையாக உள்ளது. அவர்கள் இந்த நிலையிலும் அரசிடம் வைக்கும் கோரிக்கை தான் இந்த கையாலாகாத அரசை நாங்கள் நம்ப மாட்டோம் என்னும் கருத்து அவர்கள் வாழ்க்கையில் இயற்கையாகவே இருக்கிறது என்பதை காட்டுகிறது.
ஆனால் குறைந்த பட்சம் இந்த கோரிக்கையாவது அரசு நிறைவேற்றுமா என்றால் அதை இந்த அரசிடமிருந்து எதிர்பார்ப்பது தவறு என்பது போல் இருக்கிறது இந்த கார்ப்பரேட் அரசின் நடவடிக்கை.
ஊரடங்கிற்கு பிறகு தொழிலாளர்களின் வேலை நேரம் 12 மணி நேரமாக உயர்த்தி, ஏற்கனவே குற்றுயிரும் குலையுயிருமாக வருபவர்களை நொங்கி பிதுக்கி அவர்களிடம் இருக்கும் மீதமுள்ள இரத்தத்தை உறிஞ்சி அதில் வரும் இலாபத்தை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கொடுக்க முனைகிறது.
இனிமேல் தொழிற்சாலையில் ஆட்குறைப்பு, ஊதியத் தொகை குறைப்பு, சங்கம் வைக்கும் உரிமையை பறிப்பது இப்படி தொழிலாளர்களை ஒடுக்குவதற்கான வேலையை தான் இந்த கார்ப்பரேட் முதலாளிகளும் கார்ப்பரேட் அரசும் இணைந்து நடத்தப் போகிறது.
இந்த பிரச்சினைகளுக்கு எல்லாம் காரணமான கார்ப்பரேட் முதலாளிகளை காப்பது மட்டுமே இந்திய அரசின் தலையாய கடமை என்பது போல், அவர்களின் கடனை அதாவது பல ஆயிரம் கோடிகளை இந்த காலகட்டத்தில் தள்ளுபடி செய்கிறது.
இப்படிப்பட்ட இந்த அரசிடம் தான் நாம் மேற்கூறிய கோரிக்கையை வைக்கிறோம். இந்த அரசு நமது கோரிக்கையை நிறைவேற்றும் என்பது சந்தேகமே, நிறைவேற்ற தவறும் பட்சத்தில் நாம் போராடித்தான் பெறவேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.
தமிழ் நாட்டில் சுமார் 2 கோடியே 16 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் ஏப்ரல்,மே, ஆகிய மாதங்களுக்கு இவர்களுக்கு அரிசி,துவரம் பருப்பு, பாமாயில், கோதுமை மற்றும் சர்க்கரை ஆகிய பொருட்கள் தமிழக அரசால் இலவசமாக வழங்கப்படுகிறது. ஜூன் மாதத்திற்கும் இது நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசும் தன் பங்கிற்கு 5 கிலோ அரிசி கொடுக்கிறது. இது போக பலசரக்கு சமான்களும் ரூ.500 மதிப்பில் தொகுப்பாக ரேசன் கடைகளில் விற்பனை செய்யப்படுவதாக தமிழக அரசு விளம்பரப்படுத்தியது.
ஆனால் ரேசன் கடைகளில் கேட்கும் போது பலசரக்கு சாமான்கள் இல்லை என்று பதில் வந்தது. ரேசன் பொருட்களாவது முறையாகக் கிடைத்ததா என்றால் அதுவும் இல்லை. முறைகேடாகத்தான் வினியோகிக்கப் பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் அரிசி அட்டைதாரர்களுக்கு மட்டும் ரூபாய் 1000 அரசு அளித்த போது அதோடு சேர்த்தே ரேசன் பொருட்களும் வழங்கப்படவில்லை. காலதாமதமாக வழங்கப்பட்டது. இதில் நடைபெற்ற முறைகேடுகளை எதிர்த்து மக்கள் குரல் கொடுத்தனர்.
ரேசனில் வினியோகிக்கப்பட்ட பொருட்களும் தரமாக இல்லை. புழுத்த துர்நாற்றமடித்த அரிசி வினியோகிக்கப்பட்டது. அது வீடியோ எடுக்கப்பட்டு வாட்ச் அப்பில் வைரலாக வந்தது. இருந்தாலும் அரசும் அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை. சமைத்துச் சாப்பிடத் தகுந்த அரிசி மிகக் குறைவாகவே சப்ளை செய்யப்பட்டது. இது பற்றி கடை பொறுப்பாளரிடம் கேட்கும் போது எங்களுக்கு தரப்படுகிற பொருளை நாங்கள் கொடுக்கிறோம் என்று சொல்லி முடித்துக் கொள்கிறார்கள்.
புழுத்த அரிசி பெரும்பாலும் ஆடு,மாடு,கோழிகளுக்குத் தீவனமாகத் தான் பயன்படுகிறது. நல்ல அரிசி,பொருட்களை ஆளும் கட்சிக்காரர்களின் துணையோடு கடத்திவிடுவதாக மக்கள் சொல்கின்றனர். பொருட்களின் தரம், அளவு, முறைகேடுகளைக் கண்டித்து மக்கள் அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் அரசனி முத்துப்பட்டி சுற்று வட்டார கிராமங்களில் சென்ற மாதம் போடப்பட்ட அரிசி ஆக மோசமாக இருந்துள்ளது. பாதிக்குப் பாதி கருப்பு அரிசி கலந்து, புழுக்கூடு மற்றும் வண்டுகள் ஊர்ந்து கொண்டும் கெட்ட வீச்சம் அடித்துக்கொண்டும் இருந்துள்ளது. கடை ஊழியரிடம் நல்ல அரிசி வேண்டும் என்று மக்கள் கேட்டதற்கு அவர், ”வேறு அரிசி எதுவும் இல்லை. இதுதான் இருக்கிறது. வேணும்னா வாங்குங்க. இல்லைனா போங்க” என்று சொல்லிவிட்டார்.
இது பற்றி மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,மதுரை செயற்குழு உறுப்பினர் அய்யாக்காளையிடம் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். கடைக்குப் போய் கேட்ட அவருக்கும் அதே பதில் தான் கிடைத்துள்ளது. கோபமடைந்த மக்கள் அரிசி வாங்க மறுத்ததோடு நல்ல அரிசி தரவேண்டும். உரிய அதிகாரிகள் வந்து பதில் சொல்ல வேண்டும் என்று கோரி தோழர் அய்யாக்காளை தலைமையில் கடையை முற்றுகையிட்டனர். குடிமைப் பொருள் வட்டாட்சியர், மற்றும் சிவகங்கை வட்டாட்சியருக்கு அய்யாக்களை போன் செய்தார் .மக்கள் கடையை முற்றுகையிட்டுக் காத்திருந்தனர். வெகு நேரம் கழித்து அதிகாரி ஒருவர் வந்தார். தாசில்தார் கொரோனா பிரச்சினைக்காக கள வேலையில் இருக்கிறார். இப்போதைக்கு அவரால் வரமுடியாது. இருக்கிற அரிசியை வாங்கிச் செல்லுங்கள்.பின்னர் பார்க்கலாம் என்று சொன்னார்.
புழுத்த அரிசியை அள்ளிக் காட்டிய பெண்கள் “இந்த அரிசியை நீங்களும் உங்கள் அதிகாரிகளின் குடும்பத்தினரும் பொங்கிச் சாப்பிடுவீர்களா?” என்று கேட்டனர். வந்தவர் பதில் சொல்ல முடியாமல் திரும்பிச் சென்றார். மக்களும் அரிசியை வாங்காமல் நாளைக்கு நல்ல அரிசி வரவேண்டும் இல்லாவிட்டால் பிரச்சினை பெரிதாகிவிடும் என்று எச்சரித்துவிட்டுச் சென்றனர். இந்த செய்தியை அய்யாக்காளை போனில் தாசில்தாருக்குத் தெரிவித்தார். மறு நாள் நேரில் வருவதாகச் சொன்னார் அதிகாரி. சொன்னது போலவே மறு நாள் இரண்டு அதிகாரிகளும் ஜீப்பில் வந்து இறங்கினர். மக்களும் கூடியிருந்தனர்.
அதிகாரிகள் அரிசியைப் பார்த்தனர். இந்த நெருக்கடியான சூழ்நிலையில் இந்த அரிசியை வாங்கிப் போகச் சொல்ல அவர்களால் முடியவில்லை. அரிசியைக் கையில் அள்ளிப் பார்க்கக்கூட அவர்களால் முடியவில்லை. வண்டும் புழுவும் அவர்களது உடலில் கொரோனா போலப் பற்றிக்கொள்ளுமோ என்ற பயம். இதற்கிடையில் தோழர் அய்யாக்காளை சிவகங்கை நகர் ரேசன் கடை ஒன்றில் வழங்கப்பட்ட அரிசியைக் கொஞ்சம் எடுத்துவந்திருந்தார்.
அதை அதிகாரிகளிடம் காட்டி “நகர்ப்புறத்தில் ஓரளவுக்கு நல்ல அரிசியைப் போடுகிற நீங்கள் கிராமத்து மக்களுக்கு மட்டும் இப்படிப் புழுத்த அரிசியைப் போடுகிறீர்களே ஏன்?” என்று கேட்டுள்ளார்.
அதற்கு, “அந்த அந்த மாவட்டங்களில் கொள்முதல் செய்கிற நெல்லைத்தான் அரிசியாக்கி அந்த அந்த மாவட்டங்களில் வினியோகிக்கிறோம்” என்று குடிமைப் பொருள் வட்டாட்சியர் கூறியுள்ளார். அப்படியானால் உங்கள் மாவட்டத்தில் விளைகிற நெல்லின் தரம் இவ்வளவுதான் என்பது போல அவரது பேச்சு இருந்துள்ளது. அப்படியானால் நெல்லே விளையாத மாவட்டங்கள் மற்றும் சென்னை போன்ற நகரங்களுக்கு கம்பு, சோளம் கேழ்வரகு போன்ற சிறு தானியங்கள்தான் வழங்கப்படுகிறதா என்று கேட்கத் தோன்றுகிறது.
“அடுத்த மாதம் நல்ல அரிசி போட ஏற்பாடு செய்கிறோம்.இப்போதைக்கு இதை வாங்கிச் செல்லுங்கள் ” என்று சமாதானம் செய்தவரிடம் மக்கள் அடியோடு மறுத்துவிட்டனர். எனவே நளைக்கு வேறு நல்ல அரிசி போட ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்லிவிட்டுச் சென்றார்கள் அதிகாரிகள். மக்கள் முணுமுணுப்போடு கலைந்தனர்.
ஒரு நாள், இரண்டு நாள், மூன்று நாட்கள் கழிந்தது. புது அரிசி வாங்குவதற்காக மக்கள் வந்தனர். அரிசி போடப்பட்டது ஆனால் அதே புழுத்த அரிசி. ஊர் பேர் தெரியாத கொள்ளை நோயால் வேலை இழந்து, வருமானம் இழந்து ரேசன் அரிசியை நம்பி பிள்ளை குட்டிகளுடன் பசியைப் போக்க வேண்டிய நிலையில் இப்படி சாப்பிட முடியாத புழுத்த அரிசியை எடப்பாடி அரசு போடுகிறது. என்ன செய்வது?
“அரிசிய வாங்காதிய. நல்ல அரிசிய போடுறேன்னு மூணு நாள் காக்க வச்சிட்டு பழையபடிக்கு அதே புழுத்த அரிசியப் போடுறானுக. இருங்க தாசில்தாருக்கு போன் போட்டு கேப்போம்” என்று தோழர் அய்யாக்காளை சொல்ல மக்கள் அதைக் கேட்காமல் கடைக்காரரிடம் வாய்க்கு வந்தபடி திட்டிக்கொண்டு அரிசியை வாங்கி மூடையைக் கட்டி தலையில் சுமந்துகொண்டு வீட்டை நோக்கி நடையைக்கட்டினர். அய்யாக்காளை கசங்கிய மனதோடு வெறித்துப் பார்த்தபடி அசையாமல் நின்றார்.
இந்தக் கையறு நிலைமையை அரசனி முத்துப்பட்டி கிரமத்து மக்கள் மட்டுமல்ல பல கோடி கூலி, ஏழை, நடுத்தர விவசாயிகள் மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களும் வீடற்று வீதியில் வீசப்பட்டுள்ள பஞ்சைப் பராரிகளும் சந்தித்து வருகின்றனர். யாரையும் நம்பமுடியாத சூழலில் தன் காலை மட்டும் நம்பி தன்னையும் தன் குடும்பத்தையும் அதன் மீது ஏற்றி பல ஆயிரம் மைல் தூரம் நடக்கத் துணிந்துவிட்டனர். அவர்களது போராட்டத்தை மரணத்தை நோக்கித் திருப்பிவிட்டனர் மோடியும் அமித்ஷாவும் எடப்பாடியும்.
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் இணைப்பு சங்கமான ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம் சார்பாக கொரோனா ஊரடங்கு பாதிப்பில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்கள் குடும்பத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரூ.15,000/- நிவாரணம் வழங்கு! ஆட்டோக்களுக்கான கடன்களை தள்ளுபடி செய்!
மீண்டும் ஆட்டோக்களை பழுது பார்த்து இயக்க ரூ.10,000/- வழங்கு! என்பன
உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது.
ஆட்டோ ஓட்டுநர்கள் பாதுகாப்பு சங்க தலைவர் தோழர் கோபிநாத் மற்றும் நிர்வாகிகள், பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் பொதுச் செயலாளர், உதவித்தலைவர் தோழர் சுந்தரராசு ஆகியோர் முன்னிலையில் நூற்றுக்கு மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் பலர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுக்க மாவட்ட ஆட்சியரகம் நோக்கி ஊர்வலமாக வந்தவர்களை, காவல்துறையினர் மெயின் ரோட்டிலேயே மறித்து “4 பேர் மட்டும் செல்லுங்கள் மற்றவர்கள் ஓரமாக நில்லுங்கள் !” என தடுத்தார்கள்.
ஆட்சியரக வாயிலிலேயே கொளுத்தும் வெயிலில் பெண்கள், குழந்தைகளுடன் என அமர்ந்து போராட்டம் நடத்தவே… காவல்துறை உள்ளே செல்ல அனுதித்து, “10 தோழர்கள் மட்டும் ஆட்சியரிடம் பேச வாருங்கள்…” என அழைத்து சென்றனர்.
This slideshow requires JavaScript.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
நிர்வாகிகள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
“அரசின் உத்தரவை பெற்று விரைவில் தீர்வு காண்பதாகவும், மாவட்ட நிதியிலிருந்து நிவாரணம் தர ஏற்பாடு செய்வதாகவும்,” மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார்.
மக்கள் அதிகாரம், ம.க.இ.க., புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, மனித உரிமை பாதுகாப்பு மைய தோழர்கள் கலந்து கொண்டு இந்நிகழ்விற்கு ஆதரவளித்தனர்.
இறுதியாக சங்கத் தோழர்களுக்கு செயலர் மணலிதாஸ் நன்றி கூறினார்.
தகவல் : ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்புச் சங்கம் இணைப்பு: புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, திருச்சி. தொடர்புக்கு : 97916 92512.
இந்தியாவில் அமல்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கின் நிழலுக்கு மத்தியில் மத்திய அரசால் கட்டுப்படுத்தப்படும் டில்லி போலீசு, கோவிட்-19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் பணிகளுக்கு துளியும் சம்பந்தமில்லாத வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. வீடுகள் மற்றும் அலுவலகங்களில் தேடுதல் நடத்துவது, தொலைபேசிகள், ஆவணங்களையும் பறிமுதல் செய்வது, தடுப்புக்காவலில் அடைப்பது, விசாரணை செய்வது, பெருவாரியான நபர்களைக் கைது செய்வது போன்ற நடவடிக்கைகளே அதன் நிகழ்ச்சி நிரலில் நிரம்பியுள்ளன.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க சிறைச்சாலைகளில் நெரிசலைக் குறைக்குமாறு உச்சநீதிமன்றம் அனைத்து அரசாங்கங்களுக்கும் வழிகாட்டுதல் கொடுத்துவரும் வேளையில், இந்தக் கைதுகள் நடந்து வருவதுதான் இங்கு கவனிக்கப்பட வேண்டியது.
கைது செய்யப்பட்டவர்களின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும், இந்தியாவின் குடியுரிமைச் சட்டத்தில் கொண்டுவரப்படும் பாகுபாடுமிக்க திருத்தங்கள், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள்தொகைப் பதிவேடு ஆகியவற்றிற்கு எதிரான போராட்டங்களை ஏற்பாடு செய்ததோடு தொடர்புடையவை. மேலும் கடந்த பிப்ரவரி மாதம் வடகிழக்கு டில்லியில் இருக்கும் உழைக்கும் வர்க்கத்தினரின் குடியிருப்புகளைச் சுற்றி வன்முறைமிக்க மதவெறிப் படுகொலைகளைத் தூண்டிவிட்டு, அதில் பங்கேற்றதாகவும் அவர்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
1947-ம் ஆண்டு பிரிவினை சமயத்தில் தலைநகர் டில்லியில் ஏற்பட்ட கலவரத்திற்குப் பிறகு நடந்த மிகப்பெரிய இந்து – முஸ்லீம் கலவரம் இதுதான்.
நாடுதழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து ஒரு சிறிய இடைவெளிக்குப் பின்னர், கடந்த மார்ச் மாத இறுதியில் உள்துறை அமைச்சகம் குற்றப் பிரிவு போலீசுக்குக் கொடுத்த வழிகாட்டுதல்களுக்குப் பிறகுதான், இந்த தடுப்புக் காவல் மற்றும் கைது நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன.
வடகிழக்கு டில்லியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட இசுலாமியர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் கடந்த மார்ச் 22 முதல் ஏப்ரல் மாத நடுப்பகுதி வரை மட்டும் 25 முதல் 30 கைதுகள் வரை நடந்துள்ளன என்று ‘தி இந்து’ நாளேடு தெரிவிக்கிறது. ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகை செய்தியின்படி ஊரடங்கின்போது மட்டும் சுமார் 50 கைதுகளும், மொத்தத்தில் 802 கைதுகளும் நடந்துள்ளன. மேலும் சில தரப்புகளிலிருந்து வரும் தகவல்கள் கைது எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கும் என்கின்றன. ஒவ்வொருநாளும் சுமார் ஆறு முதல் ஏழு கைதுகள் நடைபெறுவதாக அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஊரடங்கின் கீழ், ஊடகங்கள் மற்றும் சட்ட சேவைகளின் மீதான கடுமையான கட்டுப்பாடுகளின் காரணமாக சரியான எண்ணிக்கையை உறுதி செய்வதென்பது கடினமானது. டில்லி படுகொலை நிகழ்வுகளைத் தொடர்ந்த வாரங்களில் அப்பகுதி மக்களோடு நெருங்கிப் பணியாற்றிய எனது வழக்கறிஞர் நண்பர்களால் இந்த மதிப்பீடு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சஃபூரா சர்கார்
அப்பகுதி முசுலீம் மக்கள் குறிவைக்கப்பட்டதைத் தொடர்ந்து உமர் காலித், ஜாமியா மிலியா இசுலாமியா பல்கலைக்கழகத்தின் மாணவர் அமைப்பு தலைவர்களான மீரான் ஹைதர், சஃபூரா சர்கார் ஆகியோரை உள்ளடக்கிய இளம் இசுலாமிய செயற்பாட்டாளர்களுக்கு எதிராக கடுமையான குற்றவியல் வழக்குகள் தொடுக்கப்பட்டன. இதில் சஃபூரா சர்கார் கர்ப்பிணிப் பெண் என்பது குறிப்பிடத் தக்கது. இவர்கள் அனைவரின் மீதும் கருப்புச்சட்டமான ஊபா சட்டத்தைப் பாய்ச்சியுள்ளது மோடி அரசு. பின்னர் இந்த தேடுதல்வலை இடதுசாரி மாணவர் தலைவர்களுக்கும் விரிவாக்கப்பட்டது. அனைத்திந்திய மாணவர் கழகத்தின் மாணவர் தலைவர் கன்வால்ஜித் கவுர் வீட்டில் தேடுதலை மேற்கொண்ட போலீசு அவரது அலைபேசியை பறிமுதல் செய்தது.
டில்லி போலீசின் இந்த “தொடர்பற்ற கைதுகள்” குறித்து கவனத்தில் எடுத்துக் கொண்ட டில்லி சிறுபான்மையினர் கமிசனின் தலைவர், டில்லி போலீசு கமிசனருக்கு நோட்டீஸ் அனுப்பினார். ஊரடங்கு காலத்திலும் “ஒவ்வொரு நாளும் டஜன்கணக்கான முசுலீம் இளைஞர்களை போலீசு கைது செய்வதாக” அதில் குறிப்பிட்டிருந்தார். பெருந்தொற்றுச் சூழலை வகுப்புவாதமாக்குவதாக விமர்சனம் செய்ததற்காக சிறுபான்மையினர் கமிசன் தலைவர் மீது தேச விரோத வழக்கைப் பதிவு செய்துள்ளது டில்லி போலீசு.
கைதுகளையும், தடுப்புக் காவல் நடவடிக்கைகளையும் போலீசு இரட்டிப்பாக்கிக் கொண்டிருக்கையில், சட்ட உதவிகள் ஊரடங்கின் கீழ் அனுமதிக்கப்பட்ட “அவசிய சேவைகள்” பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் குற்றம்சாட்டப்பட்ட நபர்களின் அடிப்படை உரிமைகளை இடைநீக்குவது என்பதே இதன் பொருள்.
சட்டப்பூர்வ நெறிமுறைகளுக்கு மதிப்பேதுமில்லை. போலீசின் பிடிக்குள் கொண்டுவரப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு முதல் தகவல் அறிக்கையின் நகல் கூட கொடுக்கப்படவில்லை. பெரும்பாலும் அவர்கள் இந்தக் கைதுகளின் முகாந்திரத்தை புரிந்து கொள்ள முடியாதவர்களாகவும், சட்ட உதவிக்கு ஏற்பாடு செய்ய போதுமான சமூக தொடர்பும் நிதியாதாரமும் இல்லாதவர்களாகவும், பயமடைந்த குழப்பமடைந்த சூழலில் இருந்ததாகவும் தெரிவித்தனர்.
அவர்கள் அனைவரும் பெரும்பாலும் ஊரடங்கு மற்றும் டில்லி படுகொலையால் தங்களது வாழ்வாதாரங்களை இழந்த குறு வணிகர்களாகவும் அல்லது தினக்கூலிகளாகவும் இருப்பதன் காரணமாக அவர்களின் கையறுநிலை தீவிரமாகியுள்ளது.
கைது செய்த 24 மணிநேரத்திற்குள் நீதிபதி முன்பு குற்றம்சாட்டப்பட்ட நபர் நேர்நிறுத்தப்பட வேண்டும் என்ற சட்டப்பூர்வ தேவை வெறும் கண் துடைப்புக்கானதாக சுருக்கப்பட்டது. திறந்த நீதிமன்றத்தில் நிறுத்தப்படாமல், சிறைகளிலேயே அது நடைபெற்றது. சிறை வளாகத்திலேயே குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் நீதிபதிகளின் முன்னர் நேர்நிறுத்தப்பட்டதோடு, தங்களுக்காக வாதிடுவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டனர். ஊரடங்கு மற்றும் தனிமைப்படுத்திக் கொள்ளுதல் விதிமுறைகளைக் காரணம் காட்டி, இந்த வழக்கு கேட்பிற்கு வழக்கறிஞர்கள் கூட அனுமதிக்கப்படவில்லை. கீழ் நீதிமன்றங்களில் வீடியோ கான்பெரன்சிங் வழக்குக் கேட்பு வசதியும் கிடையாது.
பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், மனித உரிமைப் போராளிகளுக்கு, போலீசு நடவடிக்கைகளால் குறிவைக்கப்பட்டவர்களை நெருங்கும் வாய்ப்பு மிக மிகக் குறைவாகவே இருந்தது. பயம் மற்றும் இரகசியத்தின் திரைமறைவுகளை சில ஊடக அறிக்கைகள் மட்டுமே ஊடுருவின. இந்த சுகாதார அவசரநிலையில், நீதி என்பது அவசியத் தேவையில்லை. சட்டத்திற்கு முன்னர் அனைவரும் சமம் என்ற கொள்கையும் தன்னளவில் ஊரடங்கிக் கொண்டது.
பெருந்தொற்று காலகட்டம் என்பதைக் காரணமாக வைத்துக் கொண்டு உலகெங்குமுள்ள வலதுசாரி சர்வாதிகார ஆட்சியாளர்கள் ஜனநாயக உரிமைகளை நசுக்குதல், குடிமக்கள் இயக்கங்களின் மீது முன்னெப்போதுமில்லாத பெரும் அதிகாரத்தை செலுத்துவது குறித்து பல செய்திகள் இருக்கின்றன. ஆளும் இந்திய அரசு நிறுவனம் அந்த நெறிமுறைகளைக் கடன் வாங்கியிருக்கின்றன என்பது கண்கூடாகத் தெரிகிறது.
தீவிரமான நம்பிக்கை மற்றும் அமைதி நிறைந்த ஜனநாயக உறுதிப்பாட்டைக் கொண்ட நிலைமைகளை இந்தியா காணுறுவது என்பது ஏற்கெனவே பழங்கால நினைவுகளாகி வருகின்றன. குடிமக்களுக்கான உரிமைகளை மதத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டும் அரசாங்கத்தின் முயற்சியிலிருந்து, இந்தியாவின் மதச்சார்பற்ற அரசியலமைப்புச் சட்ட அறங்களைக் காக்க பல்வெறு மத அடையாளங்கள், வர்க்கம், சாதி, பாலினம் மற்றும் மொழியைக் கொண்ட குடிமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து எழுந்து நிற்க வேண்டும்.
சுதந்திரப் போராட்டத்திற்குப் பின்னர், முன்னெப்போதுமில்லாத வகையிலான அளவும் அறமுனைப்பும் கொண்ட இந்த இயக்கத்தின் வெற்றி ஆளும் அரசை மோசமாக கலகலக்கச் செய்துள்ளது. ஏனெனில் இது ஆளும் அரசின் பெரும்பான்மைவாத திட்டத்தின் ஆன்மாவில் அறைந்துள்ளது.
இந்தியாவின் குடியுரிமைச் சட்டத் திருத்தங்களுக்கு எதிரான போராட்டங்கள் அனைத்தும் வன்முறையானவை மற்றும் தேசவிரோதமானவை என்ற புனைகதையை உருவாக்குவது மற்றும் பெருந்தொற்றுப் பிரச்சினையைக் காரணம் காட்டி அனைத்து மாற்றுக் கருத்துக்களையும் இழிவான வகையில் அழித்தொழிப்பது என்ற வகையிலேயே ஆளும் அரசு இந்த மக்கள் எழுச்சிக்கு எதிராகக் கடுமையாகப் போரிடுகிறது என்பது கண்கூடு.
அரசின் இந்தப் போர், அதன் போக்கில் தடுத்து நிறுத்தப்படவில்லை எனில் ஜனநாயகம் மற்றும் பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டமும் தீவிரமாக பலவீனமடையும்.
கரூர் எம்பி ஜோதிமணியை இழிவாக பேசிய பாஜக கரு.நாகராஜனின் காலித்தனத்தை கண்டிக்கிறோம்!
நியுஸ் 7 தொலைக்காட்சியே மன்னிப்பு கேள்!
ஆர்.எஸ்.எஸ் சங்கிகளை புறக்கணிப்போம்!
10.05.2020 அன்று நியூஸ்7 தொலைக்காட்சியில் விவாதத்தின் போது கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் செ. ஜோதிமணி அவர்களை ஆபாசமாகவும் இழிவாகவும் பிஜேபியை சேர்ந்த கரு.நாகராஜன் என்பவர் பேசியுள்ளார் .
கரு. நாகராஜனுக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறி எச்.ராஜா தன் புத்தியை காட்டியிருக்கிறார்.
ஜோதிமணிக்கு ஆதரவாக இருப்பதாக பலரும் #I_standwith_Jothimani என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கியுள்ளனர். ஜோதி மணியும், சிபிஎம் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதியும் இதுபோன்ற பிஜேபியினர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டோம் என்று அறிவித்துள்ளார்கள் .
பாஜக கரு நாகராஜன்
கரு. நாகராஜன், எச்.ராஜா போன்ற பிஜேபி மற்றும் அதிமுகவினர் விவாதத்தின்போது கேட்கும் கேள்விகளுக்கு நேர்மையாக பதில் சொல்வதற்கு வக்கில்லாத போதெல்லாம் எதிர்த்தரப்பில் இருப்பவர்களை ஆபாசமாக பேசுவதும் இழிவாக நடத்துவதும் உலகம் அறிந்த உண்மை தான். இதை தொலைக்காட்சி நிர்வாகங்கள் அனுமதித்ததும் உலகறிந்த உண்மை தான்.
இப்படி நடைபெற்ற போதெல்லாம் கரு.நாகராஜன் போன்ற நபர்கள் தொலைக்காட்சி நிர்வாகத்தால் வெளியேற்றப்படவில்லை, தண்டிக்கப்படவும் இல்லை.
அதன் தொடர்ச்சியாகவே இப்பொழுது எல்லை மீறி பேசியிருக்கிறார்.
கரு. நாகராஜன் போன்ற பிஜேபி நபர்கள் இப்படித்தான் பேசுவார்கள் என்பது உலகம் அறிந்தது தான். அதுவல்ல பிரச்சனை. இப்பிரச்சனைக்கு பின்னரும் கரு. நாகராஜனை விவாதத்தில் தொடர்ந்து பங்கேற்க வைத்து இருக்கிறது நியூஸ்7 தொலைக்காட்சி.
இந்த மோசமான செயலுக்காக நியூஸ்7 தொலைக்காட்சி பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும்.
ஏற்கனவே தோழர் திருமுருகன் காந்தியை மிகவும் இழிவாகப் பேசிய கரு. நாகராஜன் விவாதத்தில் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டார்.
தமிழக மக்களிடம் கொஞ்சமும் செல்வாக்கு இல்லாத பாஜக ஆர்எஸ்எஸ் அமைப்பினர், மத்திய அரசதிகாரத்தினை காட்டி தொலைக்காட்சி நிர்வாகங்களை மிரட்டி விவாதங்களில் தங்களது வலதுசாரி நிபுணர்களுடன் பங்கேற்பதும், தமிழகத்தில் மக்கள் குரலை ஓங்கி ஒலிக்கும் மக்கள் அதிகாரம், பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலை கழகம், மே.17 இயக்கம் உள்ளிட்ட அமைப்புகளை அழைத்தால் நாங்கள் வர மாட்டோம் என மிரட்டுவதும் தொடர்ந்து நடைபெறுகிறது.
இந்த ஆர்எஸ்எஸ் பிஜேபி கும்பலின் மிரட்டலுக்கு இந்த தொலைக்காட்சி நிறுவனங்கள் பணிந்து போகலாம். தமிழக மக்கள் பயப்பட வேண்டிய அவசியம் கிடையாது.
சக மனிதர்களை இழிவாக நடத்தக்கூடிய இதுபோன்ற ஆர்எஸ்எஸ் பிஜேபி நபர்களை அனுமதிக்க மாட்டோம் என்று தொலைக்காட்சி நிர்வாகங்கள் உறுதியளிக்கும் வரை விவாதங்களில் பங்கேற்க கூடாது என்ற முடிவை தமிழக அரசியல் கட்சிகள் எடுக்க வேண்டும்.
மேலும் ஜோதிமணி அவர்களை இழிவாகவும், ஆபாசமாகவும் பேசிய கரு.நாகராஜன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையிலடைக்க வேண்டும் என தமிழக அரசை மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது.
தங்கள் மருது செய்தித் தொடர்பாளர்
மக்கள் அதிகாரம்
தகவல் : மக்கள் அதிகாரம், தமிழ்நாடு மற்றும் புதுவை தொடர்புக்கு : 99623 66321
ஸ்டெர்லைட் படுகொலை தூத்துக்குடி தியாகிகளின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் !
கருப்பு கொடி, முழக்க அட்டையுடன், மே.22, 2020 : காலை 10-மணி வீட்டிலிருந்து நினைவு அஞ்சலி !
தூத்துக்குடியின் சுற்றுச்சூழலை சீரழித்து மக்களை நோய்வாய்ப்படுத்திய நாசகார ஸ்டெர்லைட் ஆலையினை நிரந்தரமாக மூடக் கோரி 2018ம் ஆண்டு மே.22 அன்று பேரணியாக தூத்துக்குடி மக்கள் சென்ற போது, காவல் துறையின் துப்பாக்கி சூட்டிற்கு, பெண்கள், ஆண்கள் என 15 நபர்கள் கொல்லப்பட்டனர்.
இப்படுகொலையில் கொல்லப்பட்ட மக்கள் அதிகாரத்தின் தோழர் செயராமன் உள்ளிட்ட அனைத்து தியாகிகளுக்கும் இரண்டாம் நினைவுத் தினத்தை முன்னிட்டு எங்களது வீரவணக்கங்களை உரித்தாக்குகிறோம். சுற்றுச்சூழலையும், மக்களின் வாழ்வையும் அழிக்கின்ற பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிரான உலகளாவிய போராட்டங்களுக்கு முன்னுதாரணமானது ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டம்.
தமிழக மக்களின் உறுதியான போராட்டத்தால், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடி சீல் வைத்தது தமிழக அரசு. இதனை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் மக்கள் அதிகாரம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் வாதங்களையும் கேட்ட சென்னை உயர்நீதிமன்றம் இறுதி தீர்ப்பு வழங்குவதற்காக ஒத்திவைத்துள்ளது. தீர்ப்பு எவ்வாறு வந்தாலும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு எனும் மற்றுமொரு சுற்று இருக்கின்றது என காத்திராமல் தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையினை தூத்துக்குடியினை விட்டு நிரந்தரமாக அகற்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தங்கள் மண்ணில் நாசகார ஆலை வேண்டாம் என மக்கள் முடிவெடுத்து போராடி அதற்காக தங்களின் இன்னுயிரையே தந்து நிற்கும் போது அதனை ஒட்டித்தான் அரசு நிர்வாகங்கள் நிற்க வேண்டும்.
தூத்துக்குடி மக்களின் எதிர்ப்பினையும் மீறி நலத்திட்ட உதவிகள் எனும் நயவஞ்சகத் திட்டத்தின் கீழ் ஸ்டெர்லைட் நிறுவனம் தொடர்ந்து வட்டாரப் பகுதியில் செயல்பட அனுமதிப்பது. அதை எதிர்க்கும் மக்களை முன்னணியாளர்களை பொய் வழக்கில் கைது செய்வது ஆகியவை தமிழக அரசின் இரட்டை நிலைப்பாட்டை உறுதிப்படுத்துகிறது. எனவே மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை முழுமையாக தமிழகத்திலிருந்து அகற்றப்பட வேண்டும்.
தமிழக காவல்துறை போராடிய மக்கள் மீது நூற்றுக்கணக்கான முதல் தகவல் அறிக்கைகள், ஒப்புதல் வாக்குமூலங்கள் என தங்கள் கைவண்ணத்தில் மக்கள் வன்முறை, அமைப்புகளின் தூண்டுதல் என மக்கள் போராட்டத்தினை கொச்சைப்படுத்தி கதை எழுதி நூற்றுக்கணக்கானோரை கைது செய்து சிறைப்படுத்தினர். தேசிய பாதுகாப்பு சட்டம், குண்டர் தடுப்பு சட்டம் என முன்னணியாளர்கள் வழக்கறிஞர்கள் மீது ஏவப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். நீண்ட சட்டப் போராட்டத்தில் உயர்நீதிமன்றம் அனைவரையும் விடுதலை செய்ததுடன், அனைத்து வழக்குகளையும் ஒரே வழக்காக மாற்றி உத்திரவிட்டது. வழக்கும் மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) புலனாய்வுக்கு விசாரணையும் மாற்றப்பட்டது.
துப்பாக்கி சூட்டினை நேரில் பார்த்தவர்கள் குறிப்பான விவரங்களுடன் சிபிஐக்கு புகார்கள் கொடுத்தபிறகும் எந்த போலீசாரும் கைது செய்யப்படவில்லை. துப்பாக்கி சூட்டிற்கு உத்தரவிட்ட வருவாய்துறை அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. 15 பேரின் படுகொலைக்கு காரணமான அதிகாரிகள், போலீசார் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.
கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி பன்னாட்டு கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்காக சுற்றுச்சூழல் சட்டவிதிகள் திருத்தம், விரைவான அனுமதி, கனிம இயற்கை வளங்களை வரைமுறையின்றி சூறையாட பன்னாட்டு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு திறந்து விடுதல் என மோடியின் கார்ப்பரேட் பாசிச ஆட்சி தீவிரமான தாக்குதலை இந்திய மக்கள் மீது தொடுத்துள்ளது.
விசாகப்பட்டினம் விசவாயு மரணங்கள் போல் தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவில் எங்கும் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க ஸ்டெர்லைட் போராட்டம்தான் முன்னுதாரணமான போராட்டம் ஆகும். மீத்தேன், ஹைட்ரோகார்பன், மின்வழித்தடம், பெட்ரோ-கெமிக்கல் மண்டலம், வணிகத் துறைமுகம் என வேதாந்தா, அம்பானி, ஆதானி போன்ற பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் தமிழகத்தினை சுற்றி வளைக்க உள்ளன. இந்நிலையில் மக்களின் வாழ்வாதாரத்தை காக்கவும், சுற்றுசூழலை நாசமாக்கும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு எதிராக உறுதியாகப் போராடவும், தூத்துக்குடி தியாகிகளின் நினைவை நெஞ்சிலேந்த உறுதியேற்போம்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் படுகொலையின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளான மே.22 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் தங்களின் இருப்பிடங்களுக்கு முன்போ, தெருவிலோ கருப்பு உடையணிந்தோ அல்லது கருப்பு கொடி ஏந்தியோ
மே.22 ஸ்டெர்லைட் படுகொலை!
தூத்துக்குடி தியாகிகளுக்கு நெஞ்சார்ந்த அஞ்சலி!
ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக அகற்று!
போராடிய மக்களை சுட்டுக் கொன்றவர்களுக்கு தண்டனை வழங்கு!
கார்ப்பரேட்டுகளுக்காக சுற்றுச்சூழல் சட்டத்தினை திருத்தாதே!
ஆகிய முழக்கங்களுடன், சமூக இடைவெளியுடன் நின்று தூத்துக்குடி தியாகிகளின் நினைவை போற்றுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தோழமையுடன் வழக்கறிஞர் சி.ராஜூ மாநில ஒருங்கிணைப்பாளர்
மக்கள் அதிகாரம்
தகவல் : மக்கள் அதிகாரம், தமிழ்நாடு மற்றும் புதுவை தொடர்புக்கு : 99623 66321
இப்போதுவரை யாரும் எங்களுக்கு உதவவில்லை. இப்போது யாராவது எங்களை காப்பாற்ற வருவார்கள் என்று நாங்கள் நினைக்கவில்லை என்று கூறுகிறார். 30 வயதுடைய கட்டிட தொழிலாளியான சமீர்குமார்.
மே13 அன்று சென்னையின் வடப்புற எல்லையில் கொல்கத்தா நெடுஞ்சாலையில் நடந்துசெல்லும் புலம்பெயர் தொழிலாளர்கள். (படம் அறிவரசன்)
வியாழன் அன்று, சென்னையையும் கொல்கத்தாவையும் இணைக்கின்ற என்எச் 16 அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிபூண்டியில் சுமார் 2000 புலம்பெயர் தொழிலாளர்கள் குழுமினர்.
சென்னையிலிருந்து கும்மிடிபூண்டிவரை ஏற்கனவே 45 கிலோமீட்டர் தூரம் நடந்து வந்திருந்த அவர்கள், உத்திரபிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், ஜார்கண்ட், கொல்கத்தா, ஒரிசா, மற்றும் இமாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள தங்களின் வீடுகளை நோக்கி புறப்பட்டனர்.
மே14 அன்று, சென்னையில் உள்ள என்எச்16ல் ஹௌராவை நோக்கி நடந்துசென்றுகொண்டிருந்த புலம்பெயர் குடும்பத்தை சேர்ந்த குழந்தை, தன்னார்வ தொண்டர்களிடமிருந்து நிவாரண பொருட்களை பெறும் காட்சி(படம் அறிவரசன்)
ஊரடங்கு அறிவிக்கப்பட்டதிலிருந்து நாட்டில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் அரசாங்கம் தங்களை தங்களின் சொந்த வீடுகளுக்கு அழைத்துச் செல்லும் என்ற நம்பிக்கையின்றி காத்துக் கிடக்கின்றனர். உத்திரபிரதேசம், மத்தியபிரதேசம் மற்றும் குஜராத் அரசுகள் மூன்று ஆண்டுகளுக்கு தொழிலாளர் சட்டங்களை தளர்த்தி மாற்றியிருக்கிற போது, இதற்கிடையில், கர்நாடக அரசோ திரும்பவும் இங்கேயே தங்கிக்கொண்டு பொருளாதாரத்திற்கு புத்துயிர் கொடுங்கள் என்று புலம் பெயர் தொழிலாளர்களை கேட்டுக்கொள்கிறது.
போலிசின் தாக்குதால் ஊனமுற்ற போதிலும் தமிழகத்தின் ஓசூரிலிருந்து 340 கிலோமீட்டர் சிரமத்துடன் நடந்துவந்திருந்த சமீர் குமார் என்ற கட்டிடத் தொழிலாளி கூறுகிறார், ”இனிமேலும் என்னால் காத்திருக்க முடியாது. உத்திரபிரதேசத்தில் உள்ள பல்லியாவிற்கு எப்போது போய் சேருவேன் என்று எனக்கு தெரியவில்லை. என்னிடம் பணமும் இல்லை அரசாங்கத்தின் மீது நம்பிக்கையும் இல்லை. இப்போது வரை யாரும் எங்களுக்கு உதவி செய்யவில்லை. இப்போது யாரும் எங்களை காப்பாற்ற வருவார்கள் என்று நினைக்கவில்லை. மாதம் ரூ 4000 சம்பாதித்தேன். மார்ச் மாதம் வரைதான் வேலைசெய்தேன். என்னைச் சார்ந்திருக்கின்ற என் வயதான பெற்றோர்களும், மனைவி மற்றும் பிள்ளைகளும் எனக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். ரயில் சேவைகள் குறைவாகவே உள்ளது. தமிழகத்தின் போலிசு எங்களை லத்தியால் தாக்கியது. நாங்கள் 19 பேர் இந்த பயணத்தை மேற்கொள்கிறோம்”.
கட்டுமான இடங்களிலும், சிறு தொழில் நிறுவனங்களிலும் ரெஸ்டாரண்டுகளிலும் இன்னும் பல முக்கிய இடங்களிலும் பணியாற்றி அந்த நகரத்தை இயக்கிய தொழிலாளர்கள், அவசியமான பொருட்களை மூட்டை முடிச்சுகளாக கட்டிக்கொண்டு அவர்களின் வாழ்வாதாரமாக இருந்த அப்பகுதிகளை விட்டு விலகிச் சென்றனர்.
விளிம்பு நிலை மக்களுக்காகவும், தற்போது வழி நெடுக செல்லும் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு உணவு பொட்டலங்களும் தண்ணீர் பாட்டில்களும் வினியோகம் செய்துவரும் சேவை கரங்கள் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நடத்திவரும் திலக்ராஜ் கூறுகிறார்”, நான்காம் கட்ட ஊரங்கு உத்தரவு வர இருக்கின்ற நிலையிலும், இந்த அரசாங்கத்தின் வாக்குறுதிகளை புலம்பெயர் தொழிலாளர்கள் நம்புவார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? இந்த அரசாங்கம் அழைத்துச் செல்லும் என்று காத்திருந்து அவர்கள் உயிரை தியாகம் செய்யமுடியாது. அவர்கள் தங்களுடைய கூலிகளை பெறவில்லை. வீட்டு வாடகையும் கட்டமுடியாது. ஏன் அவர்கள் இங்கே இருக்கவேண்டும்? இந்த துரோகத்தை உணர்வதற்கேனும் அவர்கள் உயிரோடு இருக்கட்டும்.
ஏப்ரல் 22 அன்று, சுமார் 40 புலம்பெயர் தொழிலாளர்களை கொண்ட முதல் பிரிவுகளில் ஒன்று சென்னையிலிருந்து விசாகப்பட்டினம் வரை பத்து நாட்களில் 800 கிலோமீட்டர் பயணித்திருந்தது. தொழிலாளார்கள் தங்களுடைய இருப்பிடத்தை அடைந்த போது, அந்த மாநில அரசாங்கத்திற்கு தெரிவித்தனர். அவர்களில் சிலர் அரசின் மையங்களிலும் வைத்து தனிமைபடுத்தி பராமரித்தது. மற்றவர்களை தனிமைபடுத்தியது.
மே 13 அன்று, சென்னை ஹௌரா தேசிய நெடுஞ்சாலை 16ல் நடந்துசெல்லும் புலம்பெயர் தொழிலாளிகள். (படம் அறிவுக்கரசு)
”கடந்த வியாழன் அன்று, சிரிபெரம்புதூரில் உள்ள தொழிற்சாலைகளிலிருந்து கைக்குழந்தைகள் மற்றும் ஒரு கர்ப்பிணி பெண் உள்ளிட்ட மற்றொரு தொழிலாளர்களின் குழு ஆந்திராவை நோக்கி நடக்க தொடங்கியிருந்தது. அவர்கள் ஏற்கனவே 40 கிலோ மீட்டர் தூரத்தை ஒரே நாளில் கடந்திருந்தனர். பத்து தொழிலாளர்களை கொண்ட ஒரு குழு மத்திய பிரதேசத்திற்கு சென்று கொண்டிருந்தது. இன்னொரு குழு கொல்கத்தாவை நோக்கி நடந்து கொண்டிருதது. இந்த முழு காலகட்டத்திலும் அவர்கள் கண்டு கொள்ளப்படாத நிலையில், மாற்றம் உடனே வர இருக்கிறது என்ற நிச்சயமான நம்பிக்கையில் அவர்கள் இருக்கவேண்டும் என்று நீங்கள் ஏன் எதிர்பார்க்கிறீர்கள்?” என்றார், திலக்.
இமாச்சல் பிரதேசத்தை சேர்ந்த மூன்று புலம்பெயர் தொழிலாளர்களும் அங்கே நடந்து கொண்டிருந்தனர். அவளில் இருவர் வயதானவர்கள் ஒருவர் மாற்றுத் திறனாளி. அவர்கள் சொந்த நகரத்திற்கு செல்வதற்கான பயணச்சீட்டு பெற்று வைத்திருந்த போதிலும் போலிசு அவர்களின் மொழியை புரிந்து கொள்ளாததால் அவர்கள் ரயிலில் பயணிக்கும் வாய்ப்பை இழந்தனர். டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் அவர்கள் இருந்தனர். எனினும் மேற்குறிப்பிட்ட நிகழ்வின் காரணமாக அவர்கள் திருப்ப அனுப்பபட்டனர்.
அந்த இருவரும் ஒரு மாதகாலமாக அவர்களுடைய மாநில அரசு அலுவலர்களை தொடர்பு கொள்ள முடியாததால் தற்போது மற்ற தொழிலாளர்களை போல் சமூக இடைவெளியை கடைபிடித்து வீட்டிற்கு நடந்து செல்வதற்கு முடிவு செய்துள்ளனர் என்று கூறுகிறார், அவர்.
ஷிராமிக் எக்பிரஸ் வண்டியில் செல்வதற்கான டிக்கெட் பதிவு செய்திருந்தாலும், சிலர் அரசின் மீது நம்பிக்கை வைக்காமல் மிதி வண்டி வாங்கியுள்ளனர். உணவை விட மிதி வண்டி மிதித்து செல்வதில், நம்பிக்கையை ஆதாரமாக கொண்டுள்ளனர்.
உத்திரபிரதேசத்தில் உள்ள லக்னோ, பூதான், ஜான்பூர் ஆகிய நகரங்களுக்கு மே 13 அன்று, நடந்துசென்றுகொண்டிருக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள். (படம் அறிவரசு)
மத்திய உள்துறை அமைச்சகம் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு ஷிராமிக் சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்வதையும் அவர்களை நடந்து செல்ல கூடாது என்பதை உத்திரவாதம் செய்யுமாறும் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது. ஒவ்வொரு ரயிலும் அதிகபட்சம் 1200 பேரை ஏற்றிச்செல்லும். கிட்டத்தட்ட 9000 பேரை சிறப்பு ரயில்கள் மூலம் அனுப்பியுள்ளதாக மே 11 அன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.
அதிகாரிகளின் கூற்றுப்படி, சென்னையில் மட்டும் உள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை 50,000. ஆனால் இதற்கு மாறாக உண்மை நிலவரமாக 15 இலட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். இவர்களில் 5 இலட்சம்பேர் மட்டுமே சென்னையில் மட்டுமே உள்ளனர். இது, தமிழகத்தில் எத்தனை பேர் புலம்பெயர் தொழிலாளர்கள் இருக்கிறார்கள் என்பதை ஒப்புக்கொள்ள மறுப்பதையும் அவர்களுக்கு உதவி செய்ய மறுப்பதையும் காட்டுகிறது. அத்தொழிலாளர்கள் குறித்து தனிஒரு பதிவேட்டை பராமரித்து எல்லாம் சிறப்பாக நடப்பதாக வைத்திருக்கிறது. அரசு. ஆனால் களநிலவரம் வேறாக உள்ளது. அத்தொழிலாளர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு ஒவ்வொரு 60 கிலோ மீட்டர் தூரத்திற்கும் வகை பிரித்து நிறுத்தங்களை அமைத்து பணியாற்றும் போது களநிலவரம் வேறாக உள்ளது என்கிறார்.
75,000 உறுப்பினர்களை கொண்டு சமூகத்தின் புதிய முகம் என்ற ஃபேஸ்புக் குழுவை நடத்தி தன்னார்வ தொண்டு வேலைகளை செய்துவரும் திலிப் சீனிவாசன். நாம் ஒரு ஜனநாயகத்தில் வாழ்ந்தாலும் அதன் உள்ளடக்கம் அதற்கு அப்பாற்பட்டதாக மாற்றப்பட்டிருக்கிறது. பணமோ அரசியல் ஆதரவோ இல்லாத்தாலும் மேலும் உங்களுடைய பொருளாதார வளர்ச்சிக்கு தேவைப்படுவதாலும் அந்த புலம்பெயர் தொழிலாளர்களை கட்டாயமாக துப்பாக்கி முனையில் ஊருக்கு செல்லவிடாமல் திரும்ப பெற்று வைத்திருப்பது சரியா? இது கொத்தடிமைத்தனம் இல்லையா? என்று கேட்கிறார் ஒரு ஜெயேந்திர பூபதி என்ற தன்னார்வலர்.
குறிப்பாக காஞ்சிபுரம், திருப்பூர், கோயம்புத்தூர் போன்ற மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளை ஒவ்வொரு மணிநேரத்திற்கும் சுமார் 200 புலம்பெயர் தொழிலாளர்கள் வரை கடக்கின்ற அளவிற்கு தமிழகத்தின் நிலை கொதிப்பாக உள்ளது என்கிறார், ’புலம்பெயர் தொழிலாளர்களுக்கான சென்னை குடிமக்களின் கோவிட் ஃபண்ட்’ என்ற அமைப்பின் தன்னார்வளர் டி. வெங்கட்.
”இனிமேலும் அவர்களை இங்கேயே தங்கிக் கொள்ளுங்கள் என்று அவர்களை நாம் கேட்க முடியாது. ஏனென்றால் அவர்களை ஊருக்கு அனுப்புவதற்காக இயக்கப்படும் ரயில்களின் எண்ணிக்கை சொற்பமாகவும் உத்திரவாதமற்றதாகவும் உள்ளது. அவர்கள் பதற்றத்துடன் உள்ளனர். ஏனெனில் அவர்களில் அனேகமானோர் ரயில் டிக்கெட்பெற இயலவில்லை. மேலும் அவர்களை ஏற்றாமலேயே ரயில் புறப்பட்டு விடுகிறது என்பது அவர்களுக்கு தெரிகிறது. ஊருக்கு அனுப்பி வைப்பதில் அரசாங்கம் யாருக்கு, எப்படி முக்கியத்துவம் கொடுக்கிறது என்பது எங்களுக்கு தெரியவில்லை. புலம்பெயர் தொழிலாளர்களிடமிருந்து பதற்றத்துடன் கூடிய அழைப்புகள் எங்களுக்கு வருகிறது. எங்களால் உதவி செய்யமுடியவில்லை. பெரிய அளவில் புலம்பெயர் தொழிலாளர் கூட்டம் வெளியேறியதை வடமாநிலம் சந்தித்தித்த போது, ஏற்பட்ட ஒரு பிரச்சினையாக இது இல்லை. ஆனால் இப்போது அவர்கள் கைவிடப்பட்டு விட்டார்கள். கடந்த மூன்று நாட்கள் மிகப்பெரிய எண்ணிக்கையில் உயர்வை பார்த்துவருகிறோம்,” என்றார், அவர்.
மே 15 அன்று, தமிழ்நாட்டிலிருந்து ஆந்திரபிரதேசம் வரை நடந்து சென்றிருந்த இடம்பெயர்வு தொழிலாளர்களை லாரிகளில் பிடித்து அடைத்து மீண்டும் கொண்டுவந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் எந்த முறையுமின்றி இறக்கி விட்டனர். இறுதியாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் அடைத்து விட்டனர். தமிழ்நாட்டின் எல்லை பகுதிக்கு அனுப்புவதற்கு முன்பு ஆந்திரபிரதேச போலிசு அந்த இளைஞர்களை பலமாக லத்தியால் அடித்தது.. அவர்கள் பசியோடு திரும்ப அனுப்பப்பட்டனர். அவர்களுக்கு உணவு கொடுக்கப்பட்டபோது, அடிபட்ட காயத்தை ஆற்றிக் கொள்வதற்காக ஒரு வலிநிவாரண தைலம் கேட்டனர்.
சுமார் 300 புலம் பெயர் தொழிலாளர்கள் சிரமத்துடன், தங்களால் முடிந்த அளவு நடந்து விஜயவாடா வரை சென்று விட்டவர்களை பிடித்து மூன்று டிரக் வண்டிகளில் வைத்து தமிழ்நாட்டிற்கு அனுப்பப்பட்டனர். ஒரு ட்ரக் வண்டி இறக்கிவிட்ட சென்னை சென்ரல் ரயில்வே நிலையத்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் அவர்கள் மீது மீண்டும் போலிசு தடியடியை நிகழ்த்தியது. ”அரசு அலுவலர்கள் அவர்களை சொந்த நகரங்களுக்கு அனுப்ப உறுதிகொடுத்த போதிலும், அவர்களை வீட்டிற்கு பாதுகாப்பாக அனுப்ப்ப்படும் வரை அவை வார்த்தை அளவில் மட்டுமே உள்ளது. இதற்கிடையில், எல்லைகள் சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டுக் கொண்டிருக்கிற நிலையிலும் அவர்கள், யார் மீதும் முழுமையாக நம்பிக்கை வைப்பதாக இல்லை,” என்கிறார் புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த நகரங்களுக்கு அனுப்பிவைப்பதில் உதவி செய்துவரும் இயற்கை விவசாயிகள் சந்தை என்ற அமைப்பிலிருந்து செயல்பட்டுவரும் ஆனந்தூ என்பவர்.
மே 14 அன்று, சென்னை- ஹௌரா என்எச்16 ல் நடந்துசெல்லும் இடம் பெயர் தொழிலாளர்கள். (படம் அறிவரசு).
மே 16 ஆம் தேதி வரையிலான காலத்தில், 9000 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இந்தியாவிலேயே மூன்றாவது மாநிலமாக தமிழகம் உள்ளது. இங்கு இப்போது 10,108 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 71 பேர் மரணமடைந்துள்ளனர்.
இதற்கிடையில், தமிழகத்தின் தலைநகரத்தின் அருகில் , நிலைமை மாறாமல் அப்படியே உள்ளது. நொய்டா – கிரேட்டர் நொய்டா அதிவிரைவு பாதை வழி நெடுக புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்து ஊர்களுக்கு செல்லும் அவர்களுக்கு, உச்சநீதி மன்றத்தில் பதிவு பெற்ற வழக்கறிஞர் அனஸ் தன்விர் சித்திக் உணவளித்து உதவிவருகிறார் .
“தொழிலாளர்களின் இந்த இயக்கம் ஊரடங்கு எப்படியோ அப்படியே தீர்க்கப்படாமல் உள்ளது. புலம்பெயர் தொழிலாளர்களின் முதல் இடம்பெயர்வு அலையை பொருத்தவரை அச்சம் காரணமாக கூட இருக்கலாம். ஆனால் இப்போதும் ஏன் அவர்கள் திரும்ப நடந்து சென்று கொண்டிருக்கிறார்கள்? கொரானாவை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக பொறுமை காக்க நிர்பந்திக்கப்பட்டு ஊடங்கு உத்தரவு போட்டது போலவே ஒருபோதும் வராத உதவிக்காக தொழிலாளர்கள் காத்திருந்தனர். முழு ஊரடங்கு காலம் முழுதும் அவர்கள் பசியோடு இருந்து வந்தனர். இது, நடுத்தர வர்க்கத்திற்கும், மேட்டுக்குடி வர்க்கத்திற்கும் உதவ முடிந்தவர்களின் கூட்டு தோல்வியும் ஆகும். அது அவர்களுடைய கூலி கொடுப்பதை தொடர்ந்து கொடுத்திருக்க முடியும். ஆனால் அப்படி செய்யவில்லை. மேலும், கார்ப்பரேட்டுகள் தங்களின் ஏராளமான சொத்துக்களை வேறு வழியில் வியாபாரத்தை பெருக்குவதற்கு பயன்படுத்தியிருக்கின்றனர். ஆனால் அவர்கள் இப்போது தங்களைவிட பல மடங்கு கீழான நிலையில் உள்ள தொழிலாளர்களிடம் கருணை கேட்டுக் கொண்டிருக்கின்றனர். இது, தொழிலாளிகள் என்போர் எப்போதுமே தன்மை ரீதியாகவே மதிப்பற்றவர்கள், ஆனால் தன் சொத்தை பெருக்கி கொள்வதற்கு இவர்களுக்கு பயன்படக்கூடிய ஒரு சரக்கு என்ற கசப்பான உண்மையை உணரச் செய்திருக்கிறது,” என்கிறார் அவர்.
அனஸ், அனைக்குமான இஃப்தார் என்ற இயக்கத்தின் நிறுவனருமாவார். 2018 ல் தொடங்கப்பட்ட இந்த இயக்கம், போதிய உணவு கிடைப்பதில் சமூகத்தில் ஏற்றத்தாழ்வு இருப்பதால் உரிமைகள் மறுக்கப்படும் விளிம்புநிலை மக்களுக்கும், மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கும், அங்குள்ள அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் நம்பிக்கையோடு இஃப்தார் உணவளித்து ரம்ஜானை கொண்டாடி வருகிறது.
அனுசுக்கும் அவரது இயக்கத்தின் உறுப்பினர்களுக்கும் இந்த ரம்ஜான் என்பது மிக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்து வருகிறது. இந்தியாவின் தொலைதூர பகுதியிலிருப்பவர்களிடமிருந்தும் பட்டினி போக்க கோரும் அழைப்புகளை இவர்கள் பெற்று வருகின்றனர். முதல்கட்ட ஊரடங்கு காலத்திலேயே இவர்கள், சில மசூதிகளையே சமூக சமையலறையாகவும் உணவு வழங்கும் மையங்களாகவும் மாற்றினார்கள். “இந்த முன்முயற்சியில் காவல்துறையினர் உதவிகரமாக இருந்தனர்,” என்கிறார் அவர்.
ஊரடங்கு காலத்தில் 8 உறுப்பினர்களை கொண்ட ஒரு புலம்பெயர் தொழிலாளியின் குடும்பம் ஒரு ஜூகத் ஸ்கூட்டர் ரிக்ஷாவை விட்டுவிட்டு உபியில் உள்ள ஒரு அஜம்கார்க்கிற்கு சென்றனர்.. அவர்களிடமிருந்து ஒரு தகவலும் எனக்கு கிடைக்கவில்லை.
கோவிட் 19 பெருநோய்தொற்று அபாயம் காரணமாக பிறப்பிக்கப்பட்ட நாடு தழுவிய ஊரடங்கின் விளைவாக , சிக்கித் தவிக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் அவலங்களை நாள்தோறும் பார்த்து வருகிறோம். ஆனால், அவர்களுடைய அவலங்கள் புதியவை அல்ல; சமகால வரலாற்றில் நாட்டின் பொருளாதாரத்தின் கண்ணுக்கு தெரியாத அம்சமாக இருந்து வரும் ஒரு பிரச்சினை, நகர்ப்புற இந்தியாவின் கவனத்துக்கு வந்துள்ளது.
கிராமப்புற இந்தியாவின் மக்கள் காப்பகம்(PARI) என்ற அமைப்பின் நிறுவனரும் ரமோன் மாகசேசே விருது பெற்ற பத்திரிகையாளருமான பி. சாய்நாத், பல தசாப்தங்களாக புலம்பெயர்ந்தோர் நிலையை எழுதி வருகிறார். இந்த நேர்காணலில், தொழிலாளர்களின் தற்போதைய நிலைமை மற்றும் முன்னோக்கி செல்லக்கூடிய வழி ஆகியவற்றை அவர் விவரிக்கிறார்.
பி. சாய்நாத்
சமீபத்தில், மத்திய பிரதேசத்தை சேர்ந்த 16 தொழிலாளர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது, ரயிலில் நசுக்கப்பட்டு கொல்லப்பட்டனர். இறந்த தொழிலாளர்கள் ஏன் ரயில் தண்டவாளத்தில் தூங்கிக் கொண்டிருந்தார்கள் என்பதுதான் நமது முதல் எதிர்வினையாக இருந்தது, அவர்களை வீட்டிற்கு நடந்து செல்லும் நிலைமைக்கு தள்ளியவர்கள் பற்றி ஏன் கேள்வி எழுப்பப்படவில்லை?
எத்தனை ஆங்கில பத்திரிகைகள் ரயிலில் நசுக்கப்பட்ட தொழிலாளர்களின் பெயர்களைக் குறிப்பிட்டன? அவர்களை முகமில்லாமல், பெயரின்றி செல்ல வேண்டியிருந்தது. இதுதான் ஏழைகள் மீதான நமது அணுகுமுறை. இதுவே ஒரு விமான விபத்தாக இருந்திருந்தால், தகவல்களை வழங்கும் ஹெல்ப்லைன்களையும் சேர்த்தே நாளிதழ்கள் வெளியிட்டிருக்கும். இந்த விபத்தில் 300 பேர் கொல்லப்பட்டிருந்தாலும், அவர்களின் பெயர்கள் செய்தித்தாள்களில் வந்திருக்கும்.
ஆனால், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 16 ஏழை எளியவர்கள், அவர்களில் எட்டு பேர் கோண்ட் பழங்குடியினர், அவர்களுக்கு யார் பெயர் தருவார்கள்? வீடு அடைய அவர்கள் அந்த ரயில் பாதைகளில் நடந்து கொண்டிருந்தார்கள். எப்படியாவது ரயில் நிலையத்திலிருந்து ரயில் பிடித்து வீடு போய் சேர்ந்து விடலாம் என அவர்கள் நம்பிக் கொண்டிருந்தார்கள். நடந்த களைப்பில் அவர்கள் ரயில் தடங்களில் தூங்கியிருக்கிறார்கள். அநேகமாக அந்த பாதைகளில் ரயில் வராது என நம்பித்தான் தூங்கியிருக்கிறார்கள்.
இந்தியா மிகப்பெரிய தொழிலாளர் ஆற்றல் உள்ள நாடு, அரசாங்கங்கள் தொழிலாளர்களுடன் தொடர்புகொள்வது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
1.3 பில்லியன் மனிதர்களைக் கொண்ட ஒரு நாட்டில் அவர்களின் வாழ்க்கையை முடக்குவதற்கு நான்கு மணி நேரம் அவகாசம் மட்டுமே அளித்தோம். முன்னாள் ஆட்சிப்பணி அதிகாரியான எம்.ஜி.தேவாசகாயம், ‘ சிறிய காலாட்படை படை நான்கு மணி நேர கால அவகாசம் மட்டுமே தரப்பட்டு, ஒரு பெரிய நடவடிக்கைக்கு தள்ளப்பட்டிருக்கிறது’ என்கிறார்.
புலம்பெயர் தொழிலாளர்களுடன் நாம் உடன்படுகிறோமோ இல்லையோ, வெளியேறுவதற்கான காரணம் முற்றிலும் சரியாகவே இருந்தது. அவர்களுடைய அரசாங்கங்கள், தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் நம்மைப் போன்ற நடுத்தர வர்க்க ஊழியர்கள் எவ்வளவு நம்பத்தகாதவர்கள், சிந்தனையற்றவர்கள், கொடூரமானவர்கள் என்பதை அவர்கள் அறிவார்கள், ஒவ்வொரு மணிநேரமும் அதை நாம் நிரூபித்துக் கொண்டிருக்கிறோம். அவர்களின் இயக்க சுதந்திரத்தை சட்டத்தின் மூலம் கட்டுப்படுத்த முடியும் என நம்புகிறோம்.
நீங்கள் பேரச்சத்தை உருவாக்கியிருக்கிறீர்கள். நெடுஞ்சாலைகளில் மில்லியன் கணக்கானவர்களுடன் நாட்டை முழுமையான குழப்பத்திற்கு உள்ளாக்கியிருக்கிறீர்கள். மிக எளிதாக திருமண மண்டபங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மற்றும் சமூக மையங்களை புலம்பெயர்ந்தோர் மற்றும் வீடற்றோருக்கான தங்குமிட வீடுகளாக மாற்றியிருக்கலாம். வெளிநாட்டிலிருந்து திரும்பும் மக்களுக்கான தனிமைப்படுத்தப்பட்ட மையங்களாக நட்சத்திர ஹோட்டல்களை அறிவித்தோம்.
புலம் பெயர்ந்தோருக்கான ரயில்களை ஏற்பாடு செய்யும்போது, அவர்களிடம் முழு கட்டணம் வசூலிக்கிறோம். பின்னர் ஏசி ரயில்களிலும், ராஜ்தானி வகுப்பு கட்டணத்திலும் ரூ. 4,500 வைத்தோம். அதை மேலும் மோசமாக்கும் வகையில், டிக்கெட்டுகள் அனைத்தையும் ஸ்மார்ட்போன்கள் வைத்திருப்பதாக கருதி ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம் என்று கூறுகிறீர்கள். அவர்களில் சிலர் அந்த டிக்கெட்டுகளை வாங்குகிறார்கள். ஆனால் கர்நாடகாவில், அடிமைகள் தப்பிக்கிறார்கள் என்று கூறும் பில்டர்களை முதலமைச்சர் சந்திப்பதால் அவற்றையும் ரத்து செய்கிறார்கள். எதிர்பார்த்த அடிமை கிளர்ச்சியைத் தணிப்பதை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.
நாம் எப்போதும் ஏழைகளுக்கு ஒரு தரத்தையும் மற்றவர்களுக்கு ஒரு தரத்தையும் வைத்திருக்கிறோம். இருப்பினும், நீங்கள் அத்தியாவசிய சேவைகளை பட்டியலிடும்போது, மருத்துவர்களைத் தவிர, ஏழை மக்கள் மட்டுமே அத்தியாவசியம் என்பதை நீங்கள் கண்டுபிடித்துள்ளீர்கள். பல செவிலியர்கள் நல்ல நிலைமையில் இல்லை. அவர்களைத் தவிர, தூய்மை தொழிலாளர்கள், ஆஷா தொழிலாளர்கள், அங்கன்வாடி தொழிலாளர்கள், மின்சாரத் தொழிலாளர்கள், மின் துறை தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சாலை தொழிலாளர்கள் உள்ளனர். திடீரென்று இந்த நாட்டிற்கு உயரடுக்கு எவ்வளவு இன்றியமையாதவர்கள் அல்லர் என்பதை நீங்கள் கண்டுபிடித்துள்ளீர்கள்.
இடம்பெயர்வு பல தசாப்தங்களாக நடந்துள்ளது. ஊரடங்குக்கு முன்பே அவர்களின் நிலை படுமோசமான வகையில் இருந்தது. நம்முடைய புலம்பெயர் தொழிலாளர்களை நாம் பொதுவாக நடத்தும் விதத்தை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
பல வகையான குடியேறிகள் உள்ளனர். ஆனால் குடியேற்றத்தின் வர்க்க வேறுபாடுகளை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நான் சென்னையில் பிறந்தேன். உயர் கல்வியை டெல்லியில் முடித்தேன், அங்கு நான் நான்கு ஆண்டுகள் வாழ்ந்தேன். பின்னர் நான் மும்பைக்கு குடிபெயர்ந்தேன், நான் இங்கு 36 ஆண்டுகளாக வசித்து வருகிறேன். நான் செய்த ஒவ்வொரு இட மாற்றமும் எனக்கு பயனளித்தது. ஏனெனில் நான் ஒரு குறிப்பிட்ட வகுப்பு மற்றும் சாதியைச் சேர்ந்தவன். எனக்கு சமூக மூலதனம் மற்றும் வலைபின்னல்கள் உள்ளன.
நீண்ட காலமாக குடியேறிகள் உள்ளனர், A இலிருந்து B க்கு வெளியேறி B இல் நிரந்தரமாக இருப்பவர்கள்.
பின்னர் பருவகால குடியேறிகள் உள்ளனர். உதாரணமாக, மகாராஷ்டிராவில் உள்ள கரும்புத் தோட்டத் தொழிலாளர்கள் ஐந்து மாதங்களுக்கு கர்நாடகாவுக்கு குடிபெயர்கிறார்கள், மிகவும் குறிப்பிடத்தக்க வகையில் நேர்மாறாக – அங்கு வேலைசெய்து தங்கள் கிராமங்களுக்கு மீண்டும் செல்கிறார்கள். காலஹந்தி குடியேறிகள் சுற்றுலாப் பருவத்தில் ராய்ப்பூருக்குச் சென்று ரிக்ஷாக்களை இழுக்கும் பணியைச் செய்கின்றனர். ஒடிசாவின் கோராபுட்டிலிருந்து ஆந்திராவின் விஜயநகரத்தின் செங்கல் சூளைகளுக்கு சில மாதங்கள் செல்வோர் உள்ளனர்.
மற்ற குழுக்களும் உள்ளன – ஆனால் நாம் மிகவும் அக்கறை கொள்ள வேண்டிய நபர்கள் தான்தோன்றி குடியேறிய தொழிலாளர்கள் என்று அழைக்கப்படுபவர்களே. இப்படிப்பட்ட குடியேறிகளுக்கு இறுதி இலக்கு குறித்த தெளிவான யோசனை இல்லை. அவர்கள் ஒரு ஒப்பந்தக்காரருடன் மும்பைக்கு வந்து ஒரு கட்டுமான இடத்தில் 90 நாட்கள் வேலை செய்வார்கள். அந்த காலகட்டத்தின் முடிவில், அவர்களுக்கு எதுவும் இருக்காது. பின்னர் ஒப்பந்தக்காரர் அவர்களை மகாராஷ்டிராவின் வேறு ஏதேனும் ஒரு பகுதியுடன் தொடர்புகொண்டு, அவர்களை அங்கே விடுவார். இது முடிவில்லாமல் இப்படியே தொடர்ந்து கொண்டிருக்கும். செல்கிறது. இது மொத்தமாக, பாதுகாப்பில்லாத, முடிவற்ற ஒரு மோசமான வாழ்க்கை. அப்படியானவர் மில்லியன் கணக்கில் உள்ளனர்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நிலை எப்போது மோசமடையத் தொடங்கியது?
இடம்பெயர்வு ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக நடந்து வருகிறது. ஆனால் அவை கடந்த 28 ஆண்டுகளில் பெரு வெடிப்பாக அமைந்தன. 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு, 2001 மற்றும் 2011 க்கு இடையில், சுதந்திரத்துக்குப் பிறகான வரலாற்றில், இந்தியா மிக அதிக அளவிலான புலம்பெயர்ந்தோரைப் பார்த்துள்ளது.
2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 1921 க்குப் பிறகு முதன்முறையாக நகர்ப்புற இந்தியா அதன் மக்கள்தொகையில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிராமப்புற இந்தியா அதன் மக்கள்தொகையில் சேர்க்கப்பட்ட மக்களின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது. நகர்ப்புறங்களில் மக்கள்தொகை விகிதத்தின் வளர்ச்சி மிகவும் சிறியது, ஆனால் நகர்ப்புற இந்தியாவின் மக்கள்தொகையில் இன்னும் அதிகமானவர்களை சேர்க்க வேண்டியுள்ளது.
2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின் இந்த உண்மைகளுக்கு முழுமையாக பேசிய தொலைக்காட்சி நிபுணர்களுடன் குழு விவாதம் அல்லது நேர்காணலைத் தேடிப் பாருங்கள். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புறத்திலிருந்து நகர்ப்புறம், கிராமப்புறத்திலிருந்து கிராமப்புறம் மற்றும் பலவற்றிற்கு இடம்பெயர்ந்த நிகழ்வின் தீவிரம் குறித்து எத்தனை பேர் விவாதித்தனர்?
இடம்பெயர்வு பற்றிய எந்தவொரு கலந்துரையாடலும் கிராமப்புற துயரங்கள் இல்லாமல் முழுமையடையாது, அதுதான் குடியேற்றத்தின் மூலத்தில் உள்ளது, இல்லையா?
நாம் விவசாயத்தை அழித்து ஒழித்தோம்; மில்லியன் கணக்கான வாழ்வாதாரங்கள் சரிந்தன. கிராமப்புறங்களில் உள்ள மற்ற வாழ்வாதாரங்களும் படுமோசமாக உள்ளன. விவசாயத்துக்குப் பிறகு கைத்தறி மற்றும் கைவினைப்பொருட்களும் நாட்டில் மிகப்பெரிய பணி வழங்குபவையாக இருந்தன. படகுகாரர்கள், மீனவர்கள், பனைஏறும் தொழிலாளர்கள், பொம்மை தயாரிப்பாளர்கள், நெசவாளர்கள், சாயம் ஏற்றுபவர்கள்; ஒன்றன் பின் ஒன்றாக, அவை சரிந்து செல்கின்றன. அவர்களின் முன்னே எந்த தேர்வு உள்ளது?
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீண்டும் நகரங்களுக்கு வருவார்களா என்று நாம் யோசிக்கிறோம். அவர்கள் ஏன் முதலில் இங்கு வந்தார்கள்?
கணிசமான எண்ணிக்கையிலான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீண்டும் நகரங்களுக்கு வருவார்கள் என்று நான் நம்புகிறேன். இது நீண்ட காலம் எடுக்கும். ஆனால் கிராமங்களில் அவர்கள் வைத்திருந்த தேர்வுகளை நாம் நீண்ட காலத்திற்கு முன்பே அழித்துவிட்டோம், அவர்களை மலிவான உழைப்பாளிகள் படையாக உறுதிபடுத்தியிருக்கிறோம்
பல மாநிலங்களில் தொழிலாளர் சட்டங்களின் முன்மொழியப்பட்ட தளர்வுகளை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
முதலாவதாக, இது அரசியலமைப்பையும், தற்போதுள்ள சட்டங்களையும் அவசர சட்டம் மூலம் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகும். இரண்டாவதாக, இது அவசர சட்டத்தின் மூலம் ஒரு பிணைக்கப்பட்ட தொழிலாளர் பிரகடனத்தை வெளியிடுவதாகும். மூன்றாவதாக, இது உண்மையில் முறைபடுத்தப்பட்ட அப்பணிபுரியும் நேரத்தை 100 ஆண்டுகளுக்கு பின்னோக்கி அமைக்கிறது. மிக அடிப்படையான விஷயம் என்னவென்றால், உலகில் தொழிலாளர் தொடர்பான ஒவ்வொரு ஒப்பந்தமும் நாளில் எட்டு மணி நேர பணியை ஏற்றுக்கொண்டுள்ளது.
குஜராத் அறிவிப்பைப் பாருங்கள். தொழிலாளர்களுக்கு கூடுதல் நேரத்துக்கு சம்பளம் வழங்கப்படாது என்று அது கூறுகிறது. ராஜஸ்தான் அரசாங்கம் கூடுதல் நேரங்களுக்கு கூடுதல் நேர ஊதியத்தை வழங்குகிறது, ஆனால் வாரத்திற்கு 24 மணிநேர வரம்புடன். அதாவது தொழிலாளர்கள் முழுமையாக ஆறு நாட்களுக்கு ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை செய்வார்கள்.
இவை அனைத்தும் தொழிற்சாலைகள் சட்டத்தில் விதிவிலக்குகள் மற்றும் விதிவிலக்குகளை மேற்கோள் காட்டி செய்யப்பட்டுள்ளன. ஒரு தொழிலாளி வேலை செய்யக் கேட்கக்கூடிய அதிகபட்ச மணிநேரம் – கூடுதல் நேரம் உட்பட – 60 மணிநேரம் என்று அது கூறுகிறது. ஒரு நாளைக்கு 12 மணி நேரம் எனக் கணக்கிட்டால், இவை 72 க்கு வருகின்றன.
மிக முக்கியமாக, தொழிலாளர்கள் கூடுதல் மணிநேரம் பணி செய்ய விரும்புகிறார்களா இல்லையா என்று அவர்களால் தேர்வு செய்ய முடியாது. நீண்ட வேலை நேரம் பணிபுரிந்தால் உற்பத்தித்திறன் அதிகரிக்கும் என்று ஒரு அனுமானம் உள்ளது. ஆனால் இது வரலாற்றில் செய்யப்பட்ட பல ஆய்வுகளுக்கு எதிரானது. கடந்த நூற்றாண்டில் நிறைய தொழிற்சாலைகள் 8 மணி நேர பணியை ஏற்றுக்கொண்டன, ஏனெனில் சோர்வு மற்றும் களைப்பு காரணமாக கூடுதல் மணிநேரங்களில் உற்பத்தித்திறன் வலுவாக வீழ்ச்சியடைவதாக அவர்களின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அதைப் பொருட்படுத்தாமல், இது அடிப்படை மனித உரிமைகள் மீதான தாக்குதல். இது உழைப்பின் அடிமைத்தனம். மாநிலங்கள் அடிப்படையில் ஒரு ஒப்பந்தக்காரராக செயல்படுகின்றன, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பிணைக்கப்பட்ட தொழிலாளர்களை அவை வாங்குகின்றன. இது தலித்துகள், பழங்குடிகள் மற்றும் பெண்கள் போன்ற மிகவும் பலவீனமான பிரிவுகளை பாதிக்கும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
இந்தியாவில் தொண்ணூற்று மூன்று சதவிகித தொழிலாளர்கள் முறைசாரா துறையில் பணிபுரிவதால் அவர்கள் எப்படி செயல்படுத்த வேண்டும் என்பது பற்றிய எந்த உரிமையும் அவர்களுக்கு இல்லை. “மீதமுள்ள ஏழு சதவிகிதத்தினரின் உரிமைகளையும் அழிப்போம்” என்று நீங்கள் கூற முயற்சிக்கிறீர்கள். தொழிலாளர் சட்டங்களின் மாற்றத்தை கொண்டு வந்தால் முதலீடு வரும் என்று மாநிலங்கள் வாதிடுகின்றன. ஆனால் சிறந்த உள்கட்டமைப்பு, சிறந்த நிலைமைகள் மற்றும் பொதுவாக ஒரு நிலையான சமூகம் உள்ள இடங்களுக்கு மட்டுமே முதலீடு வருகிறது. உத்தரபிரதேசத்தில் ஏதேனும் இருந்திருந்தால், இந்தியா முழுவதும் அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் குடியேறும் மாநிலமாக அது இருந்திருக்காது.
இந்த நடவடிக்கையின் விளைவுகள் என்னவாக இருக்கும்?
தொழிலாளர்களின் உரிமைகலுக்கு வேட்டு வைக்கும் பாஜக கும்பல்.
உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள், அரசியலமைப்பு மற்றும் சட்ட சிக்கல்கள் காரணமாக தங்களால் மாற்றமுடியாத மூன்று அல்லது நான்கு சட்டங்களைத் தவிர்த்து, அனைத்து தொழிலாளர் சட்டங்களையும் மூன்று ஆண்டுகளுக்கு நிறுத்தி வைத்துள்ளன. நிலைமைகள் எவ்வளவு மோசமானவை என்பது முக்கியமல்ல, தொழிலாளர்கள் வேலை செய்ய வேண்டும் என்று நீங்கள் சொல்கிறீர்கள். நீங்கள் மக்களை மனிதநேயமற்றவர்களாக ஆக்குகிறீர்கள், அவர்களுக்கு காற்றோட்டம், கழிப்பறைகள் மற்றும் இடைவேளை போன்ற உரிமை இல்லை என்று கூறுகிறீர்கள். இது முதலமைச்சர்களின் அவசர சட்டம், இதன் பின்னணியில் எந்த சட்டமன்ற நடவடிக்கையும் இல்லை.
முன்னோக்கிச் செல்ல நாம் என்ன செய்ய வேண்டும்?
நாட்டில் தொழிலாளர் நிலைமைகளை நீங்கள் மேம்படுத்த வேண்டும். தொற்றுநோய் நம் சமூகத்தில் உள்ள மிகப்பெரிய ஏற்றத்தாழ்வுகள் காரணமாக அது செய்யும் விதத்தில் அவர்களைப் பாதிக்கிறது. பல சர்வதேச தொழிலாளர் மரபுகளை மீறுவதற்கு நாம் சாட்சியாக உள்ளோம்.
பி.ஆர்.அம்பேத்கர் இதை தெளிவாகக் கண்டார். நாங்கள் பேச வேண்டியது அரசாங்கத்தைப் பற்றியது அல்ல என்பதை அவர் புரிந்து கொண்டார். தொழிலாளர்கள் வணிகத்தின் தயவில் இருப்பது பற்றி நாம் பேச வேண்டும். அவர் கொண்டுவர உதவிய சட்டங்களை மாநிலங்கள் இடைநிறுத்துகின்றன, அதற்கான காரணங்களை அவர் முன்வைத்தார்.
மாநில அரசுகளில் தொழிலாளர் துறை உள்ளது. அதன் பங்கு என்னவாக இருக்க வேண்டும்?
மாநிலத்தில் தொழிலாளர் துறையின் பங்கு தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதாக இருக்க வேண்டும். ஆனால் உங்களிடம் ஒரு மத்திய அமைச்சர் இருக்கிறார், அவர் நிறுவனங்களுக்கு செவிசாய்க்கும்படி தொழிலாளர்களிடம் வேண்டுகோள் விடுக்கிறார். நீங்கள் ஏதாவது மாற்ற வேண்டும் என்றால், உங்கள் சமூக ஒப்பந்தத்தை மாற்ற வேண்டும். கிரகத்தின் மிகவும் சமத்துவமற்ற சமூகங்களில் ஒன்றுடன் நீங்கள் உரையாற்ற முடியாவிட்டால், அதைப் பற்றி நீங்கள் எதுவும் செய்ய முடியாது. இது மிக விரைவாக, மோசமான நிலைமைக்கு இட்டுச் செல்லும்..
வீடு திரும்பும் தொழிலாளர்களில் பெரும்பாலோர் இளைஞர்கள், கோபமுள்ளவர்கள். நாம் எரிமலையில் அமர்ந்திருக்கிறோமா?
எரிமலை வெடிக்கிறது. நாம் அதைப் பார்க்க முயற்சிக்கிறோம். அரசாங்கங்கள், ஊடகங்கள், தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் நம்மை ஒரு சமூகமாக, அதில் உள்ள பாசாங்குத்தனத்தை பாருங்கள்.
மார்ச் 26 வரை, புலம்பெயர்ந்த தொழிலாளியைப் பற்றி நமக்கு ஒன்றும் தெரியாது. திடீரென்று, மில்லியன் கணக்கானவர்களை தெருக்களில் காண்கிறோம். நாம் நமது சேவைகளை இழந்துவிட்டதால் அதை உணர்கிறோம். மார்ச் 26 வரை நாங்கள் செய்யவில்லை. அவர்களை சம உரிமை கொண்ட மனிதர்களாக நாம் கருதவில்லை.
ஒரு பழமொழி உண்டு: ஏழைகள் கல்வியறிவு பெறும்போது, பணக்காரர்கள் தங்கள் பல்லக்கு தூக்கிகளை இழக்கிறார்கள். திடீரென்று, நாம் பல்லக்கு தூக்கிகளை இழந்தோம்.
இடம்பெயர்வு குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளை எவ்வாறு பாதிக்கிறது?
இது குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பேரழிவை ஏற்படுத்துகிறது. ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் சுகாதார அடிப்படையில் நம்பமுடியாத அளவுக்கு பாதிக்கப்படக் கூடியவர்களாக உள்ளார். இளம் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அரிதாகவே பேசப்படுகின்றன. நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் மில்லியன் கணக்கான சிறுமிகளுக்கு இலவச சுகாதார நாப்கின்கள் வழங்க உரிமை உண்டு – திடீரென்று பள்ளிகள் மூடப்பட்டுள்ளன, மாற்று வழிகள் எதுவும் வழங்கப்படவில்லை. எனவே மில்லியன் கணக்கானவர்கள் சுகாதாரமற்ற மாற்றுகளுக்குத் திரும்புகின்றனர்.
வீடு திரும்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் என்னென்ன?
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பெரும்பாலும் நீண்ட தூரம் நடந்து வந்திருக்கிறார்கள். உதாரணமாக, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் தொழிற்சாலை அல்லது குஜராத்தில் உள்ள நடுத்தர வர்க்க முதலாளிகளிடமிருந்து தெற்கு ராஜஸ்தானுக்கு திரும்பிச் செல்கின்றனர்.
ஆனால் அவர்கள் அதை வெவ்வேறு சூழ்நிலைகளில் செய்தார்கள்.
அவர்கள் 40 கிலோமீட்டர் தூரம் நடந்து, ஒரு தபா அல்லது ஒரு தேநீர் கடையில் நிறுத்தி, அங்கே வேலை செய்கிறார்கள், பதிலுக்கு ஒரு உணவைப் பெறுகிறார்கள். காலையில், அவர்கள் புறப்படுவார்கள். அடுத்த பெரிய பேருந்து நிலையம் – அங்கேயும் அவர்கள் அப்படியே செய்கிறார்கள். அவர்கள் வீட்டிற்கு திரும்பி வருவது அப்படித்தான். அந்த இடங்கள் அனைத்தும் மூடப்பட்டதால், அவர்கள் நீரிழப்பு மற்றும் பசி, வயிற்றுப்போக்கு மற்றும் பிற நோய்களுக்கு ஆளாகின்றனர்.
அவர்களின் நிலையை மேம்படுத்த எதிர்காலத்தில் நாம் என்ன செய்ய வேண்டும்?
நாம் தேர்ந்தெடுத்த வளர்ச்சியின் பாதையை ஒரு முழுமையான நீக்குதல் மற்றும் உடைத்தல் மற்றும் சமத்துவமின்மை மீதான பாரிய தாக்குதலை செய்ய வேண்டும். புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் துன்பங்கள் அவர்களின் சமத்துவமற்ற சூழ்நிலையிலிருந்து எழுகின்றன.
உங்கள் அரசியலமைப்பில் உட்பொதிக்கப்பட்ட “அனைவருக்கும் நீதி: சமூக, பொருளாதார மற்றும் அரசியல் …” என்ற முக்கியத்துவத்தை உணராமல் நீங்கள் அதை செய்ய முடியாது. சமூக மற்றும் பொருளாதார அரசியல் முன் ஒரு விபத்து அல்ல. அதை எழுதியவர்களில் எதற்கு முன்னுரிமை என்பது பற்றிய தெளிவான உணர்வு இருந்தது என்று நான் நினைக்கிறேன். உங்கள் அரசியலமைப்பு உங்களுக்கு வழி சொல்கிறது.
இந்திய உயரடுக்கும் அரசாங்கமும் வழக்கம் போல் நாம் மீண்டும் வழக்கமான வணிகத்திற்கு செல்ல முடியும் என்று நினைக்கிறோம், அந்த நம்பிக்கை நம்பமுடியாத அடக்குமுறை, அழுத்தம் மற்றும் வன்முறைக்கு வழிவகுக்கும்.
தமிழகத்தில் 24 மணி நேரமும் இயங்குவதற்கு அனுமதிக்கப்பட்ட திருச்சி குட்ஷெட்டில் 400க்கு மேற்பட்ட சுமைப்பணி தொழிலாளர்கள் 11 மேஸ்திரிகளின் தலைமையில் ‘செட்’ முறையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சரக்குகளை இறக்கி ஏற்றி வருகின்றனர். மாதத்தில் ஒரு சில நாட்கள் கிடைக்கும் இவ்வேளையை நம்பித்தான் அவர்களது குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.
கொரோனா ஊரடங்கு அறிவித்த நிலையில் அத்தியாவசிய பொருட்களான அரிசி, நெல், கோதுமை இறக்கி ஏற்றுவதற்கு தமிழக அரசு அனுமதித்தது. ஆனால் அதில் ஈடுபடக்கூடிய சுமைப்பணி தொழிலாளர்கள் வந்து செல்வதற்கு எந்த வாகன வசதியோ, சுகாதார வசதிகளையோ அரசு ஏற்படுத்தித் தரவில்லை.
அருகமையிலிருந்தும் 30 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள கிராமங்களிலிருந்தும் பல தொழிலாளர்கள் சொந்த முயற்சியில் இருசக்கர வாகனங்களில் வரும் பொழுது ஊரடங்கை காரணம் காட்டி போலீசார் வாகனங்களை மறித்து பறித்துக்கொண்டு விரட்டியடித்தனர்.
இதையும் தாண்டி…. ஒருநாள் வேலை கிடைத்தால் போதும் குடும்பத்தை ஓட்டலாம் என்று நடையாக நடந்து வந்து அரிசி, நெல் தானியங்களை இறக்கி லாரிகளில் ஏற்றி குடோன்களுக்கு அனுப்பிவைத்தனர். தொழிற்சங்கங்கள் தொடர் முயற்சியால் காண்ட்ராக்ட் காரர்கள் மூலமாக இரயில்வே நிர்வாகத்திலிருந்து – குறிப்பிட்ட வேலைக்கான அனுமதி கடிதம் கிடைக்கப் பெற்றதை காண்பித்து வந்து செல்கின்றனர். இரயில்வேயிலிருந்து இன்று வரை அடையாள அட்டை தரப்படவில்லை.
குட்செட்டில் பராமரிக்க பணியாளர்கள் இல்லாததால் பூட்டப்பட்ட கழிப்பிடம், சுகாதாரமற்ற குடிநீர்! உணவு, மாஸ்க் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கும் இரயில்வே துளியும் பொருப்பெடுத்து செய்து தராத நிலையில் சொந்த செலவிலேயே பராமரித்துக்கொண்டும் சிலநேரம் பட்டினியுடனும் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.
This slideshow requires JavaScript.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
பொதுவாக, அந்தந்த செட் வேலையில் கூடுதலாக சரக்கு ஏற்றி இறக்க தொழிலாளர் பற்றாக்குறை வரும் நேரங்களில் அடுத்தசெட் தொழிலாளர்களை கூப்பிட்டு 4 அல்லது 5 பேர்களுக்கு வேலை கொடுப்பதும், அந்த 4 பேர் வேலையை அதே செட்டை சேர்ந்த கூடுதல் தொழிலாளர்கள் இணைந்து வேலை செய்வதும், கிடைக்கும் சொற்ப கூலியை பிரித்துக்கொள்வதும் வழக்கம். 200, 300 ரூபாய் கிடைப்பதே அரிது. காலை 5 மணிக்கே வீட்டைவிட்டு குட்செட்டிற்கு வந்து மாலை வரை வண்டிகளுக்காக காத்திருந்து பணிசெய்கின்றனர். 50கிலோ மூட்டைசுமந்து, அட்டிபோட்டு பணிசெய்யும் தொழிலாளர்களுக்கு உரத்தின் கெமிக்கல் கசிந்து முதுகு, தோல் பட்டைகள் புன்னாகிவிடும். சூடாக அடுக்கப்பட்ட சிமெண்ட் மூட்டைகள், குட்ஸ்வேகன் அனலை கக்கும், தோலையே கருக்கி, ஆஸ்மா, நுரையீரல் கோளாறுகளால் அவதிப்படுகின்றனர் பலர். ஊக்கு போடக்கூடாது என நிபந்தனையால் கைகள் கொப்பளித்து ரனமாகும்.. ஒருவேளை உணவுகூட உண்ணாமலேயே பலர் வீடுசெல்லும் துயரம்! பல நேரங்களில் குழந்தைகளிடமோ குடும்பத்தினர்களுடனோ பேசக்கூட முடியாது. உறவினர்களின் சுக, துக்கங்களில் பங்கேற்கவும் முடியாது.
கொரோனா ஊரடங்கு நேரத்தில் ஓரிருநாள் வேலையை வைத்து எப்படி வாழ்வது? வாடகை கொடுப்பதா? குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்ற இயலுமா?. ஒப்பந்ததாரர்களின் கீழ் பணிசெய்வதால் (கிளியரிங் அண்ட் பார்வேர்டிங் கான்ராக்டர்கள்) பணிப்பாதுகாப்பு இல்லாத அவலத்தை உணர்ந்த தொழிலாளர்கள், தொழிற்சங்க வழிகாட்டுதல்படி 10 ஆண்டுகளுக்கு முன் தங்களுக்கு தாங்களே கூலியை பிடித்து PF கணக்கு துவங்கி பராமரித்து வரும் நிலையில் மத்திய அரசு கூறும் PF கணக்குப்படி 12% விகிதத்தில் 2% விகிதம் கட்டவேண்டாம் என்ற கண்துடைப்பு நடவடிக்கையால் கான்ராக்ட் முதலாளிகளுக்குத்தான் லாபமே தவிர தொழிளாளர்களுக்கு பலனில்லை !. எனவே..,
மத்திய, மாநில அரசுகளே, தொழிலாளர் நிவாரணத்தொகையாக மாதத்திற்கு ரூ.6000/- வழங்கு! குட்செட் முழுவதும் கொரொனா தடுப்பு நடவடிக்கையை எடு! – பணிபாதுகாப்பிற்காக தொழிளாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கு! இரயில்வேதுறையே, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துகொடு! கழிப்பிடத்தை சுகாதாரமாக பராமரிக்கபணியாளர்களை நியமி!
சுமைப்பணித் தொழிலாளர்கள் பாதுகாப்புச்சங்கம், திருச்சி குட்செட்(TPJY)
தகவல் : சுமைப் பணித் தொழிலாளர் பாதுகாப்புச் சங்கம், இணைப்பு: புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, தமிழ்நாடு .