Monday, August 11, 2025
முகப்பு பதிவு பக்கம் 256

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : கேட்டது விலக்கு – விளக்கம் அல்ல !

3

த்தாம் வகுப்பு மாணவர்களின் பொதுத் தேர்வுக்கான தேதிகள் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா நோய்த் தொற்று அதிகரித்துவரும் சூழலில் மாணவர்களது நலன் கருதி தேர்வுகளுக்கு விலக்கு கேட்கப்படும் வேளையில், அரசு வெளியிட்ட இந்த அறிவிப்பு மாணவர்கள் மட்டுமல்ல கல்வியாளர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின், மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன் அவர்களின் பேட்டி பு.மா.இ.மு தளைத்தில் வெளியாகியுள்ளது அதன் காணொளியை இங்கே வெளியிடுகிறோம். பாருங்கள்… பகிருங்கள்…

விழுப்புரம் சிறுமி எரிப்பு : இன்னும் எத்தனை நாள் பொறுப்பது ?

பெண்கள்- குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை மற்றும் குடும்ப வன்முறைகள் முதல் படுகொலைகள் வரை தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் கொடூரமாக நடந்தேறி வருகிறது. உலகிலேயே பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா தான் முதல் இடத்தில் உள்ளது. ஊடகங்களில் இதுபோன்ற வன்முறை வெறியாட்டங்கள் இன்று அன்றாட செய்தியாகி விட்ட நிலையில் நாம் அனைவரும் அவற்றை எளிமையாக கடந்து செல்ல நம்மை நாமே பழக்கப்படுத்தி கொண்டு வருகின்றோம். இது பெண்களை  மேலும், மேலும் பாதுகாப்பற்ற அபாயகரமான சூழ்நிலைக்கு நெட்டித் தள்ளுகின்றது.

அதன் அடிப்படையில் தான் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஆசிஃபாவின் படுகொலையும் நடந்தது. அந்த 8 வயது  சிறுமியை கோயில் கருவறையிலே வைத்து பாலியல் பலாத்காரம் செய்து குற்றுயிரும், கொலையுயிருமாக இருந்த அக்குழந்தையைக் கல்லை போட்டு படுகொலை செய்து காட்டில் வீசினர்கள். கேரளா கன்னியாஸ்திரி ஒருவர் பாதிரியார் ஃபிராங்கோ மூலக்கல் தன்னை பாலியல் வன்முறை செய்ததாக வெளியுலகிற்கு சொன்ன காரணத்தால் அவரையே ஒழுக்க கேடனவராக சித்தரித்தது பணியை விட்டு நீக்கியதோடு அவரை மனநோயாளி என்றது திருச்சபை.

தமிழகத்தில்  அரியலூர் நந்தினி என்ற 15 வயது சிறுமியை இந்து முன்னணியைச் சேர்ந்த பொறுக்கிகள் பாலியல் வன்கொடுமை செய்து அவளின் பிறப்புறுப்பை சிதைத்து  வயிற்றிலிருந்த சிசுவை வெளியே எடுத்து எரித்துவிட்டு கிணற்றில் தள்ளி கொலை செய்தார்கள். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள்  அயனாவரத்தில் வாய் பேச முடியாத 11 வயது சிறுமியை ஏழு மாதமாக 13  பேர் கொண்ட  கும்பல் பாலியல் வல்லுறவு செய்துள்ளனர். இப்படி பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை முதல் தற்போது அரங்கேறியுள்ள நாகர்கோயில் காசியின் பாலியல் வன்முறை வெறியாட்டங்கள் வரை இந்தக் கொடூரங்கள் அனைத்தும் நமது நெஞ்சை உலுக்கி எடுப்பவை மட்டுமல்ல இது ஒரு சில எடுத்துகாட்டுகள் மட்டுமே.

இன்னும் வெளியுலகிற்கு வராதது எண்ணில் அடங்காதவை. அந்த வரிசையில் மேலும் ஒரு கொடுரமான வன்முறை சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் நடந்துள்ளது. இது பெண்களை மேலும் நிலைகுலைய செய்துள்ளது.

விழுப்புரம் ஜெயஸ்ரீ படுகொலை ;  

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தை சேர்ந்த ஜெயபாலின் மகள் ஜெயஸ்ரீ (10 ஆம் வகுப்பு படித்து வந்தார்) இவரை அதே ஊரை சேர்ந்த 50 வயது மதிக்கத் தக்க யாசகம் (எ) கலியபெருமாள் மற்றும் முருகையன் ஆகியோர் ஞாயிறு (10.05.2020) அன்று காலை பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். பின்பு வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறுவதை கண்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வரும்போது சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வெளிப்புறம் தாழிட்டு இருந்த கதவை திறந்து உள்ளே சென்று தீயை அனைத்ததாக கூறப்படுகின்றது.

90% தீ காயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமி ஒருநாள் உயிருக்கு போராடிய நிலையில் வீட்டில் மீட்கப்பட்டதில் இருந்து மருத்துவமனையில் இருந்தவரை பலமுறை தான் தீ வைத்து எரிக்கப்பட்டதாக தனது மரண வாக்குமூலத்தை பதிவு செய்துவிட்டு மறுநாள் உயிரிழந்தார். அதில் தான் வீட்டில் தனியாக இருந்த போது யாசகனும், முருகையனும் வீட்டிற்கு வந்து என் கை, கால்களை கட்டி போட்டுவிட்டு வாயில் துணியை திணித்து முகத்திலேயே குத்தினார்கள் பிறகு பெட்ரோலை தலையில் ஊற்றி தீ வைத்துவிட்டு கதவை வெளியில் தாழிட்டு சென்றுவிட்டனர் என்று கூறியுள்ளார்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

கொலைக்கான பின்னணி ;

கொலையாளியான கலியபெருமாள் வீட்டருகே சிறுமி ஜெயஸ்ரீயின் தந்தை ஜெயபால் ஒருவரின் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்துள்ளார். ஏற்கனவே ஜெயபாலின் தம்பி கையை வெட்டியது தொடர்பாக இவர்களுக்கு முன் விரோதம் இருந்து வந்த நிலையில் இந்த முன் விரோதம் காரணமாக ஜெயபாலை நீ அந்த நிலத்தில் விவசாயம் செய்யக்கூடாது எனவும் அந்த நிலத்திற்கு செல்லும் பொதுப் பாதையை அடைத்து அடிக்கடி தகராறு செய்து ஜெயபாலை தாக்கியுள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் நடந்த முதல்நாள் ஜெயபால் நடத்திவரும் பெட்டிகடை இரவு 10.30 மணிக்கு மேல் பூட்டப்பட்ட பிறகு அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த பிரவீன்குமார் என்பவர் கதவை தட்டி ஏன் அதற்குள் கடையை அடைத்தாய் தனக்கு பீடி வேண்டும் என்று கூறி ஆபாசமாக திட்டி தகராறு செய்ததோடு இல்லாமல் ஜெயபாலின் மூத்த மகனை தாக்கியுள்ளார். அதில் அவரின் காதில் ரத்தம் வந்துள்ளது. உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றவர்கள் காலையில் வீடு திரும்பிவிட்டு மீண்டும் பிரவீன்குமார் மீது காவல் நிலையத்தில் புகார் செய்வதற்காக தந்தையும், மகனும் சென்றுவிட்டனர். தாய் மற்றும் தங்கை இருவரும் நிலத்திற்கு சென்றுவிட்ட நிலையில் வீட்டில் தனியாக இருந்த ஜெயஸ்ரீயை தீ வைத்து எரித்துள்ளனர். அதன் பிறகு கொலைகாரர்களின் குடும்பத்தின் மீது ஊர் மக்களுக்கு உள்ள அச்சம் காரணமாக அந்த சிறுமியின் குடும்பத்தை பாதுகாக்க நினைத்த பகுதி இளைஞர்கள் 10 ஆம் தேதி இரவு பொது இடத்தில் கூடி கூட்டம் நடத்தியுள்ளனர்.

ஜெயபாலின் தம்பி.

அப்போது காவல்நிலையத்தில் இருந்து விடுவிக்கப்பட்டு அங்கு வந்த கலியபெருமாளின் மகன் வீரன் என்ன தைரியம் இருந்தால் எங்களுக்கு எதிராக கூட்டம் நடத்துவீர்கள். ஒருத்தரும் உயிரோடு இருக்க மாட்டீர்கள் குடும்பத்தோடு கொளுத்திவிடுவேன், என்னோட அப்பாவை கைது செய்துட்டாங்கன்னு நினைக்குறீங்களா? நாளைக்கே வெளியில் கொண்டுவரேன் பாக்குறீங்களா? என்று சினிமாபட பாணியில் ‘வீர வசனம்’ பேசியுள்ளான். பின்பு வீரனோடு அவர்கள் குடும்பத்திற்கு பாதுகாப்பிற்கு வந்த போலீசார் இரண்டு அடி கொடுத்து உன்னிடம் காவல்நிலையத்தில் என்ன சொல்லி அனுப்பினார்கள் நீ என்ன செய்யுற என்று கூறி அழைத்து சென்றுவிட்டனர். என்று இளைஞர்கள் கூறுகின்றனர். சிறுமி இறந்த பின்பும் கொலை செய்தவர்களின் குடும்பத்தை ஊரைவிட்டே துரத்தவேண்டும் அப்போதுதான் நங்கள் நிம்மதியாக வாழ முடியும் அதுவரை பிணத்தை எடுக்க விடமாட்டோம் என்று கூறி அப்பகுதி இளைஞர்கள் 50 கும் மேற் பட்டோர் தர்ணாவிலும் ஈடுபட்டனர்.

கொலையாளிகளை வளர்த்தெடுத்த அதிகார வர்க்கம் :

கொலையாளிகளான யாசகம் (எ) கலியபெருமாள் மற்றும் முருகையன் ஆகியோர் அதிமுகவில் முக்கிய பொறுப்பு வகித்து வருகின்றனர். இதனை பயன்படுத்தி அப்பகுதியில் பல்வேறு அராஜக செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். மேலும் ஊருக்கு சொந்தமான பொது இடங்களை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டி இருப்பதாகவும் கூறப்படுகின்றது. இவர்களை எதிர்த்து கேட்பவர்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு ஆளும் கட்சியின் ஆதரவோடும், காவல்துறையின் துணையோடும் எவ்வித வழக்குமின்றி தாதாக்களை போன்று செயல்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் இவர்களை கண்டு தற்போது வரை அச்சத்தில் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 2013 –ல் சிறுமி ஜெயஸ்ரீயின் சித்தப்பாவை இவர்களின் ஒட்டுமொத்த உறவினர்களும் சேர்ந்து ஊரே பார்க்க கம்பத்தில் கட்டிபோட்டு அடித்து உதைத்து அவரது கையை வெட்டியுள்ளனர். இந்த வழக்கு தற்போதுவரை கிடப்பில் போடப்பட்டு இருந்த நிலையில் சிறுமியின் மரணத்திற்கு பிறகு அந்த பிரச்சனை வெளியில் வரவே அது சம்பந்தமான ஆவணங்களை தேடும்போது காவல்துறையிடம் இருந்த வழக்கு குறித்த ஆவணங்கள், நீதிமன்றத்தில் இருந்த வழக்கு சார்ந்த கோப்புகள் அனைத்தும் காணமல்போனது தெரியவந்துள்ளது.

அந்த ஆவணங்கள் இவர்களின் அதிகார பலத்தை பயன்படுத்தி காவலர்களின் உதவியோடு திருடப்பட்டு இருக்கலாம் என காவல்துறை வட்டாரத்திலேயே பேசப்படுகின்றது. இப்படி காவல்துறையினரே குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட காரணத்தால் தான் இன்று அவர்கள் கொலையே செய்தாலும் நாம் காவல்துறை மற்றும் கட்சியின் ஆதரவோடு எளிமையாக தப்பித்துவிடலாம் என கருதி இந்த கொலையை செய்துள்ளனர். இந்த செய்தி சமூக வலைதளங்களில் தீயாய் பரவிய பின்பே வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்தனர்.

ஒரு சாதாரண கீழ்மட்ட பதவியில் இருப்பவர்களுக்கே காவல்துறை இவ்வளவு ஆதரவாக செயல்படுகின்றது என்றால், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இவர்கள் எப்படி செயல்பட்டு இருப்பார்கள். 5 பேர் கொண்ட கும்பல் 200 க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கி அதை செல்போனில் பதிவு செய்து அவர்களை தொடர்ச்சியாக மிரட்டி பணம் பறித்துள்ளனர். இது அனைத்தும் வீடியோ ஆதாரத்தோடு செய்திகள் வெளிவந்தும், இதில் பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் ஈடுபட்டு இருப்பதாலும், மற்றவர்களும் அதிமுக வட்டாரத்தை சேர்ந்தவர்கள் என்பதாலும், குற்றவாளிகளை பாதுகாக்கவே துடித்தது காவல்துறை. இவர்களே பல வீடியோ ஆதாரங்களை அழித்துவிட்டதாக ஊடகங்களில் செய்திகள் வந்தன. இந்த பிரச்சனைக்கு எதிராக அன்று மாணவர்கள் கொதித்தெழுந்து போராட்டம் நடத்தியதால் தான் குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இன்று பிணையில் விடுதலையாகி சுகந்திரமாக உலாவருகின்றனர்.

படிக்க:
♦ விழுப்புரம் சிறுமி எரித்துக் கொலை ! காவல் துறையின் தோல்வியே காரணம் !
♦ சிறுமி ஜெயஸ்ரீ வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய மக்கள் அதிகாரம் தோழர்கள் மீது வழக்கு !

“ஆனால் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடி வந்த மாற்று திறனாளியாக சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி உள்ள பேராசிரியர் சாய்பாபா உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் பலர் பல ஆண்டுகளாக பிணை மறுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.” ஆனால் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துவரும் சூழலிலும் பொள்ளாச்சி  குற்றவாளிகளை போலவே நமக்கும் எளிமையாக பிணை கிடைத்துவிடும் என்ற தைரியத்தின்  விளைவாகவே இன்று நாகர்கோயில் காசியும் உருவாகி உள்ளார். இவர் நூற்றுக்கணக்கான விஐபி வீட்டு பெண்களிடம் நெருங்கி பழகி அதனை செல்போனில் வீடியோ எடுத்து பாதிக்கப்பட்ட பெண்களின் அம்மாவிடம் காண்பித்து அவர்களையும் மிரட்டி பாலியல் வன்முறை செய்துள்ளார்.

இவனுக்கு காவல்துறையில் பலர் நெருக்கமானவர்கள் என்பதால் இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் பேச மறுப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் இவனை கைது செய்த பின்பு காவல்நிலையத்தில் காவலர்களின் முன்னிலையில் மேசையில் அமர்ந்தவரே பத்திரிக்கையாளர்களுக்கு தனது கையால் ஆர்ட்டின் சிம்பில் காண்பிக்கும் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் அவன் காவல் துறையினரை எதற்கு சமமாக நினைக்கின்றான் என்பதை சொல்லித்தான் புரிய வைக்கவேண்டும் என்ற அவசியமில்லை. இந்த வழக்கு விசாரணை எப்படி இருக்கும் என்பதும் பெரும் கேள்விக்குறியே?

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடுவதைவிட, பாலியல் சித்தரவதைகளும், படுகொலைகளும் ஒரு பெரிய குற்றமில்லை என்று ஆட்சியாளர்களும், நீதிபதிகளும் கருதுகிறார்கள். இதற்குக் காரணம்  பார்ப்பனியப் பண்பாடும், அது நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக ஊட்டி வளர்த்த  ஆணாதிக்கமும் தான். பெண்களை அனுபவிக்க கூடிய ஒரு போகப் பொருளாக மட்டும் பார்க்கும் மனநிலையை ஒரு மனிதனுக்கு ஏற்படுத்தியுள்ளது. அது இன்று மறுகாலனியாக்க கொள்கைகளின் கீழ் அதிரடியாகத் திணிக்கப்படும் நுகர்வுவெறியும், இணையதள ஆபாச வீடியோக்களும், அரசே முன்னின்று நடத்தும் டாஸ்மாக் உள்ளிட்ட போதை பொருட்களாலும் கடந்த 15 ஆண்டுகளில் தான் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் பெண்கள் மீதான வன்முறை தற்போது அதிகரித்து வருகின்றது.

இவை அனைத்தும் நமது சாதி, மதம் சார்ந்த நம்பிக்கைகள், கலாச்சாரம், வாழ்க்கை நடைமுறைகள், கட்டமைப்புகள் அனைத்திலும் பெண்ணடிமைதனமும், ஆணாதிக்கமும் செல்வாக்குச் செலுத்தி இவ்வன்முறைகளை நிலைத்திருக்க செய்கின்றன. இந்த அனைத்து சமூக விழுமியங்களையும் பாதுகாப்பதே பார்ப்பனியமும், ஆளும் அதிகாரவர்க்கமும், அரசு கட்டமைப்புகளும் தான் இவற்றை தகர்த்து எறியாமல் பெண் விடுதலை சாத்தியமில்லை. இனி இதை உணர்ந்த சமூக முற்போக்காளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மக்கள் மத்தியில் இதற்கான பிரச்சாரங்களை கொண்டு செல்வதன் மூலம்தான் நாம் நமது பிரச்சனையை தீர்க்க முடியும்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
விழுப்புரம்.

புதிய ஜனநாயகம் மே 2020 மின்னிதழ் டவுண்லோட் !

புதிய ஜனநாயகம் மே 2020 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

புதிய ஜனநாயகம் முகவர்கள், சந்தா தாரர்கள் மற்றும் வாசகர்களுக்கு, செவ்வணக்கம்!

நிர்வாகச் சிக்கல்களின் காரணமாக எம்மால் மார்ச் 2020 மாத இதழை வெளியிட முடியவில்லை. ஏப்ரல் 2020 இதழைக் கொண்டுவர எமது தரப்பில் எடுக்கப்பட்ட முயற்சிகள், மார்ச் இறுதியில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவையடுத்து முடங்கிப் போயின. – மே 17 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதாலும், சென்னை நகரில் நோய்ப் பரவல் தீவிரமாக இருப்பதன் காரணமாகவும் மற்றும் இதழின் அச்சாக்கம், அச்சிட்ட பிரதிகளை முகவர்களுக்கு அனுப்பி வைப்பது மற்றும் அச்சில் வந்த இதழை முகவர்கள், வாசகர்களுக்கு விநியோகிப்பதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டும் மார்ச், ஏப்ரல், மே இதழ்களை ஒன்றாக இணைத்து மின்னிதழாக வெளியிடுகிறோம்.

இவ்விதழை வாசகர்கள் எவரும் கட்டணம் எதுவுமின்றி இலவசமாக வாசிக்கத் தருகிறோம். கரோனா தொற்று தொடர்பான கட்டுரைகளைத் தாங்கி வெளிவந்திருக்கும் இம்மின்னிதழை முகநூல், மற்ற பிற சமூக வலைத்தளங்கள் வாயிலாக விரிவான அளவில் கொண்டு செல்லுமாறு முகவர்களையும், வாசகர்களையும் கேட்டுக் கொள்கிறோம்.

அச்சுப் பிரதிக்கான சந்தா தொகை செலுத்தியுள்ள வாசகர்களுக்கு விடுபட்டுள்ள இதழ்கள் அவர்கள் கணக்கில் நேர்செய்யப்பட்டு, அவர்களின் சந்தா காலம் அதற்கேற்ப நீட்டிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். முகவர்கள், சந்தாதாரர்கள், வாசக நண்பர்கள் அனைவருக்கும் 135-ஆவது மே தினப் புரட்சிகர வாழ்த்துக் களையும்; பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் லெனினின் 151-ஆவது பிறந்தநாள் வாழ்த்துக்களையும்; இ.பொ.க. (மா-லெ)வின் 52-ஆவது நிறுவன நாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

– ஆசிரியர் குழு

***

இந்த இதழில் வெளியான கட்டுரைகள்

  1.  தலையங்கம் – தீவிரமடையும் பாசிசத் தாக்குதல்கள்
  2. கரோனாவும் ஊரடங்கும்: இடிதாங்கிகளா ஏழைகள்?
  3. ஊரடங்கின் கீழ் இருவேறு இந்தியாக்கள்
  4. மோடி – எடப்பாடி: ஜாடிக்கேத்த மூடி!
  5. கரோனாவை விட அபாயகரமானது பார்ப்பனியம்!
  6. உழைப்பின் மீதான மூலதனத்தின் சர்வாதிகாரம்!
  7. புதிய தாராளவாத வைரஸின் சகாப்தம்!
  8. அமெரிக்க மக்களைக் காவு வாங்குவது தனியார்மயமே!
  9. ஒரு வைரஸும் சில உண்மைகளும்
  10. பேரழிவு முதலாளித்துவம்
  11. மருத்துவர்களே நீங்கள் எந்தப் பக்கம்?
  12. உத்திரப் பிரதேசம்: இந்து ராஷ்டிரத்தின் புதிய சோதனைச்சாலை!
  13. இந்திய இறையாண்மை: தேசபக்தாளின் மற்றொரு பூச்சாண்டி!
  14. பெண்கள் மீதான வன்முறைகள்: தோற்றுப்போன சட்டங்கள்!

புதிய ஜனநாயகம் மே 2020 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 4 MB இருப்பதால் தரவிறக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும்.

புதிய ஜனநாயகம் மாத இதழின் ஆண்டுச் சந்தா : உள்நாடு ரூ.180

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.ஃகே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

சிறுமி ஜெயஸ்ரீ வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய மக்கள் அதிகாரம் தோழர்கள் மீது வழக்கு !

PP Letter headபத்திரிக்கை செய்தி

நாள் : 15.05.2020

துக்கம் விசாரித்தால் வழக்கா? பொய் வழக்கு போட்ட போலீசு மீது நடவடிக்கை எடு !

திமுகவைச் சேர்ந்தவர்களால் எரித்துக்கொல்லப்பட்ட விழுப்புரம் சிறுமி ஜெயஸ்ரீ வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறியதற்காக விழுப்புரம் மாவட்ட மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் தோழர் மோகன் மற்றும் எட்டு மக்கள் அதிகாரம் தோழர்கள் மீதும் விடுதலை சிறுத்தைகள்கட்சி, தேமுதிக,பாஜக, முஸ்லீம் லீக் கட்சி, மனித நேய மக்கள் கட்சி நிர்வாகிகள் மீதும் விழுப்புரம் திருவெண்ணை நல்லூர் போலீசால் 143,188,269, 3 of Epidemic disease act, 51 of Disaster management act ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த பல ஆண்டுகளாக கலியபெருமாள் மற்றும் முருகனுக்கு ஆதரவாக இருந்து அவர்களின் அனைத்து குற்றங்களுக்கும் துணை போன விழுப்புரம் மாவட்ட போலீசு துக்கம் விசாரிக்கச் சென்றவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்திருப்பதென்பது கண்டிக்கத்தக்கது.

படிக்க:
♦ விழுப்புரம் சிறுமி எரித்துக் கொலை ! காவல் துறையின் தோல்வியே காரணம் !
♦ மருத்துகளுக்கு காப்புரிமை இல்லாத ஒரு உலகம் சாத்தியமா ?

குற்றத்தை தடுப்பதில் தோல்வியடைந்த போலீசு மக்களுக்காகப் போராடுவோர் மீது பொய்வழக்கு புனைகிறது. துக்கம் விசாரிக்க சென்றவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகள் திரும்பப்பெற வேண்டும்.

பொய்யான புகார் அளித்த விஏஓ சஸ்பெண்ட் செய்யப்படவேண்டும். மேலும் பொய்வழக்கு போட்ட போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

தங்கள்
மருது
செய்தித்தொடர்பாளர்
மக்கள் அதிகாரம்

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு.

மருத்துகளுக்கு காப்புரிமை இல்லாத ஒரு உலகம் சாத்தியமா ?

தொற்றுநோய் தடுப்பும் அதற்கெதிராக காப்புரிமையும் ஜோசப் ஸ்டிக்லிட்ஸ், அர்ஜுன் ஜெயதேவ், அச்சால் பிரபாலா

(ஏப்ரல் 27, 2020, பிசினஸ் ஸ்டாண்டர்டு நாளேட்டில் வெளியான கட்டுரையின் தமிழாக்கத்துடன் கூடுதலாக சில விவரங்கள்)

***

ஒரு புதிய உலகத்தைக் கற்பனை செய்து பாருங்கள் !

ந்த உலகத்தில் அனைத்து நாடுகளையும் இணைக்கும் வலைப்பின்னலைக் கொண்ட மருத்துவத்துறை வல்லுனர்கள், உருவாகிவரும் தொற்றுநோய்க் கிருமிகளின் பாணிகளைக் கண்காணிக்கிறார்கள்; அவற்றை காலமுறைப்படி அவ்வப்போது புதிய தரவுகளுடன் செழுமைப்படுத்தி, ஒரு புதிய சூத்திரத்தை – விதிமுறையை நிறுவுகிறார்கள். அக்கிருமிக்கு எதிராக நோய்த்தடைக் காப்பு மருந்தை செலுத்தி அதை அழித்து, அதன் பின்னர் இந்தத் தகவல்களை உலகெங்குமுள்ள நிறுவனங்களுக்கும் நாடுகளுக்கும் கொடுக்கிறார்கள் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள்!

மேலும், இந்தப் பணியானது அறிவுசார் சொத்துரிமை (intellectual-property – IP) ஏதுமின்றி, மக்களை நிர்கதியான நிலைக்குத் தள்ளி உச்சகட்ட லாபத்தைக் கொள்ளையிடும் ஏகபோக மருந்து நிறுவனங்களின் சுரண்டல் ஏதுமின்றி நடந்தால் எப்படியிருக்கும் என்று எண்ணிப் பாருங்கள்!

இதுவொரு கற்பனாவாத மாயக்கதையாகத் தோன்றலாம். ஆனால், கடந்த 50 ஆண்டுகளில் ஃபுளூ காய்ச்சலுக்கான தடுப்பு மருந்து எவ்வாறு தயாரிக்கப்பட்டது என்பதற்கான உண்மையான விளக்கம்தான் இது.

உலக சுகாதார அமைப்பின் (WHO) கீழ், உலகளாவிய குளிர்க் காய்ச்சல் கண்காணிப்பு மற்றும் மறுமொழி அமைப்பின் (Global Influenza Surveillance and Response System – GISRS)  நிபுணர்கள் ஆண்டுக்கு இருமுறை கூடி, உருவெடுக்கும் ஃபுளூ கிருமிகளின் புதிய பாணிகளைப் பற்றிய தரவுகளைக் கொண்டு விவாதித்து, அவற்றைப் பகுத்தாய்கிறார்கள். இவற்றின் மூலம் ஒவ்வொரு ஆண்டிலும் போடப்படும் புதிய நோய்த்தடைக் காப்பு மருந்துகளில் எத்தகைய பாணிகளைச் சேர்க்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கிறார்கள். ஏறத்தாழ 110 நாடுகளில் விரிவடைந்துள்ள இத்தகைய வலைப்பின்னலுக்கு பெரும்பாலும் இந்நாடுகளின் அரசாங்கங்களே (பகுதியளவுக்கு சில அறக்கட்டளைகளும் உள்ளிட்டு) நிதியுதவியைச் செய்கின்றன. யேல் பல்கலைக்கழக சட்டத்துறைக் கல்விக் கழகத்தின் பேராசிரியரான எமி காப்சைன்ஸ்கி (Amy Kapczynski) கூறுவது போல இது “திறந்தவெளி அறிவியல்” ஆகும்.

ஏனென்றால், உலகளாவிய குளிர்க் காய்ச்சல் கண்காணிப்பு மற்றும் மறுமொழி அமைப்பானது (GISRS), லாபத்தைக் குவிப்பதைவிட மனித உயிர்களைப் பாதுகாப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. இது, நோய்த்தடை காப்பு மருந்துகளை வளர்த்தெடுப்பதற்கான செயற்பாட்டு அறிவாற்றலுடன் அதனை விநியோகிப்பதிலும், சேகரிப்பதிலும், விளக்குவதிலும் ஆற்றலைக் கொண்ட தனித்துவமான அமைப்பாகும். கடந்த காலத்தில் இந்த அமைப்பின் அணுகுமுறையானது, ஆராய்வதற்கு முன்னரே உண்மையென ஏற்றுக்கொள்ளப்பட்ட போதிலும், அதன் சாதகங்கள் வெகுவிரைவிலேயே தெளிவாகத் தெரிகின்றன.

படிக்க:
♦ கொரோனா எதிர்ப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் மக்களுக்கு கிடைக்குமா ?
♦ காவிரி – மின்சாரம் – தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்தப் பார்க்கும் மோடி அரசு !

தொற்று நோயைப் பொறுத்தவரையில், மிக முக்கியமான சிகிச்சைக்கான அறிவைப் பகிர்ந்து கொள்வதில் உலகளாவிய அறிவியல் சமூகமானது குறிப்பிட்டத்தக்க விருப்பத்தைக் காட்டுகிறது. மருத்துவ பரிசோதனைகளை ஒருங்கிணைத்தல், புதிய மாதிரிகளை உருவாக்குவதில் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றைக் கொண்டிருப்பதோடு, தங்கள் கண்டுபிடிப்புகளை உடனடியாக வெளியிடவும் அவை விருப்பத்தைக் காட்டுகின்றன.

இத்தகைய புதிய ஒத்துழைப்பான சூழலில், வர்த்தக ரீதியான மருந்து நிறுவனங்கள் பல தலைமுறைகளாக இத்தகைய அனைவருக்குமான அறிவுவளத்தை தனியார்மயமாக்கி, பூட்டி வைத்துக் கொண்டு, உயிர் காக்கும் மருந்துகள் மீது எவ்விதத் தடையுமின்றி ஆதிக்கத்தையும் நீட்டித்துக் கொண்டுள்ளன. தேவையற்ற, அற்பமான அல்லது இரண்டாம்தர காப்புரிமைகளைக் கொண்டு, பொதுப்படையான மருந்துகளின் (generics) உற்பத்திக்கும் ஒப்புதலுக்கும் எதிராக அணிசேர முயற்சிக்கின்றன. இவற்றை நாம் எளிதாக மறந்துவிடுகிறோம்.

கோவிட் -19 இன் வருகையினூடாக, நோய்த்தடுப்பு மருந்துகளில் இத்தகைய ஏகபோகமானது, இப்போது மனித உயிர்களின் இழப்பில் வந்து கொண்டிருக்கிறது என்பது மிகவும் வேதனையானது. கிருமியைப் பரிசோதிக்கும் தொழில்நுட்பத்தில் ஏகபோகக் கட்டுப்பாடானது தடைக்கல்லாக உள்ளது.

உதாரணமாக, 3M (த்ரீ எம்) என்ற அமெரிக்க ஏகபோக நிறுவனம், கொரோனா நோய்த்தொற்றுத் தடுப்பு முகக் கவசங்களை “சுவாசக் கருவி” அல்லது “N95” என்று குறிப்பிடுகிறது. இது, 441 காப்புரிமைகளைக் கொண்டுள்ளது. இதனால், புதிய தயாரிப்பாளர்கள் மருத்துவத் தரத்திலான இத்தகைய முகக் கவசங்களை உற்பத்தி செய்வது மிகவும் கடினமாகிவிடுகிறது. (குறிப்பாக, சுகாதார தொழிலாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், போலீசார் ஆகியோருக்கு கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள N95 முகக் கவசங்கள் மிக அவசியமானவை. இந்நிலையில் காப்புரிமை என்ற பெயரில் இந்நிறுவனம் N95 முகக் கவசங்கள் தயாரிப்பதை ஏகபோகமாக்கிக் கொண்டுள்ளது. இம்முகக்கவசங்கள் தயாரிக்கும் முதல் 10 சர்வதேச நிறுவனங்களில் எட்டு நிறுவனங்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவை. இந்தியாவில் கூட ரூ.150-க்கு விற்கப்பட்ட N95 முகக் கவசங்கள் தற்பொழுது ரூ.500 வரை விற்கப்படுவதாக எக்கானாமிக் டைம்ஸ் நாளேடு தெரிவிக்கிறது.)

இதைவிடக் கொடுமை என்னவென்றால், கொரோனாவுக்கு மிகவும் உறுதியான சிகிச்சைக்காகப் பரிந்துரைக்கப்படும் ரெம்டெசிவிர் (remdesivir), ஃபெவிபிராவிர் (favipiravir), லோபினாவிர் அல்லது ரிடோனா விர்  (lopinavir/ritonavir) எனப்படும் மருந்துகள் உலகின் பெரும்பகுதிகளில் பல்வேறு வகையான காப்புரிமைகளுடன் தீவிரமான செயல்பாட்டில் உள்ளன. ஏற்கெனவே இத்தகைய காப்புரிமைகள், போட்டியைத் தடுக்கின்றன; புதிய மருந்துகளின் விநியோகத்தையும் மலிவு விலையில் அவை கிடைப்பதையும் தடுத்து அச்சுறுத்துகின்றன.

(கொரோனா தொற்றுக்கான பரிசோதனை தடுப்பு மருந்துகள் மற்றும் நோயாளிக்கான தற்காலிக மருந்துகள் என மேற்கூறியவற்றை உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. ஹைட்ராக்ஸி க்ளோரோ க்வைன் (HCQ) என்பது மலேரியாவுக்கான மருந்தாகும். தற்போது கொரோனா தொற்றுநோய்த் தடுப்புக்கும் பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மிரட்டலுக்கு அடிபணிந்து ஹைட்ராக்ஸி க்ளோரோ க்வைன் (HCQ) மருந்தை மோடி அரசு அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்தது. ரெம்டெசிவிர் எனும் மருந்து எபோலா நோயைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்டது. ஆனால், அது சரியாகச் செயல்படவில்லை என்ற போதிலும் தற்போது கொரானாவிற்கு எதிராக நல்ல திறனுடன் செயல்படுவதாக கருதப்படுகிறது. இதனால், ரெம்டெசிவிர் மருந்தினை தயாரிக்கும் ஜிலீட் (Gilead) நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு அதிகரிக்க தொடங்கி விட்டது.)

இப்போது இரண்டு எதிர்காலங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றை நாம் தெரிவு செய்ய வேண்டியுள்ளது.

முதலாவதாக, நாம் வழக்கம் போலத் தொடர்ந்து பெரிய மருந்து நிறுவனங்களைச் சார்ந்திருப்போம்; மருத்துவ பரிசோதனைகள் மூலமாக கொரோனாவுக்கான சில ஆற்றல் மிக்க சிகிச்சைகள் கிடைக்கும் என்று நம்பியிருப்போம்; மேலும், இதர தொழில்நுட்பங்கள் மூலம் நோயைக் கண்டறிதல், சோதித்தறிதல், நோயாளியைக் காப்பாற்றுதல் முதலானவை உருவாகும் என்று நம்பிக்கை வைப்போம்.

எதிர்காலப் போக்கில், இத்தகைய கண்டுபிடிப்புகளுக்கு ஏகபோக மருந்து விநியோக நிறுவனங்கள் கட்டுப்பாட்டைச் செலுத்துவதற்கு காப்புரிமையானது அனுமதிக்கும். இந்த ஏகபோக நிறுவனங்கள்  மருந்துகளை மிக அதிக விலைக்கு விற்பார்கள்; அதன் மூலம் நோயாளிகளைக் காப்பாற்றும் கடமையைக் கைவிடுமாறு நிர்பந்திப்பார்கள். இவற்றில் பொதுமக்களின் தலையீடு வலுவாக இல்லாத நிலையில், மனித உயிர்கள் பறிக்கப்படும் கொடுமை தொடரும். குறிப்பாக வளரும் நாடுகளில் இது தீவிரமாக இருக்கும்.

எந்தவொரு கோவிட் -19 தடுப்பு மருந்துக்கும் இதே பிரச்சினை பொருந்தும். அமெரிக்க மருத்துவரும் கிருமியியல் துறையின் முக்கிய ஆய்வாளருமான ஜோனாஸ் சால்க்-இன் (Jonas Edward Salk) போலியோ தடுப்பூசியானது உடனடியாகவே இலவசமாகக் கிடைத்தது. அவ்வாறின்றி, இன்று சந்தைக்கு வரும் பெரும்பாலான தடுப்பூசிகள் காப்புரிமை பெற்றவையாக உள்ளன. எடுத்துக்காட்டாக, Pneumococcal conjugate vaccine (PCV13) எனப்படும் பன்முகப் பாணிகளைக் கொண்ட தற்போதைய நிமோனியா தடுப்பூசியானது குழந்தைகளுக்கு போடப்படுகிறது. இது பல நூறு டாலர்கள் விலையைக் கொண்டது. ஏனெனில், இது ஃபைசர் (Pfizer) என்ற மருந்து நிறுவனத்தின் ஏகபோகச் சொத்தாக உள்ளது. கவி (Gavi) எனப்படும் தடுப்பூசி மருந்து நிறுவனங்களின் கூட்டணியானது, வளரும் நாடுகளில் தடுப்பூசியின் சில செலவுகளை மானியமாக வழங்குகிறது என்றாலும், ஏராளமான மக்களால் அதைக்கூட விலை கொடுத்து வாங்க முடியாத நிலைமையே நீடிக்கிறது.

இந்தியாவில், ஆண்டுதோறும் நிமோனியா காய்ச்சலால் 1,00,000-க்கும் அதிகமான குழந்தைகள் மரணமடைகின்றன. மருந்துகள் இலவசமாகவோ, அல்லது மலிவாகவோ கிடைத்தால் இந்த அவலத்தைத் தடுக்க முடியும். ஆனால், இந்தத் தடுப்பூசி மருந்தானது ஃபைசர் (Pfizer) நிறுவனத்துக்கு 500 கோடி டாலர் வருவாயைத் தந்து கொண்டிருக்கும்போது, அதை அப்பன்னாட்டு ஏகபோக நிறுவனம் இழக்க முன்வருமா?

இரண்டாவதாக, மருந்துகள் இலவசமாகவோ, மலிவாகவோ கிடைக்கும் நோக்கத்திற்கு நடப்பிலுள்ள கட்டமைப்பானது பொருந்தாது என்பதை நாம் ஏற்றுக்கொண்டாக வேண்டும். இக்கட்டமைப்பில், தனியார் ஏகபோகங்கள் அறிவுத் திறனிலிருந்து லாபம் பெறுகின்றன. இந்த அறிவுத் திறனானது பெரும்பாலும் பொதுத்துறை நிறுவனங்களால் உருவாக்கப்படுகிறது. உயிர் காக்கும் மருந்துகளைப் பெறுவதற்கான வாய்ப்பை மக்களுக்கு மறுப்பதன் மூலம், ஏகபோகங்கள் மக்களைக் கொலை செய்கின்றன என்று பொதுச் சுகாதார வழக்குரைஞர்களும் பிற அறிஞர்களும் நீண்டகாலமாகவே வாதிட்டு வந்துள்ளனர்.

இதற்கு மாறாக, ஒரு மாற்று கட்டமைப்பு உருவாகும் போதுதான் உயிர் காக்கும் மருந்துகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் மக்களுக்குக் கிடைக்கும். ஃபுளூ காய்ச்சலுக்கான மருந்தின் வருடாந்திர உற்பத்திக்கு உதவும் கட்டமைப்பு போன்றதுதான் அந்த மாற்றுகட்டமைப்பு அமையும்!

இத்தகைய மாற்று அணுகுமுறைகளுக்கு ஆதரவாக ஏற்கனவே சில இயக்கங்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக, கோஸ்டாரிகாவின் அரசாங்கம் அண்மையில் உலக சுகாதார அமைப்பை (WHO) அழைத்து, கோவிட் -19 சிகிச்சைகளுக்கான அறிவுசார் சொத்துரிமைகளைப் பொதுவாக்கிக் கொள்ளும் தன்னார்வ மையத்தை நிறுவுமாறு கோரியது; இது பல உற்பத்தியாளர்கள் புதிய மருந்துகளை விநியோகிக்க அனுமதியளிப்பதாகவும், நோயைக் கண்டறிவதை மலிவான விலையில் செய்வதாகவும் அமையும் என்று எடுத்துக் கூறியது.

காப்புரிமைகளைப் பொதுவாக்கிக் கொள்ளுதல் என்பது, புதிய யோசனை அல்ல. மருந்துகள் காப்புரிமை மையத்தின் மூலம், ஐக்கிய நாடுகள் சபையும் உலக சுகாதார அமைப்பும் பல ஆண்டுகளாக எச்.ஐ.வி / எய்ட்ஸ், ஹெபடைடிஸ்-சி (மஞ்சள் காமாலை) மற்றும் காசநோய்க்கான சிகிச்சைகளுக்கான வாய்ப்பை அதிகரிக்க முயன்று வருகின்றன. மேலும், கோவிட் -19 ஐ உள்ளடக்கும் வகையில் இப்போது இத்திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளன.

தற்போது உயிர்காக்கும் மருந்துகள் எவ்வாறு உருவாக்கப்பட்டு மக்களுக்குக் கிடைக்குமாறு செய்யப்படுகிறதோ, அந்த முறையை மாற்றியமைக்கும் திட்டமாகும். பரஸ்பர ஒத்துழைப்பையும் பகிர்ந்கொள்ளப்பட்ட அறிவையும் அடிப்படையாகக் கொண்டு, ஏகபோகத்தால் இயக்கப்படும் இக்கட்டமைப்பை மாற்றுவதே இதன் குறிக்கோளாகும்.

சிலர் கோவிட் -19 நெருக்கடியைத் தனித்தன்மை வாய்ந்தது என்று நிச்சயமாக வாதிடுவார்கள்; அல்லது கட்டாய உரிமங்கள் பெறவேண்டிய அச்சுறுத்தல் காரணமாக, மருந்து நிறுவனங்கள் சிறப்பாக நடந்து கொள்ளுமாறு நிர்பந்தத்தை ஏற்படுத்தக் கூடிய வழிமுறையை இது உருவாக்குகிறது என்று வாதிடுவார்கள்.

ஆனால், உடனடியாக இலாபம் பார்க்க வேண்டும் என்று கருதாத முன்னணி ஆராய்ச்சியாளர்களைத் தவிர, பெரிய மருந்து நிறுவனங்கள் மட்டும் அவற்றின் பொறுப்புணர்வைப் புரிந்து கொள்ளவில்லை.

எல்லாவற்றிற்கும் மேலாக, ரெம்டெசிவிர் (remdesivir) மருந்தைத் தயாரிக்கும் நிறுவனமான ஜிலீட் (Gilead), “அனாதை மருந்து” என்று கைவிடப்பட்ட மருந்தின் நிலைக்கு விண்ணப்பித்ததன் மூலம் தற்போதைய கொரோனா நெருக்கடிக்குத் தீர்வு காண முயன்றது. இந்த விண்ணப்பத்தை ஏற்று அனுமதியளித்திருந்தால், இது அந்நிறுவனத்திற்கு ஒரு வலுவான ஏகபோக நிலையை உருவாக்கியிருக்கும். மேலும், பல லட்சம் டாலர் அளவுக்கு வரி விலக்கும் கிடைத்திருக்கும். (பொதுமக்களின் கடும் கண்டனத்தைத் தொடர்ந்து, பின்னர் அந்நிறுவனம் தனது விண்ணப்பத்தைத் திரும்பப் பெற்றுள்ளது.)

மிக நீண்ட காலமாக, இன்றைய அறிவுசார் சொத்துரிமையின் ஆட்சி மிக அவசியமானது என்ற கட்டுக்கதையை நாம் பெற்றுள்ளோம். உலகளாவிய குளிர்க் காய்ச்சல் கண்காணிப்பு மற்றும் மறுமொழி அமைப்பினுடைய (GISRS) பயன்பாடுகளின் நிரூபிக்கப்பட்ட வெற்றியும் மற்றும் பிற “திறந்த அறிவியல்” செயல்பாடுகளும் அது உண்மையல்ல என்பதைக் காட்டுகிறது. கோவிட் -19 இறப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ள நிலையில், ஒவ்வொரு ஆண்டும் பல லட்சக்கணக்கான மனிதர்களை துன்பத்திற்கும் மரணத்திற்கும் சந்தடியில்லாமல் தள்ளுகின்ற ஒரு அமைப்பின் அறிவுத் திறனுக்கும் அறநெறிக்கும் எதிராக நாம் கேள்வி எழுப்ப வேண்டும்.

புதிய அணுகுமுறைக்கான நேரம் இது. ஏற்கெனவே பல கல்வியாளர்களும் கொள்கை வகுப்பாளர்களும் இதற்காக முன்வந்துள்ளனர். அவர்கள் வெறுமனே லாபத்திற்கானதாக அல்லாமல், சமூகத்துக்குப் பயனுள்ள மருந்துகளைக் கண்டுபிடிப்பதற்கான, நம்பிக்கைக்குரிய பல்வேறு ஆலோசனைகளுடன் முன்வந்துள்ளனர். இதனைத் தொடங்குவதற்கான ஒரு சிறந்த நேரம் வேறெப்போதும் இருந்ததில்லை

– புதியவன்

***

கட்டுரையாளர்கள் பற்றிய சிறு குறிப்பு : 

ஜோசப் இ ஸ்டிக்லிட்ஸ், அர்ஜுன் ஜெயதேவ், அச்சால் பிரபாலா
  • ஜோசப் இ ஸ்டிக்லிட்ஸ், பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்றவர்; கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்.
  • அர்ஜுன் ஜெயதேவ், அஸிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியர்; புதிய பொருளாதார சிந்தனைக்கான நிறுவனத்தின் மூத்த பொருளாதார நிபுணர்.
  • அச்சல் பிரபாலா, ஷட்டில்வொர்த் அறக்கட்டளையின் ஆய்வு மாணவர்.
  • எமி காப்சைன்ஸ்கி, அமெரிக்காவைச் சேர்ந்த பெண் பேராசிரியர்; உலகளாவிய மருத்துவ – சுகாதார நீதிக்கான அமைப்பு, ஆய்வு ஒருங்கிணைப்பும் வெளிப்படைத் தன்மைக்குமான கூட்டுத்துவ அமைப்பு, யேல் பல்கலைக்கழக அரசியல் பொருளாதாரத் துறை ஆகியவற்றின் இணை இயக்குநர்; தகவல் கொள்கை, அறிவுசார் சொத்துரிமைச் சட்டம், அனைத்துலகச் சட்டம், அனைத்துலக நல்வாழ்வு முதலானவற்றில் ஆய்வுகளைச் செய்து வருபவர்.

கொரோனா பீதி : பார்ப்பன பாசிஸ்டுகளின் தாக்குதல் இலக்கு இசுலாமிய மக்கள் !

சில ஆண்டுகளாக இசுலாமிய மக்களை திட்டமிட்ட தாக்குதலுக்கு உள்ளாக்கி வந்த ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. பார்ப்பனப் பாசிசக் கும்பல் கொரோனா வைரஸ் பீதியை தங்களுக்கு சாதமாக்கிக் கொண்டிருக்கிறது. அவலத்திலும் ஆதாயம் தேடும் இந்து சனாதன சித்தாந்தத்தின் உண்மை முகம் இதுதான்.

***

டந்த சில ஆண்டுகளாக பசுக் கொலைகள், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தைப் பறித்தது, பாபர் மசூதி தீர்ப்பு ஆகியவைகளைத் தொடர்ந்து தேசியக் குடியுரிமைச் சட்டத்திருத்தத்தை கொண்டு வந்ததன் மூலம் இசுலாமிய மக்களுக்கு எதிராகத் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது மோடி அரசு. மேலும் அரசாங்கம், இராணுவம், போலீசு மற்றும் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. பரிவார கும்பல்கள், அவற்றின் ஊதுகுழல் ஊடகங்களால் வெறுப்புப் பிரச்சாரங்கள், சமூக ஒதுக்குதல்கள், தாக்குதல்கள், கொலைகள், இனப்படுகொலைகளுக்கு ஆளாக்கப்பட்டு வந்த இசுலாமிய மக்களை மேலும் கடுமையாக அடக்கி ஒடுக்குவதற்கு கொரொனா வைரஸ் பீதியைப் பயன்படுத்திக் கொண்டுள்ளனர் காவி பாசிஸ்டுகள்.

கொரோனா வைரஸ் பீதியை முன்னிறுத்தி திடீரென எந்த அவகாசமும் முன்னறிவிப்பும் இன்றி சில மணிநேர இடைவெளியில் அறிவிக்கப்பட்டு முடிவின்றி தொடரும் ஊரடங்கினால் மக்கள் பெரிதும் துன்பத்திற்கு உள்ளாகியிருக்கின்றனர். இச்சூழலிலும் இசுலாமியர்களுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. கும்பல் நடத்திவரும் வெறுப்புப் பிரச்சாரங்கள், தாக்குதல்களை ஜனநாயக உணர்வும் சமத்துவ உணர்வும் கொண்ட அனைவரும் எதிர்த்து முறியடிக்க வேண்டியது நமது அவசியக் கடமைகளில் ஒன்றாகும்.

படிக்க:
♦ ரயில் ரத்தானதால் கேரளத்தில் தற்கொலை செய்த  மேற்கு வங்கத் தொழிலாளி !
♦ டாஸ்மாக் எதிர்ப்புப் போராளிகளுடன் ஒரு நேர்காணல் !

***

கொரோனா பீதி தொடங்கியவுடனே அது இசுலாமியர்களுக்கு எதிரான தாக்குதலாக அமைந்துவிடவில்லை. கொரோனா பீதியை இசுலாமியர்களுக்கு எதிராக எப்படி மடைமாற்றுவது என்று காத்திருந்த ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. பார்ப்பன கும்பல், டெல்லி தப்லிக் ஜமாத் மாநாடு விசயத்தை வைத்து பீதியையும் பொய்ப் பிரச்சாரத்தையும் பரப்பத் தொடங்கினர்.

“கொரோனா ஜிகாதி”, “கொரோனா தப்லிக் குண்டுகள்”, “முசுலீம்கள் என்றால் பயங்கரவாதிகள்”, “தாலிபான் குற்றவாளிகள்” என்று பலவாறாகப் பிரச்சாரம் செய்யப்பட்டது. டெல்லியில் முசுலீம்கள் அதிகம் வசிக்கும் நிஜாமுதின் பகுதியில் இசுலாமியர்கள் கொரோனாவல் பாதிக்கப்பட்டு கடுமையாக அவதிப்படுவதைப் போல பொய்யான, எடிட்டிங் செய்யப்பட்ட வீடியோக்கள் பரப்பப்பட்டன. சிங்கப்பூரில் இசுலாமியர்கள் உணவை நக்குவது போன்ற பழைய வீடியோக்களை டெல்லியில் தற்போது நடந்தது போல வதந்திகளைப் பரப்பி இவை தப்லிக் மாநாட்டில் நடந்ததாகப் பிரச்சாரம் செய்தனர். இவ்வாறான ஆயிரக்கணக்கான வதந்திகளைப் பரப்பியதன் மூலம் கொரோனா பீதியை, இசுலாமியர் வெறுப்பு பீதியாக மாற்றியது ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. கும்பல்.

ஹரியானா பா.ஜ.க. பிரமுகரும் குத்துச்சண்டை வீராங்கனையுமான பபிதா போகாட், உத்தகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ. மகேந்திர பட், டெல்லி மாநிலத்தைச் சேர்ந்த கபில் மிஷ்ரா, மத்திய சிறுபான்மைத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி போன்ற பல பா.ஜ.க. பிரமுகர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர்கள் இந்த வெறுப்புப் பிரச்சாரத்தையும் இசுலாமியர்களுக்கு எதிரான பீதியையும் முன்னின்று பரப்பினர்.

அதனைத் தொடர்ந்து இசுலாமிய மக்கள் மீது நடந்த தாக்குதல்களின் வேகமும் வடிவங்களும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு கொடியதாக அமைந்திருந்தன. இது காங்கிரசு – பா.ஜக. ஆளும் மாநிலங்கள் என்ற வேறுபாடு இன்றி இசுலாமிய வெறுப்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள அனைத்து மாநிலங்களிலும் காட்டுத்தீ போல பரவியது.

வடமாநிலங்கள் பலவற்றில் முசுலீம் மக்கள் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. டெல்லியில் காய்கறி வாங்கச் சென்ற ஒரு இசுலாமிய முதியவர் தன்னுடைய ஆதார் கார்டை காட்டச் சொல்லி மிரட்டப்பட்டார்.

முசுலீம்கள் தான் கொரோனாவைப் பரப்புகிறர்கள் என்று சொல்லி கர்நாடகா, உத்தர்காண்ட் மாநிலங்களின் பல பகுதிகளில் இசுலாமியர்களின் கடைகளைத் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கடைகளை மூடியுள்ளனர். அருணாச்சலப்பிரதேசத்தில் பால் விற்பனை செய்யும் குஜ்ஜார் இசுலாமிய குடும்பத்தினர் மீது சமூகப் புறக்கணிப்பை விதித்துள்ளனர் இந்துமதவெறி குண்டர்கள். இதனை மீறி பாலை எடுத்துச் சென்று விற்க முயன்றதால், அவர்களது கால்நடைகளை அடித்து விரட்டியும் கொட்டகைகளைப் பிரித்துப் போட்டும் தாக்கியுள்ளனர்.

உத்திரப் பிரதேசத்தில் ஒரு மசூதி இடித்து நொறுக்கப்பட்டுள்ளது. மோடி விளக்குகளை அணைக்கச் சொன்ன ஏப்ரல் 5-ம் தேதியன்று அன்று கர்நாடகாவில் இரண்டு மசூதிகளில் விளக்கெரிந்ததற்காக மசூதிகள் இடித்துத் தகர்க்கப்பட்டுள்ளன. இதேபோன்று டெல்லி, ஹரியானாவிலும் பல மாவட்டங்களில் மசூதிகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

கர்நாடகாவின் இராம்நகரில் உள்ள கைலஞ்சா கிராமத்தில் முசுலீம்களை ஊருக்குள் விடக்கூடாது என தண்டோரா அடித்து எச்சரித்துள்ளனர். அந்த ஊரில் ஏழைகளுக்கு ரேசன் பொருட்களை வழங்கியதற்காக இரண்டு இசுலாமியர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் மசூதிகளுக்குள் தப்லிக் மாநாட்டில் கலந்து கொண்ட இசுலாமியர்களை மறைத்து வைத்துள்ளதாக பரப்பப்பட்ட புரளியை முகாந்திரமாக்கி பல நூற்றுக்கணக்கான மசூதிகளில் அடைக்கலம் புகுந்திருந்த ஏழை முசுலீம் மக்கள் கைது செய்யப்பட்டனர். ஏப்ரல் 5-ம் தேதி விளக்குகளை அணைக்கவில்லை என்பதற்காக கர்நாடகா மற்றும் பல வடமாநிலங்களில் இசுலாமிய மக்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

குஜராத், உத்திரப்பிரதேசம், இராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் இசுலாமிய மக்கள் என்ற ஒரே காரணத்திற்காக அரசு மருத்துவமனைகளில் கூட மருத்துவம் செய்துகொள்ள அனுமதிக்கப்படவில்லை. இராஜஸ்தானில் உள்ள பரத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இர்ஃபான் கானின் மனைவிக்குப் பிரசவம் பார்க்க மறுத்து அவரை வெளியே விரட்டியுள்ளனர். உத்திரப்பிரதேசத்திலும் பல இடங்களில் இசுலாமியர்களை மருத்துவமனைக்குள் அனுமதிப்பதில்லை.

படிக்க:
♦ ஏழை இஸ்லாமியர்கள் தட்டில் மண்ணை அள்ளி போடும் வதந்திகள் !
♦ “கொரானா ஜிஹாத்” சங்கிகளின் பொய்ப் பிரச்சாரம் – பஞ்சாப் குஜ்ஜார் பழங்குடியின முசுலீம்கள் மீது தாக்குதல் !

பார்ப்பனப் பாசிஸ்டுகள், அவர்களது எடுபிடிகளாக இருக்கும் அரசு அதிகாரிகள், ஊடகங்களின் இருட்டடிப்புகளைத் தாண்டி வெளியே கசிந்தவைதான் மேற்கண்ட சம்பவங்கள். இவை கடந்த ஒரு மாதத்தில் நடந்தவை மட்டுமே. உண்மை நிலைமை இதனைவிட கொடியதாகவும், கோரமானதாகவும் இருக்கின்றன. அன்றாடம் இந்தமாதிரியான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.

தமிழ்நாட்டில் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் அதிகம்பேர் இசுலாமியர்கள் எனவும் அவர்கள் மூலமாக நோய் பரவுவதாகவும் ஊடகங்களும் பார்ப்பன பாசிஸ்டுகளும் பிரச்சாரம் செய்தன. அகில இந்திய அளவிலும் கொரோனா நோயினால் இறந்தவர்களில் இசுலாமியர்கள் அதிகமானவர்கள், பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒருபங்கினர் தப்லீக் மாநாட்டுடன் தொடர்புடையவர்கள் என்று பிரச்சாரம் செய்வதிலேயே அரசு அதிக முக்கியத்துவம் காட்டுகிறது.

***

சுலாமிய மக்களை கொரோனா வரைஸ் பரப்புபவர்களாகக் காட்டி, தாக்கி – அடக்கி ஒடுக்கும்  ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. கும்பலின் நோக்கம் என்ன? கொரோனா தடுப்பு ஊரடங்கால் பாதிக்கப்பட்ட கோடான கோடி உழைக்கும் மக்களுக்கு இந்த அரசு செய்ய மறுக்கும் கடமைகளை மக்கள் உணர்ந்து கொண்டு அரசாங்கத்திற்கு எதிராகத் திரள்வதைத் தடுக்கவும், தனது பார்ப்பன இந்துராஷ்டிரக் கனவை நோக்கி மக்களை அணிதிரட்டவுமான தந்திரமாக இசுலாமிய வெறுப்பு பிரச்சாரத்தை திட்டமிட்டு செய்து வருகின்றனர். இவற்றை நாம் அனுமதிக்கப் போகிறோமா? என்பதுதான் நம்முன்னே உள்ள கேள்வி.

– புதியவன்

காவிரி – மின்சாரம் – தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்தப் பார்க்கும் மோடி அரசு !

காவிரி டெல்டா விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட வேண்டும் என்பது தமிழக அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டு சட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது இந்நிலையில் இதற்குப் பெரும் கேடு விளைவிக்கும் வகையில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை மத்திய நீர்வளத் துறையின் கீழ் மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.

அரசியல் சட்டப்பிரிவு 77.3 பயன்படுத்தி அமைச்சகங்களுக்கு பணிகளை ஒதுக்கும் குடியரசுத் தலைவரின் அதிகாரத்தின் படி 1961 பணிகள் ஒதுக்கீடு விதிகளின் கீழ் அறிவித்துள்ளது காவிரி நீர் மேலாண்மை வாரியம் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி உருவாக்கப்பட்ட ஒரு தன்னாட்சி நிறுவனம் இதில் மத்திய அரசு மட்டுமின்றி தொடர்புடைய நபருக்கு மாநில அதிகாரிகள் கொண்ட அமைப்பு இந்த அமைப்பை நீர்வளத் துறையின் ஒரு பிரிவாக மாற்றி இருப்பதை நாங்கள் மிக வன்மையாக கண்டிக்கிறோம்.

மத்திய அரசின் இந்த நடவடிக்கை உச்சநீதிமன்ற தீர்ப்பை குறுக்கு வழியில் முடக்கும் செயல் மட்டுமின்றி உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலுமாகும் அரசியல் ஆதாயங்களுக்காக தமிழக விவசாயிகளின் பாசன குடி நீர் உரிமையை மத்திய அரசு மறுக்கும் ஆபத்து நிறைந்தது எனவே மத்திய அரசின் இந்த ஜனநாயக விரோத மக்கள் விரோத நடவடிக்கையை தமிழக அரசு தீவிரமாக எதிர்த்து தடுத்து நிறுத்த வேண்டும்

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

மேலும் 2003 மத்திய மின்சார சட்டத்தில் கொண்டுவரப்பட்ட கொண்டுவரப்படவுள்ள சட்ட திருத்தம் மின் உற்பத்தி விநியோகம் விலை நிர்ணயம் அனைத்தையும் தனியார் மயமாக்குவது ஓடு விவசாயிகள் நெசவாளிகள் வீட்டு உபயோகம் ஆகியவற்றிற்கு வழங்கப்படும் சலுகை இலவச மின்சாரம் ஆகியவற்றை ஒழிக்கும் நோக்கம் கொண்டதாக இருக்கிறது மாநில மின் வாரியங்கள் அதன் கட்டமைப்பு ஆகியவற்றை தனியார் மின் உற்பத்தியாளர்களின் முகவர்களாக மாற்றுகிறது அண்டை நாடுகளுக்கு மின்சாரத்தை விற்கவும் சட்ட திருத்தம் வகை செய்கிறது மின்கட்டணத்தை தனியார் நிறுவனங்கள் எப்போதும் எவ்வளவு வேண்டுமானாலும் உயர்த்திக் கொள்ளவும் வகை செய்யப்பட்டுள்ளது திருத்தம் நடைமுறைக்கு வந்தால் விவசாயம் சிறு தொழில் அனைத்தும் பெரும் பாதிப்புக்குள்ளாகும் பணம் இருப்பவனுக்கு மின்சாரம் என்ற நிலை உருவாகும் எனவே இதனையும் தமிழக அரசு நிராகரிக்க வேண்டும்

மேலும்.. தொழிலாளர்கள் ரத்தம் சிந்தி போராடிப் பெற்ற எட்டு மணி நேர வேலை உரிமையை பறித்து 12 மணிநேர வேலை என சட்டமாக்கி தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டி முதலாளிகள் நோக்கத்திற்கு ஏற்ப செயல்படுகிறது. மேலும் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்தின் நிதி தேவைகளை தர மறுப்பது மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் தொகுதி நிதியையும் பறித்துள்ளது. ஆகவே மாநில உரிமைகளை காக்க மத்திய அரசின் மக்கள் விரோத திட்டங்களை முறியடிக்க வேண்டும். என்பதை கீழ் கண்ட அமைப்புகள் சார்பில் இன்று 13.05.2020 காலை 11 மணியளவில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சந்தித்து மனு கொடுக்க சென்றோம். போலீசு ஒரு நபர் மட்டுமே செல்ல வேண்டுமென கூறினர்.

படிக்க:
♦ கொரோனா பீதியை வைத்து இசுலாமியர்கள் தாக்கப்படுவதற்கு சில சான்றுகள் !
♦ ஏழைகளுக்கும் நடுத்தரவர்க்கத்திற்கும் இனி மின்சாரமும் எட்டாக்கனிதான் !

ஆட்சியர் வீடியோ கான்பரசில் உள்ளதால் பிறகு அவரது நேர்முக உதவியாளர் வந்து கோரிக்கைகளை கேட்டு மனுக்களை பெற்று கொண்டார். மக்கள் அதிகாரம் மற்றும் தமிழக விவசாயிகள் சங்கம் தலைமையில் பல்வேறு அமைப்புகளின் ஒற்றுமையான இந்த நடவடிக்கை போராட்டத்தை முன்னெடுக்கும் வகையில் இருந்தது.

பங்கேற்ற அமைப்புகள்,

1. லெ.செழியன். திருச்சி மண்டல ஓருங்கிணைப்பாளர் . மக்கள் அதிகாரம்
2. ம.பா.சின்னத்துரை திருச்சி மாவட்டத் தலைவர் தமிழக விவசாயிகள் சங்கம்.( கட்சி சார்பற்றது)
3. ம. ஜீவா.மாவட்ட செயலர். மக்கள் கலைக் இலக்கியக் கழகம் திருச்சி
4. தமிழாதன் பெரம்பலுர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் விடுதலை சிறுத்தைகள் கட்சி .
5. கமலக்கண்ணன். மாவட்ட செயலர். தந்தை பெரியார் திராவிடர் கழகம் .
6. ரவிக்குமார். மாவட்ட செயலாளர். சமூக நீதி பேரவை
7. காவிரி உரிமை மீட்புக் குழு
9. கவித்துவன். தமிழ் தேசிய பேரியக்கம்
10. சம்சுதீன் மாவட்ட தலைவர் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி .
11. ஜோசப்.மாவட்ட து. தலைவர் மக்கள் உரிமைக் கூட்டணி
12. பஷீர். மாவட்ட தலைவர் மக்கள் உரிமை மீட்பு இயக்கம்.

தகவல்
மக்கள்அதிகாரம் .
திருச்சி
போன்: 94454 75157

கங்கையை சுத்தப்படுத்திய கொரோனா ஊரடங்கு !

ங்கை நதி சுகாதாரக் கேடடைந்து வருவதால், அதனைத் தூய்மை செய்ய வேண்டும் என்ற முயற்சி இன்று, நேற்றல்ல நூற்றாண்டைக் கடந்து நீடிக்கும் பிரச்சினை.

கங்கை நதியின் புனிதம், தூய்மை எல்லாம் புராணங்களில்தான் புகழ் பெற்றிருக்கிறது. ஆனால், கங்கைநதி ஒரு சாக்கடையாக ஓடுவதால் ஏற்படும் நாற்றமோ இந்தியாவில் மட்டும் அல்ல, உலக அளவில் ‘பிரசித்தி’ பெற்றிருக்கிறது. சுமார் 50 கோடி மக்களின் குடிநீர் மற்றும் வாழ்வாதாரமாக இருக்கும் கங்கை, உலகத்தில் அதிக சீர்கேடடைந்த நதிகளில் 6-வது இடத்தை வகிக்கிறது.

கங்கை நதியின் சுகாதார சீர்கேட்டுக்கான காரணங்களில் முதன்மையாதாக, கான்பூர், வாரணாசி, பிரக்யாராஜ் (லக்னோ), பாட்னா போன்ற நகரங்களில் உள்ள எண்ணற்ற சாயத் தொழிற்சாலைகள், நூற்பாலைகள், நெசவாலைகள், இரசாயன தொழிற்சாலைகள், தோல் பதனிடும் ஆலைகள் உள்ளன. குறிப்பாக நிலக்கரியைக் கொண்டு இயங்கும் மிகப்பெரிய அனல் மின்நிலையம் கான்பூருக்கு அருகில் கங்கையின் துணைநதி பாண்டுவின் கரையில் அமைந்துள்ளது. இவ்வாலையில் ஓராண்டுக்கு ஆறு இலட்சம் டன் நிலக்கரி எரிக்கப்படுகிறது. இதனால் உருவாகும் 2.1 இலட்சம் டன் சாம்பல் மழைக்காலங்களில் கரைந்து ஆற்றில் கலந்து வருகிறது. இந்தச் சாம்பலில் மிகவும் நச்சுத் தன்மை கொண்ட வேதிப்பொருட்களும், தனிமங்களும் கலந்துள்ளன.

அடுத்து, கங்கை நதியின் கரையில் 48 சிறிய நகரங்களும், ஒரு லட்சம் பேருக்கு அதிகமாக வசிக்கும் 100-க்கும் மேற்பட்ட பெரிய நகரங்களும் அமைந்துள்ளன. இந்த நகரங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் அனைத்தும் கங்கையில்தான் கலக்கின்றன.

மேலும், ‘கங்கையில் குளித்தால் பாவம் தீரும்’ என்ற பார்ப்பனப் புரட்டை நம்பி விழாக்காலங்களில் மட்டும் சுமார் 7 கோடி பேர் கங்கையில் குளிக்கின்றனர். வெறும் குளியலாக மட்டும் அது அமைந்து விடவில்லை. சடங்கு என்ற பெயரில் ஊரில் உள்ள குப்பைகளை எல்லாம் சேர்த்து வைத்தும் பூசை புனஸ்காரம் என்ற பெயரில் பல பொருட்களையும் ஆற்றோடு விட்டு வருகின்றனர்.  இவை மிகப்பெரும் சுகாதாரக்கேடாக அமைந்துள்ளன.

இதனைவிட மோசமானது என்னவெனில், இறந்தவர்களின் பிணத்தை ஆற்றில் விட்டுவிடுவது என்ற பிற்போக்குத்தனம்தான். பாதி எரிந்த நிலையில் பிணங்களை ஆற்றில் தூக்கிப் போட்டுவிடுவது என்பதையும் ஒரு மரபாகத் தொடர்ந்து செய்து வருகின்றனர். மேலும், இறந்தவர்களின் உடலை எரித்து அந்த சாம்பலை கங்கையில் சென்று கரைப்பது என்ற பார்ப்பன சடங்கு காசியில் மட்டும் ஆண்டுக்கு 40,000 பேருக்கு செய்யப்படுகிறது.

கங்கை நதியை சீர்கேடடையச் செய்பவை இவை மட்டும்தான் என்று கருதிவிட வேண்டாம். கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள சிறிதும் பெரிதுமாக ஆயிரக்கணக்கான நீரேற்று நிலையங்கள் (பம்பிங் ஸ்டேசன்) நதியின் நீரோட்டத்தைத் தடுப்பதில், கழிவுகள் தேங்குவதில் முக்கியப் பங்காற்றுகின்றன.

இப்படி முதலாளிகளின் கொள்ளை இலாபத்திற்காகவும் பார்ப்பன மூடநம்பிக்கைகளாலும் கங்கை நதி சாக்கடையாக மாற்றப்பட்டுள்ளது.

படிக்க:
♦ கொரோனா : மோடி அரசின் பருப்பு வினியோகம் – உண்மை என்ன ?
♦ கங்கையை சுத்தம் செய்தாரா மோடி ? கதை விட்ட வானதி சீனிவாசன் !

***

ங்கை நதியைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை பிரிட்டீஷ் ஆட்சியிலேயே எழுப்பப்பட்டிருந்தாலும் ராஜீவ் காந்தி ஆட்சி காலத்தில்தான் முதல்முதலாக இதற்கான திட்டம் வகுக்கப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டது. அதன் பின்னர் “தூய கங்கைக்கான தேசிய மிஷன்” என்ற ஒரு துறை நீர்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் உருவாக்கப்பட்டது.

1986-ம் ஆண்டில் “கங்கை நடவடிக்கை திட்டம் 1” தொடங்கியது முதல் வாஜ்பாய் ஆட்சியில் “கங்கைத் தாய் தூய்மை செய்யும் திட்டம்” அதன் பின்னர் “கங்கை தூய்மைப் பணிகள்” என 2014-ம் ஆண்டு வரை ரூ.4000 கோடி ஒதுக்கப்பட்டது. இதனால் கங்கை நீர் மாசுபடுவது தடுக்கப்படவில்லை. மாறாக, மேற்கண்ட காரணங்களால் அசுத்தமாவது அதிகரித்தது.

இதன் பின்னர் 2014-ம் ஆண்டு ஆட்சியைப் பிடித்த பா.ஜ.க.-மோடி அரசாங்கம் இதுவரை இல்லாத அளவிற்கு ரூ.28,970 கோடி ரூபாய் நிதியை கங்கை தூய்மைப்படுத்துவதற்கு ஒதுக்கியது. கங்கை நதியைத் தூய்மைப்படுத்த ஒதுக்கப்பட்ட இவ்வளவு பெரிய தொகையும் மக்கள் வரிப்பணத்தில் இருந்து ஒதுக்கப்பட்டது தானே தவிர, கங்கைக் கரையிலுள்ள ஆலை முதலாளிகளிடம் இருந்து திரட்டப்பட்ட நிதி அல்ல.

2019-ம் ஆண்டுக்குள் கங்கையை முழுமையாக சுத்தம் செய்யப்படும் என உறுதி கூறப்பட்டது. பிரதமர் மோடியோ இது தனது சொந்தத் திட்டம் என்று வேறு கூறினார். ஆனால், 2019-ல் சிறிதளவு கூட முன்னேற்றமில்லாததால் மேலும் ஓராண்டு நீட்டிக்கப்பட்டது.

கான்பூர் முதல் காசி வரையிலான நதியின் பகுதியில் (அழுகிய நலிந்த தண்டு என்று அழைக்கப்படும் பகுதி) ஓரிடத்தில் கூட குளிக்க முடியாத நிலை இருந்தது. இந்த நிலையில் மோடி அரசின் மிகப்பெரும் பொருட்செலவு, ‘கடும்’ முயற்சிகளின் விளைவாக, முக்கியமான 70 இடங்களில் 5 இடங்களில் மட்டும்தான் குடிப்பதற்கும் 7 இடங்களில் ஓடும் நீரில்தான் குளிப்பதற்கும் பயன்படுத்த முடியும் என்ற அளவிற்குதான் ‘முன்னேற்றம்’ இருந்தது.

கங்கை நதியைத் தூய்மைப்படுத்த, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சம், தேசிய பசுமைத் தீர்ப்பாயம், கங்கை தேசிய மிசன், தேசிய கங்கை நதிப் படுகை ஆணையம், தேசிய கங்கா கவுன்சில் போன்ற பல மத்திய அமைப்புகளும், இவற்றின் ஒவ்வொன்றின் கீழே உள்ள மாநில அளவிலான பிரிவுகள் மற்றும் கங்கை நதிக்காக மாநில அளவில் தனிப்பிரிவுகள், கும்பமேளாவை நடத்துவதற்கான அரசின் பிரிவு, தனியார் தொண்டு நிறுவனங்கள், கங்கைக் கரையில் அமைந்துள்ள கோவில்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் அமைத்துள்ள தொண்டு நிறுவனங்கள், ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் பரிவாரங்கள் என பெரிதும் சிறிதுமான பல்வேறு அமைப்புகள் இருக்கின்றன.

மேலும், கங்கையைப் புனித நதியென்றும், கங்கைத் தாய் என்றும் போற்றுகின்ற பார்ப்பன சனாதனத்தைக் கொள்கையாகக் கொண்ட பா.ஜ.க. மோடி அரசாங்கமும், உ.பி.யில் யோகி ஆதித்தியநாத் தலைமையிலான அரசாங்கமும் அதிகாரத்தில் இருந்தும் என்ன பயன்? அரசு அதிகாரத்தின் எல்லாத் துறைகளிலும் ஆர்.எஸ்.எஸ். விசுவாசிகள் புகுத்தப்பட்டிருந்தும், கங்கை இயற்கை அதிரடிப் படையில் (Ganga EcoTask Force) நான்கு பட்டாலியன் வீரர்கள் இருந்தும், ஐ.ஐ.டி.யில் படித்த அறிவாளிகளைக் கொண்டு சுத்தமான கங்கைக்கான விதிமுறைகளை வகுத்து, அவற்றை மீறுவோரை தண்டிப்பது, தண்டம் வசூலிப்பது, சிறையில் அடைப்பது போன்ற சட்ட வசதிகள் செய்யப்பட்டிருந்தும் பலனேதுமில்லை. கங்கை புத்துணர்ச்சி படுகை மேலாண்மைத் திட்டம் (Ganga Rejuvenation Basin Management Programme) வகுக்கப்பட்டிருந்தும், கங்கை நதியைத் தூய்மைப்படுத்தும் திட்டத்தில் நிறைவேறியது என்னவென்றால், 7 இடங்களில் குளிக்கலாம், 5 இடங்களில் நீரைக் குடிக்கலாம் என்பதுதான்.

இன்னும் குறிப்பாக, கங்கை நதியின் தூய்மைக்காக மோடி அரசு ஒதுக்கிய தொகை மட்டுமின்றி மேற்கண்ட ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட பல்வேறு தன்னார்வ அமைப்புகள் மூலம் இதைவிட பல மடங்கு பொருட்செலவு செய்யப்பட்டிருக்கும். இவற்றில், பக்தி என்ற பெயரில் மக்கள் கொடுத்த ‘காணிக்கை’கள்தான் பெரும்பாலானவை. இவையன்றி, கங்கையைச் சுத்தம் செய்வதற்கு என தனியாகத் திரட்டப்பட்ட நிதிகளும் இவற்றில் அடங்கும்.

படிக்க:
♦ ராம் கோயில் அறக்கட்டளைக்கு நன்கொடைகளை பெற வரி விலக்கு அளித்த மத்திய அரசு !
♦ தூய்மை கங்கை : மோடியின் மற்றுமொரு ஜூம்லா !

***

மோடி அரசும், ஆர்.எஸ்.எஸ் சங்கப் பரிவாரங்களும் பல்வேறு தன்னார்வ அமைப்புகளும் மேற்கொண்ட முயற்சிகளும் அவற்றின் விளைவுகளும் மேற்கண்டவாறு இருக்க, மார்ச் 24-ம் தேதி நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்ட முதல் ஒரு வாரத்திலேயே கங்கை நீரில் மாசு குறைந்திருப்பதாக செய்திகள் வரத் தொடங்கின. அடுத்து வந்த ஏப்ரல் மாதத்தில் கங்கை நீரின் மாசு மிகபெரும் அளவில் குறைந்துவிட்டது. பெரும்பாலான பல இடங்களில் மக்கள் குளிப்பதற்கு ஏற்றவகையில் அமைந்திருப்பதாகவும், குடிக்கத்தக்கதாக இருப்பதாகவும் பலரும் ஆச்சரியத்துடன் தெரிவிக்கின்றனர். ஆற்று நீரில் இருந்து வரும் சாக்கடை நாற்றம் குறைந்துவிட்டதாகவும் தெரிவிக்கின்றனர். இத்தனைக் காலம் கங்கையில் மிதந்து வந்த அழுக்கும் நுரையும், எங்கும் காணப்பட்ட கருநிற நீரும் மறைந்து தெளிவான நீரோட்டமும் மீன்கள் விளையாடுவதும் கண்டு பலரும் மகிழ்கின்றனர்.

சுமார் கால் நூற்றாண்டுக்கும் மேலாக அரசாலும் அதிகார வர்க்கத்தாலும் பக்தியின் பெயரில் மக்களைக் கொள்ளையடித்த கும்பல்களாலும் செய்ய முடியாததை, கொரோனா நோய்த்தொற்றை ஒட்டி அமலாக்கப்பட்ட நாடுதழுவிய ஊரடங்கு உத்தரவு செய்துள்ளது என்றால், இதனை எப்படிப் புரிந்து கொள்வது?

இந்த ஊரடங்கு காலத்தில் கங்கை நதிக் கரையில் இருந்த ஆயிரக்கணக்கான சாயத் தொழிற்சாலைகள், நூற்பாலைகள், நெசவாலைகள், இரசாயன தொழிற்சாலைகள், தோல் பதனிடும் ஆலைகள் இயங்கவில்லை. இதனால், ஆலைக்கழிவுகள் கங்கையில் கலப்பது 90% தவிர்க்கப்பட்டுவிட்டது. இதுதான் முதன்மையான காரணம்.

இரண்டாவது, இந்தக் காலத்தில் கோவில்களில் பண்டிகைகள் கொண்டாடுவது அறவே நிறுத்தப்பட்டது. பிணங்களை ஆற்றில் மிதக்கவிடுவது, சாம்பலைக் கரைப்பது போன்றவை இல்லை என்று சொல்லும் அளவிற்கு குறைந்து விட்டன.

இவையன்றி, பெருநகரங்களில் இருந்து வெளியேறும் கழிவுகள் கங்கையில் கலந்து வருகின்றன. இருந்தாலும், இந்தக் கழிவுகளின் அளவும் வழக்கத்தைவிட சரிபாதியாக குறைந்து விட்டன. காரணம், நகரங்களில் கேளிக்கை மையங்கள், தங்கும் விடுதிகள், உல்லாச ஹோட்டல்கள், அன்றாட தேவைக்கான உணவகங்கள் போன்றவை இயங்காமல் இருந்ததால் இந்த மாற்றம் ஏற்பட்டது.

சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், முதலாளித்துவ இலாப நோக்கத்தில் அமைக்கப்பட்ட ஆலைக்கழிவுகளும், பொறுப்பற்ற முறையில் சுத்திகரிக்கப்பட்டாத நகரக் கழிவுநீரை ஆற்றில் கலப்பதும் குறைந்து விட்டதுதான் கங்கையில் தற்போது ஏற்பட்டிருக்கின்ற தூய்மைக்கு முக்கியமான காரணம்.

***

இதேபோல டெல்லி, மும்பை, சென்னை போன்ற பல பெருநகரங்களில் காற்று மாசு பெருமளவு குறைந்துவிட்டது. முதலாளித்துவ நுகர்வுக் கலாச்சாரத்தின் அடிப்படையில் அமைந்த கார்களின் ஓட்டம் முற்றிலும் நிறுத்தப்பட்டதால் குறைந்தள்ள வாகனப்புகையும், ஆலைகள் மூடப்பட்டதால் குறைந்துள்ள நச்சுப்புகைகளின் வெளியேற்றமும்தான் இதற்கு முக்கியக் காரணம்.

சாக்கடையாகிப் போயிருந்த கங்கையைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்றால் ஆலைகளின் கழிவுகளும், நகரங்களின் கழிவுகளும் நேரடியாக கங்கையில் கலப்பது தடுக்கப்பட வேண்டும். இதனை இந்தக் கட்டமைப்பிற்குள் செய்ய முடியாது. இந்த அரசுக் கட்டமைப்பும் சமூகக் கட்டமைப்பும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கும் மடாதிபதிகளுக்கும்தான் சேவை செய்கிறதே ஒழிய, மக்களுக்கு சேவை செய்ய வக்கற்றதாக போய்விட்டன.

குறிப்பு : கங்கை நதிக்கு பல்வேறு சிறப்புகள் உள்ளன. உலகத்தின் அரிய உயிரினங்களில் ஒன்றான நன்னீர்வாழ் டால்பின்கள் கங்கையில் வாழ்கின்றன. மற்றொரு அரிய உரியினமான மெல்லோட்டு ஆமைகளும் கங்கையில் வாழ்கின்றன. இந்த வகை ஆமைகள் கங்கையின் அடி ஆழப்பகுதியில் வாழ்பவை. கங்கையின் சுகாதாரக் கேட்டின் காரணமாக இவை அழிந்து வருகின்றன.

– புதியவன்

ரயில் ரத்தானதால் கேரளத்தில் தற்கொலை செய்த  மேற்கு வங்கத் தொழிலாளி !

டந்த சனிக்கிழமை கேரளம், எர்ணாகுளம் மாவட்டத்தில் கொடநாடு பகுதியில் ஒரு மாமரத்தில் 22 வயதான ஆசிப் இக்பால் மண்டல் என்ற இளைஞன் தற்கொலை செய்துகொண்டார். பல நாட்களுக்கு முன்பே அவர் வைத்திருந்த உணவு, பணம் தீர்ந்து விட்டது. நம்பிக்கை இழந்த அவர் சொந்த ஊருக்கு செல்ல முடிவெடுத்தார். ஒரு முறையல்ல, இரு முறை கேரளத்திலிருந்து மேற்கு வங்கத்தில் உள்ள  சொந்த ஊரான முர்ஷிடாபாத்திற்கு முன்பதிவு செய்து பயணசீட்டு பெற முயற்சித்தார்.  ஆனால் இரு முறையும் பதிவு ரத்தானது.

வயர் இணைய தளம் இந்த துயரம் குறித்து விசாரித்த போது ஆசிப்பின் தந்தை ஜபேத், உடன் இருந்தார். “எல்லாம் முடிந்து விட்டது’’, என்று மனம் உடைந்து கண்கலங்கினார். ஆசிப்பின் அத்தை மகனான அன்வருள் ஃபோனை எடுத்து, “அவரால் இனி பேச முடியாது, அந்த  செய்தி வந்ததிலிருந்து வீட்டில் இதுதான் நிலை, ஆசிப்பின் தாய் பல முறை மயக்கமடைந்து விடுகிறார்’’ என்றார்.

ஆசிப்பின் இளைய தம்பி அன்வர் ஹூசைன், தான், ஆசிப்பை பார்க்க கடந்த வியாழன் அன்று சென்றதாக கூறினார். அவர் பயமடைந்தும் பதட்டமடைந்தும் இருந்தார். வீட்டிற்கு செல்வதிலேயே குறியாக இருந்தார்.

இறந்து போன ஆசிஃபின் தந்தை சகோதரர் மற்றும் அவரது தாயார். (படம் – நன்றி : த வயர்)

இரு முறை ரயில் டிக்கெட் ரத்தானதால் இனி ஒரு போதும் வீட்டிற்கு போக முடியாது என்று கருதினார். திரும்பவும் சென்றுவிட்டால் அங்கிருந்து ஒரு போதும் வரமாட்டேன் என்று ஆசிப் கூறினார் என்றார் அன்வர்.

சனிக்கிழமை இரவு அன்வரும் மற்றொரு நண்பரும் ஆசிப்பின் பிணத்தை ஒரு ஆம்புலன்சில் எடுத்துக்கொண்டு முர்ஷிதாபாத்திற்கு புறப்பட்டனர். “இம்மாதிரியான முறையில் நாங்கள் ஊருக்கு போவோம் என்று ஒரு போதும் நினைத்ததில்லை’’ என்றார் அன்வர். 2900 கிலோமீட்டர், 48 மணிநேர பயணத்திற்கு பிறகு வியாழன் அன்று காலை 6.30 மணிக்கு ஒரு வெள்ளை நிற குளிர்சாதனம் பொருத்தப்பட்ட ஆம்புலன்ஸ் தொம்கல் பகுதி ஷிரோபரா கிராமத்திற்கு போய் சேர்ந்தது. காலை 8.30 மணிக்கு அக்கிராமத்தில் உள்ள ஒரு இடுகாட்டில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

“அவர் ரயிலில் வீட்டிற்கு வரவில்லை, இப்போது அவனது இறந்த உடல் ஒரு ஆம்புலன்ஸில் வந்துள்ளது. இதற்கு ஆன செலவு ரூ 1,30,000. நாங்கள் ரூ 1,00,000 அந்த ஓட்டுனருக்கு கொடுத்தோம். இன்னும் ரூ 30,000 தரவேண்டியுள்ளது. நாங்கள் அந்த ஓட்டுனரை இன்று இரவு வரை இங்கேயே தங்குங்கள்; அதற்குள் பணம் ஏற்பாடு செய்கிறோம் என்று கேட்டோம்”.

படிக்க:
♦ டாஸ்மாக் எதிர்ப்புப் போராளிகளுடன் ஒரு நேர்காணல் !
♦ கொரோனா : மோடி அரசின் பருப்பு வினியோகம் – உண்மை என்ன ?

ஆசிப்பின் மாமா ஆசருள் பிஸ்வாஸ் கூறினார், “அவர்களுடைய குடும்பம் மிக மிக ஏழ்மையானது; ஆசிப்பின் தந்தை மற்றொருவருடைய பண்ணையில் கூலியாக வேலைபார்க்கிறார். ஆசிப்தான் மூத்த சகோதரன், இந்த தொகை அவனுடைய உடலை ஊருக்கு கொண்டுவர எங்கள் கிராமத்தினர் முன்வந்து நன்கொடையாக கொடுத்தது.

ஆசிப்பின் தந்தை ஜாபத் ஒரு பண்ணையில் தொழிலாளியாக முர்ஷிபாத்தில் வேலை செய்கிறார். அதில் உருவாகும் மொத்த வருமானத்தில் 25% ஐ கூலியாக பெறுகிறார். இது குடும்பத்தை நடத்த மட்டுமே உதவுகிறது என்றனர் அந்த குடும்பத்தினர். பணத்தை சேமிப்பது என்பது எங்களுக்கு தொலைதூர கனவாகவே உள்ளது.

ஆறு மாதத்திற்கு முன்பு, ஆசிப்பும் அன்வரும் நல்ல எதிர்காலம் இருக்கும் என்ற நம்பிக்கையுடன் கேரளாவிற்கு சென்றனர். ஆசிப், கொடநாட்டில் உள்ள ஒரு செங்கல் சூலையில் தினசரி ரூ 450 கூலிக்கு வேலையில் தொடங்கினான். அன்வர், டைல்ஸ் தயாரிக்கும் ஃபேக்டரியில் தினசரி ரூ 600-ற்கு வேலைக்கு சேர்ந்தான்.

“ஆசிப் ஊருக்கு போகலாம் என்று முடிவெடுத்திருந்த நிலையில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. மார்ச் 23 லிருந்து, அவன் வேலை செய்த அந்த செங்கல் சூளை மூடப்பட்டுவிட்டது. வேலையாட்களுக்கு கூலி பணம் கொடுக்கப்படவில்லை. ஆசிப் மனம் மிகுந்த வருத்தமடைந்தான். அவன் ஊருக்கு நடந்து சென்றுவிடவும் முடிவெடுத்தான். நிச்சயமற்ற இந்த 47 நாட்கள் அவனை கொன்றுவிட்டது”.

அந்த குடும்பம் இது வரை எந்த உதவியும் மாநில அரசிடமிருந்து வரவில்லை. எந்த ஒரு அரசியல் கட்சியோ, தன்னார்வ தொண்டு நிறுவனமோ ஆசிப்பின் உடலை வீட்டிற்கு கொண்டுவர எந்த உதவியும் செய்யவில்லை. அன்வருள், அந்த இறப்பு செய்தி சனிக்கிழமை காலையில் வந்த உடனே  தொம்கல் நகராட்சி தலைவர் ரஃபிகுள் இஸ்லாம் அந்த குடும்பத்தை பார்வையிட்டு தான் கொஞ்சம் பணம் ஏற்பாடு செய்வதாக கூறியதை உறுதிபடுத்திக்கொண்டார். வியாழன் மதியம் வரை எந்த பண உதவியும் அந்த குடும்பத்திற்கு வரவில்லை.

“ அவன் ரயில் மூலம் வீட்டிற்கு வர முயற்சித்தான். ஆனால் இரு முறையும் டிக்கெட் ரத்துசெய்யப்பட்டது. இப்போது நாங்கள் அவனது உடலை எடுத்து வர இலட்ச கணக்கில் செலவு செய்துள்ளோம். அரசு, முன்னரே ரயில் கிடைக்க ஏற்பாடு செய்திருந்தால் ஆசிப் உயிரோடு ஊருக்கு வந்திருப்பான்” என்றார் அன்வருள். பெங்கால் சம்ஸ்கிருதி மஞ்ச் என்ற சமூக அமைப்பு அரசின் இந்த செயலை வன்மையாக கண்டித்தது. இதற்கான விளக்கத்தை அரசு தரவேண்டும் என்று அது கோரிக்கை வைத்துள்ளது.

“மத்திய அரசின் இரக்கமற்ற செயலால் ஏழை புலம்பெயர் தொழிலாளர்கள் அன்றாடம் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். புலம் பெயர் தொழிலாளர்களை ஊருக்கு கொண்டுவரவும், அவர்கள் குடியமர்த்தவும் முறையான திட்டமிடல் வேண்டும் என்று நீண்ட நாட்களாக நாங்கள் கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால் அரசு பணக்காரர்களை  இந்தியாவிற்கு கொண்டுவர மட்டுமே கவனம் கொடுத்து செயல்படுகிறது. ஆசிப்பின் குடும்பத்திற்கு உரிய பொருளாதார நட்ட ஈடு தரவேண்டும் நாங்கள் உள்ளாட்சி நிர்வாகத்திற்குதெரிவித்துகொள்கிறோம்.” என்று அந்த இயக்கத்தின் செயலாளர் கூறினார்.

தமிழாக்கம் : – முத்துக்குமார்
நன்றி : த வயர் 

டாஸ்மாக் எதிர்ப்புப் போராளிகளுடன் ஒரு நேர்காணல் !

மிழகம் முழுவதும் கொரோனா காலத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதற்கு எதிராக மக்கள் அதிகாரம் சார்பில் போராட்டங்கள் நடைப்பெற்றன. ராணிப்பேட்டை அவலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டாஸ்மாக் கடையின்முன் முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் செய்த தோழர் மோகன் மற்றும் அவரின் தந்தையான தோழர் வெங்கடேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டு அரக்கோணம் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனர். ஐந்து நட்கள் கழித்து வெளிவந்துள்ளனர். அவர்களோடு ஒரு உரையாடல்….

என் பேரு மோகன் விவசாயக்கூலியாக வேலை செய்யறேன். மாசம் 8000 ருவா வரும் அத வச்சுக்கிடுதான் குடும்பத்தை ஓட்டுரேன். வீட்டுக்கு தேவைங்குற பொருளெல்லாம் வாங்கிப்போடுவேன். அதால இந்தக்காசு போதும். ஆடம்பரமா செலவு பண்றதில்ல. போதும் இதுவே.

அன்னைக்கு என்ன நடந்துச்சு சொல்லுங்க?

ஏழாம் தேதி காலைல வீட்டுக்கு 8 மணிக்கு போலீஸ் வந்துருச்சு. இன்ஸ்பெக்டர் லட்சுமிபதியும் வந்தாரு 2 ஜீப் 6 போலீசுக்காரங்க இருந்தாங்க. ஏரியாவயை விட்டு இன்ஸ்பெக்டர் என்னை வெளியே அழைச்சுக்கிட்டு வந்து பேசினாரு. அப்போ மற்ற போலீஸ் எல்லாம் “ஓ மோகனா….” எனக்கு தெரியுமே சொன்னாங்க.

எத்தனை மணிக்கு போராட்டம் பண்ணப் போறீங்கன்னு மேல இருந்து கேக்குறாங்கன்னு இன்ஸ்பெக்டர் கேட்டாரு. நான், பத்து மணிக்கு வந்து முழக்கம் போட போறேன்னு சொன்னேன்.

எத்தனை பேர் வருவீங்கன்னு கேட்டாரு. நாங்க மூணு பேரும்னு சொல்லி அப்பாவையும் அண்ணனையும் காட்டுனேன். அவங்க யாருன்னு கேட்டாரு. அவங்க மக்கள் அதிகாகரம் உறுப்பினர்னேன்.

திமுக எல்லாம் வீட்ல தானே பண்றாங்க நீங்களும் அப்படியே பண்ணலாம் இல்ல அப்படின்னு கேட்டாரு.

அது அவங்க கொள்கை பிரச்சனை. நான் என்ன பண்ண முடியும் அவங்ககிட்ட கேளுங்க. மக்கள் பார்வையில முழக்கம்போட்டாத்தான் தான் மக்களுக்கு தெரியும் சொன்னேன். அப்புறம் என் வீட்டுக்கு வெளியே போலீச நிறுத்திட்டு அவர் போய்ட்டாரு.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தொடர்ச்சியா பல இடங்கள்ல இருந்தும் போன். எப்போ வரீங்க எப்போ வரீங்கன்னு. பத்துமணிக்கு நான், அப்பா வெங்கடேசன், அண்ணன் எழில் மூணு பேரும் போனோம். எழில் போட்டோ எடுத்தார். நானும் அப்பாவும் கொஞ்சநேரம் முழக்கம் போட்டோம். போலீசு வந்து சுத்தி சுத்தி ரெண்டு பேரையும் போட்டோ எடுத்தாங்க.
அப்போ ஒரு போலீசுகாரர் வந்து நீ என்ன ஜாதின்னு அப்பாவை பார்த்து கேட்டாரு, எதுக்கு கேக்குறீங்க , அதெல்லாம் சொல்ல முடியாது -ன்னு சொன்னேன். உளவுத்துறை போலீசு வந்து அது மோகனோட அப்பா என்று சொன்னார்.

மேல இருந்து எந்த உத்தரவும் வரவில்லைன்னு சொல்லி வண்டியில் கூட்டிக்க்கிட்டு போய். அவலூர் காவல்நிலையத்தில் உட்கார வைத்தார்கள். மாலை வரைக்கும் ஆனது. என்ன செய்ய போறீங்கன்னு லட்சுமி இன்ஸ்பெக்டரிடம் கேட்டேன். எனக்கு மேலிடத்து உத்தரவு வரவில்லை என்று சொன்னார்.

அப்புறம் கூப்பிட்டு ரிமாண்ட் செய்யப்போறோம்னாரு. தமிழ்நாடு முழுக்க போராடுன எல்லோரையும் விடுதலை செஞ்சுட்டாங்க. எங்கள விட வேண்டியதுதானே என கேட்டேன். நீ உன்னோட கொள்கையில உறுதியா இருக்கும் போது நான் என் டியூட்டியில உறுதியா இருக்க வேண்டாமா , மேலிடத்து உத்தரவு நான் ஒண்ணும் செய்ய முடியாதுன்னு சொன்னாரு.

போலீசுகாரர் ஒருவர் மீண்டும் நீ என்ன ஜாதி என்று கேட்டார். எனக்கு ஜாதின்னா என்னன்னு தெரியாது என்று சொன்னேன் . அவர் உன் ஜாதி ஜாதி என்னன்னு தெரியும் என்று கூறினார்.

படிக்க:
டாஸ்மாக்கிற்கு எதிராகப் பேசினால் சிறை ! ஆவலூர் இன்ஸ்பெக்டர் லட்சுமிபதியின் அடாவடி !
♦ மக்கள் போராட்டத்தின் விளைவு – டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவு !

நான் சாதி இல்லாத அமைப்பு என்னால் எதுவும் சொல்ல முடியாது. உனக்கு தெரிஞ்ச நீ வைச்சுக்கோங்க என்ன ஏன் கேக்குறீங்க அப்படீன்னு சொன்னேன்.

வாலாஜா கோர்ட்டுக்கு கூட்டிட்டுபோனாங்க. மேஜிஸ்ட்ரேட் அம்மா வந்தாங்க. என்ன விஷயம்னு கேட்டாங்க. நான் கொரோனா பிரச்சனையில ஆயிரக்கணக்கான ஜனம் திண்டாடிக்கிட்டு இருக்கு. அந்த நேரத்தில் டாஸ்மாக் கடை தொறந்தது தப்புன்னு நாங்க ரெண்டு பேரும் முழக்கம்போட்டோம்னு சொன்னேன். எங்கள உடனே ஜாமீன்ல விடுங்க நீங்க சொல்லும் போது ஆஜராக தயார்ன்னு சொன்னோம். தோழர்கள் தயாரித்துக் கொடுத்த மனுவை கொடுத்தேன். நீங்கள் வெயிட் பண்ணுங்கள் என்று சொல்லிவிட்டு சென்றார். இன்ஸ்பெக்டரை கூப்பிட்டுட்டு என்ன பேசினாங்கன்னு தெரியல.

கொஞ்ச நேரம் கழிச்சு கூப்பிட்ட மாஜிஸ்திரேட் 21ஆம் தேதி வரை ரிமாண்ட் என்று சொன்னாங்க.

ஜெயில்ல ஒரு பிரச்சினையுமில்லை. அப்பாவும் பையனும் டாஸ்மாக் போராட்ட கேஸ்ல வந்ததா சொன்ன வுடனே நல்ல மரியாதை. நீங்க எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுங்க நாங்களும் முழு ஒத்துழைப்பு கொடுக்கறோம்னாங்க.

சிறை அனுபவம் எப்படி இருந்தது? தோழர் வெங்கடேசனிடம் கேட்டேன்.

அமைப்பு போராட்டம்னு இதுவரைக்கும் பத்து முறை ஜெயிலுக்கு போயிருக்கேன் ஒண்ணும் பெருசா பிரச்சினையில்லை. தன்னோட கழனியில குடிச்சுட்டு சண்டை போட்டவங்களை விலக்கி விட்டதுக்காக ஜெயிலுக்கு வந்தவங்க. கள்ளச்சாராயம் குடிக்கப்போய் 30 லிட்டர் சாராயம் காய்ச்சுனதா உள்ள வந்தவங்க, லாரி லாரிய மணல் அடிச்சவனை விட்டுட்டு மாட்டு வண்டியில மணல் எடுத்ததுக்கு கைதாகி உள்ள வந்தவங்கன்னு பலரை பார்த்தோம். டாஸ்மாக்கை எதிர்த்து வந்தீங்களான்னு மரியாதையா நடந்துக்குறாங்க. ஜெயிலுக்கு போன உடனே சோப்பு, பத்திரிக்கைன்னு வாங்கிக்கிட்டோம். ஜெயில்ல சோப்பு தருகிற விசயமே மற்றவங்களுக்கு அப்பத்தான் தெரியும்.

ரெண்டு பேர் மட்டும் போய் என்ன ஆகப்போவுதுன்னு கேட்டா என்ன சொல்வீங்க?

தோழர் ராஜூ வீட்டிலிருந்து முழக்கம் போட்டா வேலைக்காகாது சொன்னாரு. சொன்னது சரிதானே. நாங்கள் ரோட்டுக்கு போனோம். ஆளு கம்மியா இருக்குதுன்னு விட்டு போக முடியுமா? ஆள் இல்லைன்னு சொல்லிட்டு அப்படி எல்லாம் இருக்க முடியாது. இந்த அமைப்புல இரண்டு பேராவது உறுதியாக நின்று போராட்டம் நடத்தினார்கள் என்று தெரியணும்.

வயசான காலத்துல எதுக்கு இவ்வளவு கஷ்டப்படுறீங்கன்னு யாராவது ஜெயிலுக்கு போயிட்டுவந்த உடனே கேட்டாங்களா?

ஜனமெல்லாம் கொரோனாவுல சாவுது, பசியிலே லோல் படுது. எல்லோரும் சொந்த வேலையை பாத்தா ஆவுமா என்னா?அப்போ எதுவும் நடக்காது. யாராச்சும் வயசான காலத்துல ஏன் கஷ்டபடுறீங்கன்னு கேட்டா. சின்னப்பயன் தான… நீ போக வேண்டியதுதானேன்னு கேப்பேன்.

வேலூர் மாவட்டத்துல போராட்டம் எதுவும் நடக்குலன்னு பேர் வந்தா நமக்குத்தானே கவுரவக்குறைச்சல். யார் வந்த என்ன ? எப்பவும் சாவு வரப்போறதுதான். உணர்வுதான முக்கியம்.

உண்மைதான் உணர்வுதான் அனைத்தையும் தீர்மானிக்கிறது…

தகவல் :
மக்கள் அதிகாரம்.

கொரோனா : மோடி அரசின் பருப்பு வினியோகம் – உண்மை என்ன ?

கொரோனா பாதிப்பு பரவத் தொடங்கிய பின்னர் கடந்த மார்ச் 24-ம் தேதி மோடி அரசு நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்தியது. கோடிக்கணக்கான வெளிமாநிலத் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர் திரும்புவதற்கு அவகாசம் கொடுக்காமல் அவர்கள் பட்டினிக்கு தள்ளிவிடப்பட்டனர். இதற்கு எதிராக கண்டனக் குரல்கள் நாடெங்கும் எதிரொலிக்கத் தொடங்கின; மக்களின் அவலக்குரல் ஊடங்களில் வெளிவந்த பின்னரே மோடி அரசு அவசர அவசரமாக மக்களுக்கு உதவித் திட்டத்தை அறிவித்தது.

ஒரு இலட்சத்து 75 ஆயிரம் கோடியில் மக்களுக்கு உதவிகள் வழங்குவது; வீட்டிற்கு ஒரு கிலோ பருப்பு; 20 கிலோ அரிசி, ஒரு குடும்பத்திற்கு ரூ.1000; கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.2000 என பலவிதமான அறிவிப்புகள் வெளிவந்தன. இந்த திட்டங்கள் உண்மையில் மக்களுக்கு பலனளித்ததா?

சான்றாக ஒரு ரேசன் கார்டுக்கு ஒரு கிலோ பருப்பு என்று நிர்மலா சீத்தாராமன் அறிவித்த திட்டம்த்தை பார்க்கலாம்.

மார்ச் 26-ம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் ஒரு கிலோ பருப்பு மாதத் தொடக்கத்தில் வழங்குவதாக உறுதியளித்தார். இது பிரதமரின் கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தின் ஒரு அங்கம் என்றார். ஏப்ரல் 20ம் தேதி மீண்டும் மத்திய அரசாங்கம் இதை உறுதிப்படுத்தியது. இதில் 1,07,077 மெட்ரிக் டன் பருப்பு மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறியது.

நமது நாட்டில் 23.6 கோடி ரேசன் கார்டுகள் உள்ளன. ஒரு கார்டுக்கு ஒரு கிலோ ஒரு மாதத்திற்கு வழங்க வேண்டும் என்றால் 2,36,000 டன்கள் பருப்பு ஒரு மாதத்திற்கு மட்டும் தேவைப்படுகின்றது. ஆனால் மாநிலங்களுக்கு இந்தத் திட்டத்தின்படி தேவையான பருப்பில் சுமார் 21 சதவீதம் மட்டுமே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதாவது, இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டு ஒரு மாதம் கடந்துவிட்ட நிலையில், ஏப்ரல் 25-ம் தேதி வரை மாநிலங்களுக்கு 44,932 டன் பருப்பு மட்டுமே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட பருப்பில் இந்த நாள் வரை 8.2 சதவீதமே வினியோகம் செய்யப்பட்டுள்ளது. இதுதான் இந்தத் திட்டம் அமுலுக்குச் சென்ற யோக்கியதை.

இங்கே நாம் கவனிக்க வேண்டிய விசயம் என்னவெனில், இது கொரோனா காலத்தில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு சமயத்தில் கொடுப்பதற்கானது மட்டுமே. அதாவது, இதனை ஒரு வாரத்திற்குள் மக்களுக்கு கொண்டு சென்று சேர்ப்பதுதான் மக்களுக்கு பயனளிக்கும். ஆனால், ஒரு மாத காலமாகியும் இந்த வினியோகம் 8.2 சதவீதம் என்றால் மத்தியில் ஆளும் மோடி ஆட்சியின் யோக்கியதையை என்னவென்று சொல்வது?

இந்தியாவில் 95 கோடி மக்கள் சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடும்பட்டினியால் பாதிக்கப்பட்ட 117 நாடுகளில் இந்தியா 95-வது இடத்தில் இருந்து 102-வது இடத்திற்கு சென்றுள்ளது. இது மோடி ஆட்சியில் ஏற்பட்ட வளர்ச்சி.

படிக்க:
♦ விசாகப்பட்டிணம் விசவாயுப் படுகொலைகள் : குழந்தையை இழந்த தாய் மீது வழக்கு !
♦ ராம் கோயில் அறக்கட்டளைக்கு நன்கொடைகளை பெற வரி விலக்கு அளித்த மத்திய அரசு !

நிர்மலாவின் “ஒரு கார்டுக்கு ஒரு கிலோ பருப்பு” என்ற திட்டம் எந்த அளவிற்கு பயனளிக்கிறது என்பதை பாருங்கள். ஐந்து பேர் கொண்ட குடும்பத்தை ஒரு பொதுவான அளவீடாக எடுத்துக் கொண்டால், ஒரு குடும்பத்திற்கு ஒரு கிலோ பருப்பு வழங்குவதன் மூலம் ஒரு நபருக்கு 200 கிராம் பருப்பு தான் கிடைக்கும். இதுவும் ஒரு மாதத்திற்கான அளவு. ஆக, இந்தத் திட்டம் என்பது பட்டினியிலும் சத்துக் குறைபாட்டிலும் பாதிக்கப்பட்ட கோடிக்கணக்கான மக்களுக்கு ‘ஒரு சோளப்பொறி’ அளவிற்குதான் பயனளிக்கும்.

அப்படி ஒரு சிறிய உதவியில்தான் 8.2 சதவீதத்தை இந்த அரசு நிறைவேற்றியுள்ளது.

ஆக, இந்திய வரலாற்றில் முதல் முறையாக நாடு முழுவதற்கும் பொது வினியோக முறையில் ஒரு குடும்பத்திற்கு ஒரு கிலோ பருப்பு என்ற இந்த வாக்குறுதி முற்றிலும் தோல்வியடைந்து விட்டது.

***

நிர்மலா சீத்தாராமன் மெத்தப் படித்தவர்; பார்ப்பன சமூகத்தில் இருந்து வந்தவர்; அவர் அமெரிக்காவில் இருந்தவர்; சிந்தனைக் குழாம் போன்றவற்றில் எல்லாம் பங்குவகித்தவர் என்று அவரது பெருமைகளை பார்ப்பன ஊடகங்கள்  ஊதிப் பெருக்கலாம். ஆனால், தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு (NAFED) அதிகாரிகள் இந்தத் திட்டத்தை அமுல்படுத்துவதில் உள்ள பிரச்சினைகளைப் பற்றி சொன்னால், நிர்மலாவைப் பற்றிய பார்ப்பன ஊடகங்கள் உருவாக்கும் பிம்பம் காற்றில் கூட நிற்காது.

பருப்பு வினியோகத்தை இரண்டு வகையில் செய்யலாம். அதில் ஒரு வகை, அரசு நேரடியாக விவசாயிகள் இடம் இருந்து பருப்பு தானியங்களை (பதப்படுத்தப்படாதவை) அரசு நிறுவனங்கள் மூலம் கொள்முதல் செய்து, அவற்றை அரசு மற்றும் தனியார் பதப்படுத்தும் ஆலைகள் (மில்கள்) மூலம் பதப்படுத்தி, அவற்றை லாரிகள், இரயில் மூலமாக மாநிலங்களுக்கு அனுப்பி வைத்து, அங்கிருந்து மாவட்டங்களுக்கு தேவையான அளவு பிரித்துக் கொடுத்து, அவற்றை ரேசன் கடைகள் மூலமாக வினியோகம் செய்ய வேண்டும். இவ்வாறு வினியோகம் செய்வதற்கு அந்தந்த மாநிலங்கள் மத்திய அரசின் உத்தரவை ஏற்றுக்கொண்டு உடனடியாக தங்களது மாநிலத்திற்கு தேவையான பருப்பின் அளவை மத்திய அரசுக்கு சொல்ல வேண்டும்.

இந்தத் திட்டத்தை அமுல்படுத்த விவசாயிகளிடமிருந்து பருப்பு கொள்முதல் செய்யாமல் தனியார் நிறுவனங்கள்  கையிருப்பாக வைத்துள்ள தானியங்களை வாங்கி வினியோகம் செய்யலாம். இதுதான் அவசர காலத்தில் சாத்தியமான எளிய வழி. ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்கள் கொரோனா ஊரடங்கைப் பயன்படுத்தி பதுக்கி வைத்துள்ள பருப்புகளை அரசுக்கு வழங்க அவை தயாராக இல்லை. அரசுக்கும் தனியார் நிறுவனங்களை நிர்பந்திக்கவில்லை. இந்த நிலையில் தான் முதல் வழிமுறையை அமுல்படுத்த முடிவு செய்துள்ளது.

***

NAFED அதிகாரிகள் தெரிவிப்பதைப் பாருங்கள்: ஊரடங்கு நாடுமுழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த பருப்பு வினியோகம் என்பது பெரிய வேலை. இந்திய உணவுக் கழகத்தில் (FCI) உணவு தானியங்களைக் கொள்முதல் செய்யும் வேலையுடன் இந்த பருப்பு வினியோகம் செய்யும் வேலையை ஒப்பிடக்கூடாது.

இந்தியாவில் உ.பி., ம.பி., இராஜஸ்தான், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் சில மாவட்டங்களில்தான் பருப்பு வகைகள் அதிகமாக விளைகின்றன. அதனால், அந்த குறிப்பிட்ட சில பகுதிகளில் இருந்துதான் பருப்பு வகைகள் கொள்முதல் செய்யப்படுகின்றன. பருப்பு பதப்படுத்தும் ஆலைகளும் அந்தப் பகுதிகளில்தான் இருக்கின்றன.

படிக்க:
♦ நிர்மலா சீதாராமன் வெங்காயம் சாப்பிட மாட்டாராம் ! இதுல என்ன பெருமை … எருமை ?
♦ அவுரங்காபாத் விபத்து மட்டுமல்ல, கொரோனா ஊரடங்கால் 383 பேர் இறந்திருக்கிறார்கள் !

இராஜஸ்தானுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் 11,000 டன் பருப்பு தேவைப்படுகிறது. ஆனால் அது மத்திய அரசிடம் இருந்து பெற்றது 2,000 டன் பருப்புதான். அதேபோல, உ.பி. தேவை 35,000 டன் பருப்பு. பெற்ற பருப்பின் அளவோ வெறும் 10 சதவீதம்தான்.

பருப்பு விளையும் முதன்மையான இந்த மாநிலங்களேயே இன்னமும் பருப்பு வினியோகத்தைத் தொடங்கவில்லை என்றால் மற்ற மாநிலங்களில் என்ன நிலைமை என்பது தனிக்கதை. பருப்பு விளையும் மாநிலத்திலேயே அந்த மாநில அரசுகளுக்கு முழுமையாக பருப்பு சென்று சேராததற்கு காரணம் என்ன? மக்களுக்கு எதிராக கட்டியமைக்கப்பட்டிருக்கும் இந்த அரசுக் கட்டமைப்பின் அதிகார வர்க்கத் தடைகளான இலஞ்சம், ஊழல், கமிசனும் மக்களுக்கு எதிரான அதிகார வர்க்க மனோபாவமும் தான் இதற்கு காரணம்.

***

மேலே சொன்னபடி பருப்பு விளையும் மாநிலங்கள் என்பது குறிப்பிட்ட சில வடமாநிலங்களில் குறிப்பிட்ட சில மாவட்டங்கள் தான். இங்குதான் பதப்படுத்தும் ஆலைகளும் உள்ளன. இந்த மாநிலங்களில் விவசாயிகளிடமிருந்து விளைவித்த பருப்பு கொட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும். இந்த தானியங்களை ஆலை மில்களில் அறைக்க வேண்டும். இங்கிருந்து பதப்படுத்தப்பட்ட (உடைக்கப்பட்ட) பருப்புகளை மாநிலங்களுக்கு லாரி மற்றும் இரயில் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். இது மிகவும் சுருக்கமாக சொல்லப்பட்ட வினியோகச் சங்கிலி.

இந்த சங்கிலி இயங்க வேண்டும் என்றால் தொழிலாளர்கள் எல்லா இடங்களிலும் வேலை செய்ய வேண்டும். லாரிகள் இயங்க வேண்டும். சுமார் 2,46.000 டன் பருப்பு வினியோகம் என்றால் இதனைவிட அதிக எடை கொண்ட பருப்புகள் கொள்முதல் செய்யப்பட வேண்டும். இவை குறைந்தபட்சம் 6 பிரதானமான பரிமாற்றங்கள் நடத்தப்பட வேண்டும். (விவசாயி – கொள்முதல் நிலையம் – ஆலைகள் – மாநில அரசுகள் – ரேசன் கடைகள் – மக்கள்) அதாவது இந்த கொள்முதல் செய்யப்படும் தானியங்களைப் போன்று ஐந்து மடங்கு எடுத்துச் செல்லும் வகையில் லாரிகள் தேவை; அதற்கு தேவையான தொழிலாளர்கள்; லாரி சர்வீஸ் தொழில்கள் போன்றவை கணிசமாக இயங்க வேண்டும்.

நாடுதழுவிய ஊரடங்கினால் நிலைமை என்ன? தொழிலாளர்கள் அனைவரும் சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர். லாரி ஓட்டுனர்களில் கணிசமான பேர் தொடர்ந்து லாரி ஓட்டும் வேலைக்கே வருவார்கள் என்று சொல்ல முடியாது. மில்களில் வேலை செய்யும் தொழிலாளர்களை ஆலை முதலாளிகள் கிராமங்களில் இருந்து அழைத்து வர முடியாது. இது மிகப்பெரிய பிரச்சினை. இந்தப் பிரச்சினையைத் தீர்க்காமல் கொள்முதலோ வினியோகமோ முற்றிலும் சாத்தியமில்லை.

ஆனால், விவசாயிகள் அறுவடை செய்த தானியங்களை கொள்முதல் நிலையங்களுக்கு எடுத்து செல்ல இயலாமல் தவிக்கின்றனர். சில இடங்களில் எல்லைகள் மூடப்பட்டுள்ளதாலும் கொண்டு செல்ல முடியவில்லை.

இத்தனையையும் மீறி கொள்முதல் செய்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடுமா என்றால் அதுவும் இல்லை. கொள்முதல் செய்த தானியங்களை பதப்படுத்தும் ஆலைகளுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்க வேண்டும். திடீரென இத்தனை லட்சம் டன் பதப்படுத்துவதை ஒப்பந்தம் போட்டுக் கொள்ளும் அளவிற்கு நமது நாட்டில தனியார் ஆலைகள் தயார் நிலையில் இல்லை.

கொள்முதல் செய்து, ஒப்பந்தங்களும் போட்டு தொழிலாளர்களும் கிடைத்தாலும் இவ்வளவு பருப்புகளை பதப்படுத்த குறைந்தது சில வாரங்கள் ஆகும்.

இந்த வினியோக சங்கிலியை உயிரூட்டுவதில் இரண்டு அம்சங்கள் உள்ளன. ஒன்று அரசு தரப்பில் செய்ய வேண்டிய பணிகள், மற்றொன்று தேவைக்கேற்ப மக்களை (தொழிலாளர்களை) ஈடுபடுத்துவது. இந்த இரண்டில் பிரதானமானது அனைத்து மட்டத்திலும் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதுதான். இதற்கு, நாடு தழுவிய அளவில் குறைந்தபட்சக் கொள்கை முடிவு தேவை.

***

ரு கொள்கை முடிவு இல்லாமல் பருப்புகளை எடுத்து வருவதும், பருப்பு ஆலைகளை இயக்குவதும் சாத்தியமில்லை என்று அகில இந்திய பருப்பு ஆலை சங்கத்தின் தலைவர் சுரேஷ் அகர்வால் தெரிவிக்கிறார்.

வடகிழக்கு மாநிலங்களில் ஒரு பதப்படுத்தும் ஆலைகள் கூட கிடையாது. அங்கு பருப்பு வகைகள் உற்பத்தியும் கிடையாது. அங்கு இருக்கும் ஆலைகள் எல்லாம் கொல்கத்தாவில் தான் உள்ளன. அந்த மாநிலங்கள் ரோஸ் பருப்புகளைக் மக்களுக்கு கொடுக்கின்றன. அந்தப் பருப்புகள் உ.பி. அல்லது ம.பி.யில் இருந்து செல்ல வேண்டும். இது மிகப்பெரிய சவாலான திட்டம். இதற்கான கட்டமைப்பு நடைமுறையில் கிடையாது என்று NAFED (தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு நிறுவனம்) அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

“நிர்மலா சீத்தாராமன் சொல்வது போல செய்ய முடியாது. தானியங்களை முதல்நாள் இரவு ஊறவைத்து காலையில் விதவிதமாக சமைத்துவிட முடியாது. பதப்படுத்தப்படாத பருப்புகளை வாங்குவதற்கு எந்த மாநிலங்களும் தயாராக இல்லை” இதனைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கிறார். “பருப்புகளை வாங்கிக் கொள்வதாக சொன்ன மாநிலங்கள் பதப்படுத்தப்பட்ட பருப்புகளைத்தான் கேட்கின்றன. சாதாரண சூழல்களிலேயே பருப்புகளைப் பதப்படுத்த 10 நாட்கள் தேவைப்படும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.” என்கின்றனர் அந்த அதிகாரிகள்.

அகர்வாலோ, “சொல்வதற்கும் செய்வதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. அவர்கள் ஏதோ சொல்கிறார்கள் ஏதோ செய்கிறார்கள். எந்த ஆலைகளும் அவர்களுடன் இணைந்து வேலையில் இறங்க தயாராக இல்லை. அரசு தரப்பில் ஆயிரக்கணக்கான கட்டுப்பாடுகளை சொல்கின்றனர், இதுபோன்ற காலங்களில் அதிகாரிகள் மிகவும் அதிகாரத்துவப் போக்கு கொண்டவர்களாக உள்ளனர். எங்களை அவர்கள் திருடர்கள் போல நடத்துகின்றனர். 20 சதவீத ஆலை முதலாளிகள் மட்டுமே அவர்கள் கொடுத்த வேலையைச் செய்கின்றனர்” என்கிறார்.

மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் சிரஜ் ஹூசைன், “நிர்மலா சீத்தாராமன் சொல்கின்ற திட்டத்தை நிறைவேற்றும் கட்டமைப்பு நமது நஃபீட்-இடம் இல்லை. குறைந்தப் பட்ச ஆதார விலையில் அடிப்படையில் தான் மாநிலங்கள் பருப்பு வகை தானியங்களை விவசாயிகள் இடமிருந்து கொள்முதல் செய்கின்றன. இவற்றை நஃபீட் மில்களுக்கு அனுப்பி பதப்படுத்த வேண்டும் என்றால் அதற்காக அந்த ஆலைகளுடன் ஒப்பந்தம் செய்திருக்க வேண்டும். மூலப் பருப்புகள் கொள்முதல் நிலையங்களில் இருந்து அரவை மில்களுக்கு அனுப்பப்பட வேண்டும். அதன் பின்னர் அங்கிருந்து அரைக்கப்பட்ட பருப்புகள் மாநிலங்களுக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும். உணவுப் பாதுகாப்புக் கழகத்தைப் போன்று இந்த ஒப்பந்தங்களையும் கட்டமைப்புகளும் நஃபீட்-இடம் இல்லை” என்கிறார்.

இந்தத் திட்டத்தை முறையான காலங்களில் அமுல்படுத்த வேண்டும் என்றால் ஒரு மாதத்தில் கூட முடியாது. அதற்கு முக்கியமான காரணம் இவ்வளவு வேகமாக பதப்படுத்தும் திறன் நம்மிடம் இல்லை என்கிறார்.

அரசுக்கு உண்மையிலேயே வீட்டுக்கு ஒரு கிலோ பருப்பு வழங்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தால், இந்நேரத்தில் வெளிச்சந்தையில் இருந்து பருப்புகளை வாங்கி வினியோகம் செய்திருக்க முடியும். அப்படி ஒரு விருப்பம் அரசுக்கு இல்லை என்கின்றார் அதிகாரிகள்.

தேசிய அவசர நிலையை அறிவித்துவிட்டு, எங்களிடம் அது இல்லை, இது இல்லை என்று சொல்வதன் பொருள் என்ன? அரசிடம் எந்தக் கட்டமைப்பும் இல்லை. இருப்பதையும் செயல்படுத்தும் வகையில் அரசு கட்டமைப்பும் இல்லை. எல்லாம் செயலிழந்து நிற்கின்றன. இதுதான் இன்றைய நிலைமை.

இந்த உண்மையை மறைப்பதில் மட்டும் தீவிரமாக செயல்படுகிறது மோடி அரசு. ஆந்திரா, சட்டிஸ்கர், குஜராத் ஆகிய  மாநிலங்கள் மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்களில் பருப்பு வினியோகம் முழு வீச்சில் நடப்பதாக தெரிவித்தது. ஆனால், அந்த மாநிலங்கள் பருப்பு வகைகளை சொந்தமாக வாங்கி வினியோகம் செய்து வருகின்றன என்று மத்திய அரசு அதிகாரிகள் அறிவிக்கின்றனர். உண்மையில் அந்த மாநில அரசுகள் ஏற்கெனவே வினியோகம் செய்து வந்த பருப்புகளைத் தான் தற்போது இலவசமாக வினியோகம் செய்துள்ளன. இதனையும் மத்திய அரசின் திட்டத்தில் கீழ் செயல்படுத்தியதாக சொல்கின்றர் மத்திய அரசின் அதிகாரிகள்.

மக்களுக்கு நெருக்கடி அதிகரிக்கும் போது இந்த அரசும் அதன் கட்டமைப்பும் தோல்வியுற்று நிற்பதையும் பாஜக அரசு அதனை மூடி மறைத்து மோசடிகள் செய்வது மீண்டும் மீண்டும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. பாசிச கும்பல் தனது செயலின்மையை ஒப்புக்கொள்ளாது; இதனை நாம்தான் அம்பலப்படுத்த வேண்டும்.

– புதியவன்


செய்தி ஆதாரம் :
Why Sitharaman’s ‘Pulses For All’ Promise Still Hasn’t Been Implemented

Sitharaman’s Promise of Pulses Through PDS Unlikely to See Fruition Anytime Soon 

விசாகப்பட்டிணம் விசவாயுப் படுகொலைகள் : குழந்தையை இழந்த தாய் மீது வழக்கு !

0

விசாகப்பட்டிணம் எல்.ஜி. பாலிமர்ஸ் நிறுவனத்தின் லாபவெறியால் நிகழ்ந்த விசவாயுக் கசிவுப் படுகொலைகளுக்குப் பின்னரும் அந்த நிறுவனத்தைச் சேர்ந்த எந்த அதிகாரிகளும் கைது செய்யப்படவில்லை. மேலும் அந்த நிறுவனத்தை உடனடியாக மூடவேண்டும் எனப் போராட்டம் நடத்திய அப்பகுதி மக்கள் மீது வழக்குப் பதிந்து கைது செய்தது மட்டுமல்லாமல், தனது குழந்தையின் உயிரைப் பறிகொடுத்த ஒரு தாயின் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளது ஆந்திர போலீசு.

விசாகப்பட்டிணம் எல்.ஜி. பாலிமர்ஸ் நிறுவனத்தின் லாபவெறியால் ஏற்பட்ட விசவாயுக் கசிவில் படுகொலை செய்யப்பட்ட 12 பேரில் 9 வயது சிறுமி கரிஷ்மாவும் ஒருவர். விச வாயுக் கசிவு ஏற்பட்ட அன்று அதிகாலையில் சிறுமி கரிஷ்மா மற்றும் அவளது 11 வயது அண்ணன் பார்தா ஆகியோரை அழைத்துக் கொண்டு அவர்களது பெற்றோர் அப்பகுதியிலிருந்து வெளியேறிச் சென்றனர். போகும் வழியிலேயே அதிகமான விசவாயுவை நுகர்ந்ததால், குழந்தைகள் இருவரும் மயங்கிச் சரிந்துள்ளனர். அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போது சிறுமி கரிஷ்மா இறந்துவிட்டதாக தெரிவித்தனர் மருத்துவர்கள்.

கடந்த மே 9 அன்று (சனிக்கிழமை) கரிஷ்மாவின் உடல் அவரது குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டது. விசவாயுக் கசிவில் உயிரிழந்தவர்கள் வேறு சிலரின் உடலும் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நேராக எல்.ஜி. பாலிமர்ஸ் நிறுவன வாயிலுக்குச் சென்று அந்நிறுவனத்தை உடனடியாக மூடி சீலிட வேண்டும் என்ற போராட்டத்தில் அப்பகுதி மக்கள் 300-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.

எல்.ஜி. ஆலையைச் சுற்றி போலீசு படை குவிக்கப்பட்டிருந்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், அந்த ஆலையை உடனடியாக மூட வேண்டும் என்று முழங்கினர். அந்தப் போராட்டத்தில் முன்னணியில் இருந்த லட்சுமி, போலீசு உயரதிகாரிகளிடம், அந்த ஆலையை எப்படியாவது மூடிவிடும்படி கைகூப்பிக் கெஞ்சினார்.

தனது மகளின் உயிரைப் பறித்த இந்த ஆலையின் அதிகாரிகள் யாரும் இதுவரை கைது செய்யப்படாதது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.

அவருடன் அப்பகுதி மக்களும் இதே கேள்வியை எழுப்பினர். அவர்களிடம் சமாதானம் பேசிய போலீசு அதிகாரி, கலைந்து செல்லும்படியும், அப்பகுதி மக்களுக்குப் போதுமான நிவாரணத் தொகை கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பகுதி மக்கள், “எங்களுக்கு ஒரு பைசா கூட நிவாரணம் தேவையில்லை. உடனடியாக ஆலையை மூடி சீலிடு” என்று கூறி போராட்டத்தைத் தொடர்ந்தனர். லட்சுமி மூடப்பட்டிருந்த எல்.ஜி பாலிமர்ஸ் ஆலையின் கதவின் மீது ஏறிக் குதித்து உள்ளே இறங்கி, உட்பக்கமாக பூட்டியிருந்த கதவைத் திறந்து விட்டார். அதனைத் தொடர்ந்து பகுதி மக்களும் ஆலை வளாகத்திற்குள் நுழைந்து போராட்டத்தை நடத்தினர். அவர்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி கலைத்தது போலீசு.

இதனைத் தொடர்ந்து, கடந்த திங்கள்கிழமை (11.05.2020) அன்று காலையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 1 கோடிக்கான காசோலைகள் வழங்கப்பட்டது. அன்று மாலையே, எல்.ஜி பாலிமர்ஸ் நிறுவனத்தை மூடக் கோரி சனிக்கிழமை (09-05-2020) போராட்டம் நடத்திய அப்பகுதி மக்களின் மீது வழக்குப் பதிவு செய்ததோடு கைதும் செய்துள்ளது ஆந்திரப் போலீசு.

படிக்க:
♦ பிழையான தகவல்களை உள்ளடக்கிய பேச்சு நிலையாக இருக்குமா ? | பொ.வேல்சாமி
♦ விசாகப்பட்டிணம் விசவாயு கசிவு : கார்ப்பரேட் படுகொலை !

பகுதி மக்கள் 5 பேர் மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் 7 பேர் உள்ளிட்டு 12 பேர் மீது பிரிவு 147 (கலவரம் செய்தல்), 447 (குற்ற நோக்கோடு அத்துமீறி நுழைதல்), 353 (அரசு ஊழியர்களை பணிசெய்யவிடாமல் தடுத்தது), 188 (அரசு ஊழியர்களின் உத்தரவிற்கு அடிபணிய மறுத்தது), 271 (தனிமைப்படுத்தலை மீறியது) மற்றும் 51(A) (அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு நடக்கத் தவறியது) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவிட்டன.

மேலும் எல்.ஜி. பாலிமர்ஸ் நிறுவன வாயிற்கதவின் மீது ஏறிக் குதித்த ‘ஒரு பெண்’ என்று குறிப்பிடப்பட்டு அவரின் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளது. அந்த நாசகார நிறுவனத்தின் கோரத் தாண்டவத்தால் உயிரை இழந்த கரிஷ்மாவின் தாயான லட்சுமிதான் வாயிற்கதவின் மீது ஏறிக் குதித்த ‘அந்தப் பெண்’. ஆனால் இந்தச் சூழலில் லட்சுமியின் மீது நேரடியாக வழக்குப் பதிந்தால் பிரச்சினையாகும் என்பதை உணர்ந்த ஆந்திர போலீசு நயவஞ்சகமாக ‘ஒரு பெண்’ என மட்டும் குறிப்பிட்டுள்ளது.

டில்லியில் இருக்கும் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம், ஸ்டைரினைத் தேக்கி வைத்திருக்கும் உருளைகள் மிகவும் பழையவையாகவும், பராமரிப்பற்றும் இருந்ததுதான், விபத்துக்கான காரணம் என்று அறிக்கை வெளியிட்டது.

இந்திய ஒன்றிய ஆற்றல்துறையின் முன்னாள் செயலரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான ஈ.ஏ.எஸ். சர்மா, இந்த விபத்துக்கு முறையற்று இயங்கும் அந்த நிறுவனமும், அதற்கு அனுமதியளித்த அதிகாரிகளும்தான் காரணம் எனத் தெரிவித்துள்ளார்.

நடந்த படுகொலைக்கு எல்.ஜி. பாலிமர்ஸ் நிறுவனத்தின் லாபவெறிதான் முதன்மைக் காரணம் என்று அம்பலப்பட்டுள்ள நிலையிலும், அந்நிறுவனத்தைச் சேர்ந்த யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. ஆனால், அந்நிறுவனத்தின் நச்சுச் சூழலால் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி வரும் அப்பகுதி மக்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைதும் செய்துள்ளது போலீசு. பெற்ற பிள்ளையை இழந்த பெண்ணின் மீது வழக்குப் போட்டுள்ளது.

இவ்விவகாரத்தை ஓரிரண்டு நாட்களில் அப்படியே கைவிட்டு அடுத்த விவகாரங்களுக்குத் தாவி விட்டன ஊடகங்கள். எல்.ஜி குழுமத்தின் விளம்பரத்திற்காக நாவில் நீர்வடியக் காத்திருக்கும் இத்தகைய ஊடகங்களிடம் அறத்தை எதிர்பார்க்க முடியாது.

அன்று வாரன் ஆண்டர்சன் தொடங்கி, நேற்று அனில் அகர்வால், இன்று எல்.ஜி நிறுவன தலைமைச் செயலதிகாரி வரை அனைவரும் கைது செய்யப்படாமல் இந்த அரசால் பாதுகாக்கப்பட்டே வந்திருக்கின்றனர். இந்தப் படுகொலைகளும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. மரணம் நம் வீட்டு வாசல் வரும்வரையில் அமைதிகாக்கப் போகிறோம் எனில், அந்த நாள் வெகுதொலைவில் இல்லை.


நந்தன்

செய்தி ஆதாரம் :
♦ Cops book cases against gas leak victims, arrest 5 villagers, 7 CPI activists
♦ Mother of Deceased 9-Yr-Old Demands Closure of LG Polymers

பிழையான தகவல்களை உள்ளடக்கிய பேச்சு நிலையாக இருக்குமா ? | பொ.வேல்சாமி

பிழையான தகவல்களை உள்ளடக்கிய பேச்சு நிலையாக இருக்குமா ?

நண்பர்களே…

பொ.வேல்சாமி

ங்களைச் சந்தித்து வெகுநாட்கள் ஆகிவிட்டன. திராவிடச் சிறகுகள் என்ற அமைப்பின் சார்பில் கோவையில் நடைபெற்ற நிகழ்வில்
தோழர் செந்தலை ந. கவுதமன் அவர்களின் காணொளிப் பேச்சை இன்று பார்த்துக் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. அந்தப் பேச்சில் அவரால் குறிப்பிடப்படுகின்ற அடிப்படைத் தரவுகளில் பல சரியானவைகளாக இல்லாமல் பிழையாக இருந்தன. சிறந்த வரலாற்று அறிஞர் என்று நண்பர்களால் பாராட்டப்படுகின்ற தோழர் செந்தலை ந கவுதமன் பேச்சைக் கேட்டு அதிர்ந்தேன். ஆதாரம் இல்லாத இத்தகைய பேச்சுகளை ஐயா அவர்கள் பேசுவது நியாயமா?

1. சர் வில்லியம் ஜோன்ஸால் (28.09.1746 – 27.04.1794) வடமொழி நூல்கள் எல்லாம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டதாகவும் அவரால் செய்யப்பட்ட அந்த ஆங்கில மொழிபெயர்ப்பு உடனடியாக ஜெர்மன் மொழியிலும் இத்தாலி மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டதாகவும் இவற்றின் விளைவாக வடமொழி பற்றிய அறிவு ஐரோப்பா முழுமையும் பரவ வாய்ப்பு ஏற்பட்டுவிட்டதாகவும் கூறுகின்றார். வில்லியம் ஜோன்ஸ் வடமொழி நூல்கள் எல்லாவற்றையும் மொழிபெயர்க்கவில்லை. அந்தக் காலத்தில் வேதங்கள் உள்பட பல முக்கியமான வடமொழி நூல்களைப் பற்றி ஐரோப்பியர்களுக்கு எதுவும் தெரியாது.

வடமொழி நூல்கள் எல்லாவற்றையும் பற்றி ஐரோப்பியர்கள் தெரிந்துகொள்ள தொடங்கிய காலம் என்பது 1847 க்கு பின்னர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. வில்லியம் ஜோன்ஸால் மொழிபெயர்க்கப்பட்ட வடமொழிகள் நூல்கள் 3 மட்டுமே. அவை 1. காளிதாசரின் சாகுந்தலம். 2. கீத கோவிந்தம். 3. மாளவ தரும சாத்திரம் ஆகும். இவருக்கு வடமொழியைக் கற்றுக் கொடுத்த இவருடைய நண்பர் சார்லஸ் வில்கின்சன் “பகவத் கீதை“ மற்றும் “இதோபதேசம்“ என்ற இரண்டு நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இந்தக் காலக்கட்டத்தில் ஐரோப்பியர்கள் அறிந்துகொள்ளத் தொடங்கிய இன்னொரு மொழிபெயர்ப்பு நூல், அவுரங்கசீப்பின் அண்ணன் “தாராசுகோ”வின் முயற்சியால் வடமொழியில் இருந்து பாரசீக மொழியில் மொழிபெயர்க்ப்பட்ட 50 உபநிடதங்கள் ஆகும். இந்த உபநிடதங்கள் முழுமையும் 1801 இல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்தது என்றும் இதன் விளைவாக ஐரோப்பா முழுமைக்கும் வடமொழி பற்றிய ஆர்வம் உண்டானதாகவும் “வியத்தகு இந்தியா” (பக்.5 மற்றும் பக்.6) என்னும் நூலில் பேராசிரியர் A.L.பசாம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். நூலின் அந்தப் பகுதியை உங்கள் பார்வைக்கு வைத்துள்ளேன்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

2. 1812 இல் எல்லீஸால் திருக்குறள் “முழுமையும்” அச்சிட்டு வெளியிடப்பட்டதாக செந்தலை கவுதமன் கூறுகின்றார். எல்லீஸால் வெளியிடப்பட்டது திருக்குறளின் அறத்துப்பால் மட்டுமே. முழுநூலும் அல்ல என்பது குறி்ப்பிடத்தக்கது. அதுமட்டுமல்ல திருவள்ளுமாலையையும் நாலடியாரையும் இணைத்து எல்லீஸ் வெளியிட்டதாகத் தோழர் கூறுகின்றார். அப்படி எல்லீஸ் வெளியிடவில்லை.

திருக்குறளின் 110 வது பாடலாகிய “எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்..” என்று தொடங்கும் குறளுக்கு விரிவுரை எழுத வந்த பரிமேலழகர் 34 புறநானூற்றுப் பாடல் வரிகளை மேற்கோள் காட்டுகின்றார். அந்த மேற்கோளில் பார்ப்பார் தப்பிய என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் குறிப்பை எல்லீசும் மேற்கோள் காட்டி பிராமணர்களை ”the murder of Brahmans” என்று ஆங்கிலத்திலும் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பகுதியை விளக்குவதற்கு புறநானூறு 34 வது பாட்டை மேற்கோள் காட்டுகிறார். அந்த மேற்கோள் உள்ள புறநானூற்று பாடல் வரிகளில் “குரவர் தப்பிய” என்ற வரிகள் உள்ளன. இதே பாடலுக்கு (புறநானூற்றில் 34 வது பாட்டுக்கு) உரை விளக்கம் கூற வந்த “உரைவேந்தர் அவ்வை துரைசாமிபிள்ளை” அவர்கள்,
“குரவர்த் தப்பிய என்பது பார்ப்பார்த் தப்பிய கொடுமையோர்க்குமெனத் திருத்தப்பட்டிருக்கிறது. இத்திருத்தம் பரிமேலழகர் காலத்தேயே செய்யப்பட்டுளதென்பது திருக்குறளுரையாற் காணப்படுகிறது.” என்று கூறுகின்றார். இப்படியான தரவுகள் இருக்கின்ற போது புறநானூற்றுப் பதிப்பில் 34 வது பாட்டில் “பார்ப்பார் தப்பிய” என்று உ.வே.சா திருத்தி விட்டார் என்று செந்தலை கவுதமன் கூறுவதை நாம் எப்படி ஏற்றுக் கொள்வது.?

படிக்க:
♦ டாஸ்மாக்கை நிரந்தரமாக மூடு ! இப்போது மூடவில்லை என்றால் வேறு எப்போது ?
♦ கொரோனா : தூய்மைப் பணியாளர்களின் துயரம் ! தோழர் சீனுவாசலு நேர்காணல் !

3. செந்தலை கவுதமன் அவர்களின் பேச்சில், ஆறுமுக நாவலர் திருக்குறளைப் பதிப்பிக்கவில்லை என்று கூறுகிறார். 1861 இல் பாண்டித்துரை தேவரின் தந்தையார் பொன்னுசாமி தேவரின் உதவியாலும் வேண்டுகோளின்படியும் திருக்குறள் பரிமேலழகர் உரையின் பிழைநீக்கி பதிப்பித்துள்ளார். தொடர்ந்து அவர் காலத்திலேயே (1875) இரண்டாம் பதிப்பாகவும் திருக்குறள் வெளிவருகிறது. ஆறுமுகநாவலின் மறைவுக்கு பின்னர் (1879) பல பதிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. 1861 இல் ஆறுமுகநாவலரால் முதன் முதலாக வெளியிடப்பட்ட இந்நூலின் 110 பாட்டின் பரிமேலழகர் உரை விளக்கத்தின் புறநானூறு 34 வது பாடல் மேற்கோளாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் “பார்ப்பார் தப்பிய” என்ற வரிதான் உள்ளது. அதன் அடிக்குறிப்பில்தான் பாடபேதமாக “குரவர் தப்பிய” என்ற வரியும் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லீஸ் அவர்களும் ஆறுமுகநாவலர் அவர்களும் சமகாலத்தவர்கள் என்பதுபோல தோழர் பேசுகின்றார். எல்லீஸ் மறைந்தது 1819 ம் ஆண்டு. எல்லீஸ் மறைந்து 3 ஆண்டுகள் கழித்து 1822 இல் ஆறுமுகநாவலர் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கர்னல் மெக்கன்சியை எல்லீஸ் தமிழ்ச் சுவடிகளைத் திரட்டுவதற்குப் பணி அமர்த்தினார் என்று குறிப்பிடுகின்றார். கர்னல் மெக்கன்சி எல்லீஸால் பணி அமர்த்தப்படவில்லை. கர்னல் மெக்கன்சி தமிழ் ஏட்டுச்சுவடிகள் மட்டுமல்லாது வடமொழிச் சுவடிகள் தெலுங்குச் சுவடிகள் கல்வெட்டுகள் என்று பலவற்றையும் தொகுத்தவர். அவர் தொகுத்த தெலுங்குச் சுவடிகள் தமிழ்ச் சுவடிகளைவிட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

என்னால் குறிப்பிடப்படும் செய்திகளுக்கான ஆதாரங்களின் படங்களை இணைத்துள்ளேன். தோழர்கள் கவனமாகப் பார்க்கவும்.
தோழர் செந்தலை கவுதமன் அவர்களின் காணொளிப் பேச்சையும் இணைத்துள்ளேன்.

நம்முடைய அரசியல் சார்ந்த விருப்பு வெறுப்புகளைக் காட்டுவதற்காக இப்படி ஆதாரம் இல்லாமல் பிழையாகச் சிலர் பேசுவதைக் காண முடிகின்றது. ஆய்வின் அடிப்படையிலான பேச்சுகளை அவதூறுகளைக் கொண்டு நிரப்புவது என்பது தமிழ் ஆய்வுக்கும் தமிழ்நாட்டு வரலாற்று ஆய்வுக்கும் நன்மை பயக்குமா? தீமை பயக்குமா? என்பதைத் தோழர்கள் விவாதிக்க வேண்டும்.

***

04.05.2020 எனது பதிவில் தோழர் மே.து.ராசுகுமார் அவர்கள் எழுப்பிய ஐயங்களுக்கு…

நண்பர்களே…

புறநானூறு 34 வது பாடலின் 3வது வரியாக “பார்ப்பார் தப்பிய” என்ற தொடர் வருகின்றது. இந்த வரியை பரிமேலழகர் 110 வது திருக்குறள் உரையில் எடுத்துக்காட்டாகக் குறிப்பிடுகின்றார். பரிமேலழகர் உரையை 1861 இல் பதிப்பித்த ஆறுமுகநாவலர் இப்பாடலின் அடிக்குறிப்பில் “குரவர் தப்பிய” என்ற பாடபேதத்தைக் குறிப்பிடுகின்றார். ஆனால் 1840 இல் துரு பாதிரியாரும் இராமானுஜகவிராயரும் இணைந்து முதன்முதலாக வெளியிட்ட திருக்குறள் பரிமேலழகர் உரைப் பதிப்பில் “பார்ப்பார் தப்பிய” என்ற பாடம் மட்டுமே உள்ளது. “குரவர் தப்பிய” என்ற பாடம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நூல் உ.வே.சாமிநாத அய்யர் பிறப்பதற்கு 15 வருடங்களுக்கு முன்பே வந்தது என்பதைக் கவனிக்க வேண்டும். இவ்வாறு இருக்கையில் பார்ப்பார் தப்பிய என்ற திருத்தத்தை உ.வே.சா செய்தார் என்று சிலர் பல காலமாக சொல்லி வருவதன் மர்மம் என்ன?

படிக்க:
டாஸ்மாக்கிற்கு எதிராகப் பேசினால் சிறை ! ஆவலூர் இன்ஸ்பெக்டர் லட்சுமிபதியின் அடாவடி !
♦ குஜராத்திலிருந்து உத்தர பிரதேசம் கிளம்பிய தொழிலாளி வீடு சேரும் முன் உயிரிழந்தார்

தெ.பொ.மீ., பேராசிரியர் துரை அரங்கனார் போன்ற பல பேராசிரியர்களுக்கு ஆசானாக விளங்கிய கோ.வடிவேல் செட்டியார் 1904 இல் திருக்குறள் பரிமேலழர் உரையை தன்னுடைய விளக்கத்துடன் இரண்டு பாகமாக வெளியிட்டுள்ளார். அந்த நூலிலும் பார்ப்பார் தப்பிய என்ற பாடம்தான் உள்ளது.

அடுத்த வந்த காலங்களில் 34 வது புறநானூற்றுப் பாடலை நாம் தொல்காப்பியம் புறத்திணையியல் இளம்பூரணர் உரையில் மேற்கோளாகக் காண்கிறோம். தொல்காப்பியம் அகத்திணையியல் புறத்திணையியல் ஆகிய இரண்டு பகுதிகளையும் பேராசிரியர் நமச்சிவாய முதலியார் 1920 லும் செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளை 1921 லும் முதல்முதலாக அச்சில் கொண்டு வருகிறார்கள். அந்த நூல்களில் இந்தப் புறநானூற்றுப் பாடல் மேற்கோளாக வருகின்றது. பேராசிரியர் நமச்சிவாயர் பதிப்பிலும் தேசபக்தர் வ.உ.சி பதிப்பிலும் “பார்ப்பார் தப்பிய” என்ற பாடம்தான் உள்ளது. “குரவர் தப்பிய” என்ற பாடம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மிகச் சிறந்த பழந்தமிழ்நூல்கள் பலவற்றை, அன்றைய காலத்தில் தமிழ்நாட்டு அறிஞர்களால் மதிக்கப்பட்ட பேராசிரியர்களைக் கொண்டு பதிப்பித்து வெளியிட்டதனால் புகழ்பெற்ற “மர்ரே” நிறுவனத்தார் வெளியிட்ட புறநானூற்றுப் பதிப்பிலும் “பார்ப்பார் தப்பிய” என்ற பாடமே உள்ளது

இந்த செய்திகளுக்கு ஆதாரமான நூல்களின் பக்கங்களை இணைத்துள்ளேன்

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

– பொ. வேல்சாமி

பொ.வேல்சாமி : தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவர். தமிழக வரலாற்று ஆய்வில் ஈடுபாடு கொண்டவர். வரலாற்றுத் தரவுகளை மறுவாசிப்பு செய்வதும் மாற்று வரலாற்றை உருவாக்குவதும் இவரது எழுத்தின் முக்கிய நோக்கம். முகநூலில் தொடர்ச்சியாக எழுதுகிறார்.
எழுதிய நூல்கள்:

  • பொற்காலங்களும் இருண்ட காலங்களும்
  • கோவில் நிலம் சாதி
  • பொய்யும் வழுவும்

கார்ப்பரேட் கடன் : தள்ளுபடியா தள்ளி வைப்பா ?

தள்ளுபடியா தள்ளிவைப்பா ?

கார்ப்பரேட்டுகளுக்கு 68000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்த செய்தி வெளியானதிலிருந்து, அது தள்ளுபடி இல்லை. தள்ளிவைப்புதான் என்று பொருளாதார வள்ளுநர்கள் கூவிக் கொண்டிருக்கிறார்கள். கடனைத் திரும்பப் பெறும் முயற்சிகள் தொடரும் என்பதே அவர்கள் முன்வைக்கும் வாதம். உண்மையில் அப்படித் திரும்பக் கிடைத்துள்ளதா? கடந்த காலத்தின் வரலாறு என்ன? ஒரு பொருளாதார வல்லுநரே என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். (இது ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம். ஆங்கிலக் கட்டுரையின் இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது)

(write-off மற்றும் waiver இரண்டு வார்த்தைகளுக்கும் உள்ள வித்தியாசத்தை வைத்துத்தான் பொருளாதார வள்ளுநர்கள் கம்பு சுத்துவார்கள். எனவேதான் write-offம் தள்ளுபடிதான் என்று இந்தப் பதிவு நிரூபித்தாலும், write-offக்கு ரத்து என்ற சொல்லையே இங்கே பயன்படுத்துகிறேன். write-offக்கு ஆங்கிலத்தில் பொருள் – Cancel (a debt) ரத்து செய்தல்; Concede the loss நஷ்டத்தை ஏற்றுக் கொள்ளுதல்; reduction in the book value of an asset ஒரு சொத்தின் புத்தக மதிப்பைக் குறைத்தல்; The act of cancelling from an account a bad debt. ஆக, write-offக்கு தள்ளிவைப்பு என்ற பொருள் கிடையவே கிடையாது.)

***

பொதுத்துறை வங்கிகள் ‘தள்ளி வைத்த’ கடன்களில் 89% வசூலிக்கப்படவே இல்லை.

என் நண்பர் ஒருவர் சில நாட்களுக்கு முன் கேட்டார் – “பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன்கள் குறித்து எழுதி எழுதி உனக்கு சலிப்பே வரவில்லையா?”

இல்லை என்ற உண்மையைச் சொன்னேன். காரணம், புதிய புதிய விவரங்கள் வந்து கொண்டே இருக்கும்போது, நாமும் புதிது புதிதாய் எழுத வேண்டியிருக்கிறது. அத்துடன், இந்தப் புதிய விவரங்கள் வாராக்கடன் விவகாரம் எத்தனை குழப்படியாக ஆகிக்கொண்டிருக்கிறது என்பதையும் காட்டுகிறது.

மாநிலங்களவையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளைப் பற்றித் தோண்டிப் பார்த்துக் கொண்டிருக்கையில், இன்னுமொரு சுவாரசியமான தரவு கிடைத்தது. அது, பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் விவகாரம் எவ்வளவு மோசமான நிலையில் இருக்கிறது என்பதையும், அரசியல்வாதிகளும் வல்லுநர்களும் அதைப்பற்றி என்ன சொன்னாலும் சரி, அண்மைக்காலத்தில் அந்தப் பிரச்சினை ஏன் முடியப் போவதில்லை என்பதையும் காட்டியது.

வாராக் கடன் (Bad loans) என்பது என்ன? 90 நாட்கள் அல்லது அதற்கும் மேலாக திருப்பிச் செலுத்தப்படாத தொகை வாராக் கடன் ஆகும். குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு வங்கிகள் அதை ரத்து (write-off) செய்து விடும். அதாவது, வங்கிகள் எப்பாடு பட்டாலும் திரும்பப் பெற முடியாத கடன்கள் இவை.

வங்கிகள் இப்படி வாராக்கடன்களை ரத்து செய்யும்போது, அந்த வங்கியின் வாராக்கடன் மொத்தத் தொகை குறைவாகும். அதே நேரத்தில், வங்கிகளின் லாபத்திலிருந்துதான் இந்த வாராக்கடன்கள் கழிக்கப்படும்.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு கடந்த சில ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகள் ரத்து செய்த வாராக் கடன்களின் விவரங்களை அரசு அளித்தது. அட்டவணை 1 காண்க.

அட்டவணை 1:

ஆண்டு ரத்து செய்த கடன் (கோடி)
2014-2015 49,018.00
2015-2016 57,585.00
2016-2017 81,683.00
2017-2018* 84,272.00
மொத்தம் 2,72,558.00

* 2017 டிசம்பர் 31 வரை.
Source: மாநிலங்களவை
குறியிடப்படாத கேள்வி எண்: 3600
பதிலளிக்கிற தேதி 27 மார்ச், 2018

2014 ஏப்ரல் 1 முதல் 2017 டிசம்பர் 31 வரை பொதுத்துறை வங்கிகள் ரத்து செய்த கடன்களின் தொகை ரூ. 2,72,558 கோடி (இரண்டு லட்சத்து எழுபத்திரண்டாயிரம் கோடி). எனவே, அந்த வங்கிகளின் லாபத்திலும் இதன் பாதிப்பு ஏற்பட்டிருக்கும், அதன் விளைவாக ஆண்டுதோறும் வங்கிகள் அரசுக்குத் தரும் லாபப் பங்கும் (டிவிடெண்ட்) குறையும். (அதாவது, அரசுக்கு, பங்குதாரர்களுக்கு வருவாய் குறையும்.)

படிக்க:
பாஜக ஆளும் உ.பி, ம.பி -யில் இனி தொழிற்சங்க உரிமைகள் கிடையாது !
♦ வங்கி மோசடியாளர்களது ரூ.68,607 கோடி மதிப்பிலான கடன்கள் தள்ளுபடி !

பொதுத்துறை வங்கிகளை கார்ப்பரேட்டுகள் கொள்ளை அடிப்பதற்கு பலிகடா ஆகிறவர்கள் சாமானிய மக்கள்தான் என்ற தலைப்பில் நான் இதற்கு முன்பே எழுதிய கட்டுரையிலும் இதைபற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன். இந்தக் கட்டுரையில் இன்னுமொரு விஷயத்தைப் பார்ப்போம்.

ரத்து செய்யப்பட்ட கடன்கள் என்பவை வசூலிக்க முடியாத கடன்கள் என்று பார்த்தோம். ஆனாலும், (கடனுக்கு ஈடாக ஜாமீன் சொத்துகளை வைத்திருந்தால்) வங்கிகள் இந்தக் கடனை வசூலிக்கக் கூடிய சாத்தியமும் கொஞ்சம் உண்டு. அப்படியானால், இப்படி எவ்வளவு வசூலானது என்று பார்ப்போமா? கீழே உள்ள அட்டவணை 2 பாருங்கள்.

அட்டவணை 2:

ஆண்டு வசூலான கடன் (கோடிகள்)
2014-2015 5,461.00
2015-2016 8,096.00
2016-2017 8,680.00
2017-2018* 7,106.00
மொத்தம் 29,343.00

* 2017 டிசம்பர் 31 வரை
Source: மாநிலங்களவை
குறியிடப்படாத கேள்வி எண்: 3600
பதில் அளிக்கிற தேதி 27 மார்ச், 2018

இந்த இரண்டு அட்டவணைகளையும் கொண்டு ஒரு விஷயம் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம் – கடந்த நான்கு ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளால் ரத்து செய்யப்பட்ட கடன் தொகை 2,72,558 கோடி. அதில் வசூலிக்கப்பட்ட தொகை 29,343 கோடி. அதாவது, வசூலானது வெறும் 10.8%. வசூலிக்க முடியாமல் ஊத்திக்கொண்டு போன தொகை 89.2%.

ஆக, அகராதிப்படி பார்த்தால் ரத்து – தள்ளுபடி (write off and a waive off) இரண்டுக்கும் வேறுபாடு இருக்கலாம். ஆனால் நிஜ வாழ்வில் இரண்டுக்கும் இடையே வித்தியாசம் ஏதும் கிடையாது. வாராக் கடன்களை வங்கிகள் வசூலிக்க முடியாத வரையில் ரத்து செய்த கடனும் தள்ளுபடி ஆன கடன்தான். அது தவிர, கடன் தள்ளுபடி செய்தால் வங்கிக்கு அரசு அந்தத் தொகையை ஈடு செய்யும். மொத்த வாராக் கடன்களில் பொதுத்துறை வங்கிகள் தொழில்துறைக்குக் கொடுத்த கடன்கள் 73% சேவைத் துறைக்குக் கொடுத்த கடன்கள் 13%. ஆக, வங்கிகளின் வாராக் கடன்களுக்குக் காரணமே இந்தக் கார்ப்பரேட்டுகள்தான். அதனால்தான், ரத்து செய்த கடன்களை வங்கிகள் வசூல் செய்ய முடிவதே இல்லை.

வாராக் கடன்களில் பெரும்பாலானதை வசூலிக்க முடியாதது ஏன் என்றால், கார்ப்பரேட்டுகளால் மிகச்சிறந்த வழக்குரைஞர்களை வைத்துக் கொள்ள முடிகிறது; அரசியல்வாதிகளின் அணுக்கம் இருக்கிறது. இந்தக் கடன்களுக்கு ஈடாக வைக்கப்பட்ட சொத்துகளை விற்று கடனை திருப்பி வசூலிக்க முடிவதில்லை.

கடந்த நான்கு ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகள் 2,72,558 கோடி கடன்களை தள்ளுபடி (ரத்து) செய்தன என்றால், 2017 டிசம்பர் 31 உடன் உண்மையில் நிலுவையில் உள்ள வாராக்கடன்களின் தொகை 7,77,280 கோடி. ஆக, வங்கிகள் முழுவதையும் இன்னும் தள்ளுபடி செய்துவிடவில்லை. இன்னும் நிறையவே தள்ளுபடி செய்வார்கள்.

குறிப்பு : இந்தக் கட்டுரையை எழுதிய விவேக் கவுல்,. விவேக் கவுல் டயரி என்ற தலைப்பில் தெளிவான, ஆதாரபூர்வமான கட்டுரைகளை தொடர்ந்து எழுதி வருகிறார். மோடி சொல்லாத 25 விஷயங்கள் என்ற தலைப்பில் இவர் எழுதிய மற்றொரு கட்டுரையை ஓராண்டு முன் தமிழில் தந்திருக்கிறேன்.

மூலக்கட்டுரைக்கான இணைப்பு : 

நன்றி : ஃபேஸ்புக்கில் ஷாஜகான்

மதுரை ஒத்தக்கடை எவர்சில்வர் பட்டறை தொழிலாளர்களின் வாழ்க்கை அவலம் !

0

துரை ஒத்தக்கடை பகுதியில் எவர்சில்வர் பட்டறை தொழில் பல நூறு குடும்பங்களுக்கு வாழ்க்கையை வழங்கி வருகிறது. இன்று உலகம் முழுவதும் கொரானா வைரஸின் தாக்கம் அதன் தொடர்ச்சியாக 40 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு அமலில் இருக்கும் இத்தகைய நிலைமையில் எவர்சில்வர் தொழிலாளிகளின் வாழ்க்கை நிலைமையை அறிய அவர்களின் வீடுகளுக்கு சென்றோம்.அதன் அனுபவம்.

எவர்சில்வர் தொழிலில் உற்பத்தி செய்யப்படும் பாத்திரம் பல பிரிவு தொழிலாளர்களின் கையில் சென்றுதான் முழுமையான பொருளாக உருவாகிறது. அதில் வெல்டர் – டிங்கர், பாலிசர், கட்டர், ஸ்பின்னர், ப்ரோக்கன் என பிரிந்து தொழிலாளர்களாகவும், தொழிற்சங்கங்களாகவும் செயல்படுகின்றனர். ஒவ்வொரு பிரிவு தொழிலாளர்களையும் பார்ப்பதற்கு திட்டமிட்டுக்கொண்டோம். முதலில்
வெல்டர் – டிங்கர் தொழிலாளர்களையும் அதன் பின் ஒவ்வொரு பிரிவு தொழிலாளர்களையும் சந்தித்தோம்.

முதல் சந்திப்பே ஒரு தொழிலாளி நகையை அடகு வைத்ததாகவும் வீட்டில் குழந்தைகளுக்கு வாங்கக் கூடிய பாலின் அளவை குறைத்துவிட்டதாகவும் கூறினார். அடுத்து வந்தவர் நகையை அடகு வைத்த கையோடு பணத்துடன் வந்தார் “இது தான் என் மனைவியிடம் இருந்த கடைசி தோடு இன்னும் சில மாதங்கள் ஊரடங்கு நீடித்தால் நானும் எனது குடும்பமும் பட்டினி கிடந்து சாக வேண்டியதுதான்” என கூறி கவலையுடன் சென்றார். பல தொழிலார்களின் நிலைமையும் அடகு வைப்பது கடன் வாங்குவது என சித்தரவதையான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். இன்னும் சில தொழிலாளர்களை பார்க்கும் போது காய்கறி விற்பது, டீ விற்பது என மாற்று வேலையை உருவாக்கியுள்ளனர். 100, 200 சம்பாதிக்கவே படாத பாடு படுகின்றனர்.

ஒரு குடும்பம் தினசரி முட்டை வியாபாரம் செய்ய 30கிலோமீட்டர் வரை தள்ளு வண்டியை இழுத்துக்கொண்டு 150ரூ சம்பாதிக்க நடையாய் நடக்கிறார்கள்.
மாற்று வேலை இல்லாதவர்கள் வேலை கேட்டு அலைகின்றனர். சமீபத்தில் அரசின் சில ஊரடங்கு தளர்வுகளால் கட்டிட வேலை ஏதாவது கிடைக்குமா என தவியாய் தவித்து அழைகின்றனர். எல்லோரிடத்திலும் உள்ள ஒரே ஒற்றுமை தங்கள் வயிற்றை சுறுக்கிக்கொள்வது மட்டுமே.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

அரசின் புழுத்துப்போன அரிசியும், 1000ரூ பணமும் எப்படி எங்களை காப்பாற்றும் என பலரும் கேள்வியெழுப்பினர். வேலையிழந்து நிற்கும் தொழிலாளர்களுக்கு 1000-ரூ நிதி வழங்கப்படும் என அறிவித்தார்கள். நலவாரியத்தில் பதிவு செய்து புதுப்பிக்காதவர்களுக்கு நிவாரணம் இல்லை என சொல்லிவிட்டார்கள். புதுப்பித்து வைத்துள்ளவர்களுக்கும் பணம் கொடுக்க 30 நாட்களாகுமாம் அதிலும் 500ரூ தான் வருமாம். இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் அரசின் அடாவடித்தனத்தை பாருங்கள்.

மக்கள் கடன் வாங்கி, அடகு வைத்து, அரசு கொடுத்த ஆயிரம் ரூபாய் பணமும் போதாமல் திண்டாடும் போது அரசோ 68 ஆயிரம் கோடி பணத்தை 50 கார்ப்பரேட்டுகளுக்கு தள்ளுபடி செய்தது மக்கள்மனதில் விழுந்த பெரிய இடி. இப்போது தெரிகிறது இந்த அரசுக்கு வேண்டியவர்கள் யார்? வேண்டாதவர்கள் யாரென்று?

இந்த ஊரடங்கு முடிந்தால் கூட பட்டறை தொழிலின் நிலைமை மோசமாக இருக்கும் என்கிறார்கள். தொழிற்சங்கங்களின் உரிமைக்கான வேலை நிறுத்தங்கள் 2 மாதம் நடந்தால் அதன் பிறகு வேலை மீண்டும் சரியாக இயங்க 2மாதம் ஆகும் என்கிறார்கள். ஆனால் கொரானா பிரச்சனை முடிந்த பிறகும் வேலை சரியாக இயங்க எவ்வளவு மாதங்கள் நீடிக்கும் என்பது தெரியவில்லை என்கிறார்கள். காரணம் கேட்டால் “பாத்திரங்கள் செய்வதற்கான உலோகங்கள் சென்னை, மும்பையிலிருந்து தான் வர வேண்டும். பாத்திரம் செய்ய பயன்படும் கார்ப்பேட் கல் சீனாவிலிருந்து தான் வர வேண்டுமாம். இது போக திருவிழாக்கள் திருமணங்கள் என்றால் தான் அதிகமான பாத்திரங்கள் சந்தையில் விற்பனையாகும் கொரானா முடியும் வரை அதற்கும் வழியில்லை. ஏற்கனவே உள்ள திறமையான தொழிலாளர்கள் வேறு வேலைகளுக்கு செல்கிறார்கள். வேலை ஆரம்பித்தால் கூட சரியான வருமானம் இருக்காது. அதனால் வேலைகளுக்கு வர மாட்டார்கள். புதியவர்களும் வர வாய்ப்பில்லை ஒட்டுமொத்த தொழிலும் முடங்கிவிடும்” என கூறுகிறார்கள் பட்டறை நடத்தும் நிர்வாகிகள்.

படிக்க:
♦ டாஸ்மாக் கடையை மூடச் செய்த மதுரை பெண்கள் !
♦ இருண்டகாலத்தின் இரண்டாவது இன்னிங்ஸ் ! | அதிஷா

இது போக தொழிலாளர்களின் வீட்டு வாடகை பிரச்சனை உருவெடுத்து வருகிறது. சில வீட்டுக்காரர்கள் கொரானா பிரச்சனை முடிந்தவுடன் வாடகையை வாங்கிக்கொள்வதாக கூறியுள்ளனர். சிலரோ நகையை அடகு வைத்தாவது இப்போதே கொடுங்கள் என நெருக்கடி கொடுத்து வருகிறார்கள். எப்படியும் கொரானா பிரச்சனை முடிந்தவுடன் இந்த வீட்டுவாடகை பிரச்சனையுடன் கடன்காரர்கள் பிரச்சனை, தொழில் முடக்கம் என தீரா நெருக்கடியை நோக்கி தொழிலாளர்களை இழுத்துச் செல்கிறது.

இப்படிப்பட்ட நிலைமையில் மக்களை பாதுகாக்க இந்த அரசு எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன? என்ற கேள்வி நம்மை அச்சுருத்தும் அதே வேளையில் மோடிக்கு வழி சொன்ன 50 வருமான வரித்துறை அதிகாரிகளின் கதை நம்மை மேலும் கடும் கோபத்திற்கு உள்ளாக்கும். 50 வருமான வரித்துறை அதிகாரிகள் 1கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர்களிடமிருந்து 40%வரி வசூலிக்கலாம், கார்ப்பரேட்களிடமிருந்து கூடுதலாக 4%வரி வசூலிப்பதன் மூலமாக வரும் பணத்தை வைத்து கொரானா பிரச்சனையை சரி செய்யலாம் என சொன்னதற்கு மோடி அரசு “நீங்கள் தவறான கருத்துக்களை மக்கள் முன்பு தூண்டுகிறீர்கள் உங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என அறிவித்திருக்கிறார்கள். இருப்பவர்களிடமிருந்து கொஞ்சம் அதிகமாக வாங்கி மக்களை காப்பாற்ற வக்கற்ற இந்த அரசு இருப்பவர்களுக்கே 68,000கோடி பணத்தை தள்ளுபடி செய்ததை என்னவென்று சொல்வது?

மக்கள் பசியால் செத்தாலும் பரவாயில்லை. கார்ப்பரேட் முதலாளிகள் தங்கள் ஒரு மயிரைக்கூட இழக்க விடாமல் பாதுகாக்கிறது இந்த அரசு. மக்கள் கொடும் துன்பத்தை அனுபவித்து வரும் நேரத்திலும் அரசின் நிலை இதுவென்றால் சாதாரண நாட்களில் யோசித்துப்பாருங்கள்.

இதையெல்லாம் விட ஒருபடி மேலே போய் இந்த அரசு செய்யும் கொடுமை மிக கொடூரமானது. காய்கறி மளிகைப்பொருட்களின் விலை உயர்வு, டோல்கேட் கட்டணம் உயர்வு, சிறப்பு ரயிலில் வெளியூர் செல்லும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு கட்டணம் வசூல். டாஸ்மாக் சாராய வசூல் என மக்களை கொள்ளையிட தீவட்டிக்கும்பலைவிட மோசமாக களத்தில் இறங்கியுள்ளது இந்த அரசு.

இந்த நிலைமையில் எவர்சில்வர் தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள்.

  • கேரளா, டில்லியைப்போல் மாதம் நிவாரணத்தொகை வேண்டும். கொரானா பிரச்சனை முடிந்த பிறகும் 6 மாதம் வரை நிவாரணம் வழங்க வேண்டும் என்கின்றனர்.
  • அமைச்சர், எம்.பி, எம்.எல்.ஏ. -களின் பாதி சொத்துக்களை பிடுங்கி மக்களை பாதுகாக்க பயன்படுத்த வேண்டும்.
  • பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்பாட்டிற்குள் வைக்க வேண்டும்.
  • ரேசனில் முறையாக நல்ல அரிசி வழங்க வேண்டும். முறைகேடில்லாமல் மற்ற பொருட்களையும் வழங்க வேண்டும் என்கின்றனர்.

மக்கள் பொது இடங்களில் எப்போதும் வாழ்வாதாரப்பிரச்சனையைப் பற்றித்தான் விவாதித்துக்கொண்டு இருக்கிறார்கள். என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாற்றத்துடன் உள்ளனர். தன்னார்வளர்கள் மட்டும் உதவி செய்து மக்களை காப்பாற்ற முடியுமா என கேட்டால்; அரசு நினைத்தால் மட்டும் தான் மக்களை காப்பாற்ற முடியும் என தடுமாறாமல் கூறுகின்றனர். அரசை பணிய வைக்காமல் நமக்கு வாழ்க்கை இல்லை அதற்கு போராட்டமே ஒரே மருந்து.

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
மதுரை. தொடர்புக்கு : 82200 60452.