Monday, June 22, 2026
முகப்பு பதிவு பக்கம் 482

சிறப்புக் கட்டுரை : மனிதகுலம் பிழைத்திருக்க சோசலிசம் ஒரு கட்டாயம் !

0

ஜான் பெலாமி ஃபாஸ்டர், அமெரிக்காவிலிருந்து வெளிவரும் மன்த்லி ரிவ்யூ இதழின் ஆசிரியர். ஓரேகான் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறை பேராசிரியர். மார்க்சிய சூழலியல் தொடர்பான இவரது பங்களிப்புகள் குறிப்பிடத்தக்கவை. சூழலியலின் பால் மார்க்சியமும், குறிப்பாக மார்க்சின் எழுத்துகளும் கொண்டுள்ள அக்கறைகளை விளக்கப்படுத்தியதில் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது.

வளர்சிதை மாற்றப் பிளவு குறித்த மார்க்சின் கோட்பாடு (Marx’s Theory of Metabolic Rift)  என்ற இவரது புகழ் பெற்ற கட்டுரை, அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் சோசியாலஜியில் வெளியிடப்பட்டது. முதலாளித்துவ கட்டமைப்பின் கீழ் மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான உறவில் நிகழும் நாசகரமான மாற்றங்களைச் சுட்டுவதற்கு மார்க்ஸ் உருவாக்கிய வளர்சிதை மாற்றப் பிளவு என்ற கருத்தாக்கத்தை இக்கட்டுரையின் வாயிலாக அறிமுகப்படுத்தினார் ஃபாஸ்டர்.

ஃபாஸ்டரின் கருத்துப்படி உலகம் இன்று எதிர்கொண்டிருக்கும் சூழலியல் நெருக்கடி என்பது முதலாளித்துவத்தின் விளைவாகத் தோன்றியிருக்கும் ஒரு கட்டமைவு நெருக்கடியாகும். முதலாளித்துவமும் சூழலியல் பேண்தகைமையும் (Environmental Sustainability) ஒன்றுக்கொன்று ஒவ்வாதவை என்கிறார் ஃபாஸ்டர். மனிதகுலத்துக்கு முன்னால் இரண்டு வாய்ப்புகள்தான் உள்ளன. சோசலிசம் அல்லது காட்டுமிராண்டித்தனம் (Socialism or Cannibalism) என்றார் ஜெர்மன் கம்யூனிஸ்டு புரட்சியாளர் ரோசா லக்சம்பர்க். ரோசாவின் கூற்றைச் சற்றே மாற்றி, சோசலிசம் அல்லது இறுதிப் பேரழிவு (Socialism or Exterminism)  எனக் கூறுகிறார் ஃபாஸ்டர்.

பத்திரிகையாளர்கள் ஜிப்சன் ஜான், பி.எம்.ஜித்தீஷ் ஆகியோர் ஜான் பெலாமி ஃபாஸ்டருடன் நிகழ்த்திய நேர்காணலை ஃபிரண்ட்லைன் ஆங்கில இதழ் (“Socialism a necessity for human survival”,  Feb 02, 2018) வெளியிட்டுள்ளது. அதன் சுருக்கப்பட்ட மொழியாக்கத்தைத் தருகிறோம்.

* * *

இயற்கை குறித்து  மார்க்ஸ், எங்கெல்ஸின் கருத்து என்ன?

பொருள்முதல்வாதிகள் என்ற முறையில் மார்க்சும் எங்கெல்சும் வரலாறு குறித்த பொருள்முதல்வாதக் கருத்தாக்கத்தையும், இயற்கை குறித்த பொருள்முதல்வாதக் கருத்தாக்கத்தையும் இயல்பாகவே பிரிக்கவொண்ணாதவையாகக் கருதினார்கள்.

“ஆற்றலைச் சேமிக்கின்ற அதே நேரத்தில், மனிதத் திறனின் சாத்தியங்களை நிறைவு செய்வது என்ற வகையில், மனித இனத்துக்கும் இயற்கைக்கும் இடையிலான வளர்சிதை மாற்றத்தினை அறிவுபூர்வமாக நெறிப்படுத்துவதே சோசலிசம்” என்று விளக்கினார் கார்ல் மார்க்ஸ்.

“பூமி யாருக்கும் சொந்தமானது அல்ல. இந்தப் புவிப்பரப்பிலுள்ள மக்கட்சமூகத்தினர் அனைவரும் சேர்ந்தாலும் கூட, அவர்கள் இந்தப் பூமியைத் தங்கள் உடைமையாகக் கருதவியலாது. ஒரு குடும்பத்தலைவன் குடும்பத்தைப் பேணிப் பாதுகாத்து, அடுத்த வாரிசுக்கு விட்டுச்செல்வதைப் போல, இந்தப் பூமியைப் பேணிப் பாதுகாத்து, வளர்த்து, வருங்காலச் சந்ததிக்கு விட்டுச்செல்லும் காவலர்களே மக்கட்சமூகத்தினர்” என்கிறார் மார்க்ஸ். முதலாளித்துவத்துக்கும் சூழலியலுக்கும் இடையிலான உறவை, அறிவியல்பூர்வமாகவும், ஒரு வலிமையான இயங்கியல் சட்டகத்தில் வைத்தும் புரிந்து கொள்ளும் விதத்திலும் வேறு யாருடைய ஆய்வும் சொன்னதில்லை என்று நான் கூறுவேன்.

சூழலியல் பேரழிவைத் தோற்றுவிப்பது முதலாளித்துவமே!

முதலாளித்துவம் என்ற தற்போதைய சமூகப் பொருளாதார அமைப்பு உலகின் சூழலியல் அமைப்புகள் அனைத்தையும் அச்சுறுத்துவதோடு நிற்கவில்லை. இந்தப் பூமியே மனித குலத்தின் இருப்பிடமாக தொடர்ந்து நீடித்திருக்குமா என்ற அச்சுறுத்தலை விடுக்கிறது. இது கேள்விக்கிடமற்ற உண்மை. இன்றைய அறிவியலின் எல்லாத்துறைகளும் இந்த உண்மையை அங்கீகரிக்கின்றன. 2017 நவம்பரில் உலகின் 184 நாடுகளைச் சேர்ந்த 15,000 அறிவியலாளர்கள் இது குறித்து மனித குலத்தை இன்னொருமுறை எச்சரித்தார்கள். எனவே, நாம் கேள்வியை இப்படி எழுப்பவேண்டியுள்ளது.

புவியின் அழிவை நோக்கிச் செல்வதைத் தவிர்க்கவியலாததாக்குகின்ற இந்தப் போக்கிற்கான கூறுகள், முதலாளித்துவத்தின் இயக்கத்தைத் தீர்மானிக்கின்ற விதிகளிலேயே இருக்கின்றனவா? ஆம் என்பதுதான் இதற்கான விடை. முதலாளித்துவத்தின் விதி ஒன்றுதான். அதை மார்க்சின் சொற்களில் கூறுவதாயின், “மூலதனத்தைக் குவி, குவி, மேலும் குவி என்பதுதான் மோசஸின் இறைக்கட்டளை.”

அதிகரித்த அளவில் மூலதனத்தைக் குவிப்பதைத் தவிர, இந்த முதலாளித்துவ அமைப்பிற்கு வேறு எதைப் பற்றியும் அக்கறை இல்லை.  அத்தகைய மூலதனக் குவிப்பு சாத்தியமாக வேண்டுமென்றால், பொருளாதாரம் முடிவே இல்லாமல் வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும். இவ்வாறு வளரவேண்டுமானால், உலகிலுள்ள அனைத்துமே வாங்கவும் விற்கவுமான பண்டமாக்கப்படவேண்டும். உலகமே பணத்தால் ஆனதாக மாற்றப்படவேண்டும்.

இந்தப் பூமியின் உயிரியல், புவியியல், வேதியியல் இயக்கப்போக்குகளில் தோன்றும் முறிவுகளும் பிளவுகளுமே (Ruptures or Rifts in the Bio-Geo-Chemical Processes of the Planet)  இதன் விளைவு. இப்பிரச்சினையைத்தான் வளர்சிதை மாற்றப் பிளவு என்று கணித்தார் மார்க்ஸ் – இன்றைய சூழல் அமைப்பியலாளர்கள் கணிப்பதைப் போலவே.

தொழில்நுட்ப முன்னேற்றங்கள் சூழலியல் நெருக்கடிக்கு ஒரு தீர்வை வழங்கக் கூடுமா?

தொழில்நுட்பம் குறித்துப் பல தவறான அபிப்ராயங்கள் நிலவுகின்றன. நமது காலத்தின் மிக முக்கியமான தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்குக் காரணம் – தனியார் மூலதனக் குவிப்புக்கான கட்டமைப்பு என்ற பொருளில் – முதலாளித்துவமல்ல.

புதிய கண்டுபிடிப்புகள் இலக்கை மிகத் துல்லியமாகத் தாக்கும் சாத்தியத்தை வழங்குவதால், அணு ஆயுதங்களை இதற்குப் பொருத்தமாக நவீனப்படுத்தும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டிருக்கிறது. துல்லியமாகத் தாக்க முடியும் என்பதால், இன்றைய தொழில்நுட்ப முன்னேற்றத்தின் விளைவாக அணு ஆயுதப் போர் கூட சாத்தியமே என்ற ஆபத்தான, அபத்தமான கருத்துகளும் உருவாகத் தொடங்கியிருக்கின்றன. ஆனால், இந்த புவிக்கோளத்தில் தோன்றியிருக்கும் சூழலியல் முறிவை எதிர்கொள்வது எப்படி என்ற பிரச்சினையில் இந்த தொழில்நுட்ப முன்னேற்றங்களைப் பயன்படுத்துவது குறித்து யாரும் சிந்திப்பதில்லை.

சூழலியல் நெருக்கடியைத் தீர்ப்பதற்கான எல்லா தொழில்நுட்பங்களும் நம்மிடம் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், மூலதனத்தை மென்மேலும் குவித்துக் கொள்ளும் பொருட்டு, இயற்கை இந்தப் பூமிக்கு விதித்திருக்கும் வரம்புகளைத் தாண்டிப் பொருளாதாரத்தை வளரச்செய்ய வேண்டுமென்றும், இந்த நோக்கத்தைப் பாதுகாப்பான முறையில் நிறைவேற்றிக் கொள்ள வேண்டுமென்றும் முதலாளித்துவ அமைப்பு விரும்புகிறது. இந்த விருப்பத்தைத் தொழில்நுட்பத்தால் தீர்த்துவைக்க முடியாது.

இயற்கை விதிக்கின்ற எல்லா வரம்புகளையும் மீறப்பட வேண்டிய தடைகளாக மட்டுமே கருதுகின்ற முதலாளித்துவத்தின் மிகக் குறுகலான பார்வையை நாம் எதிர்கொண்டிருக்கிறோம். இப்பிரச்சினையைக் கடக்கவியலாத இயற்கையின் வரம்புகள் (Insuperable natural limits) என்று அழைத்தார் மார்க்ஸ். நாம் இந்தச் சமூகத்தை அர்த்தமுள்ள சமத்துவத்தையும் சூழலியல் பேண்தகைமையையும் நோக்கிப் பெருமளவில் நகர்த்திச் செல்ல வேண்டுமானால், – சுதந்திரமும் மனித குலத்தின் எதிர்காலமும் இதைத்தான் கோருகின்றன – சமூக உறவுகளை நாம் மாற்றியமைப்பது அவசியம். இந்த முதலாளித்துவ கட்டமைப்பு அதனை ஏற்றுக்கொள்ளாது.

சோசலிசம் இயற்கையைச் சீரழிக்காது என்பதற்கு என்ன உத்திரவாதம்?

“உற்பத்திச் சக்திகளின் உயர்ந்த கட்ட வளர்ச்சியை சோசலிசம் கோருகிறது என்று மார்க்சியம் கூறுவதால், அது இயற்கையை மிகப்பெரும் அளவில் சுரண்டுவதற்கும் அழிப்பதற்கும் வழிவகுக்காதா?” என்று கேட்கப்படுகிறது. உற்பத்தி சக்திகளின் உயர்ந்த கட்ட வளர்ச்சி என்பதன் பொருள் என்ன? உற்பத்தி சக்திகளில் தலையாய சக்தி மனிதர்கள்தான் என்பதையும் அவற்றின் வளர்ச்சி என்பது வேலைப்பிரிவினயின் வளர்ச்சியே என்பதையும் மார்க்ஸ் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

“இறுதியாக சோசலிசத்தின் கீழ் உற்பத்தியாளர்களின் ஒருங்கிணைவானது, மனித சாத்தியத்தின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையிலும், ஆற்றலைச் சேமிக்கும் வகையிலும் இயற்கையுடனான தமது வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும்” என்கிறார் மார்க்ஸ். இதனை உற்பத்தி உற்பத்திக்காகவே என்றோ, தொழில்மயம் தொழில்மயத்துக்காகவே என்றோ யாரும் விளக்கப்படுத்த முடியாது. வளர்ச்சியின் அலகு இந்தப் பூமிதான் என்பதால், பேண் தகைமையைத்தான் (Sustainability) மார்க்ஸ் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்.

பருவநிலை மாற்றம் அறிவியல் வழியில் நிரூபிக்கப்பட்ட பின்னரும் அதனைச் சிலர் மறுப்பது ஏன்?

பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டில் அறிவியல் எந்த அளவுக்கு அசைக்க முடியாத உறுதியுடன் இருக்கிறதோ, அதைக் காட்டிலும் சற்று அதிகமாகவே பருவநிலை மாற்றம் குறித்த விவகாரத்தில் இன்றைய அறிவியல் உறுதியாக இருக்கிறது.

“இது அனைத்தையும் மாற்றுகிறது” (This Changes Everything -Naomi Klein)  என்ற தனது நூலில் நவோமி கிளைன் சரியாகத்தான் சொல்கிறார். அவரது கருத்துப்படி பருவநிலை மாற்றப் பிரச்சினையை வலதுசாரிகள் மறுப்பதற்கான காரணம் மிகவும் வெளிப்படையானது.

புவி சூடேறுதலைக் கட்டுப்படுத்துகின்ற முயற்சியானாலும் சரி, அல்லது புதைபடிவ எரிபொருள் தொழிலின் மீது (fossil fuel industry) கட்டுப்பாடுகளை விதிக்கின்ற முயற்சியானாலும் சரி, அவற்றை முதலாளித்துவத்துக்கு எதிரான அச்சுறுத்தலாகவும் புதைபடிவ எரிபொருள் தொழிலை மையமாகக் கொண்ட வாழ்க்கை முறைகளுக்கு எதிரான அச்சுறுத்தலாகவுமே வலதுசாரிகள் காண்கிறார்கள். அந்த வகையில் வலதுசாரிகள் அஞ்சுவது சரிதான் (The Right is right)  என்கிறார் நவோமி கிளைன். பருவநிலை மாற்றத்தைத் தடுப்பதற்கான இயக்கமென்பது தவிர்க்கவியலாமல் புரட்சிகரமான மாற்றத்துக்கானதாகவும் முதலாளித்துவத்துக்கு எதிரானதாகவும் இருக்கிறது என்கிறார் நவோமி கிளைன்.

நவோமி கிளைன் வலதுசாரிகளை விமரிசித்த போதிலும், அவரது உண்மையான இலக்கு வலதுசாரிகள் என்பதை விடத் தாராளவாத மையவாதிகளே (liberal centrists) ஆவர். இந்த மையவாதிகள் வேறொரு முறையில் பருவநிலை மாற்றப் பிரச்சினையை மறுக்கிறார்கள். சமூக உறவுகளில் மாற்றத்தைக் கொண்டு வராமலேயே, சந்தை மற்றும் தொழில்நுட்பத்தின் துணையுடன் மந்திர வித்தையைப் போல புவி சூடேறுதலைத் தடுத்து விட முடியும் என்று எதார்த்தத்துக்குப் புறம்பான வகையில் வாதிடுகிறார்கள்.

சூழலியல் பேரழிவை நம்மால் தடுக்க முடியுமா?

நம்மை நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலியல் பேரழிவிலிருந்து தப்புவதற்கு தொழில்நுட்பத் தடைகளோ, வேறு பௌதிகத் தடைகளோ ஏதும் இல்லை. ஆனால், வழமையான முறையில், அதாவது, மூலதனக் குவிப்பு வழக்கம் போல நிகழ்ந்து கொண்டிருக்க, அதன் போக்கிலேயே இப்பிரச்சினைகளைத் தீர்க்கவியலாது.

ஒரு பேரழிவைத் தடுக்கின்ற அதே நேரத்தில், பெரும்பான்மையான மக்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்தவும் முடியும். சாத்தியமான தீர்வுகள் பல உள்ளன. ஆனால், அநேகமாக அவை அனைத்துமே மூலதனக் குவிப்புக்கு எதிரானவையாகவே இருக்கின்றன.

அமெரிக்காவில் யாருக்கும் தேவைப்படாத, யாரும் விரும்பாத பொருட்களை, பெரும்பாலும் குப்பைகள் என்று சொல்லத்தக்கவற்றை மக்களின் தலையில் கட்டுவதற்கான விளம்பரங்களுக்காக மட்டும் ஒரு டிரில்லியன் டாலர்கள் ஆண்டுதோறும் செலவிடப்படுகின்றன.

உலகப் பொருளாதாரத்தில் சூழலியில்ரீதியில் அழிவுத்தன்மை வாய்ந்த துறை இராணுவம். அழிவினை இலக்காகக் கொண்ட இந்தத் துறைக்கு ஆண்டுதோறும் ஒரு டிரில்லியன் டாலர்களைச் செலவிடுகிறது, அமெரிக்கா. மேலும் பல எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும். இத்தகைய செலவுகள் அனைத்துமே தேவையற்றவை. எனினும், இவற்றையெல்லாம் மாற்ற வேண்டுமென்றால், மூலதனத்தின் இயக்க விதிகளுக்கு எதிராகச் செயல்படுவது அவசியம்.

ஒரு புரட்சிகரமான எதிர்வினை என்பதன் பொருள் நாம் விதிகளை மாற்ற வேண்டும் என்பதுதான். பெட்ரோல்ட் பிரெக்ட் கூறியதைப் போல, எரிந்து கொண்டிருக்கும் இந்த வீட்டிலிருந்து வெளியேறுவதற்கு நாம் வழி தேடவேண்டும். அதற்கான நமது போராட்டத்தில்தான் எதிர்காலம் குறித்த நம்பிக்கையையும் நாம் பெற முடியும்.

முதலாளித்துவ நெருக்கடியும் பாசிசமும்

அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் நாம் காணும் பாசிசத்தின் எழுச்சி என்பது மையப் பொருளாதாரங்களின் மூலதனம் எதிர்கொள்ளும் கட்டமைவு நெருக்கடியுடன் தொடர்புள்ளவை.

டிரம்பும் வெள்ளை மாளிகையும்  என்ற எனது நூலில் இத்தகைய பிரச்சினைகள் பலவற்றைக் கையாண்டிருக்கிறேன். பாசிசம் என்பது நெருக்கடியில் சிக்கிய முதலாளித்துவக் கட்டமைப்பிலிருந்து பிறப்பது. அது குறிப்பான வர்க்க அடித்தளத்தைக் கொண்ட தெளிவானதொரு அரசியல் கட்டமைப்பு.  தாராளவாத ஜனநாயக அரசின் நெருக்கடியையும் பாசிசத் தன்மை கொண்ட அரசமைப்பால் அது மாற்றீடு செய்யப்படுவதையும் இது காட்டுகிறது.

1930 -களிலும் 40 -களிலும் பாசிசம் குறித்த விமரிசனமென்பது மார்க்சியத்திடமிருந்துதான் வந்தது என்றபோதிலும் அது பரவலாக உயர்த்திப் பிடிக்கப்பட்டது. ஒரு அரசமைப்புச் சட்டத்தின்படியான ஆட்சி நடப்பதைப் போன்ற தோற்றத்தை பாசிச அரசுகள் பராமரித்த போதிலும், தாராளவாத ஜனநாயக அரசுக்குரிய வரம்புகளை மறுத்து, முதலாளித்துவ ஆளும் வர்க்கம் நடத்துகின்ற ஆட்சி என்றவாறே பாசிசம் புரிந்து கொள்ளப்பட்டது.

பின்னர் முதலாளித்துவத்துக்கும் பாசிசத்துக்கும் இடையில் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று காட்டும் விதத்தில் பாசிசத்துக்கு வியாக்கியானம் அளிப்பதற்குத் தாராளவாதக் கோட்பாட்டுப் பிரிவினர் அரும்பாடுபட்டார்கள். பாசிசம் என்பதை ஒரு வகை உளவியல் பிறழ்ச்சி போலக் காட்டுவதற்கும், நிறவெறி தோன்றிய வரலாற்றுப் பின்புலத்திலிருந்து அதனைப் பிரித்தெடுத்துவிட்டு, நிறவெறிதான் பாசிசம் என்பதுபோலக் காட்டுவதற்கும் இவர்கள் பெரிதும் முயன்றார்கள். பாசிசம் என்பதை அரசியல்ரீதியான வர்க்கக் கட்டமைவாக நாம் புரிந்து கொள்வது மிகவும் முக்கியமானது. அப்போதுதான் அதனைத் தீர்மானகரமாக முறியடிக்க முடியும். பெட்ரோல்ட் பிரெக்ட் கூறியதைப் போல, முதலாளித்துவத்தை எதிர்க்கத் தயாராக இல்லாதவர்கள் பாசிசத்தை எதிர்க்க முடியாது.

ஒரு புதிய புரட்சிகர சூழலை நாம் வந்தடைந்து விட்டோமா?

முதலாளித்துவக் கட்டமைப்பை ஒரு நாளில் கடந்து சென்றுவிட முடியாதென்பதை நாம் அறிவோம். நிலப்பிரபுத்துவ வர்க்கத்தை வெற்றி கொள்வதற்கு முதலாளித்துவ வர்க்கத்துக்குப் பல நூற்றாண்டுகள் ஆயின. நாம் நீண்டதொரு புரட்சி என்ற கோணத்தில் சிந்திக்க வேண்டியிருக்கிறது. அதே நேரத்தில், தன் ஒவ்வொரு அடி வைப்பிலும் அது புரட்சிகரமானதாகவும் இருக்க வேண்டியுள்ளது. இந்தப் பூமியும் நாமும் பிழைத்திருக்க வேண்டுமென்றால், மூலதனத்தின் இயக்க விதியை எதிர்த்துத்தான் நாம் நகர வேண்டும். மூலதனக் குவிப்பின் தர்க்க நியாயத்தை முறியடிக்க இடையறாது போராடவேண்டும். இது நம்முடைய காலம் நம் அனைவருக்கும் அளித்திருக்கும் பாடமாகும்.

சோசலிசம் அல்லது காட்டுமிராண்டித்தனம் என்று நாம் பேசும் நிலை ஒருகாலத்தில் இருந்தது. இன்று நமது தெரிவு சோசலிசம் அல்லது இறுதிப் பேரழிவு என்பதாக மாறிவிட்டது. சோசலிசத்தை நோக்கிய முன் நகர்வு என்பது தவிர்க்கவியலாத் தேவை ஆகிவிட்டது. மனித சுதந்திரம் என்ற இலட்சியத்துக்காக மட்டுமல்ல, மனித இனம் பிழைத்திருப்பதற்கான வழியே  சோசலிசம்தான் என்றாகிவிட்டது.

150 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று மார்க்சுடைய மூலதனத்தின் பொருத்தப்பாடு குறித்து..

மார்க்சின் விமரிசனபூர்வமான இயங்கியல் ஆய்வுமுறையும், முதலாளித்துவ சமூகம் குறித்த அவரது வரலாற்று ஆய்வுகளும் அவரது பணியைத் தன்னிகரற்றதாகவும் தவிர்க்கவியலாததாகவும் ஆக்கியிருக்கிறது. கடந்த 150 ஆண்டு காலத்தில் சமூக விஞ்ஞானத்துறையில் நிகழ்த்தப்பட்டுள்ள ஆய்வுகள் அனைத்தைக் காட்டிலும் மார்க்சியம் நெடிதுயர்ந்து நிற்கிறது.

மாறி வரும் வரலாற்றுச் சூழலுக்கு ஏற்ப சோசலிச இயக்கம் முன்னேறிச் செல்லச் செல்ல, தான் வாழ்ந்த காலத்தின் தேவைகளுக்கு அப்பால் நெடுந்தொலைவுக்கு ஊடுறுவிப் பார்த்த மார்க்சின் சிந்தனைகளுக்குள் பொதிந்திருக்கும் புதிய, புதிய அறிவியல் கூறுகளை அது கண்டு கொள்ளும் என்று ரோசா லக்சம்பர்க் ஒரு முறை சொன்னார். அது உண்மையென நிரூபிக்கப்பட்டு வருகிறது.

நம்முடைய வரலாற்றுக் கட்டத்தின் தேவைகளுக்கேற்ப நமது போராட்டங்கள் புதிய புதிய வடிவங்களை எடுக்கலாம். ஆனால், அவருடைய ஆய்வுமுறை நீடித்து நிற்கிறது.

மொழியாக்கம்: சூரியன்

புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2018 இதழ்

மின்னூல்:

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.ஃகே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

 

பாட்டில் தண்ணீர் பாதுகாப்பானதா ?

1

மீபத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்ப் மீடியா என்ற ஒரு பத்திரிக்கை நிறுவனம், நடத்திய ஆய்வில் நாம் அருந்தும் பாட்டில் தண்ணீரில் ஆயிரக்கணக்கான பிளாஸ்டிக் நுண்துகள்கள் கலந்துள்ளது தெரிய வந்துள்ளது.

சுத்தமான நீர் வேண்டும் என்று தான் பாட்டில் தண்ணீருக்கும், கேன் தண்ணீருக்கும் தண்டம் கட்டி பருகுகிறார்கள், மக்கள். இதிலுமா பிரச்சினை? என நீங்கள் எண்ணலாம்.

உலக அளவிலான பாட்டில்-கேன் என கொள்கலனில் அடைக்கப்பட்டு விற்கப்படும் தண்ணீர் சந்தையின் மதிப்பு ஓராண்டுக்கு சுமார் 147 பில்லியன் அமெரிக்க டாலர்கள். அதாவது 9 இலட்சத்து 56,000 கோடி ரூபாய்கள்.

ஆர்ப் மீடியா நிறுவனம், பாட்டில் தண்ணீர் உற்பத்தி செய்யும் 11 நிறுவனங்களின் 250 பாட்டிலை வாங்கி சோதனைக்கு உட்படுத்தியது. மொத்தம் 5 கண்டங்களில், 9 நாடுகளில் இருந்து 19 பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு அங்கிருந்து குடிநீர் பாட்டில் மாதிரிகள் வாங்கப்பட்டன. இந்நிறுவனங்களின் பாட்டில் குடிநீரில் பாலி எத்திலின் தெரெப்தலேட் (PET) என அழைக்கப்படும் பிளாஸ்டிக் வகை கலந்திருக்கிறது.

உலக அளவில் விற்பனை செய்யப்படும் பாட்டில் குடிநீரில் 100 மைக்ரான் அளவிற்கு அதிக அளவிலான பிளாஸ்டிக் துகள்கள் சராசரியாக லிட்டருக்கு 10.4 எண்ணிக்கையில் இருக்கின்றன. சில நிறுவனங்களின் பாட்டில் குடிநீரில் லிட்டருக்கு 10,000 துகள்கள் வரை இருந்திருக்கின்றன. அதேபோல் 100 மைக்ரானுக்குக் குறைவான அளவிலான பிளாஸ்டிக் துகள்கள் சராசரியாக லிட்டருக்கு 314.6 எண்ணிக்கையில் இருக்கின்றன.

எடுக்கப்பட்ட மாதிரிகளில் 93% பாட்டில்களில் பிளாஸ்டிக் துகள்கள் கலந்திருக்கின்றன.  இதே நிறுவனம் கடந்த ஆண்டு குழாய் நீரில் கலந்திருக்கும் பிளாஸ்டிக் துகள்கள் குறித்த ஆய்வறிக்கை வெளியிட்டது. அதன்படி உலக அளவில் குழாய் நீரில் கலந்துள்ள பிளாஸ்டிக்கின் அளவு சராசரியாக லிட்டருக்கு 4.45 எண்ணிக்கையில்தான் இருக்கிறது. இது பாதுகாப்பான குடிநீர் எனக் கூறி விற்கப்படும் பாட்டில் குடிநீரை விட மிகவும் குறைவு.

உடம்பில் உட்கொள்ளப்படும் பிளாஸ்டிக் துகள்களில் சுமார் 90% நமது உடல் வெளியேற்றிவிடுகிறது என்றும் மீதமுள்ள 10% துகள்கள் நமது உடலின் திசுக்கள் மற்றும் கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட பாகங்களில் தங்கிவிடுவதாகவும் குறிப்பிடுகின்றனர். மேலும் இந்த பிளாஸ்டிக்கில் உள்ள இரசாயனங்கள் உடலில் எவ்வகையான பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பது குறித்த முழுமையான ஆய்வு எதுவும் இதுவரை இல்லை.

ஏகாதிபத்தியங்களால் சுரண்டப்படும் மூன்றாம் உலக நாடுகளில் தண்ணீர் வழங்கல், சேவை என்ற நிலையில் இருந்து சந்தைக்கானதாக மாற்றப்பட்டு வருகின்றது. கடந்த 30 ஆண்டுகளில் பல நாடுகளில் தண்ணீரை தனியார்மயமாக்கி விட்டார்கள்.

இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் தண்ணீர்  தனியார் வசம் சென்று கொண்டிருக்கிறது. உலகவங்கியின் உத்தரவிற்கு இணங்க தேசிய நீர் பாதுகாப்பு மசோதாவை நம் மீது திணிக்கத் தயாராகியிருக்கிறது மோடி அரசு. இதற்கான வரைவை கடந்த காங்கிரசு ஆட்சியிலேயே கொண்டு வந்தனர். அதற்கு எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து   அம்மசோதா கிடப்பில் போடப்பட்டது.

இந்தியாவைப் பொறுத்தவரையில், சுத்தமான நீரைப் பெற தனியாரை நாடும் நிலையை ஏற்படுத்தி விட்டார்கள். சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என தரக்கட்டுப்பாடு வைத்து அதனைக் கறாராக அமல்படுத்தும் மேற்குலகிலேயே பாட்டில் தண்ணீரில் அதிக அளவில் பிளாஸ்டிக் இருப்பது அம்பலமாகி இருக்கிறது.

இந்தியாவிலோ இதற்கென எந்த கட்டுப்பாடும் இல்லை. இருக்கும் பாதுகாப்பு முறைகளெல்லாம் அதிகார வர்க்கத்தின் ஊழல்களால் பலனில்லாமல் தூங்குகின்றன.

இதை விட முக்கியமானது, தண்ணீர் என்றால் அது பாட்டில், பாக்கெட், கேன் என மாற்றி விட்டார்கள். மக்கள் வருமானத்தில் கணிசமான அளவு குடிநீருக்குச் செல்கிறது. பொது சேவையில் பெறப்படும் குடிநீர் பாதுகாப்பற்றது என்பதாக தற்காலத்தில் மக்கள் மனங்களில் மாற்றப்பட்டு விட்டன. உணவகங்கள், அலுவலகங்கள் அனைத்திலும் தனியார் நிறுவனங்களின் குடிநீரே ஆதாரங்களாக இருக்கின்றன. இந்நிலையில் பாதுகாப்பான நீர் குறித்த இத்தகைய விழிப்புணர்வு யாருக்கு ஆதாயம்?

இனி பாட்டிலில் பிளாஸ்டிக் துகள் இல்லாத உயர்தர குடிநீர் என அடுத்த சரக்கு சந்தையில் புதிதாக விற்கப்படும். இப்போது செலவழிப்பதை விட இனி குடிநீருக்கான பட்ஜெட் அதிகரிக்கும். தண்ணீரில் கலந்திருக்கும் தனியார் மயம் எனும் விஷத்தை முறியடிக்காமல் பாதுகாப்பான பாட்டில்களால் என்ன பாதுகாப்பு வந்து விடப் போகிறது?

மேலும் :

போராட்டக்களத்தில் புது மொட்டுக்கள் ! இளம் தோழர்களின் அனுபவம் !

3

மதுரை காவிரி தீர்ப்புக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டு கைதான இளம் தோழர்களின் அனுபவம்!

காவிரி நதிநீர் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் தமிழகத்திற்கு சேர வேண்டிய 14 டிஎம்சி தண்ணீரை குறைத்து கடந்த 16.2.2018 வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.  மறுநாள் 17.2.2018 சனிக்கிழமை மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பாக “டெல்லியின் அதிகாரத்திற்கு கட்டுப்படாதே” என்ற முழக்கத்தோடு மதுரையின் ஜல்லிக்கட்டு புகழ் தமுக்கத்தில் அமைந்துள்ள மத்திய அரசு நிறுவனமான BSNL அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது. இதில் 4 இளம் தோழர்கள் உட்பட 24 தோழர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டு, பின் இளம் தோழர்கள் தவிர மற்றவர்களை வழக்கு போட்டு சிறையில் அடைத்தது காவல்துறை.

கைதான 4 இளம் தோழர்களும் பு.ஜ.தொ.மு., ம.க.இ.க. அமைப்புத் தோழர்களின் குழந்தைகள் தான், அதனாலேயே போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.  அவர்களது போராட்ட அனுபவம் இது.

உலகமயத்தின் உக்கிரமான தாக்குதலில் தெருக்களில் ஓடியாடும் குழந்தைகளைக் காண்பதே அரிதாகிவிட்டது. சுட்டி டி.வி.யும் ‍.சோட்டா பீமும் அவர்களை இரண்டடி பெட்டிக்குள் கைது செய்துவிட்டது. கொஞ்சம் வசதி வாய்ப்புள்ள குடும்பத்தை சேர்ந்த குழந்தைகளையோ Android மொபைல் போனின் வீடியோ கேம்ஸ்களின் பிடியில் தாரை வார்த்துவிட்டது இந்த சமூகம்.

இவற்றையெல்லாம் தாண்டித்தான் கூடங்குளம் மக்கள் போராட்டத்தில் களம் கண்ட குழந்தைகளையும், டாஸ்மாக் கடைகளை ஏறி உடைத்த சிறுவர்களையும், நெடுவாசலில் போர்களம் புகும் சிறார்களையும் காண்கின்றோம்.

இனி குழந்தைகளின் அனுபவத்திற்கு செல்வோம்.

“எங்க 4 பேருக்கும் அன்னக்கி லீவு, அதனால் முத நாளே அப்பா காவிரி வழக்குல தமிழ் நாட்ட ஏமாத்திட்டாங்க. அதனால நாளைக்கி காலையில போரட்டம் இருக்கு. நீங்களும் வாங்க, காலையில் 8 மணிக்கு எல்லாம் கெளம்பனும். சீக்கிரம் போயி தூங்குங்கன்னு சொன்னாங்க. ஸ்கூல் இருந்தா அப்பா கூட்டிட்டு போமாட்டாங்க. சில நேரம் மட்டும் லீவு போட்டுட்டு கூட்டிட்டு போவாங்க. அதே மாறி காலைல 8 மணிக்கெல்லாம் அங்க போய்ட்டோம். அப்ப அங்க ஒரு போலீஸ்காரரு அப்பாகிட்ட ரொம்ப நேரம் பேசிகிட்டிருந்தாரு. என்கிட்ட பேரு, படிப்பு, எல்லாம் அவரு விசாரிச்சாரு” என்று சொல்கிறார் 6 -ஆம் வகுப்பு படிக்கும் கயல்.

” அப்பறம் போராட்டம் ஆரம்பிச்சப்ப தோழர்களோட‌ சிக்னலில் இருந்து BSNL ஆபிஸ் வரை முழக்கம் போட்டுகிட்டே ஊர்வலமா போனோம். நாங்க முதல் வரிசையில் சென்றோம்.  ஏன்னா போராட்டத்துல எங்களுக்கு எப்பவுமே முதல் வரிசையில் இருக்கத்தான் பிடிக்கும்” என்று ஆர்வத்துடன் சொல்கிறார் 6 -ஆம் வகுப்பு படிக்கும்  இரணியன்.

“முதல்ல சில போலீசுதான் இருந்தாங்க, அவங்க கூட நாங்க ஊர்வலமா வற்றப்ப பக்கத்துலதான் நடந்து வந்தாங்க. ஆனா ஒன்னும் சொல்லலை. அப்பறம் ஆபிஸ் வாசல்ல டி.வி காரங்களுக்கு பேட்டி கொடுத்தப்ப, ஒரு போலீஸ் வந்து, “உடனே எல்லாம் வேன்ல ஏறுங்க உங்கள எல்லாம் கைது பண்றோம்”  என்றாரு. உடனே இப்பத்தான வந்துருக்கோம் கொஞ்சம் இருங்கன்னு தோழர்கள் சொன்னப்ப உங்கள இவ்வளவு நேரம் விட்டதே அதிகம் உடனே வேன்ல ஏறுங்கன்னு சொல்லிக்கிட்டே எல்லாரயும் புடிச்சு தள்ளி ஏத்துனாங்க. அப்புறம் வேன்ல போகும் போது அப்பா சொல்லித்தான் தெரிஞ்சது அவரு பேரு மணிவண்ணன்னு.  அவரு இன்ஸ்பெக்டராமே” என்று போலீசின் அடக்குமுறையை பயமில்லாமல் விளக்குகின்றனர் 5-ம் வகுப்பு படிக்கும் மருதுவும் 9 -ஆம் வகுப்பு படிக்கும் சூர்யாவும்.

ஒரு வழக்கறிஞராகி மக்களுக்காக சேவை செய்து உண்மையின் பக்கம் நிற்க வேண்டும் என்பது சூர்யாவின் ஆசை.

மேலும் “இவங்களுக்கு எல்லாம் அறிவே இல்லையா, நம்ம ஊருக்கு வர வேண்டிய தண்ணிய தடுத்து நிறுத்தி இருக்காங்க, அப்பறம் விவசாயம் பன்றதுக்கு எங்க இருந்து தண்ணி கிடைக்கும். எப்படி சாப்புட்றது.  இவங்களும் இந்த ஊரு தான.  நம்ம ஊரு பிரச்சினைக்கு நாம போரட‌லைன்னா வேற யாரு போராடுவான்னு நினைச்சோம்.  சரி, இவங்க (போலீசு) எப்பவுமே இப்படிதான, நல்லது பன்றவங்கள கைது பன்றது அப்படின்னு நினைச்சு விட்டுட்டோம். உடனே எங்கள(சிறுவர்களை)  மட்டும் வெளிய போங்கன்னு சொல்லிட்டு தோழர்கள மட்டும் கைது பண்ண பார்த்தாங்க ஆனாநாங்களும் கைதாவோம்னு சொல்லிட்டோம்.

ஒவ்வொருத் தரையும் குண்டு கட்டா தூக்கி வேன்ல ஏத்துனாங்க, இவங்க (போலீசு) எப்பவுமே இப்படித்தான் பன்னுவாங்கன்னு எங்களுக்கு தெரியும். ஏன்னா ரொம்ப நேரம் நாங்க போராட்டம் பண்ணா மக்கள்கிட்ட இந்த விசயம் பரவும், அத தடுக்குறதுக்கு தான் இவங்க இப்படி எல்லாரயும் உடனேயே கைது பண்ணி வேன்ல ஏத்தி மண்டபத்துல அடச்சு வச்சுருவாங்க, இதுதான் இந்த போலீசோட வேலையே. ஆனா எங்கள கைது பன்றப்பவும், ஊர்வலமா வந்தப்பவும் சுத்தி இருந்தவர்களை (மக்களை) பார்த்து கைகாட்டி வரச்சொல்லி முழக்கம் போட்டோம், ஆனால் எல்லாரும் போட்டோ எடுத்தாங்களே தவிர யாருமே வரல, எல்லாம் வேடிக்கை பார்த்துட்டுதான் இருந்தாங்க”.

மேலும் இரணியன் கூறும் போது “சின்ன பசங்கள எல்லாம் வெளிய போங்கன்னு கைய புடிச்சு இழுத்து இழுத்து விட்டாங்க, ஒரு போலீசு கை பிடிச்சு இழுக்கிறேன்னு என் கைய பிசஞ்சு விட்டான், நல்ல தடிமாடு மாதிரி இருக்காங்க. இப்பவே போன போராட்டத்துல முத வரிசையில் கொடியோடு நின்னு முழக்கம் போட்டுட்டு இருந்தப்ப என் பிரண்ட்ஸ் பார்த்துட்டு கட்சிகொடினு பட்ட பேர் வச்சுதான் கூப்புறாங்க, இதுல இது வேற தெரிஞ்சுட்டா ரொம்பவே பன்னுவாங்க” என்று தமது செயலுக்கான அங்கீகாரம் கிடைக்காமை பற்றி வருத்தத்தோடு சொல்கிறார்.

“அப்புறம் வேன்ல போய்ட்டு இருந்தப்ப அடிக்கடி சடன் பிரேக் போட்டாரு டிரைவரு. நான் கூட முன்னாடி போய் முட்டிக்கிட்டேன், அப்ப தோழர்கள் ஏன் இப்படி வண்டிய ஓட்றீங்க, எங்கள மேல கோவமான்னு கேட்டாங்க, ஆனா அந்த டிரைவரு ஏதும் சொல்லாம வண்டிய ஓட்டிக்கிட்ருந்தாரு”  என்கிறார் சூர்யா.

“அங்கருந்து மண்டபத்துல போனதுக்கு போனப்புறம் எல்லாரோட பேரு, வேல அட்ரஸ், படிப்பு, ஸ்கூல் பேரு எல்லாம் கேட்டாங்க. நாங்க கொடுக்க மாட்டோம்னு சொல்லிட்டோம், ஏன்னா எங்கள போராட விடாம, மரியாதை இல்லாம நடத்துனதுக்காக தோழர்கள் பேரு, அடையாளம் எல்லாம் தர மாட்டேன்னு சொல்லிட்டாங்க, அதனால நாங்களும் தரமாட்டோம்னு சொல்லிட்டோம்.

அப்ப எங்கள பார்த்து, “நல்லா படிச்சு பெரிய ஆளா வர வேண்டாமா, ஏன் இப்படி போராட்டம்னு வந்து கஷ்டப்பட்றீங்கன்னு”  கேட்டாரு ஒரு போலீசு, உடனே நாங்க “எம்ஜிஆர் படிச்சாரா?, அவரை இப்படி கேப்பீங்களா?” அப்படீன்னு கேட்டோம், உடனே அவரு “ஏய் அவரு முதலமைச்சர்ப்பா” என்றவுடன் “அவரு படிச்சுதான் முதலமைச்சர் ஆனாரா”ன்னு திருப்பி கேட்டவுடன் “உங்க கூட பேச முடியாதுப்பா நீங்க கிளம்புங்க” அப்படின்னு சொல்லிட்டு அவரு கிளம்பிட்டாரு. அதுக்கப்புறம் எல்லா தோழர்களும் ஒவ்வொருத்தரா காவிரி ஆத்து பிரச்சினைய பத்தி பேசினாங்க. அதைப்பத்தி நிறைய தெரிஞ்சுகிட்டோம்”.

மேலும் கயல் மற்றும் மருது சொல்லும்போது, “நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து “எங்க மண்ணு, எங்க ஊரு” பாட்ட பாடுனோம், அப்ப தோழர்கள் எல்லாம் சந்தோசமா பார்த்து கைதட்டுனாங்க” என்று குதூகலத்துடன் சொல்கிறார்கள்.

ஆரம்ப பள்ளி ஆசிரியராகி சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு வகுப்பு எடுக்க வேண்டும் என்பது கயலின் கனவு.

“வெளிய இருந்த‌ தோழர்கள் ஸ்நாக்ஸ் சாக்லெட் எல்லாம் வாங்கி தந்தாங்க. காலையில் பேரு, அட்ரஸ் கேட்டப்ப சொன்ன மாதிரியே எங்கள போராட விடாம கைது செஞ்சதுக்காக போலீஸ் வாங்கி தந்த சாப்பாட சாப்ட மாடோம்னு சொல்லிட்டாங்க தோழர்கள்.  அதுக்கப்புறம் போலீஸ் சாமாதானம் பேசினதுக்கப்புறம் சாப்டறப்ப 3மணி இருக்கும்.” என்கிறார் மருது.

“அதுக்கப்பறம் நாங்க ரொம்ப நேரம் மண்டபத்துலயே ஒடி பிடிச்சு விளையாடிட்டு இருந்தோம், நடுவுல நாங்க எல்லாரும் தோழர்களாகவும், பிரகாஷ் தோழர் போலீசாவும் வேஷம் போட்டு விளாடுனோம், நாங்க எல்லாரும் சேர்ந்து போலீச(பிரகாஷ் தோழரை) தரையில போட்டு புரட்டி எடுத்துட்டோம்.”

சாயங்காலம் திடீர்னு எங்கள எல்லாரையும் ரிமாண்ட் செய்யுறோம், அதனால் மெடிகல் டெஸ்ட்க்கு ஆஸ்பத்திரிக்கு கிளம்பனும்னு போலீஸ் வந்து சொன்னாங்க. அடுத்த நாள் ஞாயித்துகிழமன்றதால எங்களுக்கு ஒன்னும் பிரச்சினையில்ல லீவுதானன்னு இருந்தோம். அங்க இருந்து GH வந்ததுக்கு அப்புறம் எங்கள(சிறுவர்களை)  எல்லாம் ரிலீஸ் செய்யுறோம்னு தோழர்கள் மட்டும் செக்கப் செய்யச் சொன்னாங்க. ஆனா நாங்க மாட்டோம்னு சொல்லிட்டோம். ஏன்னா எங்கள மாதிரி சின்னப்பசங்க எல்லாம் போராடுராங்களேன்னு மக்கள் புரிஞ்சுக்கிட்டு போராட வரணும்னுதான் கைதானாலும் பரவா இல்லைன்னு நாங்க போராட வர்றோம். அதனால நாங்க ரிலீஸ் ஆக மாட்டோம்னு சொல்லிட்டோம்.

அப்பறம் தான் எங்கள செக்கப் செய்ய கூட்டிட்டே போனாங்க. அப்ப வெளிய இருந்த தோழர்கள் வாங்கி கொடுத்த சாக்லெட்ட அங்க இருந்த போலீசுக்கு எல்லாம் நாங்க ஜெயிலுக்கு போறோம் சாக்லெட் எடுத்துக்கொங்கன்னு கொடுத்தோம்.

ஆனா அவங்க உங்கள தான் ரிலீஸ் பண்ணிட்டோம்ல என்றாங்க, சரி, நாங்க ரிலீஸாகப் போறோம் அதுக்காக எடுத்துகொங்க என்றோம் நிறய பேர் எடுத்துட்டாங்க. ஆஸ்பத்திரி வராண்டாவுல நாங்க ஜாலியா விளாடிட்டு இருந்தோம், ஆனா தோழர்கள்தான் ரொம்ப பாவம். ஒன்னுக்கு போறதுக்குகூட போலீசோடதான் போனாங்க. அங்கருந்தப்ப வெளிய இருந்த தோழர்கள் எங்களுக்கு (சிறுவர்களுக்கு) மட்டும் சாப்பாடு வாங்கி கொடுத்தாங்க. அதுக்கப்பறமும் எங்கள விடல.  போலிஸ்டேசனுக்கு கையெழுத்து போட‌ வந்தப்பகூட பசங்கள கூட்டிட்டு போயிறச்சொன்னாங்க, அத ஜட்ஜ் சொல்லட்டும்னு சொல்லிட்டு வேன்ல இருந்து இறங்க மாட்டோம்னு சொல்லிட்டோம்”

மேலும் கயல் சொல்லும் போது “அங்க ஆஸ்பத்திரியில கூட என்ன ஒரு போலிஸ் கூப்டு விசாரிச்சாரு அப்ப நம்ம இரணியந்தான் வந்து என்ன கேளுங்க நான் சொல்ரேன்னு வந்து அந்த போலிஸ்கிட்ட பேசுனான்” என்கிறார்.

“என்ன பேசினான்?” என கேட்ட போது, “அதே தான், நல்லா படி, பெரிய ஆளா வரணும், போராட்டம் எல்லாம் வேணாம்ன்னு சொன்னாரு, இவன் உடனே, ” மக்களுக்காக வாழணும் சார்” ன்னு சொன்னான்”

“இவிங்கள பெத்தாங்களா செஞ்சாய்ங்களா?” என அந்த  போலீசுகாரர் புலம்பியதாக அருகில் இருந்த தோழர்கள் கூறினர்.

“அப்புறம் ஜட்ஜ் வீட்டுக்கு வந்தப்ப கூட எங்கள வெளியவே இருக்க சொன்னாங்க. ஆனா நாங்க ஜட்ஜ் முன்னாடி ஆஜராகியே தீர்வோம்னு தோழர்கள்.. கூடவே இருந்தோம். ஆனா ஜட்ஜ்தான் எங்கள பாத்த உடனயே “குழந்தைகள எல்லாம் ரிலீஸ் பண்ணிருங்கன்னு” ஒரே போடா போட்டாரு. ஜெயில பாக்குறது ஜஸ்ட்ல மிஸ் ஆகிருச்சு” என்று ஒருவித ஏக்கத்தோடு கூறுகின்றனர்.

சரி உங்களுடைய அப்பாக்கள் எல்லாம் கைதாகி ஜெயிலுக்கு போவதை பற்றி உறவினர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்று கேட்டதற்கு ” அவர்களுக்கு யாருக்கும் இது தெரியாது, இரண்டு நாள்தான் ஜெயில்ல இருந்ததால சொந்தகாரங்க யாருக்கும் தெரியல, ஆனா வீட்ல அம்மா பயந்துகிட்டே இருந்தாங்க போலீஸ் யாரும் நம்ம வீட்டுக்கு தேடி வந்துருவாங்களோன்னு,” என்கிறார் மருது.

இரணியன், “எங்கப்பாம்மா போராட்டத்துக்கு வரல.  நான் மட்டும் தோழர்களோட வந்தேன்.  நான் அரஸ்ட் ஆனது தெரிஞ்சதும் பாட்டி தான் ரொம்ப திட்டினாங்க. ” அப்பன மாதிரியே கெட்டு குட்டிச் சுவரா போகாத” ன்னு சொன்னாங்க.  நான் “நல்ல விசயத்துக்கு தானே போனேன். என்ன தப்புன்னு” கேட்டேன்.  “அப்படீன்னா இனிமே எங்கூட பேசவே செய்யாதன்னாங்க”. நான் ” சரின்னு” சொல்லிட்டேன்.  அப்பறம் ஒரு அஞ்சாறு நாள் பாட்டி எங்கூட பேசவே இல்ல.  அப்பறம் கொஞ்சம் கொஞ்சமா பேச ஆரம்பிச்சுட்டாங்க.” என்றார்.

“இப்படி 20 பேர் மட்டும் போராடினால் பிரச்சினை தீர்ந்துவிடுமா?” என்று கேட்ப‌தற்கு “தீராதுதான். நாங்களும் எங்க பிரண்ட்ஸ்கிட்ட பேசுவோம், ஆனா அவங்க விளாட்டுலயே இருப்பாங்க. எங்கள கிண்டல் பண்ணுவாங்க,  சிலபேர் ஆசைதான் ஆனா அம்மா விடமாட்டாங்கன்னு சொல்லுவாங்க. அவங்க சொல்றதும் சரிதான எங்க அப்பா அம்மா போக சொல்றாங்க, ஆனா அவங்க அப்பா அம்மா அப்படி இல்லையே என்ன பன்றது. ஆனா நாங்க விடமாட்டோம்.  பசங்ககிட்ட விடாம பேசுவோம், அடுத்த தடவ நிறய பிரண்ட்ஸ கூட்டிட்டு வருவோம்.”

” இப்படி போராட்டம்,  போலீஸ்,  கைது,  கேஸ் என்று போய்க்கொண்டிருந்தா ஆசிரியர்,  மருத்துவர்,  வழக்கறிஞரா,  உங்களுடைய தனிப்பட்ட லட்சியங்கள், ஆசைகள் எல்லாம் என்னவாவது?” என்று கேட்டால்  “மக்களுக்கு சேவை செய்யத்தான் இந்த ஆசை எல்லாம், அது முடியலைன்னா இப்படி போராடி சேவை செய்ய வேண்டியதுதான்” என்றனர்.

-வினவு செய்தியாளர்கள்.

குற்றப் பாரம்பரியம் குரு பரம்பரையான கதை ! பிரைமரி எவிடென்ஸ் !

15

ழ்வார்கள் எனப்படுவோர் புனிதர்கள் என்றும், உலகமகா உத்தமர்கள் என்றும் பொதுமக்கள் நினைக்கக்கூடும். ஆனால், நித்தியானந்தா, எச்.ராசா போன்றோரையெல்லாம் தூக்கிச் சாப்பிடுகின்ற அளவுக்கு இவர்கள் அயோக்கிய சிகாமணிகள் என்பதை வைணவப் பார்ப்பனர்கள் எழுதியுள்ள வரலாற்று நூல்களிலிருந்தே வாசகர்கள் அறியத்தருகிறோம்.

பிரபந்த வித்வான் எதிராஜ ராமானுஜ தாசர் எனும் வைணவப் பார்ப்பனரால் தொகுக்கப்பட்டு, ஆழ்வார்கள் அமுத நிலையம், சென்னை – 2 -ஆல் வெளியிடப்பட்டுள்ள குருபரம்பரை வைபவம் (பதிப்பு : 1992) எனும் நூலிலிருந்தும், ஆறாயிரப்படி குருபரம்பரா ப்ரபாவம் (பதிப்பு : 1927) (வெளியீடு :  திருவல்லிக்கேணி நோபில் அச்சுக்கூடத்தில் சே.கிருஷ்ணமாச்சாரியால் பதிப்பிக்கப்பெற்றது) என்ற நூலிலிருந்தும் இது தொகுக்கப்பட்டுள்ளது.

பார்ப்பன மதத்தின் கிரிமினல்தன்மையை அம்பலப்படுத்தும் விதத்தில் புதிய கலாச்சாரம் மே-1993 இதழில் இக்கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது.

குருபரம்பரா ப்ரபாவம் என்பதன் பொருள் ஆழ்வார் பரம்பரையின் சாதனைகள் என்பதாகும். கொலை, கொள்ளை மற்றும் 420 வேலைகளைச் செய்துதான் ஸ்ரீரங்கம் கோயில் எழுப்பப்பட்டுள்ளது என்பதற்கு அவர்களே அளித்திருக்கும் ஒப்புதல் வாக்குமூலம் இது.

சமஸ்கிருதமயமாக்கப்பட்ட மணிப்பிரவாள நடையில் இவை எழுதப்பட்டுள்ளது. வாசகர்களுக்குப் புரியாது என்பதால், இவற்றைத் தமிழ்ப்படுத்தி அளிக்கிறோம்.

* * *

ரங்கநாதனுக்கு விமானம், கோபுரம், மதிற்சுவர்கள் கட்ட வேண்டுமென்று விரும்பிய திருமங்கையாழ்வார், தன் தொண்டர்களை அழைத்துத் தன் விருப்பத்தைக் கூறி, “இந்த ஆலயத் திருப்பணி செய்ய பணத்திற்கு என்ன செய்யலாம்?” என்று வினவினார். “நாகப்பட்டினத்தில் புலையர் மதத்தின் புத்தர் சிலையொன்று உள்ளது; முழுவதும் தங்கத்தால் செய்யப்பட்ட அந்தச் சிலையைக் கொண்டுவந்து சிதைத்துத் (அதை விற்றுக் கிடைக்கும் பொருளை) திருப்பணிக்குப் பயன்படுத்தலாம்” என்று அவர்கள் யோசனை கூறினர்.

(சான்றுக்கு சில வரிகள் மணிப்பிரவாள நடையில்: பெரிய பெருமாளுக்கும் திருவரங்கச் செல்வரான அழகிய மணவாளர்க்கும் விமாந மண்டப கோபுர ப்ராஸாத ப்ராகாராதி ரூபமான கைங்கர்யங்கள் செய்தருளவேணுமென்று திருவுள்ளமாய், அதுக்குத் தம்முடைய பரிஜனங்களையழைத்து நம்பெருமாளுக்குத் திருமதிள் முதலான கைங்கர்யம் ப்ணுகைக்குத் தனார்ஜநஞ்செய்யும் வருஏன் என்று கேட்டருள, அவர்களும் நாகப்பட்டணத்திலே புலையறமாயிருப்பதொரு புத்த ப்ரதிமை ஹிரண்ய ஸ்வரூபமாயிருக்கும். அத்தைக் கொண்டுவந்து சிந்நாபிந்நமாக்கி அறுப்பதே கருமங்கண்டாய் என்று விண்ணப்பஞ்செய்ய, ஆழ்வாரும் ஸம்மதித்து நாகபட்டணத்திலே போய்..)

அந்த யோசனையை உடனே ஏற்றுக்கொண்டு திருமங்கையாழ்வார் நாகை சென்று, அந்நகரிலிருந்த வைணவப் பெண் ஒருத்தியைச் சந்தித்து, இந்தச் சிலை இரகசியம் குறித்து வினவினார். இந்த ஊரிலுள்ள புத்த விகாரையின் உள்ளே தங்கத்தினாலான புத்தச் சிலை ஒன்று உள்ளது என்றும், அந்தச் சிலையையும், விமானத்தையும் (மண்டபத்தையும்) உருவாக்கிய சிற்பி கடல் கடந்த தீவு ஒன்றில் இருக்கிறான் என்றும் என்னுடைய மாமியார் கூறுவதுண்டு” என்று அந்தப் பெண் கூறினாள்.

இதைக் கேட்ட திருமங்கையாழ்வார், “நல்ல காரியத்தில் தாமதம் கூடாது” என்று சொல்லி, தனது தொண்டர்களையும் அழைத்துக்கொண்டு மேற்படி தீவிற்குச் சென்றார். அந்தச் சிற்பியின் வீட்டை விசாரித்து அறிந்து அவன் வீட்டருகில் நின்று தனது தொண்டர்களுடன் கீழ்க்கண்டவாறு புலம்பத் தொடங்கினார். “நாகப்பட்டினம் பவுத்தக் கோயிலையும், விமானத்தையும் உடைத்து உள்ளே இருந்த தங்க விக்கிரகத்தை ஒரு துலுக்கர்கள் கூட்டம் கொண்டு போய்விட்டது; இந்த அநீதியைக் கண்ணால் கண்டபின்னரும் நம் உயிர் பிரியவில்லையே!” வெளியிலிருந்து வீடு திரும்பிய அந்தச் சிற்பி (இந்த புலம்பலை உண்மையென நம்பி) திருமங்கையாழ்வாரிடமே வந்து விவரம் கேட்டான்.

உடனே திருமங்கையாழ்வாரும் அவரது தொண்டர்களும் புத்தர் சிலையைத் துலுக்கர்கள் திருடிச் சென்ற கதையை விலாவாரியாகக் கூறினர். இதைக் கேட்ட சிற்பி, “பீடத்திலிருந்து சிலையை அகற்ற முடியாதவாறு அதனைச் சங்கிலி கொண்டு பிணைத்து, அபிசேக நீர் வெளியேறும் நீர்த்தாரையின் கீழ் கல்லுக்குள் ஒரு இரும்பு ஆணியில் அந்தச் சங்கிலியின் மறுமுனையைக் கட்டியிருந்தேன். இந்த இரகசியத்தை என்னுடனிருந்த துரோகி எவனோ திருடர்களுக்கு காட்டிக் கொடுத்துவிட்டானே” என்று கூறி விழுந்து கதறியழத் தொடங்கினான்.

இவ்வாறு சிலையமைப்பின் இரகசியத்தை அறிந்து கொண்ட ஆழ்வாரும் அவரது தொண்டர்களும் உடனே கடற்கரை நோக்கிச் சென்றனர். கடற்கரையில் தருமவானான ஒரு பாக்குக் கப்பல் வியாபாரியைக் கண்டு அவனுக்கு ஆசி கூறிய ஆழ்வார், தானும் தனது தொண்டர்களும் விரதமிருந்து வருவதாகவும் தங்களை நாகப்பட்டினத்தில் கொண்டு சேர்க்க வேண்டுமென்றும் அவனிடம் கோரினார். வியாபாரியும் மகிழ்வுடன் அவர்களைக் கப்பலில் ஏற்றிக் கொண்டான்.

கப்பல் போய்க்கொண்டிருக்கும்போது, அக்கப்பலிலிருந்து ஒரேயொரு கொட்டைப் பாக்கை எடுத்து, அதை இரண்டாகப் பிளந்தார் திருமங்கையாழ்வார். அதில் ஒரு பாதியை அவ்வணிகனிடம் கொடுத்து மறுபாதியைத் தன் கையில் வைத்துக்கொண்டு, “இந்தப் பாதிப்பாக்கு எனக்குத் தேவைப்படுகிறது, எனவே ‘பாதிப்பாக்கு எனக்குத் தருவதாக’ ஒரு சீட்டு எழுதிக்கொடுங்கள்” என்று கேட்டார். வணிகனும் அவ்வாறே எழுதிக் கொடுத்தான்.

அந்தச் சீட்டை வாங்கிக்கொண்ட ஆழ்வார் கப்பல் கரை சேர்ந்தவுடனே கப்பலிலிருந்த பாக்கில் பாதியை எண்ணித்தருமாறு வணிகனிடம் கேட்டார். அதிர்ச்சியடைந்த வணிகன் கப்பலில் ஆழ்வார் வெட்டிவீசிய பாதிப்பாக்கைத் தேடிக் கண்டுபிடித்து, “இந்தா உன்னுடைய பாதிப் பாக்கு” என்று திருப்பித் தந்தான். “இந்த அரைப்பாக்கையா நான் கொடுத்தேன்? நீ எழுதிக் கொடுத்த சீட்டைக் காட்டி உன் சகவணிகர்களிடமே நியாயம் கேட்போம்” என்று ஆழ்வார் கூற, வணிகனும் சம்மதித்தான்.

வணிகர்கள் ஆழ்வாருக்குச் சாதகமாகத் தீர்ப்புச் சொல்ல, வேறு வழியில்லாமல் (கப்பலில்) பாதிப்பாக்குக்கான தொகையை ஆழ்வாரிடம் கொடுத்து அனுப்பினான் வணிகன்.

இப்படியாக அந்தப் பணத்தையும் எடுத்துக் கொண்டு புத்த விகாரைக்கு வந்து சேர்ந்த ஆழ்வாரும் அவர்தம் தொண்டர்களும் அங்கே ஒளிந்திருந்து, நள்ளிரவில் அந்த தங்க விக்கிரகத்தைத் திருடி, அதைச் சிதைத்து எடுத்துச் சென்றனர்.

சிலையைக் கொண்டு போகும்போது விடிந்து விடவே, ஒரு உழுத வயலில் சிலையைப் புதைத்து வைத்துவிட்டு அருகே காவல் நின்றார்கள். நிலத்துக்குச் சொந்தக்காரன் நாற்றுக் கட்டுடன் நடவு செய்வதற்காக அங்கே வந்து சேர்ந்தான். அவனை மறித்து, “இது என் பாட்டன் தேடின நிலம்” என்று ஆழ்வார் கூறவே, விவாதம் முற்றியது. “நாளை விடிவதற்குள் பத்திரம் கொண்டுவருகிறேன்; இல்லையேல், நீ உழுது கொள்” என்று ஆழ்வார் கூற, அவனும் சம்மதித்துத் திரும்பினான்.

இரவு வரை காத்திருந்து சிலையை அங்கிருந்து எடுத்துக் கொண்டு கிளம்பி ஆழ்வாரும் அவரது தொண்டர்களும் ஸ்ரீரங்கம் அருகில் உள்ள உத்தமர் கோயில் வந்து சேர்ந்தனர்.

சிலை திருட்டுப் போனதையறிந்து நாகை நகரத் தலையாரியும், மணியக்காரரும் விகாரையை நன்றாகச் சோதித்து, பிறகு சிலை திருடர்கள் போன வழியறிந்து உத்தமர் கோயில் வந்து சேர்ந்தனர். “சிலை எங்கே?” என்று திருமங்கையாழ்வாரிடம் அவர்கள் கேட்க, ஆழ்வார், “எனக்குத் தெரியாது” என்றார். “அப்படியானால் உமக்குத் தெரியாதென்று சத்தியம் செய்வீரா?” என்று அவர்கள் கேட்டவுடனே, மேலை வருஷம் பங்குனி மாதம் ரோகிணி நட்சத்திரத்தன்று உங்கள் விக்கிரகத்தின் சுண்டுவிரல் குறையாமல் திருப்பித் தருகிறேன்.” என்று அவர்களுக்கு ஆழ்வார் சீட்டெழுதிக் கொடுத்தார்.

அதன்பின் விக்கிரகத்தை உருக்கி விற்றுக் கிடைத்த பொருளில் கோயில் திருப்பணி தொடங்கி நடத்தினர். கோயில் மதில் சுவர் கட்டும்போது தொண்டரடிப் பொடியாழ்வாரின் (பார்ப்பனர்) நந்தவனம் குறுக்கே வர, அதைத் தவிர்த்து மதிலைக் கட்டுவித்தார். இதனால் தொண்டரடிப் பொடியாழ்வார் பெரிதும் மகிழ்ந்தார்.

குறிப்பிட்ட காலக்கெடுவில் நாகையிலிருந்து சிலையைப் பறிகொடுத்தவர்கள் வந்தனர். ஆழ்வார் எழுதிக் கொடுத்த சீட்டைக் காண்பித்து சிலையைத் திருப்பிக் கேட்டனர். ஆழ்வார் சிலையின் சுண்டு விரலை மட்டும் திருப்பிக் கொடுத்தார். நியாயம் சொல்பவர்களும், “சீட்டுப்படி சிறுவிரலைத் திருப்பிக் கொடுத்துவிட்டார்” என்று தீர்ப்புக் கூற, சிலைக்கு உரியவர்கள் இந்த சிறுவிரலும் வேண்டாமென்று திருப்பிக் கொடுத்துவிட்டுச் சென்றனர்.

அடுத்து, கோயில் கட்டிய கொத்தனார்களும் சித்தாட்களும் கூலி கேட்டனர். “காவிரிக்கு அந்தப்புறம் ஒரு தீவில் வேண்டிய அளவு பொன்னும் பொருளும் உள்ளன. அங்கு வந்து எடுத்துக்கொள்ளுங்கள்” என்று கூறி, அவர்களையெல்லாம் ஓடத்திலேற்றி அழைத்துப்போனார் திருமங்கையாழ்வார். நட்டாற்றில் வைத்து ஓடக்காரனுக்கு ஆழ்வார் ஜாடை காட்ட, அவன் இன்னொரு ஓடத்தில் ஆழ்வாரை ஏற்றிக் கொண்டு, அந்தத் தொழிலாளிகள் இருந்த ஓடத்தைக் கவிழ்த்துவிட்டான்.

ஆழ்வாரும் ஓடக்காரனும் கோயில் வந்து சேர்ந்தவுடன் அந்தத் தொழிலாளிகளுடைய பிள்ளைகள் இருவரையும் சூழ்ந்துகொண்டு, “எங்கள் பெற்றோர் எங்கே?” என்று கேட்டனர். “ஒரு தீவிலே பொன்னையும் பொருளையும் காட்டிவிட்டோம்; அவர்கள் அதை மூட்டைக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்” என்று ஆழ்வார் அவர்களுக்கு சமாதானம் சொன்னார். அதை நம்பாத அந்தப் பிள்ளைகள், “எங்கள் தகப்பன், பாட்டன்மாரை ஆற்றில் தள்ளிக் கொன்றுவிட்டீர்கள். அவர்களை உயிருடன் கொண்டு வந்து எங்கள் முன் நிறுத்தினாலொழிய, உங்களைப் போகவிடமாட்டோம்” என்று ஆழ்வாரை மறித்துக் கொண்டனர். ஆழ்வார் செய்வதறியாமல் விழித்து நின்றார்.

பிறகு ஆழ்வாரின் கனவில் தோன்றிய அரங்கன், “ஏன் கலங்குகிறாய்? அந்தத் தொழிலாளர்களின் பிள்ளைகளை அழைத்து காவிரியில் நீராடச் சொல்லி, அனைவரின் நெற்றியிலும் நாமத்தைச் சார்த்தி என் சந்நிதியில் கொண்டு வந்து நிறுத்து, பிறகு அவரவரின் அப்பன், பாட்டன்மாரின் பெயர் சொல்லி அழைக்கச் சொல்” என்றான்.

ஆழ்வாரும் அவ்வாறே அவர்களை அரங்கனின் சந்நதியில் கொண்டுவந்து நிறுத்த, அவர்களும் தத்தம் பெற்றோரின் பெயர் சொல்லி அழைத்தார்கள். பிதுருக்களாக மாறியிருந்த (அதாவது செத்துப்போன) அவர்களது பெற்றோர்கள் பெருமானின் பின்புறமிருந்து தத்தம் பிள்ளைகளிடம் கீழ்வருமாறு கூறினார்கள். “ஆழ்வாரின் திருவருளால் நாங்கள் அரங்கனின் திருவடிகளை அடைந்து விட்டோம். நீங்கள் ஆழ்வாருக்கு எதிராகக் கலகம் செய்யாமல், அவருக்கு சேவை செய்யுங்கள்” என்று கூறினார்கள்.

* * *

வ்வளவு நயவஞ்சகமான, கீழ்த்தரமான, கொடூரமான கிரிமினலைத்தான் ஆழ்வார் என்று கொண்டாடுகிறார்கள். இன்று ஆர்.எஸ்.எஸ். எத்தகைய கிரிமினல் வேலைகளையெல்லாம் செய்கிறதோ, அவை அத்தனையும் அன்றே செய்து காட்டியிருக்கிறார் திருமங்கையாழ்வார்.

ஆண்டாள் பற்றி எழுதியதற்கு பிரைமரி எவிடென்ஸ் இருக்கிறதா என்று கேட்பவர்கள், இந்த எவிடென்ஸுக்கு என்ன பதில் சொல்வார்கள்? ஆண்டாள் பாசுரம், நாச்சியார் திருமொழி ஆகியவற்றின் மகத்தான படைப்புவெளியையும் கவிதைப்பரப்பையும் கொண்டாடி மெய்சிலிர்ப்பவர்கள், இந்த குருபரம்பரா ப்ரபாவத்துக்கு என்ன விளக்கம் சொல்வார்கள்?

புத்தர் சிலையைத் திருடியதும், வியாபாரியைச் சூது செய்து ஏமாற்றியதும், கோயிலைக் கட்டிய தொழிலாளியை கொன்றதும் திருமங்கையாழ்வாரின் படைப்புவெளியா? இந்த அயோக்கியத்தனங்களுக்கும் ஆழ்ந்த ஆன்மீக அர்த்தங்கள் உண்டா? வைரமுத்துவை எச்.ராஜா கேட்டது போல, அவாளைத் திருப்பிக் கேட்பதாயின், எத்தகைய மொழியில் திருப்பிக் கேட்க வேண்டும்?

புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2018 இதழ்

மின்னூல்:

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.ஃகே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

 

ஆபாசத்தின் தயவில் ஆன்மீக சேவை செய்யும் ஆர்.எஸ்.எஸ். ட்ரோல்கள் !

2

“தோழர்களே, நாம் இந்தக் காலகட்டத்திற்கு தேவையான கட்டுரைகளை முடிந்த அளவு வெளியிட்டு வருகிறோம். ஆரம்பித்த நாட்களை விட இப்போது நிறைய வாசகர்களைச் சென்றடைந்துள்ளோம்; எனினும், நமது தளத்தை மேலும் அதிகமாக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியிருக்கிறது. இதற்காக என்ன மாதிரியான மாற்றங்களைக் கொண்டு வரலாம் என்பதைக் குறித்து ஒவ்வொருவராக உங்களுடைய ஆலோசனைகளைச் சொல்லுங்கள்”

இது வினவு தோழர்கள் சமீபத்தில் நடத்திய கூட்டம் ஒன்றில் பேசப்பட்ட பொருள். அதில் தோழர்கள் பலர் தளத்தின் தற்போதைய நிறைகுறைகளை மனம் திறந்து குறிப்பிட்டதோடு எதிர்காலத்தில் என்னென்ன மாற்றங்களைச் சேர்க்கலாம் என்பதற்கு ஆலோசனைகளை முன்வைத்தனர்.

ஒருவர் “புத்தகங்கள் அறிமுகப்படுத்துவதை அதிகப்படுத்த வேண்டும்” என்றார்; இன்னொருவர் “வரலாற்றில் இன்று” என்கிற பகுதி ஒன்றைத் துவங்கலாம் என்றார்; மற்றொருவர் “ஈழம் பற்றி நாம் எழுதுவது குறைந்து விட்டது.. அதை கவனிக்க வேண்டும்” என்றார்; மேலுமொருவர் “அரசியல் பகடிகள் குறைந்து விட்டது அதை அடிக்கடி எழுத வேண்டும்” என்றார். இதே போல் ஒவ்வொருவரும் விதவிதமான கருத்துக்களை முன்வைத்தனர். பல புதிய அம்சங்களை தளத்துக்குச் சேர்க்க வேண்டும் என்பது போன்ற ஆலோசனைகள் வந்தன.

இவ்வாறாக அந்தக் கூட்டம் முடிவுற்றது. கலந்து கொண்டவர்கள் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளில் ஏதாவது ஒன்றுக்காவது பொறுப்பேற்றுக் கொண்டு கலைந்தனர். அதிக நிதிச் செலவைப் பிடிக்கும் காரியங்கள் வரிசை கட்டி நிற்பதைக் கண்டு எப்போதும் வறண்ட பாலைவனம் போல் காட்சியளிக்கும் வினவின் வங்கிக் கணக்கை நினைத்து விழித்துக் கொண்டிருந்தார் நிதிப் பொறுப்பை கவனித்து வரும் தோழர்.

திரும்பி வரும் வழியில் எனக்குள் பல்வேறு சிந்தனைகள் ஓடின. “பொருளாத்தாரத் துறையிலும் சரி, அரசியல் துறையிலும் சரி.. இப்போதைய வலதுசாரி ஆட்சியாளர்கள் தோல்வியைச் சந்திக்காத முனை என்று ஏதுமில்லை. என்றாலும், ஏதோவொரு வகையில் தொடர்ந்து வெற்றியடைந்து கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு தருணத்தின் அரசியல் பேசுபொருளை அவர்களே தீர்மானிக்கிறார்கள். இது எப்படி சாத்தியமாகிறது? இந்துத்துவ கும்பல் மக்களிடையே தங்களது கருத்துக்களை எப்படி சுலபமாக எடுத்துச் செல்ல முடிகிறது?” என்பது போன்ற கேள்விகள் மண்டையைக் குடைய, மறுநாள் இணையத்தில் அது குறித்து தேடிப் படித்துக் கொண்டிருந்த போது தான், ஆல்ட்நியூஸ் இணையதளத்தின் இந்தச் செய்தி கண்ணில் பட்டது

மேற்படி கட்டுரையின் சுருக்கம் :

“பிரபல நடிகை தனது தந்தையிடமே தன்னுடைய கன்னித்தன்மையை இழந்ததாக ஒப்புக் கொண்டார்” என்பது அந்தக் கட்டுரைத் தொடரின் தலைப்பு. நான்கு பாக கட்டுரைத் தொடர் அது. சஸ்காடைம்ஸ் (chaskatimes.com ) என்கிற வலதுசாரி இணையதளத்தில் அந்தக் கட்டுரைத் தொடர் வெளியாகியுள்ளது. கட்டுரைத் தொடரின் முதல் மூன்று பாகங்களில் பிரபல இந்தி நடிகை ஆலியாபட்டின் குழந்தைப் பருவ புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அவற்றில் அவர் தனது தந்தையும் பிரபல இயக்குநருமான மகேஷ்பட்டின் மடியில் அமர்ந்துள்ளார். கட்டுரை நெடுக “பிரபல நடிகை” என்கிற விவரணையும், அதனுள்ளே ஆலியாபட் மற்றும் அவரது தந்தையின் புகைப்படங்களும் வெளியாகி உள்ளன.

கட்டுரைத் தொடரின் நான்காம் பாகத்தில் சம்பந்தப்பட்ட நடிகையின் பெயராக காரா டெலெவிங்கே (Cara Delevingne ) எனும் ஆங்கில நடிகையின் பெயர் குறிப்பிடப்படுகின்றது. இந்த நான்கு பாக கட்டுரை நெடுக ஏராளமான விளம்பரங்கள். சஸ்காடைம்ஸ் இணையதளத்தின் மூலத்தளம் இன்சிஸ்ட்போஸ்ட்.காமிலும் (insistpost.com) ஏறத்தாழ இதே போன்ற கட்டுரைகள். “உங்கள் இணையை படுக்கையில் நீண்ட நேரம் மகிழ்விப்பது எப்படி” “உடலுறவின் போது பெண்கள் ஏன் கண்களை மூடிக் கொள்கின்றனர்” என்பது போன்ற ‘ஆய்வு’ கட்டுரைகளுக்கு மத்தியில் பிரதமர் மோடியைப் புகழ்பாடும் கட்டுரைகளும் இடம் பிடிக்கின்றன.

இவ்வாறாக நடத்தப்படும் இன்சிஸ்ட்போஸ்ட் இணையதளத்திற்கு அம்பானியின் நெட்வொர்க்18 குழுமத்தால் நடத்தப்படும் பர்ஸ்ட்போஸ்ட் (firstpost.com) இணையதளத்தை விட அதிக பார்வையாளர்கள் வருகின்றனர். அலெக்ஸா மதிப்பீட்டின் படி உலகளவில் 1477 -வது இடத்தைப் பெற்றிருக்கும் இன்சிஸ்ட்போஸ்ட், இந்தியளவில் 105 -வது இடத்தில் இருக்கின்றது.

இன்சிஸ்ட்போஸ்ட், சஸ்காடைம்ஸ் போன்ற தளங்களில் இடம் பிடிக்கும் இந்துத்துவ ஆதரவுக் கட்டுரைகள் மெல்ல மெல்ல இண்டியா.காம், போஸ்ட்கார்ட் நியூஸ், ஆப்இந்தியா.காம் போன்ற பிற வலதுசாரி இணையதளங்களுக்கும் செல்வதுண்டு. இதுபோன்ற தளங்களில் வெளியாகும் இந்துத்துவ “ஆதரவு” கட்டுரைகள் நேரடியாக லட்சக்கணக்கான மக்களைச் சென்றடைவதுடன், வாட்சப் உள்ளிட்ட சமூக ஊடகங்களின் வழியே கோடிக்கணக்கானவர்களைச் சென்று சேர்கின்றன. பல சந்தர்பங்களில் இது போன்ற ஆபாசத்தளங்களில் வெளியாகும் கட்டுரைகளை இந்துத்துவ தலைவர்களே கூட “ஆதாரங்களாக” காட்டுவதும் உண்டு.

தங்களது கட்டுரைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக ஏராளமான முகநூல் குழுமங்களை இவர்கள் நடத்தி வருகின்றனர். “அழகிய பஞ்சாப் மாடல்கள்” என்பது அவ்வாறான ஒரு முகநூல் குழுமம். சில லட்சம் பேர்களை சந்தாதாரர்களாக கொண்டுள்ள இந்தக் குழுமத்தில் பெண்களின் ஆபாசப் படங்களின் இடைக்கிடையே சஸ்காடைம்ஸ் மற்றும் இன்சிஸ்ட்போஸ்ட் ஆகிய தளங்களில் வெளியாகும் பாரதிய ஜனதா ஆதரவுக் கட்டுரைகளின் இணைப்புகளும் பகிரப்படுகின்றன.

இவை தவிர்த்து, “ஐ சப்போர்ட் இந்தியன் ஆர்மி” “ஐ சப்போர்ட் அஜித் தோவால்” “வீ சப்போர்ட் நரேந்திர மோடி” “ஐ ட்ரஸ்ட் பிஜேபி” போன்ற முகநூல் குழுமங்களிலும் பகிரப்படுகின்றன. சில பல லட்சங்களில் சந்தாதாரர்களைக் கொண்டுள்ள இக்குழுமங்களில் இருந்தே வாசர்களைக் கவர்கின்றனர்.

இத்தளங்களை நடத்துபவர் அங்கித் குமார், பாரதிய ஜனதாவுக்கு நெருக்கமானவர் என்பதையோ, அதற்கு ஆதாரமாக பல்வேறு சந்தர்பங்களில் அமித்ஷா உள்ளிட்ட பாரதிய ஜனதாவின் முக்கிய தலைகளோடு எடுத்த புகைப்படங்கள் உள்ளன என்பதையோ தனியே சொல்லத் தேவையில்லை. ஆனால், தேசபக்தியும், ‘தேக’பக்தியும் எப்படி ஒன்றோடு ஒன்று சேர்ந்து செயல்பட முடியும் என்பது உங்களில் பலருக்கு வியப்பாக இருக்கலாம். அப்படி வியந்து போகிறவர்கள் அந்தக்கால அக்கிரகார மற்றும் ‘மேல் சாதி’த் தெருவின் திண்ணைகளையும் அங்கே விவாதிக்கப்படும் விசயங்களையும் அறியாதவர்களாகவே இருக்க முடியும்.

“எந்த மாமிக்கு எந்த மாமாவோடு தொடர்பு” என்பதில் துவங்கி, “அவா தளுக்கிண்டு போறா, இவா குலுக்கிண்டு போறா”, “என்ன ஓய், சார்வாள் ரொம்ப மேயுராறாமே” என்கிற அவதானிப்பு வரையிலான “பலான” சமாச்சாரங்களுக்கு இடையே “அடுத்த வாரம் வரலட்சுமி நோன்பு வருதோன்னோ” என்கிற “ஆன்மீக” விசாரணைகளும் நடக்கும். “அக்கிரகாரம் மற்றும் மேலத்தெருவிற்குள் அபச்சாரமா?” என்று நம்ப முடியாமல் திணறுகிறவர்கள் மேற்படித் தெரு – அக்கிராங்களை கண்டறியாதவர்களாகவே இருக்க முடியும். சென்னை போன்ற மாநகரங்களில் கூட இத்தகைய சாதிப்பிரிவினர் பணியாற்றும் அரசு – தனியார் அலுவலக உணவு இடைவேளைகளில் கமல் பேசுவது போன்ற சென்னைத் தமிழில் இத்தகைய காமசாஸ்திரங்களை நடப்பு அரசியல் – குற்ற நிகழ்வுகளோடு இணைத்து பேசுவதைப் பார்க்கலாம். இல்லை நீங்கள் நித்தியானந்தா மற்றும் அவரது சிஷ்யர்களின் வீடியோக்களிலும் கேட்கலாம்.

ஆபாசமும் ஆன்மீகமும் பார்ப்பனியத்தின் இரண்டு கண்கள். எனவே இந்துத்துவ அரசியல் பிரச்சாரங்களிலும் அது அவ்வாறாகவே அமைந்திருப்பதில் எந்த வியப்புமில்லை. சொல்லப் போனால் மதவெறி, இனவெறி உள்ளிட்ட வலதுசாரி சித்தாந்தங்களின் உள்ளார்ந்த கூறுகளும் அபாயகரமான பாலியல் வெறியும் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்பதற்கு பல ஆய்வுகள் இருக்கின்றன. சுருங்கச் சொன்னால் “கற்பும் – விபச்சாரமும்” பார்ப்பனியத்தின் இரு பக்கங்கள். ஆகவே இந்த ‘வெற்றிகரமான’ மசாலாவோடு இணைந்து வலதுசாரி பிரச்சாரங்கள் பொது புத்தியோடு இணைந்து அதன் பாதையிலேயே பயணிப்பதால் எளிதில் பலரைச் சென்றடைகிறது.

உதாரணமாக “ஆலியா பட்டுக்கு அறிவுக் கூர்மையில்லை; ஆனால் பாலுறவு நிலைகளில் அவர் கைதேர்ந்தவர்” என்பது சஸ்காடைம்சில் வெளியாகியுள்ள ஒரு “ஆய்வு”கட்டுரை (மெய்யாகவே அப்படி ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறான்). இதற்கு அக்கம் பக்கமாகவே “எதுவும் செய்யத் துப்பில்லாத காங்கிரசுக்கு பதில் வெற்றியோ தோல்வியோ பணமதிப்பழிப்பு நடவடிக்கையை மேற்கொண்ட நரேந்திர மோடி பாராட்டுக்குரியவர்” என்கிற ஒரு கட்டுரையும் வெளியாகிறது என்று வைத்துக் கொள்வோம்.

பார்ப்பனிய இந்துத்துவத்தால் புடம்போடப்பட்ட இந்திய நடுத்தர வர்க்க அரைவேக்காடு ஒருவர் இக்கட்டுரைகள் இரண்டையும் அக்கம் பக்கமாக படிக்கும் போது எவ்வாறான மன எழுச்சிக்கு ஆளாவார்? “பெண்கள் என்றாலே புணர்ச்சி இயந்திரம் என்பதால் அவர்கள் தசைப் பிண்டமாக இருந்தால் போதும், மூளையெல்லாம் தேவையில்லை” என்கிற அவரது பார்ப்பனிய கண்ணோட்டத்தை மெல்லத் தடவிக் கொடுத்து அதில் அவர் புளகாங்கிதம் அடைந்திருக்கும் பலவீனமான தருணத்தில் மோடியின் பராக்கிரமத்தை மூளைக்குள் இறக்கி விடுகின்றனர்.

இப்போது அவர் தான் பங்கேற்கும் முகநூல் குழுமங்களிலும், வாட்சப் குழுமங்களிலும் மேற்படி “பராக்கிரமத்தை” பகிர்வார். அது பல சுற்றுகள் சுற்றி கடைசியில் குருமூர்த்தி போன்ற மெத்தப் படித்த மேதாவிகளின் பார்வைக்கும் வந்து, அவர் போன்றவர்களால் தங்களது ட்விட்டர் அல்லது முகநூல் பக்கங்களிலும் பகிரப் படுகின்றன. சில முஸ்லீம் மதவெறியர்களும் விவாதங்களின் போது இத்தகைய ஆபாச வார்த்தைகள், ஆணாதிக்க சொற்றொடர்களை பயன்படுத்துவதை பார்க்கலாம். “பொட்டை, சேலை கட்டி வா” என்றெல்லாம் இவர்களும் தொட்டதுக்கெல்லாம் சவால் விடுவார்கள். இங்கே பார்ப்பனியம் போல வளைகுடாவில் ஷேக்குகளின் இஸ்லாமும் இத்தகைய இரட்டை நிலையோடுதான் பயணிக்கிறது.

இப்படியாக இந்த மதவெறியர்கள் மக்களுக்கு ஒழுக்கமும், தங்களுக்கு கேளிக்கையும் அறமென்பதை வைத்திருக்கிறார்கள். இதில் உலக அளவில் பார்ப்பனியம்தான் சீனியர் என்பதால் தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியில் தமது மரபை கண்டெடுத்திருக்கிறார்கள்.

****

ல்ட்நியூஸ் இணையதளத்தின் கட்டுரையை வாசித்து முடித்த போது ஆயாசமாக இருந்தது. “சாக்கடையில் உழலும் பன்றிகளோடு போட்டியிடாதே. அவை உன்னைத் தமது நிலைகளுக்குத் தாழ்த்தி பின் எளிதில் வென்று விடும்” என்கிற பழைய பொன்மொழி நினைவுக்கு வந்தது.

அந்தப் பழமொழி சொல்லப்பட்ட காலத்தில் பொக்லைன் இயந்திரங்கள் இருந்திருக்க வாய்ப்பில்லை. நாம் பொக்லைன் இயந்திரத்தைக் கொண்டு மொத்தமாக பன்றிகளோடு சேர்த்து சாக்கடைகளை நிரவி மூட வேண்டியிருக்கிறது.

சாக்கியன்

 

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் – கருத்துக் கணிப்பு

0

“அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்” என ஏ 1 பெயரில் ஏ 2 -வின் சகோதரி மகன் டிடிவி தினகரன் ஒரு கட்சியை ஆரம்பித்திருக்கிறார். இருபது ஆண்டுகள் கொள்ளையடித்த காசை பாதுகாக்கவும், இனி வரும் ஆண்டுகளில் கொள்ளையடிக்கவும், சில எலும்புத் துண்டுகளை முதலீடாகப் போட்டு ஆரம்பித்திருக்கிறார் தினகரன். அதுவும் இக்கட்சி இடைக்காலம்தானாம். முழுக்காலமாக வரவேண்டிய அவசியமில்லாமல் அதிமுகவை கைப்பற்றி இரட்டை இலை சின்னத்தை மீட்பாராம்.

இனி கருத்துக் கணிப்பு கேள்வி :

டிடிவி தினகரனது புதிய கட்சி துவக்கம் – உங்களது கருத்து என்ன?

1. பச்சமுத்து, வைகுண்டராசன் டி.வி வகையறாக்கள் இந்த வாரம் முழுக்க செய்தியிலும், விவாதங்களிலும் இக்கட்சியின் கொள்கைகளை விவாதப் பொருளாக்கி ஜனநாயகத்தைக் கொல்வார்கள்.

2. எடப்பாடி – ஓபிஎஸ் அணியா, சசிகலா – தினகரன் அணியா என பாஜக தனது வளர்ப்பு நாயை முடிவு செய்ய வேண்டியிருக்கும்.

3. இனி தமிழக அரசியலில், தமிழிசை, கமல், ரஜினி, டிடிவி என அன்றாடம் ஒரு பிரேக்கிங் நியூஸ் விட்டையும், விநாடிக்கொரு மீம்ஸ் முட்டையும் வரப்போவதால் தியேட்டர்களில் கூட்டம் இருக்காது.

4. அரசியல் ஈவண்ட் மேனேஜ் மெண்ட் கம்பெனிகளுக்கு நன்றாக கல்லா கட்டும்.

5. ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள் கட்சி நடத்துவதை அனுமதிக்கும் தமிழக மக்களது பரந்த மனதின் மற்றுமொரு சாதனை.

(மூன்று பதில்களை தெரிவு செய்யலாம்.)

 

அசோக் லேலண்டிடம் சரணடைவதா தமிழின உரிமை ? பெ. மணியரசன் – கி.வெங்கட்ராமனிடம் புஜதொமு கேள்வி !

1

தொழிலாளர் வர்க்கத் தலைமையே தொழிற்சங்கத்தின் உயிர் ! கி. வெங்கட்ராமன் போன்றவர்களின் தலைமையால் தொழிற்சங்க இருப்புக்கே ஆபத்து!

சோக் லேலண்ட் தேசம் கடந்து சென்று வர்த்தகம் செய்யும் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனம். நாடு முழுமைக்குமான பயணிகள் மற்றும் கனரக வாகன சந்தையில் 35% கைப்பற்றி வைத்திருக்கிறது. கடந்தாண்டு 2016 – 17 மட்டும் 21,232 கோடிகள் வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது. இலாபமாக 1,223 கோடிகள் மட்டும் காட்டப்பட்டுள்ளது. ஒசூரில் மூன்று யூனிட்களும், சென்னை எண்ணூரில் ஒரு யூனிட்டும், வடமாநிலங்களில்  மூன்று யூனிட்களும் என உற்பத்தி தளங்கள் உள்ளன.

நிரந்தரத் தொழிலாளர்களை ஒழித்துக் கட்டுவதையும் தொழிலாளர் சட்டபூர்வ உரிமைகளை பறித்து நவீன கொத்தடிமைகளை உருவாக்குவதையும் கொள்கையாக கொண்டு இடைவிடாது செயல்படுகிறது, AL நிர்வாகம் . 16,000 நிரந்தரத் தொழிலாளர்களை 5,000 மாகவும் குறைத்துவிட்டு உரிமைகள் ஏதுமற்ற காண்ட்ராக்ட் , தற்காலிக, பயிற்சித் தொழிலாளர்கள் 10 ஆயிரத்திற்கு மேல் நேரடி உற்பத்தியிலும் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இவ்வாலைகளில் INTUC போன்ற பொம்மை மாடல் சங்கமாக இல்லாத போதும் கடந்த 25 ஆண்டுகளில் தொழிற்சங்களின் பேரம் பேசும் உரிமைகளை பறித்து, நிர்வாகத்தின் ஓர் அங்கமாக தொழிற்சங்கத் தலைமைகளை மாற்றி விட்டது, நிர்வாகம்.

இச்சூழ்நிலையில், புதியதலைமை – மாற்று சிந்தனை என்று ஒசூரில் யூனிட் 2 தொழிலாளர்களின் மிகுந்த எதிர்ப்பார்ப்புகளுடன் தொடங்கிய ஊதிய உயர்வு கோரிய ஒப்பந்தம் 12 மாதங்கள் இழுத்தடித்து கடந்த ஜூலை 2017 -ல் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தை பேசி முடித்த தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் பொதுச் செயலாளர் திரு. கி.வெங்கட்ராமன் (தமிழ்த் தேசதியப் பேரியக்கம் எனும் கட்சியின் தலைவர் பெ. மணியரசன்) அவர்கள் இதை ஒரு ‘வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் ‘ என்கிறார். இவ்வொப்பந்தம் தொழிலாளர்களின் உரிமைகளை காவு கொடுத்திருக்கிறதா? அல்லது மீட்டெடுத்திருக்கிறதா? எங்கு கொண்டு போய் கொண்டிருக்கிறது? என்பதை அலசிப் பார்ப்பதே இப்பதிவின் நோக்கம்.

புதிய ஒப்பந்தம் மூலம் தொழிலாளர்கள் மீதான பணிச்சுமையும் உரிமைப் பறிப்புகளும்!

  1. நேரடி உற்பத்தி உயர்வு 12% . (தொழிலாளர்களின் கருத்தை மீறி அதாவது 8 மணி நேரத்தில் 440 நிமிட வேலை என்பதை 492 நிமிட வேலை செய்ய வேண்டும்.)
  2. நேரடி மற்றும் மறைமுக உற்பத்தி பிரிவிலிருந்து வெளியேற்றப்பட்ட (சர்ப்ளஸ்) நிரந்தரத் தொழிலாளர்கள் எண்ணிக்கை 348 பேர். இதனால் உயரும் உற்பத்தி அளவு 23.6% .
  3. 6 – வது நாள் வேலை கட்டாயம் இல்லை. அதாவது,சனிக்கிழமை வேலை கிடையாது (லே.ஆப்). இதன் உற்பத்தி அளவு 21% .

இவையெல்லாம் ஊதிய உயர்வுக்காக சங்கத் தலைமையை மண்டியிட வைத்து கைப்பற்றிக் கொண்டதாகும். இந்த ஒப்பந்த பலன் பெறும் நிரந்தரத் தொழிலாளர்கள்  1,650 பேர் மட்டுமே.  மேலும் யூனிட் 2 ஆலையில் ஒப்பந்த மற்றும் தற்காலிக தொழிலாளர் சுமார் 5,000 பேருக்கு மேல் உள்ளனர். இவர்களுக்கு ஒப்பந்த பலன் ஏதும் கிடையாது. ஆனால், வேலைப் பளுவைமட்டும் சுமப்பார்கள்.

ஒப்பந்தம் மூலம்1,650 பேருக்கு இனி சனிக்கிழமை அன்று வேலை தரவேண்டிய அவசியம் இல்லை என தொழிற்சங்கம் இந்த ஒப்பந்தத்தின்மூலம் ஒப்புக்கொண்டுள்ளது . பல ஆயிரம் கோடி லாபம் கொழுக்கும் இவ்வாலையில் 18/(1) ஒப்பந்தம் மூலமாக சட்டவிரோத லே ஆஃப் அமுலாகிறது. ஊதிய உயர்வு கேட்ட தொழிலாளிக்கு 6 -வது நாள் வேலை உரிமை பறிக்கப்பட்டுள்ளது. நிர்வாகம் தன் உற்பத்தி தேவைகளை 5 வேலைநாட்களில் ஈடு செய்து கொள்ளும். 6-வது நாள் லே ஆஃப். அதாவது சனிக்கிழமை வேலை கிடையாது. தற்போது 5 வேலைநாட்களில் உற்பத்தி இலக்கை எட்டவேண்டும் என்ற அழுத்தத்தை தொழிலாளர்கள் சந்திக்க வேண்டியுள்ளது.

இந்த ஒப்பந்தம் 6 வது நாள் வேலை இல்லை(லே -ஆஃப்) எனும் கூர்மையான கத்தியை நிர்வாகத்திற்கு வழங்கிவிட்டது. இதை வைத்து தொழிற்சங்க தலைமையை மிரட்டி என்ன சாதிக்கப்போகிறது? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். மேலும், இந்த அரசு அதிகாரத்தின் கீழ் உள்ள தொழிலாளர் உரிமைகளை பறிக்க 44 சட்டங்களை 4 தொகுப்புகளாக மாற்ற பிரதமர் மோடி அரசாங்கம் முயற்சித்து வருகிறது. அதற்குள் கொல்லைபுற வழியாக லே. ஆஃப்-ஐ திணித்துவிட்டது, லேலாண்டு நிர்வாகம் .

மற்றொரு புறம் GST வரியால் உயர்ந்த விலைவாசி, பஸ் கட்டண உயர்வு இவற்றால் விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டுள்ள உரிமைகள் ஏதுமற்ற தற்காலிக மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் 6 -வது நாள் சனிக்கிழமை வேலை இல்லை என்றால் ஒப்பந்த பலன் பெறாத இவர்கள் மிக மோசமாக பாதிக்கப்படுவார்கள். வாங்கும் அற்பக்கூலியில் மாதம் ரூ1,600 இழந்து விடுவார்கள். இது பேரிழப்பாகும். இதனால் நிர்வாகத்திற்கு ஆண்டுக்கு சுமார் 13 கோடி இலாபம் கூடும். (பராமரிப்பு செலவுடன் ரூ 500 x 52 x 5000 பேர் = 13 கோடி ரூபாய்).

படித்தும் பொருத்தமான வேலையின்றியும், பணி நிரந்தரமில்லாத இளம் தொழிலாளர்கள் ஒசூரில் மட்டும் 50 ஆயிரம் பேர் இருக்கிறார்கள். இவ்வொப்பந்தம் இவர்களை மிக மோசமான சமூக பாதிப்பு என்ற புதைகுழிக்குள் மேலும் இழுத்துச் செல்ல வழி வகுக்கிறது. இவர்களுக்கு இந்த ஒப்பந்தம் மிக மோசமான சமூக பாதிப்பை உருவாக்கிறது.

நமது சமூக அமைப்பில் நான்காம் வர்ணத்தாரின் உழைப்பிற்கு பார்ப்பனியம் உரிய மதிப்பை தந்ததில்லை!
காண்ட்ராக்ட் தொழிலாளர் உழைப்பிற்கு முதலாளித்துவம் உரிய மதிப்பை தருவதில்லை!

பணி நிரந்தரம் இல்லை என்ற முதலாளித்துவ கொள்கையால் ரிசர்வ் பட்டாளமாக இளம் தொழிலாளர்கள் குவிந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களின் ரத்தத்தை சுவைத்து கொழுத்துக் கொண்டிருக்கிறது, நிர்வாகம். இவர்களைப் பற்றி நிர்வாகத்திற்கு கிஞ்சித்தும் கவலையில்லை. ஆனால், தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் பொதுச் செயலாளர் கி.வெ அவர்கள் சப்தமில்லாமல் துணை போவதுதான் துரோகமாகும்.

மொத்தத்தில் 2017 -ம் ஆண்டு ஒப்பந்தத்தின்மூலம் யூனிட் 2 தொழிலாளர்கள் மீது திணிக்கப்படும் நேரடி வேலைப்பளு 12% + சர்ப்ளஸ் 23.6% = 35.6% ஆகும். இதன் மதிப்பு 2990.4 கோடிகள் ஆகும். மேலும்,  மறைமுகமாக  லே-ஆப் மூலம் திணிக்கப்படும் உற்பத்தி 21%. இதன் மதிப்பு 1764 கோடிகள்.   என மொத்தமாக 4754.4 கோடிகள் விற்றுக்கொள்முதலில் உயரும். இந்த ஒப்பந்தத்தின் மூலம் உயர்ந்த சம்பளத்தின் மதிப்பு ஆண்டுக்கு 27.7 கோடிகள் மட்டுமே ஆகும். திணிக்கப்பட்ட லே. ஆப் அமலுக்கு வரும் போது 7.9 கோடிகள் பிடித்தம் செய்து விடும், நிர்வாகம். இதையெல்லாம் மறைத்து 1% கூலி கூட பெறாமல் ‘வரலாற்று சாதனை’ என்று கொட்டமடித்தால் இது தொழிலாளர் வர்க்கத்தின் மீதான வன்மமின்றி வேறு எப்படி புரிந்து கொள்வது?. கூலி உயர்வு ஏற்ற, தாழ்வாக அமையலாம். ஆனால் தோல்வியை வெற்றி என இட்டுக்காட்டுவதன் நோக்கம் முக்கியமானதாகும்.

எதற்கெடுத்தாலும் Fund (பணம்) இல்லை என்று நிர்வாக அதிகாரிகள் ஒப்பாரி வைக்கின்றனர். ஆனால் 2017 ஒப்பந்தம் பேசிமுடித்தப்பிறகு அதற்காக அதிகாரிகள், MD, ED  உள்ளிட்டவர்கள் எடுத்துக்கொண்ட பங்குகள், பணப்பலன்கள் பற்றி ஆய்வுக்கு எடுக்கையில் இந்த ஒப்பந்தத்தின்மூலம் தொழிலாளர்கள் முதுகில் குத்தப்பட்டது பற்றி ஓர் புரிதலுக்கு வரமுடியும்.

கி.வெ- யுடனான இந்த ரகசிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடைபெற்ற ஓராண்டில் பு.ஜ.தொ.மு அணி சார்பாக நிர்வாகத்தின் முதலாளித்துவ பயங்கரவாதத்தையும் சூழ்ச்சிகளையும் அம்பலப்படுத்தி பிரசுரங்கள் மற்றும் சுவரொட்டி இயக்கம் ஒசூர் முழுவதும் எடுக்கப்பட்டது. இதற்கு பதிலோ, விளக்கமோ தராமல் “அவர்களுக்கு ஒரு நோக்கம் இருக்கிறது” என வன்மத்தை விதைத்தார்கள் திரு கி.வெ-யின்  தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் முன்னணியாளர்கள்.

மாற்று அணியினரின் வெளிப்படையான கேள்விகளுக்கு விளக்கம் தராமல் அராஜகமான பாசிசக் கண்ணோட்டத்தை வளர்த்து வருகிறது, கி.வெ தலைமை. இந்த ஒப்பந்தம் மூலம் நிர்வாகத்தின் கைகள் ஓங்கி நிற்பதையும்  ஒப்பந்த கோரிக்கைகள் படுதோல்வியடைந்ததையும் மறைத்தும்  வெறித்தனமாக வெற்றுக்கூச்சலிட்டுவருகின்றது, கி.வெ தலைமை .

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

சுருக்கமாக, 2017 -ம் ஆண்டு ஒப்பந்தத்தை பற்றி கூறின் பழைய கள்ளு, புதிய மொந்தை! இந்த ஒப்பந்தத்தைப் பற்றிய விளைவுகள் அறியாதவர் அல்ல, கி.வெ. ஆனாலும் நிர்வாகத்திடம் தொழிலாளர் உரிமைக்காக வாதிடுவது தனது இனவாத அரசியல் எதிர்காலத்திற்கு எந்த பலனும் அளிக்காது என்பதை உணர்ந்து விட்டதால் தொழிலாளர் உரிமைகளை அடகு வைத்து தன்னை நிலைநிறுத்திக் கொள்வதிலேயே இன்றுவரை கவனமாக உள்ளார்.

கடந்த கால் நூற்றாண்டில் குசேலர், மைக்கேல் போட்ட ஒப்பந்தங்கள் துரோக ஒப்பந்தம் என்றும் முச்சந்தியில் வைத்து விவாதிக்க அழைத்த தமிழ் தேசியப் பேரியக்கத்தின் பொதுச் செயலாளர் கி.வெ அவர்கள் வெளிப்படை தன்மையற்ற, தனிநபராக ரகசிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு நிர்வாகத்தின் முதலாளித்துவ பயங்கரவாத தாக்குதல்களை மூடி, மறைத்துவிட்டு வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் என்று விளம்பரம் செய்வது தன்னை நம்பி வாக்களித்த தொழிலாளர் முதுகில் குத்தும் துரோகமாகும்.

இன்றுவரையில் அசோக்லேலாண்ட் தொழிற்சங்க நடவடிக்கையில் நிர்வாகத்தின் முதலாளித்துவ இலாபவெறி, சமூக விரோத முகம் நேரடியாக அம்பலப்பட்டது கிடையாது. மாறாக, குசேலர், மைக்கேல் தனிமனித துதி, தலைவர் அரசியல், அவரால் மட்டும் முடியும்… என்ற கருத்துக்கள் முன்தள்ளப்பட்டு தொழிலாளர்களின் முன் முயற்சிகள் நசுக்கப்பட்டன. அதுவே தொழிற்சங்க செயல்பாடாக சித்தரிக்கப்பட்டது.

அவுட்சோர்ஸ் (மெசின்சாப் ஒழிப்பு), காண்ட்ராக்ட் தொழிலாளர் முறை,  மைக்ரோ செகண்ட் உற்பத்திமுறை (ALTS) இவற்றால் நிரந்தரத் தொழிலாளர்மீது சர்ப்பிளஸ், டிரான்ஸ்பர் என்ற அடக்குமுறை ஏவியது, நிர்வாகம். இதுபோன்ற நிரந்தரத் தொழிலாளர்மீதான தொடர் தாக்குதலில் இரு தொழிற்சங்க தலைமைகள் மட்டுமே தொழிலாளர்கள் மத்தியில் அம்பலப்பட்டனர். சமூக அரசியல் கண்ணோட்டமின்றி  தொழிலாளர்களும் நல்ல தொழிற்சங்க தலைவர் வந்தால் பிரச்சினை தீர்ந்துவிடும் என கருதினர்.

இச்சூழலில், தமிழ் தேசிய பேரியக்கத்தின் பொதுச் செயலாளர் கி.வெ, மாற்று சிந்தனையாளர் என அறிமுகமானார்.

“நிர்வாகத்தின் லாபவெறி, அடக்குமுறைகளை “ பண்ணையார் மனோபாவம்” என்றும் “ இரண்டு தலைமைகளும் மோசம் செய்து விட்டன, கடந்தகால ஒப்பந்தங்களை பார்த்தேன். துரோகம் செய்துவிட்டார்கள்”. என்றும் “ஒப்பந்தத்தைப்பற்றி முச்சந்தியில் நின்று விவாதிக்க தயார். அவர்கள் தாயாரா? என்றும் தொழிற்சங்க செயல்பாட்டில் தொழிலாளர்களை பார்வையாளனாக வைத்து இருக்கிறார்கள். நான் பங்கேற்பாளனாக செய்வேன். 40 நிமிட வேலைக்குத்தான் ஊதியம் வழங்கப்படுகிறது, இது அநீதி. அறம்சார்ந்து இல்லை. இரண்டு தலைவர்களின் நேர்மையை சந்தேகிக்கிறேன்.

சரியானதை சாத்தியமாக்குவேன். சாத்தியமானதை சரியென சொல்ல மாட்டேன். win – win தான் என் பாலிசி. தொழிற்சங்கம் அரசியலைவிட மோசமாக கெட்டுவிட்டது.. ஆண்டுக்கு ஒரு முறை தொழிற்சங்க தேர்தல் நடத்துவேன் ” என்று ஆலைவாயில் கூட்டங்களில் அடுக்கு மொழியிலும் அழகு தமிழிலும் ஆவேசமாய் பேசினார், கி. வெங்கட்ராமன்.

தொழிற்சங்கத் தேர்தலில் தான் வெற்றி பெற்றால் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நியாயம்கிடைக்கும் என்றார். மும்முனை போட்டியிலிருந்து மைக்கேல் விலக்கப்பட்டார். கடைசிவரை முதலாளித்துவ சுரண்டல் என்ற வார்த்தையைகூட உச்சரிக்கவேயில்லை. கி.வெ வெற்றியும் பெற்றார். பதவி ஏற்பு விழா என்பதில்கூட எனக்கு உடன்பாடு இல்லை, இது பொறுப்பு ஏற்பு விழா என்றார். பட்டாசு வெடிக்கக்கூடாது என்றார். பேச்சில்,தோற்றத்தில் எளிமை காட்டினார். இப்படியாக பல சவடால்கள், நாடகங்கள், கூத்துக்கள் நடத்தி சங்கப் பதவியை பிடித்தப்பின்னர்தான் ‘அமைதிப்படை அம்மாவாசையை’ தொழிலாளர்கள் பார்க்க முடிந்தது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

கடந்த 2. 9. 2016 அகில இந்திய வேலைநிறுத்த நாளில் நயவஞ்சகமாக முதல் பேச்சுவார்த்தைக்கு  நிர்வாகம் அழைத்தது, அதனை மறுக்காமல் ஏற்றார். தொழிலாளர்களின் வேலைநிறுத்த நாளில் நான் வரமாட்டேன் என்று சொல்லவில்லை. மற்ற யூனிட்கள் அகில இந்திய வேலைநிறுத்தத்தில் பங்கேற்கையில் கி.வெ ஒசூர் யூனிட் -2 ல் கிளையை இயக்க அனுமதித்தார்.

நட்சத்திர ஓட்டலில் நிர்வாகத்துடன் தனியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். தொழிலாளர்களை மட்டுமல்ல சங்க நிர்வாகிகளையே பார்வையாளராக்கி விட்டார். அறிமுகக் கூட்டம் என்று சமாதானம் சொன்னார். ” வேட்டி கட்டிய சாமானியன் கார்ப்பரேட் நிர்வாகத்திடம் சோரம் போகமாட்டான் ” என்று ஆதவாளர்கள் பரப்புரை செய்தனர்.

“தொழிற்சங்கத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை. அவர் சரியில்லை, இவர் சரியில்லை” என்று பிற தலைவர்களை பற்றி பேசியவர், அவர்கள் இருவரும் சென்ற பாதையில் இன்னும் வேகமாக ஓடினார். “மன்மோகன் செயல்படாத பிரதமர் ” என்று என்று மோடி சொன்னபோது அதன் பொருளை இப்போது நாம் எப்படி புரிந்து கொள்கிறோம் (கார்ப்பரேட் பாதசேவையை) அதே போல கி.வெங்கட்ராமன் நடந்து கொண்டு வருகிறார்.

கடந்த சங்க தேர்தல் சமயங்களில் இரண்டு தலைமைகளின் மீதான அதிர்ச்சியில் இருந்த தொழிலாளர்களிடம் தன்னை ஒரு மீட்பராக முன்னிறுத்திக்கொண்ட கி.வெ அதிருப்தியை வாக்குகளாக அறுவடை செய்தார். அந்த கால கட்டத்தில் ஆலைவாயிலில், தேர்தல் மேடைகளில் கி.வெ-யின் வாயிலிருந்து வழிந்த வாக்குறுதிகளை அள்ளிக் கொட்டினால் காவிரியே கரைபுரண்டு ஓடும். தொழிலாளர்கள் அசந்த நேரம் பார்த்து சங்கத் தேர்தலில் வெற்றிப்பெற்று ஒன்றரை ஆண்டுகள் கடந்து விட்டன. இந்த ஒன்றரை ஆண்டுகளில் கி.வெ யின் நடைமுறைகள் கண்டு நம்பிக்கைகள் தகர்ந்துப் போய் தமக்கு துரோகம் இழைக்கப்பட்டதைக் கண்டு வாக்களித்தவர்களே திகைத்துப் போயுள்ளனர்.

ஒப்பந்த கோரிக்கையை துல்லியமாக வரையறுத்து (?) நிர்வாகத்திடம் அளித்து அதற்கான பேச்சுவார்த்தை இவரது தலைமையிலான சங்கம் தொடங்கியது என்கிறது, இவரது பத்திரிக்கையான தமிழ்த் தேசிய தமிழர் கண்ணோடட்டம்.

2016 -ல் புதிய ஒப்பந்த கோரிக்கையில்  சமவேலைக்கு சம ஊதியம் என வரவேண்டியதை  சம சர்வீஸ்க்கு சம சம்பளம் என்று கோரிக்கையை மாற்றி E2 ,S2 என்றார். ஒப்பந்தம் நிறைவு பெற்ற நாளிலிருந்து, புதிய ஒப்பந்தம் அமல் (Next day, Next settlement) என்று மற்றொரு கோரிக்கை என்றார். இது அறம் சார்ந்து கோரிக்கை மட்டுமல்ல நியாயம் இருக்கிறது என்றார். நிர்வாகத்தின் இதயத்தோடு பேசுகிறேன் என்றவர் இந்த கோரிக்கை நிறைவேறாமைக்கு கி.வெ சொல்லும் காரணங்கள் தான் பரிசீலிக்கப்பட வேண்டியதாகும்.

இந்த ஒப்பந்த கோரிக்கைகளை நிறைவேற்றாமைக்கு ” இரண்டு முறை யுனிட் 1 சங்கத் தலைவர் குசேலருக்கு கடிதம் கொடுத்தும் ஒத்துழைக்கவில்லை ” என்றும் ” யூனிட் 2 ஆலையில் குசேலர் அணியினர் ஒத்துழைக்கவில்லை ” என்றும் ” லோ கொட்டேசனுக்கு தலையாட்டிவிட்டார் குசேலர்” என சொல்லி குசேலரை மட்டும் குற்றவாளி ஆக்கினாரே தவிர நேரடி உற்பத்தி உயர்வு, நேரடி மற்றும் மறைமுக உற்பத்தி பிரிவுகளிலிருந்து 348 தொழிலாளர்கள் வெளியேற நிர்பந்தித்தது கான்ட்ராக்ட் தொழிலாளர்களை குவிப்பது, 6 வது நாள் வேலையில்லை என்ற பெயரில் ஆண்டுக்கு 52 நாட்கள் வேலை நாட்களை பறிப்பு, வருகை பதிவுக்கு கைரேகையை கட்டாயப்படுத்துவது என இதற்குப் பின்னுள்ள நிர்வாகத்தின் லாபவெறி, அடக்குமுறை, சூழ்ச்சியை பற்றி வாய் திறக்கவில்லை, திரு. கி.வெ. ஆனால் மற்றொருபுறம் நிர்வாகத்தின் கொடிய சுரண்டல் முகத்தை மறைக்க திட்டமிட்டு குசேலர் எதிர்ப்புக் கண்ணோட்டத்தை தீவிரப்படுத்திவருகிறார். சங்கத் தேர்தலில் வெற்றி பெற மைக்கேலுடன் கூட்டணி பேசிய கி.வெ ஒப்பந்த வெற்றிக்காக ஒர் கடிதம் கூட தரவில்லை. “லே. ஆப் இல்லாத நார்மல் ஒப்பந்தம்” என்ற ஆலோசனைக் கூட ஏற்கவில்லை. ஆக முழுக்க, முழுக்க நிர்வாகத்தின் வழிகாட்டுதலே சங்க செயல்பாடுகள் என சுருங்கிப் போனது.

பேச்சுவார்த்தையின் போது ஊதிய உயர்வு கோரிக்கைக்கு எதிராக நிர்வாகம் எதிர் கோரிக்கை வைத்தது. நிர்வாகத்தின் அந்த 4 பக்க எதிர் கோரிக்கைகளை இன்றுவரை தொழிலாளர் கண்களுக்கு காட்டாமல் மறைத்து விட்டார். ஏன் மறைத்தார்? எதற்காக மறைத்தார் ? மறைக்க சொன்னது யார்? பேச்சுவார்த்தை வெளிப்படையாக நடைபெறாமல் இருக்க கி.வெ அவர்கள் ஒப்புக்கொண்டார் என்பதை விட நிர்வாகத்திடம் மண்டியிட்டார் என்று சொல்வதே பொருத்தமானது.

கமிட்டி மீட்டிங்கில் உற்பத்தி உயர்வு ஒப்புதல் கிடைக்காத நிலையிலேயே உற்பத்தி உயர்வை வாரி வழங்கினார். மேலும் 348 நிரந்தரத் தொழிலாளர்களை நேரடி மற்றும் மறைமுக உற்பத்தி பிரிவிலிருந்து விலக்கிவிட்டு அந்த இடங்களில் காண்டராக்ட் தொழிலாளர்களை திணிக்க ஒப்புக் கொண்டார்.

அடுத்து, 6 வது நாள் சனிக்கிழமை வேலை இல்லை (லே ஆப்) என்பதை ஏற்றார். இனிவரும் காலம் ஆண்டுக்கு சட்டவிரோதமாக 52 நாட்கள் லே ஆப் கொடுத்து ஆலையை இழுத்து மூடலாம் என்பது தான் இவரது ஒப்பந்தத்தின் ‘வரலாற்று சிறப்பு மிக்க’ துரோகமாகும். எண்ணூருக்கு இணையான சம்பளம் எனும் கேரட்டை காட்டி குடலை உருவிய கொடுஞ்செயலுக்கு துணைபோனது யார்? என்பதை தொழிலாளர்கள் அடையாளம் கண்டு விட்டனர். முதலாளித்துவ சுரண்டலை மறைத்து துணை போகும் இது போன்ற தலைமைகள் தொழிலாளர் வர்க்கத்துக்கு தலைமை தாங்க எள் முனை அளவு கூட தகுதியற்றவர்கள் ஆவர். அதே சமயம் தனக்கொரு இருப்பை உருவாக்க எப்படி வேண்டுமானாலும் புரட்டி பேசுவார், கி.வெ என்பது தெளிவாகி விட்டது.

சென்னை எண்ணூர் யூனிட்டில் ‘NEEM வேண்டாம், லயம் வேண்டாம் ‘ என்றும் ‘ தேவைப்பட்டால் வழக்கு போடுவோம் ‘ என  இவரின் தொழிலாளர் ஜனநாயகப் பேரியக்கம் பிரசுரம்  வினியோகம் செய்கிறது. அதன் தலைவரான கி.வெ அவர்கள் ஒசூரில் எந்த விதமாக எதிர்ப்பும் எழாத வண்ணம் VTS சாப்  முழுவதும் காண்ட்ராக்ட் – க்கும் , காண்ட்ராக்ட் தொழிலாளர்களை மட்டும் வைத்து சட்டவிரோதமாக டிபன்ஸ் வைக்கிள் ( ராணுவ வாகனம்) உற்பத்தியாவதைக் கண்டும் காணாமல் இருந்து வருகிறார், திரு. கி.வெ.

மொத்தத்தில்  இதற்கு பின்புலத்தில் ‘நடைமுறை சாத்தியப்பாடு’என்ற பெயரில் தேர்தல் கூட்டணியில் தொடங்கி ஒவ்வொரு உரிமை பறிப்புக்கு பின்னணியில் ‘ வேறு வழி கிடையாது ‘ என நிர்வாகத்தை நம்பி வாழ்வது என்ற சமூக கண்ணோட்டம் அடித்தளம் உருவாக்கப்படுகிறது. இதற்காக பல முனைகளில் சங்கப் பொறுப்பில் உள்ளவர்களிடம் பல மணிநேரம் தனித்தனியாக பேசுகிறது நிர்வாகம். இதனை முறியடிக்க தொழிலாளர்களின் சொந்த பலத்தை கட்டியமைத்து வழிகாட்டும்  வெளிப்படை தன்மை கொண்ட தொழிற்சங்கத்தலைமையும்  நடைமுறையும் தேவைப்படுகிறது.

தற்போது இந்த ‘ கைநாட்டு ‘ ஒப்பந்தத்திற்கு பிறகு பெயிண்ட்சாப் உள்ளிட்ட உற்பத்தி தளத்தை விரிவு படுத்துகிறது, நிர்வாகம். ஒரு சிப்ட் மட்டுமே இயக்க முடியும் அளவுள்ள நிரந்திரத் தொழிலாளர்களை கொண்டு மூன்று சிப்ட்களை ஒப்பந்த மற்றும் தற்காலிக தொழிலாளர்களை திணித்து ஆலையை இயக்குகிறது, நிர்வாகம். இதுபோல் மிகை உற்பத்தியும் மிகை இலாபத்தையும் ஈட்டிய NLC நிர்வாகம் ஒரு கட்டத்தில் அதன் அதிகாரிகள் மட்டும் பலனடைந்தனர். ஆனால், மிகை உற்பத்தியை காட்டி காண்ட்ராக்ட்  தொழிலாளர்களுக்கு 26 வேலை நாட்களை 22 நாட்களாக குறைத்தது மட்டுமின்றி இனி 19 நாட்கள் மட்டுமே வேலை என்று தொழிலாளர்கள் மீது போர் தொடுத்து பதட்டமான சூழ்நிலையை உருவாக்கி மிரட்டி வருகிறது, நிர்வாகம். இதுதான் மிகை உற்பத்தியின் பரிணாமம். லேலாண்டு நிர்வாகத்திற்கு அதே வழியில் சேவை செய்கிறார், கி.வெ.

மேலும் ஒசூரில் நிரந்தரத் தொழிலாளர் அதிகமாக உள்ள இவ்வாலையில், 18(1) ஒப்பந்தம் மூலம் நடைமுறைக்கு வரும் சட்டவிரோத லே-ஆப், உரிமைகளற்ற காண்ட்ராக்ட், தற்காலிக தொழிலாளர் அடிமைமுறை – அடக்குமுறைகள் ஆகியவற்றை பிற ஆலை நிர்வாகங்கள் முன்னுதாரணமாக கொண்டு செயல்படுகின்றன. இது நிர்வாகத்தின் அடக்குமுறையின் ஒருவகைமாதிரியாகும்.

கி.வெ எந்த வகையில் வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் என்று இதைக் குறிப்பிடுகிறார்? என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது. எண்ணூர் தொழிலாளர்களைவிட ஒசூர் தொழிலாளர்களுக்கு ஏறக்குறைய பத்தாயிரம் சம்பளம் குறைவாக உள்ளதை சமன் செய்வதாக       E2, S2 எனச் சொல்லி தொழிற்சங்க தேர்தலில் வெற்றி பெற்று, இவரால் பேசி முடிக்கப்பட்ட புதிய ஒப்பந்தம் மூலம்  ஊதிய இடைவெளியை அதிகரித்து விட்டார்.  வாரத்திற்கு 48 மணிநேரம் வேலை என்ற இந்தியத் தொழிலாளர்கள் போராடிப்பெற்ற உரிமைக்கு தமிழ்மண்ணில் கல்லறைக்கட்டிவிட்டார், திரு. கி.வெ. இது சரியானதா? சாத்தியமானதா? என்பதை கி.வெ அவர்கள் பதில் சொல்லவேண்டும். ஒருவேளை பல ஆண்டுகளாக கி.வே பேசிவரும் தமிழ்தேசியத்தில் வேலை உரிமை என்பதன்பொருள் இதுதானோ?

சட்ட விரோதமான லே. ஆப் ஒப்பந்தத்தில் மண்டியிட்டு விட்டு சட்டபூர்வ 26 வேலை நாளுக்கு  DA கணக்கீடு வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக விண்ணப்பம், சட்ட விளக்கம் தருவது அம்பலப்பட்ட தன் முகத்தை மறைப்பதற்கும் இருப்பை தக்க வைக்கும் தந்திரம் என்பது வெளிப்படையாக தொழிலாளர்கள் பேச ஆரம்பித்து விட்டார்கள். மீசை மீது மண் ஒட்டவேயில்லை என்ற கதையாக அந்த தலைவர் இந்த முயற்சி எடுக்கவில்லை மடை மாற்றுகிறார்கள்.

தொழிற்சங்கத்திற்கு புதிது, கரை படியாத கரம், நெருப்பு போன்ற நேர்மை ஒளிவட்டங்களை நம்பி வாக்களித்த தொழிலாளர்கள், ” யார் வந்தாலும் இப்படித்தான், நிர்வாகத்தின் AC ரூம்ல தொழிலாளர் நலனுக்காக வாய்திறக்க மாட்டார்கள் ” என சோர்வின் உச்சத்துக்கே தள்ளப்பட்டுள்ளார்கள்.  அறம்சார்ந்த பொருளியல் பார்வை  எனும் வார்த்தைகளை கேடயமாக கொண்டு தன் இருப்புக்கு வழித்தேடிக்கொண்டதை தவிர, தொழிலாளர் வர்க்கத்துக்கு வேறு என்ன நன்மை? என்பது யோசிக்க வேண்டிய விசயமாகும். உண்மையான எதிரியான நிர்வாகத்தையும் அதன் செயலையும் மறைத்து ஒன்னரை ஆண்டுகளுக்குமேல் தொழிற்சங்க சக்கரத்தை இயக்கியது தான், கி.வெ யின் சாதனையாகும்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது, “கருப்புப் பணத்தை மீட்டு அனைவருடைய வங்கிக் கணக்கிலும்15 லட்சம் பணம் போடப்படும் ” என்று கத்திக் கொண்டு RSS -BJP யினர் நாடாளுமன்ற அதிகாரத்தை கைப்பற்றினர். அவர்களுக்கு கீழுள்ள அராஜகமான சமூக அடித்தளத்தைக் கொண்டு, 120 கோடி மக்களை வதைத்துக் கொண்டும், கார்ப்பரேட் பாத சேவை செய்தும் வருகின்றனர். அதைப்போல தொழிற்சங்க அரங்கில் கி.வெ யின் தலைமை உட்பட தொழிலாளர்களுக்கு பிழைப்புவாத வெறியூட்டிவிட்டு முதலாளித்துவ கொடிய சுரண்டலுக்கு எதிரான உணர்வுக்கும் அரசியல் மீதான சமூக பார்வைக்கும் வேட்டு வைக்கின்றன. ஓட்டுக்கட்சித் தொழிற்சங்கங்களைப்போல சக தொழிலாளியை எதிரியாக்கி, குற்றவாளியாக்கி கேடுகெட்ட வகையில் வழிநடத்துகிறார், கி.வெ.

ஆட்குறைப்பு – காண்ராக்ட் திணிப்பு, சட்டவிரோத லே-ஆப் போன்றவற்றை ஏற்று ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டு ஆறுமாதத்திற்கு பிறகு சென்னையில் 3.2.2018 தமிழ்நாட்டுவேலைகள் தமிழர்களுக்கே ! வெளிமாநிலத்தவர்களுக்கு அல்ல! என்ற பெயரில் சிறப்பு மாநாடு நடத்தி தமிழர் வேலை உறுதி சட்டவரைவு  என்று முன்மொழிகிறார் கி.வெ.

உலக அளவில் முதலாளித்துவ பொருளாதாரம் தோல்வியடைந்து தொழிலாளர் உரிமைகளை பறித்து வேலைப்பறிப்பு, அடக்குமுறை என ஏவி வருகிறது. இதன் தொடர்ச்சியாக அற்பக்கூலிக்கு காண்ட்ராக்ட் தொழிலாளர் முறையை தீவிரப்படுத்தப்பட்டுவருகிறது. இந்தப்போக்கை  மறைத்தும் குறைந்த கூலிக்கு உழைப்பைச் சுரண்டும் முதலாளித்துவப் பயங்கரவாதத்தை எதிர்ப்பதை தவிர்த்தும் வேலைவாய்ப்புகளில் ஏற்பட்டுள்ள பணிநிரந்திரமின்மை நெருக்கடிக்கு வடமாநில தொழிலாளர்கள் தான் காரணம் என்று திசை திருப்புகிறார். மற்றொரு பக்கம் காண்ட்ராக்ட்முறை தீவிரப்படுத்தும் லேலாண்டு நிர்வாகத்தின் கோரமுகத்தை மறைத்து குசேலர் மட்டும்தான் பிரச்சினை என்று மடைமாற்றுகிறார்.

தமிழக விவசாயத்தை அழிப்பதில் கார்ப்பரேட் கம்பெனிகள் கரம்கோர்த்து நிற்பதை மறைத்து நாற்புறமும் இன முரண்பாடு என திசை திருப்புகிறார். அதிகார வர்க்கமானது நதி நீர், வேலை வாய்ப்பு உள்ளிட்ட பிரச்சனைகளில் இன, சாதி, மத முரண்பாட்டை வளர்க்க திட்டமிட்டு செயல்படுகிறது. தமிழினத்தின் உரிமைகளை பறிக்கும் மத்திய அதிகாரம் என்பது ஆரிய பார்ப்பன தலைமையும் கார்ப்பரேட் கும்பல் என்பதை மறைத்து சிறைக்குள் சிக்கியிருக்கும் பிற தேசிய இனங்களையும் எதிரியாக காட்டுவது குறுங் குழுவாதமில்லையா? மத்திய அதிகாரத்தின் சூழ்ச்சிகள், அடக்கு முறைகள், தாக்குதல்கள் அனைத்தையும் இன முரண்பாடு என்ற ஓர் போர்வையில் மறைக்கிறது, இவரை பொதுச் செயலாளராக கொண்ட தமிழ்த் தேசியப் பேரியக்கம்.

சுருங்கக்கூறின் முதலாளித்துவ வர்க்க முரண்பாட்டை மறைக்க குறுகிய சிந்தனையின் வெளிப்பாடான இனவெறி எனும் விச விதைகளை விதைப்பதை கொள்கையாக கொண்டிருக்கிறார். தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் என்பதை மறைத்து வேளாண் பொருளியல் நிபுணர், கட்டுரையாளர், ஆலோசகர் என முக்காடுப்போட்டு கொண்டு இருக்கிறார்,  கி.வெ.

நாடுமுழுவதும் பொதுத்துறைகள் தனியார்மயமாவது பற்றி எதிர்ப்பில்லை. போராட்டமில்லை. அதில் வேலைவாய்ப்புகள் எல்லாம் தனியார்மயம் ஆவதற்கு எதிர்ப்பில்லை. போராட்டமில்லை. ஆனால் வட மாநிலத்தார் பணி சேர்வது மட்டும் தான் மூலப் பிரச்சனையாம். மேலும், தமிழக அரசு அற்பக்கூலிக்கு சுமார் 2.5 லட்சம் வேலைவாய்ப்புகளை காண்ட்ராக்ட் முறைக்கு தள்ளிவிட முயற்சித்து வருகிறது.

ஆனால், மீதி இருக்கிற 20% வேலைவாய்ப்புகளில் பெரும்பகுதி வடமாநிலத்தவர்கள் எடுத்துக்கொள்கிறார்களாம். இதனை எதிர்த்து போராடுகிறாராம்.முரண்பாட்டை வளர்க்கும் தமிழக அரசின் நோக்கத்தை லாவகமாக மறைப்பது தான் அறமா? இதற்கு பெயர் என்ன? வீடு தீப்பிடித்து எரிந்தாலும் என் பங்கிற்கு உரிய சாம்பலை தர வேண்டும் என்பதுதான். இந்த அரசு அதிகாரம் தன்னுடைய ஏகாதிபத்திய, கார்ப்பரேட் கொள்ளையை மறைக்க சாதி, மத, மொழி. இன முரண்பாட்டை கொம்பு சிவி வளர்த்து வருகிறது.

இந்த அரசு அதிகாரமானது கார்ப்பரேட் சுரண்டலையும் பகற் கொள்ளையையும் மறைக்க ஊழல் தான் பிரச்சனை என முன் தள்ளி மக்களின் கவனத்தை திசை திருப்புகிறது. இதற்கு சற்றும் குறையாமல் கி.வெ போன்று இனவாதம் பேசுபவர்களும் கார்ப்பரேட், தனியார்மய சுரண்டலை கண்டுகொள்ளாமல் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு சில தனிமனிதர்களையும் கட்சிகளையும் அதன் நடைமுறைகளையும் ஊழலையும் காரணமாக காட்டுகிறார்கள். முதலாளித்துவ சுரண்டலை மறைப்பது தான் இனவாத தற்காப்பு அரசியலின் உயிர் மூச்சாக உள்ளது. அழகிய தமிழ் வார்த்தைகளில் பிரச்சனைகளை பட்டியலிட்டு இனவாதம் அதிகாரத்தில் பங்கு கேட்கிறதே ஒழிய மக்களின் பிரச்சனை தீர்ப்பதில்லை என்பது வரலாற்று அனுபவமும் கூட.

பார்ப்பன பாசிச மோடி அரசாங்கம் , கார்ப்பரேட் சேவை செய்வதற்கும் தொழிலாளர் உரிமைகளை நசுக்குவதற்கும் நாட்டை மறுகாலனியாக்குவதற்கும் துடித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் தொழிலாளர் ஒற்றுமையை சிதைத்து, மோடி அரசுக்கு எதிரான போராட்டத்தை மழுங்கடித்து தொழிலாளர் வர்க்கத்தினரிடையே பகைமூட்டி, ஆளும்வர்க்கத்தின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு கோடாரிக் காம்பாக வேலை செய்கிறார், கி.வெ.

மொத்தத்தில் தோற்று, அம்பலப்பட்டு நிற்கும் நாடாளுமன்ற கட்டமைப்பு, நாட்டை சூறையாடும் தனியார்மயம், இதை மறைக்கும் பார்ப்பனிய – சாதி கட்டமைப்பை எதிர்த்து போராடாமல் அறவழி அரசியல் என்பது மாற்று சிந்தனை அல்ல, ஏமாற்றும் வழி என்பது மீண்டும் நிருபணமாகி விட்டது.

முதலாளித்துவப் பயங்கரவாதத்தை வெளிப்படையான தொழிற்சங்க நடவடிக்கைகள்மூலம் தொழிலாளர்களுக்கு உணர்வூட்டி அரசியல் போராட்டங்களை கட்டியமைப்பதன் வழியாகத்தான் தொழிலாளர் வர்க்கம் தன்னுரிமைகளையும் விடுதலையை சாதிக்கமுடியும்.

படைப்பு :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
அசோக் லேலாண்ட் யுனிட் – II,
ஒசூர். தொடர்புக்கு: 97880 11784.

 

நீங்க காதலிக்கிறீங்களா ? காதல் – பார்வைகள் பத்து !

3

*****
  1. காதல்னா ஒருத்தரை ஒருத்தர் மெய்மறந்து காதலிக்கிறதுன்னு நினைக்கிறீங்களா? அது அந்தக் காலம் பாஸ்!
    தன்னோட காதல் தெரிவு தப்பானதுன்னு ஒருத்தர் உணர்கிற பட்சத்தில அந்தக் காதலை ரத்து செய்றாங்கன்னு வச்சுப்போம். அப்போ அதை மனமுவந்து ஏற்கிற பக்குவம் எல்லாத்துக்கும் இருக்கணும். ஏன்னா காதல் உறவுல ஜனநாயக உணர்வு இருப்பது ரொம்ப முக்கியம்.
  2. பொதுவாக பாத்தீங்கன்னா காதல் வயப்படும் ஆண்கள் என்ன நினைக்கிறாங்க தெரியுமா? தன்னைக் காதலிக்கிற பெண்கள் தன்னோட கருத்துக்களை காது கொடுத்து கேக்குறதைத்தான் விரும்புவாங்கன்னு நினைக்கிறாங்க. இல்ல சார். ஓபனிங்கிலயே நீங்க் அவுட்டாயிட்டீங்க!
    ஏன்னா எல்லாப் பெண்களும் என்ன நினைக்கிறாங்கன்னா தன்னோட பேச்சு மனசு இரண்டையும், மனதையும் காதையும் கொடுத்து கேட்கிற ஆண்களைத்தான் விரும்புறாங்க! இந்த உலகம் ஆணாதிக்கமா இருக்கும் போது ஆண்கள் பெண்கள் இரண்டு பேரும் இப்படித்தான சிந்திக்க முடியும்!
  3. பணத்தை முக்கியமா நினைக்கும் காதலால அதாவது ஸ்டேட்டஸ், வருமானம், நல்ல வேலைன்னு கணக்கு போடும் காதலால இந்த உலகத்துல பிட்சா வியாபாரமும், மல்டிபிளக்ஸ் பிசினசும் தான் வளரும்.
    குணத்த முக்கியமா நினைக்கும் காதல்தான் சமூகத்தோட தரத்த வளர்க்கும்.
  4. சாதி பாத்து காதலிச்சா அதுக்குப் பெயர் அரேஜன்டு லவ். சாதி பாக்காம காதலிச்சா அதுக்குப் பேர்தான் அழகுக் காதல்!
    மனுசங்களா வாழும் போது அதுல சாதி, மதம்னு சறுக்கி விழுந்தா சங்கடம் சமூகத்துக்குத்தான்!
  5. காதலிகளை தெரிவு செய்யும் ஆண்கள் வைச்சிருக்கிற பட்டியல் என்ன தெரியுமா? தான் காதலிக்கிற பெண் வயசுல, படிப்பில, வருமானத்துல தன்னை விட குறைவா இருக்கணும். ஆனா அழகுல மட்டும் ஊரே பாத்து அதிசயப்படணும்.
    ஆனா பாருங்க, காதல்ங்கிறது கூட்டிக் குறைச்சு பாக்குற வட்டிக் கடை கணக்கு இல்லைங்க!
  6. காதலிப்போம், ஊரைச் சுற்றுவோம், அப்பா அம்மா ஒத்துக்கிட்டா கல்யாணம் செய்வோம், ஒத்துக்கலைன்னா குட் பை சொல்லிட்டு வீட்ல சொல்றபடி திருமணம் செய்வோம்! இதுக்குப் பெயர் காதலா, கண்றாவியா, நீங்களே சொல்லுங்க!
  7. பொதுவா பெண்கள் என்ன நினைக்கிறாங்க? தன்னை காதலிக்கும் ஆண் தன்னை புரிஞ்சிக்கணும், தன்னை பாத்துக்கணும், தன்னோட குடும்பத்த ஏத்துக்கணும், அப்டின்னுதான் யோசிக்கிறாங்க,
    ஆனா மை டியர் லேடிஸ், காதல் – திருமணங்கிறது ஒரு செக்கியூரிட்டி பிரச்சினை இல்லப்பா, உங்களோட தன்மானம், சுயமரியாதை, சமத்துவம் சம்பந்தப்பட்டது! அதனால நீங்க சொந்தக் கால்ல நின்னுகிட்டு காதலிச்சீங்கன்னா அதாவது படிப்பு, வேலை, வருமானம்னு நீங்க நிக்கும் போது செக்யூரிட்டி பிரச்சினை அவ்வளவா இருக்காது! சொல்லப் போனா அப்பதான் உங்க காதல் தேடுதல் சுதந்திரமா நடக்கும்!
  1. தமிழ் சினிமா ஹீரோக்கள ரசிக்கிற ஆண்கள் காதலைப் பத்தி என்ன நினைக்கிறாங்க? ஒரு பெண்ணுங்கிறவ ஒரு ஆணால் துரத்தப்பட்டு வேட்டையாடப்பட்டு வீழ்த்தப்படும் விலங்குன்னு நினைச்சாங்கன்னா, அவங்ககிட்ட இருக்குற வியாதிபேர் கொலைகார காதல்!
    இந்த வியாதி உள்ளவங்கதான் ஆசிட், பெட்ரோல்னு நியூசுல கொடூரமான கதைங்களயும் காட்சிகள்ளயும் காட்டுறாங்க!
  2. தான் காதலிக்கிற பெண்ணோட மடியல படுத்து தூங்கணும், அவ தன்னோட தலையை வருடிக் கொடுத்து ஆறுதல் சொல்லணும், குறிப்பறிஞ்சு காஃபி கொடுக்கணும், ஃபோன் பண்ணனும், தலைவலி மாத்திரை கொடுக்கணும், தன்னை பாக்கலேன்னா அவளுக்கு தூக்கமே வரக்கூடாது, ஐந்து நாளு பாக்காம ஆறாவது நாளு பாத்தா அப்படியே பாசத்துல குமுறி அழணும்……… இப்படி பல ஜெமினிகணேசன் காலத்து பாய்ஸ் யோசிக்கிறாங்க! தம்பிங்களா காதல்ங்கிறது ஒரு பெண்ணோட அடிமைத்தனமில்லப்பா, அது இரண்டு பேரும் சமத்துவமா சுதந்திரமா ஒருத்தரை ஒருத்தர் விரும்புறது!
  1. ஆடம்பரமான பரிசுப் பொருட்கள், செல்போன்ல தவமிருக்கிறது, உலகத்துல நடக்குற நல்லது கெட்டதுகளை கண்டுக்காம காதல்ல மட்டுமே வாழ்றது, மல்டிபிளக்ஸ்ல நாலு டிஜிட்டில்ல செலவு பண்ணறது இதுமாதிரி ஜோடனைங்களால காதலுக்கு எந்த பயனுமில்லை. சொல்லப்போனா அது காதலாங்கிறது சந்தேகம்தான்.
    காதலுங்கிறது அடக்கமா, கண்ணியமா, அழகா, அமைதியா ஒரு ஆணும் பெண்ணும் சந்திக்கிற பூங்கா! அந்த பூங்காவை யாரு கண்டுபிடிக்கிறீங்களோ அவங்களுக்கு எங்களோட வாழ்த்துக்கள்!
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
 இணையுங்கள்:

 

சரஸ்வதி மாமியை மனித மதத்திற்கு மாற்றிய ஹாஜீரா பீவி ! அவசியம் படிக்க !

5

ளிய மனிதர்களை சந்திக்க கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்குப் போங்கனு சொல்லுவாங்க…அது உண்மைதான். ஒரு உறவினரைப் பார்க்க செங்கல்பட்டில் இருக்கும் தொழுநோய் மருத்துவமனைக்கு போனேன். அங்கயே ஒரு நாள் காத்திருக்கும் போது பல கதைகள் கிடைத்தன. அதுல ஒரு செவிலியர் சொன்ன கதையைக் கேட்டு அதிர்ச்சியா இருந்ததோடு சந்தோசமாகவும் இருந்தது. கதைன்னா ஏதோ கற்பனைன்னு நினைக்காதீங்க, இது அங்க உண்மையிலேயே நடந்த சம்பவம். இனி அந்த செவிலியர் வார்த்தையிலேயே கேளுங்கள்!

தொழு நோய் மருத்துவமனை, செங்கல்பட்டு

ஐயர்வீட்டு மாமி என்றால், ஆச்சாரம் பாப்பாங்க.. கவுச்சிய கண்ணுல பாக்க மாட்டாங்க…  தன் சொந்த சாமிய சுத்தி சுத்தி  கும்பிடுவாங்க…மத்தவங்க சாமிய பழிப்பாங்க….சக மனிதர தொட்டு பேசமாட்டாங்க.. இப்படித்தான் நாம், பொது வெளியில காலம்காலமா பாக்குறோம்.

ஆனா,  அய்யங்கார் சாதியில் பிறந்த சரஸ்வதி மாமிக்கு வந்த தொழுநோய், அவங்கள பண்படுத்தி , சக மனுஷியா மாத்துச்சி. அவருக்கு வயது, 65.  தபால் துறையில் வேலை பார்த்தவங்க…. வயதான காலத்தில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு வலது கால் கட்டைவிரல் புண்ணாகி, அழுகிய  நிலையில,தாங்க முடியாத நாத்தத்தோட தொழுநோய் ஆஸ்பத்திரிக்கு, எங்களிடம் வந்தாங்க.. சா்க்கரை நோய்னு நினைச்சி, வருடக்கணக்கா வைத்தியம் பாத்திருக்காங்க…. கடைசியில அது தொழுநோய்னு தெரிந்ததும். சொந்தக்காரங்க, ஆஸ்பத்திரியில் விட்டுட்டு அவசரமா ஓடிட்டாங்க….

சரஸ்வதி மாமியால், இந்த, தொழுநோய் ஆஸ்பத்திரிய ஏத்துக்கவே முடியல…. வேற வழியில்ல… இங்க மட்டும்தான் அந்த புண்ண ஆத்துவாங்க என்று அவரது டாக்டரோட சொல்லையும் தட்ட முடியல…  வீட்டுக்குப் போனா ,சொந்தக்காரங்க கவனிக்க தயாரில்ல…. ஏதோ அரைகுறை, மனசோட  இருந்தாங்க…

எங்கிட்ட சரஸ்வதி மாமி முதல்ல பேசின பேச்சு , ”இங்க எதனாச்சும் ஸ்பெஷல் வார்டு இருந்தா கொடு… பணம் பே பண்றதா இருந்தாலும் பரவாயில்லை..  இவங்க (நோயாளிகள்) கூட இருக்க பயமா இருக்கு….”  என்றார் சோகத்துடன்.

பயப்படாதீங்க… இங்க முதல்ல அப்படித்தான் இருக்கும்.. 10 வருசமா நாங்க இங்கத்தான் இருக்கோம்.. எங்களுக்கு ஒண்ணும் ஆகல, எங்க புள்ளைங்களும் இங்க வருவாங்க, அவங்களுக்கும் ஒண்ணும் ஆகல….. தைரியமா இருங்க…இங்க  எல்லோரும்  சொந்தக்காரங்களை விட  நல்லாப் பழகுவாங்க… இங்க,  பொம்பளவார்டு ஒண்ணு மட்டும்தான் இருக்கு… ஸ்பெஷல் வார்டு எல்லாம் கிடையாது…. உங்க  புண் ஆற குறைஞ்சது 3, 4 மாசம் ஆகும். புண்ண ஆத்திட்டு, நல்லா  போகணும்னு மட்டும் நினைங்க என்று ஆறுதல் சொன்னேன்.

எந்த சமாதானத்தையும் சரஸ்வதி மாமி ஏற்கவில்லை. வழக்கமாக கொடுக்கும் சாப்பாட்டை இரண்டு நாள் வாங்க மறுத்தார். குழந்தை போல் அடம்பிடித்தார். 2 நாள் முழு பட்டினியில் சுருண்டு கிடந்தார். அவர் வீட்டுக்கு போன் செய்தோம். வீட்டிலிருந்து யாரும் வந்தபாடில்லை.. போன் செய்தால், அவசர வேலையில் இருப்பதாக சொல்லி, ”யாரிடமாவது பணம் கொடுத்து  வாங்கி சாப்பிடட்டும் விடுங்கள் ” என்றனர். வீட்டில் சொல்லியதைக் கேட்டு புலம்பினார்.

நாட்கள் கடந்தன. சரஸ்வதி மாமி, பக்கத்திலிருந்தவர்களிடம் பேசி பழகினார்.

அவரது  பக்கத்து படுக்கையில் இருந்த தொழுநோயாளி ஹாஜீரா பீவி, முஸ்லீம். அவர் பாசத்துடன் ”மாமி, சாப்பாடு சூடா, சுத்தமாத்தான் போடுவாங்க.. நீ முட்டை வேணானுட்டு, பால் வாங்கிக்க… சாப்பிடு .. கால் புண் அப்பத்தான் ஆறும்… ” என்பார், அக்கரையுடன்.

உள் நோயாளிகள் (கோப்புப் படம்)

மாமி கொஞ்சம் கொஞ்சமாக மாறினார். தினமும் குளித்து, முகத்தில் பவுடர் போட்டு  சுத்தமாக இருந்தார். ஆனால், காலில் இருக்கும் புண்ணை சுத்தமாக வைத்துக் கொள்ள மறுத்தார். நாங்கள் அவரை தொட்டு, கட்டு கட்டியே உடனே, தீட்டாக நினைத்துக் காலை கழுவுவார். கட்டு ஈரமாகி  நாற்றமடிக்கத் தொடங்கும். பக்கத்தில் இருப்பவர்கள் மாமியின் பழக்கம் அது என்று  அனுசரித்தனர். ”காலை நனைச்சிகிட்டா சீக்கிரம் ஆறாதுனு நீங்க சொல்லுங்க, நாங்க சொன்னா… மாமி தப்பா நினைச்சிக்க போகுது ” என்று கரிசணையோடு கூறினார்கள், சக தொழு நோயாளிகள்.

நாளடைவில்…   பீவியும் மாமியும் நெருங்கிய நண்பர்களானார்கள் …

ஹாஜீரா  பீவி, சரஸ்வதி மாமிக்கு,  கால் புண்ணை காக்கும் முறையை கற்றுக் கொடுத்தார். மாமியின் வேலைகளுக்கு உதவினார். மாமி குளிக்கப் போகும் போது காலில் பிளாஸ்டிக் கவர் கட்டி விடுவது, மாமி சாப்பிட்டதும் தட்டு கழுவித் தருவது, மாமி துவைத்த துணிகளை காய வைத்து தருவது  என எந்த எதிர்ப்பார்ப்பும் இன்றி  செய்தார்.  வாரத்திற்கு ஒருமுறை வரும், தன் மருமகளிடம்  ஹாஜீரா பீவி, மாமிக்கு தேவையான, எண்ணெய், பவுடர், ஊறுகாய், சிப்ஸ் என வாங்கிவர சொல்லி, ஆசையோடு கொடுப்பார். மாமியின் கால் புண் ஆறத்தொடங்கியது.

மாமி, பீவி உறவினர்களுடன் ஒன்றரக் கலந்தார். பீவியின் மருமகள் சமைத்துவரும் அசைவ உணவுடன் தனக்கு சாப்பாத்தியும் செய்து வரச் சொல்லுவார்.  பீவியின்  பேரப் பிள்ளைகளுடன் தானும் ஆசையோடு விளையாடுவார்.

பின்னர் பீவிக்கு காலில் ஆபரேஷன்.  நடக்க முடியாத சூழ்நிலை. பீவிக்கான வேலைகளான சாப்பாடு வாங்குவது, சாப்பாடு ஊட்டுவது, துணி துவைப்பது,  தலைவாரி விடுவது போன்ற வேலைகளை சரஸ்வதிமாமி மிகவும் கவனமாக அவருக்கு செய்தார்.

சாப்பாடு வாங்க மாமி வருவார். உடன் பீவியின் தட்டையும் எடுத்து வந்து முட்டை வாங்குவார். சில சமயங்களில், தட்டு மாறி முட்டையைப் போட்டு நாங்கள் பதறுவோம். ஆனால் மாமி  பதறாமல் முட்டையை எடுத்து பீவியின் தட்டில் போடுவார். நான் பாத்துக்கிறேன் என்பார். பீவியால் சாப்பிடமுடியாத நிலையில், மாமி,  சோறூட்டி, முட்டையும் ஊட்டிவிடுவார் .

நாங்கள் மாமியிடம் வேடிக்கையாக, “மாமி… பீவியும், மாமியும் ஒண்ணாயிட்டீங்க….. பாத்து … வீடு மாறி போயிடப்போறீங்க… ” என்றால், ”இதுல… என்ன இருக்கு சொல்லுங்க, மாமிக்குனு ஒரு வியாதியும், பீவிக்குன்னு ஒரு வியாதிமா …வந்திருக்கு? ரெண்டுப் பேருக்கும் ஒரே வியாதி…. அவங்களுக்காவது, கவனிக்க ஆள் இருக்கு…. எனக்கு அதுவும் இல்ல…. ” என்பார்.

பீவிக்கு கொஞ்சம் காது கேட்காது…  அதனால் மாமி, தான்  படிக்கும் நாவல்களின் கதைகளை அவரிடம் சத்தமாக சொல்லி சொல்லி சிரிப்பார். பீவியின் தொழுகை  நேரத்தில் எதுவும் பேசாமல் சிரத்தையுடன் கவனிப்பார். பீவி கறி விரும்பி சாப்பிடும்போது அருவறுப்புப் பார்க்காமல் உடனிருந்தது பார்த்து ரசிப்பார்.

நோயாளிகளுக்கு உணவு

பீவி எப்போதும் சுத்தமாக இருப்பார். ஆனாலும்  சரஸ்வதி மாமியுடன் இருக்கும்போது மேலும் அதிக  சுத்தமாக இருப்பார். சாப்பாடு வாங்கும்போது, கைகழுவி, மாமிக்கு முதலில் வாங்கிவைத்துவிட்டு, பிறகுதான் தன் தட்டை தொடுவார்.  மாமிக்கு பிடித்த கலரில், ஒயர் கூடையை தன் கையால் பின்னி, மாமியின் துணிகளை அதில் வைத்து பாதுகாப்பார்.

பீவியின் பேத்தி, ‘பெரிய புள்ளையாக’ ஆனார். சடங்கு முடித்து, வீட்டில் செய்த இனிப்புகளுடன் பீவியின் மருமகள் வந்தார். சரஸ்வதி மாமி, பீவி பேத்திக்கு ஆசையுடன், தன் காசில் பூ, பொட்டு, வளையல் வாங்கிக் கொடுத்தார். அவர்கள் கொண்டுவந்த இனிப்பை ஆசையுடன் சாப்பிட்டார்.

உடல்நலம் இருவருக்கும்,  சரியானது.  வீட்டிற்கு செல்லும் நேரம். இருவரும் அழுது கொண்டே இருந்தனர். ஊருக்குப் போகும்போது மாமி, ”என்னால, இந்த ஆஸ்பத்திரியும் மறக்க முடியாது.. பீவியையும் மறக்கமுடியாது…… எல்லாரும் ஒண்னுணு… இங்க கத்துக்கிட்டேன்.. வருசத்துக்கு ஒரு தடவை இங்க வந்து, என்னால முடிஞ்ச உதவியை  நோயாளிகளுக்கு செய்வேன்.” என்று எல்லோரிடமும் பிரியாவிடை பெற்றார்.

ந்த செவிலியர் கதையை முடிச்ச போது எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை. மனுசனுக்கு பாதிப்பு வரும்போது அதுவும் பெரிய நோய்னு வரும்போது அவங்கிட்ட இருக்குற மனுஷத் தன்மை எப்படி வெளியே வருது பாருங்க! பார்ப்பனருங்க எல்லாரும் அக்ரகாரம், ஐதீகம், ஆச்சாரம்னு மத்த மக்கள்கிட்ட இருந்து பிரிஞ்சுதான் இருக்காங்க, அப்புறம் பிஜேபி, ஆர்.எஸ்.எஸ்-ன்னு சாதாரண மக்களை பிரிக்கிற கட்சிங்கள்ள பதவியிலயும் இருக்காங்க. இதெல்லாம் ’இயல்பா’ இருக்குறதுக்கு என்ன காரணம்? அவங்க வாழ்க்கையில எப்பயுமே சாதாரண மக்களோட பழகுற வாய்ப்பு ரொம்பக் குறைவு. பல விசயங்கள்ள அதுக்கு தேவையே இல்லாம இருக்குங்கிறது ஓரளவுக்கு உண்மைதான். காசு இருந்துச்சுன்னா நீங்க உங்களுக்குன்னு தனியா ஒரு உலகத்தை உண்டாக்கலாம்கிறது உண்மைதான். ஆனா அது நிரந்தரமா?

அப்படித்தான் அவங்க வாழ்க்கையில ஒரு பிரச்சினைன்னு வரும் போது சாதி சனம் சொந்தபந்தத்தை விட சாதாரண மக்கள் உதவறதப் பார்க்கும் போது அவங்ககிட்ட இருக்குற அந்த ’உயர்சாதி’ மனோபாவம் மாறுது. முஸ்லீம்னா தேசத்துரோகி, பாகிஸ்தான் உளவாளி, அசைவ நாற்றம்ன்னு ஏகப்பட்ட விசமப் பிரச்சாரங்களை நம்புறாங்க. சரஸ்வதி மாமியும் அதுக்கு விதிவிலக்கு இல்லைதான். ஆனா தொழுநோய்னு ஒரு நோய் வந்த பிறகுதான் அவங்க உண்மையை கண்கூடா பாக்குறாங்க. சரியாச் சொல்லப்போனா அவங்கிட்ட இருக்குற அநாகரிகத்தை ரத்தமும் சதையுமா உணர்ராங்க!

நம்ம சமூகம் இயல்பா ஒண்ணுக்குள்ள ஒண்ணாத்தான் இருக்குங்கிறதுக்கு இந்த கதை ஒரு உதாரணம். யாரெல்லாம் தங்கிட்ட இருக்குற சாதிவெறி, மதவெறி மாறணும்னு நினைக்கிறாங்களோ அவங்க செங்கல்பட்டுக்குத்தான் வரணும்னு இல்லை, பக்கத்துல இருக்குற ஒரு அரசு மருத்துவமனைக்கு போய் வைத்தியம் பாத்தாலே அந்த வெறிங்களை உதறிட்டு மனுசனா மாறலாம். என்ன சொல்றீங்க?

– லட்சுமி.

காவிரி நீர் வரும்வரை டெல்லியுடனான உறவுகளைத் துண்டிப்போம் !

0

“கடைமடைக்கு காவிரி நீர் வரும்வரை டெல்லியோடு ஒட்டும் இல்லை உறவும் இல்லை!
தமிழக எம்.பி. -க்களே ராஜினாமவை  செய்யுங்கள்!” என்று அறைகூவி மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

காவிரி நீரில் தமிழகத்தின் உரிமையை மறுத்து, தமிழகத்தை வஞ்சிக்கும் தீர்ப்பை உச்சிக்குடுமி மன்றம்  கொடுத்துள்ளது. தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வேண்டிய அதிமுக அரசோ, பாஜக-வின் பினாமியாக செயல்பட்டு வருகிறது. பாஜக ஆர்.எஸ்.எஸ் தமிழகத்திற்கு எதிராக எந்த வேலை செய்தாலும் அதனை மறுத்து பேசுவதோ, நடவடிக்கையில் ஈடுப்படுவதோ இல்லை.

மாறாக பெரியார் சிலை உடைப்பு என்றால் மௌனமாக இருக்கின்றனர். அல்லது பசப்பி பதில் கொடுக்கின்றர். இந்த அடிமை கூட்டம் நமது உரிமையை நிலைநாட்டது. காவிரியில் இராயிரம் ஆண்டுகளாக உள்ள நெற்களஞ்சியத்தை அழிக்கும் பாஜக -விற்கு எதிராக தமிழக எம்பி, எம்.எல்.ஏ. -க்களே ராஜினாமாவை மோடியின் முகத்தில் வீசியெறியுங்கள், என்ற தலைப்பில் கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி, நாட்ர பாளையம் பகுதியில் இரண்டு நாட்கள் பிரச்சாரம் செய்து, அஞ்செட்டி பேருந்து நிலையத்தில் 13.03.2018 செவ்வாய் காலை 11:00 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அத்திமரத்தூர் பகுதியை சேர்ந்த மக்கள் அதிகாரம் தோழர் சுரேஷ் அவர்கள்  தலைமை தாங்கினார். நாட்றாபாளையம் பகுதி மக்கள் அதிகாரம் தோழர் சரவணன் கண்டன உரையாற்றினார். இதில் பென்னாகரம் பகுதி மக்கள் அதிகாரம் தோழர் கோபிநாத் சிறப்புரையாற்றினார்.

தோழர் கோபிநாத் பேசும் போது “நீதி மன்றம், பிரதமர், ஜனாதிபதி, மத்திய அரசு அனைவரும் தமிழகத்திற்கு எதிராக உள்ளனர். இந்த எதிராளிகளிடம் எந்த நீதியும் நாம் பெற்றுவிட முடியாது. தமிழகத்தில் உள்ள அதிமுக அரசும் பாஜகவின் அடிமையாக உள்ளது. இவர்களிடம் உரிமையை மீட்க சொல்ல முடியாது. தமிழகத்தின் உரிமை காசுக்காக காவு கொடுத்து விடுவார்கள்.

டெல்டாவை பாதுகாப்பதோ, மீத்தேன் எடுப்பதற்கு எதிராக போராடி விவசாயத்தை பாதுகாப்பதோ இந்த ஆட்சியாளர்களின் நோக்கமல்ல. பாதுகாக்கபட்ட  வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டிய டெல்டாவை, பெட்ரோ கெமிக்கல் மண்டலமாக அறிவிக்கும் இந்த ஈன துரோகிகளிடம் எந்த நியாத்தையும் எதிர்பார்க்க முடியாது. மக்கள் அதிகாரத்தை  நிறுவுவோம், டெல்டாவை பாதுக்காக்க களத்தில் இறங்குவோம். தமிழகத்தின் உரிமை மீட்க இனி டெல்லியோடு ஒட்டுமில்லை, உறவும் இல்லை, மத்திய அரசு அலுவலகங்களை இயங்கவிடாமல் செய்வோம்.” என்று எழுச்சி உரையாற்றினார்.

இந்த ஆர்ப்பாட்ட நிகழ்வினை நூற்றுக்கணக்கான மக்கள் கவனித்தனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்
அஞ்செட்டி, கிருஷ்ணகிரி மாவட்டம்.

 

தமிழகத்தின் மகளிர் தினக் கூட்டங்களில் இதற்கு முதலிடம் கொடுக்கலாமா ?

மிழகத்தின் மகளிர் தினக்கூட்டங்களில் சிறப்புற நடந்த நிகழ்வாக இதைக் குறிப்பிடலாம். நேர்த்தியான நிகழ்ச்சிகள், காட்சிகள், பரிசுகள், உணர்ச்சிகரமான உரைகள், விமர்சனங்கள், தோழமை அனைத்திலும் பாராட்டத்தக்க விதத்தில் நடத்தியிருக்கிறார்கள், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள். வாழ்த்துக்கள்!
– வினவு

மார்ச் 8 சர்வ தேச மகளிர் தினத்தை ஒட்டி வழக்குரைஞர்கள் மத்தியில் மார்ச் 7 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள  பார் கவுன்சில் அரங்கத்தில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், சென்னை கிளை சார்பாக  அரங்க கூட்டம் நடத்தப்பட்டது. விழாவில் மூத்த வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்கள், சட்டக்கல்லுாரி மாணவர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

பெரியார் – லெனின் அரங்கம்!

மகளிர் தினத்தை ஒட்டிதான் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் எச். ராஜாவின் முட்டாள்தனமான திமிர் பேச்சால் பெண்களின் விடுதலைக்கு வித்திட்ட ஆசான் லெனினையும், தந்தை பெரியாரையும் நினைவு கூறும் வகையில் பார் கவுன்சில் அரங்கம் பெரியார் – லெனின் அரங்கமாக மாறியது. எச். ராஜாவின் திமிர் பேச்சால் ஆத்திரமுற்று அரங்கத்தில் நுழைந்த அனைவரையும் பெரியாரும், லெனினும் புகைப்படமாய் இருந்து ஆசுவாசப்படுத்தினர்.

நூல் அரங்கமும் காட்சி அரங்கமும்!

மானமும், அறிவும் மனிதற்கு அழகு என்று கூறிய பகுத்தறிவு பகலவனின் கூற்றுக்கேற்ப மகளிர் தினத்தில் பெண்கள் அறிவார்ந்தவர்களாக தம்மை ஆக்கிக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் அரங்கத்தின் இடது புறத்தில் அமைந்திருந்தது நுால் அரங்கம். இது கொண்டாட்ட நாள் அல்ல. பறிக்கப்படும் உரிமைகளையும் தொடுக்கப்படும் ஒடுக்கு முறைகளையும் தகர்த்து எரிவதற்காக உறுதி ஏற்கும் நாள் என்பதனை பறைச்சாற்றும் வகையில் நுழைவாயிலுக்கு எதிரே அமைந்தது காட்சி அரங்கம்.

அரங்கு நிறைந்த கூட்டம்

துவக்கத்தில் அரங்கத்தில் ஆங்காங்கே ஒருசில தலைகள் மட்டும் தென்பட்டன. அடுத்த சில நிமிடங்களில் அரங்கு நிறைந்தது.

வரவேற்புரையில் வழக்கறிஞர் மீனாட்சி சிறப்பு பேச்சாளர்கள் உட்பட முன்னிலையாளர்கள், பங்கேற்பாளர்கள் அனைவரையும் வரவேற்று, மகளிர் தினம் உருவான வரலாற்று சூழலை சுருக்கமாக  பகிர்ந்து அமர்ந்தார்.

உரிமைகளுக்கான போராட்டத்தில் பெண்கள் பங்கேற்கவேண்டும்!

தலைமை ஏற்று நடத்திய வழக்கறிஞர் பொற்கொடி, “மகளிர் தினம் உருவானதின் நோக்கத்தை நினைவு கூர்ந்து உறுதியேற்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். இங்கு பெண்கள் நிலவுக்கு போகலாம். வானில் பறக்கலாம். ஆனாலும் ஆண்டு அனுபவிக்கும் பொருளாகத்தான் பெண்களின் நிலை இருக்கிறது. பெண்கள் அடிமையாக இருப்பதனால் குடும்பத்தில் மட்டும் அல்ல, ஆலைகளிலும் உழைப்பு சுரண்டல் தொடர்கிறது.

பெண்களை வேலைக்கு அமர்த்தினால் எதிர்ப்பு இல்லாமல் சுரண்டலாம் என்பது தானே முதலாளித்துவத்தின் லாபவெறியாக இருக்கிறது… எதையும் ஆண்டு அனுபவித்து தீர்த்துவிடு என்கிற நுகர்வு வெறியை அறிவியல் தொழில் நுட்பத்தின் மூலமாக ஆழமாக அனைவரின் மூளையிலும் கையடக்க செல்போன் வரை கொண்டு வந்து   திணிக்கின்றன கார்பரேட் கம்பனிகள்.

பொருள் விற்பனைக்கான  எல்லா விளம்பரங்களிலும் பெண்கள், பொருட்களின் வடிவமே பெண்ணாக சித்தரிக்கப்படும் கோரம். அதனால்தான் பயன்படுத்திய பொருட்களை கசக்கி எறிவது போல அனுபவித்தப் பெண்ணையும் கசக்கி எறி, சிதைத்து கொலை செய், என்ற புதிய பரிமாணத்தை அடைந்திருக்கின்றன பாலியல் வன்கொடுமைகள். ஆடைகளில் குறை, அடக்கமாக இருப்பதில் குறை என அடிமைத்தனத்திற்கு அங்கீகாரம் கேட்கிறது ஆணாதிக்கம். லாபவெறி, நுகர்வு வெறி, ஆணாதிக்கம் ஆகியவைகளை அங்கீகரித்து அதிகரிக்க அசுர வேகத்தில் வேலை செய்யும்  கார்ப்பரேட் அடிமை  மோடி அரசு.

இந்த விசச்சூழலில் அடிமைத்தனம் அகல வேண்டும் என்றால் ஜனநாயகம் மலர வேண்டும். வீட்டுக்குள்ளே ஜனநாயகம் இருக்க வேண்டும் என்றால் நாட்டிற்குள்ளே ஜனநாயகம் நிலவவேண்டும். ஆனால் நமது நாட்டில் ஜனநாயகத்தின் நிலைமை என்ன? ஜனநாயகத் தூண்களில் ஒன்றான உச்சநீதிமன்றத்திலேயே ஜனநாயகம் இல்லை என கதறுகின்றார்கள் அதன் தலைமையில் உள்ள மூத்த நீதிபதிகள்.

விவசாயிகளுக்கு விவசாயம் செய்ய ஜனநாயகம் இல்லை, கல்வி கற்கும் ஜனநாயகம் இல்லாததால்தானே அனிதா மரணம். இப்படி நாட்டில் ஜனநாயகமில்லாத சூழல் பெண்களுக்கு மட்டுமல்ல அனைத்து பிரிவு மக்களுக்கும் தான் உள்ளது. எனவே பெண்கள் சமுக நிலைமையை மாற்ற வீதிக்கு வரவேண்டும். ஆனால் பெண்களே அரசியல் என்பது ஆண்களுக்கானது, பெண்களுக்கு சம்பந்தம் இல்லாத ஒன்று என அறியாமையில் உள்ளனர். அதனை மாற்றிக்கொண்டு உரிமைகளுக்காக ஒன்றிணைந்து போராடுவதற்கு உறுதியேற்கும் நாள் தான் மகளிர்தினம் என்பதை எடுத்து சொல்லவே இந்த கூட்டம்” என்பதை பல்வேறு நடைமுறை விசயங்களுடன் எடுத்து சொல்லி தனது தலைமை உரையை  முடித்தார்.

பெண்களின் நிலை, போராட வேண்டியதின் அவசியத்தை கவிதை பாடினார் சட்ட கல்லூரி மாணவி இனியா.

பேச்சாளர்களுக்கும், பங்கேற்பாளர்களுக்கும் பரிசாக, பெரியாரின் “பெண் ஏன் அடிமையானாள்? ” புத்தகம்!

பேச்சோடு மட்டும் அல்லாமல் எழுத்து வடிவிலும் பெண் விடுதலையை கொண்டு செல்ல வேண்டும் என்று எண்ணி ஏற்பாடு செய்யப்பட்டது,  பெண் ஏன் அடிமையானாள்? என்ற பெரியாரின் வெளியீடு பங்கேற்கும் அனைவருக்கும் அளிக்கப்பட வேண்டும் என பரிசீலித்த பொழுது, பொருளாதார நெருக்கடியை சமாளிப்பது சவாலாக இருந்தது. அந்த சுமையை தான் ஏற்றுக்கொள்வதாக மகிழ்ச்சியுடன் முன் வந்தார் மூத்த வழக்கறிஞர் ச. துரைசாமி. கடைசி நேர அழைப்பானாலும் நிகழ்ச்சியின் முக்கியம் கருதி பங்கேற்று தமது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். சிறப்பு பேச்சாளர்களுக்கு இவர் மூலம் சிறப்பு செய்வது பொருத்தமாக அமையும் என்பதால் புத்தகங்களை அளிக்க வேண்டுகோள் விடுத்தோம். ஏற்றுக்கொண்ட அவர் அகமகிழ்ச்சியோடு செய்து முடித்தார்.

ஆணாதிக்கத்தை எதிர்த்து நின்ற அகிலா அவர்களுக்கு மரியாதை!

யார் இந்த அகிலா? பெண்களுக்கு ஜனநாயகம் இல்லை என்பது ஜனநாயகத்தின் தூணாண பத்திரிக்கையிலும் தானே! அப்படி ஊடகத்திற்குள் ஒளிந்திருந்த ஆணாதிக்க பாலியல் சீண்டலை துணிவாக எதிர்த்து நின்று,  எதிரியின் பலம் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் பயமில்லை மானமே பெரிது என்று சன் டி.வி குழுமத்தை சந்திக்கு இழுத்த வீரமங்கை தான் அகிலா. இவரின் போராட்ட குணத்தை அங்கீகரிக்கும் வகையில் நினைவு பரிசு வழங்கினார்  மூத்த வழக்கறிஞர் வைகை.

பெண் விடுதலை என்பது சமூக விடுதலையின் ஓர் அங்கம்!

எப்போதும் வெற்று திரையை பார்த்து பேசி வெறுத்து போன ஊடகவியலாளர் ரகுமானுக்கு மக்கள் வெள்ளத்தில்  மூழ்கிய திளைப்பு. சரிபாதிக்கும் பெண்கள் இருப்பதை மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டு தன் உரையை துவங்கினார் பெண் விடுதலை என்பது சமூக விடுதலையின் ஒரு அங்கம் என விவரங்களை அடுக்கி கட்டி கருத்து சித்திரத்தை எழுப்பினார்

அநீதிகளுக்கு எதிராக அணிதிரள்வதே மகளிர் தினம்!

எல்லாம் மாறிவிட்டது. முன்னேற்றத்தில் தானே பெண்கள். எதற்கு இந்த கூட்டம்? என்பவர்களின் வாதங்களை அன்றும் இன்றும் என்ற வகையில்  அடுக்கினார். முன்னேற்றம் தான் கல்வி, வேலை, விஞ்ஞானம், தொழில் நுட்பம் என எல்லாவற்றிலும் முன்னேறி தான் உள்ளார்கள் பெண்கள். அத்தனை முன்னேற்றமும் உழைப்பு சுரண்டலுக்காய். ஊர் குருவி உயர உயரவே பரந்தாலும் பருந்தாக முடியுமா? விமானிகளாக வானத்தில் பரந்தாலும், ஹாசினிகளாக அரும்பிலேயே அழிக்கப்படுவது தானே இன்றைய நிலை. தொடரும் ஆணாதிக்கம், ஒடுக்குமுறை. அலங்காரப் பேச்சுகளுக்கு மதிமயங்காமல் அநீதிகளுக்கு எதிராக அணி திரள்வதே மகளிர் தினம் என்பதை அழகு கவிதையாய் அளித்து சென்றார் வழக்கறிஞர் கலைச்செல்வி.

“நமக்கு கண்ணகிகள் வேண்டாம்! அநீதியை சுட்டெரிக்கும் குண்டலகேசிகள் வேண்டும்– பேராசிரியர் கருணாநந்தம்

ஏட்டில் உள்ளவை எல்லாம் ஆண்டவர்களின் வரலாறே. மக்களின் வரலாறு எப்போதும் மறுக்கப்பட்ட மறைக்கப்பட்ட வரலாறே என்பதை துணிவாக சமூகத்தில் வெளிபடுத்துபவர் ஓய்வு பெற்ற வரலாற்று துறை தலைவர் பேராசிரியர் அ.கருணாநந்தம். இதிகாச புராண காலம் தொட்டே பெண்ணடிமைத்தனம் நியாயப்படுத்தப்படும் வரலாற்றை ஆதாரங்களுடன் எடுத்துரைத்தார். என்ன தான் பிற்போக்காளர்களின் ஆதிக்கத்தில் பிற்போக்கு கருத்துக்கள் ஆளுமையில் இருந்தாலும், அதற்கெதிரான முற்போக்கு கருத்துக்களின் உறுதி மிக்க போராட்டங்கள் வரலாற்று நெடுகிலும் பயணித்து வருவதை பல்வேறு சான்றுகளுடன் பகிர்ந்தார். பெண் விடுதலையை பெரியார் இல்லாமல் பேச முடியாது என்பதை பெண்களுக்கு பெரியார் முன்வைத்த வழிகாட்டுதல்களை, வழிமொழிந்து அமைந்தார்.

சென்னை சட்டக்கல்லூரியை மாற்றக்கூடாது என போராடும் மாணவர்களின்  போராட்டத்திற்கு ஆதரவு!

உரிமைகளுக்காக போராடும் சட்டக்கல்லூரியை சென்னையிலிருந்து அகற்றி, திருவள்ளூருக்கும், காஞ்சிபுரத்திற்கும் மாற்ற அரசு முடிவெடுத்துள்ளது. இந்தியாவிலேயே உயர்நீதிமன்ற வளாகத்திலேயே சட்டக்கல்லூரி உள்ளது. இங்கு படிப்பும், பயிற்சியும் இணைந்தே இருக்கின்றன.  இதை மாற்றக்கூடாது என பத்து நாட்களுக்கும் மேலாக உள்ளிருப்பு போராட்டம் இருந்து வருகிறோம். வழக்கறிஞர்கள் தான் எங்களது அடைக்கலம். ஆகையால், ஆதரவு தாருங்கள் என மாணவர்களின் பிரதிநிதியாக சட்டக்கல்லூரி மாணவர் சரத்குமார் முன்வைத்தார். மாணவர்களின் நியாயமான இந்த கோரிக்கை நிறைவேறுவதற்கு அனைத்து வழக்கறிஞர்களின் ஆதரவு நிச்சயம் உண்டு என்ற நம்பிக்கையை அனைவரின் சார்பாகவும் உறுதியளித்தார் கூட்ட  தலைவர்.

போராட்டத்தில் முன்நிற்கும், சட்ட கல்லூரி மாணவி ஸ்ரீஜாவின் பெண்ணினத்திற்கு பெருமை சேர்க்கும் பாரதிதாசனின் பாடலான “சோலை மலரே” பாடலை இனிமையாக பாடினார். ஆணாதிக்கத்தை கிண்டல் செய்யும்  மகஇக பாடலான “ஏன்னா நான் ஒரு ஆம்பளை” பாடலை சிறுவர்கள் தீபன், பாவெல் பாட, பார்வையாளர்கள் மத்தியில் பலத்த கைத்தட்டலுடன் அரங்கு அதிர்ந்தது.

நீதிமன்றங்கள், சட்டங்களை நம்பி பயனில்லை, மாறாக ஆண்களோடு கைகோர்த்து, சமூக விடுதலையை முன்னெடுப்பதே பெண் விடுதலைக்கு வழி வகுக்கும் – மூத்த வழக்கறிஞர் வைகை.

“எத்தனை சட்டங்கள் போட்டால் என்ன? அதனை நடைமுறைப்படுத்துவதற்கு எங்கே இருக்கின்றது உத்திரவாதம்? கடுமையான சட்டங்கள்,  தண்டனைகள்  பாலியல் வன்முறையை தடுத்துவிடும் என்கின்றார்கள். சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய நீதிமன்றங்களே ஆணாதிக்கம் கோலோச்சும் இடங்களாக உள்ளன. பெண்கள் பணிபுரியும் இடங்களில் இருக்க வேண்டிய விசாகா கமிட்டி, நீதிமன்றங்களிலேயே இல்லை.

இப்படி துறை சார்ந்தும், சமூக விசயங்களிலிருந்து பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைப் பற்றி விளக்கி பேசினார். ஆக நீதிமன்றங்கள், சட்டங்களை நம்பி பயனில்லை, மாறாக ஆண்களோடு கைகோர்த்து, சமூக விடுதலையை முன்னெடுப்பதே பெண் விடுதலைக்கு வழி வகுக்கும் என்ற தீர்வை முன்வைத்து உரையை இறுதி செய்தார். கவிதை , பாடல் ஆகியவற்றை வழங்கியவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

இறுதியாக வழக்கறிஞர் ராதிகா நன்றியுரையாற்றினார், கூட்டம் நிறைவு பெற்று அனைவரும் களையும் நேரம் அப்படி களைய முனைந்தவர்களை தனது எதுகை மோனை பேச்சால் இருக்கையில் நிறுத்தினார். நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்கள் தொடங்கி, இறுதி வரை இருந்த அனைவரின் பங்களிப்புக்கும் நன்றி பாராட்டி நிகழ்ச்சி முடிக்கப்பட்டது.

பெண் ஏன் அடிமையானாள் புத்தகம் பார்வையாளர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது. பெரியார் ஒவ்வொருவரின் வீட்டுக்கும் உடன் செல்கிறார். இனி அவர் பார்த்துக்கொள்வார்.

தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை, தொடர்புக்கு : 90946 66320.

 

ஆலையில் சிறுநீர் கழிப்பதற்கே அனுமதியில்லை ? பெண் விடுதலை எப்போது ?

0

மார்ச் – 8 உலக மகளிர் தினத்தையொட்டி  பெண்கள் விடுதலை முன்னணி  சார்பாக  தருமபுரி, பென்னாகரம்  ஊரில்  8.03.2018 அன்று மாலை  தோழர் பழனியம்மாள்  தலைமையில்  பொதுக்கூட்டம்  நடந்தது.

தலைமை உரையில் “மார்ச் – 8  இன்றைக்கு  திருவிழாவை  போல  ஒரு கொண்டாட்ட நாளாக  கொண்டாடுகின்றனர்.  ஆனால் மார்ச் -8  பெண்களுக்கான சம வேலைக்கு சம ஊதியம்,  வாக்குரிமை, சங்கம் சேரும் உரிமை, போன்ற பல்வேறு  உரிமைகளை   கம்யூனிசப் போராளி  கிளாரா ஜெட்கின்  தலைமையில் ஆயிரகணக்கான  பெண்கள் ரத்தம் சிந்தி   உரிமைகளை    பெற்றெடுத்த    போராட்ட நாள்தான்  மார்ச் -8.

அப்படி  போராடி பெறப்பட்ட உரிமைகளை  இழந்து நிற்கிறோம். அதோடு  இன்றைக்கு பெண்களுக்கு பாதுகாப்பு என்பது இல்லை, சிரியா போரில் பெண்களை கொல்கிறார்கள், ஈழப்போரிலே 50 ஆயிரத்துக்கும்  மேற்பட்ட   பெண்கள்  விதவையாகியுள்ளார்கள், இங்கே டாஸ்மாக்  மூலம் ஆயிரக்கணக்கான  பெண்களை  விதவையாக்கியிருக்கிறார்கள். எனவே  இதனை  அனுமதிக்க கூடாது, அன்றைக்கு  சுதந்திரப் போராட்டத்தில்   பெண்கள்தான்     முன்னின்று   போராடினார்கள்.  இன்றைக்கும்  பெண்கள்  அணைவரும்   ஒன்றிணைந்து   சமூகப் போராட்டங்களில்  பங்கெடுக்க  வேண்டும். அப்போதுதான்   பெண்களுக்கான  விடுதலையை  சாதிக்க முடியும்” என்றார்.

அடுத்தாக தோழர் வனிதா பேசுகையில், “இன்றைக்கு முதலாளித்துவம் லாபத்துக்காக பெண்களை ஆபாசமாக விளம்பரப்படுத்துவது, பெண்களை நுகர்வு பொருளாக பார்ப்பது என்கிற வக்கிரத்தை   திட்டமிட்டே பரப்புகின்றனர். அதோடு  அவனுடைய   லாபத்துக்காக  பெண்களை குறைந்த கூலிக்கு  அமர்த்தி  சுரண்டுவதும்  அரங்கேறி வருகிறது.  மேலும்  பெண்களை  பாதுகாக்க  பல சட்டங்களை  கொண்டுவந்தாலும் ,  அதற்கு எதிராகவே  இந்த  அரசு  இருப்பதால் சட்டங்கள் மூலம் பெண்களை பாதுகாக்க முடியாது.  இதனால் பெண்கள்  விடுதலை பெற ஆண்களோடு  இணைந்து   வீதியில்  இறங்க வேண்டும் அது ஒன்றுதான்  தீர்வு.” என்றார்.

சென்னை   பெண்கள் விடுதலை முன்னணியின்  தோழர் திலகவதி சிறப்புரையாற்றினார். “பெண்கள்  எப்போதுமே திருமணம், படிப்பு, போன்ற பல்வேறு விஷயங்களில் தங்களுடைய  விருப்பங்களை வெளிப்படையாக சொல்லமுடியாத சூழ்நிலையில்தான்  இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஆணாதிக்க சமூகமாக  இருந்து கொண்டிருக்கிறது.  மேலும் முதலாளிகளின்  லாபத்துக்காக கழிவறைக்கு சென்று  வந்தால்  கூட  ஏன்  இவ்வளவு  நேரம்  என்று  கேட்பது, சில  ஆலைகளில் நாப்கின்  கொடுக்கிறேன்  என்று  பெருமையாக பேசிக் கொள்கிறார்கள்.

ஆனால்  அத்தொழிற்சாலைகளின்  பண்டக சாலைகளில் ஆண்  பணியாளர்களை  வேலைக்கு  நியமித்துள்ளனர். இதனால் பெண்கள் சங்கடமாக, கூச்சப்பட்டுக்கொண்டு  நாப்கினை  கேட்பது இல்லை. அதை கேட்க முடியாதபடிக்கு அவர்களிடம் அடிமைத்தனம் திணிக்கப்பட்டிருக்கிறது.  இப்படி  அனைத்திலும்  உளவியல் ரீதியான ஒடுக்குமுறையும் அன்றாடம்  அனுபவிக்கின்றனர். பெற்ற தாயே  தின்பண்டங்களில் கூட பெண்ணுக்கு குறைவாக கொடுப்பதில் இருந்து பல அடிமைத்தனங்களை இயல்பாக செய்கிறார். சமூகத்திலோ பெண்களுக்கான சமவெளி என்பது இன்னமும் உருவாகவே இல்லை. நிர்பயா  பாலியல் பலாத்காரத்திற்கு  பிறகு  தண்டனை  வழங்ககப்பட்ட பிறகும்  பாலியல் வன்முறைகள் குறையவில்லை.

அந்த அளவுக்கு பாலியல் நுகர்வு வெறி  சமூகத்தில்  புரையோடிபோயிருக்கிறது.  இதையெல்லாம்  இடித்துரைத்து   சரியான பாண்பாடுகளை  மக்களிடம்  கற்றுக் கொடுக்க வேண்டிய  ஊடகங்கள்  மாமா வேலையைத்தான்  செய்கிறது.  எந்த நேரமும்  சினிமா, சீரியல்கள்  அனைத்திலும்  பெண்களை   நுகர்வு பொருளாக காட்டுவதைதான்  செய்கிறது.

எனவே  இதனையெல்லாம் தடுத்து  நிறுத்த வேண்டுமானால்  பெண்களும்  சமூக போராட்டங்களில்  பங்கெடுக்க வேண்டும். அப்போதுதான் ஆணாதிக்க  சுரண்டலில் இருந்து, சமூக ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை பெறமுடியும். அதைதான் ரஷ்யாவில் தோழர் லெனின் தலைமையில் சாதித்தனர்.  பெண்கள்  குடும்ப  ஒடுக்குமுறையிலிருந்து  விடுவிக்க,  சமூதாய கூடங்கள் , குழந்தைகள்  காப்பகம், சமூதாய  உணவு கூடங்களை,  அமைத்து பெண்களும் உற்பத்தியில் ஈடுபட்டனர். பெண்கள் மகப்பேறு காலங்களில்  விடுப்புடன் கூடிய  ஊதியம்  எல்லாம்  வழங்கி  பெண்கள்   விடுதலையை  சாதித்தனர்.

அத்தகைய   போராட்டம்தான்   தீர்வு. அதற்கு  பெண்கள்  சமூக போராட்டங்களில்   பங்கெடுப்போம்  பெண்கள்  விடுதலையை  சாத்தியமாக்குவோம்.” என்று  அறைகூவல்  விடுத்தார்.

இதில்  சாராய ஒழிப்பு  பெண்கள் குழு அனுபவ உரை,  பள்ளி மாணவிகள் கவிதை வாசிப்பு,  கலைநிகழ்ச்சிகள்  நடைபெற்றது.  இதில்  நூற்றுக்கணக்கான  பொதுமக்கள், பெண்கள்  கலந்து கொண்டனர்.  பெண்களுக்கான   பாதுகாப்பை, விடுதலையை  சட்டத்தின்  மூலமாக    சாதிக்கமுடியாது. மாறாக  பெண்கள்   சமூக போராட்டங்களில்  பங்கெடுப்பதுதான்  தீர்வு என்பதை  உணர்த்தும் விதமாக  இக்கூட்டம்  அமைந்தது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
பெண்கள் விடுதலை முன்னணி, தமிழ்நாடு.
தருமபுரி. தொடர்புக்கு : 80989 08438.

 

DMC தொழிலாளர்கள் போராட்டம் வெல்லட்டும் !

0

 திருவள்ளூரில் இருந்து  ஊத்துக் கோட்டை  செல்லும்  சாலையில்  இயங்கி வருகின்றது  DMC ஆட்டோ மோட்டிவ் (லிட்)  என்ற  தென் கொரியா  ஆலை. இந்த ஆலையில்  21 பேர் மட்டுமே நிரந்தர தொழிலாளர்களாக உள்ளனர்.

ஐந்து முதல் எட்டு ஆண்டுகள்  வரை பணி புரியும் தொழிலாளர்கள் 56 பேர் உள்ளனர். இந்த தொழிலாளர்கள் வேலைக்கு சேர்ந்த போது, மூன்று ஆண்டுகளில் பணி நிரந்தர ஆணை வழங்குவதாக  உறுதியளித்தது நிர்வாகம்.  அதை செய்யக்கோரி நிர்வாகத்திடம் பணி நிரந்தர ஆணை கேட்ட தொழிலாளர்களை வேலையைவிட்டு நீக்கி, அடக்கு முறையை ஏவி அச்சுறுத்துகிறது .

இங்கு பணி புரியும் தொழிலாளர்கள் அனைவரும்  ஆலையை சுற்றியுள்ள கிராமங்களான நெல்வாயல்,  ஒதப்பை பூண்டி, கச்சூர், கலவை, சித்தஞ்சேரி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த  இளம் தொழிலாளர்கள்.

தொழிலாளர்கள் மீது அடக்குமுறையை ஏவுவது கொத்தடிமையாக நடத்துவது என்ற நடை முறையை ஒவ்வொரு ஆலை நிர்வாகமும் ஒவ்வொரு விதமான அனுகும் முறையை கையாண்டாலும்  சாரம்சம் தொழிலாளர்களை கொத்தடிமையாக்குவதுதான் நோக்கமாக உள்ளது.  நிர்வாகமே ஒர்க்கர்ஸ் கமிட்டி ஏற்படுத்தி  தொழிலாளர்கள் பிரச்சனையை தீர்ப்பதாக  கூறியது. ஆனால்  தொழிலாளர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. மேற்படி கமிட்டி  நிர்வாகத்தின் ‘சொம்பாக’ செயல்பட்டது.

இந்த ஏமாற்றத்தில் இருந்து மீளவும்  பிரச்சனையை தீர்க்கவும்  தொழிலாளர்கள் சார்பாக  ஒர்க்கர்ஸ் கமிட்டி ஏற்படுத்தப்பட்டது, இதன் பிறகு நிர்வாகத்தின்  தாக்குதல் நாள் தோறும் அதிகரித்த வண்ணம்  இருக்கிறது. சான்றாக  தொழிலாளர்களுக்கு  வழங்கப்பட்ட  இனிப்பு  (ஸ்விட்)  குறைவாக  இருக்கின்றதே  என சகஜமாக கேட்ட தொழிலாளியை  அதிகாரியிடம்  அத்து மீறி பேசி விட்டுதாக சொல்லி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு  உள் விசராணையை  எதிர் கொண்டு வருகின்றார். இதேப் போல தொழிலாளர்களால்  தேர்ந்தெடுக்கப்பட்ட  பிரதிநிதி  ஒருவரையும் பொய் குற்றசாட்டி கூறி வேலையை பறித்துள்ளது. இப்படி தினந்தோறும் ஆலையில் பணி புரிவது என்பதே  ஏதோ  போர்க் களத்திற்கு  சென்று வருவதுப்  போல் உள்ளதாக கூறுகின்றனர் தொழிலாளர்கள்.

நிர்வாகத்தின் அடக்கு முறைக்கெதிராக தொழிலாளர் நீதி மன்றத்தில்  பணி நிரந்தரம் கோரும் வழக்கை நடத்தி வருகின்றனர். தங்களுக்கான  சங்கத்தையும்  பதிவு செய்யும்  நோக்கத்தோடு  செயல்படும் தொழிலாளர்களை அச்சுறுத்த  கடந்த 9.3.2018 அன்று  மாலை முன்னணி தொழிலாளர்கள்  மூன்று பேரை  எவ்வித குற்றச்சாட்டும் விசாரணையும் ஏதும் இன்றி டெர்மினேட் செய்தது. குமுறிக் கொண்டிருந்த தொழிலாளர்களுக்கு  இந்நிகழ்வு  மேலும் கொதிப்பை  ஏற்படுத்தியது. மறு நாள் 10.3.2018  அன்று  இதற்கெதிராக பணி செய்ய மறுத்து  வேலை நிறுத்தத்தில்  ஈடுப்பட்டனர் தொழிலாளர்கள்.

பிறகு  ஆலை முன்பு போலீசை குவித்து தொழிலாளர்களை அச்சுறுத்தியது  நிர்வாகம். பிற்பகல் 12:00 மணிக்கு துவங்கிய பேச்சு வார்த்தை மாலை 4:00 மணி வரை நீடித்தது. பேச்சு வார்த்தையின் முடிவில் சட்டவிரோதமாக பணி நீக்கம் செய்யப்பட்ட  மூன்று பேரை மீண்டும் வேலைக்கு எடுத்துக் கொள்வது  பணி நிரந்தரம் செய்வதை பொறுத்த வரையில்  நீதி மன்றத்தில்  நடந்து வரும் வழக்கின் முடிவை  ஏற்றுக் கொள்வது என முடிவு செய்யப்பட்டது.

இந்த முடிவை (சட்ட விரோத பணி நீக்கத்தை  ரத்து செய்யும்  வகையில்) எழுத்துப் புர்வமாக  எழுதி தருவதாக ஒப்புக் கொண்ட  நிர்வாகம்  சதி வேலையில் ஈடுப்பட்டது.

எடுத்த முடிவுக்கு மாறாக நிர்வாகம் கொடுக்கும்  ஒவ்வொரு  கடிதத்தையும் தொழிலாளர்கள் நிராகரித்தனர். இறுதியாக  மாலை  5.30 மணியளவில்  கொடுத்த கடித்தில் டெர்மினேட் செய்யப்பட்டதை நிறுத்தி வைப்பதாக சொல்லி கொடுத்த  கடிதத்தை  தெழிலாளர்கள் நிராகரித்து டெர்மினேட் செய்ததை ரத்து செய்வதாக   திருத்தம் செய்ய வேண்டும்  கேட்ட போது நேரம் ஆகி விட்டது HR மற்றும்  மேனேஜர் எல்லாம் கிளம்பி போய்விட்டார்கள்  எனக்  கூறி திங்கள் கிழமை பார்த்துக் கொள்ளலாம் என்றனர் இராண்டாம் நிலையில் இருந்த அதிகாரிகள்.

வேலைக்கு எடுத்துக் கொளகின்றேன்  என சொல்லி  போராட்டத் முடிவுக்கு கொண்டு வந்து விடலாம்   என்ற சதியை முறியடிக்கும் வகையில் போராட்டம் தொடர்கின்றது உள்ளிருப்பு போராட்டமாக தொடரும் என அறிவித்து மறு நாள் ஞாயிறு முழுவதும் தொடர்ந்து திங்கள் கிழமையும் போராட்டம் தொடர்கின்றது. காலை நிலவரப்படி 40 தொழிலாளர்களை  20 – 25 நாட்கள்  தற்காலிக பணி நீக்கம்  செய்திருக்கிறது நிர்வாகம். உரிமையை,  வேலை பறித்து  பட்டினிக்கு தள்ளும்  முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு எதிராக  போராடிக் கொண்டிருக்கின்றார்கள் தொழிலாளர்கள்.

போராடும் தொழிலாளிகளை ஆதரித்து கேட்டின் முன் நின்று பேசும் புஜதொமு தோழர் சிவா

இந்த பிரச்சனையில் நிர்வாகத்தின் யோக்கியதை  எந்தளவிற்கு கீழ்த்தரமாக இருக்கின்றது பாருங்கள் ! அதிகாரியாக இருப்பவர்கள் எல்லாம்  பட்ட மேற்படிப்பு படித்தவர்கள் இவர்களுக்கு அறிவு நாணயம் இருக்கின்றதா ?எடுத்த முடிவு என்ன ? எழுதிக் கொடுப்பது  என்ன ? இங்கு எப்படி  வேண்டுமானாலும் தொழிலாளர்களை ஏமாற்றலாம்  எந்த  சட்டத்திற்கும் கட்டுப்பட வேண்டியதில்லை. தொழிலாளர்களை கொத்தடிமையாக நடத்தலாம் இதைத்தான் பாசிச மோடி  வளர்ச்சி என்கிறார்.

தொழிலாளர்களின்  அடிப்படையான கோரிக்கை என்ன? மிக மிக சாதரணமான சட்டப்படியான உரிமைதான் பணி நிரந்தர கோரிக்கை இதனை தெழிலாளி வர்க்கம்  நிறைவேற்றிக் கொள்ள முடியவில்லை. துறைச் சார்ந்த அதிகார வர்க்கம் மத்திய – மாநில  அமைச்சர்கள் நீதிமன்றம் தொழிலாளர் நீதி மன்றம் என இவ்வளவு இருந்தும் தொழிலாளி வர்க்கம் தன்னுடைய உரிமையை  பாதுகாத்துக் கொள்ள முடியவில்லை.

மாறாக  இந்த நிறுவனங்கள் எல்லாம்  தொழிலாளர்களின் உரிமையை பறிப்பதில் நோக்கமாக இருக்கின்றது. இது ஏதோ DMC தொழிலாளர்களின்  பணி நிரந்தர கோரிக்கைக்கான போராட்டம் மட்டும் அல்ல  நாடு முழுவதும் உள்ள  தொழிலாளர்களின்   நிலையும் இப்படித்தான் உள்ளது. எனவே இப்போராட்டத்தை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணித் தோழர்கள் நேரில் சென்று ஆதரித்து வருகின்றனர்.

இந்த அரசின் கொள்கையே தொழிலாளர்கள் மக்களின்  வாழ்வை  பறிப்பதாக உள்ளது இதற்குகெதிராக தொழிலாளி வர்க்கம் அமைப்பாக திரள்வதும்  புரட்சிகர அரசியலை கற்று போராடுவதின் ஊடாகத்தான்  முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு முடிவு கட்ட முடியும். !

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர்  முன்னணி,
திருவள்ளுர் மாவட்டம்  ( கிழக்கு ), 94444 61480.

 

திருச்சி உஷா படுகொலை : போலீசை எதிர்த்து மக்கள் போர் – போராட்ட செய்தித் தொகுப்பு

0

லஞ்சம் – வழிப்பறி – படுகொலை ! போலீசின் ரவுடித்தனத்தை எதிர்த்து எழுந்து நின்றது திருச்சி !

திருச்சியில் ஹெல்மெட் சோதனை என்ற பெயரில் போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் காமராஜ் எட்டி உதைத்ததால் கர்ப்பிணிப்பெண் உஷா உயிரிழந்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசின் வழிப்பறி கொள்ளையை எதிர்த்துக் கேட்ட உய்யக்கொண்டான் பகுதி பொதுமக்கள் – இளைஞர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து, லஞ்சம் – வழிப்பறி – ரவுடித்தனம்! போலீசு ராஜ்ஜியத்திற்கு எதிராக அணிதிரள்வோம்! என்ற முழக்கத்தின் கீழ் 06.03.18 அன்றுதான் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி முடித்திருந்த மறுநாளே இக்கொடூர செயலை அரகேற்றியது திருச்சி போலீசு. தற்போது உஷா கர்ப்பிணி இல்லை என பிரதேப் பரிசோதனை அறிக்கையை வைத்து திசைதிருப்ப பார்க்கிறது போலீசு. ஒரு வேளை அப்படியே உஷா கர்ப்பிணி இல்லை என்பதால் கொலைகார காமராஜ் எட்டி உதைத்துக் கொன்றது சகிக்க கூடியதா?

இக்கொடூரத்தை நேரில் பார்த்த பொதுமக்கள், அக்கம் பக்கத்து இளைஞர்கள் உஷாவின் மரணத்திற்கு நீதி கேட்டு உடனடியாக போராட ஆரம்பித்தனர். அவ்வழியாக சென்றவர்கள், சமூக வலைதளங்களில் செய்தியைப் பார்த்து ஆத்திரமடைந்த மாணவர்கள் – இளைஞர்கள் என 3,000 பேருக்கு மேல் திரண்டு வரவே அது, அரசு மற்றும் போலீசின் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கும் மிகப்பெரும் மறியல் போராட்டமாக மாறியது. தகவலறிந்து களத்திற்கு சென்ற மக்கள் அதிகாரம் தோழர்கள் போலீசின் வழிப்பறியை அம்பலப்படுத்தியும், கொலைகாரன் காமராஜை கைது செய்து, கொலைவழக்கு பதிவு செய்யக்கோரியும் முழக்கங்கள் எழுப்பினர்.

மறியல் நடந்தது திருச்சி – தஞ்சாவூர் பிரதான நெடுஞ்சாலை என்பதால் அரை மணிநேரத்தில் போக்குவரத்து முற்றாக முடங்கி வாகனங்கள் பல கிலோ மீட்டருக்கு அணிவகுத்து நின்றது. செய்வதறியாது திகைத்துப் போன வட்டாட்சியரும் காவல்துறை உயர் அதிகாரிகளும் வேறு வழியின்றி பேச்சுவார்த்தைக்கு வந்தனர். மாநகர காவல் துணை ஆணையர் (DC) சக்தி கணேஷ் உள்ளிட்ட சில காவலர்கள் போலீஸ் வாகனத்தின் மீது ஏறி நின்று சமாதானம் பேச முற்பட்டனர். கோபத்திலிருந்த இளைஞர்களும் பொதுமக்களும் DC சக்திகணேஷுக்கு செருப்படி கொடுத்து வரவேற்றனர்.

இதே சக்திகணேஷ்தான் உய்யகொண்டான் பகுதி இளைஞர்கள் காவல்துறையால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி பகுதி பெண்களுடன் சென்று சந்தித்த போது, ஆர்ப்பாட்டம், தெருமுனைப் பிரச்சாரத்திற்கு கூட அனுமதி மறுத்தார். ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட இடத்தில் கூட பேரணி நடத்தக் கூடாது என்றார். பகுதி பெண்களை பேச அனுமதிக்காமல் தான் மட்டுமே மிரட்டும் தொனியில் பேசிக்கொண்டிருந்தார். “சார், நீங்கள் பேசுவதை கேட்க நாங்கள் வரவில்லை. நாங்கள் பேசுவதற்காக வந்திருக்கிறோம்” என மக்கள் அதிகாரம் தோழர்கள் கண்டித்த பிறகே பகுதி பெண்களை பேச அனுமதித்தார். பகுதி மக்கள் எவ்வளவோ வலியுறுத்தியும் இறுதிவரை பேரணி நடத்தக்கூடாது என மறுத்தார்.

அப்படிப்பட்ட ‘சிங்கம் ஸ்டைல்’ சக்தி கணேஷ்தான் இன்று செருப்படி, கல்லடி, தண்ணீர் பாக்கெட் வீச்சு என அத்தனையும் பொறுத்துக்கொண்டு “எவ்வளவு அடிச்சாலும் தாங்குறாண்டா… இவன் ரொம்ப… நல்லவண்டா…” என்பது போல் இளைஞர்கள் முன் ‘பணிவாக’ நின்றார். “இப்படிப்பட்ட நபர்களை தூக்கில் போடுவதுதான் தீர்வு. அந்த தண்டனையை காமராஜ்-க்கு பெற்றுத்தருவோம். SP தலைமையில் விசாரணைக் குழு அமைத்து விசாரிப்போம்” என இளைஞர்களிடம் உதார் விட்டும் நைச்சியமாகப் பேசியும் கூட்டத்தைக் கலைக்க முயன்றார்.

தங்களது கடந்தகால அனுபவங்களிலிருந்து காவல்துறை எப்படி நடந்துகொள்ளும் என்பதை உணர்ந்திருந்த இளைஞர்களும், பொதுமக்களும் சக்திகணேஷின் உளறல்களுக்கு மயங்காமல், “காமராஜை நேரில் கொண்டு வா, இங்கயே – இப்பவே FIR போடு,” என்றனர். பொய் வாக்குறுதி கொடுத்த DC-யால் இதை எப்படி நிறைவேற்ற முடியும்? அப்படி நிறைவேற்றினால் அது காவல்துறைக்கு அவமானமாகிவிடும் என்பதோடு, எதிர்மறையான முன்னுதாரணமாகி விடுமே! “இந்தப் பக்கம் சிக்கலு, அந்தப் பக்கம் செதறலு…” என வடிவேலு போல திணறினார்.

பேச்சுவார்த்தை நீண்டதால் மேலும் மேலும் ஆத்திரமடைந்தனர் இளைஞர்கள். ஒரு இளைஞர் தனது T-Shirt-ஐ கழட்டி, கூடியிருந்தவர்களிடம் சில்லரை காசை வசூலித்து “இந்த பிச்சைக்காசுக்குதானடா அந்த பொண்ணக் கொலை பண்ணுனீங்க, இந்தாங்கடா” என DC சக்திகணேசிடம் கொடுத்தார். “100 ரூவா போலீசு” என காவல்துறையின் எச்சக்கலத்தனத்தை இளைஞர்கள் எள்ளி நகையாடினர். இதுக்கு செருப்படியே பரவாயில்லை என சக்திகணேஷ் சிந்தித்திருப்பார். இதுவே போராட்டத்தின் ஹைலைட். இது ஒட்டுமொத்த தமிழக மக்களின் உள்ளக்குமுறல்.

பேச்சுவார்த்தை என இழுத்தடித்துக் கொண்டே போராட்டத்தைக் கலைப்பதற்கான அனைத்து தயாரிப்பு வேலைகளையும் போலீசார் செய்தனர். தங்கள் தயார் நிலையை உறுதிப்படுத்திய மறுகணமே தடியடியைத் துவங்கியது அரசின் கூலிப்படை. இதை சற்றும் எதிர்பாராத நிராயுதபாணியான இளைஞர்களும் பொதுமக்களும் கலைந்து ஓடினர். துரத்தி வந்த காவல்துறையினர் கொலைவெறியுடன் தாக்கினர். பெரும்பாலான இளைஞர்கள் BHEL டவுன்ஷிப் -க்குள் ஓடினர்.

சுதாரித்துக் கொண்ட இளைஞர்கள் ஆங்காங்கே கிடந்த கற்களைக் கொண்டு போலீசாரை திருப்பித்தாக்க ஆரம்பித்தவுடன் பின்வாங்கி ஓடியது போலீசு. அங்கே நின்று கொண்டிருந்த காவல்துறையின் இரண்டு Bolero வாகனங்கள் மீது 4, 5 இளைஞர்கள் அருகில் இருந்த பேரி கார்டை தூக்கி வந்து மோதி சேதப்படுத்தினர். கற்களைக் கொண்டு தாக்கி சல்லடையாக்கியதுடன், இரண்டு வாகனங்களையும் தலைகீழாக கவிழ்த்து தங்கள் ஆத்திரத்தை தீர்த்துக் கொண்டனர். இதை தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த காவல்துறையினர், அவர்களும் கற்களால் தாக்கியதுடன் லத்தியுடன் விரட்ட ஆரம்பித்தனர். அவமானம் தாங்க முடியாமல், உடனடியாக வண்டியை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். தாமத்திருந்தால் தீக்கிரையாகியிருக்கும்! பின்வாங்கிய இளைஞர்கள், மீண்டும் கற்களைக்கொண்டு ஏறித்தாக்க காவல்துறை பின்வாங்கியது.

மாறி மாறி நடந்த இந்த நிகழ்வு, இந்திய அரசின் ஒடுக்குமுறைக்கு எதிரான காஷ்மீர் இளைஞர்களின் போர்க்குணமான போராட்டத்தை நினைவுபடுத்தியது. இதற்கிடையில் கையில் கிடைத்த இளைஞர்கள் – பொதுமக்களை பிடித்து கொலைவெறியுடன் தாக்கி மண்டையை உடைத்தது போலீசு. ஆத்திரம் தீராத இளைஞர்கள், அவ்வழியே சென்ற அரசுப் பேருந்துகளை தாக்க ஆரம்பித்தனர். கொலைவெறியோடு திரிந்த போலீசு அவ்வழியே வருவோர், போவோர் என 50 -க்கும் மேற்பட்டோரை பிடித்துச் சென்றது. இதில் பள்ளி மாணவர்களும் அடக்கம். இவர்களில் 25 -க்கும் மேற்பட்டோர் மீது ‘பொது சொத்துக்களை சேதம்’ விளைவித்ததாக வழக்கு பதிந்துள்ளது. இதில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத் தோழர்களும், மக்கள் அதிகாரம் தோழரும் அடக்கம்.

இளைஞர்களின் எதிர்தாக்குதலால், அவமானம் தாங்க முடியாத காவல்துறையினர் நேற்று 10.03.18 அன்று, “CCTV கேமரா மூலம் அடையாளம் கண்டு மேலும் 50 பேரை கைது செய்வோம்” என அறிக்கைவிட்டு பொதுமக்களை அச்சுறுத்த முயல்கிறது. காவல்துறை, வருவாய்த்துறை வாகனங்களைத் தாக்கி பொதுசொத்துக்களை சேதப்படுத்திவிட்டார்கள் என்று சொல்லி இளைஞர்கள், பொதுமக்கள் மீதான தடியடியை நியாயப்படுத்துகிறது காவல்துறை.

சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி ஜெயலலிதா சிறைக்கு சென்ற போது அதிமுக கும்பலால் ஏற்படுத்தப்பட்ட பொது சொத்து அழிப்புக்கு எத்தனை வழக்கு பதிவு செய்தது காவல்துறை? கோவையில் சசிகுமார் மரணத்தின் போது பிஜேபி காலிகள் நடத்திய கலவரத்தை தடியடி நடத்தி கலைக்காமல் இதே அமல்ராஜ் தலைமையிலான போலீசுதானே வேடிக்கை பார்த்தது.

அதிகாரத்தில் இருந்த அ.தி.மு.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்-ன் காலித்தனத்துக்கு துணைநின்ற ஆணையர் அமல்ராஜ், தமிழக இளைஞர்களின் ஜல்லிக்கட்டு போராட்டத்தை சகித்துக்கொள்ள முடியாமல் ஒடுக்கியதுடன் தீவிரவாத பூச்சாண்டி காட்டி பா.ஜ.க-வுக்கு போட்டியாக அறிக்கை விட்டார். தொலைக்காட்சிகளுக்கு பேட்டியும் அளித்தார். தற்போது, தனது கூட்டத்தைச்சேர்ந்த ஒரு ஆய்வாளர், அவன் அநீதியாக ஒரு கொலையே செய்திருந்தாலும் அதற்கெதிராக மக்கள் போராடுவதை சகித்துக்கொள்ளாமல் கொடூரமாக தாக்கி ஒடுக்குகிறார். பார்ப்பானும் படைவீரனும் கொலையே செய்தாலும் அவர்களுக்கு தண்டனை கிடையாது என்ற மனு நீதியை நிலைநாட்டுகிறார்.

பொதுமக்களோ, காவல்துறைக்கெதிரான இந்த போராட்டத்தை முழுமையாக ஆதரித்தனர். அருகில் இருந்த டவுன்ஷிப் பெல் தொழிலாளர் குடியிறுப்புவாசிகள் சிதறி ஓடிய மக்கள் மற்றும் இளைஞர்களுக்கு தண்ணீரும் அடைக்கலமும் கொடுத்து ஆதரித்தனர். காவல்துறையின் தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கையில் இருந்து இளைஞர்களை பாதுகாத்தனர். எங்கு போராட்டம் நடந்தாலும் அதனால் பாதிக்கப்படும் பேருந்து பயணிகளும் கடைக்காரர்களும் போராடுபவர்கள் மீது எரிச்சலடைந்து புலம்புவதையும் எதிர்ப்பதையும் பார்க்க முடியும்.

ஆனால், இந்த போராட்டம் காவல்துறையின் கொடூர கொலைக்கு எதிரானது என்று அறிந்ததால் பல மணி நேரம் காத்திருந்த பயணிகள் மற்றும் காரில் வந்தவர்கள் கூட “எங்களுக்கு சிரமமாகத்தான் இருந்தது. இருந்தாலும், போலீசை எப்படி தட்டிக் கேட்பது?, போலீசு ரொம்ப பண்றாங்க” என்றே கூறினர். தள்ளுவண்டி கடை நடத்தும் பெண்மணியிடம் கேட்டபோது, “கார்ல, பஸ்ல வந்தவங்க எல்லாரும் இங்க தான் சாப்பிட்டாங்க. எல்லாரும் போலீசத்தான் கண்டிச்சாங்க.” என்றார்.

08.03.18 அன்று திருச்சி அரசு மருத்துவமனையில் போஸ்ட்மார்டம் செய்யப்பட்ட உஷாவின் உடலை வாங்க மறுத்து மக்கள் அதிகாரம் தலைமையில் புதிய தமிழகம், விசிக, சிபிஐ, சிபிஎம், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், ம.க.இ.க ஆகிய கட்சிகள், இயக்கங்களை ஒருங்கிணைத்து போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தில் பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் தமது கடும் கண்டனங்களைப் பதிவு செய்தனர். மகளிர் தினத்தன்று ஒரு கர்ப்பிணிப்பெண்ணுக்கு போலீசாரால் இழைக்கப்பட்ட கொடூரத்திற்கு எதிரான கோபத்தை வெளிப்படுத்தினர்.

கொலை வழக்கு பதிவு செய்யாமல் காமராஜை தப்பிக்க வைக்கும் நோக்கில், மரணம் விளைவிக்கும் குற்றம் என்கிற – வழக்கமாக சாலை விபத்தின் போது போடப்படும் “அலட்சியமாக வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்துதல்” என்கிற – இந்திய தண்டனைச்சட்டம் 304 (ii), 336 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளது தெரியவந்தது. எனவே, பேச்சுவார்த்தைக்கு வந்த காவல் துணை ஆணையர் சக்திகணேஷிடம் இதை ஏற்க மறுத்தோம். தொடர்ச்சியாக வாதாடியதால், உயரதிகாரிகளிடம் பேசிவிட்டு வந்த போலீசார் Crpc 164-ன் படி நீதிபதி முன் வாக்குமூலம் பதிவு செய்து, பின்னர் கொலை வழக்காக மாற்றம் செய்யப்போவதாகக் கூறி, அவர்கள் வாகனத்தில் கொல்லப்பட்ட உஷாவின் கணவர் ராஜாவை அழைத்துச் செல்ல முயன்றனர்.

ராஜாவை தனியாக அழைத்துச் செல்ல முயற்சிப்பதன் நோக்கத்தை புரிந்துகொண்ட வழக்கறிஞர்கள், தங்கள் வாகனத்தில் ராஜாவை அழைத்துச் சென்றனர். குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் – 6 (JM-VI) நீதிபதியிடம் ராஜாவை அழைத்து சென்று பேசிய போது அந்த நீதிபதி, தலைமை குற்றவியல் நீதிமன்ற நடுவரிடம் (CJM) இருந்து எந்த பரிந்துரையும் வரவில்லையென்றார். இது போலீசார் நடத்தும் நாடகம் என்பது அம்பலமானதால், இதை நீதிபதியிடம் தெரிவித்து பதிவு செய்தனர்.

காமராஜ் மீது கொலைவழக்கு பதிவு செய்வது, போராட்டத்தில் கைதாகி பொய்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள இளைஞர்களை விடுவிப்பது, வாகன சோதனையை நிறுத்துவது, ராஜா குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவது என்பதில் நாம் உறுதியாக இருந்தோம். காவல்துறையுடன் பேசி, மாவட்ட ஆட்சியர் தரப்பில் ஒரு கடிதம் கொடுத்தனர். அதில், உஷா சாலை விபத்தில் உயிரிழந்ததாக அயோக்கியத்தனமாக குறிப்பிட்டிருந்தனர். DC சக்திகணேஷிடம் இதை சுட்டிக்காட்டி கண்டித்த பின், “இன்ஸ்பெக்டர் காமராஜால் தள்ளிவிடப்பட்டு வாகனத்திலிருந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உஷா உயிரிழந்தார்” எனக்குறிப்பிட்டதுடன், ராஜாவின் குடும்ப நிலையை கருத்தில் கொண்டு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து இழப்பீடு வழங்க உரிய நடவடிக்கை எடுத்திட பரிந்துரை செய்வதாகவும் கடிதம் மாற்றித்தரப்பட்டு, தலைமை செயலருக்கு அனுப்பப்பட்டது.

இதனடிப்படையில் முதலமைச்சரிடமிருந்து நிவாரண அறிவிப்பும் அப்போதே வந்தது. மேலும், கைதாகியிருந்த பள்ளி – கல்லூரி மாணவர்களை விடுவிக்கின்றோம். மற்றவர்களை பெயில் எடுக்கும்போது காவல்துறை தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்க மாட்டோம் எனக்கூறினர்.

காமராஜ் மீது கொலைவழக்கு பதிவு செய்வது, கைதானவர்களை விடுதலை செய்வது என்பதில் உஷாவின் கணவர் ராஜா உறுதியாக இருந்த போதிலும், மற்ற பிற சூழல்களைக் கருத்தில் கொண்டு போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. 09.03.18 அன்று போலீசை அம்பலப்படுத்தும் முழக்கங்களுடன் உஷாவின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. மக்கள் அதிகாரம் தோழர்கள், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி, மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், ம.க.இ.க., பு.மா.இ.மு மற்றும் சில கட்சியினர் கலந்துகொண்டனர்.

திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர் சங்கம் கூடி மேற்கூறிய சம்பவத்தில் காவல்துறையின் அராஜகத்தை கண்டித்தது. பொய்வழக்கில் சிறையில் அடைக்கப் பட்டவர்களைப் பிணையில் எடுக்கவும் கைதாகாத மற்றவர்களுக்கு முன்பிணை பெறவும் கட்டணம் பெறாமல் வாதாடுவதாகவும், வழக்கிலிருந்து விடுதலை பெற்றுத் தருவதென்றும் தீர்மானம் இயற்றியுள்ளனர். அத்தோடு மட்டுமின்றி கொலைகாரன் காமராஜூக்கு எந்த வழக்கறிஞரும் பிணை மனு தாக்கல் செய்வதில்லை என்றும் முடிவு செய்துள்ளனர். எவரேனும் பிணை மனு தாக்கல் செய்தால் குறுக்கிட்டு ஆட்சேபனை தெரிவித்து வாதாடுவது என முடிவு செய்துள்ளார்கள்.

13.03.18 திங்கள் அன்று ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளார்கள். பாதிக்கப்பட்ட ராஜாவிற்கு உறுதுணையாக நிற்கும் வகையில் தற்போது PRPC வழக்கறிஞர்கள் மூலம் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை ஆணையர் / கண்காணிப்பாளர் என பலதுறைகளுக்கும் காமராஜ் மீது கொலைவழக்கு பதிவு செய்ய உத்தரவிடக்கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், மதுரை உயர் நீதிமன்றத்தில் CBI விசாரணைக்கு உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 15.03.18 அன்று அனைத்து கட்சிகள், இயக்கங்களை ஒருங்கிணைத்து மக்கள் அதிகாரம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த தயாரிப்புகள் செய்யப்பட்டு வருகிறது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்
திருச்சி – 94454 75157.

 

திரிபுராவில் பாஜக காலிகள் வெறியாட்டத்தைக் கண்டித்து புதுவை – மதுரை ஆர்ப்பாட்டம் !

1

திரிபுராவில் பாட்டாளி வர்க்க ஆசான் லெனின் சிலை உடைப்பு ! பா.ஜ.க காலிகள் வெறியாட்டம் !

ந்தியாவின் வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, பதவி ஏற்பதற்கு முன்னதாகவே, அதாவது தேர்தலில் வெற்றி பெற்ற 48 மணிநேரத்திற்குள்ளாகவே பாட்டாளி வர்க்க பேராசான் மாமேதை லெனின் சிலையை உடைத்து பாஜக காலிகள் வெறியாட்டம் போட்டுள்ளனர். சிலையை உடைக்கும் போது பாரத் மாதா கீ ஜே! என்று கோசமிட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து இந்து மதவெறியைத் தூண்டி, எப்படியாவது தமிழகத்தில் நேரடியாக காலூன்றி விட வேண்டும் என பல மதவெறிக் கூச்சல்களைக் கிளப்பி வருகின்ற ஹெச். ராஜா, இந்த விசயத்திலும், தனது பேஸ்புக் பக்கத்தில், திரிபுராவில் லெனின் சிலை இடிக்கப்பட்டதை ஆதரித்ததோடு, இந்தியாவிற்கும் லெனினுக்கும் என்ன தொடர்பு என்று கேட்டு, லெனின் சிலையைப் போலவே தமிழகத்தில் பெரியார் சிலையும் உடைக்கப்படும் என பார்ப்பனத் திமிருடன் கொக்கரித்துள்ளான். இதைத் தொடர்ந்து, திருப்பத்தூர் பகுதியில் பெரியார் சிலையைச் சேதப்படுத்தியுள்ளனர் பாஜக மதவெறியர்கள்.

ஹெச்.ராஜாவின் இந்தப் பதிவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பெரியார் சிலை சேதப்படுத்தியதைக் கண்டித்தும், தமிழகத்தின் பல்வேறு அரசியல் ஓட்டுக் கட்சிகளும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருவதோடு, ஆர்ப்பாட்டம், சாலை மறியல், உருவ பொம்மை எரிப்பு, முற்றுகை என பல வடிவங்களில் மாநிலம் தழுவிய அளவில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரியில் செயல்படும், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில், 07.03.2018 அன்று  மக்கள் கூடும் முக்கிய சந்திப்பான வில்லியனூர் கோட்டைமேடு சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்திற்கு, புதுச்சேரி புஜதொமு இணைச்செயலாளர் தோழர். மகேந்திரன் தலைமை தாங்கினார். புதுச்சேரி, புமாஇமு. அமைப்பாளர் தோழர். மோகன், புதுச்சேரி மக்கள் அதிகாரம் அமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர். கலை மற்றும், புதுச்சேரி புஜதொமு. பொருளாளர் தோழர். செல்லக்கண்ணு ஆகியோர் கண்டனவுரையாற்றினர். நிகழ்ச்சியில், வட்டாரக் கலைக்குழு தோழர்கள் புரட்சிகர பாடல்களைப் பாடினர்.

தோழர் தோழர் தனது தலைமையுரையில், “பாஜக காலிகள், ரவுடிகள் போல வெறியாட்டம் போட்டதற்குக் காரணம் அவர்களது சித்தாந்தம் தான். இவர்கள் ஜெர்மனியின் கொடுங்கோலன் மக்களைக் கொத்து கொத்தாக கொன்று குவித்த நாஜி ஹிட்லரின் இந்திய வாரிசுகள். ஜெர்மனி மீது ஹிட்லர் படையெடுத்த போது, மக்களைக் காக்கும் பொருட்டு, தோழர் ஸ்டாலின் பின் வாங்கினார். அதன் காரணமாக தான் ஆக்கிரமித்த உக்ரைனில் அமைக்கப்பட்ட தோழர். லெனின் சிலையை உடைத்தது நாஜி வெறி ஹிட்லரின் கும்பல். அடுத்த ஒரே ஆண்டுக்குள் ஹிட்லரின் படையை ஓட ஓட விரட்டியது ஆசான் ஸ்டாலின் தலைமையிலான மக்கள் ராணுவம் என்பது தனிக்கதை! இதைத்தான் இன்று திரிபுராவில் நடத்திக் காட்டியுள்ளது பாஜக காலிப்படை. எனவே, நாம் போராட வேண்டியது கண்ணுக்குத் தெரியும் காவி கும்பலை மட்டுமல்ல அவர்களது சித்தாந்தத்தை. அதற்கு பாட்டாளி வர்க்கமாய் ஒன்றிணைவதே ஒரே வழி” என்றார்.

புமாஇமு அமைப்பாளர் தோழர் மோகன், தனது உரையில், “பாஜக ஒரு கட்சியல்ல. அது ஒரு மதவெறிக் கும்பல். அதன் சித்தாந்தமே உழைக்கும் மக்களாக ஆகப் பெரும்பான்மையாக இருக்கும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களை தங்களது அடிமைகளாக மாற்றி அவர்களை முன்னேற விடாமல் தடுப்பது தான். அதைத் தான் மோடி தனது கொள்கையாகக் கொண்டு அன்றாடம் செய்து வருகிறார். நீட் தேர்வு அதற்கான சமீபத்திய உதாரணம். உழைக்கும் மக்களின் பிரிவிலிருந்து யாரும் உயர்கல்வி கற்கக் கூடாது, மருத்துவராகக் கூடாது என்பதை செயல்படுத்தக் கொண்டு வந்தது தான் நீட் தேர்வு. அதற்காக அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் பொய் என்பதை, பட்டியலிட்டுப் பேசினார். எனவே, நீட் என்பதைச் சாக்காக வைத்து நமது அடுத்த தலைமுறையை தற்குறியாக, கூலி அடிமைகளாக மாற்றி, முதலாளிகளுக்கு படையல் படைக்கப் போகிறார்கள். இந்து மதத்தின் பெயரால் அதைச் செய்யப் பார்க்கிறார்கள். இவைகளை எல்லாம தட்டிக் கேட்கச் சொன்னவர்கள், போராடக் கற்றுக் கொடுத்தவர்கள் தான் மாமேதை லெனினும், தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும்.

இதனால் தான் ஆர்.எஸ்.எஸ். பாஜக காலிகள் இந்த தலைவர்களின் சிலைகளை குறிவைத்து தாக்குகிறார்கள். எனவே, நாம் பாதுகாக்க வேண்டியது, வழிநடக்க வேண்டியது சிலைகளை மட்டுமல்ல. அந்தத் தலைவர்களின் சித்தாந்தங்களை. அதற்கு எதிராக வரும் பார்ப்பன மதவெறிக் கூட்டத்தை, எச்ச ராஜாக்களை வீதியில் எதிர்கொண்டு அடித்து உதைத்து விரட்டுவது தான் நமக்கான வேலை” என்றார்.

மக்கள் அதிகாரத்தின் தோழர் கலை பேசும் போது, நாட்டின் பல்வேறு மாநிலங்களின் ஆட்சியைப் பிடித்துள்ள பாஜக, மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவில்லை. மாறாக, நீட், பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வங்கி திவால், சாகர்மாலா, பாரத்மாலா போன்ற நடவடிக்கைகளால் பிரச்சினைகள் தீவிரமாகிக் கொண்டே வருகிறது. இவைகள் எல்லாமே, இந்த கட்டமைப்பின் தோல்வியைக் காட்டுகிறது. அந்தத் தோல்வியை மறைக்கவே, மதவெறிக் கூச்சல்கள், சிலை இடிப்புகள் நடத்தி மக்களை திசை திருப்புகிறது மதவெறிக் கும்பல். எனவே, இவர்களை எதிர்கொள்ள அனைத்து தரப்பு உழைக்கும் மக்களும் ஒன்று திரள்வதும், மக்களுக்கு எதிரியாக மாறிப் போன இந்த அரசுக் கட்டமைப்பை அடித்து நொறுக்குவதும் தான் உடனடி வேலையாக செய்ய வேண்டும்” என்றார்.

இறுதியாகப் பேசிய, புஜதொமு பொருளாளர் தோழர் செல்லக்கண்ணு, “ஆசான் லெனினுக்கும், இந்தியாவிற்கும் என்ன சம்மந்தம் என்று கேட்கிறார் வரலாறு தெரியாத எச்ச ராஜா. யாரெல்லாம் சமூகத்தில் அடிமைப்பட்டுக் கிடக்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் மிக நெருங்கிய தொடர்புடையவர் ஆசான் லெனின். தொழிலாளி வர்க்கம் முதலாளித்துவத்திடம் அடிமைப்பட்டுக் கிடந்த போது, அழுக்குச் சட்டைகள் ஆள முடியும் என்று சொல்லி, தொழிலாளிகள் தங்களது வர்க்க பலத்தை உணரச் செய்தவர்.

முதலாளி தன்னால் தான் சமூகத்தில் மக்கள் வாழ்கிறார்கள் என்று இறுமாப்புடன் இருந்த போது, தொழிலாளியின் வரலாற்றுப் பாத்திரத்தை உணர்த்தி, தொழிலாளி என்ற திமிருடன் இருக்கக் கற்றுக் கொடுத்தவர் தான் ஆசான் லெனின். நாட்டை தலைகீழாக மாற்றுவதாகச் சொன்ன மோடியால் எதையும் செய்ய முடியவில்லை. அவ்வளவு ஏன்? இதே பகுதியில் ஊதிய உயர்வு கேட்டுப் போராடி வரும் வேல்பிஸ்கட்ஸ் தொழிலாளர்களுக்கு உங்களது மதமோ, கட்சியோ என்ன செய்தது? வெறும் 500/- ரூபாய் மட்டும் தான் உயர்வு தர முடியும் என்று திமிராகச் சொன்ன முதலாளி மீது நடவடிக்கை ஏதும் இல்லை. ஆனால், தொழிலாளிகளின் உள்ளிருப்புப் போராட்டத்திற்குப் பிறகு தான் முதலாளியே அசைகின்றான்.

எனவே, கூலி அடிமைமுறையை ஒழிக்க வர்க்கமாய் இணைந்து போராடக் கற்றுக் கொடுத்த ஆசான் லெனின் தான் தொழிலாளி வர்க்கத்தின் தலைவர். நமது நாட்டில் அந்த வர்க்க இணைவுக்குத் தடையாக உள்ள சாதிகளையும், அதைத் தாங்கி நிற்கும் இந்து மதத்தையும் ஒழிக்க வேண்டும் என்று கற்றுக் கொடுத்தவர்கள் தான் பெரியாரும் அம்பேத்கரும். எனவே, இவர்கள் தொழிலாளி வர்க்கத்திற்கு சிலையாக நிற்கவில்லை. சிந்தனையாக நிற்கிறார்கள். சிலையை உடைத்து விடலாம். சிந்தனையை யாராலும் உடைக்க முடியாது. அந்த சிந்தனையை உயர்த்திப் பிடித்து ஆசான் லெனின் வழியில் புரட்சியை சாதிப்போம்.” என்றார்.

கூட்டத்தில் வட்டாரக் கலைக்குழுத் தோழர்களின் பாடல்கள், இந்து மதவெறியர்களின் அரசியலை அம்பலப்படுத்தியதோடு, அவர்களது கார்ப்பரேட் சேவையையும், அம்பலப்படுத்தும் வகையில் அமைந்தது.

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புதுச்சேரி, தொடர்புக்கு : 95977 89801.

*****

திரிபுரா சிபிஎம் தொண்டர்கள் மீது RSS-BJP  கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்துவதை எதிர்த்தும், உலகம் முழுவதும் கொண்டாடப்படும் ரசிய புரட்சியின் தலைவரான லெனின் சிலையை தகர்த்து வெறியாட்டம் போடுவதை கண்டித்தும் “RSS-BJP    கும்பலை நாட்டை விட்டே விரட்டியடிப்போம்”  என்கின்ற முழக்கத்துடன் மதுரை நகரின் பல பகுதிகளிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

AC   அசோகன் தலைமையிலான காவல்துறை அனுமதி பெறாமல் போராட்டம் நடத்தக்கூடாது வேண்டுமானால் 5 பேர் மட்டும் மாலை அணிவிக்கலாம், ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்க கூடாது என்று மிரட்டி பேசினர். அதை ஏற்க மறுத்த தோழர்கள் மாவட்ட நீதிமன்றத்திலிருந்து வழக்கறிஞர்களை  திரட்டி பேரணியாக சென்று மாலை அணிவிக்க முழக்கமிட்டவாறு வரும்போது மகஇக, பு.ம.இ.மு மற்றும் தோழமை அமைப்பு தோழர்களும் பேரணியில் இணைந்து கொண்டனர். இது சாலை சென்று கொண்டிருந்த மக்களின் கவனத்தை ஈர்த்து கவனிக்க வைத்தது.

வழக்கறிஞர்கள் தோழர்கள் என அனைவரும் மாலை அணிவித்த பின் ஊடகங்களிடம் தோழர் வாஞ்சிநாதன் பேசும் போது….  “பார்ப்பன பொறுக்கி எச்.ராஜா தமிழகத்தில் பெரியார் சிலையை உடைப்போம் என பேசியதை இந்த அடிமை எடப்பாடி அரசு வேடிக்கை பார்க்கிறது. இதற்கு பேசாமல் அதிமுக என்கின்ற பெயரை மாற்றி அடிமை திமுக என கட்சி பெயரை வைத்துக்கொள்ளலாம்” மேலும் “பெரியார் பிறந்த மண்ணில் சமூக நீதியையும் சமத்துவத்தையும் அழிக்க நினைக்கும் இந்த நச்சு பாம்பு எச்ச‌.ராஜா, BJP-RSS  கும்பலை நாட்டை விட்டே அடித்து விரட்ட வேண்டும். இந்த வேலையை அனைத்து ஜனநாயகவாதிகளும் இணைந்து செய்ய வேண்டும்”  என வலியுறுத்தி பேசினார்.

மேலும் “கோவை பாஜக அலுவலகத்தில் குண்டு வீசியது, சென்னை திருவெல்லிகேணியில் 15 பார்ப்பனர்களின் பூனூல் அறுப்பு என்று பாஜக வை சேர்ந்த கிரிமினல் கும்பல்களே செய்துவிட்டு பிரச்சினையை திசை திருப்பி விடலாம் என நினைக்கிறது” என்று அம்பலப்படுத்தி வழக்கறிஞர்கள் தோழர்கள் ஆகியோர் பேசினர்.

பேசிவிட்டு களைந்து செல்ல முற்படும்போது உங்கள் எல்லாரையும் கைது செய்வோம் என காவல்துறை மிரட்ட அதற்கு தோழர்கள் அப்படியென்றால் நாங்கள் சாலை மறியல் செய்வோம் என்றும், மேலும் தொடர்ச்சியாக் சமூகத்தின் அமைதியை கெடுக்கும் வண்ணம் மதக்கலவரத்தை தூண்டும் விதமாக பேசி வரும் எச்.ராஜாவை கைது செய்ய தயாரா என்ற கேட்டவுடன் ஏசி அசோகன் கும்பலுக்கு முகம் இறுகிப் போய் பின்வாங்கியது. இது மக்களிடையே போலிசின் கையாலாக தனத்தை அம்பலப்படுத்துதும் விதமாக அமைந்தது. பின்பு தோழர்கள் வழக்கறிஞர்கள் அனைவரும் களைந்து சென்றனர்.

தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
மதுரை.