Friday, June 19, 2026
முகப்பு பதிவு பக்கம் 531

அரிசியை டவுண்லோடு செய்ய முடியாது – ஐ.டி. ஊழியர்கள் விசாயிகளுக்காக போராட்டம்

0

சென்னை பல்லாவரம் அம்பேத்கர் சிலை அருகில் 18.04.2017 அன்று மாலை 5:00 மணியளவில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஐ.டி. ஊழியர் பிரிவு மற்றும் மெப்ஸ் (MEPS) வளாகத்திள் வேலை செய்யும் ஐ.டி. ஊழியர்கள், இணைந்து விவசாயிகளின் போராட்டங்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நெடுவாசலில் விவசாயிகளின் வாழ்வைச் சூறையாட வரும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கண்டித்தும், டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இந்த பிரச்சினைகளையொட்டி ஒரு மாதத்திற்கு முன்னரே மெப்ஸ் வளாகத்திற்கு முன்பு போராட முடிவு செய்து, அதற்கான அனுமதி கோறி இருந்தனர்,ஆனால் காவல்துறை அதற்கு அனுமதி மறுத்ததால் இறுதியாக பல்லாவரம் அம்பேத்கர் சிலை அருகில் இந்த ஆர்ப்பாட்டத்தினை நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பு.ஜ.தொ.மு- ஐ.டி. ஊழியர் பிரிவு ஒருங்கிணைப்பாளர் தோழர் கற்பகவிநாயகம் தலைமை தாங்கினார். மேலும் மெப்ஸ் ஐ.டி. ஊழியர் வினோத் மற்றும் சமந்தா ஆகியோர் பங்குபெற்று தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர். மேலும் பு.ஜ.தொ.மு –வின் வழக்கறிஞர் சக்தி சுரேஷ் அவர்கள் கண்டன உரையாற்றினார்.

தோழர் கற்பகவிநாயகம் தனது தலைமை உரையில் “கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யக்கோரியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும் போராடி வருகின்றனர். ஆனாலும் அவர்களின் கோரிக்கைகளுக்கு செவி கொடுக்க மறுக்கிறது மத்திய அரசு. மேலும் தமிழகத்தை தொடர்ந்து மீத்தேன் திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம் என வஞ்சித்து வருகிறது. இதனை தமிழக அரசும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. இவற்றை எதிர்த்து விவசாயிகளுக்காக போராட நாம் களமிறங்கியுள்ளோம்.

நம்மிடம் சிலர் கேட்கலாம் மென்பொருள் நிறுவன ஊழியர்களுக்கும் விவசாயிகளுக்கும் என்ன சம்மந்தமென்று. இன்று ஐ.டி. துறையில் பணிபுரிபவர்கள் பலரும் விவசாயிகளின் பிள்ளைகள் தான். நமது தந்தையும், சகோதரர்களும் செத்துக் கொண்டிருக்கும் போது, நாங்கள் சும்மா இருக்க முடியாது. மேலும் பலர் நாங்களும் விவசாயிகளுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகளை கண்டிக்கிறோம் என்கின்றனர். ஆனால் அந்த கண்டனங்கள் எப்படி மாறியுள்ளது என்றால் சமூகவலைதள மீம்ஸ்களாக உள்ளது. அவற்றை தாண்டி நாம் நமது கண்டனங்களை வீதிகளில் தெரிவிக்க வேண்டியுள்ளது. மீண்டும் ஒரு மெரினா போராட்டத்தைப் போன்ற உறுதியான போராட்டத்தை கட்டமைக்க வேண்டியுள்ளது.” என பதிவு செய்தார்.

அவரைத் தொடர்ந்து மெப்ஸ் ஐ.டி ஊழியர் திரு வினோத் தனது உரையில் “நமக்கெல்லாம் சோறு போட்ட விவசாயிகள் ஆடையின்றி அமர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவற்றை யாரும் கண்டு கொள்ளவில்லை, கட்சியின் சின்னத்திற்காக சண்டையிட்டுக் கொண்டு அதற்கான பேரங்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர். பிரதமரோ கூப்பிடும் தொலைவில் இருந்தும், விவசாயிகளை பார்க்க மறுக்கிறார். ஊர் ஊராக சுற்றி செல்பி எடுப்பவர் ஏன் விவசாயிகளை சந்தித்து ஒரு செல்ஃபி எடுத்துக் கொள்ளலாமே? அதைச் செய்வாரா?

விவசாயம் தான் நாட்டின் முதுகெலும்பு என்கிறார்கள் ஆனால் அது முறிக்கப்பட்டு விட்டது. அதை முறித்துவிட்டு என்ன டிஜிட்டல் இந்தியா? டிஜிட்டல் இந்தியாவில் ஒரு கிலோ அரிசியை டவுன்லோடு செய்து கொள்ள முடியுமா. எந்தத் துறையாக இருந்தாலும் விவசாயமே அனைவருக்கும் சோறு போடுவது. அதனால் தான் ஜப்பான் கப்பலில் விவசாயம் செய்து கொடிருக்கிறது. ஆனால் எல்லா சூழலும் இருந்தும் நமது விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்பட்டுகின்றனர். நாளை நமது நாடும் சோமாலியா போல் பட்டினிச் சாவை நோக்கி செல்லாமல் இருக்க விவசாயத்தை காக்க வேண்டும் அதற்காக அனைவரும் களத்தில் இறங்கிப் போராட வேண்டும்.” எனக் கூறினார்.

அதன் பின்னர் ஐ.டி. ஊழியர் சமந்தா அவர்கள் பேசினார். அதில் “இன்று நாம் கூடி இருப்பது விவசாயிகளின் கோரிக்கைகளுக்காக தான். விவசாயம் என்பதை அத்தனை சுலபமாக செய்துவிட முடியாது என்பது இங்கு உள்ள விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு தெரியும். நாம் எல்லாம் சில செடி நடலாம், 10 மரங்களை நடலாம் ஆனால் அதை தாண்டி பெரிதாக எதையும் செய்ய முடியாது. ஆக விவசாயத்தை காக்க வேண்டும் என்ன செய்யலாம்? இந்த மத்திய மாநில அரசுகள் மக்கள் அரசாக மாறும் போது மட்டுமே இது சாத்தியம்.” என பேசினார்.

பு.ஜ.தொ.மு. வழக்கறிஞர் சக்தி சுரேஷ் தனது கண்டன உரையில் “ஐ.டி. ஊழியர்கள் பற்றி ஒரு பொதுவான பார்வை உள்ளது; மடிப்பு கலையாத உடையுடன், கையில் ஸ்மார்ட் போன் இவைதான் அவர்களின் அடையாளம். ஆனால் இந்த பொதுப் பார்வையை மாற்றும் விதமாக உள்ளது அவர்களின் இந்த போராட்டம். சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக இங்கு சாலையில் கையில் பதாகையேந்தி, விவசாயிகளுக்காக நின்று கொண்டிருக்கின்றனர். இவர்கள் தங்கள் சொந்த முயற்சியிலேயே இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகின்றனர்.

திட்டமிட்டே விவசாயத்தை அழிக்க மீத்தேனும், ஹைட்ரோ கார்பன் திட்டங்களும் கொண்டுவரப்படுகின்றன. உ.பி-யில் தேர்தல் வெற்றிக்காக விவசாயக் கடன்களை ரத்து செய்வதாகக் கூறி ஆட்சியைப் பிடித்தது பா.ஜ.க. ஆனால் தமிழகத்தில் அவர்களுக்கு அரசியல் லாபம் இல்லாத காரணத்தால் திட்டமிட்டே வஞ்சிக்கிறது.

பல லட்சம் கோடி கடன் தொகை கார்பரேட் நலன்களுக்காக தள்ளுபடி செய்யப்படுகிறது. ஆனால் விவசாயிகளின் கடன்களை கட்டாயமாக வசூலிக்க வேண்டும் என்கிறது அரசு.

விவசாயிகளுக்கு மட்டும் இன்று பிரச்சினை இல்லை ஐ.டி. ஊழியர்களுக்கும் பிரச்சினை உள்ளது. தற்போது சி.டி.எஸ். நிறுவனமானது தனது நிறுவனத்தில் ஆட்குறைப்பு செய்யப் போகிறது. இவ்வாறு அனைத்து தரப்பினருடைய வாழ்கையும் கார்பரேட் நலன்களுக்காக அழிக்கப்பட்டு வருகிறது.” ஆக இவை அனைத்துக்கும் எதிராக மக்கள் திரள வேண்டியதன் அவசியத்தினை வலியுறுத்தி பேசினார்.

இறுதியாக தோழர் திலீபன் அவர்கள் நன்றியுரை கூற ஆர்ப்பாட்டம் நிறைவு பெற்றது.மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பு.ஜ.தொ.மு வாகன ஓட்டுநர் சங்கத் தொழிலாளிகளும் கலந்து கொண்டனர். இந்த் ஆர்ப்பாட்டத்தை வியாபாரிகள், பொதுமக்கள் வாகனங்களில் செல்வோர் என பலரும் கவனித்தனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

-வினவு செய்தியாளர்

இந்திய இராணுவத்தின் ஊழலைப் பார்க்காதே கேட்காதே பேசாதே !

0

மோடி அரசு அறிவித்த பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு எதிராகப் பொதுமக்கள் வெறுப்பும் கோபமுமாகக் குமுறிக் கொண்டிருந்த வேளையில், “இராணுவ வீரர்கள் நாட்டு எல்லையில் நேரம் காலம் பார்க்காமல் நின்று கொண்டிருக்கும்பொழுது, உங்களால் ஒரு சில மணிநேரம் வங்கி வாசலில் காத்திருக்க முடியாதா?” என இந்து மதவெறியர்களும் தேசபக்த சிரோமணிகளும் எதிர்க்கேள்வி கேட்டு, பொதுமக்களின் வாயை அடைக்க முயன்றார்கள்.

தன்னைக் கொலை செய்ய நடந்த முயற்சியில், குண்டு துளைத்துச் சென்ற காயத் தழும்போடு சத்ருகன் சிங் சவுகான்.
தன்னைக் கொலை செய்ய நடந்த முயற்சியில், குண்டு துளைத்துச் சென்ற காயத் தழும்போடு சத்ருகன் சிங் சவுகான்.

இப்பொழுதெல்லாம் யாராவது ஒரு இராணுவ வீரன், எல்லைப் பகுதியிலோ, காஷ்மீரிலோ செத்துப் போனால், அவனது மரணமும் இறுதிச் சடங்கும் ஊரே கூடிவந்து ஒப்பாரி வைத்துவிட்டுச் செல்லும்படி நடத்தப்படுகிறது.

இப்படியெல்லாம் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாட வேண்டிய அளவிற்கு, இந்திய இராணுவம் தகுதியும் தரமும் மிக்கதா?

தேஜ் பகதூர் யாதவ் என்றொரு இராணுவ வீரர், தங்களுக்குக் கொடுக்கப்படும் ரொட்டிக்கு சப்ஜி தரப்படுவதில்லை என்றும், பல நேரங்களில் இராணுவ வீரர்கள் அரைப் பட்டினியாகக் கிடக்குமாறு விடப்படுகிறார்கள் என்றும் குறிப்பிட்டு, இராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் உணவில் நடைபெறும் ஊழலை அம்பலப்படுத்தி, வாட்ஸ் அப் வீடியோவொன்றை வெளியிட்டார்.

அரசு நடத்தும் மாணவர் விடுதிகளில்தான் இப்படியெல்லாம் கேவலமாக ஊழல் நடைபெறுவதைக் கேள்விப்பட்டிருக்கிறோம். இராணுவமும் அதற்கு விதிவிலக்கல்ல என்பது இப்பொழுது அம்பலமாகியிருக்கிறது.

ரொட்டிக்கு குருமாகூடத் தராமல் கமிசன் பார்க்கும் இந்திய இராணுவ அதிகாரிகள், வேறெந்த பஞ்சமா பாதகம் செய்வதற்கு அஞ்சப் போகிறார்கள்?

உ.பி. மாநிலத்திலுள்ள மெயின்புரி என்ற ஊரைச் சேர்ந்தவரும், இந்திய இராணுவத்தில் இரண்டாவது லெஃப்டினண்ட் அதிகாரியாக காஷ்மீரில் பணியாற்றியவருமான சத்ருகன் சிங் சவுகானின் கதையைக் கேட்டால், இந்திய இராணுவத்தின் கேவலமான, சதித்தனங்களும் கொடூரமும் நிறைந்த பக்கம் அம்பலமாகிறது.

சத்ருகன் சிங் சவுகான், 1990 ஏப்ரலில் ஆறாவது ராஜ்புட் படைப் பிரிவில் இரண்டாவது லெஃப்டினண்ட் அதிகாரியாக நியமிக்கப்பட்டு, காஷ்மீரில் பணியாற்ற அனுப்பி வைக்கப்பட்டார். காஷ்மீரில் இந்திய அரசிற்கு எதிரான போராட்டங்களும் ஆயுதத் தாக்குதல்களும் உச்சத்தில் இருந்த காலகட்டம் அது. பணியில் சேர்ந்த ஒரு வாரத்திலேயே, சிறீநகரிலுள்ள பதாமாலூ பகுதியில் வீடுவீடாகப் புகுந்து தீவிரவாதிகளைப் பிடிக்கும் தேடுதல் வேட்டைக்குச் சென்றார், சவுகான். அத்தேடுதல் வேட்டையில் தீவிரவாதிகள் யாரும் சிக்கவில்லை என்றாலும், 27.5 கிலோகிராம் எடை கொண்ட 147 தங்கக் கட்டிகள் (தற்போதைய மதிப்பில் 9 கோடி ரூபாய் பெறுமானமுள்ளவை) அப்படைப்பிரிவால் கைப்பற்றப்பட்டது.

இராணுவத்தில் நடந்துவரும் ஊழல்களை அம்பலப்படுத்தியதற்காக பைத்தியக்காரப் பட்டம் கட்டப்பட்ட கேரளாவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி அருண்குமார்.
இராணுவத்தில் நடந்துவரும் ஊழல்களை அம்பலப்படுத்தியதற்காக பைத்தியக்காரப் பட்டம் கட்டப்பட்ட கேரளாவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி அருண்குமார்.

கைப்பற்றிய பொருட்களை போலீசிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது விதி. ஆனால், நடந்ததோ வேறு. அப்படைப்பிரிவின் தலைமை அதிகாரியான பன்வார் அந்தத் தங்கக் கட்டிகளை எடுத்துச் சென்றார். மறுநாள், அவரிடம் தங்கக் கட்டிகள் கைப்பற்றப்பட்டதை சவுகான் நினைவுபடுத்தியபொழுது, “எந்தத் தங்கக் கட்டி?” எனக் கேட்டார், பன்வார். தங்கக் கட்டிகளைத் தனது உயர் அதிகாரியே அமுக்கிக் கொண்டுவிட்டார் என்ற உண்மை அப்பொழுது சவுகானுக்குப் புரிந்தது.

பன்வார் தங்கக் கட்டிகளைத் திருடிக்கொண்ட உண்மையை மற்றொரு உயர் அதிகாரியான கர்னல் சவுகானிடம் முறையிடுவதற்காக அவர் வீட்டிற்குச் சென்று திரும்பினார் சத்ருகன் சிங் சவுகான். இதனைத் தெரிந்துகொண்ட பன்வார், தனது அதிகாரத்தைப் பயன்படுத்தியும், மற்ற அதிகாரிகளின் துணையோடும் சத்ருகன் சிங் சவுகானை ஒழித்துக் கட்டும் முயற்சியில் இறங்கினார்.

அன்றிரவே சவுகானைக் கொல்லும் சதித் திட்டம் தீட்டப்பட்டாலும், அத்திட்டம் சவுகானின் முன்னெச்சரிக்கையின் காரணமாக நிறைவேறாமல் போனது. அதனையடுத்து, முட்டிபோட்டு மைதானத்தைச் சுற்றிவரும் தண்டனை சவுகானுக்குத் தரப்பட்டது. இதன் பிறகு, சொந்த ஊருக்குச் சென்று வருமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டது. சொந்த ஊருக்கு வந்த சவுகான், மன உளைச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலைமையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட பன்வார், சத்ருகன் சிங் சவுகான் முறையான அனுமதி பெறாமல் சொந்த ஊருக்குச் சென்றுவிட்டதாக குற்றப் பத்திரிகையைத் தயாரித்தார். போரில் இருந்து விலகி ஓடுவதற்கு இணையான இந்தக் குற்றச்சாட்டுக்கு மரண தண்டனைகூட அளிக்க முடியுமாம். இந்தக் குற்றச்சாட்டைச் சுமத்தியதோடு, சத்ருகன் சிங் சவுகான் மனப் பிறழ்வு நோய்க்கு ஆளாகிவிட்டதாகவும் கூறி, அவருக்குச் சிகிச்சை அளிக்க உதம்பூருக்குக் கொண்டுவருமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ரொட்டிக்குக் குருமாகூடத் தரப்படுவதில்லை என்பதை அம்பலப்படுத்திய "ஒழுங்கீனத்திற்காக"த் தண்டிக்கப்பட்ட எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் தேஜ் பகதூர் யாதவ்.
ரொட்டிக்குக் குருமாகூடத் தரப்படுவதில்லை என்பதை அம்பலப்படுத்திய “ஒழுங்கீனத்திற்காக”த் தண்டிக்கப்பட்ட எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் தேஜ் பகதூர் யாதவ்.

உதம்பூரில் வைத்து சவுகானுக்குச் சிகிச்சையளிப்பது என்ற பெயரில் இரண்டு முறை அவரைக் கொல்ல முயற்சி செய்யப்பட்டது. முதல் முயற்சியில் மற்றொரு அதிகாரியால் சவுகான் காப்பாற்றப்பட்டார். இரண்டாவது முயற்சியில் அவர் கடுமையான குண்டுக் காயங்களோடு சாவின் விளிம்பிற்குச் சென்று திரும்பினார்.

இன்னொருபுறம், இராணுவ விசாரணை என்ற பெயரில் உண்மையைக் குழிதோண்டி புதைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. சவுகான் மீது நடத்தப்பட்ட கொலைத் தாக்குதல், அவர் தற்கொலை செய்து கொள்ள மேற்கொண்ட முயற்சியாகச் சித்தரிக்கப்பட்டது. சவுகான் தங்கத்தைத் திருடியதாக யார் மீதெல்லாம் குற்றஞ்சுமத்தினாரோ, அவர்களெல்லாம் சவுகானுக்கு எதிரான சாட்சியங்களாக நிறுத்தப்பட்டனர். இறுதியாக, உண்மைக்காகப் போராடத் துணிந்த சவுகான் இராணுவத்திலிருந்து விலக்கப்பட்டார். விசாரணையின்போது அவர் சிறையில் இருந்த எட்டுமாத காலம் தண்டனைக் காலமாக அறிவிக்கப்பட்டது.

இத்தீர்ப்பை எதிர்த்து, 1993-இல் அலகாபாத் உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தார், சவுகான். அந்நீதிமன்றம், 19 ஆண்டுகள் கழித்து அவ்வழக்கை, லக்னோவிலுள்ள இராணுவ நீதிமன்றத்திற்கு மாற்றியது. லக்னோ இராணுவ நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட விசாரணையில் சவுகான் நிரபராதியென்றும் தங்கக் கட்டிகள் திருடப்பட்டது குறித்தும், சவுகான் மீது நடத்தப்பட்ட கொலை முயற்சி குறித்தும் விசாரிக்க வேண்டுமெனத் தீர்ப்பளிக்கப்பட்டது.

இத்தீர்ப்பை எதிர்த்து இராணுவ அமைச்சகம் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. தான் நிரபராதி என நிரூபிப்பதற்காகச் சலிப்படையாமல் இருபத்தாறு ஆண்டு காலமாகப் போராடிய சவுகானை, மேலும் அலைக்கழிக்கும் குரூரம்தான் இராணுவ அமைச்சகத்தின் முடிவு.

உண்மையைச் சொல்ல முயன்ற தனது சக ஊழியனைக் கொலை செய்யவும், பைத்தியக்கார பட்டம் கட்டவும் தயங்காத இந்திய இராணுவம், ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டம் அமலில் உள்ள காஷ்மீரிலும், மணிப்பூரிலும், தன்னை எதிர்த்து நிற்கும் மக்களை என்னவெல்லாம் செய்யும் ? இந்தக் காலனிய காலச் சட்டம் பொதுமக்களைக் கொல்லவும், அவர்களது உடைமைகளைக் கொள்ளையடிக்கவும் இராணுவத்திற்குச் சட்டபூர்வ உரிமையை அல்லவா வழங்கியிருக்கிறது.

தங்கக் கட்டிகளைத் திருடிய பன்வார், எந்தத் தங்கக் கட்டி எனக் கேட்ட அந்த நிமிடத்தில், தனது இலட்சிய வேட்கையெல்லாம் செத்துப் போனதாக நினைவு கூர்கிறார், சவுகான்.

இராணுவத்தில் நடந்துவரும் ஊழல்களை அம்பலப்படுத்தியதால் பைத்தியக்காரப் பட்டம் கட்டப்பட்ட கேரளாவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியான அருண்குமார், “இலட்சிய வேட்கையோடு இராணுவத்தில் சேரும் இளைஞர்களை, ஊழல் நிறைந்த இராணுவ அமைப்பு சீரழித்துவிடுவதாக”க் கூறுகிறார்.

ஒழுக்கமும், கட்டுப்பாடும் மிக்க நிறுவனமாகவும், தேச பக்தியின் அத்தாரிட்டியாகவும் முன்நிறுத்தப்படும் இந்திய இராணுவம், அதற்கு நேர் எதிராகச் செயல்பட்டு வரும் ஒட்டுண்ணி அமைப்பு என்பதை நிறுவும் ஒப்புதல் வாக்குமூலங்கள் இவை.

– ஆதவன்
புதிய ஜனநாயகம் ஏப்ரல் 2017

சென்னை சேத்துப்பட்டில் அம்பேத்கரின் 126-வது பிறந்தநாள் விழா !

1
தோழர் காமராஜ்

அண்ணல் அம்பேத்கரின் 126-வது பிறந்தநாள் விழா !
நாடு முழுவதும் பரவி வரும் பார்ப்பன பாசிச இந்து மதவெறியை முறியடிப்போம் !

அம்பேத்கர் பிறந்த நாளில் உறுதியேற்போம் !

அம்பேத்கரின் பிறந்தநாள் விழாவில் சென்னை சேத்துப்பட்டு அம்பேத்கர் திடலில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் சார்பாக மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சென்னை ம.க.இ.க.வின் பொதுக்குழு உறுப்பினர் தோழர் அனந்தப்ப ராஜா தலைமை தாங்கி நடத்தினார்.

முதல் நிகழ்ச்சியாக முழக்கமிடப்பட்டது.

தோழர் காமராஜ்

மார்க்சிய ஆசான் தோழர் மார்க்ஸ் வாழ்க !
அண்ணல் அம்பேத்கர் வாழ்க !
தந்தை பெரியார் வாழ்க !

முறியடிப்போம் முறியடிப்போம் !
பார்ப்பன-இந்து மதவெறி
பா.ஜ.க-இந்து முன்னணி கும்பல்களை
முறியடிப்போம் முறியடிப்போம்!
நாட்டை மறுகாலனியாக்க துடிக்கின்ற
பா.ஜ.க சதியை
முறியடிப்போம்! முறியடிப்போம்!

இந்துமதவெறியூட்டி
சாதி-மத கலவரம் தூண்டி
உழைக்கும் மக்களை கூறுபோடும்
பா.ஜ.க-இந்துமுன்னணி கும்பலை
முறியடிப்போம் முறியடிப்போம் !

சந்தி சிரிக்குது ! சந்தி சிரிக்குது !!
மோடியின் டிஜிட்டல் இந்தியா
சந்தி சிரிக்குது ! சந்தி சிரிக்குது !!
மேக்கின் இந்தியா-கிளின் இந்தியா
சந்தி சிரிக்குது ! சந்தி சிரிக்குது !!
மோடியின் கருப்புபண ஒழிப்பெல்லாம்
மோடியின் ஊழல் ஒழிப்பு-நாடகமெல்லாம்
சந்தி சிரிக்குது ! சந்தி சிரிக்குது !!

அரிசி இல்லை! பருப்பு இல்லை!
சர்க்கரை இல்லை! கோதுமை இல்லை!
பாமாயில் இல்லை! மண்ணெண்ணெய் இல்லை!
அட தூ ! துவரம் பருப்பு ஏதுமில்லை!
உணவுப்பொருளுக்கு மானியம் இல்லை !
ஸ்மார்ட் கார்டு – என்னமசுருக்கு !
ஸ்மார்ட் கார்டு – என்ன மசுருக்கு !

உழைக்கும் மக்களே, உசார் உசார் !!
கும்பல் வருது ! கும்பல் வருது !
பா.ஜ.க-இந்துமுன்னணி கும்பல் வருது !
முஸ்லீம் மக்களை கொன்றுகுவிக்கும்
தலித்மக்களை கொன்றுகுவிக்கும்
இந்து மதவெறி கும்பல் வருது !
உழைக்கும் மக்களே, உசார்! உசார் !!

முழக்கங்கள்

பன்னாட்டுமுதலாளிகளின்
ஓட்டல்களுக்கு தாராளமாக தண்ணிரு
எம்.பி. – எம்.எல்.ஏ.க்களுக்கு
தாரளமாக தண்ணிரு
நீதிபதி – ஐ.ஏ.எஸ் – ஐ.பி.எஸ்.
அதிகாரிகளுக்கு – தாராளமாக தண்ணிரு
கோல்ஃப் – மைதானத்திற்கு தண்ணிரு
நீச்சல் குளத்திற்க்கு தண்ணிரு
மக்களுக்கு – எஸ்.கே. – தண்ணிரு

பதில் சொல் ! பதில் சொல் !!
இந்துமதவெறி ஆர்.எஸ்.எஸ்.- பா.ஜ.க-வே
பதில் சொல் ! பதில் சொல் !
உழைக்கும் மக்கள் – சாமியை தொட்டால் தீட்டு என்றாய்
கருவறைக்கு நுழைந்தால் தீட்டு என்றாய்
மக்கள் தரும் தட்டில் துட்டு தீட்டில்லை !
உண்டியல் துட்டு தீட்டு இல்லை !
பூ பழம், தேங்காயும் தீட்டில்லை !
பதில் சொல் ! பதில் சொல் !!
இந்துமதவெறி – பிஜேபியே
பதில் சொல் ! பதில் சொல் !!

அடுத்ததாக அம்பேத்கரின் சிலைக்கு சேத்துப்பட்டு பகுதி தோழர்கள் ஜெயகாமராஜ், பாஸ்கர் ஆகியோர் அம்பேத்கர், பெரியாரின் சிலைகளுக்கு மாலையணிவித்தனர். இதைத் தொடர்ந்து ம.க.இ.க. பொதுக்குழு உறுப்பினர் தோழர் புவன் உறையாற்றினார்.

தோழர் புவன்

அவர் பேசியதாவது ”அம்பேத்கரின் இந்த 126-வது பிறந்தநாள் தினத்தை நம்மை போன்று பல்வேறு அரசியல் சக்திகள், ஜனநாயக சக்திகள் மாலையணிவித்து நினைவுக்கூறும் அதே நேரத்தில்தான் அவர் தீவிரமாக யாரை எதிர்த்தாரோ அந்த ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. பார்ப்பன பாசிச இந்து மதவெறி கும்பலும் அவருக்கு மாலையணிந்து மரியாதை செலுத்துகின்றனர்.

நாடு முழுவதும் சாதி – மத வெறியைத் தூண்டி உழைக்கும் மக்களை பிளவுப்படுத்துகின்ற ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.மோடி கும்பலுக்கு அம்பேத்கர் சிலைக்கு மாலையணிவிக்க எந்த அருகதையும் இல்லை.

மேலும், நாடு முழுவதும் இன்றைக்கு, தலித் மக்கள், சிறுபான்மையினர் மீது தொடர் தாக்குதல், சாதி-மதவெறியைத் தூண்டி மக்களை பிளவுப்படுத்துவது. உழைக்கும் மக்களின் உணவான மாட்டுக்கறிக்கு தடை போடுகிறது. குறிப்பாக ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் மாட்டுக்கறியை வைத்திருந்தாலே அவர்களுக்கு மரணதண்டனை என பாசிச சட்டங்களை போடுகிறது.

இதுமட்டுமல்லாமல் நாட்டில் விவசாயிகளுக்கு எதிராக தொழிலாளிக்கு எதிராக பல்வேறு சட்டங்களை இயற்றி அவர்களையும், உழைக்கும் மக்களையும் மரண குழியில் தள்ளுகிறது. பாசிச மோடி அரசு.

பரவி வரும் பார்ப்பன பாசிச இந்து மதவெறியை முறியடிக்க அம்பேத்கரின் பிறந்த நாளில் உறுதியேற்போம் ” என்றுபேசினார்.

இவண்
மக்கள் கலை இலக்கியக் கழகம்
சென்னை – 95518 69588

தஞ்சை மானோஜிப்பட்டி டாஸ்மாக்கை முற்றுகையிட்ட பெண்கள் !

0

ஞ்சை நகரில் இருக்கும் மருத்துவக் கல்லூரிக்கு அருகில் உள்ள மானோஜிப்பட்டி எனும் கிராமத்தின் முக்கிய சாலை சந்திப்பில், மக்கள் நெருக்கமாக வாழும் பகுதியில் பள்ளிக்கு அருகாமையில் 15 ஆண்டுகளாக ஒரு டாஸ்மாக் கடை இயங்கி வந்தது. அதை எதிர்த்து அப்பகுதி வாழ் மக்கள் பல ஆண்டுகளாக மாவட்ட ஆட்சியருக்கும், தாசில்தாருக்கும், காவல்துறை கண்காணிப்பாளருக்கும் என அனைத்து அதிகாரிகளுக்கும் தொடர்ச்சியாக பலமுறை மனுக்கள் கொடுத்து நொந்து போயினர்.

தற்போது தஞ்சையில் உள்ள நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் பல ஊர் குடிகாரர்கள் இந்த மானோஜிப்பட்டி கடைக்கு படையெடுத்தனர். அந்த சிறிய கடைவீதியில் தினமும் ஆயிரக்கணக்கான குடிமகன்கள் குவிகின்றனர். அப்பகுதி சாலைகள் அனைத்தையும் பார்களாக மாற்றிவிட்டனர். அப்பகுதி மக்கள் இக்கடைவீதியில்  நடமாட முடியாமல் தவித்தனர். பெண்கள், பள்ளிக் குழந்தைகள் தினந்தோறும் அவதிப்படுகின்றனர். அப்பகுதியில் இருப்பவர்கள் எவ்வாறு இந்த கடையை மூடுவது என்ற குழப்பத்தில் மக்கள் அதிகார அமைப்பை நாடினர்.

உடனே மக்கள் அதிகார அமைப்பை சார்ந்த தோழர்கள் அப்பகுதியில் உள்ள வணிகர்கள், தொழிலாளர்கள், பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரையும் இந்த டாஸ்மாக் கடைக்கு எதிராக திரட்டினர். மக்களுக்கு எதிராக செயல்படும் இந்த அரசு மனு கொடுப்பது, உண்ணாவிரதம் இருப்பது என்று கெஞ்சிக்கொண்டிருந்தால் மூடமாட்டார்கள். கடையை இங்கு நடத்த முடியாத அளவுக்கு நெருக்கடி கொடுத்து விரட்டியடிக்க வேண்டும் என்று திரட்டி 18.04.2017 அன்று காலை  11:00 மணிக்கு மக்கள் அதிகார தஞ்சை பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர் தேவா தலைமையில், சுமார் 300 பேர் திரண்டு கடையை திறக்கவிடாமல் முற்றுகையிட்டனர்.

கடை திறக்காவிட்டால் இந்த அரசே ஸ்தம்பித்து விடும் என்பது போல் தாசில்தார், மாவட்ட துணை கண்காணிப்பாளர், டாஸ்மாக் மாவட்ட துணை மேலாளர், கோட்ட கலால் அலுவலர் என ஒட்டுமொத்த அதிகாரவர்க்க கும்பலும் காவலர் புடைசூழ போராட்டக் களத்திற்கு வந்தனர். போராடும் மக்களை ஏய்த்துவிடலாம் என்றும், காவல் துறையினர் கலவரத்தை தூண்டி மக்கள் அதிகார அமைப்பு தோழர்களை மக்களிடம் இருந்து தனிமைப்படுத்தி விடலாம் என்றும் பல சூழ்ச்சிகளில் ஈடுபட்டது. ஆனால் அனைத்தையும் அங்கு திரண்டுள்ள பெண்களும், மக்கள் அதிகார தோழர்களும் முறியடித்தனர்.

வேறு வழியில்லாமல் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் பெண்கள் இன்று மூடிவிட்டுதான் வீட்டிற்கு செல்வோம் என்று உறுதியாக இருந்தனர். இறுதியாக மே 5-க்குள் மூடிவிடுகிறோம் என்று அதிகாரிகள் கெஞ்சி கூத்தாடி மக்களிடம் அனுமதி கோரினர். பிறகு பெண்கள் இதை ஏற்றுக்கொண்டு அதிகாரிகள் உத்தரவாதம் அளிக்கும் வகையில் அனைத்து அதிகாரிகளும் கடிதமாக எழுதி கையெழுத்திட்டு கொடுத்தால் தான் கலைவோம் என்று எழுதி வாங்கிக்கொண்டு, மே 5க்குப் பிறகு கடையிருந்தால் இடித்துவிடுவோம் என்றும் அரசை எச்சரித்துவிட்டு சென்றனர்.

இப்போராட்டம் அப்பகுதி மக்களிடையே உற்சாகத்தையும், அனைத்து பிரச்சனைகளுக்கும் களத்தில் இறங்குவது தான் ஒரே தீர்வு என்பதையும் விதைத்தது. மக்கள் அதிகார அமைப்பை மக்களிடமிருந்து தனிமைப்படுத்தி விடலாம் என்ற அதிகாரிகளின் நப்பாசையும் பொய்த்துப் போனது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தஞ்சை.

சேவைக் கட்டணம் = மக்களுக்கு கட்டணம் தனியாருக்கு சேவை !

0

சேவைக் கட்டணம் தனியார்மயத்தின் மற்றொரு முகமூடி !

ழாவது ஊதியக் குழு பரிந்துரைத்திருக்கும் ஊதிய உயர்வைத் தனது ஊழியர்களுக்குத் தரப் போவதாக அறிவித்திருக்கும் மைய அரசு, அதனால் ஏற்படும் கூடுதல் செலவை மக்கள் தலையில் சுமத்த முயலுகிறது. குறிப்பாக, ஐ.ஐ.டி., என்.ஐ.டி., ஐ.ஐ.எம்., கேந்திரிய வித்யாலயா உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், எய்ம்ஸ், ஜிப்மர், நிமான்ஸ் உள்ளிட்ட பொது மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள், ஆராய்ச்சி நிலையங்கள் – என மைய அரசின் நிதிஉதவி பெறும்  600-க்கும் மேற்பட்ட தன்னாட்சி நிறுவனங்களில், ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவதன் மூலம் ஏற்படும் அதிக செலவில் 30 சதவீதத்தை அந்தந்த நிறுவனங்களே ஏற்றுக் கொள்ள வேண்டும் என மைய நிதி அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறது.

ஐ.ஐ.டி., என்.ஐ.டி., உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில், கடந்த ஆண்டுதான் கல்விக் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டது. இந்த ஆண்டில் மைய அரசின் சுற்றறிக்கையைக் காரணமாக வைத்து  இன்னொரு மடங்கு கல்விக் கட்டணத்தை உயர்த்துவது எளிதாகிவிட்டது.

டெல்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் புறநோயாளிகளாகச் சிகிச்சை பெறுவதற்காக முதல்நாள் இரவே வந்து, அம்மருத்துவமனையின் அருகிலுள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் படுத்துறங்கும் நோயாளிகளும் அவர்களது உறவினர்களும். (கோப்புப் படம்)

ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவதால், பெங்களூரில் உள்ள நிமான்ஸ் மனநல மருத்துவமனைக்குக் கூடுதலாக 50 கோடி ரூபாய் செலவு ஏற்படும் எனக் கூறப்படுகிறது. இக்கூடுதல் செலவில், 15 கோடி ரூபாயை அம்மருத்துவமனையே ஈடுகட்ட  வேண்டுமெனில், நோயாளிகளிடமிருந்து இந்தத் தொகையைப் பிடுங்குவதைத் தவிர வேறுவழியில்லை. “நோயாளிகள் பெறும் சிகிச்சைக்குக் கட்டணம் வசூலிக்க வேண்டும். இல்லையென்றால், மருத்துவ வசதிகளுக்குச் செலவு செய்வதைக் குறைத்துக்கொண்டு, அதனை நிர்வாகச் செலவுக்குப் பயன்படுத்த வேண்டியிருக்கும்” எனக் கூறியிருக்கிறது, அம்மருத்துவமனை நிர்வாகம். கட்டணம் வசூலிக்கவில்லையென்றால், நோயாளிகளுக்கு இப்பொழுது கிடைக்கும் அளவில்கூடத் தரமான சிகிச்சை கிடைக்காது என்பதுதான் இதன் பொருள்.

மத்திய, மாநில அரசுகள் நடத்தும் பொது மருத்துவமனைகளில் முன்பு போல அனைத்து நிலைகளிலும் இலவச சிகிச்சை இப்பொழுது தரப்படுவதில்லை. குறிப்பாக, அறுவை சிகிச்சைகளை எடுத்துக் கொண்டால், பரம ஏழை நோயாளிகளாக இருந்தாலும், காப்பீடு அட்டை இருப்பதை உறுதி செய்துகொண்ட பிறகுதான் அறுவை சிகிச்சைக்குத் தேதி தரப்படுகிறது. இதய நோய், பக்கவாதம் போன்ற உயிரைப் பறிக்கும் நோய்களுக்கான மருந்துகள் இலவசமாகக் கிடைப்பதில்லை. அவற்றை வெளியே வாங்கிக் கொள்ளுமாறு மருத்துவர்களே சீட்டு எழுதிக் கொடுத்துவிடுகின்றனர். எம்.ஆர்.ஐ., சி.டி. ஸ்கேன் உள்ளிட்ட முக்கியப் பரிசோதனைகளுக்குக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு, நோயாளிகளிடமிருந்து வசூல் செய்யப்படுகிறது. இவையல்லாமல், கட்டணம் செலுத்தி சிகிச்சை பெறும் ஏற்பாடுகள், பார்வையாளர் கட்டணம் என அரசு மருத்துவமனைகள் வசூல் மையங்களாக மாற்றப்பட்டுள்ளன.

இந்த நிலையில் மருத்துவமனை ஊழியர்களின் சம்பளத்தில் ஒரு பகுதியை நோயாளிகளிடமிருந்து வசூலிக்க வேண்டும் என்ற மைய அரசின் சுற்றறிக்கை, இனி இலவச மருத்துவமே கிடையாது என்ற நிலைக்குத்தான் இட்டுச் செல்லும். ஆசிரியர்களுக்குத் தரும் சம்பளத்தின் ஒருபகுதியை மாணவர்களிடமிருந்து வசூலிக்க வேண்டுமென்றால், இனி ஏழை மாணவர்கள் ஐ.ஐ.டி. போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் அடியெடுத்து வைக்க முடியாத நிலை ஏற்படும்.

கலெக்சன் காட்டவில்லையென்றால், ஓட்டுநருக்கும் நடத்துனருக்கும் அன்றைக்கான கூலி கிடையாது என்பது தமிழகப் போக்குவரத்துக் கழகங்களில் எழுதப்படாத நடைமுறையாக இருந்து வருகிறதாம். அந்த வகையில், அ.தி.மு.க. அரசு மோடி அரசிற்கு முன்னோடியாக உள்ளது.

சம்பள உயர்வை ஈடுகட்ட, பொதுமக்களிடமிருந்து கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என இன்று உத்தரவிடும் மைய அரசு, நாளை அனைத்துச் சேவைகளுக்கும் அதற்குரிய கட்டணத்தை வசூலிக்க வேண்டும் எனக் கூறத் தயங்காது. ரயில்வேயில் கொண்டுவரப்பட்டுள்ள சிறப்பு ரயில் கட்டண முறை இந்த அபாயத்திற்கான முன்னறிவிப்பு.

அரசு நிறுவனங்களை நேரடியாகத் தனியாருக்குத் தாரை வார்ப்பதைவிட, கட்டணக் கொள்ளை என்ற குறுக்கு வழியில் அவற்றை கார்ப்பரேட் நிறுவனங்களாக மாற்றிவிட முயலுகிறது, மைய அரசு.

-அழகு 
புதிய ஜனநாயகம், ஏப்ரல் 2017

ஐ.டி ஊழியர்களை சதி செய்து வெளியேற்றும் காக்னிசண்ட் நிறுவனம் !

3

லகம் முழுவதும் சுமார் 2.6 இலட்சம் பேரை ஊழியர்களாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது காக்னிசண்ட் டெக்னாலஜி சொலுசன்ஸ் (சி.டி.எஸ்) நிறுவனம். அந்நிறுவனத்தில் இந்தியாவில் மட்டும் சுமார் 1.8 இலட்சம் பேர் வேலை செய்து வருகின்றனர். அதில் சுமார் 6,000 முதல் 10,000 பேரை பணி நீக்கம் செய்யவிருப்பதாக ஊடகங்களுக்குக் கடந்த மார்ச் மாத இறுதியில் தகவல்களை கசிய விட்டது சி.டி.எஸ் நிறுவனம். இச்செய்தி சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் பேசு பொருளாக மாறிய பின்னர், தகுதி குறைந்தவர்களை நீக்கிவிட்டு, புதிய ஊழியர்களை ஒவ்வொரு ஆண்டும் எடுப்பது இயல்பாக நடக்கும் ஒன்று தான் என்று கார்ப்பரேட் அறிவுஜீவிகளும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் மனித வளத்துறை அதிகாரிகளும் பத்திரிக்கைகளுக்கு பேட்டியளித்தனர்.

இந்த தகுதி குறைவு பூச்சாண்டியே ஒரு மோசடி என்பது ஒருபுறமிருக்க இதன்  காரணமாகத் தான் ஆட்குறைப்பு செய்யப்படுகிறதா ?

பணிநீக்க செய்திகள் வெளியாவதற்கு முன்பே, அதற்கான ஆயத்தப் பணிகளைச் செய்யத் தொடங்கியிருந்தது சி.டி.எஸ். நிறுவனம். அந்நிறுவனத்தின் மனித வளத்துறை அதிகாரிகள் (HR), ஊதிய உயர்வுக்கான ஊழியர் பரிசீலனையில்(Appraisal), ஒவ்வொரு குழுவிலும்(Team) இருக்கும் மொத்த நபர்களில் ஒன்று அல்லது இரண்டு நபர்களுக்கு தர வரிசைப் பட்டியலில் கண்டிப்பாக 4 வது தரநிலை (4th Grade) கொடுக்க வேண்டும் என அனைத்து செயல்திட்ட மேலாளர்களிடமும் (Project Manager) வலியுறுத்தியுள்ளனர்.  அதாவது ஒரு குழு முழுவதுமே சிறப்பாக செயல்பட்டிருந்தாலும், அதிலிருந்து ஒருவர் அல்லது இருவர் கண்டிப்பாக பலிகடாவாக்கப்பட வேண்டும் என்பது தான் அதன் பொருள்.

இவ்வாறு 4-வது தரநிலை கொடுக்கப்பட்டுள்ள ஊழியர்களை, அவர்கள் வேலை பார்த்து வரும் குறிப்பிட்ட செயல்திட்டத்திலிருந்து (Project) இருந்து நீக்கி காத்திருப்புப் பட்டியலில் வைத்தது நிர்வாகம். அவர்களை இரண்டு மாதங்களுக்குள் வேறு செயல்திட்டங்களில் ஏதேனும் ஒன்றுக்கு நேர்முகத் தேர்வில் பங்கேற்று சேர்ந்து கொள்ளுமாறும், ஒரு வேளை இரண்டு மாதங்களுக்குள் வேறு எந்த ப்ராஜெக்ட்களிலும் சேரவில்லை எனில் அவர்கள் உடனடியாகப் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் கூறியுள்ளது. அதே சமயத்தில் செயல்திட்ட மேலாளர்களிடம், அவர்களது செயல்திட்டங்களில் காத்திருப்புப் பட்டியலில் இருக்கும் ஊழியர்களை எடுக்கும் போது 4-வது தரநிலை கொடுக்கப்பட்ட ஊழியர்களைக் கண்டிப்பாக எடுக்கக் கூடாது என்றும் கூறியுள்ளது.

அதாவது ஒரு குழுவிற்கு ஒருவரோ அல்லது இருவரோ கண்டிப்பாக பணி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று முடிவெடுத்த பின்னர், அவர்களுக்கு வேண்டுமென்றே 4-வது தரநிலை கொடுத்து, அதன் காரணமாக அவர்கள் வேலை பார்க்கும் செயல்திட்டங்களிலிருந்து நீக்கி, வேறு எந்த செயல்திட்டங்களிலும் சேர முடியாதவாறு நிர்பந்தத்தை உருவாக்கி அதனடிப்படையில் அவர்களைப் பணியை விட்டு நீக்குவது என்பதை திட்டமிட்டு சதி செய்திருக்கிறது சி.டி.எஸ். நிர்வாகம்.

இது தவிர சம்பந்தப்பட்ட ஊழியரை மனித வளத்துறை அதிகாரி அறைக்கு வரவழைத்து ஒரு மணிநேரம், இரண்டு மணி நேரம் அவர்களிடம் அவர்களது குறைகளாக பல்வேறு கதைகளைக் கூறி அவர்களைத் தானாக இராஜினாமா செய்யத் தூண்டுவதன் மூலமும் ஆட்குறைப்பைச் செய்து வருகிறது சி.டி.எஸ். நிறுவனம். இத்தகைய உளவியல் தாக்குதல்களை பல்வேறு ஐ.டி நிறுவனங்கள் நெடுங்காலமாக செய்து வருகின்றன.

இப்படி ஊழியர்களை சட்டவிரோதமாக மனிதத் தன்மையற்று சி.டி.எஸ். நிறுவனம் வெளியேற்றுவதற்கான காரணம் என்ன? ஒரு வேளை அந்நிறுவனம்  நட்டத்தில் செயல்படுகிறதோ? நிச்சயமாக இல்லை, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 8% அதிகமான வளர்ச்சியைச் சாதித்துள்ளது இந்நிறுவனம். தற்போது பணிநீக்கம் செய்யப்படும் இதே ஊழியர்களின் கண் துஞ்சாத  உழைப்பில் தான் இந்த வளர்ச்சியை எட்டியிருக்கிறது சி.டி.எஸ். இந்நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கும் பெருமுதலாளிகளுக்குக் கொழுத்த இலாபத்தை உறுதி செய்யும் பொருட்டே பல ஆயிரம் ஊழியர்களை ஈவிரக்கமின்றி பணிநீக்கம் செய்துவருகிறது சி.டி.எஸ். நிறுவனம்.

இது வெறுமனே காக்னிசண்ட் நிறுவன ஊழியர்களின் பிரச்சினை அல்ல. அனைத்து ஐ.டி. நிறுவனங்களிலும் இது தான் நடைமுறை. பணிநீக்கம் ஒரு பிரச்சினை என்றால் சம்பளத் திருட்டு அடுத்த பிரச்சினை. ஐ.டி. ஊழியர்களின் ஊதியத்தில் ஒரு பகுதித் தொகை திறன் சார்ந்த ஊதியம் என்று பிரிக்கப்படுகிறது, அதாவது நிறுவனத்தின் மொத்த வளர்ச்சித் திறன், சம்பந்தப்பட்ட ஊழியர் பணிபுரியும் ப்ராஜெக்டின் வளர்ச்சித் திறன், சம்பந்தப்பட்ட ஊழியரின் (அடிமைத்) திறன் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு இந்த சம்பளப் பகுதியை 200%ஆக அதிகரிக்கவோ அல்லது 0%ஆக குறைக்கவோ செய்யும் உரிமை நிறுவனத்திற்கு உண்டு.

இரவும் பகலும் வேலை பார்த்து கூடவே மேலதிகாரியின் ‘குட் புக்கில்’ இடம்பெறும் ஊழியனுக்கே இச்சம்பளத்தில் அதிகபட்சமாக 95% தான் தரப்படுகிறது என்கிறார்கள் ஐ.டி. ஊழியர்கள்.  அதுவும் ஒட்டு மொத்த நிறுவனமும் அந்த ஊழியர் வேலை செய்யும் ப்ராஜெக்டும் வெற்றிகரமாக இலக்கை அடையும் பட்சத்தில் தான் இதுவும் சாத்தியம்.

இந்திய கார்ப்பரேட் முதலாளிகளின் சங்கமான நாஸ்காம் ( NASCOMM) தனது ஆண்டுப் பரிசீலனைக் கூட்டத்தில் இன்னும் பல அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 2016-17 நிதியாண்டில் தொழிற்சாலைகளின் வளர்ச்சி 8.6% அளவில் இருந்த போதிலும், வேலை வாய்ப்பின் வளர்ச்சி 5% தான் உயர்ந்திருக்கிறது எனத் தெரிவித்துள்ளது. அதோடு அடுத்த மூன்றாண்டுகளில் இந்தியா முழுவதும் 20 முதல் 25% வேலைகள் பறி போகும் என்றும் கூறியுள்ளது.

இதே போல சமீபத்தில் மும்பையில் நடந்த நாஸ்காம் தலைமை மாநாட்டில் பேசிய கேப்-ஜெமினி என்னும் பிரெஞ்சு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின்  இந்தியப் பிரிவின் தலைமை அதிகாரி சீனிவாச கண்டுலா, ஐ.டி. துறையில் நடுத்தர மற்றும் உயர் பதவிகளில் இருப்பவர்களுக்கு பெருமளவில் வேலை இழப்பு ஏற்படும் என்று கூறினார். மேலும் தற்போதைய ஐ.டி. ஊழியர்களில்  பயிற்சியளித்தாலும் தேறாதவர்கள் சுமார் 60 முதல் 65% வரை இருப்பார்கள் என்றும் கூறியிருக்கிறார். கேப் ஜெமினி நிறுவனத்தின் இந்திய செயல்பாட்டின் கீழ் மட்டும் 1,00,000 ஊழியர்கள் செயல்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது ஐ.டி. மற்றும் வியாபாரத் துறையில் ஹோம்ஸ் (HOLMES –  Heuristics and ontology-based learning machines and experiential systems ) என்னும் தானியங்கி தொழில்நுட்பத்தைக் கொண்டு வரப் போவதாக தெரிவித்துள்ளது விப்ரோ நிறுவனம். இந்த்த் தானியங்கித் தொழில்நுட்பம் சுமார் 30,000 ஊழியர்களின் வேலைகளைத் தானே செய்ய வல்லது. அந்த அடிப்படையில் விரைவில் சுமார் 30,000 ஐ.டி. ஊழியர்கள் விப்ரோ நிறுவனத்தால் விரைவில் பணி நீக்கம் செய்யப்படும் அபாயம் உண்டு.

முதலாளிகளுக்கு அடிமைச் சேவகம் புரிய, சக ஐ.டி ஊழியர்களை வேவு பார்க்கும் மனித வளத்துறை அதிகாரிகளுக்கும் ஆப்பைத் தயாராகவே வைத்துள்ளன ஐ.டி.நிறுவனங்கள்.  மனித வளத்துறை மற்றும்  நிதித்துறையிலும் தானியங்கித் தொழில்நுட்பத்தை உபயோகித்து ஆட்குறைப்பு செய்ய இருப்பதாகக் கூறியிருக்கின்றனர்.

படிக்கவே அதிர்ச்சியாக இருக்கலாம், ஆனால் இவை யாவும் உங்களை பீதியூட்டுவதற்காக இட்டுக்கட்டி சொல்லப்பட்டவை அல்ல. இவை அனைத்தும் முதலாளித்துவ பத்திரிக்கைகளில், அவர்களது இணையதளங்களில், முதலாளிகளின் அதிகாரப்பூர்வ அறிக்கைகளிலும் இதுவரை வெளியிடப்பட்ட தகவல்களே. இன்று “திறமையற்றவர்களாக” காட்டப்படும் சக ஊழியருக்காக குரல் கொடுக்க நீங்கள் தயங்கினால், நீங்களும் உங்கள் நிறுவனத்தால் ‘திறமையற்றவராக’ காட்டப்படும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்பதை மனதில் கொள்ளுங்கள். நீங்கள் எவ்வளவு திறமையானவராக இருந்தாலும், உங்களது தேவை நிறுவனத்திற்கு மறைந்த உடனோ அல்லது உங்களுக்குப் பதிலாக குறைந்த சம்பளத்தில் வேறொருவர் உருவாக்கப்பட்டவுடனோ, நீங்கள் கருவேப்பிலையாக தூக்கியெறியப்பட்டு விடுவீர்கள்.

– நந்தன்

செய்தி ஆதாரம் :

புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2017 மின்னிதழ்

0

புதிய ஜனநாயகம் ஏப்ரல் 2017 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இந்த இதழில் வெளியான கட்டுரைகள்

1. உச்ச நீதிமன்றத்தில் இரண்டு குமாரசாமிகள் !
நாலும் மூணும் எட்டு என்று கணக்கு போட்டு ஜெயலலிதாவை விடுதலை செய்த நீதிபதி குமாரசாமியின் கணக்கையும் தீர்ப்பையும் பார்த்து நாடே கைகொட்டிச் சிரித்தது. மேல் முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றமோ 4+3= 0 என்று தீர்ப்பளித்து ஜெயாவை விடுவித்திருக்கிறது.

2. தேர்தலை மற ! மக்கள் அதிகாரத்தை நினை !!
மக்களுடைய ஜனநாயக உரிமைகளை ரத்து செய்வதையே நோக்கமாக கொண்ட இந்த அரசமைப்பின் நிறுவனங்கள், தமக்கான நியாயவுரிமையை மக்களிடமிருந்தே தருவிக்கின்ற சூதுதான் தேர்தல்கள்.

3. மக்களாட்சியா, சாராய முதலாளிகளின் ஆட்சியா ?
நெடுஞ்சாலை ஓரத்திலுள்ள மதுக்கடைகளை அகற்றச் சொன்ன உச்ச நீதிமன்ற உத்தரவை, மைய அரசும், மாநில அரசுகளும் குறுக்கு வழியைப் பயன்படுத்தி முறியடிக்கின்றன.

4. வங்கிக் கடன் : நிலத்தை விற்றால் யோக்கியன் ! இல்லையென்றால் நாணயமற்றவன் !!
வங்கிக் கடனையும், பயிர்க் காப்பீடையும் விவசாயப் பிரச்சினைகளின் சர்வரோக நிவாரணியாகக் காட்டுகிறது, அரசு. ஆனால், விவசாயிகளை நிலத்தைவிட்டு அப்புறப்படுத்தும் கருவியாகத்தான் பயன்படுகிறது வங்கிக் கடன்.

5. தமிழக வறட்சி : பிணந்தின்னி பா.ஜ.க.! பணந்தின்னி அ.தி.மு.க.!!
தமிழக வறட்சிக்குப் பிச்சை போடுவதைப் போல நிவாரண நிதி அளிக்கிறது, பா.ஜ.க. குடிமராமத்து என்ற பெயரில் கொள்ளையை நடத்துகிறது, அ.தி.மு.க.

6. கருத்துச் சுதந்திரம் பயங்கரவாதக் குற்றமாம் !
கருத்துரீதியாக மாவோயிஸ்டுகளை ஆதரிக்கிறார்கள் என்ற ஒரே காரணத்துக்காக பேராசிரியர் சாய்பாபாவுக்கும் அவரது தோழர்களுக்கும் ஆயுள் தண்டனை அளித்திருக்கிறது, நீதிமன்றம்.

7. இந்திய நீதிமன்றம் அந்நிய முதலீட்டாளர்களின் கைக்கூலிப்படையா ?
ஜப்பானிய நிறுவனமான சுசுகியைத் திருப்திபடுத்துவதற்காகவும், தொழிலாளி வர்க்கத்தை எச்சரிப்பதற்காகவுமே மாருதி தொழிலாளர் வழக்கில் 13 தொழிலாளர்களுக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டிருக்கிறது.

8. கிரானைட் கொள்ளை : இந்த அமைப்புமுறை தோற்றுப் போய்விட்டது !
இது மக்கள் அதிகாரத்தின் பரப்புரை அல்ல. கிரானைட் கொள்ளை குறித்து விசாரணை நடத்திய சட்ட ஆணையர் சகாயம், தனது அறிக்கையில் கூறியிருக்கும் ஒப்புதல் வாக்குமூலம்.

9. எங்கம்மா சாணி தட்டி வித்திச்சி ! நாங்கள் எச்சி பாட்டில் கழுவிப் பொழைக்கிறோம் !!
நெசவுத் தொழில் அழிந்து, பாலாற்று மணல் கொள்ளையால் விவசாயமும் அழிந்து, டாஸ்மாக்கினால் குடும்பங்களும் அழிந்த நிலையில், அ.தி.மு.க. ஆட்சி பெண்களுக்கு வழங்கியிருக்கும் வேலைவாய்ப்புதான் எச்சில் சாராய பாட்டில் கழுவும் தொழில்.

10. இந்திய இராணுவத்தின் அறவொழுக்கம் : ஊழலைப் பார்க்காதே, கேட்காதே, பேசாதே !
இந்திய இராணுவத்தில் நடந்துவரும் ஊழல், முறைகேடுகளை அம்பலப்படுத்தத் துணியும் சிப்பாய்களும் அதிகாரிகளும் பைத்தியக்காரப் பட்டம் கட்டப்பட்டு துரத்தப்படுகிறார்கள்.

11. சேவைக் கட்டணம் என்றொரு முகமூடி !
அரசு நிறுவனங்களை நேரடியாகத் தனியாருக்குத் தாரை வார்ப்பதைவிட, கட்டணக் கொள்ளை என்ற குறுக்கு வழியில் அவற்றை கார்ப்பரேட் நிறுவனங்களாக மாற்றிவிட முயலுகிறது, மைய அரசு.

புதிய ஜனநாயகம் ஏப்ரல் 2017 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 2 MB இருப்பதால் தரவிறக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும்.

புதிய ஜனநாயகம் மாத இதழின் ஆண்டுச் சந்தா : உள்நாடு ரூ.180

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.ஃகே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

மாருதி தீர்ப்பை கண்டித்தும் விவசாயிகளை ஆதரித்தும் BHEL PPPU தொழிற்சங்கம் போராட்டம் !

0

ப்பொழுதும் போல் பருவமழை பொய்த்ததாலும் வழக்கம் போல் காவிரி நீர் திறக்க கர்நாடகம் மறுத்தாலும் தமிழ்நாட்டில் கடுமையான வறட்சி நிலவுகிறது. இதனால்  வாங்கிய கடன்களை கட்ட முடியாமல் பல விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். இதை எல்லாம் மத்திய, மாநில அரசுகள் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது. இதை கண்டித்து விவசாயிகள் தலைநகர் தில்லியில் பல நாட்களாக போராடியும் கண்டுகொள்ளவில்லை. நாட்டுக்கே உணவு கொடுத்தவர்களை உடையின்றி நிர்வாணமாக போராடவிட்டது இந்த அரசு.

இதே போல் மாருதி மனேசர் தொழிலாளர்களின் மீது தொடுக்கப்பட்ட அநீதியை கண்டித்தும் , சேலம் உருக்காலையை தனியாருக்கு விற்பதை கண்டித்தும் திருமயம் BHEL PPPU தொழிற்சங்கம் சார்பாக  12.04.17 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தது.

கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு PPPU தொழிலாளர் சங்கத்தின் பொது செயலாளர் திரு. இளங்கோவன் தலைமை வகித்தார் சிறப்பு அழைப்பார்களாக நெடுவாசலை சேர்ந்த மாவட்ட விவசாய சங்க அமைப்பாளர் திரு.சுந்தராசனும் மாவட்ட விவசாய சங்க பிரதிநிதி  தோழர் . தர்மராஜனும் கலந்து கொண்டனர்.

மனேசர் மாருதி தொழிலாளர்களுக்கு கொடுக்கப்பட்ட தீர்ப்பு முற்றிலும் அநீதியானது என்றும், தொடர்ந்து மத்திய அரசு  தொழிலாளர் விரோத போக்கை கடைபிடித்து வருவது கண்டிக்க தக்கது என்றும், சேலம் உருக்காலையை  தனியாருக்கு விற்க அரசு ஏன் ஆர்வமாக உள்ளது என்பது பற்றியும் தொழிலாளர்களிடம் விளக்கினார் அமைப்பு செயலாளர் தோழர் வெங்கட்ராமன். தொடர்ந்து பேசிய பொதுச்செயலாளர் இளங்கோவன் அரசுகளின் உண்மை முகத்தை தோலுரித்ததும். இது தொடர்ந்தால் இந்தியா முழுவதும் மீண்டும் ஒரு புரட்சி வெடிக்கும் என தனது உரையில் கூறினார்.

தோழர் தர்மராஜன் பேசும்போது “பொதுத்துறை நிறுவனம் மட்டும் இல்லை தனியார் நிறுவனங்களில் நடைபெறும் அநீதிகளை இந்த அரசுகள் கைகட்டி வேடிக்கை பார்க்கின்றது. இதை தொழிலாளர்கள் கடுமையான போராட்டம் மூலம் மாற்ற வேண்டும் என்றார்.”

மத்தியில் ஆளும் அனைத்து அரசுகளும் தொடர்ந்து விவசாயிகளுக்கு எதிராக தான் இருந்து வருகிறது மீத்தேன் என்றும் அதற்கு எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து பெயரை மாற்றி ஹைட்ரோகார்பன் என்றும் மக்களை ஏமாற்ற பார்க்கிறது. இதனை தடுக்க இளைஞர்கள் ஒன்று சேர்ந்து போராடினால் மட்டுமே விடிவு கிடைக்கும்.” என்று  பேசினார். செயலாளர் சரவணன்  கண்டன கோஷங்கள் எழுப்பினார். இறுதியாக துணைத்தலைவர் தோழர் இராஜ்குமார் நன்றியுரை கூறினார். ஆர்ப்பாட்டத்தில் PPPU தொழிற்சங்கத்தின் உறுப்பினர்கள் திருமயம் விவசாயிகள் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தகவல் :
BHEL PPPU தொழிலாளர் சங்கம்.
திருமயம்.

திருச்சி பாஸ்போர்ட் அலுவலகம் முற்றுகை ! மக்கள் அதிகாரம்

0

மிழகத்தின் காவிரி நீர் உரிமையை மறுத்து, ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களைத் திணித்து தமிழகத்தை பாலைவனமாக்க துடிக்கும் மோடி அரசுக்கு எதிராக

  • விவசாயக் கடன்கள் அனைத்தையும் ரத்துசெய்!
  • விவசாயி மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்கு!
  • காவிரி நடுவர் மன்றத்தை உடனே அமை!
  • வளர்ச்சி என்ற பெயரில் விவசாயத்தை அழிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை திணிக்காதே!

உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வழியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் ஒரு மாத காலத்திற்கும் மேலாக போராடி வருகின்றனர். ஆனால் மத்திய அரசோ போரடக்கூடிய விவசாயிகளின் கோரிக்கைகளையோ, போராட்டத்தையோ சிறிதளவும் மதிக்காமல் போராட்டத்தை கொச்சைப்படுத்தி வருகின்றது. இதனைக் கண்டித்து விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் மாணவர்கள், விவசாய சங்கங்கள், வணிகர் சங்கங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி, தஞ்சை மண்டல மக்கள் அதிகாரம் அமைப்பினர் இணைந்து விவசாயிகளுக்கு ஆதரவாக 17.04.2017 அன்று திருச்சியில் உள்ள மத்திய அரசின் பாஸ்போர்ட் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்துவதாக சுவரொட்டி மூலம் அறிவித்தனர். காலை 9:00 மணி முதலே தடுப்பரண்கள் அமைத்து, சாலையை மறித்து கடமை உணர்வுடன் காத்துக்கிடந்தது போலீசு. இதனால் வழக்கத்திற்கு மாறாக போக்குவரத்து நெரிசல் அதிகமானது. போலீசின் இந்தக் கெடுபிடியைக் கண்டு அருகிலுள்ள சினிமா தியேட்டருக்கும், பெட்ரோல் பங்குக்கும் வந்தவர்கள் ’ஏதும் மந்திரிங்க, நடிகருங்க வர்ராங்களா?’ என பேசிக்கொண்டனர். திட்டமிட்டபடி மக்கள் அதிகாரம் தோழர்கள் போராட்ட இடத்திற்கு அருகில் மக்களோடு மக்களாக கலந்து தயாராக இருந்தனர்.

சரியாக 11:00 மணியளவில் பறை முழக்கம் கேட்டவுடன் ஆங்காங்கே இருந்த தோழர்கள் கொடி மற்றும் முழக்கத்தட்டிகளை ஏந்தியபடி பல முனைகளில் இருந்தும் திரண்டு பாஸ்போர்ட் அலுவலகத்தை நோக்கி முன்னேறினர். முன்னேறிய தோழர்களைப் போலீசு தடுக்க முயன்றது. தோழர்கள் உணர்ச்சிக் கொந்தளிப்புடன் போலீசைப் புறந்தள்ளி முன்னேறிச் சென்றனர். போலீசின் தடுப்பரண்களைத் தாண்டி பாஸ்போர்ட் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மோடி முகமூடி அணிந்து விவசாயிகளுக்கு சுறுக்கு மாட்டி இழுக்கும் எமதர்மனாக மோடியை சித்தரித்தும், மோடி முகமூடி அணிந்தவரை செருப்பால் அடித்தும் காட்சி விளக்கம் செய்தனர். பி.ஜே.பி-யின் தாமரை சின்னத்தை வெட்டியெறிந்து காலில் போட்டு மிதித்தனர்.

பத்திரிக்கைகளுக்கு பேட்டியளித்த திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் செழியன் “இந்த அரசு விவசாயிகளின் போராட்டத்தை சிறிதளவுக்கூட மதிக்கவில்லை. கார்ப்பரேட் முதலாளிகளுக்கு இரண்டு லட்சம் கோடி வராக்கடனை தள்ளுபடி செய்த இதே அரசுதான் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய மறுக்கிறது. இது மக்களுக்கான அரசு இல்லை, முதலாளிகளுக்கான அரசு. இது எந்த வகையிலும் மக்களுக்கு உதவாது. இதனை தூக்கியெறிந்துவிட்டு மக்களுக்கான மாற்று அரசை நிறுவ வேண்டும். அனைத்து அம்சங்களிலும் இந்த அரசை முடக்கி மக்களே அதிகாரத்தை கையில் எடுத்துக் கொள்வதுதான் ஒரே தீர்வு அது தான் மக்கள் அதிகாரம்” என்றார்.

பிறகு தோழர்களை கைது செய்து வேனில் ஏற்றிச்சென்ற போலீசார் போராட்டத்தை தடுத்துவிட்டதாக நிம்மதி பெருமூச்சுவிடுவற்குள் மற்றொரு குழுவினர் கொடிகளை ஏந்தி முழக்கமிட்டவாறு தடுப்பரண்களை தள்ளிவிட்டு முன்னேறிச் சென்று அலுவலகத்தை முற்றுகையிட்டு போராடினர். அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் போராட்டத்தைப் பார்த்து மிரண்டனர். போர்குணமாக போராடிய தோழர்களை கைது செய்ய முடியாமல் போலீசு திணறியது. போலீசுத்துறை துணை ஆணையர் மயில்வாகனன், ஜல்லிகட்டு போராட்டத்தின்போது எந்த அமைப்பினரை பெயர் குறிப்பிடாமல் தீவிரவாதிகள் என்று சித்தரித்து பீதியூட்டினாரோ அதே அமைப்பினரின் போராட்டத்திற்கே பாதுகாப்பு அளிக்க வேண்டிய காலத்தின் காட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். போர்க்குணமிக்க இப்போராட்டம் மக்களின் உள்ளக் குமுறலின் வெளிப்பாடாகவும், போராடக் கூடிய மக்களுக்கு நம்பிக்கையூட்டுவதாகவும் அமைந்தது.

போராட்டத்தில் எழுப்பப்பட்ட முழக்கங்கள்:

காவிரி ஆணையம் மறுத்து விட்டு
ஒற்றை ஆணையம்னு ஏய்க்காதே!
வளர்ச்சி என்று ஏய்க்காதே
ஹைட்ரா கார்பனைத் திணிக்காதே!

விவசாயி, வியாபாரி…
மீனவன… மாணவன…
மக்களையெல்லாம் கொன்று விட்டு
டிஜிட்டல் இந்தியா யாருக்கு?

பதில் சொல் பதில் சொல்
காட்டை அழித்த கிரிமினல் ஜக்கி
சிலை திறக்க பறந்து வந்த…
கூப்பிடு தூரத்தில் சாகக் கிடக்கான்
தமிழகத்து விவசாயி…
எட்டிப்பார்க்க நேரமில்லையா
உலகம் சுத்தும் மோடியே
பதில் சொல் பதில் சொல்!

வர்தா புயலுக்கும் வறட்சிக்கும்
அறுபதாயிரம் கோடி கேட்டாக்கா
ரெண்டாயிரம் கோடிதான் தருவானாம்!

யானைப்பசிக்கு சோளப்பொறி
பார்ப்பன கும்பலின் மனுநீதி!
இது பார்ப்பன கும்பலின் மனுநீதி!

வேண்டும் காவிரி மறுப்பானாம்
வேண்டாத மீத்தேன திணிப்பானாம்
விடமாட்டோம் விடமாட்டோம்
பார்ப்பன கும்பலே பா.ஜ.க-வே
திராவிடப் பகையே விடமாட்டோம்!

அவமானம் அவமானம்
விவசாயிகளை கொச்சைப்படுத்தும்
எச்சி ராசாவ … சொர்ணக்காவ…
உலவ விடுவது அவமானம்!

மாடு செத்துப் போனதெல்லாம்
தேசியப் பிரச்சினையாம்….
விவசாயிகள் செத்து மடிவது
உப்புப் பொறாத விசயமா?
கோமாதாவின் புதல்வர்களை
மாட்டுக்குப் பிறந்த முண்டங்களை
உலவ விடுவது அவமானம்!

காவிரி உரிமையை மறுத்துவிட்டு
வறட்சி நிவாரணம் மறுத்து விட்டு
விவசாயிகளைக் கொன்று விட்டு
மீனவனைக் சுட்டுப்போட்டு
ஆட்டம் போடும் மோடி அரசை
அடித்து விரட்ட வாருங்கள்!

விரட்டியடிப்போம் விரட்டியடிப்போம்
திராவிடத்தை… சமூக நீதியை
எதிர்க்க வந்த பார்ப்பன கொழுப்பை
தமிழ் நாட்டை விட்டே துரத்தியடிப்போம்!

துரத்தியடிப்போம், துரத்தியடிப்போம்!
தமிழர் விரோத திட்டங்களை
நீட் தேர்வை, ஹைட்ரா கார்பனை…
கெயில் குழாயை, நியூட்ரினோவை…
திணிக்க முயலும் பா.ஜ.க-வை
தமிழ் நாட்டை விட்டே துரத்தியடிப்போம்!

விவசாயி… தொழிலாளி…
மாணவனும் மீனவனும்…
டாஸ்மாக் எதிர்க்கும் பெண்களும்
தனித்தனியாப் போராடி
தீர்வு கான முடியாது…

கார்ப்பரேட்டுக்கு சேவை செய்யும்
இந்த அரசமைப்பையே ஒழிக்காம
எந்தப் பிரச்சினையும் தீராது…
தோற்றுப்போன அரசமைப்பு
மக்களுக்கு உதவாது!

போராட்டங்கள் இணையட்டும்
மக்கள் அதிகாரம் மலரட்டும்!

(படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருச்சி, தஞ்சை மண்டலங்கள்.

திருத்துறைப்பூண்டி : டாஸ்மாக்கை மூடச் சொல்வது வன்முறையாம் !

0

டந்த பத்து ஆண்டுகளாகக் காவிரியில் வஞ்சிக்கப்பட்டும், பருவநிலை மாற்றங்களால் பாதிக்கப்பட்டும், வாழ்விழந்து நிற்கும் விவசாயிகளுக்கு ஆதரவாக “நெஞ்சு வெடித்து சாகிறான் விவசாயி என்ன செய்யப் போகிறோம்?” என்ற பிரச்சார சுவரொட்டிகளைப் கீழத்தஞ்சை பட்டிதொட்டி எங்கும் காண முடியும். மக்கள் அதிகாரத்தின் இந்தச் சுவரொட்டி வஞ்சிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதலையும், அதிகார வர்க்கத்திற்கு எரிச்சலையும் உருவாக்கியுள்ளது.

கீழத்தஞ்சையில் மக்கள் அதிகாரம் அமைப்பு பாதிக்கப்பட்ட, விவசாயிகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. கடந்த ஜனவரி 29 அன்று திருத்துறைப்பூண்டி, தெற்குவீதியில் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டு மக்கள் அதிகாரம் அமைப்பினர் பேருந்து பிரச்சாரம் மற்றும் குடியிருப்புகளில் மக்களைச் சந்திப்பது மூலம் பொதுக்கூட்டத்திற்கு மக்களை அணிதிரட்டி வந்தனர்

சட்டஒழுங்கு பிரச்சனையைக் காரணம் காட்டி 29-01-2017 அன்று நடைபெற இருந்த பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்தது. மீண்டும் 25-02-2017 அன்று பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரப்பட்டு, பேச்சுவார்த்தைக்குப் பிறகு 26-02-2017 அன்று பொதுக்கூட்டம் நடத்திக் கொள்ளுங்கள் என்று திருத்துறைப்பபூண்டி காவல்துறை ஆய்வாளர் வாய்வழி உறுதிஅளித்தார்.

பொதுகூட்டத்திற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்ட நிலையில் 25-02-2017 அன்று நள்ளிரவில் கடிதத்தை கொடுத்து திடீர் தடை விதித்தது காவல்துறை. மக்கள் அதிகாரம் திருவாரூர் அமைப்பாளர் முரளி, திருத்துறைப்பூண்டி தோழர் செல்வம் ஆகியோர் நள்ளிரவில் கைது செய்யப்பட்டு காவல்நிலையத்தில் சிறை வைக்கப்பட்டனர்.

இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு பொதுக்கூட்ட விண்ணப்பத்தைப் பரிசீலிக்குமாறு 27-03-2017 அன்று நீதிமன்றம் உத்தரவிட்டது. உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை கழிப்பறை காகிதமாகவே கருதினார் திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மயில்வாகனன்.

தற்போது டாஸ்மாக்கிற்கு எதிரான மக்கள் அதிகாரத்தின் சுவரொட்டி வாசகம் வன்முறையைத் தூண்டும் விதத்தில் இருப்பதாகவும், சட்டஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்தும் என்றும் பொதுக்கூட்டத்திற்குத் தொடர்பற்ற காரணங்களைக் கூறி 15-04-2017 அன்று நடைபெற இருந்த பொதுக்கூட்டத்திற்குக் காவல்துறை தடை விதித்துள்ளது.

தடையைக் கண்டித்து சுவரொட்டி ஒட்டிய  முரளி, முருகானந்தம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். திருவாரூர் நீதிமன்றத்திற்குக் கொண்டு வந்து காவல் வைப்பு (ரிமாண்ட்) கோரியது காவல்துறை.  திருவாரூர் விசாரணை நீதிமன்ற நீதிபதி காவல்துறையின் மனுவைத் தள்ளுபடி செய்தும் கண்டனத்தைப் பதிவு செய்தும் தோழர்களை விடுவித்துள்ளார்.

மீத்தேன் திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம், வறட்சி பாதிப்பு, நூறுநாள் வேலை கூலி மறுப்பு, டாஸ்மாக் எதிர்ப்பு என்று மக்கள் போர்கோலம் பூண்டு சாலைகளில் அணிதிரள்வது மிகச்சாதாரண நிகழ்வுகளாக மாறிக் கொண்டுள்ள சூழ்நிலையில் மக்கள் அதிகாரம் போன்ற அமைப்பைக் கண்டு அதிகார வர்க்கம் அஞ்சுவது  வழமையான ஒன்றுதான். என்றாலும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மயில்வாகனன் கிரிமினல் குற்றவாளி சசிகலா கும்பலின் விசுவாசி என்பதால் உச்சத்திற்கே சென்று கூவுகிறார் என்பதே உண்மை.

எந்த மக்கள் போராட்டக் கூட்டு நடவடிக்கையாக இருந்தாலும், மக்கள் அதிகாரம் அமைப்பு உள்ளதா? இருந்தால் அனுமதி கிடையாது என்பதை வெளிப்படையாகவே அறிவிக்கிறார் மயில்வாகனன். மக்கள் அதிகாரம் அமைப்பிற்கு அரங்குகள் வாடகைக்குக் கொடுக்கக்கூடாது என்று அரங்க உரிமையாளர்கள் எச்சரிக்கப்படுகிறார்கள்.

இதனைக் கண்டித்து 15-04-2017 அன்று தஞ்சை ரெட்கிராஸ் அரங்கில் பத்திரிகையாளர் சந்திப்பு மக்கள் அதிகாரம் சார்பில் நடைபெற்றது. மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் காளியப்பன் பங்கேற்று திருவாரூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரின் சட்ட விரோத, ஜனநாயக விரோத மனித உரிமை மீறல் நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டித்தார். பொதுக்கூட்டத்திற்குத் தடைவிதித்த அன்றே தடையை அம்பலப்படுத்தி பேருந்து பிரச்சாரம், குடியிருப்பு பிரச்சாரம் என்று மக்கள் அதிகாரம் அமைப்பினர் சுறுசுறுப்பாகி விட்டனர்.

அடக்குமுறைகளைக் கண்டு மக்கள் அதிகாரம் அஞ்சப்போவது இல்லை. திரளான மக்களுடன் திருத்துறைப்பூண்டி பொதுக்கூட்டம் நடைபெறும் என்பதை மக்கள் அதிகாரம் தொண்டர்களின் உழைப்பும், உணர்வும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

-வினவு செய்தியாளர்

சொத்துக் குவிப்பு வழக்கு : உச்ச நீதிமன்றத்தில் இரண்டு குமாரசாமிகள் !

3
சசிகலா நீக்கம்: பாசிச ஜெயாவை போற்றும் பார்ப்பன ஊடகங்கள்!

ழலுக்கு எதிரான சண்டமாருதம் என்றும் எச்சரிக்கை என்றும் பலவாறாக கொண்டாடப்பட்டது ஜெயா – சசி ஊழல் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு. இந்த வழக்கில் துவக்கம் முதலே உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜெயலலிதாவுக்கு எப்படியெல்லாம் உதவி வந்திருகிறார்கள் என்பதையும், இத்தீர்ப்பு திட்டமிட்டே தாமதிக்கப்பட்டிருப்பதையும், தீர்ப்பில் உள்ள நிழலான பகுதிகள் குறித்தும் புதிய ஜனநாயகத்தில் எழுதியிருந்தோம்.

முதல் குற்றவாளியான ஜெயலலிதாவுக்கும் மற்ற மூன்று குற்றவாளிகளுக்கும் இடையிலான உறவும், குற்றத்தில் ஜெயலலிதாவின் பாத்திரமும் உண்மை விவரங்கள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் நிறுவப்பட்டிருக்கின்றன என்ற போதிலும், அவர் இறந்து விட்ட காரணத்தினால், அவருடைய மேல் முறையீடு அற்றுப் போய்விட்டது (abated) என்று தனது தீர்ப்பில் கூறியிருந்தது உச்ச நீதிமன்றம். அற்றுப் போய்விட்டது என்று குறிப்பிட்டிருப்பதன் பொருள் என்ன என்ற கேள்வி அப்போதே எழுந்து விட்டது.

வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா மற்றும் நீதிபதி குன்ஹா

இறந்தவர் சிறைத்தண்டனையை அனுபவிக்க முடியாது என்பது எதார்த்தம். அபராதத்துக்கு ஜெயலலிதா விலக்குப் பெற முடியாது. ஏனென்றால், அதை வசூலிக்கும் சாத்தியங்கள் நிரந்தரமானவை. நீதிபதி குன்ஹா வசூலிக்கும் முறை என்ன என்பதை தெளிவாக விளக்கியுள்ளார் என்று தீர்ப்புக்கு விளக்கமளித்தார் கர்நாடக அரசு வழக்கறிஞர் ஆசார்யா. மரணம் என்பது குறிப்பிட்ட நபருக்கு எதிரான வழக்கைத்தான் முடிவுக்கு கொண்டு வருகிறதேயொழிய, அவருடைய சொத்துக்கு எதிரான வழக்கை அல்ல என்பதுதான் சட்டம்.

முறைகேடாக சேர்த்த சொத்துகள் முழுவதும் அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்படவேண்டும். குற்றவாளிகள் தாங்கள் நியாயமாக சம்பாதித்த பணத்திலிருந்து அபராதத் தொகையை செலுத்த வேண்டும் என்பது குன்ஹாவின் தீர்ப்பு. அவருடைய தீர்ப்பை முழுமையாக ஏற்பதாக உச்சநீதிமன்றம் கூறியிருந்த போதிலும், ஜெயலலிதா தொடர்பாக குறிப்பிடப்பட்டிருந்த வரிகள் சந்தேகத்துக்கிடமானவையாக இருந்த காரணத்தினால் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தது கர்நாடக அரசு.
“மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை முடிந்து, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில்தான் குற்றவாளி இறந்திருக்கிறார் என்பதால், மேல்முறையீடு அற்றுப்போதல் என்ற பேச்சுக்கே இடமில்லை. குற்றவாளி இறப்பதற்கு முன் இத்தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தால் அதற்கு என்ன வலிமையும் விளைவும் இருக்குமோ அது மரணத்துக்குப் பின்னரும் இருக்கும்… எனவே ஜெயலலிதாவுக்கு எதிரான மேல்முறையீடு அற்றுப்போய்விட்டதாக தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருப்பது, வெளிப்படையாகத் தெரிகின்ற சட்ட ரீதியான தவறு. தீர்ப்பில் உள்ள இந்த தவறு திருத்தப்படவேண்டும் ” என்றும் இது குறித்த தங்களது வாதுரைகளை முன்வைக்க நீதிபதிகள் அனுமதிக்க வேண்டும் என்றும் தனது சீராய்வு மனுவில் கோரியிருந்தது கர்நாடக அரசு.

கர்நாடக அரசின் வாதுரைகளைக் கேட்கக் கூட மறுத்த நீதிபதிகள் (குமாரசாமிகள்) பினாகி சந்திர கோஷ், அமிதவா ராய்.

ஆனால் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளான பினாகி சந்திர கோஷ், அமிதவா ராய் ஆகியோர், கர்நாடக அரசின் வாதுரைகளைக் கேட்பதற்குக் கூட மறுத்து மனுவை தள்ளுபடி செய்து விட்டனர். இதன் பொருள், உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி ஜெயா குற்றவாளி இல்லை என்பதுதான். எனவே அரசு அவருடைய சொத்துக்களை பறிமுதல் செய்யவோ அபராதத்தை வசூலிக்கவோ முடியாது என்று விளக்கமளிக்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

நாலும் மூணும் எட்டு என்று கணக்கு போட்டு ஜெயலலிதாவை விடுதலை செய்த நீதிபதி குமாரசாமியின் கணக்கையும் தீர்ப்பையும் பார்த்து நாடே கைகொட்டிச் சிரித்தது. மேல் முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றமோ 4+3= 0 என்று தீர்ப்பளித்து ஜெயாவை விடுவித்திருக்கிறது.

கொடநாடு, பையனூர் பங்களா, மிடாஸ் உள்ளிட்ட எந்த திருட்டுச் சொத்தும் பறிமுதல் செய்யப்படவில்லை. அனைத்தையும் மன்னார்குடி மாபியா கேட்பாரின்றி அனுபவித்துக் கொண்டிருக்கிறது. போயஸ் தோட்டத்தில் தினகரன் ஆட்சி. தனது தலைமையகத்தை தற்காலிகமாக பரப்பன அக்கிரகாராவுக்கு மாற்றியிருக்கிறார் சின்னம்மா.

-புதிய ஜனநாயகம், ஏப்ரல் 2017

திருவள்ளூர் – குடந்தையில் மூடப்பட்ட டாஸ்மாக் – மக்கள் அதிகாரம்

0

அனுப்பம்பட்டு டாஸ்மாக் கடை மக்கள் போராட்டாத்தால் மூடப்பட்டது !

திருவள்ளூர் அருகே உள்ளனுப்பம்பட்டு பஞ்சாயத்திற்கு உட்பட்ட கிராமத்தில் 10-ம் தேதி  அன்று அனுப்பம்பட்டு நெடுசாலையில் மூடிய டாஸ்மாக் கடையில் உள்ள சாராய பாட்டில்களை இரவோடு இரவாக வந்து இறக்கியது டாஸ்மாக் நிர்வாகம். இதை அறிந்த ஊர் மக்கள் 11-ம் தேதி காலையில் டாஸ்மாக் கடை முன்பு போராட்டத்தை தொடங்கினர். எங்கள் ஊரில் சாராய கடையை திறக்க கூடாது என போராட தொடங்கினர். இந்த போராட்டத்தை பற்றிய தகவல் அறிந்து மக்கள் அதிகாரம் தோழர்கள் அந்த பகுதிக்கு சென்று மக்களுடன் இணைந்து போராட தொடங்கினர்.

முதல் நாள் ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து  இந்த கடையை இங்கே திறக்க வேண்டாம் என மனு ஒன்றை தயாரித்து தாசில்தாரிடம் கொடுத்தனர். இது குடியிருப்பு பகுதி, மக்கள் செல்லும் வழி, பள்ளிக்கூடம் 100 மீட்டருக்குள்  இருக்கிறது. பெண்கள் இந்த வழியாகத்தான் ஊருக்குள் சென்று வருகிறார்கள் அதனால் எங்களுக்கு பாதிப்பு உள்ளது என மக்கள் மனுவில் எழுதியிருந்தனர். தாசில்தார், மறுநாள் நேரில் வந்து பார்த்து முடிவு சொல்வதாக கூறினார். ஆனால் நேரில் வந்து பார்க்கவில்லை.

அந்த கடை அனுப்பம்பட்டு ஊராட்சி தலைவருடைய இடத்தில் தான் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர் பக்கத்தில் உள்ள கிராமங்களுக்கு சென்று யாரும் போராட்டத்திற்கு போக கூடாது என இரண்டாவது நாள் ஆள் வைத்து மிரட்டியுள்ளார். டாஸ்மாக் வைக்க இருக்கும் கந்தம்பாளையம் கிராம மக்கள் ஊராட்சி தலைவர் மிரட்டிகிறார் என்ன செய்வது என அச்சப்பட்டனர். எல்லா இடங்களிலும் இப்படிப்பட்ட ஆட்கள் இருக்கதான் செய்வார்கள் நாம் இவர்களை மீறி தான் போராட வேண்டும் என மக்கள் அதிகாரம் தோழர்கள் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தனர்.

அனுப்பம்பட்டு ஊராட்சி தலைவர் சசிகலா அணியை சேர்ந்தவர். கந்தம்பாளையம் நாலூர் ஊராட்சி தலைவர் ஓபிஎஸ் அணியை சேர்ந்தவர். போராடும் மக்களை போலிஸ் நிலையத்தில் உங்கள்  ஊராட்சி தலைவரின் மீது புகார் கொடுங்கள் என பேசியுள்ளார். போலிசிடம் புகார் கொடுத்து ஒன்றும் செய்ய முடியாது என்பதை விளக்கிய பேசிய பிறகு மக்கள் நாம் சொல்வதை ஏற்று கொண்டனர். போலிசிடம் போக தேவையில்லை நாங்கள் போராடுகிறோம். யாருக்கு இந்த கடையை மூட அதிகாரம் இருக்கிறதோ அவர்களை வர சொல்லுங்கள் என மக்கள் உறுதியாக கூறிவிட்டு போராட்டத்தை தொடர்ந்தனர்.

அன்று மாலை நான்கு மணி வரை வருவதாக சொன்ன தாசில்தார் வரவில்லை. போலிசோ உங்களுடைய பாதுகாப்பிற்கு நாங்கள் வரவில்லை. கடையின் பாதிகாப்பிற்கு தான் நாங்கள் வந்துள்ளோம் என சொல்கிறார்கள் என மக்கள் தங்களுக்குள் பேசி ஆவேசப்பட்டனர். இவர்களுடைய நோக்கம் எப்படியாவது கடையை நடத்த வேண்டும் என்பது தான்  போலிஸ், தாசில்தார் எல்லாம் கூட்டு களவாணிகள் தான் என்பதை மக்கள் மத்தியில் விளக்கினோம். இப்படி பேசி கொண்டிருக்கும் போதே வருவாய் துறை அதிகாரி வந்து என்ன நடக்கிறது என்று நோட்டம் பார்க்க வந்திருந்தார். வந்தவர் மக்களிடம் ஒன்றும் பேசவில்லை.

சும்மா நின்று பார்த்து கொண்டிருந்தார். போலிஸிடம் தான் பேசிக் கொண்டிருந்தார். ஆனால் மக்கள் அவரிடம் சென்று மேடம் பாருங்க இங்கு கடை வந்தால் எங்கள் பிள்ளைகள் பள்ளிக்கூடம் போக முடியாது என்று முறையிட்டனர். என்னிடம் அதிகாரம் இல்லை, உடனே முடிவு செய்ய முடியாது என்றார். மேல் அதிகாரிகள் தான் முடிவு செய்ய முடியும் என்றார். மேலே மேலே என்றால் யாரு? உங்கள் வீட்டின் பக்கத்தில் இப்படி டாஸ்மாக் கடையிருந்தால் நீங்கள் சும்மா இருப்பீர்களா? இப்படி பேசுவீர்களா? என கேள்விக்கு மேல் கேள்வி கேட்டனர். உடனே அவர் கிளம்பிவிட்டார். கடையை இன்று திறக்கமாட்டார்கள் என சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

இரண்டாவது நாள் – நம் ஊர் மக்கள் மட்டும் போராடினால் வெல்ல முடியாது. பக்கத்தில் உள்ள ஊர் மக்களை இணைத்து கொண்டு போராடினால் தான் கடையை மூட முடியும் என மக்களிடம் கூறினோம். மக்கள் ஏற்று கொண்டனர். கந்தன்பாளையம் ஊரில் உள்ள பெண்கள், ஆண்கள், பள்ளி மாணவர்கள் என மொத்தம் 30 பேர் பக்கத்துக்கு கிராமமான ராஜபாளையம் கிராமத்திற்கு சென்று அங்குள்ள மக்களை அணிதிரட்டினர். பின்பு ராஜபாளையம் ஊர் மக்களுக்கும் அவர்களுடன் இணைந்து கொண்டனர். பின்பு இரண்டு ஊர் மக்களும் சேர்ந்து கொண்டு அடுத்த ஊரான ஏரிமேடு கிராமத்திற்கு சென்றனர்.

அடுத்த நாள் மூன்று ஊர்களிலும் மக்கள் அதிகாரம் போஸ்டர் ஒட்டப்பட்டது. மூன்று ஊர் மக்களும் சேர்ந்து மொத்தம் 200 பேர்கள் அடுத்த நாள் போராட்டத்தில் இறங்கினர். டாஸ்மாக் கடைக்கு பக்கத்தில் ஒட்டியிருந்த போஸ்டர்களை போலிசு கிழித்துவிட்டனர். மூன்றாவது நாள் போராட்டத்தின் போது பொன்னேரி டி.எஸ்.பி நேரில் வந்தார். நீங்கள் செய்யும் போராட்டங்களை நாங்கள் கோட்டாச்சியர், கலெக்டருக்கு அனுப்பி கொண்டுதான் இருக்கிறோம் என்று போனில் அனுப்பிய செய்தியை காட்டி மக்களை படிக்க சொன்னார். மக்களும் படித்தனர். வன்முறையெல்லாம் செய்ய கூடாது. யாருடைய பேச்சை கேட்டோ இப்படி செய்கிறீர்கள் என்று கூறினார். உடனே இது எங்கள் பிரச்சனை யாரை பேச்சையும் கேட்டு நாங்கள் போராடவில்லை. மூன்று நாட்களாக போராடிக்கொண்டிருக்கிறோம் இதற்கு ஒரு பதில் சொல்லுங்கள் என மக்கள் கூறினர். அமைதியாக போராடுங்கள் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

மக்கள் அங்கேயே உணவு சமைத்து சாப்பிட ஆரம்பித்தனர். மதியம் 1 மணி பிறகும் எந்த அதிகாரியும் வரவில்லை. தொடர்ச்சியாக இப்படி எங்களால் போராடிக் கொண்டேயிருக்க முடியாது. ஒரு முடிவு சொல்லுங்கள், 2 மணி வரை கெடு என்று போலிசிடம் மக்கள் அறிவித்தனர். அப்படி வரவில்லை என்றால் நாங்கள் பார்த்து கொள்கிறோம் என்றனர். உடனே போலிசு போனில் பேசினார். பொன்னேரியில் இருக்கும் கோட்டாச்சியர் அலுவலகத்திற்கு பேச்சு வார்த்தைக்கு வாருங்கள் என கூறினார். ஆண்கள் மட்டும் போவதாக இருந்தது. பெண்கள் பத்து பேர்கள் போக வேண்டும் என பேசி முடிவு எடுக்கப்பட்டது. இவர்கள் அலுவலகத்திற்கு சென்ற நேரத்தில் தாசில்தார் போராடும் இடத்திற்கு வந்தார். வந்து மக்களிடம் பேசவில்லை. போலிசிடம் மட்டும் பேசிவிட்டு சென்று விட்டார். போலிசுக்காரர்கள் வெறும் 30 வீடுகள் தான் இருக்கிறது ஒரு பிரச்சனையும் இல்லை என கூறினார்கள். அதை கேட்டு விட்டு சென்றுவிட்டார். உடனே பெண்கள் போலிசை சுற்றி வளைத்து உங்களுக்கு தெரியுமா? எந்த பிரச்சனையும் இல்லையென்று சொல்கிறீர்கள், உங்கள் வீட்டின் பக்கத்தில் டாஸ்மாக் இருந்தால் இப்படி சொல்வீர்களா? என சரமாரியாக கேள்வி கேட்டனர். உடனே அந்த இடத்தை விட்டு போலீசுக்காரர்கள் நகர்ந்துவிட்டனர்.

மக்கள் போராட்டத்தால் மூடப்பட்ட டாஸ்மாக் கடை
மக்கள் போராட்டத்தால் மூடப்பட்ட டாஸ்மாக் கடை

இந்த தாசில்தார் தான் கோட்டாச்சியர் அலுவலகத்தில் மக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டுள்ளார். இந்த கடையை மூடினால் கள்ள சாராயம் வந்து விடம் பரவாயில்லையா? என்று கேட்டுள்ளார். மக்கள் பாதிப்புகளை எடுத்து கூறி கடையை மூடுங்கள். கள்ள சாராயம் வந்தால் நாங்கள் பார்த்து கொள்ளுகிறோம் என்றனர்.  ஏற்கனவே நாங்கள் மனு கொடுத்துள்ளோம் என அந்த மனுவையும் சேர்த்து காட்டியுள்ளனர். கடையை திறக்க மாட்டோம் என்று உறுதி கூறிய பிறகே மக்கள் வந்தனர்.

இங்கு கடையை திறக்க விடமாட்டார்கள் என்று உணர்ந்த அதிகாரிகள் உடனே வருவாய் துறை அதிகாரி அனுப்பி கடையை பூட்டு போட்டு, நோட்டீஸ் ஒட்டினர். மறுபடியும் திறந்தால் போராட்டம் தொடரும் என கூறி மக்கள் கலைந்தனர். மக்களின் போராட்டம் வென்றது. இவர்களிடம் கெஞ்சி ஒரு பயனுமில்லை. உறுதியான போராட்டமே ஒரே தீர்வு என்பதை மக்கள் நடைமுறையில் கற்று கொண்டனர்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
சென்னை மண்டலம்.


சுந்தர பெருமாள் கோவில் :

நீதிமன்ற உத்தரவுன் படி குடந்தை – தஞ்சாவூர் செல்லும் நெடுஞ்சாலையில் மூடப்பட்ட டாஸ்மாக் கடையை சுந்தர பெருமாள் கோவில் அருகிலுள்ள சுடுகாட்டின் அருகிலேயே டாஸ்மாக் கட்ட இடம் பார்க்கப்பட்டுள்ளது. அதற்கான பூஜையும் நடத்தப்பட்டுள்ளது. இந்த தகவல் அறிந்த சுந்தர பெருமாள் கோவில் இளைஞர்கள் மக்கள் அதிகாரம் தோழர்களை தொடர்பு கொண்டுள்ளனர்.

மக்கள் அதிகாரம் தோழர்களும் களநிலையை அறிந்து 10.04.2017 கடந்த திங்கள் கிழமை அன்று சில மணிநேரங்களில் மக்களிடம் இந்த தகவலை கொண்டு சென்று அப்பகுதி உழைக்கும் மக்களை அணிதிரட்டினர். தோழர் சங்கத்தமிழன் தலைமையில் இளைஞர்கள்,பெண்கள்,குழந்தைகள், வயதானவர்கள் என 70-க்கு மேற்ப்பட்டோர் திங்கள் கிழமை காலை சாலை மறியல் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்தை அறிந்து வந்த அதிகாரிகள் டாஸ்மாக் வரவே இல்லை. இப்போது ஏன் போராடுகிறீர்கள்…? என்று கேட்ட போது போராட்டத்தில் இருந்த பெண் ஒருவர் காவல்துறை அதிகாரியை பார்த்து அப்போ டாஸ்மாக் வந்த பிறகு போராடினால் மூடி விடுவீர்களா…? என சரியான பதிலடி கொடுத்தார்.

இவ்வாறு சமரசத்திற்கு பணியாது மக்கள் எங்கள் பகுதில் டாஸ்மாக் கடையை திறக்க விட மாட்டோம். அப்படி மீறி டாஸ்மாக்கை திறந்தால் கடையை கொளுத்துவோம் என்று எச்சரிக்கை விடுத்தனர்.  சில பெண்கள் எங்கள் உயிரே போனாலும் சரி டாஸ்மாக் கடையை வைக்க விடமாட்டோம் என உறுதியாக போராட்டத்தில் முன் நின்றனர். மக்களின் இந்த நெஞ்சுரத்தை கண்ட அதிகாரிகள் உடனடியாக பின் வாங்கினர்.

எழுத்து பூர்வமாக இங்கு டாஸ்மாக் கடை திறக்கப்படாது என உறுதி அளித்ததைத் தொடர்ந்து, மூன்று மணிநேர சாலை மறியல் போரட்டத்தை விட்டு மக்கள் கலைந்து சென்றனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

கொராநாட்டு கருப்பூர் :

கொராநாட்டு கருப்பூர் நெடுஞ்சாலையில் நீதிமன்ற உத்தரவுன் படி மூடப்பட்ட டாஸ்மாக் கடையை கொரநாட்டு கருப்பூர் அருகிலுள்ள புளியந்தோப்பு பகுதியில் அமைக்க கடந்த 11.04.2017 செவ்வாய்கிழமை அன்று மாலை அங்கு செங்கள் இறக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அறிந்த கருப்பூர் பகுதி புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணித் தோழர்கள், மக்கள் மத்தியில் இதனை அறிவித்து பிரச்சாரம் மேற்கொண்டனர்.

இதனை அறிந்து கிராமமக்கள் தங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை வருவதைத் தடுக்க களமிறங்கினர். அதைத் தொடர்ந்து குடந்தை – சென்னை நெடுஞ்சாலையில் நூற்றுக்கணக்கான பெண்கள், சிறுவர்கள் என சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தை பு.மா.இ.மு தோழர்கள் தலைமை தாங்கினர்.

அதன் பிறகு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் வந்து சமர முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் மக்கள் அதற்குப் பணியாமல் போராட்டத்தினைத் தொடர்ந்தனர். அதன் பின்னர் வேறு வழியில்லாமல் அதிகாரிகள் கடை வைக்க மாட்டோம் என உறுதியளித்தனர். எழுத்து பூர்வமாக அறிவித்த பின்னரே மக்கள் கலைந்து சென்றனர். இதனால் சுமார் இரண்டு மணி நேரம் சென்னை – குடந்தை சாலை முடங்கியது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல்:
மக்கள் அதிகாரம்,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,

குடந்தை – 97902 15184.

மூடு டாஸ்மாக்கை ! போர்க்களமானது திருச்சி !

1

பொன்மலை கணேசபுரம் :

ச்சநீதிமன்ற தீர்ப்பின் படி தேசிய நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் கடைகள் இருக்கக் கூடாது என அறிவிப்பு வந்தவுடன் அக்கடைகளை உடனடியாக மக்கள் குடியிருப்பு பகுதிகளில் அதிக வாடகை கொடுத்து வைக்க தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டுவருகிறது.

தமிழகம் முழுவதும் பொதுமக்கள் கடைகளை முற்றுகையிட்டும்,உடைத்தும் வருகின்றனர். பொதுமக்களின் போராட்டங்களை இந்த அரசால் காவல்துறை கொண்டு ஒடுக்க முடியாமல் அம்பலப்பட்டு வருகின்றது. இந்நிலையில் திருச்சி பொன்மலை கணேசபுரம் பிரதான சாலையில் இருந்த டாஸ்மாக் கடையை அகற்றி மக்கள் குடியிருப்பு பகுதியான மிலிட்டரி காலனி பகுதியில் அரசு டாஸ்மாக் அதிகாரிகள் அக்கடையை திறப்பதற்கு அப்பகுதியில் ஒரு கடையை பிடித்து ஒருவாரத்திற்கு முன்பே கிரில் ஒர்க்ஸ் என பெயர் பலகை வைத்திருந்ததால் மக்கள் அதை பொருட்படுத்தவில்லை. ஆனால் திடீரென அந்த பெயர் பலகையை நீக்கிவிட்டு டாஸ்மாக் கடை என பெயர் பலகை வைத்து விற்பனையை தொடங்கினார்கள்.

பொன்மலையில் புதிதாக அமைக்கப்படவுள்ள டாஸ்மாக் சாராயக் கடை

இதனால் அப்பகுதியில் வெளியிலிருந்து அதிகமான குடிகாரர்கள் வரத்தொடங்கினர்.அவர்கள் குடி போதையில் பள்ளிக்கு செல்லும் மாணவிகளை கேலி செய்வது,மிரட்டுவது,வீடுகளுக்குள் புகுந்து படுத்து கொள்வது என அவர்களது தொல்லை சில நாட்களிலேயே மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியது. அப்பகுதி மக்கள் அனைவரும் அக்கடையை முற்றுகையிட்டு போராடினர். உடனே காவல்துறை அவர்களை சமாதானப்படுத்தி ஆட்சியரிடம் மனு கொடுங்கள் அதை விடுத்து முற்றுகை செய்யக்கூடாது என கூறி அம்மக்களை கலைத்தனர். அன்றைக்கே (07.04.2017)  ஆட்சியரிடம் மனு கொடுத்து காத்திருந்தனர்.

08.04.2017 அன்று அதே கடையை திறப்பதற்கு டாஸ்மாக் நிர்வாகம் முடிவுசெய்து அதிக அளவில் காவல் துறையினரை குவித்தது. காவல் துறையினர் அருகில் இருந்த கடைகளை மூடச்சொன்னார்கள் காவல்துறையினர். சாலையில் சென்று கொண்டிருந்தவர்களை துரத்திவிட்டனர். இதனால் அப்பகுதியினர்,  மக்கள் அதிகாரத்தை தொடர்பு கொண்டு உடனடியாக அப்பகுதிக்கு வரச்சொன்னார்கள்.சி.பி.எம்.,வி.சி.க.,ஆதித் தமிழர் பேரவை ஆகிய கட்சிகளை மக்கள் அதிகாரம் சார்பில்  ஒருங்கிணைத்து கடை திறப்பதற்கு முன்பே அப்பகுதி மக்களிடையே பறையடித்து பிரச்சாரம்  செய்து அனைவரையும் கடைக்கு முன் ஒன்று திரட்டினோம்.

பிறகு CPM கட்சிக்காரர் ஒருவர் வாயில் துணிகட்டி,மாலை அணிந்து கொண்டு பிணமாக நடித்தார். அவரை சுற்றி பெண்கள் ஒப்பாரி வைத்து தங்களது எதிர்பை அரசுக்கு தெரிவித்தனர். நாம் ஊருக்கூரு சாராயம்,மூடு டாஸ்மாக்கை மூடு பாடல்களை மக்கள் முன் பாடினோம் மக்கள் மிகுந்த வரவேற்பு தந்தனர். மேலும் முழக்கங்களிட்டுக்கொண்டே மக்களுடன் அதிகாரிகள் கடையை திறக்க விடாமல் முற்றுகையிட்டோம். கடை திறக்க வந்த டாஸ்மாக் அதிகாரிகள்,ஊழியர்களை மக்கள்  திட்டி அனுப்பினார்கள். பிறகு காவல் ஆய்வாளர் நம்மிடையே பேசியும் நாம் ஏற்றுக் கொள்ளவில்லை. மாவட்ட ஆட்சியரின் உதவி ஆணையர் வந்து மக்களிடையே பேசினார். அவரிடம் டாஸ்மாக் கடையால் என்ன என்ன பாதிப்புகளை நாங்கள் தினமும் சந்தித்துக் கொண்டிருக்கிறோம் என மக்கள் விவரித்தனர்.

இதைக்கேட்ட அதிகாரி அனைவரும் கலைந்து செல்லுங்கள் இங்கு இனி டாஸ்மாக் கடை வராது நான் பார்த்து கொள்கிறேன் என உத்திரவாதம் கொடுத்ததின் அடிப்படையில் நாம் மற்ற கட்சிகளிடம் விவாதித்ததில் அவர்கள் இப்போது கலைந்து செல்லலாம் கடையை திறக்க அரசு முற்பட்டால் அதை மக்களை கொண்டு அடித்து நொறுக்கிவிடலாம் என முடிவெடுக்கப்பட்டது. தோழர்களுக்கு எங்கள் பகுதி சார்பாக நன்றி என மக்கள் மனதார கூறினர். அப்பகுதி மக்கள் தற்போதுவரை கடைக்கு முன் காவல் காத்து வருகின்றனர். விரைவில் கடை அப்புறப்படுத்தப்படும் என்ற நம்மீதான நம்பிக்கையில்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

உறையூர் பேருந்து நிறுத்தம் :

திருச்சி உறையூர் சாலையில் மக்கள் அதிகமாக புழங்கும் பகுதி இவ்விடத்தில் பேருந்து நிறுத்தத்தின் அருகிலேயே  டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இக்கடையில் காலை 6:00 மணி முதலே மது பாட்டில்கள் கள்ளத்தனமாக பார்களில் வைத்து விற்க்கப்படுவதால் அப்பகுதியில் குடிகாரர்களால் மக்களுக்கு தொடர்ந்து மிகுந்த அச்சுறுத்தல்கள் ஏற்பட்டு வருகின்றது. சில மாதங்களுக்கு முன்பு கடைக்கு முன் கள்ளத்தனமாக மது பாட்டில்களை விற்றுக்கொண்டிருந்தவர்களை மக்கள் கலை இலக்கியக் கழகத் தோழர்கள் பிடித்து மது பாட்டில்களை உடைத்து அரசையும்,காவல் துறையினரையும்  மக்களிடையே அம்பலப்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

திருச்சி உறையூர் பகுதி டாஸ்மாக் கடையில் திருட்டுத் தனமாக நடத்தப்பட்ட சாராய விற்பனையை எதிர்த்து கடந்த 01-08-2016 அன்று நடந்த போராட்டம் (கோப்புப் படம்)

இந்நிலையில் அதே கடையில் காவல்துறையின் முழு பாதுகாப்போடு அ.தி.மு.க உள்ளூர் கட்சிக்காரர்கள் டாஸ்மாக் பாரில் காண்ட்டிராக்ட் எடுத்து தைரியமாக 24 மணிநேரமும் மது பாட்டில்களை விற்று வந்தனர்.90 ரூபாய்க்கு விற்க வேண்டிய பாட்டிலை 130 ரூபாய்க்கு கள்ளத்தனமாக பாரில் வைத்து விற்று வந்தனர். இதனை தடுக்க மக்கள் அதிகார தோழர்கள் 13.04.2017  அன்று காலை 11:00 மணியளவில் டாஸ்மாக் பாரின் உள்ளே நுழைந்து அங்கு குடித்து கொண்டிருந்த குடிகாரர்களை விரட்டி விட்டு அங்கு குப்பை தொட்டிக்குள் வைத்து விற்றுக்கொண்டிருந்த மது பாட்டில்களை கைப்பற்றி உடைத்தெரிந்தனர்.

இந்நிகழ்வினை நியூஸ் 7 தொலைகாட்சி நேரடியாக ஒளிபரப்பியது. பிறகு வெளியே வந்து பாட்டில்களை உடைத்து பார் நடத்திவரும் அதிமுக கைக்கூலிகளையும் அவர்களுக்கு துணை நிற்கும் காவல்துறையினரையும் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினோம். இந்நிகழ்வினை மக்கள் அதிகமாக நின்று பார்த்துக்கொண்டிருந்தனர். போராட்டத்திற்க்கு வாழ்த்து கூறியதுடன்  தங்களது கருத்துக்களை நம்மிடையே பகிர்ந்து கொண்டனர். இது போன்ற போராட்டங்களில் அதிகப்படியான மக்கள் கலந்து கொள்ளும் போது டாஸ்மாக் கடைகள் முற்றிலும் இல்லாமல் செய்ய முடியும் என மக்களிடம் அறைகூவல் விடுத்தோம்.

குழுமணி சாலை அரவானூர் பகுதி :

திருச்சி சத்திரம் பேருந்து அண்ணாசிலை அருகே எடுக்கப்பட்ட டாஸ்மாக் கடையை  குழுமணி சாலையில் உள்ள அரவானூர் கிராமபகுதிக்கு செல்லும் வழியில் ஒரு கடையை வாடகைக்கு எடுத்து இன்று 14.04.2017 காலை 12:00 மணிக்கு கடையை திறக்க முற்ப்பட்டபோது. அரவானூர் கிராம மக்கள் மற்றும் மக்கள் அதிகார தோழர்கள் இணைந்து கடையின் முன் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். இதில் பெண்கள் போர்க்குணத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரவானூர் கிராமபகுதிக்கு செல்லும் வழியில் அமையவுள்ள டாஸ்மாக் கடை

கடையில் உள்ளே வைத்திருக்கும் மது பாட்டில்களை உடனடியாக அப்புறப்படுத்தவேண்டும். டாஸ்மாக் கடையை இப்பகுதியில் வைக்கக்கூடாது என அதிகாரிகளிடமும், காவல்துறையினரிடமும் மக்கள் முறையிட்டனர். காவல்துறையினர் காலம் தாழ்த்தி மக்களை கலைத்து டாஸ்மாக் அதிகாரிகளை வைத்து இன்றே கடையை திறந்து விடலாம் என யோசித்துக் கொண்டிருக்கையில் நாம் முழக்கமிட்டவாரே கடையை நோக்கி முற்றுகையிட ஆரம்பித்த பின்னர் தான் காவல்துறையினர் மக்களிடம் ½ மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதில் மக்கள் இரவு 10:00 மணிக்கு மேல் பேருந்துகள் அப்பகுதியில் இயங்காததால் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என அனைவரும் நடந்தே வீட்டிற்க்கு செல்கிறார்கள் இந்த அரவானூர் செல்லும் சாலை பகுதியில் இயல்பாகவே வெளியில் இருந்து மது பாட்டில்கள் வாங்கி  குடித்து விட்டு கொலை,கொள்ளைகள் நடந்துள்ளது இன்று வரை எவரையும் காவல்துறையினர் பிடிக்கவில்லை,.

இந்நிலையில் இங்கே டாஸ்மாக் கடையை திறந்தால் என்ன வெல்லாம் நடக்கும் என திருவரங்கம் AC ஸ்ரீதரிடம் மக்கள் முறையிட டாஸ்மாக் அதிகாரிகளை உடனே அனுப்பிவிடுவதாகவும், மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகளிடம் பேசி திங்கள் கிழமை காலை இக்கடையில் உள்ள மது பாட்டில்களை இங்கிருந்து அப்புறப்படுத்தி விடுகிறேன். இனி இங்கு டாஸ்மாக் கடை இயங்காது நடக்காவிடில் நீங்கள் போராட்டத்தை தொடருங்கள் என மக்களிடையே உத்திரவாதம் கொடுத்ததன் அடிப்படையில் கடையை திறந்தால் நாங்களே அடித்து நொருக்குவோம் என மக்கள் காவல்துறையினரிடமும், டாஸ்மாக் அதிகாரிகளிடையே எச்சரித்து விட்டு கலைந்து சென்றனர். திங்கள்கிழமை நம்மையும் கட்டாயம் வருமாறு கோரியுள்ளனர்.

இத்தொடர் போராட்டங்களில் மக்கள் அதிகாரம் முன் நின்று செயல்படுவதால் மக்களை கலைக்க முடியாமலும், டாஸ்மாக் கடைகளை பகுதிக்குள் வைக்க முடியாமலும் திருச்சி காவல்துறையினர் திணறிவருகின்றனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருச்சி.


கோவை – சோமனூர் பகுதி :

கோவை-சோமனூரை ஒட்டியுள்ள திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தில் செவ்வாயன்று (11-04-2017) புதிதாக டாஸ்மாக் கடையை திறக்க முயற்சித்ததை எதிர்த்து ஏற்கனவே பல வருடங்களாக இதே பகுதியில் இருந்த இரண்டு டாஸ்மாக் சாராயக் கடைகளாலும் சொந்தவாழ்வில் பல துயரங்களை அனுபவித்த பெண்கள் ஒன்று திரண்டு நின்றனர். அவ்வழியே வந்த அவிநாசி தொகுதி MLA வை நிறுத்தி டாஸ்மாக் கடை வருவதை தடுத்து நிறுத்துமாறும் அதற்கான உத்திரவாதம் தருமாறும் உரிமையோடு பேசிய மக்களை சமாளித்து வெளியேறி சென்ற, சிறிது நேரத்தில் திருப்பூர் ADSP பாண்டியராஜன் அங்கு விரைந்து வந்து அமைதியாக போராடிக்கொண்டிருந்த பெண்களை ஏற்கனவே நின்று கொண்டிருந்த போலீசை ஏவி வெறி கொண்டவனை போல் தானே பெண்களை நேரடியாக தாக்கி விரட்டியுள்ளார்.

அதோடல்லாமல் காக்கி ரௌடிகள், அங்கிருந்த ஆண்களையும் தாக்கி மண்டையை உடைத்துள்ளனர் இதில் சாமளாபுரம் பகுதியே கலவரமானது மறுநாள் (12-04-2017) புதன் அதிகாலை 3 மணிக்கு வீடுவீடாக சென்று ஆண்கள் பெண்கள் என 22 பேரை பிடித்து பல்லடம் ரைஸ் மில்லில் அடைத்துள்ளனர். அதில் ஆண்கள் 7 பேரை கோவை மத்திய சிறைசாலையில் பொய் வழக்கு தொடுத்து அடைத்துள்ளனர். எஞ்சிய 20 பேரையும் சட்ட விரோதமாக ரைஸ் மில்லிலேயே அடைத்து வைத்ததோடு குடும்பத்தினர் உட்பட யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை.

இதை கண்டித்து சாமளாபுரம் முழுவதும் கடையடைப்பு செய்து போராடும் நிலையில் யாரையும் வெளியில் ஒன்று சேர விடாமல் அந்த பகுதி முழுவதும் போலிசு குவிக்கப்பட்டது. ஊரின் மையத்தில் உள்ள ஒரு பெரிய வீட்டில் ஒன்று கூடிய மக்களை அங்கிருந்து வெளியே வரவிடாமல் அந்த வீட்டு வாசலின் முன்பு போலிசு வேன்-களை நிறுத்தி அச்சுறுத்தினர். இந்த சூழலில் கோவையை சேர்ந்த திரைப்பட நடிகர் ரஞ்சித் அவ்வீட்டிற்கு வந்து பெண்களுக்கு நடுவே அமர்ந்து சினிமா பாணியிலான பேட்டி கொடுத்து கொண்டு இருந்தார். இதனால் அங்கு வந்த பா.ம.க., தி.மு.க போன்ற அரசியல் கட்சி பிரமுகர்களை கூட மக்கள் கண்டுகொள்ளவில்லை. மக்கள் அதிகார தோழர்கள் காலையிலேயே அந்த பகுதிக்கு சென்று விவரங்களை கேட்டறிந்து மூடு டாஸ்மாக்கை எனும் நமது நீண்ட நெடிய போராட்டம் மற்றும் அதன் விளைவுகள் பற்றி எடுத்து கூறும் பொழுது அத்தகைய செய்தி மற்றும் நிகழ்வுகளை அறிந்து இருந்த சிலர்  நடந்த சம்பவங்களை கூடுதலாக கூறினர்.

மூடு டாஸ்மாக்கை”போதையும் போலிசும் ஒழிக” மற்றும் “போலிசு ராஜ்ஜியம்” போன்ற துண்டறிக்கைகள் நூற்றுகணக்கில் கூடி இருந்தோரிடம் விநியோகிக்கப்பட்டது. டாஸ்மாக்கு எதிரான ம.க.இ.க கோவன் பாடல் சி.டி.-களையும் காண்பித்து பேசி அப்பகுதயில் “குடிவெறி கொண்டு அரசே ஆடுகிறது”  தற்போதைய சுவரொட்டிகளையும் ஒட்டினோம்.

வியாழன் 13-04-2017 அன்று மாலை 5.30 மணிக்கு கோவை காந்திபுரம் நகர பேருந்து நிலையம் முன்பாக தடையை மீறி சாமளாபுரம் மக்கள் மீதான போலிசு தாக்குதலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்பாட்டத்திற்கு முன்னதாகவே போலிசுக்கு தகவல் கொடுத்து அனுமதி கேட்கப்பட்டது அவர்கள் வழக்கம் போல தெற்கு வட்டசியர் அலுவலக இடத்தில் நடத்திக்கொள்ள கூறினர்.

நாம் அதை மறுத்து மக்கள் கூடும் இடமாகிய கோவை நகரின் மையமான காந்திபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டோம் அவர்கள் மறுத்ததால், மறுப்பை மீறி மக்கள் அதிகார சீருடை அணிந்து ப்ளெக்ஸ் பதாகைகள் மற்றும் கொடிகள் பிடித்து மிதமாக விழுந்த மழையிலும், முழக்கங்கள் உயர போலிசு தடுப்புகளையும் மீறி எண்ணற்ற மக்கள் பார்வையில் அரைமணி நேரத்திற்கும் மேலாக நகர பேருந்து நிலையர்திற்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை பகுதி ஒருங்கிணைப்பாளர் மூர்த்தி கண்டன ஆர்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார். மேலும் ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மாக்குக்கு எதிராக போராடிய மக்களை தாக்கிய ADSP பாண்டியராஜனை டிஸ்மிஸ் செய்! கைது செய்!! மக்கள் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறு!!! என்ற முழக்கங்கள் முழங்கப்பட்டன்.

இதை பொறுத்துக் கொள்ள முடியாத போலீசு தோழர்களை கைது செய்தது. டாஸ்மாக்குக்கு எதிராகவும் ADSP க்கு எதிராகவும் கொடுக்கப்பட்ட முழக்கங்கள் மக்களை திரும்பி பார்க்க செய்தது. குழந்தைகள் பெண்கள் உட்பட 22 பேர் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் வைக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு விடுவிக்கப்பட்டனர். இதற்கிடையே மண்டபத்தில் தோழர்கள் சுற்றி அமர்ந்து ஆர்பாட்டத்தின் அவசியம் குறித்து கூடுதலான விவரங்களையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர். போலிசோ ஆதாரங்களுக்காக ப்ளெக்சையும் முழக்க அட்டையையும் வாங்கி சுமந்து சென்றனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
கோவை

மனித மணற்கடிகாரம் – கேலிச்சித்திரங்கள்

0

ஆப்பிரிக்காவின் மனித மணற்கடிகாரம்!
ஓவியம்: ஃபாதி அபு ஹசன்- Fadi Abou Hassan-FadiToOn, நார்வே.

இந்த பேச்சுவார்த்தையின் பெயர் – பொருளாதார நீதி
ஓவியம்: பாவல் கான்ஸ்டானின் – Pavel Constantin, ரூமேனியா.

பொருளாதார நிறவெறி
ஓவியம்: நாயெர் தலால் – Nayer Talal Nayer, எத்தியோப்பியா.

விருப்பங்களைப் பெற்று என்ன செய்வது?
ஓவியம்: ரால் ஃபெர்ணான்டோ சுலெட்டா – Raul Fernando Zuleta, கொலம்பியா.

வரைபடத்திலாவது தேறுமா? வறுமையின் நெருக்கடி
ஓவியம்: ஆல்ஃபெரடோ மார்ட்டிரீனா – Alfredo Martirena, கியூபா.

 

விரும்பியதை நுகரும் முதல் உலகம் – அத்தியாவசியத்திற்கும் அல்லப்படும் மூன்றாம் உலகம்.
ஓவியம்: ராம்செஸ் மொராலெஸ் – Ramses Morales Izquierdo, கியூபா.

அநீதியான விதிமுறைகள் – வேலையிழந்த மக்களுக்கு சிக்கனம் – திவாலான வங்கிகளுக்கு நிதியுதவி!
ஓவியம்: ஆன்னி தெரன் – Anne Derenne, பிரான்ஸ்.

கிடைத்ததை பகிர்ந்துண்ணுவோம்!
ஓவியம்: மிகல் வில்லபா சான்செஸ் – Miguel Villalba Sánchez (Elchicotriste), ஸ்பெயின்.

நன்றி: Cartoon Movement.

டாஸ்மாக்கை மூடுவோம் – விவசாயிகளை ஆதரிப்போம் ! சென்னை ஐ.ஐ.டி மாணவர் போராட்டம்

0

ந்தியாவில் விவசாயிகள் தற்கொலை என்பது தொடர் நிகழ்வாகியுள்ளது. கடந்த சில பத்தாண்டுகளில் ஏறத்தாழ மூன்று லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாக அரசாங்க புள்ளி விவரங்களே தெரிவிக்கின்றன. இதிலிருந்து தமிழக விவசாயிகளும் தப்பவில்லை. கடந்த சில மாதங்களில் தமிழக விவசாயிகளின் தற்கொலைகள் எண்ணிக்கை 200-ஐயும் தாண்டிவிட்டது. மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளும் விவசாயத்தின் மீதான அவர்களின் அலட்சியமுமே விவசாயிகளைத் தற்கொலையை நோக்கி தள்ளுகின்றன.

வறட்சி நிவாரணம் வேண்டும், வங்கிகளில் உள்ள விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 30 நாட்களுக்கும் மேலாக பலவிதமான போராட்டங்களை டெல்லியில் நடத்தி வருகின்றனர் தமிழக விவசாயிகள். ஆனால் மத்திய மாநில அரசுகளோ இவர்களைக் கண்டுகொள்ளவே இல்லை. மேலும் பி.ஜே.பி-யின் தமிழக பிரதிநிதிகளோ போராடும் விவசாயிகளைப் பற்றி பொய்களையும் அவதூறுகளையும் பரப்பியும் போராட்டத்தை ஆதரிப்பவர்களை தேசவிரோதிகளாக சித்தரித்தும் பிரச்சாரம் செய்கின்றனர்.

விவசாயிகளின் போராட்டத்தோடு கூடவே டாஸ்மாக்கிற்கு எதிரான போராட்டமும் தமிழகத்தில் வலுவடைந்துள்ளது. பல இடங்களில் உழைக்கும் மக்கள் தன்னியல்பாகவே டாஸ்மாக்கை மூடவேண்டும் என்று போராடி வருகின்றனர். ஆனால் அ.தி.மு.க அரசோ போராடும் மக்களை காட்டுமிராண்டித்தனமாக தாக்குகிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சாராயக் கடைகளை மூடவேண்டும் என உச்சநீதிமன்றம் கூறிய அடுத்த நாளே சாராய முதலாளிகளை சந்திக்கும் மோடி முப்பது நாட்களுக்கும் மேலாக போராடிவரும் விவசாயிகளை சந்திக்க மறுக்கிறார். கார்ப்பரேட் நிறுவனங்களின் பல லட்சம் கோடி கடன்களை தள்ளுபடி செய்யும் மோடி அரசு சில ஆயிரம் கோடி விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய மறுக்கிறது. இப்படி பெரும்பான்மையான மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளையே மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து செய்துவருகின்றன.

தங்களின் வாழ்வுரிமைக்காகப் போராடி வரும் விவசாயிகளின் போராட்டத்தை ஆதரித்தும் சாராயக் கடைகளை(டாஸ்மாக்) மூடவேண்டும் என்ற உழைக்கும் மக்களின் போராட்டத்தை ஆதரித்தும் சென்னை ஐ.ஐ.டி. மாணவர்கள் ஏப்ரல் 15 2017 அன்று ஐ.ஐ.டி. வளாகத்திற்குள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது.

தகவல் :
சென்னை ஐ.ஐ.டி மாணவர்கள்


டெல்லியில் போராடும் விவசாயிகளை ஆதரித்து காஞ்சிபுரத்தில் தெருமுனைப் பிரச்சாரம் !

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி காஞ்சிபுரம் மாவட்டத்தின் சார்பாக 15.04.2017 அன்று, டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளை ஆதரித்து காஞ்சிபுர மாவட்டத் தலைநகரில் பேருந்து நிலையம் வணிகர் வீதி, தாலுகா அலுவலகம் எதிரில் மற்றும் வெம்பாக்கம் ஆகிய இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் செய்யப்பட்டது. இந்த தெருமுனை பிரச்சாரத்திற்கு காஞ்சிபுர மாவட்டத் தலைவர் தோழர் சரவணன் தலைமை தாங்கினார். இதனை பல பொதுமக்கள் ஆர்வத்துடன் கவனித்து சென்றனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.
காஞ்சிபுரம் .