Friday, June 19, 2026
முகப்பு பதிவு பக்கம் 532

ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து : அதே ஆம்பூர் பிரியாணி அதே தேர்தல் ஆணையம் !

1

தேர்தலை மற ! மக்கள் அதிகாரத்தை நினை !!

ர்.கே. நகர் தேர்தலைத் தள்ளி வைப்பதற்காகத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள 29 பக்க அறிக்கையில் காணப்படும் முத்தான வரிகள் கீழ்வருமாறு:

  • “வாக்காளர்களைக் கவர்வதற்குப் பணமும் பரிசுப்பொருட்களும் விநியோகிக்கப்பட்டிருப்பதால் சூழல் நஞ்சாகிவிட்டது. காலப்போக்கில் இந்த நச்சுச் சூழல் மாறி, சுதந்திரமான நியாயமான தேர்தலை நடத்துவதற்கு உகந்த சூழல் ஏற்படும்போது, தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்தும்.”
  • “வாக்காளர்களுக்கு இலஞ்சம் கொடுக்கும் வேட்பாளர்களைத் தகுதி நீக்கம் செய்வதற்கான சட்டங்கள் இல்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும்.”
  • “கட்சிகளின் உயர்மட்டத் தலைமைகள், தவறு செய்யும் தங்களது வேட்பாளர்கள் மீது தார்மீக செல்வாக்கையும் அதிகாரத்தையும் செலுத்தி,  அவர்களைக் கட்டுப்படுத்தினால்தான் ஜனநாயகத்தைக் காப்பாற்ற முடியும்.”
சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரிச் சோதனை.

கண்காணிப்புக் கேமராக்கள், பறக்கும் படைகள், துணை ராணுவம், தொகுதி தேர்தல் அதிகாரி, சென்னை போலீஸ் கமிஷனர் இடமாற்றம், இந்தியாவிலேயே முதல் முறையாக ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 6 பார்வையாளர்கள்… என்று உடம்பு முழுவதும் ஆயுதம் தரித்திருந்த தேர்தல் ஆணையம் விட்டிருக்கும் அறிக்கை இது.

ஆர்.கே. நகரை தினகரன் தடுத்தாட்கொண்ட கதையைக் கிண்டலாக எழுதுகின்றன ஊடகங்கள். ஜெயலலிதா போட்டியிட்ட கடந்த இரண்டு தேர்தல்களில் எந்தெந்த திருமண மண்டபங்களில் ஆட்களைத் தங்கவைத்தார்களோ, அதே மண்டபங்கள், அதே பணப்பட்டுவாடா, அதே ஆம்பூர் பிரியாணி என்று எழுதுகின்றன. அதே பிரியாணி மாஸ்டர், அதே தேர்தல் ஆணையம் என்று சேர்த்துக் கொள்ள வேண்டியதுதான்.

“தேர்தல் ஆணையம் ஜெயலலிதாவின் கைப்பாவை” என்று சொல்லித்தான் அன்று ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. பிறகு பொதுத்தேர்தலின்போது ஒரு வாக்குச்சாவடியில் வாக்காளர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் சுமார் 200-க்கும் மேற்பட்ட வாக்குகள் பதிவாகியிருக்கின்றன என்ற உண்மை நிரூபிக்கப்பட்டது. அதற்குப் பின்னரும் ஜெயலலதாவின் வெற்றியை அறிவித்த தேர்தல் ஆணையம்தான், தற்போது சுதந்திரமான, நியாயமான தேர்தலை நடத்த முயன்று கொண்டிருப்பதாகக் கூறுகிறது.

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் கரூர் அன்புநாதன் வீட்டில் நடந்த சோதனை. (உள்படம்) அன்புநாதன். (கோப்புப் படம்)

ஏற்கெனவே நடத்தப்பட்ட வருமான வரித்துறை ரெய்டுகள், மோடியின் கருப்புபண ஒழிப்பு நாடகத்தை நம்ப வைப்பதற்காக நடத்தப்பட்டவை. தற்போது நடத்தப்படுபவை தேர்தல் ஆணையத்தின் நடுநிலை குறித்த பிரமையைத் தோற்றுவிப்பதற்கானவை. இவை இரண்டுக்கும் பின்னால், அ.தி.மு.க. கோஷ்டிகளுடன் பா.ஜ.க. நடத்திவரும் திரைமறைவு பேரங்களும் இருக்கின்றன. இந்த ரெய்டுகள் எவ்வளவு “பயங்கரமானவை” என்று அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள், சேகர் ரெட்டி சிறையிலிருந்து மாப்பிள்ளை போல மினுமினு என்று நீதிமன்றத்துக்கு வந்து போகும் காட்சியைத் தொலைக்காட்சியில் பார்க்கவும்.

சென்ற பொதுத்தேர்தலின் போது பிடிபட்ட “ஆம்புலன்ஸ் அன்புநாதன்” மீதான வழக்குகள் என்ன ஆயின? ஜெயலலிதாவின் கன்டெயினர் விவகாரத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் அளித்த பதில் என்ன? அமைச்சர்கள் மீது நடத்தப்பட்ட வருமானவரித்துறை சோதனைகளில் கண்டுபிடிக்கப்பட்டவை என்ன? அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?

எடப்பாடி முதல்வராகிவிட்டார். ராம மோகனராவ் பா.ஜ.க. அரசின் ஆசியுடன் மீண்டும் பதவியில் அமர்த்தப்பட்டு விட்டார். நத்தம் ஓ.பி.எஸ். அணியில் இணைந்து நல்லவராகிவிட்டார். சேகர் ரெட்டியின் சகபாடி பன்னீர்தான் பா.ஜ.க. அமைத்திருக்கும் பாண்டவர் அணியின் தருமர். தினகரன் அணியைச் சேர்ந்த கௌரவர்கள் பன்னீர் பக்கம் தாவிவிட்டால் – இதுவும் ஒரு “கர் வாப்ஸி” தான் – அனைவரும் பாண்டவர்களாக கருதப்படுவார்கள் என்பது புதிய கீதை. இந்த பாரத யுத்தத்தின் கிருஷ்ண பரமாத்மா பாரதிய ஜனதாக் கட்சி. அன்று ஜெயலலிதாவுக்கு சோ என்றால், இன்று பன்னீருக்கு குருமூர்த்தி. மோடி அரசு நடத்தும் இந்த அசிங்கம் பிடித்த நாடகத்தை ஊழல் ஒழிப்பு தர்ம யுத்தமாகச் சிங்காரித்துக் காட்டுவதற்கு முன்னாள் அதிகாரிகள், நடுநிலையாளர்கள் எனப்படுவோர் களத்தில் இறக்கப்பட்டிருக்கின்றனர்.

அமலாக்கத்துறையால் தற்போது கைது செய்யப்பட்டுள்ள சேகர் ரெட்டியுடன், பா.ஜ.க.வால் முட்டுக் கொடுக்கப்படும் உத்தமர் ஓ.பி.எஸ். (கோப்புப் படம்)

பணம் கொடுத்தவர்களைத் தண்டித்த பிறகுதான் தேர்தல் நடத்தவேண்டுமாம். இது முன்னாள் தேர்தல் ஆணையர் கோபால்சாமியின் அறச்சீற்றம். ஆணையத்தின் அறிக்கையோ “தகுதி நீக்கம் செய்ய சட்டமே இல்லை” என்கிறது. சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றி, அப்புறம் வழக்குப் பதிவு செய்து விசாரித்து, குமாரசாமிகள், தத்துக்களைத் தாண்டி குற்றத்தை நிரூபிக்க வேண்டும். அப்புறமல்லவா தண்டனை! நமக்கு தெரிந்த இந்த உண்மை முன்னாள் ஆணையருக்குத் தெரியாதா? இருந்த போதிலும் புருவத்தை நெரித்துக்கொண்டு, நெற்றி நாமம் நெளிய காமெராவுக்கு முன்னால் பொளந்து கட்டுகிறாரே கோபாலஸ்வாமி, சும்மா சொல்லக்கூடாது, மேன்மக்கள் மேன்மக்கள்தான்.

பணம், பரிசு, சாதி-மதவெறி, கள்ள ஓட்டு உள்ளிட்ட எதுவும் இல்லாத சுதந்திரமான, நியாயமான தேர்தல் இந்த நாட்டில் எந்தக் காலத்தில் நடந்திருக்கிறது?  எந்த மாநிலத்தில் நடந்திருக்கிறது? ஆனால், அப்படி ஒரு பிரமையை தொண்ணூறுகளின் தொடக்கத்தில் டி.என்.சேஷன் உருவாக்கினார். (சங்கரராமன் கொலை வழக்கிலிருந்து பெரியவாள் ஜெயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளை விடுவிப்பதற்காக, சட்டையைக் கழற்றி வீசிவிட்டு களத்தில் நின்றாரே, அந்த நேர்மையாளர் சேஷனேதான்.)

விளம்பரச் சுவரொட்டிகளைக் கிழிப்பது, சுவருக்கு வெள்ளையடிப்பது என்பன போன்ற கெடுபிடி காமெடிகள் அப்போதிருந்துதான் அரங்கேறத் தொடங்கின. மக்களின் கருத்துரிமையையும் எளிய வேட்பாளர்களின் பிரச்சார உரிமையையும் பறிப்பதற்குத்தான் ஆணையத்தின் இந்த நடவடிக்கைகள் பயன்பட்டன. அதே நேரத்தில், இந்த 25 ஆண்டுகளில் தான் தேர்தல்களில் பணம், சாதி, மதவெறி என்பது அதுவரை இல்லாத உச்சத்தை எட்டின.

தொண்ணூறுகளின் தொடக்கத்தில் நேர்மையான தேர்தல் பிம்பத்தை உருவாக்க முயன்ற டி.என்.சேஷன்

கார்ப்பரேட் முதலாளிகளுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு அதிகார வர்க்கமும் ஓட்டுக்கட்சிகளும் கொள்ளையடிப்பதற்கான வாய்ப்புகளைத் தனியார்மயம் எந்த அளவுக்கு உருவாக்கித் தந்ததோ அந்த அளவுக்கு, கட்சிகளுக்கு இடையிலான கொள்கை வேறுபாடுகள் எந்த அளவுக்கு இல்லாமல் போயினவோ அந்த அளவுக்கு, கட்சிப் பிரமுகர்கள் முதலாளிகளாகவும், முதலாளிகள் கட்சிப்பிரமுகர்களாகவும் உருமாற்றம் பெறுவது எவ்வளவு நிகழ்ந்ததோ அந்த அளவுக்கு, கட்சிப் பதவிகள் தந்தை வழி சொத்துரிமையாக எந்த அளவுக்கு குடும்பத்துக்குள் கைமாற்றி விடப்பட்டதோ அந்த அளவுக்கு, மக்கள் நல அரசு என்ற வாய்ப்பேச்சும் கூட அற்றுப்போய், மக்களுக்கு பதில் சொல்லும் கடப்பாட்டிலிருந்து எந்த அளவுக்கு அரசு வழுவியதோ அந்த அளவுக்கு – பணம், சாதி, மதம் ஆகியவற்றின் பாத்திரம் அதிகரித்தது.

“கரூரிலும் அரவக்குறிச்சியிலும் தேர்தலை ரத்து செய்தீர்களே, மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டபோது பணம் தரப்படவில்லையா? பணம் விளையாடுகிறது என்று கூறி இடைத்தேர்தலை ரத்து செய்யும் ஆணையம், இதே காரணத்துக்காக பொதுத்தேர்தலையும் ரத்து செய்யுமா?” என்பன போன்ற கேள்விகளை கட்சிக்காரர்களே எழுப்புகிறார்கள். ஆனால், இந்த அரசமைப்புக்குள்ளே தீர்வு தேடும் யாரிடமும் இந்தக் கேள்விகளுக்குப் பதில் இல்லை.

தேர்தலை ரத்து செய்த ஆணையத்திடம் “இழப்பீடு” கேட்கிறார் ஜி.இராமகிருஷ்ணன்

தேர்தல் நடக்கும் என்று “நம்பி” பிரச்சாரத்துக்கு செலவு செய்து விட்டதாம் மார்க்சிஸ்டு கட்சி. தேர்தலை ரத்து செய்த ஆணையத்திடம் “இழப்பீடு” கேட்கிறார் ஜி.இராமகிருஷ்ணன். நியாயம்தான். இது ஜனநாயகம்தான் என்று இத்தனை காலம் மக்களை நம்ப வைத்திருக்கிறார்களே, அதன் பொருட்டு இவர்களும் மக்களுக்கு இழப்பீடு தரவேண்டியிருக்கும்.
வாக்குக்குப் பணம் கொடுத்த காரணத்துக்காக ஆர்.கே. நகர் தேர்தலை ரத்து செய்வதாகச் சொல்கிறது ஆணையம். சாதி, மதம் போன்றவற்றைப் பயன்படுத்துவதும் ஆணையத்தின் விதிகளின்படி காசு கொடுப்பதற்கு இணையான குற்றங்கள்தான். அதையும் அனுமதிக்க முடியாது என்று முடிவு செய்தால், சமீபத்திய உ.பி. தேர்தல் நடந்திருக்குமா? மோடி பிரதமரானது இருக்கட்டும், குஜராத் முதல்வராக அவர் நீடித்திருப்பாரா?

“பணம், சாதி, மதம் ஆகியவற்றைப் பயன்படுத்தி நடத்தப்படும் தேர்தலை அனுமதிக்கக் கூடாது” என்று முடிவு செய்தால், தேர்தலை நடத்தாமல் இருப்பதுதான் இந்திய ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கு ஆணையத்தின் முன் உள்ள ஒரே வழியாக இருக்கும். “புனிதமான” இந்த ஜனநாயக அமைப்பின் தோல்வியை விளக்குவதற்கு இதனினும் வேறு சான்றுகள் தேவையில்லை.

000

ஆர்.கே. நகர் தேர்தலை ஒட்டி நடைபெறும் விவாதங்களில், சுதந்திரமான, நியாயமான தேர்தலை நடத்துவதற்கு இந்த அரசமைப்பின் வரம்புக்குள் நின்று பலரும் கூறுகின்ற தீர்வுகள், ஊழல் அதிகார வர்க்கத்தின் (தேர்தல் ஆணையம்) அதிகாரத்தை மேலும் கூட்டுவதற்கும், கிரிமினல் பாரதிய ஜனதாவை நல்லொழுக்கவாதியாகக் காட்டுவதற்குமே தவிர்க்கவியலாமல் இட்டுச் செல்கின்றன.

ஊழல் விவகாரத்தை மட்டும் எடுத்துக் கொண்டால் பா.ஜ.க.-வின் யோக்கியதை என்ன? “மணல் மாஃபியாவுக்கு தினந்தோறும் இத்தனை கோடி வருகிறது, டாஸ்மாக் வருமானம் இவ்வளவு” என்று தொப்பிக்காரர்களைப் பற்றித் தொலைக்காட்சிகளில் புள்ளி விவரம் கொடுக்கிறார்கள் பா.ஜ.க. நாக்குமாறிகள். இத்தனைக்கும் மூல முதல்வரான ஊழல்ராணியை வழக்கிலிருந்து காப்பாற்றி, தேர்தலில் வெற்றி பெற வைத்துப் பாதுகாத்தது யார்? மன்னார்குடி மாஃபியாவுக்குப் பஞ்சாயத்து செய்து வைத்தவர் வெங்கய்யா நாயுடு என்று ஊடகங்களில் சந்தி சிரிக்கவில்லையா? நல்லொழுக்க சீலர் சோ, மிடாஸ் சாராயக் கம்பெனியில் இயக்குநர் பதவி வகிக்கவில்லையா? சோ மறைவுக்குப் பின் துக்ளக் ஆசிரியராகியிருக்கும் குருமூர்த்தி, ஜெயா மறைவுக்குப் பின் பன்னீர் அண்டு கம்பெனியில் ராஜகுரு பதவி வகிக்கவில்லையா?

கல்லூரியிலும், குவாரியிலும், சுகாதாரத் துறையிலும் விஜயபாஸ்கர் அடித்த கொள்ளை முதல் இதர அமைச்சர்களின் திருட்டுகளையெல்லாம், ஆர்.கே. நகரில் ஓட்டுக்குப் பணம் கொடுத்த பின்னர்தான் இவர்களும், இவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் வருமான வரித்துறையினரும் கண்டுபிடித்தார்களா?  “வாக்காளர்களுக்குப் பணம்” என்ற சட்டகத்தின் வழியாக தேர்தல் அரசியலின் ஊழல் தன்மையைப் பற்றிப் பேசுவது மக்களைக் குற்றப்படுத்தும் சூழ்ச்சி.

கார்ப்பரேட் முதலாளிகளிடம் காசு வாங்கும் கட்சிகளில் முதலிடத்தில் இருப்பது பாரதிய ஜனதா. அதானி காசில் பிரதமரானவர் மோடி என்பது நாடறிந்த உண்மை. ஆஸ்திரேலியாவில் நிலக்கரி சுரங்கம் வாங்குவதற்கு, கைப்பிள்ளையைப் போல பிரதமர் மோடியையும் அழைத்துக் கொண்டு போனார் அதானி.  கூடவே அதானிக்கு கியாரண்டி கையெழுத்து போடுவதற்கு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் தலைவர் அருந்ததி பட்டாசார்யாவையும் அழைத்துக் கொண்டு போனார் மோடி. கிட்டத்தட்ட கலெக்டர் ஆபீசில் வேலையை முடித்துக் கொடுக்கும் புரோக்கரைப் போன்ற இந்த நடத்தைக்கு என்ன பொருள்? இது ஊழல் என்ற வரையறையில் வராதா?

கட்சிகள் கார்ப்பரேட் முதலாளிகளிடம் பணம் வாங்கினால் அது ஜனநாயகமாம். வாங்கின காசுக்கு அவர்கள் கூவ மாட்டார்கள் என்று நாம் நம்ப வேண்டுமாம். ஆனால், தினகரனிடம் 4000 ரூபாய் வாங்கிக்கொண்டு தொப்பிக்கு ஓட்டுப்போட்டால் அது காசுக்கு ஓட்டை விலை பேசும் நடவடிக்கையாம். மக்கள் கட்சியின் கொள்கையை மட்டும் பார்த்து வாக்களிக்க வேண்டுமாம்.

ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தபோது மத்திய ரிசர்வ் போலீசாரிடம் சிக்கிக் கொண்டவர்கள்.

கட்சிகளுக்கு கொள்கையே இல்லாமல் போய்விட்ட நிலையில் எதைப்பார்த்து வாக்களிப்பது? எல்லாக் கட்சிகளும் “நாட்டை அறுத்து விற்பது” என்ற கொள்கையில் ஒன்றாகிவிட்ட பின்னர், நாலாயிரத்துக்கும் இரண்டாயிரத்துக்கும் இடையிலான வேறுபாடுதானே, ஒரேயொரு கொள்கை வேறுபாடாக எஞ்சியிருக்கிறது!

“உடனே ரிசல்ட் கொடுக்கும் கடவுளைக் காட்டு” என்று பக்தியே சுரண்டல் லாட்டரியாக முன்னேறிவிட்ட காலத்தில், ஜனநாயகத்தைக் காப்பாற்றும் பொருட்டு, கட்சிகளின் வாக்குறுதிகளில் நம்பிக்கை வைத்து மக்கள் காத்திருப்பார்களா, வந்த விலைக்கு வாக்குகளை விற்பார்களா? இது வாக்குக்கு பணம் வாங்குவதை நியாயப்படுத்துவதற்கான வாதம் அல்ல. எதார்த்த நிலைமை குறித்த சித்திரம்.

தேநீர் செலவு முதல் விமானப் பயணம் வரை அனைத்துக்கும் கார்ப்பரேட் முதலாளிகளிடம் கையேந்தி நிற்கும் கட்சிகள், ஜனநாயகத்தைக் காப்பாற்றும் பொருட்டு வாக்காளர்கள் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். குடும்ப நலனைப் பாதுகாக்கும் பொருட்டு தனது மனைவி பத்தினியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் ஸ்திரீ லோலனான புருசனைப் போல!

000

விஜய பாஸ்கரிடம் வருமானவரித்துறை கைப்பற்றிய காகிதத்தில் எந்தெந்த அமைச்சர் எந்தெந்த வாக்குச்சாவடிக்குப் பொறுப்பு, அங்கே விநியோகிக்கப்பட வேண்டியது எத்தனை ரூபாய் என்ற பட்டியல் உள்ளது. இதே போல வருமான வரித்துறையால் கைப்பற்றப்பட்டவைதான் “சகாரா பிர்லா பேப்பர்ஸ்” எனப்படும் காகிதங்கள். அவற்றில் குஜராத் முதல்வர் (மோடி) முதல் ஷீலா தீட்சித் வரையிலான பல்வேறு கட்சி அரசியல்வாதிகளுக்கும் பட்டுவாடா செய்யப்பட்ட பணம், கொடுக்க வேண்டிய பாக்கி ஆகியவை குறித்த விவரங்கள் உள்ளன.

“இவை குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரிக்க வேண்டும்” என்று வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் கோரினார். “தின்ன மாட்டேன், தின்னவும் விடமாட்டேன்” என்று பஞ்ச் டயலாக் பேசிய மோடி அதற்குச் சம்மதிக்கவில்லை. அரசு தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, “இவையெல்லாம் உதிரி காகிதங்கள். அதில் யார் வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் எழுதி வைத்துக் கொள்ளலாம்” என்று வாதாடினார். உச்ச நீதிமன்றம் மோடிக்கு சாதகமாகத் தீர்ப்பளித்தது.

இப்போது விஜயபாஸ்கர் வீட்டில் சிக்கிய காகிதங்களைக் காட்டித் தேர்தலை நிறுத்தியிருக்கிறது ஆணையம். சகாரா-பிர்லா பேப்பர்ஸுக்கும் விஜயபாஸ்கர் பேப்பர்ஸுக்கும் உள்ள வேறுபாடு என்ன? அது மோடி உள்ளிட்ட மந்திரிகளுக்குக் கொடுத்ததாக முதலாளி எழுதிய கணக்கு. இது மக்களுக்கு கொடுத்ததாக மந்திரி எழுதிய கணக்கு.  மக்களின் ஒழுக்கமல்லவோ ஜனநாயகத்துக்கு முக்கியம்!

கருப்புப் பணத்தை ஒழிக்கும் பொருட்டு, உள்ளாடை வாங்குவதாக இருந்தாலும் அதை பே டிஎம் வழியாக வாங்கு என்ற கட்டாயத்தை மக்களுக்கு ஏற்படுத்தியவர் மோடி. அப்பேர்ப்பட்ட நல்லொழுக்க சீலர்,  “இனி கட்சிகளுக்கு நன்கொடை கொடுக்கும் முதலாளிகள், இன்னாருக்கு அல்லது இன்ன கட்சிக்கு என்று பெயர் குறிப்பிட்டுக் கணக்கு எழுதத் தேவையில்லை” என்று சட்டத்திருத்தம் கொண்டு வருகிறார். இனி எந்த சகாரா பேப்பரைக் கைப்பற்றினாலும், அது கறைபடியாத வெள்ளை பேப்பராகவே இருக்கும் என்பதால் ஜனநாயகத்துக்கும் நல்லொழுக்கத்துக்கும் ஆபத்தில்லை.

000.

“தேர்தல்தான் மக்களின் ஆதாரமான ஜனநாயக நடவடிக்கை” என்பது ஒரு பொய். அந்தப் பொய்யின் மீதுதான் ஆர்.கே. நகர் தேர்தலுக்கு முதன்மை முக்கியத்துவம் வழங்குகின்ற பார்வை உருவாக்கப்படுகின்றது. விவசாயிகள் போராட்டமும் டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டமும் பின்னுக்குத் தள்ளப்படுகின்றன.

உண்மையில் இந்தியாவில் நடைபெறும் தேர்தல்கள் என்பது, மக்களுடைய ஜனநாயக உரிமைகளை ரத்து செய்வதையே நோக்கமாக கொண்ட இந்த அரசமைப்பின் நிறுவனங்கள், தமக்கான நியாயவுரிமையை மக்களிடமிருந்தே தருவிக்கின்ற ஒரு சூது. “ஹைட்ரோ கார்பனையும் மீத்தேனையும் திணிப்பதற்கும், காவிரி ஆணையத்தை மறுப்பதற்கும், வறட்சி நிவாரணத் தொகையை வெட்டுவதற்கும் எனக்கு அதிகாரம் இருக்கிறது. ஏனென்றால் நான்தான் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம்” என்கிறார் மோடி. “சாராயக் கடையை உங்கள் தெருவில் திணிப்பதற்கு எனக்கு அதிகாரம் இருக்கிறது” என்கிறார் எடப்பாடி.

இவர்களுக்கும் இவர்களால் தலைமை தாங்கப்படும் அரசமைப்புக்கும் எதிரான போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கும் மக்கள், தங்களுடைய போராட்டம்தான் ஜனநாயகத்துக்கான நடவடிக்கையேயன்றி, ஆர்.கே. நகரில் நடப்பது அல்ல என்பதை உணரவேண்டும். அதிகாரத்தை அவர்களுக்கு வழங்குவது அல்ல, அதிகாரத்தை மக்கள் தம் கையில் ஏந்துவதுதான் ஜனநாயகம் என்பதை எந்த அளவுக்கு மக்கள் உணர்ந்து கொள்கிறார்களோ, அந்த அளவுக்கு ஆர்.கே. நகர் விவகாரம் புறக்கணிக்கத்தக்கதாக மாறும். அது எந்த அளவுக்குப் புறக்கணிக்கத்தக்கதாக மாறுகிறதோ, அந்த அளவுக்கு அதிகாரத்துக்கான மக்களின் போராட்டம் வீரியம் பெறும்.

– மருதையன்
புதிய ஜனநாயகம், ஏப்ரல் 2017

கடலூர் – அரியலூரில் டாஸ்மாக் முற்றுகை ! மக்கள் அதிகாரம்

0

புறவழிச் சாலையில் அகற்றப்பட்ட டாஸ்மாக் கடைகளை கிராமத்தின் நடுவே கொண்டு வந்து திணிக்கிறது தமிழக அரசு . அதனால் தமிழக முழுவதும் மக்கள் கடுமையாக எதிர்த்து போராடுகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரியலூர் மாவட்டம், ஓலையூர் கிராமத்திலும், கடலூர் மாவட்டம் கம்மாபுரம் கிராமத்திலும் டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி O8.04.2017 அன்று மக்கள் அதிகாரம் தலைமையில் 300 க்கும் மேற்பட்ட மக்கள் ஓலையூரிலும், கம்மாபுரத்திலும் திரண்டனர். ஓலையூர் கிராமத்தில் மக்கள் கடையை முற்றுகையிட முயன்ற போது போலீசார் தடுத்து நிறுத்தினர்.

கடையை திறந்த மூன்று நாட்களுக்குள்ளே 30 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள உளுத்தூர் பேட்டையில் இருந்து கூட வந்து மது பாட்டில்களை வாங்கி செல்வது வேதனை அளிக்கிறது என மக்கள் தங்கள் குமுறலை வெளிப்படுத்தினர். கடைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதிதனால் வாகன நெறுக்கடியின் காரணமாக விபத்துக்கள் ஏற்படுகின்றன. உடனே கடையை அகற்றியாக வேண்டும் என்று ஊர் மக்கள் முடிவெடுத்து கடையை முற்றுகையிட்டனர், போலீஸார் தடுத்தனர்.

கடையை அகற்றாவிடில் வீடு திரும்புவது இல்லை என்று கடைக்கு அருகாமையில் அமர்த்துக்கொண்டு முழக்கமிட்டனர்.

தே போல் 10.04.2O17 அன்று கடலூர் மாவட்டம், கம்மாபுரத்தில் மக்கள் அதிகாரத்தோழர் அருள் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கடையை அகற்ற கோரி சாலை மறியல் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் இளைஞர் ஒருவர் போலீஸ்காரர்களை பார்த்து கடை வேண்டாம் என்று நாங்கள் போராடுகிறோம் நீங்கள் எதற்கு வந்து பேசுரிங்க சம்மந்தப்பட்ட அதிகாரியை வந்து பேச சொல்லுங்க என்று கேட்டுக்கொண்டு இருந்தபோதே போலீஸ்காரர் ஒருவர் அவரை கூட்டத்தின் நடுவே தள்ளிவிட்டார்.

உடனே கீழே விழுந்தவர் நிலைதடுமாறி போலீஸ்காரரின் சட்டையை பிடித்தார். ஆனால் அவர்கள் போராட்டத்தை கலைக்கவேண்டும் என்பதற்காக பெரும் திரளாக போரட்டத்தில் கூடியிடியிருந்த மக்களை தடி அடி நடத்தி வெறியாட்டம் போட்டு போலீசர் போராட்டத்தை கலைத்தனர். பின் மக்கள் அதிகார தோழர் அருள் உட்பட 7 பேரை காவல் துறை கைது செய்து கம்மாபுரம் காவல் நிலையத்தில் வைத்தனர், மாலை 6.00 மணிக்கு  6 பேரை மட்டும் விடுவித்தது போலீசு, சட்டையை பிடித்தவரை மட்டும் வழக்கு பதிவு செய்து காவல் நிலையத்திலேயே வைத்துள்ளனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்

களச்செய்திகள் : விவசாயிகள் கூட்டத்திற்கு மூன்றாவது முறையாக தடை !

0

14.04.2017

அறிவிப்பு

விவசாயிகளின் கோரிக்கைகள் – போராட்டங்கள் எல்லா கதவுகளும் மூடப்பட்டுவிட்டன ! உடைப்பதை தவிர வேறு  வழியே இல்லை ! என்ற தலைப்பின் கீழ் திருத்துறைப்பூண்டியில் 15.04.2017 பொதுக்கூட்டம் நடத்த  திடமிட்டு இருந்தோம் ஆனால் திருவாரூர் மாவட்டக் காவல்துறை தொடர்ச்சியாக சட்டவிரோதமான முறையில் மூன்றாவது முறையாகவும் அனுமதியை மறுத்துள்ளது. கடந்த முறை பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுத்த போது சென்னை உயர்நீதிமன்றத்தில் இது குறித்து ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த  சென்னை உயர்நீதிமன்றம் மக்கள் அதிகாரம் அமைப்பின் பொதுக்கூட்ட விண்ணப்பத்தை பரிசீலிக்குமாறு கடந்த 27.03.2017 அன்று உத்தரவிட்டு இருந்தது.

அதன் பிறகும் கூட எமது  பொதுக்கூட்ட விண்ணப்பத்தை நிராகரித்துள்ளது திருவாரூர் மாவட்ட காவல்துறை. திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எமது அமைப்பிற்கு எதிரான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடுகிறார். டாஸ்மாக்கிற்கு எதிரான எமது சுவரொட்டி வாசகம்  வன்முறையத் தூண்டும் விதத்தில் இருப்பதாகவும் அதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்றும் சற்றும் பொருத்தமற்ற, தொடர்பற்ற காரணங்களைக் கூறி அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ஆனால் மக்கள் சொத்தை கொள்ளையடிக்கின்ற, லஞ்ச ஊழலில் ஊறித்திளைக்கின்ற, அடியாட்களை வைத்துக்கொண்டு ரவுடித்தனம் செய்கின்ற மக்கள் விரோத கட்சிகளுக்கு தாராளமாக அனுமதி கொடுத்து பாதுகாப்பிற்கு நிற்கும் காவல் துறை மக்கள் பிரச்சினைகளுக்காகப் போராடிவரும் மக்கள் அதிகாரம் அமைப்புக்கு எதிராகவே திட்டமிட்டு செயல்படுகின்றது.

திருவாரூர் மாவட்டத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு கூட போலீசு அனுமதியைப் பெற வேண்டும் என்ற அளவுக்கு ஜனநாயக உரிமைகள் நசுக்கப்படுகின்றன. இவ்வாறு திட்டமிட்டே சட்டப்பூர்வமான வழி முறைகள் அனைத்தும் முடக்கப்படுகின்றன.

எனவே திருத்துறைப்பூண்டியில் 15.04.2017 அன்று நடைபெற இருந்த பொதுக்கூட்டம் போலீசின் அனுமதி மறுப்பு காரணமாக நடைபெறாது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். அடுத்த நடவடிக்கைகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும். தொடர்ந்து மூன்றாவது முறையாக பொதுக்கூட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடையானது பெரும் பொருளாதார இழப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் தோழர்கள், ஆதரவாளர்கள், நண்பர்களுக்கு ஏற்பட்ட இடையூறுகளுக்கு வருந்துகிறோம்.

தங்கள் :
தோழர்.காளியப்பன்
மாநிலப்பொருளாளர்,மக்கள் அதிகாரம்


மிழகவிவசாயிகளுக்கான வறட்சி நிவாரணம் வழங்கக் கோரியும், மற்றும் தேசியவங்கிகளில் வாங்கியுள்ள விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய கோரியும் விவசாயிகள் போராட்டத்தை மதிக்காத மத்திய அரசைகண்டித்து., விருத்தாச்சலம் பகுதி புரட்சிகர மாணவர் இளைஞர் முண்னணி சார்பாக, பாலக்கரையில் 12.04.2017 அன்று காலை 11:00 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தபட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தை பு.மா.இ.மு தோழர் மணிவாசகன் தலைமயேற்று நடத்தினார். இதில் மோடி அரசு தமிழகத்துக்கு இழைத்துவரும் அநீதிகளான ஹைட்ரோ கார்பன் திட்டம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது ஆகியவற்றை அம்பலப் படித்தி பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தை திரளான மக்கள் கவனித்துச் சென்றனர்.

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
விருத்தாச்சலம்.

____________________________________________________________________________________

குடி கெடுக்கும் அரசிடம் கெஞ்சாதே ! அடிக்கவரும் போலீசுக்கு அஞ்சாதே !!
திருப்பூர் – சாமளாபுரத்தில் டாஸ்மாக்கிற்கு எதிராகப் போராடிய பெண்கள் – பொதுமக்கள் மீது கொலை வெறித்தாக்குதல் !

  • கொலைவெறித் தாக்குதல் நடத்திய ADSP பாண்டியராஜனை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யும் வரை போராடுவோம் !
  • தமிழகத்தை சுடுகாடாக்கி டாஸ்மாக்கால் வருமானத்தை பெருக்கும் தமிழக அரசை தூக்கியெறிவோம் !
  • டாஸ்மாக்கை திறக்க வரும் அதிகாரிகள், அரசியல்வாதிகள், போலீசை விரட்டியடிக்க செருப்பையும் விளக்கமாற்றையும் கையிலேந்துவோம் !

தகவல் :
பெண்கள் விடுதலை முன்னணி.
சென்னை – 98415 58457.

தனியார் கல்வி நிறுவனங்களின் ஊழியர்களுக்கு உரிமைகள் வழங்கு !

0

பத்திரிக்கை செய்தி, நாள் : 13.04.2017

 

புதிய ஜனநாயக வாகன ஒட்டுநர்கள் மற்றும் டெக்னீஷியன்கள் சங்கத்தின் பொதுக்குழு 12.04.2017 புதன் அன்று மேடவாக்கம் சமுதாயக் கூடத்தில் நடத்தப்பட்டது.

இந்த பொதுக் குழுவிற்கு சங்கத்தின் தலைவர் தோழர் சிவசங்கரன் அவர்கள் தலைமை தாங்கினார். சங்கத்தின் பொதுச் செயலாளரும் மக்கள் அதிகாரம் அமைப்பின் சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளருமான தோழர். சி. வெற்றிவேல் செழியன், சிறப்புத் தலைவர் தோழர். சுப. தங்கராசு, மாநில பொதுச் செயலாளர் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி செயற்குழு உறுப்பினர் தோழர் இல.பழனி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.

இந்தப் பொதுக்குழுவில் சத்தியபாமா பல்கலைக் கழக பணியாளர்கள், ஒட்டுநர்கள் மற்றும் ஜேப்பியார் குழும கல்வி நிறுவன பணியாளர்கள் எனப் பெருவாரியான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

சத்தியபாமா பல்கலைக் கழக பணியாளர்களுக்கு போனசு வழங்கவேண்டும் என்ற தொழிலாளர் தீர்ப்பாயத்தின் உத்தரவை நிர்வாகம் நிறைவேற்றச் செய்வது பற்றியும், தனியார் கல்வி நிறுவனங்களில் தொழிலாளர் உரிமைகள் பறிக்கப்பட்டு வருவதையும் மற்றும் உரிமை மறுப்புக்கு எதிராகப் போராடிய மாருதி ஆலைத் தொழிலாளர்கள் மீது நிர்வாகம் ஆலையில்ஏற்பட்ட தீவிபத்து கொலையை நீதிமன்றத்தின் உதவியுடன் தொழிலாளர்கள் மீது திணித்து தண்டித்துள்ளது பற்றியும், தமிழக விவசாயிகள் போராட்டங்கள், டாஸ்மாக் கடைகளை மூடக் கோரும் போராட்டங்கள் மீது அரசு, போலீசின் காட்டுமிராண்டி தாக்குதல்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இது சம்மந்தமாக இந்த பொதுக்குழு கீழ்கண்ட தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளது.

  1.  தனியார் கல்வி நிறுவன பணியாளர்களுக்கு PF ESI சம்பளத்துடன் கூடிய EL, CL, போனசு போன்ற தொழிலாளர் உரிமைகள் நிலைநாட்டப் படவேண்டும்.
  2. தனியார் கல்வி நிறுவனங்கள், ஐ.டி நிறுவனங்களில் பேருந்து ஒட்டும் தொழிலாளிகள் பேருந்துகளிலேயே வாழ்க்கை நடத்தும் கொத்தடிமை முறை நீக்கப்பட்டு முறைப்படுத்திய பணி தொழிலாளர் உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும்.
  3.  தொழிலாளர் உரிமைக்கான போராட்டங்களை ஒடுக்கும் விதமாக மாருதி தொழிலாளர் மீதான நீதிமன்ற தண்டனையை நிபந்தனை இன்றி நீக்கி விடுதலை செய்யப்பட வேண்டும். அதிகாரியின் கொலைக்கான உண்மையைக் கண்டறிய வேண்டும்.
  4. தமிழக மக்கள் வாழ்வாதாரத்துக்கான விவசாயத்தை அழிக்கும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், செல் கேஸ் திட்டங்களை ரத்து செய்யவும், டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரும் பொதுமக்கள் போராட்டங்கள் மீதான போலீசின் பொய் வழக்குகள், கொலை வெறித் தாக்குதல்கள் நிறுத்தப்படவேண்டும்.
  5. திருப்பூர் சாமளபுரம் டாஸ்மாக் கடையை அகற்றப் போராடிய பெண்கள் மீது தாக்குதல் நடத்திய “ஆண்” ஏ.டி.எஸ்.பி. திரு. பாண்டியராஜனைப் பணி நீக்கம் செய்துநடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

என இந்தப் பொதுக்குழு எங்கள் கோரிக்கைகளோடு சமூகத்தின் பிரச்சினைகளையும் விவாதித்து மேற்கண்ட தீர்மானங்களை ஏக மனதாக நிறைவேற்றியுள்ளது.

இவண் :
சி. வெற்றிவேல் செழியன், பொதுச்செயலாளர்.
புதிய ஜனநாயக வாகன ஒட்டுநர்கள் மற்றும் டெக்னீஷியன்கள் சங்கம்.

இந்து மதம், முசுலீம்கள் குறித்து அம்பேத்கர் எழுதிய நூல்கள்

3
டாக்டர் அம்பேத்கர்

ஏப்ரல் – 14 டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளில்
அறிய வேண்டிய சிந்தனை…!

கையில் கிடைத்ததையெல்லாம் காவிமயமாக்கும் வெறிகொண்டு அலைகிறது ஆர்.எஸ்.எஸ். கும்பல். மைல்  கல்லையே மஞ்சள் பூசி ‘மைல் சாமியாக்கும்’ அவாளின் பித்தலாட்டங்கள் முன்னேறி முன்னேறி பல தேசிய இனங்கள், பல பண்பாட்டு மரபுகளைக் ‍கொண்ட நாட்டை இந்து – இந்தி – இந்தியா எனும் ஒற்றை ராஜ்ஜியத்தின் கீழ் ஏகாதிபத்திய உலகமயத்திற்கு படையலாக்கப்  பார்க்கிறது.  காலமெல்லாம் இந்து மதத்தையும் அதன் சாதியக் கொடூரத்தையும் எதிர்த்து அம்பலப்படுத்தியவர் அம்பேத்கர்.

இந்து மதம் ஒரு மதமே அல்ல, அது ஒரு அடக்குமுறைக் கருவி, அழிவைத்தரும் தொற்றுநோய் இதை ஒழிக்காமல் இந்தியாவிற்கு விடிவில்லை, ஜனநாயகம் இல்லை எனப் போராடியவர் அவர்.  அத்தகைய அம்பேத்காரையே காவிமயமாக்கும் முயற்சியில் பார்ப்பன – பா.ஜ.க. பரிவாரங்கள் வேலை செய்து வருகின்றன.   மனித விரோத, மக்கள் விரோத இந்துத்துவ பாசிசத்தை எதிர்கொள்ள இந்நாளில் அம்பேத்கரின் சிந்தனைகளை அறிவதும் உயர்த்திப் பிடிப்பதும் தேவையாக இருக்கிறது. இந்து வெறிக்கு தொடர்ந்து பதிலடிக்‍கொடுத்த அம்‍பேத்கரின் கருத்துக்களை, அவற்றில் ஒரு சிலவற்றை அறிமுகம் செய்தும்கொள்வது இன்றைய நாளை பயனுள்ளதாக்கும்.

1. இந்துமதத் தத்துவம்

விரும்பாதவரையும் இந்து எனும் வேலிக்குள் அடைத்து வைத்து, சொந்த மதத்துக்காரனையே சூத்திரன், நீ கேவலமான பிறவி கீழ்சாதி, தொடாதே, பார்க்காதே, படிக்காதே என இழிவுபடுத்தும் ஒரே மதம், பார்ப்பன இந்து மதம் இந்துவாக தங்களைக் கருதிக் கொள்ளும் ஒவ்‍வொருவரும் இந்த மதத்தில் தங்களது நிலை என்ன? இந்த மதத்தின் தத்துவம்தான் என்ன? என்பதை அறிந்து கொள்ள வேண்டியது  அவசியம். வரலாறு தெரிந்தவரால்தான் வரலாறு படைக்க முடியும் என்ற டாக்டர் அம்பேத்கரின் ஆழ்ந்த உழைப்பில் படைக்கப்பட்டது தான் “இந்துமதத் தத்துவம்” மக்களை நல்வழிப்படுத்துவதற்கானது எனக் கூறிக்ககொள்ளும் மதத்திற்கான எந்த யோக்கியதையும்

இன்றி நால்வகை வருணம் நாலாயிரம் சாதி என மக்களை பிளவு படுத்தி உழைக்கும் மக்களை இழிவுபடுத்துவதுதான் இந்து மதத்தத்துவம் என்பதை சமூக வரலாற்று, பொருளியல், அரசியல் கோணங்களில் ஆய்வு செய்து விளக்குவதுடன் ஆரிய வேதங்கள், மனுஸ்மிருதிகள், பகவத்கீதை உபகதைகள் வழி ஆதாரத்துடன் நிறுவி இது ஒரு மதமே அல்ல. அடக்குமுறை, ஆதிக்க கருத்தியல் என்றும், இதைத் தூக்கி எறியாமல், சகோதரத்துவ சமத்துவ வாழ்வு சாத்தியமில்லை எனவும் எச்சரிக்கிறார். அனைத்து மதங்களுமே அதன் இருப்பிலே ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறைக் கருவிகளாகத்தான் இருக்கின்றன பார்ப்பன  இந்து மதமோ அதன் இயல்பிலேயே பிறப்பின் அடிப்படையில் உழைக்கின்ற மக்களை சாதிய அடுக்குமுறையாலும், ஆதிக்கம் செலுத்துவது என்று முதலாளித்துவ ஆளும் வர்க்கத்திற்கு இயற்கைக் கூட்டாளியாக அமைகிறது. தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்று மக்களை மூலதனத்தால் ஒடுக்கும் மறுகாலனியத்திற்கு தோதான தத்துவம் பார்ப்பனியம் என்பதால் இந்துத்துவத்தை எதிர்ப்பது என்பது மறுகாலனியாக்க எதிர்ப்போடு தொடர்புள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள ‍வேண்டும்.  அந்த வகையில் சமூகமாற்றத்தை வேண்டும் டாக்டர் அம்பேத்கரின் கருத்துக்களை நடைமுறைபடுத்தும் வகையில் இந்த நூலை பரவலாக்குவது நம் ஒவ்வொருவரின் சமூகக் கடைமையாகும்.

படியுங்கள்! பரப்புங்கள்!!

வெளியீடு :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.
தமிழ்நாடு

2. நான் ஓர் இந்துவாக சாக மாட்டேன்.

கெடுவாய்ப்பாக நான் ஒரு தீண்டத்தகாத இந்துவாகப் பிறந்துவிட்டேன்.   அதைத் தடுப்பது என் சக்திக்கு அப்பாற்பட்டது.  ஆனால், அருவறுக்கத்தக்க இழிவான நிலையில் வாழ்வதை என்னால் தடுத்துக் கொள்ள முடியும்.  எனவே நான் உறுதியாகக் கூறுகிறேன் : “நான் ஓர் இந்துவாக சாக மாட்டேன்.” …ஏன்? நூலைப் படியுங்கள்.

வெளியீடு :
தலித் முரசு
சென்னை – 34.

3. முசுலீம்கள் குறித்து அம்பேத்கர்

சாதி, தீண்டாமையைத் தோற்றுவித்துப் பாதுகாக்கும் இந்துமதத்தை ஒழிப்பதையே தனது லட்சியமாகக் கொண்டிருந்த அம்பேத்கரை, தனது நோக்கத்துக்கேற்பப் பிசைந்து மாற்றியமைக்கிறது. அவரை முழுமையாக இருட்டடிப்பு செய்ய முடியாதாகையால், “இந்து சமூகத்தில் சமத்துவம் நிலவ வேண்டு‍மென விழைந்த முஸ்லிம் எதிர்ப்பாளராக” அவரைக் காட்ட முனைகிறது.

…விடுதலைப் போராட்ட கால அரசியல் சூழலில் முஸ்லிம் லீக் பற்றி அவர் தெரிவித்த கருத்துக்களையும், சமத்துவம் – ஜனநாயகம் என்ற விழுமியங்களின் அடிப்படையில் அவர் முன்வைத்த விமரிசனங்களையும் தனது இந்து பாசிசச் சட்டகத்திற்குள் இழுத்துத்  திணித்துக் கொள்கிறது. முழுப் பொய்களைக் காட்டிலும் ஆபத்தானவை அரை உண்மைகள்.  கருத்தியல் தளத்தில் இன்று இந்துமதவெறி அரசியல் பெற்றிருக்கும் செல்வாக்கிற்குக் காரணமானவை இத்தகைய பல அரை உண்மைகள்தான்.  பிழைப்புவாத அறிவுத் துறையினர் புகலிடம் தேடுவதும்  இத்தகைய அரை உண்மைகளில்தான்.

வெளியீடு :
கீழைக்காற்று
சென்னை – 02.

 – துரை. சண்முகம்


நூல்கள் கிடைக்குமிடம்:
கீழைக்காற்று,
பதிப்பகம் மற்றும் விற்பனையகம்,
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை
சென்னை – 600 002
Ph : 044 – 28412367


கூடுதல் டிஎஸ்பி பாண்டியராஜனை கைது செய் ! சென்னையில் ஆர்ப்பாட்டம் !

0

போராடும் மக்களின் மண்டையை பிளந்த கூடுதல் DSP பாண்டியராஜனை கைது செய்!
மக்களின் பிரச்சையை தீர்க்க வக்கற்ற எடப்பாடி இனியும் நீடிக்கக்கூடாது!

என்பதை முன் வைத்து மக்கள் அதிகாரம் சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் வெற்றிவேல் செழியன் தலைமையில் இன்று 13.4.2017 காலை 10.30 மணியளவில் எழும்பூர்  ரயில் நிலையம் அருகில்  ஆர்ப்பாட்டம் நடந்தது.

நூற்றுக்கணக்கான  மக்கள் வந்து செல்லக்கூடிய எழும்பூர் ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் இருந்த மக்களை பார்த்து வெற்றிவேல் செழியன் “டாஸ்மாக்கை வேண்டாம் என்று போராடுவது மக்கள் உரிமை, அதற்கு பதில் சொல்லவேண்டியது டாஸ்மாக் அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் கடமை. இங்கு போலீசுக்கு என்ன வேலை?  இந்தப் போலீசு மக்கள் வரிப்பணத்தில் அரசிடம் இருந்து சம்பளம் வாங்குகிறதா? அல்லது சாராய முதலாளிகளிடம் சம்பளம் வாங்குகிறதா? மக்கள் போராட்டங்களில் போலீசு தலையிடுவதற்கும், தாக்குவதற்கு என்ன அதிகாரம் இருக்கிறது. இதை மீறி செய்கிறது என்றால் இந்த போலீசு மக்களுக்கு வேலை செய்யவில்லை. சாராய முதலாளிகளுக்கு மக்கள் பணத்தில் வேலை செய்கிறது என்பதைத்தான் மீண்டும் மீண்டும் நிறுவுகிறது.

எனவே இத்தகைய போலீசு துறையை மக்கள் நம்பக் கூடாது  போலீசைப் பற்றி கவலைப்படாமல்  மக்கள் போராடினால்தான் டாஸ்மாக் கடையை மூட முடியும், இப்படி போராடும் மக்களுக்கு மக்கள் அதிகாரம் துணை நிற்கும்”  என்று பேசினார்.
இந்தப் போராட்டத்தில்   மக்கள்  கலந்துவிடக்கூடாது என்று அச்சப்பட்ட போலீசார் அவர்களை விரட்டியடித்துக் கொண்டே இருந்தனர்.  சுமார் 30 நிமிடங்கள் வரை போராட்டம்  நீடித்தது.  பின்பு அனைவரையும் கைது செய்தது போலீசு.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
சென்னை. தொடர்புக்கு – 99623 66321.

இஸ்ரேல் மோடியைக் கொஞ்சுவது ஏன் ?

3
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

டந்த செவ்வாய்க்கிழமை 11.04.2017 அன்று பிரதமர் மோடி அவர்கள், இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் ஒரு யூத பண்டிகைக்காக வாழ்த்து தெரிவித்தார். எகிப்திலிருந்த யூத அடிமைகள் தமது விடுதலைக்காக போராடியதை நினைவு கூறும் நாளாம் அது. இந்த வாழ்த்துச் செய்தியைப் பார்த்து நெகிழ்ந்த நெதன்யாகு, “விடுமுறை நாள் வாழ்த்துச் செய்தி அனுப்பியதற்கு நன்றி நண்பா! உங்கள் வருகைக்காக இஸ்ரேல் மக்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்” என்று டிவிட்டரில் நன்றி தெரிவித்தார். இதை மோடி மறுபடியும் டிவிட்டினாராம்.

இருநாடுகளும் தமது தூதரக உறவுகளை முறையாக ஆரம்பித்த 1992-ம் ஆண்டிற்கு பிறகு இஸ்ரேலுக்கு செல்லும் முதல் பிரதமர் மோடிதானாம். ஆர்.எஸ்.எஸ் ஷாகாக்களில் இஸ்ரேல் கதைகள் கேட்டு வளர்ந்த மோடிக்கும், ஒரு இந்து என்ற முறையில் இந்த பயணம் ஒரு புண்ணிய மற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க பயணம்தான். ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் இரண்டாவது தலைவரான செத்துப் போன கோல்வல்கர் உருகி உருகி எழுதியது யூதர்களின் இஸ்ரேலைப் பற்றித்தான். இதில்தான் முசுலீம்களை அடக்கி ஒரு யூத நாடு எப்படி ஜெயித்தது என்று கோல்வால்கர் விடைப்புடன் விளக்கியிருப்பார்.

இஸ்ரேல் பயணத்திற்கு முன்னால் 2014 செப்டம்பரில் ஐ.நா பொது மன்றத்தின் கூட்டத்திற்காக நியூயார்க் நகரம் சென்ற மோடி அங்கு நெதன்யாகுவை சந்தித்திருக்கிறார். இதுவும் கடந்த 20 வருடங்களில் முதன்முறையாக ஒரு இந்திய பிரதமர் இஸ்ரேல் பிரதமரை சந்தித்த நிகழ்வாம். இப்படி முதன் முறையான சந்திப்பு என்ற வரலாற்று சிறப்பிற்கு என்ன முக்கியம்? 90-களுக்கு முந்தைய இந்திய அரசின் மேலோட்டமான வெளியுறவுக் கொள்கைகளில் இஸ்ரேலின் அடாவடிகளுக்கு உரிய அங்கீகாரம் இல்லை. பிறகு மெல்லமெல்ல உரிய அங்கீகரித்தல் நடந்து இருவரும் நட்பு நாடாகிவிட்டார்கள். வாஜ்பாய் மற்றும் மோடி காலத்தில் இந்த நட்பு பெரு நட்பாகிவிட்டது. ஆன போதிலும் இந்த நட்பு ஏதோ வெறும் சென்டிமெண்ட் பற்றியதல்ல. பொருளாதாரம் பற்றியது.

எந்த தேதியில் திருவாளர் மோடி இஸ்ரேல் செல்கிறார் என்பதை இன்னும் அறிவிக்கவில்லையாயினும், பயணத்திற்கான ஆயத்தங்களை இந்திய அரசு தீவிரமாக செய்து வருகிறதாம். கடந்த மார்ச் மாதம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இஸ்ரேல் சென்று மோடி அங்கே வரும் போது என்னென்ன ஒப்பந்தங்கள் கைச்சாத்திடவேண்டுமென்று பேசினாராம்.

இந்த ஒப்பந்தங்கள்தான் ரவுடி இஸ்ரேல் நாடு திருவாளர் மோடியை வரவேற்பதின் இரகசியமாகும். பல்வேறு அதிவுயர் இராணுவ தளவாடங்களை இந்தியா இறக்குமதி செய்வதே அந்த ஒப்பந்தங்களின் உட்கிடை. பிறகு சோழியன் குடுமி சும்மா ஆடுமா? மோடிக்குத்தான் அங்கே சிவப்பு கம்பள வரவேற்பு சும்மா கிடைத்து விடுமா?

ஸ்பைக் டாங்கி எதிர்ப்பு ஏவுகணை

ஸ்பைக் எனப்படும் டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் இந்திய இராணுவத்திற்கும், பாரக் 8 எனப்படும் வான் தடுப்பு ஏவுகணைகள் இந்தியக் கடற்படைக்கும் வாங்குவது இந்திய இஸ்ரேல் ஒப்பந்தத்தின் மையம். இதன் மதிப்பு என்ன? 1.5 பில்லியன் டாலர் என்கிறது புளூம்பெர்க் பத்திரிகை. அதாவது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட பத்தாயிரம் கோடி ரூபாய். இது போக கடந்த வாரம் இஸ்ரேலின் ஏரோஸ்பேஸ் நிறுவனம் 13,000 கோடி ரூபாய் மதிப்பிலான தரையிலிருந்து வான் சென்று தாக்கும் முன்னேறிய தொழில் நுட்பம் சார்ந்த இடைரக ஏவுகணைகளை இந்தியாவிற்கு வழங்குவதாக அறிவித்திருக்கிறது. இதுதான் இஸ்ரேல் இதுவரை செய்திருக்கும் ஆயுத தளவாட ஒப்பந்தங்களில் மிகப்பெரியது.

ஏற்கனவே இந்தியா இறக்குமதி செய்யும் இராணுவத் தளவாடங்களில் மூன்றாவது பெரிய ஏற்றுமதியாளர் இஸ்ரேல்தான். ஆகையால் மோடி அங்கு செல்லும் போது இந்த ஆண்டிற்குரிய இறக்குமதி ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்படும். இப்படி இந்திய மக்கள் பணம் சற்றேரக்குறைய 25,000 கோடி ரூபாயை இஸ்ரேல் எனும் அமெரிக்கா ஊட்டி வளர்க்கும் பேட்டை ரவுடிக்கு கொட்டிக் கொடுக்கப் போகிறார்கள்.

பாரக் 8 வான் தடுப்பு ஏவுகணை

இந்த ஸ்பைக்கும், பேரக்கும் வருவதால் இந்தியாவிற்கு ஒரு பாதுகாப்பும் கிடையாது. இதற்கு நிகரான ஆயுதங்களை அமெரிக்காவிலோ இல்லை சீனாவிலோ பாகிஸ்தான் வாங்கிவிடும். ஆக இரு ஏழைநாடுகளும் மாற்றி மாற்றி மக்கள் பணத்தை விரயமாக்கி இஸ்ரேல், அமெரிக்கா போன்ற நாடுகளின் பொருளாதாரத்தை உயர்த்துகின்றன.

இப்படி இந்திய மக்களின் பணத்தை பட்டை நாமம் போடுவதன் பொருட்டே நெதன்யாகு திருவாளர் மோடியின் வருகைக்காக ஏங்குகிறார். இருப்பினும் பாஜக கும்பல் இந்த பயணத்தை இந்துத்துவத்தின் கொள்கைப் பூர்வமான கூட்டு என்று தத்துவம் பேசும்.

மேலும் திருவாளர் 2002 குஜராத் முசுலீம் மக்கள் இனப்படுகொலை புகழ் மோடி அவர்கள் அவர் முதலமைச்சராக இருந்த போது 2006-ம் ஆண்டிலேயே இஸ்ரேல் சென்றிருக்கிறார். ஒருவேளை பின்னர் தான் பிரதமராக வரும் போது நிறைய இறக்குமதி செய்வேன் என்று டீல் பேசினாரோ தெரியாது. 2015-ல் குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜி இஸ்ரேல் சென்று பாராளுமன்றத்தில் பேசியிருக்கிறார். அதன் பிறகு 2016-ம் ஆண்டில் சுஷ்மா ஸ்வராஜும் சென்றிருக்கிறார். அமெரிக்காவுடன் எஜமான் விசுவாசம் காட்டும் இந்தியா அமெரிக்காவின் இயல்பான அடியாள் இஸ்ரேலுடன் கூடிக் குலாவுவது வியப்பிற்குரியதல்ல.

இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் நடத்தும் பத்திரிகைகள் மற்றும் பாஜக கொள்கை பேசும் கார்ப்பரேட் ஊடகங்கள் அடிக்கடி இஸ்ரேல் புராணம் பேசும். சொட்டு நீர் பாசனம், ஆர்கானிக் அற்புதம் என்று ஏகப்பட்ட இஸ்ரேல் ‘சாதனைகளை’ ஸ்வயம் சேவக் அம்பிகள் எடுத்து விட்டிருக்கிறார்கள். தற்போது என்ன சொல்வார்கள்?

மகாபாரதத்தில் இந்துக்கள் கண்டுபிடித்த  பிரம்மாஸ்திரம் இதர அஸ்திரங்களுக்கு நிகரானதுதான் இந்த ஸ்பைக்கும், பேரக்கும் என்று கதைவிடலாம். எனினும் இந்த ஆயுதங்கள் சுதேசி இல்லை, விதேசி என்பதை எடுத்துச் சொன்னால் யூதர் வேறா, ஆரியர் வேறா என்று இளிப்பார்கள். இறுதியில் இஸ்ரேல் நித்தம் குண்டு வீசி பாலாஸ்தீன மக்களை அழிப்பதற்கு ஒர பெரும் பாக்கெட் மணியை இந்தியாவில் இருந்து வெட்டியதன் பொருட்டு ஒரு மாலை நேர காக்டெயில் பார்ட்டியை ஏற்பாடு செய்யும்.

அங்கே அம்பானி, அதானி, ஆர்.எஸ்.எஸ் பிராசரகர்கள், மோடி கும்பல், ஆர்னாப் போன்ற ஊடக தூண்கள் என பலர் சியர்ஸ் சொல்லுவார்கள்.

மேலும் தகவலுக்கு :

‘My Friend, Awaiting Your Historic Visit’: Israel’s Benjamin Netanyahu To PM Narendra Modi

காஷ்மீர் : ஊரடங்கு மட்டுமல்ல உள்ளத்தையும் அடக்கும் இந்திய அரசு !

0
ஹஃபீசா பானு

“அன்றைக்கு மசூதி முற்றுகையிடப்பட்டிருந்தது. இந்தப் பகுதியே பெரும் பரபரப்பில் இருந்ததால் ஜாவேதின் பள்ளிக்கு விடுமுறை அறிவித்திருந்தார்கள். அவன் பக்கத்தில் இருந்த பிள்ளைகளோடு விளையாடி விட்டு சாப்பிடுவதற்காக வீட்டுக்கு வந்தான். அவன் வந்து கொஞ்ச நேரத்தில் படைவீரர்கள் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தார்கள். நாங்கள் எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே எனது மகனைத் தூக்கிச் சென்றார்கள். நாங்கள் அவர்களிடம் கெஞ்சினோம்… ஆனால் அவர்கள் அதைப் பொருட்படுத்தவே இல்லை” என்கிறார் ஹஃபீசா பானு. காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹஃபீசா.

அது 1993-ம் ஆண்டின் குளிர்காலம். அப்போது ஹஸ்ரத்பால் மசூதி முற்றுகைக்குள்ளாகியிருந்தது. மொத்த மாநிலத்தின் மீதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

ஹஃபீசா மனநோயால் பாதிக்கப்பட்ட ஒரு காஷ்மீரித் தாய்.

கடத்திச் செல்லப்பட்ட தங்கள் பிள்ளையை மீட்க அந்தக் குடும்பம் எடுத்த முயற்சிகள் ஏதும் பலனளிக்கவில்லை. தீவிரவாத கும்பலைச் சேர்ந்த ஜாவேதை தாங்கள் கைது செய்து அழைத்துச் செல்லும் வழியில் தப்பிச் சென்று விட்டானென்று சாதிக்கிறது போலீசு. போலீசால் ‘தீவிரவாதி’ எனச் சொல்லப்படும் ஜாவேதின் வயது 13. ஜாவேதைத் தேட அலைந்து திரிந்த ஹஃபீசாவுக்கு அவரது மகள் ருக்‌ஷானா உதவியாக இருந்திருக்கிறார். சரியாக மூன்று வருடங்கள் கழித்து, 1996-ல் மனவுளைச்சல் தாளாமல் மாரடைப்பில் ருக்‌ஷானா இறந்த போது அவளுக்கு வயது 14.

இன்று ஹஃபீசா பானுவுக்கு வயதாகி விட்டது. தனது வீட்டின் மேற்கூரையை வெறித்துப் பார்த்துக் கொண்டோ, அல்லது கூரையில் உள்ள உத்திரங்களை மீண்டும் மீண்டும் எண்ணிக் கொண்டோ, அல்லது வீட்டுக் கதவில் உள்ள விரிசல்களை எண்ணிக் கொண்டோ, கம்பளிப் போர்வையில் அச்சிடப்பட்டிருக்கும் மலர்களை எண்ணிக் கொண்டோ தனது பொழுதைப் போக்குகிறார்.

ஹஃபீசா பானு குடும்பத்தினருடன்

மூன்று சிறிய அறைகளுடன் சமையல் அறையும் கொண்ட வீட்டில் ஹஃபீசா வசிக்கிறார். மண்சுவர்களால் ஆன ஒரு அறையில் உடலுறுப்பை இழந்த உறவினர் ஒருவர் வசிக்கிறார்; விருந்தினர்களை வரவேற்க மற்றொரு அறை; தனது இறந்து போன மகள் மற்றும் காணாமல் போன மகனின் நினைவுகளால் நிரப்பப்பட்ட அந்த மூன்றாவது அறையில் வசிக்கிறார் ஹஃபீசா.

அந்த அறையில் ஒரு கட்டில் போடப்பட்டுள்ளது. அதன் ஒரு முனையில் உடைந்த வானொலிப் பெட்டி ஒன்று கட்டித் தொங்கவிடப்பட்டுள்ளது; இன்னொரு முனையில் விதவிதமான மாத்திரைகள் நிறைந்த ஜாடி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அந்தப் படுக்கையில் தான் ஹஃபீசா துயில்கிறார். ஒவ்வொரு இரவும் ஈது பண்டிகைக்காக தனது மகனுக்குப் புத்தாடைகள் எடுப்பது போல் கனவு காண்கிறார் – மறுநாள் காலை அழுது கொண்டே விழித்தெழுகிறார். ஹஃபீசா மனநோயால் பாதிக்கப்பட்ட ஒரு காஷ்மீரத் தாய்.

மனநலன் சார்ந்த பிரச்சினைகள் காஷ்மீர் மாநிலத்தில் அசாதாரணமாக நிலவுகின்றது. இது குறித்து பல்வேறு தன்னார்வக் குழுக்கள் ஆய்வுகள் நடத்தி உள்ளன. எல்லைகள் இல்லாத மருத்துவர்கள் (Doctors without Borders) என்கிற அமைப்பு நடத்திய ஆய்வு ஒன்று சரிபாதி காஷ்மீரிகள் ஏதோவொரு வகையில் மனநலன் சார்ந்த பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறது.

அதே போல், கடந்த ஏப்ரல் 7-ம் தேதியன்று கடைபிடிக்கப்பட்ட உலக சுகாதார தினத்தை முன்னிட்டு “மன அழுத்தம் குறித்துப் பேசுவோம்” என்கிற தலைப்பிலான நிகழ்வுக்கு சிரீநகர் அரசு மருத்துவமனையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில், “காஷ்மீரில் சமூகம் சார்ந்த மனநோய் ஆய்வு” என்கிற அறிக்கை ஒன்று சமர்பிக்கப்பட்டுள்ளது.  இமான்ஸ் (IMHANS – Institute of Mental Health and Neurosciences) மற்றும் சில தன்னார்வக் குழுக்கள் காஷ்மீர் மக்களிடையே செய்த ஆய்வுகளை அடிப்படையாக கொண்டதே மேற்படி அறிக்கை.

சுமார் 11.3 சதவீத காஷ்மீரிகள் மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள் என்கிறது இப்புதிய ஆய்வு.  இது நாட்டின் பிற பகுதிகளை ஒப்பிடும் போது அசாதாரணமான அளவில் அதிகமாக உள்ளதென ஆய்வு நடத்திய தன்னார்வக் குழுக்கள் தெரிவித்துள்ளன. கலவரங்கள் மற்றும் வன்முறைகளின் விளைவாக ஏற்படும் அதிர்ச்சிகரமான சம்பவங்களை எதிர்கொள்வதே காஷ்மீர் மக்களிடையே மனநலன் சார்ந்த பிரச்சினைகளுக்கு அடிப்படையாக உள்ளதென மேற்படி ஆய்வு வெளிப்படுத்தி உள்ளது.

”1989-ம் ஆண்டுக்கு முன்பெல்லாம் ‘மோதலுக்குப் பிந்தைய மன அழுத்தப் பிரச்சினைகளுடன்’ (Post traumatic Stress Disorder) எந்த நோயாளிகள் வருவது அரிது. இப்போது நிலைமை அப்படியல்ல. தலைமுறை தலைமுறையாக அடிவாங்கிக் கொண்டிருக்கிறோம். யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானால் தாக்கப்படலாம் அல்லது கொல்லப்படலாம் என்பதே நிலைமை” என்கிறார் காஷ்மீரைச் சேர்ந்த மனநல மருத்துவர் முஷ்டாக் மர்கூப்.

காஷ்மீரில் மனநோய்களுக்கு ஆளானவர்களில் வெறும் 6.4 சதவீதம் பேர் மட்டுமே மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்கின்றனர் என்கிறார் இமான்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த மனநல மருத்துவர் அர்ஷாத் ஹுசைன். என்பதுகளின் இறுதியில் காஷ்மீரில் உள்ள ஒரே அரசு மனநல மருத்துவமனைக்கு சுமார் 1700 நோயாளிகள் சிகிச்சைக்காக வந்துள்ளனர்; தற்போதோ ஒருலட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு வருகின்றனர். என்றாலும், ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது சிகிச்சை எடுத்துக் கொள்பவர்களின் எண்ணிக்கை அற்பமாகவே உள்ளது.

எப்போது வேண்டுமானாலும் தாக்கப்படலாம் என்ற நிலையில் மாத்திரைகள் மட்டும் இவரது மனநோயினை தீர்க்குமா?

மனநோய்களுக்கான காரணங்களை விளக்கும் தன்னார்வக் குழுக்களின் ஆய்வறிக்கைகள் பெயரளவிற்கு காஷ்மீரில் நிலவும் “அசாதாரண சூழல்”, “பதட்டமான சூழல்” போன்ற சில தேய்வழக்குகளைப் பயன்படுத்தி விட்டு நகர்ந்து விடுகின்றன.

தன்னார்வக் குழுக்களின் ஆய்வறிக்கைகள் இறுதியில் “மருத்துவமனைகளை அதிகரிப்பது, மருத்துவர்களின் எண்ணிக்கையைக் கூட்டுவது, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது, சிக்கிச்சை எடுத்துக் கொள்ள ஊக்குவிக்கும் முகாம்களை நடத்துவது” மற்றும் இன்னபிற சொத்தையான தீர்வுகளையே முன்வைக்கின்றன. ஆனால், ஒரு மாநிலம் முழுவதையும் இராணுவத்தால் நிரப்பி அங்கு வாழும் மக்களை நிரந்தர அச்சத்தில் ஆழ்த்தி வைத்துள்ள மாபெரும் குற்றவாளியான இந்திய ஆளும் வர்க்கத்தை இவ்வறிக்கைகள் மென்மையான வார்த்தைகளில் கூட இடித்துரைக்க மறுக்கின்றன.

பொருளாதாரம், மொழி, பண்பாடு, கல்வி உரிமை, உழைக்கும் உரிமை உள்ளிட்ட சகல துறைகளிலும் நாடெங்கும் உள்ள உழைக்கும் மக்களை ஆளும் கும்பல் வஞ்சிக்கிறது. அனைத்து விதமான ஜனநாயக உரிமைகளையும் செல்லாக்காசாக்கி மக்களை சதாகாலமும் கண்காணிப்பின் கீழ் கொண்டு வர முயற்சிக்கிறது மோடி அரசு. இதற்காகவே ஆதார் போன்ற திட்டங்களையும், நவீன தொழில்நுட்பங்களையும் களமிறக்கியுள்ளன. அரசை எதிர்த்துப் போராடுவோரின் மீது அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விடுகிறது.

அடக்குமுறைக்கு ஆளாகிறவர்கள் வேறு வேறு பிரிவு மக்கள் என்றாலும் அவர்களின் எதிரி ஒருவன் தான். எனவே எங்கோ வட எல்லையில், கண்காணாத தொலைவில் வாழும் மக்களுக்கு நடந்த அநீதியாக இதைக் கடந்து செல்லாமல் காஷ்மீர்களுடன் கைகோர்க்க வேண்டிய கடமை ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட அனைவருக்கும் உள்ளது.

நன்றி: அல்ஜசிரா

மேலும் படிக்க:

சிவனடியார் ஆறுமுகசாமி அவர்களின் இறுதி ஊர்வலம் – வீடியோ

1

 தில்லைச் சிற்றம்பலத்தில் தமிழை அரங்கேற்றிய சிவனடியார் ஆறுமுகசாமி அவர்கள் கடந்த 8.04.2017 அன்று மதியம் இயற்கை எய்தினார். அவரது நல்லடக்கம் சிதம்பரம் அருகிலுள்ள அவரது கிராமமான குமுடிமுலையில் நடந்தது.

அவரது இறுதி ஊர்வலத்தில் மக்கள் கலை இலக்கியக் கழகம், மக்கள் அதிகாரம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, மற்றும் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் ஆகிய புரட்சிகர அமைப்புத் தோழர்களும் திரளான பொதுமக்களும் மாற்று அமைப்பு நண்பர்களும் கலந்து கொண்டனர்.

சிவனடியார் ஆறுமுகசாமி ஒரு எளிய மனிதர். எனினும், தில்லை தீட்சிதர்களின் அதிகார பலம், பணபலம் ஆகியவற்றைக் கண்டு அவர் எப்போதும் அஞ்சியதில்லை. தான் நம்பிய இறைவனிடம் அவர் கொண்டிருந்த உணர்வு பக்தி. தீட்சிதர்களின் ஆதிக்கத்துக்கெதிராக அவர் கொண்டிருந்த உணர்வு சுயமரியாதை.

அந்த சுயமரியாதை உணர்வுதான் தமிழ் பாடும் உரிமைக்கான போராட்டத்தில் அவரை இயக்கிச் சென்றது.
தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் எதிரான தாக்குதல்கள் தீவிரமடையத் தொடங்கியிருக்கும் காலம் இது.

இயற்கை அவருக்கு ஓய்வளித்து விட்டது. நந்தனையும் வள்ளலாரையும் எரித்த அதிகாரமிக்க சக்திகளை ஒரு எளிய மனிதன் எதிர்த்து நிற்க முடியும் என்று காட்டியவர் சிவனடியார் ஆறுமுகசாமி. அவரது மனத்திண்மையை வரித்துக் கொள்வதே அவருக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாக இருக்கும்.

• மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு
• மக்கள் கலை இலக்கியக் கழகம் – தமிழ்நாடு

டாஸ்மாக் கடைகளை மூடு – தமிழக மக்கள் போர்க்கோலம் !

0
வெறி கொண்ட நாயைப் போல் ஒரு பெண்ணை பாய்ந்து அடிக்கும் ஏ.டி.எஸ்.பி
கேலிச்சித்திரம்: முகிலன்

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள சாராயக் கடைகள் 2017, மார்ச் 31-க்குள் அகற்றப்பட வேண்டும் எனக் கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளிலிருந்து சுமார் 500 மீட்டர் சுற்றளவிற்குள் மதுபானக் கடைகள் வைக்கக் கூடாது, மதுபானக் கடைகளுக்குச் செல்லும் வழிகாட்டி பதாகைகள் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் வைக்கக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் செயல்பட்டு வரும் சுமார் 5,672 மதுக்கடைகளில் 3,321 மதுக்கடைகளை மூட வேண்டிய நிர்ப்பந்தம் தமிழக அரசிற்கு ஏற்பட்டது.

கோவை காக்கா பாளையம் – போலீசு குவிப்பு

தமிழகத்தை ஆளும் அதிமுக மாஃபியா கும்பலுக்கு இந்த உத்தரவு மிகப்பெரிய அடியாக இருந்தது. ஆட்சியில் இருப்பவர்களே சாராய ஆலைகளை நடத்துபவர்களாகவும், அதிமுகவின் அல்லக்கைகளே பார்களை நடத்துபவர்களாகவும் இருக்கும் போது இது அவர்களுக்கு எவ்வளவு பெரிய இழப்பு? அதோடு, அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ. 30,000 கோடி வருமானத்தை ஈட்டித் தரக் கூடியதாக டாஸ்மாக் இருப்பதால், ஏற்கனவே கடனில் ஓடிக் கொண்டிருக்கும் தமிழக அரசுக்கு இது புதிய தலைவலி.

அரசிற்கு ஏற்படும் நிதி இழப்பை முன் வைத்து சீராய்வு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த தமிழக அரசு, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருக்கும் கடைகளை மூடினால் மாநில அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ. 20,000 கோடி வரை இழப்பு ஏற்படும் என்றும், ஆகையால் 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் 28-ம் தேதி வரை தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. கடந்த மார்ச் 29 அன்று இதனை  விசாரனைக்கு எடுத்துக் கொண்ட உச்சநீதிமன்றம், வருமானத்திற்காக மக்களின் உயிரிழப்பை அங்கீகரிக்க முடியாது எனக் கூறி, உத்தரவை நிறுத்தி வைக்க மறுப்புத் தெரிவித்து விட்டது.

வெறி கொண்ட நாயைப் போல் ஒரு பெண்ணை பாய்ந்து அடிக்கும் ஏ.டி.எஸ்.பி

உச்சநீதிமன்றத்தின் இவ்வறிவிப்பைத் தொடர்ந்து தமிழக அரசு உடனடியாக, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள தமது டாஸ்மாக் கடைகளை, அருகில் உள்ள ஊர்ப்பகுதிகளுக்குள் கொண்டு செல்ல முயற்சித்து வருகிறது. இதற்கு எதிராக தங்களது ஊருக்குள் கொண்டு வரப்படும் டாஸ்மாக் கடைகளுக்கு அந்தந்தப் பகுதி மக்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து போராடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் சமளாபுரத்தில், நெடுஞ்சாலைப்பகுதியில் இருந்த 3 டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு அதற்கு மாற்று மதுக்கடைகளை ஊருக்குள் கொண்டு வருவதற்கான பணிகளைப் பார்த்து வந்தது மாவட்ட நிர்வாகம். இதனைக் கண்டித்து அப்பகுதி மக்கள் 11.04.2017 அன்று சோமனூர்- காரணம்பேட்டை சாலையில்   போரட்டத்தில் ஈடுபட்டனர். காலையில் இருந்து 9 மணிநேரம் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த எந்த ஒரு அதிகாரியும் வரவில்லை. பின்னர் மாலை சுமார் 4 மணி அளவில் அங்கு வந்த போலீசு அவர்களை களைந்து போகும் படி மிரட்டியது. அதற்கு மறுப்புத் தெரிவித்து தொடர்ந்து போராடிய மக்களின் மீது திருப்பூர் மாவட்ட ஏ.டி.எஸ்.பி பாண்டியராஜன் தலைமையிலான போலீசு வெறிக் கும்பல் கடும் தாக்குதலைத் தொடுத்தது. களத்தில் முன் நின்று உறுதியாகப் போராடிய பெண்களைக் குறி வைத்து கடுமையாகத் தாக்கிய ஏ.டி.எஸ்.பி. பாண்டியராஜன், அய்யம்பாளையத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணியை தமது கைகளால் ஓங்கி அறைந்தது பார்ப்பவர்களையே பதறச் செய்தது. சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ பரவலாக சென்றடைந்தது.

போலீசு நடத்திய தடியடியில் சமளாபுரத்தைச் சேர்ந்த சிவகணேஷ் என்பவருக்கு மண்டை உடைந்து இரத்தம் வழிந்தது. போலீசின் வெறித் தாக்குதலில் சுமார் 10 பெண்கள் உட்பட 30 பொதுமக்கள் படுகாயமடைந்தனர்.  பெண்களைக் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கிய திருப்பூர் மாவட்ட ஏ.டி.எஸ்.பி. பாண்டியராஜன், பல்லடம் டி.எஸ்.பி. மனோகரன், போலீசு ஆய்வாளர் தங்கவேல் ஆகியோரைக் கண்டித்து மக்கள் காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கினர். 12/04.2017 அன்று அதிகாலை 3.30 மணியளவில் போராட்டக்காரர்களை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி வலுக்கட்டாயமாகக் கைது செய்தது போலீசு

போலீசு தாக்குதலில் போராட்டக்காரர் ஒருவரின் தலை உடைக்கப்பட்டு ரத்தம் வழிய அழைத்துச் செல்லப்படும் காட்சி

அதே போல வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே பேராம்பட்டு கிராமத்தில் மாற்று டாஸ்மாக் கடை திறக்க ஏற்பாடுகள் நடந்து வந்தது.  இதற்கு அப்பகுதி மக்கள் ஏற்கனவே கடுமையான எதிர்ப்புத் தெரிவித்து வந்திருந்தனர். ஆனால் அதனைப் பொருட்படுத்தாத மாவட்ட நிர்வாகம் 11.04.2017 அன்று காலை அங்கு கடையைத் திறந்தது. இதனால் வெகுண்டெழுந்த அப்பகுதி மக்கள், டாஸ்மாக் கடைக்குள் புகுந்து பாட்டில்களை அடித்து நொறுக்கிக் கடையைச் சூறையாடினர்.

அதே போல திருவள்ளூர் மாவட்டம் முழுக்க சுமார் 176 நெடுஞ்சாலை மதுபானக் கடைகளை மூடியது மாவட்ட நிர்வாகம். அக்கடைகளுக்கு மாற்றுக் கடைகளாக அருகில் உள்ள கிராமப்புறங்களில் கடைகளைத் திறக்க நடைபெற்று வரும் ஏற்பாடுகளை அப்பகுதி மக்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே, அனுப்பம்பட்டு பகுதியில் டாஸ்மாக் கடை 11.04.2017 அன்று திறக்கப்பட இருந்தது. இதனைக் கண்டித்து அனுப்பம்பட்டு மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதியில் உள்ள கந்தன்பாளையம்,அக்கரைமேடு, ஏரிமேடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் நேற்று காலை சுமார் 11 மணி அளவில் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அதே போல திருவள்ளூர் மாவட்டம் ஸ்ரீகாளிகாபுரத்திற்கு மாற்றம் செய்யப்பட்ட டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து 100க்கும் மேற்பட்ட ஊர்ப் பொதுமக்கள் ஒன்று கூடி நடத்திய விடாப்பிடியான போராட்டத்தின் பயனால், டாஸ்மாக் கடை அப்பகுதியில் இருந்து ஒரே நாளில் அகற்றப்பட்டது.

அரூர் போராட்டம்

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே நெடுஞ்சாலையில் இருந்த டாஸ்மாக்கை  அருகில் உள்ள மொண்டுகுழி கிராமத்திற்கு மாற்றியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஏப்ரல் 10-ம் தேதி அன்று சாலை மறியலில் ஈடுபட்டதோடு, இப்பகுதியில் கடை வைத்தால் குடும்பத்துடன் தீக்குளிக்கப் போவதாக அறிவித்தனர். அதோடு ஒரு பெண் அங்கேயே தீக்குளிக்கவும் முயற்சித்தார். பின்னர் அங்கு வந்த வருவாய்த்துறை அலுவலர்கள், கடையை அங்கிருந்து அகற்றுவதாக உறுதியளித்த பின்னர் பொதுமக்கள் தற்காலிகமாகப் போராட்டத்தைக் கை விட்டுக் கலைந்து சென்றனர்.

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே மூடப்பட்ட டாஸ்மாக் கடையை மூலிமங்கலம் அருகே கிலுவக்காடு பகுதிக்கு மாற்ற மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளைக் கண்டித்து சுமார் 25 பெண்கள் உட்பட 35 பேர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே சீனிவாச நகரில், மாற்று டாஸ்மாக் கடைகளைத் திறக்க வந்த ஊழியர்களை முற்றுகையிட்டு 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர், அங்கு வந்த அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், டாஸ்மாக் கடை தொடர்ச்சியாக மூடப்பட்டது. ஆண்டிப்பட்டி அருகே குமாரபுரம் டாஸ்மாக் கடைக்கான கட்டுமான வேலைகள் நடைபெறுவதை அறிந்த அப்பகுதி மக்கள் உடனடியாக அங்கு சென்று அங்கு கட்டுமானப் பணிகளுக்கு வைக்கப்பட்டிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 300-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதே போல், அருப்புக்கோட்டை அருகே சலுக்குசார்ப்பட்டியில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை போராட்டம்

மேலும் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, உளுந்தூர்ப்பேட்டை அருகே கெடிலம், திண்டுக்கல் மாவட்டம் நத்தம், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள திங்குவார்பட்டி, வேலூரை அடுத்துள்ள காட்பாடி, நாமக்கல் ராசிபுரம், தஞ்சாவூர், நெல்லை, அம்பாசமுத்திரம், கடலூர், விருத்தாச்சலம், கோவில்பட்டி போன்ற பல ஊர்களிலும் டாஸ்மாக் கடைக்கு எதிராக பொதுமக்களே களத்தில் இறங்கிப் போராடத் தொடங்கியுள்ளனர்.

கோவை மாவட்டத்தில் செங்காளிப் பாளையம்  மற்றும் காக்கா பாளையத்திலும் டாஸ்மாக் கடை திறக்கக் கூடாது என தொடர்ச்சியாக அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில் காக்கா பாளையம் டாஸ்மாக் கடையைத் திறக்க கடந்த ஏப்ரல் 11 அன்று கருத்தம்பட்டி டி.எஸ்.பி ஜெயச்சந்திரன், 3 இன்ஸ்பெக்டர்கள், 10 எஸ்.ஐ.கள் தலைமையில் சுமார் 50 ஆயுதப்படை போலீசு கும்பல் குவிக்கப்பட்டது. அரசின் ஏவல்நாய்களின் பாதுகாப்போடு காக்கா பாளையம் சாராயக்கடை திறக்கப்பட்டது. அதே போல, மக்கள் எதிர்ப்பு அதிகமாக உள்ள செங்காளிப் பாளையத்திலும் போலீசார் குவிக்கப்பட்டு போலீசு பாதுகாப்போடு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது.

வெறிநாய்கள் போல மக்களின் மீது பாய்ந்து பிடுங்கி, மிரட்டி இன்று திறந்து விடலாம். ஆனால் இன்னும் எத்தனை நாளைக்குத் தான் மக்களின் வெஞ்சினத்திலிருந்து இந்த சாராயக்கடைக்குப் பாதுகாப்பு கொடுக்க முடியும்?

எடப்பாடி – மக்கள் போராட்டம்

கடந்த 2015-ம் ஆண்டு சசிப்பெருமாள் மூட்டிய தீ, பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் உணர்வுமிக்கப் போராட்டத்தால் தமிழகம் முழுவதும் பற்றிப் படர்ந்தது. “மூடு டாஸ்மாக்கை” என முழக்கம் வைத்து மக்கள் அதிகாரம், பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு., பெ.வி.மு., ம.க.இ.க., உள்ளிட்ட புரட்சிகர அமைப்புகள் பாசிச ஜெயா அரசிற்கு எதிராக போர்க்கோலம் பூண்டனர். மக்கள் கலை இலக்கியக் கழகத்தைச் சேர்ந்த தோழர் கோவன் டாஸ்மாக்கிற்கும், அதன் வருமானத்தில் கொழுக்கும் ஜெயாவிற்கும் எதிராக பாடிய பாடலுக்காக கைது செய்யப்பட்டார். இக்கைதின் மூலம் டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டத்தை ஒட்டுமொத்த தமிழகத்தின் போராட்டமாகப் பற்ற வைத்தது பாசிச ஜெயா அரசு. சாராயத்திற்கு எதிரான மக்களின் உணர்வுநிலை அரசிற்கு எதிராக இருந்ததால் தான் கடந்த சட்டமன்றத் தேர்தலில் பாசிச ஜெயாவே, படிப்படியாக சாராயக் கடைகளை மூடப் போவதாக அறிவித்தார்.

இன்று மீண்டும் தமது வாழ்நிலையை சீர்குலைக்க வரும் அரசிற்கு எதிராக அதே உணர்வு நிலை மக்களிடையே எழுந்துள்ளது. ஒட்டுமொத்த தமிழகமே இங்கு டாஸ்மாக்கிற்கு எதிராக போர்க்கோலம் பூண்டுள்ளது. இது ஒரு துவக்கம் தான். இனி மணல் கொள்ளை, கல்விக் கொள்ளை என எது வந்தாலும் போராடப் பழகிய தமிழ் மக்கள் தங்கள் உரிமைகளைத் தாங்களே வென்றெடுப்பார்கள்.

வறுமையின் கணிதம் – கேலிச்சித்திரங்கள்

0

உலகளாவிய வறுமை
ஓவியம்: Steve Greenberg, அமெரிக்கா.


விலைவாசியும் வறுமையும்
ஓவியம்: Saad Murtadha, ஈராக்.

வறுமையின் கணிதம்
ஓவியம்: Vladimir Kazanevsky, பிரேசில்.

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த உலகிலே?
ஓவியம்: Dan Carino, அமெரிக்கா.

பசியாறுதலின் இரண்டு யதார்த்தங்கள்
ஓவியம்: Daniel Clós Cesar பெரு.

இரண்டு வரிசைகள்
ஓவியம்: Daniel Clós Cesar, பிரேசில்.


ஷாப்பிங் வண்டிகளின் விசித்திரங்கள்
ஓவியம்: Steve Greenberg, துருக்கி.

நன்றி: Cartoon Movement.

மம்தா பானர்ஜி தலைக்கு விலை வைத்த பா.ஜ.க தலைவர்

3
மம்தா பானர்ஜி மற்றும் பா.ஜ.கவின் இளைஞர் அணி தலைவர் யோகேஷ் வர்ஷினி

ம்தா பானர்ஜி வங்கத்தின் ஜெயலலிதா. அவரை எதிர்த்து கார்ட்டூன் வரைந்தவர்கள், பகிர்ந்தவர்கள் கூட கைது செய்யப்பட்டிருக்கின்றனர். வங்கத்தில் திரிணாமூல் காங்கிரசு கட்சியை சகல மட்டங்களிலும் உறுதியாக நிறுத்தியிருக்கின்ற மம்தா பானர்ஜி, மோடியின் வருகைக்கு பிறகு பா.ஜ.கவை தீவிரமாக எதிர்த்து வருகின்றார்.

இருப்பினும் இத்தகைய ‘இரும்பு’ பெண்மணியைக் கண்டு மற்றவர்கள் அஞ்சினாலும் பார்ப்பன இந்துமதவெறியர்கள் அஞ்சுவதில்லை. கருணாநிதி, பினரயி விஜயன் தலையை வெட்டி வருவோருக்கு பரிசு என்று அறிவித்த ஆர்.எஸ்.எஸ் கூட்டம் தற்போது மம்தா பானர்ஜியின் தலைக்கும் பரிசு அறிவித்து விட்டது.

மேற்கு வங்கத்தின் பிர்ப்ஹம் மாவட்டத்தில் நடந்த ஹனுமன் ஜெயந்தி ஊர்வலம் வன்முறையில் முடிந்து போலீசு தடியடி வரை போயிருக்கிறது. அதனால் கொதித்தெழுந்த யோகேஷ் வர்ஷினி எனும் பா.ஜ.கவின் இளைஞர் அணி தலைவர், முதலமைச்சர் மம்தாவின் தலையை வெட்டி வருவோருக்கு 11 இலட்சம் ரூபாயை பரிசுப் பணமாக அறிவித்திருக்கிறார்.

“சரஸ்வதி பூஜைக்கு ஒருபோதும் அனுமதிக்காத மம்தா பானர்ஜி அதுபோல ராமநவமி, ஹனுமன் ஜெயந்தி ஊர்வலங்களையும் அனுமதிப்பதில்லை. மீறினால் மக்களுக்கு கடும் தடியடி உண்டு. இப்தார் விருந்துகளை ஏற்பாடு செய்யும் அவர் எப்போதும் முசுலீம்களுக்கு ஆதரவாக செயல்படுகிறார்” என்று அவர் இந்து முன்னணி இராம கோபாலன் பாணியில் பொங்கியிருக்கிறார். இதை செய்தி நிறுவனமான ஏஎன்ஐ வீடியோவாக வெளியிட்டிருக்கிறது.

பாஜக தலைவர் கைலாஷ் விஜய்வர்கியா

இது குறித்து பாஜக தலைவர் கைலாஷ் விஜய்வர்கியா விளக்கமளித்த போது மம்தா பானர்ஜி இப்படி சிறுபான்மை மக்களுக்கு ஆதவாக அரசியல் செய்தாலும் இத்தகைய வன்முறை பேச்சுக்களை தான் ஏற்கவில்லை என்று கூறியிருக்கிறார். அப்போதும் கூட அவர் தனது இளைய பங்காளியை கண்டிக்கவில்லை. காரணம் ரவுடி சாமியார் யோகி ஆதித்யநாத் உபி முதலமைச்சராக வந்த பிறகு இப்படி அடாவடியாக பேசுவோரே கட்சியிலும், இந்துக்களிடமும் பெயர் எடுத்து முன்னேற முடியும் என்று பா.ஜ.க பண்டாரங்களிடம் கடும் போட்டி இருக்கிறது. இங்கேயும் எச்ச ராஜா அப்படி ஊளையிடுவது கூட இத்தகைய கனவுகளை எதிர்பார்த்துத்தான்.

பிர்ப்ஹம் மாவட்டத்தில் இந்துமதவெறியர்களின் ஊர்வலத்திற்கு போலீசு அனுமதி கொடுக்கவில்லை. அதை மீறி இவர்கள் ஜெய் ஸ்ரீ ராம் கோஷம் போட்டு, காவிக் கொடியுடன் ஊர்வலம் சென்றிருக்கிறார்கள். ஊர்வல ஏற்பாட்டளர்கள் தாங்கள் ஆயுதம் ஏதும் ஊர்வலத்தில் கொண்டு செல்லவில்லை என்று போலீசிடம் விளக்கமளித்தார்களாம். இதிலிருந்தே இவர்களது வன்முறை திட்டம் தெரிகிறது. ஏனெனில் இதற்கு முன்னர் நடந்த ராம நவமி ஊர்வலத்தில் இக்கூட்டம் வாள்களையும் மற்ற ஆயுதங்களையும் பகிரங்கமாக கொண்டு சென்று பீற்றியிருக்கிறது. அப்போது பா.ஜ.கவின் மேற்கு வங்கத் தலைவரே கலந்து கொண்டிருக்கிறார். அதன்படி பார்த்தால் போலீசின் ஊர்வல அனுமதி மறுப்பு மிகவும் நியாயமானது.

மம்தா பானர்ஜி போன்ற தீவிரமான மோடி எதிர்ப்பு தலைவர்கள் ஆளும் மாநிலத்திலேயே இப்படி ஒரு காக்கி டவுசர் தலைவெட்டி பரிசு அளிக்க முடியுமென்றால் பா.ஜ.க மாநிலங்களில் முசுலீம்களுக்கும், தலித்துக்களுக்கும், மற்ற சிறுபான்மை மக்களுக்கும், கம்யூனிஸ்டுகளுக்கும் உள்ள கதி என்ன?

ரவுடித்தனம் செய்யும் காவி பயங்கரவாதிகளை எதிர்த்து தெருவிலும், ஊரிலும் களமிறங்க வேண்டும். சட்டமன்றம் பாராளுமன்றத்தில் இவர்களை முறியடித்து விடலாம் என்று மனப்பால் குடிப்போரால் இனி பலனேதுமில்லை.

மேலும் படிக்க,

Watch: BJP youth wing leader offers Rs 11 lakh for Mamata Banerjee’s head

போராடும் மக்களை மூர்க்கமாக தாக்கும் அரசு !

1

PP Logo12-04-2017

பத்திரிகைச் செய்தி

 ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து – வருமானவரி ரெய்டுகள்,
போராடும் விவசாயிகள் மீதும், டாஸ்மாக்கை எதிர்த்தும்,
குடிநீர் கேட்டும் போராடும் பெண்கள் மீதும், போலீசின் காட்டுமிராண்டித் தாக்குதல்!
மோடி அரசும், எடப்பாடி பழனிச்சாமி அரசும், பதவியில் நீடிக்க
எந்த தார்மீக உரிமையும் அருகதையும் கிடையாது.

நியாயத்திற்காக போராடும் மக்களை மூர்க்கமாகத் தாக்குவது
அரசியல் அதிகார கிரிமினல் குற்றவாளிகளிடம் மென்மையாக அணுகுவது. .
இதுதான் அரசு, போலீசு, நீதித்துறை, ஊடகத்தாரின் நிலை. இனி நாம் என்ன செய்வது?

அன்புடையீர் வணக்கம் !

ஆர்.கே. நகர் தேர்தலில் பணம் பட்டுவாடாவை தடுக்க முயன்றதாகவும், அதையும் மீறி நடந்து விட்டதாகவும், அதனாலேயே தேர்தலை  ரத்து  செய்ததாகவும் தேர்தல் ஆணையமும் மத்திய அரசும் அறிவித்து நாடகம் ஆடுகின்றன. இது ஒரு வகையில் அவர்களின் கையாலாகாத்தனத்தை ஒப்புக்கொள்வதாகவே இருக்கிறது.

அதிக எண்ணிக்கையில் மத்திய தேர்தல் பார்வையாளர்கள், மத்திய காவல் படைகள், பறக்கும் படைகள், காவல் துறை அதிகாரிகள் இடமாற்றம் என அதி தீவிர நடவடிக்கை, கண்காணிப்பு என்பது வெறும் பாவ்லாதான். ஓட்டுகட்சி அரசியல் குற்றவாளிகள் தாங்கள் பிடிபட்டு விடுவோம், சிக்கலில் மாட்டிக்கொள்வோம் என்று அஞ்சவில்லை. மாறாக நெஞ்சை நிமிர்த்தி கொண்டு பேட்டி கொடுக்கிறார்கள். கண்டெய்னர் பணத்தை காப்பாற்றி கொடுத்த தேர்தல் ஆணையமும், மத்திய அரசும்  இன்றைக்கு உத்தமர் வேடம் போடுவதை எப்படி நம்புவது?

வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ரெய்டுகள் என்பது உருட்டி மிரட்டி அரசியல் நோக்கங்களை நிறைவேற்றவே பயன்படுத்தப்படுகின்றன. நேற்று ராம்மோகன் ராவ், கரூர் அன்புநாதன், நத்தம் விசுவநாதன், சைதை துரைசாமி, இன்று விஜயபாஸ்கர், துணை வேந்தர் கீதாலட்சுமி மீதான ரெய்டுகள் எல்லாம் காதும் காதும் வைத்தாற்போல் எந்த விவரங்களையும் வெளியிடாமல் கமுக்கமாக நடக்கின்றன. இறுதியில் வருமானத்திற்கு வரி கட்டுங்கள் என பேரம் பேசி முடிக்கப்படுகிறது.

விதிமுறைகள் தெரிந்தே மீறப்பட்டுதான், தொடர்ந்து தேர்தல்கள் நடத்தப்படுகின்றன.  டாஸ்மாக் வேண்டாம் என போராடும் மக்கள் மீது தடியடி, தேசத்துரோக வழக்கு, சிறை என செயல்படும் அரசும், போலீசும், தேர்தலை சீர்குலைக்கும் அரசியல் குற்றவாளிகளுடன் கூட்டு சேர்ந்துகொள்கிறார்கள். தேர்தல் நடப்புகளும், இன்று தமிழகத்தில் நடக்கும் ஏராளமான போராட்டங்களும்  இதையே காட்டுகின்றன. மெரினா முதல் டெல்லி விவசாயிகள் போராட்டம் வரை நெடுகக் காண்கிறோம். பணப்பட்டுவாடா போன்ற கிரிமினல் நடவடிக்கை, ஜனநாயகத்துக்கே அச்சுறுத்தல் என்றால் அந்த குற்றவாளிகள் மீது தேசத்துரோக குற்றம்சாட்டி உள்ளே தள்ளுவதற்கு பதில், வருமான வரித்துறை அமலாக்கத்துறை என்ற அட்டைக் கத்தியைக்  கொண்டு ரெய்டுகள் நடத்தி சவடால் விடுவது ஏன்?

செத்துக்கொண்டிருக்கும் விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு  தீர்வு காணாமல் சூழ்ச்சி, இழுத்தடிப்பு, அவதூறு ஆகியவற்றால் போராட்டத்தை அரசு ஒடுக்குகிறது. ஆங்கிலேயர் காலத்து போலீசைப் போல பிரச்சனைகளை பேசுவதற்கும், பிரச்சாரம் செய்வதற்கும், போராடுவதற்கும் கூட  உரிமை இல்லை என தடுக்கிறது. மக்களை உரிமைகளற்ற அடிமைகளாக  கருதுகிறது போலீசு. விவசாயிகளுக்கு ஆதரவாக போராட திரளும் நான்கைந்து மாணவர்களும் இளைஞர்களும் கூட வேட்டையாடப்படுகிறார்கள்.

தேர்தல்களில் பணப்பட்டுவாடா, ஊழல் முறைகேடுகளுக்கு தண்டனையை அதிகரிப்பது, சட்டத்தை கடுமையாக்குவது போன்ற தீர்வுகளை முன்வைக்கின்றனர். வாக்காளர்கள் தேர்தல் நடக்கும்போது மட்டும்தான் பணம் வாங்குகிறார்கள். ஆனால் தேர்தல் நடத்தும் அதிகார வர்க்கம்  ஆண்டு முழுவதும் ஊழல், முறைகேடு. கிரிமினல் குற்றங்களில் மூழ்கி கிடக்கிறது.

சாதி, மதம், பணம், பரிசுப்பொருள், ஊழல் முறைகேடு இல்லாமல் ஒரு நாளும் தேர்தலை நடத்த  முடியாது என்பது மத்திய அரசுக்கும், தேர்தல் ஆணையத்திற்கும், தேர்தலில் பங்கேற்கும் கட்சிகளுக்கும் நன்கு தெரியும். தேர்தல்கள் மூலம் ஆளை மாற்றுவதால் எந்த தீர்வும் ஏற்படாது. அவர்களால் இந்த ஊழல் அரசு கட்டமைப்பை வைத்து நியாயமான தேர்தலை ஒருக்காலும்  நடத்த முடியாது.

போராடும் அய்யாக்கண்ணு சொல்வதைப் போல மாத சம்பளத்திலும், லஞ்ச ஊழலிலும் ஊறித் திளைக்கும் அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும், விவசாயிகளின் கஷ்ட நஷ்டங்கள் புரியாது. ஒரு மாதமாக பல்வேறு போராட்டங்களை டெல்லியில் நடத்தி துன்புறும் தமிழக விவசாயிகள் போராட்டத்திற்கு தீர்வு காண முடியாத மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளை பாதுகாக்கும் என எப்படி நம்புவது?.

டாஸ்மாக்கை மூடு என போராடும் சாதாரண மக்கள் மீது காட்டுமிராண்டித் தாக்குதல் நடத்தும் எடப்பாடி பழனிச்சாமியின் அரசு பதவியில் நீடிக்க எந்த தார்மீக உரிமையும் அருகதையும் கிடையாது.

பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்பவர்கள் :

  1. வழக்கறிஞர் சி.ராஜு, மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்.
  2. தோழர்..கணேசன், மாநில ஒருங்கிணைப்பாளர்,பு.மா.இ.மு.
  3. தோழர்.வெற்றிவேல் செழியன், மண்டல ஒருங்கிணைப்பாளர். மக்கள் அதிகாரம்.
  4. தோழர்.கற்பக விநாயகம், பு.ஜ.தொ.மு. ஐ.டி.ஊழியர்கள் பிரிவு.
  5. தோழர். அமிர்தா, மக்கள் அதிகாரம், சென்னை.

தோழமையுடன்
வழக்குரைஞர். சி.ராஜு,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்.

போராட்டத்தில் ஓய்வறியா பாலஸ்தீனம் – படக்கட்டுரை

0

நம்மைப் பொறுத்தவரை ஒரு மாதம் என்பது ஊதியத்திற்கான கால மதிப்பீடு. அல்லது பள்ளிக் குழந்தைகளின் தேர்வுக் காலம். அல்லது வருடத்தில் கடந்து செல்லும் மற்றுமொரு மாதம். ஆனால் பாலஸ்தீன மக்களுக்கோ அது அப்படியல்ல. பிறப்பு, இறப்பு, பட்டினி, போராட்டம், வீடிழப்பு, அகதிகாளய் வெளியேறுதல், ஆதரவற்ற குழந்தைகள், உறுப்புகள் இழந்தோர், வேலையிழந்தோர் என்று வாழ்வின் அத்தனை அழிவுகளையும் அன்றாடம் பார்த்து வரும் மண்ணிது. மார்ச் மாதம் 2017-ல் மட்டும் அங்கு நடந்தவற்றின் காட்சிப்பதிவுகளை இங்கே காணலாம்.

தெற்கு காசாவில் இருக்கும் ராஃபா அகதி முகாமில் 15 வயது சிறுவனான யூசுப் ஷபீன் அபு அத்ராவின் இறுதி ஊர்வலம். சிறுவன் அபு அத்ரா, காசா மற்றும் இஸ்ரேல் எல்லையில், இஸ்ரேலிய இராணுவத்தின் ஷெல் தாக்குதலில் கொல்லப்பட்டான். அன்றாடம் ஒப்பாரியும் முழக்கமும் கேட்கும் மண்ணிது. (மார்ச் 22)

ஸ்ரேலின் மேற்கு கரை நகரமான பெத்லகேமில் இஸ்ரேலின் பிரம்மாண்டமான காங்கிரீட் சுவருக்கு அருகே “தி வாலட் ஆஃப் ஹோட்டல்” எனும் விடுதியின் முகப்பு. இதைத் திறந்து வைத்த பிரிட்டீஷ் கலைஞரான பாங்க்ஸ்கி, “உலகின் மோசமான காட்சியை தரிசிக்க உதவும் விடுதி” என்று கூறினார். இந்த விடுதியில் சாப்பிடச் செல்வோரின் நிலையை பாருங்கள்! (மார்ச் 3)

ஸ்ரேலின் மேற்கு கரை நகரமான நாப்லஸில், இஸ்ரேலிய விமான போக்குவரத்து நிறுவனத்தால் கைவிடப்பட்ட போயிங் விமானம் ஒன்று காலி மனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதை கடந்து போகிறார் பாலஸ்தீனியர் ஒருவர். குப்பைகளுக்கு இடம் கொடுக்கும் இசுரேல் பாலஸ்தீனர்களின் தாய்நாட்டிற்கு எதையும் கொடுப்பதில்லை.(மார்ச் 7)

தெற்கு காசாவிலிருந்து ராஃபே வழியாக எகிப்திற்கு அகதிகளாய் செல்ல அனுமதி கேட்டு காத்திருக்கிறார்கள் பாலஸ்தீன மக்கள். மனிதாதபிமான உதவிக்காக இந்தப் பாதையை எகிப்து திறந்திருக்கிறது. இருக்குமிடத்திலும் வாழ்வில்லை, செல்லுமிடத்திலும் நிம்மதியில்லை! (மார்ச் 7)

ழைக்கும் மகளிர் தினமன்று, இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு முடிவுக்கு வரவேண்டுமென்றும், பெண்களுக்கு எதிரான வன்முறையை எதிர்த்தும் காசா நகரத்தில் பாலஸ்தீனிய பெண்கள் நடத்திய போராட்டம். இழப்புகளுக்கு அஞ்சாத பாலஸ்தீன பெண்கள்! (மார்ச் 8)

ரு கால் அகற்றப்பட்ட பாலஸ்தீனக் கலைஞரான முகமது டோடா, காசா நகர கடற்கரையில் காயமுற்ற பாலஸ்தீனர்களுக்கா அனுசரிக்கப்படும் மார்ச் 12 நாளை குறிப்பிடும் மணற் சிற்பத்தின் பின் நிற்கிறார். காயமுற்றவர்களுக்கு ஒரு நாளென்றால், ஒரு ஆக்கிரமிப்பில் அவதிப்படும் மண்ணில் இன்னும் எத்தனை நாட்கள் இருக்கும்? (மார்ச் 12)

காசா நகரத்தை பிரித்திருக்கும் இஸ்ரேலின் தடுப்புச் சுவர் தற்போது பத்தாவது வருடத்தில் நுழைகிறது. அதை அகற்றுமாறு காசாவில் இருக்கும் ஐநா அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள் பாலஸ்தீன மக்கள். ஆண்டுகள் பத்தானாலும் சோர்வடையாத போராட்டம்! (மார்ச் 13)

மார்ச் 6 அன்று, அங்கே அனைவரும் அறிந்த களச்செயல்பாட்டளரும், அறிஞருமான பாசெல் அல் அராஜ், இஸ்ரேலின் இராணுவத்தால் கொல்லப்பட்டார். அவரது இறுதி ஊர்வலம் மேற்கு கரை நகரமான பெத்லஹேம் அருகே இருக்கும் அல் வாலஜா எனும் கிராமத்தில் நடந்தது. ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட ஊர்வலத்தில் பாலஸ்தீன பெண்கள் தலை வணங்காத வீரத்துடன் கலந்து கொள்கிறார்கள். (மார்ச் 17)

மேற்கு கரை நகரமான ஹெப்ரான் அருகே இருக்கும் க்யுலாக் கிராமத்தின் முதன்மை நுழைவு வாயிலை 17 வருடங்களாக மூடிவிட்டது, இஸ்ரேல் இராணுவம். இதை எதிர்த்து போராடும் பாலஸ்தீன மக்கள். சொந்த மண்ணில் எத்தனை தடுப்புக்கள், அரண்கள், சுவர்கள், சோதனைச் சாவடிகள்! (மார்ச் 17)

தெற்குகரை நகரமான பெத்லகேமில் இஸ்ரேல் இராணுவம் அமைத்திருக்கும் சோதனை வாயிலில் குவிந்திருக்கும் பாலஸ்தீன தொழிலாளிகள். வாயில் திறந்த உடன் இஸ்ரேல் பகுதியில் விரைவாக வேலைக்கு போக அவர்கள் முன்பே வந்து காத்திருக்கிறார்கள். இவர்களைச் சுரண்டும் இஸ்ரேல் பாலஸ்தீன மக்களை போராளிகளாக பார்க்க விரும்புவதில்லை! (19 மார்ச்)

மீபத்தில் சுவிட்சர்லாந்து அரசு ஒரு மசோதாவைக் கொண்டு வந்து அதன் மூலம் பாலஸ்தீன மக்களுக்கு போய்ச் சேரும் நன்கொடைகளை, அரசுப்பணத்தை தடை செய்திருக்கிறது. அதைக் கண்டித்து பாலஸ்தீனத்தின் மேற்கு கரை நகரமான ராமல்லாவில் சுவிட்சர்லாந்து நாட்டின் பிரதிநிதித்துவ அலுவலகம் எதிரில் பாலஸ்தீன மக்களின் ஆர்ப்பாட்டம். எப்படியெல்லாம் பொருளாதார முற்றுகை போடுகிறார்கள்! (20 மார்ச்)

மார்ச் 22 அன்று மேற்கு கரை நகரமான பெத்லகேமில் ஆர்ப்பாட்டம் செய்த பாலஸ்தீன மக்கள் மீது ரப்பர் பூசப்பட்ட இரும்பு குண்டுகள், காதைக் கிழிக்கும் ஒலிக் கொண்டுகள் மற்றும் கண்ணீர் குண்டுகளை வீசியது இசுரேலின் இராணுவம். இதில் கொல்லப்பட்ட மக்களின் உடல்களை தர மறுக்கும் இசுரேலைக் கண்டித்து போராடுகிறார்கள் மக்கள். 2015-ம் ஆண்டிலிருந்து இப்படிக் கொல்லப்படும் மக்களின் உடலை தர மறுத்து சுயேச்சையான சவப்பரிசோதனை செய்வதையும், முறையாக நல்லடக்கம் செய்வதையும் தடுக்கிறது இசுரேல் அரசு. நல்லடக்கம் செய்வது குறித்து கொலைகாரர்கள் இப்படித்தான் நடந்து கொள்கிறார்கள்!

ராணுவத்தில் பணியாற்ற மறுத்த மூன்று மாணவர்களை இஸ்ரேல் அரசு கைது செய்ததைக் கண்டித்து அதி தீவிர பழமைவாத யூதர்கள் ஜெருசேலத்தில் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் தண்ணீரை பீற்றி கலைக்க முயல்கிறது போலீசு. இசுரேலின் மக்கள், இராணுவம் இரண்டு பிரிவுமே ஒன்றிலிருந்து ஒன்றை பிரிக்க முடியாத படி இணைந்திருக்கிறது.

சுரேலின் எல்லையில் இருக்கும் வடக்கு காசாவில் ஒரு இசுரேலிய உளவுத்துறை அதிகாரி, பாலஸ்தீனர்களிடம் தகவல் சொல்லுபவர்களை சேர்க்க முயற்சிக்கிறார். இந்த எல்லையில் பாலஸ்தீனத்தின் பக்கம் இருக்கும் பகுதியை ஹாமாஸ் அதிகாரிகள், மாசென் ஃபுகாகா கொல்லப்பட்ட பிறகு மூடி விட்டனர். ஆட்காட்டிகள் இன்றி ஆக்கிரமிப்பு ஏது? (மார்ச் 26)

மேற்கு கரை நகரமான ஹெப்ரானில் குடியமர்த்தப்பட்டிருக்கும் யூதக் குடியிருப்புக்களை கண்டித்து பதாகை பிடிக்கிறார் ஒரு பாலஸ்தீனத்து பெண். இசுரேலின் குடியிருப்பு ஒரு ஆக்கிரமிப்பு – பாலஸ்தீனத்தின் குடியுரிமை ஒரு அடிப்படை உரிமை. (மார்ச் 26)

கொல்லப்பட்ட ஹமாசின் அதிகாரியான மாசென் ஃபுகாகாவின் மகளை தோளில் சுமக்கிறார் காசாவில் செயல்படும் ஹமாசின் புதிய தலைவரான யாஹ்யா சின்வார். கொல்லப்பட்ட தலைவருக்கு நினைவஞ்சலி கூட்டம் நடத்தும் ஹமாஸ் ஆதரவாளர்கள். அப்பா போனால் என்ன என்று மகன் வந்து விட்டான்!

பாலஸ்தீனத்து மண்ணை ஆக்கிரமித்த இசுரேலைக் கண்டித்து போராடிய ஆறு பாலஸ்தீனர்கள் மார்ச் 30, 1976-ம் ஆண்டில் கொல்லப்படுகிறார்கள். அந்த தினத்தை நில தினமென்று வருடந்தோறும் மக்கள் கடைபிடித்து ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். இங்கே மேற்கு கரை நகரமான ஹெப்ரானில் மார்ச் 30 நடந்த ஆர்ப்பாட்டம். நிலத்தை மீட்பதற்காக ஒரு விடாப்பிடியான போராட்டம்!

நன்றி:  Electronicintifada.net

திருச்சியில் மாருதி தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் !

0
தோழர் காளியப்பன்

மாருதி தொழிலாளர்களின் சிறைமீட்புக்கான நாடு தழுவிய போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளது மாருதி தொழிலாளர் சங்கம்.  அதனை ஆதரித்து திருச்சியில் பு.ஜ.தொ.மு சார்பில் கடந்த 06.04.2017 அன்று மாலை மத்திய பேருந்து நிலையம் விக்னேஷ் ஹோட்டல் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் பொதுச்செயலாளர் தோழர் சுந்தரராசு தலைமை தாங்கினார். ம.க.இ.க. திருச்சி மாவட்ட செயலர் தோழர் ஜீவா பேசியதை அடுத்து, சிறப்புரை ஆற்றிய மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் தோழர் காளியப்பன் அவர்கள் பேசினார்.

சங்கம் என்றாலே முதலாளிக்கு பிடிக்காது. முதலாளித்துவம் தோன்றி 150 ஆண்டுகளுக்கும் மேலாக தொழிலாளர்கள் முன் வைக்கும் எந்த கோரிக்கையையும் முதலாளிகள் நிறைவேற்றுவதில்லை. மாறாக தொழிற்சங்கத்தை முடக்குவது, தலைவர்களை தண்டிப்பது போன்ற  நடவடிக்கை மூலம் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். முதலாளிகள் இன்று அடியாட்கள் வைத்துக்கொண்டு செயல்படுகின்றனர். மாருதி ஆலை தொழிலாளர்களின் போராட்டத்தை ஒடுக்க ஆலை நிர்வாகமே HR அதிகாரிக்கு தீவைத்து விட்டு பழியை தொழிலாளர்கள் மீது போட்டது. 90 தொழிலாளர்களை கைது செய்தனர். 1வாரம் கழித்து மேலும் 50 தொழிலாளரகளை கைது செய்தது. ஆண்டுக்கணக்கில் பிணை வழங்காமல் சிறையில் அடைத்து வைத்துள்ளது. இதனை எதிர்த்து தொடர்ந்து நான்காண்டுகள் போராடியும் குற்றம் நிருபிக்கப்படாமலேயே   தற்போது 117 பேர்கள் மட்டும் விடுவிக்கப்பட்டுள்ளனர். 31 தொழிலாளிக்கு சிறை தண்டனையை உறுதி செய்துள்ளது நீதிமன்றம். இத்தொழிலாளர்களது குடும்பங்கள் இதுநாள் வரை பட்ட துன்ப துயரங்கள் எத்தனை, எத்தனை குடும்பங்கள் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. எத்தனை பேர் செத்து மடிந்துள்ளனர். இதற்கு யார் பதில் சொல்வார்கள்?

எந்த முதலாளியாவது சட்டப்படி நடக்கின்றானா ? முறையான வேலை, சம்பளம், விடுப்பு, உரிமை தொழிலாளிகளுக்கு வழங்குகின்றார்களா ? உரிமையை பறித்தெடுத்த முதலாளிகள் யாராவது தண்டிக்கப்பட்டுள்ளார்களா ? இதனை நீதிபதிகள் என்றைக்காவது  கண்டித்தது உண்டா ? நீதித்துறை ஒழுங்கு பற்றி கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணன் கொடுத்த பேட்டியை படித்து பாருங்கள் நீதிபதிகள் யோக்கிதையை சந்தி சிரிக்க வைத்துள்ளார். இவர்கள் தான் தொழிலாளர்களை குற்றவாளிகள் என சித்தரிக்கின்றனர். மாருதி ஆலைக்குள் உள்ள 13 தொழிற்சங்கத்தை நிர்வாகம் முடக்கியுள்ளது.

ஜெயா குற்றவாளி என தீர்ப்பு வந்த போது 3 மாணவிகளை தீவைத்து கொளுத்திய அ.தி.மு.க. ரவுடிகளுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. சங்கரராமனை கோயில் கருவறையிலேயே வைத்து கொலை செய்த சங்கராச்சாரிக்கு 1 மாதத்தில் ஜாமீன் வழங்கப்பட்டது. மணல் கொள்ளையன் சேகர் ரெட்டிக்கு 3 மாதத்துக்குள் பிணை வழங்கப்பட்டது. தவறான சிகிச்சை அளித்து 13 பேர்கள் கொல்லப்பட்டனர். இதில் குற்றவாளியான மருத்துவருக்கு ஒரு மாதத்தில் பிணை வழங்கப்பட்டு பின் அவர் அரசு மருத்துவர் என்பதால் விடுதலை செய்யப்பட்டார். தாமிரபரணி நீரை உறிஞ்சும் கோக் நிறுவனம் சொன்னதை அங்கீகரித்து நீதி மன்றம் உத்தரவு போட்டுள்ளது. ஆனால் மாருதி தொழிலாளர்களுக்கோ 4 ஆண்டுகள் கழிந்தும் பிணை வழங்க மறுப்பது என்ன நீதி?  ஆகவே நீதி மன்றம் பெறும் பணக்காரர்களுக்கும் கிரிமினல் கும்பளுக்காக  மட்டும்தான்  செயல்படுகின்றது..

இயற்கை வளங்கள் அனைத்தையும் சூறையாடப்படுகின்றது. இதனை வளர்ச்சி என சொல்கின்றார்கள். இதனை எதிர்ப்பவர்களை போலீசை வைத்து நசுக்குகின்றார்கள். இந்த போலீசு – நீதி மன்றம் – அரசின் அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் தொழிலாளார்களோடு ஒன்றிணைவோம் !  போராடுவோம்! என தனது உரையை முடித்தார்.

இடையிடையே ம.க.இ.க தோழர்கள் புரட்சிகர பாடல்கள் பாடினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன், ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்பு சங்கம், சுமைப்பணி தொழிலாளர்கள் பாதுகாப்பு சங்கம், தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்பு சங்கம், ம.க.இ.க, பு.மா.இ.மு உள்ளிட்ட முன்னணியாளர்கள் உள்ளிட்டு திரளான தொழிலாளிகளும், தோழர்களும் கலந்து கொண்டனர்.

இறுதியாக ஆ.ஓ.பா.சங்கத்தின் தலைவர் தோழர் கோபி அவர்கள் நன்றியுறையாற்றினார்.

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருச்சி.