Sunday, June 14, 2026
முகப்பு பதிவு பக்கம் 556

மோடியின் நண்பர்கள் முன்பே பணத்தை மாற்றிவிட்டனர் – யாதின் ஓசா

3

யாதின் ஒசா குஜராத்தின் பி.ஜே.பி முன்னாள் எம்.எல்.ஏ. இவர் மோடியின் பணத்தை மதிப்பிழக்கச் செய்த நடவடிக்கை பற்றிய தகவல் முன்கூட்டியே பி.ஜே.பியின் அபிமான தொழிலதிபர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி பிரதமர் மோடிக்கு பகிரங்க கடிதம் எழுதியுள்ளார்.

இவர் ஒரு காலத்தில் மோடியுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றியவர். பா.ஜ.க தலைவர் அமித் ஷா அரசியல் வாழ்வைத் துவங்கி வைத்தவர். அவர் தனது முகநூலில் வெளியிட்டுள்ள கடிதம் பலரால் பகிரப்பட்டு மிக விரைவில் பலரையும் சென்றடைந்துள்ளது.

yatin-oza
யாதின் ஓசா

ஒசா, மோடி குஜராத் முதல்வராயிருந்தபோது அவருக்கு நெருக்கமான நம்பிக்கைக்குப் பாத்திரமானவராக கிச்சன் காபினெட்டில் இருந்தவர். இவர் முதன்முதலாக சபர்மதி தொகுதியில் போட்டியிட்டார். அங்கு அமித் ஷாவை தனது தேர்தல் முகவராக (election Agent) நியமித்திருந்தார். 1997 தேர்தலில் அமித் ஷா வேட்பாளராக தேர்வாவதற்கு உதவியுள்ளார். சமீபத்தில் பா.ஜ.கவில் ஓரங்கட்டப்பட்டதால் அதிருப்தியில் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துள்ளார்.

இக்கடிதத்திற்கு முன்னதாக ஒசா கெஜ்ரிவாலுக்கு எழுதிய மற்றொரு கடிதத்தில் பீகார் தேர்தலையொட்டி அமித் ஷாவிற்கும் அக்பருதீன் ஓவாய்சிக்கும் நடந்த திரைமறைவு பேரத்தை அம்பலப்படுத்தியிருந்தார். அவர்களுக்கு இடையில் நடந்த பேச்சுவார்த்தையின் போது தானும் உடனிருந்ததாக கூறினார். பீகார் தேர்தலின் போது அக்பருதீன் ஓவாய்சி பேசிய சர்ச்சைக்குரிய பேச்சு சமூகத்தில் மதவாத பிளவை ஏற்படுத்துவதற்கு திட்டமிட்டு அமித் ஷாவினால் எழுதிக் கொடுக்கப்பட்டது என்ற உண்மையை வெளியிட்டிருந்தார்.

***

பிரதமர் மோடிக்கு பணத்தை மதிப்பிழக்கச் செய்த நடவடிக்கை தொடர்பாக எழுதிய கடிதம்:

பெறுநர்:
ஸ்ரீ நரேந்திர மோடி
மதிப்பிற்குரிய இந்தியப் பிரதமர்
7, லோக் கல்யாண் மார்க்,
நியூ டெல்லி

ன்புள்ள நரேந்திரபாய்,

இந்தக் கடிதம் கிடைக்கும் வேளையில் சிறப்பான உடல் நலத்துடனும், மகிழ்ச்சியாகவும் இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

நவம்பர் 8, 2016 அன்று ரூபாய் நோட்டுகள் குறித்து நீங்கள் ஆற்றிய உரையைக் கேட்டபோது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. இந்த வரலாற்று முக்கியத்துவமுள்ள தீரச்செயலுக்காக என் இதயத்திலிருந்து உங்களை வாழ்த்தினேன். துரதிருஷ்டவசமாக என் மகிழ்ச்சி நீடிக்கவில்லை. எனக்கு மிகவும் வேண்டப்பட்டவர் சொன்ன செய்தி இது: நவம்பர் 8 நண்பகல் 12 மணியளவில் அகமதாபாத் நகரத்தின் பெரிய தொழிலதிபரின் மனைவி அங்கிருந்த முன்னணி நகைக்கடைக்கு வந்து முன்பே பதிவு செய்து வைத்திருந்த 20 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை வாங்கினார். அவர் வரும்போது தங்கம் பெட்டியில் தயாராக இருந்தது. இரண்டு நிமிடங்களில் பணம் செலுத்தப்பட்டு வியாபாரம் முடிந்தது. அவர் அந்த கடைக்கு முன்பே பதிவு செய்திருந்த 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகளை வாங்கத்தான் எதேச்சையாகக் கடைக்கு வந்தார். அவர் ஒரு மிகவும் பிரபலமான மருத்துவர்.

amit-shah-modiஉங்களுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றி ஒரு காலத்தில் உங்கள் கிச்சன் காபினெட்டில் இருந்திருக்கிறேன். அந்த வகையில் நாட்டின் 50 சதவீதக் கருப்புப் பணத்தைக் கட்டுப்படுத்தும் உங்களுக்கு நெருக்கமான அன்பான அந்த தொழிலதிபர்களுக்கு உங்களது ரூபாய் நோட்டு நடவடிக்கை குறித்த தகவல் நீங்கள் அறிவிப்பதற்கு முன்பே தெரிவிக்கப்பட்டுள்ளது என்று எனக்கு உடனே பொறி தட்டியது. இதைப் பற்றியே ஒரு நாள் முழுவதும் சிந்தித்து, விசாராணைகள் நடத்திய பிறகு எனக்குக் கிடைத்த விவரங்கள் அதிர்ச்சியளிக்கக் கூடியவை. இந்த வெகுஜன நோக்கிலான நடவடிக்கையின் மூலமாக இந்த நாட்டு மக்களை நீங்கள் முட்டாள்களாக்கி விட்டீர்கள்.

உண்மையில், தேச நலனுக்காக என்று சொல்லி நீங்கள் எடுத்த நடவடிக்கை உங்களுக்கு நெருக்கமானவர்களையும் அன்புக்குரியவர்களையும், உங்கள் கட்சியையும் அதன் உறுப்பினர்களையும் மேலும் பணக்காரர்களாக்குவதற்காகத்தான்.

அமித் ஷாவிற்கு நெருக்கமான கூட்டாளிகள் நவம்பர் 8 இரவு முதல் பணப் பரிவர்த்தனை வர்த்தகங்களில் ஈடுபட்டார்கள் என்பதை தெளிவாகவும் நியாயமான சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட வகையிலும் நிரூபிப்பதற்கான வீடியோ பதிவு என்னிடம் உள்ளது. அவர்களின் அலுவலகத்திற்கும் வீட்டிற்கும் முன்னால் 37 சதவீதக் கழிவுடன் கருப்புப் பணத்தை வெள்ளையாக்குவதற்காக ஒரு பெரிய வரிசை இருக்கிறது. தனது அடையாளத்தை வெளிக்காட்டாமல் குறைந்தபட்சம் 1 கோடி ரூபாய்களை எடுத்துச் சென்றால் அங்கிருக்கும் ஊழியர்கள் அதை எண்ணி 63 லட்சம் செல்லத்தக்க ரூபாய்களைக் கொண்ட ஒரு பையைக் கொடுப்பார்கள்.

இந்த வீடியோவை வெளியிட்டு விடலாம். ஆனால் நீங்கள் அமித் ஷாவின் சகாக்களை விட்டுவிட்டு வரிசையில் இருப்பவர்களைத் தண்டிப்பீர்கள். ஆயினும் நான் அந்த வீடியோவை இரண்டு அல்லது மூன்று மூத்த ஊடகவியலாளர்களுக்குக் காட்டிவிட்டு உங்களுக்கு தகவல் அனுப்புவேன். ஒன்றுக்கு இரண்டு முறை அந்த வீடியோவைச் சோதித்து விட்டு நான் சொல்வது உண்மைதானா என்று அவர்களிடம் நீங்கள் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.

people-queueகூட்டுறவு வங்கிகளில் பெரிய அளவில் நடைபெற்றுள்ள முறைகேடுகளையும், சட்டவிரோதச் செயல்களையும் பற்றி விவரம் அறிந்த பின்தான் நேற்று நீங்கள் அவ்வங்கிகளின் மீது தடைவிதித்தீர்கள் என்று உங்களை அறிந்த யாரும் நம்பமாட்டார்கள்.

உங்களுடைய எதிரி கூட உங்களின் செயல்திறனையும், திறமையையும், புத்திசாலித்தனத்தையும் மதிக்கிறார்கள். அந்த முக்கியாமான அம்சத்தினைக் குறித்து நீங்கள் யோசிக்காமல் இருந்திருக்க மாட்டீர்கள் என்பது மட்டும் நிச்சயம். நீங்கள் எடுக்கப்போகும் நடவடிக்கையின் முழு வரைபடத்தையும் மனதில் கொள்ளாமல் நீங்கள் ஒரு செயலில் இறங்க மாட்டீர்கள் என்று உங்களை நன்கு அறிந்த எனக்குத் தெரியும். ஒரு நடவடிக்கையினால் விளையப்போகும் அனைத்து சாதக பாதகங்களும் உங்கள் சிந்தையில் பிரகாசமாக இருக்கும்.

நான் மிகுந்த மரியாதையுடன் சொல்லவிரும்புவது என்னவென்றால், கூட்டுறவு வங்கிகளின் முறைகேடுகள் அனுமதியுடந்தான் நடந்திருக்கின்றன. ஏனெனில், குஜராத்தில் உள்ள அனைத்து மாவட்ட கூட்டுறவு வங்கிகளும் பா.ஜ.க ஆதரவாளர்களின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. நவம்பர் 8 இரவு 9 மணியிலிருந்து நவம்பர் 9 அதிகாலை 5 மணி வரை இந்த வங்கிகள் ரூ.500 மற்றும் ரூ.1000 தாள்களுக்கு குறைந்த மதிப்புடைய நோட்டுகளை மாற்றிக் கொடுத்திருக்கின்றன. நவம்பர் 8 அன்று நாட்டிலுள்ள எல்லா வங்கிகளிலும் துல்லியமாக எவ்வளவு மதிப்புடைய ரொக்கம் பரிவர்த்தனை செய்யப்படுகிறது என்ற விவரத்தை ரிசர்வ் வங்கி மூலமாகக் கேட்டிருக்கிறீர்கள். அந்த விவரங்களை வைத்து நான் சொன்னது உண்மைதானா என்று நீங்களே உறுதிசெய்து கொள்ளுங்கள். நான் சொன்னது தவறு என்று நிரூபிக்கப்பட்டால், நான் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்பேன் என உறுதியளிக்கிறேன்.

சுறாமீன்களும் திமிங்கிலங்களும் தப்பித்து விட்டன, உங்களுக்கு நெருக்கமான தொழிலதிபர்களுக்கு முன்பே உங்களது நடவடிக்கை குறித்து தெரிவிக்கப்பட்டு விட்டது என்று இந்திய மக்களிடையே நிலவும் சந்தேகங்களைப் போக்குவதற்கு, நீங்கள் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பணம் இருப்பதாக அறிவித்தவர்களைப் பற்றி இந்திய அரசின் அதிகாரபூர்வ இணையதளத்தில் தகவல் வெளியிட வேண்டும். ஃபோர்ச்சூன் 300 பட்டியலில் இருக்கும் 300 தொழில் நிறுவனங்களின் எந்தவொரு சேர்மனோ, நிர்வாக இயக்குனரோ அல்லது இயக்குனரோ இப்படி அறிவித்திருக்க மாட்டார்கள் என்று உறுதியாக எனக்குத் தெரியும். அப்படி அறிவிக்க வில்லையென்றால் என்னுடைய குற்றச்சாட்டுகள் உண்மை என்றுதான் பொருள்.

4000 ரூபாய்களுக்காக அல்லது சிறு தொகைகளை வங்கியில் போடுவதற்காக பசியிடனும், தாகத்துடனும் வரிசையில் நிற்கும் மக்களைப் பார்த்தேன். ஒரு மெர்சிடிஸ், பிஎம்டபுள்யூ, அவுடி, வோல்வொ, போர்ஷா அல்லது ரேஞ்ச் ரோவர் காரையோ அல்லது அதன் உரிமையாளரையோ வங்கிகளுக்கு வெளியிலிருந்த வரிசையில் பார்க்கவில்லை. ஏ.டி.ம் அல்லது வங்கி முன் வரிசையில் நிற்பவர்கள்தான் கருப்புப் பணத்தைப் பதுக்கி வைத்திருப்பவர்கள், மேற்கூறிய கார்களின் உரிமையாளர்களிடம் அது இல்லை என்பது உங்கள் கருத்தாக இருக்கலாம்.

final vogafon revised Slider
அமித் ஷாவிற்கு நெருக்கமான கூட்டாளிகள் நவம்பர் 8 இரவு முதல் பணப் பரிவர்த்தனை வர்த்தகங்களில் ஈடுபட்டார்கள் என்பதை தெளிவாகவும் நியாயமான சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட வகையிலும் நிரூபிப்பதற்கான வீடியோ பதிவு என்னிடம் உள்ளது.

ஃபோர்ச்சூன் பட்டியலிலுள்ள 300 நிறுவன அதிபர்களைத் தவிர, ரியல் எஸ்டேட் நடத்துபவர்கள், காண்டிராக்டர்கள், குறிப்பாக அராசாங்கத்திடம் காண்டிராக்ட் பெற்றவர்கள், சுரங்க உரிமையாளர்கள், குறிப்பாக இரும்புத் தாது எடுக்கும் நிறுவன உரிமையாளர்கள், எல்லாவற்றிற்கும் மேலாக அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் எவ்வளவு பணம் வங்கிகளில் செலுத்தியிருக்கின்றனர் என்று இந்த நாட்டு மக்கள் அறிய ஆவலாயிருக்கின்றனர். மேற்கூறியவர்களைப் பற்றிய விவரங்கள் இந்த நாட்டு மக்களுக்குத் தெரியவில்லையென்றால், 50 சதவீதம் கருப்புப் பணத்தினை பதுக்கி வைத்திருக்கும் 10-12 தொழிலதிபர்கள் முன்னரே உங்களின் நடவடிக்கை குறித்து உங்களிடமிருந்து தகவல் பெற்று ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் என்கிற குற்றச்சாட்டு உண்மையாகிவிடும்.

ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள நிலங்களை உங்களிடம் பெற்றுக் கொண்டு 7000 பேருக்குக் கூட வேலை வாய்ப்புகளை உருவாக்காமல் இருக்கும் இந்த 10-12 நிறுவனங்களை நடத்தும் தொழிலதிபர்கள் வங்கிகளில் எவ்வளவு தொகை செலுத்தியிருகின்றனர் என்று வங்கி வரிசைகளில் சிறு தொகைகளுக்காகக் காத்திருக்கும் வழியறியா ஏழைகள் தெரிந்துகொள்ள ஆர்வமாயிருப்பார்கள். 300 முதல் 400 கோடி வரை செலுத்தியவர்களின் விவரங்களையும், அந்தத் தொகைகள் அவர்களின் வருமான வரித் தாக்கல் படிவத்தில் குறிப்பிட்டுள்ள கணக்குடனோ அல்லது தெரிந்த மூலாதரங்கள் வழியே வந்த வருமான அளவுடனோ ஒத்துப்போகவில்லையெனில், வருமானவரித் துறை என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்ற விவரங்கள் அரசின் இணையதளத்தில் வெளியிடப்பட்டால் அவர்கள் தெரிந்து கொள்ள விரும்புவார்கள். நவம்பர் 8 இரவு எட்டு மணிக்கு முன் யார் எவ்வளவு தங்கம், வைரத்தை வாங்கியிருக்கிறார்கள் என்று விசாரணை நடத்த வேண்டுமென்றும் உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன். உச்சாணிக் கொம்பில் இருக்கும் வெகு சிலர் பெருமளவு தங்கத்தையும் வைரத்தையும் அந்த நேரத்தில் வாங்க வேண்டிய தேவையைப் பற்றி மக்கள் சிந்தித்துப் பார்க்க உதவும்.

உங்களின் நடவடிக்கை நாட்டின் நலனுக்காகவா அல்லது நேரடியாக உங்களுக்கும், உங்கள் நேசத்துக்குரியவர்களுக்கும் உங்களின் கட்சி உறுப்பினர்களுக்கும் நன்மை செய்வதற்காகவா என்று இந்த நாட்டு மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் மேற்குறிப்பிட்டுள்ள விவரங்களை அரசின் அதிகாரபூர்வ இணையதளத்தில் தயைகூர்ந்து, கருணை உள்ளத்துடன் வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

தங்களிடம் உண்மையான,
யாதின் ஓசா

______________________________

– தமிழாக்கம்: விஜயசங்கர் ராமச்சந்திரன்.

சிறப்புக் கட்டுரை : தமிழகத்தின் நீர்வளமும் – விவசாயத்தின் எதிர்காலமும் !

1

ரு பருவமழைகள் மூலம் தமிழகத்திற்கு ஒரு ஆண்டில் கிடைக்கும் மழை நீரின் சராசரி அளவு 958 மி.மீ. ! அதாவது, தென்மேற்கு பருவ மழை மூலம் (ஜூன் முதல் செப்டம்பர் வரை) 332.3 மி.மீ.–ம், வடகிழக்குப் பருவமழை மூலம் (அக்டோபர் முதல் டிசம்பர் வரை) 459.2 மி.மீ–ம் கிடைக்கிறது. குளிர் காலத்தில் 36.8 மி.மீ., கோடைகால மழையின் மூலம் 129.6 மி.மீ.-நீரும் கிடைக்கிறது ! தென்மேற்குப் பருவமழை பெரும்பாலும் கடலோர மாவட்டங்களில்தான் அதிகம் பெய்கிறது. இதில் கணிசமான அளவு கடலில் கலந்துவிடுகிறது ! கோடைகால மழையோ மேற்பரப்பின் வெப்பநிலையால் பெருமளவு நீராவியாகி விடுகிறது. வடகிழக்குப் பருவமழை ஒன்றுதான் மாநிலம் முழுக்கப் பரவலாகக் கிடைக்கும் ஒரே ஆதாரம்!

main-qimg-
136 தாலுகாக்கள் மட்டுமே பாதுகாப்பான அளவில்(70% உறிஞ்சப்படும் பகுதிகள்) உள்ளன !

மேற்பரப்பு நீர்வளம் :
17 முக்கிய ஆற்றுப்படுகைகள், 61 நீர்தேக்கங்கள், மற்றும் 49,480 பாசனக்குளங்கள் (தனியார் குளங்கள் உட்பட) ஆகியவை மூலம் ஒரு ஆண்டில் கிடைக்கும் நீர்வளம் 46, 540 மில்லியன் கன மீட்டர் ! (ஒரு கன மீட்டர் நீர் =1000 லிட்டர்). இதில் சரிபாதி நீரானது (நிலத்தடி நீர் கசிவுக்கும், அதிக வெப்பத்தால் நீராவியாவது போக) நிலப்பரப்பில் வழிந்தோடி கடலில் கலந்து விடுகிறது.  எனவே நமது பயன்பாட்டுக்குக் கிடைப்பது  24,864 மில்லியன் கனமீட்டர் ! இம்மேற்பரப்பு நீரில் 90 சதவீதம், விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. சுமார் 24 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் இதனால் பயன்பெறுகின்றன !

நிலத்தடி நீர்வளம் :
நிலத்தில் விழும் மழைநீர் படிப்படியாக மண்ணுள் கசிந்து ஆழமான பகுதியில் தேங்கி நிற்கும் நீரைத்தான் நிலத்தடிநீர் என்கிறோம். இயற்கையின் நீண்டகால நிகழ்ச்சிப் போக்கில் உருவாகும் இத்தகைய நிலத்தடி நீர்வளமாக தமிழகத்தில் இருப்பது 22,423 மி.க.மீ. என நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்! இதில் 60 சதவீத அளவு (13,558 மி.க.மீ) நீரை ஏற்கனவே உறிஞ்சியெடுத்து பயன்படுத்தி விட்டோம்! தற்போதைய கையிருப்பு 40 சதவீதம் (8875 மி.க.மீ) மட்டும் தான் !

“மொத்தமுள்ள 386 வட்டாரங்களில், 239 வட்டாரங்கள் அபாயகரமான கட்டத்தில் இருக்கின்றன. இதில் 139 வட்டாரங்களில் ஒரு வருடத்தில் ஊறும் நீரில் 90 சதவீத அளவுக்கு மேல் உறிஞ்சப்படுகிறது !  11 வட்டாரங்களில் குடிக்கத் தகுதியற்ற உப்புநீராக மாறிவிட்டது ! அரியலூர், சேலம், கோவை, சிவகங்கை, தேனி மாவட்டங்களில் உள்ள 10 வட்டாரங்களில் புதிதாக கிணறு, போர் தோண்டுவதற்கு தடைவிதித்து கருப்புப் பகுதியாக (black area) அறிவித்துள்ளது தமிழக அரசு ! 136 தாலுகாக்கள் மட்டுமே பாதுகாப்பான அளவில்(70% உறிஞ்சப்படும் பகுதிகள்) உள்ளன !” என்று தமிழக மாசுக்கட்டுப் பாட்டு வாரியத்தின் 2009-ம் ஆண்டு ஆவணம் கூறுகிறது !

மொத்த நீர்வளமும் – எதிர்காலத் தேவையும் !

நகர்ப்புறமயமாதல் அதிகரித்து வருவதால் விவசாயப் பயன்பாடு அதிகரிக்க வாய்ப்பில்லை. குறைவான நீரே தேவைப்படும்
நகர்ப்புறமயமாதல் அதிகரித்து வருவதால் விவசாயப் பயன்பாடு அதிகரிக்க வாய்ப்பில்லை. குறைவான நீரே தேவைப்படும்

மாநில நீர்வள ஆதார  நிறுவனங்களின் 1998-ம் ஆண்டு அறிக்கையின் படி, மேற்பரப்பு நீர் + நிலத்தடி நீர் ஆகிய இரண்டும் சேர்ந்து தமிழகத்தின் மொத்த நீர்வளம் 46.540 மி.க.மீ.(1643 டி.எம்.சி) ! என்றும், வளர்ந்துவரும் மக்கள்தொகை மற்றும் தொழில்துறை வளர்ச்சியை கணக்கில் கொண்டால் 2001-ல்  54,395 மி.க.மீ (1921 டி.எம்.சி) –யும்,  2050-ல்  57,725 மி.க.மீ.ட்டர் நீரும் தேவைப்படும் என வேளாண் வல்லுனர்களும், நீரியல் நிபுணர்களும் மதிப்பிட்டுள்ளனர் ! 2001-லேயே 286 டி.எம்.சி. நீர் பற்றாக்குறை என்றால், தற்போது இப்பற்றாக்குறை 300 டி.எம்.சி-க்கு மேலும் அதிகரித்திருக்கும் என உறுதியாக நம்பலாம்!

2050-ல், 4% முதல்  6% வரை மக்கள் தொகை அதிகரிக்கலாம் என்ற அடிப்படையில் வீட்டு உபயோகத்திற்கான நீர்த்தேவை 55.72%-மும், தொழில்துறையின் தேவை 27.7%-மும் அதிகரிக்கும் எனவும், தற்போதுள்ள சுற்றுச்சூழல் மற்றும் குறைந்தபட்ச ஆற்றுநீர் வழிந்தோடுவதைப் பராமரிப்பதற்கு 1600 மி.க.மீ. நீர் தேவைப்படும் எனவும் துல்லியமாக மதிப்பிடும் அறிக்கை, விவசாயத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது நகர்ப்புறமயமாதல் அதிகரித்து வருவதால் விவசாயப் பயன்பாடு அதிகரிக்க வாய்ப்பில்லை. குறைவான நீரே தேவைப்படும் என்று அலட்சியமாகக் கூறிவிட்டு, விவசாயத்திற்கான நீர்த்தேவையை மதிப்பிடாமலே செல்கிறது ! அதாவது, எதிர்கால தமிழக விவசாயம் தற்போதுள்ள நிலைமையை விட மிக மோசமாக சீரழிந்து போகட்டும். விவசாயிகள் நிலத்தை விட்டே ஓடட்டும். என்பதை இந்த அரசு, ஏற்கனவே தீர்மானித்துவிட்டது என்பதுதான் இதன் பொருள் !

பாசனத் திட்டங்களின் அவலநிலை !

கால்வாய் பாசனம், குளத்துப் பாசனம், கிணற்றுப் பாசனம் ஆகிய மூன்றுவகைப் பாசனத் திட்டங்கள் மூலம் விவசாயம் நடைபெறுகிறது. நடப்பில் உள்ள மொத்த விவசாய நிலப்பரப்பான சுமார் 130 லட்சம் ஏக்கரில், 90 லட்சம் ஏக்கர் நிலத்திற்கு மட்டும்தான் இதுவரை பாசனவசதி செய்யப்பட்டுள்ளது ! இதில், கால்வாய் பாசனம் மூலம் 29.2% , குளத்துப்பாசனம் மூலம் 21.3%, கிணற்றுப்பாசனம் மூலம் 48.9% நிலங்கள் பாசனம் பெறுகின்றன.

கால்வாய் பாசனத்தில், அண்டைமாநிலங்களின் இனவெறி அரசியல் ஒரு புறமிருக்க, நீர்வழித்தடங்களின் ஆக்கிரமிப்புகளாலும், ஆகாயத்தாமரை போன்ற வீரியரக களைச்செடிகளாலும், அலட்சியமான அரசின் பராமரிப்புக் குறைவாலும் பெரிய அளவில் பாசனப் பரப்பு விரிவாகவில்லை. 1960-களில் இருந்ததைவிட சற்று கூடுதலாக 21.5 லட்சம் ஏக்கர் என்ற அளவிலேயே நீடிக்கிறது !

well-waterbody
நிலத்தடி நீரே அதலபாதாளத்திற்கு சென்றுவிட்ட பிறகு கிணற்றுப் பாசனம் மட்டும் எப்படி உருப்படும்?

குளங்கள் மூலம் பாசனவசதி பெற்றவை 1960-ல் 22.5 லட்சம் ஏக்கராக இருந்தது ! இது 2000–ல் 15.75 லட்சம் ஏக்கராகவும், தற்போது 10 லட்சம் ஏக்கராகவும் சுருங்கி விட்டது ! சராசரியாக ஒரு குளத்தின் மூலம்  சராசரியாக 48 ஏக்கர் பாசனம் பெற்றுவந்த நிலையில், இன்று 30 ஏக்கருக்கும் கீழாக குறைந்துவிட்டது!

கிணற்றுப்பாசனத்தின் நிலையோ இதைவிட பரிதாபமாக கிடக்கிறது. நிலத்தடி நீர்வளம் தான் இதன் ஆணிவேர் ! நிலத்தடி நீரே அதலபாதாளத்திற்கு சென்றுவிட்ட பிறகு கிணற்றுப் பாசனம் மட்டும் எப்படி உருப்படும்? “மாநிலத்தில் சுமார் 19 லட்சம் கிணறுகள் உள்ளன. மொத்தப் பாசனப்பரப்பில் 52% நிலமான சுமார் 15.36 லட்சம் ஹெக்டேர் கிணற்றுப்பாசனம் மூலமே பயன்பெறுகின்றன.  இதில் 30% கிணறுகள் முற்றிலும் நீரின்றி வறண்டு விட்டன ! 27% கிணறுகள் விவசாயப் பயன்பாட்டுக்குப் பொருத்தமில்லாத உவர் நீராகி விட்டன ! மீதியுள்ள கிணறுகளில் தினமும் 4 முதல் 6 மணிநேரம் இறைப்பதற்கே நீர் இருக்கிறது!” என்று 2012-ல் வெளியான ‘தமிழக நீராதரங்களின் தேவையும்- அளிப்பும்’ என்ற ஆய்வறிக்கை கூறுகிறது.

“விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுப்பதுதான் மாநிலத்தின் மின் பற்றாக்குறைக்குக் காரணம்” என்ற அரைவேக்காட்டு அறிவாளிகளின் கூற்று எவ்வளவு பெரிய பொய் என்பதை இந்தப் புள்ளி விவரங்கள் கன்னத்தில் அறைந்து நிரூபிக்கிறது ! கிணற்றுப் பாசனம் என்பது விவசாயிகள் தனது சொந்த மூலதனத்தில் உருவாக்கிக் கொண்டது ! அரசு முதலீடு இதில் எதுவுமில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது !

தொகுப்பாகப் பார்த்தோமானால், பசுமைப் புரட்சிக்குப் முன்பு  1960-களில் இருந்த நீராதாரங்களின் நிலையையும் இழந்து, புதிய பாசனவசதியையும் பெறாமல், எதிர்கால உத்தரவாதமும் இல்லாமல் இன்று மிகவும் ஆபத்தான நிலையில் தமிழக விவசாயம் தத்தளிப்பதையும், தற்போதுள்ளதை விட மிக மோசமான நிலைக்கு நமது விவசாயம் ஆளாக இருக்கும் ஆபத்தையும் மேற்கண்ட விவரங்கள் தெளிவாக உணர்த்துகின்றன !

irrigation-systems-of-tamilnadu-7-638

மாற்றுத் திட்டங்களா ? அழிவுத் திட்டங்களா ?

நீர்வரத்து வாய்க்காலை சுத்தம் செய்வது, குளங்களைத் தூர் வாருவது, கரைகளை உயர்த்துவது, அணைகளில் படிந்துள்ள மண்ணை அகற்றுவது ஆகியவை எல்லாம் குடியிருக்கும் வீட்டைக் கூட்டிப் பெருக்குவது போன்ற ஒரு பராமரிப்பு வேலைகள்தான் ! நீர்வளத்தைப் பெருக்குவதற்கும், அதை நிரந்தரமாக தக்கவைப்பதற்கும் தொலைநோக்கான, அறிவியல் பூர்வமான திட்டங்கள் வேண்டும் !

நிலத்தின் மேற்பரப்பிலிருந்து சுமார் முக்கால் அடி ஆழம் வரையுள்ள மண்ணை மேல்மண்(TOPSOIL) என்று வரையறுக்கிறது அறிவியல். பெரும்பாலான தாவரங்கள் இம்மேல் மண்ணில் இருந்துதான் தங்களின் வளர்ச்சிக்கான நுண்ணூட்ட சத்துக்களை எடுத்துக் கொள்கின்றன. மண்வளம் என்ற சொல்லே மேல்மண்ணின் அங்ககச் சேர்க்கையைத்தான் குறிக்கிறது. ! மழைநீரை உள்வாங்கி மண்ணுக்குள் கசியச்செய்து நிலத்தடி நீர் வளத்தைப் பெருக்குவதிலும் இம்மேல்மண் தான் முக்கியப் பங்கு வகிக்கிறது! வனப்பரப்பு அழிக்கப்படும்போது வளமான மேல்மண்ணும்(TOP SOIL) வெளியே கிளறப்பட்டு, மேற்பரப்பு மண்ணும் (SURFACE SOIL) மழைநீரால் அரித்துச் செல்லப்பட்டு நீர்த்தேக்க அணைகளில் `வண்டல் மண்ணாக மேடிட்டு நிற்கிறது. இதனால் அணைகளின் கொள்ளவு குறைகிறது. மேலும் நிலத்தடி நீர்வளம் பெருகுவதும் பெருமளவு தடைபடுகிறது ! எனவே வனத்தையும், வன அடிவாரத்திலுள்ள நீர்பிடிப்புப் பகுதியிலும் உள்ள மேல்மண்ணையும் வெளிக்கிளறாமல் தடுத்து பாதுகாப்பதன் மூலமே நீர்வளத்தைப் பெருக்கமுடியும் என்பதுதான் உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அறிவியல் பூர்வமான வழிமுறை !

இதன் அடிப்படையில்தான் நிபுணர்கள் திட்டங்களை வகுக்கிறார்கள். 2050-ம் ஆண்டில், தற்போதுள்ளதை விடக் கூடுதலாக 57,725 மி.க.மீ. நீர் தேவைப்படும் என 1998-ல் மதிப்பீடு செய்யப்பட்டதை நிறைவேற்ற அறிவியல் பூர்வமான பல்வேறு திட்டங்களை நிபுணர்கள் அரசிடம் முன்மொழிந்து அறிக்கையாகக் கொடுத்துள்ளனர்.

நீர்-மாசு-படுதலால்-வரும்-நோய்கள்
நீர்-மாசு-படுதலால்-வரும்-நோய்கள்

நிலத்தடி நீர்வளத்தைப் புதுப்பிப்பதற்காக, முக்கிய நீர்பிடிப்புப் பகுதிகளில் உள்ள மலையடிவார சாய்வு நிலப்பகுதிகளில், சிறு அளவிலான நீர்த்தேக்கங்களை உருவாக்குவது, நீரோடைகளில் தடுப்பணை கட்டுவது, மேலும் வாய்ப்புள்ள இடங்களில் கசிவுநீர் குட்டைகள், சம மட்டக்கரைகளை அமைப்பது,

  • நீர்பிடிப்புப் பகுதிகளில் புதிய கட்டுமானப் பணிகளையும், சட்டவிரோதமான ஆக்கிரமிப்புகளையும் முற்றாகத் தடை செய்வது
  • விவசாயப் பயன்பாடற்ற நிலங்களில் புதிய குளங்களை உருவாக்குவது,
  • நீண்டகால அடிப்படையில், சேதமடைந்த வனக்காடுகளில் மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பது
  • விவசாய நிலங்களில் உரம் – பூச்சி மருந்து பயன்பாட்டைக் குறைப்பது
  • ஆற்றுநீரில் தொழிற்சாலைக் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுப்பது,

என்றும் தமிழக நிபுணர்கள் குழு வழிகாட்டியது !

இதற்காக வறட்சிப்பகுதி மேம்பாட்டுத் திட்டம் (DPAP), ஒருங்கிணைந்த நீர்த்தேக்கத் திட்டம்(IWOP) தேசிய நீர்பிடிப்புப் பகுதிக்கான நீர்தேக்கத் திட்டம்(NWDPRA),ஆகிய மத்திய அரசுத் திட்டங்கள் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தமிழக அரசு தன் பங்கிற்கு தமிழ்நாடு நீர்தேக்க வளர்ச்சி ஆணையம் (TAWDEV) ஒன்றை அமைத்தது, இவற்றின் வாயிலாக தமிழகத்தில் சிறியதும்,பெரியதுமாக 19,330 நீர்தேக்கங்கள் கட்டப்பட்டன. இதில் பெரும்பாலானவை இன்று பராமரிப்பின்றி சேதமடைந்து பல்லிளித்துக் கிடப்பதோடு, சிறு மழை நீரோட்டத்தையும் தாங்கும் திறனின்றி இருக்கின்றன. கிணற்றுத் தண்ணீர் பற்றாக்குறை, மற்றும் மின்சாரத் தட்டுப்பாடு காரணங்களை சமாளிப்பதற்காக விவசாயிகள் தங்கள் சொந்த செலவில் ஏற்கனவே உருவாக்கி வைத்திருக்கும் சிறு குளங்களை, ‘புதிதாக வெட்டப்பட்ட குளங்கள்’ என கணக்குக் காட்டி பல இடங்களில் கொள்ளையடித்துள்ளனர் வேளாண் அதிகாரிகள் !

1960-களில் மாநிலத்தின் மொத்த நிலப்பரப்பில் 23 சதவீதமாக இருந்த வனப்பரப்பு இன்று 16%–ஆக அழிக்கப்பட்டு விட்டது ! பெரும் பணக்காரர்களின் ஆடம்பர வாழ்க்கைக்காக சந்தனம், தேக்கு, ஈட்டி, மஞ்சள்கடம்பு, செம்மரம் போன்ற வணிக மதிப்புமிக்க மரங்களை வன அதிகாரிகளின் துணையோடு வெட்டிக் கடத்தியது, கல்குவாரிகளை சட்ட விரோதமாக அனுமதிப்பது, வனச் சுற்றுலாத் தளங்கள் அமைப்பது ஆகியவைதான் வனக்காடுகள் அழிப்புக்கு முக்கிய காரணம் !

“தமிழ்நாடு வன வளர்ப்புத் திட்டம்” என்ற பெயரில் ஜப்பான் அரசிடம் 586 கோடி ரூபாய் கடன் வாங்கியது தமிழக அரசு ! 2005 முதல் 2013 வரை அமுலான இத்திட்டத்தின் படி “1.77 ஹெக்டேர் பரப்பளவில் மரங்களை நடவு செய்ததாக” அரசு கூறுகிறது ! , ஆனால், மலைப் பகுதிகளில் நடவு செய்ய ஆகும் கூடுதல் செலவைத் தவிர்ப்பதற்காக, “உயரமான இடங்களில் நட்டிருக்கிறோம்” எனக் கணக்குக் காட்டிவிட்டு, ஒரு பாதியை நாற்றுக்களை தனியார் நர்சரிக்கு விற்றுவிட்டு, மீதியை பெரிய பள்ளங்களில் கொட்டி விட்ட கதைகள் எல்லாம் தினசரிகளில் படங்களுடன் செய்தியாக வந்து நாறியது ! கடைசியில், ஜெயாவின் 64–வது பிறந்தநாளுக்கு 64 லட்சம், 65–வது பிறந்த நாளுக்கு 65 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டமாக இது சீரழிந்து போய்விட்டது என்பதுதான் உண்மை !

தொழிற்சாலைக் கழிவுகளால் ஆற்றுநீர் மாசுபடுவது மற்றுமொரு ஆபத்தாகும்.“குடிநீர், மற்றும் விவசாயத்திற்கு பயன்படும் ஆறுகளிலிருந்து ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்கு தொழிற்சாலைகள் அமைக்கத் தடை ! தொழிற்சாலைகள் தங்கள் ஆலைக் கழிவுகளை மறுசுத்திகரிப்பு செய்வதை தங்கள் சொந்த செலவில் செய்துகொள்ள வேண்டும் !” என்ற அரசின் சட்டங்கள் இருக்கத்தான் செய்கிறது ! 300க்கும் மேற்பட்ட ஆலைகள் அதிக மாசுபடுத்துபவை (RED CATEGORY) என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வகைப்படுத்தி வைத்துள்ளது ! ஆனால் இதையும் தாண்டி தினமும் 6 லட்சம் லிட்டர் ஆலைக் கழிவுகள் ஆற்றுநீரில் கலக்கிறது என்பதையும் இதே அரசுதான் கூறுகிறது !!

ஆலைக்கழிவுகளால் ஆற்றுநீர் விஷமாவது மட்டுமல்ல, நீர்தேக்கங்களில் ஆகாயத்தாமரை போன்ற வீரியரகக் களைகள் பரவுவதற்கும் காரணமாக உள்ளது. “தண்ணீரில் இயல்பாக உள்ள நைட்ரஜன், பாஸ்பேட் உடன், இக்கழிவுகளில் உள்ள நைட்ரஜன் பாஸ்பேட்டும் கூடுதலாக சேர்வதால் நீர்வாழ் தாவரக் களைகளில் ஏற்படும் ரசாயன மாற்றங்களின் விளைவாக தண்ணீரிலுள்ள ஆக்சிஜன் அளவு வெகுவாக குறைந்துவிடும். ஆக்சிஜன் குறைந்த நீர் குடிப்பதற்கும் விவசாயத்திற்கும் தகுதியற்றது” என்று அறிவியலாளர்கள் கூறுகிறார்கள்! சாத்தான்களிடம் வேதம் ஓதி என்ன பயன்?

இவ்வாறு மாற்றுத்திட்டங்கள் எல்லாம் ஒப்பந்ததாரர்கள், கிரிமினல் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் கூட்டுக் கொள்ளைக்குத்தான் இத்திட்டங்கள் பயன்பட்டதே தவிர மேல்மண் அரிமானத்தை தடுக்கவோ, நீர்வளத்தைப் பெருக்கவோ, விவசாயத்தை வளப்படுத்தவோ உதவவில்லை !

கரடியிடம் தப்பித்து சிங்கத்திடம் சிக்கிய கதையாக !

வாழிடத்தை அழித்தால் காட்டுயிர்கள் எங்கே போகும்.
வாழிடத்தை அழித்தால் காட்டுயிர்கள் எங்கே போகும்.

நடைமுறையில் தோல்வியடைந்த மேற்கண்ட திட்டங்களுக்கு மாற்றாக, இன்று உலகவங்கியின் கடனுதவியுடன் ‘உயர் தொழில்நுட்ப மேம்பாட்டுத் திட்டங்களை’ நாடுமுழுவதும் மத்திய மாநில அரசுகள் நடைமுறைப்படுத்தி வருகின்றன !

“நீர்பிடிப்புப் பகுதியின் மேல்மண் இழப்பைத் தடுப்பது, அணைகளின் மண்மேடிடுவதைத் தடுப்பது, நிலத்தின் செயல்திறன் இழப்பைத் தடுப்பது, நிலப்பயன்பாட்டை மேம்படுத்துவது” ஆகியவற்றைக் குறிக்கோளாகக் கொண்டுதான் மேற்கண்ட நீர்வளப் பாதுகாப்புத் திட்டங்கள் நம் உள்நாட்டு நிபுணர்களால் வகுக்கப்பட்டது. ஆனால் உலகவங்கியோ

“பயன்படுத்தும் ஒவ்வொரு யூனிட் தண்ணீருக்கும் அறுவடையாகும் பொருள்களின் வர்த்தக மதிப்பின் அடிப்படையில் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்” என்ற கறாரான நிபந்தனையின் பேரில் கடன் வழங்குகிறது ! உதாரணமாக, தான் கடன் வழங்கும் ‘தாமிரபரணி கால்வாய் மேம்பாட்டுத் திட்டத்தில்’ “திசு வளர்ப்பு வாழை உற்பத்திக்கும், சொட்டுநீர், தெளிப்புநீர் பாசனக் கருவிகளின் பயன்பாட்டுக்கும் முக்கியத்துவம் தரவேண்டும்” என்று மிரட்டுகிறது ! உதவி என்ற பெயரில் தனது எஜமானர்களின் பொருளாதார நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்கிறது உலகவங்கி !

இதே பாணியில்தான் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்று பேசிக்கொண்டே, ஒருபுறம் வனக்காடுகளை சுற்றுலாப் பயணிகளின் விபச்சார விடுதியாகவும், கனிமவளக் கொள்ளைக்காகவும் சூறையாடப்படுகிறது ! மறுபுறமோ, “மரம் நடுவோம் ! மழை பெறுவோம் !” என்று விவசாயப் பட்டா நிலங்கள் மற்றும் தரிசு நிலங்களிலும், மரம் வளர்ப்புத் திட்டத்தை அமுல்படுத்துகிறார்கள். இது, வர்த்தக மதிப்புடைய மரங்களை வளர்ப்பதற்கு மறைமுகமாக விவசாயிகளைப் பயன்படுத்தும் தந்திரமே ! (“தனிமரங்கள் மழையை ஈர்க்காது. அடர்ந்த வனக்காடுகள் தான் மழைநீரை ஈர்க்கும்!: என்ற அறிவியல் உண்மையை மூடி மறைத்துவிட்டு, பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் சாலையோரங்களில் மரம் நடுவதையே பெரிய வாழ்க்கை லட்சியமாக நடுத்தர வர்க்க இளைஞர்களிடம் பறைசாற்றி திசை திருப்பி  வருகின்றனர்.!)

எதிர்காலத் தேவையை பூர்த்தி செய்வது மட்டுமல்ல, இருக்கும் நீர்வளத்தை தக்க வைப்பதற்கான திட்டங்களும் அரசிடம் இல்லை! ஆனால் நீர்நிலைகளை ஆக்கிரமித்து விவசாயத்தை ஒழித்துக்கட்டும் வேலைகள் மட்டும் வேகமாக அரங்கேறி வருகின்றன!

விவசாயிகளே விவசாயத்தை தீர்மானிப்போம்!

“இயற்கை வளங்களை, முக்கியமாக நீர்வள ஆதாரங்களைப் பாதுகாப்பது மாநில அரசின் கடமை!” “நீண்டகாலம் நீர் தேங்காமல் இருக்கும் குளங்களைக் கூட தனியாரோ, அரசோ ஆக்கிரமிக்கக் கூடாது!” “தண்ணீர் பஞ்சம் வராமல் தடுப்பது என்ற பொறுப்புணர்வுடன் மாநில அரசுகள் நீர் நிலைகளைப் பாதுகாக்க வேண்டும்!” “நீர்நிலைகள் மீதான அனைத்து ஆக்கிரமிப்புக் களையும் உடனே அகற்றவேண்டும்!” “நீர்நிலைகளை அரசு மற்றும் தனியார் கையகப்படுத்தாமல் இருப்பதை கலெக்டர் தலைமையிலான மாவட்டக் கமிட்டி உத்திரவாதம் செய்ய வேண்டும்!” என்று உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் ஏராளமாக வந்துவிட்டன! காவிரியில் நீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிராக கர்நாடகா அரசு செய்யும் அதே சண்டித்தனத்தை, தமிழக நீர் நிலைகள் மீதான தீர்ப்புகளில் தமிழக அரசும் பின்பற்றிவருகிறது! தனது உத்தரவை மதிக்காத கர்நாடக அரசிடம் மட்டுமல்ல, தமிழக அரசிடமும் மண்டியிடுகிறது நீதிமன்றங்கள்!

தமிழக நில ஆக்கிரமிப்புச்சட்டம்-1965, 1975, 1996 , தமிழக நீர்நிலைகள் பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்புத் தடைச் சட்டம்-2007 என பல பல அரசுச் சட்டங்களும் இருக்கின்றன!

மழை நீரை அளவிடுவதில் துவங்கி, நீர்பிடிப்புப் பகுதிகளைப் பாதுகாக்க, நீர்த்தேக்கங்கள்-தடுப்பணைகள் கட்ட- அணைகளைப் பராமரிக்க, ஆற்றுநீரைப் பாதுகாக்க, ஆற்றுநீர் மாசுபடுவதைத் தடுக்க- குளங்கள், கால்வாய்களை பராமரிக்க, பாதுகாக்க, எதிர்காலத் திட்டங்களை வகுக்க- விவசாயிகளை முன்னேற்றுவதற்கு வழிகாட்டும் பல்கலைக்கழகம், அரசின் வேளாண் திட்டங்களை விவசாயிகளிடம் கொண்டுசேர்க்கும் வேளாண் அதிகாரிகள், புதுப்புது பயிர்களைக் கண்டுபிடித்து,, நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும் வேளாண் விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், இவர்களை எல்லாம் வழிநடத்தும் அரசின் வேளாண்மைத்துறை, என ஒரு பெரிய பட்டாளமே விவசாயத்தின் பெயரால் சொகுசாக இங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறது! இவர்கள்தான் விவசாயத்தின் தலைவிதியை தீர்மானிக்கும் அரசின் நிர்வாகக் கட்டமைப்புகள்!

நீராதாரத்தை-அழித்துவிட்டு--சொட்டுநீர்--உபதேசம்.
நீராதாரத்தை-அழித்துவிட்டு–சொட்டுநீர்–உபதேசம்.

ஆனால், இவர்கள் எந்த நோக்கத்திற்காக வேலை செய்கிறார்களோ, எதற்காக நம் வரிப்பணத்திலிருந்து லட்சக்கணக்கில் சம்பளம் பெறுகிறார்களோ அதுமட்டும் நடக்க வில்லை! அதாவது, நம் வாழ்வாதாரமான விவசாயம் பாதுகாக்கப்படவில்லை! விவசாயிகள் வாழ்வும் முன்னேறவில்லை! விவசாயம் நாட்டில் பொய்த்துப் போனதற்கும், விவசாயிகள் விவசாயத்தை வெறுத்து நிலத்தை விட்டும், ஊரை விட்டும் ஓடுவதற்கும் இவர்கள்தான் பொறுப்பாளர்கள்!

நம்மை வாழவைப்பார்கள் என்று நம்பித்தான் இவர்கள் சொல்வதையெல்லாம் பயிரிட்டோம்! உணவுப் பொருள்களை கைவிட்டு பணப்பயிர்களை, வீரிய ரகங்களை பயிரிடச் சொன்னார்கள்! அதற்குப் பிறகுதான் நம் நிலத்தடி நீர் வற்றிப்போனது!

முன்பு மானியம் கொடுத்து ஊக்கப்படுத்தியவர்கள் திடீரென்று உரமானியத்தை நிறுத்தினார்கள்! அரசுக் கொள்முதலை குறைத்தார்கள்! அதன்பிறகுதான் இடுபொருள் செலவுக்கு ஈடுகொடுக்க முடியாமலும், வியாபாரிகளிடம் சிக்கி சீரழிவதும் தீவிரமானது!

இனியும் விவசாயத்தை நம்பி வாழ முடியாது என்ற விரக்தி நிலைக்கு பெரும்பாலான விவசாயிகள் வந்துவிட்ட நிலையில், தற்போது “ஏற்றுமதிக்கான விவசாயம் செய்யுங்கள். மானியம் தருகிறோம். அதிக லாபம் கிடைக்கும்” என்று வழி காட்டுகிறார்கள்! வாழும் வழிதேடி ஏங்கி நிற்கும் விவசாயிகளுக்கு சுடுகாடு செல்லும் திசையைக் காட்டுகிறார்கள்!

இது நமக்கு ஒத்துவராது, நான் மரபுவழி விவசாயம் செய்யப்போகிறேன்! இயற்கை விவசாயத்திற்கு திரும்புகிறேன்! என்று நம்மாழ்வார் வழியில் செல்லும் நவீன விவசாயியா நீங்கள்! அவ்வளவு எளிதாக நீங்கள் தப்பிச் சென்றுவிட முடியாது!

தமிழ்நாடு மாநில வேளாண் மன்றச் சட்டம் (TAMILNADU STATE AGRICULTURAL COUNCIL ACT) ஒன்றை கடந்த 2009-ஜுன்- 24-ல் தமிழக அரசு நிறைவேற்றியுள்ளது. மருத்துவர்களுக்கு இருக்கும் மருத்துவக் கவுன்சில் போல இது விவசாயத்திற்கானது. “அங்கீகாரம் பெற்ற வேளாண் பட்டாதாரிகள் மட்டுமே விவசாயம் பற்றிய ஆலோசனைகள் வழங்க வேண்டும்” என்கிறது இச்சட்டம்! இதன்படி மாற்று விவசாயம் பற்றி பிரச்சாரம் செய்வதே குற்றமா விடும்! சுருங்கச் சொன்னால், நம்மாழ்வாரை “தீவிரவாதி” என்று குற்றம் சாட்டுகிறது இந்தச் சட்டம்!

இதற்கு மேலும், இந்த அரசுக் கட்டமைப்பு நம் விவசாயத்தையும், விவசாயிகளையும் காப்பாற்றும் என்று நம்புவதற்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா? தோளின் மீதேறி உட்கார்ந்துகொண்டு நம் குரல்வளையை நசுக்கிவரும் இந்தச் சனியனை இனியும் சுமந்துகொண்டு திரிய வேண்டுமா? இதை உதறி எறிந்துவிட்டு விவசாயிகளே ஏன் அதிகாரத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது? விவசாயத்தை விவசாயிகளை விட யாரால் திறமையாக நிர்வகிக்க முடியும்? விவசாயிகளும், விவசாயத்தை நேசிப்பவர்களும் இந்தக் கண்ணோட்டத்தில் சிந்திக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்!

– மாறன்,
விவசாயிகள் விடுதலை முன்னணி, கம்பம்.

மோடியின் கபட நாடகத்திற்கு ரெட்டி திருமணமே சாட்சி – வீடியோ

12

‘தேசிய’அரசியலை ஆட்டிப் படைப்பதில் அம்பானி சகோதரர்கள் கில்லாடிகள் என்றால், கர்நாடகா அரசியலுக்கு ரெட்டி சகோதரர்கள் அல்லது பெல்லாரி சகோதரர்கள் என்றழைக்கப்படும் கருணாகர ரெட்டி, ஜனார்தன ரெட்டி, சோமசேகர ரெட்டி ஆகிய மூவரைக் குறிப்பிடலாம். 1999-ஆம் ஆண்டு பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களுள் ஒருவரான சுஷ்மா சுவராஜ் பெல்லாரி நாடாளுமன்றத் தொகுதியில் சோனியா காந்தியை எதிர்த்துப் போட்டியிட்டபொழுது, அவரது தேர்தல் வேலைகள், “தேவைகள்’அனைத்தையும் ரெட்டி சகோதரர்கள்தான் கவனித்துக் கொண்டனர்.

அன்று தொடங்கி அரசியலில் மட்டுமின்றி, பொருளாதாரத்திலும் அவர்கள் இந்தியாவின் “ஜி.டி.பி.’க்கு இணையாக வளரத் தொடங்கினர். தனி ஹெலிகாப்டர்கள், விமானங்கள், ஆடம்பரக் கார்கள் என இவர்களின் பகட்டு வாழ்க்கையைப் பார்த்து விக்கித்துப் போன மக்கள், “இவர்களின் சொத்து மதிப்பு 100 கோடி ரூபாய் இருக்கலாம்’ என இரகசியமாகப் பேசிக் கொண்டபொழுது, “எங்களின் சொத்து மதிப்பு 1,000 கோடி ரூபாய்க்கு மேல் தேறும்” எனச் சட்டமன்றத்திலேயே பகிரங்கமாக அறிவித்துத் தங்களின் பணத் திமிரை வெளிக்காட்டிக் கொண்டனர். சரி இப்போது இவர்களது குடும்பத் திருமணத்திற்கே 500 கோடி
செலவழிக்கிறார்கள் என்றால் சொத்து எப்படியும் ஒரு 50,000 கோடிகளைத் தாண்டலாம்.

சகோதர்களில் ஒருவரான ஜனார்தன் ரெட்டி பாரதிய ஜனதாவின் முன்னாள் அமைச்சர். இவரது மகள் பிராமணிக்கு 16-11-2016 அன்று திருமணம் நடைபெற்றது. உண்மையில் அதை திருமணம் என்று சொல்வது நமக்கு வேறு வார்த்தைகள் இல்லை என்பதால்தான். இயக்குநர் ஷங்கரின் சினிமா நிஜத்தில் நடந்தால் எப்படி இருக்குமோ அதையும் தாண்டுகிறது ரெட்டியின் விழா.

சுருங்கச் சொன்னால் இந்த மெகா திருமணத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா? 500 கோடி ரூபாய். தற்போது அந்த பட்ஜெட் 650 கோடி என ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதன்பிறகு சும்மா கண்துடைப்புக்காக ஏதோ விசாரணை, ஆய்வு, ஆகட்டும் பார்க்கிறோம் என்று சீன் போட்டார்கள். மோடி அரசின் கருப்பு பண நடவடிக்கையால் உழைத்து வாழும் பல குடும்பங்களில் திருமணங்கள் பிரச்சனைக்குள்ளாகியிருக்கின்றன. பல திருமணங்கள் நின்று போயிருக்கின்றன. செலவுக்கு புதிய பணமில்லாமல், பழைய பணத்தை மாற்ற முடியாமல் பல பெற்றோர் பித்துப்பிடித்த நிலையில் இருக்கின்றனர். இது போக செல்லாத நோட்டு அறிவிப்பால் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்து போயிருக்கின்றனர்.ஆனால் ரெட்டி சகோதர்கள் மோடியின் நண்பர்கள் என்பதால் அவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.

நான்கு நாட்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள திருமண நிகழ்விற்கு பழைய விஜயநகர அரசு போன்று 150 கோடி செலவில் செட் அமைத்திருக்கிறார்கள். விஜயநகர அரசின் தலைநகரையே மறுநிர்மாணம் செய்திருக்கிறார்கள். ஹம்பி நகரத்தின் முக்கியமான சின்னங்களை கண்முன் கொண்டு வந்திருக்கிறார்கள். பாலிவுட்டின் தலை சிறந்த கலை இயக்குநர்கள் இதை வடிவமைத்துள்ளார்கள். விஜய நகர பேரரசு காலத்தல்தான் தென்னிந்தியாவில் பார்ப்பனியக் கொடுங்கோன்மை பல்வேறு நிலைகளில் உறுதி செய்யப்பட்டது. அந்த வகையில் இந்த செட்டும், ரெட்டிகளும் அவர்களுக்கு சகல உதவிகளும் செய்யும் பா.ஜ.க-வும் நன்றாகவே பொருந்துகின்றனர்.

ஊரே சோகத்தில் துவண்டிருக்கும் போது இவர்கள் கொண்டாடுகிறார்கள். இந்த ஆபாசத்தை ஒழிக்காமல் மக்களுக்கு அமைதி ஏது?

பாருங்கள் – பகிருங்கள்!

ஓராண்டில் 56 இலட்சம் கோடி ரூபாய் கருப்புப் பணம் – சிறப்புக் கட்டுரை

17

சிறப்புக் கட்டுரை: இந்திய கருப்புப் பணம் – அளவும் அதன் முதலீட்டு முறைகளும்

ஜெ.ஜெயரஞ்சன்
ஜெ.ஜெயரஞ்சன்

ருப்புப் பணம் உள்நாட்டில் முதலீடு செய்யப்படுவது மிகவும் சொற்பம். இதுகுறித்து ஆய்வு நடத்திய தேவ்கர் என்ற பொருளாதார வல்லுநர், 2010ஆம் ஆண்டு அவர் வெளியிட்ட ‘The Drivers and Dynamics of Illicit Financial Flows’ என்ற நெடிய ஆய்வுக் கட்டுரையில், இந்திய நாட்டில் உருவாகும் கருப்புப் பணத்தில் ஐந்தில் ஒரு பகுதி மட்டுமே உள்நாட்டு சொத்துகளில் முதலீடு செய்யப்படுவதாக நிறுவுகிறார். மீதமுள்ள கருப்புப் பணம் அனைத்தும் வெளிநாடுகளில்தான் முதலீடு செய்யப்படுகிறது. இத்தகைய பணம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்குத்தான் பெருமளவில் சென்றடைகின்றன என்பதையும் அவர் பொதுவெளியில் உள்ள புள்ளி விவரங்களைப் பயன்படுத்தி கண்டுபிடித்துள்ளார். இவ்வாறு வெளியேறும் பணத்தின் அளவின்படி பார்த்தால் இந்தியா, உலகிலேயே மூன்றாவது இடத்தில் உள்ளது.

மிக முக்கியமாக, அவரது ஆய்வின் வாயிலாக நாம் நமது நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்ட கள்ளப் பணத்தின் (அ) கருப்புப் பணத்தின் அளவில் குறைந்தபட்ச மதிப்பீட்டை தெரிந்துகொள்ள முடிகிறது. அவர், நமது தாய்த் திருநாட்டின் ஏற்றுமதி, இறக்குமதி புள்ளிவிவரங்களை அலசுகிறார். இந்திய நாட்டிலிருந்து ஏற்றுமதியான பொருள்களின் மதிப்பும் அளவும் மற்றும் அதேபோல் இறக்குமதியான பொருள்களின் அளவு மற்றும் மதிப்பு ஆகியவற்றை எடுத்துக் கொள்கிறார். இந்தப் புள்ளிவிவரத்தை, எந்த நாடுகள் இந்தியாவிலிருந்து பொருள்களை இறக்குமதி செய்கின்றனவோ அந்த நாட்டின் ஏற்றுமதி/இறக்குமதி புள்ளிவிவரங்களோடு ஒப்பிட்டு அதில் வரும் வேறுபாடுகளை கண்டடைகிறார்.

எடுத்துக்காட்டாக, பிரான்ஸ் நாட்டிலிருந்து இந்தியாவுக்கு மின்சாரம் தயாரிக்கத் தேவையான உயர் தொழில்நுட்பக் கருவிகள் வாங்கப்படுவதாகக் கொள்வோம். அதற்கு இந்திய நிறுவனம் பிரான்ஸ் நிறுவனத்துக்கு பணம் கொடுக்க வேண்டும். இவ்வாறு பல நிறுவனங்கள் பல நாடுகளிலிருந்து தேவையான இயந்திரங்களை இறக்குமதி செய்யும். இவை அனைத்தும் வகைப்படுத்தப்பட்டு அந்த ஆண்டு இந்தியா, பிரான்ஸ் நாட்டிலிருந்து இத்தனை இயந்திரங்களை இவ்வளவு விலைக்கு வாங்கியது என்ற தகவல் தொகுப்பு இந்திய அரசின் வர்த்தக அமைச்சகத்தால் வெளியிடப்படும். இதே போன்றதொரு தகவல் தொகுப்பை பிரான்ஸ் அரசின் வர்த்தக அமைச்சகமும் வெளியிடும். இந்திய அரசு வெளியிட்ட புள்ளிவிவரப்படி, 2014ஆம் ஆண்டு ரூ. 5000 கோடி மதிப்பிலான இயந்திரங்கள் பிரான்ஸிலிருந்து வாங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருப்பதாகக் கொள்வோம். அதே ஆண்டு பிரான்ஸ் நாடு ரூ 2,000 கோடி மதிப்புள்ள இயந்திரங்கள் இந்தியாவுக்கு ஏற்றுமதியானதாக தெரிவித்திருப்பதாகக் கொள்வோம். இந்த இரு புள்ளிவிவரங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் ரூ 3,000 கோடி இந்தியாவிலிருந்து வெளியேறி இருப்பதும் (இயந்திரங்கள் வாங்குவது என்ற பெயரில்) ஆனால் அது பிரான்ஸ் நாட்டின் கணக்கில் வராததும் தெரியவரும். இந்த ரூ. 3,000 கோடியும் இந்தியாவிலிருந்து இறக்குமதி என்ற பெயரில் ஐரோப்பாவுக்கு அனுப்பப்பட்ட கள்ளப் பணம் ஆகும். இதைத்தான் ஓவர் இன்வாய்ஸிங், அண்டர் இன்வாஸிங் மற்றும் ரீ-இன்வாய்ஸிங் (over Invoicing/ Under Invoicing மற்றும் Re-Invoicing) என்று அழைக்கிறார்கள்.

Dev kar reportஇந்த தில்லுமுல்லுகளை விரிவாக விளக்க நான் முற்படவில்லை. இன்னும் சொல்லப்போனால் துல்லியமாகக்கூட விளக்க முற்படவில்லை. இதுபோன்றெல்லாம் கள்ளப் பணம் வெளியேறுகிறது என்பதை விவரிக்க முயன்றுள்ளேன். இத்தகைய தில்லுமுல்லு பெருமளவில் இந்தியாவில் மட்டுமின்றி, வளரும் நாடுகள் குறிப்பாக ஆசிய, ஆப்பிரிக்க மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் பெருமளவில் நடைபெறுகிறது என்பதை கள்ளப் பணம் குறித்த பல ஆய்வுகளும் சுட்டிக் காட்டுகின்றன.

வெளியேறும் கள்ளப் பணத்தின் அளவு:

உங்களுக்கு தலைசுற்றல் ஏற்படும் என்றால் இக்கட்டுரையை மேலும் படிக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். ஏற்றுமதி/இறக்குமதி என்ற வர்த்தக புள்ளிவிவரத் தரவுகளின் அடிப்படையில், 2004ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் பிழைமதிப்பு (Mispricing) என்று பொதுவாக அழைக்கப்படும் ஓவர் /அண்டர்/ ரீ-இன்வாய்ஸிங் (Over/Under/Re-Invoicing) ஆகிய முறைகளைப் பயன்படுத்தி இந்தியாவிலிருந்து வெளியேறிய பணத்தின் அளவை கணக்கிட்ட ஆய்வாளர்கள் மிரண்டுவிட்டனர். இந்த பத்தாண்டுகளில் இவ்வாறு இந்தியாவைவிட்டு வெளியே கொண்டுசெல்லப்பட்ட கள்ளப் பணத்தின் அளவு ஆண்டொன்றுக்கு சராசரியாக ரூ. 34,69,972 கோடிகளாகும். 2004ஆம் ஆண்டில் இவ்வாறு கொண்டுசெல்லப்பட்ட கள்ளப் பணத்தின் அளவு ரூ 13,60,000 கோடியாகும். பத்தே ஆண்டுகளில் இந்தியாவைவிட்டு வெளியேறிய குறைந்தபட்ச மதிப்பு எத்தனை கோடானகோடிகள் என்பதை புரிந்துகொள்ள மேலும் பல புள்ளிவிவரங்கள் உள்ளன. இத்தகைய மதிப்பீடுகள் குறைந்தபட்ச மதிப்பீடுகள் மட்டுமே. ஏனெனில், பொருள் வர்த்தகத்தில் மட்டுமே இத்தனை தில்லுமுல்லுகள். சேவை வர்த்தகம் இந்தியா போன்ற நாட்டில் மிகப்பெரிய ஒரு துறையாகும். பல ஆயிரம் கோடிகளுக்கு வெளிநாடுகளுக்கு வர்த்தகம் நடைபெறும் ஒரு துறை. Software கம்பெனிகளின் வருமானம் எல்லாம் சேவை வர்த்தகத்திலிருந்து வருவதுதான். இந்தத் துறையின் (சேவை) வாயிலாக வெளியேற்றப்படும் பணமோ அல்லது உள்ளே கொண்டுவரப்படும் பணமோ இதில் அடங்காது. ஆகவேதான் இந்த ரூ. 56 லட்சம் கோடி என்பது குறைந்தபட்ச மதிப்பீடு என அந்த ஆய்வு கூறுகிறது.

ஆக, சராசரியாக ஆண்டுக்கு ரூ.35 லட்சம் கோடி கள்ளப் பணம் பன்னாட்டு வர்த்தகம்வாயிலாக வெளியேறியிருப்பதாகக் கொண்டால், மிகக்குறைந்த அளவாக கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவிலிருந்து வெளியே கொண்டுசெல்லப்பட்ட கள்ளப் பணத்தின் அளவு ரூ. 350 லட்சம் கோடியாகும். இவ்வாறு பிழைமதிப்பு (Mispricing) வழியாக வெளியே கொண்டு செல்லப்பட்ட கள்ளப் பணம், மொத்த கள்ளப் பணத்தில் ஏறத்தாழ 84 விழுக்காடு ஆகும். இம்முறையின்றி வேறுசில வழிகளும் இருக்கின்றன. அவற்றை நான் இங்கு விவாதிக்கவில்லை.

இவ்வாறு கொண்டு செல்லப்படும் பணம் எங்கு செல்கிறது?

இவ்வாறு கொண்டு செல்லப்படும் கள்ளப் பணத்தில் ஒரு சிறிய அளவு மொரீஷியஸ் மற்றும் சிங்கப்பூர் வழியாக (பாட்டிசிபேட்டரி நோட்) அந்நிய முதலீடு என்ற பெயரில் இங்கு வந்துசேரும். ஆனால் இதுவொரு சிறு துளி. மற்ற பணமெல்லாம் அந்தந்த நாடுகளில் முதலீடு செய்யப்படுகின்றன. அதனால்தான் லண்டன் ஹோட்டல், சிங்கப்பூர் ஹோட்டல் என, பல முதலீடுகள்பற்றி வழக்குகளும் செய்திகளும் வருகின்றன. இவ்வாறு வரும் வழக்குகள் அபூர்வமானவை. இந்த வளர்ந்த நாடுகளை முதலீடுகளுக்குத் தேர்ந்தெடுக்க முக்கியதொரு காரணம், அந்நாடுகளின் பண மதிப்பு குன்றுவதில்லை. சொத்து மதிப்பு உயர்ந்துகொண்டேயிருக்கும். சட்டம், ஒழுங்கு பாதுகாப்பு இருக்கும். இந்தியா போன்று ஒருநாள் இரவில், ‘இந்தப் பணம் செல்லாது’ என்று கோமாளி அறிவிப்புகளும் வராது. அதை இங்கிருக்கும் பத்திரிகைகளும் நடுத்தர வர்க்கமும் கைகொட்டி தேசியம் என்ற பெயரால் வரவேற்பது அங்கு நடக்காது. இவை அனைத்தும் கருப்புப் பணம் வைத்திருப்பவர்களுக்குத் தெரிவதால்தான் இவ்வளவு பணம் அங்கு கொண்டுசெல்லப்பட்டு முதலீடு செய்யப்படுகிறது.

இவ்வாறு கொண்டுசெல்லப்படும் பணம் முக்கியமாக இரண்டு துறைகள்வழியாக வெளியேறுகிறது என மற்றுமொரு ஆய்வு கண்டுள்ளது. இரண்டு வருடங்களுக்குமுன்பு, நாட்டிலுள்ள கள்ளப் பணம் குறித்து ஹைதராபாத் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் நரசிம்ம ரெட்டி ஓர் ஆய்வை மேற்கொண்டார்.

Prof. Narasiman
பேராசிரியர். நரசிம்ம ரெட்டி

அந்த ஆய்வில் அதிர்ச்சிமிகுந்த கண்டுபிடிப்பை அவர் வந்தடைந்தார். பண்ட ஏற்றுமதி, இறக்குமதியில் அணு உலை மற்றும் மின்சாரம் தயாரிக்கப் பயன்படும் ஆலைகளை நிறுவ இறக்குமதி செய்யப்படும் முறையில்தான் 60 விழுக்காடுக்கும் மேலான கள்ளப் பணம் வெளியேறியது என்பதை அந்த ஆய்வு சான்றுகளோடு நிறுவுகிறது. எனவேதான், தமிழக கடற்கரைப் பகுதிகளில் இத்தனை அனல்மின் நிலையங்கள் தனியாரால் தொடங்க அனுமதிக்கப்பட்டு, முதலீடும் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆலைகளின் வாயிலாக எத்தனை லட்சம் கோடி கருப்புப் பணம் வெளியே கொண்டுசெல்லப்பட்டிருக்கும், உருவாக்கப்பட்டிருக்கும் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன். அதனால்தான் நாம் நமது மின்சாரத்துக்கு இவ்வளவு விலை கொடுக்கிறோம்.

இங்கு முக்கியமான ஒரு கூறையும் நாம் கவனத்தில்கொள்ள வேண்டும். இந்திய வணிக மற்றும் தொழில்துறை சார்ந்த நிபுணர்களும் மெத்தப்படித்த மேதாவி பத்திரிகையாளர்கள் பலரும் Cashless Economy எனும் மின்னணு வர்த்தகம் அல்லது பணப் பரிமாற்றம் வந்துவிட்டால் கருப்புப் பணம் ஒழிந்துவிடும் எனக் கூறிவருகின்றனர். நாட்டின் நிதியமைச்சர் இந்த ‘செல்லாத’ அறிவிப்பை விளக்கிப் பேசும்போது, இந்த ‘செல்லாத’ அறிவிப்பு நாட்டில் மின்னணு வர்த்தகத்தை நோக்கி மக்களைத் தள்ளுவதற்கு ஒரு நல்ல வாய்ப்பு என்றும் கூறினார். மக்கள், பணத்தை கையாள்வதில்தான் ஊழல் உருவாகிறதாம். வங்கி அட்டைகளைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டால் அதற்கு இடம் இருக்காதாம். இதுவும் ஒரு அரசியல் கருத்தாக்கம் என்றுதான் நாம் கொள்ள வேண்டும். அந்த நிலை உருவாவதற்கான தோதுகள் நம்மிடம் இப்போது இல்லை என்பதுபோன்ற நடைமுறைகள்சார்ந்த சிக்கல்கள் எல்லாம் இருக்கின்றன. ஆதார் அட்டையை திணித்ததுபோல அந்த அட்டையையும் திணிக்கமுடியாதா எங்களால் எனவும் வினவுகின்றனர் . நீங்கள் நினைத்தால் எதையும் திணிக்கலாம். ஆனால் நீங்கள் கூறும் பயன்களை நினைத்தால் எப்படிச் சிரிப்பது என்றுதான் புரியவில்லை.

Kudangulam
கூடங்குளம் அணு உலை

இந்தியாவிலிருந்து வர்த்தகம் (Under Invoicing, Over Invoicing, Re – Invoicing) வாயிலாக வருடந்தோறும் வெளியே கொண்டுசெல்லப்படும் பல லட்சம் கோடி கருப்புப் பணம் ஸ்தூல ரூபாய் நோட்டுகளாக கப்பலில் ஏற்றி அனுப்பப்பட்டவையல்ல. அனைத்தும் மின்னணு பரிமாற்றம் வழியாக நொடிப் பொழுதுகளில் வெளியேறியவைதான். ‘நான் செய்த இறக்குமதிக்காக இத்தனை கோடிகள் அந்த நாட்டுக்கு வழங்குகிறேன்’ எனக்கூறி சென்ற பணம்தானே இவ்வளவும். உண்மை இவ்வாறு இருக்க, மின்னணு பரிமாற்று முறை வந்தால் கருப்புப் பணம் ஒழிந்துவிடும் என்று கூறுவதும், சத்தியம் செய்வதும் யாரை ஏமாற்ற? அப்படி ஒரு நிலை ஏற்படுமாயின் அதிலும் காசு பார்க்கலாம் என சில முதலாளிகளுக்கு நமது அரசு துணைபோவதெல்லாம் வேறு என்ன? உங்கள் பணம் வங்கியில் உள்ளது. மின் வாரியத்துக்கு நீங்கள் பணம் செலுத்த வங்கிகளின் மின்னணு பரிமாற்று முறையை பயன்படுத்தும்போது, நாம் ஒவ்வொருமுறையும் ஒரு சேவைக் கட்டணத்தையும் கூடுதலாக செலுத்த வேண்டும். இது பரவலாகும்போது அந்த பரிமாற்று முறையை நடத்துபவர்கள் எவ்வளவு பணம் பண்ணலாம் என்பதை எண்ணிப்பாருங்கள். அவர்கள் ஒரு சேவையை வழங்குகிறார்கள். அதற்கு ஒரு கட்டணம் என்ற வாதம் சரி என எடுத்துக் கொள்வோம். அதேசமயத்தில், ஒருவர் அதைப் பயன்படுத்த விரும்பவில்லை என்றால் அதற்கு மாற்றுவழி கண்டிப்பாக இருக்க வேண்டும். உதாரணமாக, வெளிநாடுகளில் கட்டண சாலைகள் இருப்பதுபோல். நீங்கள் விரும்பினால் அதில் பயணிக்கலாம். இல்லையென்றால் கட்டணமில்லா சாலையில் அதற்கு இணையாகவும் பயணிக்கலாம். ஆனால் இங்கோ, கட்டணச் சாலையில் மட்டுமே பயணிக்கும் ஒரு கொள்ளைத் திட்டத்தை அரசே முன்னின்று செயல்படுத்துவது கவனத்தில் கொள்ளத்தக்கது. புதியதொரு அமைப்பு நம் நாட்டில் கொண்டுவரப்பட்டால் அதில் இருக்கும் வாய்ப்புகளை நீக்கிவிட்டு, நம்மை கட்டாயப்படுத்துவது என்பது இந்தியாவுக்கே உரித்தான ஒன்று. அதுதான் ‘Cashless Economy’ என்று கூறுபவர்கள் ‘ஆடு நனைகிறதே என ஓநாய் அழுத’ கதையை நமக்கு நினைவூட்டுகிறது.

பாசிச கோமாளி sliderதலைமை அமைச்சரின் கருப்புப் பணத்தின்மீதான போர் என்றும், Surgical Strike என்றெல்லாம் வர்ணிக்கப்பட்டு வரவேற்கப்படும் அறிவிப்பு, கள்ளப் பணத்தின் இந்தக் கூறை தொட்டுக்கூட பார்க்க முடியாது. அதனால்தான் வணிகப் பத்திரிகைகளில் கருத்து தெரிவிக்கும் பொருளாதார வல்லுநர்களும் நடுத்தர வர்க்கங்களின் அரைகுறை புரிதலைக்கூட முழுப் புரிதலாக காட்டிக்கொள்ளும் கணக்கர்கள், செய்தியாளர்களும் கூத்தாடி வருகிறார்கள். மக்களின் அவலங்களை சிறிய தியாகம் எனவும் எதிர்காலம் சிறக்கும் எனவும் பம்மாத்துக் கதைகளை கூறி வருகிறார்கள். நமது சமுதாயம் எவ்வாறு சீர்கெட்டுள்ளது என்பதற்கு இந்தப் புரிதலே மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. இதில் வெற்றிபெற்றவர்கள் யார்? இந்தப் புரிதலை பயன்படுத்திக்கொண்டு பல கோடானகோடி கருப்புப் பணம்பற்றி சிறு துரும்பைக்கூட அசைக்காத ஆளும் நடுவண் அரசு கள்ளப் பணத்துக்கு எதிரான போர் என மார்தட்டிக் கொள்வது எத்தகைய நடிப்பு என்பதை அறிந்துகொள்வோம்.

இந்தியாவிலிருந்து 2014ஆம் ஆண்டு வெளியேறிய கருப்புப் பணத்தின் அளவு ரூ.56.5 லட்சம் கோடி. இந்தியாவில் சுற்றில் உள்ள பணத்தின் அளவு ரூ.16 லட்சம் கோடி. அதில் ஏறத்தாழ ரூ.14 லட்சம் கோடி செல்லாததாக அறிவிக்கப்பட்டுவிட்டது. இவ்வாறு அறிவிக்கப்பட்ட பணத்தில் கருப்புப் பணம் என்பது நான்கில் ஒரு பங்கு என்று வைத்துக்கொண்டால்கூட ரூ.3.5 லட்சம் கோடி. ஒரு ஆண்டில் வெளியே கொண்டுசெல்லப்பட்ட பணம் ரூ.56.5 லட்சம் கோடி. எவ்வளவு கருப்புப் பணத்தை, நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததன்வாயிலாக அழிக்கமுடியும்? உள்நாட்டில் நோட்டுகளாக உள்ள ஒரு சிறு பகுதியைத்தான் அழிக்க முடியும். மிகப்பெரும் பகுதி வெளியே அல்லவா உள்ளது. ஆக, இந்த அறிவிப்பின் உள் அரசியல் என்ன என்பது வெளிச்சம் ஆகிறது அல்லவா? கருப்புப் பணத்தை ஒழிக்காமலேயே, ஒழித்த மாவீரன் என்ற பிம்பம் மற்ற எல்லா தோல்விகளையும் மறைக்க பாஜக-வுக்கு இப்போது தேவை. அதற்கு பலிகடா எப்போதும்போல் சாமானியன். சாமானியனை காவு கொடுக்க கொள்கையளவில் துணைபோவது நடுத்தர வர்க்கம். கள்ளப் பணக்காரன் மோனாலிசா சிரிப்போடு கடந்துபோவது புலனாகிறதா? அவன் பணம்தான் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் முதலீடு செய்யப்பட்டுவிட்டதே! அவன் தூங்கவில்லை என்பது உண்மையாயின், கவலையால் இருக்காது; அந்த மகிழ்ச்சியால் இருக்கும்.

கட்டுரையாளர் குறிப்பு: ஜெ.ஜெயரஞ்சன் – சென்னை மாற்றுவளர்ச்சி மையத்தை (ஐடிஏ) உருவாக்கி, தொடக்கம் முதல் இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். தமிழக சமூக, பொருளாதாரப் பிரச்னைகள் குறித்து கடந்த முப்பது ஆண்டுகளாக ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார். இவரது ஆய்வுக் கட்டுரைகள் முக்கிய ஆய்விதழ்களிலும் , புத்தகங்களிலும் வெளிவந்துள்ளன.

நன்றி :

மார்க்ஸ் எனும் அரக்கன்

3

karl Marx - Francis wheenகார்ல் மார்க்ஸ் பிறந்தநாளின் 200-வது ஆண்டு தொடக்கம். முதலாளித்துவத்தின் மரணத்தையும், தொழிலாளி வர்க்கத்தின் வரலாற்றுப் பாத்திரத்தையும் முன்னறிவித்த பேராசான் மார்க்ஸின் பிறந்த நாள் மே 5, 1818.

கையில் நயாபைசா இல்லாமல் புலம் பெயர்ந்து வந்து இலண்டன் மாநகரில் தஞ்சம் புகுந்த ஒரு அகதியை வசைபாடுவதற்கும், அவர் மீது பழிதூற்றுவதற்கும் இரண்டு முழுப் பக்கங்களைச் செலவிட்டிருந்தது ஒரு பிரிட்டிஷ் வலதுசாரிப் பத்திரிகையின் சென்ற வார இதழ். ’அகதி’ என்ற சொல்லைக் கேட்டாலே வலதுசாரிகளுக்கு உடம்பெல்லாம் எரியும் என்பதால் இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லைதான். எனினும் தாக்குதலுக்கு ஆளான இந்த அகதி இருக்கிறாரே, அவர் தற்போது உயிருடன் இல்லாதவர். அதாவது, 1883-இலேயே இறந்து விட்டவர்.

ஆம்! ‘மார்க்ஸ் எனும் அரக்கன்’ என்பதே மேற்படி கட்டுரையின் தலைப்பு. பி.பி.சி. ‘ரேடியோ 4′ அலைவரிசை நடத்திய கருத்துக்கணிப்பில் அதன் நேயர்கள் தங்கள் அபிமான சிந்தனையாளராக கார்ல் மார்க்ஸைத் தெரிவு செய்ததுதான் இந்த வெறிகொண்ட எதிர்வினைக்குக் காரணம்.

“ஸ்டாலின், மாவோ, போல்பாட், முகாபே போன்ற கொலைகாரச் சீடர்களை உருவாக்கிய ஒரு மனிதனை உலகின் தலைசிறந்த தத்துவஞானியாக எப்படித் தேர்ந்தெடுக்க முடியும்?” இது அந்தப் பத்திரிகை எழுப்பியிருக்கும் கேள்வி.

இந்த அதிர்ச்சியும் ஆச்சரியமும் புரிந்து கொள்ளத் தக்கதே. 15 ஆண்டுகளுக்கு முன், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் கம்யூனிசம் வீழ்ச்சியடைந்த பின், “மார்க்ஸின் கதை இதோடு முடிந்தது” என்றொரு கருத்து பொதுவாகப் பரவியிருந்தது. “அவர் செத்துவிட்டார், லண்டன் கல்லறையில் எஞ்சியிருக்கும் அவரது உடலின் எச்சங்கள் பெர்லின் சுவரின் இடிபாடுகளுக்குக் கீழ் நிரந்தரமாகப் புதைக்கப்பட்டு விட்டன. யாரும் அவரைப் பற்றிச் சிந்திக்கத் தேவையில்லை; அவரது சிந்தனைகளை இனி படிக்கவே தேவையில்லை” என்பதே அந்தப் பொதுக் கருத்து.

karl-marx1
பி.பி.சி. ‘ரேடியோ 4′ அலைவரிசை நடத்திய கருத்துக்கணிப்பில் அதன் நேயர்கள் தங்கள் அபிமான சிந்தனையாளராக கார்ல் மார்க்ஸைத் தெரிவு செய்தனர்.

பனிப்போர் முடிவுக்கு வந்த அந்த காலகட்டத்தில் ஃபிரான்சிஸ் ஃபுகுயாமா கூறினார், “நாம் கடந்து சென்று கொண்டிருப்பது இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய வரலாற்றின் ஒரு குறிப்பிட்ட கட்டமல்ல, நாம் காண்பது வரலாற்றின் முடிவு. மனித குலத்தின் சித்தாந்த வளர்ச்சிக்கே எல்லை இதுதான். இத்துடன் முடிந்தது” இது அவரது பிரகடனம்.

வரலாறோ திரும்பியது; ஒரு வன்மத்துடன் விரைவிலேயே திரும்பியது. 1998 ஆகஸ்டில் ரசியாவின் பொருளாதாரம் கற்பூரமாய்க் கரையத் தொடங்கியது. ஆசிய நாடுகளின் நாணய மதிப்புகள் தலைகுப்புறக் கவிழ்ந்தன. உலகச் சந்தை முழுதும் பீதி பரவத் தொடங்கியது.

“உலக முதலாளித்துவம் வெற்றிக் கொடி நாட்டி பத்தாண்டுகள் கூட ஆகவில்லையே! அதற்குள்ளாகவா நாம் நெருக்கடியில் சிக்கிவிட்டோம்?” என்று தனது அதிர்ச்சியை வெளியிட்டது லண்டனின் “ஃபைனான்சியல் டைம்ஸ்” பத்திரிகை. அந்தக் கட்டுரையின் தலைப்பென்ன தெரியுமா? “டாஸ் காபிடலை (மார்க்சின் “மூலதனம்” நூலை) இன்னொரு முறை புரட்டிப் பார்ப்போம்!”

முதலாளித்துவ அமைப்பினால் பெரிதும் ஆதாயம் அடைந்தவர்கள் கூட “நம்முடைய வண்டி தொடர்ந்து ஓடுமா?” என்ற கேள்வியை எழுப்பத் தொடங்கினார்கள்.

“தானும் தன்னையொத்த முதலாளிகளும் தங்களது மந்தை மனப்பான்மையை கட்டுப்படுத்திக் கொள்ளாவிட்டால், இந்த மந்தையின் காலடியில் எல்லோரும் மிதிபட்டுச் சாகவேண்டியதுதான்” என்று எச்சரிக்கை செய்கிறார், மிகப் பெரும் கோடீசுவரனும் ஊகச்சந்தை வணிகனுமான ஜார்ஜ் சோரோஸ்.

“முதலாளித்துவ அமைப்பைப் பற்றி நம்முடைய செவ்வியல் பொருளாதார வல்லுனர்கள் கூறும் சமநிலைக் கோட்பாட்டைக் காட்டிலும் சிறந்த முறையிலான ஆய்வை 150 ஆண்டுகளுக்கு முன்னரே மார்க்சும் எங்கெல்சும் வழங்கியுள்ளனர் என்று நிச்சயமாக என்னால் கூற முடியும்.”

wall-street
“வால் தெருவில் (நியூயார்க்கின் பங்குச் சந்தைத் தெரு) நான் எந்த அளவிற்கு நேரத்தைச் செலவிடுகிறேனோ, அந்த அளவிற்கு மார்க்ஸ் கூறியது சரிதான் என்பதை நான் புரிந்து கொள்கிறேன். “

“அச்சுறுத்தும் வகையில் கூர்மையான அவர்களது ஊகங்கள் உண்மையாகாமல் போனதற்குக் காரணம் இருக்கிறது. ஜனநாயக நாடுகளில் (கம்யூனிச அபாயத்தைத் தடுக்க) எதிர்நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்ட அரசியல் தலையீடுகள்தான் அதற்குக் காரணம். வரலாறு நமக்குப் பாடம் கற்பித்திருக்கிறது. அந்தப் பாடங்களிலிருந்து கூடத் தவறான முடிவுகளுக்கு மட்டுமே நாம் வருகிறோம். இன்னொரு முறை இதே தவறை நாம் செய்யும் அபாயம் இருக்கிறது. இந்த முறை அபாயம் கம்யூனிசத்திடமிருந்து வரவில்லை சந்தை கடுங்கோட்பாட்டுவாதம்தான் இன்று நமக்கெதிரான அபாயமாகும்.”

இவையெல்லாம் உலகின் மிகப் பெரும் ஊகச்சந்தை வணிகனான ஜார்ஜ் சோரோஸ் வெளியிட்டுள்ள கருத்துக்கள்.

’நியூயார்க்கர்’ பத்திரிகையின் வணிகத்துறைச் செய்தியாளர் ஜான் காசிடி, ஒரு முதலீட்டு வங்கியின் முதலாளியுடன் பேசிக் கொண்டிருந்தாராம். அந்த உரையாடலைப் பற்றி அக்டோபர் 1997-இல் எழுதினார். “வால் தெருவில் (நியூயார்க்கின் பங்குச் சந்தைத் தெரு) நான் எந்த அளவிற்கு நேரத்தைச் செலவிடுகிறேனோ, அந்த அளவிற்கு மார்க்ஸ் கூறியது சரிதான் என்பதை நான் புரிந்து கொள்கிறேன். முதலாளித்துவத்தை ஆய்வு செய்வதற்கு மார்க்ஸ் மேற்கொண்ட முறைதான் சரியானது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை” என்று சொன்னாராம் அந்த வங்கி முதலாளி.

மார்க்சின் நூல்களை இதுவரை படித்திராத செய்தியாளர் காசிடி, ஆவலை அடக்கமாட்டாமல் முதன்முறையாக மார்க்சைப் படித்தாராம். “உலகமயமாக்கம், ஏற்றத்தாழ்வுகள், அரசியல் ஊழல், ஏகபோகமயமாதல், தொழில்நுட்ப வளர்ச்சி, உயர் கலாச்சாரத்தின் வீழ்ச்சி, தொடர்ந்து உயிர்த்துடிப்பை இழந்து வரும் நவீன வாழ்க்கையின் தன்மை இவை பற்றியெல்லாம் ஆணி அடித்தாற்போலப் பேசும் மார்க்சின் எழுத்துக்களைக் கண்டேன். இதே விசயங்களைத்தான் இன்றைய பொருளாதார வல்லுனர்கள் ஏதோ புதிய பிரச்சினைகளாகக் கருதி எதிர்கொண்டு வருகிறார்கள். சில நேரங்களில், மார்க்சின் கால்தடம் பதிந்த பாதையில்தான் செல்கிறோம் என்பதை அறியாமலேயே அந்தப் பாதையிலும் நடக்கிறார்கள்” – இவை மார்க்சைப் படித்தபின் நியூயார்க்கர் இதழில் காசிடி எழுதிய கருத்துக்கள்.

Francis wheen
பிரிட்டீஷ் பத்திரிகையாளர் – எழுத்தாளர் ஃபிரான்சிஸ் வீன்

முதலாளி வர்க்கம் இன்னும் சாகவில்லை. மார்க்சும்தான் சாகவில்லை. முதலாளித்துவத்தைப் பற்றிய அவரது கணிப்புகளில் சில நிறைவேறாமல் போயிருக்கலாம்; அவர் தவறிழைத்திருக்கலாம். ஆனால், முதலாளித்துவம் என்ற மிருகத்தின் இயல்பை வெளிக் கொணர்ந்து காட்டிய அவரது ஆய்வின் கூர்மை இருக்கிறதே அந்த ஊடுருவிச் செல்லும் கூர்மை – அது அவரது கணிப்பில் நேர்ந்த சில பிழைகளையெல்லாம் புறந்தள்ளிக் கடந்து சென்றுவிட்டது.

கம்யூனிஸ்டு அறிக்கையில் அவர் எழுதினார்: “ஓயாது ஒழியாது உற்பத்தியில் ஏற்படும் புரட்சிகர மாற்றங்களும், சமூக உறவுகள் யாவும் இடையறாது அமைதி குலைதலும், முடிவே இல்லாத நிச்சயமற்ற நிலைமையும், கொந்தளிப்பும் முதலாளித்துவ சகாப்தத்தை அதற்கு முந்தைய எலலா சகாப்தங்களிலிருந்தும் வேறுபடுத்திக் காட்டுகின்றது.”

சமீப காலம் வரையிலும் இங்கிலாந்தில் பலர் தம் வாழ்நாள் முழுவதும் ஒரே வேலையில் தொடர்ந்தார்கள்; அல்லது ஒரே நிறுவனத்தில் தொடர்ந்து பணியாற்றினார்கள். ஆனால் இன்று? அப்படி யாரையாவது நாம் காட்ட முடியுமா? மார்க்ஸ் கூறியதைப் போல, “திடப்பொருட்கள் எல்லாம் காற்றில் கரைகின்றன” அல்லவா?

உண்மையில் மனிதனுக்கு மட்டுமே உரியவையாக இருக்கும் அனைத்தும் சரக்காக, உயிரற்ற சடப்பொருளாக உறைந்து போவதையும், அந்தச் சரக்கானது, பேராற்றலையும் உயிர்த்துடிப்பையும் பெற்று, தன்னை உற்பத்தி செய்த மனிதர்களையே கொடுங்கோன்மைக்கு ஆளாக்குவதையும் தனது தலைசிறந்த படைப்பான மூலதனத்தில் மார்க்ஸ் நிரூபித்துக் காட்டுகிறார்.

நம்முடைய வாழ்க்கையை ஆளும் சக்திகளைப் பற்றியும், அவை நம் வாழ்வில் தோற்றுவிக்கும் நிச்சயமின்மை, அந்நியமாதல், சுரண்டல் போன்றவை பற்றியும் மார்க்ஸ் வழங்கியுள்ள சித்தரிப்பு இன்னும் எதிரொலித்த வண்ணம்தான் இருக்கிறது; அது உலகின் கவனத்தை மீண்டும் ஈர்த்தே தீரும். பி.பி.சி. வானொலியின் கருத்துக் கணிப்பு காட்டும் உண்மை இதுதான்.

பெர்லின் சுவரின் இடிபாடுகளுக்கு அடியில் மார்க்ஸ் புதைக்கப்பட்டு விட்டதாகக் கருதிக் கொண்டிருக்கிறார்கள். இல்லை. இப்பொழுதுதான் தனக்குரிய உண்மையான முக்கியத்துவத்துடன் அவர் எழுந்துவரப் போகிறார். இதனைப் புரிந்து கொள்ளவோ சகித்துக் கொள்ளவோ முடியாமல் வலதுசாரிப் பத்திரிகைகள் என்னதான் ஊளையிட்டாலும், 21-ஆம் நூற்றாண்டின் செல்வாக்குமிக்க சிந்தனையாளராக உருவெடுக்கப் போகிறார் கார்ல் மார்க்ஸ்.

– ஃபிரான்சிஸ் வீன்
(’கார்ல் மார்க்ஸ்’ என்ற வாழ்க்கை வரலாற்று நூலின் ஆசிரியர்.)
இலண்டனிலிருந்து வெளிவரும் கார்டியன் பத்திரிகையில் Why Marx is man of the moment வெளியான கட்டுரை.
’இந்து’ நாளேட்டிலிருந்து (22.7.05) தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.

– புதிய ஜனநாயகம், ஆகஸ்ட் 2005.

தாயாக இருந்திராத இந்தப் பூமிக்கு எப்படி வந்து சேர்ந்தோம் ?

0

குகைகள்

வர்களின்
மிருகவெறி அக்கிரமங்கள்
என் இதயத்தைக்குடைந்து
எத்தனையோ
குகைகளை உருவாக்கியிருக்கின்றன

caste3மாறிவரும் காலத்தைக் கவனித்தவாறு
கவனமாக
அடியெடுத்து வைக்க வேண்டும்
இந்தக் காட்டிற்குள்
காற்று எங்கள் பக்கம்

அங்குமிங்குமாய்க்
கலகத் தீப்பொறி பறக்கிறது

இத்தனைநாள் –
சரிதவறு இரண்டையும் கேட்பேன்;
மவுனமாக இருந்துகொள்வேன்

ஆனால் இனி நான்
மனித உரிமைகளுக்காக
எரிதழல் மூட்டுவேன்!

எப்படி வந்து சேர்ந்தோம்
இங்கே….
என்றுமே எமக்குத்
தாயாக இருந்திராத
இந்தப் பூமிக்கு?

ஒரு நாயாய், பூனையாய்க் கூட
எங்களை வாழ விடாத
இந்தப் பூமிக்குப்
பின் எப்படித்தான்
வந்து சேர்ந்தோம்?

மன்னிக்கவே முடியாத
அவர்களின் குற்றங்களே சாட்சிகள்
இதோ இங்கே
இப்போதே
நான் எழுகிறேன்
ஒரு கலகக்காரனாக

ஜோதி லஞ்சேவார்

***

அந்த ஒற்றைக் கை

டங்கள் நிறைந்த புத்தகமொன்றைப்
புரட்டிக் கொண்டிருந்தேன்
எனது குட்டிப் பையன் ராஜா வந்தான்
தானும் எட்டிப் பார்த்தான்.

ஒரு படத்தில் –
ஏழை ஒருவனைப் பணக்காரன்
அடித்துக் கொண்டிருந்தான்.

ராஜா கேட்டான்:
’இவனை ஏம்பா அவன் அடிக்கிறான்?’
ஏனென்றால் அவன் பண்ணைக்காரன்.

அடுத்த பக்கத்தைப் புரட்டினேன்
மீண்டும் அதே பணக்காரன்-அவனது
ஓங்கிய வலது கையில் ஆயதம்
அதே ஏழையைக் கொல்ல.

ராஜா இதைப் பார்த்தான்.
’ஒரு நிமிஷம் இருப்பா’ –
எனக் கட்டளையிட்டான்.

no-entry-for-the-new-sunவேகமாக மேசைக்கு ஓடிப்போய்
பிளேடு ஒன்றைக் கொண்டு வந்தான்.

பணக்காரனின்
வலது கரத்தை தோளிலிருந்து
வெட்டி எடுத்து விட்டான்
பெருமிதம் அவன் முகத்தில்

நான் சொன்னேன்
அவனுக்கு ஆள்பலம் அதிகம்
சும்மா விடமாட்டார்கள்

ராஜா இடைமறித்தான் –
முடியாது, அவர்கள் அடிக்கமுடியாது
அந்த ஒற்றைக் கரத்தின் நினைப்பு
ஒரு போதும் மறவாது அவர்களுக்கு

திரியம்பக சப்காலே

’புதிய சூரியனுக்கு அனுமதி இல்லை’ நவீன மராத்தி தலித் கவிதைகள் – ஆங்கில நூலிலிருந்து மொழியாக்கம்.

புதிய கலாச்சாரம், ஜூன், ஜூலை 1994.

முதலாளிகள் பணமூட்டையை நிரப்பும் மோடி ! கேலிச்சித்திரம்

2
Adani loan slider

குயின்ஸ்லாண்டில் தொழில் துவங்க அதானிக்கு 6000 கோடி கடன் – பாரத ஸ்டேட் வங்கி

Adani loan water mark

பார்த்துக்கங்க… கருப்புப் பணத்தை ஒழிக்கிறதுல இதெல்லாம் முக்கியமான நடவடிக்கையாக்கும்…

ஓவியம் : முகிலன்
மக்கள் கலை இலக்கியக் கழகம்
சென்னை – 95518 69588

 

கவலைப்படாதீர்கள் மக்களை வரிசையில் நிற்க வைத்து கொன்றாவது உங்கள் பண மூட்டைகளை நிரப்புவோம் !

Demonetization

கேலிச்சித்திரம் நன்றி : Rebel politik

இணையுங்கள்:

கரன்சியால் கவிழ்ந்த துக்ளக் ராஜா !

10
Tughlaq modi

வம்பர் 8ஆம் தேதிக்குப் பிறகு, மத்தியப்பிரதேசத்தின் ஒரு கிராமத்தில் ரேஷன் கடை ஒரு கும்பலால் சூறையாடப்பட்டது. நாடு முழுவதும் மக்கள் வங்கிகளிலும் ஏடிஎம்-களிலும் நீண்ட வரிசைகளில் காத்திருக்கக் தொடங்கினர். இன்னும் சில வங்கிகளிலும் ஏடிஎம்-களில் கைகலப்பும் தாக்குதல்களும் ஏற்பட்டன. பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு உணவு வாங்க முடியாமல் பரிதவித்தனர். நோயாளிகள் தங்களது மருத்துவச் செலவுக்கு பணமில்லாமல் அல்லாடினர். விவசாயிகள் தங்களது தானியங்களை விற்கவும் வாங்கவும் முடியாமல் தவித்தனர். பிரதமர் மோடியின் ரூபாய் 500, 1000 நோட்டுகளின் பண மதிப்பிழப்பு அறிவிப்புக்குப் பிறகு மக்கள் சந்தித்த அவலங்களின் மிகச்சில உதாரணங்களே மேலே கூறியவை. மோடியின் இந்த நடவடிக்கையை சிலர் துக்ளக் மன்னரோடு ஒப்பிட்டு ‘துக்ளக் தர்பார்’ என்று விமர்சிக்கின்றனர்.

Tughlaq_1
முகமது பின் துக்ளக்

முகமது பின் துக்ளக் என்பவர் 14ஆம் நூற்றாண்டில் டெல்லியை ஆண்ட சுல்தான் ஆவார். இவரது ஆட்சியில் தலைநகராக இருந்த டெல்லியை மாற்றிவிட்டு புதிய தலைநகராக தெளலதாபாத் எனப்படும் தற்போதைய மகாராஷ்டிராவை அறிவித்தார். இந்த திடீர் நடவடிக்கை பொதுமக்களை நிலைகுலையச் செய்தது. எந்தவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் இல்லாத இந்த முடிவால் மக்கள் கடும் இன்னலுக்கு உள்ளானார்கள். அது துக்ளக் மன்னருக்கு சர்வாதிகாரி என்ற பெயரை பெற்றுத் தந்தது. பேரழிவில் முடியக்கூடிய, இதுபோன்ற துக்ளக்கின் அறிவிப்புகள் இதோடு முடியவில்லை. துக்ளக் மன்னன் தனது சாம்ராஜ்ஜியத்தில் அதன் பின்னரும் இதுபோன்ற திடீர் நகர்வுகளை ஏற்படுத்தினார்.

சர்வாதிகாரத்தன்மையோடு எடுக்கப்பட்ட இவரது மற்றொரு முடிவு, இன்றளவும் வரலாற்று பேரழிவாக கருதப்படுகிறது. மோடியைப் போலவே துக்ளக் மன்னரும் நாணய விவகாரத்தில் எடுத்த முடிவு பெரும் தோல்வியைச் சந்தித்தது. அது, அவரது தலைமையிலான சுல்தானிய அரசுக்கு மிகப்பெரும் பலவீனமாக அமைந்தது.

பண மதிப்பிழப்பு தொடர்பான இந்த அறிவிப்பின்மூலம், தற்போது இந்தியாவில் எழுந்திருக்கும் சிக்கல்களும் குழப்பங்களும் நவீன நாணய அமைப்பின் மீதான நம்பகத்தன்மை உடைவதற்கான அறிகுறியே ஆகும். மிகப் பெரிய செல்வமாகக் கருதப்பட்ட ஒன்று, தற்போது வெறும் காகிதமாக பார்க்கப்படுகிறது. நம்மிடம் இருக்கும் ரூபாய் நோட்டுகள் மதிப்பிழந்த வெறும் காகிதங்கள் என்றும், தற்போது வழங்கப்படுகிற நவீன ரூபாய் நோட்டுகள் மட்டுமே மதிப்பு உள்ளவை என்றும் ஒரு ஏகாதிபத்திய அரசு சொல்வதைத்தான் தற்போதைய பகிரங்க அறிவிப்பு நமக்கு உணர்த்துகிறது.

முதலில் பண்டமாற்று முறை இருந்தது. அதன் பிறகு, நாணயங்களை பயன்படுத்தத் தொடங்கியபோது நாணயங்கள் பெரும்பாலும் தங்கம், வெள்ளி போன்ற விலை மதிப்புள்ள உலோகங்களால் செய்யப்பட்டவையாகவே இருந்தன. அப்போது புழங்கிய நாணயங்கள் தன்னளவிலே ஒரு விலை மதிப்புள்ள உலோகமாக இருந்த காரணத்தால், அந்த நாணய அமைப்பு முறை நிலையான, ஸ்திரமான முறையாக இருந்தது. எனினும், விலைமதிப்பற்ற உலோகங்களின் பற்றாக்குறையால் அந்த நாணய அமைப்பு முறை நிறுத்தப்பட்டது.

அதன் பின்னர் ஏழாம் நூற்றாண்டில், புதிய நவீன காகிதப் பணத்தை சீனா அறிமுகம் செய்தது. அதன்படி தங்கம், வெள்ளி, பட்டு போன்றவற்றுக்கு ஈடாக இந்த ரூபாய் நோட்டுகளை பிரதியாகக் கொடுத்துவிட்டு மாற்றிக் கொள்ளலாம் என்று கூறப்பட்டது. இந்த புதிய பண அமைப்பு முறையின் தீவிரம் காரணமாக, ஐரோப்பிய நாடுகள் இந்த முறையைப் பின்பற்ற 1000 ஆண்டுகள் ஆனது. சீனாவின் இந்த புதிய பணப்பரிமாற்ற முறையை மேலைநாடுகள் பின்பற்றுவதற்கு முன்னரே இந்தியாவில் செயல்படுத்தி நிர்வகித்தது துக்ளக் மன்னன்தான்.

துக்ளக் மன்னன், டெல்லியின் சுல்தான் என்ற முறையில் இந்திய துணைக்கண்டத்தின் பெரும்பான்மை வடக்குப் பகுதிகளை ஆட்சி செய்தார். துக்ளக் மன்னன் 1329ஆம் ஆண்டு தெளலதாபாத்தை தலைநகரமாக அறிவித்த பின்னர், டோக்கேன் (அ) பிரதி ரூபாய் (representative money) என்ற பண அமைப்பு முறையை அறிமுகப்படுத்தினார். செம்பு மற்றும் வெண்கலத்தால் செய்யப்பட இந்த நாணயங்களை குறிப்பிட்ட அளவு தங்கம் மற்றும் வெள்ளிக்கு மாற்றிக் கொள்ளலாம் என்று விதிமுறைகள் உருவாக்கப்பட்டன. டாங்கா என்றழைக்கப்பட்ட இந்த புதிய வகை நாணயங்கள், சுல்தானிய போர் நடவடிக்கைகளுக்கான நிதிப் பயன்பாட்டை கருத்தில்கொண்டு உருவாக்கப்பட்டவை. ஆனால் அது, இந்திய துணைக்கண்டத்தை மிகப்பெரும் ஆபத்தில் ஆழ்த்தியது.

Painting of Tughlaq
துக்ளக் அரசவை ஓவியம்

துக்ளக் மன்னன் தனது ஆட்சியில் இந்த புதிய பணப்பரிமாற்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியபோது, அது மக்களிடம் சிறிதும் அறிமுகமில்லாத திட்டமாக இருந்ததோடு மட்டுமல்லாமல், எதிர்கொள்வதற்கு பல சிரமங்களை உடையதாகவும் இருந்தது. அப்போதுவரை இந்த புதிய திட்டத்தைச் சீனாவுக்கு வெளியே ஒரே ஒரு மன்னர் மட்டுமே நடைமுறைப்படுத்தியிருந்தார். 13ஆம் நூற்றாண்டின் பாரசீக மன்னராக இருந்த கேய்கது (Gaykhatu) என்பவர்தான் அவர். அவர், இந்தத் திட்டத்தை அமல்படுத்திய பின்னர் அதன் அறிமுகமின்மை மற்றும் நடைமுறைச் சாத்தியத்தில் மக்கள் எதிர்கொண்ட சிரமங்கள் காரணமாக, அறிமுகப்படுத்திய எட்டு நாட்களுக்குள் அவர் அதை திரும்பப் பெற்றுக்கொண்டார். அதன்பின்னர், மிகச்சில நாட்களுக்குள்ளாகவே அவர் படுகொலை செய்யப்பட்டது வேறு கதை.

இப்படியான சிக்கல்களும் நடைமுறைப்படுத்துவதில் சிரமங்களையும் கொண்ட இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதில் வெற்றி பெற்ற துக்ளக் மன்னர் அதை செயல்படுத்துவதில் தோல்வியைச் சந்தித்தார். பெயரளவில் நல்ல திட்டமாக தோன்றினாலும் இதில் மிகப்பெரிய ஒரு குறை இருந்ததே அதற்குக் காரணம். இதுபோன்ற பிரதி நாணயத்தில் எளிதாக போலிகள் உருவாக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமிருந்ததே அதற்குக் காரணம். உண்மையில் தங்கம், வெள்ளி போன்ற விலையுயர்ந்த பொருட்களை மாற்றிக்கொள்வது போன்ற சிலவற்றில், இந்த பண முறை உதவிகரமாக இருந்தபோதும், போலி நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகள் போன்ற அபாயகரமான சில குறைகளையும் இந்தத் திட்டம் தன்னகத்தே கொண்டிருந்தது.

அதன் காரணமாக அரசாங்கம், ரூபாய் நோட்டுத் தயாரிப்பில் புதிய உத்திகளை கையாளத் தொடங்கியது. அதன்படி, போலி நாணயத் தயாரிப்பை தடுக்கவும், பாதுகாப்பு நோக்கத்துக்காகவும் பிரத்யேகமான பல அடையாளங்களைக் கொண்ட ரூபாய் நாணயங்கள் அச்சிடத் தொடங்கியது. எனினும், மோசமான திட்டமிடல் காரணமாக புதிய நாணயங்களில் எந்தவிதமான பாதுகாப்பு அம்சங்களையும் சேர்க்க நேரமில்லாமல் போனது. அந்தவகையில், புதிய நாணய அச்சிடல் விவகாரத்தில் முதலில் சொதப்பியது மோடிதான் என்று சொல்ல முடியாமல் போனது மட்டும் மோடிக்கு ஆறுதலான ஒரே விஷயம்.

Tughlaq coin
துக்ளக் அறிமுகப்படுத்திய் நாணயம்

துக்ளக் அறிமுகப்படுத்திய நாணயமானது, போலிகள் தயாரிக்க முடியாதளவுக்கு பாதுகாப்பான அளவில் வடிவமைக்கப்பட்டிருக்கவில்லை. அது கறுப்புப் பணம் புழங்குவதற்கான சந்தையை ஏற்படுத்திக் கொடுத்தது. அதன் விளைவாக, பல்வேறு மோசடிகள் நடந்து உயர் பணவீக்கத்துக்கு வழிவகுத்தது. அதன் பின்னர், டாங்கா எனப்படும் துக்ளக் அறிமுகப்படுத்திய நாணயம் மதிப்பிழந்து போனது.

இதன் காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை ஈடுகட்டுவதற்கு துக்ளக் தலைமையிலான அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டது. டாங்கா நாணயங்களை வைத்திருப்பவர்கள் நியாயமான முறையில் அவரது நாணயங்களை கொடுத்துவிட்டு அதற்கு நிகரான தங்கம் மற்றும் வெள்ளியை பெற்றுக் கொள்ளலாம் என்பதுதான் அது. அதிலும் ஒரு குளறுபடி நடந்தது. ஏராளமான போலி நாணயங்கள் புழங்கியதால் சரியான முறையில் இந்தப் பரிமாற்றத்தை நிறைவேற்ற பல ஆண்டுகள் ஆனது. அதில் நிராகரிக்கப்பட்ட செம்பு டாங்கா நாணயங்கள் தெளலதாபாத் கோட்டை முன்பு மலைபோல் குவிந்து கிடந்தன.

அப்போது ஏற்பட்ட நாணய குளறுபடிகள் கற்பனை செய்து பார்க்க முடியாதளவுக்கு பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்தின. துக்ளக் மன்னனின் ஆட்சி கவிழ்ந்ததற்கும் அது ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. 1351இல் துக்ளக் இறந்த பிறகு, அவரது ராஜ்யத்தின் முக்கியப் பகுதிகளான வங்காளம் மற்றும் டெக்கான் போன்றவை சுல்தானிய அரசிடமிருந்து தாமாகவே தம்மை விடுவித்துக் கொண்டன. அதன்பின்னர், சுல்தானம் எனப்படும் இஸ்லாமிய அரசின் ஆளுகைக்குட்பட்ட பகுதி டெல்லியின் ஒரு சிறிய பகுதியாகவும், தற்போதைய உத்திரப்பிரதேசத்தின் மேற்குப் பகுதிகளாகவும் சுருங்கின.

நன்றி: scroll.in
ஆசிரியர் : ஷோயாப் டானியல்
தமிழில்: பீட்டர் ரெமிஜியஸ், நன்றி:

மோடியின் முடிவை காறி உமிழும் வெளிநாட்டு பத்திரிக்கைகள் !

38
Photo Shop modi
80% மக்களின் மீது துல்லிய தாக்குதல் நடத்திய மோடிஜி.

ன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது அவரை “அண்டர் அச்சிவர்” – திறன் குறைந்தவர் – என அட்டைபடத்தில் செய்தி வெளியிட்டது அமெரிக்காவின் டைம் பத்திரிக்கை. அப்போது 56 இன்ச் மார்புடைய அண்டர் டேக்கராக – மல்யுத்த பயில்வான் – மோடியைக் காட்டிய பாஜகவினர்  தற்போது கிளிசரின் கண்ணீர் பிதுக்கும் அவரைக் காப்பாற்ற படாதபாடுபடுகின்றனர். ஃபோட்டோ ஷாப் உபயமாக மோடியை ஒபாமா பாரட்டுகிறார், புடின் வாழ்த்துகிறார், தெரசா வியக்கிறார் என்று அடித்து விட்டதெல்லாம் இப்போது எடுபடவில்லை.

Photo Shop modi
போட்டோ ஷாப்பால் -கருப்புப் பண ஒழிப்பு காவலரான மோடிஜி!

வெள்ளையாக இருப்பவன் பொய் சொல்லமாட்டான் என்ற வடிவேலு தத்துவத்தின்படிதான் சங்க பரிவாரத்தினர் மோடிக்கு சர்வதேச ஆதரவு வெளுத்துக் கட்டுகிறது என்று கதையளந்தனர். ஆனால் உண்மை அப்படியில்லை.

மோடியின் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என வந்த அறிவிப்பையொட்டி பல வெளிநாட்டு பத்திரிக்கைகள் தெரிவித்த விமர்சனங்களை இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு 19.11.16 அன்று வெளியிட்டது. இப்பத்திரிகைகள் அனைத்தும் மோடியின் அறிவிப்பை முட்டாள்தனமென்று காறித்துப்பியிருக்கின்றன. இதில் இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற பத்திரிகைகள் மட்டுமல்ல, பா.ஜ.கவின் பாசத்திற்குரிய பாகிஸ்தான் பத்திரிகையும் உண்டு. அதன் சாரத்தைப் பார்ப்போம்.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8-ம் தேதி நவம்பர் 2016 இரவு 12 மணி முதல் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது, அதற்கு மாற்றாக புதிய 500, 2000 நோட்டுகள் வெளிவரும், கருப்புப் பணத்தை மீட்பதே இதன் இலக்கு என அறிவித்தார். மக்கள் தங்கள் பழைய ரூபாய் நோட்டுக்களை வரும் டிசம்பர் இறுதி வரை மாற்றிக் கொள்ளலாம் எனவும் அறிவித்தார்.

இதை ஆரம்பத்தில் பலர் வரவேற்றிருந்தாலும் பிறகு நாடு முழுக்க லட்சக் கணக்கானோர் வங்கிகள் மற்றும் ஏ.டி.எம் வாசல்களில் நீண்ட வரிசையில் ரொக்க பணத்துக்காக தற்போது காத்துக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

திருமண காலமென்றாலும் ரொக்கப் பணமில்லாமல் திருமண ஏற்பாடுகள் தடைபட்டுள்ளன. தினக் கூலியாக வேலை செய்பவர்கள் பலர் வங்கிகளில் காத்திருப்பதால் தங்கள் வேலை வாய்புகளை இழந்துள்ளனர். மருத்துவ செலவுகள் மற்றும் அடிப்படையான செலவுகள் செய்ய முடியாமல் சிலர் இறந்தும் போயுள்ளனர்.

இந்த நிலைமைகளைப் பற்றி பல்வேறு வெளிநாட்டு பத்திரிக்கைகள் என்ன சொல்லுகின்றன?

தி கார்டியன் – The Guardian:

செல்வந்தர்கள் யாரும் இதனால் பாதிக்கப்படவில்லை. அவர்கள் தங்களது ஊழல் பணத்தையெல்லாம் தங்கமாகவும், பங்குகளாகவும், ரியல் எஸ்டேட் துறையிலும் மாற்றிவிட்டனர். ஆனால் 120 கோடி மக்கள் தொகையில் கணிசமாக இருக்கும் ஏழைகள்தான் இந்த நடவடிக்கையால் இழந்துள்ளனர். அவர்களில் பலருக்கு வங்கி கணக்குகளே இல்லை. மணிக்கணக்கில் வங்கிகளில் நிற்பதன் மூலம் அவர்களின் கூலியும், வேலைக்கான நேரமும் கணிசமாக இழக்கப்படுகிறது. மேலும் இந்த அறிவிப்பு வெளியான ஒரே வாரத்தில் சில பத்து உயிர்களும் பலி வாங்கப்பட்டுள்ளன. அரசோ இன்னும் சில வாரங்களின் ATM Queueபிரச்சினை தீர்க்கப்படும் என்று கூறுகிறது.

மோடியின் இந்த திட்டமானது ஏற்கனவே பல நாடுகளில் சர்வாதிகாரத்தின் மூலம் அமல்படுத்தப்பட்டு,  விலைவாசியை உயர்த்தி, பணத்தை சீர்குலைத்து, பெரும் மக்கள் எதிர்ப்பில் தோல்வியடைந்த ஒன்று. அது மட்டுமல்ல பல நாடுகளில் பணச் சரிவையும், கலகங்களையும் ஏற்படுத்தி இருக்கிறது. ஊழலுக்கு முடிவு கட்டுவேன் எனக் கூறியிருந்த மோடி அதனை பழைய வரி வசூலிக்கும் முறைகளை சீர்திருத்தியிருந்தாலே செய்து இருக்க முடியும்.

தி நியூயார்க் டைம்ஸ்The New York Times:

இந்தியாவை பொருத்தவரை பணம் தான் ராஜா. அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் பிரிட்டன் போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளில் 20 முதல் 25 சதவீதமாக உள்ள நேரடி பணப் பரிவர்த்தனை இந்தியாவில் கிட்டத்தட்ட 78 சதவீதமாக உள்ளது. அதே போல இந்தியாவில் பலரிடம் வங்கிக் கணக்கு கிடையாது. அதனால் அவர்களின் வியாபாரங்கள் நேரடிப் பணம் தவிர்த்த வேறுவழிகளில் (கடன் அட்டை, வங்கி அட்டை மூலம்) செய்யவும் வாய்ப்பில்லை.

இது போன்ற திட்டத்தை அறிவிக்கும் முன்னர் போதுமான முன் ஏற்பாடுகள் ஏதும் இருந்ததாகத் தெரியவில்லை. இந்த நடவடிக்கையால் இலட்சக் கணக்கான மக்கள் தங்கள் பழைய நோட்டுக்களை மாற்ற வங்கி வாசலில் நிற்கும் நிலை, பொருளாதாரத்தை ஒரு வன்முறைக் கலகத்தில் தூக்கி எறிந்துவிட்டது.

புளூம்பெர்க் Bloomberg :

பார்ப்பதற்க்கு ஆரம்பத்தில்  மோடி அவர்களின் திறன்மிகுந்த செயலாகக் காணப்பட்ட ஒன்று தற்போது ஏன் தப்புக் கணக்காக மாறியுள்ளது… ஒரே வாரத்தில் எது இப்படி நிலைமையை தலைகீழாக மாற்றியது?

ஒருவிசயம் தெரிகிறது புழக்கத்தில் இருக்கும் 86 சதவீத நோட்டுக்களை செல்லாது என்று அரசாங்கம் ஒரு மொக்கை தைரியத்தில் தான் முடிவெடுத்திருக்கிறது. தற்போது ரிசர்வ் வங்கியோ போதுமான அளவு புதிய ரூபாய் நோட்டுக்களை அச்சிட முடியாமல் திணறுகிறது. மேலும் புதிய நோட்டுக்கள், இயங்கிக் கொண்டிருந்த ஏ.டி.எம் இயந்திரங்களுக்கு பொருந்தும் வடிவத்திலும் இல்லை.

இந்த சிக்கல்களை எல்லாம் மோடி அவர்கள் 50- நாள்களில் சரி செய்துவிடலாம். பொருத்துக் கொள்ளுங்கள் என்கிறார். உண்மையில் இப்பிரச்சினைகளைச் சரி செய்ய குறைந்தது 4-மாதங்கள் வரை ஆகலாம்.

சில கிராமங்களுக்கு மட்டுமதான் ஏ.டி.எம் வசதி இருக்கின்றனது. பலர் வங்கிகளின் வாசலில்தான் நிற்க வேண்டியிருப்பதால் தங்களது வேலை வாய்ப்புகளை இத்தகைய பிரச்சினைக்குரிய நாட்களில் இழக்கின்றனர். பல இந்தியர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு செயல்பாட்டில் உள்ள வங்கிக் கணக்குகள் இல்லை.

இந்நிலையில் இந்தியாவின் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியோ எத்தனை 1000 ரூபாய் நோட்டுக்கள் எழைகளிடம் இருக்கப் போகிறது என கணிப்புடன் கேட்கிறார். கேள்வி தருக்கபூர்வமாக இருந்தாலும் எதார்த்தம் அப்படியில்லை. இந்தச் சூழலில் இந்தியப் பொருளாதாரம் வீழ்வதற்கு முன்பாக இப் பிரச்சினைகளை சரி செய்ய யாராவது முயல வேண்டும்.

ஹெரால்டு Herald:

எந்த சூழலிலும் தனது வாக்குறுதிகளை காப்பாற்றுவதுதான் ஒரு நாட்டினுடைய செலவாணிக்கு அழகு. ஆனால் அந்த உறுதியானது இந்தியாவில் உடைக்கப் பட்டிருப்பதால் பல லட்சக்கணக்கான மக்கள் வங்கி மற்றும் ஏ.டி.எம் வாசல்களில் நின்று கொண்டிருக்கின்றனர். ரொக்கம் காலியாகி வங்கிகளும் விரைவிலேயே மூடப்படுகின்றன.

indian currency 500 note
எந்த சூழலிலும் தனது வாக்குறுதிகளை காப்பாற்றுவதுதான் ஒரு நாட்டினுடைய செலவாணிக்கு அழகு

அரசை அதிதீவிரமாக ஆதரிக்கும் சிலர் இந்த அறிவிப்பை எகத்தாளமாக ஆதரிப்பதோடு சில வாதங்களையும் முன் வைக்கின்றனர். அதாவது அதிக மதிப்புள்ள 1000, 500 நோட்டுக்கள் மதிப்பிழக்கச் செய்யப்பட்டதால் கருப்புப் பணத்தை கண்பிடிக்க முடியுமாம். இந்த அறிவிப்பு ரகசியமாக காப்பாற்றப்பட்டு வெளியிட்டதால் கருப்புப் பண முதலைகள் தங்கள் பணத்தை வேறு வழிகளில் மாற்றுவதர்கான அவகாசம் மறுக்கப்பட்டுள்ளது. எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

ஆனால் கருப்புப் பண முதலைகள் கடந்த காலங்களில் அவர்களுக்கு கிடைத்த போதுமான நேரத்திலேயே அவற்றை வேறு வழிகளில்பதுக்கி இருப்பதால் தற்போது அவர்கள் ஏன் மாற்ற வேண்டும்? ” எனக் கேட்கிறது பாக்கிஸ்தானில் இருந்து வெளியாகும் இப்பத்திரிக்கை.

நன்றி : indianexpres
What foreign media thinks about PM Narendra Modi’s demonetisation move
தமிழாக்கம்: ராஜாமணி

கிராமங்கள் – சிறு நிறுவனங்களில் வங்கி பரிவர்த்தனை – ஒரு பார்வை

0

பண மதிப்பைக் குறைத்தல் விளைவு: பண நெருக்கடி தொடர்வதால் வங்கிச் சேவையற்ற கிராமங்கள், சிறு வணிகங்கள் மோசமாகப் பாதிக்கப்படுகின்றன

கிராம மற்றும் நகரங்களில் ஏ.டி.எம் இயந்திரங்கள் மற்றும் வங்கிகளின் சமநிலையற்றப் பரவல் இந்திய கிராமப்புறப் பொருளாதாரத்தின் செயல்பாடுகளை அழித்திருக்கிறது. இதனால் நுண், சிறு, குறு நிறுவனங்கள் தங்களது அன்றாட நடவடிக்கைகளுக்குத் தேவையான 100 ரூபாய் நோட்டுகள் கிடைக்காமல் தடுமாறுகின்றன.

india-agriculture-economyஇந்தப் புள்ளிவிவரத்தைக் கவனியுங்கள். கிராமப்புற மற்றும் சிறுநகர மையங்களில் உள்ள ஒவ்வொரு வங்கிக் கிளையும் நகர்ப்புற – பெருநகரங்களில் இருக்கும் மக்களை விட இரண்டு மடங்கு மக்களுக்கு உதவுகிறது. கிராமம் மற்றும் சிறு நகரங்களில் உள்ள ஒரு வங்கிக்கிளை 12,863 மக்களுக்கு உதவுகிறது. இதுவே நகர மற்றும் பெருநகரங்களில் உள்ள ஒரு வங்கிக்கிளை 5,351 மக்களுக்கு மட்டுமே உதவுகிறது என்று இந்திய ரிசர்வ் வங்கியின் டிசம்பர் – 2015 மாத “இந்தியாவின் நிதி சேர்க்கை” ( financial inclusion in India) என்ற அறிக்கைக் கூறுகிறது.

ஏ.டி.எம் இயந்திரங்களின் பரவலும் கூட நகரங்களுக்கு ஆதரவாக தான் வளைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக டெல்லியில் 9,070 ஏ.டி.எம் இயந்திரங்களும் அதனை விடப் பெரிய மாநிலமான இராஜஸ்தானில் அதை விடக் குறைவான ஏ.டி.எம் இயந்திரங்களுமே இருக்கின்றன.

இப்போது நுண், சிறு குறு நிறுவனங்களின்(MSMEs micro, small and medium enterprises) பரவலைப் பார்க்கலாம். இந்திய கிராமப்புறங்களில் பதிவு செய்யப்படாத 200.18 இலட்சம் நிறுவனங்களும், நகர்ப்புறங்களில் 161.58 இலட்சம் நிறுவனங்களும் உள்ளன. ஒட்டுமொத்த இந்தியாவில் கிராமப்புற நிறுவனங்களின் பங்கு மட்டும் 55% ஆகும். கடைசியாக கிடைத்த 2006-07 ஆம் ஆண்டிற்கான நுண், சிறு, குறு நிறுவனங்களின் கணக்கெடுப்பு இதைத் தெரிவிக்கிறது. மாவட்டத் தொழிற்துறை மையங்களில் MSMEs தாக்கல் செய்த தொழில் முனைவோர்கள் குறிப்பாணையில் 2007-08 முதல் 2014-2015 வரைத் தொகுத்தளிக்கப்பட்டத் தகவலின் படி 22.10 இலட்சம் புதிய நிறுவனங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. கிராமப்புற நிறுவனங்களா இல்லை நகர்ப்புற நிறுவனங்களா என்று அது கூறவில்லை. ஆனால் இது சமமானப் பரவலாக இருந்தாலும் கூட அதில் பெரிய மாற்றம் எதுவும் இல்லை.

நாக்பூரைச் சேர்ந்த தொழில் முனைவோரான அபிதாப் மெஸ்ராம் அரசுத் துறை நிறுவனங்கள் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மொத்தமாக குடிநீரை வழங்குகிறார். நகரத்திற்குள் குடிநீரை வழங்கச் செல்லும் வியாபாரிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் வாரக் கூலிக் கொடுப்பதற்குக் கூடச் சிரமமாக இருக்கிறது என்கிறார். “என்னிடம் வேறொரு வேளாண் சார்ந்த தொழிலுள்ளது. ஆனால் பணமில்லாமல் பூண்டு வெங்காயம் போன்ற பொருட்களை பெரிய அளவில் மண்டிகள் வழங்காது”.

தமிழ்நாட்டை எடுத்துக்கொள்வோம், 10 இலட்சத்திற்கும் அதிகமான நுண் மற்றும் சிறு நிறுவனங்கள் இருக்கின்றன. ”ஒரு ஒன்றரை மாதத்திற்கு உற்பத்தியேதும் இருக்காது. சென்னையில் இருக்கும் பெரும்பாலான நிறுவனங்கள் 2015 வெள்ளச்சேதத்தில் இருந்தே இன்னும் மீண்டெழவில்லை. நாங்கள் விற்பனை எதுவும் செய்ய மாட்டோம் என்பது உறுதியாக இருந்தாலும் வங்கிகள் பழைய கடன்களுக்கான மாதத் தவணையை வங்கிக்கணக்கில் இருந்து எடுத்துக் கொள்ளும் என்பது அதை விட உறுதி” என்கிறார் தமிழ்நாடு சிறு மற்றும் நுண் நிறுவனங்கள் அமைப்பின் தலைவர் சி.பாபு. இந்த அமைப்பின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள நிறுவனங்களில் 1.5 கோடிக்கும் அதிகமானத் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள்.

farmers-protest-759“பற்றாக்குறையான வங்கிக்கிளைகள் தான் சிறு வணிகத்தில் பணப்புழக்கத்திற்கான ஆதிக்கத்திற்கு ஒரு இன்றியமையாதக் காரணமாகும். பெரும்பான்மையான வங்கிகள் வாரத்தில் ஒன்றிரண்டு நாட்கள் மட்டுமே இயங்குகின்றன. இந்தியக் கிராமப்புறங்களில் வங்கிப்பணிகளை ஒரு சுமையாகவே மக்கள் கருதுகின்றனர்” என்கிறார் நுண் சிறு குறு நிறுவனங்கள் கூட்டமைப்பின்(Fisme) பொதுச் செயலாளர் அணில் பரத்வாஜ். “நிறுவனம் சிறிதாக இருந்தால் பிரச்சினைப் பெரிதாக இருக்கும். உற்பத்தியின் கூடுதல் மதிப்பு மேற்கொண்டு உயராமல் நின்று விட்டதாக இடை நிகழ்ச்சி அறிக்கைகள்(Anecdotal reports) அறிவுறுத்துகின்றன” என்று அவர் கூறுகிறார்.

2001-2015 ஆண்டுகளுக்கான இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கையின்படி நகர மற்றும் பெருநகரங்களில் வங்கிக் கிளைகளின் எண்ணிக்கை 20,713 லிருந்து 43,716 என இரண்டு மடங்கிற்கும் மேலாக எகிறிவிட்டது. அதேக் காலக்கட்டத்தில் கிராமப்புறம் மற்றும் சிறு நகரங்களில் வங்கிக் கிளைகளின் எண்ணிக்கை 44,905 லிருந்து 82,358 ஆக அதிகரித்திருந்தாலும் நகர்ப்புற அளவிற்கு வேகமாக இல்லை. 2015 ஆம் ஆண்டில் ஒரு இலட்சம் கிராமப்புற மக்களுக்கு 7.8 கிளைகளே இருந்தன. ஆனால் இந்திய நகர்ப்புறங்களில் வங்கிக்கிளைகளின் எண்ணிக்கை ஒரு இலட்சம் மக்களுக்கு 18.7 ஆக இருப்பது பரத்வாஜின் கூற்றை மெய்ப்பிக்கிறது.

கணக்கில் வராத பணம் மற்றும் கருப்புப் பணத்திற்கு இடையேயான பாரிய வேறுபாடு காணாமல் போனது தான் மிகப் பெரியப் பிரச்சினை என்கிறார் நுண் சிறு குறு நிறுவனக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் வி.கே.அகர்வால். தவறான நடவடிக்கையினால் வரும் பணம் தீங்கானது தான். ஆனால் சிறு வணிகத்தில் புழங்கும் பணமானது பொருளாதார நடவடிக்கைகளுக்கு வலுவை மட்டுமேச் சேர்க்கிறது” என்று அவர் கூறுகிறார்.

இந்தியாவில் பெரும்பாலான MSMEs நிறுவனங்களின் விற்றுமுதலே சில இலட்சங்கள் தான். இதில் நடுத்தர அளவு நிறுவனங்களின் எண்ணிக்கை வெறும் 1% கூடக் கிடையாது. அகர்வாலுடைய நடுத்தர அளவு நிறுவனமான ஷாஷி கேபிள்ஸ் லிமிடெட் கம்பிவட கடத்திகளைத் தயாரிக்கிறது. இணையத்தில் RTGS வசதியை பயன்படுத்துவதால் தான் பாதிக்கப்படவில்லை என்கிறார் அவர். அதுமட்டுமல்லாமல் வரிசையில் நின்று பணம் எடுக்கவும் செலுத்தவும் அவரிடம் ஊழியர்கள் இருக்கிறார்கள்.

“நடுத்தர அளவு நிறுவனங்களால் பணப்பற்றாக்குறையை எளிதாக சமாளித்து விட முடியும். ஆனால் பெரும்பாலான சிறு குறு நிறுவனங்கள் தனி மனிதர்களால் நடத்தப்படுகின்றன. அவர்கள் பயங்கரமான நிலையில் இருக்கின்றனர்” என்று அகர்வால் கூறுகிறார். இதுவரையில் வேலையிழப்புகள் ஏற்பட்டுள்ளதா என்று கூறுவது கடினம் என்றாலும் பொருளாதார நடவடிக்கைகள் கண்டிப்பாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன என்று MSME லிருப்பவர்கள் கூறுகிறார்கள்.

“MSME ஒரு பலபடித்தான துறையாகும். அமைப்புச்சாரா MSME பிரிவில் ஏற்படும் தொழில் முடக்கத்தை உணர நீண்ட நாட்கள் ஆகும். அதை உணரும் போது நேரம் கடந்து விடும்” என்று பரத்வாஜ் கூறுகிறார். இந்தத் துறை பணமில்லாப் பொருளாதாரத்தை வரவேற்றாலும் அதற்கு நேரம் வேண்டும். “ஒன்றிரண்டு வாரங்களில் நீங்கள் எப்படி பேடிம்(Paytm)மிற்கு மாற முடியும்? இதற்கு இன்னும் சில ஆண்டுகள் பிடிக்கும்” என்கிறார் அவர்.

“இணையப் பரிமாற்றத்தை சிறுதொழில் துறைக் உறுதியாக கைக்கொள்ளும் என்பதை அரசாங்கம் உணர வேண்டும். ஆனால் இது ஒருப் படிப்படியான செயல்பாடாகும். வணிகத்தில் உருவாகும் பணமானது ஒழுங்கற்றது அல்ல என்பதை ஒப்புக் கொள்வதும் இன்றியமையாததாகும். சில பிரச்சினைகளை ஓரளவிற்கு மேல் ஒரு அமைப்பை முடமாக்கி அதன் விளைவைச் சிதைக்கும் அளவிற்கு திணிக்க முடியாது.” என்கிறார் அகர்வால்.

செல்லாததாய் ஆக்கியது ரொக்கத்தை அல்ல வர்க்கத்தை !

3
Modi

கருப்பு பணத்தை ஒழிக்க  மோடி வருகிறார்
கடுகு
டப்பியை  மறைத்துவை!

அரசு சொல்லும்
அனைத்து செல்லும் அடையாளங்களுடனும்
கையில் இருக்கிறது நோட்டு…

கொண்டு போனால்
‘காந்தியின் நோக்குநிலை’ மட்டுமல்ல
கடைக்காரரின் நோக்குநிலையும்
மாறுபடுகிறது.

‘வேற்று கிரகத்துக்கு
அனுப்பிய விண்கலம்’
இருக்கும் நோட்டை
சொந்த கிரகத்தில்
அனுப்ப முடியவில்லை.

‘சாய்த்துப் பார்த்தால்
பச்சையிலிருந்து நீலமாக மாறும்’
நோட்டை,
சாயங்காலம் நேராக
கீரைக்கட்டு அம்மாவிடம்
நீட்டினால்
‘பச்சையாக’ மாற மறுக்கிறது.

‘இடப்பக்கத்திலிருந்து
‍பெரிதாகிக்கொண்டே
போகும் எண்கள்’
கடைப்பக்கத்தில் போனால்
தடைபட்டு
பாக்கெட்டில் சுருங்கி விடுகிறது.

‘வலப்பக்கத்து
தேவநாகரி எண்களை’
வளைத்து வளைத்துக் காட்டினாலும்
தட்சணைப் போக
மீதம் தர தயாரில்லை
கோயில் குருக்கள்!

‘தூய்மை இந்தியா சின்னம்
மற்றும் வசனத்தை’
தூக்கி தூக்கி காட்டினாலும்
‘தூய்மையா…. நீயே வச்சிக்க!’
என ரேசன் இந்தியா துரத்துகிறது.

‘ரிசர்வ் வங்கி ஆளுநரின்
உத்திரவாதக் கையெழுத்தைக்’
காட்டினாலும்
ஒத்துக் கொண்டு சில்லறைத் தர
ஒரு பிச்சைக்காரும் தயராயில்லை…

“ஏத்திவிடப்பா
தூக்கிவிடப்பா
இரண்டாயிரத்தை
மாத்திவிடப்பா”…
வேண்டுவது
அய்யப்ப சாமிகள் அல்ல
அன்றாடம்
வங்கிக்கு
இருமுடி கட்டி
வரிசையில் நிற்கும்
அன்றாடம் காய்ச்சிகள்!

எழுந்ததும் போய்
வரிசையில் நின்று
காலைக் கடனை அடக்கி
கை, கால் உழைப்பை முடிக்கி
‍செல்லாத நோட்டை
கொடுத்தது
‘இல்லாத’ நோட்டை
வாங்கத்தானா?

அய்நூறுக்கு
பெட்ரோல் போட்டு,
ஆயிரத்துக்கு சாப்பிட்டு,
இரண்டாயிரத்துக்கு
செருப்பு வாங்கினால்தான்
இந்த நோட்டு
செல்லும் என்றால்
உண்மையில்
மோடி
செல்லாததாய் ஆக்கியது
ரொக்கத்தை அல்ல
வர்க்கத்தை.

ஒன்றுக்கும் உதவாமல்
சும்மா காட்டுவதற்கும்
ஆட்டுவதற்கும்
எங்கள் கையில்
எதற்கு நோட்டு?
கையாலாகாத
ரிசர்வ் வங்கியைப் பூட்டு!

எச்சரிக்கை!
கருப்பு பணத்தை ஒழிக்க
மோடி வருகிறார்
கடுகு டப்பியில் இருக்கும்
சில்லரையை மறைத்துவை!

– துரை. சண்முகம்

முதலாளிகளுக்கு மக்கள் பணம் வங்கிகளில் மக்கள் மரணம் – கேலிச்சித்திரம்

11

வங்கிகளில் மக்கள் செலுத்திய பணம் 5,44,571 கோடி -புள்ளி விவரம்!

demonetisation-deaths

அப்படியே ஏ.டி.எம் வரிசையில் நின்று இறந்தவர்களின் புள்ளிவிவரத்தை போடுங்க பாப்போம்…!

கேலிச்சித்திரம்: சர்தார்

இணையுங்கள்:

சாணைக் கல்லில் தீட்டிய ஒரு பாடல்

0

தீய்ந்து போகும் இதயம்
எழுதும் பாடல்
இன்னொரு இதயம் பற்றித் தீய்க்கும்.

எரி அடுப்பிலிருந்து எடுத்த கொள்ளி
பனிக்கட்டி போல இருக்கமுடியுமோ?

beacon-fire-2நானெழுதும் இப்பாடல்
கணவன் முன் வன்புணரப்பட்ட
பெண்களின் வேதனையிலிருந்து வருகிறது.

– பசித்துச் சோறுகேட்ட ஒரே குற்றத்திற்காக
மனிதர்களாக மட்டுமே வாழ்வோம்
என்று குரல் கொடுத்ததற்காக
கட்டி வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்ட
மக்கள் தலைவர்களின்
மரணவேதனையிலிருந்து வருகிறது

இந்தப்பாடல்
எப்படி உனக்கு இன்பம் கொடுக்கும்?
இதயம் மட்டும் உனக்கு இருக்குமானால்
அது துடிதுடிக்கும்

வாழ்க்கை எனும்
சாணைக்கல்லில் தீட்டியது
இந்தப் பாடல்
எப்படி இது நடுநிலை வகிக்கும்?
எப்படி இது எல்லோருக்கும் இன்பம் கொடுக்கும்?

ஒன்று நீ நம் ஆளாயிருக்கவேண்டும்
அல்லது எதிரியாக இருக்கவேண்டும்

எதிரிக்கு எதிராய் நடக்கும் போரில்
என்னைப் பொருத்தவரை
என் பாடலும் ஒர் ஆயுதமே!

எச்.ஆர்.கே. (தெலுங்கு)

புதிய கலாச்சாரம், நவ, டிச 1990- ஜன1991.

உங்களது இரக்கமின்மையை நியாயப்படுத்த முடியாது

5

கிராமப்புற இந்தியாவின் நிலைமை படுமோசமான நிலையை அடைந்துள்ளது. ஒப்பீட்டளவில் குறைவான பணத்தாள்களே கிராமப்புற வங்கிகளுக்குச் சென்றடையும் நிலையில் நிலைமையைச் சமாளிக்க வங்கி ஊழியர்கள் கடுமையாகப் போராட வேண்டியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தரில் உள்ள கிராமம் ஒன்றில் உணவுப் பொருட்கள் தீர்ந்து போன நிலையில் பணமும் தீர்ந்து போய் மக்களால் எதையும் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

bastar-demonetisationபொதுத்துறை வங்கி ஒன்றில் பணிபுரியும் வி.எம்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் இதே போன்ற சூழ்நிலையை தானும் எதிர்கொள்வதை தனது முகநூல் பதிவொன்றில் சுட்டிக்காட்டியுள்ளார். வங்கிக் கிளைக்குப் பல நாட்களாக பணம் அனுப்பப்படாத சூழலில் இருந்த ரொக்கமும் தீர்ந்து போன நிலையை விளக்கும் அவரது பதிவு நெஞ்சைப் பிளப்பதாக உள்ளது.

“ஒரு வேளை நாளையும் இன்னொரு தாயிடம் அவரது குழந்தையின் சிகிச்சைக்குப் போதுமான பணம் கொடுக்க முடியாது என்று சொல்லும் நிலை வந்தால் நான் உடைந்து போவேன்.. ஒரு வேளை நாளையும் குளிரில் நடுங்கும் வயதான பெண் ஒருவரைக் காண நேர்ந்தால் நான் உடைந்து போவேன்..” என்கிறார் அந்த வங்கி ஊழியர். அவரது முகநூல் பதிவு சுமார் 2500 பேரால் பகிரப்பட்டு மிக விரைவில் பலரையும் சென்றடைந்துள்ளது.

இதோ அவர் எழுதியது :

ஓ… எனக்குப் போதும் போதும் என்றாகி விட்டது! நான் ******வங்கியின் கிராமக் கிளையில் பணிபுரிகிறேன். ஒரு வேளை நாளையும் இன்னொரு தாயிடம் அவரது குழந்தையின் சிகிச்சைக்குப் போதுமான பணம் கொடுக்க முடியாது என்று சொல்லும் நிலை வந்தால் நான் உடைந்து போவேன்.. ஒரு வேளை நாளையும் குளிரில் நடுங்கும் வயதான பெண் ஒருவரைக் காண நேர்ந்தால் நான் உடைந்து போவேன்..

ஏனெனில் அவர்களது கண்களைப் பார்த்து சில பெரிய நன்மைகளைக் கருதியும் தேச நலன் கருதியும் இந்த நிலையை அனுபவித்தாக வேண்டுமென்றும், இதனால் கருப்புப் பணம் ஒழிந்து போகுமென்றும் என்னால் விளக்க முடியவில்லை.. கருப்புப் பணம் இருக்கிறதோ இல்லையோ.. ஒவ்வொரு முறையும் இந்த அமைப்புமுறை அவர்களை மிக மோசமாக ஏமாற்றியுள்ளது…

இங்கே அரசு மருத்துவமனைகள் இல்லை. தனியார் மருத்துவமனைகளோ பழைய நோட்டுக்களை வாங்குவதில்லை. நீங்கள் கூச்சலிடுவது புரிகிறது; ஆனால், கொழுத்துப் போன மேட்டுக்குடி புட்டங்களே, உங்கள் அன்புக்குரியவர்கள் என்று வரும் போது அரசு மருத்துவமனைகளை நீங்கள் நம்புவதில்லை தானே! தயவு செய்து கொஞ்சம் நேர்மையாக இருங்கள். தயவு செய்து இந்த மேட்டுக்குடித்தனத்தை விடுங்கள்.

இவை ‘அசௌகரியங்கள்’ அல்ல. இப்போது இது ஒரு குற்றம். இது மனித உரிமை மீறல். மக்கள் இறந்து போயிருக்கிறார்கள். வரிசைகளில் காத்திருக்கும் போது இறந்து போயிருக்கிறார்கள். பழைய நோட்டுக்களை வாங்காத மருத்துவமனைகளில் இறந்து போயிருக்கிறார்கள். வங்கிகளில் பணிபுரியும் போது இறந்து போயிருக்கிறார்கள். மிகக் கேவலமாக நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களால் நிகழும் மரணங்களை சில பெரிய நன்மைகளைக் காட்டி உங்களால் நியாயப்படுத்த முடியுமா?

எனக்கு மற்றவர்களின் இரத்தக்கரை படிந்த எந்த நன்மையும் தேவையில்லை. ஆமாம், இந்த நன்மை என்பது வருமானச் சமநிலையை அளித்து விடப்போகிறதா? அது முடியுமா? உங்கள் உட்கட்டமைப்புகளே தயாராக இல்லாத நிலையில் எதற்காக இந்த அவசரம்? தலைப்புச் செய்திகளை ஆக்கிரமிக்க வேண்டுமென்கிற உங்களது அவசரத்திற்காக மக்கள் இறந்து போயிருக்கிறார்கள்.

கருப்புப் பணத்தால் உங்களது இரக்கமின்மையை நியாயப்படுத்த முடியாது. இது தான் தேசபக்திக்கு நீங்கள் வைத்திருக்கும் விளக்கமென்றால், அந்த தேசபக்தியைத் தூக்கி நரகத்தில் போடுங்கள். யாரோ ஒருவருடைய ‘பெரிய நன்மையை’ கருதி மக்களை சாகவிடாது எனது தேசபக்தி..!

மூலக்கட்டுரை :
Demonetisation: This banker’s live updates from a rural bank on his experiences will move you
– தமிழாக்கம்: முகில்

மோடியின் தீவிரவாதம் : அரசு மருத்துவமனையில் அகதிகளான மக்கள்

18
Arakkonam Davasi's mother (2)
தவசி அம்மா

யிரம், ஐநூறு நோட்டுக்கள் செல்லாது என்று மோடி நடத்திய நாடகத்தின் அங்கமாக அரசு மருத்துவமனைகளில் பழைய நோட்டு வாங்கப்படும் என்றார்கள். தமிழக அரசை நடத்திச் செல்பவர் அப்பல்லோவில் இருக்கும் போது மக்கள் அரசு மருத்துவமனைகளில் எப்படி எதிர்கொள்கிறார்கள்? சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்குச் சென்றோம்.

மணலி நிர்மலா:

Manali Nirmala (1)
நிர்மலா

நின்னது நிக்க திடீர்னு இப்படி அறிவிச்சா மக்கள் எப்படி சமாளிப்பாங்கன்னு ஒரு அறிவு வேணாம்? மத்த செலவை எப்படியோ சமாளிச்சாலும் மருத்துவச் செலவை என்ன செய்ய முடியும். விடிஞ்சா ஆப்ரேசன் செஞ்சவங்க செலவுக்கு என்ன செஞ்சுருப்பாங்க. பத்து நாளாயிட்டு, இன்னுமும் நான் ஒரு ரூபா பணம் மாத்தல. நான் இதய நோயாளி, பேங்கு வாசல்ல நிக்குற கூட்டத்த பாத்தேலே மயக்கம் வருது.

கருப்புப் பணத்த ஒழிக்கப் போறதா சொல்றாங்க, ஆயிரம் ஐநூறு அடிக்கிறவனுக்கு ரெண்டாயிரம் அடிக்க முடியாதாக்கும். எங்க ஏரியா பேங்குல வங்கி அதிகாரியே ஒரு பணக்காரனுக்கு 3 பேக்கு பணத்த மாத்தி குடுத்துட்டு, வரிசையில நின்னவங்களுக்கு பணம் இல்லன்னு சொல்லிட்டாரு. பணக்காரன் யாரும் வரிசையில நிக்கல.

நான் ஸ்கேன் எடுக்க வந்துருக்கேன். தண்ணிய குடிச்சுட்டு மூத்தரம் முட்டுது. இவ்வளோ பெரிய ஆஸ்பத்திரியில ஒரு நல்ல டாய்லெட் இல்ல. அதை மாத்த சொல்லி முதல்ல படம் புடிச்சு போடுங்க. நம்ம பணத்த நாம எடுக்குறதுக்கு திருடனப் போல கையில அடையாள மை வைக்கிறாங்களாம். நாட்டுக்கு செய்ய வேண்டியது எவ்வளவோ இருக்க லூசு தனமா ஏதேதோ செய்றாரு மோடி.

திருப்பத்தூர் வண்ணிநாதபுரம் மல்லிகா, சத்தியவாணி, காந்தா:

கருப்புப் பணம் பணக்காரங் கிட்ட இருக்கா? கல்லு மண்ணு தூக்குற சித்தாளு எங்க கிட்ட இருக்கா? திருடுனவன விட்டுட்டு சும்மாருக்க எங்களப் போல மக்களுக்கு தண்டனை தர்ரது என்ன ஞாயம்? இவ்ளோ சட்டதிட்டம் இருக்குற நாட்டுல கருப்புப் பணம் யாரு வச்சருக்கான்னு கண்டு பிடிக்க முடியாதா? அவங்க எப்படி பணம் சேத்தாங்கன்னு சோதன போடு! கேமரா வச்சு கண்டுபிடி! அத்த வுட்டுபுட்டு ஏழைங்க எங்கள வதைச்சு வயித்தெரிச்சல கொட்டிக்கிறியே வெக்கமில்லெ?

எங்க அண்ணன் குடிச்சே ஒடம்ப கெடுத்துகினு இங்க வந்து ஒரு மாசமா படுத்துருக்காரு. கூட இருந்தவங்ககிட்ட செலவுக்கு காசு கிடையாது. நாங்க வந்து தொணைக்கி இருந்துட்டு அவங்கள போகச் சொல்ல எங்கள்ட்ட காசு கிடையாது. பணம் செல்லாதுன்னு சொல்லி நாளு நாளு ஆச்சு. ஃபோனு மேல ஃபோனு அடிக்கிறாங்க. டவுனுனலதான் பேங்கு இருக்கு, போயி மாத்திரலான்னு நாலு குடும்பத்துல நாலு பேரு மெனக்கெடுறோம் முடியல. மேஸ்திரிகிட்ட 5 – நூறு ரூவா நோட்டா குடுய்யான்னு கெஞ்சி பாத்துட்டோம். இல்லன்னு ஆயிரம் சத்தியம் பன்றாரு.

Satyavani, Kantha, Malika  (1)
சத்தியவாணி, காந்தா, மல்லிகா

நாங்க எல்லாம் ஒரே குடும்பத்த சேத்தவங்க. ஒடம்பு சரியில்லாத அண்ணன  பாக்க வர்ரதுக்கு 1000-க்கு 100 கமிசனக் கொடுத்து மாத்திட்டு வந்தோம். பேங்குக்கு போயி வரிசையில நின்னா பாதி பேருக்குதான் பணம் தர்ராங்க. ஒருநா ரெண்டுநா பொழப்புக் கெட்டுப் போகுது. கையெல்லாம் காச்சுப்போக கல்லு, மண்ணுத் தூக்கி சம்பாரிச்சக் காசுக்கு தெண்டம் குடுத்துட்டு வர்ரோம்.

எங்க ஊருல புருசன இழந்த அம்மா ரெண்டு பொண்ணுங்க கல்யாணத்துக்காக நெலத்த வித்துட்டு 70 லெச்சம் பணம் வச்சுருந்துச்சு. பணம் செல்லாதுன்னு சொன்னதும் தூக்கு போட்டு செத்துப் போச்சுன்னு சொல்லிக்கிறாங்க. ஒரு பொண்ண கல்யாணம் செய்ய கிலோக் கணக்குல கேக்குறான். எல்லாத்தையும் செல்லாதுன்னும் கருப்பு பணமுன்னும் சொன்னா எப்படி பொண்ணக் கட்டிக் குடுக்குறது?

சொத்து வித்தவங்க, சின்னக் கம்பனி நடத்துறவங்க, பிள்ளைங்கப் படிப்புக்காக வச்சுருக்கவங்க, எங்களப் போல ஆளுங்களுக்கு வேலை கொடுக்குற மேஸ்திரிங்க இவங்கள்ளாம் கருப்பு பணம் வச்சுருக்காங்கனு பயம் காட்டுனா அவங்க எப்படி பொழக்கிறது?

ஓய்வு பெற்ற அரசு ஊழியர் கோபால்: (அலுவலக உதவியாளர்)

Retired govt staff from chengalpattu
கோபால்

எனக்கு மாசம் பத்தாயிரத்து ஐநூறு பென்சன் வரும். இப்ப ஒரு பத்து பைசா எடுக்க முடியல. வீட்டு செலவுக்கு பாலு தண்ணி எதுவும் வாங்க முடியல.

தங்கச்சி மகனுக்கு தலையில கட்டி. 9-ந் தேதி ஆப்ரேஷன். அவன் பொண்டாட்டி கைக்கொழந்தக்காரி. உதவிக்கி யாரும் இல்ல. எம்மகன் அவன் ஃபிரண்டுகிட்டெல்லாம் கேட்டுப் பிச்ச எடுக்காத கொறையா 200 ரூபா கொண்டு வந்தான். செங்கல்பட்டு பக்கம்தான் எங்க ஊரு. ஊரு கடந்து சாப்பாடு எடுத்து வர முடியல. காபி குடிக்கக் கூட யோசிச்சுட்டு பட்டினி பசியா குத்திருக்கோம். கைப் பிள்ளைய வச்சுகிட்டு ஒரு வேளை சாப்பாட்டோட கெடக்குது அந்த பொண்ணு. இங்க செலவுக்கு கையில ஐஞ்சு காசு இல்லாமெ தவிச்சுகினு இருக்கேன்.

அறநூறு கோடி செலவுல நம்ம கட்சி அமைச்சரே பொண்ணுக்குக் கல்யாணம் செய்யறப்ப, கருப்பு பணத்த ஒழிக்க ஒரு வேளை சாப்பாட்டுக்கு திண்டாட்ற மக்கள வதைச்சத நெனச்சு மோடி வெக்கப்படனும். அம்பது நாள்ல எல்லாம் சரியாகிடும் அப்படிங்கறாறு. ஐநூறு வருசம் ஆனாலும் இதெல்லாம் மாறாது. காலங்காலமா பாத்துட்டுதானே இருக்கோம். ஏழை ஏழையாதான் இருக்கான், பணக்காரன் பணக்காரனாதான் இருக்கான். நான் அடிக்கிறா மாறி அடிக்கிறேன் நீ ஓடுறா மாறி ஓடுங்கறதுதான் மோடி கருப்பு பணம் வச்சுருக்கவங்க கிட்ட போட்ருக்க ஒப்பந்தம். என்ன திட்டம் போட்டாலும் கருப்ப ஒழிக்க முடியாது.

அரக்கோணம் பரித்திப்புத்தூர் தவசி:

Arakkonam Davasi's mother (2)
தவசியின் தாயார்

எங்க அம்மாவுக்கு கழனி காட்டுல கெடந்த ஆணி குத்திருச்சுங்க. டாக்டர்கிட்ட காட்டிட்டுதான் இருந்தோம் எப்படியோ புரையோடி போச்சு. அரக்கோணம் டாக்டருங்க கால எடுக்கணுன்னு சொன்னதால இங்க கொண்டு வந்தோம். ஆபரேசன் செஞ்சு சரிபடுத்திரலாம் ரெண்டு நாள் கழிச்சு வந்து அட்மிஷன் போடுன்னு சொன்னாங்க.

பணம் செல்லாம போச்சு. ரெண்டு நாள் அரக்கோணம் பேங்குக்கு போய் பணம் எடுக்க முடியாம வந்துட்டேன். ரெண்டு நாளுமே வரிசையில நின்ன பாதி பேருக்குதான் பணம் கெடைச்சுது. பணம் எடுக்க அலைஞ்துல வயலுக்கு தண்ணி பாச்ச முடியாம பயிரு சோம்பி கெடக்குது. எங்க அம்மா வேற வலி தாங்காம வீட்டுல கத்தித் தொலைக்கிது. நேத்துதான் 1000-த்துக்கு 100 குடுத்தா சில்லறை வாங்கித் தர்ரதா ஒருத்தர் சொன்னாரு. அத வாங்கிட்டுதான் இன்னைக்கி வந்தோம்.

அந்த நேரம் பாத்து ஆயிரம், ஐநூறு செல்லாதுன்னு சொல்லிட்டாங்க. பணமே கெடைக்கலங்க. கமிஷனுக்கு வாங்கிட்டு இன்னைக்கு (17.11.2016) வந்தா இதயத்தை பாக்குற டாக்டர் வரலை, நாளைக்கு வாங்கன்னு சொல்றாங்க. பணம் புரட்டி இப்ப கொண்டு வரவே ரொம்ப லேட்டாச்சு. இன்னொரு மொற காரு வச்சு கொண்டு வரவெல்லாம் வசதி கெடையாது அதான் என்ன செய்றதுன்னு தெரியாம நின்னுகினு இருக்கோம்.”

சென்னை புறநகரைச் சேர்ந்த பெண் ஒருவர்:

Unknown Chennai woman (1)“ஆயிரம் ஐநூறு செல்லாதுன்னு அறிவுப்புக்கு ஒரு வாரம் முன்னாடி இருந்து எனக்கு காய்ச்சல். புத்தி சுவாதினம் இல்லாத அம்மாவை தவிர எனக்கு யாரும் இல்ல. அம்மாவ பாத்துக்க யாரும் இல்லாததால எங்கூடவே கூட்டிட்டு வர்ரேன். எனக்கு குளிர் நடுக்கம் நிக்க முடியல. அசிங்கமா பேசுற அம்மாவை கட்டுப்படுத்த முடியல. (வினவு செய்தியாளர்களையும் திட்டினார் அந்தம்மா)

வீட்டுப் பக்கத்துல உள்ள டாக்டர்ட ஒரு வாரமா ட்ரீட்மெண்ட் எடுத்தும் நிக்கல. ரத்தம் டெஸ்ட் செய்ய சொன்ன மறு நாள் பணம் செல்லாதுன்னு சொல்லிட்டாங்க. சரி அரசு ஆஸ்பத்தரிக்கு வரலான்னா பஸ்சுக்குக் கூட காசு இல்ல. பேங்குல பணம் இருந்தும் வரிசையில நின்னு எடுக்க முடியல. எப்படியோ வந்து ரத்தம் டெஸ்டுக்கு கொடுத்து நாலு நாள் ஆச்சு. இன்னைக்கி வந்தா எலி காய்ச்சல் போல இருக்கு, பெட்டுல சேருங்கன்னு சொல்லிட்டாங்க.  அட்மிஷன் போட்டுட்டா வெளிய வரமுடியாது. செலவுக்கு காசு இல்லாம உள்ள எப்படி இருக்க முடியும். எப்படியாவது ஏ.டி.எம்-ல பணம் எடுத்துட்டு போகலான்னு வந்தேன். நல்ல காலம் வாசல்ல வண்டி நிக்குது. ஆனா (நடமாடும் ஏ,டி,எம்). வரிசையப் பாத்தா பணம் தீந்துடுமோன்னு பயமா இருக்கு. சரி நான் போறேங்க……

மருத்துவமனை துப்புறவுத்துறை ஒப்பந்த ஊழியர்கள் – பெண்கள்:

“மோடி பணம் செல்லாதுன்னு சொன்ன அன்னைக்குத்தான் எங்களுக்கு சம்பளம் போட்டாங்க. கத்த கத்தையா ஆயிரமும் ஐநூறுமா 6,000 பணம் இருக்குது. பணந்தான் இருக்கெங்காட்டி அன்னைய நெலமைக்கி ஒரு டீ குடிக்க முடியல. அன்னைக்கி நைட்டு டூட்டி சம்பளம் வாங்கச் சொல்லோ நல்லா பிரியாணி துண்ணலான்னு வீட்டாண்ட இருந்தும் எதுவும் எடுத்துகினு வரல. பசிவேற இந்த கோடியில இருந்து அந்த கோடி வரைக்கும் ஒரு கடக்காரனும் செல்லாது செல்லாதுன்றான். இன்னா பன்னுவே சொல்லு.

mobile ATM GH (1)
நடமாடும் ஏ.டி.எம்

விடிய விடிய கக்கூசு நாத்தத்துல கூட்டிப் பெருக்கி அள்ளிட்டு காலையில ஒரு வா காபிக்கி வழியில்ல. கை நெறையோ துட்டுக்கிது, அத்தையா துண்ண முடியும். ஒரு நா லீவு குட்க மாட்றான் இந்த துக்கிரிப் பையெ. பேங்கு வாசல்ல கீவு கட்டி நிக்குது ஜனம். இன்னா செய்வ சொல்லு. சரி செலவுக்கு என்ன செய்யலான்னு பாத்தா 2000 நோட்டுதான் தர்ரான்றாங்க அதுக்கு சில்ற ஆரு தருவா.

நம்புனா நம்பு, நம்பாங்காட்டி போ. ஒரு சாரிடான் மாத்தர வாங்க முடியாம லோலுபட்டேன். அண்ணாச்சி கடையத் தொறந்தா கடனுக்கு வாங்கி சோறு பொங்கு இல்லாங்காட்டி சும்மாருன்னு வீட்டுல சொல்லிகினு வந்துருக்கேன். எங்க பொண்ணுங்க ரெண்டும் பாத்தரத்துக்கு பாலிஷ் போட்ற வேலைக்கு போகுது. அவங்கள போய் வரிசையில நின்னு மாத்திகினு வாங்கன்னா லீவு இல்லன்னுதுங்க. இன்னா பன்னுவ. நூறு  ரூபாய் கமிஷனுக்குதான் மூவாயிரம் மாத்துனேன். இன்னுமும் மீதிப் பணம் மாத்தாதே கெடக்கு. கையில இருக்கற துட்டு இன்னைக்கி காலியாபூடும். நாளைக்கி இன்னா செய்றது ஒன்னியும் புரியல.

Sanitory Workers (4)
துப்புரவுப் பணியாளர்கள்

இந்தா மாறி ஒரு திட்டம் கொண்டாந்தா இன்னா மாறி பாதிப்பு வருன்னு முன்னங்காட்டி ரோசன பன்னிருக்கனும்ல. அத்த வுட்டுபுட்டு மக்கள் அலையவுட்ரியே, இது நல்ல மன்சனுக்கு அழகா. திடிர்னு சொலங்காட்டி எவ்வளோ பிரச்சின ஆயிபோச்சு. ஏதோ புத்திகெட்டு சொல்லிட்டேன்னு ஒத்துகினாலும் மனசு ஆறிப்பூடும். அத்த வுட்டுப்போட்டு 500 நோட்டு அட்சிகினே இருக்கோம் வந்துகினே இருக்கு, பணம் தர்ர மிசினு செஞ்சுகினு இருக்கோம்ன்னு இன்னான்னாவோ பீலா வுட்டுகினுருந்தா இன்னா அர்த்தம்.

நானும் எங்கூட்டு ஆம்பளையும் இங்கதான் வேல செஞ்சுகினுருக்கோம். எங்க ரெண்டு பேருக்குமே பேங்குல அக்கோண்டு, அடயாள அட்ட கெடையாது. எம்பொன்னுகிட்ட நேத்துதான் 7000 பணம் குடுத்து அவ அட்டையில மாத்திகினு வாம்மான்னே. இந்த இன்னைக்கி மை வைக்கிறதா சொல்றாங்க. எம்பொண்ணு பணத்த எப்புடி மாத்துவா, நா எப்புடி மாத்தப் போறோன்னு தெரியல. நம்மூட்டு துட்ட நாம மாத்துறதுக்கு அடையாளம் எதுக்குங்கறேன்.

ஆதார் அட்ட எடுங்க போங்குல கணக்கு வைங்க கேஸ் மானிய காசு அதுல வந்துருன்னு சொல்லிட்டு வர்ரதே இல்லை. பேங்குல பணமிருந்தும் கார்டு தேச்சா வரலன்னு சொல்றா எம்பொண்ணு. எதுவானாலும் நேரடியா குடுத்து வாங்குனா இன்னான்னு கேப்ப, இப்ப யார கேக்க முடியும். எல்லாம் ஆளே இல்லாம மிஷின வச்சு ஓட்ட போறாரு மோடி.

கருப்பு பணத்த யாராலும் ஒழிக்க முடியாது. நல்லவனுக்கு ஒரு வழி. திருட்டு பயலுக்கு ஆயிரம் வழி. திருடன் செவுரு ஏறுவான், வேலி தாண்டுவான் ஏன் கொலை கூட செய்வான். அவன இட்டாந்து எந்த வழியில சொத்து சேத்தான்னு கண்டுபிடி. அதுக்கு எத்தினியோ வழி கீது. நகை, சிலை, எஸ்டேட், பங்களா, சொத்து இப்பிடி யாரெல்லாம் வச்சுருக்கான்னு பாத்து அங்க போயி அதிரடி நடவடிக்க எடு. அது ஒங்களால முடியும். நாட்ட ஆளுர மகராசனுக்கு அது முடியாம இருக்குமா. அத்த வுட்டுப்போட்டு இன்னாத்துக்கு ஏழைங்களையும், கஷ்டப்பட்டு வேலைக்கி போயி நாலு காசு வச்சுருக்க அப்பாவிங்களையும் அலைய வுட்ற.

இந்த பணம் செல்லாதுன்னு சொல்லங்காட்டி ஒரு கல்யாணமே நின்னு போச்சுன்னு டிவியில காட்றாங்க. ஐநூறு கோடி செலவு பண்ணி கல்யாணம் பண்ணாங்கன்னு மோடி ஆளுங்கள டி.வி-ல காட்றாங்க. இத்தெல்லாம் அந்த மோடி கண்ணுக்குத் தெரியாதாம்மா? சாதார்ண மக்களாண்ட உள்ளதுதான் தெரியுமாமா? எங்க வூட்டாண்டெ கடை வச்சுருந்த அண்ணாச்சி யாவாரமே கெட்டுப் போச்சு. சில்ற கெடைகெலன்னு மூடிட்டாரு. மோடி இன்னுரு வாட்டி எலஷ்சன்ல நின்னுருவாரு? பாக்கலாம்.

– நேர்காணல்: வினவு செய்தியாளர்கள்