தனியார் பள்ளிகளின் கொள்ளைக்காக சென்னைப் பள்ளிகளின் தரத்தைக் குலைத்த மாநகராட்சி கல்வி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடு!
சென்னையில் பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம்
சென்னைப்பள்ளிகளின் தரத்தைக் குலைத்த மாநகராட்சி கல்வி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடு !
இரு நாட்களுக்கு முன்னர் வெளியான +2 தேர்வு முடிவுகளின் படி சென்னை மாநகராட்சி பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் சென்ற ஆண்டின் 88.98% லிருந்து 85.30 % ஆக குறைந்துள்ளது. ஒரு வகையில் சொன்னால் திட்டமிட்டு குறைக்கப்பட்டுள்ளது.
ஆம், தனியார் பள்ளிகளின் முதலாளிகளின் லாபவெறிக்காகவே திட்டமிட்டு ஏழைமாணவர்களின் படிப்பு பாழாக்கப்பட்டுள்ளது. அரசு விதிப்படி எந்தப்பள்ளியிலும் கழிவறை , ஆய்வகம், நூலகம், ஆசிரியர் உள்ளிட்ட கட்டுமான வசதிகள் எதுவும் இல்லை. இவ்வாறு படிக்கின்ற சூழலே இல்லாத இடத்தில் எப்படி மாணவனால் படிக்க முடியும்? தேர்ச்சி விகிதம் குறையாமலா இருக்கும்? இதைக்காரணம் காட்டி பெற்றோர்கள் அரசுப்பள்ளியில் மாணவர்களை சேர்க்காமல் விடுவர், அதைக் காரணமாகக் கொண்டு மாநகராட்சிப் பள்ளிகளை தனியாருக்கு தாரைவார்க்கிறது சென்னை மாநகராட்சி.
ஆய்வக வசதிகள் இல்லாமல் அறிவியலில் தேர்ச்சி கிடைக்குமா ?
ஜெயலலிதாவுக்கு பஜனை பாடவே நேரம் போதாத மேயர் மற்றும் அமைச்சர்கள் எப்படி மாநகராட்சிப் பள்ளிகளைப் பற்றிப் பேசுவார்கள் ? ஏழை எளிய மாணவர்களுக்காகவே உருவாக்கப்பட்ட மாநகராட்சி பள்ளிகளை தனியாருக்கு தாரைவார்ப்பதை நோக்கமாகக் கொண்ட கல்வித்துறை அதிகாரிகள் முதல் குற்றவாளிகள் என்பதை அம்பலப்படுத்தி புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பில் சென்னை மாநகராட்சி முன்பு 09-05-2015 காலை 11 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஏழை வீட்டுப் பிள்ளைகளை, தனியார் முதலாளிகள் கொள்ளையடிக்க திட்டமிட்டு பெயிலாக்குறான் !
நடவடிக்கை எடு ! நடவடிக்கை எடு !
தனியார் பள்ளிகளின் கொள்ளைக்காக
சென்னைப்பள்ளிகளின் தரத்தைக் குலைத்த
மாநகராட்சி கல்வி அதிகாரிகள் மீது
நடவடிக்கை எடு ! நடவடிக்கை எடு !
வாத்தியார் இல்லை; வகுப்பறை இல்லை
ஆய்வகம் இல்லை ; நூலகம் இல்லை
படிக்கின்ற சூழல் கொஞ்சமும் இல்லை
ஆய்வக வசதிகள் இல்லாமல்
அறிவியலில் தேர்ச்சி கிடைக்குமா ?
கணக்கு வாத்தியார் இல்லாமல்
கணக்கில் தேர்ச்சி கிடைக்குமா?
“மாநகராட்சிப் பள்ளிகளின் வீழ்ச்சி, மேயர் முதல் மதிப்பெண் எடுத்த மாணவர்களை சந்திக்கப் போவதில்லை” – பத்திரிகை செய்தி
சரியுதய்யா சரியுது
மாநகராட்சி மாணவர்களின்
தேர்ச்சி விகிதம் சரியுது!
பெயிலாக்குறான் ! பெயிலாக்குறான்!
ஏழை வீட்டுப் பிள்ளைகளை
திட்டமிட்டு பெயிலாக்குறான்!
தனியார் முதலாளிகள் கொள்ளையடிக்க
திட்டமிட்டு பெயிலாக்குறான் !
அம்மாவுக்கு பஜனை பாடும்
அமைச்சர்களுக்கு அவசியம் இல்லை
தேர்ச்சி விகிதம் அவசியம் இல்லை
பள்ளிகளை இழுத்து மூடவும்
தனியாருக்கு தாரைவார்க்கவும்
கல்வி அதிகாரி பதவி எதற்கு?
கல்வி இப்போது கடைசரக்காச்சு
தனியார் …… முதலாளிகளுக்கு
அரசுப்பள்ளிகள் படையலாச்சு..
பலி கொடுத்த கவர்மெண்டை
பழிவாங்க வீதியில் இறங்கு
மாணவர்களே ! பெற்றோர்களே !
குடிக்கச் சொல்லுறான் கலெக்டரு
பெயிலாக்குறான் அதிகாரி
எதிர்நிலை சக்தியாய் மாறிவிட்ட
அரசு…………..கட்டமைப்பை
அடித்து நொறுக்காமல் தீர்வு இல்லை
அமைப்பாக…….. இணையாமல்
கல்வி உரிமையும் கிடைப்பது இல்லை!
என்ற முழக்கங்களுடன் ஆர்ப்பாட்டம் தொடங்கியது.
மாநகராட்சி சிக்னலில் இருந்து பேரணியாக வந்த தோழர்கள் மாநகராட்சியின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். 30 நிமிடங்கள் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் முடிவில் பு.மா.இ.மு.வின் சென்னை மாநகரக் கிளையின் இணைச் செயலர் தோழர் மருது கண்டன உரையாற்றினார்.
எதிர்நிலை சக்தியாய் மாறிவிட்ட அரசு…………..கட்டமைப்பை அடித்து நொறுக்காமல் தீர்வு இல்லை
அவர் தனது உரையில் “சென்னைப்பள்ளிகள் எதற்காக ஏற்படுத்தப்பட்டதோ அதற்கு எதிராகவே மாநகராட்சி கல்வி அதிகாரிகள் வேலை செய்கின்றனர். கடந்த ஆண்டினை விட 3% தேர்ச்சி விகிதம் குறைவு என்பதை 3% தானே என்று பார்க்க முடியாது. சென்னைப் பள்ளிகளை சீரழித்து அதன் மூலம் அவைகளை தனியாருக்கு தாரைவார்க்கும் நோக்கத்திலிருந்து அதை எதிர்க்க வேண்டிய அவசியத்திலே உள்ளோம்.
மொத்தமாக டாஸ்மாக் மூலம் அனைவரையும் குடிக்கச் சொல்லும் அதே அரசு , உழைக்கும் வர்க்கத்தினரின் பிள்ளைகளை பெயிலாக்குகின்றது, தனியார் முதலாளிகளின் லாபவெறிக்காக. மக்களுக்கு முற்றிலும் எதிராய்ப் போன இந்த அரசுக்கட்டமைப்பை அடித்து நொறுக்காமல் உழைக்கும் மக்களுக்கு விடிவு இல்லை” என்று பேசினார்.
“கடந்த ஆண்டினை விட 3% தேர்ச்சி விகிதம் குறைவு என்பதை 3% தானே என்று பார்க்க முடியாது.”
தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ததாகக் கூறி அனைவரையும் போலீசு கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைத்து இருந்து 3 மணிக்கு விடுவித்தது.
தேர்ச்சி விகிதம் குறைவு என்பதை வெறும் செய்தியல்ல, அது நம்முடைய பள்ளிகளை தனியாருக்கு தாரை வார்க்கும் சதி என்பதை மெய்ப்பிக்கும் விதமாகவும் அதற்கு எதிராக போராடுவது என்பது அரசுக்கட்டமைப்பை நொறுக்குவதற்காகவே இருக்கவேண்டும் என்பதை அறிவிக்கும் விதமாகவும் பு.மா.இ.மு.வின் ஆர்ப்பாட்டம் அமைந்தது.
தகவல் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, சென்னை.
9445112675
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு என்று அழைக்கப்படும், திருட்டு வழக்கில், ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு குற்றவாளிகளையும் விடுதலை செய்து தீர்ப்பளித்து விட்டார் குமாரசாமி. சமீபத்திய உச்ச நீதிமன்றத் தீர்ப்பினால் சற்று நம்பிக்கை ஊட்டப்பெற்றிருந்த திமுகவினரும் பிற எதிர்க்கட்சிகளும் இந்த தீர்ப்பினால் பெரும் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர். அவர்கள் மட்டுமல்ல, அசைக்க முடியாத ஆதாரங்கள் இருப்பதால், தீர்ப்பு ஜெயலலிதாவுக்கு சாதகமே அமையவே முடியாது என்று கருதிய பலருக்கும் இது அதிர்ச்சிதான்.
ஆனால், 18 ஆண்டு காலம் நடைபெற்ற இந்த சொத்துக் குவிப்பு வழக்கின் அனுபவம் என்ன? குன்ஹாவின் தீர்ப்பையும், கர்நாடக உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் அரிதான சில தீர்ப்புகளையும் தவிர்த்து, மற்றெல்லா சந்தர்ப்பங்களிலும் போயஸ் தோட்டத்தின் செக்யூரிட்டியாகவே நீதித்துறை, குறிப்பாக உச்ச நீதிமன்றம் இருந்து வந்திருக்கின்றது.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் எடுபிடியாகவே உச்ச நீதிமன்றம் நடந்து கொண்டு வருவதையும், நீதித்துறையே பார்ப்பனக் கும்பலுக்கும் பார்ப்பன பாசிசத்துக்கும் ஆதரவாக செயல்பட்டு வருவதையும் நாம் தொடர்ந்து அம்பலப் படுத்தி வந்திருக்கின்றோம்.
18 ஆண்டுகாலம் இந்த வழக்கை இழுப்பதற்கு உச்ச நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு செய்த உதவிகள் எண்ணிலடங்காதவை. நியாயமான முறையில் ஒரு விசாரணை நடத்தினால், ஜெயலலிதாவைக் காட்டிலும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளிகள் நீதிபதிகளாகவே இருப்பர்.
ஜெயலலிதா வழக்கில் மட்டுமல்ல, சங்கராச்சாரியில் தொடங்கி, மோடி, அத்வானி, அமித் ஷா உள்ளிட்ட எல்லா பார்ப்பன பாசிசக் கொலையாளிகளையும், முஸ்லிம்களை நரவேட்டையாடிய போலீசு அதிகாரிகளையும், தலித் படுகொலைக் குற்றவாளிகளையும் நீதிமன்றங்கள் அடுத்தடுத்து விடுதலை செய்கின்றன. சல்மான் கான் போன்ற பணக்காரப் பொறுக்கிகளுக்குத்தான் கருணை காட்டுகின்றன.
இதுதான் நீதித்துறையின் யோக்கியதை என்று பல சந்தர்ப்பங்களில் அம்பலமாகியிருந்த போதிலும், மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் நீதித்துறையின் பார்ப்பன பாசிச ஆதரவு அப்பட்டமாகத் தெரிந்த போதிலும், ஜெயலலிதா உள்ளிட்ட குற்றவாளிகள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட முடியும் என்ற நம்பிக்கை பலருக்கும் இருக்கத்தான் செய்தது. உண்மையில் அது அவர்களது விருப்பம். அதற்கு எந்த வித ஆதாரமும் கிடையாது. தங்களது அந்த விருப்பத்தை நீதிமன்றத்தின் மீதான மூடநம்பிக்கையாக அவர்கள் மாற்றிக் கொள்கிறார்கள். மக்களுக்கும் அத்தகைய நம்பிக்கையை ஊட்டுகிறார்கள்.
கருணாநிதியும் மற்ற எதிர்க்கட்சிகளும் இதைத்தான் செய்து வருகின்றனர். குன்ஹாவின் தீர்ப்பு வந்தால், “நீதி வென்றது” என்று குதூகலிப்பது, தத்துவின் தீரப்பு வரும்போது, “இந்த நாட்டில் நீதி இருக்கிறதா?” என்று புலம்புவது, மறுபடியும் பவானி சிங் நியமனம் செல்லாது என்று தீர்ப்பு வந்தவுடன் “நீதி இன்னும் சாகவில்லை” என்று ஆறுதல் கொள்வது – இப்படித்தான் போய்க் கொண்டிருக்கிறது எதிர்க்கட்சிகளின் அரசியல்.
நீதிமன்றத்தின் மூலம் மிகவும் அரிதான சில வழக்குகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கலாம். அரிதான சில வழக்குகளில் குற்றவாளிகள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்படுவதும் நடக்கலாம். குன்ஹாவின் தீர்ப்பைப் போன்றவை அத்தகைய விதிவிலக்குகளே. விதிவிலக்காக இப்படி நீதி கிடைக்கும் தருணங்களில் அதற்காக நாம் மகிழ்ச்சி கொள்ளலாம். ஆனால் நீதி மன்றத்தின் மூலம் இந்த மக்கள் விரோதிகளைத் தண்டித்து விட முடியும் என்ற மயக்கத்துக்கு நாம் ஆளாகி விடக்கூடாது. நீதித்துறையே குற்றவாளிகளின் கூடாரமாகவும், தீர்ப்பு என்பது விலைப்பேசி விற்கப்படும் பொருளாகவும் மாறி வெகு காலமாகிவிட்டது.அங்கே மக்களுக்கு ஒருக்காலும் நீதி கிடைக்காது.
எனவே, அதிமுக என்ற கொள்ளைக் கும்பலின் தலைவி, தமிழ்ச் சமூகத்தையே ஊழல்படுத்தி, தமிழ் மக்களை சுயமரியாதையும் சொரணையும் இல்லாத கையேந்திகளாக மாற்றி, அவர்களுடைய வாக்குகளை விலைபேசி வாங்க முடிகிறதே, இந்த நிலைமையை மாற்றுவதெப்படி என்பதில்தான் நாம் கவனம் செலுத்த வேண்டும். மக்கள் திரளின் வலிமை கொண்டே, இந்தக் கொள்ளைக் கூட்டத்தை விரட்டியடிப்பதும், இந்தக் கொள்ளைக்காரியைத் தண்டிப்பதும் எப்படி- என்ற கோணத்தில்தான் நாம் சிந்திக்க வேண்டும்.
இந்த மேல் முறையீட்டு வழக்கில் ஜெயலலிதா பெற்றிருக்கும் வெற்றி என்பது, இந்த அரசுக் கட்டமைவின் தோல்விக்கு ஒரு சான்று. இந்தக் கட்டமைவுக்கு வெளியே, மக்கள் அதிகாரத்துக்கான அமைப்புகளைக் கட்டியமைப்பதும், அவற்றின் மூலம் ஜெயலலிதா உள்ளிட்ட குற்றவாளிகளைத் தண்டிப்பதும்தான் இதற்குத் தீர்வு.
இதய தெய்வம் மாளிகை(கோவை அதிமுக தலைமையகம்) முன்பு சாலையை மறித்து ஆட்டம் போடும் கொள்ளைக்காரி கட்சியின் அடிமைகள்இதய தெய்வம் மாளிகையிலிருந்து வெளியே வந்த செ ம வேலுசாமி முன்னாள் மேயர் ஊடகங்களுக்கு 500 ரூபாய் கட்டு ஒன்றை கொடுத்ததையும் அதை அவர்கள் நடு ரோட்டில் நின்று கொடுத்ததை நேரடியாக பார்க்க முடிந்தது. ஊடகங்கள், நீதித்துறை எல்லாவற்றுக்கும் விலை உண்டு.! (வேலுசாமி காரின் பின்னாடி அமர்ந்திருக்கிறார்)கோவை செ.ம.வேலுசாமி ஊடகங்களுக்கு நேர்காணல் – கவருக்கு முந்தைய காட்சி!
பூனேவைச் சேர்ந்த 19 வயதான அமிதேஷ், சிவில் எஞ்சினியரிங் முதலாமாண்டு மாணவர். அவர் மீது மதக் கலவரத்தைத் தூண்டுதல், மத உணர்வுகளை புண்படுத்துவது, இணைய பயங்கரவாதத்தில் ஈடுபட்டது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அமிதேஷின் வெறுப்பைத் தூண்டும் டுவீட்
“#மீண்டும் கோத்ரா. #அசிங்கமான இஸ்லாம் தனது உண்மை முகத்தை மீண்டும் காட்டுகிறது. நாளைக்கு 3,000 முஸ்லீம்களையாவது கொல்வோம்” என்று மே 2-ம் தேதி டுவிட்டரில் போட்ட நிலைத்தகலுக்காக அவர் மீது இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசம் ஷாம்லி மாவட்டத்தில் உள்ள கந்த்லா என்ற நகரத்தைச் சேர்ந்த முஸ்லீம்கள் நடத்திய ரயில் மறியல் புகைப்படங்களை சேர்த்து இந்த நிலைத் தகவலை போட்டிருந்தார், அமிதேஷ். ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த இசுலாமியர் ஒருவரின் தாடியைப் பிடித்து இழுத்து, மூக்கில் குத்தி இரத்தம் வடியச் செய்த இந்து மதவெறியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காண்ட்லாவைச் சேர்ந்த சுமார் 3,000 பேர் ரயில் மறியல் போராட்டம் நடத்தியிருந்தனர்.
அமிதேஷ் சிங்கின் டுவிட்டர் கணக்கின் பெயர் @AmiteshSinghBJP. டுவிட்டரில் பிரதமர் மோடி பின்தொடரும் 1,200 பேரில் அமிதீஷூம் ஒருவர். அதாவது, மோடியை பின்தொடரும் 12 கோடி டுவிட்டர் கணக்குகளிலிருந்து பொறுக்கி எடுக்கப்பட்ட சுமார் 1,200 பேரில் அமிதீஷ் சிங்கும் ஒருவர். அவர் தன்னுடைய டுவிட்டர் சுயவிபரக் குறிப்பில், “பா.ஜ.க இளைஞர் அணி நகர துணைத்தலைவர்” என்றும், “பிரதமரால் பின்தொடரப்படுபவர்” என்றும் பெருமையாகக் குறிப்பிட்டிருந்தார்.
பா.ஜ.க-வின் ஹரியானா மாநில ஐ.டி கிளை இணை அமைப்பாளரின் டுவீட்.
2002-ல் குஜராத் கோத்ரா ரயில் எரிப்புக்குப் பிறகு “முஸ்லீம்களை கொல்லுங்கள்” என்று அறைகூவல் விடுத்த மோடி இன்று நாட்டின் பிரதமராகியிருப்பதைப் பார்த்து தானும் கனவுகள் கண்டிருந்திருப்பார் அமிதேஷ் சிங். மேலும், ‘மத்தியில் “நம்ம” ஆட்சி, மகாராஷ்டிராவிலும், “நம்ம” ஆட்சி. எனவே, ஒரு இனப் படுகொலையை நாடு முழுவதும் அவிழ்த்து விடும் தருணம் வந்து விட்டது’ என்றும் அவர் நினைத்திருக்கலாம்.
குஜராத்தில் மோடி, தொகாடியா தொடங்கி, தமிழ்நாட்டின் ராமகோபாலன், எச் ராஜா வரை மேடைகளில் முழங்கியதை இணையத்தில் முழங்கியிருக்கிறார் அமிதீஷ்.
பா.ஜ.க.-வின் அரசியலுக்கு அமிதேஷ் மட்டும் ஒரே சாட்சி இல்லை. அதே நாளில், பா.ஜ.க-வின் ஹரியானா மாநில ஐ.டி கிளை இணை அமைப்பாளர் புனித் அரோரா என்பவர் “ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் பிகானீர் செல்லும் ரயிலை ஷாம்லியில் தடுத்து நிறுத்தி இந்துக்கள் அனைவரையும் பிணைக்கைதிகளாக பிடித்து அவர்களைக் கொல்லப் போவதாக மிரட்டுகின்றனர் #GodhraAgain” என்று டுவிட்டர் நிலைத்தகவல் போட்டிருக்கிறார். (Puneet Arora – @puneetarora82)
அமிதேஷ் மன்னிப்பு கேட்டு வெளியிட்ட டுவீட்டுகள்.
ஆனால், இந்து மதவெறியர்களின் நோக்கம் நிறைவேறவில்லை. டுவிட்டரில் அமிதேஷின் நிலைத்தகவலை பார்த்த சக டுவிட்டர் பயன்பாட்டாளர்கள் அவரை கண்டித்தார்கள். நரேந்திர மோடியின் டுவிட்டர் கணக்கையும் இணைத்து, இவரை கண்டிக்குமாறு கேட்டார்கள்.
அமிதேஷ் முதலில் “வேறு யாரோ என் பெயரில் கணக்கு ஆரம்பித்து, எனது புகைப்படத்தையும் பயன்படுத்தியிருக்கின்றனர்” என்றிருக்கிறார். பின்னர், “இது தன்னுடைய கணக்குதான் ஆனால், யாரோ அதை ஹேக் செய்து விட்டனர்” என்றார். தொடர்ந்து நெருக்கடி அதிகமாகவே, மன்னிப்பு கோரும் டுவீட்டுகளை வெளியிட்டு, தன்னுடைய வெறுப்பைக் கக்கும் டுவீட்டை அழித்து விட்டார். அதைத் தொடர்ந்து ஞாயிற்றுக் கிழமை தனது டுவிட்டர் கணக்கையே அழித்து விட்டார்.
டுவிட்டர் ஆர்வலர்கள் விடாப்பிடியாக போலீசில் புகார் பதிவு செய்ய, அமிதேஷ் மீது குற்றவியல் சட்டங்களின் கீழும், தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்துள்ளது பூனே போலீஸ்.
அமிதேஷூக்கும் பா.ஜ.க.-வுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அக்கட்சி கைகழுவி விட்டது.
ஆனால், “அமிதேஷூக்கும் பா.ஜ.கவுக்கும் எந்த தொடர்பும் இல்லை” என்று புனே காவல்துறை ஆணையர் கே.கே.பாதக் சான்றிதழ் அளித்து விட்டார். பண்ட் கார்டன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ் நிகம், “விசாரணையில் அமிதேஷூக்கு பா.ஜ.கவுடன் தொடர்பு இல்லை” என்று தெரிய வந்ததாகக் கூறியிருக்கிறார். தன் திட்டப்படி மதவெறி பிரச்சாரமும் செய்ய வேண்டும், ஆனால் அதில் சிக்கிக் கொள்ளும் நபர்களை கைகழுவி விடவும் வேண்டும் என்ற சங்க பரிவாரங்களின் கோட்பாட்டின்படி பூனே பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கணேஷ் கோஷ், “அமிதேஷ், கட்சியின் யுவ மோர்ச்சாவுடன் தொடர்புடையவர் அல்ல” என்று கூறி விட்டார்.
ஹாஷிம்புரா படுகொலைகளுக்கு சிறப்பு நீதிமன்றம் வரை சென்றும், மலியானா படுகொலைகளுக்கு வழக்கே பதிவு செய்யாமலும் நூற்றுக்கணக்கான முஸ்லீம்களை கொன்று குவித்த மதவெறியர்கள் தண்டிக்கப்படாமல் சுதந்திரமாக உலாவும் இந்த நாட்டில், குஜராத்தில் முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டத்தை தூண்டி விட்டு நடத்திய மோடி நாட்டின் பிரதமராகவும் உலாவும் இந்த நாட்டில், அமிதேஷ் சில நாட்களில் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்படுவார் என்பது உறுதி. மேலும், கலவரம் ஒன்றை தூண்ட வேண்டுமானால் எப்படி நடந்து கொள்ளக் கூடாது என்ற பாடத்தையும் அவர் கற்றுக் கொண்டிருப்பார்.
தன் மீதான தாக்குதல் குறித்து புகார் அளிக்கும் ஃபரூக்
அமிதேஷ் பற்றவைக்க முயன்ற மதக் கலவரத்துக்கான தூண்டுதல் உத்தர பிரதேசத்தில் நடந்தது. முகமது ஃபரூக் மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தைச் சேர்ந்த சிக்லியில் தனியார் ஆங்கில வழிப் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். அவர், தனது நண்பர்களுடன் ஆண்டுதோறும் கோடை விடுமுறையில் உத்தர பிரதேசம் சாகரான்பூரில் வசிக்கும் அவரது சமய ஆசிரியர் ஹஸ்ரத் மவுலானா தல்ஹா சாகபை பார்க்கப் போவது வழக்கம். மே 1-ம் தேதி காலையில் டெல்லியிலிருந்து சகரான்பூர் செல்லும் ஜனதா எக்ஸ்பிரஸ் ரயிலில் அவர்கள் பயணித்திருக்கின்றனர்.
ரயில் பயணத்தின்போது கழிப்பறைக்குச் செல்ல முயன்ற ஃபரூக்கை அங்கு உட்கார்ந்திருந்த இந்துமதவெறி காலிகள் சிலர் தாக்கி தாடியைப் பிய்த்து, ரத்தம் வரும்படி அடித்து அவர் வசம் இருந்த பணத்தையும் பறித்திருக்கின்றனர். அது தொடர்பாக புகார் அளிப்பதற்கு அடுத்த நிறுத்தத்தில் இறங்கி, ஷாம்லி மாவட்டத்தில் உள்ள கந்த்லா போலீசிடம் புகார் கொடுத்திருக்கின்றார் ஃபரூக்.
ஃபரூக் தாக்கப்பட்டதை கண்டித்து ஷாம்லி மாவட்டத்தில் நடத்தப்பட்ட ரயில் மறியல்
2013-ம் ஆண்டு மேற்கு உத்தர பிரதேசத்தில் முசாஃபர் நகர் பகுதியில் அமித் ஷா நடத்தி வைத்த ஜாட் சாதியினரின் முஸ்லீம்கள் மீதான மதவெறி தாக்குதல்களில் ஷாம்லி மாவட்டமும் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்த கடந்த 2 ஆண்டுகளில் ரயில் பயணத்தின் போது இஸ்லாமியர்களை துன்புறுத்துவதை காவி குண்டர்கள் ஒரு வழக்கமாக வைத்திருக்கின்றனர்.
இந்தச் சூழலில் தன் மீதான தாக்குதல் குறித்து ஃபரூக் கொடுத்த புகாரைத் தொடர்ந்து அடுத்த நாள் காலையில் (மே 2-ம் தேதி) ஆயிரக் கணக்கான முஸ்லீம் மக்கள் ரயில் நிலையத்தில் கூடி, ஃபரூக்கை தாக்கியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி ரயில் மறியல் போராட்டம் நடத்தினர். சட்டப்படி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்த பிறகு பெரும்பாலானவர்கள் கலைந்து சென்றிருக்கின்றனர்.
அந்தப் போராட்டத்தில் சமாஜ்வாதி கட்சி சட்டமன்ற உறுப்பினர் நாஹித் ஹசனும், அதே கட்சியைச் சேர்ந்த நகரமன்றத் தலைவர் ஹாஜி வாஜித் கானும், பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஹாஜி இஸ்லாமும் கலந்து கொண்டனர். பெரும்பாலானவர்கள் கலைந்து சென்ற பிறகும், ஆளும் சமாஜ்வாதியையும், அக்கட்சி சட்டமன்ற உறுப்பினரையும் சிக்க வைக்க விரும்பிய பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மறியலைத் தொடர்ந்தார். அவர்களை கலைக்க போலீஸ் தடியடி நடத்தியது, அதைத் தொடர்ந்து அந்த கும்பல் அருகிலிருந்து காவல் நிலையத்தைத் தாக்கி, நிறுத்தியிருந்த சில வண்டிகளை எரித்தது.
ரயில் மறியல் தொடர்பான படங்களையும், செய்திகளையும் பயன்படுத்திதான் பா.ஜ.க பூனேவிலிருந்தும், ஹரியானாவிலிருந்தும் பயங்கரவாத பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது.
இந்த ரயில் மறியல் தொடர்பான படங்களையும், செய்திகளையும் பயன்படுத்திதான் பா.ஜ.க பூனேவிலிருந்தும், ஹரியானாவிலிருந்தும் பயங்கரவாத பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது.
நாடெங்கிலும் மத வேற்றுமைகளை கிளறி விட்டு, காய்ந்த சருகுகளை பரப்பி வைத்து, ஏதாவது ஒரு சம்பவம் கலவரத்தீயை பற்ற வைக்கும் என்று காத்திருக்கின்றன இந்து மத வெறி ஓநாய்கள். ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-வின் பார்ப்பன மதவெறி பாசிசத்துக்கு பலியாகி அமிதேஷ் போன்ற ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மதவெறி போதை ஊட்டப்பட்டிருக்கிறார்கள்.
இந்தியாவில் நிலநடுக்க அபாயத்தை விட இந்துமதவெறியின் அபாயம் அதிகம். என்ன செய்யப் போகின்றோம்?
தமிழகத்தை குலுக்கிய புரட்சிகர அமைப்புகளின் மே நாள் பேரணி, ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் பற்றிய புகைப்பட வீடியோ
2. புதுச்சேரியில் பேரணி – ஆர்ப்பாட்டம்
மே நாள்! முடிவில்லா வேலை நேரத்தை 8 மணி வேலை நேரமாக மாற்றி அமைத்தது மட்டுமல்லாது, உலகெங்கும் உள்ள தொழிலாளர்களை வர்க்கமாக இணைத்து எவ்வாறு போராட வேண்டும் என்பதை தொழிலாளி வர்க்கத்திற்கு கற்றுக் கொடுத்த நாள்!
உலகெங்கும் உள்ள தொழிலாளர்களை வர்க்கமாக இணைத்து எவ்வாறு போராட வேண்டும் என்பதை தொழிலாளி வர்க்கத்திற்கு கற்று கொடுத்த நாள்!
மே நாளில் காலை முதலே தாங்கள் இயங்கும் இணைப்பு சங்கங்களில் கொடியேற்றி மே நாள் தியாகிகளுக்கு வீர வணக்கத்தைச் செலுத்திவிட்டு அத்தியாகிகளின் நினைவை நெஞ்சிலேந்தி அறிவிக்கப்படாத பேரணியாகப் புறப்பட்டு மேதினப் பேரணி துவங்கும் புதுச்சேரி, புதுசாரம், ஜீவா சதுக்கத்திற்கு பல முனைகளிலிருந்தும் தொழிலாளர்கள் ஒன்று கூடத் துவங்கினர்.
தியாகிகளின் நினைவை நெஞ்சிலேந்தி அறிவிக்கப்படாத பேரணியாகப் புறப்பட்டு தொழிலாளர்கள் ஒன்று கூடத் துவங்கினர்.
மே நாள் அந்தந்த காலத்தின் அரசியல் நிலைமைகளுக்கு ஏற்ப போராட்டத்தைக் கட்டியமைக்க வேண்டிய அவசியத்தை உணர்த்திக் கொண்டிருக்கிறது. 8 மணி நேர வேலை நேரம் என்பதை உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் அரசியல் கடமையாக தொழிலாளி வர்க்கம் உணர்ந்ததன் அடிப்படையில் தான் அக்கோரிக்கை உலகக் கோரிக்கையாக வலுப்பெற்றது. இன்று உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் தங்கள் நாட்டு அரசுகளின் கார்ப்பரேட் அடிமைத்தனத்திலிருந்து தம்மை மீட்டெடுப்பதற்கும், நொறுங்கி விழும் அரசுக் கட்டமைப்பை வீழ்த்தி தமக்கான அதிகார அமைப்புக்களை நிறுவவதற்குமான வரலாற்றுக் கடமையைக் கோருகிறது.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
இதை உணர்த்தும் வகையில், மே தினம் தற்போது கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது என்பதைப் பறை சாற்றும் முழக்கப் பதாகைகள் விண்ணை முட்ட எழத் துவங்கின. செஞ்சட்டை அணிந்த இளந்தோழர்கள் முதல் முதுபெரும் தோழர்கள் வரை தங்களது வர்க்க உணர்வால் ஒன்றி சாலையின் ஓரத்தில் நின்ற அழகு சமூக அக்கறைக்கு வயது வித்தியாசம் தடையல்ல என்பதற்கு கட்டியம் கூறுவதாக இருந்தது.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
சரியாக காலை மணி 10.40-க்கு புதுச்சேரி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, கடலூர், விழுப்புரம், நாகை மாவட்ட புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி தோழர்களுடன், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கறிஞர்களுடன் புதுச்சேரி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநிலத் தலைவர் தோழர் சரவணன் தலைமையில் பறையிசையுடன், கம்பீரமாகத் துவங்கியது மே நாள் பேரணி.
“பாசிச மோடிக்கு மாற்று, மற்ற ஓட்டுக் கட்சிகள் அல்ல”
தோழர் தனது தலைமை உரையில், “8 மணி நேர வேலை நேரத்திற்கான கோரிக்கையை உலகப் பாட்டாளி வர்க்க ஒற்றுமையுடன் சாதித்துக் காட்டிய நாளை மற்ற சங்கங்கள் போல் கொண்டாட்ட நாளாக அல்லாமல், மே நாளின் அரசியல் கடமையை மக்களுக்கு உணர்த்தும் வகையில் போராட்ட நாளாக அறிவித்து ஆண்டு தோறும் நடத்தி வருகிறோம். இன்றைய சூழலில் 8 மணி நேர வேலை நேரம் மட்டுமல்ல, தொழிலாளர்களுக்கு காகிதத்தில் இருக்கும் உரிமைகளைக் கூட பறித்து வருகிறது கார்ப்பரேட் கைக்கூலி மோடி அரசு. ஆனால், பாசிச மோடிக்கு மாற்று, மற்ற ஓட்டுக் கட்சிகள் அல்ல. மக்கள் தாமே தமது அதிகாரத்தை நிறுவுவது ஒன்று தான் நம் வாழ்வைப் பாதுகாக்கும் ஒரே வழி. அப்பேற்பட்ட போராட்டத்திற்கு மேதினத் தியாகிகளின் வழியில் வர்க்கமாக ஒன்று சேர வேண்டியது அவசியம்” என்று விளக்கிப் பேசினார்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
பேரணி, விண்ணதிரும் முழக்கங்களுடனும், செங்கொடிகளுடனும், மேதின அரசியலை மக்களுக்கு அறிவிக்கும் பதாகைகளுடனும் புறப்பட்டது. வழிநெடுகிலும், இரு புறத்திலும் மக்கள் நின்று ஒழுங்குடனும், கட்டுப்பாட்டுடனும் நகரும் பேரணியை பார்த்தனர். மேநாளின் அரசியல் கடமையை உணர்த்தும் முழக்கங்கள் மக்களை ஈர்ப்பதாக அமைந்தது. பேரணி துவங்கியது முதல் முழக்கத்தின் வீச்சு சிறிதும் குறையாமல் பேரணி, சுதேசி மில் அருகில் உள்ள ஆர்ப்பாட்ட மேடைக்கு வந்தடைந்தது.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
ஆர்ப்பாட்டம் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் கடலூர் மாவட்ட இணைச் செயலாளர் தோழர் நந்தா தலைமையில் நடந்தது. அவர் தனது தலைமையுரையில், “மேதினம் என்பது தொழிலாளர்களுக்கான தினம் மட்டுமல்ல; நாளை தொழிலாளிகளாக மாறப்போகும் இன்றைய மாணவர்களின் கடமையும் அதில் அடங்கி உள்ளது. அப்படிப்பட்ட மாணவர்களை தங்களது சமூகக் கடமையை மறக்கடிக்கப்பட்டவர்களாக திட்டமிட்டு பொறுப்பற்றவர்களாய் இந்த அரசு மாற்றி வருகிறது. இந்த விசச் சூழலில் சிக்காமல், மாணவர்கள் தம் மீது சுமத்தப்பட்ட சமூகக் கடமையை தொழிலாளர்களின் தோளோடு தோள் நின்று சாதிக்க வேண்டும்” என்பதை விளக்கிப் பேசினார்.
“விசச் சூழலில் சிக்காமல், மாணவர்கள் தம் மீது சுமத்தப்பட்ட சமூகக் கடமையை தொழிலாளர்களின் தோளோடு தோள் நின்று சாதிக்க வேண்டும்”
அடுத்து உரையாற்றிய விவசாயிகள் விடுதலை முன்னணியின் திருவெண்ணைய்நல்லூர் வட்டார அமைப்பாளர் தோழர் அம்பேத்கர், “நம் நாட்டுக்குப் பிரதமராக உள்ளவர், நரேந்திர மோடி அல்ல! அது நரி தந்திர மோடி! பன்னாட்டு நிறுவனங்கள், கார்ப்பரேட்டுகளின் லாப வெறிக்கு விவசாயிகளின் நிலங்களைப் பறித்து, தந்திரமான முறையில் கொடுப்பதற்காகக் கொண்டு வரப்படும் சட்டம் தான் நிலம் கையகப்படுத்துதல் சட்டம் எனும் பெயரில் உள்ள நிலப் பறிப்பு சட்டம். இந்தச் சட்டம் மட்டுமல்ல, நரி தந்திர மோடியின் அனைத்து செயல்களும் கார்ப்பரேட்டுகளுக்கு அடிமை சேவகம் செய்யும் செயல்களே! ” என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
மேதினம் என்பது தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த விவசாயிகளுக்கும் தங்களது வாழ்வைத் தீர்மானிக்கும் அரசியலை வரித்துக் கொள்ள வேண்டிய நாள்.
சிறப்புரையாற்றிய புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் தோழர் முகுந்தன் தனது உரையில், “தொழிலாளர் நல சட்டத் திருத்தம், நிலப்பறிப்புச் சட்டத் திருத்தம் மட்டுமல்ல, தற்போது புதிதாக மோடி அரசால் கொண்டு வரப்பட்டுள்ள சாலை போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு மசோதா என்ற பெயரில் வந்துள்ள சட்டமும், ஒட்டு மொத்த சிறு சிறு தனியார் போக்குவரத்தையும், கார்ப்பரேட் மயமாக்குவதன் சதி தான். இதனால், பேருந்து, லாரி, கார், ஆட்டோ போன்ற வாகனங்களை வைத்துள்ள உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் அனைவரின் வாழ்வையும் காவு கேட்கும் சட்டம் தான் இது. அச்சட்டத்தின் சரத்துக்கள் இவ்வளவு அபாயகரமாக இருந்தாலும், எந்த ஓட்டுக் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவிக்காமல் மவுனம் சாதிப்பதற்குக் காரணம் அவர்கள் அனைவரும் கார்ப்பரேட்டுக்களுக்கு அடிமையாக மாறிவிட்டார்கள் என்பது தான்.
“எந்த ஓட்டுக் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவிக்காமல் மவுனம் சாதிப்பதற்குக் காரணம் அவர்கள் அனைவரும் கார்ப்பரேட்டுக்களுக்கு அடிமையாக மாறிவிட்டார்கள் என்பது தான்”
இந்த அரசு தொழிலாளர்கள், மாணவர்கள், விவசாயிகளுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உழைக்கும் மக்களுக்கும் எதிரானது. எனவேதான், இந்த ஒட்டு மொத்த அரசுக் கட்டமைப்பும் மக்களுக்குத் எதிரானதாகவும், தேவையற்றதாகவும் நொறுங்கி விழும் நிலையில் உள்ளது. அதைத் தட்டி வீழ்த்திவிட்டு மக்களுக்கான அதிகாரத்தை வழங்கும் அமைப்புக்களை நிறுவி உரிமைகளை வென்றெடுப்பதன் மூலம் தான் மேதினப் போராட்டம் அர்த்தமுள்ளதாக மாறும்” என்பதை விளக்கி தனது உரையை நிறைவு செய்தார்.
புரட்சிகரப் பாடல்கள்
ஆர்ப்பாட்டத்தின் இடையிடையே, புரட்சிகரப் பாடல்கள் கூடியிருந்த தோழர்களைத் தட்டி எழுப்புவதாக இருந்தது.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
இன்று மே 9-ம் தேதி, இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்த 70-வது ஆண்டு.
பெர்லினில் உள்ள ஜெர்மன் நாடாளுமன்றத்தில் சோவியத் செங்கொடி ஏற்றப்பட்டது.
1945-ம் ஆண்டு மே 8-ம் தேதிதான் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் உள்ள ஜெர்மன் நாடாளுமன்றத்தில் சோவியத் செங்கொடி ஏற்றப்பட்டது. நாஜிக்களின் பாசிச படைகள் இறுதித் தோல்வியை தழுவின.
கொடூரமான நாஜி-பாசிச சக்திகளின் பிரதிநிதியாக இருந்த ஹிட்லர் 1945 ஏப்ரல் 30-ம் தேதி தனது பதுங்கு குழியில் தற்கொலை செய்து கொண்டான். தனது கனவுகள் சிதைந்து போனதையும், குறிக்கோள்கள் தன் கண்ணெதிரே தோற்றுப் போனதையும் தாங்கிக் கொள்ள முடியாமல் தனது உயிரை மாய்த்துக் கொண்டான், ஹிட்லர்.
1939-ம் ஆண்டு செப்டம்பர் 1 அன்று தொடங்கிய இரண்டாம் உலகப் போர் 6 ஆண்டுகள் நீடித்தது. அதில் 61 நாடுகளின் 170 கோடி மக்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இது அன்றைய உலக மக்கள் தொகையில் 80% ஆகும். இந்தப் போரில் 7 கோடி மக்கள் கொல்லப்பட்டனர், அவர்களில் 40 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் சோவியத் குடிமக்கள். சோவியத் யூனியனின் 1,710 நகரங்கள், 70,000-க்கும் மேற்பட்ட கிராமங்கள், 32,000-த்துக்கும் அதிகமான தொழிற்சாலைகள், 65,000 கிலோமீட்டர் நீளமான ரயில்வே பாதை ஜெர்மன் படைகளால் அழிக்கப்பட்டன. மனித வரலாற்றிலேயே எந்த ஒரு நாடும் எந்த ஒரு போரிலும் சந்தித்திராத இந்த பேரிழப்பின் பொருளாதார மதிப்பு 2,600 பில்லியன் ரூபிள்.
உலகெங்கிலும் உள்ள மக்கள், குறிப்பாக ஐரோப்பிய நாடுகளின் மக்கள் பாசிசத்தை தோற்கடிப்பதில் சோவியத் ராணுவம் ஆற்றிய தீர்மானகரமான பங்களிப்பை இன்று நினைவு கூர்கின்றனர். சோவியத் இராணுவம் 11.3 கோடி மக்கள் தொகை கொண்ட 11 நாடுகளை நாஜிகளின் பிடியிலிருந்து விடுவித்தது. மேலும், பாசிசத்துக்கு எதிராக சோவியத் யூனியன் ஈட்டிய வெற்றி, உலகெங்கிலும் காலனிய ஆட்சியில் அடிமைப்படுத்தப்பட்டிருந்த மூன்றாம் உலக நாடுகளில், ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களை வீரியமடையச் செய்தது.
இன்றும் உலெகங்கிலும் பாசிச சக்திகளுக்கு எதிரான உழைக்கும் மக்களின் போராட்டத்துக்கு நாஜிகளை முறியடித்த சோவியத் மக்களின் போராட்டம் முன்னுதாரணமாகவும், வழிகாட்டுவதாகவும் உள்ளது.
நேற்று (07-05-2015) 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்கின்றன. பிராய்லர் கோழிகளை வளர்த்து அது எத்துணை முட்டையிடும் என்று முட்டையின் தரத்திற்கேற்ப தரம்பிரிக்கும் ஒரு சந்தை நாள். அன்று என் வாழ்விலும் மதிப்பெண் பட்டியல் வந்தது.
மதிப்பெண்ணை மட்டுமே மையமாக கொண்ட வாழ்க்கையில் எதைப் பெற்றேன்? எதை இழந்தேன்?
+2 தேர்வு முடிவு நாள் – பிராய்லர் கோழிகளை வளர்த்து அது எத்துணை முட்டையிடும் என்று முட்டையின் தரத்திற்கேற்ப தரம்பிரிக்கும் ஒரு சந்தை நாள்
எனக்கு தற்பொழுது வயது முப்பது, இன்றைக்கு பட்ட ஆராய்ச்சி மேற்படிப்பை படித்துக் கொண்டிருக்கிறேன். அதாவது மூன்றாம் எட்டில் செய்யாதது திருமணம் அல்ல என்று பாட்சா படத்தில் ரஜினி சுட்டிக்காட்டும் வயதைவிட ஆறுவயது அதிகமான ஒரு பேச்சுலர்!
பட்ட ஆராய்ச்சி மேற்படிப்பு என்பது 25-ம் கிளாஸ் ஆகும். அதாவது 12-ம் வகுப்பு முடித்த பிறகு, மூன்றாண்டு இளங்கலை, இரண்டாண்டு முதுகலை, ஆறாண்டு பிஹெச்டி, பிறகு இரண்டாண்டு இன்னொரு ஆராய்ச்சி.
நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் வரை என் தந்தை தையல் தொழிலாளியாக இருந்தார். அதற்குப்பிறகு கந்துவட்டி கொடுமையால் என் தந்தை குடும்பத்தை கவனிக்க இயலவில்லை. அண்ணனும் அம்மாவும் குடும்ப பொறுப்பை ஏற்றனர். அண்ணன் கட்டிடத்திற்கு பெயிண்ட் அடிப்பவராக இருந்தார். அம்மா கட்டிட வேலை வேலை பார்த்தார். நான் ஒரு குழந்தைத் தொழிலாளியாக என்னென்ன செய்யமுடியுமோ அதை அனைத்தையும் செய்திருக்கிறேன். நான் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பயின்றதாலும் (அதாவது நான் பெற்ற கல்வியில் தனியார் பள்ளிக்கு இடம் இல்லை) பலபேர் வரிசை கட்டி உதவியதாலும் கல்விச்சுமையை சமாளிக்க முடிந்தது.
தான் சம்பாதித்து தான் ஒரு குடும்பத்தையே காப்பாற்ற வேண்டும் என்ற நிலையில் இருப்பவருக்கு இந்த முறை சாத்தியமா? (கோப்புப் படம்)
பட்ட ஆராய்ச்சி மேற்படிப்புக்கு பிறகு, நான் வேலை ஒன்றை தேட வேண்டும். அதாவது நமது இந்திய சமூகத்தில் படித்து, அயல்நாட்டில் விஞ்ஞானியாகி (உள்நாட்டில் விஞ்ஞானிக்கு வேலை கிடையாது; அதை ஆர் எஸ் எஸ் டவுசர்கள் முழு குத்தகைக்கு எடுத்திருக்கிறார்கள். தனது மூத்திரத்தை தாவரங்களுக்கு 50லிட்டர் கேனிலே சேகரிக்கிற நிதின் கட்காரி ஓர் தாவரவியலாளர்; புத்ரஜீவிக் மருந்து விற்கும் யோகா ராம்தேவ் ஆண்பிள்ளை உருவாக்கும் பிசிசியன்; இப்படி நிறைய போட்டி உண்டு) ஓர் இரண்டாண்டு சம்பாதிக்க வேண்டுமென்றால் அதற்கு நீங்கள் இத்துணையும் கடந்திருக்க வேண்டும்.
தான் சம்பாதித்து தான் ஒரு குடும்பத்தையே காப்பாற்ற வேண்டும் என்ற நிலையில் இருப்பவருக்கு இந்த முறை சாத்தியமா? என் வாழ்வில் ஒரு கட்டிட வேலை செய்யும் தாயும் பெயிண்டரும் ஓர் அறிவுத்துறையினரை உருவாக்குகிறார் என்பதற்கும், கூலியுழைப்பு தான் மூலதனத்தை உருவாக்குகிறது என்று மார்க்சியம் சொல்வதற்கும் என்ன தொடர்பு?
ஏன் இதற்கு அழுத்தம் கொடுக்கவேண்டுமென்றால் இதுவரை சொன்னது சுயமுன்னேற்ற சொரிதலாக நம் சமூகத்தில் ஊடகங்களால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகிறது. திறமையிருந்தால் என்ன வேண்டுமானால் ஆகலாம்; எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்பது யதார்த்தம் அல்ல. அதற்குப்பின்னால் இருப்பது அப்பட்டமான சுரண்டல்! கூலியுழைப்பு!
எனது துறையின் ஆசிரியர் குழுவில் 45 பேருக்கு மேல் உயர் சாதியினர். ஐந்து பேர் மட்டுமே பிற்படுத்தப்பட்டவர். எஸ்.சி, எஸ்.டி யாரும் கிடையாது.
மறுபடியும் எனது கேள்விக்கு வந்துவிடுகிறேன். தான் சம்பாரித்துதான் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற நிலையில் நம் சமூகத்தில் 25-ம் வகுப்பு வரை படிக்க முடியுமா?
இதற்கு இளங்கலை, முதுகலையில் தேர்ச்சி பெற்று அகில இந்திய நுழைவுத் தேர்வு எழுதி, நேர்முகத்தேர்வும் எழுதி ஆராய்ச்சி மாணவராக வாய்ப்பு கிடைத்து அந்த அறிவியல் துறையில் ஒரு தேர்ந்த அடிமையாக தன்னை வார்த்துக்கொண்டு பிறகு ஒருவேளை இச்சந்தைக்கு ஏற்ப பொருந்தி வருவாராயின், அவர் பட்ட ஆராய்ச்சி மேற்படிப்பு படிக்க ஒரு சதவீதம் வாய்ப்புண்டு.
ஏனெனில், நான் படித்த நிறுவனத்திலும் ஆராய்ச்சி மாணவராக இருந்த கணிசமான மாணவர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய இந்த வாய்ப்பும் இன்னும் கிட்டவில்லை. இனி மற்ற பல்கலைக்கழங்களில் உள்ள தியாகிகளையும் வீரர்களையும் பற்றி தனியாக கதைக்கவேண்டிய அவசியம் இல்லை.
இனி மூன்றுமாதம் கழித்து இந்த இருவருட அனுபவத்தை வைத்து அவர்களோடு சேர்ந்து ஒரு வேலையைத் தேட வேண்டும்! அந்த வேலைக்கான சராசரி சம்பளம் 20 ஆயிரத்திலிருந்து-40 ஆயிரம் முடிய. இதைத்தாண்டி பணிக்காக சேரவேண்டுமானால் சாதி மிக மிக முக்கியம்.
எனது துறையின் ஆசிரியர் குழுவில் 45 பேருக்கு மேல் ‘உயர்’ சாதியினர். ஐந்து பேர் மட்டுமே பிற்படுத்தப்பட்டவர். எஸ்.சி, எஸ்.டி யாரும் கிடையாது. இத்தகைய உயர்கல்வி நிறுவனங்கள் பெஸ்ட் என்று ஊரை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் பலவழிகாட்டி நிகழ்ச்சிகள் உண்மையை மறைக்கின்றன என்பதைச் சொல்லவேண்டுமில்லையா?
ஒரு பெண் பாப்பாத்தியாக இருந்தாலும் சூத்திரர் என்று வகைப்படுத்தி வேதங்களை மறுத்தது இந்து சமூகம்.
ஆதிதிராவிடர்களை கணக்கில் எடுத்துக் கொண்டால் மூன்றில் ஒருவர் 5-ம் வகுப்பிற்கும் 10-ம் வகுப்பிற்கும் இடையில் கல்வியை நிறுத்துகின்றனர். இவர்களின் ஏழ்மையையும் பொருளாதாரச் சுரண்டலையும் எழுத்தில் வடித்துவிட இயலாது. 5-ம் வகுப்பை தாண்டுவதற்கே வாய்ப்பு கிடைக்காத சமூகம் ஒருபுறமிருக்க மெரிட்டையும் இடஒதுக்கீடையும் ஒப்பீடு செய்யும் ஈரவெங்காயங்கள் நம்நாட்டில் இருக்கத்தான் செய்கின்றனர். இடஒதுக்கீடு இருந்தாலும் இல்லாவிட்டாலும் பார்ப்பனியம் நீடிக்கும்வரை விஞ்ஞானி மட்டுமல்ல பள்ளிக்கல்வியே தாண்ட முடியாது என்பதுதான் சமூகத்தின் நிதர்சனம்.
சரி ஓர் ஆணாக பட்ட ஆராய்ச்சி மேற்படிப்பு படிக்கிற வாய்ப்பு பெண்ணுக்கு கிடைக்குமா? ஒரு பெண் பாப்பாத்தியாக இருந்தாலும் சூத்திரர் என்று வகைப்படுத்தி வேதங்களை மறுத்தது இந்து சமூகம். இதில் வயதுக்கு வந்தபிறகு ஒரு பெண் நம் சமூகத்தில் படிப்பது மிகவும் கடினம். என்னுடன் ஐந்தாம் வகுப்பு படித்த கங்காவும் ராணியும் படிப்பில் கெட்டிக்காரர்கள். அவர்கள் சவுராஷ்ட்ரா சமூகத்தைச் சேர்ந்தவர்கள். பெரும்பாலும் தறிநெய்யும் கொடிய ஏழ்மை இவர்களுக்குச் சொந்தமானது. இவர்கள் பள்ளிக்கல்வியை தாண்டவில்லை என்று பின்னாளில் கேள்விபட்டேன்.
இதுதவிர முதுகலையில் பெண்களோடு சேர்ந்து பயிலும் வாய்ப்பு கிட்டியது. அதில் கணிசமானவர்கள் இளங்கலையோடு பியெட் படித்துவிட்டு முதுகலை முதல் வருடத்தில் திருமணம் அல்லது படிப்பை முடித்தவுடன் திருமணம், பிறகு தனியார் பள்ளியில் ஆசிரியை வேலை என்பதைத்தாண்டி எதற்கும் அனுமதிக்கப்படாதவர்கள்.
இளநிலை படிப்பை தேர்ந்தெடுப்பதற்குப் பின்னால் இருப்பது துறை சார் அதீத தாகமா?
மொத்தம் இருந்த 15 பெண்களில் எம்.ஃபில் படித்தால் கல்லூரியில் ஆசிரியை என்று அடுத்த கட்டத்தில் வெகு சிலர் இருந்தனர். இதைத்தாண்டி சில பெண்கள் கேட் நுழைவுத் தேர்வு எழுத வீட்டில் அனுமதிக்கப்பட்டு , எம்.ஃபில், பி.ஹெச்.டி அல்லது கேட் தேர்வு பிஹெச்டி என்று எதுவாக இருந்தாலும் திருமணம் என்பது அழுத்தமாக முன்வைக்கப்பட்ட நிபந்தனையாக இருந்தது. அதாவது அவர்கள் பயிர்செய்யப்படுவதற்காக படைக்கப்பட்டவர்கள்! இதில் பி.ஹெச்.டி ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்கிற பொழுது சிலருக்கு திருமணமும் நடைபெற்றது.
நீங்களே சொல்லுங்கள் எவனாவது பி.ஹெச்.டி படித்த பெண்ணை கல்யாணம் பண்ண வருவானா என்ன? பொண்டாட்டியா இருக்கிறதுக்கு எதுக்கு பி.ஹெச்.டி பண்ணனும்னுதான் நிறைய பேரு கேட்பாங்க!
மூன்றாவதாக, இந்த அனுபவத்தை வாசிக்கிற பொழுது ஒன்றாம் வகுப்பு படிக்கிறபொழுதே ஒருவர் விஞ்ஞானி என்று முடிவெடுத்துக்கொண்டுதான் தயாராகிறா? இல்லை. இன்றைக்கு மதிப்பெண் பட்டியலை வாங்கிவிட்டு, நல்ல மதிப்பெண் பெற்றவர் மருத்துவராக, மற்றபடி பாஸ் செய்தவரில் பணம் இருப்பவர்கள் பொறியியல் என்று போக, பெரும்பாலான ஏழைகள் தேர்ந்தெடுக்கப்போவது ஏதாவது ஓர் இளநிலை படிப்புதான்!
இளநிலை படிப்பை தேர்ந்தெடுப்பதற்குப் பின்னால் இருப்பது துறை சார் அதீத தாகமா? எனது அனுபவம் அப்படி இல்லை. பொறியியலுக்கும் அப்படி ஒரு கண்ணியம் அடிப்படையிலேயே துடைத்தெறியப்பட்டிருக்கிறது. என்றைக்கு மென்பொருள் துறை என்றார்களோ அன்றைக்கு இந்தநாடு மெக்கானிக்கல், எலக்டிரிக்கல், சிவில் பிரிவில் எந்தவொரு அறிவுச் சக்தியையும் ஓர் இம்மியளவும் படைக்கவில்லை என்று சொல்வதைவிட அதுபற்றி சிந்திக்கவேயில்லை என்று சொல்வது பொருத்தமாயிருக்கும்.
இன்றைக்கு நாமக்கல் பிராய்லர் கோழி மெட்ரிக்குலேசன் பள்ளியில் மருத்துவம் படிப்பதற்கு ஒரு கோழியை தயார் செய்ய ஆறு இலட்சம் கட்ட வேண்டுமாம்.
பொறியியல் பிரிவைத் தேர்ந்தெடுத்த பெரும்பாலானவர்கள் தங்களது துறைசார் புலத்தில் கிடையாது. ஏனெனில் அப்படியொரு எண்ணம் நமது கல்விமுறைக்கே கிடையாது. மென்பொருள்துறை, கைநிறைய சம்பளம் என்ற ‘இலட்சியம்’ இவர்களுக்கு விதைக்கப்பட்டதன் பின்னணியில் ஏன் என்னைப் போன்றவர்கள் சேர்க்கப்படவில்லை?
அதற்குக்காரணம் ஏழ்மை நிலைதான் இளங்கலையை நோக்கித் தள்ளியது. எனது மதிப்பெண் முட்டைகளை கவனிக்க வேண்டும். நான் பன்னிரெண்டாம் வகுப்பில் தாய்மொழி வழிக்கல்வியில் 93% மதிப்பெண்கள் பெற்றிருந்தேன். தமிழில் 88.5% ஆங்கிலத்தில் 80% கணிதத்தில் 98.5% வேதியியலில் 99% இயற்பியலில் 98% உயிரியலில் 96% மதிப்பெண்களும் பெற்றிருந்தேன்.
உயிரியலில் பெற்ற இந்த மதிப்பெண்ணை வைத்து நம் சமூகத்தில் ஒரு மயிரையும் பிடுங்க இயலாது. ஆனால் தமிழ் மொழிக்கு அடுத்தபடியாக எனக்கு விருப்ப பாடம் இதுதான்! அப்படியானால் மருத்துவத்திற்காக தயாரிக்கப்படும் மாணவர்களுக்கு இருக்கிற மன அழுத்தத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலுமா? பன்னிரெண்டாம் வகுப்பிலேயே தூக்கச் சமநிலையை நான் இழந்திருந்தேன்.
இன்றைக்கு நாமக்கல் பிராய்லர் கோழி மெட்ரிக்குலேசன் பள்ளியில் மருத்துவம் படிப்பதற்கு ஒரு கோழியை தயார் செய்ய ஆறு இலட்சம் கட்ட வேண்டுமாம். ஆனால் ஒட்டுமொத்த முதுகலையையும் சேர்த்தே எனது கல்விச் செலவு ஆறு இலட்சம் அல்ல. பி.ஹெச்.டி.யும் நிதி நல்கையால் படித்தேன்.
ஆசிரியர்கள் ஒரு சங்கமாக இணைந்து போராடிய பொழுது இதே அரசுப்பள்ளியை அஜிதனை வைத்து எள்ளி நகையாடவும் செய்திருந்தார்!
நான் பயின்றது மிகப்பிரபலமான கிறிஸ்துவ உயர்நிலைப்பள்ளி. இங்கு ஒரு பிரேக் எடுப்போம். சமீபத்தில் ஜெயமோகன் “அஜிதனும் அரசுப்பள்ளியும்” என்று ஒரு கட்டுரை எழுதி அரசுப்பள்ளியின் மீது ஆதரவு செலுத்துவதைப்போன்று ஒரு நாடகம் ஒன்றை அரங்கேற்றியிருந்தது நினைவிருக்கலாம். ஆனால் ஆசிரியர்கள் ஒரு சங்கமாக இணைந்து போராடிய பொழுது இதே அரசுப்பள்ளியை அஜிதனை வைத்து எள்ளி நகையாடவும் செய்திருந்தார்! அது தான் ஜெயமோகன்! ஆனால் இங்கு விசயம் வேறு. அரசுப்பள்ளிக்கு ஆதரவாக பேசுவது போல் கிறித்துவ பள்ளி மிகக் கொடூரம் என்று குறிப்பிட்டு மதம் சார்ந்து தனது பிரச்சாரத்தை நுணுக்கமாக மடைமாற்றியிருந்தார். கன்னியாகுமரியில் மண்டைக்காடு கலவரம் மூலமாக இந்துத்துவம் காலூன்றுவதற்கு இத்தகைய ஆர்.எஸ்.எஸ் அபிமானிகள் தான் களம் அமைத்துக்கொடுக்கின்றனர் என்பதை வாசகர்கள் மறந்துவிடக் கூடாது.
மீண்டும் நம் விசயத்திற்குள் நுழைவோம். நான் பயின்ற அரசு உதவி பெறும் கிறித்தவப்பள்ளியும் ஏகாதிபத்திய முகமைதான். ஆனால் தனியார்மயம் தாராளமயம் உலகமயம் கல்வியில் உருவாக்கியிருக்கிற கொடூரத் தாக்குதல் ஜெயமோகன் சொல்வதைப்போல ஒரு மதம் சார்ந்த கொடூரமாக நிற்கவில்லை. ஏனெனில் பார்ப்பனிய சமூகத்தில் கல்வி நிலையங்களும் கிடையாது. அதில் படிக்கவும் பெரும்பாலான சாதிகளுக்கு இடமும் கிடையாது. அதே சமயம் இன்றைக்கு சாதிச்சங்கங்கள் எப்படி வேர்விட்டு வளர்ந்து நிற்கிறதோ அதே போன்று சிறுபான்மை கல்வி நிறுவனங்களும் இன்றைக்கு காலனிய மறுகாலனிய கொள்கைகளுக்கு சேவகம் புரிந்துவருகின்றன.
சம்பாதிப்பது தான் வாழ்க்கை என்று முடிவாகிவிட்டால் அங்கே திறமைகள் சம்பாதிப்பதற்கு ஏற்றபடிதான் வடிவமைக்கப்படுகிறது. (படம் : மூத்த கல்வியாளர் எஸ்.எஸ் ராஜகோபாலன் எழுதிய புத்தகத்தின் முகப்பு – கோப்புப் படம்)
இது ஒருபுறமிருக்க இலக்கியம், ஓவியம், வாசிப்பு, தமிழ் மொழி, நாத்திகம் போன்றவற்றை அறிகிற தளமாக எனது பள்ளி இருந்தது. அதைச் செய்தவர்கள் எனது தமிழாசிரியர்களும் தமிழ் மொழியிலும் கலைகளிலும் ஆர்வம் கொண்ட எனது வெகுசில அறிவியல் ஆசிரியர்களும்.
இங்குதான் ஆசிரியர்களும் மாணவர்களும் மோதுகிற பட்டிமன்றத்தில் பங்கேற்று ஆசிரியத் தரப்பை வெளுத்து எறிந்தோம். தி.மு.க தமிழாசிரியர் ஒருவர் தொடர்நிலைச் செய்யுள்களான கம்பராமாயணத்தையும் வில்லிபாரதத்தையும் கடைசிவரை கொள்கை காரணமாக தொட்டதில்லை. ஆனால் இன்று தி.மு.க தலைவர்கள் முந்திக் கொண்டு தீபாவளி வாழ்த்தையே தெரிவிக்கிறார்கள்
சர்வ சமயம் வழிபாட்டுக்கூடம் என்ற இடத்தில் சர்வ சமயத்தையும் தாக்கிப்பேசுகிற நன்னெறி வகுப்புகளும் நடைபெற்றிருக்கின்றன. ஆம் நன்னெறி வகுப்பிற்கு அமையக்கூடிய வாத்தியார்களைப்பொறுத்து நாத்திகமா ஆத்திகமா என்று முடிவாகும்.
எனது பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பாடங்களும் பதினோறாம் வகுப்பு பாடங்களும் முழுமையாக அக்கறையோடு நடத்தப்பட்டிருக்கின்றன. பதினோறாம் வகுப்பில் தொகை நுண்கணிதம் வருகிறது. ஆனால் பன்னிரெண்டாம் வகுப்பில் வகை நுண் கணிதம் வருகிறது. தொகை நுண்கணிதத்தை கசடற கற்க முடியவில்லையென்றால் மதிப்பெண்ணை ஒட்டி பதினோறாம் வகுப்பு பாடத்தை புறக்கணித்தால் வகை நுண் கணிதத்தை கற்பதில் அர்த்தம் இல்லை. மேற்படிப்பிற்கும் இது உதவாது. 12-ம் வகுப்பு இயற்பியலும் இதுவன்றி சுரத்தாக புரியாது.
தாவரவியலில் யூகேரியாட்டுகளுக்கும் புரேகேரியாட்டுகளுக்கும் உள்ள அடிப்படை வேறுபாடுகளையும் கரப்பான் பூச்சியின் உணவு மண்டலத்தையும் உமிழ் நீர்சுரப்பிகளையும் கசடற கற்கிற பொழுது அங்கே வெறுமனே உயிரியலாளர் மட்டுமே தோன்றுவதில்லை. மாறாக ஓர் உயிரியல் கண்டுபிடிப்பாளர் அங்கே தோன்றுகிறார். மனித உணவு மண்டலத்தை விட கரப்பான் பூச்சியின் உணவு மண்டலம் சற்று சிக்கலானது (தற்பொழுதைய பதினோறாம் வகுப்பு பாடத்தில் இது நீக்கப்பட்டுள்ளது)! 12 விட 11 முக்கியம்!
இதனுடைய முக்கியத்துவத்தைப் புறக்கணித்து விட்டு வெறும் மதிப்பெண்ணை உருவாக்குகிற பிண்டங்களை வெளித்தள்ளும் மெட்ரிக்குலேசன் பள்ளிகள் ஒன்பதாம் வகுப்பு மத்தியிலேயே மாணவர்களை பத்தாம் வகுப்பிற்கு தயார்படுத்துவதும் பதினோறாம் வகுப்பிலேயே பன்னிரெண்டாம் வகுப்பிற்கு தயார்படுத்துவதும் குழந்தைகளை வன்புணர்வு செய்கிற செயலுக்கு ஒப்பானது. இதற்கு முழுக்கவும் காரணம் இலாபவெறியை அடிப்படையாகக் கொண்ட நுகர்வுச் சமூகம் தான்.
ஏழ்மையான சமூகத்தில் இருந்து வந்தவர்கள் முழுக்கவும் பள்ளியை மட்டுமே நம்பியிருந்தோம்.
சம்பாதிப்பது தான் வாழ்க்கை என்று முடிவாகிவிட்டால் அங்கே திறமைகள் சம்பாதிப்பதற்கு ஏற்றபடிதான் வடிவமைக்கப்படுகிறது. அப்படியான ஒரு சமூகம் மலட்டுச்சமூகமாக இருக்குமேயன்றி அங்கே திறமையும் கலையும் எதுவும் பல்கிப் பெருகாது. இப்படியொரு நிலையை எனது அனுபவத்தில் தரமான கல்வியை வழங்குகிற எனது பள்ளிலேயே கண்டேன்.
சான்றாக பத்தாம் வகுப்பில் ஓவிய வகுப்புகளையும் நாத்திகம் பேசும் நன்னெறி வகுப்புகளையும் முக்கியமாக தமிழ் ஆங்கில வகுப்புகளையும் அறிவியல் ஆசிரியரும் கணித ஆசிரியரும் ஈவு இரக்கமின்றி பிடுங்கிக் கொள்வர். அப்பொழுது இத்தகைய ஆசிரியரின் மனநிலையும் எங்களின் மனநிலையும் நிச்சயித்து திருமணம் நின்றுபோன பெண்ணின் மனநிலையில் இருக்கும்!
இன்று பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை வைத்துக் கொண்டிருக்கிற பெரும்பாலான மாணவர்களில் ஓவியரும், பேச்சாளரும், எழுத்தாளரும், விளையாட்டு வீரரும் புதைக்கப்பட்டிருக்கிறார்கள். இதெல்லாம் இல்லாமல் எதற்காக இந்த சமூகம் வெட்கங்கெட்டு இன்னும் நீடிக்க வேண்டும்?
பெரும்பாலான பள்ளியில் ஓவிய ஆசிரியர்கள் தமது வேலை போக ஆண்டு விழாவிற்காக நெட்டி அறுத்து அலங்காரப்படுத்துவதும், தமிழ் ஆசிரியர்கள் மதிப்பெண் பட்டியல் நிரப்புவதும் என இலாபவெறிகொண்ட சமூகம் இவர்களை நடத்துகிற இழிவு நம் நாட்டைத் தவிர வேறு எங்காவது உண்டா?
ஆங்கில வழிக்கல்வி – அறிவு வளர்ச்சியின் மீது செலுத்தப்படும் வன்முறை !
இதைவிட விளையாட்டு ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் இன்றைய தனியார் பள்ளியை சேர்த்துப் பார்த்தீர்களேயானால் மாவட்ட அளவில் விளையாட்டு வீரராக, சோனல் பிளேயராக இருப்பார். அவரது வீட்டில் கண்டிப்பாக பல சான்றிதழ்களும் சில மெடல்களும் இருக்கும்.
ஆனால் அவர்கள் நடத்தப்படுகிற விதம் என்பது ஏறக்குறைய எல்லா பள்ளிகளிலும் அசெம்பிளியை விசில் வைத்து ஒழுங்குபடுத்துவதற்கும் ரவுண்ட்ஸ் வந்து வாயில் விரல் வைக்கச் சொல்லவுமே பயன்படுத்தப்படுகிறார்கள். ஆனால், அங்கே ஆஸ்திரேலிய டெஸ்டில் சோப்ளாங்கி இசாந்த் சர்மா வெஜிடேரியன் கிடைக்கவில்லையென்று இடைவேளை நேரத்தில் வெளியே போய் வாங்கிவந்து தனது உயர்சாதி பாசத்தை நிறுவுகிறார். இப்படி இருந்தால் இந்த நாடு விளையாட்டில் எப்படி சாதிக்கும்? சம்பாதிப்பது தான் வாழ்க்கை என்றாகிப்போன சமூகம் பல ஆசிரியர்களை விசல் ஊத மட்டும் அனுமதித்தன் மூலம் ஓர் ஊனத்தை உருவாக்கியிருக்கிறது.
மூன்றாவதாக, என்னைப் போன்ற ஏழ்மையான சமூகத்தில் இருந்து வந்தவர்கள் முழுக்கவும் பள்ளியை மட்டுமே நம்பியிருந்தோம். ஆனால், பொறியியலுக்கும் மருத்துவத்திற்கும் பயிற்சி பெற்ற மாணவர்கள் தனியாக டியூசன் வைத்துக்கொண்டார்கள். நன்றாக கற்றுக் கொடுக்கும் எனது வேதியியல் ஆசிரியர் டியுசன் படிக்கிறவர்களுக்கு மட்டும் கணக்கு தீர்ப்பது எப்படி என்று சொல்லித்தருவார். ஆனால் வகுப்பில் இதைப் புறக்கணித்துவிடுவார். இவர் அன்றைக்கு கொடுத்த மன அழுத்தத்தை ஒருவழியாக சமாளித்தேன். ஆனால் இரண்டாண்டுகளுக்கு பிறகு இதே ஆசிரியர் மூலமாக மாணவர் டியுசன் சேரச்சொல்லி வற்புறுத்தப்பட்டதால் தற்கொலை என்று நாளிதழ்களில் செய்தி வந்தது. இதற்குப்பிறகும் அதற்கு முன்னும் கூட தமிழ்நாடு முழுவதிலும் நிறைய மாணவர்களை நாம் இப்படி இழந்திருக்கிறோம்.
நான்காவதாக, பொறியலுக்கும் மருத்துவத்திற்கும் பயிற்சி பெற்ற மாணவர்கள் தமிழ் படிக்கத் தேவையில்லை என்று அறிவியலுக்கான அடிப்படையையே இழந்தார்கள். எப்படி? ஒரு தாய்மொழி தான் கற்றலுக்கான நான்கு நிலைகளை வழங்குகிறது. அவை முறையே கேட்டல் (listening), வாசித்தல் (reading), எழுதுதல் (writing) மற்றும் புரிந்துகொள்ளுதல் (Understanding) என அடிப்படையை வழங்குகிறது. இதைத் தகர்த்துவிட்டு அறிவியல் அறிஞர்களை நீங்கள் கண்டடைந்துவிட முடியாது.
வரலாறு, அரசியல் அறிவியல், பொருளியல், வணிகவியல், உளவியல் என இத்துறைசார் அறிவுத்துறையினர் எல்லாம் இந்தியாவைப்பொறுத்தவரை மக்குத்தடிகள்!
ஆங்கிலமோ நம் நாட்டில் அடிமையின் மொழியாக மட்டுமே கற்றுத்தரப் படுகிறது. இதைத் தூக்கிப்பிடிக்கிறவர்களின் உளவியல் வெள்ளைக்காரன் வளர்க்கும் நாயைப்போன்று வாளை மட்டுமே சுழற்றுகிறது.
ஐந்தாவதாக, மொழிப்பாடம் மட்டும் அல்ல அறிவியல் பாடமும் அடிமைச் சமூகத்தில் இருந்து தப்பவில்லை. பொறியியல் படிக்க வேண்டியவர் உயிரியலை முற்றிலும் புறக்கணிக்கிறார். அதே போல மருத்துவம் படிக்க வேண்டியவர் கணிதத்தையும் புறக்கணிக்கிறார். இவர்கள் அனைவரும் சேர்ந்து விளையாட்டு, ஓவியம், கலை என அனைத்தையும் புறக்கணிக்கின்றனர். இங்கிருந்து வருகிற சமூகம் வெறும் சக்கையின்றி வேறென்ன?
அறிவியலைத் தாண்டிப் பார்த்தால் பன்னிரெண்டாம் வகுப்பு மூன்றாம் பிரிவினரை இச்சமூகம் பார்க்கும் பார்வையென்ன? “தேர்டு குரூப்பா? மக்கு தடிக தான் படிக்குங்க! பத்தாங் கிளாஸ்ல ஒழுங்கா படிச்சா பர்ஸ்ட் குரூப் எடுக்கலாம் இல்ல!” என்று சொல்கிறார்கள்.
வரலாறு, அரசியல் அறிவியல், பொருளியல், வணிகவியல், உளவியல் என இத்துறைசார் அறிவுத்துறையினர் எல்லாம் இந்தியாவைப்பொறுத்தவரை மக்குத்தடிகள்! ஆனால் இப்படிச்சொல்கிற இதே சமூகம் பொறியியல் பட்டதாரியை எம்.பி.ஏ படிக்கச் சொல்லி கங்காணிகளை உருவாக்குகிறது. அறிவியல் இளங்கலை படித்தவர்களை எம்.எஸ்.டபிள்யு (Master of social work) படிக்கச் சொல்லி ஏகாதிபத்தியத்திற்கு என்.ஜி.ஓ வடிவில் சேவை செய்ய கைக்கூலிகளை உருவாக்குகிறது!
ஆறாவதாக, யோசித்துப் பார்த்தால் ஒரு மனிதனுக்கு இருக்க வேண்டிய நட்புணர்ச்சி பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கிற மாணவருக்கு இக்கல்வி முறையால் கிடைக்குமா? எனது வகுப்பில் டியுசன் படிக்கிற மாணவர்களை அன்றைக்கு பிடிக்கவில்லை. அவர்கள் ஒரு கேங்காக இருந்தார்கள். கேவலம் ஒருமதிப்பெண் வினா கூடத்தெரிந்துவிட்டால் ஓராயிரம் விரிசல்கள் அங்கு வந்தன. கணித ஆசிரியர் பாடம் எடுக்கிற பொழுது விட்டேத்தியாக அமர்ந்திருப்பர். ஏனெனில், அவையெல்லாம் அவர்களுக்கு முன்பே நடத்தி முடிக்கப்பட்ட பாடங்கள். தமிழ் ஆசிரியர் பாடம் எடுக்கிற பொழுது கவனிக்கவும் மாட்டர்.
இன்றைக்கு மென்பொருள் துறையில் இருப்பவர்கள் போராட வராமல் எனக்கென எருமைமாட்டில் மழைபெய்தவர்கள் போன்று இருக்க எது காரணம்? அடிப்படை விழுமியங்களை பள்ளியிலேயே கழற்றி எறியச் சொல்கிற ஒரு நுகர்வுச் சமூகம் இன்றைய இளைஞர்களுக்கு எந்தவிதமான பிரக்ஞையை அளிக்க முடியும்?
ஏகாதிபத்தியத்தின் கொடூரத்தை பாதிக்கப்படுகிற தன்னாலேயே புரிந்துகொள்ள முடியாமல் படுக்கையில் மலம் கழித்த மன நிலையற்றவரைப்போன்று இன்றைக்கு அவலத்தை உணராத முடியாத நிலைக்கு இருப்பதற்கு இக்கல்வி முறை ஒரு பெரும் குற்றவாளி இல்லையா?
ஆக, தொகுப்பாக பார்த்தோமேயானால் விஞ்ஞானியாகவோ, மென்பொருளாளராகவோ, மருத்துவராகவோ ஆவதற்கு இந்தச் சமூகம் தனது அடிப்படையையே காவு கொடுத்துவிட்டு அம்மணமாக நிற்கிறது. இன்றைக்கு கொத்துக்கொத்தாக டி.சி.எஸ்.-இலும் சிண்டெலிலும் மென்பொறியாளர்கள் கழுத்தைப்பிடித்து வெளித்தள்ளப்படுகின்றனர்.
இன்றைக்கு பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்ணை வைத்துக்கொண்டு இருக்கிற சற்றேறக்குறைய எட்டு இலட்சம் மாணவர்களுக்கு என்ன எதிர்காலம் இருக்கிறது?
ஒரு ஓவியனும், பேச்சாளனும், கலை வல்லுநரும் விளையாட்டு வீரரும் எழுத்தாளரும் இங்கே தோன்றுவதற்கு உண்டான வாய்ப்பை இச்சமூகம் முளையிலேயே கிள்ளிவிடுகிறது. வெறும் மதிப்பெண் பொம்மைகள் சம்பாரிப்பதற்கும் வாத்து உண்டியலில் காசு சேர்ப்பதற்கும் என்ன வித்தியாசம்?
அல்லது எதற்காக சம்பாதிக்கிறோம்? இந்தக் கேள்வியை அடுத்த பதிவில் விவாதிப்போம்.
அதற்கு முன்பு மூன்று முடிவுகளைப் பரிசிலீப்போம்.
1. பெற்றோர்களும் சனநாயக சமூகத்தின் மீது அக்கறை கொண்ட மனிதர்களும் நமது குழந்தைகளை இக்கல்வி முறையிலிருந்து மீட்டெடுக்க வேண்டும். இலாபவெறிச் சமூகத்திற்கு முடிவுகட்டாமல் நமது குழந்தை நமக்குச் சொந்தமாக இருக்கப்போவதில்லை என்பதை நினைவில் வைப்போம்.
2. பள்ளி மாணவர்கள் போராடக் கற்றுக்கொள்வோம். ஏற்கனவே மென் பொருள் வல்லுநராக, அறிவியல் துறையில் ஆசிரியத்துறையில் இருக்கிற இளைஞர்கள் நமது மாணவர்களை புரட்சிகர அரசியல் நோக்கி வழிநடத்துவோம். நமது அனுபவங்கள் இழவுக்கதையாக அல்லாமல் இலாபவெறிச்சமூகத்தை கறுவறுக்கும் வெடிமருந்தாக இருக்கட்டும்.
3. நமக்கான கல்வியை போராட்டத்தில் இருந்து தொடங்குவோம்.
முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் போன்ற சிறுபான்மை பிரிவினருக்கு இருந்ததைப் போன்று தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், அம்பேத்கர் இரட்டை வாக்குரிமை கோரிய இலண்டன் 2-ம் வட்ட மேசை மாநாடு.
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திற்கு செல்வோம். அம்பேத்கரின் தலித்துகளுக்கு இரட்டை வாக்குரிமை கோரிக்கையை முறியடிக்கும் பூனா ஒப்பந்தம் 1932-ல் கையெழுத்தானது. பிறகு காந்தி தலித் மக்களின் அதிருப்தியை, அதை புரிந்து வைத்திருக்கின்ற அம்பேத்கரின் செல்வாக்கைக் குறைக்க ரூம் போட்டு யோசிக்கிறார். இந்த யோசிப்பு ஒரு ஆதிக்க சாதி ஆசார இந்து மனதின் வலிமையிலும், அதை அருளுகின்ற பௌதீக பொருளியல் வர்க்கங்களின் அரவணைப்பிலிருந்தும் உருவாகிறது.
இப்படித்தான் “ஹரிஜன சேவா சங்கமும், ஹரிஜன் பத்திரிகை”யும் உதிக்கின்றன. இங்கே நாம் பார்க்கப் போவது இந்தப் பிரச்சினை குறித்தல்ல. ஊடக அறம் குறித்த காந்தியின் நடைமுறை பரிசோதனை ஒன்றுதான் இங்கு கருப்பொருள்.
ஆங்கிலத்தில் “ஹரிஜன்” பத்திரிகை ஆரம்பிக்க எத்தனை பிரதிகள் அச்சடிப்பது, நிர்வாகம் எப்படி செயல்பட வேண்டும், ஆசிரியர் குழு வேலைகள் என அனைத்தும் ஒரு பொன்மாலைப் பொழுதில் உற்சாகமாய் யோசிக்கப்பட்டு காந்தியால் வரைவுத் திட்டமாக முன்வைக்கப்படுகிறது.
ஹரிஜன் பத்திரிகை துவங்குவதற்கு உதவி கோரி காந்தி கடிதம் எழுதியது பிர்லாவுக்கு! – காந்தியின் இடப்பக்கத்தில் பிர்லா!
“ஒரு நல்ல பத்திரிகை சுய பலத்தில் நிற்க வேண்டும், அதன் ஆசிரியக் கொள்கை சரியில்லை என்றால் அப்படி ஒரு பத்திரிகையே தேவையில்லை” என்றெல்லாம் ஊடக அறங்களை காந்தி வகுக்கிறார். எப்படியும் 10,000 படிகள் அச்சடிப்பது அவரது இலக்கு.
சரி, இவ்வளவு யோசித்த மகாத்மா அடுத்து சாதாரண ஆத்மாக்களான மக்களிடம் நிதி வசூல் செய்து பத்திரிகை ஆரம்பிப்பார் என்று யோசிக்கிறீர்களா? எனில், நீங்கள் இன்னமும் சாந்தி (சாந்தி விளக்கம் பின்பகுதியில் வருகிறது) போதையில் இருக்கிறீர்கள்.
பத்திரிகையின் பெயர் ஹரிஜன். அதைத் துவங்குவதற்கு உதவி கோரி காந்தி கடிதம் எழுதியது பிர்லாவுக்கு! இந்திய காங்கிரஸ் கட்சி, இந்திய சுதந்திரப் போராட்டம் மற்றும் இந்திய தரகு முதலாளித்துவம் அனைத்திற்கும் புரவலர்தான் இந்த கன்சியாம் தாஸ் பிர்லா – ஜி.டி.பிர்லா. மேலும் காந்தி அவர்கள் பிர்லா அவர்களுக்கு ஏதோ காசு கொடு என்று மட்டும் எழுதவில்லை. ஹரிஜன் பத்திரிகை குறித்த முழு விவரங்கள், நோக்கம், திட்டம் அனைத்தையும் முன்வைத்தே அவர் இந்த “பிச்சையை” கேட்கிறார். கடிதம் எழுதிய தேதி 25-01-1933.
பிர்லாவின் ஆசி இருந்ததாலோ என்னமோ பத்திரிகை நல்ல வரவேற்பை பெற்று சந்தாக்கள் வர ஆரம்பித்து விற்பனையும் சிறப்புற நடந்தது.
பிறகென்ன ஜி.டி பிர்லாவின் அருட்கொடையில் காந்திஜி பெருமையுடன் அளித்த ஹரிஜன் பத்திரிகை கோலாகலமாக 11-02-1933-ல் ரிலீஸ் செய்யப்பட்டது. பிர்லாவின் ஆசி இருந்ததாலோ என்னமோ பத்திரிகை நல்ல வரவேற்பை பெற்று சந்தாக்கள் வர ஆரம்பித்து விற்பனையும் சிறப்புற நடந்தது. உடன் காந்தி தனது கனவுத் திட்டத்தை ஏனைய மொழிகளிலும் செயல்படுத்த விரும்புகிறார். முதலில் இந்தி, அப்புறம் குஜராத்தி.
இந்தியில் பத்திரிகையின் பெயர் ஹரிஜன பந்து. இந்திதான் இந்தியாவின் எதிர்கால மொழி என்று நம்பிய காந்தி, ஹரிஜன பந்து தயாரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த ஆரம்பித்தார். ஆங்கிலத்தை விட இது கூடுதலாக வரவேற்பை பெறும் என்று அவர் ‘அதிசய’த்தக்க விதத்தில் கணித்தார்.
இருப்பினும் எல்லா கனவுகளும் கையோடு நனவாகி விடுவதில்லை. கூடுதல் படிகள் அச்சிட வேண்டுமானால் கூடுதல் காகிதம் வேண்டும். காகிதத்திற்கு எங்கே போவது? ஏற்கனவே பிர்லாவிடம் வெயிட்டாக வாங்கியாகி விட்டது. மேலும் அவரிடம் காகித ஆலைகள் (பேப்பர் மில்) ஏதும் அப்போது இருக்கவில்லை.
வங்கத்தில் இருக்கும் டிட்டாகர் காகித ஆலை (TITAGHUR PAPER MILLS CO LIMITED) அவரது கவனத்திற்கு வருகிறது. அந்த மில்லின் மேலாண்மை இயக்குநர் சர். எட்வர்டு பெந்தால் எனும் ஆங்கிலேயருக்கு காந்தி கடிம் எழுதி காகித உதவி கேட்கிறார். பத்திரிகை நடத்த காகித உதவி எனும் லாஜிக் படி இது சரிதான். எனினும் காகித ஆலை எட்வர்டோ இப்படி வெறுமனே காகிதம் கொடுப்பது சரி வராது என்று நினைக்கிறார்.
கூடுதல் படிகள் அச்சிட வேண்டுமானால் கூடுதல் காகிதம் வேண்டும். – TITAGHUR PAPER MILLS-ல் காகிதக்கட்டுகளை இறக்கும் தொழிலாளிகள்
அதே நேரம் காந்தி கேட்ட உதவியை மறுக்கவும் விரும்பவில்லை. “ஐயா, உங்களது பத்திரிகையில் எமது பேப்பர் ஆலைகளுக்கான விளம்பரத்தை பெரிய அளவில் தொடர்ந்து தருகிறேன், அதன் மூலம் வரும் விளம்பரக் கட்டணத்தை வைத்து நீங்கள் போதுமான பேப்பரை வாங்கிக் கொள்ளலாம்” என்று ஒரு டீலை முன்வைக்கிறார்.
காந்தியோ அப்படி விளம்பரம் போடுவதற்கு பதில், “இந்த பத்திரிகை இப்படியான பேப்பர் மில் அன்பளிப்பாய் கொடுத்த காகிதத்தில் அச்சடிக்கப்பட்டது என்று கொட்டை எழுத்தில் போடுகிறோம், இதுவே சிறந்த விளம்பரமாக இருக்கும்” என்கிறார். எட்வர்டோ, “நேரடி விளம்பரம்தான் சரிவரும்” என்கிறார். இப்படி இந்த ஒப்பந்தம் பிரச்சினைக்குள்ளாகி நிறைவேறவில்லை.
பிறகு வேறு எதோ புரலவர்களின் கருணையினால் இந்தி “ஹரிஜன்” இதழ் வெள்ளிதோறும் வெளிவர ஆரம்பித்தது. “ஹரிஜன்களின்” நலனுக்காக பல்வேறு பார்ப்பன மற்றும் பனியா தலைவர்கள் அதில் கட்டுரைகள் எழுதினர். பிறகு காந்தி இறந்ததும் இந்த வரலாற்றுப் புகழ் மிக்க பத்திரிகையும் நின்று போனது.
ஒரு பத்திரிகை என்பது விளம்பரங்களை சாராமல், சந்தாதாரர்களை மட்டும் சார்ந்து சுய பலத்துடன் இயங்க வேண்டுமென்று காந்தி விரும்பினாராம். மேற்கண்ட வரலாற்றுத் தகவலை எழுதிய கிருஷணமூர்த்தி இவ்வாறு புல்லரிக்கிறார். (The Indian press and the freedom struggle, p 97, Nadig Krishnamurthy, Press in India, Suresh k sharma).
ஒரு பத்திரிகை ஆரம்பிக்க பிர்லா, எட்வர்டு போன்ற முதலாளிகளே முதன்மையாக தேவைப்படுவர் என்று நிரூபித்த முதல் சாதனையாளர் திருவாளர் காந்தி அவர்கள்தான். – படத்தில் பிர்லா
இதே நூலில் 1945-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட விளம்பர முகவர்களின் சங்கம் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சங்கம்தான் பத்திரிகை மற்றும் முதலாளிகளின் விளம்பரங்களை இணைத்து ஊடகத் தொழிலை வளர்ப்பதற்கு அஸ்திவாரத்தை போட்டதாம். அது இன்று வளர்ந்து “பெய்ட் நியூஸ், அர்னாப் கோஸ்வாமி டெரர் வாய்ஸ்” வரை வந்து நிற்கிறது.
ஆனாலும் ஒரு பத்திரிகை ஆரம்பிக்க பிர்லா, எட்வர்டு போன்ற முதலாளிகளே முதன்மையாக தேவைப்படுவர் என்று நிரூபித்த முதல் சாதனையாளர் திருவாளர் காந்தி அவர்கள்தான். என்றாலும், ஒரு பேப்பர் முதலாளியிடமே சென்று காகிதம் கேட்டு, முதல் பக்கத்தில் “இந்த மில்லின் அன்பளிப்பாக இந்த பத்திரிகை உங்களது கைகளில் தவழ்கிறது” என்று போடுவதற்கும் முன்வந்த காந்திதான் இந்திய ஊடகங்கள் மற்றும் அவற்றின் அறங்களுக்கு முன்னோடி. இன்று கூட இந்த திரைப்படத்தை உங்களுக்கு வழங்குவோர், இந்த வெட்டிப்பேச்சை உங்களுக்கு அளிப்பவர்கள் என்று காந்தியின் மொழியில்தான் கோபிநாத்தோ, சன்.டிவியோ கூறுகிறார்கள்.
இப்பேற்பட்ட காந்திதான் இந்தியாவின் முதல் என்.ஜி.வோ என்று அருந்ததி ராய் கூறியதுமே பல்வேறு உள்ளொளி ஆத்மாக்கள் சிலிர்த்தன.
இப்பேற்பட்ட காந்திதான் இந்தியாவின் முதல் என்.ஜி.வோ என்று அருந்ததி ராய் கூறியதுமே பல்வேறு உள்ளொளி ஆத்மாக்கள் சிலிர்த்தன. அருந்ததி ராயை வசைபாடிய எழுத்துக்கள் அவுட்லுக் ஆங்கிலப் பத்திரிகையிலிருந்து தமிழ் இலக்கியவாதிகள் வரை பெருக்கெடுத்து ஓடின.
காந்திக்கு காசருள் புரிந்த ஜி.டி.பிர்லா சாகும் வரை தலைவராக இருந்து நடத்திய “பிர்லா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கழகம்” (ராஜஸ்தானில் உள்ளது) இந்தியாவின் பழமையான மற்றும் முன்னணியான தொழில் நுட்ப கல்வி நிறுவனமாகும். நெகிழ்வான கல்வித் திட்டம், மதிப்பெண் அடிப்படையிலான மாணவர் சேர்க்கை, அனைவரும் விடுதியில் சேர வேண்டும் இன்னபிற சங்கதிகளுக்காக தனியார் மய ஆதரவாளர்கள் இதைக் கொண்டாடுவர்.
எனினும் இந்தப் பீற்றல்கள் அனைத்தும் ஃபோர்ட் பவுண்டேசன் எனும் அமெரிக்க ஏகாதிபத்திய தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் 1964-70 ஆண்டுகளில் வழங்கப்பட்ட உதவியில் நிறைவேறியவை. அதாவது அமெரிக்க எம்.ஐ.டி பல்கலையே பிர்லாவின் கல்வி திட்டம் இதர கொசுறுகளை வடிவமைத்தது. ஆக ஃபோர்ட் பவுண்டேசன், பிர்லா, காந்தி போன்ற ஆளுமைகள் அனைத்தும் எப்போதும் சேர்ந்தே இயங்கியிருக்கின்றன.
பிள்ளை வகுப்பிலிருந்து பி.ஹெச்.டி ஆய்வு வரை இந்தியாவில் அதிகம் படிக்கப்பட்ட, ‘ஆராயப்பட்ட’ ஆன்மா காந்தி மட்டுமே. இந்தத் திணிப்பின் காரணம் ஆளும் வர்க்கத்தின் ஆல்டைம் உதவியாளராக காந்தி திகழ்ந்தார். விதேசி வெள்ளையர் ஆட்சி முதல் சுதேசி கொள்ளையர் காலம் வரை காந்தி மட்டுமே நாட்டு மக்களின் கோபத்தை தணிக்கும் சாந்தியாக பயன்படுத்தப்பட்டார். இப்படிச் சொன்னால் இல்லையில்லை இது சாந்தியில்லை, சவுடலாக்கும் என்று பொது வாழ்க்கையில் ஓய்வு பெற்ற இலக்கிய, தத்துவ இன்னபிற மகான்கள் சாபமிட்டுக் கொண்டே ஓடி வருவார்கள்.
இங்கேயும் அத்தகைய ஒரு சாந்தியை தந்திருக்கிறோம். காந்தியில் கரைந்தவர்கள் என்ன சொல்வார்கள்?
ஆர்.எஸ்.எஸ் மதவெறியர்களுக்கு அஞ்சாமல் 2002 குஜராத் இனப்படுகொலைக்கு எதிராக போராடி வரும் தீஸ்தா சேதல்வாத் சென்னை வந்திருந்த போது வினவு செய்தியாளர்களுக்கு அளித்த நேர்காணலின் 4-வது மற்றும் இறுதிப் பகுதி.
2002-ல் முஸ்லீம்களுக்கு எதிரான மதவெறித் தாக்குதல்களைத் தொடர்ந்து வேணுகோபால் சொசைட்டி குடியிருப்புப் பகுதியில் இந்து, முஸ்லீம் பகுதிகளுக்கிடையே பிரிப்பதற்காக கட்டப்பட்டுள்ள சுவர். (படம் : நன்றி Frontline http://www.frontline.in/static/html/fl2020/stories/20031010003303900.htm)
அக்ஷர்தாமில் மோடி அரசால் குற்றம் சாட்டப்பட்ட இசுலாமியர்களுக்கு தொடர்பில்லை என்று குஜராத் உயர்நீதிமன்றம் விடுவித்தது. இஷ்ரத் ஜஹான், சொராபுதீன் போலி மோதல் கொலை தொடர்பான விபரங்கள் வெளியாகியிருக்கின்றன. மோடி – அமித்ஷா தலைமைக்கு தொடர்ந்து வாக்களித்து வரும் குஜராத் இந்து சமூகம் இவற்றை எப்படி பார்க்கிறது?
நான் 1991-ல் இருந்து குஜராத்தை கவனித்து வருகிறேன். அந்த மாநிலமும், சமூகமும் மதவாத சக்திகளால் முறையாக திட்டமிட்டு திரட்டப்பட்டிருக்கிறது, சமூகத்தில் மதவாத கண்ணோட்டத்தின் ஊடுருவல் கிட்டத்தட்ட முழுமையாகியிருக்கிறது.
குஜராத்தில் சாதி எதிர்ப்பு இயக்கம் எதுவும் இருந்ததில்லை. அது ஒரு வணிக சமூகம். தொழிற்சங்கங்கள் கூட காந்திய வழியை பின்பற்றுகின்றன. நிலச் சீர்திருத்தம் முன்னேறிய பிற்படுத்தப்பட்ட சாதியான பட்டேல்களை தாண்டி செல்லவில்லை. தலித்துகள் தங்களைத் தாங்களே ஹரிஜன் என்று அழைத்துக் கொள்கின்றனர்.
26 ஆண்டுகளுக்கு முன்னர் நீதிபதி அகமது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட போது குஜராத்தின் அனைத்து மாவட்ட சங்கங்களும், ஒரு இசுலாமியர் நீதிபதியாக நியமிக்கப்பட்டதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தி வேலை நிறுத்தம் செய்தனர். இதை தமிழ்நாடு அல்லது மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கற்பனை செய்து பார்க்க முடியுமா?
தலித்துகளுக்கு என்று தனிக் குடியிருப்புகள் அகமதாபாத் நகரில் உள்ளன. தலித் குடியிருப்புப் பகுதிகள் முஸ்லீம் பகுதிகளுக்கு அருகில் உள்ளன. இவ்வாறு, நகரங்கள் பிளவுபட்டிருப்பது மட்டுமில்லை. முஸ்லீம்கள் அல்லாதவர்கள் மத்தியில் கடுமையான வெஜிடேரியனிசம் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால், தலித்துகள் மாட்டிறைச்சி சாப்பிடுவார்கள்.
தப்லிகி ஜமாத்தின் ‘உத்தரவு’களை பொறுக்க முடியாமல் அவர்களை துரத்தி விட்ட கிஃபாயத் நகர் மக்கள். (படம் : நன்றி Tehelka – http://www.tehelka.com/double-jeopardy-2/4/ )
முஸ்லீம்களும் கூட முன்னிலும் அதிகமாய் பழமைவாதத்தை நோக்கி போகின்றனர். மிகப்பெரிய தப்லிகி ஜமாத் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. குரான் வாசிக்கப்படுகிறது. கடந்த 15 ஆண்டுகளில் பல மதரசாக்கள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளன. ஒரு சிறுபான்மை அமைப்பு கல்லூரி ஒன்றை ஆரம்பிக்க விரும்பினால் அனுமதி கிடைக்காது. ஆனால், மதரசா கேட்டால் உடனே கிடைத்து விடும்.
ஒரு சமூகத்தின் சொந்த பழமைவாதத்தின் மூலம் அதைக் கட்டுப்படுத்துவது என்று இதைப் பார்க்கலாம். ஒரு நவீன, முற்போக்கான முஸ்லீம் அவரது சொந்த சமூகத்திலேயே ஒதுக்கி வைக்கப்படுகிறார்.
போரா முஸ்லீம்கள் மோடிக்கு ஆதரவு தெரிவிப்பது ஒருபுறம். மற்றொரு பக்கம் தப்லீக் ஜமாத். சராசரி முஸ்லீம்கள் மதச்சார்பின்மை பற்றி என்ன கருதுகிறார்கள்?
நீதிக்கான போராட்டம், கல்வி பிரச்சனை ஆகியவற்றில் அவர்கள் மதச்சார்பற்ற அமைப்புகளுடன் இணைந்து கொள்கிறார்கள். மதவாத அமைப்புகளால் எந்த பலனும் இல்லை என்று அவர்கள் புரிந்து கொண்டிருக்கின்றனர். மேலும் குஜராத்தில் ஒரு வலுவான சூஃபி பாரம்பரியம் உள்ளது. பல சூஃபி தலங்களில் முஸ்லீம்களும், இந்துக்களும் இன்றும் பிரார்த்தனை செய்கின்றனர்.
தப்லீகி ஜமாத் அதை எதிர்க்கிறது. முஸ்லீம்களிடையே இது தொடர்பான வேறுபாடு உள்ளது. சூஃபி வழிபாடு செய்யும், சூஃபி வழிபாடு செய்யாத முஸ்லீம்களிடையே விவாதம் நடக்கிறது.
ஒரு மதக் கலவரத்துக்கு முன்பு தெரியும் 5-6 அறிகுறிகள் பற்றி நீங்கள் குறிப்பிட்டதை விளக்க முடியுமா?
பிரவீன் தொகாடியா ஒரு இடத்துக்கு வந்தால் அதன் பொருள் என்ன என்பது அனைவருக்கும் தெரியும்.
அதற்கு ஒரு திட்டமான வடிவம் உள்ளது. மக்கள் மத்தியில் வதந்திகளை பரப்பி விடுவது. உள்ளூர் பத்திரிகைகளிலும் தொலைக்காட்சி சேனல்களிலும் சில செய்திகளை வெளியிடுதல்; திட்டமிட்ட வெறுப்பைத் தூண்டும் பேச்சுக்கள். தமது வருகை மூலமாகவே ஒரு மிரட்டலை விடுக்கும் கோட்பாட்டுவாதிகள், பிரச்சராகர்கள். உதாரணமாக, பிரவீன் தொகாடியா ஒரு இடத்துக்கு வந்தால் அதன் பொருள் என்ன என்பது அனைவருக்கும் தெரியும்.
அதன் பின்னர், பொருளாதார, பிற சமூக பிரச்சனைகள் திரிக்கப்பட்டு முதல் கல்லை எறிவதற்கான தூண்டுதலாக பயன்படுத்தப்படும். நம் முன் இருக்கும் சவால் அத்தகைய கட்டமைத்தலை உணர்ந்து எதிர்வினை ஆற்றுவது. சமூகத்தில் அத்தகைய கட்டமைத்தலுக்கு எதிரான உணர்வை நாம் உருவாக்க முடியும். இந்தத் துறையில் நாம் போதுமான அளவு பணியாற்றவில்லை.
ஆர்.எஸ்.எஸ் பரிவாரத்தின் மதவாத நிகழ்ச்சி நிரலும் மோடியின் புதிய தாராளவாத கொள்கையும் எப்படி சேர்ந்து இயங்குகின்றன?
புதிய தாராளவாதத்தையும் மதவாதத்தையும் ஒருசேர எதிர்க்க வேண்டியிருக்கிறது.
தீவிரமான புதிய தாராளவாதம், மதவாத அரசியலுக்கான தளத்தை உருவாக்குகிறது என்று கருதுகிறேன். புதிய தாராளவாதத்தையும் மதவாதத்தையும் ஒருசேர எதிர்க்க வேண்டியிருக்கிறது.
புதிய தாராளவாத கொள்கைகளை எதிர்த்த போராட்டத்தில் ஜார்கண்டில் 2000 பேர் இன்னும் சிறையில் வாடுகின்றனர். 1999-2002-ல் போராட்டங்கள் மூலம் 85 திட்டங்கள் செயல்படுத்தப்படுவதை அவர்கள் தடுத்து நிறுத்தினார்கள். நமக்கு அதைப் பற்றி தெரிவதில்லை. ஊடகங்கள் தங்கள் பொறுப்பை முற்றிலும் கைகழுவி விட்டிருக்கின்றன.
நீங்கள் தொழிற்சங்கங்களில் பொருளாதாரவாதம் பற்றி பேசினீர்கள். அதைக் கடந்து செல்வதற்கு ஒரு அரசியல் சித்தாந்தம் தேவைப்படுகிறது. தேர்தல் அரசியல் அத்தகைய மாற்றை வழங்க முடியும் என்று கருதுகிறீர்களா?
எனக்குத் தெரிந்து அத்தகைய மாற்று எதுவும் இதுவரை இல்லை. நாம் ஒரு வெற்றிடத்தில் வாழ்கிறோம். ஒரு பெரிய ஆபத்தை தவிர்க்க ஒவ்வொரு தேர்தலிலும் முயற்சித்து வந்தோம். அந்த அபாயம் நம்மீது கவிந்து விட்ட நிலையில், மாற்று ஒன்றை உருவாக்குவது பற்றி சிந்திக்க வேண்டும்.
மதச்சார்பற்ற மதிப்பீடுகளை பரப்பும் உங்கள் முயற்சியான கோஜ் பற்றி சொல்லுங்களேன்?
கோஜ் ஒரு சிறிய நகர்வு மட்டும்தான். சுமார் 80 பள்ளிகளில் 2,000 குழந்தைகளுக்கு கல்வி அளித்து வருகிறோம். அனுபவரீதியாக, இது எத்தகைய மாற்றங்களை கொண்டு வருகிறது என்பதற்கு நான் மிகச்சிறப்பான உதாரணங்களை சொல்ல முடியும். ஆனால் நாம் எதிர்கொள்ளும் பெரிய பிரச்சினையின் முன்பு இது மிகச் சிறிய முயற்சி. அதைப் போன்ற முயற்சிகள் இன்னும் பரந்த அளவில் நடைபெற வேண்டும்.
சமீபத்தில் வெளியான உங்கள் புதிய புத்தகம் குறித்து…….?
பொது மக்கள் மத்தியில் காந்தியின் கொலை பற்றிய வரலாற்றை சரியாக முன்வைக்க…
1994-ம் ஆண்டு முதல் கோஜ் திட்டத்துக்காக வரலாற்று பாட புத்தகங்களை ஆய்வு செய்ததில், பல இடைவெளிகள், நிழல்கள், மௌனங்கள் இருப்பதை நாங்கள் கண்டோம். நாட்டுப் பிரிவினை மற்றும் சுதந்திரம் பற்றிய வரலாறு முறையாக சொல்லப்படவில்லை. இண்டிகோ கிளர்ச்சி, சந்தால் எழுச்சி போன்றவை குறித்து எந்தக் குறிப்பும் இல்லை. காங்கிரஸ் பற்றிய வரலாறுதான் ஆதிக்கம் செலுத்துகிறது.
இந்துத்துவ வலதுசாரி இருட்டடிப்பு செய்த மிகப்பெரிய விஷயம் காந்தியின் கொலை பற்றியது. காந்தியைப் பற்றி என்ன கருத்து இருந்தாலும், 1947-க்குப் பிந்தைய முதல் பயங்கரவாத செயலான காந்தியின் கொலையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் (இந்துமதவாதிகள்) ஏன் காந்தியை கொல்ல வேண்டும். அவரை ஓரங்கட்டி விட்டு ஏன் போக முடியவில்லை.
2000-க்கும் 2004-க்கும் இடையே நாங்கள் காம்பட் இதழில், ஆர்.எஸ்.எஸ்-ஐ தடை செய்யும் அமைச்சரவை தீர்மானம், படேலுக்கும் கோல்வால்கருக்கும் இடையேயான கடிதங்கள் போன்ற சில அதிகாரபூர்வ ஆவணங்களை வெளியிட்டிருந்தோம்.
இந்த அரசாங்கம் பதவிக்கு வந்த போது, அவர்கள் 11,000 ஆவணங்களை அழித்தனர். அதில், இந்த ஆவணங்களும் அழிக்கப்பட்டன என்று எனக்கு ஐயம் உள்ளது. இந்த ஆவணங்கள் அழிக்கப்பட்டுவிட்டனவா என்பது குறித்து கல்வியாளர்கள், தன்னார்வலர்கள் தாக்கல் செய்த தகவல் அறியும் உரிமை மனுக்களுக்கு இந்த அரசு எந்தப் பதிலும் அளிக்கவில்லை.
பொது மக்கள் மத்தியில் காந்தியின் கொலை பற்றிய வரலாற்றை சரியாக முன்வைக்க வேண்டியது முக்கியமானது.
நட்சத்திர நாயகனை தியாகப் போராளியாக காட்ட முடியுமா?
மூளைக் கட்டியால் சாகப்போகும் மனோரஞ்சன் ஒரு நட்சத்திர நடிகன். கனவுலகத்தை உருவாக்குபவன் மிச்சமிருக்கும் நாட்களில் தனது நனவுலகத்தை அன்பால் தாலாட்ட நினைக்கிறான். குரு வணக்கம், பதிவிரதை விரதம், புத்திர பாசம், புத்திரி நேசம், காதலுக்கு மரியாதை, கள்ளக்காதலிக்கு முத்தம், மாமனாருக்கு மதிப்பு, ரசிகர்களுக்கு சிரிப்பு… எதையும் விட்டுவைக்கவில்லை.
அதன்படி ஆரம்பத்தில் அவனை நட்சத்திரமாக்கிய இயக்குநர் மார்க்கதரிசியுடன் இணைந்து “உத்தம வில்லன்” எனும் ஒரு நகைச்சுவை படத்தை எடுக்கிறான். அதுதான் இறுதிப் படம். படம் வளர வளர கட்டியின் வலியும் அதிகரிக்கிறது. திரைப்படமோ பழைய காலத்து ராஜா, ராணி, வில்லன் கதை. இக்கதையில் மரணத்தை வென்ற கூத்துக் கலைஞனாக நடிக்கும் மனோரஞ்சன், வில்ல ராஜாவை வென்று இளவரசியை பிடிக்கிறான். அதை இரணியன் அல்லது பிரகலாதன் கதை நாட்டியமாக ஆடி முடியும் போது மரணம் வாசலில் வந்து நிற்கிறது.
நிஜக்கதையில் பாசப் போராட்டம், நிழல் கதையில் நகைச்சுவை, நிஜத்தில் விதேசி டூயட், நிழலில் சுதேசி தய்ய ஆட்டம், நிஜக்கதையில் மெல்லிய வண்ணங்கள், நிழல் கதையில் அதிரடி வண்ணக் கலவைகள், நிஜத்தில் பேச்சுத் தமிழ், நிழலில் செந்தமிழ் என்று அகடைக்கு விகடை, பகடைக்கு பாடை என்று செதுக்கியிருக்கிறார்கள்.
எனினும் ஏ சென்டர் ரசிகர்கள் மனோரஞ்சனை ரசித்தாலும், கூத்துக் கலைஞனின் கட்டியங்கார காமடியை சகிக்கவில்லை. பி,சி மக்கள் இரண்டையும் – முன்னதை கொஞ்சம் விலகியும், பின்னதை ஒன்றியும் – ரசிக்க கூடிய சாத்தியமுண்டு. பிறகு ஏ-வில் வாழ நேர்ந்திருக்கும் பி அண்ட் சி மக்கள் கொஞ்சம் குழப்பமாக இரண்டையும் ரசிப்பது நடக்கலாம்.
இந்த ரசிக பேதத்தின் காரணம்?
மனோரஞ்சனது குடும்ப மரத்தில் கனிந்தோ காயாகவோ பூவாகவோ தொங்கும் நபர்களுக்கு, அவன் அள்ளித் தெளிக்கும் கைமாறு கடமை கலந்த அன்பு வெள்ளமும், அந்த வெள்ளத்திற்கு காரணமாக சென்ற காலத்தில் அச்சுறுத்திய வறட்சியும் சேர்ந்து உருவாக்கும் பாசப்பிதுக்கலில் ஏ சென்டர் தாலாட்டப்படுகிறது.
ரசிகர்களின் ரசனை வேறுபடுவதன் காரணம் என்ன?
சமகால உலகில் அன்பு, காதல், கருணை, கோபம், பாசம், தாய்மை, தந்தைமை, சகோதரத்துவம், குழு நேசம்… இவையெல்லாம் மனித குலத்திற்கு பொதுவான உணர்ச்சிகள் என்றே பலரும் நம்புகின்றனர். அப்படி இல்லை என்பது யதார்த்தம் மட்டுமல்ல வர்க்க பேதத்தால் பிரிந்திருக்கும் மனித சமூகத்தின் விதியே அதுதான்.
ஆக்ஸ்போர்டில் படித்துத் திரும்பும் டி.வி.எஸ் ஐய்யங்கார் குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மீனம்பாக்கத்தின் வாடகைக் கார் ஓட்டுநரைக் காதலிப்பாரா? ஐ.ஏ.எஸ், ஐ.ஐ.எம் புகழ் இளைஞர்களது காதல் பட்டியலில் ஒரு நகர சுத்தி வேலை செய்யும் பெண் தொழிலாளி இடம் பிடிக்க முடியுமா? வேளைக்கொரு ஆடம்பரம், வயதுக்கொரு வாகனங்களையும் வாங்கித் தரும் அம்பானிகளின் புத்திர பாசமும், ஒரு பலூன் வாங்குவதற்கே யோசிக்கும் கீரை விற்கும் பெண்களின் நேசமும் வேறுபடுவது எதில்?
மனோரஞ்சனின் மகன் நவீன இளைய தலைமுறையின் நகலாய் ஒட்டாமல் சலிக்கிறான், வெட்டி வெட்டி பேசுகிறான், செல்பேசியோடு விடாது உறாவடுகிறான், அப்பா படம் ஓடும் திரைக்கு பின் காதலியோடு மோகிக்கிறான். பழைமை வாத அம்மா, மொக்கை படங்களில் நடிக்கும் அப்பா எவரோடும் அவனால் ஒட்ட முடியவில்லை.
மற்ற பையன்களுக்கு கிடைத்திராத பல்சுவை வசதிகளோடு வாழும் ஒரு பணக்கார வீட்டுப் பையன் தனது வீட்டு சேவகர்களைப் போல அப்பாவை நடத்த முடியாது. பாக்கெட் மணியும், பாக்கெட் கணினியும் தரும் கருவூலத்தின் கையையும், பூட்டையும் அறிவதற்கேற்ப அப்பாவோடு பெரிய முரண்பாடு வராது.
அப்பா மீது மகன்களுக்கு வரும் விடலைப்பருவ முரண் பொதுவானது என்றாலும் அதே பருவ ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளும் வாய்ப்பை பொருட்களாலும், பணத்தாலும் சாத்தியப்படுத்தும் வாய்ப்பு பொதுவானதல்ல.
கல்லூரி படித்து விட்டு என்ன செய்யப் போகிறாய் என்று கமல் கேட்கும் போது இப்படியெல்லாம் இதற்கு முன் கேட்டதில்லையே என்பதாக குத்துகிறான் மகன். ஊரறிந்த ராசாவுக்கு வீட்டுப் பையனின் கல்விக் கனவுகளை கேட்டறிய நேரமில்லை என்று ராசாக்களின் தியாகத்தை உணர்த்தும் போது வாயில்லா வெண்திரை இந்த அட்டூழியத்தை கண்டு அழுகிறது. (அதே காட்டுமிராண்டிகள்)
போகட்டும். மகனோ கொலம்பியாவிலோ, இலண்டனிலோ திரைக்கதை படிக்க விரும்புவதாகவும், அதன் பிறகு அப்பாவுக்கு ஒரு திரைக்கதை எழுதி அவர் யார் என்பதை இந்த அசட்டு கோடம்பாக்கத்திற்கு காட்ட வேண்டும் என்று கூறுகிறான் பாருங்கள், அப்போதும் அனாதையாகவே சிரிக்க வேண்டியிருக்கிறது.
புதுதில்லியின் பண்ணை வீடுகள், மும்பையின் நள்ளிரவு பார்ட்டிகளுக்கு இணையான மகாபலிபுரம் சினிமா விருந்துகளில் வாழ்க்கையை கழிக்கும் அந்த பையன், ஒரு அசட்டு காதலியை உரசிக் கொண்டு வேலை வெட்டி இல்லாமல் “நான் பெரிய அறிவாளியாக்கும்” என்று சிலிர்த்துக் கொள்ளும் போது வயிறு இருப்பவர்கள் அத்தனை பேருக்கும் வாந்தி வரவேண்டும்.
இது கூட பரவாயில்லை. மகனது தலையை கிரிக்கெட் பால் பாதுகாப்புடன் பிடித்துக் கொண்டு எட்டுத்திசையிலும் கமல் வாடி ஆடும் போது, வெளியே சுற்றுச்சுவரில் ரசிகர்கள் கைதட்டுகிறார்கள். “எப்பா இது என் பெர்சனலப்பா, விட்டுடுங்கோ” என்று கெஞ்சுகிறார் அவர். இப்படியெல்லாம் தியாகம் செய்ய வேண்டிய அவசியம் என்ன?
படத்திற்கு பத்திருபது கோடிகளை சன்மானமாக பெறும் சுதந்திரப் போராட்டத்திற்கு இத்தகைய தடியடி, சித்திரவதைகளையெல்லாம் அனுபவிக்க வேண்டியிருக்கிறது போலும். ஆடத்தெரியாத பரதக் கலைஞி, ஆட்டம் மோசம் என்றதும் பார்ப்பவர்களின் கண்களை பறித்தால்தான் அடுத்த முறை ஆடுவேன் என்று சொன்னால் ஒத்துக் கொள்வீர்களா?
திரையரங்கில் ஒத்துக் கொள்கிறார்கள்.
மேட்டுக்குடி என்றாலும் அங்கே தந்தை பாசமோ, புத்திர வாசமோ இருக்காதா, எதையெடுத்தாலும் வர்க்க பேதம் பார்க்கிறீர்களே என்று கொதிப்போர் எவரும் அத்தகைய மேட்டுக்குடியின் மன அமைப்பை கற்பனையிலும் தரிசித்திருக்க முடியாது. அது பணக்கட்டுக்களால் ஆளப்படும் உலகம். அங்கே பங்கு சந்தைதான் பந்த பாசத்தின் வீரியத்தினை அளவிடும்.
அப்பாவுடன் இருக்கும் அழகான ஆண்ட்ரியாவைப் பார்த்ததும் “வேற பொண்ணுக்காக அம்மாவ விட்டு விலக போறீங்களா?” என்று கேட்கிறான் மகன். காரில் கமலுடன் போகும் ஆண்ட்ரியாவுடன் டிரைவர், ஒரு மருத்துவர், இருக்கிறார்கள். மற்றவர்களின் ஆசையை நிறைவேற்றும் கமல் தனது கள்ளக்காதலியின் கடைசி ஆசை என்ன என்று கேட்கிறார்.
இங்கே இருக்கும் மூன்று ஆண்களும் இந்தக் (கள்ளக் காதல்) விவகாரத்தை எங்கேயும் வாய்திறக்க்கூடாது என்கிறார் ஆன்ட்ரியா. படுக்கையில் இருக்கும் ஊர்வசி, மனோரஞ்சனின் அதிகாரப்பூர்வமான மனைவி, கமலைப் பார்த்து கேட்கிறார். இளவயதில் அவர் காதலித்த யாமினியை இன்னும் காதலிக்கிறீர்களா என்று. அருகில் கள்ளக்காதலியாக நடிக்கும் ஆன்ட்ரியா மனோரஞ்சனின் மருத்துவர் இந்தக் கேள்வியால் திகைக்கிறார். கமல் திறமையாக பதிலளிக்கிறார். அதில் மூன்று பெண்களையும் அந்தந்த தருணங்களில் உண்மையாக காதலித்தாற் போல தொனிக்கிறது.
பாலச்சந்தரோ, பாலு மகேந்திரவோ தமது பிற்கால படங்களில் ரெண்டு பெண்டாட்டி கதைகளையும் அதில் கட்டுப்பெட்டி மனைவி மற்றும் நவநாகரீக காதலிகளிடம் சிக்கித் தவிக்கும் ஆண்களின் ‘அவஸ்தைகளை’ மாபெரும் உலக மற்றும் ஆழ்மனப் பிரச்சினை காவியங்களாக காட்டியிருப்பர். இந்த அளவிற்கு தைரியம் இல்லாத சுந்தர ராமசாமி அதை சக்கை வத்தல் சாப்பிடும் சித்தப்பா இன்ன பிற பிரச்சினைகளாக தனது கடைசி நாவலில் நீட்டியிருப்பார். இத்தகைய மேன்மக்களின் அதிக பட்ச ஆய்வுக்களனே இத்தகைய குடும்ப வாழ்க்கைதான். அதிலும் கட்டுப்பெட்டி சமூகமாக இருப்பதால் வரும் பாலியல் பிரச்சினைகள் இவர்களுக்கு பெரிய புதிராக இருக்கும். எனினும் இதே கட்டுப்பெட்டி சமூகத்தின் உண்மையான புதிரைப் பற்றி இவர்களுக்கு அ, ஆ கூடத் தெரியாது. ஒரு வகையில் தனக்கு கிடைக்காத சுகம் குறித்து யோசிக்கும் இப்படைப்பாளிகள் அதிலிருந்து உலகம் குறித்து ஒரு பார்வையையும் விளக்கத்தையும் கண்டறிகிறார்கள். அதுதான் அற்பவாதம்.
நிஜக் கதையின் உணர்ச்சிகளும், வண்ணங்களும், நிழல் கதையில் மாறுபட்டிருக்க வேண்டும் என்பதைத் தாண்டி இரு கதைகளுக்கு என்ன தேவை?
கற்பின் மறு பக்கம் விபச்சாரம் என்பதை யாரும் ஏற்க மாட்டார்கள். ஆனால் கற்பின் மேன்மையை நிறுவும் போர்களுக்கு ஏற்ப க.காதலின் இளைப்பாறுதல் நடக்கவே செய்யும். இத்தகைய ஒழுக்க வாதம் என்பதே சொத்துக்களைக் காப்பாற்றி ரத்த வாரிசு முறையில் கைமாற்றி கொடுக்கும் மறுக்க முடியாத சடங்கினோடு தொடர்புடையது.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்பவர் நினைத்ததை நினைத்தபடி வாழ்ந்தால்தான் சூப்பர் ஸ்டார். அவரது பெருமை, மரியாதை, செல்வாக்கு அனைத்தும் ரசிகர்களிடையே அவருக்கிருக்கும் மதிப்பை வைத்து அளக்கப்படுகிறது. எனவே அவர் கள்ளகாதலாக அல்ல, பகிரங்கமாகவே பெண்களோடு உறவு வைத்துக் கொள்வதைக் கூட அவரது செயலரோ, தயாரிப்பாளரோ, மனைவியோ, கார் ஓட்டுநரோ, ஊடக நண்பர்களோ சட்டை செய்யப் போவதில்லை. இது தெரிந்த மனோரஞ்சன் தனது வாழ்வில் வந்த மூன்று பெண்கள் குறித்து கலங்குவது, தயங்குவது, துடிப்பது, தியாகியாக வெம்புவது…………அய்யோகோ, தாங்க முடியவில்லை சாமிகளா!
இன்றைக்கு போயஸ் தோட்டத்தில் நிரந்தரமாயும், மகாபலிபுரம் பண்ணை வீட்டில் ஓய்வாகவும் வாழும் ரஜினி காந்த் 40, 50 வருடங்களுக்கு முந்தைய நடத்துநர் வாழ்வில் ஒரு ஆசாரப் பார்ப்பனருக்கு ஐந்து காசு சில்லறை கொடுக்க மறந்திட்டேன், ஆசை ஆசையாக பார்த்த துளு மொழி பெண்ணை தவிர்த்திட்டேன் என்று இப்போ ஃபீல் பண்ண முடியுமா? முடியாது என்பதன் வலிமை காலத்திலோ அல்லது மறதியிலோ இல்லை. இன்றைக்கிருக்கும் அவரது பொருளியல், நட்சத்திர சாம்ராஜ்ஜியத்தில் மேற்கண்ட சான்றுகளுக்கு எங்கேயும் இடமில்லை.
மனோரஞ்சனை ஏதோ கொஞ்சம் யதார்த்த படங்களாக செதுக்கி ஆளாக்கிய பாலச்சந்தரிடமிருந்து பறித்தெடுத்து, சகலகலா வல்லவன் எனும் மசலா படமாக ஆரம்பித்து வைத்து மாபெரும் நட்சத்திரமாக ஆக்கி மகளையும் கட்டிக் கொடுத்து, தனது கம்பெனியின் நிரந்த ஸ்டாராக பராமரிக்கும் கே.விஸ்வநாதனை கமல் எப்போதாவது வெறுத்திருக்க முடியுமா? இல்லை சகலகலா வல்லவன் தந்த வாழ்வை அவர் தூக்கி எறியத்தான் முடியுமா?
படத்திற்கு பத்திருபது கோடி பெறுவதற்காக ஒரு நட்சத்திர நாயகன் எப்படியெல்லாம் தியாகம் செய்ய வேண்டியிருக்கிறது?
25 வயதில் அவர் காதலித்த யாமினி எனும் பெண்ணின் உண்மைக்காதலெல்லாம் படத்தில் காட்டப்படுவது போன்று எந்த நட்சத்திர வாழ்விலும் இருக்கவே முடியாது. யாமினிக்கு அவர் எழுதிய கடிதம், அதை மறைத்த மாமனார் – செட்டியார் மேனேஜர், அறிந்த மனைவி, அதை இன்று படிக்க கேட்டு உருகும் மகன் – மகள், இதையெல்லாம் தியாகமாக நினைத்து கலர் மேக்கப்பை கலைத்து கருணையை காட்டும் கமல்…….ஐயகோ நம்மிடம் திரையை என்கவுண்டர் செய்ய ஒரு துப்பாக்கி இல்லையே!
எதற்கு இழுக்க வேண்டும்? “உத்தம வில்லன்” திரைப்படத்தில் அனுதாபத்த்துடன் காட்டப்படும் மனோரஞ்சன் எனும் நட்சத்திர நாயகனது வாழ்வியல் கதைகள், காதல்கள், கருணைகள், கடமைகள் அனைத்தும் அடி வயிற்றை பிய்த்து எரியும் வலிமையுடன் கூடிய ரசனை நிரம்பிய ஆழ் சுவை நகையாக வெடி போல சிரிக்க வைக்கப்பட்டிருக்க வேண்டும். அதை விடுத்து இந்த கேலிச்சித்திரத்தை போர் ஓவியமாக காட்டும் போதுதான் உணர்ச்சிகள் அவமதிக்கப்படுகின்றன.
ஒரு வகையில் “சிட்டி லைட்சில்” சார்லி சாப்ளின் கேலி செய்யும் மேட்டுக்குடியின் உலகம், அமெரிக்க வாழ்க்கையின் போலித்தனத்தை உணர்த்தும் “அமெரிக்கன் பியூட்டி”, மேட்டுக்குடியின் இருண்ட உலகை காட்டும் “பேஜ் த்ரி” போன்றவைகளோடு சேர வேண்டிய கதை இது. இருப்பினும் இங்கே போலித்தனங்களும், கேலி செய்யப்பட வேண்டியவைகளும், இருட்டு வக்கிரங்களும் காவியமாக, தியாகமாக திணிக்கப்படுகின்றன. அடிமைத்தனத்தில் ஊறிய ரசிக மனோபாவம் அதை ஏற்றுக் கொண்டு அழுகிறது.
மூப்பனார் சைக்கிள் ஓட்டினார், ராகுல் காந்தி மண் சுமந்தார், மோடி ரயிலில் உட்கார இடம் கொடுத்தார், ரஜினி தியானம் செய்தார் என்பவையெல்லாம் இந்த உலகில் சாகா வரம் பெற்ற சாதனைகளாகவும், உணர்ச்சிகளாகவும் உணரப்படும் நாட்டில், கமலின் இந்த ‘தியாகங்களா’ ஏற்கப்படாமல் போய்விடும்?
மனோரஞ்சனின் பாசப் போராட்டத்தோடு இழுபடும் ரசிகர்கள், கூத்துக் கதையில் நெளிகிறார்கள். மெயின் ஸ்டோரியின் இணையாகவும், முரணாகவும், தத்துவ விளக்கமாகவும் நினைத்து எடுக்கப்பட்ட இக்கதையில் வரும் நகைச்சுவை பெரும்பாலும் “கிரேசி மோகன், எஸ்.வி.சேகர் மற்றும் கமலின் முந்தைய நகைச்சுவைப் படங்களின் எரிச்சலூட்டும் அறுவையாக” உள்ளது என ஏ சென்டர் எகிறுகிறது.
பிரகலாதன் கதையை மாற்றி யோசித்தால் மட்டும் அது வரலாற்றின் மறுவாசிப்பாக மாறிவிடாது. மனோரஞ்சனின் போலித்தனத்தை, அற்பத்தனத்தை அந்தக் காலத்தில் வாழும் ஒரு யதார்த்தமான மனிதன் அதே போன்றோதொரு சூழலில் எப்படி எதிர் கொள்கிறான் என்று யோசித்திருந்தால் நல்லதொரு முடிச்சும், விரிவும், ஆழமும் கிடைத்திருக்கும். எதுகைக்கு மோனையாக அதில் சீரியஸ் இதில் காமடி என்று மட்டும் இப்படைப்பாளிகள் யோசித்திருக்கிறார்கள். மேலதிகமாக நட்சத்திர கமலின் பாசப் போராட்டத்தை சுதந்திரப் போராட்டமாக உணர்ந்தவர்கள், அதன் முரண்பாடாய் வரும் உள் கதையை மட்டும் எப்படி சரியாக கண்டுபிடிக்க முடியும்?
எனினும் மனோரஞ்சனின் போலித்தனத்தை ஏற்று, கூத்துக் கதையை மறுக்கும் ஏ சென்டரை போன்று பி,சி பார்க்கவில்லை. முன்னதை அவர்கள் ஆண்டானின் சோகமாகவம், பின்னதை அடிமையின் வெற்றியாகவும் – கொஞ்சம் நகைச்சுவையாகவும் – ரசிக்கிறார்கள்.
இறுதியில் இந்த படத்திற்காக என்னவெல்லாமோ மெனக்கெட்டார்கள் என்ற விவரங்களெல்லாம் நட்சத்திர நாயகனின் ‘சுதந்திரப் போராட்டத்தின்’ அற்பத்தனத்தில் அடித்துச் செல்லப்படுகிறது. ஆமென்!
⊕⊕⊕⊕⊕
புதுசு என்ன? இது நுகர்வுக் கலாச்சாரத்தின் புனித முழக்கம் மட்டுமல்ல; எப்படியாவது ரசிகர்களை திரையரங்கிற்கு கொண்டு வர பிரயத்தனம் செய்யும் தமிழ் சினிமாவின் விருப்பமும்தான்.
அலங்காரமே கிரியேட்டிவிட்டி என்று ஆகிவிட்ட கலை சூழலில் கமல ஹாசன் ஒரு முன்னோடி! அபூர்வ சகோதரர்கள், அவ்வை சண்முகி, தசாவாதாரம் அனைத்திலும் நீங்கள் முன்பு பார்த்திராத ஆனால் எளிதில் பார்க்க கூடிய உருவ பேதங்கள்!
கதையால் மெருக்கேற்றப்படத கலையால் வித்தைகளால் எதையும் சாதிக்க முடியாது
பத்து வேடங்களில் நடித்திருக்கும் கமலை ரிலீஸ் செய்ய சென்னை வந்த ஜாக்கி சான், “இங்கே நடிகர்களுக்கு தட்டுப்பாடா?, இவரே பத்து வேடங்களில் நடித்து சிரமப்படுகிறாரே?” என்று கேட்டதாக ஒரு செய்தியுண்டு. தசாவதானி போட்டியில் வென்றால்தான் ஊரை ஆளும் அரசர்களின் கருணையை தமிழ்ப்புலவர்கள் காசாக கையிலேந்த முடியும் என்ற நிலைமை ஜாக்கிக்கு எப்படித் தெரியும்?
அப்படித்தான் இன்றைய தமிழ் சினிமா படைப்பாளிகளும் காக்காயில் ஆரம்பித்து சொக்காயில் முடியும் வெண்பாவை பாடிக் கொண்டே எத்தனை பர்கர்களை உண்டோம் என்று எண்ணிக் கொண்டே, எத்தனை மூச்சு விட்டோம் என ஒரு தருணத்தில் அனைத்து வித்தைகளையும் காட்ட மெனக்கெடுகிறார்கள். இவையெல்லாம் இப்போது ஒரு ஸ்மார்ட் போனிலேயே மலிவாக கிடைக்கும் கொசுறுகள் என்றான பிறகு படைப்பாளிகளின் பாடு திண்டாட்டமாகி விடுகிறது.
உத்தம வில்லனில் கலைஞானி மிகவும் பிரயத்தனத்தோடு அந்த திண்டாட்டத்தை கலையாக்க பாடுபட்டிருக்கிறார். நவரசங்கள், நான்கு அடிப்படை வண்ணங்கள் உருவாக்கும் எண்ணிறந்த வண்ணச் சேர்க்கைகள், நவீன சினிமாவின் ஆஃபர்களான கவர்ச்சி, வேகம், பிரம்மாண்டம், நாட்டுப்புறக் கலையில் நாட்டியம், ஹங்கேரியில் சிம்போனி இசை எதுவும் மிச்சம் வைக்கவில்லை.
இருந்தாலும் ஒரு கதை அதன் சமூகவியல், வாழ்வியல், முரண்பாடுகளோடு மோதி மெருகேற்றப்படாத வரை எந்த கலைஞானியும் காட்சிக் கலையின் விற்பன்னராக முடியாது.
__________________
முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவ மக்களுக்கு மட்டுமே எதிரானது ஆர்.எஸ்.எஸ் என்று கருதுவது எவ்வளவு பிழையானது!
டில்லியின் ராஜேந்திர நகர் பகுதியின் தலித் குடியிருப்புக்கு அருகில் அமைந்திருக்கிறது ஆர்.எஸ்.எஸ் மாவட்ட அலுவலகமான ஹெட்கேவர் பவன். கடந்த ஏப்ரல் 23-ம் தேதி அதன் எதிர்ப்புறத்தில் இருக்கும் வால்மீகி சாதியைச் சேர்ந்த தலித் மக்கள் வாழும் குடியிருப்பில் சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தனர். அவர்கள் விளையாடிய பந்து குடியிருப்பை கடந்து ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தின் சுற்றுசுவருக்குள் போய் விழுந்தது. பந்தை எடுக்க ஒரு சிறுவன் சென்றுள்ளான். அச்சிறுவனை அடித்து, உதைத்து அனுப்பியுள்ளனர் ஆர்.எஸ்.எஸ் ‘வீரர்கள்’.
என்னதான், இந்து ஒற்றுமை பேசினாலும், ஆர்.எஸ்.எஸ் என்ற அமைப்புக்கு இயல்பாக இருக்கும் ஆதிக்க சாதி உணர்வு இங்கு வெளிப்பட்டிருக்கிறது.
நொண்டிக் கொண்டு, அழுதபடியே வீடு திரும்பிய மகனின் நிலையைக் கண்டு தன் தாய் கமலா தேவியுடன், ஹெட்கேவர் பவனுக்கு விசாரிக்கப் போயிருக்கிறார் சிறுவனின் தந்தை ராஜீவ்குமார்.
நாய்களை போன்று பாய்ந்து லத்த்திகளாலும், கம்புகளாலும் தாயையும், மகனையும் தாக்கியுள்ளனர் ஆர்.எஸ்.எஸ் காலிகள். அதற்கு மேலும் வெறி தணியாமல் தலித் மக்களுக்கு பாடம் கற்பிக்க முடிவு செய்தது ஆர்.எஸ்.எஸ். சுமார் 40-50 ஆர்.எஸ்.எஸ் ‘வீரர்கள்’ திரண்டு தங்கள் அணிவகுப்புகளில் ஏந்தி செல்லும் தடிக்கம்புகளுடன் தலித் மக்கள் குடியிருப்புக்குள் புகுந்து கண்ணில் பட்டவர்களை எல்லாம் தாக்கியதில் பலர் காயமடைந்தனர். ராஜீவ்குமாரின் கால்களிலும், கைகளிலும் எலும்பு முறிவுகள் ஏற்பட்டன. கமலா தேவி உட்பட 10-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்திருக்கின்றனர். அனைவரும் சோன்பட்டில் இருக்கும் நிதான் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப் பெற்றனர்.
ராஜேந்திர நகர் கடை ஒன்றில் வைக்கப்பட்ட கண்காணிப்பு காமிராவில் ஆர்.எஸ்.எஸ் காலிகள் சாரை சாரையாக தலித் மக்கள் குடியிருப்புக்குள் தடிக்கம்புகளுடன் புகுவதும், ஏழை தலித் மக்களை தாக்குவதும் பதிவாகியுள்ளது. எனினும், அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிய காவல்துறை மறுத்து விட்டது. மாறாக, நிராதரவான பாதிக்கப்பட்ட மக்களை மிரட்டி, வற்புறுத்தி ஆர்.எஸ்.எஸுடன் ஒரு சமரச ஒப்பந்தத்தில் கையெழுத்திட வைத்து பிரச்சினையை ‘முடித்து’ வைத்துள்ளது போலீஸ்.
‘கைது நடவடிக்கையில் இறங்குவதற்கு முன்னரே சம்பந்தபட்ட இரண்டு தரப்பினரும் சமரச ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு விட்டார்கள்’ என்ற போலீஸின் கூற்றை மறுக்கிறார்கள் தலித் மக்கள். சமரச ஒப்பந்தம் எழுதப்பட்டு, கையெழுத்தானதே டில்லியின் 15-வது வட்ட காவல் நிலையத்தில் தான் என்கிறார்கள் அவர்கள்.
மேலும், ஆர்.எஸ்.எஸுடனான சமரச ஒப்பந்தத்தை நிராகரிக்கிறார்கள் தலித் மக்கள். சமரச ஒப்பந்தத்தின் மூன்று பகுதிகளும் பொய்யானவை. தலித் மக்கள் மீது ஆர்.எஸ்.எஸ் நடத்திய தாக்குதலை மறைத்து விட்டு அதனை இரு பிரிவினருக்கும் (ராஜேந்திர நகர் மக்கள் & ஆர்.எஸ்.எஸ்) இடையேயான மோதல் (clash) என்று எழுதியிருப்பது சமரச ஒப்பந்தத்தின் முதல் மோசடி. ‘மோதலுக்கான’ காரணமும் ஒப்பந்தத்தில் சொல்லப்படவில்லை. தாக்கப்பட்டவர்கள் தலித் மக்கள் என்பதும், தாக்குதல் நடத்தப்பட்டது ஒரு தலித் குடியிருப்பு மீது என்ற உண்மையும் சமரச ஒப்பந்தத்தில் கவனமாக தணிக்கை செய்யப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸின் தலித் மக்கள் விரோத செயல்பாட்டை வெளியுலகம் தெரிந்து கொள்ளாமல் அமுக்கும் மோசடிக்கு போலீஸ் துணை போவதன் சாட்சி தான் இது.
மேலும், ‘இந்தப் பிரச்சினை தொடர்பாக சட்டபூர்வ நடவடிக்கைக்கு இரண்டு தரப்பும் முயலக் கூடாது’ என்றும் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது. இதன்படி பாதிக்கப்பட்ட தலித் தரப்பு சட்டப்பூர்வ போராட்டம் கூட நடத்தக் கூடாது.
டெல்லி, ஹரியானா எல்லைக்கு மிக அருகில் இருக்கும் ராஜேந்திர நகரில் நடந்த இந்த வன்முறை தாக்குதல் ஊடகங்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆனால், “ராஜேந்திர நகர் மக்கள் மத்தியில் அது உருவாக்கிய பயமும், கையாலாகத்தனமும் யாராலும் தவற விட முடியாதது” என்கிறது, இது குறித்து செய்தி வெளியிட்டிருக்கும் scroll.in இணைய தளம்.
வன்முறையை ஏவி விட்ட பிறகு பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு நீதி கிடைத்து விடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்துள்ளது, ஆர்.எஸ்.எஸ். முஸ்லிம்கள், கிறித்தவர்களுக்கு எதிரான வன்முறைகளின் முடிவில் இந்து பெருமையை (Hindu Pride) விளம்பரப்படுத்தும் ஆர்.எஸ்.எஸ், தலித் மக்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டத்தை அடக்கி வாசிக்கிறது.
டில்லியின் திரிலோக்புரியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையின் போது தலித் மக்களை பயன்படுத்தி கொண்டது ஆர்.எஸ்.எஸ். தற்போது தலித் மக்களுக்கு எதிராக நேரடியான தாக்குதலில் ஈடுபட்டுள்ளதை புரிந்து கொள்வது எப்படி?
‘சாதி, மதக்கலவரங்கள் ஏற்படும் காலங்களை தவிர மற்ற காலங்களில் தமக்குள் தொடர்பு உண்டு என்கிற உணர்வே இந்து சாதிகளுக்குள் இருப்பதில்லை,’’ என்கிறார், பாபாசாகேப் அம்பேத்கர். ஆர்.எஸ்.எஸ்-சுக்கு இது அப்படியே பொருந்துகிறது. முஸ்லிம்கள் மற்றும் கிறித்தவர்களுக்கு எதிரான வன்முறையின் போது தலித் மற்றும் சூத்திர சாதிகளை சேர்ந்த மக்களை பயன்படுத்தி விட்டு, அவர்கள் உரிமைகள் கோரும் நேரத்தில் கைவிடுவதும், ஒடுக்குவதும், சாதி சட்டகத்துக்குள் அடைத்து பூட்டுவதும் தான் ஆர்.எஸ்.எஸின் செயல்பாடு.
அதனால்தான் வட இந்தியாவில் குறிப்பாக இந்தி பேசும் மாநிலங்களில் ஒடுக்கப்பட்ட சாதி மக்களின் இட ஒதுக்கீட்டை இவர்கள் எதிர்க்கிறார்கள்.
சிறுபான்மை மதப்பிரிவு மக்களுக்கு எதிரான கலவரங்களுக்காக மட்டுமே ஆர்.எஸ்.எஸ் கட்டியெழுப்பும் போலியான இந்து ஒற்றுமையை தகர்த்து மதங்களையும், சாதிகளையும் கடந்த வர்க்க ஒற்றுமையை கட்டியெழுப்பாமல் உலகம் கண்டிராத மிகமோசமான ஃபாசிஸ அமைப்பான ஆர்.எஸ்.எஸை வீழ்த்துவது எங்ஙனம்?
செய்தி : “தமிழகத்தின் சீரழிவை தொடங்கி வைத்ததே தி.மு.க.-தான்” – அன்புமணி
அட ..சங்கி..மங்கி .! திமுக ,அதிமுக வோட சேர்ந்து நீங்க கும்மாளம் போட்டதே இல்லையா ? ..நீ என்னதான் மாறு வேசத்துல வந்தாலும், நீ யார்ன்னு உன் தல மேல உள்ள கொண்ட காட்டி கொடுத்துடும் !
வீட்டினுள் நுழைந்து போராட்டம் நடத்திய பின்பு, “நாளை கண்டிப்பாக தொழிலாளர் நலத் துறை அலுவலகம் வருகிறேன். போராட்டத்தை நிறுத்திக் கொள்ளுங்கள்” எனக் கூறிய ஸ்ரீப்ரியா மறுநாள் வழக்கம் போல தனது இரட்டை நாக்கு வேலையை நிரூபணம் செய்வது போல வரவில்லை. மறுபடியும் வாய்தா போட்டு அந்த வாய்தாவுக்கும் வராமல் அவமதிப்பு செய்கிறார். இப்படி சட்ட விரோத நடவடிக்கைகளில் மிக இயல்பாக நடந்து வருகிறார்.
வேலாண்டிபாளையம் முழுவதும் பெஸ்ட் கம்பெனியின் பெயர் இருக்கும் இடங்களில் பிரச்சாரம் செய்து ஸ்ரீப்ரியாவின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியும் அசராமல் இருக்கிறார். ஆனாலும், “நாங்கள் விடப்போவதில்லை” என முடிவெடுத்து 06-05-2015 அன்று காலை 10:30 மணிக்கு ஸ்ரீப்ரியாவின் வீட்டின் முன்பு முற்றுகைப் போராட்டம் என முடிவெடுத்து சென்று குடும்பமாக அமர்ந்தார்கள், தொழிலாளர்கள்.
ஸ்ரீப்ரியாவின் வீட்டின் முன்பு முற்றுகைப் போராட்டம்
வீட்டினுள் இருந்த ஸ்ரீப்ரியா வெளியே வரவில்லை. ஆனால், அடுத்த ஐந்து நிமிடங்களில் சாய்பாபா காலனி காவல்துறை அங்கு ஆஜராகி விட்டது; தொழிலாளர்களை வீடியோ எடுக்க அமர்த்தப்பட்டிருக்கும் கைக்கூலி வீடியோகிராபரும் வந்துவிட்டான்.
உள்ளே வெளியே விளையாடிய போலீஸ்.
தனது தந்தை முதல் தான் வரை அனுபவிக்கும் சுகபோகத்திலிருந்து உண்டு கொண்டிருக்கும் சோறு வரை உழைத்து உருவாக்கிக் கொடுத்த தொழிலாளிகளிடம், தான் குடும்பத்தோடு குளிரூட்டப்பட்ட அறையில் இருக்கையில் சாலையில் குடும்பத்தோடு அமர்ந்திருக்கும் தொழிலாளிகளிடம், தனது வீட்டிலிருந்து 100 அடி தூரத்தில் அமர்ந்திருக்கும் தொழிலாளிகளிடம் பேச்சு வார்த்தை நடத்த 3 கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கும் காவல் துறையை கூப்பிடும் அளவு தெனாவெட்டில் இருக்கிறார் ஸ்ரீப்ரியா.
சாயம் போன சீருடைகளுடன் தவணை முறையில் வாகனங்களுக்கு கடன் கட்டிக் கொண்டு எங்கள் குழந்தைகளை படிக்க வைக்க கடன் வாங்கிக் கொண்டிருக்கும் தொழிலாளர்கள் போராட்டம்.
ஸ்ரீப்ரியாவின் தகப்பனார் காலஞ்சென்ற கௌரி சங்கர் 10×10 ரூமில் சின்ன அலுவலகத்துடன் இந்த கம்பெனியை துவக்கியது முதல், 30 வருடங்களாக உழைத்து உழைத்து இத்துணை யூனிட்டுகளை உருவாக்கி கொடுத்தவர்கள் நாங்கள். நாங்கள் இன்னமும் சாயம் போன சீருடைகளுடன் தவணை முறையில் வாகனங்களுக்கு கடன் கட்டிக் கொண்டு எங்கள் குழந்தைகளை படிக்க வைக்க கடன் வாங்கிக் கொண்டிருக்கும் பொழுதும் இவ்வளவு பொறுமையாக போராடிக் கொண்டிருக்கிறோமே..! எங்கள் மனிதாபிமானத்தை இங்கு காணலாம்.
ஆனால், இப்படி சுரண்டிக் கொழுத்த உங்கள் தகப்பனாரும், அவரது வழித்தோன்றிய நீங்களும் நேரடியாக வெளியே வராமல் குறைந்த பட்சம் எங்களை நேரடியாக எதிர் கொள்ள தைரியம் இல்லாத கோழையாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை.
காவல் துறை வழக்கம் போல தமது “நாங்கள் சட்ட ஒழுங்கை நிலை நாட்டுவதற்காகவே பிறப்பெடுத்தவர்கள்” என்ற நிலையை எடுத்தது. குடும்பத்தோடு கைதாகவும் தயாராக இருக்கிறோம் என்பதை அறிந்தவுடன் பின்வாங்கி பேச்சு வார்த்தை என்ற நயவஞ்சக நாடகத்துக்கு தயாரானது. பின்னர் ஒரு அரை மணி நேரம் உள்ளே வெளியே விளையாடி பின்னர்,
பின்னர் மழை பெய்ய துவங்கியது தொழிலாளிகள் கொட்டும் மழையிலும் தமது முற்றுகையை தொடர்ந்தனர்.
போலீஸ் : “மேடம் நாளைக்கு கண்டிப்பா லேபர் கோர்ட்ல ஃபைல் பண்றேன்னு சொல்லிருக்காங்க…?”
நமது தோழர் : “சார், இந்த வசனங்களைத்தான் ஏற்கெனவே அவங்க பல முறை சொன்னாங்க.”
போலீஸ் : “இல்லைங்க, இந்த முறை கண்டிப்பாக செய்றேன்னு சொல்றாங்க. அப்டி அவங்க செய்யலைனா நீங்க மேற்கொண்டு என்ன செய்யணுமோ செய்யுங்க”
நமது தோழர் : “சரிங்க சார்., நாங்க இப்ப அவங்க கூட பேச முடியாத அளவுக்கு தொலைவில இருக்கோம் பாருங்க., அதனால அவங்களால பேச முடியாது. அவங்க நாளைக்கே பேசட்டும். அது வரை நாங்க குடும்பத்தோடு இங்கயே இருக்கோம்.”
தொழிலாளிகளின் மனைவிமார்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாத காவல் துறை ஒன்றும் பேசாமல் அமைதியாக நின்று விட்டனர்.
அடுத்து என்ன பேசுவது, எப்படி ஸ்ரீப்ரியாவின் செயலை நியாயப்படுத்துவது என காவல் துறையும் சற்று குழம்பியது. பின்னர், “சரி நீங்க போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லாமல் பண்ணுங்க” எனக் கூறிவிட்டு ஓரமாக சென்று விட்டனர்.
அதன் பின்னர், தந்தி டிவி மற்றும் லோட்டஸ் போன்ற தொலைக்காட்சிகளில் இருந்து பேட்டி எடுக்க வர, பெஸ்ட் கம்பெனி கைக்கூலி போட்டோ கிராபர் பத்திரிகையாளர் களையும் சேர்த்து வீடியோ எடுக்க அவர்கள் கடுப்பாகி அந்த நபரை தடுக்க முயன்றனர்.
“கமிஷனர் ஆர்டர் இருக்கு. அது இருக்கு இது இருக்கு” என சவடால்
அவன், “கமிஷனர் ஆர்டர் இருக்கு. அது இருக்கு இது இருக்கு” என சவடால் விட்டு, பின்னர் அடங்கி மன்னிப்பு கேட்டு விட்டு அந்த பதிவுகளை அழித்து விட்டு சென்று அமைதியாக அமர்ந்து விட்டான்.
பின்னர் மழை பெய்ய துவங்கியது தொழிலாளிகள் கொட்டும் மழையிலும் தமது முற்றுகையை தொடர்ந்தனர்.
“மே நாள் என்பது கொண்டாட்ட நாளல்ல; மாறாக தொழிலாளி வர்க்கம் தன் அரசியல் அதிகாரத்தை நிறுவ வேண்டிய நாள்” என்று அறிவித்து பூந்தமல்லியில் புதிய ஜனநாயக் தொழிலாளி முன்னணி மற்றும் அதன் தோழமை அமைப்புகள் மே நாள் பேரணி ஆர்ப்பாட்டத்தை நடத்தின.
சென்னையைச் சுற்றி இருக்கும் பன்னாட்டு பகாசுரக் கம்பெனிகளால் உறிஞ்சி எடுக்கப்பட்டு சக்கைகளான தொழிலாளிகளான கொத்தடிமைகளின் கூடாரமாக விளங்கும் பூந்தமல்லியில் மக்கள் அதிகாரத்துக்கான அறைகூவல்.
சென்னையின் நுழைவாயில் பூந்தமல்லி என்பது அந்தக் காலம். இன்று சென்னையைச் சுற்றி இருக்கும் பன்னாட்டு பகாசுரக் கம்பெனிகளால் உறிஞ்சி எடுக்கப்பட்டு சக்கைகளான தொழிலாளிகளான கொத்தடிமைகளின் கூடாரம். ஆம், எவ்வித உரிமையுமின்றி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பூந்தமல்லியில் அடைந்து கிடக்கிறார்கள்.
தங்களை தொழிலாளியாகக் கூட உணர முடியாத அளவுக்கு எந்திரமாக, நிலையற்றவர்களாக மாற்றப்பட்டு இருக்கிறார்கள். 1000 பேர் வேலை செய்யக்கூடிய ஒரு நிறுவனத்தில் 33 பேர்தான் நிரந்தரத் தொழிலாளர்கள். நிரந்தரம் செய்து விட்டால் அவர்கள் “மேனேஜ்மெண்ட் ஸ்டாஃப்”. எப்படியிருந்தாலும் சட்டப்படி சங்கம் வைக்க முடியாது.
பாட்டாளி வர்க்க மார்க்சிய லெனினிய அரசியலே, அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான ஆயுதம் என்பதை தொழிலாளிக்கு மட்டுமல்ல, உழைக்கும் மக்கள் அனைவருக்கும் உணர்த்துவதற்காக அணிதிரண்ட முன்னணிப்படை.
கான்ட்ராக்ட் தொழிலாளர்களின் பணி எப்போது நிரந்தரம் ஆகும் என்பது யாருக்குமே தெரியாது. யாரும் ஒரு கம்பெனியில் நிரந்தரமாக வேலை செய்வதில்லை. எப்போது வேண்டுமானாலும் பணி நீக்கம் செய்யப்படலாம். எதுவும் நிரந்தரமில்லை, உயிர் உட்பட.
ஒரு தொழிலாளியின் அனுபவத்தைக் கேளுங்கள். தொழிலாளி வர்க்கத்தின் இன்றைய நிலைமை எளிதாகப் புரியும்.
“வெல்டிங் அடிக்கும் போது நெருப்பு பொறி பறந்து வரும். அது சட்டைக்குள் போய் அப்படியே ஜட்டிக்குள் போகும். அப்போது அதை தடுக்கவும் முடியாது. குறித்த நேரத்துக்குள் இத்தனை பீஸ் வெல்டிங் செய்யணுமே. மாசத்துக்கு ரெண்டு ஜட்டி , பனியன் வாங்கணும். என்னதான் கேட்டாலும், ‘பாதுகாப்பு கவசம் கொடுக்க முடியாது வேண்டுமென்றால் மாசம் ஒரு டீ சர்ட் எடுத்து தரேன்’னு நிர்வாகம் சொல்லுது. எங்களை வாட்டி வதைக்குறதை நினைக்கும் போது அந்த முதலாளி மண்டையிலதான் வெல்டிங் வைக்கணும்னு தோணும்”
இப்படி லே ஆஃப், அடக்குமுறை என பல்வேறு இன்னல்களுக்கு ஆளான தொழிலாளி வர்க்கத்தை திரட்டி அதன் வலிமையை வைத்து பிச்சை எடுப்பதைத்தான் மற்ற சங்கங்கள் செய்து வருகின்றன.
நிலைகுலைந்து, இற்றுப்போய் எதிர் நிலை சக்தியாக மாறிவிட்ட, அரசுக்கு இதோ வீறு கொண்டு எழுகிறது பாட்டாளி வர்க்கம்.
“ஹூண்டாயை நான் கொண்டு வந்தேன், நோக்கியாவுக்கு நான் ரூட் போட்டேன்” என்று மார்தட்டும் ஜெயாவும் கருணாநிதியும் மே நாளுக்கு வாழ்த்து சொல்லியே தொழிலாளி வர்க்க்த்தை அடிமைப்படுத்திக்கொண்டு இருக்க, போலிகளோ தொழிலாளர்களை ஆளும் வர்க்கத்திடம் அடகு வைத்து மே நாளை சடங்காக மாற்றி இருக்க, வெடிக்கக் காத்திருக்கும் எரிமலையாய் குமுறிக்கிடக்கும் தொழிலாளி வர்க்கத்திற்கு தலைமை தாங்கி, பாட்டாளி வர்க்க மார்க்சிய லெனினிய அரசியலே, அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான ஆயுதம் என்பதை தொழிலாளிக்கு மட்டுமல்ல, உழைக்கும் மக்கள் அனைவருக்கும் உணர்த்தி
நிலைகுலைந்து, இற்றுப்போய் எதிர் நிலை சக்தியாக மாறிவிட்ட, அரசுக்கு இதோ வீறு கொண்டு எழுகிறது பாட்டாளி வர்க்கம் என்பதை அறிவிக்கும் விதமாக புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பில் பூந்தமல்லியில் மாபெரும் பேரணியும் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றன.
பூவிருந்தவல்லிக்கு செல்லும் வழியில் மே நாளை சினிமா பாட்டு போட்டு, போர்டுக்கு பூசை போட்டு சி.ஐ.டி.யு கொண்டாடிக் கொண்டிருந்தது. இன்னொரு இடத்தில் அ.தி.மு.க எம்.எல்.ஏ போர்டு திறந்து மிட்டாய் கொடுத்துக் கொண்டிருந்தார்.
தூரத்தில் பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருந்தது செங்கொடி, 150 ஆண்டுகளுக்கு முன்னால் குமுறிக்கிடந்த தொழிலாளி வர்க்கத்துக்கு நம்பிக்கை ஒளி வீசிய அதே கொடி பூவிருந்தவல்லியில் பறை சாற்றிய செய்தி “மே1 கொண்டாட்ட நாள் அல்ல; போராட்ட நாள்“.
வாழ்க்கையில் துளியும் பாதுகாப்பே இல்லாத தொழிலாளிக்கு செங்கொடிதான் பாதுகாப்பு என்பதை உணர்த்தும் விதமாக காலை 9 மணி முதலே சாரை சாரையாக 30-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் செங்கொடியின் பின்னே அணிவகுத்து நின்றனர்.
வாழ்க்கையில் துளியும் பாதுகாப்பே இல்லாத தொழிலாளிக்கு செங்கொடிதான் பாதுகாப்பு.
அவர்கள் மட்டுமல்ல, செங்கொடி ஏந்திய தொழிலாளி வர்க்கமே உழைக்கும் மக்களின் விடுதலையை சாதிக்கும் என்பதை அறிவிக்கும் விதமாக மாணவர்களும் மாணவிகளும் பெண்களுமாக பதாகைகளும் செங்கொடிகளுமாக களத்தில் நின்றார்கள்.
பதாகைகளும், செங்கொடிகளும்
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
30-க்கு 4 அடி அளவில் “ஆளும் அருகதையற்ற அரசுக் கட்டமைப்பை வீழ்த்துவோம்! மக்கள் அதிகாரத்தை நிறுவுவோம்” என்ற பதாகை ஆளும் வர்க்கத்தின் மீதான போருக்கான கட்டியம் கூறும் விதமாக இருந்தது.
ஆளும் வர்க்கத்தின் மீதான போருக்கான கட்டியம்.
சரியாக 10 மணிக்கு, பெண்கள் குழந்தைகள் முன்னே நிற்க, மாணவர்கள், நம்பிக்கையின் ஊற்றுக்களாக, திரும்பிய பக்கமெல்லாம் இளந்தொழிலாளர்கள் விண்ணதிர முழங்கினார்கள் தங்கள் முழக்கங்களை,
வாழிய வாழிய வாழியவே
மே நாள் வாழியவே
வீரவணக்கம் ! வீரவணக்கம் !
வர்க்கப் போரில் உயிர் நீத்த
பாட்டாளி வர்க்கப் போராளிகளே
மேதினத் தியாகிகளே
உங்களுக்கு எங்கள் வீரவணக்கம்!
பெண்களின், குழந்தைகளின் படை தொழிலாளி வர்க்கத்தின் அணியாக
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
தீர்வு இல்லை… தீர்வு இல்லை…
உழைக்கும் மக்கள் அனைவருக்கும்
போலிஜன நாயக அரசமைப்பில்
தீர்வு இல்லை…தீர்வு இல்லை…
கட்டியமைப்போம் ! கட்டியமைப்போம்
மக்கள் அதிகாரக் கமிட்டிகளை
கட்டியமைப்போம்! கட்டியமைப்போம் !
காங்கிரசு – பி.ஜே.பி
தி.மு.க – அ.தி.மு.க
மாத்தி மாத்தி ஓட்டு போட்டும்
மக்கள் துயரம் தீரவில்லை
எதனாலே எதனாலே
தானே வகுத்த சட்டத்தை
தானே செய்ய முடியாமல்
நெருக்கடியில் நிக்குது
அரசு எந்திரம் அதனாலே !
பாட்டாளி வர்க்கத்தின் கலைப்படை
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
அணிதிரள்வோம் ! அணிதிரள்வோம் !
நக்சல்பாரி பாதையில் அணிதிரள்வோம் !
புதிய ஜன நாயகப் புரட்சிக்கு
அணிதிரள்வோம் ! அணிதிரள்வோம் !
“1886-ல் இந்த மேநாளில்தான், தொழிலாளி வர்க்கம் தனதுகோரிக்கைகளான 8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர உறக்கம் போராடி பெற்ற நாள்.
129 ஆண்டுகள் ஆகிவிட்டன, ஆனாலும் இன்றும் தொழிலாளி வர்க்கத்தின் கோரிக்கை அதேதான். அந்தளவிற்கு முதலாளித்துவ சுரண்டல் நீடித்துக் கொண்டு இருக்கிறது. தொழிலாளிகளின் வாழ்க்கை ஒரு சதவீதம் கூட முன்னேறவில்லை. மோடி-பி.ஜே.பி கும்பல் பதவியேற்றவுடன் தொழிலாளர் நலச்சட்டங்களைத் திருத்துவது என கட்டற்ற அடக்குமுறையை ஏவிவருகிறது. அதிகாரவர்க்கம், நீதிமன்றம், போலீசு, இராணுவம் என்ற இந்த அரசுக் கட்டமைப்பு முழுவதும் நம்மை ஆளும் தகுதியை இழந்துவிட்டது. இந்த அரசுக் கட்டமைப்பை வீழ்த்தி மக்கள் அதிகாரத்தை நிறுவ வேண்டிய வரலாற்றுக்கடமை தொழிலாளி வர்க்கத்தின் தோள்களில் சுமத்தப்பட்டுள்ளது.
ஆனால், தொழிலாளி வர்க்கமோ பிரிந்து கிடக்கிறது. இந்த அரசியல் கடமையை நிறைவேற்ற தொழிலாளிகள் அனைவரும் ஒரு வர்க்கமாய் அணிதிரள வேண்டும்” என்று தொழிலாளர் வர்க்கத்தை அறைகூவி பேரணியைத் தொடங்கிவைத்தார், பேரணியின் தலைவர் பு.ஜ.தொ.மு திருவள்ளூர் மாவட்டசெயலாளர் தோழர் செல்வக்குமார்.
புறப்பட்டது பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப்படை
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
செங்கொடிகள் பட்டொளி வீசிப்பறக்க, செம்பதாகைகள் உயர, மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் கலைக் குழுத்தோழர்கள் கள நடனமாட, போர்ப்பறை முழங்க , தொடங்கியது பேரணி. பெண்கள், குழந்தைகள், ம.க.இ.க, பு.மா.இ.மு, பெ.வி.மு தோழர்கள் வரிசையாய் அணிவகுத்து முழங்கினார்கள். கொத்தடிமைகளாய் குமுறிக்கிடக்கும் தொழிலாளர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக, சிறப்பு நிகழ்ச்சியில் எந்தப் படம் எந்த டிவியில் போடுவார்கள் என்று அடிமைகளாக இருந்த தொழிலாளர்களின், மக்களின் உணர்வைத் தட்டியெழுப்பின முழக்கங்கள். சிறையில் இருந்த விடுவிக்கப்பட்ட பறவைகளாக அவர்கள் பேரணியின் இருபுறமும் அணிவகுத்து நின்றார்கள்.
பூந்தமல்லி கல்லறைப் பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கிய பேரணி குடியிருப்புகள் வழியாக சென்றது. மே தின சிறப்பு நிகழ்ச்சியைப் பார்க்க தொலைக்காட்சியின் முன் உட்கார்ந்திருந்த மக்கள், தம் வீட்டு வாயில்களிலும், மாடிகளிலும் நின்று பேரணியைக் கண்டனர். தோழர்களுக்கு தண்ணீர் கொடுத்து மண்டையைப் பிளந்த உச்சி வெயிலை தணித்து தங்களின் அன்பை வெளிப்படுத்தினார்கள்.
தொழிலாளர்களின் குடியிருப்புக்களின் வழியே சாரை சாரையாக ஊர்ந்து சென்றது பேரணி, அது சென்ற இடமெல்லாம் இந்த ஆளும் அருகதையற்ற அரசமைப்பை தூக்கியெறி ! மக்கள் அதிகாரத்தை கட்டியமை! என்பதை பறை சாற்றியது. ஆயிரக்கணக்கான மக்களின் நம்பிக்கை ஒளிக்கீற்றாக மிளிர்ந்தது.
குடியிருப்புகளின் வழியே சாரை, சாரையாக
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
இதுவரை தண்ணியடித்துவிட்டு, கூலிக்கு ஆள் பிடித்து பேரணி நடத்தியவர்களையே பார்த்து சலித்துப் போன மக்கள் முறையாக, உணர்வுப் பூர்வமான இந்தப் பேரணிக்கு வழிவிட்டு நின்றார்கள் துண்டறிக்கைகளை முன்வந்து வாங்கினார்கள். சரியாக 12 மணிக்கு அத்தனைபேரும் ஆர்ப்பாட்ட மேடைக்கருகில் அணிவகுத்து நின்றனர்.
“ஆளும்அருகதையற்றஅரசுக்கட்டமைப்பைவீழ்த்துவோம்!மக்கள் அதிகாரத்தை நிறுவுவோம்” என்ற தலைப்பிலான ஆர்ப்பாட்டம் தொடங்கியது. இந்தஆர்ப்பாட்டத்திற்கு காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் தோழர் சிவா தலைமை தாங்கினார். சென்னை ம.க.இ.க தோழர்களின் புரட்சிகர கலை நிகழ்ச்சி தொடங்கியது. திரண்டிருந்த தோழர்களிடையே வெயிலைத்தணிக்கும் புல்லாங்குழல் இசையை குளிர்க்காற்றாய் தொடங்கி
முதலாளித்துவத்தின் பார்வையை பறிக்கும் அனல் காற்றாக்கினார்
பார்வையற்றத் தோழர் மனோகர்.
“தொழிலாளி வர்க்கத்தின் மீது துப்பாக்கிச் சூடு! அரசு-முதலாளி வர்க்கத்தோடு புயலாய் மோது”என்ற பாடல் எப்படிப்பட்ட போராட்டத்தை நாம் நடத்த வேண்டும் என்று கட்டியம் கூறியது.
“மே நாளிலே சூளுரைப்போமே ! போராடி உரிமைகளை மீட்டெடுப்போமே ” என்ற பாடல் குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம் , பாலை என ஐவகை நிலங்களையும் ஒரே நிலமாய் வீரத்தின் விளை நிலமாக, அரசுக் கட்டமைப்பின் புதை நிலமாக மாற்றக் கோரியது.
“அரசுத் துறை ஒவ்வொன்றும் மக்கள்- தொழிலாளர் பிரச்சனைகளை தீர்க்க வக்கற்றுப்போய் மக்களுக்கு எதிராக மாறியுள்ளன”
தோழர் சிவா தனது தலைமை உரையில், “அரசு துறைகள் ஒவ்வொன்றும் மக்கள்- தொழிலாளர் பிரச்சனைகளை தீர்க்க வக்கற்றுப்போய் மக்களுக்கு எதிராக இருப்பதை” அம்பலப்படுத்தி பேசினார்.
தகிக்கும் வெயிலில், தொழிலாளிகள் எரிமலையாய் வெடிக்க வேண்டிய அவசியத்தைக் கூறி தனது உரையைத் தொடங்க்கினார், பு.ஜ.தொ.மு மாநிலப் பொருளாளர் தோழர் விஜயகுமார். “இந்த அரசு மக்களுக்கு எதிராக மாறி இருக்கிறது. அதற்கு ஒரு உதாரணம் தொழிலாளர் நலத்துறை.
ஒரு தொழிலாளி, “வேலையை விட்டு நீக்கிவிட்டார்கள்” என்று முறையிட்டால், “எவ்வளவு பணம் வேண்டும்” என்று கேட்கும் திருப்பெரும்புதூர் தொழிலாளர் உதவி ஆணையர் தர்மசீலன் யோக்கியதையை சுட்டிக்காட்டினார்.
“8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு என்பது தான் தொழிலாளி வர்க்கத்தின் கோரிக்கை. இன்றைய தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை என்ன? பேண்ட் பாக்கெட்டில் பிஸ்கட் உடன் வந்தால் வேலையை விட்டு வருகிறோம் என்று அர்த்தம். பிஸ்கட் இல்லையென்றால் வேலைக்குப் போகிறோம் என்று அர்த்தம். ஏனெனில் தொழிலாளிகளின் தூக்கம், ஓய்வு என அனைத்தும் கம்பெனி பேருந்தில் தான். அப்புறம் எப்படி தன் வாழ்க்கையைப் பற்றி தொழிலாளி சிந்திக்க முடியும்?
மும்பை, புனே போன்று சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் ரவுடிகள்தான் கம்பெனியை நடத்துகிறார்கள். சங்கம் என்று வாயைத் திறந்தால் அடித்து உதைக்கிறார்கள். ரவுடிகளிடம் அடிவாங்குவதா தொழிலாளி வர்க்கம்? இதுதான் இன்றைய தொழிலாளி வர்க்கத்தின் நிலை.
திருப்பி அடிக்காமல் விடிவு இல்லை. இந்த அரசு தொழிலாளிகளுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உழைக்கும் வர்க்கத்திற்கும் எதிராக மாறி இருக்கிறது. கர்நாடக நீதிமன்றத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட கிரிமினல் ஜெயலலிதா இரண்டு வாரத்திற்குள் பிணையில் வருகிறார். ஆனால், சங்கம் வைத்ததற்காக, மாருதி தொழிற்சாலை தொழிலாளர்கள் இரண்டு வருடங்களாக திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு பிணை மறுக்கப்படுகிறது.
அதனால்தான் சொல்கிறோம், இந்தஅரசுக் கட்டமைப்பு நம்மை ஆளத்தகுதியிழந்துவிட்டது, எதிர்நிலை சக்தியாக மாறிவிட்டது என்று. மாற்று அதிகாரம் நிறுவ வேண்டும் , தொழிலாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்திற்கு வரவேண்டும் என்று. இது மே தின ஆர்ப்பாட்டம் அல்ல. தொழிலாளி வர்க்கத்தின்அரசியல்போராட்டம்.
தன்னுடைய வர்க்க கோரிக்கைகளுக்காக மட்டும் போராடுவதல்ல தொழிலாளி வர்க்கம். தன்னைப் போல் ஒடுக்கப்படுகின்ற மக்களுக்காகப் போராடி தொழிலாளி வர்க்க அரசியல் அதிகாரத்தை நிறுவுவதுதான் தொழிலாளி வர்க்கத்தின் வரலாற்றுக்கடமை என்ற பாட்டாளிவர்க்க ஆசான்களின் கூற்றை மெய்யாக்க, அப்படிப்பட்ட அதிகாரத்திற்காக போராடுவதும், மக்கள் அதிகாரத்தை நிறுவுவதும் தான் நமது கடமை. அதற்கு தொழிலாளி வர்க்கம் தயாராக வேண்டும், போராட வேண்டும்” என்று அறை கூவல் விடுத்தார்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
1886-ல் தொடங்கிய பேரணிக்கும் இன்றைய மே தினத்திற்கும் வித்தியாசம் ஏதுமில்லை. அன்றைய நாளைப்போலவே, ஏன் அதை விட இன்னமும் மோசமாக உறிஞ்சப்படுகிறது தொழிலாளி வர்க்கம். அரசியல் அதிகாரத்தை கைப்பற்றாமல் தீர்வு இல்லை என்ற முழக்கம் முன்னெப்போதையும் விட ஆழமாய் தொழிலாளர்களின் சுவாசத்தில் நிரம்பிக் கிடக்கின்றது.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
அன்றைய மே நாள் தொழிலாளரின் போராட்டம் உலகத் தொழிலாளர்களுக்கு விடிவெள்ளியாகத் திகழ்ந்தது என்றால் புதிய ஜனநாயத் தொழிலாளர் முன்னணியின் இந்த ஆர்ப்பாட்டம், நிலவும் அரசுக் கட்டமைப்புக்கே கல்லறை கட்டி, மக்கள் அதிகாரத்தை நிறுவுவது புரட்சிகர அமைப்புக்களால் மட்டும் சாத்தியம் என்பதை மெய்ப்பிக்கும்.
மார்க்சியம்-கம்யூனிசம் எல்லாம் காலாவதியாகி விட்டது என்று கத்துகிறது முதலாளி வர்க்கம். ஆனால் நடைமுறையில், முதலாளித்துவத்திற்கு மாற்று சோசலிசம், கம்யூனிசம் தான் என்பதை நிரூபித்து வருகிறது அதன் முதலாளித்துவ சுரண்டல்.
இந்தியாவிலிருந்து கொஞ்சம் பொருட்களையும் நிறைய பத்திரிகையாளர்களையும் சுமந்து செல்லும் ஹெலிகாப்டர்கள்!
ஏப்ரல் 25-ம் தேதி நேபாளத்தைத் தாக்கிய பூகம்பம் 7,500-க்கும் மேற்பட்ட மக்களை பலி வாங்கி 15,000-க்கும் அதிகமான மக்களைக் காயப்படுத்தியுள்ளது. 7.8 ரிக்டர் அளவில் நேபாளத்தின் இமயத்தின் அடிவாரத்திலுள்ள கோர்க்கா மாவட்டத்தின் பார்பக் பகுதியைத் தாக்கிய பூகம்பம் மொத்த நாட்டையும் குலுக்கிப் போட்டது. இதன் அதிர்வுகள் இந்தியத் துணைக் கண்டமெங்கும் எதிரொலித்தது.
கடந்து செல்லும் ஒவ்வொரு நாளிலும் இடிபாடுகளிடையே இருந்து மீட்கப்படும் பிணங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. மீட்பு நடவடிக்கைகளில் உடனடியாக தலையிட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்றென்பது ஆச்சரியமான விசயமல்ல.
மூன்று புறங்களில் இந்தியாவாலும் வடக்கே இமயத்தாலும் (சீனா) சூழப்பட்ட நேபாளத்தின் புவியியல் அமைப்பும் அதன் காரணமான வரலாறு மற்றும் அரசியல் ரீதியான பிணைப்பும் இந்தியாவின் தலையீட்டை அவசியமானதாக்குகிறது.
வறிய நாடான நேபாளத்திற்கு பூகம்பம் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகள் மிகவும் பாரதூரமானது. அதிர்ச்சியிலிருந்து மீளாத நேபாள மக்கள், வழிந்தோடும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு இடிபாடுகளிடையேயிருந்து மீட்டெடுக்கப்படும் துண்டிக்கப்பட்ட கைகளிலும் கால்களிலும் தமது உற்றார், உறவினரின் அடையாளங்கள் ஏதும் உள்ளதாவென நெஞ்சம் பதைக்க தேடிக் கொண்டேயிருக்கிறார்கள்.
உருக்குலைந்து போன நாட்டின் வாழ்வை மீட்கும் வழியை அவர்கள் இன்னமும் கண்டடையவில்லை. கூர்க்காக்களின் நெஞ்சுரம் குறித்து அறியப்பட்ட எண்ணற்ற செவிவழிக் கதைகளை மெய்ப்பிக்கும் விதமாக தங்கள் சொந்த நாட்டு அரசும் அந்நிய தேசங்களும் நெருங்க முடியாத இடங்களில் கையில் எந்த உபகரணங்களும் இன்றி நேபாளிகள் களமிறங்கியுள்ளதாக செய்திகள் வந்த வண்ணமுள்ளன.
மீளமுடியாத சோகத்தினிடையேயும் உதவி செய்வதான போர்வையில் இந்தியா செய்திருக்கும் தலையீட்டை நேபாளிகள் இரசிக்கவில்லை. அதிலும் குறிப்பாக மீட்புப் படையினரின் எண்ணிக்கைக்கு சற்றும் குறையாத எண்ணிக்கையில் களமாடி வரும் இந்திய ஊடகங்களை தீராத வெறுப்போடு நேபாளிகள் காறி உமிழ்கிறார்கள் என்று செய்திகள் வந்தவண்ணமிருக்கின்றன.
# gohomeindiamedia என்ற ஹேஷ்டேக் தான் கடந்த 3ம் தேதி ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் முதன்மையான பேசு பொருளானது.
உதாரணத்திற்கு சில ட்விட்டுகள் மட்டும்…
நேபாள அரசோடு இந்திய அரசையும் சேர்த்து எதிர்க்கும் நேபாள மக்கள்!
”மதிப்புக்குறிய பிணந்தின்னிக் கழுகுகளே, இறந்த உடல்களின் எலும்புகள் வரை சுத்தமாக பொறுக்கி விட்டீர்கள்….. இப்போது நீங்கள் வீட்டுக்குப் போகலாமே” #gohomeindiamedia
”திருவாளர் மோடி அவர்களே.. பெருமைக்குரிய எங்களது தாராகரா ஸ்தூபி வீழ்ந்து விட்டது.. ஆனால், எங்கள் இறையாண்மை இன்னும் வீழவில்லை. #gohomeindiamedia”
“திருவாளர் மோடி அவர்களே, உங்கள் ஊடகங்களைத் திரும்ப அழைத்துக் கொள்ளுங்கள். இவர்களே எங்களுக்கு மிக மோசமான பாதிப்புகளை உண்டாக்குகிறார்கள் #gohomeindiamedia”
இன்னும் பல்லாயிரக்கணக்கான ட்விட்டுகள் நேபாளிகளிடமிருந்து மட்டுமல்ல இந்திய ஊடகங்களின் செயல்பாடுகளால் அவமானப்பட்ட இந்தியர்களிடமிருந்தும் குவிந்த வண்ணமுள்ளது.
பூகம்பத்தில் சிக்கி மீட்கப்பட்ட இந்தியர்களில் ஒருவரான நிமிஷ் சிரீவஸ்தவா கூறுவதைக் கவனியுங்கள். “பாதிப்புக்குள்ளான நேபாள மக்களை கும்பலாக நிறுத்தி அவர்களை “மோடி, மோடி” என்று கோஷமிடச் செய்து இந்திய ஊடகவியலாளர்கள் அந்தக் காட்சிகளை படம் பிடித்துக் கொண்டார்கள்” என்கிறார் அவர். “மீட்கப்பட்ட ஒவ்வொரிடமும் மோடியின் இரக்க குணம் பற்றி கேட்டு அவற்றைப் பதிவு செய்து கொண்டதாக”வும் தெரிவித்துள்ளார். அதே சமயம், “மீட்புப் படை தாமதமாக வந்ததாக சிலர் தெரிவித்த கருத்துக்களை கவனமாக கத்தரித்து விட்டார்கள்” என்றும் தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ளார்.
சி.என்.என் செய்தித் தளத்தில் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட சுனிதா ஷாகியா என்ற நேபாளத்தைப் பூர்வீகமாக கொண்ட பத்திரிகையாளர், இந்திய ஊடகவியலாளர்கள் தொலைக்காட்சி சீரியல்களைப் போன்ற ‘கதைகளை’ வெறியுடன் தேடியலைந்ததை சாடியிருக்கிறார்.
பிரேக்கிங் நியூசுக்காக வெறிபிடித்து அலையும் இந்திய ஊடகங்கள்!
24/7 ஆங்கில செய்தி தொலைக்காட்சிகள் இந்திய ஊடக வெளியில் ஆதிக்கம் செலுத்தத் துவங்கிய பின் கடந்த 15 ஆண்டுகளில் ’செய்தியின்’ தன்மை பெருமளவிற்கு மாற்றமடைந்துள்ளதை நாம் அறிவோம். பாரபட்சமின்றி நடப்பு நிகழ்வுகளை செய்திகளாக வெளியிடுவது, நிகழும் செய்திகளைக் குறித்த நடுநிலையான அலசல், அரசியல், பொருளாதாரம் மற்றும் துறைசார் வல்லுநர்களைக் கொண்டு செய்யப்படும் விரிவான ஆய்வுகள் என்பவையெல்லாம் பழைய வரலாறுகள் ஆகிவிட்டன.
செய்தித் தொலைக்காட்சிகளைப் பொறுத்தவரை செய்திகள் ஒவ்வொன்றும் ’கதைகள்’. மக்களின், தேசத்தின் வாழ்வை பாதிக்கும் செய்திகள் வெறும் கதைகளாகச் சுருங்கிய பின்னர், நடக்கும் இரத்தமும் சதையுமான அந்த நிகழ்வுகளில் இருந்து தாம் சொல்லப் போகும் கோணம் எது, அந்தக் கோணத்தை விவரிக்கும் விதம் என்ன, கதையின் நாயகன் யார், வில்லன் யார், பின்னணி இசைக் கோர்வை எப்படி இருக்க வேண்டும் என்பதே பிரதான முக்கியத்துவம் வாய்ந்த விசயங்களாகின.
இவ்வாறாக இந்தியாவின் செய்தித் தொலைக்காட்சி ஊடகங்களைப் பொருத்தவரை எந்த ஒரு உண்மை நிகழ்வும் மசாலா தடவப்பட்ட பதார்த்தம் தான். இதில் ’பதார்த்தத்தை’ உப்பு காரம் தூக்கலாக சுடச்சுட யார் பரிமாறுகிறார்களோ அவர்களுக்கே TRP என்ற வெற்றிக் கோப்பை சன்மானமாக கிடைக்கும்.
இந்தக் கதைகள் வெவ்வேறானதாக இருந்தாலும், இவற்றுக்கு ஒரு இணைப்பு தேவைப்படுகிறது. ஆங்கிலத்தில் Storyline என்பார்கள். ஒரு அணுவுலை வெடிப்பாக இருக்கலாம், அல்லது ஒரு பெண் பாலியல் வன்புணர்வுக்குள்ளான சம்பவமாக இருக்கலாம், அல்லது ஏதேனும் ஒரு கொலை சம்பவமாக இருக்கலாம், அல்லது விவசாயிகள் கூட்டுத் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வாக இருக்கலாம்..
சம்பவங்கள் எதுவானாலும், ஊடகங்கள் கதைகளாக சொல்லும் போது அவற்றினூடாக ஒரு கதைவரிசையை (storyline) முன்வைக்கின்றன. இப்படி பல கதைவரிசைகள் உள்ளன, நிகழ்வு எதுவோ அதற்கு பொருத்தமான கதை வரிசைக்குள் ’செய்தியை’ சொருகி தேசியவாத மசாலா தடவி இந்துத்துவ பொதுப்புத்தி என்கிற எண்ணெயில் பொரித்து சூடாகவும் சுவையாகவும் ப்ரைம் டைமில் தமது நடுத்தரவர்க்க வாடிக்கையாளர்களுக்கு பரிமாறுவதே சமகாலத்திய ஊடக அறம்.
நிவாரணப்பணிகளில் இந்தியா முன்னணியில் இருப்பதற்காக ஒவ்வொரு நிவாரண பொட்டலத்திலும் உங்கள் போட்டோவை போட்டிருக்கிறீர்களே, வெட்கமாக இல்லையா மிஸ்டர் மோடி?
சமீபகாலத்திய கதைவரிசைகள் பலவற்றில் மோடி நாயகன், ராகுல் காந்தி காமெடி வில்லன். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் பழைய ஊழல்களைப் பற்றிய கதைவரிசைகளில் ஆ.இராசா வில்லன். பொதுவாக காஷ்மீரிகள், இசுலாமியர்கள், திராவிட கருத்தியல் கொண்டவர்கள், பழைய சமூகநீதி பாரம்பரியத்தில் வந்தவர்கள் எல்லாம் நிரந்தர வில்லன்கள். பார்ப்பன இந்து வெறியை உள்ளடக்கமாக கொண்ட இந்திய தேசிய வெறி (Jingoistic Nationalism) தான் எப்போதும் நிரந்தர நாயகன்.
இந்திய அச்சு ஊடகங்கள் தமது இளைய பங்காளிகளான காட்சி ஊடகங்களின் நகல் பிரதி என்பதால் அவற்றைக் குறித்து தனியே சொல்லத் தேவையில்லை.
அமெச்சூர் மல்யுத்த போட்டி பின்னர் தொழில்முறை மல்யுத்த போட்டியாக வளர்ந்து தொலைக்காட்சிகளில் Pay-per-view நிகழ்ச்சியாக இடம்பெற்று கல்லாகட்டத் துவங்கிய தொண்ணூறுகளில் பிரபலமாக இருந்த WWF பார்த்தவர்கள் நிலைமையை இத்துடன் ஒப்பிட்டுப் புரிந்து கொள்ளலாம்.
இந்திய செய்தித் தொலைக்காட்சிகளின் டி.ஆர்.பி வெறியை தட்டிக் கேட்க நமக்கு சொரணை இல்லை என்றாலும் அதை நேபாளிகள் சுமக்க வேண்டிய அவசியமில்லை அல்லவா? அதனால் தான் காறி உமிழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
நேபாளத்தின் வாழ்வை புரட்டிப் போட்ட பூகம்பம் இந்திய ஊடகங்களுக்கு டி.ஆர்.பி புதையலாக காட்சியளித்துள்ளது. திகிலூட்டும் பின்னணி இசையோடு மலிவான உணர்ச்சிகளைத் தூண்டும் விதமாக ‘கண்ணீர்’ கதைகளைத் தேடியலைந்துள்ளனர் இந்திய ஊடகவியலாளர்கள். பூகம்பத்தில் பாதிக்கப்பட்டு பெற்ற பிள்ளையை பறிகொடுத்த தாய் ஒருவரிடம் சென்று “இப்போது எப்படி உணர்கிறீர்கள்?” என்று மைக்கை நீட்டியுள்ளார் ஒரு செய்தியாளர். மற்ற செய்திச் சேனல்களுக்குக் கிடைக்காத கதைகளை கண்டு பிடித்து டி.ஆர்.பியை அள்ளும் வெறியில் மீட்பு நடவடிக்கைகளுக்கே இடையூறு ஏற்படுத்தியுள்ளனர்.
நேபாள டெலிகிராப் பத்திரிகையில் வெளியான செய்தி ஒன்றின் படி, மீட்பு நடவடிக்கைகளுக்காக சென்றுள்ள இந்தியாவின் உலங்கு வானூர்திகள் ஒவ்வொன்றிலும் செய்தியாளர்களையே இடத்தை அடைத்துக் கொண்டு சென்றுள்ளனர். விளைவாக, குறைவான கட்டுமான வசதிகளைக் கொண்டிருக்கும் நேபாள இராணுவத்தை விட சொற்ப எண்ணிக்கையிலேயே இந்திய இராணுவம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டுள்ளது.
தினமும் நான்கு முறை இந்தியாவிலிருந்து நேபாளத்திற்குப் பறக்கும் ’மீட்பு’ விமானம் இங்கிருந்து நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்களை சுமந்து சென்றுவாறே உள்ளது. இந்திய பத்திரிகையாளர்கள் நேபாளத்தின் குறுக்கும் நெடுக்குமாக அலைபாய்ந்து தங்கள் தேசத்தின் பெரியண்ணன் தோரணையை, உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் நேபாளிகள் முன் பீற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்து நேபாளிகள் மட்டும் தான் ஆத்திரப்பட வேண்டுமா?
அரசியல் , பொருளாதார மற்றும் கலாச்சார ரீதியில் இந்திய ஆளும் வர்க்கம் இந்தத் துணைக்கண்டத்தைச் சேர்ந்த பிற நாடுகளின் மேல் நிகழ்த்திக் கொண்டிருக்கும் அடாவடித்தனங்களுக்கு ஒரு பின்னணியும் உள்ளது.
சர்வதேச ஏகாதிபத்திய பொருளாதார கட்டுமானத்தோடு பிணைக்கப்பட்டுள்ளது இந்தியா. இதனால், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு ஏகாதிபத்திய நாடுகளின் சுரண்டலுக்காக இந்த தேசத்தின் எல்லைகள் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த அடிமைத்தனமும், அது தரும் எலும்புத் துண்டும்தான் இந்திய ஆளும் வர்க்கத்தின் ஆன்மாவாக விளங்குகிறது.
அதுதான் பல்லாயிரம் பேரின் உயிரைக் குடித்த போபாலின் துயரத்திற்குக் காரணமான யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியை பாதுகாப்பாக நாட்டை விட்டு வெளியேற அனுமதித்ததிலும், அணுவுலைகள் வெடித்து அதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கு மேற்கத்திய நாடுகளைப் பொறுப்பாக்க மாட்டோம் என்று அறிவித்ததிலும் இன்னும் எண்ணற்ற சந்தர்பங்களிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
தனக்கு மேலே சில எஜமானர்கள், தனக்குக் கீழே சில அடிமைகள் என்று படிநிலை கலாச்சாரத்திற்கு ஈராயிரம் ஆண்டுகளாக பழக்கப்பட்டுப் போன இந்திய ஆட்சியாளர்கள் துணைக்கண்டத்தைச் சேர்ந்த பிற சிறிய நாடுகளை தனது அடிமைகளாக இயற்கையாகவே கருதிக் கொள்கின்றனர். இந்த நாடுகளுக்கென்று சொந்த இறையாண்மை, சொந்த அரசியல், கலாச்சாரம், பண்பாடு போன்றவை இருக்கின்றன என்கிற எதார்த்த உண்மையை கெண்டைக்கால் மயிரளவுக்கும் மதிப்பதில்லை.
பாலிவுட் குப்பைகளைக் கொட்டி கலாச்சார ரீதியில் அந்நாடுகளை மாசுபடுத்துவது, இந்திய தரகு முதலாளிகளுக்கு அந்நாடுகளின் சந்தையைக் கைப்பற்றிக் கொடுப்பது, இந்திய இராணுவ நலனுக்கு வலுக்கட்டாயமாக உட்படுத்துவது என்பது போன்ற விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்வது தான் இந்தியாவின் நிரந்தர வெளியுறவுக் கொள்கை. ஒரு வகையில் பாகிஸ்தானை இந்தியாவின் தொண்டையில் சிக்கிய முள் என்றும் சொல்லலாம்.
அந்த வகையில் இந்த துணைக்கண்ட பிராந்தியத்தில் ஏகாதிபத்தியத்திற்கு கீழ்ப்படிந்த வட்டார ரவுடியாக தன்னை நிலைநாட்டும் முயற்சிகளை இந்தியா தொடர்ந்து முன்னெடுத்துக் கொண்டே இருக்கிறது. மாலத்தீவுகள், வங்க தேசம், இலங்கை, நேபாளம் போன்ற குட்டி நாடுகளை போர்தந்திர ரீதியிலான நோக்கங்களுக்கு உட்பட்டு தனது பிடியில் வைத்துக் கொள்வதற்கு கிடைக்கும் எந்த வாய்ப்பையும் இந்திய ஆளும் வர்க்கம் தவற விடுவதே இல்லை.
அது ஈழத் தமிழர்களுக்கு எதிரான சிங்கள இனவெறியர்களின் போராகட்டும், நேபாள நிலநடுக்கமாகட்டும் – ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இந்த நாடுகளின் குறிப்பான விவகாரங்களில் தலையிடுவதன் நோக்கமே தனது நிரந்தர நலனைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவே.
இந்தியாவின் பெரியண்ணன் மனோபாவத்தை சம்பந்தப்பட்ட நாடுகளின் ஆளும் வர்க்கங்கள் தெரிந்தே அனுமதிக்கின்றன. மன்னராட்சியை எதிர்த்துக் கிளர்ந்த நேபாள புரட்சியின் போது தனது அடிவருடியான மன்னரின் சார்பில் தலையிட்ட போதே நேபாளிகளின் ஆத்திரத்திற்கு இந்தியா ஆளானது.
புவியியல் ரீதியில் தனக்கிருக்கும் சாதகமான நிலையைப் பயன்படுத்தி நேபாளம் பொருளாதார ரீதியில் சுயேச்சையாக வளர்வதைத் இந்தியா தொடர்ந்து தடுத்து வந்துள்ளது. சீனத்தோடு நேபாளத்திற்கு இருக்கும் பொருளாதார உறவை மட்டுமின்றி, கிட்டத்தட்ட நேபாளத்தின் அயலுறவு மற்றும் இராணுவ செயல்பாடுகள் அனைத்தும் தில்லியில் வைத்தே தீர்மானிக்கப்படுகின்றன.
நீண்ட காலமாக பொருளாதார வளர்ச்சியின்றி, வேலையின்மையாலும் வறுமையாலும் சகல திசைகளிலிருந்து தாக்குதலுக்கு இலக்காகியிருக்கும் நேபாள மக்கள் தங்களது துன்ப துயரங்களுக்கு நேபாள ஆளும் வர்க்கம் எந்தளவுக்குக் காரணமோ அதே அளவுக்கு இந்தியாவும் காரணம் என்பதைத் தெளிவாக புரிந்து கொண்டிருக்கிறார்கள்.
ஒரு கையில் கேமரா, மறு கையில் நிவாரணம், இதுதான் இந்திய இராணுவம்!
ஒவ்வொரு தேர்தலிலும் மக்களின் வாக்குகளைக் கவர நினைக்கும் நேபாளின் எதிர்க்கட்சிகளுக்கு இந்திய எதிர் நிலைப்பாடு ஒன்றே உத்திரவாதமான ஓட்டுப் பொறுக்கும் சாதனமாக இருந்து வந்துள்ளது. ஒவ்வொரு முறையும், தேர்தலில் வென்ற பின் சொல்லி வைத்தாற்போல இந்திய அடிவருடித் தனத்தில் மூழ்கி நேபாளிகளுக்கு துரோகமிழைப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளன அக்கட்சிகள்.
ஆக, #Gohomeindiamedia என்பது இப்போதைய ’ட்ரெண்டாக’ இருந்தாலும், அது இந்தக் குறிப்பான சந்தர்பத்தில் வெளிப்பட்டுள்ளதன் காரணம் இது தான். இந்திய ஊடகங்களின் சமீபத்திய கதைவரிசையின் நாயகனான மோடியின் பிம்பத்தை நேபாளிகளின் முன் தூக்கிப் பிடித்த செயலானது அவர்கள் பல்லாண்டுகளாக அனுபவித்து வரும் துன்பங்களின் குறியீடாக மாறியுள்ளது.
மோடி ஒரு இந்துத்துவ பாசிஸ்ட் என்கிற புரிதல் நேபாளிகளுக்கு இல்லாலிருக்கலாம். ஆனால் இந்தியப் பெரியண்ணனின் தேசிய மேலாதிக்கம் என்கிற சிறுமையை இந்தியப் பத்திரிகையாளர்கள் தங்கள் தலையின் மீது சுமத்துகிறார்கள் என்கிற எளிமையான உண்மையைப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். மேலே பணிந்து கீழே மீசை முறுக்கும் இந்திய தேசிய பெருமிதத்தின் உச்சகட்டப் பீறிடல் மோடி என்பதையும் இந்தியப் பத்திரிகையாளர்களின் அருவெறுக்கத்தக்க பீற்றல்கள் அந்த அசிங்கம் பிடித்த பீறிடலின் குறியீடு என்றே நேபாளிகள் #Gohomeindiamedia என்று காறித் துப்பியிருக்கிறார்கள்.
நேபாளம் சின்ன நாடாக இருக்கலாம்; நேபாளிகள் எளியவர்களாக இருக்கலாம் – ஆனால், மேலாதிக்கத்தைச் சகித்துக் கொள்ள முடியாத சொரணையுள்ளவர்கள் என்பதை இந்த உலகத்திற்கு அறியத்தந்துள்ளனர்.