privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

ஆகவே தோழர்களே……!

-

ரசியப் புரட்சி முடிந்து 95-ஆம் ஆண்டு தொடங்குகிறது. பொதுவுடமைக் கட்சிகள் மட்டும் வரலாற்றின் இவ்வொளியை ஏந்திச் செல்கின்றன. மேல்நிலை வல்லரசுகளின் கிடுக்கிப் பிடியில் மாட்டிக் கொண்டுள்ள உலகில் சோசலிச நாடு என்று எதுவும் இல்லை. மனித குலத்தின் இருளகற்ற சிவப்புச் சூரியன் தோன்றுவானா? சுரண்டலற்ற பொதுவுடமை சமூகம் என்பது கனவா?

மக்கள் நம் பக்கம் வருவார்களா? தலை கீழாக நின்று பார்த்தாலும் மக்களை திருத்த முடியவில்லையே? கார்க்கியிடம் கேட்டோம்.

ரசியப் புரட்சியின் பின் பாட்டாளி வர்க்கத்துக்காக இலக்கியத்தின் துணை கொண்டு போராடியவர், தோழமையுடன் சொன்னார்.

_________________________________________

மக்சிம் - கார்க்கி
கார்க்கி

ன் வாலிபப் பருவத்தில் வாழ்க்கையைப் பற்றி என்றைக்கும் குறைபட்டுக் கொண்டதாக எனக்கு நினைவில்லை; என்னைச் சூழ்ந்து வாழ்ந்த மக்களுக்கோ குறைபட்டுக் கொள்வதிலே ஒரு பிரியம் இருந்தது. ஆனால் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்வதில் விருப்பமில்லாமலிருப்பதை அவர்கள் மறைப்பதற்காகத்தான், வஞ்சகமாக இப்படிச் செய்கிறார்கள் என்று உணர்ந்து கொண்டதும், அவர்களைக் காப்பியடிப்பதைத் தவிர்க்க நான் முயன்றேன்.

அதிகமாகக் குறைபட்டுக் கொள்கிறவர்கள் தான் எதையும் எதிர்த்து சமாளிக்கத் திறனற்றிருக்கிறார்கள் என்றும், பொதுவாகவே மற்றவர்களின் மேல் எல்லாவற்றையும் போட்டுவிட்டு தாம் சுகமாக இருக்கப் பார்க்கிறவர்கள் என்றும் வெகு சீக்கிரத்திலேயே கண்டு கொண்டேன்.

எனக்குப் புரியாத விஷயங்கள் நிறைய இருந்தன என்றாலும், இந்த மாதிரி மனிதர்களுக்கு ”சகஜமான” வாழ்க்கையை முழுக்க விட்டுக் தொலைப்பதற்கு முடியவில்லை என்று பட்டது. குட்டி பூர்ஷுவா என்ற நாடகத்தில் வருகிற குடிகாரப் பாடகன் சொல்கிற மாதிரி, இவர்கள் ”அறையிலிருக்கிற மேஜை நாற்காலிகளை மாற்றி மாற்றி வைத்து ஒழுங்கு செய்வது” தவிர வேறொன்றும் செய்யத் திறனில்லாதவர்களே.

வாழ்க்கையில் அழகோ பொருளோ எதுவும் இருக்கவில்லை. சில்லிட்டுப்போன ஒட்டிக் கொள்கிற அர்த்தமின்மைதான் இருந்தது. இந்த நிலை எல்லோருக்கும் பழக்கமாகி விட்டிருந்ததால் யாருமே அதன் வறுமையை துயரச் சாயலை, ஆழமின்மையைக் கவனிக்கவில்லை.

என்னைச் சுற்றி எங்கு பார்த்தாலும் கருமித்தனமான சின்னப் புத்தி படைத்த மக்கள் வாழ்ந்தார்கள். அவர்களின் பேராசை, பகைமை, கெட்ட எண்ணம், சண்டை சச்சரவுகள், வழக்காடல்கள் எல்லாம் எதிலிருந்து கிளம்பின தெரியுமா?

தனது கோழிக் குஞ்சின் காலை அண்டை வீட்டுக்காரரின் பிள்ளை ஒடித்து விட்டான், அல்லது சன்னல் கண்ணாடியை உடைத்து விட்டான், அல்லது ஒரு இனிப்புப் பண்டம் கெட்டுப்போய் விட்டது, முட்டைக்கோஸ்- சூப் அவசியத்துக்கு மேலாக வெந்துவிட்டது, அல்லது பால் கெட்டுவிட்டது என்ற காரணங்களுக்காக, ஒரு தாத்தல் சர்க்கரைக்கோ ஒரு கஜம் துணிக்கோ கடைக்காரன் கூடுதலாக ஒரு தம்பிடி வாங்கி விட்டானே என்பதற்காக, அவர்கள் மணிக்கணக்காக உட்கார்ந்து வருந்த முடியும்.

அண்டை வீட்டுக்கரனுக்கு ஏதாவது ஒரு சிறு துன்பம் ஏற்ப்பட்டாலும் அவர்களுக்கு நிஜமான மகிழ்ச்சி பிறந்துவிடும்; அனுதாபப்படுவதாகப் பாசாங்கு பண்ணி அதை மறைப்பார்கள். பிலிஸ்டைன் (அற்பவாதம்) கனவுகணும் பரலோகத்தில் நான் நன்றாகத் தெரிந்து கொண்டேன்; அதுதான் மக்களிடையை அற்பத்தனமான காசாசை பிடித்த பகைமையை உண்டாக்கி வந்தது.

சட்டிப்பானைகள், கோழி, வாத்துக்கள், முட்டைக்கோஸ், காய்கறிகள், தோசை, அப்பங்கள், மாதாகோவில் விஜயங்கள், ஜனன மரணச் சடங்குகள், மூக்குப் பிடிக்கத் தீனி, பன்றித்தனமான நடத்தை- இதுதான் நான் வளர்ந்த சூழலைச் சேர்ந்த மக்களின் வாழ்க்கையின் உள்ளடக்கம்.

அந்த அருவருக்கத்தக்க வாழ்க்கை எனக்கு சமயங்களில் மறந்து போகிற அளவுக்கு மயக்கத்தை உண்டாக்கிவிடும்.

ஆம், தோழர்களே! வாழ்க்கையின் பண்பற்ற தன்மையும் கொடுமையும் விளைவிக்கிற பீதியை நான் வெகுவாக அனுபவித்திருக்கிறேன். ஒரு சமயம் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்குக் கூடச் சென்றிருக்கிறேன். அதைப் பற்றி நினைக்கிற போதெல்லாம் சுடுகிறமாதிரி ஒரு வெட்கமும் என் மீது எனக்கே ஒரு வெறுப்பும் உண்டாகிறது.

அந்தப் பீதியை நான் வென்று விலக்கியது எப்போது தெரியுமா? கெட்ட குணத்தை விட அதிகமாக மக்களிடம் குடிகொண்டிருப்பது அறியாமைதான் என்று நான் உணர்ந்து கொண்ட போதுதான்.

என்னைப் பயமுறுத்தி வந்தது அவர்களுமல்ல என் வாழ்க்கையுமல்ல; சமூகத்தைப் பற்றியும் மற்றவற்றைப் பற்றியும் என்னிடமிருந்த அறியாமை, வாழ்க்கையின் எதிரே தற்காத்துக் கொள்ளத் தெரியாத நிலை, கையறுந்த நிலை, இவைதான் எனக்குப் பயத்தையளித்து வந்தன என்று தெரிந்து கொண்டபோதுதான்.

ஆம், அதுதான் உண்மை விஷயம். இதைப்பற்றி நீங்களும் நன்றாக யோசிக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறேன். ஏனென்றால், உங்களில் சில பேர் முனகுவதற்குக் காரணம் உங்களுடைய தற்காப்பற்ற நிலை பற்றிய உணர்வும், மனிதனை உள்ளும் புறமும் ஒடுக்கி வதைக்கிறதற்குப் ”பழைய உலகம்” உபயோகிக்கிறதனைத்தையும் எதிர்த்து நிற்பதற்குள்ள திறமையில் நம்பிக்கையின்மையும்தான்.

விஞ்ஞானம், கலை, தொழில் நுட்பம் ஆகிய துறைகளில் மனித பலம் சாதித்த, உண்மையிலே மதிப்பும் நிரந்தரமான பயனும் சௌந்தர்யமும் உள்ள, சாதனைகள் அனைத்தும் சில நபர்களால் சிருஷ்டிக்கப்பட்டவை;

அவர்கள் அவற்றை வர்ணனைக்கெட்டாத கஷ்ட நிலைமைகளிலே வேலை செய்துதான் சிருஷ்டித்தனர்; சமுதாயத்தின் ஆழ்ந்த அறியாமைக்கும், கிறிஸ்து மத நிறுவனத்தின் கொடிய பகைமைக்கும், முதலாளி வர்க்கத்தினரின் பேராசைக்கும், கலை- விஞ்ஞானங்களைப் போற்றிப் பேணும் வள்ளல்களின் சபலத்துக்குரிய தேவைகளுக்கும் ஈடுகொடுத்து எதிர்த்த படிதான் சிருஷ்டித்தார்கள்.

இளைஞர்களாகிய நீங்கள் இதை உணர்ந்திருத்தல் வேண்டும். பண்பாட்டைச் சிருஷ்டித்தவர்களில் சாதாரண உழைப்பாளிகள் பலர் இருந்து வந்துள்ளனர் என்பதையும் நினைவில் நிறுத்த வேண்டும்;

உதாரணம், பாரடே என்கிற மகத்தான பொருளியல் விஞ்ஞானியும் புனைவாளர் ஆகிய எடிஸனும். நூல் நூற்கும் யந்திரத்தைப் புனைந்த ஆர்க்கரைட் ஒரு முடிதிருத்தும் தொழிலாளி; கலைச்சித்திர வேலைப்பாடுள்ள மண்பாண்டத் தொழிலைச் சிருஷ்டித்த தலைசிறந்த நபர்களில் பெர்னார்ட் பாலிஸ்ஸி என்பவரும் ஒருவர். அவர் ஒரு கொல்லன்; உலகறிந்த தலை சிறந்த நாடகாசிரியராகிய ஷேக்ஸ்பியர் ஒரு சாதாரண நடிகர்; மோலியேரும் அப்படியேதான்.

மக்கள் எப்படித் தமது ஆற்றல்களை வளர்த்துக் கொள்ள முடிந்தது என்பதற்கு இம்மாதிரி நூற்றுக்கணக்கான உதாரணங்களைத் தரக்கூடும்.

உங்களிடத்திலும் உங்கள் பலத்திலும் நம்பிக்கை கொள்ளும் உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள்; இடையூறுகளைச் சமாளிப்பதன் வழியேதான், சித்தத்தை எஃகுபோல் ஆக்கிக் கொள்வதின் வழியே தான் அந்த நம்பிக்கையைப் பெறமுடியும்.

பழைமையின் சின்னத்தனமான இழிந்த பாரம்பரியத்தை உங்களிடமிருந்தும் உங்கள் சூழலிலிருந்தும் அழித்துவிட நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும்; இல்லாவிட்டால், பிறகு நீங்கள் எப்படி பழைய உலகத்தைத் துறப்பதற்கு (இந்தச் சொற்கள் தொழிலாளர் விடுதலை கீதம் என்று 1875 – லிருந்து இருந்து வரும் ஒரு ருஷ்யப் புரட்சிப் பாடலிலிருந்து எடுக்கப்பட்டவை) சக்தி பெற முடியும்? அந்தப் பாடல் போதிக்கிறபடி நடப்பதற்கு உங்களுக்கு வலிமையும் விருப்பமும் இல்லாவிட்டால் அதை உங்களால் பாட முடியாது.

தன்னைத் தானே வென்றுகொள்வது கூட ஒருவனுக்கு எவ்வளவோ வலுவூட்டிவிடுகிறது. உடற்பயிற்சி ஒருவனுக்கு அதிக ஆரோக்கியமும் தெம்பும் தருகிறது என்று உங்களுக்குத் தெரியும். அதே மாதிரியான பயிற்சியை மனத்திற்கும் சித்தத்துக்கும் தர வேண்டும்.

(‘நான் எவ்வாறு எழுதக் கற்றுக்கொண்டேன்’- மாக்ஸிம் கார்க்கியின் நூலிலிருந்து தொகுக்கப்பட்டது)

________________________________________________

–   புதிய கலாச்சாரம், ஜனவரி – 1997

___________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: