முகப்புமறுகாலனியாக்கம்கல்விசிறுமி சுருதி கொலை:சீயோன் பள்ளியை அரசுடமையாக்கு!

சிறுமி சுருதி கொலை:சீயோன் பள்ளியை அரசுடமையாக்கு!

-

சேலையூர் சியோன் மெட்ரிக் பள்ளியை அரசுடமையாக்கும் வரைபோராடுவோம்  !

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பில் தெருமுனைக்கூட்டம்

சேலையூரில் உள்ள சீயோன் மெட்ரிக் பள்ளியில் படித்து  வந்தசுருதி, அப்பள்ளி முதலாளியின் லாபவெறியினால் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும் இக்கொலைக்கு காரணமான அப்பள்ளியினை அரசுடமையாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பில்  02.08.12 அன்று தாம்பரம் மார்க்கெட் பகுதியில் மாலை  6 மணிக்கு தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.

”பாவம் அந்தக் குழந்தை , வாழ வேண்டிய வயதில் விதி அழைத்துக் கொண்டதே” என்ற அனுதாபங்கள் பரவிக் கிடந்த இடங்களில் எல்லாம் சென்று கண்ணீர் மட்டுமல்ல, இக்குழந்தையின் இறப்புக்கு காரணமான தனியார்மயத்தினை ஒழிப்பதற்கான போராட்டம்தான் தற்போதைய தேவை என்பதை உழைக்கும் மக்களிடம் பதிய வைக்கும் வகையில் இந்த தெருமுனைக் கூட்டம்அமைந்தது.

கடந்த 25 அன்று தனியார்மய லாபவெறிக்கு படுகொலை செய்யப்பட்ட சுருதிக்கு அஞ்சலி செய்யும் நிகழ்ச்சியுடன் கூட்டம் தொடங்கிய இந்த கூட்டத்திற்கு புரட்சிகர மாணவர்  – இளைஞர் முன்னணியின் மாநில அமைப்புக் குழு உறுப்பினர் தோழர் சரவணன் தலைமை தாங்கினார். அவர் தனது தலைமை உரையில் “சிறுமி சுருதிக்கு நடந்தது விபத்து என்று கூறுவது அயோக்கியத்தனம் என்றும் இது படுகொலை என்பதை புரிந்து கொண்டதால்தான் முடிச்சூர் கிராம மக்கள் கொதித்தெழுந்து போரடி பேருந்தினை தீ வைத்து எரித்தார்கள்.  இது இரங்கல் கூட்டம் அல்ல, கண்ணீர் மட்டும்  விட்டு விட்டுப் ,போவதல்ல நமது வேலை, .தினமும் பல குழந்தைகள் படுகொலை செய்யப்படுகிறார்கள். கல்வித் தந்தைகள், கல்வி வள்ளல்கள் என்ற பெயரில் நல்லப் படிப்பைத் தருகின்றோம் என்று மக்களை ஏய்த்து பணத்தை பிடுங்குவதோடு மட்டுமின்றி உயிரையும் பறித்துக்கொண்டு இருக்கின்றனர். கல்வி கட்டணம், புத்தகக் கட்டணம், எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிட்டீஸ், பேருந்து கட்டணம் என்று பகற் கொள்ளையை நடத்திவரும் தனியார் பள்ளிகள், அதை கொடுக்க முடியாமல் தவிக்கும் பெற்றோர்களை மிரட்டுவதும், குழந்தைகளை அடித்து கொடுமைப் படுத்துவதும் என ரவுடிகளாக செயல்படுவதையும் கூறி இந்த தனியார் கல்வி நிறுவனங்கள் எப்படி தரமான கல்வியைத் தரும் ? இந்த கல்வி முறையில் படிக்கின்ற குழந்தைகள் சிந்தனை சீரழிக்கப்பட்டு சமூகத்திற்குஉதவாதவையாக  மாற்றப்படுவதையும் ” விளக்கினார்.

“அடிப்படை வசதிகள் அரசால் மறுக்கப்பட்ட நிலையிலும் அரசுப்பள்ளியில் படித்த மாணவர்கள் 800 பேர்கள் மருத்துவப் படிப்புக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ஆனால் கல்வியை ஒழுங்காக அளிக்காமல், கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டும், சட்டவிரோதமாக செயல்பட்டும் வரும் தனியார் பள்ளிகள் மீது அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாது. ஏனெனில் குடிக்கின்ற தண்ணீர் முதல் நாம் பயன் படுத்துகின்ற அனைத்தும் காசாகிவிட்ட நிலையில் கல்வியிலும் தனியார்மயம் தரமான கல்வி என்ற பெயரில் நுழைந்து உயிர் வாழும் உரிமையான கல்வியைசூறையாடிக் கொண்டிருப்பதற்கு எதிராக உழைக்கின்ற மக்கள் வீதியிலிறங்கி போர்க்குணமான போராட்டங்களில் ஈடுபடுவதன் மூலம் தான் இந்த தனியார்மயத்தை ஒழிக்க முடியும், அதற்குமக்களை அணி திரட்டுவதற்கான கூட்டம்தான் இது.” என்று தனது உரையை நிறைவு செய்தார்.

அடுத்ததாகப் பேசிய புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில அமைப்புச்செயலாளர் தோழர். வெற்றிவேல் செழியன், முன்னாள் சாராயவியாபாரியும், இந்நாள் கல்வி முதலாளியுமான ஜேப்பியாரின் கல்வி நிறுவனத்தில் வேலை செய்யும் ஒரு ஓட்டுனர் என்று தனது உரையினை  ஆரம்பித்தார். “ இந்தப் பிரச்சினையை தொழிற்சங்கத்தை சேர்ந்த தான் பேசுவதற்கு முழு உரிமையும் உண்டென்றும் ஏற்கனவே  இந்த சீயோன் பள்ளி முதலாளி விஜயன் தன் கல்வி நிறுவனங்களில் வேலை செய்த ஓட்டுனர்களை தினமும் 12 மணி நேரம் கசக்கிப் பிழிந்தும் சம்பளம் கொடுக்காமலும் ஏமாற்றி வந்ததையும் அதைக்கண்டு கொதித்துப் போன அந்த தொழிலாளிகள் புஜதொமு சங்கத்தை ஆரம்பித்து போராடியதையும் அதனாலேயே அத்தொழிலாளர்கள் வேலை நீக்கம்செய்யப்பட்டதையும்” எடுத்துக்கூறினார்.

சங்கம் ஆரம்பித்த தோழர்களை ரவுடிகள் மூலம் மிரட்டிய  ஒரு ரவுடி இந்த நல்லாசிரியர் விருது பெற்றவர், கல்வி வள்ளல் என்று புகழப்படுவதையும் அம்பலப்படுத்தினார். தொழிலாளியான சுருதியின் தந்தை தனக்கு லாபம் வரும் என்பதற்காக பழைய வண்டியை வாங்கி ஓட்டக்கூடாது என்று   நேர்மையுடன் இருந்ததை பல நூறுகோடி சொத்துடையவிஜயன் தன்னுடைய லாபம் குறையக்கூடாது என்பதால் பழைய வண்டிகளை வாங்கி இயக்கிய அயோக்கியத்தனத்துடன் ஒப்பிட்டு பேசினார்.

உற்பத்தி துறையைவிட லாபம் கொழிக்கும் துறையாக மாறிப்போன கல்வித்துறையை வைத்து பல கோடிகளை முதலாளிகள் பெருக்கிக்கொள்கிறார்கள். அதற்கு ஏற்றபடி அரசாங்கம் அரசுப்பள்ளிகளை இழுத்து மூடி தனியார் பள்ளிகளில் மாணவர்களை வலுக்கட்டாயமாக தள்ளி விடுவதையும் விளக்கினார்.

இப்படி ஒரு விஜயன்அல்ல, பல விஜயன்கள் பல சுருதிகளை தினமும் கொன்று கொண்டிருக்கிறார்கள். சாதாரணமக்கள் கூட தனியார் பள்ளி நிறுவன முதலாளிகளை மாபியா குற்றக் கும்பல் என்று கூறும் அளவுக்கு, தனியார் கல்வி நிறுவன முதலாளிகளின் அயோக்கியத்தனத்தை மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர். இன்று விவசாயம் , சிறு தொழில் , வணிகம் என்று அனைத்துமே தனியார் – பன்னாட்டு முதலாளிகளால் அழிக்கப்பட்ட சூழலில்  இந்த மறுகாலனியாக்கத்தை வேரறுக்க மக்கள் அணி திரண்டு போராட வேண்டும்.

அன்று தொழிலாளர்கள் காய்ந்த வயிறுடன் உணவின்றி தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக போராடும்போது, விஜயனிடம் பிரியாணி வாங்கித்தின்ற காவல் துறையும் கல்வித்துறை அதிகாரிகளும்  இன்று அவனை கைதுசெய்திருக்கிறார்கள் என்றால் அது மக்களின் போராட்டம்தான் அதை சாதித்தது. அப்படி 5000 பேர்கள் போராடி அவனை கைது செய்ய முடியுமென்றால் லட்சக்கணக்கான மக்கள் வீதியிலிறங்கி போராடும் போது கண்டிப்பாக இந்த தனியார்மயத்தை ஒழிக்க முடியும் “ என்று தனது உரையை நிறைவு செய்தார்.

இறுதியில் புமாஇமு சென்னைக் கிளைத் தோழர்களின் புரட்சிகர கலை நிகழ்ச்சி தனியார்மயத்திற்கு எதிராக போராட வேண்டும் என்ற உணர்வினை ஊட்டும் வகையில் அமைந்தது.

இந்த தெருமுனைக்கூட்டத்தில் மாணவர்கள் – இளைஞர்கள், பெண்கள், தொழிலாளர்கள், பெற்றோர்கள், மற்றும் தாம்பரம் பகுதி வாழ் உழைக்கும் மக்கள் கலந்து கொண்டனர். வியாபாரிகளும் நிகழ்ச்சிகளை  கவனித்து ஆதரவளித்தனர். மேலும் அந்த தெருமுனைக்கூட்டத்தில் மட்டும் 10000 ரூபாய் வரை துண்டேந்தி வந்த தோழர்களுக்கு மக்கள் மனமுவந்து நிதியளித்தார்கள். உழைக்கும் மக்கள் தானாகவே முன்வந்து கூட்டத்தின் நடுவில் செல்பவர்களை முறைப்படுத்தியும் வந்தனர் .

இந்த தெருமுனைக் கூட்டத்தை ஒட்டி தாம்பரம் சுற்றியுள்ள பகுதிகளில் தோழர்கள் பிரச்சாரம்செய்த போது உழைக்கும் மக்கள்  கல்வியில் தனியார்மயத்தை ஒழித்தே தீர வேண்டும் என்பதை புரிந்து கொண்டும், பலர் கண்ணீர் விட்டும் தனியார் பள்ளி முதலாளிகளை வசைமாரிப் பொழிந்து  நமக்கு ஆதரவளித்தார்கள், பார்ப்பன மற்றும் மேட்டுக்குடிகளோ “குழந்தை செத்ததுக்கு அவர் என்ன பண்ணுவார்?, செத்தது விதி” என்றனர். அதற்கு தோழர்கள் “உங்க குழந்தை செத்தாலும் அது விதிதானா?”  என்று கேட்டு அவர்களுக்கு உறைக்கும்படி விளக்கினர்.

காசு கொடுத்தால்தான் தரமான கல்வி கிடைக்கும் தனது மூளையில் அறைந்து வைத்திருக்கும் மேட்டுக் குடியினரின் மயக்கத்தை அவ்வளவு சீக்கிரத்தை உடைத்து விட முடியாது.  ஆனால் உழைக்கும் மக்களின் மத்தியில் தனியார்மயத்தை ஒழித்தால் மட்டுமே கல்வி கற்கும் உரிமையை பெற முடியும் என்ற கருத்தைபதிய வைப்பதாக இந்த தெருமுனைக்கூட்டம் அமைந்தது.

படங்களை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்

______________________________________________________________________

– தகவல்:  புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி , சென்னை.

________________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

  1. அரசுடைமையா…. அதெல்லாம் நடக்காதுடா . இப்ப அரசு பள்ளில உதவித்தோகை எல்லாம் ஆசிரியனுங்களே சூரிட்டனுங்க… அதுக்காக அரசு பள்ளியெல்லாம் தனியார் ஆக்கிடமுடியுமா… நடக்கற கதயா பேசுவீயா….

  2. Two deaths. One in Bus and one in Swimming Pool. Vinavu’s reacts in two different ways. In case 1 (Sruthi) it wants the School to be taken over by Govt and case 2) it wants YGP to be arrested.

    And vinavu talks about Fascism!!!!!!!!!!!!!!!!!. Joke of the century.

    Congrats Vinavu for joining the group of Fascists or atleast for giving a new meaning for Fascism

  3. புதிய தலைமுறையில் நேற்று தேர்வில் தோல்வி காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது குறித்த நேர்பட பேசு நிகழ்ச்சியில் சிறுமி ஸ்ருதி கொலைசெய்யப்படுவதற்கு காரணமான சியோன் பள்ளி முதலாளி விஜயன் கலந்து கொண்டு மாணவர்-பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்குகிறார்.

    கல்வி என்பது பிரதானமாக காசுக்கானதாகவும், காசு சம்பாதிப்பதற்கானதாகவும் அரசு மாற்றிவிட்டதால் தேர்வில் தோல்வி, மதிப்பெண் குறைவு எனும் போது அதனை எதிர்கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு மாணவர்கள் தள்ளப்படுகின்றனர். இந்த பக்குவத்திற்க்கு தான் இவர்களுடைய கல்வி மாணவர்களை வளர்க்கிறது.

    பன்னாட்டு கம்பெனிகளுக்கு அடிமைகளை உற்பத்தி செய்யும் இந்த கல்வி முறை தோல்வி குறித்து அப்படிப்பட்ட அடிமைகளாக மாணவர்களை உற்பத்தி செய்யும் முதலாளிகளான பச்சமுத்துவும், சியோன் விஜயனும் கல்விவின் தரம் குறித்து பேசுவதை என்னவென்பது….?

    இதைவிட வெட்கக்கெடு இருக்க முடியாது.

Leave a Reply to புமாஇமு பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க