மறைமலைநகர் விபத்து : நீதி கேட்ட மக்களை வேட்டையாடும் போலீசு !

சென்னை அருகே மறைமலைநகர் அடுத்த பேரமனூரை சேர்ந்த லாவன்யா என்ற பெண், விபத்தில் உயிரிழந்தார். நீதிகேட்டு போராடிய மக்களை காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கியிருக்கிறது, போலீசு.

 “சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது தடியடி! பொதுமக்களின் எதிர் தாக்குதலில்  எஸ்.பி. மண்டை உடைப்பு! விடிய விடிய வீடு வீடாக புகுந்து கைது செய்யும் போலிசின் அராஜகம்!  

சென்னை அருகே மறைமலைநகர் அடுத்த பேரமனூரை சேர்ந்தவர் புருஷோத்தமன் மனைவி லாவண்யா. இவர்களது மகள் நிஷான். சனிக்கிழமை (21.04.2018)  இரவு, மறைமலைநகர் சாமியார்கேட் பகுதியைச் சேர்ந்த புஷ்பராஜ் என்பவருடன் பைக்கில் லாவண்யா தனது மகளுடன் செங்கல்பட்டு சென்றுவிட்டு, சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக மகேந்திரா சிட்டி சிக்னல் அருகே வந்தபோது, மரக்காணத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பஸ்சின் பின்புறத்தில் பைக் மோதியதில் லாவண்யா இறந்தார், புஷ்பராஜ், நிஷான் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

இவர்களை ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்ப தாமதமானதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் லாவண்யாவின் சடலத்துடன் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

வண்டலூர் டி.எஸ்.பி. வளவன், மறைமலைநகர் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன் தலைமையில் வந்த போலீசு சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் மக்கள் கலையவில்லை. இதனைத்தொடர்ந்து காஞ்சிபுரம் எஸ்.பி. சந்தோஷ் ஹதிமானி தலைமையில் அதிவிரைவு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேசிப் பார்த்தனர் அப்போதும் மக்கள் போராட்டத்தை கைவிடவில்லை.

போக்குவரத்தை சீராக்க வேண்டுமென்ற ‘கடமை’ உணர்வில் மறியலில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தியது போலீசு. இதனால் ஆத்திரமடைந்த மக்கள்  பதிலுக்கு கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் எஸ்.பி. சந்தோஷ் ஹதிமானி மற்றும் மேலும் சில போலீசார் காயமடைந்தார்.

தனது அதிகாரத்தின் மீது கைவைத்து விட்ட வெறியில்  ஆத்திரமடைந்த போலீசு தடியடியை தீவிரப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், காவல் காவல்துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்தது, அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தியது உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் 100-க்கும் மேற்பட்ட மக்கள்  மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தொடர்ந்து  நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று காலை வரை விடிய விடிய அப்பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்து கண்ணில் பட்ட ஆண்களை எல்லாம் கைது செய்து  ரகசிய இடத்துக்கு அழைத்து சென்றனர். போலீசின் இந்த ‘சட்ட விரோத’ நடவடிக்கையால் ஆண்கள் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளனர். எனினும் 11 ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாங்கள் எடுத்த வீடியோ காட்சிகளைக் கொண்டு தலைமறைவாக உள்ளவர்களை,  கைது செய்ய ‘மதம் பிடித்த யானையைப்போல்’ அலைகிறது போலீசு.  அப்பகுதியை கண்காணிக்க வண்டலூர் டி.எஸ்.பி. வளவன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசு குவிக்கப்பட்டு  கிராமத்தையே மிரட்டி வருகிறது போலீசு.

பொதுவாக தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சாலைகளில்  விபத்தை தடுக்க ஒரு படிநிலை – படிநிலையான கட்டுப்பாட்டை பயன்படுத்த வேண்டும் என்பது விதி. அதில் முக்கியமாக “ ஒரு விபத்து நடந்தால் பாதிக்கப்பட்ட நபருக்கு அவசர ஊர்தி மூலம் மருத்துவமனைக்கு உடனே அழைத்து செல்வது போன்ற நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்” என்று உள்ளது. எப்பொழும் ரோந்து பணியில் போலீசு ஈடுபட்டிருக்க வேண்டும்.  ஆனால் சாலை விபத்துக்களில் எந்த விதிகளையும் பின்பற்ற அரசு தயாராக இல்லை.

இதன் காரணமாகவே உயிரிழப்பும் நேரிடுகிறது. இந்தப் பின்னணியில் தான் மக்கள் கோபம் கொண்டு போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.  ஆனால், “சாலை விபத்து என்பது தவிர்க்க  முடியாதது போலவும், நடந்தது நடந்து விட்டது வேறு என்ன செய்ய முடியும்” என்று போராட்டத்தில் ஈடுபவர்களை ‘சமாதானப்படுத்துவதன்’ மூலம் விபத்தை நியாயப்படுத்துவதே போலீசின் அணுகுமுறையாக உள்ளது.

அதற்கு மக்கள் உடன்படாதபோது வன்முறையில் ஈடுபட்டதாக அவர்கள் மீது தடியடி நடத்தி தனது அதிகாரத்தை நிலைநாட்ட முயற்சிக்கிறது போலீசு. மக்களை வன்முறையாளர்களாக சித்தரிக்கவும் முயல்கிறது.

ஜல்லிக்கட்டு முதல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, ஐ.பி.எல். போட்டிக்கு எதிராக நடத்தப்பட்ட சென்னை அண்ணா சாலை, சேப்பாக்கம் ஸ்டேடியம் முற்றுகைப் போராட்டம் வரை வன்முறையில் ஈடுபட்டது போலீசு தான்.

போலீசின் ‘வன்முறை’ சட்டப்பூர்வமாகவும், மக்களின் நியாயமானப் போராட்டங்கள்  ‘அராஜக’மாகவும் சித்தரிக்கப்பட்டு தண்டிக்கப்படுகிறார்கள் நமது மக்கள்!

வினவு செய்திப் பிரிவு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க