ப்பிள் நிறுவன விற்பனை அதிகாரி பணி முடித்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது உத்திரப் பிரதேச போலீசின் துப்பாக்கிச் சூட்டில் பரிதாபமாக பலியாகியிருக்கிறார். இந்துத்துவ ரவுடி சாமியார் ஆதித்யநாத் பதவியேற்றதிலிருந்து தொடங்கிய என்கவுண்டர் பலிகளின் பட்டியலில் ஆப்பிள் நிறுவன விற்பனை அதிகாரி 67-வது நபராக சேர்க்கப்பட்டுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு (28.09.2018) தனது சக பணியாளருடன் காரில் பயணித்துக்கொண்டிருந்தார் ஆப்பிள் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றிக்கொண்டிருந்த விவேக் திவாரி. லக்னௌ அருகே இவர்களுடைய வாகனத்தை இருசக்கர வாகனத்தில் வந்த போலீசார் இருவர் வழிமறித்துள்ளனர். ஒரு போலீசுக்காரர் கையில் இருந்த லத்தியால் காரின் கண்ணாடி வழியே விட்டு தாக்கி நிறுத்த முயன்றிருக்கிறார். இதில் பதட்டமடைந்த விவேக் திவாரி, தொடர்ந்து காரை இயக்கியிருக்கிறார். இன்னொரு போலீசுக்காரர், எடுத்த எடுப்பிலேயே துப்பாக்கியை எடுத்து விவேக் திவாரியை சுட்டிருக்கிறார். இரத்த வெள்ளத்தில் சிறிது தூரம் சென்ற அந்தக் கார் பாதையோரம் இருந்த சுவரில் மோதி நின்றிருக்கிறது.

கொல்லப்பட்ட விவேக் திவாரி.

காரில் உடன் பயணித்த அலுவலக பெண் சனா கான், உயிருடன் இருந்த அவரை மருத்துவமனையில் சேர்க்க அருகில் இருந்தவர்களிடம் உதவி கேட்டிருக்கிறார். ஆனால், எவரும் உதவவில்லை.

“சாலையின் இருபுறமும் ட்ரக்குகள் நின்றன. நான் அன்று என்னுடைய போனை வீட்டிலேயே விட்டுவிட்டேன். சாரின் போன் லாக்-ஆகி விட்டது. அருகில் இருந்தவர்களிடம் நிலைமையைச் சொல்லி போனைக் கேட்டேன். எவரும் தரவில்லை. 15 நிமிடம் கழித்து போலீசு ரோந்து வாகனம் வந்தது, அவர்கள் ஆம்புலன்சை அழைத்தார். அது வரவும் தாமதமானதால் போலீசு வாகனத்தில் கொண்டு செல்லக் கேட்டேன். மருத்துவமனைக்கு சாரை கொண்டு சென்றோம். ஆனாலும் காப்பாற்ற முடியவில்லை” என்கிறார்.  நடந்த விவரங்கள் குறித்து போலீசு வாக்குமூலம் வாங்கிக் கொண்ட பிறகும் தன்னை கண்காணிப்பதாக சனா கான் பயம் கொள்கிறார்.

‘தேவையில்லாமல் ஆயுதத்தை பயன்படுத்திய’ குற்றத்துக்காக பிரசாத் சவுத்ரி, சந்தீப் என்ற இரு போலீசுக்காரர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறுகிறது உ.பி. போலீசு. சுட்டுக்கொல்லப்பட்டவரின் பெயர் விவேக் திவாரி என்பதாலும் அவர் ஆப்பிள் நிறுவனத்தில் பணியாற்றுகிறவர் என்பதாலும் இந்த ‘நடவடிக்கை’ எடுக்கப்பட்டிருக்கிறது என யூகிக்கலாம்.

இதுவரை உ.பி.யில் 1500 என்கவுண்டர்கள் நடத்தப்பட்டிருக்கின்றன; அதாவது ஆதித்யநாத் பதவி ஏற்ற பிறகு. இதில் குற்ற சம்பவங்களில் தொடர்புடைய 66 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 700 பேர் காயங்களுடன் தப்பினர். 4 போலீசுக்காரர்கள் இந்த மோதலில் இறந்துள்ளனர். 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த என்கவுண்டர் ‘ஆபரேசனி’ன் போது காயமடைந்துள்ளனர்.

சுட்டுக்கொன்ற போலீசு கான்ஸ்டபிள் பிரசாத் சவுத்ரி.

இந்த ஆண்டு மே மாதம், முசாஃபர் நகரில் 50-வது என்கவுண்டர் கொலை செய்த போலீசுக்காரருக்கு ரூ. 50 ஆயிரம் சன்மானம் அளித்து ‘சிறப்பி’த்தது கொலைவெறி சாமியார் அரசு.

தான் பதவியேற்றவுடன் கிரிமினல்கள் அனைவரையும் சரண்டராகுங்கள் அல்லது மாநிலத்தை விட்டு ஓடுங்கள் (முதல் நபராக கொலை குற்றம்சாட்டப்பட்ட கிரிமினல் முதல்வர் என பெயர் பெற்ற ஆதித்யநாத் ஓடியிருக்கவேண்டும். ஆனால், இந்த இடத்தில் அவர் நீதியை நிலைநாட்ட வந்த தேவன் ஆகிவிட்டார்) என்றார். அதன்படி ‘ஆபரேசன் க்ளீன்’ என்ற திட்டத்தை போலீசு தொடங்கியது. உ.பி.போலீசு தெரிவித்துள்ள தகவலில் 2017 மார்ச் 20 முதல் 2018 ஜனவரி 31 வரை 1142 என்கவுண்டர்கள் நடத்தப்பட்டுள்ளன.

உ.பி.யின் முன்னாள் டி.ஜி.பி. ஏ.எல். பானர்ஜி  சொல்கிறார், “உ.பி. போலீசுக்காரர் இப்போது தலைமை காவல் அதிகாரிகளிடம் மட்டுமல்லாமல், அரசியல்வாதிகள், அதிகாரிகள், அரசியல் கட்சிகளின் செய்தி தொடர்பாளர்களுக்குக்கூட அறிக்கை அளிக்க வேண்டும்” என்கிறார்.

“நேரமின்மை காரணமாக போதிய பயிற்சியை காவலர்களுக்கு தர முடிவதில்லை. காவலர்களின் பயிற்சி காலத்தை ஒன்பது மாதங்களிலிருந்து ஆறு மாதங்களாக குறைத்துவிட்டோம். இந்த துப்பாக்கிச்சூட்டில் தொடர்புடைய காவலர்கள் இன்னமும் பயிற்சியில் இருந்து கொண்டிருக்கலாம். ஆனால், அவர்கள் பணியில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு துப்பாக்கியை எப்படி கையாள்வது என்பதே தெரியவில்லை” என்கிறார் முன்னாள் போலீசு அதிகாரி. போலீசு அதிகாரி முட்டுக்கொடுத்தாலும் சுடச்சொல்கிற உத்தரவு இருப்பதால்தானே ஒரு காவலர் துப்பாக்கியைத் தூக்குகிறார்? போலீசு அதிகாரி சொல்வதுபோல, சட்டத்தின்படி, எதிர்த் தாக்குதல் நடத்த மட்டுமே துப்பாக்கியை தூக்க வேண்டும். சாலையில் சென்று கொண்டிருந்த விவேக் திவாரி எவரைத் தாக்கினார்?

படிக்க:
உ.பி காவி தர்பார் : 1200 போலி மோதல் கொலை – 160 பேர் NSA – வில் கைது ! சிறப்புக் கட்டுரை
ரவுடி யோகி ஆதித்யநாத் : பார்ப்பனிய பாசிசத்தின் ஜனநாயகம்

தன்னுடைய 32 ஆண்டுகால பணி அனுபவத்தில் ‘உண்மையான என்கவுண்டர்’ மிக அரிதாக நடந்ததென மற்றொரு ஓய்வுபெற்ற போலீசு அதிகாரி எஸ்.எஸ். தாரபூரி ஒப்புக்கொள்கிறார் . என்கவுண்டர்களால் ஒருபோதும் குற்றங்களை குறைக்க முடியாது என்பது அவர் கருத்து. “உ.பி.யில் நடக்கும் என்கவுண்டர்கள் அனைத்தும் திட்டமிட்டு அரங்கேற்றப்படுபவையே” என்கிறார் அவர்.

உ.பி.யின் கொலைகார முதல்வர் யோகி ஆதித்யநாத்.

வெளியான தகவல்களின்படி அதிக அளவில் மீரட் பகுதியில் 449 என்கவுண்டர்கள் நடத்தப்பட்டுள்ளன. அடுத்து ஆக்ரா பகுதியில் 210 என்கவுண்டர்கள். மூன்றாவது இடம் பரேலிக்கு 196 என்கவுண்டர்கள். முதலமைச்சர் தொகுதியான கோரக்பூர் குறைவான என்கவுண்டர் நடந்த இடம். (முதலமைச்சர் தன் பரிவாரங்களுக்கு சிறப்பு சலுகை கொடுத்திருக்கிறார்)

திவாரியின் படுகொலைக்குப் பிறகு ‘தி ஏசியன் ஏஜ்’ இப்படி எழுதியிருந்தது, “ஆயுதம் தாங்கிய காவலருக்கு அரைகுறை பயிற்சி இருப்பது தெரிகிறது. ஆனாலும் அவரிடம் குண்டுகள் சேர்க்கப்பட்ட துப்பாக்கியை தந்திருக்கிறார்கள். போதிய பயிற்சி இல்லாதவர்களுக்கு லத்தி கொடுப்பது போதுமானது. இவர்களிடம் துப்பாக்கியை தருவது கொல்வதற்கு தரும் அனுமதியைப் போன்றதாகும். சுடுவதைக் காட்டிலும் தொடர்புடையவரை நிலைகுலையச் செய்யலாம் – ஆனால் இது கொல்வதற்கான பகிரங்க அழைப்பு!”.

உ.பி. நீர்பாசன துறை அமைச்சர் தரம்பால் சிங் சனிக்கிழமை அளித்த பேட்டியில் ஆதித்யநாத் ஆட்சி காலத்தில் ‘உண்மையான கிரிமினல்’கள் சுட்டுவீழ்த்தப்படுவார்கள்” என்கிறார். கிருஷ்ண பரமாத்மா போல் கையைத் தூக்கி அருள்பாலிக்காத குறையாக எல்லோருக்கும் நீதி கிடைக்கும் என்கிறார். குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்கும் என்கிறார். இந்தியாவுக்கு நரேந்திர மோடி பிரதமராக கிடைத்திருப்பதும், உ.பி.க்கு ஆதித்யநாத் கிடைத்திருப்பதும் மக்கள் செய்த ‘பாக்கியம்’ என்கிறார்.

ஆமாம், கொலைகார ஆட்சியாளர்கள் கைகளில் துப்பாக்கியோடு அலைவது பாக்கியமா? பயங்கரமா?

– கலைமதி

செய்தி ஆதாரம்: