அம்பானியின் ஜியோவும் தேவையில்லை ! ராம்தேவின் பதஞ்சலியும் தேவையில்லை | உரை | காணொளி

செப்டம்பர் 26, 2018 சென்னையில் நடைபெற்ற ’அமைதிக்கான உரையாடல்’ நிகழ்வில் உரையாற்றிய இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தின் ஆன்னி ராஜா, சமூக செயற்பாட்டாளரகள், வ.கீதா, நிஷா சித்து ஆகியோரின் உரை காணொளி

டந்த செப்டம்பர் 26, 2018 அன்று சென்னையில் நடைபெற்ற ’அமைதிக்கான உரையாடல்’ நிகழ்வில் இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தின் தேசிய பொதுச் செயலாளர் ஆன்னி ராஜா கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசுகையில், “வீட்டிலிருந்து போன பெண்கள் திரும்பி வருவார்களா எனத் தெரியாத நிலைமையில் தான் இந்தியா இருக்கிறது. இங்கு மராட்டியத்தில் ஒரு பாஜக எம்.எல்.ஏ, இளைஞர்களை நோக்கி, “ஒரு பெண்ணைச் சுட்டிக் காட்டுங்கள் நான் கடத்திக் கொண்டு வருகிறேன்” என்று கூறுகிறார். அரியானாவின் ஒரு பாஜக பெண் எம்.எல்.ஏ., “இளைஞர்கள் வேலையில்லாத காரணத்தால் விரக்தியடைந்து போய்தான் பாலியல் வன்முறையில் ஈடுபடுகிறார்கள்” எனக் கூறியிருக்கிறார்.

இதற்கு முன்பிருந்தே இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை நடந்து வருகிறதுதான். ஆனால், அவை இன்று உச்சகட்டத்தை அடைந்துள்ளன.
ஜார்கண்டில் பசுவைக் கொண்டு சென்ற 25 வயது இளைஞனின் காலை வெட்டி ரத்த வெள்ளத்தில் அவனை துடிதுடிக்கக் கொன்றது ஒரு கும்பல். கொலைகாரர்களின் மிது வழக்கு பதியாமல், அந்த இளைஞனின் தாயின் கை வளையல் உடைந்து கொலைகாரனின் மீது பட்டதற்கு அப்பெண்ணின் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் பட்டினிச் சாவுகள் பெருகிவிட்டன. இவை அனைத்தும் நடக்கையில் இந்தியாவின் பிரதமர் மோடி இதுகுறித்து வாய் திறக்க மறுக்கிறார்.

இந்த நிலை மாற வேண்டுமெனில், அனைத்து கட்சிகளும், அமைப்புகளும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டிய சூழலில் நாம் பிரிந்து கிடக்கிறோம். அரசியல் சாசன சட்டம் உரக்கச் சொல்லும் மதச்சார்பின்மையை உயர்த்திப் பிடிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. அதற்காக நாம் ஒன்றிணைவோம் போராடுவோம்!” என்றார்

அவரது உரையின் முழுமையான காணொளி :

இவரைத் தொடர்ந்து சமூக செயற்பாட்டளர் வ.கீதா பேசினார்.

அவர் பேசுகையில், “பெண்களுக்கு சமூகத்தில் வெளியில் நடக்கும் வன்முறையை விட குடும்பத்திற்குள் நடக்கும் வன்முறையே மிக அதிகம். இந்திய குடும்ப அமைப்பே பெண்களுக்கு எதிரானதாகவே இருக்கிறது. இப்படிப்பட்ட குடும்ப அமைப்பு நியாயமானதாக நமக்குக் காட்டப்படுகிறது. இது பல்வேறு விதமாக நமக்கு சொல்லித்தரப்படுகிறது, இந்தக் குடும்ப அமைப்பு சாதிய ஆதிக்கத்தை நிலைநாட்டுவதாக இருக்கிறது. இந்த அரசானது, இக்குடும்ப அமைப்பிற்கும், சாதியத்திற்கும் பாதுகாப்பு அரணாக இருக்கிறது.

ஆளும் வர்க்கங்களின் நலனையும், ஆதிக்க சாதிகளின் நலனையும் பாதுகாப்பதுதான் அரசின் கடமையாக இருக்கிறது. ஆளும் வர்க்கங்களின் வளர்ச்சியும் ஆதிக்க சாதிகளின் வளர்ச்சியும்தான் நாட்டின் வளர்ச்சியாகக் காட்டப்படுகிறது.” என்று குறிப்பிட்டார்.

அடுத்ததாக இராஜஸ்தான் பெண்கள் அமைப்பைச் சேர்ந்த நிஷா சித்து பேசினார். அவரது பேச்சை ஆன்னி ராஜா சுருக்கமாக தமிழில் மொழி பெயர்த்தார்.

நிஷா சித்து தனது உரையில், “பல மொழிகள் பேசும் செயற்பாட்டாளர்கள் அனைவரின் ஒரே நோக்கமும் அமைதியான இந்தியாவை உருவாக்குவதுதான். பொய்கள் பல சொல்லி ஆட்சி நடத்துகிறது மத்திய அரசு. பெண்களுக்கு எதிரான வன்கொடுமையை காங்கிரஸ் கூட்டணி அரசு தடுக்கத் தவறி விட்டது எனக் கூறி ஆட்சிக்கு வந்தார் மோடி. அவர் வந்த பின்னர் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் குறைந்தபாடில்லை.

நமக்கு அம்பானியின் ஜியோவும் தேவையில்லை, ராம்தேவின் பதஞ்சலியும் தேவையில்லை. நமக்குத் தேவை அமைதியான இந்தியா மட்டுமே” என்று கூறினார்.

வ.கீதா மற்றும் நிஷா ஆகியோரின் முழுமையான பேச்சு காணொளி:

பாருங்கள் ! பகிருங்கள் !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க