ஸ்டெர்லைட் குற்றவாளிக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் பச்சைக் கொடி !
நாடகமாடும் எடப்பாடி- மோடி அரசுகள் !

நாசகார ஸ்டெர்லைட் நச்சு ஆலைக்கு எதிராக கடந்த 1996-ம் ஆண்டு முதல் தூத்துக்குடி மக்கள் போராடி வருகின்றனர். தூத்துக்குடி மக்களுக்கு சுத்தமான காற்று, நீர், நோயற்ற வாழ்க்கையை உறுதி செய்ய வேண்டுமானால் ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்பட வேண்டும். இந்த கோரிக்கையை முன்வைத்து அமைதியான முறையில் போராடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 22.05.2018 அன்று 14 அப்பாவிகளைப் படுகொலை செய்தது எடப்பாடி அரசு. இந்தப் படுகொலையை மூடி மறைப்பதற்காக ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாக உப்பு சப்பற்ற அரசாணை ஒன்றை வெளியிட்டு ஆலையை மூடியது எடப்பாடி அரசு.


இந்த அரசாணை வலுவற்றது. எனவே ஜல்லிக்கட்டுக்கு செய்தததைப் போல ஸ்டெர்லைட்டுக்கும் அரசு கொள்கை முடிவு எடுத்து ஆலையை மூட வேண்டும் என பலரும் எச்சரித்த போது, உலக நீதிமன்றம் சென்றாலும் தமிழக அரசாணை செல்லும் என பிதற்றியது எடப்பாடி அரசு. ஆனால் தற்போது ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு வெளிவந்த நாளிலிருந்து தூத்துக்குடி மக்கள் மீது கட்டற்ற அடக்குமுறையை ஏவி வருகிறது எடப்பாடி அரசு.

படிக்க:
♦ தூத்துக்குடி என்ன காஷ்மீரா ? மாவட்ட கலெக்டர் , எஸ்.பி.-யை பணி மாறுதல் செய் !
♦ தூத்துக்குடி மக்களுக்காக போராடுவோம் | வாஞ்சிநாதன் உரை

ஸ்டெர்லைட் போராட்டம் என்பது தூத்துக்குடி மக்கள் போராட்டம் மட்டுமல்ல, அது ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஆதரவைப் பெற்ற போராட்டம். மீண்டும் ஸ்டெர்லைட்டைத் திறப்பது என்பது தமிழக மக்களின் சுயமரியாதைக்கு விடப்பட்டுள்ள சவால். தமிழக மக்களை அவமதிப்பது. உயிர்துறந்த 14 போராளிகளின் தியாகத்தைக் கொச்சைப்படுத்துவது. எனவே இழப்புகள், அடக்குமுறைகளுக்கு அஞ்சாத தூத்துக்குடி மக்களின் போராட்டத்திற்கு தமிழக மக்கள் துணை நிற்க வேண்டும். ஒட்டு மொத்த தமிழகமும் எழுந்து நிற்காவிட்டால், தூத்துக்குடி மக்கள் தொடர்ந்து சொல்லொனாத் துயரங்களுக்கு ஆட்படுவர்.

  • ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடும் தூத்துக்குடி மக்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுவோம்!
  • நாசகார ஸ்டெர்லைட் நச்சு ஆலையை தமிழகத்தை விட்டே விரட்டியடிப்போம்!

தமிழக அரசே!

  • ஜல்லிக்கட்டுக்கு செய்ததைப் போல, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தமாக மூடுவதற்கு உடனடியாக சட்டமன்றக் கூட்டத்தைக் கூட்டி கொள்கை முடிவு எடு! சிறப்பு சட்டம் இயற்று!

மேற்கண்ட முழக்கங்களை முன்வைத்து மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் திருவண்ணாமலை மாவட்டக் கிளை சார்ப்பில் 29.12.2018 அன்று மாலை திருவண்ணாமலை அண்ணாசிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முதலில் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி தரத்தயங்கிய காவல்துறை, வழக்கறிஞர்களின் தொடர் முயற்சியால் இறுதியில் அனுமதி அளித்தது.

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் திருவண்ணாமலை மாவட்டக் கிளை அமைப்பாளர் வழக்கறிஞர் சு.கண்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

எழுச்சியோடு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் திரு.சீனி.கார்த்திகேயன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில மாணவர் அணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் பாசறை பாபு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் தோழர் கு.ஜோதி, நாம் தமிழர் கட்சியின் வடக்கு மாவட்டத் தலைவர் தோழர் ம.பி.கந்தன், நாம் தமிழர் கட்சியின் தோழர்.ஜெயச்சந்திரன், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில நிர்வாகி வழக்கறிஞர் பொன்.சேகர் மற்றும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் விழுப்புரம் மாவட்ட அமைப்பாளர் தோழர்.ஞானவேல் ஆகியோர் கண்டன உரையாற்றினர். வழச்கறிஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளாகப் பங்கேற்று போராடும் தூத்துக்குடி மக்களுக்கு தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.

தகவல்
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
திருவண்ணாமலை

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

சந்தா செலுத்துங்கள்

மக்கள் பங்களிப்பின்றி ஒரு மக்கள் ஊடகம் இயங்க முடியுமா? வினவு தளத்திற்குப் பங்களிப்பு செய்யுங்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க