மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

பத்திரிக்கை   செய்தி                              நாள்: 15.12.2018

  • தூத்துக்குடி என்ன காஷ்மீரா? சிபிஐ (CBI) சாட்சிகளை மிரட்டி,அரசியல்சட்ட விரோதமாகச் செயல்படும் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி.யை பணி மாறுதல் செய்!

டந்த இரு நாட்களாக (13.12.2018 & 14.12.2018) ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட சிறப்புச் சட்டம் இயற்றக் கோரும் கோரிக்கைக்கு ஆதரவாக வணிகர், மீனவர் சங்கங்களைச் சந்தித்து வருகின்றனர்  ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பினர். கடந்த 13.12.2018 மாலை சுமார் 4 மணிக்கு மீனவர் சங்கத்தினரை சந்தித்து பேசிக் கொண்டிருந்த மக்கள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் மைக்கேல், நில உடையார், மணி, மகேஷ் உள்ளிட்ட 8  பேரை எவ்விதக் காரணமும் இன்றி கைது செய்த தூத்துக்குடி வடக்கு காவல்நிலைய போலீசார், அவர்களை மிரட்டியுள்ளனர். புதுத்தெரு மக்கள் மறியல் செய்தபின் எழுதி வாங்கிக் கொண்டு வெளியே அனுப்பியுள்ளனர். இவர்களில் மைக்கேல், நில உடையார், மணி ஆகியோர் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான சிபிஐ (CBI) வழக்கின் முக்கிய சாட்சிகள்.

நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான ஆய்வுக்குழுவினர், ஸ்டெர்லைட்டை திறக்கப் பரிந்துரை அளித்ததை தமிழக அரசு ஏற்கக் கூடாது, சுற்றுச் சூழல் பாதிப்புகளைக் கண்டறிய தனிக்குழு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைக்காக வீடுகளில் கருப்புக் கொடி கட்ட முடிவு செய்த மக்கள் கூட்டமைப்பினர், நேற்று கருப்புத் துணி வாங்குவதற்காக துணி நகரமான புதியமுத்தூர் சென்ற போது, அவர்களைக் காரில் விரட்டிச் சென்ற புதியமுத்தூர் காவல்துறை, காரை மறித்து, போட்டோ எடுத்து மிரட்டியுள்ளது. பின்பு தூத்துக்குடி நோக்கி வந்த அவர்களை சிப்காட் காவல்நிலைய ஆய்வாளர் சம்பத்(குட்கா) மற்றும் சார்பு ஆய்வாளர் சதீஸ் நாராயணன் ஆகியோர் கைது செய்து சிப்காட் காவல் நிலையம் அழைத்துச் சென்று இரவு 11.30 மணிவரை வைத்து மிரட்டியுள்ளனர்.

படிக்க:
♦ தேசிய பசுமைத் தீர்ப்பாய விசாரணைக் குழு அறிக்கை – ஸ்டெர்லைட் திறக்கப்படுவதற்கு முன்னோட்டமா ?
♦ ஸ்டெர்லைட் : வேதாந்தாவிற்கு வளைந்து கொடுக்கும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் !

பின்பு எஸ்.பி. முரளி ரம்பாவிடம் அழைத்துச் சென்றுள்ளனர். அவரும் உங்களை யாரோ இயக்குகிறார்கள், யார் உங்களுக்குப் பணம் தருவது? எனக் கேட்டுள்ளார். கருப்புத் துணிக்கு ரூ.5000/ செலவளிக்க முடியாதா எங்களால்? எல்லா ஊரும் சேர்ந்து பணம்போட்டு வேலைகள் செய்கிறோம், கற்பனையில் பேசாதீர்கள் எனக் கண்டித்துள்ளனர். அதன்பின், சுற்றுப்புற கிராம மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பின்பே வெளியே அனுப்பியுள்ளனர். இதற்கிடையே கருப்புத்துணியை விற்ற கடைக்காரரின் மகன்கள் இருவரையும் கடைக்கே சென்று தாக்கியுள்ளனர்.

முரளி ரம்பா

இந்த சம்பவங்கள் சில உதாரணங்கள்தான். ஸ்டெர்லைட் தீர்ப்பு வரப் போவதையொட்டி, 14 பேரை இழந்த மக்கள் கருத்துக் கூட தெரிவிக்கக் கூடாதென மிரட்டி வருகின்றனர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரும், எஸ்.பி.யும். தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதா? என்ற மக்கள் கேள்விக்கு பதில் அளிக்காத காவல்துறை, காவல்துறையை கேட்காமல் தெருக்களில் நடந்தால் கூட குற்றம் என்கிறது. கு.வி.ந.ச. பிரிவு 107-ன் கீழ் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்களுக்கு மட்டும் சம்மன் வழங்கப்பட்டு ஆர்.டி.ஓ அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு மிரட்டப்படுகின்றனர். எங்கும் போலீசார் குவிக்கப்பட்டு, மக்கள் அச்சுறுத்தப்படுகின்றனர்.

காஷ்மீரின் இராணுவ ஆட்சி போல தூத்துக்குடியில் போலீஸ் ஆட்சி நடக்கிறது. ஆனால், ஸ்டெர்லைட் நிர்வாகம் மக்களை சாதி, மத ரீதியாக பிளப்பதற்கு, பணத்தை வாரியிறைத்து மக்களில் சிலரை விலைக்கு வாங்குவதற்கு எந்தத் தடையும் விதிக்கவில்லை. ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பின் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் வாஞ்சி நாதன் உள்ளிட்ட போராட்ட முன்னணியாளர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய முயற்சி நடைபெறுவதாகச் செய்திகள் வருகின்றன.

நடந்துவரும் சம்பவங்கள் தூத்துக்குடியில் அரசியல் சட்டத்தின் ஆட்சி நடக்கவில்லை என்பதைக் காட்டுகிறது. மேலும் சாட்சிகளை காவல்துறை மிரட்டுவதால், சிபிஐ விசாரணை நேர்மையாக நடைபெறுமா? என்ற கேள்வியும் எழுகிறது. எனவே தூத்துக்குடி கலெக்டர், எஸ்.பி மற்றும் மே 22,2018 அன்று பணியில் இருந்த அத்தனை காவல்துறை அதிகாரிகளையும் உடனே பணி மாறுதல் செய்ய வேண்டும். தூத்துக்குடி காவல்துறை அடக்குமுறைக்கு அனைத்துக் கட்சிகளும் தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்வதுடன் களத்தில் இறங்கிப் போராட வேண்டும்.ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க அனுமதிக்கக் கூடாது.

இவண்,
வழக்கறிஞர் சே.வாஞ்சிநாதன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
பேச: 9443471003

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

1 மறுமொழி

  1. தமிழ் நாட்டை இன்னொரு காஷ்மீராக மாற்ற வேண்டும் என்பதற்காக தானே உங்களை போன்றவர்களும் சீமான் வைகோ போன்றவர்களும் கிறிஸ்துவ தேசவிரோத அமைப்புகளும் செயல்படுகின்றன.

    தமிழகம் இன்னொரு காஷ்மீராக மாறினால் உங்களுக்கு சந்தோசம் தானே

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க