”14 தியாகிகளை நாம் எந்த காலத்திலும் மறந்துவிடக் கூடாது. பிற மாவட்ட மக்கள் இதை ஒரு படிப்பினையாக கொண்டு எப்பேற்பட்ட தியாகத்தையும் செய்து இத்தகைய நச்சு ஆலைகளை முடிவிற்கு கொண்டு வர உறுதியேற்க வேண்டும். சமகால அரசியலில் மிகவும் முக்கியமான போராட்டமாக தூத்துக்குடி மக்களின் இந்த போராட்டம் இருந்துள்ளது. காரணம் கூடங்குளம் அணு உலை, மீத்தேன் போன்றவைகளுக்கு எதிரான இத்தகைய போராட்டங்கள் எல்லாம் சம்பந்தபட்டவர்கள் மட்டுமே போராடுவதாக இருந்த நிலையில் தூத்துக்குடி போராட்டம் மட்டும்தான் சாதி கடந்து, மதம் கடந்து ஒரு புரட்சி அலை போல் தூத்துக்குடி மாவட்ட மக்கள் அனைவரையும் ஒரு கோரிக்கைக்கு எதிராக களத்தில் இறக்கியது. எனவேதான் ஆளும்வர்க்கமும் அரசும் இதை கண்டு அஞ்சுகிறது.

(கோப்புப் படம்)

இதனால்தான் போராட்டக்குழுவின் மீதும், போராடிய அமைப்புகள், வழிகாட்டிய வழக்கறிஞர்கள் மீதும் எண்ணற்ற வழக்குகளை பதிவு செய்து செயல்படவிடாமல் தடுக்கிறது. என் மேல் மே 22 அன்று காலை 9.30 க்கு மடத்தூரில் இருந்ததாக ஒரு வழக்கு, அதே 9.30க்கு பனிமலர் மாதாகோவில் வளாகத்தில் இருந்ததாகவும் கண்ணில் பட்ட பொதுச்சொத்திற்கு எல்லாம் தீ வைத்ததாகவும் ஒரு வழக்கு. வழக்கறிஞர் அரிராகவனை ரவுடி லிஸ்டில் சேர்த்து வாய்தாவிற்கு அலையவிடும் பிரிட்டீஸ் அட்சி கால அணுகுமுறையில் வழக்கு. ஒரு சம்பவத்திற்கு ஒரு வழக்காக பதிவு செய்து விசாரிக்காமல் 240 வழக்கு பதிவு செய்துள்ளது.

படிக்க:
ஸ்டெர்லைட்டை எவ்வாறு மூடுவது ? பதிலளிக்கிறார் மக்கள் அதிகாரம் ராஜு !
கவுரி லங்கேஷ் படுகொலையும் ‘சத்ர தர்ம சாதனா’ நூலும் | பாலன் உரை

இப்போது நாம் மனதில் வைக்க வேண்டியது என்னவெனில் துப்பாக்கி சூடு நடக்கும் முன்வரை நாம் செயல்பட்டது முக்கியம் அல்ல, அதன் பிறகு அடக்குமுறை உச்சத்தை தொட்டுள்ள இந்த சமயத்தில் மக்களை அணுகி , ஸ்டெர்லைட்டிற்கு எதிராக மக்களை அணிதிரட்ட எப்படி வேலை பார்க்கிறோம், அதை யார் பார்க்கிறார்கள் எனபதுதான் வீரம். ஏனெனில், ஸ்டெர்லைட்டின் தாய் நிறுவனமான வேதாந்தா ஒன்றும் சாதாரண நிறுவனமல்ல உலகம் முழுவதும் சுரங்கத் தொழில் கொடிகட்டி பறக்கும் ஒரு நிறுவனம். அதனை தற்காலிகமாக என்றாலும் வெற்றி கொண்ட ஒரே மக்கள் தூத்துக்குடி மக்கள்தான். மேலும், வேதாந்தா நிறுவனம் ஒரு முறைகேடுகளுக்கு பெயர் போன நிறுவனம் என்று இங்கிலாந்திலே ஒரு அமைப்பு அதற்கெதிராக செயல்படும் நிலை உள்ளது. இங்கிலாந்து அரசே அதனுடைய முறைகேடுகளுக்காக வேதாந்தா நிறுவனத்தை அந்நாட்டின் பங்கு சந்தையிலிருந்து தடை செய்துள்ளது.

உலகம் முழுவதும் வேதாந்தாவிற்கு எதிர்ப்பு. (கோப்புப் படம்)

இன்னொரு புறம் வேதாந்தா சுரங்கத்தொழிலில் பங்கு வைத்துள்ள நாட்டை பார்த்தால் ஒரு உண்மை புரியும். அதாவது அது ஏழை மூன்றாம் உலக நாடுகளில் மட்டும்தான் தன் தொழிலை வைத்துள்ளது. காரணம் இந்த நாடுகளில்தான் மக்கள் செத்தாலும் பரவாயில்லை என்று பாதுகாப்பு செலவை குறைக்க அந்தந்த நாட்டின் சட்டங்களை, அரசியல்வாதிகளை, அதிகாரிகளை தன் வலைக்குள் கொண்டு வந்து கணிசமான இலாபம் பார்க்க முடியும். எனவே வேதாந்தா போன்ற நிறுவனங்கள் நமக்கு மட்டுமல்ல மூன்றாம் உலக நாடுகள் அனைத்திற்கும் எதிரி. அதனுடைய சாம்ராஜ்ஜியத்தின் சேவகர்கள்தான் மோடியும், எடப்பாடியும். எனவே இத்தகைய நிறுவனத்தை விரட்டியடிக்க இந்தி எதிர்ப்பு, ஜல்லிக்கட்டு போராட்டம் போன்றதொரு போராட்டத்தை கட்டியமைக்க வேண்டும். தூத்துக்குடி மக்கள் காவல்துறையின் அடக்குமுறைகளின் கீழ் உள்ள இந்த நேரத்தில் அதற்கு பிற மாவட்ட மக்கள்தான் முன் வரவேண்டும்.

ஸ்டெர்லைட்டை திறக்க சொல்கிற பசுமை தீர்ப்பாய உத்தரவு கிடக்கட்டும்…. தமிழக அரசே.…. மேல்முறையீடு என்று ஏமாற்றாதே ! தனிச்சட்டம் இயற்று! ஸ்டெர்லைட்டை விரட்டு!! என்ற தலைப்பில் மக்கள் அதிகாரம் அமைப்பின் மதுரை மண்டலம் சார்பாக கடந்த டிசம்பர்- 30 அன்று நடைபெற்ற அரங்கக்கூட்டத்தில், மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் வாஞ்சிநாதன் ஆற்றிய உரை.

தகவல்
மக்கள் அதிகாரம்
மதுரை

சந்தா செலுத்துங்கள்

அச்சுறுத்தும் அதிகார வர்க்கத்தை அச்சமின்றி எதிர்க்கும் வினவு தளம் உங்கள் ஆதரவின்றி போராட இயலுமா? ஆதரியுங்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க