“எட்டாம் வகுப்பு வரை All Pass என்பதால்தான் கல்வியின் தரம் பின்தங்கிவிட்டது, அதனால் தான் மோடி அரசு 5-ம் வகுப்புக்கே பொதுத்தேர்வு முறையை கொண்டுவந்துள்ளது இனி கடமைக்கு பள்ளிக்கூடம் போய் நோகாம பாஸ் ஆக முடியாது..!”

நன்கு படித்த சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் உள்ள துறை ரீதியாக நண்பர்களாக இருக்கக்கூடிய ஒரு வாட்சப் குழுவில் வந்த மெசேஜ் இது. இதை பலரும் வரவேற்று கட்டை விரல் உயர்த்துகிற மற்றும் கை தட்டுகிற பொம்மைகளை பதிலாக தருகிறார்கள் .

இன்று நடுத்தர மற்றும் உயர் மட்ட வகுப்பினரை இரண்டு மூன்று வார்த்தைகள் பிடித்து ஆட்டுகின்றன :

 • தரம்,
 • இலவசம்,
 • Heavy competition போன்றவை அவைகளில் சில.

மேலோட்டமாக பார்த்தால் சிறார்களின் கல்வித்தரம் குறித்து வளர்ந்த பெரியவர்கள் அக்கறை காட்டுவதில் என்ன தவறு என்பது போலத்தானே தெரிகிறது?!

சரி, தரம் என்றால் என்ன? ஒரு மாணவர் நூற்றுக்கு நூறு மதிப்பெண் வாங்கினால் அவர் தரமானவர் என்று சொல்லலாமா? ஆம் சொல்லலாம். ஆனால் இவர்கள் அப்படி கூட சொல்வதில்லையே.. ஒரு வகுப்பில் படிக்கிற 40 மாணவர்களும் நூற்றுக்கு நூறு வாங்கினால் உடனே அது தரமற்ற தேர்வு என்கிறார்கள். சரி அப்படியென்றால் இவர்களின் வரையறைப்படி தரம் என்பதுதான் என்ன?

ஒரு ஊரில் நூறு குழந்தைகள் இருந்தால் அதில் 90 குழந்தைகள் படிக்க போகவேண்டும். அந்த 90-ல் பத்து பேர் மட்டும் தனி வகுப்பில் சேர்ந்து தனி பாடம் படிக்கவேண்டும். இல்லை 90 பேரும் ஒரே பாடத்தை படித்தால் கூட அதில் இருபது பேர் பெயிலாக வேண்டும், நாற்பது பேர் Just pass ஆகவேண்டும், பத்து பேர் நல்ல மதிப்பெண் பெறவேண்டும். 5 பேர் மட்டும் top rank வாங்கவேண்டும். அந்த 5 பேரில் தன் வீட்டு குழந்தையும் இருக்கவேண்டும். இப்படி நடந்தால் அது தரமான கல்வி.

தரம் என்பது இதுவல்ல. ஒரு ஊரில் உள்ள 5 குழந்தைகளை மட்டும் சீராட்டி வளர்த்து வெளிநாட்டுக்கு அனுப்புவதல்ல ஒரு அரசாங்கத்தின் கடமை. மக்களுக்கான அரசாங்கம் என்பது ஊரிலுள்ள அனைத்து பிள்ளைகளையும் படிக்கவைத்து அவர்களை மேம்படச்செய்ய வைப்பதை கடமையாக கொள்ளவேண்டியது.

படிக்க:
அனிதாக்களை 5 -ஆம் வகுப்பிலேயே தூக்கிலிடும் நவோதயா பள்ளிகள் !
♦ மதிய உணவுத் திட்டத்தை இஸ்கான் அமைப்பிடம் ஒப்படைக்கலாமா ?

தரம் என கொக்கரிக்க ஆரம்பித்துள்ள இதே இந்தியத்திருநாடு தான் ஐந்தாம் வகுப்பு கூட படித்திராத / தாண்டியிராத சிறுவர்களை அதிகமாக கொண்ட தேசங்களில் ஒன்று . இந்தியாவில் 6.5 சதவீத குழந்தைகள் தங்களது ஆரம்பக்கல்வியை கூட அதாவது ஐந்தாம் வகுப்பு கூட முடிக்கவில்லை என்ற துயரத்தை கொடுமையை இவர்கள் உணர்வார்களா?

இந்திய மாநிலங்களில் கேரளா (ஆரம்பக் கல்வி முடிக்காதவர்கள் -0.08%), தமிழ்நாடுதான் (ஆரம்பக் கல்வி முடிக்காதவர்கள் -0.98%) தங்களது சிறுவர்களை முழுமையாக ஆரம்பக்கல்வியை முடிக்க வழிவகை செய்துள்ளன. குஜராத்திலே 3% பிள்ளைகள் ஆரம்பக்கல்வியைக் கூட தாண்டவில்லை. ஆந்திராவிலே 6%, மத்திய பிரதேசம் 8% ராஜஸ்தான் 11% உத்தரபிரதேசம் 12% அதிகபட்சமாக மேகாலயா அருணாச்சலபிரதேசத்தில் 15% சிறுவர்கள் ஐந்தாம் வகுப்பைக் கூட படிக்காமல் கல்வியறிவற்றவர்களாக உள்ளனர்.

ஏன் இந்த சிறுவர்கள் ஆரம்பக்கல்வியைக் கூட தாண்டவில்லை? அப்படியென்றால் பத்தாம் வகுப்பு கூட படித்திராத இந்திய சிறுவர்கள் எத்தனை பேர்? என்ன காரணம்?

பள்ளிக்கூடம் கூட அனுப்பமுடியாத அளவுக்கு வறுமை, பள்ளிகள் இல்லாமை, தேர்வில் தோல்வியடைந்தால் நிறுத்திவிட்டு குழந்தைத்தொழிலாளியாக வேலைக்கு அனுப்புதல், தேர்வில் தோல்வியடைவதால் தன்னை விட வயதில் குறைந்த பிள்ளைகளுடன் படிப்பதால் ஏற்படுகிற தாழ்வு மனப்பான்மை, போக இளவயது திருமணம் இவைகளால் இந்த சிறார்கள் கல்வியறிவற்றவர்களாக உருவாகின்றனர்.

எட்டாம் வகுப்பு வரை கட்டாயத்தேர்ச்சி தான் கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்களை பள்ளிப்படிப்பை முடிக்கவைக்கின்றன. பத்தாவது பாஸ் அல்லது பெயில் என்ற தகுதியுடன் அதன்பிறகு அவன் ஏதோ ஒரு வேலையை தேடிக்கொள்கிறான் . அதன்பிறகு அவர்கள் கல்லூரி மற்றும் உயர்கல்வி படிக்கவேண்டும் தான் ஆனால் குறைந்தபட்சம் பள்ளிப்படிப்பையாவது நம் சிறார்கள் தாண்ட வேண்டாமா?!

கலாச்சாரத்தில் சிறந்த நாடு என்று சொல்லப்படுகிற இந்தியா தான் உலகிலேயே வயது குறைந்த திருமணங்களை நடத்துவதில் இரண்டாவது இடத்தில் உள்ள நாடு . நல்லவேளை இளவயது திருமணங்களை கட்டுப்படுத்துவதில் வழக்கம்போல தமிழ்நாடு கேரளா மாநிலங்கள் முன்னிலையில் உள்ளன. மக்கட்தொகையில் 7வது பெரிய மாநிலமான தமிழ்நாடு இளவயது திருமணங்கள் நடைபெறும் மாநிலங்களில் 17வது இடத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டில் சராசரியாக 19.12 வயதில் திருமணங்கள் நடக்கின்றன . கேரளாவில் சராசரி திருமண வயது 21.5 ஆக உள்ளது . அதுவே ஒட்டுமொத்த இந்தியாவில் சராசரி திருமண வயது 16தான். ராஜஸ்தான், உ.பி, ம.பி போன்ற மாநிலங்களில் மிக இள வயதிலேயே திருமணம் நடத்திவைக்கப்படுகின்றன.

தேர்வுகளில் தோற்றுப்போனால் பெண் குழந்தைகள் திருமணத்திற்கும் ஆண் குழந்தைகள் வேலைக்கும் தள்ளப்படுகிறார்கள். இதுதான் நம்முடைய இந்தியா. அதனால்தான் இந்திய அரசியலமைப்பு சட்டம் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் கல்வி உரிமை பெறும் சட்டத்தை தந்துள்ளது . அதன்படி ஒவ்வொரு இந்திய சிறாரும் குறைந்தது 14 வயது வரை கல்வி கற்றே ஆகவேண்டும். மத்திய அரசு தற்போது தெரிவித்துள்ள ஐந்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முறையினால் கல்வி உரிமை சட்டத்தின் அடிப்படை நோக்கத்தையே சீர் குலைப்பதாக அமையும்.

தரம் வளர்ச்சி என்பன ஊரிலுள்ள ஒன்றிரண்டு பேர் மட்டும் நல்ல வசதியான ஐந்து நட்சத்திர விடுதியில் தங்கிக்கொண்டு விருந்துண்டு மகிழ, அதே வேளையில் வாய்ப்பு இல்லாத சிறுவர்கள் இருக்க இடமின்றி பசியும் பட்டினியுமாக இருப்பதல்ல. எல்லாருக்கும் உணவு கிடைக்கவேண்டும், எல்லாரும் கல்வி கற்க வேண்டும். இதுதான் தரம். இதுதான் வளர்ச்சி.

தங்கள் வீட்டுப்பிள்ளை ஆயிரத்துக்கு மேல் மதிப்பெண்கள் எடுத்தால் புத்திசாலிப்பிள்ளை என்று மகிழ்கிறவர்கள் ஊரிலுள்ள நிறைய பிள்ளைகள் அதிக மதிப்பெண்களை குவிக்கும்போது மட்டும், “ஐய்யய்யோ என்ன இப்படி ஆளாளுக்கு மதிப்பெண்களை அள்ளி வீசுகிறார்கள் கல்வியில் தரமே இல்லை, யாரைக்கேட்டாலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் என்கிறார்கள் இது என்ன தரம்?” என்று புலம்புவது ஏன்?

குறிப்பு : மேற்கண்ட புள்ளிவிபரங்கள் இந்திய அரசின் இணையதளத்திலிருந்து எடுக்கப்பட்டவை. 

நன்றி : சிவசங்கரன் சரவணன்
ஃபேஸ்புக் பதிவிலிருந்து…

சந்தா செலுத்துங்கள்

அச்சுறுத்தும் அதிகார வர்க்கத்தை அச்சமின்றி எதிர்க்கும் வினவு தளம் உங்கள் ஆதரவின்றி போராட இயலுமா? ஆதரியுங்கள்.

9 மறுமொழிகள்

 1. இன்றைய சூழலில் மாணவர்களால் ஏற்படுவதாகச் சொல்லப்படும் எந்த பிரச்சினைக்குமே மாணவர்கள் காரணமில்லை என்பதுதான் உண்மை. மாணவர்கள் நல்லவர்களாக வரவும், கெட்டவர்களாக மாறவும் பெற்றோர்கள், குடும்பப் பழக்க வழக்கம், நண்பர்கள், ஆசிரியர்கள், சுற்றியுள்ள சமூகம், பொருளாதாரம் எனப் பல காரணங்கள் உள்ளன.

  உலகிலுள்ள எல்லா உயிரினங்களுமே சூழலுக்குத் தக்கபடி வாழும் தன்மையுள்ளவை. எந்தச் சூழலில் வாழ வேண்டியுள்ளதோ அந்த சூழலுக்குத் தக்கபடி தன்னை மாற்றிக்கொள்ளும். இதற்கு மனிதன் மட்டும் விதிவிலக்கில்லை.

  காலையில் எழுந்ததும் விளையாட வேண்டுமா, படிக்க வேண்டுமா என்பதைக் குழந்தைகள் முடிவு செய்வதில்லை. பெற்றோர்களும் ஆசிரியர்களுமே முடிவு செய்கிறார்கள்.

  என் மகன் நன்றாகப் படிக்கிறான் என்றும், என் மகனுக்குப் படிப்பு ஏறவில்லை என்றும் இரண்டு பெற்றோர்கள் சொல்கிறார்கள் என்றால் அந்த இரண்டுக்குமே மாணவர்கள் காரணமல்ல.

  ஒரு மாணவனுக்குப் புரியும் வகையில் ஓர் ஆசிரியர் சொல்லிக் கொடுக்கிறார். இன்னொரு மாணவனுக்குப் புரியும் வகையில் ஆசிரியரால் சொல்லிக் கொடுக்க முடியவில்லை என்பதுதான் உண்மை.

  தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும் வாய்க்காலைக் கடந்து பெரிய மாணவர்கள் போவதைப் பார்க்கும் சிறிய குழந்தைகள், அடுத்த சில நாளில் தாமும் அந்த வாய்க்காலைக் கடந்து போகத் தயாராகிவிடுகின்றனர். அதுபோலத்தான் தேர்வு என்பதும் கடந்து போகக்கூடிய ஒன்றுதான். கடக்கவே முடியாதது இல்லை.

  தினமும் கிரவுண்டுக்குப் போய் பயிற்சி எடுக்கும் குழந்தைகள்தான் ஓட்டப் பந்தயத்தில் வெற்றி பெற முடியும். அதிகமான தேர்வுகளை எதிர்கொள்ளும் குழந்தைகள்தான் பெரிய பெரிய தேர்வுகளிலும் வெற்றி பெற முடியும்.

  இந்தப் பொதுத் தேர்வு முறை முதலில் கொஞ்சம் சிரமமாகத் தெரிந்தாலும், போகப்போக மாணவர்கள் அதை எதிர்கொண்டு வெற்றி பெறுவார்கள்.

  மாணவர்களை எப்படி வழி நடத்துவது என்பதில் ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் சரியான பார்வையும் தெளிவும் இல்லாமல் இருப்பதுதான் இந்த எல்லாக் குழப்பங்களுக்கும் காரணம்.

 2. ஒரு மாணவரின் கற்கும் திறன் மற்றும் ஆசிரியரின் கற்பிக்கும் திறன் ஆகியவற்றைத் தெரிந்து கொள்ள நிச்சயம் ஐந்தாம் வகுப்பிலும் எட்டாம் வகுப்பிலும் தேர்வு நடத்தப்பட வேண்டும். எட்டாம் வகுப்பு வரை அனைவரும் பாஸ் என்னும் முறையால் நன்மையை விட தீமைகளே அதிகம் விளைந்துள்ளன. தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் உருப்பட வேண்டுமெனில் நிச்சயம் ஐந்தாம் வகுப்பிலும் எட்டாம் வகுப்பிலும் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். ஆனால் பெயில் ஆகும் மாணவரை அடுத்த வகுப்புக்கு செல்ல அனுமதிக்க வேண்டும். அடுத்த வகுப்பில் அவருக்கு சிறப்பு கவனம் கொடுக்கப்பட வேண்டும். இதன்மூலம் மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்கலாம். ஆனால் தேர்வுகள் இன்றிமையாதவை.

 3. ஆமாம் பெரியசாமி,
  என்னை கேட்டால் ஒன்னாவதிலிருந்தே பொது தேர்வு வச்சு நம்ம புள்ளைங்களை உருப்பட வச்சிரனும்னு நெனைக்கிறேன்.
  ரெண்டு வாய்கால தாண்டுற புள்ளைங்க பத்து வாய்கால தாண்டாதா என்ன?
  அப்புறம் வருசத்துக்கு ரெண்டு பொதுத்தேர்வு வக்கிறதப் பத்திகூட யோசிக்கலாம். பால்வாடியில சேக்கும்போதே பொதுத்தேர்வுக்கு கோச்சிங் கிளாஸ் அனுப்புறத நாம ஊக்குவிக்கனும்.
  மொத்தத்தில நம்ம புள்ளைங்க உருப்படனும்.. அவ்வளவுதான்….

  • நீங்கள் சொல்வது சரியல்ல. எட்டாம் வகுப்பு வரை ஆல் பாஸ் என்னும் முறையால் ஏழாம் வகுப்பில் தான் அ, ஆ, இ,ஈ என எழுத்துக்கூட்டி மாணவர்கள் படிக்கக்கூடிய சூழ்நிலை அரசு பள்ளிகளில் உள்ளது. இந்நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் இன்னும் நிறைய அரசு பள்ளிகளை மூட வேண்டி வரும். தனியார் பள்ளிகளை நோக்கி சாதாரண மக்கள் இன்னமும் ஈர்க்கப்படுவார்கள். அதனால் ஐந்தாம் வகுப்பில் பொதுத்தேர்வு வைப்பதில் தவறே இல்லை. ஆனால் மாணவர்கள் பெயில் ஆக்கப்படக்கூடாது. இதன்மூலம் ஆசிரியர்கள் பொறுப்போடு கற்பிக்கிறார்களா என்பதையும் தெரிந்து கொள்ளலாம். இந்த தேர்வுகளை எதிர்க்கக்கூடிய அரசியல்வாதிகளின் பிள்ளைகள் எத்தகைய பள்ளிகளில் படிக்கிறார்கள் என்பதை கவனியுங்கள். நீங்கள் சொல்வதன்படி பார்த்தால் அரசு பள்ளிகளுக்கும் தனியார் பள்ளிகளுக்கும் இடையிலான இடைவெளி தொடர்ந்து அதிகரித்துக் கொண்டுதான் போகும். அகில இந்திய அளவில் எட்டாம் வகுப்பு வரை ஆல் பாஸ் கொடுத்ததால் விளைந்த நன்மைகளைவிட தீமைகள் அதிகம் என்பதால் தான் அது ரத்து செய்யப்பட்டது. இதை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். அரசு பள்ளிகள் ஏதோ ஒரு வகையில் தனியார் பள்ளிகளோடு போட்டியிட்டால்தான் எதிர்காலத்தில் தாக்குப்பிடிக்க முடியும். இல்லையெனில் சாதாரண மக்களே அரசு பள்ளிகளை ஒதுக்கிவிடுவார்கள்.

   • பெரியசாமி,

    இந்திய சமூகத்தில் நிலவும் சில அடிப்படையான பிரச்சினைகளை இந்த கட்டுரையாளர் முன் வைத்துள்ளார்.

    1.தேர்வுகளில் தோற்றுப்போனால் பெண் குழந்தைகள் திருமணத்திற்கும் ஆண் குழந்தைகள் வேலைக்கும் தள்ளப்படுகிறார்கள்

    2.இந்தியா தான் உலகிலேயே வயது குறைந்த திருமணங்களை நடத்துவதில் இரண்டாவது இடத்தில் உள்ள நாடு

    3.இந்தியத்திருநாடு தான் ஐந்தாம் வகுப்பு கூட படித்திராத / தாண்டியிராத சிறுவர்களை அதிகமாக கொண்ட தேசங்களில் ஒன்று.

    அதே போல இலவச பள்ளிக்கூடம், இலவச மத்திய உணவுத்திட்டம், இலவச பஸ் பாஸ், இலவச சைக்கிள், இலவச உடை, இலவச செருப்பு, …இன்னும் எத்தனையோ இலவசங்கள்
    கொடுத்து தான் தமிழ்நாடு தன்னுடைய பிள்ளைகளை மருத்துவத்திலும், கல்வியிலும், ஆண் -பெண் சமத்துவதிலும் முன்னணியில் சேர்த்துள்ளது.

    இதுக்கு எதுக்கும் பதில் சொல்ல பெரியசாமிக்கு வக்கில்ல .. ஓட்டப்பந்தயம் தாண்டுறதை பத்தி போலந்து கட்டுறார்.

    புள்ளி விவரங்கள் எதையும் படிப்பதில்லை. யாராச்சும் சொன்னாலும் செவி மறுப்பதில்லை. அப்புறம் என்ன ஹேருக்கு ……………………………….

    • நான் சொல்வதை சரியாக புரிந்துகொள்ளாமல் வக்கு கிக்கு என்றெல்லாம் எதையாவது உளற வேண்டாம். ஒரு மாணவர் 5 ஆண்டுகாலம் பள்ளியில் படிக்கிறார். இந்த ஐந்து ஆண்டுகளில் இவர் என்ன கற்றுக் கொண்டார். கற்றலில் என்ன குறைபாடு அல்லது கற்பித்தலில் என்ன குறைபாடு ஆகியவற்றை தெரிந்துகொள்ள ஐந்து ஆண்டுகளின் முடிவில் ஒரு தேர்வு நிச்சயம் நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் என்ன பிரச்சனை என்பதை தெரிந்து கொள்ள முடியும். ஆசிரியர்கள் பணி சார்ந்த பொறுப்புடன் செயல்படுகிறார்களா என்பதையும் அறிந்து கொள்ள முடியும். ஆனால் தேர்வின் முடிவை வைத்து ஒரு மாணவரை ஒரே வகுப்பில் அடுத்த ஆண்டும் உட்கார்த்தி வைக்கக்கூடாது. அடுத்த வகுப்புக்கு அனுப்பிவிட வேண்டும். அந்த வகுப்பில் அந்த மாணவருக்கு சிறப்பு கவனம் அளிக்கப்பட வேண்டும். ஒரே வகுப்பில் ஒரு ஆண்டுக்கு மேல் உட்கார வைத்தால் தான் மாணவர்களின் இடைநிற்றல் ஏற்படும். அப்படி உட்கார வைக்க வேண்டும் என நான் சொல்லவில்லை. எட்டாண்டு காலம் பள்ளியில் படித்தும் ஒரு கூட்டில் கழித்தல் கணக்கு கூட ஒன்பதாம் வகுப்பில் தான் கற்றுக்கொள்கிறார்கள் என்றால் அது தரமான கல்வி கிடையாது. அரசு பள்ளிகளை இன்னமும் சீர்கேடு அடைய செய்வதுதான் உங்களுடைய நோக்கம். இது பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு எந்தவிதத்திலும் உதவாது. மேலும் குழந்தை தொழிலாளர் முறையையும் சிறுவர் திருமணத்தையும் ஒழிக்கிறோம் என்று சொல்லி தேர்வு நடத்தக்கூடாது என்று கேட்பது பைத்தியக்காரத்தனமானது. எட்டாம் வகுப்பு வரை அ,ஆ,இ,ஈ கூட தெரியாமல் பள்ளிக்கு வந்து விட்டு போவதால் ஏழை மாணவர்களுக்கு என்ன நன்மை ஏற்படப்போகிறது.

 4. இன்றைய கல்விமுறையால் என்ன நன்மை?
  சிறுநீர் கழித்துவிட்டு சுத்தம் செய்வதில்லை, கல்லை கடவுள் என்கிறான், பெற்றோர்களை வீட்டில் வைத்து பாதுகாக்காமல் விடுதிகளில் விடுவது, கொலை, கொள்ளை, பொறாமை, பெண்களை போகப்பொருளாக எண்ணுவது, அதிகமான மண்விடுதலை ன்னு ஏகப்பட்ட பாவச்செயலில் காப்பாற்றாத கல்வியால் ஒரு பயனும் இல்லை.

  எத்தனை தேர்வுகள் வைத்தாலும் அது வீணே, படிப்பு என்பது பணம் சம்பாரிக்க ஆல், மனிதனை மனிதனாக வாழவைக்கவே, அதை தராத கல்வியால் ஒரு பயனும் இல்லை

  • பாய்,

   ஒரு இந்து கல்ல கடவுள்னு சொல்றாரு. ஒரு முஸ்லீம் அருவத்த கடவுள்னு சொல்றாரு. இதுல என்ன ஒரு சைட மட்டும் சொல்றீரு.

   இந்த இரண்டு மதத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் எந்த நாடும் தன் மக்களுக்கு ஒண்ணுமே புடுங்காதுன்றது தான் உண்மை.

   சரி, இதுக்கு ஏதாகும் தீர்வு இருந்தா சொல்லுங்க!!!

 5. ஆந்திராவில் எப்போதோ இருந்து 7ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பொது தேர்வு தான் நடைபெறுகிறது இத்தனைக்கும் அங்கு மும்மொழி பாடத்திட்டம் வேறு

  என்னுடைய தனிப்பட்ட கருத்துபடி நான் இதை ஆதிரிக்கிறேன். குறைந்தபட்சம் 8ம் வகுப்பு மாணவர்களிடம், ‘வகுப்பு ஆசிரியர்கள்’ தங்களிடம் தான் Tuition படிக்க வேண்டும் என்று மாணவர்களை அச்சுறுத்த முடியாது

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க