த்தர பிரதேச மாநிலத்தில் இந்துத்துவ – போலீசு கூட்டணி ராஜ்ஜியம் நடத்திக்கொண்டிருக்கும் முதலமைச்சர் ஆதித்யநாத், மூன்று பத்திரிகையாளர்களை அவதூறு வழக்கில் கைது செய்திருக்கிறார். ‘முதலமைச்சர்’ ஆதித்யநாத்துக்கும் தனக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறிய பெண் ஒருவரின் பேட்டியை ஒளிபரப்பியதற்காகவும் அதுகுறித்து சமூக ஊடகத்தில் எழுதியதற்காகவும் மூன்று பத்திரிகையாளர்களை உ.பி. போலீசு கைது செய்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள பிரசாந்த் கனோஜியா.

’தி வயர்’ இந்தி இணையதளத்தில் பணியாற்றிய பத்திரிகையாளர் பிரசாந்த் கனோஜியா, தனது முகநூலில் ஆதித்யநாத்துடன் ஓராண்டுக்கும் மேலாக தொடர்பில் இருந்ததாகக் கூறிய பெண் ஒருவரின் வீடியோவை பகிர்ந்திருந்தார். ‘எவ்வளவுதான் ரகசியமாக வைத்திருந்தாலும் காதலை மறைக்க முடியாது யோகிஜி’ என்ற வரிகளுடன் வீடியோவை பகிர்ந்திருந்தார் பிரசாந்த்.

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் அதிகமாக பகிர்ந்துகொள்ளப்பட்டது. இந்த நிலையில் பத்திரிகையாளர் பிரசாந்த் கனோஜியாவை அவருடைய டெல்லி இல்லத்தில் கைது செய்தது உ.பி. போலீசு.  அவரை எங்கே வைத்திருக்கிறார்கள் என்கிற தகவலையும் அவர்கள் வெளியிடவில்லை.

பிரசாந்தின் கைது பத்திரிகையாளர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் தி வயர் இணையதளத்தின் ஆசிரியர் சித்தார்த் வரதராஜன், “பிரசாந்த் கைது செய்யப்பட்டிருக்கிறார். உ.பி. போலீசு அவரை கைது செய்துள்ளது. இது சட்டத்தை மீறிய செயலாகும்; கருத்துரிமைக்கும் எதிரானதாகும். அவர் தி வயர் இந்தி பதிப்பில் பணியாற்றியவர். இப்போது சுயாதீன பத்திரிகையாளராய் இருக்கிறார். இந்தக் கைது ஆதித்யநாத்தின் காட்டாட்சியை தோலுரித்து காட்டுகிறது” என தனது ட்விட்டர் பக்கத்தில் கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தார்.

படிக்க:
மீத்தேன் திட்டத்திற்கு எதிராக துண்டறிக்கை வினியோகித்த மக்கள் அதிகாரம் தோழர்கள் கைது !
♦ சங்கிகளால் பத்திரிகையாளர் சுவாதிக்கு தொடரும் மிரட்டல்கள் – ஐநா அதிருப்தி !

இந்தக் கைது சம்பவம் அரங்கேறிய அடுத்த நாள் (சனிக்கிழமை) ஆதித்யநாத்துக்கும் தனக்கும் தொடர்பு இருப்பதாகக்கூறிய பெண்ணின் கருத்து குறித்து ஊடக விவாதம் நடத்திய ‘நேஷன் லைவ்’ என்ற உள்ளூர் தொலைக்காட்சியைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ‘நேஷன் லைவ்’ தொலைக்காட்சியின் தலைவர் இஷிதா சிங்கும், அதனுடைய ஆசிரியர் அனுஜ் சுக்லாவும் உ.பி.போலீசால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இருவரின் கைது குறித்தும் தகவல் வெளியிட்டுள்ள நொய்டா போலீசு, “இவர்கள் நடத்திய விவாதத்தால் தொண்டர்கள் கொதித்து போயிள்ளனர். ஏதேனும் அசம்பாவிதம் நடக்கும் என்கிற நிலையில் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றும் பொருட்டு அவர்களைக் கைது செய்துள்ளோம்” என தெரிவித்துள்ளது.

‘நேஷன் லைவ்’ தொலைக்காட்சியின் தலைவர் இஷிதா சிங்கும், அதனுடைய ஆசிரியர் அனுஜ் சுக்லாவும்.

மேலும், போலீசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இந்தத் தொலைக்காட்சி உரிமம் பெறாமல் நடத்தப்பட்டதால் அதற்குரிய பிரிவுகளின் கீழும் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளது. ‘நமோ டிவி’என்ற 24 மணி நேர மோடி புகழ் பாடும் தொலைக்காட்சியை தேர்தலுக்காக எந்த வித உரிமமும், விதியும் இன்றி நடத்திய முன்னுதாரணம் இருக்கும்போது, ஆதித்யநாத்தின் காட்டாட்சிக்கு எதிராக செய்தி வெளியிட்டதாலேயே இந்த விதிமீறல் வழக்கு போடப்பட்டுள்ளது என்பதை சொல்லாமலேயே புரிந்து கொள்ள முடிகிறது.

மூன்று பத்திரிகையாளர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டிருப்பதை எடிட்டர்ஸ் கில்டு உள்ளிட்ட ஊடக அமைப்புகள் கண்டித்துள்ளன. சட்டத்தை தவறாக பயன்படுத்தி பத்திரிகையாளர்களை கைது செய்திருப்பதாக கண்டித்துள்ளது எடிட்டர்ஸ் கில்டு. “இது பத்திரிகை சுதந்திரத்தில் தலையிடுவதாகும்; கருத்து சுதந்திரத்தை நசுக்குவதாகும்” எனவும் “இது வேண்டுமென்றே மூவருக்கு எதிராக போடப்பட்ட வழக்கு” எனவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்.

“உடனடியாக பிணை பெற முடியாத வகையில் மூவரும் வார இறுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். இது போலீசு அவர்களை மேலும் ஒடுக்கும் விதமாக செயல்பட்டதைக் காட்டுகிறது. அவர்களுக்கு நீதி மறுக்கப்பட்டுள்ளதை காட்டுகிறது” என ஊடக பெண்களுக்கான அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த அறிக்கையில் மாற்றுக்கருத்தை உ.பி. அரசால் சகித்துக்கொள்ள முடியாததைத்தான் இந்த கைது நடவடிக்கைகள் காட்டுகின்றன எனவும் கண்டித்துள்ளது.

“இந்தியாவில் பத்திரிகையாளர்கள் உள்நோக்கத்துடன் கைது செய்யப்படுவதும், சட்டவிரோதமாக கைது செய்யப்படுவதும், துன்புறுத்தப்படுவதும் அதிகரித்து வருகிறது” எனவும் அந்த அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

உ.பி.-யில் மூன்று பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதைக் கண்டித்தும் அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும் மேலும் பல பத்திரிகையாளர் அமைப்புகள் இணைந்து கூட்டறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளன.

முசுலீம்களையும் ஒடுக்கப்பட்ட மக்களையும் தேடித்தேடி வேட்டையாடிய என்கவுண்டர் புகழ் ஆதித்யநாத், இப்போது பத்திரிகை சுதந்திரத்தை என்கவுண்டர் செய்யக் கிளம்பியிருக்கிறார். இனிவரும் காலங்களில் கொஞ்சநஞ்ச எதிர்ப்புணர்வும் ஊடகங்களிலிருந்து காணாமல் போகும் என எதிர்பார்க்கலாம்.


அனிதா
செய்தி ஆதாரம்: ஜன்தா கா ரிப்போர்ட்டர், தி வயர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க