இந்தியாவின் மின்சக்தி துறையில் கொள்கை முடிவுகளுக்கும் அதில் நடைபெறும் ஊழல்களுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் பொறுப்பேற்க வேண்டும்.
நாட்டு நலனில் அக்கறை கொண்ட குடிமக்கள் கோருகிறோம்!
அமெரிக்காவில் ஒரு மாவட்ட நீதிமன்றம் (நியூயார்க்கின் கிழக்கு மாவட்ட நீதிமன்றம்) சமீபத்தில் அதானியின் தொழில் சாம்ராஜ்யத்தின் ஒரு அங்கமான அதானி கிரீன் (Aadni Green) மற்றும் இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (SECI – Solar Energy Corporation of India) ஆகியவற்றின் மீது அதிர்ச்சியூட்டும் பல குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளது.
பெரிய அளவிலான கார்ப்பரேட் நிறுவனங்களின் ஊழல் முறைகேடுகள் பற்றி மட்டுமல்ல; ஏனெனில் அவை இந்தியாவிலும் அமெரிக்காவிலும் ஏற்கனவே இருந்து வருபவை தான். ஆனால் குறிப்பிட்ட நிறுவனங்களின் அறிவுறுத்தலின் பேரில் அவற்றுக்குச் சாதகமாக இந்திய மின்துறை அமைச்சகம் எவ்வளவு மோசடியான கொள்கை முடிவுகளை மேற்கொண்டிருக்கிறது என்பதும், நாடு முழுவதிலும் உள்ள மின் நுகர்வோரை எவ்வளவு மோசடியாக ஏமாற்றி இருக்கிறது என்பதும் தான் நமது அக்கறைக்குரியதாகும்.
இவை தொடர்பாக நாங்கள் 02/06/2022, 30/06/2022 மற்றும் 16/08/2024 ஆகிய தேதி இட்ட எங்களது கடிதங்களில் கூறியுள்ளவற்றை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
அவற்றில், மாநில மின்வாரியங்களின் நிதி நிலைமைகள், வாங்கப் போகின்ற சூரிய ஒளி மின்சாரத்தின் யூனிட் விலை என்று எதையும் கணக்கில் கொள்ளாமல், மின்வாரியங்கள் தங்களின் தேவையில் குறைந்தபட்சம் 10 சதவீதமாவது சூரிய ஒளி மின்சக்தி நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்ய வேண்டும் என்று ஒன்றிய அரசின் மின் துறை அமைச்சகம் உத்தரவிட்டிருக்கிறது. இது எவ்வாறு 2003 ஆம் ஆண்டு மின்சார சட்டத்தின் கீழ் தனக்குள்ள சிறப்பு அதிகாரத்தை முறையற்ற வகையில் பயன்படுத்தி மாநில மின்வாரியங்களைத் தொடர்ந்து கட்டாயப்படுத்தியது என்பதை அக்கடிதங்களில் சுட்டிக்காட்டி இருந்தோம்.
இதேபோன்று மின்சார துறை அமைச்சகம் இந்தியாவில் திட்டமிட்டு சில மனிதர்களால் நாடு முழுவதுமாக செயற்கையாக உருவாக்கப்பட்ட நிலக்கரி தட்டுப்பாட்டின் காரணமாக மாநில மின்வாரியங்கள் பெரும் செலவில் வெளிநாடுகளிலிருந்து நிலக்கரியை இறக்குமதி செய்து தேவையை நிறைவு செய்து கொள்ளக் கட்டாயப்படுத்தப்பட்டன.
இவ்விரண்டு நடவடிக்கைகளின் மூலம் ஆளும் அரசியல் வட்டாரத்துடன் நெருக்கமாக இருக்கின்ற சில தனியார் நிறுவனங்கள் ஆதாயம் அடைவதற்காக நாடு முழுவதிலும் உள்ள மின்சார உபயோகிப்பாளர்கள் தண்டம் செலுத்த வேண்டி நேர்ந்தது.
படிக்க: அதானி 2000 கோடி ஊழல் அம்பலம் | கைது செய்யுமா மோடி அரசு
ஒன்றிய மின்சக்தி அமைச்சகம் அவ்வளவு பச்சையாகவும் அடாவடித்தனமாகவும் நுகர்வோர் விரோதமான கொள்கை முடிவுகளை மேற்கொண்டதானது தவிர்க்க முடியாதவாறு அமைச்சகம் கடந்த 10 ஆண்டுகளாக மேற்கொண்டு வரும் இந்தக் கொள்கை முடிவுகள் ஆளும் அதிகாரத்திற்கு நெருக்கமான சில கார்ப்பரேட் தொழில் குடும்பங்களின் அறிவுறுத்தலின் பேரில் மேற்கொள்ளப்பட்டவையே என்கிற முடிவுக்கே இட்டுச் செல்கிறது. மேலும் அவை எவ்வகையிலும் நாட்டின் கோடிக்கணக்கான மின் நுகர்வோர்களின் நலனுக்காகவோ வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் மக்களைக் காப்பாற்றுவதற்காகவோ மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் அல்ல என்பதும் நிச்சயம்.
மேலும் பங்குச் சந்தைகளின் ஒருமைப்பாட்டை வலுப்படுத்தவும் பொதுமக்கள் நம்பிக்கையைப் பெறவும் செபி (SEBI) போன்ற நிறுவனங்கள் சுதந்திரமாகச் செயல்படும் என்று நாங்கள் நம்புகிறோம்.
அமெரிக்க பங்கு பரிவர்த்தனை ஆணையம் (USSEC – US Security Exchange Commission) மற்றும் அமெரிக்க குற்றப்புலனாய்வுத் துறை (FBI) ஆகியன விரிவான புலனாய்வு அடிப்படையில் அதானி குடும்ப அதிகாரிகள் ஒரு அமெரிக்க கம்பெனியுடன் இணைந்து இந்தியப் பங்கு பரிவர்த்தனை ஆணையம் மற்றும் ஆந்திரா, தமிழ்நாடு, ஒரிசா, சத்தீஸ்கர், மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநில மின்வாரியங்களை ஒரு சார்பாக மின் கொள்முதல் ஒப்பந்தத்தில் கையொப்பமிடச் செய்து சம்மதிக்க வைத்துள்ளனர். இதன் மூலமாக அந்தத் தனியார் நிறுவனங்கள் எதிர்வரும் பல பத்தாண்டுகளுக்குப் பல ஆயிரக்கணக்கான கோடிகள் லாபமடைய வழி செய்துள்ளனர். இந்த பணமனைத்தும் பல கோடி மின் உபயோகிப்பாளர்களை ஏமாற்றி அபகரிக்கப்பட்டவையே ஆகும்.
இவற்றினூடாக ஒன்றிய மின்சக்தி அமைச்சகத்தின் நுகர்வோர் விரோதக் கொள்கை முடிவுகளின் ஆதரவுடன் அந்தத் தனியார் நிறுவனங்கள் விவரமறியாத உபயோகிப்பாளர்களை மோசடி செய்திருப்பதுடன் மின் விநியோக கம்பெனிகளின் (DISCOM – Distribution Utility Companies) நிதி நிலைமையும் முடக்கி இருக்கின்றது. மொத்தமாகப் பார்க்கையில் நாட்டு மக்கள் அனைவரையும் மோசடி செய்து ஏமாற்றியுள்ளனர்.
படிக்க: அதானியை விரட்டியடித்த கென்ய மக்கள் போராட்டம்!
நம் நாட்டின் குற்றப்புலனாய்வு நிறுவனங்களான சிபிஐ, இடி, சி.பி.டி.டி (Central Board of Direct Taxes) போன்றவற்றின் மூலம் சார்பற்ற அறிவியல் பூர்வமான புலனாய்வு செய்து மேலதிகமான ஆதாரங்களைத் திரட்டி மாநில அரசுகளின் மின்வாரியங்களுக்கு மோசடியான தவறாக வழி நடத்தப்பட்ட கொள்கை முடிவுகளை மேற்கொண்டு சட்ட விரோதமான உத்தரவுகளைப் பிறப்பித்து ஒரு சார்பாக அந்த மின் கொள்முதல் ஒப்பந்தம் போடப்பட்டதற்கான சூழ்நிலைகள் காரணங்கள் என்ன என்பதைக் கண்டறிய வேண்டும்.
இவற்றால் அந்த குறிப்பிட்ட சில தொழில் குடும்பங்கள் அடைந்த லாபம் எவ்வளவு? மோசமான ஒப்பந்தங்களைப் போடச் செய்த ஒன்றிய மாநில அரசு அதிகாரிகளின் சட்ட விரோத செயல்பாடுகள் பற்றியும் மேலும் ஒட்டுமொத்தமாக ஏமாற்றப்பட்டு நட்டமடைந்த மின் உபயோகிப்பாளர்கள் அடைந்த நட்டம் எவ்வளவு? என்பதைப் பற்றியும் அனைத்து விவகாரங்களையும் விசாரணை மூலம் வெளிக்கொணர வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்.
இப்போது எழுந்திருக்கும் இந்த குற்றச்சாட்டுகள் உண்மை என்று புலனாய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டால் அந்த குறிப்பிட்ட தொழில் குடும்பங்கள் அவர்களின் பிரச்சாரகர்கள் (Promoters) அனைவரும் நாட்டின் கருப்பு பட்டியலில் வைக்கப்பட்டு, இனி அவர்கள் மின் உற்பத்தி தொழிலில் ஈடுபட முடியாதவாறு தடை செய்யப்பட வேண்டும்.
அத்துடன் நாட்டின் மின் நுகர்வோர்கள் அடைந்த மொத்த நட்டத்தொகையையும் மேலும் அதற்கான கூடுதல் தண்டத் தொகையையும் கணக்கிட்டு அதை அந்த நிறுவனங்களிடமிருந்து வசூலிக்க வேண்டும். மேலும் அக்குற்றவாளிகள் உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் விசாரிக்கப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.
மேலும் இந்த ஊழல் நடைமுறை பற்றிய விரிவான அறிக்கையை 6 மாதத்திற்குள் நாடாளுமன்றத்தின் முன் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கோருகிறோம்.
இவண்,
பொதுத்துறை மற்றும் பொது சேவை நிறுவனங்களின் மக்கள் ஆணையம்.
(Peoples’ Commission on Public Sector and Public Services – PCPSPS)
மொழிபெயர்ப்பு கட்டுரை
(கவுண்ட்டர் கரண்ட்ஸ் இணையத்தில் வெளியிடப்பட்டது)
குறிப்பு:
இந்த மக்கள் ஆணையம் புகழ்வாய்ந்த கல்வியாளர்கள், வழக்குரைஞர்கள், முன்னாள் துறைசார் அதிகாரிகள், தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோரைக் கொண்ட அமைப்பாகும்.
சுந்தரம்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram