உற்சாகத்துடன் நடைபெற்ற பு.மா.இ.மு உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி!

0

ன்பார்ந்த உழைக்கும் மக்களே 26.02.2026 அன்று புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் உறுப்பினர் சேர்க்கை பெரும் உற்சாகத்துடன் நடைபெற்றது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்திய வானில் செங்கொடிகளை ஏந்தி இளம் சூறாவளிகள் புறப்பட்டு விட்டன.

அனைவருக்கும் கல்வி!
அனைவருக்கும் வேலை!
புதிய ஜனநாயக புரட்சி ஓங்குக!
என்ற மூலக் கொள்கையை முன்வைத்து 25 ஆண்டுகளுக்கு மேலாக மாணவர், இளைஞர் சமுதாயத்தின் மீது நிகழ்த்தப்படும் அநீதிக்கு எதிராக பல்வேறு களப் போராட்டங்கள் சட்டப் போராட்டங்களை நடத்தியும், மார்க்சிய – லெனினிய பார்வையில் வர்க்க உணர்வுடன் மாணவர்களை அரசியல் படுத்தியும் அமைப்பாக்கியும் புரட்சிகரமாக முன்நகர்த்து கொண்டு வருகிறது எமது அமைப்பு. இவ்வாறான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பு.மா.இ.மு-வின் புதிய உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி பிப்ரவரி 26 அன்று வெற்றிகரமாக நடைபெற்றது.

கூட்டத்தின் தொடக்கமாக பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிக்காகத் தனது இன்னுயிரை நீத்த அனைத்து தியாகிகளுக்கும் வீரவணக்கம் செலுத்தி கூட்டம் தொடங்கியது. பு.மா.இ.மு-வை சேர்ந்த இளம் தோழர் சினேகவி கூட்டத்திற்குத் தலைமை உரையாற்றினார்.

இன்றைய சூழலில் சாதி மதவெறி சக்திகளால் பிளவுபடுத்தப்பட்டு மறுகாலனியாக்க கொள்கையின் நுகர்வு வெறி கலாச்சாரத்தால் சீரழிந்து கொண்டிருக்கும் மாணவர் இளைஞர் சமுதாயத்தையும், ஏகாதிபத்திய சுரண்டலால் ஓட்டாண்டி ஆக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பாட்டாளி வர்க்கத்தையும் மீட்டெடுத்து ஒரு மாற்றுச் சமுதாயத்தைப் படைப்பதற்கும் சமூக மாற்றத்தை விரும்பி மாணவர் அமைப்பில் பயணப்பட வந்திருந்த அனைவரின் வரலாற்றுக் கடமையை எடுத்துரைத்து அனைத்து தோழர்களுக்கும் வாழ்த்துக் கூறி கூட்டத்தைத் துவங்கினார்.

பு.மா.இ.மு-வில் இணைவதற்கு முன்வந்திருக்கும் தோழர்களுக்கு அதன் நோக்கத்தை விளக்கி தோழர் குருசந்திரன் நோக்க உரையாற்றினார்.

பெரும் கனவுகளுடனும் பெரும் ஆசைகளோடும் கல்வி வளாகத்துக்குள் வரும் மாணவர்கள் ஏன் சங்கமாய் திரள வேண்டும் என்ற கேள்வியோடு குருசந்திரன் தொடங்கினார். “இன்று கல்வி வளாகங்களில் மாணவர்களின் மீது சாதி ரீதியாக, மத ரீதியாக தாக்குதல் நடத்துவது, கல்வி உரிமை பறிக்கப்படுவது, ஜனநாயக வெளிகள் வெட்டி சுருக்கப்படுவது, மாணவர்களின் கனவுகளை நொறுக்கி எறிவது எல்லாம் ஏதோ தனி நபர் செய்வது அல்ல மாறாக ஒரு அமைப்பாக்கப்பட்ட பாசிஸ்டுகள், ஒரு இயக்கமாகத் திரட்டப்பட்ட மதவெறி கும்பலால், ஒழுங்கமைக்கப்பட்ட அரசு அதிகார வர்க்கத்தால் நிகழ்த்தப்படும் வன்முறை. இதற்கு எதிராக உணர்வு கொண்ட நாமும் அநீதிக்கு எதிராகவும், மாணவர்களின் உரிமைகளுக்காகவும் மாணவர்களின் ஜனநாயகத்தை வென்றெடுக்கவும், சமூக மாற்றத்திற்காகவும் சங்கமாய் திரண்டே தீர வேண்டும்” என்று உறுதியுடன் விளக்கினார்.

“பறவையாய் பிறந்தால் பறந்தே தீர வேண்டும் அதேபோல் மாணவராய் இருந்தால் போராடியே தீர வேண்டும்”. அதுவே நமது வரலாற்றுக் கடமை என்பதை அழுத்தமாக உணர்த்தினார்.

மேலும், நமக்குக் கிடைத்திருக்கும் குறைந்தபட்ச ஜனநாயகமும் ஏதோ வானத்திலிருந்து பொழியவும் இல்லை, எந்த பிரம்மனும் அருள் செய்ததும் அல்ல. ஒவ்வொரு உரிமைகளும் பல்லாயிரம் தோழர்களும், மக்களும் போராடி, இரத்தம் சிந்தி, உயிர் நீத்துப் பெறப்பட்ட உரிமைகள். அப்படியான உரிமையை நாம் அடுத்த தலைமுறைக்குக் கொடுப்பது நமது சமூகக் கடமை என்றும் விளக்கிக் கூறினார்.

“இங்கே சில மேதாவிகள், அக்கறையாக இருப்பது போல் இந்த உரிமைகளை எல்லாம் அனுபவித்துக் கொண்டு “மாணவர் சங்கத்தில் சேராதே, வீதியில் இறங்கிப் போராடாதே உனது வாழ்க்கை போய்விடும்” என்று ஆளும் வர்க்கத்தின் அடிவருடிகளாகக் கூவிக் கொண்டிருக்கின்றனர். இவையெல்லாம் ஒரு பம்மாத்து வேலையே. மேலும் நமது உரிமையை இருட்டடிப்பு செய்யும் இது போன்ற வார்த்தைகள் ஒடுக்கப்பட்டவர்களின் மீது செலுத்தப்படும் வன்முறை. இதையெல்லாம் உடைத்தெறிய வேண்டும்” என்று பொதுவெளியில் சிலரால் மாணவர் அமைப்பிற்கு எதிராக முன்வைக்கப்படும் வாதத்தைத் தோலுரித்துக் காட்டினார்.

இறுதியாக பல்வேறு மாணவர் அமைப்புகள் இருக்கும் பட்சத்தில் ஏன் பு.மா.இ.மு-வில் இணைய வேண்டும் என கேள்வி எழுப்பி “இன்றைய இந்தியச் சூழலில் நம்மைச் சூழ்ந்திருக்கும் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி; அம்பானி – அதானி பாசிச கும்பலை வீழ்த்துவதற்குக் கூர்மையாகவும் மார்க்சிய – லெனினிய அரசியலை முன்வைத்தும் அதனை முறியடிக்கவும் இந்திய மண்ணில் புதிய ஜனநாயக புரட்சியைச் சாதிப்பதற்கும், ஒரு சோசலிச சமூகத்தைப் படைப்பதற்கும் சரியான பாதையை வகுத்துக் கொண்டு மாணவர்களை அரசியல் படுத்தும் அமைப்புதான் பு.மா.இ.மு” என்று விளக்கினார்.

இதற்குச் சான்றாதாரமாக பு.மா.இ.மு-வின் கடந்தகால போராட்ட வரலாறுகளை எடுத்து விளக்கினார்.

குறிப்பாக கடந்த நான்காண்டுகளில் நடத்திய முன்னணியான போராட்டங்களை விரிவாக விளக்கினார். மணிப்பூர் போராட்டத்தில் அனைத்து கட்சிகளும் மோடியை நாடாளுமன்றத்துக்கு வரச் சொல்லிக் கெஞ்சினார்கள். ஆனால் “பற்றி எரிகிறது மணிப்பூர், பற்ற வைத்தது காவி” என மாணவர்களுக்குச் சரியான எதிரியை அடையாளம் காட்டியதுடன் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க-வை தடை செய்ய வேண்டும் எனவும் மாணவர்களை முழங்கவைத்தோம். கடந்த ஆண்டு மாநிலக் கல்லூரியில் ரூட் மாணவர்கள் பிரச்சினையில் சுந்தர் என்ற மாணவன் இறந்து போனான் அவருக்காக எல்லோரும் நீதி கேட்டுக் கொண்டிருந்த நேரத்தில் அவனுக்கான நீதியும் வேண்டும் அதனுடன் இப்படி மாணவர்கள் இனி இழக்கக் கூடாது என்றால் மாணவர் சங்க தேர்தலை நடத்திட வேண்டும் என்றும், ஆளும் வர்க்கமும், அதிகார வர்க்கமும் திட்டமிட்டு “மாணவர்கள் சிந்தனையிலிருந்தே அகற்றிய “மாணவர் சங்கத் தேர்தலை” அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குக் கொண்டு வந்தது” எமது அமைப்பின் தலைமையில் நடந்த போராட்டம் தான்.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் நிலங்கள் பறிக்கப்படுவதற்கு எதிரான தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தியிருக்கிறது. இதற்காக சட்டரீதியாகவும் இந்த கனம் வரை போராடி வருகிறது எமது அமைப்பு. தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் சாதிய தாக்குதல்களுக்கு எதிராகவும், அதிகரித்து வரும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராகவும் மாணவர்கள் மத்தியில் “LOVE ALL NO CASTE” அனைவரையும் நேசிப்போம் சாதியை மறுப்போம்! பாலின சமத்துவம் படைப்போம்! என்ற முழக்கத்தை முன்வைத்து மாணவர்களின் மத்தியில் பேரணிகளும் போராட்டங்களையும் தற்போது வரை நடத்தி வருகிறோம். எனவே தான் இந்த மண்ணில் சாதிக்கு எதிராகப் போராட விரும்பும், மதவெறிக்கு எதிராகப் போராட விரும்பும், ஆணவப் படுகொலைக்கு எதிராகப் போராட விரும்பும், கல்வி உரிமைக்காகப் போராட விரும்பும், அநீதிக்கு எதிராகப் போராட விரும்பும், மாணவனின் கல்விக்காகப் போராட விரும்பும், வேலைக்காகப் போராட விரும்பும், சமத்துவ சமூகத்தைப் படைக்க விரும்பும், மனித மாண்பை மீட்க விரும்பும் அனைத்து மாணவர்களும், இளைஞர்களும் பு.மா.இ.மு-வில் இணைய வேண்டும் என அறைகூவல் விட்டார்.

அடுத்த நிகழ்வாக உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வை ம.அ.க-வின் மாநிலப் பொருளாளர் தோழர் அமிர்தா அவர்கள் தொடங்கி வைத்து அனைத்து மாணவர்களுக்கும் உறுப்பினர் அட்டை வழங்கினார்.

அடுத்தபடியாக புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணியில் இணைந்த அனைத்து புரட்சிகர தோழர்களுக்கும் வாழ்த்துரை வழங்கும் நிகழ்வு தொடங்கியது. முதலாவதாக ம.அ.க மாநில பொதுச் செயலாளர் தோழர் வெற்றிவேல் செழியன் அவர்கள் அமைப்புக்குள் வந்த அனுபவங்களையும் அப்பொழுது ஏற்பட்ட குடும்ப சிக்கல்களையும், தனது அரசியல் பாதையைப் பற்றி கேலி கிண்டல்கள் செய்தவர்களையும் சுட்டிக்காட்டி அவர்கள் இப்பொழுது என்னைப் பார்க்கும் பார்வையும், இந்த சமூகம் என்னைப் பார்க்கும் பார்வையும் எப்படி மாறி உள்ளது என்பதை விளக்கினார். மேலும் அவர்களை விடவும் இன்று எமக்கு சமூகத்தில் பெரும் மரியாதை உள்ளது என்றும் மக்களுக்காக வாழும் எல்லோருக்கும் எப்பொழுதும் சமூகத்தில் மதிப்பு அதிகரித்துக் கொண்டே போகும் எனவும் அப்படியான வாழ்க்கையை வாழத் தொடங்குங்கள் என வாழ்த்தினார்.

அடுத்ததாக பேராசிரியர் ரட்சகன் அவர்கள் தனது வாழ்த்துரையை வழங்கினார். குறிப்பாக இங்கு இருக்கக்கூடிய கார்ப்பரேட்டுகள், ஏகாதிபத்தியங்கள் கல்வி உரிமைகளையும், சமூக உரிமைகளையும் நசுக்கி ஒட்டச் சுரண்டிக் கொண்டிருக்கிறது என்பதையும் நமது போராட்டங்கள் சுரண்டலுக்கு எதிரானதாக இருப்பதையும் அவர் உணர்த்திப் பேசினார். கல்வி நிறுவனங்கள் அனைத்தும் முதலாளிக்கு ஏற்றவரான முட்டாள்களை உருவாக்கும் அடிமைகளை உருவாக்கும் தொழில் கூடம் தான். அதில் அவர்கள் சிறப்பான முட்டாள்களை அடிமைகளை உருவாக்குகின்றர். இதைப்பற்றி தினந்தோறும் வருந்தியுள்ளேன். ஆனால் இப்படியான மாணவர் கூட்டத்தைப் பார்க்கும் போது மிகப்பெரிய நம்பிக்கை ஏற்படுகிறது. இனி சமூகத்தில் நடக்கும் எல்லாவிதமான ஒடுக்குமுறைகளுக்கும் எதிராகக் குரல் கொடுக்க ஒரு இளம் பட்டாளம் ஒன்று கூடி விட்டது என நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது என பேருற்சாகத்துடன் வாழ்த்தினார்.

மேலும் உங்களுடைய எல்லா போராட்டங்களிலும் நான் துணை நிற்பேன் என்றும் உறுதியளித்தார்.

அடுத்ததாக புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ஆ.கா.சிவா அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகள் நசுக்கப்படுவதும், மாணவர்களின் உரிமைகள் நசுக்கப்படுவதும் வெவ்வேறானவை அல்ல ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். அதனால் தான், வரலாறு முழுக்க எல்லா போராட்டங்களும் இணைந்து வெற்றி கண்டுள்ளன. இளைஞர்களிடம்தான் தன்னலமற்ற போர் குணம் இருக்கும். அரசியல் அதிகாரத்திற்கான போராட்டத்தில் இந்த மாணவர்களை நெறிப்படுத்துவதும் ஒழுங்குபடுத்துவதும் மாணவர் சங்கங்கள் மட்டுமே செய்யும் என்று குறிப்பாக உணர்த்தி பேசினார்.

அடுத்ததாக, பு.மா.இ.மு-வில் இணைந்ததற்கு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் தீரன் சுருக்கமாக வாழ்த்துரை வழங்கினார்.

இறுதியாக, தமது அனுபவங்களைச் சுருக்கமாக புதிதாக இணைந்த தோழர்கள் வெளிப்படுத்தினர். அதிலும் குறிப்பாக பெண் தோழர்கள் பெரும் எண்ணிக்கையில் தங்களது குடும்பத்தினருடன் மேற்கொண்ட போராட்டங்கள் முதல் அமைப்பில் இணைவது வரை உணர்வுப்பூர்வமாகவும், அரசியல் தெளிவுடனும் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

பு.மா.இ.மு-வின் சட்டப்பல்கலைக்கழக கிளையைச் சேர்ந்த தோழர் யாழினி அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

பாட்டாளி வர்க்க சர்வதேசிய கீதத்துடன் கூட்டம் நிறைவு பெற்றது.

அன்பார்ந்த உழைக்கும் மக்களே பெரும் நம்பிக்கையுடன் இருங்கள் சமூக மாற்றத்திற்காக உங்களுடன் இணைந்து களம் காண அரசியல் தெளிவு கொண்ட ஒரு இளைஞர் பட்டாளம் அணிதிரண்டு வருகிறது என அறைகூவும் வகையிலும், இந்த தலைமுறை இளைஞர்கள் குறித்து இருக்கும் பொதுக் கருத்துக்களை உடைத்தெறியும் வகையிலும் இந்த கூட்டம் பெரும் உற்சாகத்துடன் நடைபெற்றுள்ளது என தெரிவித்துக் கொள்கிறோம்.


இவண்,
மாநில ஒருங்கிணைப்புக் குழு,
புரட்சிகர-மாணவர் இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு – புதுவை.
9444836642.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க