“சாதி, மதம் கடந்து காதலிக்க – மணம் முடிக்க வேண்டும் ஜனநாயகம்”
இயக்கத்தின் சூடேறிய கேள்விகள்!
கடந்த டிசம்பர் 28, 2025 அன்று மதுரையில் “சாதி, மதம் கடந்து காதலிக்க – மணம் முடிக்க வேண்டும் ஜனநாயகம்!” என்ற முழக்கத்தின் கீழ் மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநில இணைச்செயலாளர் தோழர் ரவி (எ) செல்வகணேஷ் – தோழர் ராதிகா இணையரின் சாதி மறுப்பு புரட்சிகர மணவிழா எழுச்சிகரமாக நடைபெற்றது. சாதி ஆதிக்கத்திற்கு எதிராகத் தலித் மக்களிடையே ஏற்பட்டுவரும் எழுச்சிக்குப் பண்பாட்டுத் தளத்தில் சரியான மாற்றை முன்னிறுத்தும் வகையில், ஒரு பண்பாட்டுப் போருக்கான தொடக்கப்புள்ளியாக இம்மணவிழா அமைந்தது.
இதன் தொடர்ச்சியாக, சாதியற்ற-சமத்துவப் பண்பாட்டைப் படைக்கும் நோக்கத்தில், தமிழ்நாட்டின் உழைக்கும் மக்களின் முற்போக்குப் பண்பாட்டை உயர்த்திப் பிடித்து, “தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா”-வை வருகின்ற பிப்ரவரி 21-ஆம் தேதி (மார்ச் 7 – தேதி மாற்றப்பட்டுள்ளது), மதுரை தமுக்கம் மைதானத்தில் நடத்த உள்ளோம்.
இதனையொட்டி தமிழ்நாடு முழுவதும் மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநில இணைச் செயலாளர்கள் “எழுச்சிப் பயணத்தை” மேற்கொண்டு வருகின்றனர். களத்தில் இவ்வியக்கத்தின் அரசியல் உள்ளடக்கம் குறித்து பல்வேறு கேள்விகள், சந்தேகங்கள், மாற்றுக்கருத்துகளை மக்கள், ஜனநாயக சக்திகள் பலரும் தோழர்களிடம் முன்வைக்கின்றனர். இது பற்றியான ஆரோக்கியமான விவாதம் சமூகத்தில் கட்டமைக்கப்பட வேண்டும் என்பதே எங்களின் நோக்கமும். எனவே, அதற்கான தொடக்கமாக களத்தில் தோழர்கள் எதிர்கொண்ட கேள்விகளையும் அதற்கான விளக்கங்களையும் இங்கு தொகுத்து பதிவிடுகிறோம்.

சமூகத்தில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. ஆனால், “காதலிப்பதற்கு வேண்டும் ஜனநாயகம்” என்று முழக்கம் வைத்து இயக்கம் எடுப்பது ஏன்?
பலருக்கும் இம்முழக்கத்தை பார்க்கும் போது இப்போது காதலிப்பதுதான் முக்கியமான பிரச்சினையா என்ற கேள்வி எழலாம். சிலருக்கு காதலை எப்படி பார்ப்பது என்ற புரிதலின்மையிலிருந்து இக்கேள்வி எழுகிறது. இன்னும் சிலருக்கு, சாதி-மத உணர்வினாலும் காதல் மீதான வெறுப்பினாலும் இக்கேள்வி வருகிறது. எப்படியிருப்பினும், காதலின் முக்கியத்துவத்தை பற்றி புரிந்துகொள்வது முக்கியமானது.
பொதுவாக, இச்சமூகத்தின் ஆணாதிக்க-சாதி ஆதிக்க பொதுபுத்தியிலிருந்தே பலரும் காதலைப் பார்க்கின்றனர். மறுகாலனியாக்க நுகர்வுவெறி தீவிரமடைந்துள்ள இச்சூழலில் காதலை சீரழிவானது என்று பார்க்கும் மனநிலையும் பலரிடம் விதைக்கப்பட்டுள்ளது.
ஆனால், உண்மையில் காதல் என்பது மனிதனுக்குரிய இயல்பான ஓர் உணர்வு. சொத்துடைமை சமூகம் தோன்றிய பிறகு சொத்தை பாதுகாக்க பெண்ணிற்கு கற்பு திணிக்கப்பட்ட போது, காதலுக்கும் சேர்த்தே வரம்பிடப்பட்டது. அதிலும், இந்தியாவில் காதல், சாதி என்ற சங்கிலியாலும் இறுகக் கட்டப்பட்டுள்ளது.
எனவே, இந்தியாவில் காதல் என்பது அதன் இயல்பிலேயே இக்கட்டமைப்பிற்கு, பார்ப்பனியத்திற்கு எதிரான கலகமாகவே அமைகிறது. இதனால்தான், சாதி ஒழிப்பில் அகமணமுறையை ஒழிப்பதன் முக்கியத்துவத்தை பெரியார், அம்பேத்கர் போன்ற சாதி ஒழிப்புத் தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
அதுவும் இன்றைய சூழலில் இளம்தலைமுறையினரிடம் சாதி, மதம், இனம், மொழி கடந்து காதலிப்பது என்பது மேலும் தீவிரமடைந்துள்ளது. இதனால் தங்களது அதிகார கோட்டைகள் சரிவதை பொறுத்துக்கொள்ள முடியாமல் ஆர்.எஸ்.எஸ். சங்கப் பரிவார கும்பலும் ஆதிக்கச் சாதி சங்கங்களும் காதலர்கள் மீது போர் தொடுக்கின்றனர். உண்மையில், இது சமத்துவ உணர்வு பெருகிவரும் இளந்தலைமுறை மீதான தாக்குதலாகும்.
சமீப காலமாக, தமிழ்நாட்டில் சாதி ஆணவப் படுகொலை தீவிரமடைந்து வருவதும், இந்தியா முழுவதும் ‘லவ் ஜிகாத்’ என்ற பெயரில் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல்கள் அரங்கேறுவதும் இதன் வெளிப்பாடே.
எனவே, தலித் மக்கள் இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல்களை பாசிச எதிர்ப்புடன் இணைத்து, ஜனநாயகத்திற்கான தேவையை வலியுறுத்தி இந்த இயக்கத்தை முன்னெடுத்துள்ளோம். அதிலும், முதன்முதலாக, காதலிப்பது ஓர் உரிமை என்ற அடிப்படையில் இயக்கம் எடுப்பது எமது அமைப்பாகத்தான் இருக்கும்.

சமீப காலமாக தலித் மக்கள் மீது அதிகரித்துவரும் தாக்குதலை எப்படி பார்ப்பது?
கடந்த சில ஆண்டுகளாகவே, தமிழ்நாட்டில் குறிப்பாக தென்மாவட்டங்களில் தலித் மக்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. வேங்கைவயல், நாங்குநேரி, கவின் ஆணவப் படுகொலை என ஆதிக்கச் சாதி வெறியாட்டங்களின் பட்டியல் நீள்கிறது.
இந்தாண்டு தொடக்கத்தில் பொங்கல் பண்டிகையின் போது மட்டும் பத்துக்கும் மேற்பட்ட சாதியத் தாக்குதல் அரங்கேறியுள்ளன. இவ்வாறு சாதியத் தாக்குதல் தீவிரமாக அதிகரித்து வந்தாலும், தி.மு.க. அரசோ இதை முடிந்தளவிற்கு மூடிமறைப்பதற்கான முயற்சியிலேயே ஈடுபட்டு வருகிறது.
ஆனால், தலித் மக்கள் மீதான தாக்குதல் அதிகரிப்பது என்பது சாதாரண நிகழ்வல்ல. இதன் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்கப் பரிவாரங்களின் ஊடுருவல் உள்ளது என்பதை நாங்கள் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறோம். குறிப்பாக, கடந்த அடிமை அ.தி.மு.க. ஆட்சியில் ஆதிக்கச் சாதி சங்கங்களிலும் அதிகார வர்க்கத்திலும் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவல் தீவிரமாக நடந்துள்ளது.
மேலும், 1990-களில் நடந்த சாதியத் தாக்குதல்களுக்கும் தற்போது நடந்துவரும் சாதியத் தாக்குதல்களுக்கும் பாரிய வேறுபாடு உள்ளதை கவனிக்க வேண்டும்.
இந்தியாவில் மறுகாலனியாக்கக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்டதன் விளைவாக, விவசாய நசிவு, நகரமயமாக்கல் போன்றவை தீவிரமடைந்தன. கூலி, ஏழை விவசாயிகளாக இருந்த தலித் மக்கள் பிழைப்புத் தேடி நகரங்களை நோக்கி நகர்ந்தனர். இது கிராமங்களில் ஆதிக்கச் சாதியினருடனான தலித் மக்களின் சாதியப் பிணைப்பில் ஒரு தளர்வை ஏற்படுத்தியது.
கடந்த சில பத்தாண்டுகளில் சமூகப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட இந்த மாற்றம் உற்பத்தி சக்திகளிலும் துலக்கமான மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. உற்பத்தி சக்திகளின் இந்த வளர்ச்சியானது நிலவும் கட்டமைப்பு, பண்பாடு, அரசியல் சட்டங்கள் ஆகியவற்றில் மாற்றத்தைக் கோருகிறது.
சமத்துவத்திற்கான இந்த எழுச்சியைச் சகித்துக்கொள்ள முடியாத பிற்போக்குக் கும்பல், சாதிவெறி, வெறுப்புப் பிரச்சாரத்தைப் பரப்பி தலித் மக்கள் மீது தாக்குதல் தொடுக்கிறது. சாதி ஆணவப் படுகொலைகளும் இதன் வெளிப்பாடே.
இத்தாக்குதல்கள், 1990-களில் நடந்ததைப் போல மக்களிடையே வேரூன்றியுள்ள சாதி ஆதிக்கத்தினால் நடப்பதைக் காட்டிலும், ஆதிக்கச் சாதிவெறி சங்கங்களாலும், ஆர்.எஸ்.எஸ். ஊடுருவலாலும்தான் நடந்து கொண்டிருக்கின்றன என்பதைப் பல சம்பவங்கள் ஆதாரத்துடன் நிரூபிக்கின்றன. முன்னேறிவரும் சமூகத்தின் மீதான இந்தப் பிற்போக்குச் சக்திகளின் தாக்குதல் திட்டவகைப்பட்ட வகையில் தீவிரமடைந்து வருகிறது.

சட்டம் இயற்றுவதால் மட்டும் ஆணவப்படுகொலைகளை தடுத்து நிறுத்திவிட முடியுமா?
தமிழ்நாட்டில் சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாகவே எதிரொலித்து வருகின்றது. கவின் மீதான ஆணவப் படுகொலைக்கு பிறகு இக்கோரிக்கை மேலும் வலுவடைந்துள்ளது. பலதரப்பட்ட கட்சிகள், அமைப்புகள், ஜனநாயகம் சக்திகள், சமூக செயற்பாட்டாளர்கள், சமத்துவத்தை நேசிக்கும் சக்திகள் என பலரும் சிறப்பு சட்டம் வேண்டுமென்றும் அது எவ்வாறு வடிவமைக்கப்பட வேண்டுமென்றும் பேசியும் எழுதியும் வருகின்றனர்.
எமது அமைப்பும் இக்கோரிக்கையை முன்வைத்து பல்வேறு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளது. தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழாவின் ஐம்பெரும் முழக்கங்களில் முதலாவதாக இக்கோரிக்கையையே முன்வைத்துள்ளோம்.
ஆனால், இச்சட்டமானது பிற சட்டங்களை போல சடங்குத்தனமானதாக அல்லாமல் சாதி ஆணவப் படுகொலைக்கான மையக் காரணிகளை களையும் வகையில் இருக்க வேண்டும்.
அதற்காக, ஆணவப் படுகொலைக் குற்றவாளிகளின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வது; ஆணவப் படுகொலைகள் மற்றும் சாதிவெறியாட்டங்களைத் துண்டிவரும் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. சங்கப் பரிவார அமைப்புகள், ஆதிக்கச் சாதிவெறி சங்கங்களைத் தடை செய்வது; ஆணவப் படுகொலைக்கு உள்ளானவர்களின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்குவது உள்ளிட்ட அம்சங்களைக் கொண்ட ஆணவப் படுகொலைத் தடுப்புச் சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்கிறோம்.
அதேசமயம், களப்போராட்டங்களே இச்சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுத் தருவதற்கும் முக்கியப் பங்காற்றும்.
மேலிருந்து சட்டம் கொண்டுவந்தாலும், ஜனநாயகமடையாத ஒரு சமூகத்தில் அதனை நடைமுறைப்படுத்துவது எளிதானதல்ல என்பதையே பல சட்டங்கள் நமக்கு உணர்த்துகின்றன. எனவே, கீழிருந்து சாதி ஆதிக்கத்திற்கு எதிரான மாற்று பண்பாட்டை நிறுவ வேண்டும். தற்போது நாங்கள் முன்னெடுத்துவரும் தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா அத்தகைய மாற்று பண்பாட்டை நிறுவும் நோக்கத்திலிருந்தே முன்னெடுக்கப்படுகிறது.

பாசிசம் முன்னேறிவரும் இச்சூழலில், அதிலிருந்து விலகி தலித் மக்கள் மீதான தாக்குதலை மையப்படுத்தி இயக்கம் எடுப்பதா?
இக்கேள்வியானது இன்று தமிழ்நாட்டில் தலித் மக்கள் மீது அரங்கேறிவரும் சாதியத் தாக்குதல்களை தனித்த விசயமாக பார்க்கும் பார்வையாகும். மேற்குறிப்பிட்டபடி, இன்று தலித் மக்கள் மீதான தாக்குதலின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் இருக்கிறது.
தமிழ்நாட்டில் தன்னுடைய மத பிளவுவாத அரசியல் மூலம் காலூன்ற முடியாத பாசிச கும்பல், இங்கு நிலவுகின்ற சாதியக் கட்டமைப்பை பயன்படுத்தி மக்களை தனக்கான அடித்தளமாக மாற்றிக்கொள்ளத் துடிக்கிறது. திருமாறன் ஜி போன்ற சாதிவெறியர்கள் மூலம் தேவர், நாடார் உள்ளிட்ட ஆதிக்கச் சாதி மக்களிடமும், கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் போன்ற கருங்காளிகள் மூலம் தேவேந்திர குல வேளாளர் உள்ளிட்ட தலித் மக்களிடமும் என இருமுனைகளிலும் தனது ஊடுருவலை மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக, வரவிருக்கும் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் என்பது பா.ஜ.க-விற்கு மிகவும் முக்கியமானது. எதிர்க்கட்சிகள் ஆளும் இம்மாநிலங்களில் ஆட்சியைக் கைப்பற்ற பல்வேறு வகைகளில் காய்களை நகர்த்தி வருகிறது பாசிச கும்பல். இதில் தமிழ்நாட்டில் தென்மாவட்டங்களை குறிவைத்தே ஆர்.எஸ்.எஸ். வேலை செய்து வருகிறது. இது பா.ஜ.க-வின் “மிஷன் சவுத்” திட்டத்தின் அங்கம்.
‘திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக்குவோம்’ என சங்கிக் கும்பல் கொக்கரித்து வருவதையும் இதன் பின்னணியில் இருந்தே பார்க்க வேண்டும். மதுரை திருப்பரங்குன்றத்தை கலவர பூமியாக்க வேண்டும் என ஓராண்டுக்கும் மேலாக சங்கி கும்பல் சதிகளை அரங்கேற்றி வருகிறது. இந்த சதி முயற்சிகளை தோற்கடிக்கும் விதமாக எமது அமைப்பு களத்தில் தொடர்ச்சியாக போராடி வருகிறது.
அதேபோல், தென்மாவட்டத்தை அதானி-அம்பானிகளின் வேட்டைக்காடாக மாற்றும் வகையிலும் பல்வேறு நாசகர கார்ப்பரேட் திட்டங்களை பாசிச மோடி அரசு மேற்கொண்டு வருகிறது.
எனவே, தலித் மக்கள் மீது அதிகரித்துவரும் தாக்குதல் என்பது ஏதோ தனித்த நிகழ்வல்ல. ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க கும்பல் தமிழ்நாட்டில் காலூன்றுவதற்காக மேற்கொள்ளப்படும் சதியின் அங்கம் என்பதை அம்பலப்படுத்தி தலித் மக்கள் மீதான இத்தாக்குதலுக்கு எதிரான போராட்டத்தை பாசிச எதிர்ப்புடன் இணைத்து முன்னெடுக்க வேண்டும்.

இளந்தலைமுறையிடம் சமத்துவ உணர்வு அதிகரித்து வருவதாக சொல்கிறீர்கள். ஆனால், கவினை கொன்ற சுர்ஜித்தும் சின்னதுரையை வெட்டிய மாணவர்களும் இதே இளந்தலைமுறைதானே?
தென்மாவட்டங்களில் அரங்கேறிவரும் பெரும்பாலான சாதியத் தாக்குதல்களில் மாணவர்களும் இளைஞர்களுமே ஈடுபடுத்தப்படுகின்றனர் என்பது உண்மைதான். ஆனால், கடந்த காலத்தை போல இம்மாணவர்கள், இளைஞர்களுக்கு சாதிவெறியூட்டுவது பெற்றோர்களோ அல்லது குடும்பத்தினரோ அல்ல. மாறாக, ஆதிக்கச் சாதிவெறி சங்கங்களும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும்தான் என்பது இங்கு கவனிக்கத்தக்கதாகும்.
பள்ளி-கல்லூரிகளில் சாதி-மத பேதமின்றி சமத்துவமாகப் பழகியது, வேலைவாய்ப்பிற்காக நகரங்களுக்கு சென்றது போன்றவை இன்றைய இளம் தலைமுறையிடம் சாதிக்கு எதிரான உணர்வை ஏற்படுத்தியுள்ளது.
இதனை விரும்பாத பிற்போக்கு சக்திகள் மாணவர்களையும் இளைஞர்களையும் கஞ்சா போதைக்கு அடிமையாக்கி சாதிவெறியூட்டி கூலிப்படையாக மாற்றி வருகிறது. தென்மாவட்டங்களில் மாணவர்கள் மத்தியில் அரிவாள் கலாச்சாரம் அதிகரித்து வருவதன் பின்னணி இதுவே ஆகும்.
குறிப்பாக, சின்னதுரை மீதான தாக்குதலையடுத்து அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழு, பள்ளிப் பெயர்களில் சாதிய அடையாளங்கள் கூடாது; கைகளில் சாதி வண்ணக் கயிறுகள் கூடாது; நெற்றி திலகமிடக் (இது சாதிக் கொடிக்கேற்ப வைக்கப்படுகிறது) கூடாது; குறிப்பிட்ட சாதி ஆதிக்கம் உள்ள பகுதிகளில் அதே சாதியை சார்ந்த தலைமையாசியரை நியமிக்கக் கூடாது உள்ளிட்ட வழிமுறைகளை அளித்தது.
அப்போது, ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஆதிக்கச் சாதி குண்டர் படைகள் அவ்வறிக்கைக்கு எதிராக பொங்கி எழுந்தன; பா.ஜ.க-வின் மாநில செயற்குழு இவ்வறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியது.
மேலும், பள்ளியின் முகப்பில் சாதி பெயர்களை எழுதுவது; மாணவர்களுக்கு சாதிக் கயிறு கட்டிவிடுவது; சாதி பொட்டு வைத்துவிடுவது என மாணவர்களிடையே சாதிய அடையாளங்களையும் சாதிய உணர்வையும் திணித்து வருகிறது.
தங்களது பிள்ளைகள் இவ்வாறு சாதிவெறிக்கு பலியிடப்படுவது பெற்றோர்கள் பலருக்கே தெரிவதில்லை. இது தென்மாவட்டங்களில் பெற்றோர்களிடத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லையில் தீபக் ராஜாவை படுகொலை செய்த நவீன் என்ற இளைஞனின் தாய், வழக்குக்கு செலவு செய்ய ரூ.5,000 பணமின்றி சாலையில் அழுது புலம்பியது அங்குள்ள எதார்த்த நிலைமையை காட்டுகிறது.
ஆனால், தூத்துக்குடியில் ஆதிக்கச் சாதி வன்மத்தை கக்கிய ஆசிரியரைப் பார்த்து “எல்லாரும் சமம்தானே டீச்சர்” என்று கேட்ட மாணவன்தான் இன்றைய இளந்தலைமுறையின் பிரதிபலிப்பு, அதுவே இயல்பும் கூட. அரிவாள் ஏந்தி நிற்பது பிற்போக்கு சக்திகளின் திணிப்பும் சதியுமே ஆகும்.

பா.ரஞ்சித், மாரிசெல்வராஜ், வெற்றிமாறன் போன்ற இயக்குநர்களின் படங்களால்தான் சாதிவெறி தாக்குதல்கள் அதிகரிப்பதாக சிலர் பேசுகின்றனர். இதனை எப்படி பார்ப்பது?
தமிழ் திரைத்துறையில் தேவர் மகன், எஜமான், சின்ன கவுண்டர் போன்ற ஆதிக்கச் சாதிவெறியை தூண்டுகின்ற, தலித் மக்களை அடிமைகளை போல மிகவும் இழிவாக சித்தரிக்கின்ற படங்கள் வந்தபோது இவ்வாறான கருத்துகள் முன்வைக்கப்படவில்லை.
மாறாக, பா.ரஞ்சித், மாரிசெல்வராஜ் போன்ற இயக்குநர்கள் ஆதிக்கச் சாதிவெறிக்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்களின் வலிகளை பேசுகின்ற படங்களை எடுக்கும்போது இத்தகைய அவதூறான கருத்துருவாக்கம் செய்கின்றனர்.
அதேசமயம், சமீப காலமாக சாதி ஆதிக்கத்தை கேள்விக்குள்ளாக்கும் வகையிலான திரைப்படங்கள் வருவது அதிகரித்திருப்பதற்கு பின்னணியில் உள்ள காரணத்தையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
முழுமையாக சாதிக்கு எதிராக படம் எடுப்பது மட்டுமின்றி, லப்பர் பந்து, குடும்பஸ்தன் போன்ற காதல், விளையாட்டு, நகைச்சுவை சார்ந்த படங்களிலும் சாதிக்கு எதிரான கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. இது, தமிழ்நாட்டில் தலித் மக்கள் மத்தியில் ஏற்பட்டுவரும் எழுச்சியை கலை-இலக்கியம் அடையாளப்படுத்தியுள்ளதன் வெளிப்பாடே.

தலித் மக்கள் மீதான சாதிய தீண்டாமைகளையும், பெண்கள் மீதான ஆணாதிக்க-பாலியல் தாக்குதல்களையும் ‘பெருமையாக’, ‘நகைச்சுவையாக’ சித்தரித்த, அதனை மக்களை ஏற்க செய்த தமிழ் திரைத்துறையில் ஏற்பட்டிருக்கும் இம்மாற்றமானது உள்ளபடியே கிளர்ச்சிகரமானது. இது சமூகத்தை ஜனநாயகப்படுத்துவதுடன் சாதிய ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக உணர்வூட்டுகிறது.
(தொடரும்)
![]()
வெற்றிவேல் செழியன்
(புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2026 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











