சேரன்மகாதேவி போலீசு நிலையத்திற்கு உட்பட்ட சக்திகுளம் உதயமார்த்தாண்டபுரம் சுமார் 50 ‘தேவேந்திர குல வேளாளர்’ குடும்பங்கள் வாழும் கிராமமாகும். அருகிலுள்ள அரியநாயகிபுரம் தேவர், நாடார், கோனார், மருத்துவர் உள்ளிட்ட சாதியைச் சேர்ந்த சுமார் 1,000 குடும்பங்கள் வாழும் பகுதியாகும்.
அருகிலுள்ள ‘தேவேந்திர குல வேளாளர்’ மக்களுக்கும் அரியநாயகிபுரம்தான் வங்கி முதல் அனைத்து போக்குவரத்துகளும் நடைபெறும் இடமாகும். இவ்வளவு பிரிவு மக்கள் கூடி வாழ்ந்தும், புழங்கியும் வந்தபோதும் உழைக்கும் மக்கள் மத்தியில் இதுவரை எந்தவொரு சண்டை, சச்சரவுகள், சாதியப் பிரச்சினைகள் வந்ததில்லை.
அதேபோல் ஊருக்கு பொதுவாக இருக்கும் குளத்திலும் இந்த சாதி படித்துறை, அந்த சாதி படித்துறை என்று எந்த வேறுபாடும் எவரும் பார்த்ததில்லை.
இந்த ஒற்றுமையின் மேல் கல் எறிந்துள்ளது ‘தேவேந்திர குல வேளாளர்’ சாதியைச் சேர்ந்த பெரியவர், விவசாயி முருகன் (60) மீது நடத்தப்பட்ட சாதி வெறித் தாக்குதல்.
சம்பவம் நடந்த 08.03.26 அன்று மாலை சுமார் 3 மணியளவில் தனது மாட்டை மேய்த்துவிட்டு குளத்தில் முருகன் குளித்துக் கொண்டிருக்க, அங்கு வந்த தேவர் சாதியைச் சேர்ந்த, அடையாளம் காணக் கூடிய இரண்டு பேர் உள்ளிட்ட மொத்தம் மூன்று பேர், “இது எங்கள் சாதிக்கார்கள் குளிக்கும் படித்துறை. எப்படி நீ இங்கு வந்து குளிக்கலாம்” என்று சத்தம் போட்டுள்ளனர். “நான் போய்விடுகிறேன்” என்று தன்மையாக கூறியுள்ளார் முருகன். குளிக்கக் கூடாது என்று சொல்லிவிட்டு உடனே அங்கிருந்து சென்ற சாதிவெறி பிடித்த அக்கும்பல் 5 பேராக அரிவாளுடன் திரும்பி வந்துள்ளது. முருகன் அங்கிருந்து ஓட முயன்றுள்ளார். ஆனால் அவரது ஆடையைக் கூட மாற்ற அனுமதிக்காமல் சாதிவெறி பிடித்த அந்த கும்பல் பின்புறமிருந்து அவரது கைகளிலும், முதுகிலும் அரிவாளால் வெட்டியுள்ளது.
அப்போது அங்கு வந்த முருகனின் மகனையும் அந்த கும்பல் வெட்டுவதற்காக துரத்தியுள்ளது. ‘நீ போய்விடு’ என்று முருகன் கத்த, அவரது மகன் அங்கிருந்து தப்பித்து ஓடி உள்ளார். கொலை வெறியுடன் அவரை துரத்திக் கொண்டு ஓடிய அந்த கும்பல் அங்கிருந்து வந்த ஊர்க்காரர்களையும் அரிவாளோடு துரத்தியுள்ளது. அதன் பின்னும் வெறியடங்காமல் மீண்டும் வந்து முருகனின் மகனின் இருசக்கர வாகனத்தை வெட்டியுள்ளது. அங்கு நெல் பிடித்து வைத்திருந்த சாக்கு மூட்டைகளையும் வெட்டியுள்ளது. பின்னர் அங்கிருந்து அந்த கும்பல் தப்பித்து போய் விட்டது.
வெட்டுப்பட்ட முருகன் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கையிலும், முதுகிலும் தையல் போடப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் பி.சி.ஆர் வழக்கு பதிவு செய்து இரண்டு பேரைக் கைதுசெய்துள்ள போலீசு, மேலும் இதில் ஈடுபட்டவர்களை தேடி வருவதாகக் கூறுகிறது.
இதுவரை இப்படியான சாதி வெறித் தாக்குதல் இப்பகுதியில் நடைபெற்றதில்லை என்றே மக்கள் கூறுகின்றனர்.
வெட்டுப்பட்ட முருகன் இதற்கு முன் பல சமயங்களில் அரியநாயகிபுரம் பகுதியில் நின்றிருக்கும்போது, அவ்வூரைச் சேர்ந்த தேவர் ‘சாதி’ உள்ளிட்ட எவராய் இருப்பினும் ‘வாங்க பெரியாளு வண்டியில’ என்று சொல்லி உரிமையோடு அழைத்துக் கொண்டு வந்து அவரது தோட்டத்தில் விட்டு விட்டு செல்வது உண்டு. அந்தளவு சாதி வேறுபாடு இன்றி உழைக்கும் மக்கள் இணக்கமாக வாழக்கூடிய பகுதியாக தற்போது வரை இப்பகுதி இருந்து வருகிறது.
கலவரங்களின் மையத்திலிருந்து விலகி, விட்டுக் கொடுத்து மனிதநேயத்தோடு காலங்காலமாக ஒன்றாக வாழ்ந்து பண்படுத்திய களத்தை பொடிப் பொழுதில் சிலரால் சீரழிக்க முடிகிறதென்றால் இது உணர்ச்சிவசப்பட்டு அல்ல, திட்டமிட்டு நடப்பதாகவே இருக்கிறது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் 18, 19 வயது உடைய இளம் குற்றவாளிகள். “வேலை வெட்டியில்லாமல் கஞ்சா, தண்ணி அடித்துக் கொண்டிருக்கும் பயல்கள் இப்படி செய்து விட்டார்கள்” என நாம் கடந்து போக முடியுமா? இளம் வயதினரின் சிந்தனையில் சாதிவெறியும், கரங்களில் அரிவாளும் திட்டமிட்டு திணிக்கப்படுகிறது. சிறைக்கு சென்றாலும் இன்னும் மூர்க்கமான சாதி வெறியோடு வெளியே வருகின்றனர் இவர்கள். கூலிப்படையாகவும் மாறுகின்றனர். சாதிவெறிச் சங்கங்கள் இவர்களை தூபம் போட்டு வளர்க்கின்றன.
இதை தீவிரமான பிரச்சினையாக அரசு உணர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். யார் வேண்டுமானாலும் சாதி வெறிக்கு பலியாகலாம், எவரொருவரும் சாதிவெறி பிடித்த குற்றவாளி ஆகலாம் என்கிற நிலைமையே இன்று தென்மாவட்டங்களில் நிலவுகிறது.
ஆதிக்க சாதி வெறிச் சங்கங்களையும், அவற்றைப் பின்னணியிலிருந்து இயக்கும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிச கும்பலையும் தடை செய்யாமல் சாதியின் பெயரால் நடக்கும் தாக்குதல்களையும், கொலைகளையும் நம்மால் தடுத்துவிட முடியாது.
முருகனை வெட்டும்போது யாரோ ஒரு பெண் சத்தமிட்டு அதை தடுக்க முயன்றுள்ளார். மருத்துவமனையில் முருகனின் மகனுடன் வேலை பார்க்கும் தேவர் சாதியைச் சேர்ந்தவர்கள் வந்து நலம் விசாரித்துள்ளனர். ‘வாங்க பெரியாளு வண்டியில’ என சாதி கடந்து உரிமையோடு அழைத்துப் போக இன்னும் பல உறவுகள் இருக்கின்றன. இவர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் கடமை ஜனநாயக, புரட்சிகர சக்திகளுக்கு உள்ளது.
அந்த ஒன்றிணைப்பில் ஒரு நாள் இந்த மண்ணில் சாதி வெறிச் சங்கங்களையும், ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிச கும்பலையும் வீழ்த்தி இம்மண்ணில் சமத்துத்தை உண்டாக்கச் சபதமேற்போம்.
பதிவு
மக்கள் அதிகாரக் கழகம்,
தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்கள்.
9385353605.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











