குஜராத்: தீவிரமடையும் குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாடு!

பாசிச கும்பலினால் ‘வளர்ச்சி மாடல்’, ‘டபுள் இஞ்சின்’ அரசு என்று ஊதிப்பெருக்கப்பட்ட குஜராத்தில் 40 சதவிகித குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பதும், அதில் பழங்குடியினக் குழந்தைகள் அதிகமான அளவில் உள்ளதும் பேரவலமாகும்.

0

மார்ச் 12 ஆம் தேதி அன்று குஜராத் சட்டமன்றத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் நிதிநிலை அறிக்கையின் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.

அப்போது பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி “159- க்கு மேற்பட்ட இடங்களையும் 28 ஆண்டுகால ஆட்சியையும் கொண்ட பா.ஜ.க ஆட்சியில் 100 குழந்தைகளில் 40 பேர் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பகுதியினர் பழங்குடியினர் ஆவர்” என்று தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் மனிஷா வக்கீல் “நீங்கள் தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின் (2019-21) புள்ளிவிவரங்களைக் கணக்கில் எடுக்காதீர்கள். உங்கள் அறிவை அப்டேட் செய்து கொள்ளுங்கள். ஒன்றிய அரசின் போஷன் டிராக்கரைப் பாருங்கள். ஜனவரி நிலவரப்படி குஜராத்தில் குழந்தைகளில் 11.4 சதவிகிதம் பேர் மட்டுமே ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது கடந்த சில ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்திருப்பதைக் காட்டுகிறது” என்று பொய்யான தகவலைத் தெரிவித்தார்.

இதனை அம்பலப்படுத்தி தி இந்து ஆங்கில நாளிதழ் கட்டுரை வெளியிட்டுள்ளது. அதில் “தேசிய குடும்ப சுகாதார ஆய்வையும், போஷன் டிராக்கரையும் ஒப்பிடவே முடியாது. தேசிய குடும்ப சுகாதார ஆய்வு என்பது இந்தியாவில் உள்ள மக்கள்தொகையில் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து குறித்து நடத்தப்படும் கணக்கெடுப்பு ஆகும். போஷன் டிராக்கர் (poshan tracker) என்பது அங்கன்வாடி மையங்களில் பதிவு செய்யப்பட்ட குழந்தைகளின் வளர்ச்சித் தரவுகளைப் பராமரிக்கும் ஒரு நிகழ்நேரக் கண்காணிப்பு டிஜிட்டல் செயலியாகும்.

அக்கட்டுரையில், சமீபத்தில் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து குறித்து வெளியான தேசிய குடும்ப சுகாதாரத்துக்கான ஐந்தாம் சுற்று NFHS-5 (2019-21) அறிக்கையின்படி, குஜராத்தில் ஐந்து வயதுக்குட்பட்டக் குழந்தைகளில் 39 சதவிகிதம் பேர் வளர்ச்சி குறைபாடுள்ளவர்களாகவும் (stunting – வயதுக்கு ஏற்ப உயரம் குறைவு), 25.1 சதவிகிதம் பேர் மெலிந்தவர்களாகவும் (wasting – உயரத்திற்கு ஏற்ப எடை குறைவு) மற்றும் 39.7 சதவிகிதம் பேர் எடை குறைந்தவர்களாகவும் (underweight – வயதுக்கு ஏற்ப எடை குறைவு) உள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

NFHS-4 (2015–16) காலத்திலும் 38.5 சதவிகித குழந்தைகள் வளர்ச்சிக் குன்றியவர்களாகவும், 26.4 சதவிகிதம் பேர் மெலிந்தவர்களாகவும் மற்றும் 39.3 சதவிகிதம் பேர் எடை குறைந்தவர்களாகவும் இருந்த அவல நிலைதான் தற்போதும் தொடர்கிறது என்பது வேதனைக்குரியதாகும்.

மேலும், NFHS-5 மாவட்ட அளவிலான தரவுகளின்படி, மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், பழங்குடியினர் மாவட்டங்களை குஜராத் அரசின் பழங்குடியினர் மேம்பாட்டுத் துறை அடையாளப்படுத்தியுள்ளது.

அதன்படி வளர்ச்சிக் குறைபாட்டைப் பொறுத்தவரை மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட 5 மாவட்டங்களில் 4 மாவட்டங்களான தாஹோத் (55.3%), சோட்டா உதய்பூர் (48.6%), நர்மதா (47.2%), பஞ்ச்மஹால் (47.1%) போன்றவை பழங்குடியினர் மாவட்டங்களாகும். மெலிதல் குறைபாட்டிலும் தி டாங்ஸ் (40.9%), தாபி (36.6%), பஞ்ச்மஹால் (35.7%), சபர்கந்தா (33.1%) போன்ற பழங்குடியினர் மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

எடை குறைவைப் பொறுத்தவரை, தி டாங்ஸ் (53.1%), தாஹோத் (53%), நர்மதா (52.8%), பஞ்ச்மஹால் (51.9%), தாபி (51.8%) ஆகிய 5 பழங்குடியினர் மாவட்டங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.


படிக்க: குஜராத் மாடல் போலிகளின் மாடல்!


வாதத்திற்கு எடுத்துக்கொண்டாலும், ஜூலை 2025-க்கான சமீபத்திய, பொதுமக்களுக்குக் கிடைக்கும் போஷன் டிராக்கர் தரவுகளின்படி, ஊட்டச்சத்துக் குறைபாட்டின் ஒருங்கிணைந்த சதவிகிதத்தை மட்டும் காட்டாமல், வளர்ச்சி குன்றல், மெலிதல் மற்றும் எடைக்குறைவு ஆகியவற்றுக்குத் தனித்தனிப் புள்ளிவிவரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி, குஜராத்தில் சுமார் 32.7 சதவிகிதம் குழந்தைகள் வளர்ச்சி குன்றியவர்களாகவும், 7.3 சதவிகிதம் குழந்தைகள் மெலிதலுடனும், 18.4 சதவிகிதம் குழந்தைகள் எடைக்குறைவுடனும் உள்ளனர். 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், வளர்ச்சி குன்றலில் 21-வது இடத்திலும், மெலிதல் மற்றும் எடைக்குறைவு ஆகிய இரண்டிலும் 31-வது இடத்திலும் குஜராத் மாநிலம் உள்ளது. இதன் மூலம், முக்கிய ஊட்டச்சத்துக் குறைபாட்டுக் குறிகாட்டிகளில், மாநிலங்களிலேயே மிகவும் பின்தங்கிய பிரிவில் இம்மாநிலம் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, குஜராத்தில் சுமார் 40 சதவிகிதம் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற கூற்றுடன் NFHS-5 தரவுகள் பொருந்திப் போகின்றன. மேலும், மாவட்ட அளவிலான தரவுகள் பல மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகள் பழங்குடியினர் மாவட்டங்களாக இருப்பதையும் காட்டுகின்றன; இது பழங்குடியினர் சமூகங்களில் அதிகமான ஊட்டச்சத்துக் குறைபாடு இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது.

பாசிச கும்பலினால் ‘வளர்ச்சி மாடல்’, ‘டபுள் இஞ்சின்’ அரசு என்று ஊதிப்பெருக்கப்பட்ட குஜராத்தில் 40 சதவிகித குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பதும், அதில் பழங்குடியினக் குழந்தைகள் அதிகமான அளவில் உள்ளதும் பேரவலமாகும்.

குஜராத் மாடல் என்பது உழைக்கும் மக்களுக்கானது அல்ல, அதானி – அம்பானி போன்ற கார்ப்பரேட்டுகளுக்கானது என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க