26.05.2026

பரோடா மகாராஜா சாயாஜிராவ் பல்கலையில்
மோடி, ஆர்.எஸ்.எஸ் குறித்த பாடத்திட்டம் | பு.மா.இ.மு. கண்டனம்

பத்திரிகைச் செய்தி

குஜராத் மாநிலம் வதோதராவில் பரோடா மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகம் என்னும் பழமையான பல்கலைக்கழகம் உள்ளது. அப்பல்கலைக்கழக நிர்வாகமானது, பிரதமர் மோடியின் ‘தமைமைப் பண்பை’ கற்பிக்கும் விதமாக புதிய சமூகவியல் பாடத் தொகுப்புகளை (Modi Tattva) அறிமுகப்படுத்தியுள்ளது. இத்துடன், இந்து மதவெறி அமைப்பான, ஆர்.எஸ்.எஸ்-இன் ‘சமூகப் பணிகள்’ குறித்த பாடத்தொகுப்பும் சேர்க்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் மாதம் தொடங்கவுள்ள புதிய கல்வி ஆண்டிலிருந்து பி.ஏ சமூகவியல் நான்காம் ஆண்டு மற்றும் எம்.ஏ சமூகவியல் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு இந்த புதிய பாடத்திட்டம் நடைமுறைக்கு வரும் என்றும் பல்கலைக்கழக நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தின் இத்தகைய நடவடிக்கையானது, கல்வியைக் காவிமயமாக்கும் கிரிமினல் தனமான நடவடிக்கையாகும். புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி இதனை வன்மையாகக் கண்டிக்கிறது.

‎“நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், பிரதமர் மோடியை அரசியல் களத்திலும் தலைமைப் பொறுப்பிலும் நீங்கள் விவாதித்தே ஆக வேண்டும். அவர் நீண்ட காலம் அந்தப் பதவியில் நீடிப்பார். பணமதிப்பிழப்பு, டிஜிட்டல் முன்னெடுப்புகள், ஃபாஸ்டேக் (FASTag), மற்றும் ஜல் சக்தி அமைச்சக உருவாக்கம் உள்ளிட்ட குறிப்பிட்ட கொள்கை நடவடிக்கைகளால் மோடி நீடிப்பார்” என்கிறார் கல்லூரியின் சமூகவியல் துறையின் தலைவர் வீரேந்திர சிங். அவரின் கூற்றுப்படி பல்கலைக்கழகத்தில் இருக்கக்கூடிய ஒவ்வொருவரும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பி.ஜே.பி-யின் பிளவுவாத கருத்தியலை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதைப் பல்கலைக்கழக நிர்வாகம் நிர்ப்பந்திக்கிறது.

நூறாண்டுகளாக இந்தியாவில் சாதி மத வெறி தாக்குதல்களைத் திட்டமிட்ட முறையில் கட்டமைத்து வரும் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்-ஆனது தற்போது உலகெங்கிலும் தனது கிளைகளைப் பரப்பி பல்வேறு உலக நாடுகளிலும் தனது இந்துத்துவ வெறுப்பு பிரச்சாரத்தைக் கட்டியமைக்கிறது. மேலும் இந்தியா முழுவதும் பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் இஸ்லாமியர்கள் மற்றும் தலித்துகள் மீது வன்முறைத் தாக்குதல்களைக் கட்டவிழ்த்து அக்லக் முதல் பல்வேறு அப்பாவிகளை அடித்தே கொன்றது இந்தக் கொலைவெறி கும்பல். கும்பல் வன்முறைகளை புதிய இயல்புநிலையாக்கி வருகிறது. இஸ்லாமிய, கிறிஸ்துவ மத நிறுவனங்களை அபகரிப்பதையும் வழிபாட்டுத்தலங்களைச் சட்டவிரோதமாகக் கைப்பற்றுவதையும் தொடர்ந்து சிறுபான்மையின மக்கள் மிகப் பெரும் அச்சத்தில் வாழ்கின்றனர். இதுதான் ஆர்.எஸ்.எஸ் இத்தனை ஆண்டுகளாக, இந்தியாவில் மேற்கொண்டு வரும் ‘சமூகப் பணிகள்’ ஆகும். குஜராத்தில் 2000 இஸ்லாமியர்களைப் படுகொலை செய்ததும், மணிப்பூரில் பெண்களை நிர்வாணமாக இழுத்துச் சென்று பழங்குடி மக்கள் மீது கலவரங்களை நடத்தியதும் சங்கப் பரிவார அமைப்புகள் தான். இதையும் பாடத்திட்டத்தில் சேர்ப்பார்களா?‎

கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக ‎பண மதிப்பழிப்பு நடவடிக்கையை மேற்கொண்டதன் மூலம், நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தனர்; சிறு தொழில் வணிகர்கள் மிகப்பெரும் இழப்புகளைச் சந்தித்தனர். கருப்புப் பணத்தை ஒழிக்க வேண்டுமானால், இதனைப் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவித்தார் பிரதமர் மோடி. ஆனால், பணமதிப்பிழப்பின் இறுதியில், 99% பணம் வங்கிக்கே திரும்பி வந்துவிட்டது. மேலும் இந்தியப் பொதுத்துறை நிறுவனங்களையும், இந்திய மக்களின் வங்கி சேமிப்புகளையும் ஓய்வூதியங்களையும் அம்பானி, அதானி உள்ளிட்ட கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்ப்பதும் மோடியின் தலைமையின் கீழ் வெகு வேகமாக நடந்து வருகிறது. மிகவும் வெட்கக் கேடான முறையில், இந்திய உற்பத்தி பொருட்களின் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் 50% வரி விதிக்கும் போது, வாய் மூடி கள்ள மௌனியாக இருந்தவர்தான் நமது பிரதமர் மோடி. அமெரிக்காவில் சட்ட விரோதமாகக் குடியேறியவர்கள் என்று, சர்வதேச சட்டங்களுக்கு எதிராக இந்திய இறையாண்மையை அவமதிக்கும் வகையில் நூற்றுக்கணக்கான இந்தியர்களை கைவிலங்கிட்டு இந்தியாவிற்கு அனுப்பிவைத்தார் டிரம்ப். அதற்கெல்லாம், கிஞ்சித்தும் வாய்திற்காதவர்தான் நமது பிரதமர் மோடி. தற்போதுகூட, ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போரினால், இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. ஆனால், இந்த அநீதியான போரை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை கண்டனம் செய்வதற்கு பதிலாக, தங்கம் வாங்காதீர்கள், வீட்டிலிருந்தே வேலை செய்யுங்கள், சமையல் எண்ணெய் பயன்படுத்துவதைக் குறைத்துக் கொள்ளுங்கள் என்று இந்திய மக்களுக்கு வேண்டுகோள் வைத்து வருகிறார். இவை மோடியின் ‘தலைமைத்துவ பண்பு’களுக்கு சில சான்றாதாரங்களாகும்.

இப்படி முழுக்க முழுக்க மக்கள் விரோத பாசிச மோடி மற்றும் இந்து மதவெறி ஆர்.எஸ்.எஸ் பற்றிய பாடத்திட்டங்களை மாணவர்களுக்குப் பயிற்றுவிப்பது, நாட்டின் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு விடப்படும் சவாலாகும். நாட்டு மக்களை, குறிப்பாக படித்த இளைஞர்களை, இந்து மதவெறிக்கு பலியாக்கும், அந்நிய நாட்டு மற்றும் அம்பானி-அதானி போன்ற இந்திய தரகு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அடிமையாக்கும் நடவடிக்கையாகும்.

எனவே, மோடி தத்துவம் என்ற பாடத்திட்டத்திற்கு எதிராக மாணவர் இயக்கங்கள், ஆசிரியர் சங்கங்கள், வழக்கறிஞர்கள், ஜனநாயக சக்திகள் என அனைவரும் ஒன்றிணைந்து இதற்கு எதிரான போராட்டங்களைக் கட்டி அமைக்க வேண்டும். இல்லாவிட்டால், நாளை இந்தியா முழுவதும் இது அமல்படுத்தப்படும்.

  • ‎‎பல்கலைக்கழகங்களில் செயல்படக்கூடிய ஆர்.எஸ்.எஸ் மற்றும் காவி கும்பல்களை உடனடியாக பல்கலைக்கழகங்களிலிருந்து வெளியேற்ற வேண்டும்.
  • ‎இடதுசாரி மாணவர் அமைப்புகளைச் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும்.
  • ‎உடனடியாக பாடத்திட்டத்திலிருந்து மோடி தத்துவம் உள்ளிட்ட மேற்கண்ட தலைப்புகள் நீக்கப்பட வேண்டும்.
  • ‎சமூகவியல் துறைத்தலைவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்.


இவண்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
மாநில ஒருங்கிணைப்புக் குழு,
தமிழ்நாடு – புதுவை.
9444836642

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க