கர்நாடக மாநில காங்கிரசு அரசானது கடந்த மார்ச் 24 அன்று ஆணவப் படுகொலைத் தடுப்புச் சிறப்புச் சட்டத்தை [கர்நாடக திருமணத் தேர்வு சுதந்திரம் மற்றும் கௌரவம், பாரம்பரியம் என்ற பெயரில் நடக்கும் குற்றங்களைத் தடுத்தல் மற்றும் தடை செய்தல் (இவா நம்மவா) மசோதா, 2026] நிறைவேற்றியுள்ளது. இந்தியா முழுவதும் சாதி ஆணவப் படுகொலைகள் அதிகரித்துவரும் சூழலில் கர்நாடகாவில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததும் வரவேற்கத்தக்கதும் ஆகும். ஆனால் அதேசமயத்தில் ஆணவப் படுகொலைகளுக்கு மூளையாகச் செயல்படும் ஆதிக்கச் சாதிவெறி சங்கங்கள்-ஆர்.எஸ்.எஸ் சங்கப் பரிவார கும்பலைத் தடை செய்வது; ஆணவப் படுகொலை செய்பவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வது; ஆணவப் படுகொலைக்கு உள்ளானவர்களின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்குவது உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற வேண்டும். அப்போதுதான் ஆணவக் கொலைகளைத் தடுப்பதை நோக்கி நகர முடியும். இந்த அம்சங்களைச் சட்டத்தில் இணைப்பதற்கும், சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் களப்போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டியது கர்நாடக ஜனநாயக சக்திகளின் இன்றைய கடமையாக உள்ளது.
கர்நாடகாவில் சமீப ஆண்டுகளில் பல்வேறு ஆணவப் படுகொலைகள் அரங்கேறியுள்ளன. அதில் கடந்தாண்டு இறுதியில் நடந்த மான்யா என்ற கர்ப்பிணிப் பெண்ணின் ஆணவப் படுகொலையானது கர்நாடகாவை உலுக்கியது. கர்நாடகாவில் தற்போது இச்சட்டம் நிறைவேற்றப்பட்டிருப்பதற்கு மான்யா ஆணவப் படுகொலைக்கு எதிராக நடந்த போராட்டங்கள் முக்கியக் காரணமாகும். இத்தருணத்தில், மான்யா ஆணவப் படுகொலையின் கோரத்தை வாசகர்களுக்கு உணர்த்தும் நோக்கில் இக்கட்டுரையை வெளியிடுகிறோம்.
***
கர்நாடக மாநிலம் தார்வாட் மாவட்டத்தில் இனாம் வீராபூர் எனும் கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் சுமார் நூறு குடும்பங்கள் வசிக்கின்றன. அதில் 60 சதவிகிதம் லிங்காயத்து சமூக மக்களும் 25 சதவிகிதம் தல்வார் பழங்குடியின மக்களும் ஆவர். தலித் மடிகா சமூகத்தைச் சேர்ந்த ஆறு வீடுகள் மட்டும் அங்குள்ளது.
இக்கிராமத்தில் வசித்துவந்த லிங்காயத் சாதியைச் சார்ந்த 19 வயதான மான்யா என்ற பெண்ணும் விவேகானந்தர் எனும் மடிகா தலித் சமூக இளைஞனும் சிறு வயது முதலே நட்பாகப் பழகி வந்துள்ளனர். இவர்களது குடும்பத்தினர் ஒருவருக்கொருவர் நன்கறிந்தவர்களாகவும், இருவரின் தந்தையும் நீண்டகால நண்பர்களாகவும் இருந்து வந்துள்ளனர். ஆனால், மான்யா-விவேகானந்தர் இருவரின் நட்பு காதலாக மாறியதை மான்யாவின் தந்தையால் சகித்துக்கொள்ள முடியவில்லை. காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், மான்யாவை வேறு ஒருவரைத் திருமணம் செய்து கொள்ளும் படியும் குடும்பத்தினர் வற்புறுத்தியுள்ளனர்.
இதனையடுத்து, கடந்தாண்டு மே மாதத்தில் வீட்டை விட்டு வெளியேறி மான்வாயவும் விவேகானந்தரும் ஒரு கோவிலில் திருமணம் செய்துகொண்டு, தங்கள் திருமணத்தைப் பதிவு செய்தனர். மான்யா காணாமல் போய்விட்டதாக அவரது தந்தை புகாரளித்த நிலையில், இருவரும் போலீசிடத்தில் ஆஜராகித் தங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் திருமணம் செய்து கொண்டதாகத் தெரிவித்துள்ளனர். இதனைச் சகித்துக்கொள்ள முடியாத மான்யாவின் தந்தை இருவருக்கும் மிரட்டல் விடுத்துள்ளார்.
அச்சுறுத்தல்களுக்குப் பயந்து இருவரும் ஹாவேரி நகரில் உள்ள ஓர் உறவினர் வீட்டில் வசித்து வந்த நிலையில், மான்யா கர்ப்பமானதால் மருத்துவத் தேவைக்காக ஆதார் அட்டையைப் புதுப்பிக்க வேண்டி டிசம்பர் மாதத்தில் சொந்த கிராமத்திற்குச் சென்றிருந்தார். அப்போது மான்யா விவேகானந்தரின் பெற்றோர் வீட்டிலிருந்தபோது, விவேகானந்தர் வீட்டில் இல்லாத சமயத்தில், மான்யாவின் தந்தையான பிரகாஷ்கவுடா பாட்டீலும் அவரது உறவினர்களும் வீடுபுகுந்து மான்யாவையும் விவேகானந்தரின் குடும்பத்தினரையும் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இதில் ஆறு மாதக் கர்ப்பிணிப் பெண்ணான மான்யா துடிதுடிக்க உயிரிழந்தார்.
இச்சம்பவம் கர்நாடகாவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக, சாதிய, பாலின பேதங்களைக் கடுமையாகச் சாடி சமத்துவத்தைப் போதித்த சமூகச் சீர்திருத்தவாதி பசவண்ணாவைப் பின்பற்றும் லிங்காயத்து சமூகத்தினர் இந்த ஆணவக் கொலையைச் செய்தது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிலும், மான்யாவின் கணவரான விவேகானந்தரின் குடும்பத்தினர் லிங்காயத்து மரபுகளைப் பின்பற்றுபவர்களாகவும், வீட்டில் புலால் உணவு சாப்பிடாதவர்களாகவும் இருந்துள்ளனர்; விவேகானந்தர் குழந்தைப் பருவத்திலேயே லிங்க தீட்சை பெற்றுள்ளார்; பசவண்ணாவின் கொள்கைகளைப் பின்பற்றுபவராகவும் இருந்து வந்துள்ளார். இருந்த போதிலும் ஆறு மாத கர்ப்பிணி மகளைத் துடிதுடிக்கக் கொன்றுள்ளது சாதிவெறி!
படிக்க: அதிகரிக்கும் ஆணவப் படுகொலைகள் | காதலிப்பது என்பது உரிமை
இதேபோல் கர்நாடகாவில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 18 வயது லிங்காயத்து பெண் ஒருவர் குருபா சாதி இளைஞனைக் காதலித்ததற்காக அவரது தந்தையாலேயே ஆணவப் படுகொலை செய்யப்பட்டார்.
இதனையடுத்து, மான்யா ஆணவப் படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கர்நாடகாவில் தலித் அமைப்புகளும் லிங்காயத்து அமைப்புகளும் மிகப்பெரும் போராட்டங்களில் ஈடுபட்டனர். மான்யா சட்டம் என்ற பெயரில் ஆணவப் படுகொலை தடுப்புச் சிறப்புச் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று ஜனநாயக சக்திகள் கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்துதான் கர்நாடக காங்கிரசு அரசு இச்சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.
கர்நாடகாவில் மான்யா ஆணவப் படுகொலையைப் போலவே தமிழ்நாட்டிலும் அடுத்தடுத்து ஆணவப்படுகொலைகள் அரங்கேறிவருகின்றன. இதற்கு ஆதிக்கச் சாதிவெறி சங்கங்களில் ஆர்.எஸ்.எஸ் ஊடுருவல் முக்கியக் காரணமாக உள்ளது. ஆணவப்படுகொலைகளுக்கு எதிராக மக்களும் ஜனநாயக சக்திகளும் தொடர்ந்து போராடியும் குரல் கொடுத்தும் வருகின்றனர். கவின் ஆணவப் படுகொலையானது தமிழ்நாட்டையே உலுக்கியது. இருந்த போதிலும் ஆணவப் படுகொலை தடுப்பு சிறப்புச் சட்டம் கொண்டுவரப்படும் என்று வாக்குறுதியளித்து ஆட்சியமைத்த தி.மு.க. அரசு தற்போது வரை சட்டம் இயற்றாமல் தலித் மக்களை வஞ்சித்து வருகிறது.
எனவே, ஆணவப் படுகொலை தடுப்பு சிறப்புச் சட்டம் வேண்டும் என்ற கோரிக்கையை இந்தச் சட்டமன்றத் தேர்தலில் பேசுபொருளாக்குவதும் அதற்காக மக்கள் போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டியதும் தமிழ்நாட்டு புரட்சிகர, ஜனநாயக சக்திகளின் கடமையாகும்.
![]()
சோபியா
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











