சாதிய வன்மத்தால் பனையேறும் தொழிலாளியைத் துப்பாக்கியால் சுட்ட போலீசு!

நிராயுதபாணியான மணிகண்டனை துப்பாக்கியால் சுட்டு, அவரது குடும்பத்தை அவதூறாகப் பேசிய எஸ்.ஐ இசக்கி ராஜா உள்ளிட்ட போலீசாரின் இந்த அராஜக செயலை தூத்துக்குடி, நெல்லை மாவட்ட மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மருதம்புத்தூர் மேலத் தெருவை சேர்ந்த பனையேறும் தொழிலாளி மணிகண்டன் (வயது 36). ஏப்ரல் 7 அன்று, இவரது தோட்டத்தில் பனை மரங்களில் கள் இறக்கி விற்பதாக, எஸ்.ஐ இசக்கி ராஜா மற்றும் இரண்டு போலீசார் அவரை தோட்டத்திற்கு அழைத்துப் போய் விசாரணை என்கிற பெயரில் மணிகண்டனின் குடும்பத்தை அவதூறாகப் பேசியுள்ளனர். எஸ்.ஐ இசக்கி ராஜா மறவர் சாதியைச் சேர்ந்தவர். அவர் சாதிய வன்மத்துடன் சானாப் பயலே என்றும், எழுத முடியாத வார்த்தைகளால் பெண்கள் இருக்கிறார்கள், குடும்பம் இருக்கிறது என்றும் பாராமல் அசிங்கமாகப் பேசியுள்ளார்.

இதை எதிர்த்துக் கேட்ட மணிகண்டனின் அண்ணன் மகனான 10-ஆம் வகுப்பு படிக்கும் சிறுவனை எஸ்.ஐ இசக்கி ராஜா அடிப்பதற்காகச் சென்றபோது, மரத்திலிருந்து இறங்கிய மணிகண்டன் தடுமாறி எஸ். ஐ மீது விழுந்துள்ளார். இதில் எஸ்.ஐ இசக்கி ராஜாவிற்கு தலையில் அடிபட்டுள்ளது‌. இதனால் ஆத்திரமடைந்த எஸ்.ஐ இசக்கி ராஜா தனது துப்பாக்கியை எடுத்து, நிராயுதபாணியான மணிகண்டன் மீது நான்கு ரவுண்ட் சுட்டுள்ளார்‌.

எஸ்.ஐ சுட்டதில் முதல் குண்டு மணிவண்ணன் மீது படாமல் சென்றுள்ளது. இரண்டாவது குண்டு மணிகண்டனின் அண்ணன் மகளின் காலுக்கு அருகில் சென்று தரையில் பாய்ந்தது. மூன்று மற்றும் நான்காவது குண்டுகள் மணிகண்டனின் கால்களில் பாய்ந்துள்ளது.

காலில் குண்டடிபட்டு வலியால் துடித்த மணிகண்டனை மருத்துவமனைக்குச் செல்ல அனுமதிக்காமல், சம்பந்தப்பட்ட போலீசாரின் காலில் விழ வைத்த பின்னர் தான் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிகிறது.

இதைத் தொடர்ந்து எஸ்.ஐ இசக்கிராஜா மற்றும் போலீசார் மீது கொலை முயற்சி மற்றும் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு எஸ்.ஐ இசக்கி ராஜா இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரை கைது செய்யக்கோரி ஏப்ரல் 8 அன்று காலை முதல் மாலை வரை மருதம்புத்தூர் கிராம மக்கள் மற்றும் மணிகண்டனின் உறவினர்கள் சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் உள்ள தேரடி மாடன் கோயில் வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நிராயுதபாணியான மணிகண்டனை துப்பாக்கியால் சுட்டு, அவரது குடும்பத்தை அவதூறாகப் பேசிய எஸ்.ஐ இசக்கி ராஜா உள்ளிட்ட போலீசாரின் இந்த அராஜக செயலை தூத்துக்குடி, நெல்லை மாவட்ட மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும் எஸ்.ஐ இசக்கி ராஜா உள்ளிட்ட போலீசாரை கைது செய்து, சிறையில் அடைக்க வேண்டும். தொடர்ச்சியாக நடைபெறும் போலீசின் இந்த அராஜக செயலை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

சாத்தான்குளம் கொட்டடி கொலை வழக்கில் 9 போலீசாருக்கு மரணதண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்து சில நாட்களே ஆன நிலையில், இந்த குற்றச் சம்பவத்தில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். நாய் வாலை நிமிர்த்த முடியாதது போல, போலீசையும் திருத்த முடியாது.

விசாரணைக்கு அழைத்துச் சென்றவர்களின் பல்லை பிடுங்கிய டி.எஸ்.பி பல்வீர்சிங், திருப்புவனம் அஜித்குமார் கொட்டடிக் கொலை, ஆகாஷ் படுகொலையைத் தொடர்ந்து இந்த கொடூர துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

யார் மீதும், எப்போது வேண்டுமானாலும் பாயலாம் என்கிற கேள்விக்கிடமற்ற வகையில், அதிகாரத்தைக் குவித்துக் கொண்டு செயல்படும் போலீசிடம் மக்களுக்காக உழைக்கும் கடமை, நேர்மை, ஒழுக்கத்தை எதிர்பார்க்க முடியாது. மேலும் போலீஸ் கையில் அதிகாரத்தை குவிக்கும் சட்டங்களை பாசிச பா.ஜ.க அரசு இயற்றிக் கொண்டிருக்கிறது. இதை நாம் அனுமதிக்க முடியாது.

மக்களுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்ட வகையில் போலீஸ் உள்ளிட்ட அதிகார வர்க்கத்தை உட்படுத்த வேண்டும். நிலவுகின்ற போலி ஜனநாயக கட்டமைப்பை வீழ்த்தி, பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு எனும் மக்களுக்கு ஜனநாயகத்தை வழங்குகின்ற கட்டமைப்பை உருவாக்கிட உழைக்கும் மக்கள், ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றிணைந்து களமிறங்க வேண்டும்.


மக்கள் அதிகாரக் கழகம்,
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள்.
9385353605

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க