உ.பி தொழிலாளர்களின் போராட்டத்திற்குப் பணிந்த யோகி அரசு!

குறைந்தபட்ச மாத ஊதியத்தை 20,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தொழிலாளர்கள் பணிகளைப் புறக்கணித்து வீதிகளில் இறங்கிப் போராடினர். போராட்டத்திற்குப் பணிந்த யோகி அரசு நொய்டா மற்றும் காசியாபாத் பகுதிகளில் உள்ள தொழிலாளர்களின் ஊதியத்தை 21 சதவீதம் உயர்த்துவதாக அறிவித்துள்ளது.

0

த்தரப் பிரதேசத்தில் உள்ள நொய்டா மற்றும் காசியாபாத் இந்தியாவின் முக்கியமான தொழில்துறை மையங்களாகும். இங்கு மாருதி கார் உதிரிப் பாகங்கள் தயாரிக்கும் கம்பெனிகள் முதல் ஏராளமான நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. தொழிற்சாலைகளில் உத்தரப்பிரதேச தொழிலாளர்கள் மட்டுமன்றி பீகார், ராஜஸ்தான் உள்ளிட்ட பிற மாநிலத் தொழிலாளர்களும் தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.

12 மணிநேரத்திற்கும் மேலாக தொழிலாளர்களின் ரத்தத்தை உறிஞ்சி வேலை வாங்கிக்கொண்டு குறைந்தபட்ச சம்பளமாக 11,313 ரூபாய் மட்டுமே நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. இவ்வளவு குறைவான வருமானத்தில் குழந்தைகளுக்கான கல்விச் செலவு, மருத்துவச் செலவு என அனைத்தையும் சமாளிக்க முடியாமல் வேதனையில் தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர்.

இப்படியான சூழலில் நொய்டாவில் உள்ள ஒரு நிறுவனத்தின், கிளை நிறுவனம் ஹரியானாவில் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில், பணிபுரிந்து வரும் தொழிலாளர்களுக்கு அம்மாநில அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தின்படி குறைந்தபட்ச மாத ஊதியத்தை 14,000 ரூபாயிலிருந்து 19,000 ரூபாயாக உயர்த்தியுள்ளது. இது 35 விழுக்காடு அதிகமாகும். ஆனால் நொய்டாவில் உள்ள நிறுவனத்தில் ஊதியம் உயர்த்தப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் குறைந்தபட்ச மாத ஊதியத்தை 20,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பணிகளைப் புறக்கணித்து வீதிகளில் இறங்கிப் போராடத் தொடங்கினர். இவர்களில் பல தொழிலாளர்கள் ரிச்சா குளோபல் (Richa Global), சமவர்தனா மதர்ஷன் இன்டர்நேஷனல் லிமிடெட் (Samvardhana Motherson International Ltd) மற்றும் பாரமவுண்ட் ப்ராடக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் (Paramount Products Pvt Ltd.) போன்ற நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள். இவர்களில் பெரும்பாலான பேர் ஹோசியரி காம்ப்ளெக்ஸில் பேஸ்-2 இல் உள்ள தொழிற்சாலை தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தொழிலாளர்களின் போராட்டத்தினால் ஈர்க்கப்பட்டுப் பல தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த கிட்டத்தட்ட 40,000 – 45,000 தொழிலாளர்கள் தங்களுக்கும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் இணைந்தனர். இப்போராட்டம் அருகில் உள்ள காசியாபாத்திற்கும் பரவியது. இது வெறும் சம்பள உயர்வுக்கான போராட்டம் மட்டுமல்ல, இது தங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டம் என்று அவர்கள் முழக்கமிட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

தொழிலாளர்களின் அடிப்படையான கோரிக்கைகள்:

  • ஒரு நாளைக்கு 8 மணிநேர வேலை
  • குறைந்தபட்ச மாதச் சம்பளமாக 20,000 ரூபாய் வழங்கப்பட வேண்டும்
  • கூடுதல் நேரம் (Over time) வேலை பார்த்தால் இரட்டிப்பு ஊதியம் வழங்க வேண்டும்.
  • வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறை வழங்க வேண்டும்.
  • போனஸ் மற்றும் பணியிடப் பாதுகாப்பு வேண்டும்.

அமைதியான தங்களின் போராட்டத்திற்கு அரசு செவி சாய்க்காததால் தொழிலாளர்கள் தொழிற்சாலைகளின் பொருட்களைச் சேதப்படுத்தியும், வாகனங்களுக்கு தீ வைத்தும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். பின்னர் போலீஸ் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் போராட்டத்தைக் கலைத்துள்ளது. 300 தொழிலாளர்களைக் கைது செய்துள்ளது.

தொழிலாளர்களின் போராட்டத்திற்குப் பணிந்த யோகி அரசு நொய்டா மற்றும் காசியாபாத் பகுதிகளில் உள்ள தொழிலாளர்களின் ஊதியத்தை 21 சதவீதம் உயர்த்துவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி நொய்டா மற்றும் காசியாபாத் பகுதிகளில் தொழில்நுட்பத் திறன் இல்லாத தொழிலாளர்களுக்கு ரூ.13,690, பகுதி அளவில் தொழில்நுட்பத் திறன் கொண்ட தொழிலாளர்களுக்கு ரூ.15,059 மற்றும் தொழில்நுட்பத் திறன் கொண்ட தொழிலாளர்களுக்கு ரூ.16,868 என இடைக்கால ஊதிய விகிதங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இவை ஏப்ரல் 1 ஆம் தேதி முன் தேதியிட்டு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உயர் அதிகாரிகளைக் கொண்ட உயர்மட்ட குழுவையும் அரசு அமைத்துள்ளது. இக்குழு தொழிலாளர்களின் எட்டு மணி நேர வேலை, வார விடுமுறை, மிகைநேர (ஓவர் டைம்) ஊதியம் போன்றவற்றை ஆராய்ந்து அறிக்கையை மாநில அரசிடம் சமர்ப்பிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தாங்கள் கேட்டதை விடக் குறைந்த அளவிலேயே ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் தங்களின் கோரிக்கைகளில் உறுதியாக நின்று போராடி வருகின்றனர். குறிப்பாக, “நாங்கள் இயந்திரமல்ல; நாங்களும் மனிதர்கள்தான். எனவே குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்” என்ற கோரிக்கை தற்போது வலுப்பெற்றுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் தற்போதைய விலைவாசி உயர்வில் தங்களால் குடும்பத்தை நடத்தவே முடியவில்லை என்றும், வாங்கும் சம்பளம் வீட்டு வாடகைக்கும் உணவுக்குமே சரியாகப் போய்விடுவதாகவும் கண்ணீருடன் தெரிவிக்கின்றனர். காலை முதல் மாலை வரை ரத்தம் சிந்தி உழைத்தாலும், கையில் கிடைக்கும் சொற்ப ஊதியம் தங்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடப் போதுமானதாக இல்லை என்பதே இப்போராட்டத்தின் மையமாக உள்ளது.


படிக்க: சிலிண்டர் தட்டுப்பாட்டால் வாழ்வாதாரத்தை இழக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்!


தொழிலாளரான அனுராக், “சம்பள உயர்வால் உண்மையில் எந்தப் பலனும் இல்லை. நாங்கள் ரூ. 250–300 உயர்வு பெறுகிறோம், ஆனால் ஜனவரியில் எப்போதும் வீட்டு உரிமையாளர் வாடகையை அதிகரித்து விடுகிறார்.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அவருடைய இரண்டு குழந்தைகளுக்கு மாதம் தோறும் சுமார் ரூ. 3,500 கல்விக் கட்டணமாகவும், ரூ. 5,000 வாடகையாகவும் செலவழிக்க வேண்டியிருக்கிறது. இந்த சேர்க்கை காலம் மட்டுமே அவருக்கு ரூ. 9,000 செலவாகியுள்ளது. அதனையும் கடன் வாங்கித்தான் சமாளித்துள்ளார். குடும்பத்திற்குத் தேவையான உணவிற்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

ரிச்சா குளோபலில் வேலை செய்யும் சங்கீதா, “நாங்கள் ஒரு வினாடி தாமதமாக வந்தால் கூட, எங்கள் ஓவர்டைம் பணம் கழிக்கப்படுகிறது. எங்களுக்கு எந்த சலுகை நேரமும் (கிரேஸ் பீரியட்) கொடுக்கப்படுவதில்லை. எப்போதும் சரியான நேரத்தில் இருக்க வேண்டும். எப்போதும் அவசரத்தில் இருக்க வேண்டும். புரொடக்ஷன் இலக்குகள் (உற்பத்தி இலக்கு) காரணமாக தண்ணீர் குடிப்பதற்கோ, கழிப்பறைக்குச் செல்வதற்கோ கூட மிகவும் கடினமாக இருக்கிறது. அவர்கள் எங்களை இயந்திரங்களிலிருந்து ஒரு வினாடி கூட விலக அனுமதிப்பதில்லை,” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

தொழிலாளர் ரம்பா தேவி, தான் வேலைநிறுத்தத்தில் கலந்துகொண்டதால் தன் சம்பளம் குறைக்கப்பட்டதாகக் கூறுகிறார். அவரது பே சிலிப் (சம்பளச் சீட்டு) 21,757 ரூபாய் (ஓவர்டைம் உட்பட) காட்டினாலும், அவரது வங்கியில் 19,018 ரூபாய் மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது. 2,739 ரூபாய் தண்டத் தொகையாக பிடித்தம் செய்யப்பட்டதாகக் கூறுகிறார்.

ஓவர்டைம் பதிவுகளிலும் முரண்பாடுகள் இருப்பதாகத் தொழிலாளர்கள் கூறுகின்றனர். ரம்பா, தான் 115 மணி நேரம் ஓவர்டைம் வேலை செய்ததாகக் கூறுகிறார். ஆனால் அவரது பே சிலிப் 21 மணி நேரம் மட்டுமே காட்டுகிறது. சங்கீதா 80 மணி நேரம் வேலை செய்ததாகக் கூறுகிறார். ஆனால் வெறும் 13 மணி நேரம் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது கார்ப்பரேட் நிறுவனங்கள் 12 மணி நேரம் வேலை வாங்குவதுடன், தங்களின் தேவைகளுக்காகக் கூடுதல் நேரம் வேலை பார்க்கும் தொழிலாளர்களின் உழைப்பையும் சுரண்டிக் கொளுத்துக் கொண்டிருக்கின்றன.

தொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் கூறுகையில் “நிறுவனங்கள் கோடிக்கணக்கில் லாபம் ஈட்டுகின்றன. ஆனால் அந்த லாபத்தை உருவாக்குவதற்கு முதுகெலும்பாக இருக்கும் தொழிலாளர்களுக்கு உரிய ஊதியம் கிடைப்பதில்லை” என்று தெரிவிக்கின்றனர்.


படிக்க: கிக் தொழிலாளர்களின் போராட்டம்: அல்காரிதச் சுரண்டலுக்கு எதிரான முதல் வெற்றி!


தொழிலாளர்கள் தொடர்ந்து இடைவிடாது வேலை செய்வதால் மன அழுத்தம் மற்றும் உடல்நலப் பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். அதற்கான மருத்துவச் செலவுகளைக் கூட சமாளிக்க முடியாத நிலையில்தான் தொழிலாளர்களின் நிலை உள்ளது. அவர்களுக்கு அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஊதியத்தை விட மிகக் குறைவாகவே பல கார்ப்பரேட் நிறுவனங்கள் ஊதியம் வழங்குகின்றன. தொழிலாளர் சட்டங்களையும் முறையாகப் பின்பற்றுவதில்லை. கேள்வி கேட்கும் தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்குவது போன்ற அராஜக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.

தொழிற்சங்கங்கள் இல்லாததால் தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து தொழிலாளர் இயக்கம் என்ற பெயரில் பல்வேறு வாட்ஸ் அப் குழுக்களை உருவாக்கி அதில் நொய்டாவில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களை க்யூ.ஆர் (QR) குறியீடு மூலம் ஒன்றிணைத்துள்ளனர்.

இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத பாசிச கும்பல் தொழிலாளர்களின் போராட்டம் நக்சலைட்டுகளின் சதி என்றும் இதற்குப் பின்னால் பாகிஸ்தான் உள்ளது என்றும் பொய்யாகச் சித்தரித்து உள்ளது. அடிப்படை உரிமைகளுக்காகப் போராடுபவர்களை நக்சல்கள் என்று முத்திரை குத்துவதை பாசிச கும்பல் தொடர்ந்து செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே பாசிச மோடி அரசு தொழிலாளர் சட்டங்களைத் திருத்தி நான்கு தொழிலாளர் தொகுப்புச் சட்டங்களாக மாற்றியுள்ளது. இதன்மூலம் போராடிப் பெற்ற தொழிலாளர்களின் உரிமைகளைப் பறித்துள்ளது. எனவே குறைந்தபட்ச ஊதிய உயர்வு கேட்டுப் போராடுகின்ற தொழிலாளர்கள், தங்களின் நலன்களுக்கு விரோதமாகக் கொண்டுவரப்பட்டுள்ள நான்கு தொழிலாளர் சட்டத்திருத்தத்திற்கு எதிராகவும் போராட வேண்டும். இப்போராட்டத்திற்கு அனைத்து தொழிலாளர் சங்கங்களும் ஆதரவளிக்க வேண்டும். இதன் மூலமே எட்டு மணிநேர வேலை, ஊதிய உயர்வு உள்ளிட்டவற்றைப் பெறுவதுடன் தொழிலாளர்களின் உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க முடியும்.


ஆசாத்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க