மே நாள் வாழ்க!
டிரம்ப்-மஸ்க் பாசிச கும்பல் தலைமையிலான
அமெரிக்க உலக மேலாதிக்கத்தை முறியடிப்போம்!
நாட்டை மறுகாலனியாக்கும் மோடி அரசை வீழ்த்துவோம்!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
தொழிலாளர்களே!
உலக நாடுகளை அடக்கி, ஒடுக்கி, சுரண்டிக் கொள்ளையடித்து வந்த அமெரிக்க மேல்நிலை வல்லரசு, பல பத்தாண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் கடும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளமுடியாமல் திணறி வருகிறது. அமெரிக்கா பின்பற்றிவரும் உலக மேலாதிக்கத்திற்கான கொள்கைகள், முதலாளித்துவக் கொள்கைகள்தான் அதன் பொருளாதார நெருக்கடிகளுக்குக் காரணமாகும். இதனால், ஆளும் வர்க்கத்தின் மீதும் அவை பின்பற்றிவரும் முதலாளித்துவக் கொள்கைகள் மீதும் அமெரிக்க மக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனர். ஆனால், ஆளும் வர்க்கமோ அக்கொள்கைகளைக் கைவிடாமல், அவற்றை மேலும் தீவிரமாக நடைமுறைப்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறது.
சரிந்துவரும் உலக மேலாதிக்கத்தை மீட்பதற்காகவும், அமெரிக்க ஏகபோக முதலாளிகளின் சரிவை ஈடுகட்டுவதற்காகவும் இதுநாள் வரை பின்பற்றி வந்த ஜனநாயக முகமூடியைத் தூக்கி வீசுவதென முடிவு செய்துள்ள, அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவானது, டொனால்ட் டிரம்ப் என்கிற பாசிசக் கோமாளியை முன்னிறுத்தி கொட்டமடித்து வருகிறது.
இந்த பாசிச டிரம்ப் கும்பலானது, எலான் மஸ்க் போன்ற டிஜிட்டல் தொழில்நுட்ப ஏகபோக நிறுவனங்கள்; எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள்; நிதி ஏகபோக நிறுவனங்கள்; கிரிப்டோ நாணய நிறுவனங்கள் என அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவினரின் கட்டற்ற கொள்ளைக்காக அமெரிக்காவில் பாசிச ஆட்சியை அரங்கேற்றி வருகிறது.
உலகச் சந்தையில் தனக்கு போட்டியாளர்களே இல்லை என்ற நிலை இருந்தவரை, அமெரிக்காவுக்கு தாராளமயம், உலகமயம் தேவைப்பட்டது. ஆனால், அதே உலகமயமாக்கலைப் பயன்படுத்திச் சீனா தன்னை மாபெரும் உற்பத்திச் சக்தியாக வளர்த்துக்கொண்டு அமெரிக்காவை மிஞ்சியவுடன், அமெரிக்காவுக்கு உலகமயம் கசக்கிறது. அதனால், அக்கொள்கைகளைக் குப்பையில் வீசிவிட்டு, “அமெரிக்காவுக்கே முன்னுரிமை” என்ற காப்புவாதக் கொள்கையை உலகத்தின் மீது திணிக்கிறது.
மேலும், தாராளயம், உலகமயத்தின் அடிப்படையில், ஏகாதிபத்திய நாடுகள் உலகைச் சுரண்டுவதற்கான கருவிகளாக விளங்கும், உலக வங்கி (WB), உலக வர்த்தகக் கழகம் (WTO), சர்வதேச நாணய நிதியம் (IMF), ஐக்கிய நாடுகள் சபை (UN), நேட்டோ (NATO) போன்றவற்றின் விதிமுறைகள் எதற்கும் டிரம்ப்-மஸ்க் பாசிச கும்பல் கட்டுப்பட மறுக்கிறது. தன்விருப்பம் போல, உலகை மறுபங்கீடு செய்து சூறையாடும் வகையில், புதிய உலக ஒழுங்கைத் திணித்து வருகிறது.

இந்த நோக்கத்தில் இருந்தே, டிரம்ப்-மஸ்க் பாசிச கும்பல், வர்த்தகப் போர்கள், ஆக்கிரமிப்புப் போர்கள், பிற நாடுகள் மீது பொருளாதாரத் தடைகள் போன்ற பாசிச நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதுதான், உலகம் தழுவிய அளவிலும் பல நாடுகளிலும் நிலவிவரும் அரசியல், பொருளாதாரம், சமூகம், சுற்றுச்சூழல் சார்ந்த அனைத்து வகை நெருக்கடிகளும் புதிய உச்சத்திற்குக் காரணமாகும். இதுதான், உலகின் பல மண்டலங்களில் போர் முனைகள் உருவாகி வருவதற்கும் காரணமாகும்.
வர்த்தகப் போரும்
வளங்களைக் கொள்ளையிடுவதும்
- அமெரிக்கக் கார்ப்பரேட்டுகளின் உற்பத்திப் பொருட்களை உலக நாடுகள் தடையின்றி இறக்குமதி செய்ய வேண்டும் என்பதற்காகவும், அதற்காகப் பிற நாடுகள் தங்கள் இறக்குமதி வரிகளைக் குறைக்க நிர்ப்பந்திப்பதற்காகவும் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பிற நாடுகளின் பொருட்களுக்கு 25, 50, 100 சதவிகித வரி விதிப்பு எனும் பொருளாதார பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்டது, டிரம்ப் கும்பல். இரு தரப்புப் பேச்சுவார்த்தை என்பதற்கோ, சர்வதேச வர்த்தக விதிகளுக்கோ இடமில்லை; அமெரிக்கா உத்தரவிடுவதை அனைத்து நாடுகளும் வாயைப் பொத்திக் கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டுமென வெளிப்படையாகக் கொக்கரிக்கிறது, இக்கும்பல்.
- எண்ணெய் வர்த்தகத்தில் அமெரிக்கா முதலிடத்தைப் பிடிக்க வேண்டுமென்பதற்காக, தனக்கு அடிபணிய மறுத்த வெனிசுலா நாட்டின் அதிபர் மதுரோவை, நாடு புகுந்து கைது செய்து, அமெரிக்காவிற்குக் கடத்திச் சென்று, சிறையில் அடைத்து வைத்துள்ளது, டிரம்ப் கும்பல்.
- கியூபாவினால், அமெரிக்காவின் தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற பொய்யான காரணத்தைக் கூறி, கியூபா நாட்டின் மீது, ஏற்கெனவே இருக்கும் பொருளாதாரத் தடைகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இதனால், எரிபொருள், உணவு, மருந்துப் பொருட்களின் தட்டுப்பாடு தீவிரமடைந்து, கியூப மக்கள் இருட்டிலும் பட்டினியிலும் சாகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
- செயற்கை நுண்ணறிவு, மின்கல வாகனங்கள், மின்னணு குறைகடத்திகளுக்குத் தேவையான அருமண் கனிமங்களைக் கைப்பற்றுவதற்காக, இலட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட பரந்த கிரீன்லாந்த் நாட்டை ஆக்கிரமிக்கப் போவதாக பாசிச டிரம்ப் கும்பல் அடாவடித்தனமாக அறிவித்து அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. கொலம்பியா போன்ற லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஆட்சிக் கவிழ்ப்பை அரங்கேற்றி வருகிறது.
உலகெங்கும் போர்வெறியும்
உள்நாட்டில் பாசிசமும்

- இதற்கு முன்பு, பாலஸ்தீனத்தில் இருக்கும் காசாவில், மிகப்பெரிய இனப்படுகொலையைக் கட்டவிழ்த்து விட்டு காசாவை ஆக்கிரமிப்பதற்கு அமெரிக்கா உற்ற துணையாக இருந்து வருகிறது.
- இந்த வரிசையில், தற்போது, இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீது போர் தொடுத்துள்ளது. இஸ்ரேலின் குண்டுவீச்சினால், ஈரானில் பல்லாயிரம் மக்கள் அன்றாடம் கொல்லப்படுகிறார்கள். கட்டடங்கள் இடித்துத் தரைமட்டமாக்கப்படுகின்றன. ஈரானுக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறி, லெபனான் மீது குண்டு வீசி குழந்தைகளைக் கொன்று குவித்து வருகிறது, யூதவெறி பிடித்த இஸ்ரேல்.
- இந்தப் போர் அறிவிக்கப்பட்ட நாள் முதலாக, இந்தியா போன்ற பல நாடுகளில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த நாடுகளின் பொருளாதாரம் கடும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது; உணவுப் பொருட்களின் விலையேற்றம் அந்நாட்டு மக்களைக் கடுமையாக பாதித்து வருகிறது.
- அதுமட்டுமல்ல, ஈரானில் உள்ள எண்ணெய்க் கிணறுகளை அமெரிக்கா-இஸ்ரேல் தாக்கி வருவதால், எண்ணெய்க் கிணறுகள் பற்றி எரிகின்றன; அதில் இருந்து எழும் புகையானது, பூமியின் ஒட்டுமொத்த சுற்றுச்சூழலை மிகக்கடுமையாக பாதிக்கும் தன்மை கொண்டதாக உள்ளது. இது மிகநீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்தப் போகிறது என அறிவியலாளர்கள் எச்சரிக்கிறார்கள்.
- செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களின் ஆதிக்கம், அரசுத் துறைகள் முதல் அனைத்துத் துறைகளிலும் கார்ப்பரேட்மயமாக்கல், டிஜிட்டல்மயமாக்கல் வளர்ந்து வருவதால், உலகெங்கிலும் பல முன்னணி நிறுவனங்களிலும் அரசுத் துறைகளிலும் வெள்ளம் போல ஆட்குறைப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கூகுள், அமேசான், மைக்ரோசாஃப்ட், மஸ்க்கின் எக்ஸ்.ஏஐ (xAI) போன்ற டிஜிட்டல் தொழில்நுட்ப ஏகபோக கார்ப்பரேட் நிறுவனங்கள், இலட்சக்கணக்கான தொழிலாளர்களின் வேலைகளை பறித்து வருகின்றன. மறுபுறம், ஊபர், அமேசான் போன்ற கார்ப்பரேட்டுகளின் கிக் பொருளாதாரத்தில் சிக்கியுள்ளத் தொழிலாளர்கள், எந்த சமூகப் பாதுகாப்பும், தொழிற்சங்க உரிமையுமின்றி கொத்தடிமைகளாக சுரண்டப்படுகின்றனர்.
- இவ்வாறு சர்வதேச அளவில் பெரும் அரசியல் – பொருளாதார நெருக்கடியை உருவாக்கும் அமெரிக்கா, உள்நாட்டிலும் பாசிசத்தைக் கட்டவிழ்த்து விடுகிறது. குறிப்பாக, அமெரிக்காவில் பணிபுரிந்து வந்த மக்களை, சட்டவிரோதக் குடியேறிகள் என்று கூறி போர்க்கைதிகளைப் போல கைகளில் விலங்கிட்டு, வலுக்கட்டாயமாக நாட்டை விட்டு வெளியேற்றுகிறது.
- குடியேறிய மக்களைத் தேடிப்பிடிக்கும் பொருட்டு, பல மாகாண அரசுகளின் எதிர்ப்புகளையும் மீறி, அமெரிக்க கூட்டாட்சி மரபைத் தூக்கிவீசிவிட்டு, ராணுவத்தை ஏவி வீடுவீடாகச் சென்று தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது; பல்லாயிரக்கணக்கானவர்களைக் கைது செய்து சிறையில் அடைக்கிறது. இதன் மூலம் அமெரிக்காவின் பன்முகத்தன்மையை அழித்து, ஒற்றை சர்வாதிகார நாடாக அமெரிக்காவை மாற்றி வருகிறது.
- அதுமட்டுமின்றி, அமெரிக்க அரசுத் துறைகளில் பணிபுரியும் பல்லாயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்து மஸ்க் கும்பலின் மேலாண்மைக்கு திறந்துவிட்டுள்ளது. கல்வித் துறையை முழுமையாகக் கைகழுவி, கல்வியை முற்றிலும் தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. பெண்களுக்கு எதிராக, கருக்கலைப்புச் சட்டம் போன்ற பல சட்டங்களை நிறைவேற்றி வருகிறது. பால் புதுமையினரின் உரிமைகளை நசுக்கி வருகிறது.
- தேசிய, சர்வதேச அளவில் டிரம்ப்-மஸ்க் பாசிச கும்பல் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்க மக்கள் ஒன்று சேரவிடாமல் தடுக்கும் வகையில், வெள்ளை நிறவெறியைக் கிளப்பி வருகிறது. நிறவெறி, தேசவெறி, இசுலாமியர் எதிர்ப்பு மதவெறி, இனவெறியைத் தூண்டிவிட்டு வருகிறது. அறிவியலுக்குப் புறம்பான பல்வேறு மூடக் கருத்துகளை டிரம்பே பரப்பி வருகிறார். அரசு செய்திகளையும் தனக்கு சொந்தமான நிறுவனத்தின் மூலம் வெளியிட்டு, ஒரு மன்னரைப் போல செயல்பட்டு வருகிறார்.
உலக மேலாதிக்க வெறிபிடித்த அமெரிக்காவில் தற்போது டிரம்ப்-மஸ்க் பாசிச கும்பலின் ஆட்சி அரங்கேறியிருப்பது, உலக மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாகும்.
தாராளமய, உலகமயக் கொள்கையை அமெரிக்கா கைவிடத் தொடங்கியதில் இருந்து, அதற்கு நிகராக, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் சொந்த நாட்டுக்கே முன்னுரிமை என்ற கொள்கையைத் தொடங்கியுள்ளன. சில நாடுகளில், இதற்கான எத்தணிப்புகள் தொடங்கியுள்ளன. இவையெல்லாம், தொழிலாளர் வர்க்கத்தின் மீதும் உழைக்கும் வர்க்கங்களின் மீதும், பின்தங்கிய காலனி நாடுகள் மீதும் கடும் நெருக்கடியைத் திணிக்கின்றன.
அமெரிக்காவைப் போலவே, ஜெர்மன், இங்கிலாந்து, ஃப்ரான்ஸ் போன்ற நாடுகளிலும் இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலைமையை நிரந்தரமாக்கும் வகையில், தொழிலாளர் நல சட்டங்களை திருத்தி, ஒப்பந்தமயமாக்கலை சட்டபூர்வமாக்கி, தொழிலாளர்களை உரிமைகளற்ற கூலி அடிமைகளாக மாற்றுகின்றனர்.
ஆகையால், டிரம்ப்-மஸ்க் பாசிசக் கும்பலின் தலைமையிலான அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்தை முறியடிப்பது உலக மக்களின் முதல் கடமையுமாகும்.
அமெரிக்காவிற்கு நாட்டை அடிமையாக்கும்
ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.; அம்பானி-அதானி பாசிச கும்பல்

அமெரிக்காவில் பாசிச டிரம்ப்-மஸ்க் கும்பல் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியதில் இருந்து, உலக நாடுகள் கடும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றன. இவற்றிற்கு எதிராக சில நாடுகள் போராடி வருகின்றன. ஆனால், இந்திய மோடி அரசோ, டிரம்ப்-மஸ்க் கும்பலின் காலடியில் வீழ்ந்து கிடக்கிறது. நமது நாட்டிற்கு மிச்சமீதியிருந்த இறையாண்மையை டிரம்ப்-மஸ்க் கும்பலுக்கு காணிக்கையாக்கிவருகிறது.
- நமது நாட்டின் நீண்டகால நட்பு நாடான ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் பிப்ரவரி 28-ஆம் தேதி போர் தொடுப்பதற்கு முதல்நாள், இஸ்ரேல் அதிபர் நெதன்யாகுவுடன் பாசிச மோடி கை குலுக்கினார். இந்த சந்திப்பின் போது, யூத இனவெறி, இசுலாமிய எதிர்ப்புணர்வு, அமெரிக்க விசுவாசத்தை வெளிப்படுத்தும் விதமாக, “இஸ்ரேல் தந்தை நாடு, இந்தியா தாய் நாடு” என்று மோடி கூறினார். இந்தியாவுடன் கூட்டு இராணுவப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஈரானியப் போர்க்கப்பலை அமெரிக்கா அழித்ததற்கு பாசிச மோடி எந்த கண்டனத்தையும் தெரிவிக்கவில்லை. மொத்தத்தில், பாசிச மோடி அரசு ஈரானிற்கு அப்பட்டமாக துரோகமிழைத்துள்ளது.
- அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்களைக் கையில் விலங்கிட்டு, கைதிகளைப் போல டிரம்ப் நாடு கடத்தியதை மோடி அரசுவெட்கமின்றி வேடிக்கைப் பார்த்தது. இசுலாமியர்களுக்கு எதிராக தேசவெறியூட்டும் மோடி அரசு, அமெரிக்காவின் முன்பாக அடிபணிந்து கிடக்கிறது.
- நாம் எந்த நாட்டிலிருந்து எண்ணெய் வாங்க வேண்டும் என்று டிரம்ப் போடும் உத்தரவுக்கு அடிபணிந்து செயல்படுகிறது, பாசிச மோடி அரசு. எரிபொருள் வர்த்தகத்தில் முழுமையாக அமெரிக்காவைச் சார்ந்து இருப்பதன் மூலம் நாட்டின் எரிசக்திப் பாதுகாப்பையும், இறையாண்மையையும் அமெரிக்காவின் பாதங்களில் அடகு வைத்துள்ளது.
- அமெரிக்காவுடனான அடிமை ஒப்பந்தங்களின்படி, அந்நாட்டின் விவசாயப் பொருட்களுக்கு “பூஜ்ஜிய வரி” விதிப்பை அமல்படுத்த மோடி அரசு முயற்சிக்கிறது. இதன் மூலம், அமெரிக்காவின் உபரி விவசாயப் பொருட்களையும், அபாயகரமான மரபணு மாற்றப்பட்ட (GM) பயிர்களையும் கொட்டுவதற்கான குப்பைத் தொட்டியாக இந்தியச் சந்தையை மாற்றி, கோடிக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்து, நாட்டின் உணவு இறையாண்மையை அமெரிக்கக் கார்ப்பரேட்டுகளுக்கு அடகு வைக்கும் சதி அரங்கேறி வருகிறது.
- எலான் மஸ்கின், “ஸ்டார்லிங்க், டெஸ்லா” போன்ற நிறுவனங்கள் நமது நாட்டில் நுழைகின்றன. அமெரிக்க டிஜிட்டல் நிறுவனங்கள், மிகப்பெரும் சுற்றுச்சூழல் நாசத்தை ஏற்படுத்தும் தகவல் மையங்களை (டேட்டா செண்டர்) இந்தியாவில் அமைக்கும் வேலையில் இறங்கியுள்ளன.
- இவ்வாறு, “அமெரிக்காவிற்கே முன்னுரிமை” என்ற கொள்கை அடிப்படையிலான “காம்பாக்ட்” திட்டத்தின் கீழ் அமெரிக்க கார்ப்பரேட் முதலாளிகளின் நலனிற்கேற்ப புதிய அணுசக்தி சட்டம், விதை மசோதா உள்ளிட்ட சட்டத் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
- நமது நாட்டை அடிமையாக்கி, நாசமாக்கும் மேற்கண்ட அமெரிக்காவின் கொள்ளைக்கு அதானி, அகர்வால் போன்ற கார்ப்பரேட் முதலாளிகள் தரகு வேலை செய்து நத்திப் பிழைக்கின்றனர்.
- இவ்வாறு, டிரம்ப்-மஸ்க் பாசிசக் கும்பலின் அமெரிக்க மேலாதிக்கத்திற்கும் அடாவடித்தனங்களுக்கும் நமது நாட்டை ஆட்சி செய்யும் பாசிச மோடி அரசு அடிமை சேவகம் செய்து வருகிறது. அதன் சுமையை இந்திய மக்கள் மீது திணித்து வருகிறது.
- இந்திய ஏற்றுமதிக்கு 50 சதவிகிதம் வரை வரி, காப்புரிமை பெற்ற மருந்துகள் மற்றும் அவற்றின் மூலப் பொருட்களுக்கு 100 சதவிகித வரி, தற்போது ஈரான் போரினால், எரிவாயு தட்டுப்பாடு, தகவல் தொழில்நுட்பத் தொழிலாளர்களின் விசா கட்டண உயர்வு, இந்திய ஐ.டி. நிறுவனங்களில் வேலைநீக்கம், திருப்பூர் போன்ற ஏற்றுமதி சார்ந்த தொழில்கள் போண்டியாதல், அதில் பணிபுரிந்த இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழப்பு, அமெரிக்காவின் பாதங்களில் நாட்டின் இறையாண்மை அடகு வைக்கப்பட்டிருப்பது… என நமது நாடானது கொஞ்சம் கொஞ்சமாக அமெரிக்காவிற்கு அடிமையாக்கப்படுவதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள், சிறு-குறு உற்பத்தியாளர்கள், மீனவர்கள், பழங்குடி மக்கள், தலித்துகள், பெண்கள் என அனைத்துப் பிரிவு மக்கள் மீதும் அடக்குமுறைகள் அதிகரிக்கின்றன. உழைக்கும் மக்களைப் பிளவுப் படுத்தி நசுக்குவதற்கு, மதவெறி, இனவெறியைத் தூண்டிவிட்டு, பாசிசத்தை அரங்கேற்றி வருகிறது.
பாசிச மோடி அரசு, நாட்டை அமெரிக்காவிற்கு அடிமையாக்குவதை எதிர்த்து நாட்டுப்பற்றுடன் நாட்டு மக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும். ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.; அம்பானி-அதானி பாசிச கும்பலை முறியடிப்பதற்கு புரட்சிகர ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து மக்கள் எழுச்சியைக் கட்டியமைக்க வேண்டும். அதன் மூலமாக, பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசைக் கட்டியமைக்க வேண்டும்.
சர்வதேச தொழிலாளர் ஒற்றுமையைக் கட்டியமைப்போம்!
நமது நாட்டில், ஊதிய உயர்வு கோரி நொய்டா தொழிலாளர் போராட்டம் (ஏப்ரல்), பணி நிரந்தரம் கோரிய சாம்சங் தொழிலாளர்கள், சென்னைத் துப்புரவுத் தொழிலாளர்களின் போராட்டம், ஜெர்மனில் ஓராண்டுக்கும் மேலாக இலட்சக்கணக்கான தொழிலாளர்களின் ஊதிய உயர்வு, ஓய்வூதியத்திற்கான போராட்டம், ஃப்ரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் இத்தகைய போராட்டங்கள் என தொழிலாளர் போராட்டங்கள் உலகெங்கிலும் வளர்ந்து வருகின்றன; உலகம் முழுவதும் தொழிலாளர் போராட்டங்கள் புதிய உச்சத்தை அடைந்துள்ளன.
அமெரிக்காவின் டிரம்ப் கும்பலின் ஆட்சியை எதிர்த்து இலட்சக்கணக்கான அமெரிக்க மக்கள், “மன்னர் வேண்டாம்” என வீதியில் இறங்கிப் போராடி வருகின்றனர். அமெரிக்க-இஸ்ரேலின் ஈரான் மீதான போரை உலகம் முழுவதும் இருக்கும் கோடிக்கணக்கான மக்கள் எதிர்த்துப் போராடி வருகின்றனர். தமது நாட்டின் மின்நிலையங்களை அமெரிக்க தாக்குதலில் இருந்து பாதுகாக்க, நாட்டுப்பற்று கொண்ட ஈரானிய மக்கள் மனித சங்கிலி வளையங்களை அமைத்துப் போராடுகின்றனர். அமெரிக்க அடிமை ஒப்பந்தத்திற்கு எதிராக இந்திய விவசாயிகள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கு எதிரான இந்தப் போராட்டங்கள் அனைத்தும் உலக மக்களுக்கு நம்பிக்கையூட்டுவதாக உள்ளன.
உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் நாம், அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கு எதிராக வீதியில் இறங்கிப் போராட வேண்டும். அமெரிக்க-இஸ்ரேல் ஆதிக்கத்திற்கு எதிராக உலகம் முழுவதும் போராடிக் கொண்டிருக்கும் உழைக்கும் மக்களுக்கு நமது ஆதரவுகளைத் தெரிவிக்க வேண்டும். “பல்துருவ உலகம்” என்ற போர்வையைப் போர்த்திக் கொண்டு, ரசிய-சீன ஏகாதிபத்திய ஆதரவு பேசுகின்ற, அனைத்துவகை போக்குகளையும் அம்பலப்படுத்தித் தோலுரிக்க வேண்டும். சர்வதேச பாட்டாளி வர்க்க ஒற்றுமையைக் கட்டியமைக்க வேண்டும்.
மே நாளில் சூளுரைப்போம்!
- டிரம்ப்-மஸ்க் பாசிசக் கும்பலின் “அமெரிக்காவுக்கே முன்னுரிமை” என்ற சதித் திட்டத்தை முறியடிப்போம்!
- பாலஸ்தீனம், ஈரான், லெபனான் மீது அமெரிக்க-இஸ்ரேல் தொடுத்துள்ள ஆக்கிரமிப்புப் போரை முறியடிப்போம்!
- அமெரிக்காவின் அடாவடித்தனங்களுக்கு எதிராக உலகம் முழுவதும் நடந்துவரும் மக்கள் போராட்டங்களுக்கு ஆதரவு வழங்குவோம்!
- அமெரிக்காவிற்கு நாட்டை மறுகாலனியாக்கிவரும் அம்பானி, அதானி, அகர்வால் கார்ப்பரேட் கும்பலின் நலனிற்காக பாசிச ஆட்சியை அரங்கேற்றிவரும் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. சங்கப் பரிவாரக் கும்பலை விரட்டியடிப்போம்!
- நமது நாட்டின் உழைக்கும் மக்களுக்கு உண்மையான ஜனநாயகத்தை வழங்கும் பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசமைக்க உறுதியேற்போம்!
- மீண்டும் ஒரு விடுதலைப் போராட்டத்திற்கு அணிதிரள்வோம்!
மக்கள் அதிகாரக் கழகம்
மக்கள் கலை இலக்கியக் கழகம்
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (மா.ஒ.கு.)
தமிழ்நாடு-புதுச்சேரி.
9962366321, 9791653200,
9444836642, 7397404242.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads










