2026 மே நாள் துண்டறிக்கை

1. டிரம்ப்-மஸ்க் பாசிசக் கும்பலின் ”அமெரிக்காவுக்கே முன்னுரிமை” என்ற சதித் திட்டத்தை முறியடிப்போம்! 2. பாலஸ்தீனம், ஈரான், லெபனான் மீது அமெரிக்க-இஸ்ரேல் தொடுத்துள்ள ஆக்கிரமிப்புப் போரை முறியடிப்போம்! 3. அமெரிக்காவின் அடாவடித்தனங்களுக்கு எதிராக உலகம் முழுவதும் நடந்துவரும் மக்கள் போராட்டங்களுக்கு ஆதரவு வழங்குவோம்!

மே நாள் வாழ்க!
டிரம்ப்-மஸ்க் பாசிச கும்பல் தலைமையிலான
அமெரிக்க உலக மேலாதிக்கத்தை முறியடிப்போம்!
நாட்டை மறுகாலனியாக்கும் மோடி அரசை வீழ்த்துவோம்!


மே 1, 2026 – தமிழ்நாடு-புதுச்சேரி முழுவதும் – பேரணி-ஆர்ப்பாட்டம்


அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
தொழிலாளர்களே!

உலகை ஆட்டிப் படைத்துவரும் அமெரிக்காவில், டிரம்ப்-மஸ்க் பாசிச கும்பல் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, பல்வேறு பாசிச நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சரிந்துவரும் உலக மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்காகவும் அமெரிக்காவுக்குப் போட்டியாக சீனா வளர்ந்து வருவதைத் தடுப்பதற்காகவும் வெறி கொண்டு அலைகிறது.

அது இதுநாள் வரை உலகைக் கொள்ளையடிப்பதற்குப் பின்பற்றி வந்த தாராளமய, உலகமயக் கொள்கையையும் அதன் கருவிகளாக உள்ள உலக வர்த்தகக் கழகம் (WTO), உலக வங்கி (WB), சர்வதேச நாணய நிதியம் (IMF), நேட்டோ (NATO) போன்றவற்றின் கட்டுப்பாடுகளையும் தூக்கியெறிந்துவிட்டு, “அமெரிக்காவுக்கே முன்னுரிமை” என்ற கொள்கையைப் பின்பற்றத் தொடங்கியிருக்கிறது.

சீனாவின் ஆதிக்கத்தைத் தடுப்பதற்காகவும் எண்ணெய் வளத்தில் அமெரிக்கா மேல்நிலை பெற வேண்டும் என்பதற்காகவும் தனக்கு அடிபணிய மறுத்த வெனிசுலா அதிபரை நாடு புகுந்து கைது செய்து, கடத்தி வந்து அமெரிக்காவில் சிறை வைத்துள்ளது; கியூபாவின் மீது கடும் பொருளாதாரத் தடைகளை விதித்து அந்த நாட்டை இருட்டிலும், பட்டினியிலும் தள்ளியுள்ளது. அருமண் கனிமங்களைக் கொள்ளையடிப்பதற்காக, குறைவான மக்கள் தொகை கொண்ட நாடான கிரீன்லாந்து அமெரிக்காவிற்கு சொந்தம் என அறிவித்து அந்த நாட்டை அடிமைப்படுத்தி வருகிறது. லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஆட்சிக் கவிழ்ப்பை அரங்கேற்றி வருகிறது.

பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் இனப்படுகொலை நடத்துவதற்கு உற்ற துணையாக இருந்து வருகிறது. தற்போது இஸ்ரேலுடன் இணைந்து ஈரான், லெபனான் மீதும் போர் தொடுத்து வருகிறது. இந்நாடுகளில் உள்ள பச்சிளம் குழந்தைகளையும் மக்களையும் கொத்துக்கொத்தாகக் கொன்றொழித்து வருகிறது.

இப்போரின் விளைவாக, உலகம் முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு விலைவாசி கடுமையான உயர்வை சந்தித்துள்ளது; ஈரானில் எண்ணெய் வயல்களை அமெரிக்கா-இஸ்ரேல் தாக்கி வருவதால் எழும் கடும் புகையினால், மிகப்பெரும் அளவிற்கு சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தி உலக நாடுகளை மீள முடியாத நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.

அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25, 50, 100 சதவிகித வரி விதிப்பு என்று தன்னிச்சையாக முடிவெடுத்து பிற நாடுகள் மீது திணித்து வருகிறது. சென்ற ஆகஸ்டு மாதம் அமெரிக்கா அறிவித்த இந்த வரிவிதிப்பினால், நமது நாட்டில் ஏற்றுமதி சார்ந்த தொழில்களை மேற்கொள்ளும் திருப்பூர் போன்ற நகரங்களில் உற்பத்தியாளர்களும் தொழிலாளர்களும் மிகப்பெரும் அளவிற்கு வேலையிழப்பை சந்தித்ததை நாம் அறிவோம்.

அதுமட்டுமல்ல, வெளிநாடுகளில் இருந்து பணிபுரிவதற்காக அமெரிக்காவிற்குச் சென்ற குடியேற்ற மக்களை, குற்றவாளிகளைப் போல கைது செய்து நாடு கடத்தியதையும் நாம் அறிவோம். இந்த கைது நடவடிக்கையானது இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அமெரிக்காவின் பல மாகாண அரசுகளின் எதிர்ப்புகளையும் மீறி, இராணுவத்தை ஏவி இந்த கைது நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. இதன் மூலமாக, அமெரிக்காவில் சொல்லப்படும் கூட்டாட்சியைத் தூக்கியெறிந்துவிட்டு மன்னராட்சியைப் போல செயல்பட்டு வருகிறது; பன்முகத்தன்மையை அழித்து, ஒற்றை சர்வாதிகாரத்தைத் திணிக்கிறது.

தமது நாட்டு மக்கள் தமக்கு எதிராக ஒன்று திரண்டு போராடுவதைத் தடுக்க, தேசவெறி, வெள்ளை நிறவெறி, போர்வெறி, இனவெறி, இசுலாமியர்களுக்கு எதிரான மதவெறியைத் தூண்டிவிடுகிறது. தொழிலாளர்கள், மாணவர்கள், பெண்கள், பால் புதுமையர்களுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச உரிமைகளையெல்லாம் பறித்து வருகிறது.

அமெரிக்காவில் பாசிச கும்பல் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி மக்களின் உரிமைகளை நசுக்குவதைப் போல, உலகெங்கிலும் பாசிச கும்பல்களின் ஆட்சி அரங்கேறி வருகிறது. இதனால், உலகெங்கிலும் தொழிலாளர்கள் மீதான அடக்குமுறைகள் கேள்விக்கிடமற்ற முறையில் அதிகரித்து புதிய உச்சத்தை அடைந்துள்ளன. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மன் போன்ற நாடுகளில் தொழிலாளர்கள் வேலை நீக்கம், ஓய்வூதியப் பறிப்பு, ஊதிய வெட்டு போன்ற அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

ஆகையால், அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்தை வீழ்த்துவது உலக மக்களின் முதல் கடமையாகும்.

அமெரிக்காவிற்கு நாட்டை அடிமையாக்கும்
ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.; அம்பானி-அதானி பாசிச கும்பல்

இவ்வாறு, ”உள்நாட்டில் பாசிச ஆட்சி, உலகெங்கும் ஆக்கிரமிப்புப் போர்கள்” என்கிற பாசிச அணுகுமுறையை மேற்கொண்டு வரும் டிரம்ப்-மஸ்க் கும்பலின் பாசிச நடவடிக்கைகளின் பட்டியல் மிக நீண்டது. அமெரிக்காவின் இந்த அணுகுமுறையால், இதுவரை அமெரிக்காவுடன் கூட்டுக் கொள்ளையர்களாக இருந்த ஐரோப்பிய யூனியன் நாடுகள் உள்ளிட்ட பலவும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளன என்றால், நம்மைப் போன்ற பின்தங்கிய நாடுகளிலும் இவை எந்த அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கும் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

சின்னஞ்சிறு நாடான கியூபா, தனது நாட்டின் இறையாண்மை பறிக்கப்படுவதற்கு எதிராகக் குரல் கொடுக்கிறது; ஈரான் எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருக்கிறது; அமெரிக்காவிற்கு அடிபணிய மறுக்கிறது, வெனிசுலா. ஆனால், அகண்ட பாரதக் கனவை நனவாக்க முயற்சித்துக் கொண்டிருக்கும் பாசிச மோடி அரசோ, டிரம்பின் பாசிச அடக்குமுறைகளுக்கு அடிபணிகிறது.

நாடு எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை, மக்கள் எந்த அளவிற்கு துன்பங்களை அனுபவித்தாலும் பரவாயில்லை, தனது எஜமானர்களான அம்பானி, அதானி, அகர்வால் கார்ப்பரேட் கும்பலுக்கு மட்டும் எந்த பாதிப்பும் வந்துவிடக் கூடாது என்று அமெரிக்காவின் உத்தரவுகளை வாயைப் பொத்திக் கொண்டு நடைமுறைப்படுத்தி வருகிறது பாசிச மோடி அரசு.

அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்களைக் கையில் விலங்கிட்டு, கைதிகளைப் போல டிரம்ப் நாடு கடத்தியதை மோடி அரசு வெட்கமின்றி வேடிக்கைப் பார்த்தது.

இந்தியா எண்ணெய் வாங்கும் நாடுகளை டிரம்ப் தீர்மானிக்கும் இழிநிலை உருவாகியுள்ளது. எரிசக்தி வர்த்தகத்தில் அமெரிக்காவை சார்ந்திருப்பதால் நாட்டின் எரிசக்திப் பாதுகாப்பும் இறையாண்மையும்  கேள்விக்குள்ளாகியுள்ளது.

அமெரிக்க விவசாயப் பொருட்களுக்கு “பூஜ்ஜிய வரி” சலுகை அளிக்க மோடி அரசு முயற்சிக்கிறது. இதனால், அமெரிக்காவின் உபரி விவசாயப் பொருட்களையும் அபாயகரமான மரபணு மாற்றப்பட்ட பயிர்களையும் கொட்டுவதற்கான குப்பைத் தொட்டியாக இந்தியச் சந்தை மாற்றப்படும். இதனால், கோடிக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன் நமது நாட்டின் இறையாண்மை, உணவுத் தற்சார்பு அமெரிக்க கார்ப்பரேட்டுகளிடம் அடகு வைக்கப்படும்.

இந்திய ஏற்றுமதிக்கு 50 சதவிகிதம் வரை வரி, காப்புரிமை பெற்ற மருந்துகள் மற்றும் அவற்றின் மூலப் பொருட்களுக்கு 100 சதவிகித வரி, தற்போது ஈரான் போரினால், எரிவாயு தட்டுப்பாடு, தகவல் தொழில்நுட்பத் தொழிலாளர்களின் விசா கட்டண உயர்வு, இந்திய ஐ.டி. நிறுவனங்களில் வேலைநீக்கம், திருப்பூர் போன்ற ஏற்றுமதி சார்ந்த தொழில்கள் போண்டியாதல், அதில் பணிபுரிந்த இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழப்பு, அமெரிக்காவின் பாதங்களில் நாட்டின் இறையாண்மையை அடகு வைப்பது… என நமது நாடானது கொஞ்சம் கொஞ்சமாக அமெரிக்காவிற்கு அடிமையாக்கப்படுவதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள், சிறு-குறு உற்பத்தியாளர்கள், மீனவர்கள், பழங்குடி மக்கள், தலித்துகள், பெண்கள் என அனைத்துப் பிரிவு மக்கள் மீதும் அடக்குமுறைகள் அதிகரிக்கின்றன.

சர்வதேச தொழிலாளர் ஒற்றுமையைக் கட்டியமைப்போம்!

நமது நாட்டில், ஊதிய உயர்வு கோரி நொய்டா தொழிலாளர் போராட்டம் (2026 ஏப்ரல்), பணி நிரந்தரம் கோரிய சாம்சங் தொழிலாளர்கள், சென்னைத் துப்புரவுத் தொழிலாளர்களின் போராட்டம், ஜெர்மனில் ஓராண்டுக்கும் மேலாக இலட்சக்கணக்கான தொழிலாளர்களின் ஊதிய உயர்வு, ஓய்வூதியத்திற்கான போராட்டம், ஃப்ரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் இத்தகைய போராட்டங்கள் என தொழிலாளர் போராட்டங்கள் உலகெங்கிலும் வளர்ந்து வருகின்றன;  இப்போராட்டங்கள் புதிய உச்சத்தை அடைந்துள்ளன.

அதேவேளையில், அமெரிக்காவின் டிரம்ப் கும்பலின் ஆட்சியை எதிர்த்து இலட்சக்கணக்கான அமெரிக்க மக்கள், “மன்னர் வேண்டாம்” என வீதியில் இறங்கிப் போராடி வருகின்றனர். அமெரிக்க-இஸ்ரேலின் ஈரான் மீதான போரை உலகம் முழுவதும் இருக்கும் கோடிக்கணக்கான மக்கள் எதிர்த்துப் போராடி வருகின்றனர். தமது நாட்டின் மின்நிலையங்களை அமெரிக்க தாக்குதலில் இருந்து பாதுகாக்க, நாட்டுப்பற்று கொண்ட ஈரானிய மக்கள் மனித சங்கிலி வளையங்களை அமைத்துப் போராடுகின்றனர். அமெரிக்க அடிமை ஒப்பந்தத்திற்கு எதிராக இந்திய விவசாயிகள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கு எதிரான இந்தப் போராட்டங்கள் அனைத்தும் உலக மக்களுக்கு நம்பிக்கையூட்டுவதாக உள்ளன.

உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் நாம், அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கு எதிராக வீதியில் இறங்கிப் போராட வேண்டும். அமெரிக்க-இஸ்ரேல் ஆதிக்கத்திற்கு எதிராக உலகம் முழுவதும் போராடிக் கொண்டிருக்கும் உழைக்கும் மக்களுக்கு நமது ஆதரவுகளைத் தெரிவிக்க வேண்டும். “பல்துருவ உலகம்” என்ற போர்வையைப் போர்த்திக் கொண்டு, ரசிய-சீன ஏகாதிபத்திய ஆதரவு பேசுகின்ற, அனைத்துவகை போக்குகளையும் புறக்கணிக்க வேண்டும். சர்வதேச பாட்டாளி வர்க்க ஒற்றுமையைக் கட்டியமைக்க வேண்டும்.

மே நாளில் சூளுரைப்போம்!

  • டிரம்ப்-மஸ்க் பாசிசக் கும்பலின் ”அமெரிக்காவுக்கே முன்னுரிமை” என்ற சதித் திட்டத்தை முறியடிப்போம்!
  • பாலஸ்தீனம், ஈரான், லெபனான் மீது அமெரிக்க-இஸ்ரேல் தொடுத்துள்ள ஆக்கிரமிப்புப் போரை முறியடிப்போம்!
  • அமெரிக்காவின் அடாவடித்தனங்களுக்கு எதிராக உலகம் முழுவதும் நடந்துவரும் மக்கள் போராட்டங்களுக்கு ஆதரவு வழங்குவோம்!
  • அமெரிக்காவிற்கு நாட்டை மறுகாலனியாக்கிவரும் அம்பானி, அதானி, அகர்வால் கார்ப்பரேட் கும்பலின் நலனிற்காக பாசிச ஆட்சியை அரங்கேற்றிவரும் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. சங்கப் பரிவாரக் கும்பலை விரட்டியடிப்போம்!
  • நமது நாட்டின் உழைக்கும் மக்களுக்கு உண்மையான ஜனநாயகத்தை வழங்கும் பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசமைக்க உறுதியேற்போம்!
  • மீண்டும் ஒரு விடுதலைப் போராட்டத்திற்கு அணிதிரள்வோம்!

மே நாள் பேரணி-ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்பீர்! எமது அமைப்புகளில் இணைவீர்!

இணைந்து பயணிக்க:
9962366321 – 9791653200
9444836642 – 7397404242

படிக்க: புதிய ஜனநாயகம்
பார்க்க: வினவு, பெருவிழா

நிதி ஆதரவு தாரீர்!

98402 49210 (G-Pay)

மக்கள் அதிகாரக் கழகம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (மாநில ஒருங்கிணைப்புக் குழு),
தமிழ்நாடு – புதுச்சேரி.
9962366321, 9791653200,
9444836642, 7397404242.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க