ஐ.டி துறையில் சர்வதேச அளவில் மிகப் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களில் ஒன்றான காக்னிசன்ட் (Cognizant) 12,000 முதல் 15,000 ஊழியர்களை வெளியேற்றத் திட்டமிட்டிருக்கிறது என்கிற செய்தி ஐ.டி ஊழியர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
உலகம் முழுவதிலும் பல நாடுகளில் காகினிசன்ட் நிறுவனக் கிளைகள் இயங்கி வருகின்றன. இந்த பணி நீக்கத் திட்டம் எல்லா நாடுகளிலுமுள்ள கிளைகளுக்கும் பொருந்தும் என்றாலும் இந்தியாதான் இதில் கடுமையாகப் பாதிக்கப்பட இருக்கிறது. இந்தியாவில்தான் கணிசமான எண்ணிக்கையில் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர் என்று துறை சார் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏப்ரல் 29 அன்று நாஸ்டாக் (Nasdaq) எனப்படும் ஐ.டி நிறுவனங்களின் கூட்டமைப்புதான் இந்த தகவலை மெல்லக் கசிய விட்டிருக்கிறது. ஆனால் அப்படி ஒரு வெளியேற்றத்துக்கான முன்னேற்பாடாக, ஊழியர்களுக்கான இழப்பீட்டுத் தொகை வழங்குவதற்காக காக்னிசன்ட் நிறுவனம் 320 மில்லியன் டாலர்களை தனியே ஒதுக்கீடு செய்து வைத்துள்ளது என்ற தகவலை காங்கிரசன்ட் நிறுவனத் தலைமை அலுவலர் தெரிவித்திருக்கிறார். மேலும் இந்த நடவடிக்கைக்கு ப்ராஜெக்ட் லீப் (Project Leap) என்று பெயரும் சூட்டப்பட்டுள்ளது.
காக்னிசன்ட் நிறுவனம் எவ்வளவு ஊழியர்களை வேலையில் வெளியேற்ற இருக்கிறது என்பதை நேரடியாகத் தெரிவிக்கவில்லை. ஆனாலும் ஒதுக்கியுள்ள இழப்பீட்டுத் தொகையின் அடிப்படையில் ஒரு கணக்கீடு செய்து இந்தியாவில் 12,000 முதல் 15,000 பேர் வரை வெளியேற்றப்படலாம் என்று ஐ.டி. துறை சார்ந்த வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இன்றைய நிலையில் காக்னிசன்ட் நிறுவனத்தில் உலகின் பல நாடுகளிலும் சேர்த்து மொத்தம் 3,57,000 ஊழியர்கள் உள்ளனர். அதில் 2,50,000 பேர் இந்தியாவில் பணியாற்றுகின்றனர். ஒரு ஊழியரின் சராசரி ஊதியம் மற்றும் இதுவரையிலும் பணியிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களுக்குத் தரப்படுகின்ற இழப்பீட்டுத் தொகையின் அளவு ஆகியவற்றைக் கொண்டு வெளியேற்றப்படக்கூடிய ஊழியர்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டுக் கூறியுள்ளனர்.
இத்திட்டம், நிறுவனத்தின் பல நிலைகளிலும் உள்ள ஊழியர்களிடம் செயல்படுத்தப்படவிருக்கிறது. எனவே துல்லியமான எண்ணிக்கையை இப்போது கூற இயலாது என்று காகினிசன்ட் தலைமைச் செயல் அலுவலர் (Chief Executive Officer) எஸ். ரவிக்குமார் சென்ற காலாண்டு அறிக்கையை வெளியிட்ட போது பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மேலிருந்து கீழாக விரிவடைந்து செல்லும் பிரமிடு வடிவில் ஊழியர்களைக் கட்டமைக்கும் பழைய முறைகளிலிருந்து ஐ.டி துறை சார்ந்த பல நிறுவனங்களும் தமது ஊழியர் கட்டமைப்பின் வடிவத்தை மாற்றி அமைத்து வருகின்றன. அடித்தளத்தில் புதிய ஊழியர்களை (Freshers) தேர்வு செய்து பணியில் அமர்த்தி பயிற்சி அளித்து வேலையில் ஈடுபடுத்துவது என்னும் பழைய முறையைப் பல நிறுவனங்களும் கைவிட்டு வருகின்றன என்றும் உயர் நிலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
புதிய ஏ.ஐ தொழில்நுட்பத்தை மேலும் மேலும் விரிவாகப் பயன்படுத்தும் போக்கில்தான் இந்த கட்டமைப்பு மாற்றம் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் அவர்கள் இப்போது முன்வைக்கும் புதிய கட்டமைப்பு முறை என்பது உயரம் குறைந்தும் அடித்தளம் பறந்து விரிந்ததாகவும் உள்ள பிரமிடு வடிவத்தை ஒத்திருக்கும். அப்புதிய வடிவத்தில் குறிப்பாக அடித்தளத்தில் மனித ஆற்றலை விடவும் டிஜிட்டல் ஆற்றல் என்பது மிகுதியாக இருக்கும் என்கின்றனர்.
கட்டமைப்பில் ஏற்படுத்தப்படும் இந்த மறு சீரமைப்பு என்பது உற்பத்தித்திறனைப் பெருக்கவும், மனிதர்கள் செய்கின்ற பணிகளை எளிமைப்படுத்தவும் முக்கிய தேவையாகிறது. அவ்வகையில் மனித மற்றும் டிஜிட்டல் ஆற்றல் ஆகிய இரண்டும் கூட்டாக இசைந்து இயங்குமாறு கட்டமைவை மாற்றி அமைக்க வேண்டியது அவசியமாகிறது என்றெல்லாம் விளக்கமளித்து, ஆகையினால் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை கட்டாயமாகிறது என்று நியாயப்படுத்தப்படுகின்றனர்.
இனி இம்முறை அடுத்தடுத்து எல்லா தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களிலும் நடைமுறைக்கு வரும். எங்கெங்கும் பணி நீக்கம் என்கிற மோசமான நிலைமை கண்டிப்பாகத் தோன்றும். ஐ.டி துறையில் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடும் என்பது ஊழியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்ற ஆண்டிலேயே பல நிறுவனங்கள் இப்பணிகளைத் தொடங்கி விட்டன. 2025 ஜூலை மாதத்தில் டி.சி.எஸ் நிறுவனம் 12,500 ஊழியர்களை வெளியேற்றியது. அதைத் தொடர்ந்து அசெஞ்ச்சர் (Accenture), ஹெச்.சி.எல். மற்றும் சமீபத்தில் ஆரக்கிள் (Oracle) ஆகிய நிறுவனங்களும் ஊழியர் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைத்துள்ளன.
மேலும் காக்னிசன்ட் நிறுவனம் பணியாளர்கள் மத்தியில் புதிய “ஏ.ஐ. பயன்பாட்டுத்திறன் அளவுகோல்” என்கிற ஒன்றை புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஊழியர்களிடம் ஏ.ஐ கருவிகளின் பயன்பாடு, ஊழியரின் ஏ.ஐ திட்டத்திற்கான பங்களிப்புகள், ஊழியர் பெற்றிருக்கும் கல்வி மற்றும் செயல் திறன் சார்ந்த சான்றிதழ்கள், பயிற்சியில் அவரது முன்னேற்றம், ஆகியவற்றின் அடிப்படையில் ஊழியர்களுக்கு ஒரு கூட்டு மதிப்பெண்ணை வழங்குகிறது. அதன்படியே ஊழியர்கள் இனி மதிப்பீடு செய்யப்படுவார்கள்.
இவையெல்லாம் கண்டிப்பாக ஊழியர்களை மென்மேலும் “கசக்கிப் பிழிவதும் பின்னர் விட்டெறிவதும்” என்ற அபாயத்தை நோக்கியே இட்டுச்செல்லும்.
ஏ.ஐ போன்ற அறிவியல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை மக்கள் விரோதமானதாகப் பார்க்க முடியாது. நாம் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு எதிராகச் சிந்திக்க முடியாது. மாறாக அவற்றை ஒரு கைப்பிடி அளவே ஆன கார்ப்பரேட் முதலாளித்துவக் கும்பல் தங்கள் லாப வெறியை முன்னிறுத்தி, மனித குலத்துக்கே விரோதமான முறையில் பயன்படுத்துவதைத்தான் நாம் அடையாளம் கண்டு முறியடிக்க வேண்டும்.
அறிவியல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியின் பலன்களை மனித சமூகத்தின் நல்வாழ்வுக்கும் முன்னேற்றத்திற்கும் பயன்படுத்துவதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். அதற்கான அரசியல் பொருளாதாரம் சமூக மாற்றங்களைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்.
இந்த ஆபத்தை உணர்ந்து ஐ.டி துறை ஊழியர்கள் தங்களை அமைப்பாக்கிக் கொண்டு நிறுவனத்தின் கொள்கைகளை எதிர்த்துப் போராடுவது ஒன்றே தீர்வாகும். மேலும் பிற போராடுகின்ற மக்கட் பிரிவுகளுடன் இணைந்து போராடுவதே தங்கள் போராட்டத்தின் வெற்றியை உறுதிப்படுத்தும் வழிமுறையாகும் என்பதை உணர வேண்டும்.
![]()
ஆதி
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











