15.05.2026

மாணவர் சங்கங்களை முடக்க நினைத்த நேபாள அரசு:
மாணவர் போராட்டத்தால் தற்காலிகத் தடை!

பத்திரிகைச் செய்தி

நேபாளத்தில் ஜென்சி தலைமுறை இளைஞர்களின் கோபம், அரசுக்கு எதிரான உணர்வு மற்றும் பல ஆண்டுகால அரசியல் நிலைத்தன்மையின்மையால் ஏற்பட்ட விரக்தி ஆகியவற்றின் அலை மீது சவாரி செய்து, 35 வயதான பாலேந்திர ஷா கடந்த மார்ச் 5, 2026 அன்று நடந்த தேர்தலில் வெற்றி பெற்று அந்நாட்டுப் பிரதமரானார். காத்மாண்டு நகர மேயராக இருந்த பாலேந்திர ஷா, ராப் பாடகராக இருந்து அரசியல்வாதியாக மாறியவர்.

நேபாளத்தின் பிரதமரானவுடன் அவரது தலைமையில் நடைபெற்ற முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், அரசியல் கட்சி சார்பு தலையீடுகளிலிருந்து கல்வித்துறையை விடுவிப்பது என்ற பெயரில் அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் பள்ளிகளில் உள்ள அரசியல் கட்சிகளின் மாணவர் சங்கங்களைக் கலைக்க முடிவு எடுக்கப்பட்டது. மேலும், அடுத்த 60 நாட்களுக்குள் கல்வி நிறுவனங்களிலிருந்து முழுமையாக இந்த அமைப்புகள் அகற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதற்குப் பதிலாக மாணவர்களின் உரிமைகளையும் உணர்வுகளையும் சரியாகப் பிரதிநிதித்துவப் படுத்துவதற்காக, ‘மாணவர் மன்றம்’ அல்லது ‘மாணவர் குரல்’ போன்ற அமைப்புகள் அடுத்த 90 நாட்களுக்குள் உருவாக்கப்படும் என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்தது. புதிய அரசு வெளியிட்டுள்ள “100 அம்ச ஆட்சி சீர்திருத்தத் திட்டத்தின்” (100-Point Governance Reform Agenda) ஒரு பகுதியாக இம்முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

நேபாள மாணவர்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் இந்நடவடிக்கை நேபாள கல்வித்துறையில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. நேபாள அரசின் இம்முடிவுக்கு அந்நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளின் மாணவர் அமைப்புகள் கடும் கண்டனங்களையும் எதிர்ப்புகளையும் தெரிவித்துள்ளன. இத்தடையை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

இதற்கிடையில், நேபாள உச்சநீதிமன்றம் மே 11, 2026 அன்று, மாணவர் அமைப்புகளைக் கலைக்கும் அரசின் திட்டத்திற்குத் தற்காலிகத் தடை விதித்து, இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

நேபாள அரசின் மாணவர் விரோத நடவடிக்கையை எதிர்த்து, தமது உரிமைகளுக்காகப் போராடும் நேபாள மாணவர்களுக்கு புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி தமது ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது.

மேலும் இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் மாணவர் சங்கத் தேர்தல் நடத்துவது என்ற மாணவர்களின் ஜனநாயக உரிமை மறுக்கப்படுகிறது. மாணவர் அமைப்புகள் சுதந்திரமாகச் செயல்படுவதற்கான சூழல் கல்லூரி நிர்வாகங்களாலும் அரசாலும் மறுக்கப்படுகிறது.

எனவே, தமிழ்நாட்டு மாணவர்கள் தங்களது ஜனநாயக உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்; அப்போராட்டத்திற்கு ஆசிரியர்கள், பேராசிரியர்கள், பெற்றோர்கள் அனைவரும் துணை நின்று மாணவர்களின் கோரிக்கைகளை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி வலியுறுத்துகிறது.


இவண்
தோழர் எழில் கருளன்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
நெல்லை.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க