நேபாளத்தில் 2023-ஆம் ஆண்டின் கட்டாய பதிவு செயல்முறைக்கு இணங்காத, தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பதிவு செய்யாத சமூக ஊடகத் தளங்களுக்கு தடைவிதிக்குமாறு அந்நாட்டு உச்சநீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து நேபாள அரசாங்கம் ஆகஸ்ட் 28-ஆம் தேதி முதல் ஏழு நாட்கள் பதிவுக்கு விண்ணப்பிக்க சமூக ஊடகத் தளங்களுக்கு அவகாசம் வழங்கியது.
டிக் டாக் (TikTok), வைபர் (Viber), விட்க் (Witk), நிம்பஸ் (Nimbuzz) மற்றும் போப்போ லைவ் (Poppo Live) ஆகிய தளங்கள் ஏற்கெனவே பட்டியலிடப்பட்டுள்ளன. டெலிகிராம் (Telegram) மற்றும் கிளோபல் டைரி (Global Diary) ஆகியவை விண்ணப்பித்து ஒப்புதலுக்கு காத்திருக்கின்றன.
இந்நிலையில், கடந்த செப்டம்பர் 5 அன்று பட்டியலிடப்பட்ட ஐந்து தளங்கள் மற்றும் விண்ணப்பித்த இரண்டு தளங்கள் தவிர மொத்தம் 26 தளங்கள் மீது நேபாள அரசு தடை உத்தரவை பிறப்பித்தது. இவற்றில், விண்ணப்பங்களை சமர்ப்பிக்காத, மெட்டாவின் (Meta) வாட்ஸ்-அப் (Whatsapp), ஃபேஸ்புக் (Facebook), இன்ஸ்டாகிராம் (Instagram) மற்றும் ஆல்ஃபபெட் (Alphapet), எக்ஸ் (X), ரெட்டிட் (Redit), லின்க்ட் இன் (Linkdin) உள்ளிட்ட உலகளாவிய, பெரும்பாலும் அமெரிக்க தளங்கள் தடை செய்யப்பட்டன.
இத்தடை உத்தரவை எதிர்த்து நேபாளம் முழுவதும் “ஜென் சி” (Gen Z) தலைமுறையினரின் போராட்டங்கள் நடந்து வருகின்றன. காத்மாண்டு, போகாரா, புட்வால், பைரஹாவா பரத்பூர், இட்டாஹரி மற்றும் டமாக் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இப்போராட்டங்கள் நடைபெற்றன.
இதுகுறித்து, நேபாளத்தின் முக்கிய எதிர்க்கட்சியான நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோவிய மையம்)-த்தின் தலைமை கொறடாவான ஹிட் ராஜ் பாண்டே, “இந்த முடிவு ஆட்சேபனைக்குரியது” என்றும், “சமூக ஊடகங்களை முடக்குவது நாட்டை சீர்குலைக்கும்” என்றும் எச்சரித்தார். மேலும், பதிவு செய்வதற்கு ஏற்ற சூழலை அரசாங்கம் தயார் செய்யத் தவறிவிட்டதாகவும், கருத்துச் சுதந்திரத்தைத் தடுப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
நேபாள தலைநகர் காத்மாண்டுவில் நேற்று (செப்டம்பர் 8), ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்ட நிலையிலும், போராட்டங்கள் அதிகரித்தன. குறிப்பாக, நாடாளுமன்றம் அமைந்துள்ள நியூ பனேஷ்வர் பகுதியிலும் போராட்டம் பரவியது.
இந்நிலையில், போராட்டக்காரர்கள் மீது போலீசு நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் 19 பேர் படுகொலை செய்யப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் 347 பேர் வரை காயமடைந்துள்ளனர். நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து சமூக ஊடகத் தளங்கள் மீதான தடையை நேபாள அரசு நீக்கியுள்ளது.
இப்போராட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்கள் பலரும் ஊழலுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி வந்திருந்தனர். டிக்டாக்கில் “வாரிசு குழந்தை” என்று பொருள்படும் “நெப்போ பேபி” (Neppo baby), “நெப்போ கிட்” (Neppo kid) என்ற வார்த்தைகள் ட்ரண்டில் உள்ளன. அதில் அரசியல்வாதிகளின் குழந்தைகளின் சொகுசு வாழ்க்கை குறித்த புகைப்படம் மற்றும் காணொளிகள் பதிவிடப்பட்டு வருகின்றன.
கடந்த சில மாதங்களுக்கு முன் நேபாளத்தில் மன்னராட்சியை மீண்டும் நிலைநாட்டக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போதும் போராட்டக்காரர்கள் ஊழலுக்கு எதிராக குரல் எழுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2006-ஆம் ஆண்டில் நேபாளத்தில் மன்னராட்சிக்கு எதிரான பேரெழுச்சிக்குப் பின்னர், அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல் நடத்தப்பட்டு, நேபாளம் கூட்டாட்சி குடியரசாகப் பிரகடனப்படுத்தப்பட்டு, மன்னராட்சி ஒழிக்கப்பட்டது.
ஆனால், அதைத் தொடர்ந்து நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட் மையம்), அடுத்தக் கட்ட மக்கள் ஜனநாயகத்துக்கான அரசியல் போராட்டங்களை நாடாளுமன்றத்துக்கு வெளியே முன்னெடுக்காமல், முதலாளித்துவ நாடாளுமன்ற வரம்புகளுக்குள் செயல்படத் தொடங்கியது முக்கியமான பின்னடைவாகும்.
படிக்க: வங்கதேச மாணவர் எழுச்சி: மாற்று கட்டமைப்பை நோக்கி முன்னேறுவோம்!
அதனைத் தொடர்ந்து முதலாளித்துவக் கட்டமைப்பில் தவிர்க்கவியலாமல் மேலோங்கும் நோயான ஊழல் பிரச்சினைகளையும், நெருக்கடிகளையும் பயன்படுத்திக்கொண்டு, நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சியை கொண்டு வருவதற்கு இந்திய ஆளும் வர்க்க பாசிச ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலும், ஏகாதிபத்தியங்களும் சதி வேலைகளை தொடர்ச்சியாக அரங்கேற்றி வருகின்றன. நேபாள ஆளும் கும்பலுக்கு எதிரான மக்கள் போராட்டங்களில் குளிர்காய்ந்து தங்களது நலனையும், நோக்கத்தையும் ஈடேற்றிக்கொள்ளத் துடித்துக் கொண்டிருக்கின்றன. இதனையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
உலகம் முழுக்கவே ஏகாதிபத்தியங்களும், பாசிசக் கும்பலும் ஊழல் பிரச்சினைகளை முன்னணிக்கு கொண்டுவந்து தங்களின் அதிகாரத்தை நிலைநாட்டிக்கொள்ள முனைவதைப் பார்த்து வருகிறோம்.
மக்கள் மீதான நேபாள அரசின் கொடூரமான அடக்குமுறைகள் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது, கண்டிக்கத்தக்கது. அதே சமயம், தற்போது நடைபெற்றுவரும் ஜென் சி தலைமுறையினரின் போராட்டத்தை இந்திய ஆளும் வர்க்கக் கும்பலும், ஏகாதிபத்தியங்களும் பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பிருப்பதையும் மறுக்க முடியாது. இதில் நேபாள மக்களும், ஜனநாயக சக்திகளும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தேவை உள்ளது.
நேபாளத்தின் இறையாண்மையைப் பாதுகாக்கின்ற, உண்மையான ஜனநாயகத்துக்கான மக்கள் போராட்டங்களை நாடாளுமன்றத்துக்கு வெளியே அங்குள்ள புரட்சிகர இயக்கங்களும், ஜனநாயக சக்திகளும் வளர்த்தெடுக்க வேண்டிய தேவையை இந்நிகழ்வுகள் நமக்கு தெளிவாக உணர்த்துகின்றன.
![]()
அய்யனார்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











