நேபாளத்தில் நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், பாலேந்திர ஷா தலைமையிலான ராஷ்ட்ரிய சுதந்திரக் கட்சி (RSP), மொத்தமுள்ள 275 இடங்களில் 182 இடங்களைக் கைப்பற்றித் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்துள்ளது. சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு இவ்வாறு தனிப்பெரும்பான்மையுடன் ஓர் ஆட்சி அமைக்கப்படுவது இதுவே முதல்முறை. அதிலும், ஊழல் எதிர்ப்பை முன்னிறுத்தி ஐந்தாண்டுகளுக்கு முன்னர்தான் ஆர்.எஸ்பின் எனும் இக்கட்சி புதிதாகத் தொடங்கப்பட்டது. ஆகையால், நேபாள அரசியல் வரலாற்றில் 2026 மார்ச் 5 அன்று நடைபெற்ற பொதுத்தேர்தல் ஒரு முக்கியமான திருப்புமுனையாக ஆளும் வர்க்க ஊடகங்களால் சித்தரிக்கப்படுகிறது.
பல தசாப்தங்களாக நேபாளத்தை மாறிமாறி ஆண்டுவந்த நேபாள காங்கிரஸ் (NC) 38 இடங்களையும், நேபாள கம்யூனிஸ்ட் ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (CPN-UML) 25 இடங்களையும், மாவோயிஸ்ட் மையம் 17 இடங்களையும் பெற்று படுதோல்வி அடைந்துள்ளன. நேபாள மக்களை வஞ்சித்து வந்த இப்பிழைப்புவாத அரசியல் கட்சிகளுக்கு மக்கள் மரண அடி கொடுத்துள்ளனர்.
குறிப்பாக, மன்னராட்சியை வீழ்த்தி அதிகாரத்திற்கு வந்த பிரசந்தா தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட் மையம்), மக்களுக்குத் துரோகமிழைத்து புரட்சியைக் கைவிட்டு பிழைப்புவாதத்தில் மூழ்கியது; பிற பிழைப்புவதக் கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டு நாடாளுமன்ற சீரழிவில் சிக்கியது. இதனால், நீண்டகாலமாக, நேபாளத்தில் நிலவிய அரசியல் நெருக்கடி தீர்க்கப்படாமல் போனது; பாதாளத்திற்குச் சென்று கொண்டிருந்த நாட்டின் பொருளாதார நிலைமை மேலும் மேலும் மோசமடைந்தது, வேலையின்மை தீவிரமடைந்தது. இத்துடன் ஊழல் மோசடிகளில் அனைத்து கட்சிகளும் அம்பலமாகி நாறத் தொடங்கின.
இந்நிலையில், கடந்த 2025 செப்டம்பர் மாதம், சமூக வலைத்தளங்கள் மீதான தடையை எதிர்த்து எழுந்த “ஜென்-சி” (Gen-Z) இளைஞர்களின் போராட்டம், வேலையின்மைக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிரான போராட்டமாக வளர்ந்தது. இப்போராட்டத்திற்கு எதிராக ஏவப்பட்ட அரசு வன்முறையில் 70-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கொல்லப்பட்டபோதும் போராட்டம் மிகப்பெரும் அளவில் மக்கள் ஆதரவைப் பெற்றது. அப்போராட்டத்தைக் கண்டு அஞ்சிய சி.பி.என்.-யு.எம்.எல். கட்சியின் கே.பி. சர்மா ஒலி பிரதமர் பதவியிலிருந்து விலகினார்.
நேபாளத்தில் பாரம்பரியமாக ஆண்டுவந்த கட்சிகள் மிகக் கேவலமாக அம்பலப்பட்டு, மக்களிடமிருந்து தனிமைப்பட்டுள்ள இத்தகைய சூழலில், மக்களின் குமுறலையும் கொந்தளிப்பையும் தமக்குச் சாதமாகப் பயன்படுத்தி, வழக்கம் போல, ஊழல் எதிர்ப்புகளை முன்னிறுத்தி ஆர்.எஸ்.பி கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது.

கவர்ச்சிகரமான திட்டங்கள் மூலமும், சில நிர்வாக ‘சீர்திருத்தங்கள்’ மூலமும் மக்களின் சீற்றத்தையும், குமுறலையும் தணித்து சாந்தப்படுத்தி மக்களின் போராட்ட உணர்விற்கு வடிகால் வெட்டுவதற்கான ஏற்பாடாகவே பாலேந்திர ஷா தலைமையிலான இந்த ஆட்சியைப் பார்க்க வேண்டியுள்ளது.
பாலேந்திர ஷா அறிவித்துள்ள 100-அம்ச நிர்வாகச் சீர்திருத்தம்; பொதுச் சேவைகளை டிஜிட்டல்மயமாக்குவது; தலித் மற்றும் நீண்டகாலமாக ஒடுக்கப்பட்ட சமூகங்களிடம் பொது மன்னிப்பு கோருவது போன்ற நடவடிக்கைகள் கவர்ச்சிவாத, கார்ப்பரேட்மயக் கொள்கைகள் அடிப்படையிலானதே. இக்கொள்கைகளின் மூலம், நேபாள சமூகத்தில் ஆழமாக வேரூன்றியுள்ள வர்க்க முரண்பாடுகளையோ, ஆதிக்கச் சாதிகளின் (காஸ்-ஆர்யா) ஒடுக்குமுறையையோ ஒருபோதும் தீர்க்க முடியாது.

மறுபுறம், இந்தப் ஜனரஞ்சக (populism) ஆர்.எஸ்.பி. அரசு, ‘நிர்வாகத் தூய்மை’ என்ற பெயரில் கல்வி நிறுவனங்களில் இயங்கி வரும் அனைத்து மாணவர் சங்கங்களையும் கலைக்க உத்தரவிட்டுள்ளது; அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் அரசு சார்ந்த பிற ஊழியர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அரசியல் கட்சிகளுடன் தொடர்பில் இருப்பதைத் தடை செய்துள்ளது. அதாவது, மக்களையும் இளைஞர்களையும் அரசியலிலிருந்து விலக்கி, அவர்கள் இனி போராட்டக் களத்திற்கு வரவிடாமல் தடுக்கும் கடுமையான ஒடுக்குமுறையாகும்.
மேலும், நேபாளம் தற்போது அமெரிக்க மற்றும் சீன ஏகாதிபத்தியங்களின் மேலாதிக்கப் போட்டியில் சிக்கித் தவிக்கிறது. சீனாவின் பட்டுப்பாதை (BRI) திட்டம் மற்றும் போக்ரா சர்வதேச விமான நிலையம் போன்ற ‘கடன் வலை’ திட்டங்களால் நேபாளத்தின் இறையாண்மை கேள்விக்குறியாகியுள்ளது. மறுபுறம், அமெரிக்காவின் பாசிச ட்ரம்ப் அரசு யூ.எஸ்.எய்ட் (USAID) நிதியுதவிகளையும் நிறுத்தி, நேபாளத்தைத் தனது இராணுவ-அரசியல் பிடிக்குள் கொண்டுவர மிரட்டி வருகிறது. இந்நிலையில், “வளர்ச்சி ராஜதந்திரம்” (Development diplomacy) என்ற ’அணிசேரா கொள்கை’யைப் பின்பற்றப் போவதாக அறிவித்துள்ளதன் மூலம் பாலேந்திர ஷா அரசு ஏகாதிபத்தியங்களின் வேட்டைக்காடாக நேபாளத்தை மாற்றப்போகிறது.
அதேபோல், பாலேந்திர ஷா பிரதமர் பதவியேற்ற பிறகு, முதலில் அவருக்கு வாழ்த்து தெரிவித்தது இந்தியப் பிரதமர் மோடி என்பது கவனிக்கத்தக்கது. ‘அகண்ட பாரத’ கனவை நிலைநாட்டுவதை நோக்கி நகரும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல், நேபாளத்தில் வீழ்த்தப்பட்ட இந்து மன்னராட்சியை மீண்டும் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. வி.எச்.பி., பஜ்ரங் தளம் போன்ற தனது காவி பயங்கரவாத அமைப்புகள் மூலம் மதவெறுப்பு அரசியலைத் தூண்டிவிட்டு, ராஷ்ட்ரிய பிரஜாதந்திரக் கட்சி (RPP) போன்ற பிற்போக்கு சக்திகளுக்குப் பின்புலமாக இந்தியா செயல்படுகிறது. இந்த ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத அமைப்புகள் ஊடுருவலைத் தடுக்கும் திராணி ஆர்.எஸ்.பி அரசிடம் இல்லை.
மொத்தத்தில், பாலேந்திர ஷா தலைமையிலான ஆர்.எஸ்.பி.யின் ஆட்சியானது, மக்களின் கொந்தளிப்பைத் தடுப்பதற்கான, ஜனரஞ்சக ஆட்சியாகும். இது ஆளும் வர்க்கத்தின் கொடூர முகத்தை மறைத்து, கவர்ச்சித் திட்டங்களையும் அடக்குமுறைகளையும் ஒருசேர ஏவி ஒடுக்குவதாக அமைந்துள்ளது. இவ்வாறு, தமது நோக்கங்களை நிறைவேற்றுவதற்கான கொள்ளைப்புற வழியைக் கண்டடைந்திருப்பதாக நேபாள ஆளும் வர்க்கம் மகிழ்ச்சி கொள்கிறது. எனினும், தமக்கு ஏற்பட்டுள்ள அரசியல், பொருளாதார நெருக்கடிகளை எந்தவகையிலும் ஆளும் வர்க்கத்தால் தீர்த்துக் கொள்ள முடியாது. மாறாக, அனைத்து ஜனநாயக முகமூடிகளையும் தூக்கிவீசிவிட்டு ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவு, மக்கள்மீது கொடூர அடக்குமுறைகளை ஏவுவதற்கான பாசிச ஆட்சியை நிலைநாட்டுவதற்கே வழிவகுக்கும். இதற்கேற்பவே, ஆர்.எஸ்.எஸ். ஊடுருவலும் நடந்தேறி வருகிறது.
எனவே, பாசிச ஆட்சி அரங்கேறுவதற்கு பாதையைச் செப்பனிட்டுக் கொடுக்கும் பாலேந்திர ஷாவின் ஆர்.எஸ்.பி. கட்சியின் ஜனரஞ்சக ஆட்சியைத் தோலுரித்து அம்பலப்படுத்துவது; உழைக்கும் மக்களின் உரிமைகளை நிலைநாட்டுவதற்கான மாற்று, அரசியல் பொருளாதாரத் திட்டத்தை முன்வைத்து, மக்கள் போராட்டங்களைக் கட்டியமைப்பது புரட்சிகர ஜனநாயக சக்திகளின் கடமையாகும்.
![]()
மதி
***
சுயவிமர்சனம் — திருத்த அறிவிப்பு:
இக்கட்டுரையில், நேபாளத்தில் புதிதாக அமைந்துள்ள பாலேந்திர ஷாவின் ஆட்சியை ஜனரஞ்சகவாத (பாப்புலிச) ஆட்சி என்று குறிப்பிடுவதற்கு பதிலாக “பாசிபிச ஆட்சி” என்று தவறாக குறிப்பிட்டிருந்தோம். வார்த்தை பயன்பாட்டில் ஏற்பட்ட இத்தவறு பாரிய பொருள் தவறை ஏற்படுத்தியுள்ளது என்பதை உணர்கிறோம்.
பாலேந்திர ஷாவின் ஆட்சியானது நேபாளின் இளைஞர்கள், மக்களின் எதிர்ப்பை தணிப்பதற்காக ஆளும் வர்க்கத்தால் முன்னிறுத்தப்பட்டிருந்தாலும், அது அமைதிவாதக் கொள்கைகளைப் பின்பற்றுகின்ற பாசிபிச ஆட்சியாக இல்லை. மாறாக, ஊழல் எதிர்ப்பு, கவர்ச்சிவாதத் திட்டங்களை முன்வைக்கும் ஜனரஞ்சக ஆட்சியாகவே இருக்கிறது. கட்டுரையிலும் இது ஒரு ஜனரஞ்சக ஆட்சிதான் என்பதற்கான அடிப்படைகளையே விளக்கியுள்ளோம்.
எனவே, பாலேந்திரா ஷாவின் ஜனரஞ்சக (பாப்புலிச) ஆட்சியை பாசிபிச ஆட்சி என்று குறிப்பிட்டிருந்தது பாரிய தவறாகும். இனி இத்தகைய தவறுகள் நேராமல் இருக்க உறுதியேற்கிறோம்.
இக்கட்டுரை இடம்பெற்றுள்ள மே மாத அச்சிதழ் ஏற்கெனவே வெளிவந்துவிட்டதால், அதில் இத்தவறைத் திருத்த இயலவில்லை. இணையதளப் பதிப்பில் மட்டும் தற்போதைக்கு சரிசெய்துள்ளோம்.
— ஆசிரியர் குழு,
புதிய ஜனநாயகம்.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











