நவீனத் தொழில்நுட்பம் மனித குலத்திற்குப் பல நன்மைகளைத் தந்தாலும், அதன் மறுபக்கம் ஆணாதிக்க வன்முறையின் புகலிடமாக மாறியுள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆண்கள் சில இரகசிய இணையக் குழுக்களை உருவாக்கி, தங்கள் மனைவிகளுக்குத் தெரியாமல் மயக்க மருந்துகளை அளித்து அவர்களை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர்; மேலும், அந்த வக்கிரங்களை காணொளியாகப் பதிவு செய்து, பிறரையும் அவ்வாறு செய்யத் தூண்டியுள்ளனர். இது ஏதோ ஒரு தனிப்பட்ட குற்றம் அல்ல, நிறுவனமயமாக்கப்பட்ட “பாலியல் வன்புணர்ச்சி மைய”மாக (Rape Academy) செயல்பட்டு வருகிறது. சி.என்.என். (CNN) ஊடகம் மேற்கொண்ட புலனாய்வு இதனை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது.
இருண்ட இணையத்தின் நிழல் உலகங்கள்
2024-ஆம் ஆண்டில் தெற்கு பிரான்சில் நடந்த டொமினிக் பெலிகாட் வழக்கு, இணையம் வழிநடத்தும் இந்த வன்கொடுமையை உலகிற்கு வெளிச்சமிட்டுக் காட்டியது. “அவளுக்குத் தெரியாமல்” (Without Her Knowledge) என்ற சாட்-ரூம் (Chat room)-இல்தான், பெலிகாட் தனது மனைவி ஜிசெலை வன்கொடுமை செய்ய பிற ஆண்களைத் தூண்டியுள்ளார். ஜிசெல் 70 ஆண்களால் 200-க்கு அதிகமான முறை வன்கொடுமை செய்யப்பட்டார்.
சி.என்.என்-இன் பல மாத கால புலனாய்வின் விளைவாக “கோகோ” (Coco) இணையதளம் மூடப்பட்ட பிறகும், இன்னும் “மதர்லெஸ்” (Motherless.com) போன்ற பல தளங்கள் மூலம் இந்த வன்முறை தொடர்ந்து கொண்டே போகிறது. அங்குள்ள 20,000-க்கும் மேற்பட்ட (Sleep content) காணொளிகள், “பாஸ்ட்-அவுட்” (#passedout) மற்றும் “ஐ-செக்” #eyecheck போன்ற குறியீடுகள் மூலம் வகைப்படுத்தப்படுகின்றன. “ஐ-செக்” போன்ற குறியீடுகள் மூலம், ஒரு பெண் ஆழ்ந்த உறக்கத்தில் அல்லது மருந்தின் மயக்கத்தில் இருப்பதை உறுதிசெய்து, அவர்களை பாலியல் வன்கொடுமை செய்து அந்த வன்முறையை ஆயிரக்கணக்கானோர் ‘இரசித்துள்ளனர்’.
ஆபாசத் தளங்களின் பரிணாம வளர்ச்சி
தொடக்கத்தில் இரகசியப் புத்தகங்களாகவும் புகைப்படங்களாகவும் இருந்த “ஆபாச உள்ளடக்கங்கள்” (Pornography) பின்னர் திரைப்படங்களாக மிகப்பெரிய சந்தையாக வளர்ந்தது. இதனைத் தொடர்ந்து, தாய்-மகன், தந்தை-மகள், சகோதர-சகோதரிகளுக்கு இடையிலான “லைவ் செக்ஸ்” (Live sex) என இந்த வக்கிரம் உச்சத்தைத் தொட்டது. இவையெல்லாம், தன் கண்முன்னே இருக்கும் பெண்ணை கண்ணியமாகப் பார்க்க முடியாத இழிநிலைக்குத் தள்ளியது.
இன்று, இந்த வக்கிரங்கள் கைப்பேசி வழியாக வீட்டின் படுக்கையறைக்கே ஊடுருவியுள்ளன. ஆண்கள் தாங்கள் திரையில் காணும் வக்கிரங்களை நிஜ வாழ்க்கையில் ‘பரிசோதிக்கின்ற’, அதற்கு தங்களது மனைவிகளையே பலியாக்குகின்ற பேரவலம் உருவாகியுள்ளது. ஆபாசப் படங்கள் பெண்களை உயிரற்ற ஜடங்களாகச் சித்தரிப்பதால், நிஜ வாழ்க்கையிலும் அவர்களைத் தாங்கள் பரிசோதனை செய்யும் “உயிருள்ள பொம்மைகளாகவே” இத்தகைய ஆண்கள் கருதுகின்றனர். இது ஒவ்வொரு இல்லத்திலும் ஒரு “மினி-எப்ஸ்டீனை” (Epstein in every household) உருவாக்குவதற்குச் சமமாகும்.
வன்முறைப் பள்ளிகள்:
பெலிகாட் வழக்கில் குற்றவாளிகளை ஆய்வு செய்த உளவியலாளர் அன்னாபெல் மாண்டேன் (Annabelle Montagne) வழங்கிய அறிக்கை அதிர்ச்சியூட்டுகிறது. இத்தகைய தளங்கள் ஆண்களுக்குள் ஒருவித ‘சகோதரத்துவத்தை’ (Brotherhood) உருவாக்குகின்றன என்று அவர் குறிப்பிடுகிறார். பங்கேற்பாளர்கள் தங்களுக்குள் பிணைப்புகளை உருவாக்கி, ஒருவருக்கொருவர் வன்முறைக்கான யோசனைகளை வழங்குவதன் மூலம், சட்டத்தின் பிடியில் சிக்காமல் எப்படித் தப்பிக்கலாம் என்பதற்கான வழிகளையும் பகிர்ந்து, அவர்களின் சுயமோக (Narcissistic) தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கின்றனர்.
பிரெஞ்சு நாடாளுமன்ற உறுப்பினர் சாண்ட்ரின் ஜோசோ இதனை “வன்முறைப் பள்ளிகள்” (Schools of violence) என்று அழைக்கிறார். “இங்கு ஒரு பாலியல் வேட்டைக்காரனாக மாறுவதற்குத் தேவையான அனைத்து ‘பாடங்களும்’ போதிக்கப்படுகின்றன. இது தனிநபர்களின் வக்கிரத்தைச் சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு கூட்டுச் செயலாக மாற்றுகிறது. ஆபாசத் தளங்கள் லாபத்திற்காக வன்முறையை இயல்பாக்குகின்றன” என்கிறார்.
மருந்து விற்பனை மற்றும் மயக்கமடையச் செய்யும் முறை
இந்தக் குழுக்களில் உள்ள ஆண்கள் தங்கள் மனைவிகளுக்கு மயக்க மருந்தளிக்கப் பயன்படுத்தும் முறைகள் பற்றி சி.என்.என். ஊடகத்திற்குக் கிடைத்த தகவலின்படி, சுவையற்ற மற்றும் மணமற்ற “தூக்கத் திரவங்கள்” (Sleeping Liquids) டெலிகிராம் போன்ற தளங்கள் மூலம் பகிரங்கமாக விற்கப்படுகின்றன. ஸ்பெயின் போன்ற இடங்களிலிருந்து அனுப்பப்படும் ஒரு பாட்டில் திரவத்தின் விலை சுமார் 150 யூரோக்கள் (இந்திய மதிப்பில் ரூ.13,000-க்கும் மேல்) ஆகும்.
“உன் மனைவிக்கு எதுவும் தெரியாது; எதுவும் ஞாபகம் இருக்காது” என்பதுதான் இவர்களின் முக்கிய விற்பனை வாசகம். கணவர்கள் தங்கள் மனைவியின் தேநீர், குளிர்பானம் அல்லது உணவில் இந்த மருந்துகளைக் கலந்து அவர்களைச் சுயநினைவற்ற நிலைக்குக் கொண்டு செல்கின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தங்களுக்கு என்ன நடந்தது என்பதே தெரியாமல் போகிறது. சில பயனர்கள் நேரடி ஒளிபரப்பு (Livestream) மூலம் இந்த வன்கொடுமைகளை 20 டாலருக்கு விற்கிறார்கள் என்ற செய்தி நம் நெஞ்சைப் பிளக்கிறது.
பாதிக்கப்பட்ட பெண்களின் வார்த்தைகள் இந்த வன்முறையின் ஆழத்தை விளக்குகின்றன:
ஜோ வாட்ஸ் என்ற பெண், தினமும் தூங்கச் செல்வதற்கு முன்னர் தனது கணவனால் தூக்க மருந்து கலந்த தேநீர் கொடுக்கப்பட்டு பல ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு வந்துள்ளார். “நமக்குப் பின்னால் யார் வருகிறார்கள், தெருவில் யார் நடந்து செல்கிறார்கள் அல்லது முகநூலில் யார் நம்மை நண்பராகச் சேர்க்கிறார்கள் என்பதைப் பற்றிக்கூட நாம் கவலைப்படுகிறோம். ஆனால், நமக்கு அருகில் படுக்கிறவர்கள் (கணவன்) பற்றி நாம் கவலைப்படுவதில்லை” என்று கூறியிருப்பது அவரது வலியின் ஆழத்தை உணர்த்துகிறது.
அமண்டா ஸ்டான்ஹோப் என்ற பெண்மணி, பல ஆண்டுகளாக இரவில் தனது கணவனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு வந்துள்ளார். காலையில் எழுந்து பார்க்கும் பொழுது தனது உடலில் காயங்கள் ஏற்பட்டிருப்பதையும் தனது ஆடை மாற்றப்பட்டிருப்பதையும் கண்டு சந்தேகமடைந்து கேட்கும் போது, “நீ கனவு காண்கிறாய்” என்றும் “நீ பைத்தியம்” என்றும் கூறப்பட்டதுடன் உளவியல் மருத்துவரிடமும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். தான் வன்கொடுமை செய்யப்பட்டதை அறிந்த போது தன் உலகமே சிதைந்து போனதாக உணர்ந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதைப்போல், வாலண்டினா என்ற பெண் தனது கணவனால் எடுக்கப்பட்ட ஆபாச காணொளிகளைப் பார்த்த பிறகுதான் தனக்கு பாலியல் வன்கொடுமை நடந்திருப்பதை அறிந்துள்ளார்.
இவர்களின் அனுபவங்கள் ஒரு பொதுவான உண்மையை உணர்த்துகிறது. இந்த உண்மை தங்களுக்குத் தெரிய வந்து பல ஆண்டுகள் ஆனாலும் கூட இப்பெண்களால் இந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடிவதில்லை. பாலியல் வன்முறை என்பது உடலோடு முடிந்துவிடுவதில்லை; அது அவர்களின் மனதில் அவர்களின் இருத்தலையே (Existence) முற்றிலுமாகக் கேள்விக்குறியாக்குவதாக அமைகிறது. அது அவர்களின் உடலில் மட்டுமல்லாது, மனதின் ஆழமான அடுக்குகளிலும் ஆறாத வாழ்நாள் வடுவாகப் பதிகிறது.
பெண்கள் அந்நியர்களிடமிருந்து மட்டுமல்ல, ஆணாதிக்கச் சமூகம் தங்களுக்குப் பாதுகாப்பான இடம் என்று போதிக்கும் “திருமண உறவிற்குள்ளேயே” மிகப்பெரிய ஆபத்தில் உள்ளனர். முதலாளித்துவத்தின் லாப வெறியும் ஆணாதிக்கத்தின் மேலாதிக்கச் சிந்தனையும் இணையும்போது, ஒரு பெண்ணின் பாதுகாப்பு அவளது சொந்த வீட்டிற்குள்ளேயே கேள்விக்குறியாகிறது.
இந்த கலாச்சாரம் இந்திய ஆணாதிக்க பார்ப்பனியச் சமூகத்திற்குள் நுழையும்போது அதன் தாக்கம் காட்டுமிராண்டித்தனமாகவும் இன்னும் பேரழிவை ஏற்படுத்துவதாகவும் அமையும். இந்தியாவைப் பொறுத்தவரை, “திருமணத்திற்குள்ளான பாலியல் வன்கொடுமை” (Marital Rape) என்பது இன்றளவும் குற்றம் என்று சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படாதது மிகப்பெரிய சாபக்கேடாகும். இந்தியத் தண்டனைச் சட்டத்தின் (IPC, BNS) படி, கணவன் தனது மனைவியின் விருப்பமின்றி பாலியல் வன்முறையில் ஈடுபடுவது குற்றமாகாது. இது “ரேப் அகாடமி” போன்ற தளங்களுக்கு ஒரு சட்டப்பூர்வமான பாதுகாப்பு அரணாக அமையும்.
மேலும், “பாலியல் வன்கொடுமை அகாடமி” என்பது ஏதோ தனிப்பட்ட சில ஆண்களின் மனநோய் அல்ல; அது ஒரு சிதைந்த சமூக அமைப்பின் அறிகுறி. இந்த வன்முறைச் சுழற்சியை உடைக்க வேண்டுமானால்: பெண்களைப் பண்டமாக்கும் முதலாளித்துவ நுகர்வுப் பண்பாடு வேரறுக்கப்பட வேண்டும்; திருமணத்திற்குள்ளான பாலியல் வன்கொடுமையை உடனடியாகக் குற்றமாக்க வேண்டும்; பாலியல் கல்வி என்பது வெறும் உடற்கூறியல் சார்ந்து இல்லாமல், சம்மதம் (Consent) மற்றும் சமத்துவம் (Equality) சார்ந்து போதிக்கப்பட வேண்டும். “வெட்கம் என்பது பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அல்ல, குற்றவாளிக்குத்தான் இருக்க வேண்டும்” என்ற பாதிக்கப்பட்ட பெண் ஜிசெல் பெலிகாட்டின் குரல், எல்லோர் மனதிலும் ஒலிக்க வேண்டும்.
முக்கியமாக, ஜெஃப்ரி எப்ஸ்டீன் போன்றவர்கள் பணபலத்தால் செய்ததை, இன்று சராசரி ஆண்கள் இணையத்தின் துணையோடு செய்து கொண்டிருக்கிறார்கள். இது பெண்களை நலிவுற்ற பிரிவினராக இறுத்தி வைத்திருக்கும் முதலாளித்துவ – ஆணாதிக்கக் கட்டமைப்பின் உச்சக்கட்டமாகும். அனைத்தையும் லாபமாகவே மாற்றத் துடிக்கும் முதலாளித்துவம், பெண்ணின் உடலையும் ஒரு நுகர்வுப் பொருளாக மாற்றியுள்ள நிலையில், அந்த உடலைச் சிதைப்பது ஒரு லாபகரமான வணிகமாகவும் மாறியுள்ளது. ஆகவே, பெண்ணின் உடலைச் சொத்தாகக் கருதும் ஆணாதிக்கச் சட்டங்களும் அதைச் சந்தைப் பொருளாக்கும் முதலாளித்துவமும் ஒழியாதவரை, இந்த “ரேப் அகாடமிகள்” வெவ்வேறு வடிவங்களில் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.
![]()
அஜிதா
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











