Sunday, August 3, 2025
முகப்பு பதிவு பக்கம் 338

மே 22 : ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளுக்கு தமிழகம் முழுவதும் அஞ்சலி !

மே – 22 : ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராளிகளின் முதலாம் ஆண்டு நினைவு நாள் !

ந்த நாளில் தங்கள் மண்ணைக் காக்க உயிர் நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தக்கூட முடியாது என்ற நிலைதான் தமிழகத்தில் உள்ளது.

பல இடங்களில் மக்கள் அதிகாரம் அமைப்புத் தோழர்கள் தடுப்புக் காவல் என கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசு தோழர்களை நள்ளிரவில் கைது செய்து தனது அராஜகத்தை நிகழ்த்தியுள்ளது. பல இடங்களில் மக்கள் அதிகாரம் நடத்தவிருந்த நினைவேந்தல் நிகழ்ச்சிகளை போலீசு தடை செய்துள்ளது.

ஆனால் இந்த தடைகளைத் தாண்டி பல்வேறு பகுதிகளில் மக்கள் அதிகாரம் தோழர்கள் ஆர்ப்பாட்டம் – போராட்டங்களை நடத்தியுள்ளனர். அவற்றின் தொகுப்பு.

***

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காலை 11:00 மணிக்கு மக்கள் அதிகாரம் சார்பில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அங்கு தோழர்கள் திரளுவதற்கு முன்பே போலீசு குவிந்துவிட்டது. அதுமட்டுமல்லாது கைது செய்து அழைத்துப் போவதற்காக வாகனங்களையும் தயார் நிலையில் வைத்திருந்தது.

இந்நிலையில் சரியாக 11:00 மணிக்கு மக்கள் அதிகாரம் தோழர்கள் ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளின் படங்களை ஏந்தி; முழக்கமிட்டவாறு ஆர்ப்பாட்டத்தை துவங்கினர். அதைத் தொடர்ந்து தோழர் வெற்றிவேல் செழியன் ஊடகங்களுக்கு பேட்டியளிததார்.

அதன் பின் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து அழைத்துச் சென்றது போலீசு.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள், குழந்தைகள், மாணவர் – இளைஞர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
சென்னை.

***

விருத்தாசலத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிரான போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு, மக்கள் அதிகாரம் அலுவலகத்தில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் :
மக்கள் அதிகாரம்
விருத்தாசலம் வட்டாரம்
9791286994

***

டலூரில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு, கடலூர் அனைத்து பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

சேத்தியாத்தோப்பு
தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத் தியாகிகளின் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகே உள்ள பெரிய குப்பம் கிராமத்தில் நடைபெற்றது. இதில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியை சார்ந்த தோழர் மணிகண்டன் தலைமையில் நடந்தது. இதில் விசிக வை சார்ந்த ரஜினிவளவன், காங்கிரஸ் கட்சியை சார்ந்த மாதவர், சாரங்கபாணி ஆகியோரும் இறுதியாக தோழர் மணியரசன் (மாவட்ட செயலாளர், புமாஇமு) ஆகியோர் கண்டன உரையாற்றினார்.

இதில் 1) கொலைகார நிறுவனமான ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனத்தை அகற்ற தனிசட்டம் இயற்று (2) படுகொலைக்குப் காரணமான போலீசாருக்கு கொலை குற்றத்தில் தண்டனை வழங்கு (3) ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளுக்கு நினைவிடம் அமை! என்ற மூன்று கோரிக்கையை வலியுறுத்தியும் வேதாந்தா குழுமத்திற்கு பிஜேபி மோடி அரசு தடை விதிக்காமல் கடலூர், விழுப்புரம், புதுச்சேரி, நாகை மாவட்டங்களில் விவசாய நிலங்களில் திறந்த வெளியில் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி அளித்துள்ளது. இதனால் இலட்சக்கணக்கான விவசாயிகள், தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பறிபோகும் என்ற நிலைமை உருவாகும் என்பதை கண்டித்தும் பேசப்பட்டது. மேலும் நம் மண்ணை, காற்றை, நீரை பாதுகாக்க ஸ்டெர்லைட்டை போன்ற வீரசெறிந்த போராட்டத்தை நடத்த வேண்டும் என்று கிராம மக்கள் சார்பாக அறைகூவல் விடப்பட்டது.

தகவல் :
மக்கள் அதிகாரம்
கடலூர்.

***

துரையில் பெரியார் நிலைம் அருகில் உள்ள கட்டபொம்மன் சிலையருகில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் “ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக அகற்று ! படுகொலை செய்த போலீசாரை கைது செய் ! தியாகிகளுக்கு நினைவிடம் அமைத்துக் கொடு !” ஆகிய முழக்கங்களுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை போலீசு கைது செய்தது. கைது செய்யப்பட்ட 62 பேரில் மூன்று பேர் பெண்கள் ஆவர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்
மதுரை.

***

டுமலை வட்டம், ஆண்டியூரில் மே-22 தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு மக்கள் அதிகாரம் சார்பாக, அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடத்தப்பட்டது. இதில் அப்பகுதி மக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்
உடுமலை.

***

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு, மண்ணை காக்கும் போராட்டத்தில் 14 பேர் துப்பாக்கி சூட்டில் இறந்து தியாகி ஆனார்கள். இந்த நிகழ்வின் முதல் வருட நினைவை குறிக்கும் வகையில்;

காலை 10.00 மணிக்கு திருவாரூர் மாவட்டத்தில்; திருவாரூர் புதிய ரயில்வே நிலையம் வாயிலில் தியாகிகளின் படங்களை வைத்து நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் அதிகாரத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர். தங்கசண்முக சுந்தரம் தலைமை தாங்கினார்.

இந்த நினைவஞ்சலி நிகழ்ச்சியில் :

  • தோழர் ஜி.வரதராஜன். மாற்றத்திற்கான மக்கள் கழக அமைப்பாளர்
  • தோழர் எஸ்.டி.ஜெயராமன். B.S.P. பொருப்பாளர்.
  • தோழர் சீமா.மகேந்திரன். விடுதலை சிறுத்தை கட்சியின் பொருப்பாளர்.
  • தோழர் கா.கோ.கார்த்திக். மக்கள் சனநாயக குடியரசு கட்சி.
  • திரு எஸ்.ரஜினிகாந்த். தமிழக வாழ்வுரிமை கட்சி ஒன்றியச் செயலாளர்.
  • தோழர் கே.ஆர்.சிவா . D.Y.F.I.
  • தோழர் ஜே. வானதீபன். D.Y.F.I.
  • தோழர் தாஜீதீன். வி.சி.க வழக்கறிஞர்.
  • தோழர் அ.லூர்துசாமி. அம்பேத்கார், பெரியார் மார்க்ஸ் படிப்பு வட்டம்.
  • தோழர் கோ.வேதராஜ். 108 தொழிலாளர் சங்கம்.
  • திரு ஆர்.ரமேஷ். நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம்.
  • தோழர் தா.கலைவாணன். வி.சி.க.
  • திரு சுதாகர். தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட துணைச் செயலாளர்.

ஆகியோர் கலந்து கொண்டார்கள். இதே போன்று குளிக்கரை கடை வீதியிலும், ஆணை தென்பாதியிலும், மக்கள் அதிகாரம் ஏற்பாட்டில் அனைத்து கட்சியினர் கலந்து கொண்ட அஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருவாரூர்.
தொடர்புக்கு : 82207 16242.

***

திருச்சியில், மே 22 ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட தியாகிகளுக்கு மக்கள் அதிகாரம் சார்பாக திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில்  நினைவஞ்சலி  மற்றும்   தடையை மீறி ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.

தூத்துகுடி நச்சு ஆலை  ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு நினைவஞ்சலி  நடத்த சென்னை, மதுரையில்  காவல்துறை அனுமதி மறுத்ததை அடுத்து திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் மக்கள் அதிகாரத்தின் சார்பாக திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் லெ.செழியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தபட்டது. தோழமை அமைப்பான ம.க.இ.க தோழர் ம. ஜீவா, தோழர் கோவன் மற்றும் விவசாய சங்கத் தலைவர் சின்னதுரை ஆகியோர் கலந்துகொண்டனர். பிற கட்சியினர், பொதுமக்களைத் திரட்டி தடையை மீறி பெண்கள், சிறுவர்கள், தோழர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்நிகழ்வை தடுக்கவும் முடியாமல் கைது செய்யவும் முடியாமல் காவல்துறை சிறிது நேரம் தவித்தது.

ஆயிரக்கனக்கான மக்கள் மத்தியில் நாம் தியாகிகளுக்கு ஒரு நிமிடம்  மௌன அஞ்சலி செலுத்த பட்டது,அதை அடுத்து ஜாலியன் வாலாபாக் படுகொலையில் உயிர்நீத்த தியாகிகளுக்கு நினைவிடம் அமைத்தது போல் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்ட தியாகிகளுக்கும் நினைவிடம் அமைக்க வேண்டும், சுட்டுக் கொன்ற போலீசைக் கொலை வழக்கில் தூக்கிலிட வேண்டும்; ஸ்டெர்லைட் நச்சு ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கண்டன முழக்கம்  எழுப்பபட்டது. இதனை தொடர்ந்து முன்னணித் தோழர்களை காவல்துறை கைது செய்து இரண்டு வேனில் கொண்டு சென்றது. திருச்சியின் பிரதான பேருந்து நிலயைத்தில் தோழர்கள் நடத்திய போராட்டத்தை ஆதரித்தும் பிரசுரங்களை மக்கள் தானாக பெற்று சென்றனர்.

மேலும் மக்கள் அதிகாரம் அமைப்பு செயல்படும் பகுதியிலும் ஸ்டெர்லைட் மூட வலியுறுத்தி தூத்துக்குடி போராட்ட தியாகிகளுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. கல்லாங்காடு,காஜாப்பேட்டை ,மாரனேரி ,லால்குடி  பகுதியில் மக்கள் மத்தியில் பிரசுரம் கொடுத்து ,பகுதியில் பிளக்ஸ் பேனர் வைத்து பொதுமக்கள் மற்றும் தோழர்கள் உணர்வுப்பூர்வமாக கலந்து கொண்டு மலர்தூவி , மெழுகுவர்த்தி ஏந்தி நினைவஞ்சலி செலுத்தினர்.

தகவல்:
மக்கள் அதிகாரம்,
திருச்சி.

***

தூத்துக்குடியில் மண்ணைக் காக்க உயிர் ஈந்த தியாகிகளின் வீடுகளுக்கு சென்று வழக்கறிஞர்கள் மற்றும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

புனித சகாய மாதா ஆலயத்தில், ஸ்னோலின் பெயரில் அமைக்கப்பட் அரங்கில் அஞ்சலி செலுத்தும் வழக்கறிஞர்கள் :

 

( படங்களை பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

ஸ்டெர்லைட் எதிப்புப் போராட்டத்தில் உயிர்நீத்த கிளஸ்டன் அவர்களின் கல்லறையில் வீரவணக்கம் செலுத்தும் வழக்கறிஞர்கள் :

ஸ்டெர்லைட் எதிப்புப் போராட்டத்தில் உயிர்நீத்த ஜான்சி அவர்களின் கல்லறையில் வீரவணக்கம் செலுத்தும் வழக்கறிஞர்கள் :

ஸ்டெர்லைட் எதிப்புப் போராட்டத்தில் உயிர்நீத்த மணிராஜ் அவர்களின் வீட்டிற்கு வழக்கறிஞர்கள் சென்று அஞ்சலி செலுத்தினர்:

மணிராஜ்

ஸ்டெர்லைட் எதிப்புப் போராட்டத்தில் உயிர்நீத்த கார்த்திக் அவர்களின் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தும் வழக்கறிஞர்கள் :

கார்த்திக்

ஸ்டெர்லைட் எதிப்புப் போராட்டத்தில் உயிர்நீத்த ரஞ்சித் அவர்களின் வீட்டிற்கு வழக்கறிஞர்கள் அஞ்சலி செலுத்த சென்றபோது, அவரது இழப்பை தாங்காத அவரது தாயார் புகைப்படத்தையும்; அவர் இறந்த மே 22-ஐ சுட்டும் நாள்காட்டியையும் திருப்பு வைத்துள்ளார். மேலும் காலையில் இருந்து தொடர்ந்து அழுது மயக்க நிலைக்கு சென்றுள்ளார் ரஞ்சித்தின் தாயார்.

திருநெல்வேலியிலும் வழக்கறிஞர்கள் தூத்துக்குடி தியாகிகளின் நினைவை நெஞ்சிலேந்தும் விதமாக அஞ்சலி நிகழ்வை ஏற்பாடு செய்து நடத்தினர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் : 
ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு,
தூத்துக்குடி.

பெட்டி – கிரெளன்ட் : இவர்களில் புள்ளியியலைக் கண்டுபிடித்தது யார் ? | பொருளாதாரம் கற்போம் – 19

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் : பாகம் 19

பெட்டி – கிரெளன்ட் : இவர்களில் புள்ளியியலைக் கண்டுபிடித்தது யார் ?
அ.அனிக்கின்

பெட்டி பிற்காலத்தில் பிரதானமாக மக்கள் தொகை, அதன் வளர்ச்சி, பகிர்ந்தளிப்பு, வேலைவாய்ப்பு ஆகியவற்றைப் பற்றியே எழுதினார். அவரும் அவருடைய நண்பர் ஜான் கிரெளன்ட்டும் மக்கள் தொகையின் புள்ளியியலை நிறுவியவர்கள் என்ற கௌரவத்தைப் பகிர்ந்து கொள்கின்றனர். இந்த முன்னோடிகளின் எளிமையான முயற்சிகளிலிருந்து தான் இந்த விஞ்ஞானத்தின் வன்மையான நவீன நுட்பங்கள் வளர்ச்சியடைந்தன.

ஒவ்வொரு விஞ்ஞானத்திலும் ஏதாவதொன்றை முதலில் கண்டுபிடித்தது யார், அவருடைய முன்னுரிமை என்ன என்ற விவாதங்கள் இருக்கின்றன. சில சமயங்களில் இந்த விவாதங்கள் பயனற்றவையாகவும் அந்த விஞ்ஞானத்துக்குக் கேடு விளைவிப்பனவாகவும் இருக்கின்றன. சில சமயங்களில் இவை அந்த விஞ்ஞானத்தின் வரலாற்றைத் தெளிவுபடுத்துபவையாகவும் அதன் காரணமாகப் பயனுள்ளவையாகவும் இருக்கின்றன. புள்ளியியலின் வரலாற்றில் இப்படிப்பட்ட ஒரு விவாதம் “பெட்டி-கிரௌன்ட் பிரச்சினையின்” வடிவத்தில் ஏற்பட்டது. அந்த விவாதத்தின் சுருக்கம் கீழே தரப்படுகிறது.

ஜான் கிரெளன்ட்

1662-ம் வருடத்தில் லண்டனில் மரணச் சட்டத்தைப் பற்றிய… இயற்கை மற்றும் அரசியல் கருத்துக்கள்(1) என்ற தலைப்பில் ஒரு சிறு பிரசுரம் வெளிவந்தது . ஜான் கிரெளன்ட் என்பவர் அதை எழுதியிருந்தார். அதன் தலைப்பு வினோதமாக, இருளடர்ந்ததாக இருந்தாலும் அந்தப் பிரசுரத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது. சில வருடங்களுக்குள்ளாகவே ஐந்து பதிப்புகள் வெளியிடப்பட்டன; இரண்டாவது பதிப்பு முதல் வருடத்திலேயே வெளிவந்தது. அந்தப் பிரசுரத்தைப் பற்றி அரசரும் அக்கறை காட்டினார்; அவருடைய விருப்பத்தின் பேரில் புதிதாக ஏற்படுத்தப்பட்ட இராயல் சொஸைட்டியில் கிரௌன்ட் உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.

இந்தப் பிரசுரத்தில் மக்கள் இயல்பாகவே அக்கறை கொண்ட முக்கியமான பிரச்சினைகளைப் பற்றி அன்றைக்குக் கிடைத்த குறைவான புள்ளி விவரங்களை ஆதாரமாகக் கொண்டு மதிநுட்பத்தோடு ஆராயப்பட்டிருந்தது. பிறப்பு, இறப்பு வீதங்கள், ஆண்கள் பெண்களுக்கிடையே உள்ள வீதப் பொருத்தம், சராசரியாக உயிரோடிருக்கும் வருடங்கள், மக்கள் தொகை இடம் பெயர்தல், மரணத்துக்கு முக்கியமான காரணங்கள் ஆகியவற்றைப் பற்றி இந்தப் பிரசுரத்தில் எழுதப்பட்டிருந்தது.

அவர் புள்ளியியலின் மிக முக்கியமான கோட்பாட்டை நோக்கி முன்னேறுவதற்குரிய முதல் முயற்சிகளை பயந்துகொண்டே செய்தார். தனித்தனியான பொருளாதார நிகழ்வுகளைப் பற்றி – அவை ஒவ்வொன்றும் தற்செயலாகவே நடைபெறுகின்றன – போதுமான அளவுக்கு அதிகமான புள்ளி விவரங்களைச் சேகரித்துக் கொண்டு அவற்றை ஆராய்ந்தால், அவை பொது முறையில் அதிகக் கறாரான, முறையான விதிகளுக்கு உட்பட்டவை என்று அறிகிறோம்.

ஒவ்வொரு தனி நபரின் பிறப்பும் இறப்பும் தற்செயலானதே; ஆனால் ஒரு குறிப்பிட்ட நாட்டில் (அல்லது பிரதேசத்தில், பெரிய நகரத்தில்) பிறப்பு, இறப்பு விகிதம் குறிப்பிடத்தக்க வகையில் திட்டவட்டமானதாக இருக்கிறது; மேலும் அது மெதுவாகவே மாறுகிறது. அந்த மாற்றங்கள் ஏற்பட்டது ஏன் என்பதையும் விஞ்ஞான ரீதியாக விளக்க முடியும்; சில சமயங்களில் அதை முன் கூட்டியே சொல்ல முடியும்.

இதற்கு அடுத்து வந்த 18-ம் நூற்றாண்டில் மாபெரும் கணித மேதைகள் நிகழக் கூடியவை பற்றிய தங்களுடைய தத்துவத்தின் மூலம் புள்ளியியலுக்குக் கறாரான, கணித அடிப்படையைக் கொடுத்தனர். ஆனால் அறிமுகமில்லாத ஜான் கிரௌன்ட் எழுதிய இந்தச் சிறிய புத்தகத்தில் புள்ளியியலின் சில ஆரம்பக் கருத்துக்கள் சொல்லப்பட்டிருந்தன.

அவர் 1620-ம் வருடத்தில் பிறந்து 1674-ம் வருடத்தில் இறந்தார்; லண்டன் நகரத்தின் வர்த்தகப் பகுதியில் சில்லறைச் சாமான்கள் விற்பனை செய்யும் கடை வைத்திருந்தார். அவர் சுயமாகக் கல்வி கற்றிருந்ததோடு ”தமது ஓய்வு நேரத்தில்” தமது ஆராய்ச்சிகளையும் தொடர்ந்து செய்து வந்தார். நாற்பதுக்களின் கடைசியில் பெட்டி அவரோடு நட்புக் கொண்டார்; அப்பொழுது கிரெளன்ட் பெட்டிக்கு ஆசானாக இருந்தார். அறுபதுக்களில் இந்த நிலைமை மாறிவிட்டது என்றாலும் அது அவர்களுடைய நட்பை பாதிக்கவில்லை. இப்பொழுது கிரெளன்ட் பெட்டியின் நெருங்கிய நண்பராகவும், லண்டன் நகரத்தில் அவருடைய பிரதிநிதியாகவும், இராயல் சொஸைட்டிக்கும் அவருக்கும் இணைப்புத்தருகின்ற நபராகவும் இருந்தார்.

படிக்க:
நாடாளுமன்றத் தேர்தல் : காவிமயமான போபால் !
♦ பொருளாதார அறிஞர்களின் நகரம் இலண்டன் : பொருளாதாரம் கற்போம் – 11

கிரெளன்டின் பிரசுரம் விரிவான அளவுக்கு அக்கறை ஏற்படுத்திய பொழுது லண்டன் நகரத்தின் விஞ்ஞான வட்டாரங்களில், அந்தப் பிரசுரத்தை உண்மையில் எழுதியவர் சர் வில்லியம் பெட்டி, சில காரணங்களுக்காக அவர் அறிமுகமில்லாத ஒரு நபரின் பெயருக்குப் பின்னால் மறைந்திருக்கிறார் என்ற வதந்தி பரவியது. கிரெளன்டின் மரணத்துக்குப் பிறகு இத்தகைய வதந்திகள் பலமடைந்தன. பெட்டியின் எழுத்துக்களிலும் கடிதங்களிலும் காணப்படுகின்ற சில பகுதிகள் இந்த வதந்திக்கு ஆதரவு கொடுப்பது போலத் தோன்றுகின்றன. ஆனால் இதற்கு மாறான வகையில், ”நமது நண்பர் கிரௌன்ட் எழுதிய புத்தகம்” என்று அவர் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டும் எழுதியிருக்கிறார்.

19-ம் நூற்றாண்டில் இந்தப் பிரசுரத்தின் உண்மையான ஆசிரியர் யார் என்ற பிரச்சினை ஆங்கில விஞ்ஞான உலகத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. “பெட்டி – கிரெளன்ட் பிரச்சினை” என்பது தீர்க்கப்பட்டுவிட்டதாக இன்று நாம் கருதலாம். இப்புத்தகத்தையும் அதிலுள்ள அடிப்படையான புள்ளியியல் கருத்துக்கள், முறைகள் ஆகியவற்றையும் எழுதியது பிரதானமாக ஜான் கிரௌன்ட். ஆனால் சமூக-பொருளாதாரக் கருத்துக்களைப் பொறுத்தவரை அவர் பெட்டியின் தாக்கத்துக்கு உட்பட்டிருந்தார் என்பது தெளிவாகும். இப்புத்தகத்தின் முன்னுரையையும் இந்தக் கருத்துக்கள் வெளியிடப்பட்டிருக்கும் முடிவுரையையும் பெட்டி எழுதியிருக்கக்கூடும். புத்தகத்தின் பொதுவான கருத்து பெட்டிக்கு உரியதாக இருக்கலாம்; அதை எழுதியவர் ஜான் கிரௌன்ட் என்பதில் சந்தேகமில்லை.(2)

1666-ம் வருடத்தில் லண்டன் தீப்பிடித்து எரிந்ததில் கிரெளன்ட் அதிகமாக பாதிக்கப்பட்டார். இதற்குச் சிறிது காலத்துக்குப் பிறகு அவர் கத்தோலிக்கராக மாறினார்; இது அவருடைய சமூக அந்தஸ்தைப் பாதித்தது. இவை எல்லாமே அவர் சீக்கிரமாக மரணமடைவதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். பெட்டியின் நண்பரும் அவருடைய வாழ்க்கைச் சரிதத்தை எழுதிய முதல் ஆசிரியருமான ஜான் ஒபிரீ கிரெளன்டின் சவ அடக்கத்தின் போது, “மதிநுட்பம் நிறைந்தவரும் பல்கலைச் செல்வருமான மாபெரும் சர் வில்லியம் பெட்டி, கிரெளன்டின் பழைய நண்பர், அவருக்கு மிக நெருக்கமானவர், அவர் கண்ணீர் வடிய நின்ற காட்சியைப்” பற்றி எழுதியிருக்கிறார்.(3)

அந்த மாபெரும் தீவிபத்து மத்தியகால லண்டன் நகரத்தில் பாதியை அழித்துப் புதிய லண்டனை உருவாக்குவதற்கு தளத்தை சுத்தப்படுத்தியது. பெட்டி, ஒரு துணிச்சலான திட்டத்தை உருவாக்கும் சந்தர்ப்பத்தைக் கொடுத்தது. சோர்வில்லாமல் திட்டங்களைத் தயாரிக்கும் நிபுணரான பெட்டி லண்டன் நகரத்தைச் சுத்தப்படுத்திப் புனர் நிர்மாணம் செய்வதற்கு ஒரு திட்டத்தை உருவாக்கி அரசாங்கத்திடம் கொடுத்தார்.

அதன் முன்னுரையில் “பூமியும் அதன் மீது கிடக்கின்ற இடிபாடுகளும் யாருக்குச் சொந்தமோ அவரிடம் இந்தப் புனர் நிர்மாண வேலையைச் செய்வதற்கு ரொக்கப் பணவசதியும், எல்லா விதமான சிக்கல்களையும் வெட்டியெறியக் கூடிய சட்டமன்ற அதிகாரமும் இருக்கிறது” (4) என்ற அனுமானத்தின் பேரில் இந்தத் திட்டம் தயாரிக்கப் பட்டிருக்கிறது என்று அவர் எழுதியிருந்தார், வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் நகர்ப்புற வளர்ச்சிக்கு அந்தக் காலத்திலேயே தடையாக இருந்த தனிச் சொத்துடைமைக்கு எதிராக, நிலமும் கட்டிடங்களும் அரசுக்கு அல்லது நகராட்சிக்குச் சொந்தம் என்ற கருத்தை அவர் அனுமானித்தார் என்பது தெளிவு.

முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தெரிவிக்கப்பட்ட இந்தக் கருத்தை முழுமையாகப் பாராட்டுவதற்கு, இன்று லண்டன், பாரிஸ், நியூயார்க், டோக்கியோ போன்ற நகரங்களின் வளர்ச்சிக்கு முதலாளித்துவத் தனிச் சொத்துடைமைமுறை எத்தகைய சிக்கல்களையும் பிரச்சினைகளையும் ஏற்படுத்துகிறது என்பதை நினைவுபடுத்திக் கொள்வதே போதுமானதாகும்.

(தொடரும்…)

அடிக்குறிப்புகள் :

(1) அந்த புத்தகத்தின் தலைப்பு மிக நீளமானதால் இங்கே சுருக்கப்பட்டிருக்கிறது.
(2) எம். ப்டுகா, 17, 18ம் நூற்றாண்டுகளின் புள்ளியியல் வரலாற்றில் சில ஆராய்ச்சிகள், மாஸ்கோ , 1945, பக்கம் 45 (ருஷ்ய மொழிப் பதிப்பு).
(3) E. Strauss, Sir William Petty. Portrait of a Genius, London, 1954, p. 160.
(4) The Petty Papers. Some Unpublished Writings of Sir William Petty, ed. by the Marquis of Lansdowne, London, 1927, Vol. 1, p. 28.

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு :
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983

எத்தனைப்பேர் நம்மை நம்பி கொடுத்துச் சென்ற உணர்ச்சி இது !

யாரடித்தார்
சொல்லி அழு? – என
தாலாட்டு பாடும் நாட்டில்
எவன் சுட்டான்
எனச் சொல்லி அழவும்
கூடாதாம்!

இது சுதந்திர நாடாம்
இதற்கு தேர்தல் ஒரு கேடாம்..

நமக்குத் தேவை
தேர்தல் முடிவல்ல
வர்க்க போரின் தொடர்ச்சி!
அதற்கு தூத்துக்குடியே சாட்சி

பேசத் துடிக்கும்
மழலை நா போல அசையும்
ஈரம் குழைந்த பயிரின் மேல்
ஏறிய பொக்லைன்தான்
இனி எவன் வந்தாலும்
நாம் காணப் போகும் ஆட்சி!

காவியோ, கதரோ
மூலதனத்தின் பாசிசம்
முகங்கள் பல மாறி
ஹைட்ரோ  கார்பன்
ஆவியாக நீட்சி !

தூத்துக்குடி தியாகிகளே
நீங்கள்
இரத்தமாக வெளியேற்றப்பட்டீர்கள்
நாங்கள்
கண்ணீராக சிறை வைக்கப்பட்டிருக்கிறோம்.

இந்தக் கட்டமைப்பிற்கான
ஒரு இறுதி ஊர்வலம் வரை
காத்திருக்கும்
உங்களுக்கான
கண்ணீர் அஞ்சலிகள்!

துரை. சண்முகம்


தவறாமல் பாருங்க !

உகாண்டா : நோயாளிகளின் உயிர்காக்கும் மிதி வண்டி ஆம்புலன்ஸ் !

0

ல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்றொரு சொல்வழக்கு தமிழ்நாட்டில் உண்டு. டிஜிட்டல் தொழில்நுட்ப வசதிகள், அதிநவீன மருத்துவ சிகிச்சைகள் என்று பலவகையில் அறிவியல் முன்னேற்றம் கண்டிருந்தாலும் அது பொருள்வசதி படைத்தவர்களுக்கே என்ற நிலைமைதான் இன்றும் உலகெங்கும் நிலவிவருகிறது. அடிப்படை மனித உரிமைகளில் ஒன்றாகக் கருதப்பட வேண்டிய மருத்துவ சேவை இன்று உலகெங்குமுள்ள வியாபார / வர்த்தகக் களங்களில் பிரதானமான ஒன்றாக மாறிவிட்டது.

கரடுமுரடான, சாலை வசதிகளே இல்லாத ஊர்களில் 108 ஆம்புலன்சையா இயக்க முடியும். பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகளில் இன்று அதுதான் நிலை. இருப்பினும் அப்படியே இருந்துவிட முடியுமா என்ன? மருத்துவ சிகிச்சைக்காகத் தவிக்கும் உயிர்களை அழைத்துச் செல்ல வருகிறது பிரத்யேகமான மிதிவண்டி மற்றும் மின்சார இரு சக்கர வாகன ஆம்புலன்ஸ்.

உகாண்டாவில் கிபிபி என்ற கிராமத்தில் வசிக்கும் சாண்டரா நய்காகா, தான் கருத்தரித்த காலங்களில் சிகிச்சை மேற்கொள்வதற்காக சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவு நடந்தே சென்று வந்ததை நினைவூட்டுகிறார்.

உகாண்டாவில் பேறுகால மரணங்களும், குழந்தைகள் இறப்பு விகித எண்ணிக்கையும் மிக மிக அதிகம். நாளொன்றுக்கு 15 பெண்கள் பிரசவகால பிரச்சினைகளினால் இறக்கின்றனர். நய்காகா தான் கருத்தரித்திருக்கும் போதும் இது போன்று நடந்து விடுமோ என்று அச்சப்பட்டுள்ளார்.

இப்படி தாய்மார்களிடம் ஒருவித அச்சம் நிலவிவந்த சூழலில்தான் 2018-ம் ஆண்டு First African Bicycle Information Organization (FABIO) என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் இலவச மிதிவண்டி ஆம்புலன்ஸ் திட்டத்தைச் செயல்படுத்தியது. இப்பகுதியில் உள்ள இரண்டு சுகாதார மருத்துவமனைகளுக்கு இப்பகுதி மக்களை சிகிச்சைக்கு அழைத்துச் செல்வதுதான் இவர்களின் இலக்கு.

படிக்க:
தூத்துக்குடி தியாகிகளுக்கு நினைவேந்தல் நடத்தினால் எடப்பாடிக்கு என்ன பிரச்சினை ?
இது எங்க நிலம்டா… நீ பாட்டுக்கும் குந்துனாப்ல வந்து குழாய் பதிப்பியா ?

இப்போது நய்காகா-வும் இந்த மிதிவண்டி ஆம்புலன்ஸ் திட்டத்தினால் பலனடையும் நூற்றுக்கணக்கான பெண்களில் ஒருவராகிறார். பெண்கள் மட்டுமன்றி வயதானவர்கள், குழந்தைகள், நோய்வாய்ப்பட்டவர்கள் என பலதரப்பினரும் பயனடைந்து வருகின்றனர். வாகனங்கள் நுழைய வசதியற்ற பகுதிகளில் இதுபோன்ற மிதிவண்டி ஆம்புலன்சின் தேவை மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

உகாண்டாவிலுள்ள 121 மாவட்டங்களில் ஏறக்குறைய 77 மாவட்டங்களில் ஆம்புலன்ஸ் பற்றாக்குறை நிலவிவருகிறது. இதில் 7% சதவீத மக்களுக்கு மட்டுமே ஆம்புலன்ஸ் சேவை கிடைக்கிறது. இந்தப் பற்றாக்குறை தான் ஃபேபியோ நிறுவனத்தின் மிதிவண்டி ஆம்புலன்ஸ் தயாரிக்கும் முன்முயற்சிக்கு அடிகோலியிருக்கிறது. 2006-ம் ஆண்டு உகாண்டாவின் வடக்குப்பகுதியில் போரினால் மிகவும் பாதிப்புக்குள்ளான மக்களுக்காக இந்த சேவையைத் துவங்கியிருக்கிறது ஃபேபியோ நிறுவனம். ஆரம்பம் முதலே சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், உள்ளூரிலேயே பராமரிக்கக்கூடிய அளவுக்கு எளிதானதாகவும் இருக்கவேண்டுமென்று திட்டமிட்டுள்ளது இந்நிறுவனம்.

“எங்களால் தயாரிக்கப்படும் மிதிவண்டி ஆம்புலன்ஸ் அனைத்துமே உள்நாட்டில் உருவான மற்றும் உள்ளூர் சந்தையில் கிடைக்கக்கூடிய உதிரிப்பாகங்களை வைத்தே இயங்கக்கூடிய அளவில் தயார் செய்து வைத்துள்ளோம். எனவே பராமரிப்பதும், உதிரிகளை மாற்றுவதும் எளிது” என்கிறார் ஃபேபியோ நிறுவனத்தின் துணை நிர்வாக இயக்குநர் கட்டேசி நஜ்ஜிபா. உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கு உள்நாட்டிலேயே தீர்வு என்று நகைச்சுவையாகக் கூறுகிறார் கள அதிகாரி ஜெரேமியா பிரையன் நுகூட்டு.

மலைப்பகுதிகளில் நோயாளிகளை அழைத்துச் செல்வது மிகவும் சிரமமான ஒன்று. மிதிவண்டியை ஓட்டும் போது பின்புறமிருந்து ஒருவர் தள்ளினால் தான் அது சாத்தியமாகும் என்கிறார் மிதிவண்டியை ஓட்டிவரும் ஹரித் முக்காசா. இந்தப் பிரச்சினையைக் கையாளுவதற்கென்றே ஃபேபியோ நிறுவனம்,  மின்சார இரு சக்கர வாகன ஆம்புலன்சைத் தயாரித்திருக்கிறது.

மிதிவண்டி ஆம்புலன்சுகள் உள்ளூர் சுகாதாரப் பணியாளர்களாலேயே நிர்வகிக்கப்படுகிறது. இவர்களுடைய அழைப்பு எண்ணில் தொடர்பு கொள்ளும்போது ஆம்புலன்ஸ் சேவை கிடைக்கிறது

இலகு ரக வாகனங்கள், ஆம்புலன்சுகள் செல்ல முடியாத சாலைகளில் இதுபோன்ற மிதிவண்டி ஆம்புலன்சுகளே மக்களை சுமந்து செல்ல உதவுகின்றன

மலைப்பாங்கான பகுதிகளில், மின்சார பேட்டரிகள் உதவியுடன் இயங்கும் இருசக்கர வாகன ஆம்புலன்சுகள் பயன்படுத்தப்படுகிறது. ஏறக்குறைய நான்கு கிலோ மீட்டர் தொலைவு நடந்தே பயணித்த நய்காகா இப்போது எளிதில் மருத்துவ சிகிச்சை பெறமுடிகிறது

கிபிபி மருத்துவ சிகிச்சை மையத்தில் தன் குழந்தையின் எடை பார்க்கும் தாய் மற்றும் செவிலியர் ஜோசுவா முசோம்பா. உகாண்டாவில் 1,00,000 குழந்தைகள் பிறக்கும்போது அவற்றில் 336 குழந்தைகள் இறக்கின்றன.

கர்ப்பிணிப் பெண்கள் உட்பட பல பெண்கள், சிகிச்சைக்காக வரும் போது, வழியிலேயே இறந்துவிடுகின்றனர். இதைத் தடுப்பது தான் எங்கள் நிறுவனத்தின் பிரதான நோக்கம் என்கிறார் ஃபேபியோ-வின் துணை நிர்வாக இயக்குனர் கட்டேசி நஜ்ஜிபா

சாண்ட்ரா நய்காகா மருத்துவ ஆலோசகர் ஜூலியட் நமூஸ்வா-விடம் ஆலோசனை பெறுகிறார். அருகில் செவிலியர் ஜோசுவா முசோம்பா. நாளொன்றுக்கு 15 பெண்கள் பிரசவகால பிரச்சினைகளால் இறக்கின்றனர்.

கிழக்கு உகாண்டாவின் ஜிஞ்சா மாவட்டத்தில் அமைந்துள்ள கிபிபி மருத்துவ சிகிச்சை மையம். மிதிவண்டி ஆம்புலன்ஸ் சேவை இங்கு எளிதாகக் கிடைக்கிறது.

ஏழு மாத கர்ப்பிணியும், இரு குழந்தைகளுக்குத் தாயுமான தெரேசா நம்முடு (வயது 26) தான் மிதிவண்டி ஆம்புலன்ஸ் மூலம் உதவி பெற்றதை நம்முடன் பகிர்கிறார். ‘இரவு 8.30 மணியிருக்கும், என் உடல்நிலை மிகவும் மோசமானது, கணவரும் அருகிலில்லை, நானே நேரடியாக ஆம்புலன்ஸ் சேவை எண்ணுக்கு அழைத்தேன். சரியான நேரத்தில் அவர்கள் என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றினர்.

ஹரித் முக்காசா தன் சக உதவியாளருடன் சேர்ந்து ஒரு நோயாளியை ஆம்புலன்சில் இருந்து இறக்கி மருத்துவமனையில் அனுமதிக்கத் தூக்கிச்செல்லும் காட்சி. உகாண்டா முழுவதும் 7% சதவீத மக்களே ஆம்புலன்ஸ் சேவையைப் பெறுகின்றனர்.

ஜெரேமையா பிரையன் நுகூட்டு, ஃபிரான்ஸ் ஸ்டீகல் மற்றும் ஜார்ஜ் சீகல் (ஃபேபியோ நிறுவன நிர்வாக இயக்குனர்) புதிதாகத் தயாரிக்கப்பட்ட ஆம்புலன்சுக்கு இறுதிவடிவம் கொடுக்கின்றனர். உகாண்டாவிலுள்ள 121 மாவட்டங்களில் ஏறக்குறைய 77 மாவட்டங்களில் ஆம்புலன்ஸ் பற்றாக்குறை நிலவிவருகிறது

ஆம்புலன்ஸ் வாகன உதிரிபாகங்களை வெல்டிங் செய்து இணைக்கும் ஜெரேமையா பிரையன் நுகூட்டு. உள்ளூரில் தயாரிக்கப்பட்ட உதிரி பாகங்களை வைத்து தயாரிக்கப்படுவதுதான் இந்த ஆம்புலன்சின் கூடுதல் சிறப்பு.

கட்டுரையாளர்: Caleb Okereke
தமிழாக்கம் : வரதன்
நன்றி : aljazeera

இந்தியா எதிர்கொள்ளவிருக்கும் வேலையின்மை நெருக்கடி !

0

வேலை வாய்ப்பின்மை குறித்து பரவலாக இந்தியாவில் பேசப்படுகிறது. கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவில் வேலை வாய்ப்பின்மை 6.1 விழுக்காடு இருப்பதாக 2017-18-ம் ஆண்டிற்கான தேசிய மாதிரி ஆய்வு அலுவலகத்தின் (NSSO) அறிக்கை கூறுகிறது. ஆண்டிற்கு 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக கூறிய மோடி அரசாங்கத்தின் மீது எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சனம் வைக்கின்றனர்.

வேலைவாய்ப்பின்மைக்கு கடந்த ஐந்து ஆண்டு கால பா.ஜ.க ஆட்சி காரணம் இல்லை என்றும் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துள்ளதாக மைய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்காரி சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கூறியிருந்தார்.

புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதும் வேலை வாய்ப்பு திறனை மேம்படுத்துவதும் முதன்மையான பணி என்று மோடி அரசாங்கம் கூறினாலும் 2018 குளிர் கால கூட்டத்தொடரில் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகம் முன் வைத்த தகவல்கள் வேறு ஒன்றை கூறுகின்றன.

கிராம மற்றும் நகர்புறங்களில் குறைந்து போன வேலை வாய்ப்பு :

வேலை வாய்ப்புகளை உருவாக்கும் பொருட்டு முதன்மை அமைச்சர் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP), ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிக்கும் திட்டம் (MGNREGS), தீன் தயாள் உபாத்யாய – கிராமின் கௌசல்யா யோஜனா (DDU–GKY), தீன் தயாள் அந்தியோதயா திட்டம் மற்றும் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் (DAY–NULM) உள்ளிட்ட திட்டங்களை தொடங்கியிருந்தாலும் முந்தைய ஆண்டுகளை ஒப்பிடும் போது 2017-க்கு பிறகு இத்திட்டங்களின் கீழ் வேலை வாய்ப்புகள் குறைந்து விட்டன. கீழ்க்காணும் அட்டவணையை பார்க்கவும்:

திட்டம்/ஆண்டு


2015-16

2016-17 2017-18

2018-19 (03.12.18 வரை)

DDU-GKY பயிற்சிக்கு பிறகு வேலை கிடைத்தவர்கள் (இலட்சத்தில்) 1.09 1.48 0.76 0.96
PMEGP – மூலம் கிடைத்த வேலை (இலட்சத்தில்) 3.23 4.08 3.87 2.85
MGNREGS மூலம் கிடைத்த வேலை நாட்கள் (கோடியில்) 235.14 235.65 234.22 163.22
DAY- NULM பயிற்சிக்கு பிறகு வேலை கிடைத்தவர்கள் (இலட்சத்தில்) 3.37 1.52 1.15 0.95


அரசாங்க வேலை வாய்ப்புகளும் குறைந்து விட்டன :

மைய அரசாங்கத்தின் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யுபிஎஸ்சி), ஊழியர்கள் தேர்வு ஆணையம் (SSC), இரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் போன்ற பல்வேறு நிறுவனங்கள் மூலம் பணி சேர்க்கை நடக்கிறது. மேலும் பல்வேறு அமைச்சரகங்கள் மற்றும் துறைகள் தங்களுக்கென தனியாக ஆட்சேர்ப்பு கட்டமைப்புகளையும் வைத்திருக்கின்றன.

ஆனாலும் இந்த தகவல்களை அனைத்தையும் சேகரிக்க தனி நிறுவனம் எதுவும் கிடையாது. இந்த தகவல்கள் மைய அரசாங்கத்தின் நிறுவனங்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.  2016-17 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட மைய அரசாங்க வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கை ஒரு இலட்சம். அதுவே 2017-18 ஆம் ஆண்டில் 30 விழுக்காடு குறைந்து 70,000 வேலைகள் மட்டுமே உருவாக்கப்பட்டன.

இந்த நிறுவனங்களின் மூலம் உருவாக்கப்பட்ட வேலைகள் பற்றிய மைய தொழிலாளார் நலத்துறை அமைச்சகத்தின் தகவல்கள் கீழுள்ள அட்டவனையில் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆண்டு யுபிஎஸ்சி பரிந்துரை SSC பரிந்துரை RRB/RRC கீழ் கிடைத்த வேலைகள் மொத்தம்
2016-17 5740 68880 26318 100938
2017-18 6314 45391 19100 70805


அரசாங்க போர்டலில் குறைந்த வேலை வாய்ப்புகள் :

வேலை தேடுபவர்களுக்கும் வேலை அளிப்பவர்களுக்குமான இடைவெளியை குறைக்க 2015 ஆம் ஆண்டில் தொழிலாளார் நலத்துறை அமைச்சகம் தொடங்கிய தேசிய வேலை வாய்ப்பு சேவை வேலையின்மை சிக்கலின் நோய் நாடி நோய் முதல் நாடவில்லை.

2015-16 ஆம் ஆண்டில், 37 இலட்சம் வேலைகள் தேவைப்பட்டதற்கு எதிராக 1.48 இலட்சம் வாய்ப்புகளும் 2017-18 ஆண்டில் 23 இலட்சம் வேலைகள் தேவைப்பட்டதற்கு எதிராக  9.21 இலட்சம் வாய்ப்புகளும் மட்டுமே உருவாக்கப்பட்டன. இது நம் நாட்டில் வேலையின்மை நெருக்கடியை சுட்டிக்காட்டுகின்றன. கடந்த மூன்று ஆண்டுகளில் தேசிய வேலை வாய்ப்பு சேவை போர்டலில் வேலை தேடி பதிவு செய்தவர்களின் எண்ணிக்கையும் ஆண்டுவாரியாக வெளியிடப்பட்ட காலியிடங்களும் கீழுள்ள அட்டவணையில் காட்டப்பட்டுள்ளது.

2015-16 2016-17 2017-18
தேவையான எண்ணிக்கை 3745331 1478146 2310241
காலியிடங்கள் 148075 1290264 921193

வேலை பரிமாற்ற அலுவலங்களின் தகவல்கள் படி 2015 க்கு பிறகு தகவல்கள் எதுவும் இல்லை. முந்தைய தகவல்கள் படி பார்த்தால் கூட வெறும் ஒரு விழுக்காட்டினருக்கு கூட வேலை கிடைக்கவில்லை (கீழுள்ள அட்டவணையை பார்க்கவும்).

ஆண்டு வேலை பரிமாற்ற அலுவலங்களில் பதிவானது (இலட்சத்தில்)

வேலை பரிமாற்ற அலுவலங்கள் மூலம் கிடைத்த வேலைகள்
(இலட்சத்தில்)

விழுக்காடு(%)
2013 468.03 3.49 0.75
2014 482.61 3.39 0.70
2015 435.03 3.95 0.91
மொத்தம் 1385.67 10.83 0.78


திறன் சார் பயிற்சிக்கும் குறைந்த வேலை வாய்ப்புகளே :

பல்வேறு அமைச்சகங்களும் துறைகளும் தொழில் முனைவோர்களை உருவாக்கவும் வேலைவாய்ப்புகளை கொடுப்பதற்கும் பல்வேறு திறன் மேம்பாட்டு திட்டங்களை நடத்துகின்றன. சான்றாக, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் நடத்தும் முதன்மை அமைச்சர் திறன் மெம்பாட்டு திட்டத்தின் கீழ் குறுகிய கால பயிற்சி வழங்கப்பட்டு அதன் மூலம் வேலை வாய்ப்புகள் பெற்றவர்களின் தகவல்கள் 90 நாட்களுக்குள் வெளியிடப்படும்.

அதன்படி, பயிற்சி முடித்து தகுதி பெற்ற 18.42 இலட்சம் நபர்களில் (31.08.2018 ன் படி) 10.1 இலட்சம் நபர்களுக்கு (55 விழுக்காடு) மட்டுமே வேலை கிடைக்கலாம். கீழுள்ள அட்டவனையை பார்க்கவும்.

அமைச்சரகம்/துறை பயிற்சி பெற்றவர்கள் வேலை கிடைத்தவர்கள் விழுக்காடு
வேதிப்பொருள்கள் மற்றும் பெட்ரோலிய வேதி பொருள்கள் 70056 24400 34.8
உணவு பதப்படுத்தல் 13855 1818 13.1
விட்டுவசதி மற்றும் நகர்புற விவகாரங்கள் 264512 115416 43.6
ஊரக வளர்ச்சி 487751 326792 67
DIPP 94232 72368 76.8
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் 54978 29458 53.6
MSME 212737 24689 11.6
சுற்றுலா 16576 1243 7.5
ஜவுளி 109077 81354 74.6
கனரக தொழில்துறை 112504 13191 11.7


இந்த தகவல்கள் என்ன சொல்கின்றன :

தேசிய மாதிரி ஆய்வு அலுவலகத்தின் அறிக்கை வெளியான பிறகு அதை ஒரு தேசிய பேரிடர் என்று எதிர்கட்சி தலைவரான இராகுல் காந்தி அறிவித்தார். பண மதிப்பழிப்புக்கு பிறகு வேலை வாய்ப்பு – வேலையிழப்பு குறித்து தன் மீதான அனைத்து விமர்சனங்களுக்கும் பதில் சொல்லாமல் வாய் மூடி கொண்டிருக்கிறது மோடி அரசு. பணமதிப்பழிப்புக்கு பிறகு வேலை வாய்ப்பின்மை குறித்த தகவல்கள் எதுவும் இல்லை என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கேங்வார் பாராளுமன்றத்தில் கூறியதும் குறிப்பிடத்தக்கது.

படிக்க:
மோடியின் வேலைவாய்ப்பு ஜூம்லா – அனைவரும் முதலாளிகளாகி விட்டனராம் !
தூத்துக்குடி தியாகிகளுக்கு நினைவேந்தல் நடத்தினால் எடப்பாடிக்கு என்ன பிரச்சினை ?

சில ஆண்டுகளாகவே இந்தியாவின் பொருளாதாரம் ஆண்டுக்கு 7 விழுக்காடு வளர்வதாக கூறப்பட்டாலும் வேலை வாய்ப்பில் அது எதிரொலிக்கவில்லை. மேலும் வேலை தேடலுக்கும் வேலை கிடைப்பதற்குமான பாரிய அளவில் இடைவெளி அதிகரித்துவிட்டது. விளைவாக, 15 – 29 வயதான நகர இளைஞர்களில் ஆண்கள் 18.7 விழுக்காடும் பெண்கள் 27.2 விழுக்காடும் வேலையில்லாமல் உள்ளனர். மேற்கூறிய தகவல்கள் இந்தியா எதிர்கொள்ளவிருக்கும் வேலையின்மை நெருக்கடிக்கு கட்டியங் கூறுகின்றன.

கட்டுரையாளர்: Shaguna Kanwar
தமிழாக்கம்: சுகுமார்
நன்றி: thewire

தூத்துக்குடி தியாகிகளுக்கு நினைவேந்தல் நடத்தினால் எடப்பாடிக்கு என்ன பிரச்சினை ?

22-5-2019

பத்திரிகைச் செய்தி

தூத்துக்குடி தியாகிகளுக்கு நினைவேந்தல் நடத்தினால் எடப்பாடிக்கு என்ன பிரச்சினை?

மக்களை சுட்டுக்கொன்ற கொலைகார போலீசாரே, நம்மைக் கூடி அழவிடாமல் தடுக்கும் கொடுமை தமிழகத்தில்தான் நடக்கிறது.

சட்டத்தின் ஆட்சி – தேர்தல் ஜனநாயகம் என்பதால் பெரும்பான்மை மக்களுக்கு நயா பைசா பிரயோசனம் இல்லை. இனி அடக்குமுறைதான் ஜனநாயகம். இன்று நாட்டை ஆள்வது உளவுப்பிரிவு, கியூ பிரிவு போலீசார்தான். கண்ணுக்குத்தெரியாத மேலிடம் அவர்களுக்கான உத்திரவுகளை பிறப்பித்துக் கொண்டே இருக்கிறது. அந்த மேலிடம் – கார்ப்பரேட் – காவி பாசிச சக்திகள்.

தூத்துக்குடி தியாகிகள் நினைவேந்தலுக்கு தடை உத்திரவு போடுவதும், முன்னணியாளர் வீடுகளில் நள்ளிரவில் தேடுதல் வேட்டை நடத்துவதும், முன்னெச்சரிக்கையாக கைது செய்து காவல் நிலையத்தில் அடைப்பதும், நினைவேந்தல் அஞ்சலி செய்யமாட்டோம் என எழுதி கேட்பதுமாக ஒரு அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை போலீசார் அமல்படுத்தி வருகிறார்கள்.

தேர்தல் நடத்துவதும், அதில் மக்கள் வாக்களிப்பது மட்டும்தான் ஜனநாயகம். கருத்துரிமை, கூட்டம்கூடும் உரிமை, போராடும் உரிமை ஆகியவைகள் ஜனநாயக விரோதம் சட்டவிரோதம் என நடைமுறையில் அமல்படுத்தி வருகிறார்கள். போலீசார் கார்ப்பரேட் கொள்ளைக்கான கூலிப்படைதான் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறார்கள். நினைவேந்தலைக்கண்டு போலீசார் இந்தளவிற்கு ஏன் அச்சப்பட வேண்டும்? எதற்கு இந்த பேயாட்டம்?

கடந்த ஆண்டு மே 22 இதே நாளில் சட்டப்புறம்பாக இயங்கிய நச்சு ஆலை ஸ்டெர்லைட்டை மூடக்கோரி சாதி மத வேறுபாடுகளை கலைந்து அலை அலையாக குடும்பமாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் முறையிடச் சென்ற பொதுமக்கள் மீது போலீசார் கொடூரமாக துப்பாக்கிச்சூடு நடத்தி 15 பேரை படுகொலை செய்தனர்.

முதல்வர் எடப்பாடி எனக்கு தெரியாது, டி.வி. பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என்றார். தமிழக டி.ஜி.பி. மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்களின் உயிருக்கு ஆபத்து என புளுகினார். துப்பாக்கிச்சூடு படுகொலையை நியாயப்படுத்த ஸ்டெர்லைட் கூலிப்படை ஆட்களை வைத்து காவல் துறை அதிகாரிகளே ஆட்சியர் அலுவலகத்தை தீக்கிரையாக்கிய சம்பவம் சி.சி.டி.வி. படக்காட்சிகள் மூலம் நிரூபிக்கபட்டுள்ளது.

ஆனால், இதுவரை எந்த போலீசாரும் கொலைவழக்கில் கைது செய்யப்படவில்லை. அழைத்து விசாரிக்கப்படவில்லை. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நீதிமன்ற உத்திரவு பெற்று மீண்டும் ஆலையை திறக்கச்சதி நடக்கிறது. அதனால்தான் தூத்துக்குடி நகரமே இன்று காக்கிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு காஷ்மீராக காட்சி அளிக்கிறது.

தமிழகத்தின் நெற்களஞ்சியம் பாலைவனமாகும் எனத்தெரிந்தே டெல்டா காவிரிப்படுகையில் கொலைகாரன் வேதாந்தாவிற்கு 250 கிணறுகள் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், எட்டுவழிச்சாலை, கெயில், அணு உலைப்பூங்கா, பாரத்மாலா, சாகர்மாலா என தமிழகத்தைச் சூறையாட கார்ப்பரேட் கொள்ளைக்கான திட்டங்கள் அணிவகுத்து நிற்கின்றன. தன்னெழுச்சியான மக்கள் போராட்டங்கள் பல வடிவங்களில் நீரு பூத்த நெருப்பாக அடங்குவதும் எழுவதுமாக அரசை அச்சுறுத்தி வருகிறது. ஸ்டெர்லைட் மாடலில், மக்களின் ஒன்று திரண்ட போராட்டங்கள் கார்ப்பரேட்டுக்களை காவு வாங்கிவிடக்கூடாது என்பதற்காக இத்தகைய தூத்துக்குடி மாடல் அடக்குமுறைகளை போலீசார் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். தமிழக மக்கள் எதிர்த்து நின்று போராடி முறியடிப்பதை தவிர வேறு வழியில்லை.

படிக்க:
மக்கள் அதிகாரம் முன்னணியாளர்கள் தடுப்புக் காவலில் கைது ! ஸ்டெர்லைட் தியாகிகள் நினைவஞ்சலியைத் தடுக்க சதி !
மே – 22 : அழுவதற்கும் அனுமதி மறுப்பு ! தடையை மீறி நினைவேந்துவோம் !

ஆங்கிலேய காலனி ஆட்சியில்கூட இத்தகைய அக்கிரமம் நடக்கவி்ல்லை. எதிரி நாட்டு தீவிரவாதிகளைப் போல் பொதுமக்களை சுட்டுக்கொன்ற அநீதி தமிழகத்தில் ஸ்டெர்லைட் வேதாந்தாவிற்காக நடத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி படுகொலை, தமிழகத்தின் ஜாலியன்வாலாபாக்காக நம் கண்முன்னே நிற்கிறது.

போலீசின் எத்தகைய அடக்குமுறைகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் அடிபணியாமல் நமது ஜனநாயக உரிமைகளை நாம்தான் அமல்படுத்தி நிலைநாட்ட  வேண்டும். தமிழக மக்கள் அனைவரும் இன்று முழுவதும் வாய்ப்புள்ள இடங்களில் தூத்துக்குடி தியாகிகள் புகைப்படத்தை வைத்து அஞ்சலி செலுத்த வேண்டும் என மீண்டும் வேண்டுகிறோம்.

மே 22 ஒவ்வொரு ஆண்டும் கார்ப்பரேட்டு முதலாளிகளுக்கும் அவர்களின் கூலிப்படை போலீசாருக்கும் கொடுங்கனவாக அமைய வேண்டும்.

தோழமையுடன்,
வழக்கறிஞர் சி.ராஜு,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்.
தொடர்புக்கு: 99623 66321

மே 22 : ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளுக்கு தூத்துக்குடி மக்கள் நினைவேந்தல் !

ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியான தியாகிகளுக்கு போலீசின் அடக்குமுறைகளையும் மீறி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக தூத்துக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் மக்கள் நினைவேந்தல் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

#May22Martyrs #BanSterlite #ThoothukudiMassacre

தூத்துக்குடி, காந்திநகர், புனித தோமையர் ஆலயம் முன்பாக அஞ்சலி செலுத்தும் பொதுமக்கள்.

கருப்பு உடை அணிந்து அஞ்சலி, தூத்துக்குடி.
தெற்கு வீரபாண்டியபுரம், தூத்துக்குடி.
தெற்கு வீரபாண்டியபுரம், தூத்துக்குடி.

தொகுப்பு :


தவறாமல் பாருங்க !

மக்கள் அதிகாரம் முன்னணியாளர்கள் தடுப்புக் காவலில் கைது ! ஸ்டெர்லைட் தியாகிகள் நினைவஞ்சலியைத் தடுக்க சதி !

ஸ்டெர்லைட் தியாகிகள் நினைவஞ்சலிக்கு வரவிடாமல், பல்வேறு ஊர்களில் மக்கள் அதிகாரம் முன்னணியாளர்கள் நள்ளிரவில் தடுப்புக் காவலில் கைது !
 
எல்லை மீறுகிறது எடப்பாடி அரசின் போலீஸ் அராஜகம் ! அடக்குமுறைக்கு பணிய மாட்டோம் !
 
தமிழக மக்களே ! ஊர்தோறும் தூத்துக்குடி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துங்கள் !
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு

செவ்வணக்கம் தோழர் ராமாராவ் அண்ணா !

0

செவ்வணக்கம் ராமாராவ் அண்ணா !

ஹைதராபாத்,
17.05.2019

“ஒரு கண்ணில் நீர் – சோகம் ததும்ப,
ஒரு கண்ணில் செங்கொடி – லட்சியம் மின்ன
தோழர் ராமாராவின் வழிநடப்போம்”

– மறைந்த ஆந்திர புரட்சிப் பாடகர் ராமாராவின் துணைவியார் அருணா அவர்கள் தமது அஞ்சலி உரையை இவ்வாறு தொடங்கினார். எளிய தலித் குடும்ப இளைஞராக, ஒடுக்குமுறைகளுக்கிடையே வளர்ந்து பின்னர் தனது பாடகர் வாழ்வைத் தொடங்கினார் தோழர் ராமா ராவ். அவர் சார்ந்த ‘அருணோதயம்’ அமைப்பில் சேர்ந்து நக்சல்பாரி வழியில் அவரோடு தான் பயணப்பட்டதை தனது உரையில் விவரித்தார் தோழர் அருணா. அவர் விவரித்தபோது, சுமார் ஆயிரம் பேருக்கும் மேல் அரங்கில் திரண்டிருந்த கூட்டத்தினர், பல்வேறு கட்டங்களில், மக்களுக்காக அவரால் அணிதிரட்டப்பட்டு, அவரோடு சேர்ந்து போராடியதை நினைவுகூர்ந்தனர்.

தோழர் ராமா ராவ்

ஆந்திர நாட்டுப்புற பாரம்பரிய (பு)உர்ர கதா, ஜம்முகுல கதா நடத்துவதில் சிறந்த ஆற்றல்மிக்க ராமாராவ், திறந்த குரலில் உச்ச ஸ்தாயினைப் பிடித்து 40 ஆண்டுகளுக்கு மேல், ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி, தொழிலாளர் – விவசாயிகளிடையே புரட்சி அரசியலைப் பரப்பிவந்தவர். அயராத புரட்சிகரப் பணியில் ஈடுபட்டுவந்த தோழர் ராமாராவ், சமீபத்தில் மறைந்தார். தோழரின் நினைவைப் போற்றும் வகையில் ஹைதராபாத் நகரில் புரட்சிகர அமைப்புகள்  நடத்திய நினைவேந்தல் நிகழ்ச்சியில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

தோழர் கோவனின் பாடல் இசையையும், அரசியலையும் இணைத்து அகத்தூண்டுதல் அளித்தது என்று மொத்த அரங்கமும் வரவேற்றது. மேலும் ரஃபேல் ஊழலை அம்பலப்படுத்திய புதிய கானா முறை ஆடல் – பாடல், இளமை எழுச்சியூட்டியது எனவும் வரவேற்றனர்.

அருணோதயம் – 1, 2 குழுக்களின் ஆந்திரம், பஞ்சாப், மேற்கு வங்கம், பீகார் கிளைகள் மற்றும் பிரஜா கலா மண்டலியின் தோழர்கள் புரட்சிப் பாடல்களை ஆடிப்பாடினர். ராமாராவின் ஐந்து வயது பேரன் ‘எழுந்துவா தோழா !’ என்று பாடியபோது அரங்கு நிறைய செவ்வணக்கம் (லால் சலாம்) என்ற முழக்கம் அதிர்ந்தது.

செவ்வணக்கம் தோழர் ராமாராவ் அண்ணா !

செய்தி :
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தமிழ்நாடு.

நூல் அறிமுகம் : ஸ்டெர்லைட் போராட்டம் அரசு வன்முறை

மே 22 அன்று தூத்துக்குடியில் 17 வயது சிறுமி ‘தொழில் வளர்ச்சிக்கு எதிராக போராட முன்வந்ததால்’ துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்படுகிறார். ஜூலை 7 அன்று காஷ்மீரில் 16 வயது சிறுமி “தேச நலனுக்கு எதிரானவர்” என முத்திரை குத்தப்பட்டு இந்திய இராணுவத்தின் குண்டுகளால் சாகடிக்கப்படுகிறார்.

ஆம், இன்று அரசின் அத்தனை அட்டூழியங்களும் ‘வளர்ச்சி & தேசநலன்’ என்ற பிராண்டின் பெயர் கொண்டே அரங்கேற்றப்படுகின்றன. பெருந்தனக்காரர்களும் உயர்சாதியினரும் கூடிக் குலாவி அதிகாரத்தில் கும்மாளமிடுகின்றனர்.

இவர்களின் ஆட்டத்தை முடக்கி முடிவுக்கு கொண்டு வருவது ஜனநாயக சக்திகளின் முதன்மைப் பணி. நித்தம் நித்தம் நடைபெறும் போராட்ட அனுபவங்களிலிருந்து படிப்பினைப் பெற்று உரிமைக்கான களத்தினை செறிவாக்கி விரிவுபடுத்த வேண்டியுள்ளது. அத்தகு பணிக்கு உதவியாய் இப்பிரசுரத்தை வெளியிட்டுள்ளோம்.

தமிழக மண்ணில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி 22 ஆண்டுகாலம் தொடர்ந்து மக்களால் நடைபெற்ற இயக்கம் இது. அரசு வன்முறை 13 மனித உயிர்களை பலிகொண்டும், எண்ணற்றோரை முடமாக்கியும் கூட மக்கள் இயக்கம் தற்போது வெற்றி கண்டுள்ளது. உலகமே திரும்பிப் பார்க்கவைத்த இவ்வியக்கத்தின் போராட்ட வரலாற்றை அரசின் வன்முறை வெறியாட்டத்தை மக்கள்திரளின் உணர்வோட்டத்தினை சுருக்கமாக இந்நூல் உள்ளடக்கியுள்ளது. போராடும் இயக்கங்களை அமைப்புகளை மக்களுக்கு எதிராக நிற்கவைக்க அரசு எடுக்கும் நயவஞ்சக செயல்பாடுகளைத் தோலுரித்து காண்பிக்கின்றன இந்நூலில் உள்ள எழுத்துக்கள். (நூலின் முன்னுரையிலிருந்து)

உண்மை அறியும் குழுவின் அறிக்கையிலிருந்து சில பகுதிகள் :

…  போராட்டம் துவங்கிய  நாள் முதற்கொண்டே, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மாவட்டத்தின் நிர்வாக நடுவர் என்ற முறையிலும், தமிழக அரசு உள்துறை செயலாளர், தமிழக காவல் துறைத் தலைவர். டி, ஜி.பி., மாவட்ட காவல் கண்காணிப்பாளர்- எஸ். பி. ஆகியோருடன் கலந்தாலோசித்து, நிலைமையை மதிப்பீடு செய்து நேரடியாக போராட்ட இடத்திற்கே சென்றிருக்க வேண்டும். நிலைமை குறித்த மதிப்பீட்டை அறிக்கையாக முதலமைச்சருக்கும் உள்துறை அமைச்சருக்கும் மேல் நடவடிக்கைக்காக தந்திருக்க வேண்டும். ஆனால், போராட்டத்தின் 100 வது நாள் வரை இது செய்யப்படவில்லை. இத்தகைய கடமை பிறழ்வு, தன்னிச்சையான- நீதிக்கு அப்பாற்பட்ட வகையிலான 13 பேரின் உயிர் பறிப்பு மற்றும் அதிகாரப்பூர்வ ஆவணங்களின் படியே 100 க்கும் மேற்பட்டோரின் காயங்களுக்கும் இட்டுச் சென்றுள்ளது. இது உலகளாவிய அவமானமாகும்.

இக்கொடூரம் நிகழ்கிறவரை முதலமைச்சரோ, மக்கள் பிரதிநிதிகளோ தூத்துக்குடி செல்லவில்லை. போராட்டம் நடந்தேறிய 100 நாட்களும் இவர்கள் செல்லாததால் மக்களோடு சமாதானப் பேச்சுவார்த்தைகளும் நடத்தப்படவில்லை. இதனால்தான் 100 வது நாள் ஓர் பெருந்திரள் பேரணியை நடத்தி கவனத்தை ஈர்க்க வேண்டிய கட்டாயத்திற்கு அம்மக்கள் தள்ளப்பட்டனர் என்று இக்குழு கருதுகிறது.

காவல்துறை மே 22 பேரணியில் பங்கேற்கிற மக்களின் உணர்வுகள், திரள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளைக் கூட மேற்கொள்ளாதது தற்செயலானதா என ஐயம் எழுகிறது.

… பேரணியை ஒழுங்குபடுத்த முன்னேற்பாடுகள் இல்லாததும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் மக்கள் நுழைவதைத் தடுப்பதற்கான ஏற்பாடுகளும் இல்லையென்பது கேள்விகளை எழுப்புகிறது.

சந்தோஷ் என்பவரின் சாட்சியத்தின்படி, மாவட்ட ஆட்சியரகம் அருகில், அவர் காவல்துறையால் கடுமையாகத் தாக்கப்பட்டு, தலைக்காயம், ரத்தக் காயங்களுக்கு ஆளாகிறார். அப்போது அவர் ஒரு வாகனம் நெருப்பிற்கு இரையாவதைப் பார்த்திருக்கிறார். ஆனால் அப்போது மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் வந்திருக்கவில்லை. அப்படியெனில் மாவட்ட ஆட்சியரகத்தில் நெருப்பு வைத்தது யார்?’ என்ற கேள்வி எழுகிறது. இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு யார் இதைச் செய்தார்கள் என்பது கண்டுபிடிக்க வேண்டும்.

சந்தோஷ் கூற்றின் படியும், ஊடகங்களின் தகவல்கள்படியும் காயமுற்ற அவர் கண்முன்னே ஒருவர் காவல்துறையின் துப்பாக்கித் தோட்டாவிற்கு பலியாகி இருக்கிறார். சந்தோஷ் தனது உயிர் தப்பியதற்கு ஊடகங்களே காரணம் என்றார். அவர் இருமுறை காவல்துறை மக்களை முன்செல்ல அனுமதித்து விட்டு பின்னே இருந்து தாக்கியதைக் கண்டுள்ளார். இது கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கான சர்வதேச நெறிமுறைகளுக்கு முரணான செயலாகும்.

படிக்க:
மே – 22 : அழுவதற்கும் அனுமதி மறுப்பு ! தடையை மீறி நினைவேந்துவோம் !
இது எங்க நிலம்டா… நீ பாட்டுக்கும் குந்துனாப்ல வந்து குழாய் பதிப்பியா ?

… எந்த முன் அறிவிப்புமின்றி காவல்துறை துப்பாக்கிச் சூட்டைத் துவக்கி நடத்தியுள்ளது. மேலும் இரும்புக் கம்பிகள், மரக்கம்புகள், கற்கள், லத்திகள் கொண்டும் போராட்டக்காரர்களைத் தாக்கியுள்ளது. போராட்டக் குழுவினரின் முடிவின்படி கொடிகள், பதாகைகளுக்கான கம்புகள் கூட இல்லாமல் நிராயுதபாணிகளாக வந்த மக்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள இக்கொடூரம் திட்டமிட்டு போராட்டத்தை ஒடுக்குவதற்காக நிகழ்த்தப்பட்டிருப்பதே ஆகும். இது காவல்துறை நிலையாணை 703-ல் சட்டபூர்வமற்ற மக்கள் திரளைக் கலைப்பதற்காக கூறப்பட்டுள்ள வழிகாட்டல்களை மீறிய செயலாகும்.

… “சட்ட பூர்வமற்ற திரள்” என்ற சொல் பிரயோகம் கூட திரும்ப திரும்ப மாவட்ட நிர்வாகத்தால் நோக்கத்தோடு பயன்படுத்தப்படுவதே ஆகும். உண்மையில் போராட்டக்காரர்கள் மே 22 அன்று மாவட்ட ஆட்சியரிடம் மகஜர் அளிப்பதற்கு பேரணியாய் செல்ல நல்ல கால அவகாசத்தோடு அனுமதி கோரியிருந்தார்கள். எனவே, இதை சட்டபூர்வமற்ற திரள் என்று கூறுவது பொருத்தமானது அல்ல என இக்குழு கருதுகிறது, “புகைப்படங்களின் வாயிலாக இறந்தவர்களுக்கு ஏற்பட்ட காயங்கள், நேரில் சந்தித்த காயமுற்றோரின் ரணங்கள் இவற்றையெல்லாம் பார்க்கும் போது காவல்துறை மக்கள் முதுகின் பின்னிருந்து சுட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது.

… காவல்துறை என்ன ஆயுதங்களை கலவரங்களின் போது பயன்படுத்தலாம் என்பதற்கான வரையறைகள் இன்சாஸ்-6 (INSAS 6)-ல் தரப்பட்டுள்ளது. அதுவும் ஆயுதப்படையினரால் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். பக்க ஆயுதங்கள் சில RV 65, 68, 43, 77 போன்றவை தற்காப்புக்காகவும், நெருக்கமான வட்டத்திற்குள்ளான பயன்பாட்டிற்கும் மட்டுமே பயன்படுத்த காவல் அலுவலர்களுக்கு வழங்கப்படுகிறது. இங்கு துப்பாக்கி சூட்டிற்கான ஆணை தேர்தல் பணியில் இருந்த சிறப்பு துணைத் தாசில்தாரால் தரப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் தாசில்தார் ஆகியோர் எல்லாம் இருந்தும் இத்தகைய மிக முக்கியமான முடிவு படிநிலையில் கீழுள்ள துணை தாசில்தாரால் எப்படி இதையெல்லாம் மீறி எடுக்கப்பட்டது. அரசு இது பற்றி விளக்காமல் மௌனம் சாதிப்பது சரியல்ல என இக்குழு கருதுகிறது.

… இ.த.ச பிரிவுகளுக்கு மாறாக துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளது. மக்கள் திரளைக் கலைந்து போகச் செய்ய எந்த எச்சரிக்கையும் தரப்படவில்லை. திடீரென காவல்துறை துப்பாக்கி சூட்டை மேற்கொண்டுள்ளது. இதை தோட்டாக் காயங்களோடு உயிர் பிழைத்திருப்பவர்கள் உறுதி செய்கிறார்கள். முழங்காலுக்கு கீழே சுடாமல் கழுத்து, தலை என காவல் துறை சுட்டு வீழ்த்தியிருப்பது சட்ட விரோதம் என்பதால் இ.த.ச 302 பிரிவின் கீழ் கொலை வழக்கை பதிவு செய்யலாம்.

… காவல் துறை நிலையாணை 703, ஆயுதமற்ற திரளை கலைந்து போகச் செய்வது தொடர்பானதாகும், தூத்துக்குடி போராட்டக்காரர்களும் ஆயுதமற்றவர்களே. ஆனால் அவர்களை கடுமையாக லத்தி மூலம் கலைந்து போகச் செய்தது தேவையற்றதாகும். இப்பிரிவு வலியுறுத்துவது என்னவெனில், கூட்டத்தைக் கலைக்கிற முடிவு கூட கட்டுப்பாட்டோடு அதன் நோக்கம் நிறைவேறிவிட்டால் உடனே நிறுத்தப்பட வேண்டும். ஆனால் இக்குழு பாதிக்கப்பட்டோரை சந்தித்த பின்னர் என்ன முடிவுக்கு வந்திருக்கிறதெனில், காவல் துறைதான் கட்டுக்கடங்கா கும்பலாக நடந்து கொண்டிருக்கிறார்களே தவிர போராட்டக்காரர்கள் அல்ல. இது தொலைக் காட்சி ஒளிபரப்பிலும் வெளிக் கொணரப்பட்டது. தமிழக அரசோ ஊடக ஒளிபரப்பை தடுக்க ஜாமர்களை பயன்படுத்தியதோடு, சமுக வலைத்தளங்களான பேஸ் புக், வாட்ஸ் அப், ட்விட்டர் ஆகியவற்றை மூன்று நாட்களுக்கு தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி மாவட்டங்களில் முடக்கியது.

நூல்:ஸ்டெர்லைட் போராட்டம் அரசு வன்முறை
ஆசிரியர்கள்: உ. வாசுகி & உண்மை அறியும் குழு அறிக்கை

வெளியீடு: பாரதி புத்தகாலயம்,
7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600 018.
தொலைபேசி எண்: 044 – 2433 2424.
மின்னஞ்சல் : thamizhbooks@gmail.com

பக்கங்கள்: 48
விலை: ரூ 35.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று

முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

இணையத்தில் வாங்க: periyarbooks 


தவறாமல் பாருங்க …

தூத்துக்குடியின் தியாகிகளே | மகஇக பாடல் | காணொளி

“கற்பு” என்றால் என்ன… ? | பொ.வேல்சாமி

ண்பர்களே….

பொ.வேல்சாமி
மிகப் பழமையான காலத்திலிருந்து தமிழ்மொழி மக்களின் பேச்சு வழக்கிலும் இலக்கிய வழக்கிலும் தொடர்ந்து உயிர்ப்புடன் வாழ்ந்து வரும் தன்மையுடையதாக உள்ளதை அனைவரும் அறிவார்கள். இந்த நீண்ட கால வரலாற்றில் பல சொற்களின் பொருள் மாற்றம் அடைவதும் ஒரு சில சொற்களுக்கு பல அர்த்தங்கள் வழங்கி வருவதும் பல சொற்கள் வழக்கத்திலிருந்து மறைந்து வி்ட்ட வரலாற்றையும் நாம் பார்க்கிறோம். அப்படிப்பட்ட பண்புள்ள சொற்களில் “கற்பு” என்பதும் ஒன்று.

தொல்காப்பிய பொருளதிகாரத்தில் ஐந்தாவது அதிகாரமாகிய “பொருளியல்” அதிகாரத்தின் கடைசி நூற்பாவில் (234) சில சொற்களை எடுத்துப் பேசுகின்றார். அந்தச் சொற்களில் கற்பு என்பதும் ஒன்று.

இந்தச் சொல்லை தொல்காப்பியர் எத்தகைய பொருளில் கையாண்டார் என்பது நமக்குத் தெரியவில்லை. தொல்காப்பியத்தின் மிகப் பழைய உரையாசிரியராகிய “இளம்பூரணர்” தன்னுடைய விளக்கத்தில், “கற்பு என்பது – மகளிர்க்கு மாந்தர் மாட்டு நிகழும் மன நிகழ்ச்சி. அதுவும் மனத்தான் உணரக் கிடந்தது.” என்று கூறுகின்றார்.

இளம்பூரணர் கூறுகின்ற விளக்கத்தை இன்றைய மொழியில் சொன்னால் கற்பு என்பது பெண்கள் மற்றவர்களைப் பார்க்கும் போது அவர்கள் உள்ளத்தில் ஏற்படுகின்ற ஒரு உணர்ச்சி, இதனை வெளிப்படையாகக் காட்ட முடியாது என்பதாகக் கூறலாம்.

படிக்க :
♦ அச்சில் வராத தொல்காப்பிய இளம்பூரணர் எழுத்ததிகார உரை !
♦ உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் – தீர்வு என்ன ? | ம.உ.பா.மை அறிக்கை !

இதே சொல்லுக்கு அடுத்து 300 ஆண்டுகள் கழித்து உரை எழுத வந்த நச்சினார்கினியர் “கற்பாவது : தன் கணவனைத் தெய்வமென்று உணர்வதொரு மேற்கோள்.” என்று பொருள் எழுதுகிறார்.

இருவருக்கும் இடையே உள்ள வேறுபாடு மலைக்கும் மடுவுக்கும் உள்ளதாக இருக்கிறது. இந்தச் சூத்திரத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் CHASTITY என்று கூறி இன்றைய நிலையில் உள்ள பொருளைச் சுட்டுகின்றார்.

உண்மையில் கற்பு என்பதற்கு தொல்காப்பியர் என்ற பொருள் எது…? இளம்பூரணர் கூறும் பொருள் தொல்காப்பியர் கருத்தை சரியாக விளக்குவதாகக் கொள்ளலாம்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

நன்றி : முகநூலில் பொ. வேல்சாமி

பொ.வேல்சாமி: தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவர். தமிழக வரலாற்று ஆய்வில் ஈடுபாடு கொண்டவர். வரலாற்றுத் தரவுகளை மறுவாசிப்பு செய்வதும் மாற்று வரலாற்றை உருவாக்குவதும் இவரது எழுத்தின் முக்கிய நோக்கம். முகநூலில் தொடர்ச்சியாக எழுதுகிறார்.

வகுப்பறையில் குழந்தைகள் எண்ணிக்கை கூடினால் என்னதான் ஆகிவிடும் ?

0
அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 2 | பாகம் – 8

குழந்தையுடைய மனதின் ஒவ்வொரு அம்சத்தையும் பேணிக் காத்தல்

திடீரென கதவு பெரும் சத்தத்துடன் திறக்கிறது. “அதிகாரத் தோரணையை உடைய” அம்மா, பகட்டான ஆடையணிந்த ஒரு சிறுவனை உள்ளுக்குள் தள்ளி, கையில் பையைத் திணித்து, என்னால் புரிந்து கொள்ள இயலா ஒரு அச்சுறுத்தல் குரலில் தொனிக்க, என்னைப் பார்த்து சத்தமிட்டுச் சொல்கிறாள்:

“என் மகனுக்கு வகுப்பில் இடம் கண்டுபிடித்துத் தாருங்கள்! அமைச்சரகத்திலிருந்து உங்களுக்கு போன் வரும்!…”

அப்பெண்மணி அதே சத்தத்துடன் கதவை இழுத்து மூடி, சிறுவனை வகுப்பில் விட்டுச் செல்கிறாள். அவளுடைய காலணி ஓசையிலிருந்து, அவள் இடைவழியில் எப்படி விரைவாக நடந்து செல்கிறாள் என்று என்னால் கற்பனை செய்து பார்க்க முடிந்தது.

நான் என்ன செய்வது? அந்தத் தாயின் பின் ஓடிச் சென்று, குழந்தையைத் திருப்பி அழைத்துச் சொல்லும்படி கட்டாயப்படுத்துவதா? சிறுவனை வகுப்பை விட்டு வெளியேற்றி இடைவழியில் நிறுத்துவதா? வகுப்பறையில் குழந்தைகளின் எண்ணிக்கை 39 ஆகும். இன்னுமொரு பெஞ்சு தேவைப்படும். அதை எங்கே போடுவது? விஷயம் இதில் மட்டும் அடங்கியிருக்கவில்லை. மிக முக்கியமானது என்னவெனில் வகுப்பிலுள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் மிக அவசியமான எனது கவனம், அன்பு, அக்கறை, உதவியில் இன்னுமொரு பங்கு குறையும். உங்கள் குழந்தைக்கும் மற்ற குழந்தைகளுக்கும் நீங்கள் என்ன கேடிழைக்கின்றீர்கள் என்று தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள், தாயே.

வகுப்பில் எவ்வளவு குழந்தைகள் இருந்தாலும் ஒரே விதமான பயனைத் தரவல்ல முறையியலோ, ஆசிரியரோ கிடையாது. அளவிற்கதிகமான பயணிகளையுடைய விமானத்திற்குப் பறக்க அனுமதி தருவது பெரிதும் ஆபத்தானது. விமானிகளைக் கேளுங்கள், இப்படிப்பட்ட பயணம் எப்படிப்பட்டது என்று கூறுவார்கள். “ஒருவர் அதிகமாகவோ குறைவாகவோ இருந்தால்தான் என்ன?” இல்லை, இதற்குப் பெரும் முக்கியத்துவம் உண்டு. நன்றாகவோ மோசமாகவோ வளர்க்கப்பட்ட ஒருவர் இருப்பதற்கு எவ்வித விளைவும் இருக்காதா என்ன! ஆயிரக்கணக்கான எனது சக ஆசிரியர்களைப் போன்றே நானும் ஒவ்வொரு குழந்தையையும் தனி நபராக வளர்க்கப் பாடுபடுகிறேன்.

ஆறு வயதுக் குழந்தைகளைக் கொண்ட ஒரு வகுப்பு என்பது ஒரே மாதிரியான கல்வியறிவையும் வளர்ப்பையும் கொண்ட குழந்தைகளைப் பெருமளவில் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைப் பிரிவல்ல. இங்கே குழந்தையுடைய மனதின் ஒவ்வொரு பகுதியையும் சீராட்டி வளர்க்க வேண்டும். சிறு இதயங்களின் ஒவ்வொரு ஜீவ அணுவிலும் மனித நேயத்தை ஊட்ட வேண்டும். 17-ம் நூற்றாண்டிலிருந்த யான் அமோஸ் கமேன்ஸ்கிதான் ஒரே சமயம் ஒரு வகுப்பில் 300 மாணவர்களுக்கு கல்வி போதிக்கலாம் என்று கருதினார். அந்த மேதையின் தவறுக்கு அவரை மன்னிப்போமாக. 21-ம் நூற்றாண்டு பிறக்கப் போகும் இத்தருணத்தில் “மொத்தமான வளர்ப்பு” எனும் முறை சரிப்பட்டு வருமா?

ஒரே ஒரு குழந்தை வகுப்பில் ஆசிரியருடன் இருப்பதும் சரியல்ல. ஏனெனில் அக்குழந்தைக்கு விரைவிலேயே சலிப்பேற்படும். அருகே தான் செய்யும் அதே காரியத்தில் ஈடுபடும் தன்னையொத்த சிறு குழந்தைகள் இல்லாவிடில் ஆர்வம் மிக்க விஷயங்கள் கூட அக்குழந்தைக்கு சலிப்பை ஏற்படுத்தும். ஒரு குழந்தை மற்ற குழந்தைகளுடன் கலந்து பழகிதான் வாழவும் அறியவும் விரும்புகிறான். அவன் அவர்கள் மத்தியில்தான் ஒரு தனி நபராக உருவெடுக்க வேண்டும். அவன் மட்டும் தனியாக இருக்கும் ஒரு வகுப்பிலோ, அளவிற்கு அதிகமான மாணவர்கள் உள்ள வகுப்பிலோ (இங்கே மாணவர்கள் எறும்புப் புற்றில் உள்ள எறும்புகளைப் போலிருப்பார்கள். ஒவ்வொருவருக்கும் அவரவர் காரியமே சரியாக இருக்கும். அவர்களுக்குப் பொது இலட்சியங்கள், நோக்கங்கள், மகிழ்ச்சிகள், கவலைகளே இருக்காது) அவன் இவ்வாறு ஆக முடியாது.

வகுப்பில் ஒரே ஒரு குழந்தை மட்டும் இருந்தால் அவன் யாருமேயில்லை, அவனுக்கு வாழ்வில் சலிப்பேற்படும். அவன் 25 குழந்தைகளின் மத்தியிலிருந்தால் மற்றவர்களைப் போன்றே அவனும் மற்றவர்களுக்கு அவசியமானவன் ஆவான். அவன் ஒரு தனி நபராகத் திகழுவான். அவனுக்கு வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாகவும் சுவாரசியமானதாகவும் இருக்கும். அவன் வகுப்பில் 45 குழந்தைகள் இருந்தால், அவன் மற்றவர்களைப் போன்று வெறும் குழந்தை மட்டுமே. மற்றவர்களுக்கு இவனைப் பற்றி அதிகம் தெரியாது, இவனுக்கும் மற்றவர்களைப் பற்றி குறைவாகவே தெரியும். இவனுக்கு சலிப்பேற்படும், ஆர்வம் குறையும். இவனை மற்றவர்கள் அறிய, மதிக்க, இவன் தன்னாலியன்றவரை தன்னை வெளிக்காட்டிக் கொள்ளும் பல வழிகளை நாடுகிறான்.

படிக்க:
இது எங்க நிலம்டா… நீ பாட்டுக்கும் குந்துனாப்ல வந்து குழாய் பதிப்பியா ?
மே – 22 : அழுவதற்கும் அனுமதி மறுப்பு ! தடையை மீறி நினைவேந்துவோம் !

இப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சியை நீங்கள் பார்த்திருக்கக்கூடும். ஒரு குழந்தை சாதாரணமாக வீட்டில் பெரியவர்களுக்கு அதிகம் இடையூறு விளைவிக்காமல் இருக்கும், குழந்தையை எளிதாக சமாதானப்படுத்தலாம். ஆனால், 3-4 குழந்தைகள் ஒன்று சேர்ந்தால் (மற்றவர்கள் விருந்தினர்களாக வந்தார்கள் என்று வைத்துக் கொள்வோமே), அவர்களை சரிவர கவனிக்காவிடில் “பூகம்பமே” ஏற்பட்டு விடும். 40-50 குழந்தைகள் ஒன்று சேர்ந்தால் (இவர்கள் புத்திசாலியான, அமைதியான, சாந்தமான குழந்தைகளாக இருந்தாலும்) பெரும் ரகளையும் கூச்சலும் ஏற்படும், வீட்டில் “மிகக் கடும் பூகம்பமே” ஏற்படும். சாதாரண குழந்தைக் குறும்பு பன்முக நடவடிக்கையின் மிகச் சிறந்த வடிவங்களாக மாறாது, அதற்குப் பதில் முரட்டுத்தனம், கவனமின்மை, அவசியப் பொருட்களை வீணாக்குதல் போன்ற மோசமான நடவடிக்கைகளாக மாறும்.

இதோ போன்தோ தன் காலணிகளைக் கழற்றி மேசை மீது வைத்து ரசிக்கிறான். அவனை அமைதியாக அணுகி, பாடவேளையின் போது இவ்வாறு செய்யக் கூடாது என்று விளக்க வேண்டும்.

ருசிக்கோ திடீரென எழுந்து கதவை நோக்கிச் செல்கிறாள். “ருசிக்கோ , நீ எங்கே போகிறாய்?”

அவள் பதில் சொல்லவில்லை. கதவைத் திறந்து வெளியில் பார்க்கிறாள். அங்கு தன் தாய் இல்லாததைக் கண்டதும் அழத் துவங்குகிறாள். அவளை சமாதானப்படுத்த வேண்டும்.

அடடா, இச்சிறுமிக்கு என்ன ஆயிற்று?

“குழந்தைகளே, விரைவாகத் தலையைத் தொங்கப் போடுங்கள்! கண்களை மூடுங்கள்! உங்கள் வாழ்க்கையில் நடந்த சிரிப்பு நிகழ்ச்சிகளை நினைத்துப் பாருங்கள்!”

வகுப்பிலேயே மிகச் சிறிய அப்பெண்ணைக் கரங்களில் ஏந்தி வகுப்பறைக்கு வெளியே வருகிறேன்.

“தயவு செய்து உதவி செய்யுங்கள், சிறுமிக்கு உடல் நிலை சரியில்லை” என்று வெளியில் நிற்கும் அம்மாமார்களைப் பார்த்துச் சொல்கிறேன்.

யாரோ ஒருவர் மருத்துவரைக் கூப்பிட ஓடுகிறார். இன்னொருவர் சிறு மேசை மீதுள்ள எல்லாவற்றையும் கீழே போட்டு விட்டு என் கைகளிலிருந்து சிறுமியை வாங்கி மேசை மீது படுக்க வைக்கிறார். மயக்கம் விரைவிலேயே தெளிகிறது. மருத்துவர் வந்து சிறுமியைத் தன்னறைக்குக் கூட்டிச் செல்கின்றார்.

இச்சிறுமியின் தாய் எங்கே? ஏன் அவள் இங்கு இல்லை? தன் மகளின் நோயைப் பற்றி அவள் ஏன் என்னை எச்சரிக்கவில்லை?

நடந்ததிலிருந்து இன்னமும் முற்றிலும் மீளாத ஒரு நிலையில் வகுப்பறைக்குள் திரும்புகிறேன். குழந்தைகள் அனைவரும் அதே போல் தலைகளைத் தொங்கப் போட்டு, கண்களை மூடியபடி உள்ளனர். அவர்கள் ஏற்கெனவே சிரித்துக் கொண்டிருந்தனர். “எங்கே, தலையைத் தூக்குங்கள்!”

அவர்கள் எதையாவது பார்த்தார்களா? இல்லை. ருசிக்கோ மட்டுமே எதையாவது பார்த்திருக்கக்கூடும், ஆனால், அவள் அழுதபடி அம்மாவைத் தேடிக் கொண்டிருந்ததால் எதையும் கவனிக்கவில்லை; இந்தப் புதுச் சிறுவன் ஒருவேளை பார்த்திருக்கலாம். நான் அவன் கரத்தைப் பற்றிக் குலுக்கி விட்டு நடுவரிசையில் மூன்றாவது இடத்தில் உட்கார வைக்கிறேன். ருசிக்கோவை சமாதானப்படுத்துகிறேன் (“வா, இருவரும் சேர்ந்து வகுப்பறையைச் சுற்றி வருவோம்”). போன்தோ விரைவாகக் காலணிகளை அணிய உதவுகிறேன்.

(“ஒரு குழந்தை அதிகமாகவோ குறைவாகவோ இருந்தால் என்ன ஆகிவிடும்!”)

“உங்களுடைய சிரிப்புச் சம்பவங்களை இடைவேளையின் போது சொல்லுங்கள்!” என்றபடியே கரும்பலகையில் உள்ள இரண்டாம் பகுதியைத் திறக்கிறேன். “இங்கே (வட்டங்களைச் சுட்டிக் காட்டுகிறேன்) எட்டு வட்டங்கள் உள்ளன என்று நினைக்கிறேன்!” என்று ஏதோ இன்னொரு முறை சரிபார்ப்பது போல் பாவனை செய்கிறேன். “நான் சொன்னது சரியா?”

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

ஆர்.எஸ்.எஸ்.-க்கு ஆதரவானவர்களா முசுலீம் பெண்கள் ?

2

2017-ம் ஆண்டு உத்தர பிரதேச மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது, அதை நரேந்திர மோடியின் வெற்றியாகக் கொண்டாடிய இரண்டு வாரணாசி முசுலீம் பெண்கள் குறித்த செய்தி ஊடகங்களில் பிரதானமாக இடம்பெற்றிருந்தது. இந்த செய்தியை ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் அனைத்து ஊடகங்களுக்கும் அளித்து பரவலாக்கியது. சில புர்கா அணிந்த பெண்கள் மோடியை புகழ்ந்து பாடுவது, முசுலீம்கள்கூட தங்களுடைய சிறந்த தலைவரைக் கொண்டாடுவதாக இந்தப் படங்களைப் பார்த்த பலர் கருதினர்.

சில மாதங்கள் கழித்து, மே-2017-ம் ஆண்டு சில முசுலீம் பெண்கள் வாரணாசியில் உள்ள சங்கட் மோச்சன் தர்பாரில் முத்தலாக் என்னும் மோசமான பழக்கத்தை விரட்ட, 100 முறை அனுமன் சாலீசாவை சொன்னதாக அதே ஏ.என்.ஐ. நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது.

“அனுமன் கோயிலில் முத்தலாக்கிற்கு முடிவு கேட்கும் முசுலீம் பெண்கள்” என தலைப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்தது அமர் உஜாலா பத்திரிகை. ‘முத்தலாக்கிற்கு முடிவு கேட்கும் முசுலீம் பெண்கள்’ என தலைப்பிட்டு செய்தி வெளியிட்டது டைம்ஸ் ஆஃப் இந்தியா.

தீபாவளியின் போது, வாரணாசியில் முசுலீம் பெண்கள் ராமருக்கு ஆரத்தி எடுப்பதாக தனது யூ-ட்யூப் சேனலில் செய்தி வெளியிட்டிருந்தது டைம்ஸ் ஆஃப் இந்தியா.  ஆறு மாதங்கள் கழித்து, ஏ.என். ஐ. முசுலீம் பெண்கள் மோடிக்கு ராக்கி அனுப்பத் தயாராகி வருவதாக செய்தி அனுப்பியது.  மோடிதான் தங்களை முத்தலாக்கிலிருந்து காப்பாற்றிய உண்மையான சகோதரன் என அவர்கள் சொன்னதாகவும் அந்த செய்தி கூறியது.

மிக சமீபத்தில் வாரணாசியில் மோடியின் வெற்றிக்கு முசுலீம் பெண்கள் உழைப்பதாகவும் செய்தி வெளியானது. பெரும்பாலான இந்த செய்திகள் ஏ.என்.ஐ. நிறுவனத்திடமிருந்து ஊடகங்களுக்கு அளிக்கப்பட்டவை.  இந்த முசுலீம் பெண்கள் குறித்த மேலதிக விவரங்கள் அந்த செய்திகளில் பெரும்பாலும் இடம் பெற்றிருக்காது. இந்தச் செய்திகளில் நான்கைந்து முசுலீம் பெண்கள் மட்டுமே இருப்பர். அனைத்து செய்திகளிலும் இருப்பதுவும் இதே பெண்கள்தான். இவர்கள் ஆர்.எஸ்.எஸ். ஆதரவு பெற்ற முசுலீம் மகிளா பவுண்டேஷன் மற்றும் விஷால் பாரத் சங்கத்தைச் சேர்ந்த பெண்கள் என்பது குறித்து இந்தச் செய்திகளில் எங்கேயும் சொல்லப்பட்டிருக்காது.

ஒட்டுமொத்த முசுலீம் பெண்களும் மோடியை ஆதரிக்கிறார்கள் என்கிற பிம்பத்தை ஊடகங்கள் கட்டமைக்க உதவிய இந்த நான்கைந்து முசுலீம் பெண்கள் யார்?

வாரணாசியிலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது விஷால் பாரத் சங்கம்.  இந்த சங்கத்தின் அலுவலகத்தின் பெயர் சுபாஷ் பவன். இரண்டு அடுக்கு கட்டத்தின் நுழைவாயிலில் சுபாஷ் சந்திர போஸின் சிலை வைக்கப்பட்டுள்ளது. அருகே பாஜக இலட்சிணையும், ஆர்.எஸ்.எஸ்-இன் முசுலீம் பிரிவான முசுலீம் ராஷ்டிரிய மஞ்ச்-ன் வழிகாட்டுநரான இந்திரேஷ் குமாரின் பெரிய படமும் நுழைவாயில் அருகே வைக்கப்பட்டிருந்தன.

விஷால் பாரத் சங்கத்தின் தலைவர் ராஜீவ் ஸ்ரீவத்சவா, கைவிடப்பட்ட தலித், முசுலீம் குழந்தைகள் உள்பட பலரை தத்தெடுத்து வளர்ப்பதாகக் கூறுகிறார்.  முசுலீம் குழந்தைகள் சுதந்திரமாக அவரவர் இறைவனை வழிபட அனுமதிக்கப்படுவதாக கூறுகிறார் இவர். இங்கே முசுலீம்கள்கூட சைவம் உண்பவர்களாக உள்ளதாகவும் அனைவருமே ஆன்மீகத்தில் ஈடுபாடு உள்ளவர்கள் என்றும் கூறுகிறார் இங்கே உள்ள ஒரு சிறுமி.

முசுலீம் குழந்தைகளுக்கு அரபுப் பெயர் வைக்கப்படுவதை தவிர்த்து அனைவருக்கும் ‘இந்திய’ பெயரை, உதாரணத்துக்கு சூரஜ் அன்சாரி, ப்ரிதிவி அன்சாரி போன்ற பெயர்களை வைத்துள்ளதாக சொல்கிறார் ஸ்ரீவத்சவா. முசுலீம் ராஷ்ட்ரிய மஞ்ச் உடன் இந்த அமைப்புக்கு தொடர்புள்ளதை மறுக்கிற இவர், அந்த அமைப்பின் தலைவர் படத்தை மரியாதை நிமித்தமாக வைத்துள்ளதாகக் கூறுகிறார்.

அதன்பின், இரண்டு முசுலீம் பெண்களை அறிமுகப்படுத்தி, “முசுலீம்கள்கூட ராமர் கோயில் கட்டப்படுவதை புரிந்துகொண்டு அதற்காக வேண்டிக் கொள்கிறார்கள்” என்கிறார்.  நஜ்மா, நஸ்னீன் ஆகிய இந்த இரண்டு பெண்கள்தான் ஏ.என்.ஐ. செய்திகளில் முசுலீம் பெண்களின் பிரதிநிதிகளாக வலம் வந்தவர்கள்.  புர்கா அணிந்த பின்பே படமெடுக்க அனுமதித்த நஜ்மா, புர்கா அணிந்தால்தான் தன்னை சரியான முசுலீம் பெண் என அடையாளம் காண்பார்கள் என்கிறார். இன்னொரு பெண் நஸ்னீன் புர்கா அணிவதில்லையாம்.

இரண்டு பெண்கள் நெசவாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்கிறார்கள். வறுமை காரணமாக படிக்க முடியாமல் தவித்த தன்னை ஸ்ரீவத்சவா, இந்த இல்லத்துக்கு அழைத்து வந்ததாகச் சொல்கிறார்.

தன் வீட்டின் அருகே இருந்த பூங்காவில் ஸ்ரீவத்சவா குழந்தைகளுக்கு பாடம் எடுத்துக்கொண்டிருந்தபோது, நஜ்மாவுக்கு அவருடன் தொடர்பு உண்டானதாகவும், அப்போது அவர் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்ததாகவும் சொல்கிறார். தனது பெற்றோர் அடுத்தடுத்து இறந்துவிட ஆதரவு இல்லாத நஜ்மாவும் அவருடைய சகோதரரும் ஸ்ரீவத்சவா நடத்தும் இல்லத்துக்கு வந்திருக்கிறார்கள்.

தற்போது பி.எச்.டி. படிக்கும் நஜ்மா, மோடி குறித்து ‘ஆய்வு’ செய்துகொண்டிருப்பதாக சொல்கிறார்.  இவரிடம் மோடியின் வெற்றியை எத்தனை பெண்கள் சேர்ந்து கொண்டாடினீர்கள் எனக் கேட்டபோது, சற்றே நிதானித்த இவர், ‘இந்த முறை நிறைய பெண்கள் கொண்டாடுவார்கள்’ என்கிறார்.

முசுலீம்களின் இறை தூதராக மோடியை நிறுத்துவதும் முசுலீம் பெண்கள் அயோத்தியில் ராமர் கோயிலை விரும்புகிறார்கள் என கட்டமைக்கப்படுவதும் இந்துத்துவ தேசியத்தின் ஒரு பகுதியாக உள்ளது. விஷால் பாரத் சங்கம் போன்ற அமைப்புகள் கடந்த பத்தாண்டுகளாக இதற்கெனவே உழைத்து நஜ்மா, நஸ்னீன் போன்ற பெண்கள், முசுலீம்களின் பிரதிநிதிகளாக உருவாக்கியுள்ளது.

இந்த இரண்டு பெண்களும் அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயிலில் முசுலீம்கள் வழிபட வேண்டும் என்பதோடு, “நமது முன்னோர்கள் அங்கே ராமரை வழிபட்டார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்” என்கிறார்கள். மோடியும் அவருடைய கட்சியும் மட்டுமே கோயிலை கட்டுவார்கள் என்பதையும் ஒரே குரலில் இருவரும் சொல்கிறார்கள்.

படிக்க:
மே – 22 : அழுவதற்கும் அனுமதி மறுப்பு ! தடையை மீறி நினைவேந்துவோம் !
சமூக ஊடகங்களில் கேலியான மோடியின் குகை ‘தியானம்’ !

இந்த இரண்டு பெண்களின் கருத்துக்களையும் முசுலீம் சமூகம் விலகி நிற்கிறது. “இவர்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் உள்ளவர்கள். அவர்களுடைய அரசியல் மிகவும் ஆபத்தானது. இதைக் காட்டிலும் ஊடகங்களின் செயல் மிகவும் கீழ்த்தரமானது. நான்கைந்து பேரை முசுலீம்களின் பிரதிநிதிகளாகக் காட்டுகிறார்கள். இந்த இரண்டு ஆர்.எஸ்.எஸ். பெண்கள், ஒட்டுமொத்த சமூகத்தின் பிரதிநிதிகளாக பேசாத ஒன்றை பேசுவதுதான் உண்மையில் மிக மிக ஆபத்தானது” என்கிறார்கள் வாரணாசியில் உள்ள முசுலீம் சமூகத்தின் பிரதிநிதிகள்.


கட்டுரையாளர் :  ராதிகா போர்டியா
தமிழாக்கம் : கலைமதி
நன்றி :  த வயர்

இது எங்க நிலம்டா… நீ பாட்டுக்கும் குந்துனாப்ல வந்து குழாய் பதிப்பியா ?

‘அல்லும் பவலும் ரவ தூங்காம பச்ச புள்ள மாதிரி காவந்து பண்ணிக்கிட்டிருக்கோம்… நடவு நட்டு நாலு நாளு கூட ஆவல. அதுக்குள்ள நட்ட வயல்ல மிஷினை கொண்டாந்து ஏத்துறானுவொ… கேட்டாக்க, ஓஎன்ஜிசி காரனாம், கொழா பதிக்கிறானாம். நீ என்ன மயித்த வேணும்னாலும் பண்ணிக்க.. இது எங்க நிலம்டா… நாங்க பொண்டாட்டி தாலிய வித்து வெள்ளாமுட்டு வெப்போம், நீ பாட்டுக்கும் குந்துனாப்ல வந்து குழாய் பதிப்பியா? என் நிலத்துல கால் வைக்க என்கிட்ட கேட்டியா? உன் கம்பெனிக்குள்ள வந்து உன்னை கேட்காம அங்கருக்கிற மிஷினை தூக்கிட்டு வந்தா வுட்டுருவியா?’

அந்த விவசாயி கொலைவெறியில் பேசுகிறார். அதில் நியாயமும் இருக்கிறது. நடவு வயலில் பொக்லைன் இயந்திரங்கள் செல்லும் காட்சியே மனதை நடுங்கச் செய்கிறது.

பயிரில் ஆடு, மாடு தெரியாமல் வாய் வைத்துவிட்டாலே ரசாபசமாகும். வாய்ச் சண்டையில் ஆரம்பித்து, மம்புட்டியில் அடித்து மண்டை உடைவது வரை நிகழும். இவர்கள் ஓர் இயந்திரத்தையே உள்ளே விட்டு நாசம் செய்கிறார்கள். அந்த நிலத்தின் விவசாயியிடம் ஒரு வார்த்தைக் கேட்கவில்லை.

நாகை மாவட்டம் தரங்கம்பாடி வட்டாரத்தில் இருக்கும் முடிகொண்டநல்லூர் என்ற கிராமத்தில் நேற்று (16-05-2019) இப்படி இரண்டு விவசாயிகளின் வயலில் பொக்லைன் இயந்திரத்தை இறக்கியுள்ளனர். மேமாத்தூர், காளகஸ்திநாதபுரம் உள்ளிட்ட கிராமங்களிலும் இந்த அட்டூழியம் தொடர்கிறது. இதற்கு எதிரான விவசாயிகளின் போராட்டங்களும் தொடர்கின்றன.

ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு சொந்தமான எரிவாயுவை குழாய் வழியாக மேமாத்தூர் கொண்டு சென்று சேர்ப்பதுதான் திட்டம். இதற்காக, மாதானம் முதல் மேமாத்தூர் வரையில் 29 கி.மீ தூரத்துக்கு குழாய் பதிக்கும் பணியை மேற்கொள்கிறது கெய்ல் நிறுவனம். தற்போதைய குழாய் பதிப்பு இதற்காகத்தான்.

படிக்க :
♦ டெல்டாவை நாசம் செய்யும் கெயில் – எதிர்த்தால் பொய் வழக்கு !
♦ ஹைட்ரோ கார்பன் : தமிழகத்தைச் சுடுகாடாக்க மீண்டும் நுழைகிறது வேதாந்தா !

ஆனால் நிலத்துக்கு சொந்தக்கார விவசாயிகளிடம் கேட்க வேண்டாமா? அவர்களின் அனுமதி பெற வேண்டாமா? பத்து போலீஸ்காரர்களை துணைக்கு வைத்துக்கொண்டு என்ன வேண்டுமென்றாலும் அழிச்சாட்டியம் செய்யலாமா? இவர்கள் எந்த கேட்டு கேள்வியும் இல்லாமல் நிலத்துக்குள் மிஷினை விட்டு ஏற்றுவார்கள். விவசாயிகள் வக்கீலை பிடித்து கோர்ட்டுக்கு ஓடி தடையுத்தரவு வாங்க வேண்டுமா?

ஆனால், இந்தக் குழாய் பதிப்புக்கு வேறு சில, பரந்த – நீண்டகால நோக்கங்களும் இருக்கின்றன. தமிழ்நாட்டில் 274 இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க மத்திய பெட்ரோலியத் துறையுடன் ஒப்பந்தம் செய்திருக்கிறது வேதாந்தா நிறுவனம்.

தற்போது ஓ.என்.ஜி.சி.யும், கெய்லும் மேற்கொள்ளும் இந்த உள் கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் நாளை பயன்படப்போவது வேதாந்தாவுக்குதான். சொல்லப்போனால், ஓ.என்.ஜி.சி., கெய்ல் ஆகிய இரு அரசு நிறுவனங்களும், அரசின் நிதியையும், அதிகாரத்தையும் பயன்படுத்தி வேதாந்தாவுக்குத் தேவையான மாதிரி களத்தை செப்பனிடும் பணியைதான் செய்து கொண்டிருக்கின்றன.

இன்னும் வேதாந்தா வரவில்லை. வந்தால் இந்தப் போராட்டங்களை அரசு இத்தனை மென்மையாக எதிர்கொள்ளாது என்பது மட்டும் நிச்சயம்.

நன்றி : முகநூலில் – பாரதி தம்பி

மே – 22 : அழுவதற்கும் அனுமதி மறுப்பு ! தடையை மீறி நினைவேந்துவோம் !

பத்திரிகைச் செய்தி

20-5-2019

மே – 22 ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகள் நினைவு நாள் !
அழுவதற்கும் அனுமதி இல்லை ! ஆனால் இது ஜனநாயக நாடு !

அன்பார்ந்த நண்பர்களே !

கடந்த ஆண்டு மே 22 அன்று நடந்த ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியான தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துவது தமிழக மக்கள் அனைவரின் கடமையும் உரிமையுமாகும்.

மக்கள் அதிகாரம் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்த சென்னை, மதுரை ஆகிய இரு இடங்களில் அனுமதி கோரி இருந்தோம். போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.

“மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளதால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்றும், பிறகு ஏதேனும் ஒரு நாளில் நடத்துவதற்கு அனுமதி கோரினால் பரிசீலிப்பதாகவும்” எடப்பாடி அரசின் காவல்துறை கூறியிருக்கிறது.

படிக்க:
♦ ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளை நினைவு கூர்வோம் ! அனைத்துக் கல்லூரி மாணவர் கூட்டமைப்பு அறைகூவல் !
♦ சமூக ஊடகங்களில் கேலியான மோடியின் குகை ‘தியானம்’ !

தேர்தல் காலத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, அண்ணா, கருணாநிதி, காமராஜர், காந்தி ஆகியோரின் நினைவு நாட்கள் வருமானால், அவற்றையும் வேறொரு தேதியில் நடத்திக் கொள்ளுமாறு எடப்பாடி அரசு உத்தரவிடுமா?

தூத்துக்குடி படுகொலை என்பது தனது சொந்த மக்களுக்கு எதிராக தமிழக அரசு நடத்தியிருக்கும் ஜாலியன் வாலாபாக் படுகொலை. பலம் பொருந்திய பன்னாட்டு நிறுவனமான வேதாந்தாவை எதிர்த்து அமைதி வழியில் போராடி வென்றிருக்கும் தூத்துக்குடி மக்களை உலகமே பாராட்டுகிறது. அந்த மக்களை தலையிலும் வாயிலும் சுட்டுக் கொன்றது மட்டுமல்ல, அந்தத் தியாகிகளின் நினைவையும் கூட கொன்றுவிட வேண்டும் என்று நினைக்கிறது இந்த அரசு.

மக்கள் அதிகாரம் சார்பில் மே 22 அன்று காலை 10-30 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டத்திலும், மதுரையில் பெரியார் பேருந்து நிலையம் எதிரிலும் நினைவேந்தல் நடத்துகிறோம்.

அழுவதற்குக்கூட அனுமதி மறுக்கும் இந்த அடக்குமுறை அரசைக் கண்டிக்குமுகமாக, வாயில் கருப்புத்துணி கட்டியும், கையில் மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தவுள்ளோம்.

ஒவ்வோர் ஊரிலும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளின் புகைப்படங்களை வைத்து அனைவரும் அஞ்சலி செலுத்த வேண்டும் என மக்கள் அதிகாரம் சார்பில் தமிழக மக்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி !

தோழமையுடன்,


வழக்கறிஞர்.சி.ராஜு
மாநில ஒருங்கிணைப்பாளர்
மக்கள் அதிகாரம்