Saturday, June 20, 2026
முகப்பு பதிவு பக்கம் 507

நெல்லை ஆலங்குளம் – தொடர் முற்றுகையில் மூடப்பட்டது டாஸ்மாக் !

0

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் வட்டத்தில் உள்ளது புதுப்பட்டி கிராமம். குறு விவசாயிகள் நிறைந்த பூமி இது.  விவசாயிகள் மானாவரியாகவும், கிணற்றுப் பாசனமாகவும் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த விளைநிலங்களுக்கு இடையில்தான் டாஸ்மாக் கடை கடந்த 4.9.2017 ல் திறக்கப்பட்டது.

இதனை எதிர்த்து அப்பகுதி விவசாயிகள் மக்கள் அதிகாரத்துடன் இணைந்து டாஸ்மாக் எதிர்ப்புக் குழு ஒன்றை அமைத்துப் போராடினர். அந்த செய்தி  நெல்லை : விளைநிலத்தில் டாஸ்மாக்கை திறந்த அரசு – விவசாயிகள் போர்க்கோலம் ! என்ற தலைப்பில் வினவு தளத்தில் வெளிவந்துள்ளது.

முதல் நாள் போராட்டம் முடிவில், மக்கள் கடைசி வரை எதிர்பார்த்து காத்திருந்தும் மண்டல மேலாளர் (DM) வரவேயில்லை. ஆனாலும் மக்களின் போராட்டம் உறுதி குன்றாமல் இரவும் தொடர்ந்தது. 12.10.2017 அன்று காலையே போராட்டத்தின் போது  பந்தல் போடுவதற்கு அனுமதிக்காத போலீசு, இரவில் ட்யூப்லைட் போடுவதற்கும் அனுமதிக்கவில்லை. ஏன் தடுக்கிறீர்கள் என்று கேட்டபோது, மேலதிகாரிகள் அப்படிச் செய்ய அனுமதி அளிக்க கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்கள். என்னால் எதுவும் செய்ய முடியாது என்று இன்ஸ்பெக்டர் வெளிப்படையாகவே கூறினார். எப்படியாவது மக்களை கலைந்து செல்ல வைக்க வேண்டும் என்ற அவர்களின் எண்ணம் புரிந்தது.

இரவு முழுவதும் தொடர்ந்த லேசான தூறலிலும் மக்கள் உறுதியுடன் இருந்தனர். மக்களே ஏற்பாடு செய்த ஒற்றை பெட்ரோமாக்ஸ் லைட்டை கொண்டே இருட்டை விரட்டினோம். குழுவாக அமர்ந்து போராட்டங்கள் பற்றியும், சமூகத்தைப் பற்றியும் உரையாடி அறியாமையும், தயக்கத்தையும் விரட்டினோம்.

மக்கள் தூங்கினாலும் ‘உளவுத்துறையோ தூங்காமல் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.’ இதனிடையே பின்னிரவு வரையிலும் மண்டல அதிகாரி வராததால் மேலும் மக்களின் கோபம் அதிகமானது. இரவோடு இரவாக மண்டல அதிகாரி வராததைக் கண்டித்து விடிய விடிய போராட்டம் தொடர்வதாக ஆலங்குளம் புதுப்பட்டி வட்டாரத்தில் பரவலாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

அடுத்த நாள் காலையும் – போராட்டம் தொய்வின்றி தொடர்ந்தது. பெண்கள் தங்கள் கைக்குழந்தைகளுடன் இருந்தனர். வெயில் அதிகரிக்கவே அவர்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் மீண்டும் பந்தல் போட முயற்சித்தபோது, இன்ஸ்பெக்டர் வந்து போடக்கூடாது என்று தடுத்தார். மக்களின் பாதுகாப்பை விட மேலதிகாரியின் உத்தரவையே முக்கியமாக கருதி செயலாற்றினார்.

இந்த முறையோ மக்களே கேள்வி எழுப்பி வாக்குவாதம் செய்தனர். மண்டல மேலாளர் வருவதற்கு நடவடிக்கை எடுங்கள் இல்லையென்றால் எங்களைத் தடுக்காதீர்கள். மீறித் தடுத்தால் சாலை மறியலில் இறங்குவோம் என்று துணிந்தனர். அதன் பிறகே பணிந்த்து போலீசு. மண்டல மேலாளருக்கு போன் செய்து தயவு செய்து உடனே வந்துவிடுங்கள் என்று தொலைபேசியில் மன்றாடினர். மதியம் 1.30 மணிக்கு மண்டல மேலாளர் வந்துவிடுவார், அதுவரைப் பொறுத்துக் கொள்ளுங்கள் என்று போலீசு கேட்டுக்கொண்டது.

மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் தாசில்தார்

1.45 -க்கு வந்த மண்டல மேலாளர் எடுத்த எடுப்பிலேயே தாசில்தார் பேசியதையே வாந்தி எடுத்தது போல் இரண்டு மாதம் அவகாசம் வேண்டும் என்றார். மக்களோ உடனே மூடுங்கள் என்று உறுதியுடன் நின்றனர். பின்னர் தீடீர்னு கடைய எடுக்க சொன்னால் எப்படி என்று மக்களையே குற்றம் சாட்டத் தொடங்கிய அந்த அதிகாரி, உடனடியாக மாத்த முடியாது, அதற்கு தயாரிப்பு செய்ய வேண்டும். இடம் பார்க்க வேண்டும், பிறகுதான் மாற்ற முடியும் என்று அலட்சியமாக பேசினார்.

அதிகார வர்க்கத்தின் திமிர்த்தனத்தை கண்முன்னே கண்ட  மக்களோ, தீபாவளிக்கு டார்கெட் வச்சு கொள்ளையடிக்கத்தானே அவகாசம் கேட்கிறீர்கள், லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கி, ஏசி ரூமில் இருக்கும் உங்களுக்கு எங்க சிரமம் எப்படித் தெரியும்? என்று முகத்தில் அடித்தது போல் அம்பலப்படுத்தினர். கடையை மூடும் வரை இந்த இடத்தை விட்டு நகரமாட்டோம் என்று அறிவித்தனர் மக்கள். தொடர்ந்து அதிகார வர்க்கத்தைக் கண்டித்த முழக்கங்களால் அந்தப் பகுதியையே அதிர்ந்தது.

அரசோ மக்கள் சாராயத்தை குடித்து அடிமையாக கிடக்க வேண்டும் என்று விரும்புகிறது. மக்களோ சுயமரியாதையுடன்தான் இருப்போம் என்று போராட்டக் களத்தில் நிற்கின்றனர்.

மக்களின் கேள்விகளையும், உறுதியையும் எதிர்கொள்ள முடியாமல் ஓடிப்போய் வண்டிக்குள் ஏறி அமர்ந்து கொண்டார் அதிகாரி. போலீசோ மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல் தவித்தனர்.

மக்கள் போராட்டத்தைக் கேள்விப்பட்ட அந்தப் பகுதியில் இருந்த தி.மு.க – எம்.எல்.ஏ பூங்கோதை அங்கு வந்தார். அவரிடமும் மக்கள் கடையை மூடும் வரை ஓயமாட்டோம். அதற்கான நடவடிக்கை எடுங்கள் என்று கூறினர்.  அவரோ நானும் வருகிறேன், வாருங்கள் தொகுதி அதிமுக எம்பி பிரபாகரன் வீட்டை முற்றுகையிடுவோம் என்று மறுபடியும் வடிவேல் போல முதலில் இருந்து தொடங்கினார். போராட்டத்தின் இறுதிக் கட்டத்தில் நின்றிருந்த மக்களோ எல்லாரையும் சந்தித்து விட்டோம். மூடுவதற்கான நடவடிக்கை எடுங்கள் என்று கூறினர்.

தி.மு.க. – எம் எல் ஏ பூங்கோதை

அதன் பிறகு எம்.எல்.ஏ வும், மண்டல அதிகாரியும் நாங்கள் உடனே கலெக்டரைச் சந்தித்து பேசுகிறோம் என்று கிளம்பிச் சென்றனர். போராட்டமும் தொடர்ந்தது.

மக்களின் வாழ்க்கை சிதறடிக்கப்பட்டு, வாழ்வாதாரம் அழிக்கப்பட்டு, அதிலிருந்து மீளவும் வழிதெரியாத நிலையில் தவித்து நிற்கின்றனர். ஏதோ ஒரு வகையில் இந்த துன்பங்களுக்கெல்லாம் காரணம் இந்த அரசுதான் என்பதை தங்களின் அனுபவங்களின் மூலமாக உணர்ந்து கொண்டுள்ளனர். இந்த தீயில் எண்ணைய் ஊற்றுவது போல்தான் அதிகார வர்க்கம் மக்களை கிள்ளுக் கீரையாக நினைத்து நடந்து கொண்டது.

மக்களின் உறுதியான, விடாப்பிடியான, சமரசமற்ற போராட்டத்துக்கு முன்னால் ; தெளிவாகச் சொன்னால் மக்களின் அதிகாரத்துக்கு முன்னால் எதுவும் செல்லுபடியாகாது என்பது அங்கே நிரூபணமானது.

13.10.2017 அன்று மாலை 6:00 மணிக்கு டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடுவதாகவும், ஒரு வாரத்தில் சாராய பெட்டிகளை எடுத்துவிடுவதாகவும் அறிவித்து அதிகார வர்க்கம் பணிந்தது.

இதனைத் தொடர்ந்து அடுத்தநாள் அதிகாலையில் ஆலங்குளம் நகரம்,  சுற்றுவட்டார கிராமங்கள் முழுவதிலும் மக்களின் இந்த வெற்றியை பிரகடனப்படுத்தி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

டாஸ்மாக் மட்டுமல்ல, மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் போராட்டமே தீர்வு என்பதை இந்தப் போராட்டத்தின் மூலம் ஆணித்தரமாக உணர்ந்து கொண்ட மக்கள் மக்கள் அதிகாரத்தோடு இணைந்து பயணிப்பதற்கு ஆயத்தமாயுள்ளனர்.

இறுதி வரை இந்த போராட்டத்தில் மக்களோடு இருந்து போராடியது மக்கள் அதிகாரம் தோழர்கள் தான் என்பதை இந்த போராட்டச் செய்தியை  வெளியிட்ட எந்த ஊடகமும் பதிவு செய்யவில்லை. மக்கள் அதிகாரம் எனும் அமைப்பின் பெயர் மக்களிடம் சென்று விடக் கூடாது என்பதில் ஜனநாயகத்தின் அத்தனை தூண்களும் ஒன்றுபட்டு நின்றன. ஆனால் மக்கள் மனதில் நிலைத்து விட்டதை இவர்களால் என்ன செய்ய முடியும்?

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
நெல்லை மண்டலம்.
_____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

டெங்கு : விழுப்புரம் நகராட்சியை முற்றுகையிட்ட மக்கள் அதிகாரம்

1

விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட 42 வார்டுகளையும் மக்கள் அதிகாரம் அமைப்பு ஆய்வு செய்தது. வார்டுகளில் உள்ள பாதாள சாக்கடைகளில் ஏற்பட்டுள்ள  அடைப்புகள், உடைப்புகள், தண்ணீர் குழாய் இணைப்புகள் உடைந்து சாக்கடை நீருடன் குடிநீரும் கலந்து வருவது, சாலைகளில் தேங்கி நிற்கும் கழிவு நீர் மற்றும் குப்பைகள், அரசு மருத்துவமனைகள், அலுவகங்கள் வளாகத்தில்  புதர் மண்டிக் கிடப்பது, மருத்துவ கழிவுகள் முறையின்றியும், பாதுகாப்புமின்றியும் கொட்டப்படுவதும் சாதாரணமாக இருக்கிறது.

போதிய மருத்துவர்கள் இல்லாதது. 100, 150 பேருக்கு ஒரு மருத்துவர், 32 படுக்கை வசதி கொண்ட வார்டுகளில் 60, 80 நோயாளிகளை சேர்ப்பது, போதிய துப்புரவு பணியாளர்கள் இல்லாதது, நோய் கருவிகள், சுத்தப்படுத்துவதற்க்கான பொருட்கள், உபகரணங்கள் பற்றாக்குறை என தமிழக அரசும், மாவட்ட, நகராட்சி நிர்வாகமும் செயலற்று, மக்களை பாதுக்காக்க துப்பில்லாமல் தகுதிழந்து நிற்பது தெரிய வந்தது.

ஏடிஎஸ் கொசுக்களுக்கு போட்டியாக மக்களை காவு வாங்க இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் ஆட்சியாளர்கள், அதிகாரிகள், அமைச்சர்கள், ஊடகங்கள், டெங்கு சம்மந்தப் பட்ட மருந்துக்கு 16 கோடி நிதி, சிறப்பு மருத்துவ முகாம்கள், நடமாடும் மருத்துவ ஊர்திகள், அரசு சுனாமி வேகத்தில் வேலை செய்து வருகிறது என்ற வெற்றுப் பீற்றல்கள், மக்கள் தான் எங்களுக்கு ஒத்துழைப்பு தரவில்லை என்று பாதிக்கப் பட்ட மக்களையே குற்றவாளியாக்குவது என்று தினம் தினம் ஒரு பொய்யை மக்கள் மத்தியில் பேசி வருகிறார்கள்.

இதை எதிர்த்து மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பாக 12.10.2017 அன்று மக்கள் அதிகாரம்  தோழர்கள்  விழுப்புரம் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் மோகன்ராஜ் தலைமையில் புகைப்பட ஆதாரங்களோடு இந்த அரசையும், நகராட்சியையும் கண்டித்து முழக்கமிட்டவாறு நகராட்சி ஆணையரை நோக்கி சென்று முற்றுகையிட்டனர்.

முழக்கத்தை கேட்டவுடன் அருகில் இருந்த மக்கள் குவிய தொடங்கினர். நகராட்சி  ஊழியர்கள் காவல் துறைக்கு தகவல் அளித்தனர். பின் நகராட்சி ஆணையர் தோழர்களை உள்ளே அழைத்தார். பின் தோழர்கள் ஆய்வின் விவரங்களையும், புகைப்படங்களையும் ஆணையரிடம் காண்பித்து கேள்விகளை எழுப்பினர்.

தண்ணீர் தேங்கினால் மக்களுக்கும், கடைகளுக்கும் அபராதம் என்றால் இதோ, உங்கள் அலுவலகத்தை பாருங்கள், மாவட்ட ஆட்சி அலுவலகத்தை பாருங்கள், வட்டாச்சியர் அலுவலகத்தை பாருங்கள். நீங்கள் மக்களுக்கு அறிவுரை கூற உங்களுக்கு என்ன அருகதை இருக்கு? என்று கேட்டதற்கு  ஆணையர்  “எங்களால் முடிந்த வரை நாங்கள் செய்து வருகிறோம். ஆனால் அரசு மருத்துவமனைகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எங்கள் அதிகாரத்தில் இல்லை, அதை அவர்கள் தான் செய்ய வேண்டும்” என்றார்.

இப்படி அரசு நிர்வாகமானது தங்களுக்குள்ளாகவே முரண்பட்டுக்கொண்டு தன் பொறுப்புகளை துறப்பதும், மக்களை காக்க எந்த திட்டம் இல்லாமல் தோல்வி அடைவதுமான நிலையை நகராட்சி ஆணையரின் பதில்கள் உணர்த்தின. இப்படி பேசிக்கொண்டிருக்கும் போதே விழுப்புரம் நகர காவல் நிலையத்திலிருந்து 2 இன்ஸ்பெக்டர்கள், 2 சப்-இன்ஸ்பெக்டர்கள், 4-காவலர்கள், 4- உளவு பிரிவு போலீசு வந்து சேர்ந்தனர். பின் நகராட்சி ஆணையர் உங்கள் குறைகளைக் எழுதி கொடுங்கள் இரண்டு நாட்களில் கட்டாயம் சரிசெய்கிறோம் என்றார். தோழர்களும் அந்தக் கெடுவை ஏற்றுக் கொண்டு அவை நிறைவேற்றப்படவில்லை என்றால் போராட்டம் தொடருமென்று கூறிவிட்டு வந்தனர்.

  • அனைத்து மருத்துவமனைகளிலும் போதிய மருத்துவ வசதிகளை எற்படுத்து!
  • டெங்குவை கண்டறியும் மருத்துவ கருவியை வாங்கு!
  • ஆய்வகத்தை உடனே ஏற்படுத்து!
  • தற்காலிக நடமாடும் மருத்துவமனைகளை உடனே உருவாக்கு!
  • சுகாதாரம் பராமரிப்பு, கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை நிரந்தரமாகவும் தொடர்ச்சியாகவும் செய்!”
  • “மக்கள் அதிகாரத்தை” கையிலெடுப்போம்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
விழுப்புரம்.

_____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

டெங்கு காய்ச்சல் : மாயையும் உண்மையும் – வீடியோ !

2

காவிரி நியூஸ் என்னும் செய்தி தொலைக்காட்சியில் ‘8 திசை’ என்னும் நிகழ்ச்சியில் நடந்த விவாதமிது. “டெங்கு: நிலவேம்பு நிவாரணமா?” என்ற பெயரில் அந்த விவாத நிகழ்ச்சியை நெறியாளர் தமிழினியன் ஒருங்கிணைத்தார்.

டெங்கு மற்றும் நிலவேம்புக் குடிநீர் ஆகியவை குறித்த இந்த விவாதத்தில் பொதுநல மருத்துவர் ராஜேந்திரன் (அலோபதி), மருத்துவர் சக்திவடிவேல் (கொசுக்கள் மற்றும் அதன் மூலம் பரவும் நோய்கள் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்பவர், அலோபதி), குழந்தைகள் நல மருத்துவர் ரெக்ஸ் (அலோபதி), மருத்துவர் சாம்ராஜ் (சித்த மருத்துவர்) ஆகியோர் பங்கேற்றனர்.

நெறியாளர் தமிழினியன்

இந்த விவாதம் சாராம்சமாக,  நிலவேம்பு போன்ற சித்தமருத்துவ முறைகளின்  உண்மைத் தன்மை, நவீன மருத்துவத்தின் சிகிச்சை முறை, டெங்கு கொசு வைரஸ் ஏற்படுத்தும் பாதிப்பு – உடல் மாற்றங்கள், டெங்கு மரணங்களுக்கான காரணங்கள், டெங்கு பரவுவதற்கான் காரணங்கள்,  தடுப்பு மருந்து குறித்த நிலவரங்கள்  ஆகியவற்றை அறிவியல் ரீதியில் அலசியிருக்கிறது.

வாட்ஸ்அப்பில் வதந்திகளும், அறைகுறை உண்மைகளும் மக்களைக் குழப்பி வரும் நிலையில் இந்த விவாதம் பெருமளவில் டெங்கு குறித்த மாயைகளை அகற்றி உண்மைகளை எடுத்து வைக்கிறது எனலாம்.

டெங்கு கொசுக்கள் – புரளிகளும் உண்மைகளும் :

கொசுக்கள் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு வரும் மருத்துவர் சக்திவடிவேல், டெங்கு கொசுவான ஏடிஸ் எஜீப்பியா கொசுக்கள் குறித்து பரப்பப்படும் புரளிகள் குறித்து சில விளக்கங்களை முன் வைத்தார்.

தேங்கிய நீரில் பிளீச்சிங் பவுடர் போடுவதல், ஏடிஸ் எஜிப்பியா வகைக் கொசுக்கள் வீரியம் அடைந்து அதன் வாழ்நாள் 21 நாட்களிலிருந்து 40 நாட்களாக அதிகரித்துவிட்டது என்று கூறப்படுவதில் துளியும் உண்மையில்லை என்பதையும், இந்தக் கொசுக்களுக்கும் ஆயுள் 21 நாட்கள் தான் என்றும் தெரிவித்தார். அதே போல, ஏசியில் இருந்தால் கொசு வராது, மேல்மாடிக் குடியிருப்புக்கு கொசு பறந்து வராது ஆகிய கருத்துக்கள் தவறானவை என்றார்.

ஏடிஸ் வகைக் கொசுக்கள், கொசு வகைகளிலேயே மிகவும் சோம்பேறியானவை என்றும் அது உற்பத்தியாகும் பகுதியில் இருந்து அதிகபட்சம் 100 மீட்டர் தூரம் மட்டுமே அது பயணிக்கும் என்றார். மேலும், ஏடிஸ் எஜிப்பியா வகைக் கொசுக்களின் முட்டைகள் ஒரு வருடம் வரை, அதாவது அடுத்த சீசன் வரும் வரை உயிர்ப்போடு இருக்கும் தன்மை கொண்டவை என்றும் கூறினார்.

மருத்துவர் ராஜேந்திரன்

இவ்வகைக் கொசுக்கள்  சிறு அளவில் தேங்கியிருக்கும் தண்ணீரில் கூட முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யக் கூடியவை என்றும் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து (ஏசி) நீர் வடியும் இடத்தில் கூட அதனால் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்ய முடியும் என்கிறார்.

ஒரு ஏடிஸ் எஜிப்பியா கொசு தனது வாழ்நாளில் 400 முதல் 600 முட்டைகள் வரை இடும். மற்ற மலேரியா கொசுக்களைப் போல், இவை நீரின் மேற்பரப்பில் முட்டையிடாமல், நீர் தேங்கியிருக்கும் பாத்திரம் அல்லது இதர கொள்கலனின் ஓரப் பகுதியில் முட்டையிடுக்கின்றன. இதன் காரணமாகவே அவற்றால் பல மாதங்களுக்கும் உயிர்ப்போடு இருக்க முடிகின்றது என்கிறார். இதன் காரணமாகத் தான் சமீபகாலங்களில் கோடைகாலத்திலும் டெங்குக் காய்ச்சல் வருவதைச் சுட்டிக் காட்டினார். ஆகவே திறந்து வைக்கப்படும் தண்ணீரை காலி செய்வதோடு சம்பந்தப்பட்ட பாத்திரங்களை தேய்த்து கழுவ வேண்டுமென்றார்.

சித்த மருத்துவமுறை – தீர்வைத் தருமா?

தமிழக அரசின் சுகாதாரத் துறை டெங்குவை ஒழிக்க அனைத்து இடங்களிலும் நிலவேம்புக் குடிநீர் கொடுப்பதாகவும், 45,000 சுகாராதரப் பணியாளர்கள் பணியில் இருப்பதாகவும் கூறுகிறது. அந்த நிலவேம்புக் குடிநீரை / கசாயத்தை டெங்குவிற்கு மருந்தாகவோ, தடுப்பு மருந்தாகவோ உபயோகிக்க முடியுமா? நிலவேம்புக் கசாயத்தை மட்டும் மருந்தாக எடுத்துக் கொண்டால் போதும் என சித்தமருத்துவர்களால் உறுதியாகக் கூற முடியுமா? நிலவேம்புக் கசாயத்தின் மருத்துவத்தன்மை அறிவியல் ரீதியில் சர்வதேச மருத்துவத்துறையினரால் ஏற்றுக் கொள்ளப்பட்டதா ? டெங்கு காய்ச்சலுக்கான சித்த வைத்திய முறை அறிவியல்ரீதியில் பல மனிதர்களிடம் பரிசோதிக்கப்பட்டதா?  அது ஆவணப்படுத்தப்பட்டுள்ளதா ?   நிலவேம்புக் கசாயம் குறித்த மேற்கண்ட கேள்விகளை சித்த மருத்துவர் சாம்ராஜிடம் முன்வைத்தார் நெறியாளர்.

மருத்துவர் சாம்ராஜ்

அதற்குப் பதிலளித்த மருத்துவர் சாம்ராஜ், நிலவேம்புக் கசாயம் என்பது வெறும் நிலவேம்பு மட்டுமல்லாது வேறு சில 8 மூலப் பொருட்கள் கலந்து உருவாக்கப்படுவதே என்றார். மேலும் நிலவேம்புக் கசாயம் டெங்குவின் பாதிப்பால் குறையும் இரத்தவட்டுக்களை அதிகரிக்கிறது என்பதையும், பப்பாளி இலைச்சாறு, ஆடாதொடை மனப்பாகு ஆகிய மருந்துகளும் இரத்தவட்டுக்களை அதிகரிக்க உதவுகிறது என்றும் கூறினார்.

நிலவேம்புக் கசாயத்தை நோயின் நிலையறிந்து தான் தாங்கள் பரிந்துரைப்பதாகவும், நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும் பட்சத்தில், அலோபதியோடு இணைந்தே சித்தமருத்துவத்தை பரிந்துரைப்பதாகவும் சாம்ராஜ் கூறினார்.

நிலவேம்பு குறித்து அறிவியல் ரீதியில் மத்திய சித்த மருத்துவக் கழகத்தால் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு, அதில் வைரஸ் விரோத,  காய்ச்சல் விரோதத் தன்மைகள் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன் மருத்துவத் தன்மை குறித்து, கேஸ் கண்ட்ரோல் ஸ்டடி மற்றும் பைலட் ஸ்டடி (Case control Study and Pilot Study) உள்ளிட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டு அவை ஆராய்ச்சி இதழ்களில் வெளியிடப்ப்பட்டுள்ளன என்றார். இதற்கு அடுத்த கட்டமான ஆய்வுகள் செய்யப்படவேண்டும் என்றார். ( இந்த ஆய்வுகளை நவீன மருத்துவத்தால் அங்கீகரிக்கப்பட்ட சுயேச்சையான ஆய்வு நிறுவனம் சுயேச்சையாக ஆய்வு செய்து முடிவுகளை வெளியிட வேண்டும்.)

நவீன மருத்துவத்தைப் போன்று (அலோபதி )போன்ற ஒரு ஆய்வு முறையும் ஆவணப்படுத்துதல் முறையும் சித்தா மருத்துவத்தில் இல்லாதது ஒரு பெரும் குறை தான் என்பதை ஏற்றுக் கொண்ட மருத்துவர் சாம்ராஜ், அதனை முறைப்படுத்துவதற்கான முயற்சிகள் எடுத்து வரப்படுவதையும் குறிப்பிட்டார்.

மேலும் உலக சுகாதார நிறுவனம், இரண்டு சித்த மருத்துவ மருந்துகளை அங்கீகரித்திருப்பதையும், மேலும் பல மருந்துகள் அவ்வாறு அங்கீகரிக்கப்பட ஆய்வகச் சோதனைகளும், ஆவணப்படுத்தப்படுதல்களும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

விவாதத்தில் சில அலோபதி மருத்துவர்கள் உலக சுகாதார நிறுவனம் அங்கீகரிக்காத நிலையில் நிலவேம்பு கசாயத்தை பரிந்துரைக்க முடியாது என கூறிய பதிவுகள் காட்டப்பட்டன. விவாதத்தில் கலந்து கொண்ட அலோபதி மருத்துவர் சக்திவடிவேல், ஆராய்ச்சி இதழில் நிலவேம்பு குறித்த கட்டுரைகளை படித்திருப்பதாகவும் அதை மருந்து என்பதற்கு பதில் கூடுதல் ஊக்கச் சக்தியாக (டானிக் – வைட்டமின் போல) பயன்படுத்தலாம் என விளக்கம் அளித்தார்.

டெங்கு வந்தால் – உடனே மரணமா ?

டெங்கு வந்தால் இறப்பதற்கான வாய்ப்பு அதிகம் என மக்கள் மத்தியில் ஒரு தேவையற்ற பீதி நிலவுகிறது என்கிறார் மருத்துவர் ராஜேந்திரன். “சாதாரண காய்ச்சல் வந்தாலும் அது டெங்குவாக இருக்குமோ என பீதி அடைகின்றனர்.  மக்கள் முதலில் தைரியத்தோடு இருக்கவேண்டும். டெங்குவிற்கென்று தனிச்சிறப்பான மருந்துகள் இல்லை. ஆனால் டெங்குவிற்கு சிகிச்சை மூலம் தீர்வு இருக்கிறது என்றார். இரத்தத்தில் நீர்ச் சத்து குறைவதைத் தடுத்து நீர்ச்சத்தை அதிகரிப்பதன் மூலம் தான் டெங்குவை குணப்படுத்த முடியும் என்றார்.

மேலும் அனைத்துக் காய்ச்சல்களும் டெங்கு காய்ச்சல் அல்ல. டெங்கு கொசு கடித்த நூறில் இரண்டு பேருக்கு டெங்கு காய்ச்சல் வரலாம். அவர்களையும் உரிய முறையில் சிகிச்சை அளித்து குணப்படுத்த முடியும். டெங்கு காய்ச்சல் ஆட்கொல்லி நோய் அல்ல என்றார்.

மருத்துவர் சக்திவடிவேல்

டெங்குக் காய்ச்சலின் போது உடலில் உள்ள இரத்தவட்டுக்கள் வெகுவாகக் குறைகின்றது. இரத்தவட்டுக்கள் 10000 -க்கும் கீழ் குறையும் போது இரத்தவட்டுக்களை வெளியில் இருந்து உட்செலுத்தப்படும். இயல்பாகவே இரத்தவட்டுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்” என மருத்துவர் இராஜேந்திரன் கூறினார்.

குழந்தைகள் நல மருத்துவர் ரெக்ஸ் இது குறித்துக் கூறுகையில், “குழந்தைகளுக்கு இரத்தவட்டுக்களின் எண்ணிக்கை 10,000 கீழ் போகும் போது அது ‘டெங்கு அதிர்ச்சி நோய்க்குறியை’ (Dengue Shock Syndrome) வெளிப்படுத்துகிறது.

டெங்கு அதிர்ச்சி நோய்க்குறி (Dengue Shock Syndrome) என்பது இரத்தநாளங்கள் உடைந்து இரத்தம் வெளியேறுவது ஆகும். குறிப்பாக இரத்தநாளங்களில் உள்ள  நீர் வெகுவாகக் குறையும், இதனைப் போக்கவே தொடர்ச்சியாக நீராகாரங்கள் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

டெங்கு அதிர்ச்சி அறிகுறிகள் இரத்த வட்டுக்கள் 3000த்திற்கும் குறைவாக போகும் போது கூட ஏற்படலாம். அப்போதும் உரிய சிகிச்சை இருக்கிறது. அது கொடுக்கப்படவில்லை என்றால் இரத்தநாளங்களில் ஏற்படும் கசிவால், நீர் வெளியேறி மூளை மற்றும் நுரையீரலில் போய் சேருகிறது. இத்தகைய உள்ளர்ந்த நீர்க் கசிவு காரணமாக மரணம் ஏற்படுகிறது. குறிப்பாக இந்த நீர்க்கசிவால் இரத்தத்தின் அடர்த்தி அதிகரித்து விடும். அசூழலில் வெளியில் இருந்து இரத்தவட்டுக்களை உட்செலுத்துவதும் சிரமமாகிவிடும்” என்று கூறினார்.

அரசுக் கட்டமைப்பின் ஒட்டுமொத்தத் தோல்வி – டெங்கு :

டெங்குவை சரி செய்ய வீட்டிற்குள் நீர் தேக்கி வைப்பதை மட்டுமே காரணமாக அரசு கூறுகிறது. வீதியில் சாக்கடை உடைந்து ஓடுவதையும், வீதிகளில் நீர் தேங்கிக் கிடப்பதையும் மக்கள் மட்டும் சரி செய்து விட முடியாது. அதோடு டெங்குவைத் தடுப்பது சுகாதாரத்துறையால் மட்டுமே செய்யக் கூடிய காரியமும் அல்ல. பொதுப்பணித்துறை, மெட்ரோ, நெடுஞ்சாலைத்துறை, கழிவுநீரகற்றுவாரியம், போன்ற பல்வேறு அமைப்புகளும் இதில் பங்கு செலுத்த வேண்டியது உள்ளது. தற்போது இவை அனைத்தின் தோல்வியே டெங்கு பரவுவதற்கு முக்கியக் காரணமாக உள்ளது என்றார் மருத்துவர் ரெக்ஸ். மேலும் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் சிறப்புப் பிரிவுகள் திறக்க வேண்டும் என்றார்.

குழந்தைகள் நல மருத்துவர் ரெக்ஸ்

மருத்துவர் இராஜேந்திரன் இது குறித்துக் கூறுகையில், டெங்கு வெகுவாக ஏழைகளுக்குத் தான் வருகிறது. ஏனெனில் அவர்களால் தான் சத்தான ஆகாரங்கள் எடுத்துக் கொள்ள முடியவில்லை. இதன் காரணமாகவே ஏழைகள் அதிகமாக பலியாகிறார்கள்.

இந்தியாவில் ‘வகை 3’ (Type 3) இரக டெங்குக் காய்ச்சலே வருகிறது. அமெரிக்கா போன்ற நாடுகளில், வகை 3 , வகை 4 இரக டெங்குக் காய்ச்சலுக்கு தடுப்புமருந்துகள் இருக்கின்றன. ஆனால் இந்தியாவில் அதனை நம்மால் அவ்வளவு சாதாரணமாக வாங்கி உபயோகிக்க முடியாததற்கான காரணம் அதன் விலை அதிகம் என்பது தான். 3 டோஸ்(Dose) தடுப்பு மருந்தின் விலை 207 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பிப்படி ரூ.13,443).

டெங்குவைப் பொறுத்தவரையில் நோயின் நிலைக்கு ஏற்ப சிகிச்சையை வகை பிரித்து அதற்கான நமது மருத்துவ வரைமுறையை (medical protocol) முதல் நிலை முதல் நான்காம் நிலை வரை பிரித்து எந்த நிலைக்கு என்ன மருத்துவம் கொடுக்க வேண்டும் என நிர்ணயிக்க வேண்டும். ஆனால் இங்கு டெங்கு நோய்க்கு அரசாங்கம் இப்படிப்பட்ட வரைமுறை எதையும் வகுக்கவில்லை என்று கூறிய மருத்துவர் இராஜேந்திரனிடம், “உலகம் முழுவதும் பல்வேறு மருத்துவ மாநாடுகள் நடைபெறுகின்றன. ஆனால் இந்திய அளவில் டெங்குவிற்கு அது போன்று எதுவும் நடைபெறவில்லையே ஏன்?” என நெறியாளர் தமிழினியன் கேட்டார்.

டெங்கு சமீபமாகத் தான் வந்திருக்கிறது, அது குறித்து இனி தான் ஆராய்ச்சிகள் நடத்தப்படவேண்டும் என்று கூறிய மருத்துவர் இராஜேந்திரனிடம், டெங்கு மரணத்தை ஏற்படுத்தத் தொடங்கி பல ஆண்டுகள் ஆகின்றன என நெறியாளர் கூறினார். அதனை ஏற்றுக் கொண்ட மருத்துவர் இராஜேந்திரன், “நமது நாட்டில் மருத்துவத் துறையில் ஆராய்ச்சி என்பது மிகக் குறைவு அதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்” என்று கூறினார்.

இது டெங்குவிற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய சமூகத்திற்கான ஒட்டு மொத்தப் பிரச்சினை. இந்த வீடியோவைப் பாருங்கள்! டெங்கு குறித்த நமது கேள்விகள் பலவற்றுக்கு மருத்துவ நிபுணர்கள் விடையளிக்கிறார். அரசை எதிர்த்துப் போராடுவதோடு அறியாமையையும் எதிர்த்துப் போராடுவோம்.

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

தமிழ்நாடு – பொது அறிவு வினாடி வினா !

முதல் வினாடி வினாவில் பங்கேற்ற, பங்கேற்கும், பங்கேற்க இருக்கும் நண்பர்களுக்கு நன்றி! அதில் 11 பேர் ஐந்து கேள்விகளுக்கும் சரியான பதில்களை அளித்திருக்கிறார்கள். 21 பேர் நான்கு கேள்விகளுக்கும், 74 பேர் மூன்று கேள்விகளுக்கும், 76 பேர் இரண்டு கேள்விகளுக்கும், மீதிப் பேர் ஒரு கேள்விக்கும் சரியான பதிலை அளித்திருக்கிறார்கள். அடுத்து வரும் நாட்களில் மற்றவர்களும் பங்கேற்பார்கள் என்பதால் இந்தப் பட்டியல் முழுமையானது அல்ல.

இன்றைக்கு தமிழக நிர்வாக விவரங்கள் குறித்து பார்க்க இருக்கிறோம். நாம் தமிழ் நாட்டில் இருந்தாலும், தமிழகத்தில் இருந்து பிழைப்பு தேடி வெளிநாடுகளுக்குச் சென்றிருந்தாலும் முழு தமிழக விவரங்கள் – மாவட்டங்கள், மாநகராட்சிகள், நகராட்சிகள், மக்கள் தொகை, படிப்பறிவு இதர விவரங்கள் தெரியாது. தேர்ந்த பத்திரிகையாளர்களுக்கும், துறை சார்ந்த அதிகாரிகளுக்கும், தமிழகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் கட்சி சார்பாக பேசும் தொழில் முறை பேச்சாளர்களுக்கும், அரசு போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கும் இந்த விவரங்கள் தெரிந்தவைதான்.

மற்றவர்களுக்கு இந்த விவரங்கள் தெரியாமல் போனதன் காரணத்தை விட அதனால் ஏற்படும் விளைவுகள்தான் முக்கியம். ஒரு குறிப்பிட்ட அரசியல், பொருளாதார, பண்பாடு குறித்த செய்தியை முழுமையாக உள்வாங்கி சிந்தித்துப் பார்ப்பதற்கு இந்த விவரங்கள் அவசியம். அத்தகைய நோக்கத்தோடு இன்றைய கேள்விகளுக்கு விடையளியுங்கள். உங்கள் குடும்ப உறுப்பினர்களையும் – சிறார்களையும் உள்ளிட்டு – ஈடுபடுத்துங்கள்.

இவற்றை வெறுமனே வினாடி வினா என்பதைத் தாண்டி இந்த விவரங்களை மனதில் கொள்ள முயலுங்கள். தமிழகம் குறித்த செய்திகளைப் படிக்கும் போது இந்த அடிப்படை விவரங்களை நினைவு கூர்வதன் மூலம் நமது சிந்தனை நூலகத்தில் இவை அழுத்தமாக பதியும். நன்றி !

_____________

டெங்கு – கொசு – சுகாதாரத் துறை – அரசு : அதிர்ச்சியளிக்கும் செய்தி !

1

மிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பெரும் அழிவை உருவாக்கி வருகிறது. ஆனால் டெங்கு நோயை கட்டுப்படுத்த அனைத்து வகையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும், தமிழகம் முழுவதும் 40,000 கொசு ஒழிப்பு பணியாளர்கள், 3,500 சுகாதார ஆய்வாளர்கள், 1,634 பூச்சியியல் வல்லுனர்கள் குழு களத்தில் இருப்பதாகவும் ஊடகங்களில் பேசுகிறார் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜபாஸ்கர்.

மேலும் புதிய கொசு ஒழிப்பு உபகரணங்கள், மருந்துகள், விழிப்புணர்வுக்காக ரூ.13 கோடியே 95 லட்சம் சிறப்பு நிதி ஒதுக்கியதாகவும் கூறுகிறார். இருப்பினும் கொசுவும் ஒழிந்தபாடில்லை, மக்களின் மரணங்களும் தடுத்து நிறுத்தப்படவில்லை. ஏனிந்த நிலை? ஏன் கொசுக்களை ஒழிக்க முடியவில்லை?

“டெங்கு காய்ச்சல், மலேரியா மற்றும் சிக்குன் குனியா போன்றவற்றை பரப்பும் கொசுக்களை ஒழிக்க தரமான கொசு அழிப்பு மருந்துகளை பயன்படுத்த கடந்த காலங்களில் சீன தயாரிப்பான அபேட் (கெமிஃபாஸ்ட்) பயன்படுத்தப்பட்டு வந்தது. இதன் விலை ஒரு லிட்டர் ரூ.1,200. இந்நிலையில் சீன தயாரிப்பு நிறுவன கெமிஃபாஸ்ட் விலை அதிகமாக இருந்ததால், அதே மருந்தை தயாரித்த ஒரு உள்நாட்டு தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து லிட்டர் ரூ.500க்கு வாங்கி, கொசு ஒழிக்க தெளிக்கப்பட்டதாக பத்திரிகைகளில் செய்தி வெளியானது.”

இந்த செய்தியை படித்ததும் சம்பந்தப்பட்ட தொழிலாளிகளையும், ஊழியர்களையும் சந்தித்தோம்.

சென்னை மாநகராட்சியில் சுகாதாரத்துறையில் 18 ஆண்டுகள் பணியாற்றி வரும் சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கத்தின் பொதுசெயலர் சீனிவாசலு அவர்களிடம் பேசினோம்.

தமிழகம் முழுவதும் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் சுகாதாரப்பணி எப்படி உள்ளது?

சென்னை மாநகரட்சியில் ஒப்பந்த முறை புகுத்தப்பட்ட பிறகு மக்கள் நலன் என்பது எல்லாம் கைவிடப்பட்டு விட்டது. கடந்த 2004-ல் திமுக ஆட்சியின் போது ஓனிக்ஸ் என்ற சிங்கப்பூர் ஒப்பந்த நிறுவனத்திடம் பழைய மண்டலமாக இருந்த 6-ஐஸ்ஹவுஸ், 8-நுங்கம்பாக்கம், 10-கோடம்பாக்கம் மற்றும் அடையாரை துப்புரவு பணிக்காக ஒப்படைத்தனர். பிறகு 06.08.2010 அன்று நீல் மெட்டல் என்ற நிறுவனத்திடம் மண்டலம்-3 புளியந்தோப்பை ஒப்படைத்தனர்.

அதன் பிறகு ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு புதிய மண்டலாமாக விரிவடைந்த மாநகராட்சியில் இணைக்கப்பட்ட மணலி, திருவொற்றியூர், மாதவரம், அம்பத்தூர், வளசரவாக்கம், சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி ஆகியவற்றை இணைத்தார்கள். அதில் மண்டலம் 9,10,13 ஆகியவற்றை ராம்கி என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்தார்கள்.

திரு சினிவாசலு

மேலும் மாநகராட்சி துப்புரவு பிரிவை NMR, சொர்ண ஜெயந்தி, சுய உதவிக்குழு, NULM (National Urban Livelihood Mission), ஒப்பந்த தொழிலாளி என்று ஐந்தாக பிரித்தார்கள். இந்த தொழிலாளிகள் அனைவரும் ஒப்பந்த தொழிலாளிகள் தான். அதில் அதிகபட்சமாக NMR ல் தான் 908 பேர் இருக்கிறார்கள். மாநகராட்சியில்அதிகாரிகள் உட்பட நிரந்தர தொழிலாளிகளாக வெறும் 9,800 பேர் உள்ளனர். இது போக ராம்கி நிறுவன தொழிலாளிகள் 4,400 பேர் உள்ளனர். இவர்களை கொண்டு தான் சென்னை முழுவதும் துப்புரவு பணி நடந்து வருகிறது. அதன் இலட்சணத்தை சென்னை முழுவதும் காண முடியும்.

1978 மாநகராட்சி துப்புரவு பணிகள் விதியின்படி 500 மீட்டருக்கு ஒரு ஆள் பெருக்க வேண்டும், 250 வீட்டின் குப்பைகளை ஒரு ஆள் அகற்ற வேண்டும் என்பது தான். இதற்கான பணி உபகரணங்கள், பாதுகாப்பு சம்மந்தப்பட்ட கவசங்கள் அனைத்தும் பொது பண்டக சாலை மூலம் மாநகராட்சி வாங்கி கொடுக்க வேண்டும். ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே அதனை இழுத்து மூடி விட்டார்கள்.

2013 -ல் மாநகராட்சியை மூன்றாக பிரித்தார்கள், அதாவது 1-5 மண்டலம் வடசென்னை என்றும், 6-10 வரை மத்திய சென்னை, 11-15 தென்சென்னை என்றும் பிரித்தார்கள். அப்பொழுது ஒவ்வொரு யூனிட்டிற்கும் துடைப்பம் வாங்குவதற்காக ஐந்து லட்சம் ஒதுக்கினார்கள். ஒரு யூனிட் என்பது ஐந்து வார்டுகளை உள்ளடக்கியது. பதினைந்து மண்டலத்தில் மொத்தம் 45 யூனிட்கள் உள்ளது. இவற்றில் பெரும்பாலான இடத்தில் தொழிலாளர்களே வாங்கிக்கொள்கிறார்கள். அதாவது குப்பை காகிதங்கள், காலி பாட்டில்களை சேகரித்துக் கடையில் போட்டு அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு வாங்கிக் கொள்ள வேண்டும்.

குப்பைகளை வாரி செல்லும் ஒரு வண்டிக்கு (tricycle) ஆண்டு பராமரிப்பு செலவு ரூ.1860 ஒதுக்குகிறார்கள். ஆனால் எந்த வண்டியையும் பராமரிப்பதில்லை. பிறகு எப்படி குப்பையை எடுக்க முடியும். தலையிலா சுமக்க முடியும்? இது ஒரு சாம்பிள் தான். இந்த நிலையில் தான் சென்னை மாநகராட்சியில் இப்பொழுது துப்புரவு நடைபெற்றுவருகிறது.

மலேரியா ஒழிப்புத் துறையின் தற்போதைய நிலை என்ன? கொசுவை ஒழிக்க என்ன நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்?

கொசுக்கள் ஒழிப்பை பொறுத்த வரையில் சுகாதாரத்துறை தான் மேற்கொண்டுவருகிறது. அதற்கென்று மலேரியா ஒழிப்பு துறை உள்ளது. இதில் ஒப்பந்த தொழிலாளியாக 1,800 பெரும் , நிரந்தர தொழிலாளியாக வெறும் சுமார் 900 பேர் இருக்கிறார்கள். இவர்களில் பாதி பேர் வயதானவர்கள், வேலை செய்ய முடியாதவர்கள், ஆளும்கட்சி, அதிகாரிகளுக்கு தெரிந்தவர்கள் என்று வேலை செய்யாமல் இருப்பவர்கள். இவர்களை எல்லாம் கழித்து விட்டு பார்த்தால் முழுமையாக இப்பணியில் ஈடுபடுபவர்கள் 50 சதவீதம் கூட இல்லை.

மாநகரட்சி ஊழியர்கள் மாதிரிப்படம்

ஒப்பந்த தொழிலாளிகளை பற்றி சொல்லத் தேவையில்லை. வெறும் 240 ரூபாய் கூலி. அடிமாடாக பிழியப்படுகிறார்கள். இத்துறையில் பணியின் போதே இறந்து போனவர்கள், பணி ஓய்வு பெற்றவர்கள் இவர்களுக்கு மாற்றாக புதிய ஆட்களை எடுப்பதே இல்லை.

கொசு ஒழிப்பு முறையில் முதலில் லார்வாக்களை ஒழிப்பதற்கு அபேட் மருந்து பயன்படுத்தப்படுகிறது. இந்த மருந்தை ஐந்து லிட்டர் தண்ணீரில் 5ML கலந்து அடிக்க வேண்டும். ஒரு ஆள் என்பது வீடுகளுக்கு தினந்தோறும் அடிக்க வேண்டும். வாரத்திற்கு 560 வீடுகளுக்கு அடிக்க வேண்டும். ஒரு வட்டத்திற்கு 150 முதல் 200 தெருக்கள் வரை உள்ளது.

ஒரு வட்டத்திற்கு குறைந்தது இப்பணியில் 20 பேராவது ஈடுபட வேண்டும். ஆனால் 3,4 பேர் மட்டுமே ஒரு வட்டத்தில் உள்ள எல்லாருடைய வீட்டிற்கும் அடிப்பதால் முதலில் அடித்த வீட்டிற்கு திரும்ப வருவதற்கு ஒன்றரை மாதம் ஆகி விடுகிறது. பிறகு எப்படி கொசுவை ஒழிக்க முடியும்? ஒரு யூனிட்டிற்கே வெறும் 10 பேர் தான் இருக்கிறார்கள்.

அதேபோல பறக்கும் நிலையில் உள்ள கொசுக்களை ஒழிப்பதற்கு பேட்டக்ஸ் மற்றும் பயோடக்ஸ் என்ற மருந்தை எட்டு லிட்டர் தண்ணீரில் 100ml கலந்து அடிக்க வேண்டும். அப்பொழுது தான் கொசு சாகும். ஆனால் மேற்கண்ட இந்த மருந்துகளை வாங்குவதை நிறுத்தி விட்டார்கள்.

தற்போது தரம் குறைந்த மருந்தான “விக்டோபேக்” மாதத்திற்கு இரண்டு முறை அடிக்கிறார்கள். 80 ml மருந்தை எட்டு லிட்டர் தண்ணியில் கலந்து அடிக்க வேண்டும். இது தரமான மருந்தே இல்லை. கொசு ஒழிப்பிற்கு தகுதியற்றவை.

மேலும், வேன் பாக் எனப்படும் புகைபரப்பியை கொண்டு கொசு ஒழிக்கும் பணியில் ஈடுபடுகிறார்கள். இதன் மூலம் கொசுவை ஒழிக்கவே முடியாது. ஐந்து லிட்டர் டீசலுடன் 100 ml மெத்தலைன் கலந்து அடிக்கிறார்கள். இது கொசுவை மயக்கமடைய செய்யுமே தவிர ஒழிக்காது. இதனை எல்லாம் சாதாரண மக்கள் புழங்கக் கூடிய இடத்தில் தான் அடிக்கிறார்கள்.

ஆனால், ராஜ்பவன், அதிகாரிகள், அமைச்சர்கள் வீடுகள், உயர் மேட்டுக்குடி பகுதிகளான அண்ணாநகர், பெசன்ட் நகர், அடையாறு போன்ற இடத்தில் “பேகான்” என்கிற உயர் கொசு ஒழிப்பு மருந்தை பயன்படுத்துகிறார்கள். இருப்பதிலேயே இது தான் தரமான மருந்து. இங்கு “VIP டீம்” என்று போட்டு வேலை செய்கிறார்கள். இந்த பேகான் மருந்தை 1998ல் மாநகராட்சியில் இருந்து குறைந்த விலைக்கு சிங்கப்பூருக்கு கடத்த முயன்றதாக “அடிப்படை சுகாதார அலுவலர்” ஒருவர் மீது வழக்கும் பதியப்பட்டது. அந்த அளவிற்கு தரமான மருந்து. இந்த மருந்தை தமிழகம் முழுவதும் பயன்படுத்தினால் கொசுக்களை ஒழிக்க முடியும். ஆனால் நிதிப்பற்றாக்குறை என்று கூறி நிறுத்தி விட்டார்கள்.

குறைந்தபட்சம் மழைக்காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பார்கள். இந்த வருடம் அப்படி மாநகராட்சி சார்பாக எடுக்கப்பட்டதா?

கொசு ஒழிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மே-ஜூன்-ஜூலை ஆகிய மாதத்தில் இருந்து ஆரம்பித்திருக்க வேண்டும். ஆனால் அப்படி ஆரம்பிக்க வில்லை. ஏனென்றால் மழை இல்லை. எல்லா இடங்களும் வறட்சியாக உள்ளது. கொசு தொல்லை இருக்காது என்றார்கள். முக்கியமாக “ஸ்லம்” ஏரியாவில் எல்லா வீட்டிற்கும் கொசு வலை, நொச்சி கன்றுகள் கொடுத்து விட்டோம். இனிமேல் கொசுப்பிரச்சினை இருக்காது என்று கூறினார்கள். அதனால் இத்துறையில் பணியாற்றிய பாதிபேரை வேலையிலிருந்தே நிறுத்தி விட்டார்கள்.

முன்பெல்லாம் கொசு உற்பத்தியாகும் இடமான கூவத்தை சுத்தப்படுத்துவார்கள். இப்பொழுது அந்த பணியில் சென்னை முழுவதும் பத்து பேர் தான் ஈடுபடுத்தப்படுகிறார்கள். மழை நீர் வடிகால் என்பது மழை நீர் செல்வதற்கு மட்டும் தான். ஆனால் திருட்டு கனெக்சன் மூலம் தண்ணீர் எப்பொழுதும் மழைநீர் வடிகாலில் விடப்படுகிறது. இது அதிகாரிகளுக்கும் தெரியும். இதனை பராமரிக்க ஐந்து பேர் தான் இருக்கிறார்கள்.

மேலும், கொசு உற்பத்தியை தடுக்க MLO என்ற ஆயிலை கோணியில் ஊற்றி கூவம் ஆற்றில் போடுவார்கள். இப்பொழுது அதனை செய்வதற்கு கூட ஆட்கள் இல்லை. அந்தளவிற்கு ஆட்கள் பற்றாக்குறை உள்ளது.

மாதிரிப்படம்

சென்னையில் பல இடங்களில் கொசு மருந்து ஊற்றுவதற்கு மக்கள் அனுமதிப்பதில்லை. காரணம் நீர் பற்றாக்குறை தான். தண்ணீரை சேமிக்கும் போது அதில் மருந்தை ஊற்றினால் பயன்படுத்த முடியாது என்று தடுத்து விடுகிறார்கள். அதற்குரிய விழிப்புணர்வை அரசு ஏற்படுத்த வில்லை.

மொத்தத்தில் கொசு ஒழிப்பை பொறுத்த வரை பணி உபகரணம் இல்லை, தரமான மருந்து கொள்முதல் இல்லை, ஆட்கள் கடுமையான பற்றாக்குறை, வேன்பாக் வாங்கி ஐந்து ஆண்டுகள் ஆகிறது. சரியான பராமரிப்பும் இல்லை. ஆய்வாளர்கள் சோதனைக்கே வருவது இல்லை. மொத்த நகராட்சியுமே முடங்கி விட்டது.

சென்னையிலேயே சொற்ப நபர்கள் தான் இப்பணியில் ஈடுபடுகிறார்கள் என்றால் மற்ற மாவட்டங்களை நினைத்துப் பாருங்கள்?

மிக முக்கியமாக தனியார் மருத்துவமனைகள் காய்ச்சல் என்று வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்கலாம். ஆனால் டெங்கு என்று பதிவு செய்யக்கூடாது என்று மாநகராட்சி சார்பாக மிரட்டி வருகிறார்கள். இப்படிபட்ட மோசடி தான் நடக்கிறது.

டெங்கு கொசு ஒழிப்பை பொறுத்த வரை இது தான் நிலைமை. அரசு கூறுவதுபோல் வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. டெங்கு பிரச்சினை தீவிரமாக முற்றிய நிலையில் மக்களை ஏமாற்றும் வேலையை தான் செய்கிறது.

இடதுசாரி சிந்தனை கொண்ட உங்கள் சங்கம் தொடர்ந்து பொருளாதார கோரிக்கைக்காக பல போராட்டங்களை மாநகராட்சிக்கு எதிராக நடத்தியுள்ளீர்கள். ஆனால் இந்த ஊழல் பிரச்சனை குறித்து ஏதேனும் போராட்டம் நடத்தியிருக்கிறீர்களா?

நாங்கள் வெளிப்படையாக இந்த பிரச்சனைக்காக எந்த போராட்டமும் நடத்தவில்லை. ஆனால் தரமற்ற மருந்து வாங்ககூடாது என்று எங்கள் சங்கம் சார்பாக கமிஷனரிடம் புகார் மனு அளித்துள்ளோம். சங்க நிர்வாகிகள், உறுப்பினர்களை அழைத்து தற்போது மக்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினையை போக்க நேரம் காலம் பார்க்காமல் வேலையை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து சுகாதாரப்பணியை தீவிரப்படுத்தி வருகிறோம்.

வினவ குறிப்பு: நண்பர்களே மக்கள் உயிருடன் அரசு விளையாடுகிறது என்பதற்கு இந்த நேர்காணலே சான்று. கொசு ஒழிப்பு வேலை செய்ய தொழிலாளிகள் இல்லை, மருந்தில் தரமில்லை, தரமான மருந்தை மேட்டுக்குடி ஏரியாவிலும், தரமற்றதை நமது பகுதியிலும் தெளிக்கிறார்கள், துடைப்பம் வாங்க பணமில்லை, வண்டியைப் பராமரிப்பதில்லை, மழைக்காலத்திற்கு முன்பேயே பணியைத் துவங்கவில்லை, தனியார் மருத்துவமனைகளில் டெங்கு என்று பதிவு செய்யக் கூடாது…………..

இப்போது சொல்லுங்கள்! மக்கள் மரணிப்பது டெங்குவிலா? அதிமுக ஊழல் அரசின் திமிராலா?

நேர்காணல் : வினவு செய்தியாளர்

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

வாடிவாசல் திறந்தோம் – கருவறையும் திறப்போம் !

6

கடவுளுக்கே வெளிச்சம்!

நாம்
விளைவித்துக் கொடுக்கும்
தானியம்
நைவேத்யமாய் கருவறைக்குள்.

நாம்
நரம்புகள் நனைய
தொடுத்துக் கொடுத்த மாலை
அலங்காரமாய்
ஆண்டவன் மேலே.

நாம்
அரைத்துக் கொடுத்த சந்தனம்
சாமி மேலே மணக்கிறது.

நாம்
உண்டியலில் போட்ட காசு
சாமி வருவாயாய் கனக்கிறது.

நாம்
கறந்து கொடுத்த பால்
அபிஷேகமாய் வழிகிறது.

நாம்
தசைகளைத் திருகி
பிழிந்து கொடுத்த எண்ணெய்
அந்த ஆண்டவன் மேல்
நெளிகிறது.

வலிமிகு  உழைப்புடன்
நாம்
நெய்து கொடுத்த ஆடை
அருள்மிகு ஆண்டவனின்
மானத்தை காக்கிறது.

கற்பூரம், ஊதுவத்தி
விபூதி, குங்குமம், பன்னீர்
சகலத்திலும் நம் மூச்சு
ஆண்டவன் நாசியைத் தொடுகிறது.

உடைக்கும்
ஒவ்வொரு தேங்காயிலும்
நம் உழைப்பின் வியர்வை
கடவுள் மேல் தெறிக்கிறது.

சுதை, கோயில், கோபுரம்
ஏன் சாமி சிலையில் கூட
நம் சக்தி இருக்கும் போது

நாம்
தொட்டு பூசை செய்தால் மட்டும்
சாமி தீட்டாகிவிடுமாம்
இந்த அயோக்கியத்தனத்திற்கு பெயர்
ஆகமமாம்.

உண்மையில்
கருவறைக்குள்
அனைத்துச் சாதியினரையும்

நுழைய விடாமல் தடுப்பது
பார்ப்பானா? பகவானா?
விடை கண்டால்
அந்த கடவுளுக்கே வெளிச்சம்!

தட்டில் போடும்
காசுக்கு தீட்டில்லை
அதைத் தருகின்ற
நாம் மட்டும் தீட்டா?

அர்ச்சனைக்கு சமஸ்கிருதம்
தட்சணைக்கு மட்டும் தமிழா?

ஜல்லிக்கட்டு போதாது
பார்ப்பான திமிரோடு மல்லுக்கட்டு!
வாடி வாசல் திறந்தோம்

அந்த ஆண்டவனே
தேடி நிற்கும்
சுயமரியாதைச் சுடர் ஏற்ற
அனைத்துச் சாதியினருக்கும்
கருவறையைத் திறப்போம்!

–  துரை. சண்முகம்

_____________

இந்த கவிதை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

இனிமேல் சினிமாவை எப்படிப் பார்ப்பீர்கள் ? கருத்துக் கணிப்பு

1

சினிமா கிசுகிசு செய்திகள் இல்லையென்றால் தமிழகத்தில் பல பத்திரிகைகள் மூடப்பட்டிருக்கும். சமூக வலைத்தளங்கள் வந்த பிறகு கிசுகிசுக்கள் எப்போதாவதுதான் பேசு பொருளாக மாறுகின்றன. மற்றபடி சினிமா விமர்சனங்கள், சினிமா உலகின் சங்கப் பிரச்சினைகள் இப்போது கடைசியாக கட்டண உயர்வு போன்ற  செய்திகள் அதிகம் பேசப்படுகின்றன.

இணையத்தின் காலத்தில் டொரன்ட் தரவிறக்கம் பரவலாக பயன்பாட்டிற்கு வந்த பிறகு சினிமா தொழில் சுருங்கி விட்டதாக சினிமா துறையினர் புலம்புகின்றனர். மறுபுறம் மக்களோ மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் பார்க்கிங், பாப்கார்ன், அதிக விலை கட்டணம் என குடும்பமாக படம் பாரக்க முடியாத அளவு கட்டணங்கள் அதிகம் என்று புகார் செய்கின்றனர்.

குறுகிய காலத்திலேயே ஒரு லாட்டரி பரிசு  போல பணம் பார்த்த சில பல நட்சத்திரங்கள், நிறுவனங்கள், தயாரிப்பாளர்கள் இப்போது போட்ட பணத்தை விட பல மடங்கு எடுப்பதற்கு சிரமப்படுகின்றனர். இருப்பினும் ஒரு படம் ஓடாவிட்டாலும் மூன்று நாள் திரையரங்கில் இருந்தாலே மற்ற மொழி உரிமை, வெளிநாடு – ஆடியோ – டிவி உரிமை என நன்றாகத்தான்  இலாபம் பார்க்கின்றனர்.

ஆனால் அந்த மூன்று நாட்களுக்கு திரையரங்குகளுக்கு மக்கள் வந்தாக வேண்டுமே? மோடியின் ஜி.எஸ்.எடி வந்த பிறகு டிக்கெட் விலை எகிற ஆரம்பித்துவிட்டது. அத்தோடு தமிழக அரசின் கேளிக்கை வரி எல்லாம் சேர்ந்து தங்களுக்கு இலாபம் இல்லை என்று தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் பிலாக்கணம் பாட ஆரம்பித்தனர்.

இது குறித்து பல சுற்று பேசி தற்போது 25% கட்டண உயர்வை தமிழக அரசு அனுமதித்திருக்கிறது. இதோடு ஜி.எஸ்.டி வரி, கேளிக்கை வரி எல்லாம் சேர்த்து மல்டி பிளக்சில் சுமார் 200 ரூபாய்க்கு மேலாகவும் மற்ற திரையங்குகளில் 100 ரூபாய்க்கு அதிகமாகவும் கட்டணம் இருக்கலாம். இன்னும் இதில் குழப்பம் தீர்ந்த பாடில்லை.

எப்படிப் பார்த்தாலும் சினிமா கட்டணம் இருமடங்கு உயரப்போகிறது எனும் போது இனி மக்கள் சினிமாவை எப்படிப் பார்ப்பார்கள்?

சினிமா கட்டணம் குறைவாக அதாவது நியாயமான விலையில் இருந்தால்தான் மக்கள் அதிகம் திரையரங்கிற்கு வருவார்கள். மாறாக குறைவான நபர்கள் அதிக டிக்கெட் விலை கொடுத்து வந்தால் போதும் என்ற மனநிலையில் சினிமா முதலாளிகள் இருக்கின்றனர். காசு இருந்தால்தான் கல்வி, மருத்துவம், மின்சாரம் என்றான பிறகு சினிமாவையும் அப்படி ஆக்கி விட்டார்கள்.

ஆனால் மற்றவற்றை இணையத்தில் பெற முடியாது! சினிமாவைப் பெற முடியுமே! ஏற்கனவே தமிழக மக்கள் தொலைக்காட்சிகளில் காட்டப்படும் சினிமாவைப் பார்த்தாலே போதும் என்ற மனநிலையில் திரையரங்கிற்கு செல்லும் இளைஞர்கள், ரசிகர்கள் இனி என்ன செய்வார்கள்? அதிக கட்டணம் கொடுக்க முடியுமா? மக்கள் கருத்தென்ன? வாக்களியுங்கள்!

இனிமேல் நீங்கள் சினிமாவை எப்படிப் பார்ப்பீர்கள்?

  • தமிழ் ராக்கர்ஸ் – டொரண்ட் – செல்பேசி
  • தொலைக்காட்சிகள்
  • மல்டிபிளக்ஸ் திரையரங்குகள்
  • சாதாரண திரையரங்குகள்
  • பார்க்க மாட்டேன்

_____________

இந்தக் கருத்துக்கணிப்பு உங்களுக்குப் பயனளித்ததா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

நெல்லை : விளைநிலத்தில் டாஸ்மாக்கை திறந்த அரசு – விவசாயிகள் போர்க்கோலம் !

0

டாஸ்மாக் கிற்கு எதிராக இரண்டாவது நாளாக தொடரும் போராட்டம் !

நெல்லை மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் புதுப்பட்டி ஊர்களுக்கு இடையே விளை நிலங்களுக்கு மத்தியில் கடந்த 04.09.2017 அன்று புதிதாக டாஸ்மாக் சாராயக் கடை திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட செய்தி தெரிந்ததும் புதுப்பட்டி கிராம மக்கள் ஒன்று திரண்டு கடையை முற்றுகையிட்டு கொட்டும் மழையிலும் போராட்டம் நடத்தினர்.

அதன் விளைவாக திறந்த அன்றே கடை தற்காலிகமாக மூடப்பட்டது. ஆனால் கொடுத்த வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டு மறுநாளே கடையை திறந்து விட்டார்கள். இதைக் கண்டு குமுறிய மக்கள் ஆலங்குளம் விவசாயிகள் திரண்டு கலெக்டர் தொடங்கி எம்.பி. வரையில் மனுக் கொடுத்துப் பார்த்தனர். எதுவும் நடக்கவில்லை. கடை மட்டும் கனஜோராக நடந்து கொண்டிருந்தது.

இந்த நிலையில் தான் மக்கள் அதிகாரம் தோழர்கள் தகவல் அறிந்து மக்களை சந்தித்துப் பேசினர். உடனடியாக டாஸ்மாக் எதிர்ப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டு சுவரொட்டி அடித்து ஆலங்குளம் புதுப்பட்டி பகுதிகளில் ஒட்டப்பட்டது. தொடர்ந்து பிரசுரம் அடித்து மக்களிடம் வீடு வீடாகச் சென்று வினியோகித்து பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. சாராயக்கடை திறப்பதின் நோக்கம் குறித்தும், அரசின் தன்மை குறித்தும் பரப்புரை செய்யப்பட்டது. உறுதியான, சமரசமற்ற போராட்டமே தீர்வு என்பதை மக்கள் உணரத் தொடங்கினர்.

அடுத்ததாக, டாஸ்மாக் எதிர்ப்புக் குழு கூடி அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதில் 12.10.2017 அன்று போராட்டம் நடத்துவது என்றும், டாஸ்மாக் கடையை மூடாமல் திரும்புவதில்லை என்றும் முடிவு செய்யப்பட்டது.

திட்டமிட்டபடி, 12.10.2017 அன்று காலை 11.00 மணியளவில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தைத் தொடங்கினர். காவல் துறையினரின் நைச்சியாமான சமாதானங்களை மீறி விண்ணதிரும் முழக்கங்களுடனும், விவாசாயிகள் தங்கள் அனுபவங்களை பேசுவதினூடாகவும் போராட்டம் வீரியத்துடன் தொடர்ந்தது.

நிலைமை சாதகமாக இல்லாததை உணர்ந்த காவல்துறையினர், மேலதிகாரிகளுடன் பேசி தாசில்தாரை வரவழைத்தனர். மதியம் 2.00 மணிக்கு வந்த தாசில்தார், மக்களுக்கு இடையூறு இல்லாமல் ஊருக்கு வெளியே தான் டாஸ்மாக் அமைக்கப்பட்டிருக்கிறது என்ற வாக்கியத்தை முடிக்கும் முன்னரே, இது எங்கள் விவசாய நிலம் என்று பதிலடி கொடுத்தனர் விவசாயிகள். இரண்டு மாதம் அவகாசம் கொடுங்கள் கடையை மூடி விடுகிறோம் என்றார்.

உடனே மக்கள், இது வரை கலெக்டர் தொடங்கி அனைத்து அரசு அதிகாரிகளிடமும் கொடுக்கப்பட்ட மனுக்களை சுட்டிக் காட்டி இதற்கு என்ன பதில் என்றனர். செய்வதறியாது திகைத்த தாசில்தார். இதற்கு மேல் நான் ஒன்றும் செய்ய இயலாது டி. எம் -மை (மண்டல மேலாளர்) அனுப்புகிறேன் என்று கூறிவிட்டு பறந்தோடினார்.

நேரம் கடந்ததே தவிர எந்த மேலதிகாரியும் மக்களை வந்து சந்திக்கவில்லை. மீண்டும் காவல் துறையினர், நேரம் இருட்டத் தொடங்கி விட்டது, பெண்கள் அதிகம் இருக்கிறார்கள். நாங்கள் கடையை திறக்க விடமாட்டோம். நீங்கள் கலைந்து செல்லுங்கள். வேண்டுமானால் காலையில் உங்கள் போராட்டத்தை தொடர்ந்து கொள்ளலாம் என்று பேசிப் பார்த்தனர். மக்களின் கருத்தைக் கேட்டதில் அவர்கள் உறுதியாக இருந்து கடையை அகற்றும் வரை போராட்டம் தொடரும் என்று திடமாக நின்றனர். விடிய விடிய போராட்டம் தொடர்கிறது.

ஊடகத்துறைகளிலிருந்து நிருபர்கள் வந்திருந்து மக்களிடம் பேட்டி எடுத்து புகைப்படம் எடுத்து செய்தி சேகரித்துச் சென்றனர். ஆனால் காலையில் அனைத்து செய்தித்தாள்களிலும் ஒரே மாதிரியாக தாசில்தார் வந்து பேசியதும் அதை ஏற்றுக் கொண்டு மக்கள் கலைந்து சென்றனர் என்று செய்தி வெளியிட்டு தாங்கள் யார் பக்கம் இருக்கிறோம் என்பதை உறுதி செய்தனர்.

இன்றும் இந்த நிமிடம் வரை போராட்டம் அதன் வீரியம் குன்றாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
நெல்லை மண்டலம்.

_____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

டெங்கு குற்றத்தைக் கண்டித்தால் சுறுசுறுப்பாக வழக்கு போடுமாம் செயலற்ற அரசு !

3

க்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக “ஜெயா எப்படி செத்தால் நமக்கென்ன? மக்கள் சாகிறார்கள்! டெங்கு, மலேரியா – மரணங்களுக்கு செயலற்ற இந்த அரசுதான் காரணம்!” என்ற அடிப்படையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு பிரச்சாரம் செய்யப்பட்டது.

அந்த வகையில் விருத்தாச்சலம் பாலக்கரை பேருந்து நிலையத்திலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தது. தமிழகம் முழுவதும் மரணபீதியில் உள்ள சூழலில் சுவற்றின் அழகு கெட்டுவிட்டதாக கூறி மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ மற்றும் விருதை பகுதி தோழர் முருகானந்தம் ஆகியோர் மீது சப்-இன்ஸ்பெக்டர் வினாயக முருகன் வழக்கு பதிவு செய்துள்ளார்.

தமிழகத்தில் முழுமையாக செயலற்றுப் போன அரசு, போராடுபவர்களை குறிவைத்து வழக்கு போடுவது அவர்களின் போராட்டங்களை முடக்குவது ஆகியவற்றை மட்டும் செய்கிறது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
விருத்தாச்சலம். தொடர்புக்கு – 81108 15963

_____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

புதுச்சேரி : மேரி பிஸ்கெட் தொழிலாளிகளுக்கு பட்டினிதான் ஊதியமா ?

2

கமிஷனரின் ஆணை – கழிப்பறை காகிதம்! சன்பீஸ்ட் பிஸ்கட்ஸ் முதலாளியின் கொட்டம்!

புதுச்சேரி திருபுவனையில் இயங்கி வரும் சன்பீஸ்ட், மேரி கோல்டு, மேரி லைட் ஆகிய பிராண்ட்களின் பிஸ்கட்டுக்களைத் தயாரிக்கும் வேல் பிஸ்கட்ஸ் நிறுவனத்தில் ஊதிய உயர்வுப் பேச்சுவார்த்தையை சீர்குலைக்கும் வகையில் நிர்வாகம், தொழிலாளர்கள் மீது அடக்குமுறைகளை ஏவி வருகிறது.

இதை எதிர்கொள்ளும் வகையில் சட்டபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதே நேரம், சட்டத்தை மதிக்காத நிர்வாகத்தின் மீது நடவடிக்கைக எடுக்க வலியுறுத்தி தொழிலாளர் ஆணையரை முற்றுகையிட்டு “தொழிலாளியின் நெஞ்சை சுடும் வேல் பிஸ்கட்ஸ்” என்ற தலைப்பில் போராட்டம் நடத்தினோம்.

அந்த முற்றுகைக்குப் பின் தொழிலாளர் ஆணையர், நிர்வாகத்தை அழைத்து எச்சரித்தும் இன்று வரை தனது சட்டவிரோத பழிவாங்கும் நடவடிக்கைகளை நிறுத்தவில்லை. நிர்வாகத்தின் இந்த அடக்குமுறைகளையும், சட்டவிரோத நடவடிக்கைகளையும் அம்பலப்படுத்தும் வகையில் நிறுவனத்தை சுற்றியும், தொழிற்பேட்டைப் பகுதிகளிலும் முழக்கத்தட்டிகள் வைத்து பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. நமது பிரச்சாரம், தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் மக்கள் மத்தியில் பேசும் பொருளாக மாறிப் போனது.

இதனால் ஆத்திரமடைந்த நிர்வாகம், அன்றாட வேலை நடைமுறைகளையே குற்றமாக்கி தொழிலாளர்கள் மீது பொய்க் குற்றம் சுமத்தி கடிதம் கொடுப்பதை வழக்கமாகிக் கொண்டு விட்டது. மறுபுறம் சட்டப்படி நடப்பதாக சொல்லி முறையான காரணங்களின்றி தொழிற்சங்க முன்னணியாளர்களை தற்காலிக பணி நீக்கம் செய்து வருகிறது. அதன் மீதான விசாரணையைக் கூட “இயற்கை நியதிக் கோட்பாடு களுக்கு” உட்படுத்தாமல் தான் தோன்றித்தனமாக நடந்து வருகிறது.

மறுபுறம், சங்க இணைச் செயலாளர் மீதான பணியிட மாற்றம், சட்டப்படி செல்லாது என்றும், பணியிட மாற்றம் என்பதே சட்டவிரோதம் என்றும், பணியிட மாற்றத்தை ரத்து செய்து மீண்டும் பணிவழங்க தொழிலாளர் ஆணையர் ஆணையிட்டு கடிதத்தை அனுப்பிய போதும், அதை சற்றும் மதிக்காமல் இணைச் செயலாளருக்கு பணி வழங்க மறுத்து விட்டது. தனது ஆணை செல்லாக்காசாகிப் போனதால் பொங்கி எழுவதைத் தவிர வேறொன்றும் செய்யவில்லை தொழிலாளர் ஆணையர்.

சங்கத்தின் பொதுக்குழுவைக் கூட்டி, நமது தட்டி வைத்த தொடர்ச்சியான போராட்ட நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் விளைவுகளை ஏற்படுத்தியதா இல்லையா என்பதை அவர்களின் கருத்துக்களின் அடிப்படையில் இரு பிரிவுகளாக்கி அவர்களின் கேள்விகளின் அடிப்படையில் விவாதம் நடத்தப்பட்டது. இறுதியில் மக்கள் மத்தியில் பிரச்சாரம் சென்றடைந்தது என்பதை ஏற்றுக் கொண்டதோடு, நிர்வாகம் கடிதம் கொடுக்கும் அடக்குமுறைகளை எதிர்கொள்ளும் உற்சாக மனநிலையோடு சென்றனர் தொழிலாளர்கள்.

அடுத்த நாள் தங்களுக்கு கடிதம் கொடுக்கப்போவதை அறிந்து ஒவ்வொரு தொழிலாளியும் தாங்களே அதிகாரிகளிடம் போய்  தங்களுக்கு வரவேண்டிய கடிதத்தை கேட்டு பெற்றது நிர்வாகத்திற்கு கூடுதல் எரிச்சலை ஏற்படுத்தியதோடு, தொழிலாளர்களை பயமுறுத்தும் தனது நடவடிக்கை பலனளிக்காமல் பல்லிளித்தது.

அடுத்த தொடர் நடவடிக்கையாக, நிர்வாகத்தின் சட்டத்தை மதிக்காத போக்குகளைக் கண்டிக்கின்ற வகையில் தொழிற்சங்கத் தலைவர் தோழர் சுதாகர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மாவட்டக்குழு தோழர்கள் செல்லக்கண்ணு, லோகநாதன் ஆகியோர் உரையாற்றினர்.

தலைமையுரையில், நிர்வாகத்தின் சட்டவிரோத அடக்குமுறைகளைப் பட்டியலிட்டும், ஒரு தொழிலாளர் ஆணையர் உத்திரவிட்டும் அதை துடைத்துப் போடும் காகிதமாக முதலாளி மதிப்பதைப் பற்றியும் பேசினார்.

தோழர் செல்லக்கண்ணு தனது உரையில், ஒவ்வொரு நிறுவனத்திலும் தொழிலாளர்கள் தங்களது அன்றாட வாழ்வை நகர்த்தும் வகையில் தான் நியாயமான கோரிக்கைகளை வைத்துப் போராடுகின்றனர். அதற்கு சங்கம் வைத்தால், தடுப்பது, அதையும் தாண்டி சங்கம் வைத்துவிட்டால், குறிப்பாக இந்த சங்கத்தில் சேரக்கூடாது எனவும் சொல்கின்றனர்.

அதற்கு முக்கிய காரணம், சட்டப் போராட்டம் மட்டுமல்லாமல், தொழிலாளர்களுக்கு அரசியல் கற்றுக் கொடுப்பதால், அரசியலுடன் இணைத்து தங்களது கோரிக்கைகளைப் பேசி மடக்கும் போது பதிலளிக்க முடியாமலும், ஏமாற்ற முடியாமலும் பணிய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. எனவே, நமது உரிமைகளை வென்றெடுக்க வேண்டுமெனில் அரசியல் ரீதியாக அணிதிரள வேண்டியது அவசியம் என விளக்கினார்.

தோழர் லோகநாதன் இன்னும் எத்தனை நாட்களுக்குத் தான், இதைக் கொடு, அதைக் கொடு என கோரிக்கைகளை வைத்துக் கொண்டிருப்பது? ஒரே ஒரு கோரிக்கை மட்டும் தான் எங்களுக்கு தொழிற்சாலையைக் கொடுத்து விடு. லட்சம் லட்சமாக எண்ணிக்கையில் உற்பத்திப் பொருட்களை உற்பத்திசெய்ய முடிந்த எங்களால், ஒரு தொழிற்சாலையை நிர்வகிப்பது கடினமான வேலை இல்லை என்றார்.

எனவே, முதலாளிகளின் உற்பத்திச் சுரண்டலை ஒழிக்கும் படியான கோரிக்கைகள் மட்டுமே நமது உரிமைகளை மீட்க நிரந்தரத் தீர்வாக முடியும் என்பதையும், அதற்கு அரசிடம் கோரிக்கை வைத்துப் பலனில்லை. ஏனெனில், அரசின் கொள்கைகள் அனைத்தும் மக்களுக்கு எதிராக உள்ளது என்பதை பல்வேறு உதாரணங்களிலிருந்து விளக்கினார். எனவே, மக்களுக்கான அதிகாரத்தை, அரசியல் அதிகாரத்தை கையில் எடுப்பது தான் நம்முன் உள்ள கடமை என்று விளக்கினார்.

இந்த ஆர்ப்பாட்டம் நிர்வாகத்தின் சட்டவிரோத, சட்டத்தை மதிக்காத தன்மையை, துலக்கமாக மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தியது. நிர்வாகம், திருடனுக்குத் தேள் கொட்டிய கதையாக வாயை மூடி மௌனம் காத்ததுடன், நீங்கள் செய்வதெல்லாம் சரியில்லை என ‘மென்மையாக’ கண்டித்தது.

மேலும், தொடர்ச்சியாக தொழிலாளர்களை நேரில் நின்று மிரட்டும், மேலாளர், பகுதியில் உள்ள பொறியியல் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்து ஒரு மாணவியை தற்கொலைக்குத் தள்ளிய குற்றத்தில் பணியிடை நீக்கத்தில் இருக்கும் அவரது இரண்டாவது மனைவி என குடும்பமே மக்களின் எதிரியாக மாறிப்போனதையும், தொழிலாளர் துறையில் பேச்சுவார்த்தைக்கு வந்து வாயைத் திறந்தாலே பொய் சொல்லும் HR மேலாளரையும் அம்பலப்படுத்தி சுவரொட்டி போடப்பட்டது.

அந்த ஆத்திரத்தையும் வெளிக்காட்ட முடியாமல், நீங்கள் சுவரொட்டி போடுவதால் தங்களுக்கு ஒன்றும் பாதிப்பில்லை. உங்களது பணம் தான் வீணாகிறது என தங்களது தொழிலாளர் விரோத செயல்களுக்கு மிகவும் பழக்கப்பட்டு விட்ட இந்த ‘நல்ல’ நயவஞ்சகர்கள் தங்களது கொடூர முகங்கள் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு விடக் கூடாது என்பதற்காக, வாட்ஸ் அப், ஃபேஸ் புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இருக்கும் தங்களது மற்றும் தங்களது குடும்ப புகைப்படங்களை அகற்றி, தங்களது ‘துணிச்சலை’ வெளிப்படுத்தியுள்ளனர்.

முதலாளிகளின் லாபவெறிக்காக, அவர்களின் பாதந்தாங்கி சேவை செய்யும் இந்த மயிர் நீப்பின் உயிர் வாழா ‘கவரிமான்’ பரம்பரையின் வழிவந்த அதிகாரிகளின் அடுத்தடுத்த அடக்குமுறைகளையும் எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றனர் வேல் பிஸ்கட்ஸ் ஆலைத் தொழிலாளர்கள்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புதுச்சேரி. தொடர்புக்கு: 95977 89801.

_____________

தொழிலாளி வர்க்கத்தின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

லாரி போக்குவரத்தை ஒழிக்கும் மோடி அரசு ! நேர்காணல்

0
DCCver0077

த்திய அரசை எதிர்த்து நாடு முழுவதும் இந்த வாரம் இரண்டு நாட்கள் நடந்த லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தால் தமிழகத்தில் 10 ஆயிரம் கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது. சுமார் 3 ஆயிரம் கோடி மதிப்புள்ள சரக்குகள் தேக்கமடைந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள 327 சுங்கச்சாவடிகளை மூட வேண்டும், ஆர்டிஓ -க்கள் லாரிகளை எந்தவித காரணமும் இன்றி நிறுத்தி அபராதம் வசூலிக்க கூடாது. டீசல் விலையை மாதத்திற்கு ஒரு முறையே நிர்ணயம் செய்ய வேண்டும். புதிய மோட்டார் வாகன சட்டத்தை கைவிட வேண்டும், லாரியை வாங்கும்போதும், விற்பனை செய்யும் போதும் 28 சதவீத சரக்கு மற்றும் சேவை வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த இரட்டை வரி விதிப்பை கைவிட வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோரை சந்தித்து மனு அளித்தனர்.

சென்னை மாதவரம் சிஎம்டிஏ மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள லாரிகள்

இந்தியா முழுவதும் 93 லட்சம் லாரிகளும், தமிழகத்தில்  4.50 லட்சம் சரக்கு லாரிகள், மணல் லாரிகள் என எதுவும் இயக்கப்படவில்லை. வெளிமாநில லாரிகள், தமிழகத்தை சேர்ந்த லாரிகள், மாநிலத்தின் பல்வேறு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டன. மேலும் வெளி மாநிலத்துக்கு லோடு புக்கிங் செய்வதும் நிறுத்தப்பட்டது. உணவுப்பொருட்கள், அரிசி-பருப்புகள், காய்கறி, பூக்கள், கட்டுமான பொருட்கள் என அனைத்தும்  முடங்கின. இவற்றின் விலைகளும் உயந்துள்ளது.

லாரிகள் ஸ்டிரைக்கின் மூலம் தமிழகத்தில் 2 நாட்களில்  3 ஆயிரம் கோடி சரக்குப் பொருட்கள் தேக்கம் அடைந்துள்ளதாகவும், 10 ஆயிரம் கோடி அளவில் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கிறார்கள். ஏற்கனவே விலைவாசி விண்ணை முட்டுவதால் மக்கள் மூச்சு திணறுகிறார்கள். இச்சூழலில் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்திற்கான அவசியம் என்ன?

லாரிகள் வேலை நிறுத்தத்துக்கான அவசியம் குறித்து சென்னை வால்டாக்ஸ் சாலை பார்சல் சர்விஸ் மற்றும் லாரி உரிமையாளர் சங்கத்தின் செயலர் ரமேஷ்குமார் கூறியது,

சென்னை வால்டாக்ஸ் சாலை பார்சல் சர்விஸ் மற்றும் லாரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் குணசேகரன்

மத்திய அரசு  மோட்டார் வாகன சட்டத்தில் கொண்டு வர உள்ள திருத்தங்கள் காரணமாக மோட்டார் தொழிலை நம்பியுள்ள லட்சக்கணக்கானோர் பாதிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அதன் மூலம் மோட்டார் வாகன தொழிலுக்கு ஏற்படும் பிரச்சனைகள் என்பது,  “தற்போது ஆட்டோ மற்றும் டாக்சி சுயதொழில் என்ற அடிப்படையில் கோடிக்கணக்கானவர்களுக்கு வாழ்வாதாரமாக உள்ளது. மத்திய அரசு மோட்டார் வாகன சட்டம் பிரிவு 2-ல் “அக்ரிகேட்டர்” என்ற வார்த்தையை புதிதாக உருவாக்கி உள்ளது. தற்போது சட்டப்பூர்வமாக அக்ரிகேட்டர் என்ற அங்கீகாரம் இல்லாத நிலையில் ஓலா, உபர் போன்ற நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. அக்ரிகேட்டர் என்பதன் அர்த்தம் பலரை இணைத்து கூட்டுத் தொழில் செய்வதாகும்.

சட்ட அங்கீகாரம் இல்லாமலேயே ஓலா, உபர் போன்ற நிறுவனங்கள் தற்போது உள்ள சூழலை பயன்படுத்தி பலரை இணைத்து இத்தொழிலை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டனர்.  கட்டணம் உட்பட அவர்களே நிர்ணயம் செய்கிறார்கள்.

சட்ட அங்கீகாரம் உள்ள நிலையில் தனி நபர்கள் மட்டுமின்றி சில நிறுவங்கள் 100, 200 வண்டிகளை வைத்துக் கொண்டு இத்தொழிலில் நுழைவதற்கு வாய்ப்புள்ளது. இதன் மூலம் தனி நபர் ஆட்டோ, டாக்சி வைத்துக்கொள்ளும் சாத்தியம் இல்லாமல் ஆகிவிடும். ஆட்டோ மட்டுமின்றி சிறிய சரக்கு வாகனங்கள் அக்ரிகேட்டர் மூலம் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேற்கண்ட காரணங்களுக்காகவே அக்ரிகேட்டர் என்ற வார்த்தை புதிதாக  உருவாக்கப்பட்டுள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்கள் தொழிலை கையகப்படுத்தும் சூழ்நிலைக்கு சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே ஆட்டோ டாக்சி மற்றும் சிறிய சரக்கு வாகனங்கள் தொழில் மிகப்பெரிய பாதிப்புக்குள்ளாகும்.

லாரிகள் சரக்கு வாகனங்கள்:

அக்ரிகேட்டர் என்பது சட்டப்பூர்வமாக மாற்றப்பட்டதால் சரக்கு போக்குவரத்திலும் அக்ரிகேட்டர் வர வாய்ப்புள்ளது. அவ்வாறு வந்தால் கால் டாக்சிக்கு என்ன ஆபத்து நேர்ந்ததோ அதே ஆபத்து தான் லாரி தொழிலுக்கும் வரும். மேலும்,  வொர்க் ஷாப்களில் தற்போது வாகனங்களின் எப்.சி. வேலைகள் பார்க்கப்படுகிறது. எப்.சி, வட்டார போக்குவரத்து அலுவலகத்தில்  வழங்கப்படுகிறது. ஆனால் இச்சட்டத்தின் மூலம் எப்சி பணிகளை அதற்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள ஏஜென்சிகள் மூலம் பார்க்க அனுமதிக்கப்பட்டுள்ளது.  குறிப்பாக வாகன உற்பத்தியாளர்கள் நியமிக்கும் ஏஜென்சிகளே எப்.சி. பார்ப்பார்கள். வெளியில் வேலை பார்த்தல் அதனை நிராகரிக்கும் வாய்ப்பும் உண்டு. இதன் மூலம் பெரிய வேலைகள் பார்க்க முடியாது.

அதுமட்டுமில்லாமல் ஒரிஜினல் பாகம் தான் மாட்ட வேண்டும், ஷோ ரூமில் சென்று தான் எப்சி பார்க்க வேண்டும் போன்ற நிலைமை வந்தால் லாரி தொழிலில் சிறிய உரிமையாளர்கள் நிலைத்து நிற்க முடியாது.

அதேபோல் ஓவர் லோடு என்பதை காரணம் காட்டி மிகவும் கடினமான தண்டனை முன்மொழியப்பட்டுள்ளது. கூடுதலாக ஏற்றப்படும் ஒவ்வொரு டன்னிற்கும் தண்டனை தொகை விதிக்கப்படும். குறைந்தபட்சம் ரூ.2000 முதல் ரூ.20,000 வரை விதிக்கிறார்கள்.  மேலும் ஓவர் லோடு இன்றி அதிக உயரம், அகலம், அதிக நீட்டல் போன்றவைகளும் அபராததிற்குரிய குற்ற செயல். அதேபோல இன்சூரன்ஸ்  நஷ்ட ஈடு அதிகபட்சமாக மரணமடைந்தால் 5 லட்சம், காயமடைந்தவர்களுக்கு 2.5 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் நட்டஈட்டை அதன் உரிமையாளரே வழங்க வேண்டும் என்றும் திருத்தப்பட்டுள்ளது. பொது போக்குவரத்தில் ஏற்படும் விபத்துக்கான நட்ட ஈட்டை அரசும் பகிராமல் எங்கள் தலையில் சுமத்தினால் என்ன செய்வது? எனவே தான் இந்த போராட்டம் என்றார்.

லாரி தொழிலில் நடைமுறையில் உள்ள சிக்கல் மற்றும் ஜிஎஸ்டி ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பு குறித்து சென்னை வால்டாக்ஸ் சாலை பார்சல் சர்விஸ் மற்றும் லாரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் குணசேகரன்  கூறியது,

கடந்த 30 ஆண்டுகளாக இந்த தொழிலில் இருக்கிறேன். ஆனால் இப்பொழுது ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை நாங்கள் எப்பொழுதும் சந்தித்ததேயில்லை. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சென்னையிலிருந்து நாகர்கோயில் செல்ல வேண்டுமானால் அனைத்து செலவுகளும் போக கணிசமாக ரூ.15,000 கிடைக்கும். ஆனால் இப்பொழுது மூன்றாயிரத்தில் இருந்து ஐந்தாயிரம் கிடைப்பதே பெரிய விஷயம் என்கிறார்.

நாகர்கோயில் to சென்னை சென்று வர நான்கு நாட்கள் ஆகும். இதற்கு டோல்கேட் கட்டணமாக ரூ.6000 ஆகிறது.  ஒரு மாதத்திற்கு 8 ட்ரிப் எங்கள் வண்டி செல்கிறது. இதற்கே மாதம் ரூ.32,000 செலவாகிவிடும். எங்களிடம் பதினைந்து லாரிகள் இருக்கின்றன. மொத்தத்திற்கும் கணக்கு போட்டுப்பாருங்கள். டோல்கேட்டால் மாதம் ரூ.5 லட்சம் இழப்பு.

அடுத்தது, டீசல். ஒரு முறை சென்று வர 120 லிட்டர்  போட வேண்டும். டீசல் விலையை பொறுத்து தான் விலையை தீர்மானிப்போம்.  திடீரென்று எதிர்பாராத விதமாக டீசலை ஏற்றி விடுகிறார்கள். அவ்வாறு செய்வதன் மூலம் ஏற்படும் இழப்பு அனைத்தும் நாங்கள் சமாளிக்க வேண்டும். அந்த நேரத்தில் கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டு விடும். எங்கள் வருமானத்தில் 70 சதவீதம் வரை டீசலுக்காக  ஒதுக்க வேண்டும்.

ஆண்டிற்கு ஒருமுறை எப்சி எடுக்க வேண்டும். அதற்கு பெயிண்டிங் மற்றும் டிங்கரிங் உட்பட ரூ.35000, ஸ்பீடு கவர் ரூ.7000,  ஆர்.டி.ஓ. -விற்கு ரூ.2500 என்று ரூ.50,000 வரை செலவாகிவிடும். இதற்காக வருமானத்தில் மாதம் ஐந்தாயிரம் ஒதுக்க வேண்டும்.

லாரியின் டயர்கள். முன்பக்க டயர் விலை ஒரு ஜோடி ஜிஎஸ்டி -க்கு முன்பு ரூ.28,000 முதல் ரூ.30,000 வரை இருந்தது, தற்போது ரூ.35,000 வரை உயர்ந்துள்ளது. லாரியின் பின்புறம் பொருத்தப்படும் நைலான் ஃபைபர் டயர் ஒரு ஜோடி ரூ.35,000 லிருந்து இருந்து ரூ.40,000 ஆகவும், பெரிய நைலான் பைபர் டயர் ரூ.38,000 இருந்து ரூ.45,000 ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனை பத்து மாதத்திற்கு ஒருமுறை மாற்றியாக வேண்டும்.

மூன்று மாதத்திற்கு ஒரு முறை சாலை வரி ரூ.3000, மாதம் தோறும் வருமான வரி ரூ.7,500 கட்ட வேண்டும். மேலும் டீசலுக்கான வாட் வரியும் 25 சதவீதம் கட்ட வேண்டும்.

அதேபோல் நாகர்கோயில்- சென்னை சென்று வர ஒருமுறைக்கு  போலிசு மாமூல் ரூ.300. மாதம் எட்டு ட்ரிப் ரூ.2400 வரை ஆகிவிடும். இது போக மாதவரத்தில் இருந்து வால்டாக்ஸ் சாலைக்கு வருவதற்குள் தினமும் ரூ.200 பிடுங்கி விடுவார்கள்.

லாரி ஓட்டுனருக்கு ரூ.2500, கிளீனருக்கு ரூ.1500 மேலும் ஆட்கள் ஏற்று கூலி, இறக்கும் கூலி என்று ஒரு ஆளுக்கு தினமும் ரூ. 500 வரை வழங்கப்பட வேண்டும். ஜிஎஸ்டி வந்த பிறகு சரக்கு புக்கிங் குறைந்து விட்டதால் ஆட்கூலி கூட வழங்க முடிவதில்லை.

அதே போன்று சாலைகளில் நடக்கும் திருட்டு சம்பவங்கள், ஓட்டுனர்கள் தாக்கப்படுவது போன்றவை எப்பொழுதும் அச்சத்திலேயே இருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதுபோன்ற சம்பவங்களுக்கு போலிசே உடந்தையாக இருக்கின்றது.

ஜிஎஸ்டி எண் இல்லாத சிறு தொழில் நிறுவனங்கள் லாரிகளில் சரக்கு அனுப்புவதில் சிரமம் உள்ளது. லாரி புக்கிங் அலுவலகத்திலும் புக்கிங் செய்து அனுப்ப முடியாததால் கிட்டத்தட்ட 75 சதவீதம் வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்ட இடங்களில் இருந்து கொள்முதல் பகுதிக்கும், கொள்முதல் இடத்தில் இருந்து பிற சில்லறை வியாபாரிகளுக்கும் கொண்டு செல்லும் பதிவு பெற்ற சரக்கு லாரிகளுக்கு ஜிஎஸ்டி -யில் 5 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பொருட்களை சரக்கு லாரி உள்ளிட்ட வாகனங்களில் கொண்டு செல்லும் போது ஜிஎஸ்டி ரசீது இல்லாமல் எடுத்துச் செல்ல முடியாது. இதை மீறினால் சம்பந்தப்பட்ட பொருட்களுக்குரிய ஜிஎஸ்டி -யுடன் கூடுதலாக 100 சதவீதம் வரை அபராதம் வசூலிக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.

இதனால் லாரிகளில் சரக்குகளை ஏற்றிச் செல்வது நிறுத்தப்பட்டுள்ளது. வெளி மாநிலங்களிலும் சரக்குகள் பதிவு செய்வது தடைப்பட்டுள்ளது. இதனால் தொடர்ந்து சரக்கு லாரி வர்த்தகம் பாதிக்கிறது. இது எங்கள் தொழிலில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பாதிப்பு. வழக்கமாக ஜிஎஸ்டி வருவதற்கு முன்பு நாளொன்றுக்கு எட்டு லோடுகள் வரை ஏற்றினோம். இப்பொழுது இரண்டிற்கே பெரும்பாடாக உள்ளது.  ஒரு கிராம் எடுப்பதற்கு கூட சிரமாக உள்ளது.

லாரிகள் பழுது ஏற்படும் நிலையில் அதற்கான செலவு தனி. ஜிஎஸ்டி -க்கு பிறகு உதிரி பாகங்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளதால் எப்பொழுதும் கையில் பணம் வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் இந்த தொழிலில் நிலைத்திருக்க முடியாது.

இந்த பிரச்சனைகளை சமாளிக்க முடியாமல் ஜிஎஸ்டிக்கு பிறகு மூன்று லாரிகளை விற்பனை செய்து விட்டேன். விற்கும் போது ஜிஎஸ்டி வரி கட்ட வேண்டும் என்றார்கள். அதன் நடைமுறை சரியாக தெரியாததால் யாரும் அதனை கண்டுகொள்ளவில்லை.

நாங்கள் கூட பரவாயில்லை. பார்சல் சர்விஸ் வைத்துள்ளதால் குறைந்த பட்சம் சமாளிக்க முடிகிறது. ஆனால் மார்கெட்டில் ஓடும் லாரிகள் மிகக் கடுமையாக பாதிப்படைவார்கள். அவர்களுடைய நிலை தான் மோசம் என்று அவர் சொல்லி முடிப்பதற்குள் மயக்கமே வந்து விட்டது.

என்ன இருந்தாலும் பண்டிகை காலத்தில் வேலை நிறுத்தம் செய்வது பொது மக்களை தானே பாதிக்கும்?

 உண்மை தான். ஆனால் மக்கள் பாதிப்படைவார்கள் என்பது குறித்து இந்த அரசு கவலைப் பட்டிருந்தால் எங்கள் கோரிக்கையை ஏற்று மக்களை பாதிப்பிலிருந்து காப்பற்றி இருக்கும். ஆனால் அரசு கவலை கொள்ளவில்லை. அதை விட முக்கியம் அரசு என்ற ஒன்றே இல்லை என்பதைத் தான் எங்களுக்கு உணர்த்துகிறது. இதே நிலை தொடர்ந்தால் அடுத்த மாதம் முதல் தேதியில் இருந்து காலவரையற்ற போராட்டம் நடத்துவோம்!

கூட்டிக் கழித்துப் பார்த்தால் லாரி தொழிலை ஒழிப்பதே மோடி அரசின் திட்டம் என்பது தெரிகிறது. புதிய வேலை வாய்ப்புக்களை உருவாக்க வக்கற்ற மோடி அரசு இருக்கும் தொழில்களை அழிப்பதில் எப்படி உறுதியாக இருக்கிறது என்பதற்கு லாரி உ ரிமையாளர்களின் அவல நிலை ஒரு சான்று! இது ஏதோ அவர்களுக்கு மட்டுமே உள்ள பிரச்சினை அல்ல! லாரி தொழிலின் பாதிப்பு விலைவாசி உயர்வாக நம் மீதும் விழும். விழித்தெழுவோம். இல்லையேல் நமது வாழ்க்கை நம்மிடம் இல்லை!

செய்தி, படங்கள் : – வினவு செய்தியாளர்

_____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

பெரியார் மண்ணில் கருவறைத் தீண்டாமையை ஒழிப்போம் !

1

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

பத்திரிக்கை செய்தி

நாள் : 12.10.2017

கேரள மாநிலத்தில் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு, தனது கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு பார்ப்பனரல்லாத அர்ச்சகர்கள் 36 பேரை நியமித்திருக்கிறது. இவர்களில் 6 பேர் தலித்துகள். அதே நேரத்தில் தமிழகத்தில், முறையாக அர்ச்சகர் பயிற்சி பெற்று, சான்றிதழும் தீட்சையும் பெற்ற 206 மாணவர்கள் பத்து ஆண்டுகளாக, பணி நியமனம் மறுக்கப்பட்டு தெருவில் நிற்கிறார்கள்.

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கவும், ஆலயத்தீண்டாமையை ஒழிக்கவும் 1993 -ல் திருவரங்கம் கருவறை நுழைவுப் போராட்டத்தை நடத்தியது மக்கள் கலை இலக்கியக் கழகம். 2007 -ல் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்களை ஒன்று திரட்டி சங்கமாக்கி, உச்ச நீதிமன்ற வழக்கில் தலையிட்டது மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம். தங்களுக்குப் பணி நியமனம் கோரி பத்து ஆண்டுகளாக அர்ச்சக மாணவர்கள் பல போராட்டங்களை நடத்தி விட்டார்கள்.

பயனில்லை. 2015 உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, பணி நியமனத்துக்கு தடை விதிக்கவில்லை என்ற போதிலும், அதிமுக அரசு மாணவர்களின் கோரிக்கையை கண்டு கொள்ளவே இல்லை. பார்ப்பனராகப் பிறக்காத ஒரேயொரு குற்றத்துக்காக தகுதியுள்ள இம்மாணவர்கள் இன்று தெருவில் நிற்கிறார்கள். பார்ப்பனிய ஒடுக்குமுறைக்கு எதிராக வைக்கம் சென்று போராட்டம் நடத்திய பெரியார் பிறந்த தமிழகத்தின் இன்றைய நிலை இதுதான்.

2006 -ல் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவதற்கு திமுக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுச் செய்து தடையாணை பெற்றவர்கள் மதுரை மீனாட்சி கோயிலின் பார்ப்பன அர்ச்சகர்கள். 1972 -ல் அர்ச்சகர் நியமனத்தில் வாரிசுரிமையை ஒழிக்க திமுக கொண்டு வந்த சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றவர்களும் இவர்கள்தான். “தங்களைத் தவிர வேறு யாரும் கடவுள் சிலையைத் தொட்டால் சிலை தீட்டாகிவிடும்” என்ற அப்பட்டமான தீண்டாமைக் கருத்தைத்தான் ஆகமவிதி என்ற பெயரிலும் மத நம்பிக்கை என்ற பெயரிலும் இவர்கள் முன்வைக்கிறார்கள்.

“பார்ப்பனரல்லாதவர்கள் மட்டுமல்ல, பார்ப்பனர்களின் மற்ற உட்பிரிவினர் கூட அர்ச்சகராக முடியாது” என்று சாமர்த்தியமாக வாதிடுவதன் மூலம் தங்களது சாதி – தீண்டாமை வெறியை இவர்கள் மறைத்துக் கொள்கிறார்கள். மாரியாத்தா, காளியாத்தா கோயில்கள் போன்றவற்றில் மற்ற சாதியினர் பூசாரியாக இருப்பதை காட்டி, ஒவ்வொரு கோயிலுக்கு ஒரு மரபு என்று சாதியை தந்திரமாக நியாயப்படுத்துகிறார்கள்.

கபாலீசுவரர் கோயில், பார்த்தசாரதி கோயில், நடராசர் கோயில், அரங்கநாதர் கோயில், மதுரை மீனாட்சி கோயில், தஞ்சை, திருவையாறு, நெல்லை, ராமேசுவரம், பழனி உள்ளிட்ட எல்லா முக்கிய கோயில்களிலும் அர்ச்சகர்களாக இருப்பவர்கள் பார்ப்பன உட்சாதியினர் மட்டும்தான். 1972 சேசம்மாள் தீர்ப்பு, “வாரிசு உரிமையாக அர்ச்சகர் பதவியைக் கோர முடியாது” என்று தெளிவாக கூறிவிட்ட பின்னரும், தற்போது இத்தகைய பெருங்கோயில்களில் இருக்கும் அர்ச்சகர்கள் 1174 -ல் 574 பேர் வாரிசுரிமையாக பதவி பெற்றவர்கள்தான்.

மேலும் 411 பேர் அவர்களால் சிபாரிசு மூலம் நுழைந்தவர்கள். அது மட்டுமல்ல, மதுரைக் கோயிலின் 116 அர்ச்சகர்களில் 28 பேர்தான் முறைப்படி ஆகமம் பயின்றவர்கள். சென்னை கபாலி கோயில் அர்ச்சகர்கள் 41 பேரில் 4 பேர்தான் ஆகமம் கற்றவர்கள். மற்றவர்களுடைய தகுதி சாதி மட்டும்தான் என்பதை நீதிபதி ஏ.கே.ராஜன் கமிட்டி அறிக்கை ஆதாரபூர்வமாக தெளிவுபடுத்துகிறது. ஆனால் தகுதியுள்ள பார்ப்பனரல்லாத அர்ச்சகர்களை நியமிக்க அரசு மறுத்து வருகிறது.

மேற்கண்ட கோயில்கள் அனைத்தும் பொதுக்கோயில்கள். அவை முன்னர் மன்னர்களின் நிர்வாகத்தின் கீழ் இருந்தன. இன்று இக்கோயில்களின் பணிநியமனம் உள்ளிட்ட நிர்வாக விவகாரங்கள் அரசு அதிகாரத்தின் கீழ் வந்திருக்க வேண்டும்.

ஆனால், “ஆகமவிதி, மரபு, பழக்கவழக்கம், இந்துக்களின் மத உரிமை” என்ற போர்வையில் தமிழ்மக்களுடைய உழைப்பில் உருவான இந்தக் கோயில்களின் கருவறைக்குள் தமிழனே உள்ளே நுழையமுடியாமல் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள். சிதம்பரம் கோயிலில் அர்ச்சகர் வேலைக்கு வந்த தீட்சிதர்கள், இன்று “கோயிலே தங்களுக்கு சொந்தம்” என்று உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பும் வாங்கி விட்டார்கள்.

அர்ச்சகர்களும் சங்கராச்சாரிகளும் எதைச் சொல்கிறார்களோ அதைத்தான் “மரபு” என்று உச்சநீதிமன்றம் அங்கீகரிக்கிறது. கோயில் தேவதாசி முறையும், தலித்துகளை கோயிலுக்குள் அனுமதிக்க கூடாது என்பதும்கூட ஆகமவிதிகள்தான். பால்ய விவாகம், பலதார மணம், உடன்கட்டையேற்றுதல் போன்ற அனைத்தும் இந்து மரபுகள்தான். “பார்ப்பனரல்லாதவர்கள் கருவறைக்குள் நுழையக்கூடாது” என்பதும் அத்தகையதொரு மரபு.

ஒழிக்கப்படவேண்டிய தீண்டாமை மரபு. 1969 -ல் நியமிக்கப்பட்ட இளையபெருமாள் கமிட்டி தீண்டாமை ஒழிப்புக்கு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில்தான், 1971 -ல் அனைத்து சாதியினரும் அர்ச்சராகும் சட்டத்தையும், 2006 அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியையும் திரு.கருணாநிதி கொண்டுவந்தார்.

இதற்கு எதிரான வழக்கில், 2015 -ல் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, தந்திரமான முறையில் பார்ப்பன அர்ச்சகர்களுக்கு சாதகமாக வழங்கப்பட்டிருப்பதாகவே கருதுகிறோம். சட்டப்பிரிவு 25 -ன் படி அர்ச்சக மாணவர்களும், பல்வேறு சாதிகளிலும் பிறந்த இந்துக்களும் பெற்றிருக்கும் மத உரிமையைக் காட்டிலும், சட்டப்பிரிவு 26 இன்படி குறிப்பிட்ட பார்ப்பன உட்சாதியை சேர்ந்த அர்ச்சகர்கள் கோரும் மரபுரிமைதான் பெரியது என்று கூறுகிறது அந்த தீர்ப்பு.

“தங்களைத் தவிர மற்றவர்கள் சிலையைத் தொட்டால் தீட்டு என்று அர்ச்சகர்ள் கூறுவது தீண்டாமைக்குற்றம் ஆகாது” என்றும் இந்த தீர்ப்பு கூறுகிறது. இருந்த போதிலும் மாணவர்களின் பணிநியமனத்துக்கு இத்தீர்ப்பு தடை விதிக்கவில்லை. அரசு இவர்களை நியமனம் செய்யலாம் என்றும், அந்த நியமனம் மரபுக்கு எதிரானது என்றால் அந்த நியமனத்துக்கு பார்ப்பன அர்ச்சகர்கள் நீதிமன்றத்தை நாடலாம் என்றும் கூறுகிறது இத்தீர்ப்பு.

தற்போது கேரளத்தில் பார்ப்பனரல்லாதவர்கள் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதே என்ற போதிலும், அதனை எதிர்த்து பார்ப்பன அர்ச்சகர்கள் உச்ச நீதிமன்றம் செல்வதற்கும் வாய்ப்புண்டு. இதே கேரளத்தில் குருவாயூர், திருவனந்தபுரம், சபரிமலை போன்ற கோயில்களில் பார்ப்பனரல்லாதார் நியமிக்கப்படவில்லை என்பதையும், சபரிமலையில் வழிபடுவதற்கே பெண்களுக்கு உரிமையில்லை என்ற வழக்கு நிலுவையில் இருப்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

2015 உச்ச நீதிமன்றத் தீர்ப்பு கேரளத்து பார்ப்பன அர்ச்சகர்ளுக்கும் சாதகமானதுதான். அங்கே பார்ப்பன அர்ச்சகர்கள் நீதிமன்றத்துக்கு போகாமலிருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் சமூக ரீதியாகத் தனிமைப்பட்டு விடுவோம் என்ற அச்சமாகத்தான் இருக்க வேண்டும். அத்தகைய அச்சவுணர்ச்சியை தமிழ்ச்சமூகம் அரசுக்கும், அர்ச்சகர்களுக்கும் ஏற்படுத்தவில்லை என்பதே இந்த மாணவர்களின் அவல நிலைக்கு மிக முக்கியமான காரணம்.

2015 உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, தீண்டாமைக்கு முட்டுக்கொடுக்கிறது என்ற போதிலும், அது பணி நியமனத்துக்கு தடை விதிக்கவில்லை என்பதால், தமிழக அரசு, 206 மாணவர்களையும் பெருங்கோயில்களில் நியமிக்க வேண்டும் என்று கோருகிறோம். அவர்களுடைய பணி நியமனத்துக்கு எதிராக அர்ச்சகர்கள் நீதிமன்றம் செல்லும் பட்சத்தில், அதனை எதிர்த்து நீதிமன்றத்தில் மட்டுமின்றி வீதியிலும் நாம் போராடவேண்டும்.

இந்த சாதி – தீண்டாமை இழிவை சகித்துக் கொண்டும் அரசாங்கத்திடமும் நீதிமன்றத்திடமும் மன்றாடிக் கொண்டும் நாம் இருக்கமுடியாது. சாதி, தீண்டாமையை அரசமைப்பு சட்டம் நியாயப்படுத்தினால் அந்த சட்டம்தான் மாற்றப்படவேண்டுமேயன்றி, அந்த சட்டத்துக்கு ஏற்ப நாம் மாறிக்கொள்ள முடியாது. மரபுக்கு தலைவணங்குவது என்ற பெயரில் சாதி ஆதிக்கத்துக்கும் தீண்டாமைக்கும் தலை வணங்க முடியாது. அர்ச்சகர் நியமனத்துக்கு மட்டுமல்ல, தலித் கோயில் நுழைவு, சாதி – தீண்டாமை மறுப்பு திருமணம் உள்ளிட்ட அனைத்துக்கும் இது பொருந்தும்.

206 மாணவர்களை பெருங்கோயில்களில் தமிழக அரசு உடனே பணி நியமனம் செய்ய வேண்டும். இல்லையென்றால், அதற்குப் பொருள், “பார்ப்பனரல்லாதார் சாமி சிலையைத் தொட்டால் தீட்டுப்பட்டுவிடும்” என்ற பார்ப்பன அர்ச்சகர்களின் கருத்துக்கு இந்த அரசு துணை நிற்கிறது என்பதுதான்.

அதனை முறியடிக்க தமிழகமெங்கும் கருவறை நுழைவுப் போராட்டம் நடத்த வேண்டுமென்று தமிழ் மக்களின் நலன் நாடும் அரசியல் கட்சிகளையும், அமைப்புகளையும் கேட்டுக் கொள்கிறோம். அதுதான் வைக்கம் வீரருக்கு நாம் செலுத்தும் மரியாதை. தமிழ் மக்கள் என்ற முறையில் அப்படிப் போராடுவதொன்றுதான் நமக்கு சுயமரியாதை! இது அர்ச்சக மாணவர்களின் பிரச்சினை அல்ல, தமிழ்ச் சமூகத்தின் தன்மானப் பிரச்சினை.

பங்கேற்றோர்

  • திரு. சி.ராஜீ, மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்
  • திரு. சே.வாஞ்சிநாதன், மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
  • திரு. சு.மில்ட்டன், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
  • திரு. அரங்கநாதன், தலைவர், அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கம்
  • திரு. பாலகுரு, திருச்செந்தூர் அர்ச்சகர் பயிற்சி பள்ளி
  • திரு. திருமுருகன், திருவல்லிக்கேணி அர்ச்சகர் பயிற்சி பள்ளி
  • திரு. வெங்கடேசன், திருவண்ணாமலை அர்ச்சகர் பயிற்சி பள்ளி

இவண் :
சே.வாஞ்சி நாதன், வழக்கறிஞர்
மாநில ஒருங்கிணைப்பாளர்
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

அலுவலகம்: 150-இ,
ஏரிக்கரை சாலை,
அப்போலோ மருத்துவமனை அருகில்,
கே.கே.நகர், மதுரை-20.

தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
தமிழ்நாடு. தொடர்புக்கு : 98653 48163.

_____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

விவசாயம் : பொது அறிவு வினாடி வினா

இணையத்தில் நுழையும் போது நாம் ஒரு புத்தகம் படிப்பது போல உறுதியாக கவனமாக ஈடுபடுவதில்லை. அதாவது அலைபாயும் மனதை இணையப் பரிமாணம் அலைக்கழிக்காத நாளில்லை. மவுசோடு மனமும் சேர்ந்து எங்கெங்கோ போகிறது. இணைய நேரம் முடிந்த பிறகு என்ன படித்தோம், எது நம் நினைவில் நிற்கிறது என்பதற்கு உத்திரவாதமில்லை. ஆகவே எவரும் எதிலும் அதிகம் நேரம் நின்று நிதானிப்பதில்லை. ஓடிக்கொண்டிருக்கும் மனதின் வேகத்திற்கு ஈடுகொடுப்பதோடு சில பொதுஅறிவு விசயங்களை மனதில் நிலை நிறுத்தும் வண்ணம் இந்த புதிய பகுதியை ஆரம்பிக்கிறோம். வழக்கம் போல இதுவும் சோதனை முயற்சிதான்.

அரசியல் செய்திகளை படிப்போருக்கும் எழுதுவோருக்கும் களத்தில் பணியாற்றுவோருக்கும் அரசியல், பொருளாதாரம் குறித்த பொது அறிவு அவசியம் என்பதாலும் இந்த வினாடி வினா பகுதியை வெளியிடுகிறோம். பங்கேற்போடு ஆலோசனைகளையும் அளியுங்கள்! நன்றி
– வினவு

கீழே உள்ள வினாடி வினா பக்கத்தை அழுத்தி அடுத்து வரும் படிவத்தில் கேள்விகளும் அதற்கான பதில்களும் உள்ளன. சரியான பதில்கள் என நினைப்பதை டிக் செய்து இறுதியில் வினாடி வினாவை முடித்தால் எவை சரியான பதில்கள் என்பதோடு நீங்கள் தவறாக தெரிவு செய்த பதில்களும் வரும். முயற்சி செய்யுங்கள்!

டெங்கு மரணங்களுக்கு யார் காரணம் ? கருத்துக் கணிப்பு

3

டெங்கு காய்ச்சல் கொள்ளை நோயாக மாறிவிட்டது என்கிறார்கள் சுகாதாரத் துறை நிபுணர்கள். தமிழகமெங்கும் பல்வேறு மருத்துவமனைகளில் மரணச் செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. இந்தியாவின் முன்னேறிய மாநிலங்களில் ஒன்றாகக் கருதப்படும் தமிழகத்திற்கு ஏன் இந்த அவல நிலை? காரணம் யார்? குற்றவாளிகள் யார்?

டெங்கு மரணங்களுக்கு யார் காரணம்?

  • கோஷ்டி மோதலில் காலம் தள்ளும் அதிமுக அரசு
  • தமிழகத்தை திட்டமிட்டே புறக்கணிக்கும் மோடி அரசு
  • சிகிச்சை அளிக்க மறுக்கும் தனியார் மருத்துவமனைகள்
  • திடீர் படையெடுப்பு நடத்தும் கொசுக்கள்
  • கொசுவைத் தவிர அனைவரும்

_____________

இந்தக் கருத்துக்கணிப்பு உங்களுக்குப் பயனளித்ததா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

டெங்கு மரணங்கள் : எடப்பாடி அரசைக் கண்டித்து தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் !

0

“டெங்கு : தொடரும் மரணம் ! செயலிழந்த எடப்பாடி அரசும் – நகராட்சியுமே குற்றவாளிகள் !” என்ற முழக்கத்தை முன்வைத்து தூத்துக்குடி சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் 10.10.2017 மாலை 4.30 மணிக்கு நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் முன்னதாக, டெங்கு மரணத்திற்கு அரசே காரணம் என்பதை அம்பலப்படுத்தி தூத்துக்குடி நகர் முழுவதும் 400 சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது. அதைத்தொடர்ந்து அரசு மருத்துவமனை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பேருந்து நிலையம், நீதிமன்றம் ஆகிய இடங்களில் 3,000 பிரசுரங்கள் காட்சி விளக்க அட்டைகளை தோழர்கள் பிடித்துக் கொண்டு பரவலாக மக்கள் மத்தியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் பிரச்சாரங்களைத் தொடர்ந்து பலரும் தொடர்பு கொண்டு ஆர்வத்தோடு பேசினர். குறிப்பாக, மக்கள் அரசின் மீது கடுமையான கோபத்தை வெளிப்படுத்தினர். இந்தப் பிரச்சாரங்களின் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் நெல்லை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் ஆதி தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்ப்புலிகள் அமைப்பின் மாவட்ட இணைச்செயலாளர் தோழர் கத்தார் பாலு கலந்து கொண்டு பேசினார். அதிமுக அரசு, பிஜேபி க்கு அடிமையாக இருந்து கொண்டு ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மக்களைப் பற்றி கவலைப்படாமல் செயல்படுவதை அம்பலப்படுத்திப் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் சிறப்புரை ஆற்றிய மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மதுரை மாவட்டச் செயலர் தோழர் லயனர் அந்தோணிராஜ் அதிமுக அரசும் அதிகாரிகளும் எப்படி உண்மைக்குப் புறம்பாக பேசிக் கொண்டு ஏமாற்றுகின்றனர் என்பதை புள்ளிவிவர ஆதாரங்களோடு பேசினார். எப்படி அரசே டெங்கு கொசுவை ஒழிக்காமல், கார்ப்பரேட் மருந்து முதலாளிகளுக்காக கொசுவை வளர்க்கும் வேலையை செய்கிறது என்பதையும், டெங்குக்கு அரசு மருத்துவமனைகளில் சரியான சிகிச்சை அளிக்காமல் தனியார் மருத்துவமனைகளுக்கு புரோக்கராக அரசு செயல்படுவதை அம்பலப்படுத்தினார்.

மதுரை வேலம்மாள் மருத்துவமனை வளாகத்துக்குள் அபார்ட்மெண்ட் கட்டி கோடிக்கணக்கில் சம்பாதிப்பதை அம்பலப்படுத்தினார். தனியார் மருத்துவமனைகள் எப்படி வக்கிரமாக மக்களிடம் பணத்தைப் பிடுங்குகின்றனர்  என்பதையும், மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் மூலம் எப்படிக் கொள்ளையடிக்கின்றனர் என்பதையும் விளக்கிப் பேசினார்.

மக்கள் ஓட்டுப்போட மட்டும் உயிரோடு இருந்தால் போதும். மற்றபடி செத்துத் தொலையட்டும் என்ற கேடுகெட்ட எண்ணத்தோடு, இரக்கமே இல்லாத அரசை, அதிகார வர்க்கத்தை ஒழிக்காமல் டெங்குவை ஒழிக்க முடியாது. நம்முடைய எதிரிகள் நம்மை ஒழிப்பதற்கு முன் நாம் அவர்களை ஒழிக்க வேண்டும். அதற்கு மக்கள் அதிகாரத்தைக் கையிலெடுப்பதே தீர்வு என்பதை கூறி முடித்தார்.

மக்கள் அதிகாரம் தோழர். மாரிமுத்து நன்றி கூறினார்.

ஆர்ப்பாட்டத்திற்கு வெளியில் நின்று கவனித்தவர்கள் பலரும் கடைசி வரை நின்று ஆர்வத்தோடு கவனித்து சென்றனர்.

நான்கு நாள் பிரச்சாரமும், ஆர்ப்பாட்டமும் தூத்துக்குடி வாழ் மக்கள் மத்தியில் மக்கள் அதிகாரத்தைப் பற்றிய பரவலான அறிமுகத்தையும், அரசியலையும் குறிப்பிட்ட அளவில் எடுத்துச் சென்றுள்ளது என்பதை உணர முடிந்தது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது )

தகவல் :
மக்கள் அதிகாரம்
தூத்துக்குடி.

_____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி