ஆம்புலன்சுக்கு ஆதார் கட்டாயம் – உ.பி. அரசு உத்தரவு !
செத்தாலும் விடாது காவி !
இணையுங்கள்:
செத்தாலும் விடாது காவி !
இணையுங்கள்:
கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். வங்கிக் கடன் தள்ளுபடிக்காக வீதிக்கு வருவது, சாலை மறியல் செய்வது, பேரணிகள் நடத்துவது, கண்ணீர்புகைக் குண்டுக்கு இலக்காவது, சில சமயங்களில் துப்பாக்கித் தோட்டாக்களுக்கு பலியாவது போன்ற நடவடிக்கைகளை விவசாயிகள் ஏன் மேற்கொள்கிறார்கள்? ஆனால் புது தில்லி ஜந்தர் மந்தரில் கடன் தள்ளுபடி கோரி எந்த கார்பரேட் முதலைகளும் தர்ணா நடத்துவதை நாம் பார்ப்பதில்லையே ஏன்?
6 விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்ட மத்தியப்பிரதேசம் மற்றும் மகாராஷ்டிர விவசாயிகள் கிளர்ச்சியின் விளைவாக மகாராஷ்டிர அரசு ரூ. 30, 500 கோடி விவசாயக் கடன் தள்ளுபடி செய்ய இணங்கியுள்ளது. முன்னர், சிறு மற்றும் விளிம்புநிலை விவசாயிகள் திருப்பிச் செலுத்தாத வங்கிக் கடன் ரூ. 36, 359 கோடியை உபி அரசு தள்ளுபடி செய்வதாக அறிவித்தது. இன்று பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், மபி, சட்டிஸ்கர் எங்கும் விவசாயிகள் போராட்டம் பற்றிப் படர்கிறது. பஞ்சாபின் மோஹாவில், கடன் தள்ளுபடி வாக்குறுதி நிறைவேற்றப்படும் வரை பொறுத்திருந்து வாழ வழியில்லாததால், போராட்டத்தின் போதே ஒரு விவசாயி தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதிலிருந்து விவசாயிகளின் நிலை எவ்வளவு பரிதாபகரமான வகையில் மோசமாக உள்ளது என்பதைப் புரிந்துக் கொள்ளலாம்.
கடன் தள்ளுபடிக்கான விவசாயிகள் போராட்டம் ஏற்கனவே தொடங்கி விட்டது. விவசாயக் கடன் தள்ளுபடி கோரி ஜூன் 16 -இல் வடக்கு பிராந்தியம் முழுவதும் மூன்று மணிநேர சாலை மற்றும் இரயில் மறியலுக்கு விவசாயிகள் சங்கங்கள் அழைப்பு விடுத்தன. இப்போது ஒரு கேள்வி எழுகிறது. கடன் தள்ளுபடி செய்வது எவ்வளவு அத்தியாவசியமான உடனடித் தேவை என்பதை உணர வைப்பதற்கே தொடர் போராட்டங்களை இவ்வளவு தீவிரமாக நடத்த வேண்டிய கட்டாயத்துக்கு விவசாயிகள் ஏன் தள்ளப்படுகிறார்கள்? நாடுமுழுவதும் விவசாயிகள் நித்தம் சாவது பற்றி ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்களுக்கு ஏற்கனவே தெரியாதா? விவசாயம் அவசர நிலையில் உள்ளது.
கடந்த 21 ஆண்டுகளில் 3.18 இலட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். நாட்டின் ஏதாவதொரு பகுதியில் 41 நிமிடத்திற்கு ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்கிறார். கடன் திருப்பி செலுத்த முடியாத காரணத்தினாலேயே பெரும்பான்மையான தற்கொலைகள் நிகழ்கின்றன. உண்மையில் அவர்கள் பலதரப்பட்ட கடன்களின் குவியலுக்குள் புதைக்கப்பட்டுள்ளனர். வருடாந்திரம் ரூ. 12.60 இலட்சம் கோடிக்கு விவசாயிகள் கடனாளியாவதாக, 2016 நவம்பரில் மத்திய விவசாயத்துறை அமைச்சர் பாராளுமன்றத்தில் ஒப்புக் கொண்டார். எனவே விவசாயக் கடன் தள்ளுபடி நல்ல அரசியல் மட்டுமல்ல; நல்ல பொருளாதாரமும் கூட.
ஆனால் கடன் தள்ளுபடிக் கொள்கை விவசாயிகளை மட்டும் எவ்வளவு பாரபட்சமாக நடத்துகிறது என்பதைப் பார்க்கும் முன், கார்ப்பரேட்டுகள் அமைதியாக கடன் தள்ளுபடி பெறும் பொழுது விவசாயிகள் மட்டும் ஏன் எல்லாவிதமான பிரச்சனைகளுக்கும் உள்ளாகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்வதில் நான் தோல்வியடைந்தேன். எதிர்ப்பை ஒழுங்கமைப்பது பற்றிப் பேசுவதற்குக் கூட அவர்கள் (கார்ப்பரேட்) தங்கள் காரை விட்டு இறங்க வேண்டியதில்லை. கேள்வியென்னவென்றால் விவசாயிகள் வீதிகளிலிறங்கி தோட்டாக்களை எதிர்கொள்ளும் போது தொழிற்துறையினருக்கு மட்டும் சலுகைகள் அளிக்கப்படுகின்றதே? எல்லாவற்றிற்கும் மேலாக விவசாயிகளும், தொழிற்துறையினரும் ஒரே வங்கியிலிருந்து தான் கடன் பெறுகிறார்கள். அப்படியிருக்கையில் விவசாயிகள் வீதியிலிறங்கி போராட்டம் நடத்துமளவிற்கு தொல்லை கொடுக்கும் வங்கிகள், கடன் திருப்பி செலுத்தாத தொழிற்துறையினரை அனிச்சமலரைப் போல மென்மையாக கையாள்வதன் காரணத்தை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.
உ.பி. -யில் விவசாயக் கடன் தள்ளுபடியை யோகி ஆதித்யநாத் அறிவித்த உடனேயே, எஸ்.பி.ஐ தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா, விவசாயக்கடனைத் தள்ளுபடி செய்யும் தலைவர்கள், ‘கடன் திருப்பி செலுத்தும் ஒழுக்கத்தை’ சீர்குலைப்பதாக குற்றஞ்சாட்டினார். சில வாரங்களுக்குப் பின், ரூ. 4.85 இலட்சம் கோடி ‘நிலையற்ற’ அழுத்தப்பட்ட கடனால் தள்ளாடிக் கொண்டிருக்கும் தொலைத் தொடர்புத் துறைக்கு நிதியுதவி (bail out) வழங்கக் கோரி நிதியமைச்சருக்குக் கடிதம் எழுதினார். என்னால் புரிந்துக் கொள்ள முடியாதது என்னவெனில், தொலைத் தொடர்புத்துறையில் கடன் திருப்பிச் செலுத்தாதவர்கள் சார்பில் எஸ்.பி.ஐ. தலைவர் ஏன் நிதியுதவி கேட்கிறார்?

கடன் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி விவசாயிகள் வழக்கமாக கடைபிடிக்கும் வழியைப் போல, புது தில்லியில் தர்ணாவில் தொலைத் தொடர்புத்துறையின் உயர்பதவிகளிலிருப்போர் ஏன் உட்கார வைக்கப்படுவதில்லை? கார்ப்ரேட்டுகளின் இறுதி நிலை அறிக்கைக்காக (balance sheet) ஒதுக்கப்பட்டிருக்கும் அதே சுத்திகரிப்பு முறையை (clean-up mechanism) விவசாயிகள் பயன்படுத்தும் பொழுது, கடன்பெறும் ஏழைகளிடமும், பெருநிறுவனங்களிடமும் இவ்வாறுதான் வங்கி அமைப்பு பாரபட்சம் காட்டுகின்றது.
பாரபட்சம் இத்துடன் முடிந்துவிடவில்லை. விவசாயத்துறை கடன் தள்ளுபடிக்கான நிதி ஆதாரங்களை மாநில அரசுகளே கண்டுபிடிக்க வேண்டும் எனக் கூறிய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, கடனில் தள்ளாடும் தொலைத் தொடர்புத் துறைக்கு நிதியுதவி அளிப்பதற்கான சாத்தியப்பாடுகளை ஆராய தொலைத் தொடர்புத் துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தலைமையில் அமைச்சரவைகளின் குழுவை அமைத்துள்ளார். முன்னதாக எஃகு (steel) நிறுவனங்களின் மோசமான கடன் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு பிரதமர் அலுவலகம் நடவடிக்கை எடுக்கப் போவதாக மார்ச் 23 ஆம் தேதி பிஸினஸ் ஸ்டாண்டர்டு செய்தி வெளியிட்டது. அதன்படி, பிரதமர் அலுவலகமும், நிதி அமைச்சகமும் முன்னணி எஃகு நிறுவனங்கள் மற்றும் கடன் அழுத்தத்திலுள்ள 40 வங்கிக் கணக்குகளுக்கு புதியதாக நிதியுதவி வழங்குவது குறித்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. இந்நிறுவனங்களின் மொத்தக் கடன் ரூ. 1.5 இலட்சம் கோடி.
விவசாயத் துறைக்கு எதிரான நடவடிக்கைகள் இத்துடன் முடிவடையவில்லை. விவசாயக் கடன் தள்ளுபடியை மகாராஷ்டிரா அறிவித்ததிலிருந்தே, “இது தேசியப் பொருளாதாரத்தை சீர்குலைக்கும், பணவீக்கத்தை அதிகரிக்கும், வீட்டுக்கடன் தவணையை உயர்த்தும்” என நச்சுப் பிரச்சாரம் செய்து மக்களை தவறாக வழிநடத்த பெரும்பான்மையான தொலைக்காட்சிகள் தங்கள் நேரத்தை அர்பணிப்பதை நான் பார்க்கிறேன். விவசாயிகளை குற்றவாளிகளாக வேண்டுமென்றே சித்தரிக்கின்றனர். அதே நேரம் கார்ப்ரேட்டுகளுக்கு நிதியுதவி வழங்கப்படும் போது இத்தகைய விஷயங்கள் முன்னிலைப்படுத்தப் படுவதில்லை. உண்மையில் கார்ப்ரேட்டுகளுக்கு நிதியுதவி வழங்குவது பொருளாதார வளர்ச்சிக்கு இன்றியமையாததாக முன்வைக்கப்படுகிறது. அதே சமயம், விவசாயக் கடன் தள்ளுபடி, நாட்டின் நிதிச் சரிவுக்கான காரணியாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
அமெரிக்க மெர்ரில் லிஞ்ச் வங்கி (Bank of America Merrill Lynch) அறிக்கைப்படி, 2019 பொதுத் தேர்தலுக்கு முன் சுமார் ரூ. 2.57 இலட்சம் கோடி விவசாயக் கடன் (அதாவது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2%) தள்ளுபடி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதிக அளவில் தள்ளுபடி செய்யப்படும் கார்ப்ரேட் கடன்கள் பொருளாதாரத்தை எவ்வாறு பாதிக்கிறது என்று மெர்ரில் லிஞ்ச் நமக்கு ஒருபோதும் கூறுவதில்லை. அடுத்த இரண்டு ஆண்டுகளில் ரூ. 2.57 இலட்சம் கோடி விவசாயக் கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கான மாபெரும் நிதியுதவி என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன். ஆனால் தொலைத் தொடர்புத் துறைக்கு ரூ. 4 இலட்சம் கோடி நிதியுதவி வழங்கும் திட்டம் பற்றி மெர்ரில் லிஞ்ச் பேசுவதில்லை, ஏன்? விவசாயிகளை மோசமாக சித்தரிப்பதன் மூலம் வழக்கமாக பெருமளவிலான கடன்களை திருப்பிசெலுத்தாத கார்ப்பரேட்டுகளை பாதுகாக்கவே மெர்ரில் லிஞ்ச் முதன்மையாக முயல்கிறது.
இப்படித்தான் வங்கிகள் விளையாடுகின்றன. இது வெறும் தார்மீக ஆபத்து மட்டுமல்ல; முற்றிலும் ஒழுக்ககேடானதும் கூட. வங்கி அமைப்பின் விதிகள் ஏழைகளுக்கு எதிராக பாகுபாடு காட்டக் கூடாது.
-தேவிந்தர் சர்மா
தமிழாக்கம்: சித்தார்த்தன்
மூலக் கட்டுரை : Why is it that corporate never protest on streets to seek loan waivers?
1857-ம் ஆண்டு, மே 10 அன்று மீரட் நகரின் இந்தியச் சிப்பாய்கள் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராக கிளர்ந்தெழுந்தனர். சிப்பாய்களின் எழுச்சி இந்தியா முழுவதும் காட்டுத் தீ போல பரவியது. ஹிந்து, முஸ்லீம் சிப்பாய்கள் ஒன்றிணைந்து டில்லியை ஆண்ட பகதூர் ஷா வே தங்களது மன்னர் என அறிவித்தனர். இந்த முதல் இந்திய சுதந்திரப் போரில் கிழக்கிந்தியக் கம்பெனியால் ஒட்டச் சுரண்டப்பட்ட விவசாயிகள், பெண்கள், பொதுமக்கள் என அனைவரும் பங்கேற்றனர். முதல் இந்திய சுதந்திரப் போரில் பெண்களும் திரளாக கலந்து கொண்டனர் என்பது பலருக்கு தெரியாது. ஜான்சிராணி லட்சுமி பாயை தவிர மற்ற பெண் போராளிகளை நாம் அறிந்திருக்க மாட்டோம்.
1857 போரில், பங்கேற்ற பெண் போராளிகள் சிலரைப் பற்றிய அறிமுகம் இங்கே இடம் பெறுகிறது.
ஜான்சியின் ராணி “லட்சுமி பாய்”

ஜான்சி ராணி என அழைக்கப்படும் ராணி லட்சுமி பாய், 1828-ம் ஆண்டு வாரணாசியில் பிறந்தார். 17 வயதில் ஜான்சியின் அரசர் கங்காதர் ராவை அவர் மணந்தார். கங்காதர் ராவின் காலகட்டத்திலேயே ஜான்சி கிழக்கிந்தியக் கம்பெனியின் கீழ் உள்ள ஒரு சமஸ்தானமாக இருந்தது. கங்காதர் ராவிற்கும், லட்சுமிபாய்க்கும் பிறந்த குழந்தை, பிறந்த சில மாதங்களிலேயே மரணமடைந்ததைத் தொடர்ந்து அரசின் வாரிசிற்கு உறவினரின் குழந்தையைத் தத்தெடுத்தனர். சில ஆண்டுகளிலேயே லட்சுமிபாயின் கணவரும் உயிரிழந்தார். அதன் பின்னர், தத்தெடுத்த குழந்தையை வாரிசாக ஏற்றுக் கொள்ள முடியாது எனக் கூறி, ஜான்சியின் இராஜ்ஜியத்தை முழுவதுமாக தன்னோடு இணைந்துக் கொள்ள எத்தனித்தது கிழக்கிந்தியக் கம்பெனி. அதன் தொடக்கமாக லட்சுமி பாய்க்கு அரச ஓய்வூதியம் மட்டும் கொடுத்து அரண்மனையை விட்டு வெளியேற்றியது.
1857, சிப்பாய்கள் கிளர்ச்சி தொடங்கிய போது, ஜான்சிக்குள் புகுந்த சிப்பாய்கள் கிழக்கிந்தியக் கம்பெனியின் பிரிட்டிஷ் அதிகாரிகளையும் , படையினரையும் கொன்று குவித்தனர். அதற்கும் லட்சுமிபாய்க்கும் சம்பந்தம் இருக்குமோ என சந்தேகித்த பிரிட்டிஷ் அரசு, அவருக்குக் கொடுத்து வந்த பென்சனை உடனடியாக நிறுத்தியது. அதோடு அவரை ஜான்சியை விட்டு வெளியேறுமாறும் உத்தரவிட்டது. “ஜான்சி எனது பிரதேசம், அதனை ஒரு போதும் கைவிட மாட்டேன்” என உறுதியாக நின்ற லெட்சுமி பாய், தனக்கு விசுவாசமான அதிகாரிகள், அமைச்சர்கள், படையினர் மற்றும் மக்களுடனும், சிப்பாய்க் கலகத்தில் பங்கேற்ற சிப்பாய்களுடன் சேர்ந்து படையை திரட்டி கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராகப் போர் தொடுத்தார். முதல் போரில் கிழக்கிந்தியக் கம்பெனியின் பெரும்படையிடம் தோல்வியுற்ற லெட்சுமிபாய், தனது மகனுடன் கல்பிக்கு தப்பிச் சென்றார். கல்பியில் தாந்தியா தோப்பேவுடன் இணைந்து கிழக்கிந்திய கம்பெனியின் வசம் இருந்த குவாலியரை மீட்டார். அதன் பின்னர் பெரும்படையுடன் வந்த கிழக்கிந்திய கம்பெனியின் படையுடன் கடுமையாகப் போரிட்ட லெட்சுமி பாய், 1858 ஆண்டு ஜூன் மாதம் 17-ம் நாள் அன்று போர்க்களத்தில் உயிரிழந்தார்.
லெட்சுமி பாயின் நெருங்கிய முசுலீம் தோழியான மண்டர்பாயும் அதே போரில் அவருடன் உயிரிழந்தார். ஜான்சியின் அரசியான லெட்சுமி பாய் பிரிட்டிஷ் அரசிற்கு எதிராக இருமுறை தோல்வி அடைந்தும், மீண்டும் மீண்டும் சமரசமின்றி, பிரிட்டிஷ் படையோடு மோதினார். நாட்டில் உள்ள கிளர்ச்சியாளர்களை கிழக்கிந்தியக் கம்பெனிக்குஎதிராக ஒன்று திரட்ட பெருமுயற்சிகள் மேற்கொண்டார். லெட்சுமி பாய் தனது படைப்பிரிவில், துர்கா தளம் என்ற பெயரில் பெண்களுக்கான படைப்பிரிவு ஒன்றையும் நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
துர்கா தளம்
துர்கா தளம் என்பது ராணி லெட்சுமி பாயின் பெண்களுக்கான படைப்பிரிவு ஆகும். இப்படைப் பிரிவில் பெண்களுக்கு போர்ப்பயிற்சி அளிக்கபட்டது. இதில் பல பெண்கள் இணைந்து கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராகப் போரிட்டனர் . மண்டர் பாய், சுந்தரி பாய், முண்டரி பாய், மோட்டி பாய் ஆகியோர் இதில் குறிப்பிட்டு சொல்லக் கூடியவர்கள் ஆவர். இதில் சிறு வயதில் இருந்தே போர்ப்பயிற்சி எடுத்து இப்படையில் சேர்ந்து ராணி லெட்சுமிபாய் தப்பிச் செல்ல உதவிய ஜல்கரி பாய் மிகவும் முக்கியமானவர்.
ஜல்கரி பாய்

ஜல்கரி பாய், 1830-ம் ஆண்டு கோரி என்னும் ஒரு தலித் சமூகத்தில் பிறந்தவர். சிறுவயதிலேயே தாயை இழந்த ஜல்கரி பாயை ஒரு ஆணைப் போல அவரது தந்தை வளர்த்தார். சிறு வயதிலேயே, குதிரையேற்றம், வாள் வீசுதல் உள்ளிட்ட பயிற்சிகளை அளித்தார். ராணி லெட்சுமி பாயின் படையில் பணிபுரியும் புரான்சிங் என்பவரை மணந்த பின்னர், புரான்சிங்கின் மூலமாக லெட்சுமிபாயின் துர்கா தளம் படையில் இணைந்தார். அங்கு வில் வித்தை மற்றும் வாள் வீசுதல் போன்றவற்றில் சிறப்புப் பயிற்சி எடுத்தார்.
சாதாரண போர் வீராங்கனையாக சேர்ந்த ஜல்கரிபாய், தனது திறமையால் ராணி லெட்சுமிபாய்க்கு நெருக்கமானவராக உயர்ந்தார். 1857-ல் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிரான போரில் துர்கா தளத்தை தலைமை தாங்கி வழி நடத்தினார். இப்போரில் அவரது கணவர் புரான் சிங் கிழக்கிந்தியக் கம்பெனியின் படையால் கொல்லப்பட்டார். அதன் பின்னரும் மனம் தளராது, இன்னும் ஆக்ரோஷமாக பிரிட்டிஷ் படைகளை எதிர்த்துப் போரிட்டார். அப்போரில் ராணி லெட்சுமி பாய் தப்பிச் செல்கையில் பிரிட்டிஷ் படையை குழப்ப இவரே ராணி லெட்சுமி பாய் போல உடை தரித்து, கிழக்கிந்தியக் கம்பெனியைக் குழப்பினார். இவரை லெட்சுமிபாய் என நினைத்துக் கைது செய்த கிழக்கிந்தியக் கம்பெனி, இரண்டு நாட்களுக்குப் பின்னர், உண்மையறிந்து இவரை விடுதலை செய்ததாகக் கூறப்படுகிறது. இவர் போரில் மரணமடைந்தார் என்றும் ஒரு வரலாறு சொல்லப்படுகிறது.
ஹஸ்ரத் மஹல்
‘அவாத்’தின் ராணி என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட ஹஸ்ரத் மஹல், 1820-ம் ஆண்டு ஃபைசாபாத் நகரில் பிறந்தார். அவாத் என்பது தற்போதைய அயோத்தி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியை உள்ளடக்கிய பிரதேசமாகும். ஹசரத் மஹல் அவாத் ராஜ்ஜியத்தின் நவாப் ’வாஜித் அலி ஷா’ வின் மனைவி. 1856-ம் ஆண்டு கிழக்கிந்தியக் கம்பெனி, அவாத் பிரதேசத்தை தனது ஆட்சி அதிகாரத்தின் கீழ் எடுத்துக் கொண்டது. அதோடு அவாத் ராஜ்ஜியத்தின் நவாப்பும், ஹசரத் மஹலின் கணவருமான வாஜித் அலி ஷா வை கல்கத்தாவிற்கு நாடு கடத்தியது. அதன் பின்னர் 1857 முதல் 1858 வரை நடைபெற்ற முதல் இந்திய சுதந்திரப் போரில், ஹசரத் மஹல், ஒரு பெரும் கிளர்ச்சிப் படையை அமைத்து போர் புரிந்தார்.

இப்படை தான் அக்கால கட்டத்தில் திரட்டப்பட்ட மிகப்பெரிய கிளர்ச்சிப் படை. லக்னோவில், ஹசரத் மஹல் திரட்டிய கிளர்ச்சிப்படையின் வீரத்திற்கு முன்னே கிழக்கிந்தியக் கம்பெனியின் சேனை புறமுதுகிட்டு ஓடியது. அங்கு ஆட்சியைக் கைப்பற்றிய பேகம் ஹசரத் மஹல், 1857- ஜூன் 5 அன்று தனது 11 வயது மகன் பிர்ஜிஸ் காதர்க்கு முடி சூட்டினார்.
ஹசரத் மஹலின் வெற்றியைத் தொடர்ந்து, கிழக்கிந்தியக் கம்பெனி அவருடன் பேரம் பேசியது. பெரும் அளவிலான பொருளும் செல்வமும், பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் கீழ் ஒரு பகுதி ராஜ்ஜியம், அவரது கணவருக்கு விதிக்கப்பட்ட நாடு கடத்தல் தண்டனையை இரத்து செய்வது எனப் பல விதங்களில் ஆசை காட்டியது. ஆனால் அதனை எல்லாம் புறந்தள்ளி விட்டு, கிழக்கிந்தியக் கம்பெனியுடன் மோதத் தயாரானார். 10 மாதங்கள் தனது மகனின் மூலம் ஆட்சி அமைத்த பேகம் ஹசரத் மஹல் மீது பெரும்படை திரட்டி வந்து போர் தொடுத்தது கிழக்கிந்தியக் கம்பெனி. ஹசரத் மஹல் எவ்வித சமரசமுமின்றி களத்தில் இருந்து போராடினார். பிரிட்டிஷ் திரட்டி வந்த பெரும்படையால் கிளர்ச்சிப்படை சிதறடிக்கப்பட்ட பின்னர், ஹசரத் மஹல் தனது 11 வயது மகனுடன் நேபாளத்தின் இமயமலைக் காடுகளில் தஞ்சம் புகுந்து தனது மீதமுள்ள வாழ்க்கையைக் கழித்தார்.
ஹசரத் மஹலைப் பற்றி “இந்தியப் புரட்சி பற்றிய எனது குறிப்பேடு” என்னும் நூலில் வில்லியம் ஹோவர்ட் ரூசல் குறிப்பிடுகையில் “ பேகம் ஹசரத் மஹல், பெரும் திறனையும் சக்தியையும் காட்டினார். அவர் முடிவுறாத போரை எங்கள் மீது தொடுத்தார்” எனப் பதிவு செய்திருக்கிறார். ஹசரத் மஹல் – அயோத்தியின் வரலாற்றில் மறைக்கப்பட்ட ஒரு வீராங்கனை.
உடா தேவி
உடாதேவி லக்னோ அருகில் உள்ள உஜ்ரியான் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் பாசி என்னும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். இவரது கணவர் மக்கா பாசி ஹசரத் மஹல் படையில் ஒரு போர் வீரராக இருந்தார். உடாதேவியும் அடிப்படையில் வீரம் மிக்கவராக விளங்கினார். ஹசரத் மஹலின் படைப்பிரிவுக்கு பெண்களைக் கொண்ட ஒரு படைப் பிரிவை உருவாக்கி அதற்குத் தலைமை தாங்கினார். 1857 நவம்பரில் நடைபெற்ற சிக்கந்தர் பாக் போரில் மிகப்பெரிய அளவில் பிரிட்டிஷ் அணியை சிதறடித்துள்ளார். முன்னேறி வந்த பிரிட்டிஷ் படையை விரட்டியடிக்க ஒரு உயரமான மரத்தில் அமர்ந்து கொண்டு துப்பாக்கியால் சுட்டு பிரிட்டிஷ் படைக்கு இழப்பை ஏற்படுத்தியிருக்கிறார். சுமார் 20 முதல் 30 வரையிலான பிரிட்டிஷ் படையினரை சுட்டுக் கொன்றிருக்கிறார். இறுதியில் அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான் ஒரு பிரிட்டிஷ் சிப்பாய்.
மஹாபிரிதேவி
உத்திரப்பிரதேசத்தின் முசாபர்நகர் பகுதியைச் சேர்ந்த முண்ட்பர் கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மஹாபிரிதேவியின் பங்கு மிகவும் முக்கியமானது. 1857 கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிரான முதல் சுதந்திரப் போர் தொடங்கிய போது, 22 பெண்களைக் கொண்டு ஒரு படையைக் கட்டி பிரிட்டிஷ் துருப்புகளின் மீது கடுமையான தாக்குதலைத் தொடுத்தார். அதனால் பிரிட்டிஷ் துருப்புகள் இழப்பைச் சந்தித்தன. இப்பெண்கள் அனைவரையும் பிடித்துக் கொன்றது கிழக்கிந்திய கம்பெனி.
அஸிசுன் பாய்

கான்பூரில் நானாசாகிப்பும், தாந்தியா தோப்பும் சேர்ந்து பிரிட்டிஷ் துருப்புகளை எதிர்த்து 1857-ல் கடுமையாகப் போர் புரிந்து கொண்டிருந்த நேரத்தில் நானாசாகிபின் அந்தப்புரத்தில் இருந்த ஒரு பெண் தான் அஸிசுன் பாய். இவர் சிப்பாய் புரட்சியில் ஈடுபட்ட சிப்பாய்களை ஒருங்கிணைத்து அவர்கள் சந்திப்பதற்குத் தனது வீட்டைஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார். அதோடு பல பெண்களை ஒருங்கிணைத்துப் போரில் காயமடைந்த சிப்பாய்களுக்கு மருத்துவ உதவிகள் செய்துள்ளார். பல்வேறு பகுதிகளுக்கு சிப்பாய்களுக்கு ஆயுதங்கள் விநியோகிக்கும் பணியையும் இப்பெண்கள் முன்னெடுத்துச் செய்துள்ளனர். இவரும் தமது கைகளில் துப்பாக்கி ஏந்தி பிரிட்டிஷ் படைகளுக்கு எதிராக போரிட்டார்.
காலங்காலமாக சமூகத்தில் கடுமையாக ஒடுக்கப்பட்டு வரும் தலித் மற்றும் முசுலீம் பெண்கள் பெருமளவில் 1857-ம் ஆண்டின் சிப்பாய் கிளர்ச்சிக்கும், முதல் இந்திய சுதந்திரப் போருக்கும் பெரும் பங்காற்றியிருக்கின்றனர். ஆஷா தேவி, பக்தவரி, பகவதி தேவி தியாகி, இந்திரா கவுர், ஜமீலா கான், மான் கவுர், ரஹிமி, ராஜ் கவுர், ஷோபா தேவி, உம்டா ஆகியோர் 1857 போரில் தமது இன்னுயிரை ஈந்த நூற்றுக்கணக்கான பெண்களில் ஒரு சிலர். அஷ்கரி பேகம் என்னும் பெண் தனது 45 வயதில் இப்போரில் பங்கேற்று பிரிட்டிஷ் படையால் சிறை பிடிக்கப்பட்டு உயிரோடு கொளுத்தப்பட்டார். அவரைத் தவிர மற்ற அனைத்து பெண்களும் தங்களது 20 – 30 வயதுகளில் தான் இப்போரில் கலந்து கொண்டு , அவ்வயதிலேயே, பிரிட்டிஷ் படையை எதிர்த்துப் போரிட்டு அப்படைகளால் தூக்கிலிடப்பட்டோ, உயிரோடு எரிக்கப்பட்டோ, கொல்லப்பட்டனர்.
இவர்களைத் தவிர வேறு இரண்டு அரசிகளும் 1857 முதல் சுதந்திரப் போரில் பங்கெடுத்துக் கொண்டனர். ராஜ்கர் பகுதியை ஆண்டு வந்த ராணி அவந்திபாய் லோதி மற்றும் தார் பகுதியை ஆண்டு வந்த ராணி திரௌபதி ஆகியோர் இப்போரில் பங்கு கொண்டனர். ஆனால் கெடுவாய்ப்பாக அவர்களின் போராட்டம் வரலாற்றில் எங்கும் பதிவு செய்யப்படவில்லை. . பெண்கள், அதுவும் குறிப்பாக தலித் மற்றும் முசுலீம் பெண்கள், அரசாட்சியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும் சூழலிலும் தனக்கான எந்த ஒரு தனிப்பட்ட இலாபமும் இல்லாவிடினும், தமது மண்ணை அந்நியனிடமிருந்து காக்க வேண்டும் என்ற உணர்விலிருந்து எதிர்த்திருக்கின்றனர்.
பெண்கள் என்றாலே பலவீனமான பாலினம் என்ற கருத்தியலை காலனியாதிக்கக் கால கட்டங்களிலேயே பொய் என்று பெண்கள் நிரூபித்திருக்கின்றனர். காலனியாதிக்கப் பெரும் படைகளை எதிர்த்துப் போராடப் பெண்களைத் தூண்டியது இம்மண்ணின் மீதான பற்றும், ஒடுக்குமுறையின் மீதான வெறுப்புணர்வும் தான். 1948-ல் நடைபெற்ற வீரத்தெலுங்கானா ஆயுதமேந்திய போராட்டத்தில் தொடங்கி, இன்றைய டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டம் வரை இவ்வுணர்வு தான் அவர்களை களத்தில் முன் நிற்கச் செய்கிறது.
தமிழாக்கம்: நந்தன்
செய்தி ஆதாரம் :
சென்னை பல்லாவரம் 11 -வது வார்டில் குவாரி சாலை அருகே மிகப் பெரிய மலை உள்ளது. அந்த மலையடிவாரத்தில் பாரதி நகர், மலைமகள் நகர், பச்சையம்மன் கோவில் ஆகிய இடங்களில் சுமார் 600 -க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சுமார் 45 வருடங்களாக வசித்து வருகின்றனர். அனைத்து சாதியினரும் இருக்கிறார்கள் என்றாலும் பெரும்பான்மையாக தலித் மக்கள் தான் வசிக்கிறார்கள். இந்த குடியிருப்புகளுக்கு மையப்பகுதியில் 2.19 ஏக்கர் காலி மனை ஒன்று உள்ளது. இதன் மதிப்பு சுமார் 30 கோடி இருக்கும் என்கிறார்கள்.
இந்த இடம் தனக்கு தான் சொந்தமானது என்று நித்தியானந்தாவின் சீடரான “சன்னியாசி” வள்ளிராமநாதன் 4.1.2017 அன்று ஒருவரை அந்த இடத்தில் தங்க வைத்தார். அவரும் நித்தியின் சீடர் தான். அன்று முதல் அப்பகுதி வழியாக மலைமகள் நகருக்கு செல்லும் மக்களுக்கு வழி விடமுடியாது என்று தொடர்ந்து பிரச்சனை செய்து வந்தார். இதன் உச்சகட்டமாக 18 -ம் தேதி காலை நித்தியின் பொறுக்கி கும்பலுக்கும், பகுதி மக்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையில் மலைமகள் பகுதியை சேர்ந்த ஐந்து பேரையும், அந்த பிரச்சனைக்குரிய இடத்தில் குடியிருக்கும் கிருஷ்ணனின் மகன், மருமகன் உட்பட ஒன்பது பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது பல்லாவரம் போலிசு.

இந்த பிரச்சனை குறித்து கிருஷ்ணன் கூறுகையில்,
“1953-1973 வரை வீரப்பன் செட்டியார் ( ராமநாதன் தந்தை- வள்ளியின் தாத்தா) கல் குவாரியை 4 முறை டெண்டர் எடுத்தார். இந்த குவாரியில் நான் டிரில்லிங் ஆப்புரேட்டராக வேலை செய்து கொண்டிருந்தேன். 1967 -ல் எனக்கு அடிபட்டு கால் முறிவு ஏற்பட்டது. இது வெளியில் தெரிந்தால் குவாரிக்கு தடைவிதித்து விடுவார்கள் என்று கூறி, திரிசூலத்தில் வாடகை வீட்டில் இருந்த என்னை மாதம் சம்பளம் ரூ.300 கொடுத்து குவாரி அருகே குடிசை போட்டு தங்கிக்கொள் என்றார். அன்று முதல் இன்று வரை அந்த குடிசையில் தான் இருக்கிறேன். குவாரிக்கு கீழே 3 ஏக்கர் புஞ்சை நிலம் இருந்தது. தற்போதைய பச்சையம்மன் நகர். அந்த நிலம் ராயப்பேட்டையை சேர்ந்த குர்ஷித் பேகம் என்ற முசுலிமுக்கு சொந்தம். இந்த நிலத்தை 3000 ரூபாய்க்கு வாங்கினார்.பிறகு அந்த மூன்று ஏக்கர் உட்பட பத்து ஏக்கர் ஏரி புறம்போக்கு என்பதால் அரசாங்கம் அதனை கைப்பற்றி பர்மா அகதிகள் 132 பேருக்கு வீடு கட்டிகொள்ள அனுமதித்தது.

வீடு கட்டும் பணி பாதி முடிந்த நிலையில் தன்னுடைய இடத்தை பறிகொடுத்த வெறுப்பில் திரிசூலம் மலை குவாரியை குத்தகைக்கு எடுத்த ராஜகோபால் ஐய்யரும், வீரப்பன் செட்டியாரும் சேர்ந்து சுரங்க விதிப்படி (Mines act) குவாரிக்கு அருகில் வீடு கட்ட முடியாது என்றும், 1500 அடிக்கு அப்பால் தான் கட்ட முடியும் என்றும் நீதிமன்றத்தில் வழக்கு போட்டு ஸ்டே வாங்கி விட்டார்கள். 1973-ல் டெண்டர் முடிந்து விட்டது. மீண்டும் கட்டிடப்பணிகள் தொடங்கியது.
இதற்கிடையில் நான் குடிசை போட்டு தங்கியிருந்த இடத்திற்கு நிலவரி கட்ட சொல்லி அப்போதைய முனிசிபாலிட்டி அதிகாரி வெங்கட்ராம ஐயர் ஒரு நோட்டிசு அனுப்பினர். அன்று முதல் இந்த இடத்திற்கு நிலவரி கட்டி வருகிறேன். மீண்டும் 1976 -ல் இந்த குவாரியை நான் தான் டெண்டர் எடுத்தேன் ஆகவே இந்த நிலம் எனக்கு தான் சொந்தம் என்று வழக்கு போட்டார் வீரப்பன் செட்டி. அந்த வழக்கில் நிலவரி நான் கட்டி வந்ததற்காக எனக்கு தான் சேரும் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து பதினான்கு முறைக்கு மேல் வழக்கு போட்டு அனைத்தும் தள்ளுபடி ஆகிவிட்டது.

2007 -ம் ஆண்டு அவருடைய மகன் ராமநாதன் செட்டியார் இந்த இடம் எங்களுடையது என்று கூறி நித்தியானந்தாவுடன் வந்து என்னிடம் பேசினார்கள்.இடத்தை காலி செய்ய சொல்லி மிரட்டினார்கள். 25.03.2007 -ல் இந்த இடத்தில் இருந்த பத்து வீடுகள், தென்னை அனைத்தையும் போலிசு பாதுகாப்புடன் இடித்து விட்டு மலைமகள் நகரில் வசிக்க கூடிய மக்கள் செல்வதற்கு கூட வழிவிடாமல் மிகப்பெரும் சுற்று சுவர் கட்டினார்கள். அப்பொழுது நித்யானந்தாவின் செருப்பை வைத்து பூஜையும் போட்டார்கள். அதன் எதிரில் ஒரு குடிசை போட்டு பாதுகாப்பிற்கு இரண்டு வாட்ச்மேன் போட்டார்கள். அன்று முதல் அவர்களுக்கு எதிராக போராடி வருகிறோம்.
2015-ல் நான் இங்கு வீடு கட்டிய போது கவுன்சிலர் அன்புகுமாரை வைத்து மிரட்டினார்கள். ராமநாதன் மகள் வள்ளி என்னுடைய நிலம், அதில் மக்கள் நுழைகிறார்கள் என்றும் வழக்கு போட்டார். அந்த வழக்கு நடந்து வருகிறது.
2017 மார்ச் மற்றும் மே மாதம் ரஞ்சிதாவுடன் வந்து பார்வையிட்டு சென்றார்கள். அன்று முதல் பாதுகாப்பிற்கு இருந்த வாட்ச்மேன்களை துரத்திவிட்டு அந்த குடிசையில் நித்தியின் சீடர்கள் வந்து தங்க ஆரம்பித்தனர். அப்பொழுது தொடங்கிய அவர்களின் பொறுக்கித்தனம் நாளுக்கு நாள் அதிகரித்தது” என்று கூறினார்.

பொறுக்கி நித்தியின் சீடர்கள் செய்யும் கேடுகெட்ட அயோக்கியத்தனங்களைப் பற்றி அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கூறுகையில், இந்த இடத்தில் 7 சென்ட்டிற்கு மட்டும் பட்டா உள்ளது, நித்தி சீடர்கள் தினமும் ஏதாவது பூஜை செய்து இங்கு இருக்கக் கூடிய குழந்தைகளை கூட்டி சென்று அவர்களுக்கு பிரசாதம் கொடுப்பார்கள். அன்னதானம் வழங்கும் போது அவர்களை போட்டோ எடுத்துக்கொள்வார்கள். இந்த காம்பவுண்டை சுற்றியும் கண்காணிப்பு கேமாரா வைத்துள்ளார்கள். யாராவது உள்ளே வந்தால் அடிப்பார்கள். அவசரத்துக்கு ஒதுங்கும் பெண்களை வீடியோ எடுக்கிறார்கள். நாங்கள் இதனை கேட்டால் அப்படித் தான் செய்வோம். உங்களால் என்ன செய்ய முடியுமோ செய்து கொள்ளுங்கள் என்று மிரட்டுகிறார்கள்.
“குழந்தைகளை எங்களிடம் விட்டு விடுங்கள் ஒரு குழந்தைக்கு ஐந்து லட்சம் தருகிறோம். பெங்களூரு ஆசிரமத்தில் தங்க வைத்து படிக்க வைக்கிறோம்” என்பார்கள். உங்களில் யாரேனும் சந்நியாசியாக வருவதாக இருந்தால் ஏற்றுக் கொள்கிறோம் என்று இங்கு இருக்க கூடிய இளைஞர்களை மூளைச்சலவை செய்கிறார்கள். இரவு நேரத்தில் ஏதாவது பள்ளம் தோண்டுகிறார்கள். என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை. இதற்கு போலிசும் பாதுகாப்பு கொடுக்கிறது. மின்சாரத்தை திருட்டுத் தனமாக தான் எடுக்கிறார்கள். ஆனால் அதிகாரிகள் கண்டு கொள்வதே இல்லை.
இந்த பிரச்சனை தொடங்கிய காலம் முதல் எங்களுக்கு எந்த அடிப்படை வசதிகளும் அரசு செய்து கொடுக்கவில்லை. தண்ணீர், சாலை, கழிநீர் வாய்க்கால் என எதுவும் இல்லை. மழைக்காலத்தில் மலைமேல் இருந்து விழும் நீர் செல்வதற்கு எந்த வழியும் இல்லாததால் தண்ணீர் முழுதும் தேங்கி நிற்கும், தெருவில் நடக்கவே முடியாது. அதிகாரியிடம் நாங்கள் முறையிட்டால் இந்த பிரச்சனை முடியட்டும் என்கிறார்கள். ஆனால் அதிகாரிகள் இதனை முடிப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுப்பதே இல்லை. நாங்கள் படிக்காதவர்கள். எங்களால் என்ன செய்ய முடியும்? தினமும் வேலைக்கு போனால் தான் எங்கள் பொழப்பு என்றாகிவிட்டது. தினந்தோறும் வேதனையாக உள்ளது. இந்த அரசின் மீது இருந்த நம்பிக்கை எங்களுக்கு விலகி விட்டது. போலீசு, தாசில்தார் எல்லாரும் இப்பொழுது நித்தியானந்தாவின் கையில் தான் இருக்கிறார்கள்.
எல்லா கொடுமைகளையும் விட உச்ச கட்டமாக பெண்களை தினந்தோறும் கிண்டல் செய்கிறார்கள். அசிங்கமாக பேசுவது, பாலியல் சைகைகள் செய்வது என்று இவர்களுடைய அட்டூழியங்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இவர்கள் சாமியாரே இல்லை. ஒரு பொறுக்கியை விட கேவலமாக நடந்து கொள்கிறார்கள். எங்களுடையை கோபத்தை வேண்டுமென்றே தூண்டி விடுகிறார்கள். 18 -ம் தேதி திருமணமான பெண்ணை கிண்டல் செய்தார்கள். நாங்கள் பெண்கள் அனைவரும் சேர்ந்து கேட்டதற்கு எங்களை போட்டோ எடுத்தார்கள். போட்டோ எடுக்க வேண்டாம் என்ற எங்களை கடுமையாக அடித்தார்கள். அசிங்கமாக திட்டினார்கள். நாங்கள் திருப்பி அடித்தோம்.
போலிசு, எங்களை “நித்தியானந்தா சீடர்கள் மேல் கேசு கொடுங்கள்” என்று கூறி ஸ்டேசனுக்கு அழைத்து சென்று பெண்கள் என்றும் பார்க்காமல் அசிங்கமாக திட்டினார்கள். கேசு போட்டு விடுவோம் என்று எங்களையே மிராட்டினார்கள். இந்த பிரச்சனையில் சம்பந்தமே இல்லாத 9 பேரை கைது செய்து சிறையில் வைத்துள்ளார்கள். அன்று இரவு முதல் போலிசை குவித்து மிரட்டி மிரட்டினார்கள். போலிசின் மிரட்டலுக்கு பயந்து அப்பகுதியில் இருந்த இளைஞர்கள் வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவாக இருக்கிறார்கள். ஏற்கனவே பாலியல் புகாரில் சிக்கிய நித்தியனந்தாவுக்கு ஏன் இவ்வளவு பாதுகாப்பு கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. மோடியோட சப்போர்ட் இல்லாம இவனால இவ்ளோ அட்டூழியம் செய்ய முடியாது என்று கூறி முடிக்கும் போதே அவர்களிடம் ஒரு இயல்பான பயம் தென்பட்டது.
இந்நிலையில் 19 -ம் தேதி தாம்பரம் வருவாய் கோட்ட அலுவலகத்தில் இருந்து மலைமகள் பகுதி மக்கள், கிருஷ்ணன், சன்னியாசி வள்ளி ஆகியோரை அமைதிப் பேச்சு வார்த்தைக்கு அழைத்து அந்த இடம் முழுவதும் நித்தியானந்தாவின் சீடரான வள்ளிக்கு தான் சொந்தம் நீங்கள் அனைவரும் காலி செய்யுங்கள் என்று கூறியுள்ளனர். தற்பொழுது அந்த பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலிசை குவித்து அவர்களை வெளியேற்றும் பணியை செய்து வருகிறார்கள். அரசு, போலிசு அனைத்தும் கார்ப்பரேட் சாமியார்களுக்கு அடியாள் தான் என்பதை நிரூபித்துள்ளது.
அதானிக்கும், அமெரிக்காவிற்கும் சேவை செய்யும் மோடி அரசாகட்டும், மோடி அரசின் பினாமியாக தமிழகத்தை கொள்ளையடிக்கும் எடப்பாடி அரசாகட்டும் இரண்டும் பொறுக்கி சாமியாரை ஆதரிக்கின்றன. பகுதி மக்கள் இந்த பொறுக்கிக் கூட்டத்தை துரத்துவது என்று முடிவெடுத்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தின் இழிவுகளில் ஒன்றான நித்தியை துரத்துவது அவர்களுக்கு மட்டுமல்ல நமது அனைவரின் கடமையும் கூட.
செய்தி, புகைப்படங்கள் : வினவு செய்தியாளர்
இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) அறிமுகப்படுத்துகையில், வரி வீதங்களை தீர்மானிக்கும் ஜி.எஸ்.டி குழு பெண்கள் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் நாப்கின்கள் மற்றும் உறிஞ்சுவான்களுக்கு 12% வரி நிர்ணயித்துள்ளது. பெண்களின் வளையல், குங்குமம் போன்றவற்றை “அத்தியாவசிய” பொருட்களாக வகைப்படுத்தியுள்ள மத்திய அரசு அவற்றுக்கு ஜி.எஸ்.டி-யில் வரி விலக்களித்துள்ளது.
இதற்கு எதிராக நிதியமைச்சர் அருண் ஜெட்லியை நாப்கின்கள் மற்றும் உறிஞ்சுவான்களுக்கு வரிவிலக்கு அளிக்குமாறு கோரி “லாகு கா லகான் – நாப்கின்களுக்கு வரி” (#LahuKaLagaan) என்ற குறிச்சொல்லுடன் இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்தியாவில் இன்று வரை சுமார் 70% பெண்கள் மாதவிடாய் காலத்தில் சுகாதாரமான நாப்கின்களை பயன்படுத்துவதில்லை. மாதவிடாய் காலத்தில் பெண்களை தீட்டு என்று ஒதுக்கி வைப்பது, அவர்களது சுகாதாரம் மற்றும் உடல்நலனுக்கு முக்கியத்துவம் அளிக்காத ஆணாதிக்க, பார்ப்பனிய கலாச்சார பின்புலம் ஒரு புறம், மறுபுறம் வறுமை; இவையே இதற்கு காரணம். இன்றும் கூட பெண்கள் வெளியில் சொல்ல வெட்கிகுறுகுவதும், ரகசியம் காக்கவேண்டிய ஒன்றாகவும் தான் மாதவிடாயை பார்க்கின்றனர்.
மாதவிடாய் என்பது சாதாரண உடலியல் சுழற்சி நடைமுறை. சுழற்சியின் முதல் கட்டத்தில் கருப்பையில் கருவை சுமப்பதற்கான மிருதுவான உட்சுவர் தயாராகிறது. சுழற்சியின் மத்தியில், கருப்பையின் மிருதுவான உட்சுவர் தயாரானவுடன், சினைப்பையில் இருந்து முட்டை ஒன்று வெளியேறி கருமுட்டைக் குழாய் வழியாக கருப்பையை அடைந்து கருப்பை சுவற்றில் ஒட்டிக் கொள்ளும். இந்த மத்திய கட்டத்தில் கருப்பை கருத்தரிக்க ஆயத்த நிலையில் இருக்கிறது. கருத்தரிக்காத போது அடுத்த கட்டத்தில் கருப்பையின் மிருதுவான உட்சுவர் தேவையில்லை. அதனால் உட்சுவர் உடைந்து சிதைந்து, அதனுடன் கரு முட்டையும் சேர்ந்து இரத்தப் போக்காக வெளியேறுகிறது. மாதவிடாய் நின்றவுடன், கருப்பையின் மிருதுவான உட்சுவர் மீண்டும் தயாராகி அடுத்த சுற்று துவங்குகிறது.
மாதவிடாயின் போது வெளியேறும் இரத்தத்தின் மூலம் நுண்ணுயிர் கிருமி தொற்றுகள், நோய் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன, அவ்வளவே. ஆனால், மாதவிடாயின் இரத்தமே சுகாதாரக் கேடானது என்பது உண்மை இல்லை.
சுகாதாரக் குறைவான மாதவிடாய் கால அணுகுமுறைகளால் பல நோய்த் தொற்றுகள் ஏற்படுவதோடு, கருப்பை புற்றுநோய், கருப்பை வாய் புற்று நோய்கள் தொற்றுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகமுள்ளதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், சுகாதாரக் குறைவான அணுகுமுறைகள் சில நேரங்களில் குழந்தையின்மைக்கும் வழிவகுக்கக் கூடுமென்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் வருடத்திற்கு 1,22, 844 பெண்கள் கருப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாகவும், 67, 477 பேர் கொல்லப்படுவதாகவும் ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
இந்நிலையில் நாப்கின்களுக்கு 12% ஜி.எஸ்.டி வரியை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது ஏழை எளிய பெண்களுக்கு நாப்கின்கள் கிடைக்கப் பெறுவதை மேலும் அரிதாக்குகிறது. இன்று உலக அளவில் நாப்கின்களின் பயன்பாட்டை உயர்த்தும் பிரச்சாரங்கள் மற்றும் திட்டங்களில் அரசுகள் ஈடுபட்டு வரும் போது மோடி அரசின் இவ்வரிவிதிப்பு இந்தியாவில் நாப்கின்கள் பயன்பாட்டை மேலும் குறைக்கும்.
வரிவிதிப்பை ஆதரித்தும் எதிர்த்தும் நடக்கும் விவாதங்களில் இந்திய பெண்கள் போதுமான அளவுக்கு நாப்கின்களை பயன்படுத்துவதில்லை என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. மறுபுறம் சிலர் நாப்கின்கள் ஆடம்பரமானது, அவை ஒருவரின் தனிப்பட்ட தேர்வாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். இரு தரப்பினரும் விவரங்களையும் புள்ளிவிவரங்களையும் தமது கருத்துக்கு ஆதரவாக முன்வைக்கின்றனர்.
ஹுயிண்ட் (The Quint) இணையபத்திரிக்கையின் இந்த காணொளி இந்திய பெண்களது மாதவிடாய் தூய்மை பழக்கங்கள் எவற்றால் தீர்மானிக்கப்படுகின்றன என்பதை நோய்டா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியிலிருக்கும் சில பெண்களின் குரலின் மூலம் அறியத்தருகிறது.
***
வீடியோவின் தமிழாக்கம்:
நாப்கின்களுக்கு வரிவிதிப்பது நல்லறிவுள்ள செயலல்ல!
ஜி.எஸ்.டி குழு 66 உற்பத்தி பொருட்களுக்கு வரி குறைப்பு செய்துள்ளது. ஆனால் நாப்கின்களுக்கு அல்ல.
ஆணுறைகளுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது ஆனால் நாப்கின்களுக்கு இல்லை.
பெண்கள் தங்கள் ரத்ததிற்கு வரி ஏன் செலுத்த வேண்டும்?
கவிதா, வயது – 47
மாதவிடாயின் போது நீங்கள் என்ன பயன்படுத்துகிறீர்கள்?
நாப்கின் பட்டைகளை பயன்படுத்துகிறேன்.
அவற்றால் நீங்கள் வசதியாக உணர்கிறீர்களா?
ம்.
நீங்கள் ஆரம்பத்திலிருந்தே நாப்கின் பட்டைகளை பயன்படுத்துகிறீர்களா?
இல்லை.
கிரண் தேவி, வயது – 31
அவை விலையுயர்ந்தவை அதனால் பணத்தை சேமிக்க அவற்றை மொத்தமாக வாங்கிக்கொள்வோம்.
அனிதா நாயர், வயது – 17
முதலிரண்டு மாதங்களில் நான் துணிகளை பயன்படுத்த ஆரம்பித்தேன்.
அதன் பின்னர் நாப்கின்களை பயன்படுத்துகிறேன்.
நாப்கின்கள் துணியை விட சிறந்தவை என்று நினைக்கிறேன்.
இந்தியாவில் 12% மட்டுமே உள்ள நாப்கின்களைப் பயன்படுத்தும் பெண்களில் அனிதாவும் ஒருவர். மீதமுள்ள 88% பேரின் நிலை என்ன?
பீபி சலேஹா, வயது – 48
எனக்கு மாதவிடாய் துவங்கிய நாளில் இருந்து நான் துணிகளையே பயன்படுத்துகிறேன். ஏழையான என்னால், நாப்கின்களை வாங்க முடியாது.
அவர்கள், துணி, சாம்பல், உலர்ந்த இலைகள் மற்றும் மண்ணைக் கூட பயன்படுத்துகின்றனர்.
நீங்கள் துணிக்கும் நாப்கினுக்கும் உள்ள வேறுபாட்டை உணர்கிறீர்களா?
துணியைப் பயன்படுத்தும் போது எனக்கு முதுகு வலி இருந்தது. நாப்கின் பயன்படுத்தும் போது அது இல்லை.
பலர் சுகாதாரமானது என்று நாப்கின்களுக்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். சிலர் அக்கருத்தில் மாறுபடுகிறார்கள்.
பூனம் குப்தா, வயது 23
நான் இப்போது துணிகளை பயன்படுத்துகிறேன்.
கருத்தரிப்பதற்கு முன்னால் நான் நாப்கின்களை பயன்படுத்தினேன்.
கருத்தரித்த பின் நாப்கின் பயன்படுத்துவது குத்த ஆரம்பித்தது. அதனால் இப்போது துணியை பயன்படுத்துகிறேன்.
உங்களுக்கு குத்துவதைப் பற்றி எந்த மருத்துவரிடமாவது கலந்தாலோசித்தீர்களா?
இல்லை, நான் எந்த மருத்துவரையும் பார்க்கவில்லை.
மேலும் சிலருக்கோ சுகாதாரம் என்பதே ஆடம்பரம் தான்
மாலா தேவி, வயது 43
குழந்தை பெற்றுக்கொள்ளும் போது எனக்கு சிசேரியன் செய்யப்பட்டது. டாக்டரும் செவிலியர்களும் எனக்கு நாப்கின் பயன்படுத்துவதை அறிமுகப்படுத்தி பரிந்துரைத்தனர்.
நீங்கள் அந்தப் பரிந்துரையை ஏற்கவில்லையா?
டாக்டர் அதற்கு பணம் கொடுப்பாரா? அல்லது நீங்கள் அதற்கு பணம் கொடுப்பீர்களா?
நான் என்னுடைய சொந்த தர்க்கத்தை பின்பற்ற வேண்டும்.
இங்கு எங்களுக்கு உணவுக்கே பணமில்லை. நீங்கள் எங்களை நாப்கின் வாங்கச் சொல்கிறீர்கள்.
வரிவிலக்கு அவர்களுக்கு சிறந்த மாதவிடாய் சுகாதாரத்தை அளிக்குமா?
பூனம் குப்தா
உள்ளூர் கடைகளில் நாப்கின்களின் விலை ஏறிக்கொண்டிருக்கிறது. எங்களுக்கு விலை மலிவான ஒன்று கிடைக்க வேண்டும். சில கட்டுகளின் விலை ரூ.40, சிலவற்றின் விலை ரூ.50 விலை. இத்தனைக்கும் அதில் 7 எண்ணிக்கை மட்டுமே இருக்கும். நீண்ட மாதவிடாய் காலம் கொண்டவர்களால் அதை வாங்க முடியாது.
கிரண் தேவி
நாப்கின்களின் விலை குறைந்தால், மேலும் பல பெண்கள் அவற்றை பயன்படுத்த துவங்குவார்கள். அதன் பின் சுகாதாரமற்ற மாதவிடாய் பழக்கங்கங்களால் ஏற்படும் நோய்களும் குறையும்.
விலை மலிவானால் நீங்கள் நாப்கின்களை பயன்படுத்துவீர்களா?
மாலா தேவி
ஆம், மலிவானால் நான் பயன்படுத்த முயற்சிப்பேன். என்ன விலை இருந்தால் உங்களால் வாங்க முடியும்? ஒரு கட்டின் விலை ரூ.10 அல்லது ரூ.20 இருக்கலாம்.
பணம் மட்டுமே பிரச்சினையா?
கிரண் தேவி
படித்தவர்களுக்கு மட்டும் தான் நாப்கின் என்றால் என்னவென்று தெரியும். என் தாய், மூத்த சகோதரியைப் போல் வயதானவர்களுக்கு தெரியவில்லை. எங்கள் கிராமத்தில் எங்கள் அண்டை வீட்டார்களுக்கும் தெரியாது. குடும்பத்திலுள்ள ஆண்களை ஏற்றுக்கொள்ள செய்வதும் கடினம். நாங்கள் அவர்களை நாப்கின்கள் வாங்கிவரச் சொன்னால், வீட்டிலுள்ள ஏதாவதொன்றை பயன்படுத்திக் கொள் என்பார்கள்
அவர்கள் வாங்கிவர மாட்டார்கள். எதற்கு வீண் செலவு?
இளந்தலைமுறையினர் இந்த இடைவெளியை இட்டு நிறப்புகிறார்கள்.
அனிதா நாயர்
சில நேரம் என் தாயை நாப்கின்களை பயன்படுத்த சொல்லிம் போது அவர் முயற்சிக்கிறார். ஆனால் அவர் பெரும்பாலும் துணியையே பயன்படுத்துகிறார்.
கவிதா
பத்தாண்டுகள் முன்னரே நாப்கின்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் நான் பயன்படுத்தவில்லை.
ஏன்?
எப்படி பயன்படுத்துவதென்று எனக்கு புரியவில்லை. பின்னர் எனது மகள் வளர்ந்த பின் அவள் எனக்கு அதை விளக்கினாள். அவள் அவளுக்கான அடிப்படை தேவையாக இதை தொடர்ந்து வாங்க ஆரம்பித்த பின் நானும் உணர்ந்து கொண்டேன்.
நன்றி : the quint
தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதியாகும் என்பது புகழ்பெற்ற முதலாளித்துவ மூதுரை மட்டுமல்ல, இந்திய நீதிமன்றங்களால் மிகவும் கேலிக்குள்ளாக்கப்பட்ட மூதுரையும் இதுதான். இந்திய நீதித்துறையால் சமீபத்தில் வழங்கப்பட்டிருக்கும் இரண்டு தீர்ப்புகள், இந்த மூதுரையை மீண்டும் எள்ளி நகையாடியிருக்கின்றன.

மதிவாணன், சேலம் மாவட்டம்-ஆத்தூருக்கு அருகிலுள்ள கெங்கவல்லியைச் சேர்ந்த ஆடு, மாடுகளை வாங்கி விற்கும் தரகர். 17 வருடங்களுக்கு முன், கள்ளச் சாராயம் கடத்தியதாக இவர் மீது குற்றஞ்சுமத்திய ஆத்தூர் மதுவிலக்கு போலீசார், அவரது இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்தனர். பின்னர், அவரது இருசக்கர வாகனத்தைத் திருப்பித் தருவதற்கு மதிவாணனிடமிருந்து எட்டாயிரம் ரூபாய் இலஞ்சமாகப் பெற்றுக் கொண்டனர். அந்த இலஞ்சப் பணம் கைமாறும் சமயத்தில் சாமிநாதன், ரவி, சேகர் ஆகிய மூன்று போலீசாரை இலஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கையும்களவுமாகப் பிடித்தனர்.
இது தொடர்பாக, இலஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் ஆத்தூர் மதுவிலக்கு போலீசு நிலையத்தில் ரெய்டு நடத்தியதில், அங்கிருந்து கணக்கில் காட்ட முடியாத 1.15 இலட்ச ரூபாய் ரொக்கமும், எந்தெந்த போலீசுக்கு எவ்வளவு இலஞ்சம் தரப்பட்டிருக்கிறது என்ற விவரங்கள் அடங்கிய துண்டுச் சீட்டுக்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் அடிப்படையில் அந்த போலீசு நிலையத்தைச் சேர்ந்த 22 போலீசார் மீது இலஞ்சம் வாங்கிய குற்றப்பிரிவுகளின் கீழ் ஊழல் தடுப்பு கண்காணிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை கடந்த பதினேழு ஆண்டுகளாக விசாரித்து வந்த ஊழல் தடுப்பு கண்காணிப்பு சிறப்பு நீதிமன்றம், கடந்த மே மாத இறுதியில் தீர்ப்பளித்தது. அத்தீர்ப்பில் குற்றஞ்சாட்டப்பட்ட 22 போலீசாரில் 12 போலீசார் விடுதலை செய்யப்பட்டனர். தற்பொழுது ஆய்வாளராகப் பணியாற்றிவரும் சேகர், உதவி ஆய்வாளர் அருள் முருகன் உள்ளிட்ட 7 போலீசாருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனையும், தலா 17,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது.
மற்றொன்று, உ.பி.மாநில பாரபங்கி குற்றவியல் நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு. பயங்கரவாத வழக்கில் கைது செய்யப்பட்ட காஷ்மீரைச் சேர்ந்த குல்சார் அகமது வானி, மொபின் ஆகிய இருவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டிருக்கிறது, அந்நீதிமன்றம்.
கடந்த 2000-ஆம் ஆண்டு, ஆகஸ்டு 14 அன்று, பீகார் மாநிலம் – முசாபர்பூரிலிருந்து குஜராத் மாநிலம் – அகமதாபாத் நகருக்குச் செல்லும் சபர்மதி விரைவு ரயில், உ.பி.மாநிலம் கான்பூர் நகருக்கு அருகே சென்றுகொண்டிருந்தபொழுது, அந்த ரயிலில் நடந்த குண்டு வெடிப்பில் ஒன்பது பயணிகள் கொல்லப்பட்டனர்; பலர் படுகாயமடைந்தனர். இந்த வழக்கில் முதல் குற்றவாளியாகக் குற்றஞ்சுமத்தப்பட்டுக் கைது செய்யப்பட்டவர்தான் குல்சார் அகமது வானி.
பதினேழு வருடங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டபொழுது, குல்சார் அகமது வானி உ.பி.யிலுள்ள அலிகார் முசுலீம் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மாணவர். அவரை டெல்லியில் வைத்துக் கைது செய்ததாகவும், அவரிடமிருந்து வெடிபொருட்களையும், முக்கியமான ஆதாரங்களையும் கைப்பற்றியதாகவும் குற்றப் பத்திரிகையில் போலீசார் குறிப்பிட்டிருந்தனர். மேலும், சபர்மதி ரயில் குண்டு வெடிப்புக்கான சதித் திட்டத்தை, குல்சார் அகமது வானி அலிகார் முசுலீம் பல்கலைக்கழகத்திலுள்ள ஹபீப் ஹாலில் வைத்துத் தீட்டியதாகவும் போலீசார் குற்றஞ்சுமத்தியிருந்தனர்.
“இந்த வழக்கின் முதல் குற்றவாளியாகவும், சதித் திட்டத்தின் மூளையாகவும் குற்றஞ்சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட குல்சார் அகமது வானி மற்றும் குற்றத்திற்கு உடந்தையாக இருந்த மொபின் ஆகிய இருவருக்கும் எதிராக போலீசாரால் ஒரு ஆதாரத்தைக்கூடக் காட்ட முடியவில்லை; சதி உள்ளிட்ட எந்தவொரு குற்றச்சாட்டையும் போலீசாரால் நிரூபிக்க முடியவில்லை” எனத் தீர்ப்பில் குறிப்பிட்டு, அவ்விருவரையும் பாரபங்கி குற்றவியல் நீதிபதி எம்.ஏ.கான் விடுதலை செய்திருக்கிறார். மாணவப் பருவத்தில் சிறைக்குள் தள்ளப்பட்ட குல்சார் அகமது வானி, நடுத்தர வயதைக் கடந்த நிலையில் நிரபராதியாக விடுதலை ஆகியிருக்கிறார். எத்தகைய குரூரம் இது ?

இந்த இரண்டு வழக்குகளிலும் நீதி வழங்கப்பட்டிருப்பதாக, அறிவும், மனசாட்சியும், இரக்க உணர்வும் கொண்ட எவராலும் ஒத்துக் கொள்ள முடியுமா? தீர்ப்பு தாமதமாக வழங்கப்பட்டிருக்கிற அலட்சியத்தையும் தாண்டி, நீதியை வழங்கவேண்டிய கடமையும், பொறுப்பும் மிக்க நிறுவனங்களாகக் கூறப்படும் நீதிமன்றங்களும், போலீசும், அதற்கு எதிராக நீதியைக் குழிதோண்டிப் புதைக்கும் விதத்தில் நடந்துகொண்டிருப்பதை இந்த இரண்டு வழக்குகளும் எடுத்துக்காட்டவில்லையா ?
ஆடு வியாபாரி மதிவாணன் போலீசார் மீது கொடுத்த இலஞ்சப் புகாரை விசாரித்து, பதினேழு ஆண்டுகள் கழித்துத் தீர்ப்பு வழங்கியிருக்கும் நீதிமன்றத்தின் திருநாமம், ஊழல் தடுப்பு கண்காணிப்பு சிறப்பு நீதிமன்றமாம். வழக்கை நடத்தியதோ தமிழக போலீசின் இலஞ்ச ஒழிப்புத் துறை. இதைக் கேட்டுச் சிரிப்பதா, இல்லை அழுவதா என்றே தெரியவில்லை.
இந்த வழக்கில் 99 சாட்சிகள் விசாரிக்கப்பட்டிருக்கிறார்கள். வாரத்திற்கு ஒரு சாட்சி என்று விசாரித்திருந்தால்கூட, வழக்கை இரண்டு ஆண்டுகளில் முடித்திருக்கலாம். ஆனால், நீதிமன்றமோ பதினேழு ஆண்டுகளை விழுங்கிவிட்டிருக்கிறது. ஒவ்வொரு மாதமும் பல பத்தாயிரக் கணக்கில் சம்பளம் வாங்கிக்கொண்டு, ஆள், ஆனை, அம்பு, சேனை என்றபடியான அதிகாரங்களை அனுபவித்துக்கொண்டு, நீதிபதியும் போலீசு அதிகாரிகளும் இலஞ்சத்தை ஒழிக்கப் பாடுபடும் இலட்சணம் நம்மை மெய்சிலிர்க்கத்தான் வைக்கிறது.

இந்த இழுத்தடிப்பிற்காக வழக்கை விசாரித்த நீதிபதியையும் குற்றஞ்சுமத்த முடியாது. வழக்கை நடத்திய போலீசையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த முடியாது. மக்களின் வரிப் பணத்தைத் தின்று தீர்க்கும் இந்த அதிகார வர்க்கக் கூட்டத்திற்கு அப்படிபட்டதொரு பாதுகாப்பு தரப்பட்டிருக்கிறது.
இந்த வழக்கைத் தொடுத்த மதிவாணன் தீர்ப்பிற்கு முன்பே, அதாவது நீதி கிடைக்கும் முன்பே இறந்து போனார். குற்றஞ்சுமத்தப்பட்ட போலீசாருள் மூவர் இறந்துபோய், தண்டனையிலிருந்து தப்பித்துக் கொண்டார்கள். வழக்கு நடைபெற்ற காலத்தில் குற்றஞ்சுமத்தப்பட்ட எந்தவொரு போலீசுக்காரனும் இடைக்கால நீக்கம் செய்யப்படவில்லை. அது மட்டுமின்றி, குற்றஞ்சுமத்தப்பட்ட சேகர், அருள்முருகன், ரவி ஆகியோருக்கு இன்ஸ்பெக்டர்களாகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டிருக்கிறது. நீதிமன்றமோ, பதினேழு ஆண்டுகள் கழித்து, எறும்பு கடிப்பது போன்று, இரண்டு ஆண்டு சிறை தண்டனை கொடுத்துத் தீர்ப்பளித்திருக்கிறது.
தமக்கு எதிரான வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்திலேயே, பதவி உயர்வு பெற்ற இந்த போலீசு அதிகாரிகள் இன்னும் திமிரோடும் அகங்காரத்தோடும் இலஞ்ச, ஊழல் கிரிமினல் குற்றங்களைச் செய்திருப்பார்கள் என நிச்சயமாகச் சொல்லலாம். ஒரு வழக்கைப் பதினேழு ஆண்டுகள் இழுத்தடிக்கலாம் என்ற மமதையே, அதிகார வர்க்கத்தைத் துணிந்து குற்றங்களை இழைக்கத் தூண்டுகிறது. இந்த அமைப்பு முறையைக் கொண்டு ஜெயா போன்ற பெருச்சாளிகளை மட்டுமல்ல, சாதாரண போலீசுக்காரன் உள்ளிட்ட சுண்டெலிகளைக்கூடத் தண்டிப்பது அத்துணை எளிதானதல்ல என்பதை இந்த வழக்கு எடுத்துக்காட்டுகிறது.

போலீசாருக்கு எதிராக வழங்கப்பட்டிருக்கும் இந்தத் தீர்ப்பு அற்பத்தனமானது என்றால், போலீசாரால் பயங்கரவாதியாக நிறுத்தப்பட்ட குல்சார் அகமது வானி வழக்கில் வழங்கப்பட்டிருக்கும் தீர்ப்பு, நியாயம் வழங்கிவிட்டதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் நயவஞ்சகம் கொண்டது.
சபர்மதி ரயில் குண்டு வெடிப்பு தொடர்பாகத் தேடுதல் வேட்டை நடத்தி, குல்சார் அகமது வானியை போலீசு கைது செய்யவில்லை. வேறொரு வழக்கில் அவரைச் சிக்க வைத்து, அதன் பிறகு சபர்மதி ரயில் குண்டுவெடிப்பு வழக்கிலும் அவரைச் சேர்த்து விட்டிருக்கிறது, போலீசு.
டெல்லியில் வெடிகுண்டு தேடுதல் வேட்டை நடத்தியதபொழுது, காஷ்மீரி முசுலீமான குல்சார் அகமது வானி ஆயுதங்களோடு பிடிபட்டதாகத்தான் போலீசாரே கூறியிருக்கிறார்கள். வானி மீது சட்டவிரோத ஆயுதச் சட்டத்தின் கீழ்தான் முதலில் வழக்கு பதியப்பட்டது. அதன் பிறகுதான் அவர் மீது சபர்மதி ரயில் குண்டு வெடிப்பு வழக்கு பாய்ச்சப்பட்டது.
அந்த வழக்கில் மூன்றாவது, நான்காவது குற்றவாளியாக நிறுத்தப்பட்ட இருவர் போலீசிடம் அளித்த சாட்சியங்களின்படிதான், அதாவது போலீசு உருவாக்கி நிறுத்திய பொய்சாட்சிகளின்படிதான் குல்சார் அகமது வானி முதல் குற்றவாளியாகவும், சதித் திட்டத்தின் மூளையாகவும் காட்டப்பட்டார். கொலை, கொலை முயற்சி, அரசுக்கு எதிராகப் போர் தொடுத்தல், ஆயுதங்களைச் சேகரித்து நாட்டிற்கு எதிராகக் குற்றங்களை இழைக்க சதித் திட்டம் தீட்டுதல் என்ற பிரிவுகளில் கீழ் அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. சபர்மதி ரயில் குண்டு வெடிப்பு வழக்கு மட்டுமின்றி, அவர் மீது மேலும் பத்து வழக்குகள் ஜோடிக்கப்பட்டன.
குல்சார் அகமது வானி சபர்மதி குண்டு வெடிப்பு வழக்கிலிருந்து விடுவிக்கப்படும் முன்பே, அவர் மீது போடப்பட்டிருந்த மற்ற பத்து வழக்குகளும் பொய் வழக்குகள் என அம்பலமாகி, நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டன. இதிலிருந்தே போலீசின் பித்தலாட்டத்தை அறிவுள்ள எவரும் புரிந்துகொள்ள முடியும். ஆனால், உ.பி.மாநில உயர்நீதி மன்றமோ வானிக்கு எதிராக இந்து மதவெறி கொண்ட நஞ்சைக் கக்கியது. சபர்மதி குண்டு வெடிப்பு வழக்கு தவிர, மற்றைய வழக்குகளிலிருந்து விடுதலையாகிவிட்ட தன்னைப் பிணையில் விடக் கோரி அவர் தொடுத்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த அந்நீதிமன்றம், “இத்தகைய நபர்களை விடுவிப்பது சமூகத்தின் நலனுக்கு எதிரானது” எனக் கூறி, பிணை தர மறுத்தது.
இத்தீர்ப்புக்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தார் வானி. அவ்வழக்கு விசாரணையின்போது, “11 வழக்குகளில் பத்து வழக்குகளில் விடுதலை செய்யப்பட்ட இந்த நபரை, 16 ஆண்டுகளாகச் சிறையில் அடைத்து வைத்திருப்பது அவமானகரமானது” என உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி கேஹார் கடிந்து கொண்டிருக்கிறார். ஆனால், இந்த வார்த்தைகள் தலைமை நீதிபதியிடமிருந்து அத்துணை எளிதாக வந்துவிடவில்லை.
அவ்விசாரணையின்போது, “ஒரு தனி மனிதனான வானிக்கு, இர்ஷத், அஷ்ரஃப், அப்துல் ஹமீது என்று இத்துணை பெயர்கள் எதற்காக?” என வினவினார் தலைமை நீதிபதி. “அலிகர் பல்கலைக்கழகத்தின் மிகச் சிறந்த ஆராய்ச்சி மாணவனான தனக்கு, இத்துணை பெயர்களைச் சூட்டிய போலீசிடம்தான் அதனை நீங்கள் கேட்க வேண்டும்” என வானி, தனது வழக்குரைஞர் மூலம் அளித்த பதில்தான் நீதிபதிகளின் வாயை அடைத்தது.
இதன் பிறகும்கூட உச்சநீதி மன்றம் வானிக்குப் பிணை வழங்கிவிடவில்லை. “சபர்மதி குண்டு வெடிப்பு வழக்கு விசாரணையை அக்டோபர் 31, 2017-க்குள் முடித்துவிட வேண்டும். அதற்குள் அந்த விசாரணை முடிந்தாலும், முடிவடையாவிட்டாலும், நவம்பர் 1, 2017 அன்று வானியைப் பிணையில் வெளியே விட வேண்டும்” என்ற விநோதமான தீர்ப்பைத்தான் வழங்கியது.
வானி விடுதலையாகியிருக்கலாம். ஆனால், அவரிடமிருந்து பறிக்கப்பட்ட இளமையை, கல்வியை, மனநிம்மதியை யாரால் திருப்பித் தர முடியும்? குல்சார் அகமது வானி ஜூலை 2001-இல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்தப் பதினாறு ஆண்டுகளில் சபர்மதி குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக வெறும் 20 சாட்சிகள்தான் (மொத்த சாட்சிகள் 96) நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டுள்ளனர். அதாவது, வழக்கை இழுத்தடிப்பதன் மூலம் வானியைச் சட்டவிரோதமான முறையில் தண்டிப்பது என்பதுதான் நீதிமன்றத்தின், போலீசு அதிகாரிகளின் நோக்கமாக இருந்திருக்கிறது. இந்த வழக்கோடு, வானி மீது மேலும் பத்து பொய் வழக்குகளை ஜோடித்தது, போலீசின் காவி புத்தியையும் கிரிமினல் காலித்தனத்தையும் ஒருசேர எடுத்துக் காட்டுகிறது.
தீய நோக்கத்தோடு திட்டமிட்டு வானியைக் குற்றவாளியாக்கிய எந்தவொரு போலீசு அதிகாரியும் நீதிமன்றத்தால் தண்டிக்கப்படவில்லை. மாறாக, அந்த அதிகாரிகள் நாட்டு நலன் கருதித்தான் செயல்பட்டிருக்கிறார்களே தவிர, அவர்களுக்கு வேறெந்த தவறான உள்நோக்கமும் கிடையாது என வாக்காலத்து வாங்கி, நீதிமன்றங்களே அதிகாரிகளைக் காப்பாற்றிவிடுகின்றன. போலீசு அதிகாரிகளுக்கு வழங்கப்படும் இந்தச் சட்டபூர்வ பாதுகாப்புதான், அப்பாவி முசுலீம் இளைஞர்களைப் பயங்கரவாதிகளாக முத்திரை குத்தி சிறையில் தள்ளும் துணிவையும், அகங்காரத்தையும் அவர்களுக்கு வழங்கி வருகிறது. இந்த முப்பது ஆண்டுகளில் இந்த கிரிமினல் போலீசு அதிகாரிகளும், அவர்களுக்கு உடந்தையாக நடந்துகொண்ட நீதிபதிகளும் நாடெங்கும் ஆயிரக்கணக்கான வானிகளின் வாழ்க்கையைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கியிருக்கிறார்கள்.
சபர்மதி ரயிலில் ஆகஸ்டு 14, 2000 அன்று குண்டு வெடித்தது உண்மை. அந்தக் குண்டு வெடிப்பில் ஒன்பது பயணிகள் இறந்து போனதும் உண்மை. அந்தக் குண்டு வெடிப்பிற்கும் வானிக்கும் தொடர்பில்லை என்பதும் உண்மை. அப்படியென்றால், அந்தச் சதிச் செயலுக்குத் திட்டம் தீட்டி நடத்தியது யார்? இந்தக் கேள்விக்குள் நீதிமன்றமும் நுழையவில்லை, போலீசும் அக்கறை கொள்ளவில்லை. இதன் மூலம் அந்தக் குண்டுவெடிப்பில் இறந்து போனவர்களுக்கும் நீதி மறுக்கப்பட்டுவிட்டது.
இந்த அமைப்பு முறை தோற்றுப் போய்விட்டதையும், தனது குடிமகனுக்கே எதிராகச் செயல்படுவதையும் எடுத்துக்காட்டும் சான்று இது.
-செல்வம்
புதிய ஜனநாயகம் – ஜூன் 2017
விவசாயியை வாழவிடு என்று தமிழகத்தில் பேசக்கூடாது. சீர்காழியில் பொதுக்கூட்டம் நடத்த 10.05.2017, 22.05.2017 மற்றும் 28.05.2017 ஆகிய தேதிகளில் தொடர்ச்சியாக போலீசார் இறுதி நாளில் அனுமதி மறுத்தனர். சட்டம் ஒழுங்கு பாதிக்கும் என நீதிமன்றத்தில் போலீசார் பதில் மனு தாக்கல் செய்தது. ஆனாலும் நாம் போராடி அனுமதி பெற்று ஒரு நாளில் திட்டமிட்டு பொதுக்கூட்டத்தை 17-6-2017 அன்று மாலை நடத்தினோம். இதற்கு முன்னர் போலீஸ் மறுத்ததற்கு காரணம் இந்தக் கூட்டம் நடத்தினால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை வருமாம். கூட்டம் முடிந்து விட்டது. எந்தப் பிரச்சினையும் வரவில்லை. மாறாக இந்தக் கூட்டம் விவசாயிகளிடையே பெரும் விழிப்புணர்வை உருவாக்கியிருக்கிறது. இதைத்தான் போலிஸ் தடை செய்ய நினைக்கிறதோ?
கூட்டத்திற்கு வட்டார ஒருங்கிணைப்பாளர் தோழர் ரவி தலைமையுரையாற்றினார்
அவரைத் தொடர்ந்து தெற்கு ராஜன் வாய்க்கால் சங்கத்தின், திரு ராமசாமி அவர்கள் பேசுகையில், “இன்று மக்களை பற்றி சிந்திக்காத அரசால் விவசாயி வறுமையால் செத்து மடிகிறான். இயற்கையை வெல்வது மனிதனின் இயல்பு. வெள்ளம் வரும்போது அணை கட்ட வேண்டும். தண்ணீர் பஞ்சம் வருவதற்கு முன்பு அணைக்கட்டி தண்ணீர் சேமிக்க வேண்டும். தமிழகத்தை பொறுத்தவரை 7 நதிகள் வற்றாத ஜீவ நதிகள் தடுப்பணை கட்டியிருந்தால் பிரச்சனை தீர்ந்திருக்கும். இந்த அரசியல்வாதிகளை நம்பி பயனில்லை, விவசாயியை வாழ வைக்க வேண்டுமானால் நம்முடைய அதிகாரத்தை கையில் எடுக்க வேண்டும்.” என்றார்.
அதற்கடுத்தபடியாக ம.உ.பா.மையத்தின் கடலூர் மாவட்டச் செயலர், வழக்கறிஞர் செந்தில், பேசுகையில் “15, 20 ஆண்டுகளுக்கு முன்னால் பொதுக்கூட்டம் நடத்த வேண்டுமானால் அது உடனடி சாத்தியம். ஆனால் இன்றைய ஜனநாயக’ நாட்டில் அது சாத்தியமில்லை.” என அரசை அம்பலப்படுத்தினார்.
அவரைத் தொடர்ந்து கொள்ளிடம் பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர், திரு. சிவபிரகாசம், பேசுகையில் “41 நாட்கள் அய்யாகண்ணு போராட்டம் நடத்தினார் அரசுக்கு மானமிருந்தால் அவர்களை கேட்டிருக்க வேண்டும். விவசாயியை பற்றி யார் பேசினாலும் நாங்கள் அவர்கள் பக்கம் நிற்போம். 39 எம்.பி எவனாவது எதிர்ப்பு தெரிவிக்கிறானா? எந்த அதிகாரத்திற்கும் பயப்படாமல் உயிரே போனாலும் பரவாயில்லை என்று போராட வேண்டும். விவசாயிக்கு இந்த பச்சை துண்டுதான் மிச்சம் அதிகாரி எவனுக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை.” என்றார்.
அதன் பின்னர் கொள்ளிடம் மேற்கு பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் திரு.விசுவநாதன், பேசுகையில் “விவசாயக் கடன், கல்விக்கடன், எதையும் தள்ளுபடி செய்யவில்லை, உற்பத்தி செய்யும் பொருளுக்கு விலை நிர்ணயிக்கும் அதிகாரம் இருந்தால் போதும் எந்தத்தள்ளுபடியும் எங்களுக்கு வேண்டாம்”. என்றார்.
அவருக்கடுத்தபடியாக தெற்கு ராஜன் வாய்க்கால் சங்கத்தலைவர் திரு காந்தி (எ) புருஷோத்தம்மன், பேசுகையில் “இன்சூரன்ஸ் பிரிமியம் கட்டியிருக்கிறார்கள் விவசாயிகள். கட்டிய இன்சூரன்ஸ்க்கு கூட பணத்தை வாங்க முடியவில்லை” என்றார்.
கடலூர் மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் திரு. ரவீந்திரன், அவர்கள் பேசுகையில் “கடந்த மன்மோகன் ஆட்சியில் திட்டக்குழுவின் துணைத்தலைவரிடம் விவசாயிகள் பிரச்சினையைப் பற்றி நான் பேசத்தொடங்கும் போதே “விவசாயிகள் பற்றி பேசாதே, வெளியே போ” என்றார். விவசாயியைப்பற்றி பேசாத திட்டக்குழு யாருக்காக இருக்கிறது. அந்தக்கூட்டம் தமிழ்நாட்டில் நடந்திருந்தால் செருப்பாலேயே மாண்டேக் சிங்கை அடித்திருப்பேன்”
தமிழக விவசாயிகள் சங்கத்தின் கடலூர் மாவட்டச் செயலர் திரு நந்தகுமார், பேசுகையில் கட்சி, மதம், சாதி என்று பல்வேறு வகையில் விவசாயிகளை பிரித்து வைத்து இருக்கிறார்கள். விவசாயிக்கு என்ன அதிகாரம் இருக்கிறது அதை தெரிந்து கொள்ளத்தான் இந்த பொதுக்கூட்டம், மத்திய அரசு கரும்புக்கு 3 வருஷமா விலை சொல்றான். மாநில அரசு ஆதார விலை நிர்ணயிக்கிறான். ஆதாயம் அடைகிறான் முதலாளி. அதிலும் 100 ரூபாயை பிடித்துகொண்டுதான் கொடுக்கிறான். இதுக்காகவா இந்த பிடுங்கிகளை ஆட்சியில உட்கார வைத்தோம்? நம்மை கொள்ளையடித்த இவர்களின் சொத்தையும், ஆட்சியையும் பறிமுதல் செய்யணும் இதற்கு மக்கள் அதிகாரம் தான் வேண்டும்.
பெருமாள் ஏரிநீர் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் திரு சண்முகம் விவசாயிகள் பிரச்சனை பெரிது, ஆனால் பிரிந்து கிடக்கிறாங்க, பிரிந்து கிடந்த விவசாயிகளை ஒரேமேடையில் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதை மக்கள் அதிகாரம்தாம் செய்திருக்கிறது. எல்லா விவசாயிகளையும் ஊர் ஊரா போய்திரட்டணும். ஆந்திரா, உ.பி. மாதிரி போராட்டம் நடத்தி தமிழ்நாட்டிலும் கடனை தள்ளுபடி செய்யணும்.
வெள்ளாற்றுபாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர், திரு பஞ்சமூர்த்தி அவர்கள் பேசுகையில் வெள்ளாற்று மணல் போராட்டம் என்பதே மக்கள் அதிகாரம் செய்ததுதான் மக்களை ஊர் ஊராக திரட்டினோம். மணல் அள்ளகூடாதுன்னு சொல்லி 2000 பேர் ஆற்றிலே உணவு சமைத்து சாப்பிட்டு படுத்து தூங்கி போராட்டம் நடத்தினோம். மணல் குவாரியை நிறுத்தினோம் அப்போது ஒரு போலிசு எங்களிடம் வந்து எங்கள் ஊரில் மணல் அள்ளுவதை தடுத்து நிறுத்துங்கள் என்று சொன்னார். வெள்ளாற்று போராட்டம் போல லட்சக்கணக்கில் விவசாயிகளை திரட்டாமல் விவசாயப் பிரச்சனை தீராது.
விவசாயிகள் விடுதலை முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் தோழர் அம்பிகாபதி பேசுகையில் விவசாயிகள் நாட்டின் முதுகு கெலும்பு என்று சொன்ன அரசு உண்டு இன்று விவசாயி முதுகெலும்பை உடைக்கிறான். இந்த மண்தான் நம் உயிர் நம் உடலில் ஓடும் ரத்தம் சதைக்கு காரணம் மண்தான் இதை புரிந்துகொள்ள வேண்டும்., கடலை அழிக்கிறான், மண்ணை அழிக்கிறான் மோடி அரசாங்கம். உழவர்கள் அதிகாரத்தை கையிலெடுக்க வேண்டும்
வழக்கறிஞர் வேலு குபேந்திரன், பேசுகையில் விவசாயி இல்லையென்றால், மருத்துவமோ, வழக்கறிஞரோ கிடையாது என்ற கருத்து தான் உண்மை. பேருக்கு போராட்டம் நடத்தினால் வெல்ல முடியாது. காஷ்மீர் ராணுவம் கூறுகிறது, மக்கள் கல்லால் அடித்தால் நாங்களும் திருப்பி கல்லால் அடிப்போம் என்கிறான். பெண்களை மயிரை பிடித்து அடிக்கிறானே நாங்களும் திருப்பி அடிப்போம்.
கரும்பு விவசாய சங்கம் திரு இமயவரம்பன் ஓடுகின்ற ஆற்றை தடுத்து நீரை பயன்படுத்தியது தமிழன் தான். ஆனால் இப்போது பலவருடமாக தண்ணீர் கடலுக்குதான் போகிறது. சர் ஆர்தர் கார்ட்டன் கல்லணை கட்டிய முறை பிரமிக்க வைக்கிறது. தமிழகத்தில் 23 நாட்கள் தான் நல்ல மழை இருக்கும் நான்கு லட்சம் விவசாயிகள் நாடு முழுக்க செத்திருக்கிறார்கள்.யாரும் சாகவில்லை என்று தமிழக அரசு கோர்ட்டில் சொல்கிறது. இந்த அயோக்கியத்தனத்தை நாம் முறியடிக்க வேண்டும்.
தோழர் காளியப்பன் பேசுகையில் “விவசாயியை வாழவிடு என்று பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கேட்டால் அனுமதி கொடுப்பதில்லை. 2015-ல் மூடு டாஸ்மாக்கை ! முழக்கத்தை மக்கள் நடைமுறைபடுத்திருக்கிறார்கள். அடுத்து வயலைபற்ற வைத்து விடுவோம் என்று அஞ்சுகிறார்கள். விவசாயிகளை வாழவிடாமல் தடுப்பது யார்? இந்த அரசுதானே? மோடி ஆட்சிக்கு வந்தால் விவசாயி வருமானம் இரண்டு பங்கு உயர்த்தப்படும் என்றார் மோடி நடந்ததா? அத்தனையும் பொய் வாக்குறுதி, மன்மோகன்சிங், மாண்டேக் சிங் அலுவாலியா திரும்ப, திரும்ப சொன்னார்கள் விவசாயியே விவசாயத்தை விட்டு வெளியே போ . அரசு விவசாயத்தை கை கழுவி விட்டது,. தமிழகத்தில் ஆட்சியே இல்லை, ரவுடிகளும், அதிகாரிகளும் தான் ஆள்கிறார்கள். இந்தியாவின் 70 சதவிகித விவசாயிகள் வறுமை சாவுக்கு தள்ளப்படும் நிலையை தடுக்க வேண்டும்.” அதற்காக தான் இந்த கூட்டம் என்று பேசி முடித்தார்.
மக்கள் அதிகார ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ பேசுகையில் நமக்கு ஒரு நாளில் கூட்டம் நடத்த கற்று தந்திருக்கிறார்கள். போலீசு என்பவர்கள் கெட்டவங்க, என்று நாம் சொல்லித்தான் மக்கள் நம்புகிறார்கள் என்றில்லை. மக்களே தங்கள் சொந்த அனுபவத்தில் அறிந்து இருக்கிறார்கள்.அப்படித்தான் விவசாயத்திலும் அரசுதான் விவசாயியை வாழவிடவில்லை என்பதும் விவசாயிகள் அனுபவத்தில் உணர்ந்து இருக்கிறார்கள். தண்ணீரில் உயிரினங்கள் இருந்தால் அது நல்ல நீர் உயிர் இல்லையென்றால் அது குடிக்க உபயோகமில்லாத நீர். அதுபோல விவசாயி சமூகத்தின் உயிர்நாடி அவனில்லையென்றால் சமூகம் இல்லை விவசாயி தன் சாவின் மூலம் சமூக அழிவை எச்சரிக்கை செய்கிறான்,
3 மாநில விவசாயிகளின் கடனோ ஒரு லட்சம் கோடிக்கு கீழ்தான் வருகிறது. ஆனால் 3 முதலாளிகளுக்கு மட்டும் ஒரு லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்திருக்கிறார்கள். ஒரு ஏக்கர் விவசாயம் செய்ய எவ்வளவு செலவாகும்னு தெரியாதா? விவசாயியை வாழவிடு என்ற திரும்பி திரும்ப சொல்லி பாருங்கள், பச்சை வயல் பற்றி எரியும். 100 நாள் வேலை திட்டத்தில் ஒதுக்கும் தொகையைவிட விவசாயத்திற்காக ஒதுக்கும் தொகை குறைவு. இப்படி மையமான விஷயங்களில் அரசின் சிண்டை பிடித்து கேட்க வேண்டும்.
நெடுவாசல் போராட்டத்தில் மாணவர்கள் போனா தீவிரவாதினு எந்த சட்டம் சொல்கிறது? அய்யாக்கண்ணுவின் போராட்டத்தை ரசிக்கிறது அரசு. நம் போராட்டத்தை பார்த்தால் அரசு, பதற வேண்டும்
விவசாயி வருட வருமானம் 20000, மாதம் என்றால் 1700-ல் எப்படி வாழமுடியும்? அரசு ஊழியர் கடைநிலை ஊழியர் மாதம் 18000/- சம்பளம் விவசாயிக்கு 1700 என்ன கணக்கு இது. அதிகாரி சொன்னதைத்தான் விவசாயி பயிர் செய்தான், விவசாயி தூக்குல தொங்குறான். அதிகாரி சாகவில்லை. நீர் நிலையை அழிச்சது, இந்த அரசுதான். மதுரை கோர்ட், விழுப்புரம் பஸ் ஸ்டாண்டு எல்லாம் நீர் நிலையில்தான இருக்குது. இந்த அரசு கட்டமைப்பிடம் இந்த ஆட்சியிடம் எப்படி நியாயம் கிடைக்கும்?
விவசாயிகள் தப்பிப்பதற்கு ஒரேவழிதான் இருக்கிறது. நாங்கள் சொல்வதை கேளுங்கள் கோர்ட்டு சொன்னாலும் டாஸ்மாக் கடைய மூட முடியாது என்ற இந்த அரசிடம் மக்கள் கெஞ்சவில்லை. என் ஊர்ல கடை வைக்கிறதுக்கு நீ யார் என்று அடித்து நொறுக்கியதைப்போல உனக்கு ஆளத் தகுதியில்லை என அறிவிப்போம். விவசாயிகள் மாணவர்கள், பெண்கள், அரசு ஊழியர்கள் அனைவரும் சேர்ந்த நம்முடைய வாழ்க்கையை அழித்த இந்த அமைப்பை அடித்து நொறுக்க வேண்டும். அரசு கடன் தள்ளுபடி, ஆதார விலை போன்றவற்றை இந்த அரசு இனிமேலும் செய்யாது. ஏனெனில் இது கார்ப்பரேட் அரசாங்கம். மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், கர்நாடகா, பஞ்சாப் அனைத்து மாநிலங்களிலும் பற்றி எரிகிறது போராட்டம். தமிழகத்தில் பச்சைவயல்கள் பற்றி எரியும். அப்போது இந்த அரசு கட்டமைப்பின் மாயை எரிந்து சாம்பலாகும்.
நிகழ்ச்சியின் இடையிடையே ம.க.இ.க பாடல்கள் பாடப்பட்டன.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் :
மக்கள் அதிகாரம்,
சீர்காழி, தொடர்பு எண்- 98434 80587
மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க அரசால் விவசாயிகள் சுட்டுக்கொல்லப்பட்டதைக் கண்டித்து மக்கள் அதிகாரம் சார்பில் நெல்லை, நாகர்கோவில், கோவில்பட்டி ஆகிய இடங்களில் 14.6.17 அன்று மாலை 5:00 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
நெல்லை ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரம் பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர் தங்கபாண்டியன் தலைமை தாங்கினார். கண்டன முழக்கங்களுடன் ஆர்ப்பாட்டம் துவங்கியது.
மக்கள் அதிகாரம் தோழர் நாகராசன் சிறப்புரையாற்றினார். தனது சிறப்புரையில், எப்படி இந்திய விவசாயமும், விவசாயிகளும் படுகுழிக்குத் தள்ளப்பட்டனர் என்பதையும், உலகம் முழுக்க குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்திய முதலாளிகளின் இலாபவெறிக்காக விவசாயம் அழிக்கப்பட்டு மக்கள் வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர் என்பதைப் பற்றியும் எடுத்துக் கூறினார்.
மேலும், மோடி அரசு எந்த அளவுக்கு முட்டாள்தனமாகவும், கொடூரமாகவும் ஏகாதிபத்திய அடிமைத்தனத்தோடு செயல்படுகிறது, என்பதை எளிமையாக உணர்த்தும் வகையில் பேசினார். இறுதியாக, எப்படி விவசாயத்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் சீரழிந்து மக்களுக்கு எதிரானதாக உள்ளது என்று கூறி, ஒரே மாற்று மக்கள் அதிகாரமே என்பதைக் கூறி முடித்தார். தோழர். சரவணன் நன்றி கூறினார்.
நூற்றுக் கணக்கான மக்கள் சுற்றிலும் நின்று ஆர்வமாக பேச்சைக் கவனித்தனர்.
நாகர்கோவில் ஆர்ப்பாட்டத்திற்கு பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர் சிவராஜபூபதி தலைமை தாங்கினார். முதலில் பேசிய குமரி மாவட்ட பாசனசபை தலைவர்கள் கூட்டமைப்பின் மாவட்டத் தலைவர் புலவர் செல்லப்பா டாஸ்மாக் போராட்டம் பற்றியும், அதில் எப்படி மக்கள் போராடினர் என்பதைப் பற்றியும் மக்கள் அதிகாரம் அமைப்பின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளதையும் குறிப்பிட்டுப் பேசினார்.
அடுத்து பேசிய பூமி பாதுகாப்பு சங்கத்தின் மாவட்டத் தலைவர் திரு பத்மதாஸ் விவசாயிகளுக்காக களத்தில் இறங்கிப் போராட வேண்டிய அவசியத்தை வலியுறுத்திப் பேசினார். புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் நெல்லை அமைப்பாளர் தோழர் சிவா, விவசாயப் பிரச்சினைக்கு அதிகாரத்தைக் கையில் எடுப்பதே தீர்வு என்பதைவலியுறுத்தும் விதமாகப்பேசினார்.
குமரி மாவட்ட பாசனத்துறை சேர்மன் திரு வின்ஸ் ஆண்ட்டோ விவசாயிகள் எப்படிபோராட வேண்டும் என்பதற்கு மத்தியபிரதேச விவசாயிகளை முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை பேசினார். மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், திருச்சி வழக்கறிஞர் காவிரிநாடன் கார்ப்பரேட் முதலாளிகளின் இலாபத்திற்கு நம் விவசாயிகள் கொல்லப் படுவதையும், விவசாயம் அழிக்கப்படுவதையும், அதற்கேற்ப மாட்டுக்கறிதடை உள்ளிட்ட உத்தரவுகள் போடப்பட்டு அதிகாரத் திமிரோடும், கார்ப்பரேட் அடிமையாகவும் மோடி அரசு செயல்படுவதையும் அம்பலப்படுத்திப் பேசினார்.
இறுதியாக மக்கள் அதிகாரம், நாகர்கோவில் பகுதி தோழர் வனிதா நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் பரவலாக பெண்கள் கலந்து கொண்டனர். மக்கள் அதிகாரமே தீர்வு என்பதை வலியுறுத்தி எழுப்பப்பட்ட முழக்கங்களும், உரைகளும் மக்களிடையே பரவலாக கவனத்தைப்பெற்றன.
கோவில்பட்டியில் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் ஆதி தலைமை தாங்கினார். முதலில் பேசிய கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த விவசாய ஆர்வலர் ஜெயேந்திரன், இன்று விவசாயம் திட்டமிட்டு அரசால் அழிக்கப்படும் சூழலில், மக்கள் அதிகாரம் போன்ற அமைப்புகளோடு இணைந்து செயலாற்ற வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் விதமாக பேசினார்.
அடுத்து கண்டன உரையாற்றிய மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரை மாவட்ட செயலாளர், தோழர் லயனல் அந்தோணிராஜ் அரசு விவசாயிகளுக்கு எதிரானதாகவும், கார்ப்பரேட்டுகளின் தரகனாகவும் மாறிப் போனதையும், ஒரே தீர்வு மக்கள் அதிகாரமே என்பதை நிறுவும் வகையிலும் உரையாற்றினார்.
இறுதியாக தோழர் பொன்ராஜ் நன்றியுரையாற்றினார். நூற்றுக் கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தை கவனித்து, பிரசுரத்தை ஆர்வமுடன் வாங்கிப் படித்தனர்.
( படங்கலைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் :
மக்கள் அதிகாரம்,
நெல்லை மண்டலம்.
மகாராஷ்டிராவில் மாட்டிறைச்சியின் மீதான தடையானது, கால்நடை வர்த்தகத்தை அழித்து, மாரத்வாடாவின் விவசாய நெருக்கடியை மேலும் அதிகரித்துள்ளது.
தகிக்கும் 45 டிகிரி வெயிலில், கால்நடைகளை விற்பனை செய்ய ஒரு சந்தையிலிருந்து மற்றொன்றுக்கு நடையாய் நடக்கிறார்கள் விவசாயிகள். வாங்க விரும்புகிறவர்கள் இருக்கிறார்கள். பின்னர் அவற்றை விற்க முடியாமல் போய்விடுமோ என்ற அச்சத்தினால் வாங்கத் தயங்குகிறார்கள்.
அப்பாசாஹிப் கோதுலே (45) தனது காளைகள் இரண்டினை விற்க விரும்புகிறார். ஆனால் முடியவில்லை. க்வலீம் குரேஷி (28) காளைகளை வாங்க விரும்புகிறார். அவராலும் முடியவில்லை.
மகாராஷ்டிரா மாநிலம், மாரத்வாடா பிராந்தியத்தின் ஔரங்கபாத் நகரிலிருந்து சுமார் 40 கி.மீ. தொலைவிலுள்ள தேவ்கான் தான் கோதுலேயின் கிராமம். அவர் ஒரு மாதத்துக்கும் மேலாக தனது கிராமத்தைச் சுற்றி நடக்கும் வாராந்திர சந்தைகள் அனைத்துக்கும் அலைந்து கொண்டிருக்கிறார்.

இது அதுல் என்ற ஊரில் நடக்கும் செவ்வாய்க்கிழமை சந்தை. எங்கும் மக்கள் கூட்டம். வெயிலுக்காக தலையில் வெள்ளைத் துணி ஒன்றைக் கட்டியபடி நின்று கொண்டிருக்கிறார் கோதுலே. “என் பையன் கல்யாணத்துக்கு கொஞ்சம் பணம் வேணும். இந்த ஜோடி மாட்டுக்கு பத்தாயிரத்துக்கு மேல யாரும் கொடுக்க மாட்டேங்கிறாங்க. எனக்கு பதினஞ்சாயிரமாவது வேணும்” என்கிறார் கோதுலே.
இன்னொருபுறம், ஔரங்கபாத் நகரின் சில்லக்கானா பகுதியில் வேலையின்றி அமந்திருக்கிறார் க்வலீம் குரேஷி. நாள்தோறும் நலிந்து வரும் தனது வியாபாரத்தை எப்படி மீட்டெடுப்பது என்ற ஆழ்ந்த கவலையிலிருக்கிறார். “ஒரு நாளைக்கு இருபதாயிரத்துக்கு வியாபாரம் செஞ்சிட்டிருந்தேன். (மாத வருமானம் ரூ.70,000/- முதல் ரு.80,000/- வரை)” “போன இரண்டு வருசத்துல இது கால் பங்கா கொறஞ்சிருச்சு” என்கிறார்.
“இந்த மாடுகளை விக்கிறதுக்கு சந்தை சந்தையா அலையிறேன். இதுக்கே ஆயிரக்கணக்குல செலவாகுது. எல்லா விவசாயிகளும் இப்படித்தான், மாட்டை விக்கிறதுக்கு சக்திக்கு மீறி செலவு செய்யிறாங்க” என்றார் கோதுலே.
மகாராட்டிரா மாநிலத்தில் மாட்டிறைச்சித்தடை கொண்டு வரப்பட்டு இரண்டு வருடங்களாகிறது. 2014 ல் பா.ஜ.க. வின் தேவேந்திர ஃபட்னாவிஸ், மகாராஷ்டிராவின் முதலமைச்சராக பதவியேற்றார். முந்தைய காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆட்சிகளிலேயே விவசாயம் ஆழ்ந்த நெருக்கடிக்குள்ளாயிருந்தது. இடுபொருட்களின் விலையேற்றம், விளை பொருட்களுக்கு கிடைக்கும் விலையில் ஏற்றத்தாழ்வு, தவறான நீர் மேலாண்மை போன்ற பிற காரணிகளும் ஒன்று சேர்ந்து, கொடிய ஆயுதங்களைப் போல விவசாயிகளைத் தாக்கியது. பத்தாயிரக் கணக்கான விவசாயிகளை தற்கொலைகளுக்குத் தள்ளியது. மார்ச் 2015 ல், ஃபட்னாவிஸ், ஏற்கனவே இருந்த பசுவதைத் தடையை காளை மற்றும் எருதுகளுக்கும் நீட்டித்து சட்டம் போட்டார். விவசாயிகளின் நெருக்கடி தீவிரமானது.

மாடுகள் கிராமப்புறப் பொருளாதாரத்தின் மையமாக இருப்பதால், இத்தடையானது கால்நடைகள் சார்ந்த அனைத்து வியாபாரங்களிலும் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தியது. திருமணம், மருத்துவம், அல்லது வரவிருக்கும் பயிரிடும் பருவத்தேவைகள் போன்றவற்றிற்கு கால்நடைகளை விற்றுப் பணத்தைப் புரட்டுவது விவசாயிகளின் பழக்கம். இப்படி பன்னெடுங்காலமாக கால்நடைகளை ஒருவகை காப்பீடு போல் பயன்படுத்தி வரும் விவசாயிகளை இது பெரிதும் பாதித்தது.
ஐந்து ஏக்கர் நிலத்தில் பருத்தி மற்றும் கோதுமை பயிரிட்டிருக்கிறார் கோதுலே. அவரது பொருளாதார கணக்கீடுகள் பாஜக அரசு விதித்துள்ள தடையால் பாதிப்படைந்திருப்பதாகக் கூறுகிறார். “இந்த ரெண்டு காளைகளுக்கும் நாலு வயசு தான் ஆகுது. “காளைகள் பத்து வயசு வரை விவசாய வேலைக்குப் பயன்படும்.” “சில வருசம் முன்ன வரைக்கும் எந்த விவசாயியும் இதுங்கள இருபத்தஞ்சாயிரத்துக்கு முழு மனசா வாங்கிருப்பான்” என்கிறார் .
தற்போது கால்நடைகளின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. எனினும், வாங்கத் தயங்குகிறார்கள். பின்னாளில் அவற்றை விற்க இயலாமல் போய் விடுமோ என்று அஞ்சுகிறார்கள். “என் வீட்டிலிருந்து காளைகளை பல்வேறு சந்தைகளுக்கு கொண்டுபோகவே சில ஆயிரங்கள செலவு செஞ்சிட்டேன். அதுல், நாலு கி.மீ. தூரத்தில இருக்கறதால இன்னிக்கு மாடுகளோட நடந்து வந்துட்டேன். மற்ற வாரச் சந்தைகள் 25 கி.மீ. சுற்றுவட்டாரத்தில இருக்கு, அங்கயெல்லாம் போறதுக்கு மாட்டு வண்டிய வாடகைக்கு எடுக்கணும். எனக்கு ஏற்கனவே நெறைய கடன் இருக்கு. எப்பிடியாவது வித்தாகணும்” என்கிறார் கோதுலே.
பேசிக்கொண்டிருக்கையில், யாராவது வாங்க வரமாட்டார்களா என்ற ஏக்கப்பார்வை கோதுலேயின் கண்களில் தெரிகிறது. அவர் காலை 9 மணிக்கு சந்தைக்கு வந்து மதியம் 1 மணி வரை கடும் வெயிலில் நின்று கொண்டிருக்கிறார். “நான் வந்ததுல இருந்து இதுவரை தண்ணி கூடக் குடிக்கல. தண்ணி குடிக்கப் போனா, அதுக்குள்ள யாராவது மாடு வாங்க வர்ற ஒரு ஆள தவற விட்டுருவேனோங்குற பயந்தான் காரணம்” என்கிறார்.
113 டிகிரி வெயில் சுட்டெரிக்கிறது. மைதானம் பரபரப்பாக இருக்கிறது. பல்வேறு விவசாயிகளும் எப்படியாவது விற்று விட வேண்டும் என்று முனைகிறார்கள். இந்த அதுல் சந்தையில் இருந்து 15 கி.மீ. தொலைவிலுள்ள வாகுல்னி என்ற ஊரிலிருந்து வந்திருக்கும் 65 வயதான ஜனார்தன் கீதே, தனது மாடுகளை வசீகரமாக காட்டும் முயற்சியாக அவற்றுக்கு கொம்பு சீவ வைக்கிறார். அதற்கு ஒரு மாட்டுக்கு 200 ரூபாய் செலவு. “நான் இந்த மாடுகளை அறுவத்தஞ்சாயிரத்துக்கு வாங்கினேன். இப்ப நாப்பதாயிரத்துக்கு வித்துட்டாலே திருப்தி தான்” என்கிறார்.
மாரத்வாடாவில் அதிகரித்து வரும் தண்ணீர்ப்பஞ்சம், உயர்ந்து வரும் மாட்டுத்தீவனங்களின் விலை, மாடுகளை பராமரிக்க போதிய இட வசதியின்மை போன்ற காரணிகள் மாடு வளர்ப்பை கடும் சிரமத்துக்குள்ளாக்கியிருப்பதாகக் கூறுகிறார் கோதுலே. ஃபட்னாவிஸ், மாட்டிறைச்சித் தடையை அமலாக்கும்போது, பயன்தராத மாடுகளின் மீதான செலவினங்களைக் குறைக்கும் விதமாக அவற்றுக்கான காப்பிடம் உருவாக்கப்படும் என உறுதியளித்தார். அது நிறைவேற்றப் படாததால், கால்நடைகளை விற்று பணமாக்க முடியாதது மட்டுமின்றி, பயன்தராத விலங்குகளுடன் தளையிடப்பட்டு இரட்டைச் சுமைக்கு ஆளானார்கள் விவசாயிகள்.
“ஒரு மாட்டுக்கு, தீவனத்துக்கும் தண்ணிக்குமா வாரத்துக்கு ஆயிரம் ரூவா செலவாகுது. எங்க பிள்ள குட்டிகளுக்கே சரியான சாப்பாடு குடுக்க முடியாதப்ப, வயசான மாடுகள நாங்க எப்புடி பராமரிக்க முடியும்” என்று கேட்கிறார் கோதுலே.
கிராமப்புறப் பொருளாதாரத்தின் அங்கமாக இருக்கும் தலித்துக்களான தோல் தொழிலாளர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்கள், இறைச்சி வியாபாரிகள், எலும்பிலிருந்து மருந்து தயாரிப்பவர்கள் போன்றோரும் மாட்டிறைச்சித்தடை எனும் இந்த சட்டத்தால் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள்.
தடைக்கு முன்னர், மகாராஷ்டிராவில் ஆண்டுக்கு ஏறத்தாழ 3,00,000 காளைகள் இறைச்சிக்காக வெட்டப்பட்டு வந்தன. தற்போது அனைத்து வெட்டுக்கூடங்களும் வேலையிழந்து, ஒட்டு மொத்த சமூகமும் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கிறது.
கால்நடைகளை வெட்டுதல் மற்றும் கால்நடை வியாபாரத்தில் பாரம்பரியமாக ஈடுபட்டுள்ள குரேஷி என்ற சாதியைச் சார்ந்த சுமார் 10,000 முஸ்லிம்கள் வசிக்கும் சில்லக்கானாவில் இந்த பாதிப்பு கண்கூடாகத் தெரிகிறது. தன்னுடைய தொழிலாளர்கள் சிலரை வேலையிலிருந்து நிறுத்தி விட்டார் கறிக்கடை உரிமையாளர் க்வலீம். “நானும் என் குடும்பத்துக்கு சாப்பாடு போட வேண்டியிருக்கு; வேறென்ன செய்யிறது?” என்று கேட்கிறார்.
“ஒரு நாளைக்கு 500 ரூவாயாவது சம்பாதிச்சுட்டிருந்தேன். இப்ப கெடச்ச வேலையச் செய்யிறேன். வருமானத்துக்கு உத்தரவாதமில்ல. வேலையே இல்லாத நாட்களும் இருக்கு” என்கிறார் அனீஸ் குரேஷி (41).
அதிகரித்து வரும் விவசாய நெருக்கடியின் காரணமாக மாட்டிறைச்சித்தடைக்கு முன்னரே இறைச்சி வியாபாரம் பாதிக்கப்பட்டிருந்தது. வேலை தேடி கிராமப்புற மக்கள் பெருமளவில் இடம்பெயர்ந்து கொண்டிருந்தனர். இதன் காரணமாக உள்ளூரில் மாட்டிறைச்சியின் நுகர்வு கணிசமாகக் குறைந்து விட்டது என்கிறார் க்வலீம்.
கொள்ளுத்தாத்தாவின் காலம் முதல் இந்தக் கறிக்கடை தான் க்வலீமின் ஒரே சொத்து, ஒரே தொழில். “வேறு வேலைக்கு மாறிக்கிற அளவுக்கு எங்கள் சமூகத்துக்கு படிப்பறிவு இல்ல. இப்ப நாங்க எருமை மாட்டுக் கறிய விக்கிறோம். அது மக்களுக்கு அவ்வளவா பிடிக்கல. அது மட்டுமில்ல, மத்த இறைச்சிப் பொருட்களோட போட்டியும் கடுமையா இருக்கு” என்கிறார்.
குரேஷிகள் மற்றும் தலித் உள்ளிட்ட மற்ற சமூகத்தினரது உணவிலும் மாட்டிறைச்சி முக்கிய பங்கு வகிக்கிறது. அது ஒப்பீட்டளவில் மலிவான புரதமாகவும் உள்ளது. “மாட்டுக்கறிக்கு பதிலா கோழிக்கறி அல்லது ஆட்டுக்கறின்னா மூணு மடங்கு செலவாகும்” என்கிறார் க்வலீம்.
அதுல் சந்தையிலிருந்து புன்னகையுடன் வீடு திரும்பியவர்கள் வெகு சிலரே. அவர்களில் தன் மாடுகளுக்கு கொம்பு சீவிய கீதேயும் ஒருவர். அவரது மாடுகளை வாங்க விவசாயி ஒருவரை அவர் பிடித்து விட்டார். தியான்தியோ கோரே என்ற இன்னொரு விவசாயி அவரைப் பொறாமையுடன் பார்க்கிறார்.
கோரே தனது காளையுடன் அதுல் சந்தைக்கு 7 கி.மீ. தூரம் நடந்தே வந்திருக்கிறார். அதுதான் அவரிடம் இருந்த 7 மாடுகளில் இன்று மிச்சமிருப்பது. மற்ற ஆறும் விற்றாகிவிட்டது. இதுதான் கடைசி மாடு.
ஆறு லட்சமாய் இருந்த அவரது கடன், 5 வருடங்களில் பன்மடங்காக பெருகி விட்டது. இந்த மாட்டை விற்றால்தான் அடுத்த பருவத்துக்கு அவர் பயிர் வைக்க முடியும். “இயற்கை எங்களுக்கு ஆதரவா இல்ல. அரசாங்கமும் எங்களுக்கு ஆதரவா இல்ல. பணக்காரன் யாரும் தற்கொலை செஞ்சுக்கிறது இல்ல. என்னப்போல கடன்பட்ட விவசாயிகதான் தற்கொலை பண்ணிக்கிறோம். எனக்குத் தெரிஞ்சி, தன் பிள்ளை விவசாயியா இருக்கணும்னு நெனக்கிற ஒரு விவசாயியைக் கூட நான் பார்த்ததில்லை” என்கிறார் கோரே.
மாட்டை வண்டியில் கொண்டு செல்ல அவரிடம் பணமில்லை. கொதிக்கும் 113 டிகிரி வெயிலில், 60 வயதில், ஒரு சந்தையிலிருந்து இன்னொன்றுக்கு சந்தைக்கு தனது மாட்டுடன் நடந்தே போகிறார் கோரே என்ற அந்த 60 வயது விவசாயி. “இன்னிக்கு விக்க முடியாட்டி, வியாழக்கிழமை வேறொரு சந்தைக்கு போவேன்” என்றார் கோரே.
“அந்த சந்தை இங்கிருந்து எத்தனை தூரம்?” என்று கேட்டேன்.
“30 கிலோ மீட்டர்” என்று பதிலளிக்கிறார் கோரே.
People’s Archive of Rural India இணைய தளத்தில் ஜூன் 1 ஆம் தேதியன்று வெளியிடப்பட்டிருக்கும் Not quite a cash cow என்ற Parth.M.N எழுதியுள்ள கட்டுரையின் தமிழாக்கம்.
தமிழாக்கம் : சங்கரி
***
தலித் சமூகத்தை சேர்ந்தவங்க …தாக்கப்படும் போதும்,கொல்லப்படும் போதும்,அவர்களின் குடியிருப்புகள் தீ வைத்து அழிக்கப்படும் போதும் அமைதியா வேடிக்கை பார்த்துகிட்டு இப்ப தலித் சமூகத்தை சேர்ந்தவரை குடியரசு கேன்டிடேட் ஆக நிறுத்தி இருப்பது எப்படி இருக்குனா…ஒரு குடும்பத்த உசுரோட கொளுத்தி புட்டு…அவன் குடும்ப தலைவனுக்கு சிலை வைக்கற மாதிரி இருக்கு இவிங்க டிராமா……ஆனா நீங்க எல்லாம் நிமிசத்துக்கு ஒரு போஸ்ட் அவர் தலித் இனத்தவர்னு போட்டு போட்டு….நாளைக்கே அவர் குடியறசு தலைவர் ஆனாலும் கூட அவருடைய மற்ற நல்ல பின்புலம் எதாச்சும் இருந்தா கூட அதை வெளிக்கொனறாது…அவர் தலித் இனத்தவர் என்ற ஒரு கருத்தை மட்டும் மக்கள் மனசில் பதித்த எல்லா நல்ல ஆர் எஸ் எஸ் உள்ளங்களுக்கும் நன்றி…….எப்படி எடியூரப்பா ஹோட்டல்ல வாங்கிட்டுப் போய் தலித் வீட்ல உக்காந்து சாப்டேனு போஸ்டர் அடிச்சி ஒட்டினாரோ…எப்படி செத்துப்போன நந்தினி வீட்ல உக்காந்து பொன்னர் மீன் வருவல் சாப்டு ஆறுதல் சொன்னாரோ அது மாதிரி தான் இருக்கு உங்க குடியரசு தலைவர் கேன்டிடேட் அனோன்ஸ்மென்ட்
Arun Santhosh
***
Prabakar Kappikulam
***
மோடி-அமித்ஷா குடுமி சும்மா ஆடாது…
பிஜேபியின் ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த், உபியில் தலித் பிரிவில் வரும் கோரி (Kori) என்னும் நெசவு சாதியை சேர்ந்தவர்.. இந்த சாதியானது, குஜராத்தில் கோலி (Koli) எனப்படும் OBC பிரிவில் வருகிறது.. அங்குள்ள மக்கள் தொகையில் 20% இந்த கோலி பிரிவு மக்கள் தான்.. வட இந்தியாவில் கோரி, கோலி என பல பெயர்களில் இந்த சாதியினர் உள்ளனர்.. மாநிலத்துக்கு மாநிலம் SC, OBC என பட்டியல் மாறும்..
பல ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சியில் இருபதாலும், படேல் பிரிவின் கோபத்தாலும், சில மாதங்களில் நடைபெறும் குஜராத் சட்டமன்ற தேர்தலில் பிஜேபிக்கு கடுமையான சவால் உள்ளது.. இந்நிலையில் கோலி பிரிவினரின் வாக்குகளை கவரவே, ராம்நாத் கோவிந்த்தை ஜனாதிபதி வேட்ப்பாளராக அறிவித்துள்ளது மோடி-அமித்ஷா ஜோடி.. அகில இந்திய கோலி சாமாஜ்ஜின் (Akhil Bhartiya koli Samaj) தலைவர் யார் தெரியும்மா?? இந்த ராம்நாத் கோவிந்த்தான்.. (A lawyer by profession, Kovind had also been BJP Scheduled Caste Morcha chief (1998-2002) and President of the All-India Koli Samaj.)..
சரி, பிரணாப் முகர்ஜியை ஜனாதிபதியாகியதால், பிராமணர்கள் ஓட்டு காங்கிரஸ்சுக்கு வந்ததா?? பிரதீபா படேலை ஜனாதிபதியாகியதால் படேல் சாதி ஓட்டு காங்கிரஸ்சுக்கு வந்ததா?? அல்லது முதன் முதலாக தலித் ஒருவரை, K.R. நாராயணனை ஜனாதிபதியாகியதால், எல்லா தலித் ஓட்டுகளும் காங்கிரஸ்சுக்கு வந்ததா??
அப்துல் கலாமை குடியரசுத் தலைவர் ஆக்கியதால், இசுலாமியர் மீது நஞ்சு கக்குவதை பிஜேபி RSS நிறுத்தி விட்டார்களா?..
இதெல்லாம் வெறும் அடையாள பதவிகள் தானே..
அதிகாரம் இல்லா #பதவி அது .. ஒன்னும் செய்ய முடியாம அப்பேற்பட்ட Missile man அப்துல் காலம் ஐயாவே வெறும் கனவு மட்டுமே காண வைச்ச பதவி .. இந்த பஞ்சு மிட்டாய் லுலாயி எல்லாம் வேணாம் ..
பவர் புள் மத்திய மந்திரியாக ராஜாவை #திமுக செய்து அழகு பார்த்தது .. மகாராஷ்டிரா முதல் மந்திரியாக ஷிண்டவை #காங்கிரஸ் அமர்த்தி பெருமை சேர்த்தது .. இத மாதிரி அதிகாரத்தை அவர்கள் கையில் கொடுக்க முடியுமா முடியாதா ..
போடுறது லெப்ட்ல வெமுலாவை ., ரைட்ல கோவிந்த வுக்கு ரப்பர் ஸ்டாம்ப் போஸ்ட் .. இதிலே எங்களை மாதிரி உண்டா ன்னு ஓவர் சவுண்ட் வேற ..
ரொம்ப ஓல்ட் ஸ்டைல் பாலிடிக்ஸ் #bjp #rss .. போங்க போய் எல்லா இந்தியர்கள் கணக்கில் 100 kilos தங்க கட்டி போடறேன் ., காவேரியை டைரக்ட் ஆ பைப் மூலம் வீட்டு குழாய்க்கு கொண்டு வரேன் .. வித்தியாசமா ட்ரைன்னு பண்ணுங்க
நாட்டின் முதல் குடிமகனாக தேர்ந்தெடுக்கப் படபோறவர் என்ன சாதி என்பது தான் தகுதியா ????
ரப்பர் ஸ்டாம்பா வர என்ன தகுதி வேணும்….
குறிப்பு: அவரின் ஜாதி சில மாநிலத்தில் SC பிரிவிலும் சில மாநிலத்தில் BC பிரிவிலும் வருதாம்….
***
இப்படித்தான் ராம்னாத் சாலையில் செல்லும் போது…
ஒரு முறை மோடி அழைக்கும் போது…
இப்படி பல கதைகள் வரும்!!! எஞ்சாய் மக்களே!!!
***
Manoj Savarimuthuraj….ன் பதிவு… (ஆதாரத்துக்கு 26.03.2010 ல் Hindustan Times நாளிதழ் செய்தியோட லிங்க் முதல் கமெண்ட்ல போட்டிருக்கு)
யாரை குடியரசு தலைவராக பெறப் போகிறோம் ?
கடந்த 2009-ல் நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிட்டி , சமூக ,பொருளாதார நிலையில் பின் தங்கிய சிறுபான்மையினருக்கு ( முஸ்லீம் 10 + இதர பிரிவு 5) வேலைவாய்ப்பில் 15% இடஒதுக்கீடு வழங்கலாம் என பரிந்துரைக்கிறது. அது குறித்த கேள்வியை அப்போதுதான் புதிதாக பா.ஜ.க.வின் செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்ட ராம்நாத் கோவிந்தாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
அதற்கு அவர் கூறியது
” என்னது இட ஒதுக்கீடா , முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும் ஏலியன்கள். ரங்கநாத் மிஸ்ரா குழு பரிந்துரைகளை உடனடியாக நீக்க வேண்டும் ” என்றார்..
“சார், ரொம்ப பின் தங்கி இருந்தா கொடுக்கலாமே ” என மீண்டும் வினவ ,
“முஸ்லீம்களையும், கிறிஸ்தவர்களையும் சிறுபான்மையினர் என சொல்வது அரசியலமைப்புக்கு எதிரானது” என்றார்.
அப்போ , சீக்கிய தலித்துகளுக்கு மட்டும் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறதே என கேட்ட பொழுது ” ஏலியன்களுக்கு இட ஒதுக்கீடு ஏன் ? என்றார்…
செய்தி ஆதாரம் : Islam, Christianity alien, so cannot get quota: BJP
***
செயல் கோலம் போட்டுட்டு இருக்காராம்.. கோயிந்து ஜனாதிபதி ஆகிட்டாராம்..
காவி பாய்ஸ்..
எதுக்கும் எதுக்கும் கம்பேர் பண்றதுன்னு கூட அறிவில்லாம இருக்கிறீங்க சரி…
செயல் கோலமாவது போடுறார்..
ஆனா அத்வானி கையில கோல மாவு கூட இல்லாம குச்சியை கையில் பிடிச்சிட்டு நிக்கிறாரே.. வெக்கமா இல்லையா?
***
தலித் என்பவர் யார்?
படித்து, பட்டம் பெற்றவுடன் தன் மக்களை விட்டு தூரமாகச் சென்று சாதி அடையாளத்தை மறைத்து வாழ்பவர் தலித்தாக இருக்கலாம் பிறப்பால். ஆனால் தன் அடையாளங்களை மறைத்து, மூன்றாம் தர பார்ப்பனன் போல் வாழ நினைப்பவர் எப்படி தலித்தாக முடியும்?
அந்த வகையில் ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த், பிறப்பால் தலித்தாக இருந்தாலும் அவர் தலித்தே அல்ல. எந்த இந்து மதம் அவரை தலித், தீண்டதகாதவன் என முத்திரை குத்தி தனியே ஒதுக்கி வைத்து கல்வி, அரசியல், பொருளாதரம் என எதிலும் இடம் கொடுக்கமால் ஒதுக்கி வைத்ததோ, அந்த இந்துமதத்தின் வாலைப் பிடித்து தொங்கி, தன்னை நிரூபித்துக்கொண்டிருக்கும் அவர் ஒரு போதும் தலித்தாக வாழ முடியாது…தலித்தாக இருக்க முடியாது.
ஆகையால் பாஜக செய்யும் சாதி அரசியலுக்கு பலியாகமல் இருப்பதே உத்தமம்.
***
ஜனாதிபதி, ஆளுநர் பதவிகள் என்பது மன்னராட்சியின் நீட்சியே. மக்களாட்சியில்(?) மன்னர்களுக்கு என்ன வேலை? விருது கொடுப்பதும், பதவிப்பிரமாணம் செய்துவைப்பதை தவிர நாட்டிற்கு எந்த விதத்திலும் பிரயோஜனம் இல்லை.
ஆனால் ஒருவருக்கு மட்டும் மிக மிக நன்மை. அது வேறு யாருமல்ல அந்த ஜனாதிபதி தான்.
இதே பிஜேபி தான் அப்துல்கலாமையும் ஜனாதிபதி ஆக்கினார்கள். நாட்டிற்கு ஏதாவது நல்லது நடந்ததா..? சோனியாவை பதவிக்கு வராமல் நிறுத்தி வைத்தார். சோனியா மன்மோகன் என்ற பொம்மையை வைத்து ஆண்டார். சிறுபான்மையினர் வாழ்வில் ஏதேனும் மாற்றம் நிகழ்ந்ததா..
இப்போது ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவரை ஜனாதிபதி ஆக்கப்போகிறார்கள். இங்கே பிரதமரே கார்பொரேட் பொம்மை தான் எனும்போது ஜனாதிபதி யார் வந்தால் என்ன? ஒரு மாற்றமும் நடந்துவிட போவதில்லை. வெட்டிப் பெருமையை தலித்துகள் கேட்கவில்லை. குறைந்தபட்ச சமூக நீதியை தான் கேட்கிறார்கள். அதற்கே நிறைய போராட வேண்டியிருக்கிறது.
ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த கவுன்சிலரினால் கூட சிறு மாற்றம் நிகழ வாய்ப்பிருக்கிறது. ஆகவே பொம்மை அதிகாரத்தை விட உண்மை அதிகாரம் தான் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தேவை.
***
அன்று பாபாசாஹிப் அம்பேத்கரை வீழ்த்துவதற்காக, காங்கிரஸ் கட்சியின் வலதுசாரிகள் கண்டெடுத்தது பீஹாரிலிருந்து பாபுஜி ஜெகஜீவன் ராம்!
இன்று அதே நோக்கத்திற்காக, அதே சக்திகள், அதே பீஹாரிலிருந்து ராம்நாத் கோவிந்த்!
***
நீங்கள் தலித்தா பார்பனரா என்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். உங்கள் எஜமானன் யார், நீங்கள் யாருக்கு விசுவாசமாக இருப்பீர்கள் என்பதுதானே கேள்வி.
கே.ஆர் நாராயணன் என்கிற தலித் சமுதாயத்தை சேர்ந்த ஒருவரை ஜனாதிபதி ஆக்கிய காங்கிரஸ் கட்சி நாங்கள் தலித்தை ஜனாதிபதி ஆக்கிவிட்டோம் என்று பீற்றித் திரியவில்லை. தலித் சமுதாயத்தை சேர்ந்த கே.ஆர் நாராயணன் ஜனாதிபதி ஆனதால் தலித் சமுதாயத்தின் இன்னல்கள் நீங்கவும் இல்லை. அவர்களின் துயரம் இன்றளவும் நீடிக்கவே செய்கிறது.
அப்துல் கலாம் என்கிற ஒரு முஸ்லிமை ஜனாதிபதி ஆக்கியதால் முஸ்லிம் சமுதாயத்தின் எந்த இன்னலும் இதுவரை நீங்கியதே இல்லை. இன்னல்கள் நீங்காதது ஒரு புறமிருந்தாலும் பாபர் மஸ்ஜித் போன்ற முஸ்லிம்களின் உரிமைக்காக ஒரு ஜனாதிபதி பதவியில் இருந்தவரால் கூட குரல் எழுப்ப முடியவில்லை.
இதனால்தான் ஜனாதிபதி பதவி என்பது ஒரு ரப்பர் ஸ்டாம்ப் பதவி என்று பலரும் விமர்சிக்கின்றனர். பாஜக-வினர் கூட இந்த ரப்பர் ஸ்டாம்ப் என்கிற விமர்சனத்தை செய்தவர்கள் தான்.
எதார்த்தம் இப்படியிருக்க ராம்நாத் கோவிந்த் என்கிற தலித் ஜனாதிபதி ஆகிவிட்டால் தலித் சமுதாயத்தினரின் வாழ்வு வளமாகிவிடும் என்று டவுசர் வாலாக்கள் அள்ளி விடுவதெல்லாம் தார்ப்பாயில் வடிகட்டிய பொய். இதை தலித் சமுதாயம் நம்ப போவதில்லை. அப்படி நம்பினால் அவர்களை விட ஏமாளிகள் இங்கே வேறு யாரும் இல்ல

கருவுற்ற பெண்கள் இறைச்சி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று மோடியின் ஆயுஷ் அமைச்சகத்தின் சமீபத்திய அறிக்கை அறிவுறுத்துகிறது. ஆன்மிகச் சிந்தனைகளை வளர்ப்பதும் நல்ல படங்களை அறையில் மாட்டுவதும் நலமிக்க குழந்தைகளை பெறுவதற்கு அவசியமாகும் என்றும் கூறியிருக்கிறது.
ஆயுஷ் அமைச்சரவையின் கீழ் யோகா மற்றும் இயற்கை மருத்துவ ஆராய்ச்சி மையம் (CCRYN) இந்த அறிவுறுத்தல்களை மைய அரசின் நிதியுதவியுடன் கையேடாக தொகுத்து வெளியிட்டுள்ளது.
மேலும் “கருத்தரித்த பெண்கள் [தாமச உணர்ச்சிகளான] ஆசை, கோபம், ஈர்ப்பு, வெறுப்பு, காமம் ஆகிய உணர்ச்சிகளில் இருந்து தங்களை துண்டித்துக் கொள்ள வேண்டும்…” என்று கையேட்டின் 14 ஆம் பக்கத்தின் ஒரு பத்தியில் எழுதப்பட்டிருக்கிறது. பாலியல் உணர்ச்சி கூடாது என்று இதைப் பத்திரிகைகள் திரித்துக் கூறியதாக சொல்லி அதற்கு மறுப்பும் ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. பாலியல் உணர்ச்சியை மறுக்கவில்லை என்று சமாளிக்கும் ஆயுஷ் இதர உளறல்களை மறுப்பதற்கு முன்வரவில்லை.
யோகா மற்றும் இயற்கை மருத்துவம் இறைச்சி உணவை பரிந்துரைப்பதில்லை. அதனால் கருத்தரித்த பெண்களும் பால் கொடுக்கும் தாய்மார்களும் இறைச்சி மற்றும் முட்டையை தவிர்த்து சாத்வீக உணவையே உண்ண வேண்டும் என்றும் அந்த கையேடு அறிவுறித்தியிருக்கிறது.
ஆனால் இது அறிவியல் ஆதாரமற்றவை என்கிறார் அப்போலோ மருத்துவ குழுமத்தின் மூத்த மகளிர் மருத்துவரும் மகப்பேறு மருத்துவருமான மாலவிகா சபர்வால். ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் இரத்தசோகை இரண்டும் கருவுற்ற பெண்களை பாதிக்கும் உடல்நலப் பிரச்சனைகள். புரதச்சத்திற்கான மிகச்சிறந்த மூலாதாரங்கள் இறைச்சி உணவுகள். தாவரங்களை விட இறைச்சியிலிருந்து தான் புரதச்சத்துக்கள் விரைவாக உடலால் உறிஞ்சப்படுகிறது என்று மேலும் கூறுகிறார்.
இறைச்சி உட்கொள்ளுவதில் இந்தியாவின் தனிநபர் சராசரி உலகிலேயே இரண்டாவது குறைவான அளவாக 4.4 கிலோவாக மட்டுமே இருக்கிறது. கருத்தரிப்பு தொடர்பான பிரச்சினைகளால் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 44 ஆயிரம் பெண்கள் இந்தியாவில் உயிரிழக்கிறார்கள். பேறுகால இறப்பு விகிதம் 167 ஆகவும் ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் இறப்பு விகிதம் 30 ஆக உலகிலேயே மோசமான ஒன்றாகவும் இருக்கிறது. மனித மேம்பாட்டு குறியீட்டில்(HDI) உலகிலேயே 131 வது இடத்தில் இருக்கும் இந்தியாவின் சராசரி தனிநபர் ஆயுட்காலம் 68.01 ஆண்டுகள் மட்டுமே. பங்களாதேசின் நிலையும் ஏறக்குறைய இதே தான்.
ஆனால் இறைச்சி உணவை அதிகமாக உண்ணும் நாடுகளில் மக்களின் வாழ்க்கைத்தரம் எப்படி பார்ப்பினும் இந்தியாவை விட பன்மடங்கு மேம்பட்டே இருக்கிறது. எடுத்துக்காட்டாக இறைச்சி உட்கொள்ளுவதில் ஆஸ்திரேலியாவின் தனிமனித சராசரி 111.5 கிலோவாக இருக்கிறது. அதே நேரத்தில் பேறுகால இறப்பு விகிதம் வெறும் 6 ஆகவும், ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் இறப்பு விகிதம் 3.8 ஆகவுமே இருக்கிறது. மனித மேம்பாட்டு குறியீட்டில்(HDI) உலகிலேயே இரண்டாவது இடத்தில இருக்கும் ஆஸ்திரேலியாவின் சராசரி தனிநபர் ஆயுட்காலம் 83.1 ஆண்டுகள் ஆகும். ஆஸ்திரேலியா ஒரு முன்னேறிய நாடாக இருப்பதாலும் இது சாத்தியம் எனலாம். ஆனால் அந்த முன்னேற்றம் என்பது இறைச்சி இல்லாமல் இல்லை.
ஆயுஷின் அறிக்கை படி பார்த்தால் மிகக்குறைவான இறைச்சி உண்ணும் இந்தியா தான் உலகிலேயே நலமான குழந்தைகள் பெறுவதில் முன்னணியில் இருக்க வேண்டும். ஆனால் புள்ளிவிவரம் உணர்த்தும் எதார்த்தம் நேர்மாறாக இருக்கிறது. ஏனெனில் இந்தியாவின் சமூகப்பொருளாதாரம் தாமஸ உணவை மட்டுமல்ல சாத்விக உணவையும் பெரும்பாலான ஏழை எளிய மக்களுக்குத் தடை செய்திருக்கிறது.
குறிப்புகள்:
செய்தி ஆதாரம்:
பூனாவில் காக்னிசன்ட் நிறுவனத்தில் பணிபுரியும் ஸ்வப்னா போஸ்லே-யின் வேலை பறிக்கப்பட்ட போது, அவர் அப்போதுதான் தனது 3 வயது குழந்தையை ஒரு மேட்டுக்குடி மழலையர் பள்ளியில் சேர்த்திருந்தார். மாதந்தோறும் குடும்பத்தின் இரண்டு படுக்கையறை வீட்டுக்கான கடன் தவணையை கட்டும் பொறுப்பும் அவருக்கு இருந்தது. இன்னொரு வேலை தேடுவதற்கு அவகாசம் தருமாறு அவர் கெஞ்சியும் அது மறுக்கப்பட்டு, இரண்டு மாத அவகாசத்தில் அவரது வேலை பறிபோனது.
சென்னை விப்ரோவில் வேலை செய்து வந்த பார்வதி சுப்பிரமணியனின் (பெயர் மாற்றப்பட்டது) நிலைமையும் கிட்டத்தட்ட இதே போலத்தான். புதிய புராஜக்டில் சேர்ப்பதற்கு நிறுவன கணினி அனுமதிக்காத நிலையில், ஒரு முக்கியமான இன்டர்வியூ என்று அழைத்து பேசிய எச்.ஆர். அதிகாரிகள், இனிமேல் அவருக்கு விப்ரோவில் இடம் இல்லை என்று அறிவித்தார்கள். “இரண்டு பசங்க ஸ்கூல்ல படிக்கிறாங்க. அவங்க ஸ்கூல் ஃபீஸ் கட்டணும், மத்த பொறுப்புகளும் இருக்கு. என் குடும்பம் இந்த சம்பளத்தை நம்பித்தான் இருக்கு. இந்த வேலை போனா வாழ்க்கையே பிரச்சனையாகி விடும்” என்று கெஞ்சியிருக்கிறார், பார்வதி. அங்கும் கருணை கசியவில்லை; ஒரு எந்திர மனிதனின் இரக்கமற்ற தன்மையோடு ஆட்குறைப்பு அமல்படுத்தப்பட்டது.
நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான ஐ.டி. ஊழியர்கள் இந்நிலையை எதிர்கொள்கிறார்கள். பெங்களூரு ”மின்ட்” என்ற பத்திரிகை நடத்திய ஆய்வில் இன்ஃபோசிஸ், விப்ரோ, எச்.சி.எல்., டெக் மகிந்த்ரா, காக்னிசன்ட், கேப்ஜெமினி, டி.எக்ஸ்.சி. ஆகிய 7 முன்னணி ஐ.டி. நிறுவனங்கள் இந்த ஆண்டு 56,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளன என்று தெரிய வந்தது. ஹெட் ஹன்டர்ஸ் (Head Hunters) என்ற வேலைக்கு ஆள் அமர்த்தும் நிறுவனம், ஐ.டி. துறையில் அடுத்த 3 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் 2 இலட்சம் பேர் வேலை இழப்பார்கள் என்று கணித்துள்ளது. இவ்வாறாக, 40 இலட்சம் ஊழியர்களை வேலைக்கு அமர்த்தி, அந்நியச் செலாவணியை ஈட்டி, இந்தியப் பொருளாதார வளர்ச்சியின் என்ஜினாகக் கருதப்பட்ட இந்திய ஐ.டி. துறை பனிப்பாறையில் மோதி, மூழ்கிப் போகும் அபாயத்தில் சிக்கிக்கொண்டிருக்கிறது.
25 வயது இளைஞர்களும், 40 வயது ‘முதியவர்’களும் தமது கனவு மயக்கத்திலிருந்து முரட்டுத்தனமாக எழுப்பப்பட்டிருக்கிறார்கள். “என் வேலை, என் உழைப்பு, என் அப்ரைசல்” என்று இருந்தால், “என் சம்பாத்தியம், என் குடும்பம், என் எதிர்காலம்” என்று மேலே மேலே பறக்கலாம் என வாக்களிக்கப்பட்ட சொர்க்கத்திலிருந்து தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

ஹைதராபாத்-விப்ரோவில் வேலை செய்யும் நாகேஸ்வர் ரெட்டிக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 15 ஆண்டு கால பணி வாழ்க்கைக்குப் பிறகு, “திறம்படப் பணியாற்றாதவர்” (under performer) என்று முத்திரை குத்தியிருக்கிறார்கள். அதன் அடிப்படையில் அவரைப் பணிவிலகல் கடிதம் கொடுக்கும்படி கட்டாயப்படுத்துகிறார்கள். “குறிப்பான காரணம் எதுவும் இல்லை, நிர்வாகம் செலவுகளைக் குறைக்க போட்ட திட்டத்தில் உங்கள் பெயரும் சேர்ந்திருக்கிறது” என்றிருக்கிறார் அவரது மேலாளர்.
“ஐ.டி. துறை நண்பா, உனக்கு ரோசம் வேணும்டா!” என்று வினவு தளத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய போது, “ரோசம் எல்லாம் வேண்டாம், ரொக்கம் போதும்” என்று பணிப்பாதுகாப்பு, தொழிற்சங்க உரிமை ஆகியவற்றை அலட்சியப்படுத்தினார்கள் பல ஐ.டி. ஊழியர்கள். இன்று தொழில் தகராறு சட்டம் 1947-இன் ஷரத்துகளைத் தேடித்தேடிப் படிக்கிறார்கள். தொழிற்சங்கம் அமைப்பதற்கு என்ன விதிமுறை என்று கேட்டுத் தெரிந்து கொள்கிறார்கள். “அவமானப்படுத்தி விட்டார்கள்” என்று கொதிக்கிறார், ஒருவர்; ”இத்தனை ஆண்டுகள் வேலை வாங்கிய பிறகு, திடீரென்று நான் திறமை இல்லாதவன் என்று கண்டு பிடித்தீர்களா?” என்று பொங்குகிறார், இன்னொருவர்.
”ஆட்குறைப்பே இல்லையே, ஒரு சில திறமை இல்லாதவர்கள் வெளியேறுகிறார்கள். இது வழக்கமாக நடப்பதுதான்” என்று ஐ.டி. நிறுவனங்களும், அவர்களது கூட்டமைப்பான நாஸ்காமும் எழுதிக் கொடுத்ததை வாசிக்கிறார் மோடியின் ஐ.டி. துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத். “சங்கராச்சாரி கொல்லவில்லை என்றால், சங்கரராமனைக் கொன்றது யார்?” என்று கலங்கும் பக்த கோடிகளைப் போல, “ஆட்குறைப்பே நடக்கவில்லை என்றால், இவ்வளவு பேர் எப்படி வேலை இழந்தார்கள்?” எனக் குழம்புகிறார்கள், ஐ.டி. ஊழியர்கள்.
ஐ.டி. துறை கனவில், “1990-களுக்குப் பிந்தைய ‘வளர்ச்சி’ வண்டியில் நமக்குத்தான் இடம் கிடைக்கவில்லை. நமது பிள்ளைகளாவது படித்துக் கை நிறைய சம்பளம், ஏ.சி. அலுவலக வேலை, அமெரிக்கப் பயணம் என முன்னேறி விட வேண்டும்” என்று சொத்தை விற்று, கடன் வாங்கி பொறியியல் படிக்க வைத்த உழைக்கும் வர்க்கப் பெற்றோர் கதிகலங்கி நிற்கிறார்கள். ஒரு ஆண்டுக்கு 12 இலட்சம் பேர் என்ற வீதத்தில் வெளிவரும் பொறியியல் பட்டதாரிகள், ஐ.டி. நிறுவனங்கள் உருவாக்கும் 1.5 இலட்சத்துக்கும் குறைவான வேலைவாய்ப்புகளை மொய்க்கிறார்கள்.
பொறியியல் அல்லாத பட்டதாரிகளையும் சேர்த்து ஆண்டுக்கு 60 இலட்சம் பேர் இந்திய உழைப்புச் சந்தையில் சேர்கிறார்கள். இந்த உபரி பட்டாளத்தைப் பயன்படுத்தி அதிக சம்பளம் வாங்கும் பழைய ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, அடிமாட்டு விலையில் ஒப்பந்த ஊழியர்களாகப் புதிய பட்டதாரிகளை அமர்த்திக் கொள்கின்றன ஐ.டி. நிறுவனங்கள். மற்ற தொழில்துறைகளில் நடப்பதைப் போல, சம்பளமே இல்லாமலோ அல்லது மிகக் குறைந்த உதவித்தொகை கொடுத்தோ பல்வேறு பெயர்களில் இளம் பட்டதாரிகளை பணியமர்த்திக் கொள்ளும் போக்கும் ஐ.டி. துறையில் வளரத் தொடங்கி விட்டது.
இதற்கெல்லாம் காரணம் ஆட்டோமேஷன், “அமெரிக்க வேலை வாய்ப்பு அமெரிக்கர்களுக்கே” என அமெரிக்க அதிபர் டிரம்ப் முழங்குவது, எச்-1பி விசா நடைமுறைகளை இறுக்கமாக்கியது என்று சொல்கின்றனர் முதலாளித்துவ அறிஞர்கள். ஆனால், ஆட்டோமேஷனுக்கும், அமெரிக்க அரசியலுக்கும் அடிக்கொள்ளியாக இருந்து இயக்குவது நிதி மூலதன இரத்தக் காட்டேறியின் அடங்காத இலாப வேட்கை.
உதாரணமாக, 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1500 கோடி டாலர் கொடுத்து 4% காக்னிசன்ட் பங்குகளை வாங்கிய எலியட் மேனேஜ்மென்ட் என்ற நிதி மூலதன நிறுவனம் காக்னிசன்டின் இலாப வீதம் போதாது என்று கண்டிப்புக் காட்டியிருக்கிறது. மொத்த இலாபத்தை 18.5%-லிருந்து 21% ஆக உயர்த்த வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது. அதை ஏற்று எலியட்-உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டிருக்கிறது காக்னிசன்ட். நேற்று வந்த எலியட்டின் உத்தரவு, 15 ஆண்டுகளாக உழைத்த ஊழியரின் நலனை வென்று விட்டது. அதன்படி ஆட்குறைப்பு, தலை வெட்டு நடந்து கொண்டிருக்கிறது.
25 ஆண்டுகளுக்கு முன்பு அதிக சம்பளம் வாங்கிய அமெரிக்க ஊழியர்களைத் தூக்கி விட்டு அந்த வேலைக்கு இந்திய ஊழியர்களை அமர்த்தி இலாபம் சம்பாதித்த முதலாளிகள், இன்றைக்கு இந்திய ஊழியர்களைத் தூக்கி விட்டு, அதைவிடக் குறைந்த செலவில் வேலையை செய்து வாங்க எந்திரங்களைப் பயன்படுத்த ஆரம்பிக்கிறார்கள். “எந்திரங்களுக்குத் தூக்கம் வராது, அரட்டை அடிக்காது, தம் அடிக்க நடுநடுவே வெளியில் போகாது, மகப்பேறு விடுப்பு எடுக்காது, நிர்வாகத்துடன் வாதம் புரியாது” என்று பல ஆதாயங்கள் இருக்கின்றன.
மனிதர்கள் செய்யும் வேலையை எந்திரங்களால் செய்விக்க முடியாத இடத்தில் மட்டும்தான் மனிதர்களுக்கு இடம் என்பது முதலாளித்துவ உற்பத்தி முறையின் விதி. வேலை செய்வதற்கான திறமையும், விருப்பமும் இருந்தும் இலாபம் ஈட்டுவதற்குத் தேவைப்படாத காரணத்தினால் ஊழியர்கள் ஆட்குறைப்பு செய்யப்படுகிறார்கள்.
அப்படி மனிதர்களின் இடத்தில் எந்திரங்களை அமர்த்திக் கொண்டே போவதால், உற்பத்தி செய்யப்படும் பொருட்களையும் சேவைகளையும் நுகர்வதற்கு ஆளில்லாமல் சந்தை சுருங்குகிறது. இந்த முரண்பாடு தோற்றுவிக்கும் நெருக்கடி முற்றிப்போய் மீளமுடியாத சிக்கலில் சிக்கியிருக்கிறது முதலாளித்துவம். நானோ தொழில்நுட்பம், கிளவுட் தொழில்நுட்பம், செயற்கை அறிவு தொழில்நுட்பம், விண்வெளிப் பயணம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சூரிய எரிசக்தி தொழில்நுட்பம் இவற்றின் மூலம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று தனக்குத் தானே தைரியம் சொல்லிக் கொள்கிறது.
ஆனால், வேலை கொடுப்பதல்ல; இலாபம் ஈட்டுவதே மூலதனத்தின் நோக்கம். இந்நிலையில் “என் வேலை, என் வாழ்க்கை” என்று சிந்திப்பதிலிருந்து, “நம் வேலை, நம் வாழ்க்கை” என்று சிந்திப்பதும், “நம் மக்கள், நம் நாடு” என்று அனைத்துத் தரப்பு உழைக்கும் மக்களின் போராட்டத்தில் தங்களை இணைத்துக் கொள்வதும் தவிர்க்க முடியாதது என்பதை ஐ.டி. துறை ஊழியர்கள் உணரவேண்டும்.
– சாக்கியன்
**********
பெட்டிச் செய்தி : நெருக்கடி தற்காலிகமானதா?
இந்த நெருக்கடி தற்காலிகமானதா அல்லது திரும்பிப் போகமுடியாத மாற்றமா என்பதுதான் கேள்வி.
இந்திய ஐ.டி. நிறுவனங்கள் மேற்கத்திய நிறுவனங்களுக்கான கணினி உள்கட்டமைப்பு பணிகளை, அயல்பணி சேவை மூலம் செய்து வருகின்றன. அத்தகைய பணிகளைச் செய்து கொடுப்பதற்குத் தேவையான நிறுவனக் கட்டுமானங்களை இங்கே உருவாக்கி, மேற்கத்திய ஊழியர்களைவிடக் குறைந்த சம்பளத்தில் ஆள் அமர்த்துவதன் மூலம் இலாபமீட்டுகின்றன.
இந்நிலையில் 2008 பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து வாடிக்கையாளர்களின் செலவுக் குறைப்பு நடவடிக்கைகள், சேவை நிறுவனங்களுக்கிடையேயான கழுத்தறுப்பு போட்டி, அரசியல் மாற்றங்கள், இவற்றோடு தொழில்நுட்ப மாற்றங்களும் இணைந்து ஐ.டி. நிறுவனங்கள் அனுபவித்து வந்த அதீத வளர்ச்சிக்கும், பெருவீத இலாபமீட்டலுக்கும் முடிவு கட்டியிருக்கின்றன.
காகிதக் கோப்புகள், அவற்றை வைப்பதற்கான அறைகள், அதனைப் பராமரிப்பதற்கான பணியாட்கள், குமாஸ்தாக்கள் என்ற பழைய அலுவலக கட்டுமான முறையை கணினிமயமாக்கம் மாற்றியமைத்தது, அன்று. இன்று, கணினித்துறைக்குள்ளேயே நிகழ்ந்துவரும் கிளவுட் கம்ப்யூட்டிங் என்ற கட்டுமான மாற்றம், நிறுவனங்களின் கணினிக் கட்டமைப்பு, பராமரிப்பு சார்ந்த பணிகளைப் பெருமளவில் குறைத்துள்ளது.
அதேபோல, முன்னர் மற்ற தொழில்துறை உற்பத்தி செயல்பாடுகளைக் கணினி தொழில்நுட்பமும் கணினி ஊழியர்களும் தானிமயமாக்கினர் (automated). இப்போது கணினித்துறை தன்னைத்தானே தானிமயமாக்கிக் கொள்கிறது. மென்பொருள் சோதனை, வாடிக்கையாளர் சேவை போன்ற மனிதத் தலையீடு அதிகம் தேவைப்படும் பணிகள் மென்பொருள்களால் இயங்கும்படி தானிமயக்கமாக்கப்பட்டு விட்டன. மேலும் தன்னைத்தானே கண்காணித்துக் கொள்ளவும், தனக்குத்தானே பழுது நீக்கிக்கொள்ளவுமான ஆற்றலைக் கணினிகளுக்கு வழங்கும் செயற்கை அறிவு தொழில்நுட்பம் (artificial intelligence), நிரல் எழுதுதல், மென்பொருள் வடிவமைப்பு போன்ற பணிகளையும் தானிமயக்கமாக்குகின்றது.
அதாவது, இதுநாள்வரை இலட்சக்கணக்கான ஊழியர்கள் தமது அறிவுத்திறன் கொண்டு செய்த பணிகளில் பலவற்றை எந்திரம் உள்வாங்கிக் கொண்டுள்ளது. பணிகளைத் தொகுத்தும் பகுத்தும் பார்க்கின்ற ஆற்றலையும் கணினி தொழில்நுட்பம் பெற்றுவருவதால், கணினிகளை இயக்குவதற்கு தனியே ஊழியர்கள் தேவையில்லை என்ற நிலை உருவாகி வருகிறது.
உள் கட்டுமானங்களின் தேவையை கிளவுட் கம்ப்யூட்டிங் குறைத்திருக்கிறது என்றால், ஊழியர்களின் தேவையை ஆட்டோமேசன் குறைத்து வருகிறது. இது திரும்பிப் போக முடியாத மாற்றம்.
**********