Friday, June 19, 2026
முகப்பு பதிவு பக்கம் 530

இந்திய நீதிமன்றம் அந்நிய முதலீட்டாளர்களின் கைக்கூலிப்படையா ?

2

மாருதி தொழிலாளர்களுக்கு எதிரான கிரிமினல் குற்றவழக்கில் மார்ச் 18-ஆம் தேதியன்று குர்கான் செசன்ஸ் நீதிபதி கோயல் தீர்ப்பு வழங்கி விட்டார். குற்றம் சாட்டப்பட்ட 148 பேரில் 117 தொழிலாளர்கள் குற்றமற்றவர்கள் என்று விடுவிக்கப்பட்டு விட்டார்கள். ஆனால், 13 தொழிலாளிகளுக்கு கொலைக் குற்றத்துக்காக ஆயுள் தண்டனையும், கொடும் காயம் விளைவித்த குற்றத்துக்காக 14 பேருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டிருக்கிறது. ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 13 பேரில் 12 பேர் சங்க நிர்வாகிகள். ஒருவர் சம்பவ நாளன்று மேலாளரால் சாதிரீதியாக இழிவுபடுத்தப்பட்ட ஜியாலால் என்ற தொழிலாளி.

கொலைக் குற்ற வழக்கில் ஆதாரமின்றித் தண்டிக்கப்பட்ட மாருதி தொழிலாளர்கள்.

“148 தொழிலாளிகள் சேர்ந்து அவனிஷ் குமார் தேவ் என்ற அதிகாரியைக் கொலை செய்தார்கள் என்பது வழக்கு. அதில் 117 பேருக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்படவில்லை. மீதமுள்ளவர்களைத் தண்டிப்பதற்கான எந்தவித ஆதாரமும் தீர்ப்பில் இல்லை” என்கிறார் தொழிலாளர்களின் வழக்கறிஞர் ரெபெக்கா ஜான்.

அரசு வழக்கறிஞர் அனுராக் ஹூடா, 13 தொழிலாளர்களையும் தூக்கில் போடவேண்டுமென்று கோரினார். “மாருதி சம்பவம் உலக அரங்கில் இந்தியாவின் கவுரவத்தை தாழ்த்திவிட்டது. அந்நிய முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய அஞ்சுவார்கள்” என்று தொழிலாளர்களின் பிணையை மறுப்பதற்கு பஞ்சாப்-அரியானா உயர் நீதிமன்றம் 2013-இல் கூறியதை மேற்கோள் காட்டி, மரண தண்டனையை அவர் வலியுறுத்தினார். “மேக் இன் இந்தியா என்று பிரதமர் மோடி முழங்கி வரும் சூழலில், இத்தகைய சம்பவங்கள் தேசத்திற்கே களங்கமாக இருக்கின்றன” என்று கூறி ஊடகங்களிடமும் தூக்குத் தண்டனைக்காகப் பிரச்சாரம் செய்தார் ஹூடா.

சாட்சியங்கள் இல்லாத போதிலும் தேசத்தின் மனச்சாட்சியைத் திருப்திப்படுத்தும் பொருட்டு அப்சல் குருவுக்குத் தூக்கு தண்டனை விதித்தது உச்ச நீதிமன்றம். அந்நிய முதலீட்டாளர்களைத் திருப்திப்படுத்தும் பொருட்டு 13 பேரைத் தூக்கில் போடவேண்டும் என்று வெளிப்படையாகக் கோருகிறார் அரசு வழக்கறிஞர்.

2012-இல் மாருதி தொழிலாளர்கள் மீது ஜப்பானிய சுசுகி நிர்வாகம் ஒரு கொடிய அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டிருந்த தருணத்தில், அன்று குஜராத் முதல்வராக இருந்த மோடி என்ன செய்தார் என்பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். மோடி ஜப்பானுக்கு நேரில் சென்று சுசுகி முதலாளியைச் சந்தித்தார். அங்கிருந்தபடி மாருதி தொழிலாளர்களுக்குக் கண்டனமும் தெரிவித்தார். இன்று டில்லியிலும் அரியானாவிலும் நடந்து கொண்டிருப்பது பா.ஜ.க.-வின் ஆட்சி. தொழிலாளிகளைத் தூக்கில் போடவேண்டும் என்று அரசு வழக்கறிஞர் கொந்தளிப்பதில் வியப்பென்ன?


“குற்றம் சாட்டுபவர்கள் குற்றத்தைச் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க வேண்டும். அவ்வாறு நிரூபிக்க இயலாதபட்சத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களைத் தண்டிக்க இயலாது” என்பது இந்தியக் குற்றவியல் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடு. மாருதி வழக்கைப் பொருத்தவரை ஒரேயொரு தொழிலாளிக்கு எதிராகக்கூடக் கொலைக்குற்றத்தையோ, காயம் விளைவித்த குற்றத்தையோ அரசு தரப்பு நிரூபிக்கவில்லை.

நீதிமன்றத் தீர்ப்பைக் கண்டித்து மாருதி தொழிலாளர்கள் மானேசரில் நடத்திய ஆர்ப்பாட்டம்.

“தொழிலாளர்கள் வன்முறை மற்றும் தீவைப்பில் ஈடுபட்டு அவனிஷ் குமார் தேவைக் கொன்று விட்டார்கள்” என்று போலீசுக்கு புகார் கொடுத்தவர் தீபக் ஆனந்த் என்ற எச்.ஆர். மானேஜர். புகார் கொடுத்த அவரால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் யாரையும் நீதிமன்றத்தில் அடையாளம் காட்ட முடியவில்லை. “தான் சம்பவ இடத்திலேயே இல்லை என்றும், நிர்வாகத்தின் ஆணைப்படிப் புகார் கொடுத்ததாகவும்” குறுக்கு விசாரணையில் அவர் ஒப்புக் கொண்டார்.

சாட்சிகளாக ஆஜர்படுத்தப்பட்டவர்களில் ஒரு தொழிலாளிகூட இல்லை. எல்லா சாட்சிகளும் நிர்வாகத்தினர் மற்றும் காண்டிராக்டர்கள். தொழிலாளர்களின் பெயர்களை அகர வரிசைப்படி குற்றப்பத்திரிகையில் எழுதியது மட்டுமல்ல; ஏ, பி என்பவற்றை முதல் எழுத்தாக கொண்ட தொழிலாளிகளை அடையாளம் காட்ட குறிப்பிட்ட அதிகாரிகள், பின்னர் சி,டி என்ற முதல் எழுத்து கொண்ட பெயர்களை உடைய தொழிலாளிகளை அடையாளம் காட்ட சில காண்டிராக்டர்கள் என்று செட்டப் செய்து, சாட்சிகளுக்குப் பயிற்சி கொடுத்து அழைத்து வந்தனர். இருந்த போதிலும் தொழிலாளிகளை அவர்களால் அடையாளம் காட்ட முடியவில்லை.

“தொழிலாளர்கள் உருட்டுக் கட்டைகளாலும் இரும்புக் கம்பிகளாலும் தாக்கியதாக” முதல் தகவல் அறிக்கையில் வழக்கம்போல எழுதிவிட்டது போலீசு. ஆலைக்குள்ளே உருட்டுக்கட்டையோ  இரும்புக்கம்பியோ கிடையாது என்று நிர்வாகம் போலீசுக்குப் புரிய வைத்த பின்னர், “கார் கதவுக்குள்ளே பொருத்தப்படும் 3 கிலோ எடையுள்ள இரும்பு பீம்களால் தாக்கியதாக” குற்றச்சாட்டைத் திருத்தினர். 139 தொழிலாளிகள் = 139 பீம்கள் என்று கணக்குக் காட்டினர். 139 பீம்கள் தொழிற்சாலையின் இருப்பில் குறைவதாகவோ, திருட்டுப் போனதாகவோ நிர்வாகம் பதிவு செய்யவில்லை என்பதைத் தொழிலாளர்கள் தரப்பு அம்பலப்படுத்தியது.

தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களான பீம்களை, ஆலையிலிருந்து 20 கி.மீ. முதல் 70 கி.மீ. தொலைவில் உள்ள தொழிலாளிகளின் வீடுகளிலிருந்து கைப்பற்றியதாகக் கூறியது போலீசு. கொலைக்குப் பயன்படுத்திய ஆயுதத்தை 70 கி.மீ. தள்ளியிருக்கும் தமது வீட்டில் கொலைகாரன் பத்திரமாக வைத்திருந்ததாகவும், சுமார் ஒரு மாதம் கழித்து அதைக் கைப்பற்றியதாகவும் போலீசு சொன்ன கதையைக் கேட்டு நீதிபதி சிரித்திருக்க வேண்டும் அல்லது சீறியிருக்க வேண்டும். அவரோ போலீசின் கட்டுக்கதையை ஏற்றுக்கொண்டார்.

“3 கிலோ எடையுள்ள இரும்பு பீமால் நிர்வாகத்தினரையும் போலீசாரையும் தொழிலாளர்கள் தாக்கியதாக”க் குற்றச்சாட்டு. ஆனால், தாக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு நபருக்குக்கூடச் சிறிய எலும்பு முறிவுகூட இல்லை. வெறும் சிராய்ப்புக் காயங்களைத்தான் அவர்களால் காட்ட முடிந்தது. இந்தக் காயங்களுக்காக போலீசார் கொடுத்த மருத்துவச் சான்றிதழ்களும் போர்ஜரி என்பதைத் தொழிலாளர் தரப்பு வழக்கறிஞர்கள் நிரூபித்தனர். இருப்பினும், “சான்றிதழ்கள் பொய் என்பதால், காயங்கள் பொய்யாகிவிடாது” என்று தீர்ப்பில் குறிப்பிடுகிறார் நீதிபதி.

மாருதி தொழிலாளர்கள் சார்பாக வாதாடி மூத்த வழக்குரைஞர் ரெபக்கா ஜான் (இடது); அவரது ஜூனியர் வழக்குரைஞர் ஹர்ஷ் போரா.

ஜியாலால் என்ற தலித் தொழிலாளியை ஒரு மேலாளர் சாதியைச் சொல்லி இழிவு படுத்தியதை ஒட்டித்தான் அன்றைய பிரச்சினை மாருதியில் தொடங்குகிறது. இது தொடர்பாக மேலாளர் மீது ஜியாலால் கொடுத்த தீண்டாமைக் குற்றப் புகார் “பொய்யானது” என்று போலீசு நிராகரித்து விட்டது. அதே நேரத்தில், தொழிலாளிகள் ஆத்திரம் கொண்டு தாக்குவதற்கான நோக்கத்தை (motive) நிரூபிக்கும் பொருட்டு, சாதியைச் சொல்லி இழிவுபடுத்திய அந்தச் சம்பவத்தை போலீசு பயன்படுத்திக் கொண்டது. அப்பட்டமான இந்த முரண்பாட்டையும் நீதிமன்றம் கண்டு கொள்ளவில்லை.

ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டார்கள் என்பது குற்றச்சாட்டு. ஆனால், அத்தனை பெரிய ஆலையில் தீ வைத்து எரிக்கப்பட்ட இடமோ ஒரேயொரு கட்டிடம் மட்டும்தான். மனிதவள மேம்பாட்டு அதிகாரி அவனிஷ் குமார் தேவின் கை, கால்கள் முறிக்கப்பட்ட நிலையில் அந்த அறை தீவைத்துக் கொளுத்தப்பட்டிருக்கிறது. அவர் தப்பிக்க முடியாமல் மூச்சுத் திணறி இறந்திருக்கிறார் என்பதுதான் கூராய்வின் முடிவு.

“இன்னார் அவரைத் தாக்கினார்” என்றோ, “இன்னார் அறைக்குத் தீவைத்தார்” என்றோ யாரும் சாட்சியமளிக்கவில்லை. கண்காணிப்பு காமெரா பதிவுகளைக் காட்டுமாறு தொழிலாளர் தரப்பு வழக்கறிஞர் கோரியபோது, “பதிவுகள் அனைத்தும் எரிந்து விட்டதாக”ப் புளுகியது அரசு தரப்பு. “காமெரா எரிந்திருந்தாலும் பதிவான வன்தகடு எங்கே” என்ற கேள்வியை நீதிமன்றம் கேட்கவில்லை.

எரிந்து கருகிப்போன அந்த அறையிலிருந்து எரியாத தீப்பெட்டி ஒன்றைக் கைப்பற்றி, அதுதான் “கொளுத்துவதற்குப் பயன்படுத்தப்பட்ட தீப்பெட்டி” என்று காட்டியது போலீசு. அந்த தீப்பெட்டியில் எந்த தொழிலாளியின் ரேகைப்பதிவும் இல்லை. அதை வைத்துத்தான் கொளுத்தினார்கள் என்பதையும் போலீசு நிரூபிக்கவில்லை.

“தீப்பெட்டியைக் கைப்பற்றியதாகக் (போலீசார்) காட்டியிருப்பது சந்தேகத்துக்குரியதுதான் என்பதில் சந்தேகமேயில்லை. அதன் காரணத்தினாலேயே, குற்றம் சாட்டப்பட்டவர்கள் கொளுத்தியிருக்க மாட்டார்கள் என்ற முடிவுக்கு நாம் வந்துவிட முடியாது” என்று தீர்ப்பில் குறிப்பிடுகிறார் நீதிபதி. இந்தக் கேலிக்கூத்துக்குப் பெயர் குற்றவியல் விசாரணையாம்!

மாருதி தொழிலாளர்களுக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பைக் கண்டித்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பில் சென்னை-ஆவடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.

கொலை செய்யப்பட்ட அவனிஷ் குமார் தேவ் தங்களது நண்பர் என்கிறார்கள் தொழிலாளிகள். சங்கமே வைக்கக்கூடாது என்று நிர்வாகம் வெறிகொண்டு ஒடுக்கி வந்த சூழலில், சங்கத்தைப் பதிவு செய்வதற்குத் தொழிலாளிகளுக்கு அவர்தான் உதவியிருக்கிறார். “நிர்வாகம் ஆலைக்குள் கொண்டு வந்து இறக்கியிருந்த அடியாள் படையினர்தான் அவனிஷைக் கொலை செய்திருக்கிறார்கள்” என்று அமர்ஜித் என்ற தொழிலாளி குற்றம் சாட்டினார்.

“தீ வைத்த அடியாள் யார் என்று அமர்ஜித்தால் நிரூபிக்க முடியாத காரணத்தினால், அமர்ஜித்தும் அவரது சக தொழிலாளிகளும் தான் தீ வைத்தார்கள் என்ற முடிவுக்கு நீதிமன்றம் வருவதாக”த் தனது தீர்ப்பில் கூறுகிறார் நீதிபதி.

ஆகத் தொன்மையானது என்று கூறப்படும் ஹமுராபியின் சட்டம்கூட (கி.மு.1800), “குற்றம் சாட்டுபவன்தான் குற்றத்தை நிரூபிக்க வேண்டும்” என்கிறது. “தவறும்பட்சத்தில், சாட்டப்படும் குற்றத்துக்கான தண்டனை மரணம் என்றால், அந்த தண்டனைக்குக் குற்றம் சாட்டுபவன் ஆளாக வேண்டும்” என்றும் எச்சரிக்கிறது.

“தான் நிரபராதி என்பதைக் குற்றம் சாட்டப்பட்டவர்தான் நிரூபித்துக் கொள்ளவேண்டும்” என்று குற்றவியல் சட்டத்தின் அடிப்படையையே தலைகீழாக மாற்றின தடா, பொடா சட்டங்கள். தற்போது மாருதி தீர்ப்பு இன்னும் ஒரு படி மேலே போகிறது. குற்றம் சாட்டப்பட்ட தொழிலாளிகள் தங்களை நிரபராதிகள் என்று நிரூபித்துக் கொள்வது மட்டும் போதாதாம். குற்றவாளி யார் என்று கண்டுபிடித்து, அதனை நிரூபிக்க வேண்டிய புலனாய்வு அமைப்பின் பொறுப்பையும் சிறையில் இருந்த தொழிலாளர்கள் மீது சுமத்துகிறார் நீதிபதி. அவ்வாறு “நிரூபிக்கத் தவறிய காரணத்தினால், நீங்கள்தான் குற்றவாளிகள்” என்று 13 தொழிலாளர்களுக்கும் ஆயுள் தண்டனை விதித்திருக்கிறார்.

உலகத்தின் கவனத்தையே ஈர்த்த ஒரு போராட்டம் தொடர்பான வழக்கை போலீசும் நீதித்துறையும் எப்படிக் கையாண்டிருக்கின்றன என்பதை மேற்கண்ட விவரங்களைப் படிக்கும் வாசகர்கள் புரிந்து கொள்ள முடியும். ஒரு நிலப்பிரபுத்துவ கட்டப்பஞ்சாயத்தில்கூட செல்லுபடியாகாத பொய்களை ஏற்றுக் கொண்டு தண்டனை வழங்கியிருக்கிறது விசாரணை நீதிமன்றம். கார்ப்பரேட் ஊடகங்களோ, “13 பேருக்கு ஆயுள் தண்டனை” என்பதை முதன்மைப் படுத்தி செய்தி வெளியிட்டு, விசாரணை என்ற பெயரில் நடைபெற்றிருக்கும் இந்த கேலிக்கூத்தை இருட்டடிப்பு செய்து விட்டன.


மார்ச் 18 அன்று இந்த தீர்ப்பு வெளியானதையொட்டி மானேசருக்கு நேரில் சென்ற வினவு இணையதளத்தின் செய்தியாளர், மார்ச் 23 பகத்சிங் நினைவு நாளன்று மானேசரில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்.

“உறக்கச் சொல், நாம் ஒன்று என்று! தொழிலாளிகளின் பறிக்கப்பட்ட வேலைகளை திரும்பக் கொடு! மோடி அரசு ஒழிக! புரட்சி ஓங்குக” என்று முழங்கிய அந்தத் தொழிலாளர்களிடம் “ஒரு பன்னாட்டு நிறுவனத்தைப் பணிய வைத்த பெருமிதம் தெரிந்தது. சாதிய கட்டுமானத்தின் இறுக்கத்தை உடைத்து வர்க்க ஒற்றுமையைக் கட்டியெழுப்பிய செருக்கு தெரிந்தது. அச்சமற்ற களிப்பு தெரிந்தது” என்று தான் கண்ணுற்ற அனுபவத்தை அவர் பதிவு செய்கிறார்.

5 ஆண்டுகளுக்கும் மேலாக நிர்வாகத்தையும், அரசையும், போலீசையும் எதிர்த்து மாருதி தொழிலாளர்கள் நடத்தி வரும் போராட்டம் பல வகைகளிலும் முன்னுதாரணம் படைத்திருக்கிறது. 2012-இல் கைது செய்யப்பட்ட 148 தொழிலாளிகளில் பெரும்பாலானவர்கள் 30 வயதுக்குக் குறைவானவர்கள். பலர் புதிதாகத் திருமணமானவர்கள். கொலை வழக்குகளில் கூலிப் படையினருக்கெல்லாம் ஒரு சில மாதங்களிலேயே பிணை வழங்கும் நீதிமன்றங்கள், மூன்றரை ஆண்டு காலத்துக்குத் தொழிலாளர்களுக்குப் பிணை வழங்கவில்லை.

மாருதி தொழிலாளர்களின் விடுதலைக்காக நாடு தழுவிய அளவில் 4.4.2017 அன்று நடந்த ஆர்ப்பாட்டத்தின் ஒருபகுதியாக, சென்னை – டி.ஐ.மெட்டல் ஃபார்மிங் ஆலை வாயிலில் தொழிலாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்.

இப்படி நிர்வாகமும் போலீசும் மட்டுமின்றி, நீதிமன்றமும் தமக்கு எதிராக நின்ற போதிலும் தொழிலாளர்களின் குடும்பத்தினர் அசாதாரண உறுதியைக் காட்டினர். “உயரத்தில் இருந்து விழுந்தால்தான்  பிரச்சினை. நாம் தரையில் இருப்பவர்கள் தானே? எப்படியோ பிழைத்துக் கொண்டோம். முதலாளிக்கு ஒரு தொழிற்சாலை, தொழிலாளிக்கு ஆயிரம் தொழிற்சாலைகள்” என்று மானேசர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஒரு தொழிலாளி அடக்குமுறையை எதிர்கொண்ட அனுபவத்தை அலட்சியமாக சொல்லிச் சிரித்தார்” என்று குறிப்பிடுகிறார் வினவு செய்தியாளர்.

சங்க நிர்வாகிகளையும் முன்னணியாளர்களையும் கொலை வழக்கில் சிறை வைத்துவிட்டால், அத்தோடு தொழிற்சங்கம் என்ற பேச்சுக்கே முற்றுப்புள்ளி வைத்துவிட முடியும் என்று மாருதி நிர்வாகம் போட்ட கணக்கை இளம் தொழிலாளர்கள் முறியடித்திருக்கிறார்கள். வழக்கை எதிர்கொள்வதற்கு இமான் கான் என்ற தொழிலாளியின் தலைமையில் கமிட்டி அமைத்தார்கள். உடனே இமான்கானைக் கைது செய்து சிறைவைத்தது போலீசு. அவருடைய இடத்திற்கு ஓம் பிரகாஷ் ஜாட் என்ற 28 வயது இளைஞனைத் தெரிவு செய்தனர். அவருக்கும் கைது வாரண்ட் பிறப்பித்தது போலீசு. அவர் தலைமறைவானார். மன அழுத்தம் காரணமாக மாரடைப்பால் இறந்தார். அவருடைய பொறுப்பை ராம் நிவாஸ் என்ற 31 வயது தொழிலாளி எடுத்துக்கொண்டார். அடக்குமுறைகள் செல்லுபடியாகவில்லை.

தொழிற்சங்கம் அமைக்க அனுமதிக்கக் கூடாது என்பதற்காகவே ஒரு கொலை, தீவைப்பு நாடகத்தை அரங்கேற்றிய மாருதியில், தொழிற்சங்கத்தை அசைக்க முடியாமல் நிறுவிவிட்டார்கள் தொழிலாளர்கள். மாருதி தொழிலாளர்களின் உறுதி காரணமாக, அதன் கிளை நிறுவனமான பெலசோனிகாவில் நிரந்தர தொழிலாளர்களின் எண்ணிக்கை 89-லிருந்து 705-ஆக உயர்ந்திருக்கிறது. தொழிலாளர்களின் ஊதியமும் உயர்ந்திருக்கிறது. “48 நொடிகளுக்கு ஒரு கார்” என்று 2012-இல் இலக்கு வைத்து மிரட்டிய நிர்வாகம், இப்போது “59 நொடிக்கு ஒரு கார்” என்று பணிந்திருக்கிறது.

117 தொழிலாளர்கள் நிரபராதிகள் என்று விடுவிக்கப்பட்டு விட்டார்கள். இருப்பினும் மாருதி நிர்வாகம் அவர்களுக்கு இழப்பீடும் கொடுக்காது, வேலையும் கொடுக்காது. 5 ஆண்டு சிறைத்தண்டனை பெற்ற 14 தொழிலாளிகள் ஏற்கெனவே தண்டனைக் காலத்தைச் சிறையில் கழித்துவிட்டதால், வெளியே வந்து விட்டார்கள். எஞ்சியிருப்பவர்கள் ஆயுள் தண்டனை பெற்ற 13 பேர். “ஆகப்பெரும்பாலான தொழிலாளிகள் விடுதலை ஆகிவிட்டார்கள். அது போதும். எங்களைப் பற்றிக் கவலை வேண்டாம்” என்று சிறையிலிருக்கும் தொழிலாளிகள் தனக்கு செய்தி அனுப்பியிருப்பதாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார் வழக்கறிஞர் ரெபெக்கா ஜான்.

“நிரந்தரத் தொழிலாளிகளுக்கும் தற்காலிகத் தொழிலாளிகளுக்கும் இடையிலான ஒற்றுமையை உருவாக்கியிருக்கிறோம். இது நிர்வாகத்தால் உடைக்க முடியாத ஒற்றுமை. இதுதான் 2012-இல் தொடங்கிய எங்கள் போராட்டத்தின் முக்கியமான வெற்றி” என்று சொல்கிறார் சங்கத்தின் முன்னாள் தலைவரான தொழிலாளி பவன் குமார்.

அரசும் போலீசும் தொழிலாளர் நலத்துறையும் நீதிமன்றமும் தமது நடுநிலை முகமூடி கழன்று பன்னாட்டு முதலாளிகளின் கூலிப்படைகள் என்று அம்பலமாகியிருக்கின்றன. இது மாருதி போராட்டம் வழங்கியிருக்கும் முக்கியமான செய்தி.

வேலூர் : லெனின் பிறந்த நாளில் புதிய உதயம் !

0

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் வேலூரில், தரைக்கடை வியாபாரிகள் சங்கத்தின் புதிய கிளை திறக்கப்பட்டது. ஏற்கனவே வேலூரில் இயங்கி வருகின்ற இரண்டு கிளைகளின் அரசியல் செயல்பாடுகளை பார்த்து இந்த வியாபாரிகள் புஜதொமு-வுடன் இணைவது, என முடிவு செய்து தொடர்பு கொண்டு பேசினார்கள்.

அதன் அடிப்படையில் தோழர் லெனின் பிறந்த தினத்தில், புதிய கிளை திறக்கப்பட்டது. புதிய கிளை திறப்பு நிகழ்ச்சியும், ஏப்ரல்-22 தோழர் லெனின் பிறந்த தினத்தை நினைவுகூறுவதும், இரண்டும் ஒன்று சேர்ந்து நடத்தப்பட்டது. மூன்று இடங்களில் தோழர் லெனின் படத்தை திறந்து வைத்து, கொடியேற்றி, தோழர்கள் லெனின் பற்றியும், இரசிய புரட்சி பற்றியும், பேசினார்கள். பழைய மீன் மார்க்கெட், பெரியார் பூங்கா, அடுக்கம்பாறை போன்ற இடங்களில் இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

இதில் சங்க நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், மாநில தலைவர் தோழர் முகுந்தன், உறுப்பினர்கள் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். இதில் பேசிய தோழர்கள், “அழுக்குச் சட்டையும் நாட்டை ஆளமுடியும் என்று நிரூபித்தவர் தோழர் லெனின்”, 70 ஆண்டுகளாக விலைவாசியே மாறாத நாடாக இரசியா இருந்தது, பசி அறியாத நாடாக இரசியா இருந்தது, என சோசலிச சாதனைகளைப் விளக்கி பேசினர்.

இன்றைய சூழலில் தொழிலாளர்கள் உழைக்கும் மக்கள் அமைப்பாக திரளவேண்டியதன் அவசியம் குறித்தும்,  மற்றும் சங்க நிர்வாகிகள் ஒற்றுமையாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும், தோழர்கள் கூட்டத்தில் பேசினார்கள்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
(வேலூர் மாவட்ட சாலையோர சிற்றுண்டி மற்றும் தரைக்கடை வியாபாரிகள் நலச்சங்கம்)
வேலூர் மாவட்டம். தொடர்புக்கு : 84897 35841

கேலிப்படங்கள் : அதிமுக டாஸ்மாக் – பாஜக பசு

0

த்தியாவசியப் பணிகளை விரைந்து முடிக்க தேசிய, மாநில, மாவட்டச் சாலைகளை நகராட்சி, மாநகராட்சி சாலைகளாக மாற்ற அரசு முடிவு – செய்தி !


தாய், தாய்மொழி, தாய்நாட்டை ஒருபோதும் மறக்கக் கூடாது
(இராமானுஜரின் 1000-வது பிறந்தநாள் ’சமத்துவ’ நடைப்பயணத்தில் வெங்கையா நாயுடு)

அப்புறம் ஏண்டா சமஸ்கிருதத்த திணிக்கிறீங்க…
வெங்காயங்களா…!

மொதல்ல ஒம்பேருல இருக்குற நாயுடுவே புடுங்கு, பொறவு சமத்துவம் பத்தி பேசலாம்.


முழு அடைப்பு என்ற பெயரில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயற்சி – தமிழிசை

தமிழக விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டம் பற்றி…

அதிமுக-வும், பாஜக-வும் ஒன்னு – இத
அறியாதவன் வாயில மண்ணு.


பசுக்கடத்தலைத் தடுக்க ஆதார் எண் !
– அகில பாரத கிருஷி கோசேவா சங்கம்

மண்ணக் கடத்துறான்,
மலையக் கடத்துறான்,
மனுசனக் கடத்துறான் – ஏன்
நாட்டையே பேத்து அமெரிக்காவுக்கு கடத்துறான்

அதையெல்லாம் மறச்சிபுட்டு…

மாடுக் குண்டிய தோண்டியே
அரசியல் பண்றான்யா
ஆர்.எஸ்.எஸ். காரனுங்க…!

படங்கள் : வரதன்

இணையுங்கள்:

தமிழக வறட்சி : பிணந்தின்னி பா.ஜ.க. ! பணந்தின்னி அ.தி.மு.க. !!

0
ராமநாதபுரம் பகுதியில் தேங்கிக் கிடக்கும் தண்ணீரை வீட்டுக்கு எடுத்துச் செல்ல முயலும் பெண்கள்.

டந்த நூறாண்டுகளில் காணப்படாத வறட்சியில் சிக்கி, தமிழகமே பாலைவனம் போலாகிவிட்டது.  மாநிலம் முழுவதும் தை பட்ட விவசாய சாகுபடி பொய்த்துப் போய், ஏறத்தாழ இருநூறுக்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் அதிர்ச்சியால் மாரடைப்பு ஏற்பட்டும், தற்கொலை செய்துகொண்டும் இறந்து போனார்கள். வறட்சியால் விவசாயத்தின் துணைத் தொழிலான கால்நடை வளர்ப்பும் பாழ்பட்டு, ஆடு – மாடுகளை வந்த விலைக்கு விவசாயிகள் தள்ளிவிடுவதாகச் செய்திகள் வெளிவருகின்றன. விவசாயம் பொய்த்துப் போனதால் வேலையில்லா திண்டாட்டம், குடிநீர்கூட இல்லாத அவல நிலைமை என்ற இரண்டு தாக்குதல்களை எதிர்கொள்ள முடியாமல், கிராமப்புற மக்கள் ஊரைக் காலிசெய்துவிட்டு நகரங்களை நோக்கி அகதிகளாக ஓடிவரும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். எனினும், இந்த வறட்சி தமிழக விவசாயிகளின், தமிழக மக்களின் போராட்டக் குணத்தை வற்றச் செய்துவிடவில்லை.

கோவை மாவட்டம், சூலூர் ரோடு, ராவுத்தர் பிரிவு பகுதியில் தண்ணீரின்றிப் பட்டுப்போய் நிற்கும் தென்னை மரங்கள்

தேசிய, தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் டெல்லியில் நடத்திவரும் போராட்டம் ஒரு மாதத்தை நெருங்கவுள்ளது. “வறட்சி நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும், அனைத்து விவசாயிகளின் வங்கிக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும்” என்ற அவர்களின் கோரிக்கைகள், தமிழக விவசாயிகளின் நலனை மட்டுமின்றி, வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள ஏனைய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளின் நலனையும் பிரதிபலிப்பதாக இருப்பதால், உ.பி., பஞ்சாப், அரியானா, சத்தீஸ்கர் மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், போராடும் தமிழக விவசாயிகளைச் சந்தித்து ஆதரவு தெரிவிக்கின்றனர்.

தமிழக விவசாயத்தையும் விவசாயிகளையும் காப்பாற்றக் கோரித் தமிழகம் முழுவதும் மாணவர்களும், இளைஞர்களும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக் கோரும் மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டம் தஞ்சையில் இரண்டு வாரத்துக்கும் மேலாக நடந்து வருகிறது.

மாடு செத்துப் போவதையெல்லாம் தேசியப் பிரச்சினையாக உருவேற்றி வரும் இந்து மதவெறிக் கும்பலோ, தமிழக விவசாயிகள் சாவோடு போராடுவதை உப்புப் பெறாத விசயமாக ஒதுக்கித் தள்ளுகிறது. இப்போராட்டங்களைப் பார்ப்பன, மேட்டுக்குடித் திமிரோடு அணுகி கொச்சைப்படுத்தி வருகிறது.

“டெல்லியில் ஒரு நாளைக்கு நூறு போராட்டங்கள் நடக்கும், அத்தனையையும் பிரதமர் போய் பார்க்க முடியுமா?” எனத் திமிராகக் கேட்கிறார், பொன்னார். “நிதியமைச்சரிடம் கோரிக்கைகளைத் தெரிவித்த பிறகு, போராட்டத்தைத் தொடருவதில் நியாயம் இல்லை” என எச்சரிக்கும் தொனியில் பேசுகிறார், ஹெச்.ராஜா. பத்து இலட்ச ரூபாய் செலவில் கோட்டு சூட்டு போட்ட மோடியை நியாயப்படுத்திய இந்து மதவெறிக் கும்பல், “ஆடி கார் வைத்திருக்கும் அய்யாகண்ணு விவசாயியா?” என அவதூறு செய்கிறது. வழக்கம் போலவே, “தமிழகத்தில் மோடி எதிர்ப்பைத் தூண்டிவிடுபவர்களைக் கண்டுபிடிக்க வேண்டும்” என உளவுத் துறைக்குப் போட்டுக் கொடுக்கும் வேலையையும் செய்கிறது, பா.ஜ.க.

காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த ஐந்தாண்டுகளாக குறுவை சாகுபடி நடைபெறவில்லை. இதில் கடைசி இரண்டு ஆண்டுகள் மோடியின் ஆட்சி. 2016 இறுதியில் காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவையடுத்து, சம்பா சாகுபடியை நடத்தி முடிக்கலாம் என விவசாயிகள் நம்பியிருந்தனர்.  “நீதிமன்ற உத்தரவை ஏற்க மறுத்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது” எனக் கூறி விவசாயிகளின் நம்பிக்கையில் மண்ணைவாரிப் போட்டது, மோடி அரசு. காவிரியில் தண்ணீர் மறுக்கப்பட்ட நிலையில், பருவ மழையும் பொய்த்துப் போனது. இதனையடுத்துதான், டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளின் பிணங்கள் விழத் தொடங்கின. தமிழக விவசாயிகளின் சாவுக்குப் பொறுப்பேற்க வேண்டிய பா.ஜ.க., தனது குற்றத்தை மறைத்துக்கொண்டு, மொத்தப் பழியையும் தமிழக அரசின் மீது சுமத்திவிட்டுத் தப்பித்துக் கொள்ள முயலுகிறது.

ராமநாதபுரம் பகுதியில் தேங்கிக் கிடக்கும் தண்ணீரை வீட்டுக்கு எடுத்துச் செல்ல முயலும் பெண்கள்.

வறட்சி நிவராணம் 39,565 கோடி, வார்தா புயல் நிவாரணம் 22,573 கோடி – என 62,138 கோடி ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும் என்று தமிழக அரசு கோரியிருந்தது. மோடி அரசோ பிச்சை போடுவது போல, 2,014 கோடி ரூபாய் மட்டுமே நிவாரணமாக ஒதுக்கியிருக்கிறது.

4,702 கோடி ரூபாய் வறட்சி நிவாரணம் கோரிய கர்நாடக மாநிலத்திற்கு 39 சதவீதத் தொகையும் (1,782 கோடி ரூபாய்), 1,500 கோடி ரூபாய் வறட்சி நிவாரணம் கோரிய ஆந்திர மாநிலத்திற்கு மூன்றில் ஒரு பங்கும் (518 கோடி ரூபாய்) அளிக்கப்பட்டிருக்கும்போது, தமிழகம் கோரிய தொகையில் வெறும் மூன்று சதவீதமே மட்டும் நிவாரணத் தொகையாக ஒதுக்கப்பட்டிருக்கிறது.

கடந்த ஆண்டு தென்மேற்குப் பருவ மழை முழுவதுமாகப் பொய்த்துப் போகவில்லை. அம்மழையையும், காவிரி நீரையும் பயன்படுத்தி விவசாயம் செய்திருக்கும் கர்நாடகாவையும்; காவிரி நீரும் மறுக்கப்பட்டு, வடகிழக்குப் பருவ மழையும் முற்றிலுமாகப் பொய்த்துப் போய் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்தையும் ஒரே தட்டில் வைத்து அணுகுவது, எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாத அநீதி.

62,138 கோடி ரூபாய் நிவாரணம் கோரிய தமிழகத்திற்கு எந்த அடிப்படையில் 2,014 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டது என்பதற்கு எந்த விளக்கத்தையும் மைய அரசு அளிக்கவில்லை. ஒதுக்கப்பட்டுள்ள 2,014 கோடி ரூபாயில் வறட்சி நிவாரணத்திற்கான பங்கு 1,748 கோடி ரூபாய். இந்தத் தொகையையும் மைய அரசு முழுவதுமாக அளிக்கப் போவதில்லை. தேசியப் பேரிடர் நிவாரண நிதியாக ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட தொகையில் ஒரு நானூறு கோடி ரூபாயைத் தமிழக அரசு செலவழிக்கவில்லையாம். அதனால், அந்த நானூறு கோடி ரூபாயைக் கழித்துக்கொண்டு, மீதியைத்தான் மைய அரசு தரவிருக்கிறது.

தமிழகம் முழுவதும் விவசாயம் பொய்த்துப் போய், கிராமப்புறங்களை வேலையில்லாத் திண்டாட்டம் கவ்வியிருக்கும் நிலையில், வறட்சி நிவாரணத்தில் கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டங்களுக்கு 6,000 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் எனக் கோரியிருந்தது, தமிழக அரசு. அந்தளவிற்குக்கூட வறட்சி நிவாரணம் ஒதுக்கப்படாமல் தமிழகம் வஞ்சிக்கப்பட்டிருக்கிறது.

டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் தமிழக விவசாயிகளின் போராட்டத்தை ஆதரித்து உரையாற்றும் உ.பி. மாநிலத்தைச் சேர்ந்த விவசாய சங்கப் பிரதிநிதி.டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் தமிழக விவசாயிகளின் போராட்டத்தை ஆதரித்து உரையாற்றும் உ.பி. மாநிலத்தைச் சேர்ந்த விவசாய சங்கப் பிரதிநிதி.

டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் தமிழக விவசாயிகளின் போராட்டத்தை ஆதரித்து உரையாற்றும் உ.பி. மாநிலத்தைச் சேர்ந்த விவசாய சங்கப் பிரதிநிதி.

இந்த அநீதி குறித்துக் கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர் ஒருவரை, தேசத் துரோகி என முத்திரை குத்தி மிரட்டினார், தமிழின விரோதி ஹெச்.ராஜா. மேலும், தமிழகத்தில் நடந்துவரும் ஆற்று மணல் கொள்ளைதான் வறட்சிக்குக் காரணமென்றும், நீர்ப்பாசனத் திட்டங்களுக்காக மைய அரசு ஒதுக்கிய பல்லாயிரம் கோடி ரூபாய் நிதியுதவிகளைத் திராவிடக் கட்சிகள் கொள்ளையடித்துவிட்டு, அண்டை மாநிலத்தோடும், மைய அரசோடும் மோதும் போக்கைக் கடைப்பிடிக்கின்றன என்றும் கூறி, தனது ஓரவஞ்சனையை, தமிழக விரோதப் போக்கை மூடிமறைத்துவிட முயலுகிறது, பா.ஜ.க.

தமிழகத்தைக் கவ்வியுள்ள வறட்சிக்கும், விவசாயிகளின் சாவுகளுக்கும் திராவிடக் கட்சிகளைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தும் இந்த ஆரிய பார்ப்பன யோக்கியர்கள், இதே அளவுகோலைத் தாங்கள் ஆளும் மாநிலங்களுக்கும் பொருத்துவார்களா? நாட்டிலேயே மிக அதிக அணைகளைக் கொண்ட மாநிலமான மகாராஷ்டிராதான் அடிக்கடி வறட்சியின் பிடியில் சிக்கிக் கொள்கிறது. நீர்த் தேக்கங்களை அமைப்பதில் மிகப் பெரும் ஊழலும் கொள்ளையும் அம்மாநிலத்திலும் நடந்திருக்கிறது. விவசாயிகளின் தற்கொலையில் இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ள மாநிலமும் மகாராஷ்டிராதான். கடந்த இருபது ஆண்டுகளாக அந்த மாநிலத்தை மாற்றிமாற்றி ஆண்டுவரும் “தேசிய”க் கட்சிகளான காங்கிரசும் பா.ஜ.க.வும்தான் இந்தக் குற்றத்துக்குப் பொறுப்பேற்க வேண்டும்.

ஊழலில் ஈடுபட்ட கட்சியின் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்லாமல், திராவிடக் கட்சிகள் எனப் பேதமிட்டுப் பிரித்துக் காட்டுவதன் மூலம், திராவிடம் – தமிழினத்தின் மீதான பகையைதான் வெளிப்படுத்துகிறது, ஆரிய பா.ஜ.க. மேலும், அ.தி.மு.க.வையும் திராவிடக் கட்சியாகப் பார்ப்பது அடிப்படையிலேயே அயோக்கியத்தனமானது. திராவிடக் கட்சிகள் எனப் பொதுவாகக் குற்றம் சுமத்துவதன் பின்னே, பார்ப்பனத்தி ஜெயா அடித்த வரலாறு காணாத கொள்ளையைப் பூசிமெழுகும் தந்திரம் மறைந்திருக்கிறது. இவை ஒருபுறமிருக்க, ஆற்று மணல் கொள்ளை, ஊழல் என்பது பற்றியெல்லாம் பேசுவதற்கு பா.ஜ.க.வினருக்கு எந்தத் தகுதியும், தார்மீக உரிமையும் கிடையாது.

அ.தி.மு.க. என்ற கொள்ளைக்கூட்டத்திற்குத் தலைவியாக இருந்த ஜெயாவைத் தனது இயற்கையான கூட்டாளியாக நட்பு பாராட்டி வந்த கட்சிதான் பா.ஜ.க. சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து அவரைக் காப்பாற்றுவதற்கு பாரதிய ஜனதா செய்திருக்கும் உதவிகளும் மோசடிகளும் ஏற்கெனவே நாறிப் போனவை. உதாரணத்திற்குச் சொன்னால், அரசு வழக்குரைஞராக பவானி சிங்கை முறைகேடான முறையில் நியமித்துக் கொடுத்ததே கர்நாடகா பா.ஜ.க. அரசுதான்.

காவிரி உரிமை மீட்புக் குழுவின் தலைமையில் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்கக் கோரி தஞ்சையில் நடைபெற்று வரும் போராட்டம்.

குன்ஹா அளித்த தீர்ப்பால் தண்டிக்கப்பட்டு, பிணையில் வெளியே வந்திருந்த ஜெயாவை, அவரது போயசு தோட்டத்து வீட்டுக்கே போய் சந்தித்தார் நிதியமைச்சர் அருண் ஜெட்லி. இந்தச் சந்திப்பிற்கு பிறகுதான், ஜெயா-சசி கும்பலுக்கு எதிராக நடந்துவந்த வருமான வரி வழக்கில் சமரசம் செய்துகொள்வதற்கு வருமான வரித் துறை ஒப்புக் கொண்டது.

கண்டெய்னர் பணக் கடத்தில் விவகாரத்தைச் சுமுகமாக முடித்துக் கொடுத்ததில் வெங்கய்யா நாயுடுவின் பங்கு அளப்பரியது. இப்படி பா.ஜ.க., ஜெயா-சசி கும்பலுக்கு காலத்தே செய்த உதவிகள் ஏராளமுண்டு.

மிகப் பெரிய தேசியக் கட்சி எனப் பீற்றிக் கொள்ளும் பா.ஜ.க., தமிழகத்தில் நடந்துவரும் ஆற்று மணல் கொள்ளைக்கு எதிராக சுண்டுவிரலைக்கூட அசைக்காமல் இருந்து வருவதை சந்தர்ப்பவாத ஓட்டுக்கட்சி அரசியல் என்ற வரையறைக்குள் அடைத்துவிட முடியாது. ராம மோகனராவ்-சேகர் ரெட்டி-ஓ.பி.எஸ். என்ற கூட்டணிதான் ஆற்றுமணல் கொள்ளையின் சூத்திரதாரிகள் என்பது ஊரே அறிந்த உண்மை. அந்த உத்தமர் ஓ.பி.எஸ்.ஐத்தான் இப்பொழுது பாரதிய ஜனதா முட்டுக் கொடுத்து வருகிறது. ராம மோகனராவ் மீண்டும் பதவியில் அமர்த்தப்பட்ட பின்னணியில் மோடி அரசின் சம்மதமும் உண்டு என்று தமிழகப் பத்திரிகைகள் எழுதி வருகின்றன.

இப்படி ஆற்று மணல் கொள்ளையர்களோடு பல வழிகளில் நேரடியாகவும் இரகசியமாகவும் உறவு வைத்திருக்கும் பா.ஜ.க.வை, காவரியில் தமிழகத்தின் உரிமைகளை வெளிப்படையாக மறுத்துவரும் பா.ஜ.க.வை., வளர்ச்சி என்ற போர்வையில் தமிழக விவசாயத்தை, குறிப்பாக தமிழகத்தின் நெற்களஞ்சியத்தைச் சுடுகாடாக்க முயலும் பா.ஜ.க.வைத் தமிழகத்தின் எதிரியாக நிறுத்த வேண்டும். ஆனால், அதற்குப் பதிலாக, தமிழகத்தைச் சேர்ந்த காட்சி ஊடகங்கள் வறட்சி குறித்த விவாதங்களில், பா.ஜ.கட்சியினரை நியாயவான்களைப் போலப் பேச அனுமதிக்கின்றன.

60,000 கோடி ரூபாய் கேட்டதற்கு, வெறும் இரண்டாயிரத்து சொச்சம் கோடி ரூபாயைப் பிச்சைப் போலத் தூக்கியெறிந்து சிறுமைப்படுத்தியிருக்கும் மோடி அரசைக் கண்டிக்காமல், அ.தி.மு.க.(அம்மா) அரசு சும்மா கிடப்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். அவர்களின் மௌனம் திருடர்களின் மௌனம். வாயைத் திறந்தால், அடுத்த வருமான வரித்துறை ரெய்டு பாய்ந்துவிடுமோ என்ற அச்சம்தான் அவர்களை வாயை அடைத்துப் போட்டிருக்கிறது. மேலும், தமிழகத்தை வஞ்சித்த மோடி அரசை எதிர்த்துப் போராடும் மாணவர்கள், இளைஞர்கள் மீது அடக்குமுறையை ஏவிவிட்டு, தனது அடிவருடித்தனத்தைக் காட்டி, மோடியின் கருணையைப் பெற முயலுகிறது.

திட்டத்தில் கொள்ளை என்பதை மாற்றி, கொள்ளையடிப்பதற்காகவே திட்டம் என ஊழலில் புதிய சாதனையை உருவாக்கியவர்தான் ஜெயலலிதா. அவரது ஆசியோடு நடப்பதாகக் கூறிவரும் சசிகலாவின் பினாமி அரசு, கொள்ளையடிப்பதற்காகவே 60,000 கோடி ரூபாய் அளவிற்கு நிவாரண உதவி கேட்டிருக்கும் என்பதை மறுக்கவியலாது. அதற்கான அறிகுறிகள் இப்பொழுதே தென்படத் தொடங்கிவிட்டன. குறிப்பாக, குடிமராமத்துப் பணியின் கீழ் தமிழகம் முழுவதுமுள்ள 1,519 நீர்நிலைகளைத் தூர்வாரும் பணிக்கு 100 கோடி ரூபாயை ஒதுக்கியிருக்கிறது, தமிழக அரசு. இந்தப் பணி எப்படி நடைபெறுகிறது தெரியுமா?

டெல்லியில் போராடிவரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக வகுப்புகளைப் புறக்கணித்து வெளியேறும் திருச்சி அரசு கலைக்கல்லூரி மாணவிகள்.

இந்த நீர்நிலைகளைத் தூர் வாருவதைச் செங்கல் சூளை அதிபர்களிடம் சட்டவிரோதமாகத் தூக்கிக் கொடுத்துவிட்டு, 100 கோடி ரூபாயை ஆளுங்கட்சியும் அதிகாரிகளும் அமுக்கிக் கொள்வதாகவும், தூர்வாரும்பொழுது கிடைக்கும் சவுடு மண்ணை, விவசாயிகளுக்குத் தராமல், சூளை அதிபர்களிடம் கமிசனுக்கு விற்றுவிட்டு இலாபம் பார்ப்பதாகவும் பா.ம.க. நிறுவனர் ராமதாசு அம்பலப்படுத்தியிருக்கிறார்.

இந்து மதவெறி அரசியலை முதன்மைப்படுத்தித் தமிழகத்தில் காலூன்ற முடியாது என்பதைப் புரிந்துகொண்டுள்ள பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ்., இப்படிபட்ட ஊழல், முறைகேடுகள் மீது தமிழக மக்கள் அடைந்திருக்கும் வெறுப்பை அறுவடை செய்து கொள்ள முயலுகிறது. திராவிடக் கட்சிகளுக்கு மாற்று பா.ஜ.க.தான் எனப் பீற்றிக் கொள்கிறது.

ஆனால், நீட் தேர்வு, ஜி.எஸ்.டி.வரி, ரேஷன் அரிசிக்கு மானியம் ரத்து என மோடி அரசு கொண்டுவரும் திட்டங்கள் அனைத்தும் தமிழகத்தின் உரிமைக்கு எதிரானதாகவே உள்ளன. அது மட்டுமா, ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்துவதற்குப் புரிந்துணர்வு ஒப்பந்தம், டெல்டா பகுதியில் மீண்டும் மீத்தேன் திட்டத்திற்கு அனுமதி, காவேரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க மறுப்பதோடு, அப்பிரச்சினையில் நிரந்தரமாகத் தமிழகத்திற்கு அநீதி இழைக்கும் வகையில் ஒற்றை நதி நீர் தீர்ப்பாயம் அமைக்கும் முடிவு, நியூட்ரினோ திட்டத்தைக் கைவிட முடியாது என்ற அறிவிப்பு, பாலாற்றில் ஆந்திர அரசும், பவானியில் கேரளாவும் தடுப்பணைகள் கட்டி வருவதைத் தடுக்க மறுப்பது, பிச்சையைவிடக் கேவலமான வறட்சி நிவாரணம் – எனத் தமிழக விவசாயத்தை அழிக்கும் தீய சக்தியாக நிற்கிறது, பா.ஜ.க. கூடுதலாக, திராவிட இயக்கங்கள் கொண்டுவந்திருக்கும் சமூக சீர்திருத்தங்களை ஒழித்துக்கட்டி, ஆரிய -பார்ப்பன மேலாதிக்கத்தைத் தமிழக மக்களின் மீது மீண்டும் சுமத்துவதையும் நோக்கமாகக் கொண்டிருக்கும் இந்து மதவெறிக் கும்பலைத் தமிழகத்தின் முதன்மையான எதிரியாகத்தான் கருத முடியுமே தவிர, அரசியல் பிரதிநிதியாக நினைத்துப் பார்ப்பதுகூட வெட்கக்கேடானது, அருவருப்பானது.

தமிழகத்தின் விவசாயம் அழிவை நோக்கித் தள்ளப்பட்டிருப்பதற்கு வறட்சி, காவிரி பிரச்சினை என்பவற்றையும் தாண்டிப் பல்வேறு வலுவான காரணங்கள் உள்ளன. குறிப்பாக, மைய, மாநில அரசுகள் செயல்படுத்தி வரும் தனியார்மயப் பொருளாதாரக் கொள்கைதான் விவசாயத்தைச் சூதாட்டமாக்கி, விவசாயிகளை மரணத்தை நோக்கித் தள்ளி வருகிறது. தனியார்மயத்தின் பிறகுதான் ஆற்று மணல் கொள்ளை பிரம்மாண்டமாக வளர்ந்தது; தனியார்மயத்தின் பிறகுதான் ஏரிகளும், கண்மாய்களும் ஒருபுறம் ரியல் எஸ்டேட் மாஃபியாக்களின் ஆக்கிரமிப்புகளாலும், இன்னொருபுறம் பராமரிப்பின்றியும் அழிக்கப்பட்டன; தனியார்மயத்தின் பிறகுதான் விவசாய மானியங்கள் படிப்படியாக வெட்டப்பட்டன, விவசாய உற்பத்திச் செலவு அதிகமானது, விவசாய விளைபொருட்களுக்கான விலை வீழ்ச்சியடைந்தது. இந்த விஷச்சுழல்தான் விவசாயிகளைத் தீராத கடனில் சிக்க வைத்து, அவர்களைத் தற்கொலைக்குத் தள்ளிச் சென்றது; அவர்களை விவசாயத்தைவிட்டு ஓட வைத்தது.

இப்படி விவசாயத்தைக் கைவிட்டு நகரத்திற்கு இடம்பெயரும் விவசாயிகளை, விவசாயத் தொழிலாளர்களை, கிராமத்து இளைஞர்களைத்தான் குறைந்த கூலிக்கு காண்டிராக்டு தொழிலாளர்களாக கார்ப்பரேட் முதலாளிகள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். சுருக்கமாகச் சொன்னால், விவசாயத்தின், விவசாயிகளின் அழிவில்தான் நாடு எட்டு சதவீத “வளர்ச்சியை”ச் சாதித்து.

நாட்டை வறுமையிலிருந்து விடுவித்து, வல்லரசாக்கப் போகும் மந்திரக் கோலாகக் கூறப்பட்ட தனியார்மயம்-தாராளமயம் மிகப்பெரும் தோல்வியடைந்து நிற்பதை, விவசாயத்தின் நசிவு துலக்கமாக எடுத்துக் காட்டுகிறது. “அனைவருக்குமான வளர்ச்சி” எனக் கூறி ஆட்சியைப் பிடித்த மோடியும் தோல்வியடைந்துவிட்டதை, அவரது ஆட்சியிலும் தொடரும் விவசாயிகளின் மரணங்கள் எடுத்துக் காட்டுகின்றன. ஆனாலும், மோடி உள்ளிட்ட ஆளுங்கும்பல் தமது தோல்வியை ஒப்புக்கொள்ள மறுத்து, நாட்டை மேலும் மேலும் தனியார்மய நாசகாரப் பாதையில் இழுத்துச் செல்கிறார்கள். மக்களுக்கு எதிராகத் திரும்பிவிட்ட அவர்களிடம், விவசாயத்தையும் விவசாயிகளையும் காக்குமாறு இனியும் கெஞ்சிக்கொண்டு நிற்பதால் எந்தவொரு பயனும் ஏற்படாது என்பதைப் போராடும் தமிழக விவசாயிகளும், மாணவர்களும், இளைஞர்களும் உணர வேண்டும். அந்த உணர்வுதான், நமது நாட்டின் சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பில் தலைகீழான மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான முதல் படியாகும்.

-குப்பன்
புதிய ஜனநாயகம், ஏப்ரல் 2017

பிரேக்கிங் நியூசும் பின்னணி இசையும்

1
ண்ணன் எப்ப சாவான், திண்ண எப்ப காலியாகும் என்று யாகத்தை நடத்திக் கொண்டிருக்கிறது எழவுக் கட்சி.

ண்ணன் எப்ப சாவான், திண்ண எப்ப காலியாகும் என்று யாகத்தை நடத்திக் கொண்டிருக்கிறது எழவுக் கட்சி.   அண்ணனாவது சித்தியாவது இருக்குற நாலு வருசத்துக்கு தொண்ண கெடச்சா போதும்  என்று நடுநிசி பேய்களாய்  அலைகிறது களவு கட்சி.  சசிகலா குடும்பத்திடம்  இருந்து ஆன்ம விடுதலை பெற, அடித்தக் கொள்ளையின் ஆன்மா நிலைபெற அம்மாசமாதி குறிசொல்லி தியானத்தில்.  நேற்று வரை இருட்டில் பர்சை பறி கொடுத்தவன் போல் உயரமா  இருந்தான்,  மிரட்டுனான், பாக்கவே பயங்கரமா இருந்தான் என்று குத்துமதிப்பாகவே பேசிக் கொண்டிருந்த நாஞ்சில் சம்பத் நடுராத்திரியில் ஞானோதயம் வந்து எழுந்ததுபோல்  இது திராவிடத்தை அழிக்கும் ஆரிய சதி!  இது பெரியாரின் பூமி, அண்ணாவின் நந்தவனம், எம்.ஜி.ஆரின் தோட்டம், அம்மாவின் ஆஸ்பிட்டல் கோட்டை, தினகரனின் திண்ணை எனுமளவுக்கு கண்ணை மூடிக்கொண்டு இங்கு  பா.ஜ.க. கனவு பலிக்காது, இது கலாச்சார யுத்தம்,  டி.டி.வி. தலைமையில் யுத்தம் தொடரும் என இன்னும் கோர்த்துவிட்டு பீதியை கிளப்புகிறார்.

உங்க டவுசரை காப்பாத்தவே உங்களால் முடியல, இதுல திராவிட மானத்தைக் காப்பாற்ற கிழிக்கப் போறிங்களாக்கும்  என்று சைடில் கேட்கும் குரலை தவிர்க்க முடியவில்லை.  இந்தச் சுயமரியாதை சுய நினைவு எத்தன நொடி உயிர்வாழும் என்பது தினகரனுக்கே வெளிச்சம் !   கழுத்தைப் பிடித்து நெறிக்கும் நேரத்தில்கூட யாரோ சதி செய்கிறார்கள்,  அ.தி.மு.க. வை அழிக்க சதி  யாரோ…  யாரோ.. என்று மங்கலாக பேசிய தினகரனை நம்பி, நீட்டிய நாக்கை வேறு திசைக்கு  வாடகைக்கு விட இன்னோவாவுக்கு இராமாயணத்திலோ மகாபாரதத்திலோ இன்னொரு உதாரணம் கிடைக்காமலா போகும் !

அதாவது இவர்கள் கட்சிக்கு  ஆபத்து என்றால், சொத்துக்கு ஆபத்து என்று நாம் புரிந்துகொள்ள வேண்டும்.   கட்சி என்பது வெறும் கள்ளச்சாவிதான், சொத்துக்கு ஆபத்து என்றால் அதையும் கைமாற்றிக் கொள்ளத் தயங்காதவர்கள்தான் இந்த அம்மா ஆவிகள்.   காவிரி மேலாண்மை வாரியம் மறுப்பு, நீட் தேர்வு, ஹைட்ரோ கார்பன் – மீத்தேன் திட்டம் திணிப்பு, கெயில் எரிவாயு குழாய் பதிப்பு, வறட்சி நிவாரணம் புறக்கணிப்பு,  விவசாயக் கடன் தள்ளுபடி, விவசாயிகள் கோரிக்கைகளை முன்வந்து பேச மறுக்கும் கொழுப்பு,  என தமிழகமே அழிக்கப்படுவதைப் பற்றி இம்மியும் கவலைப்படாத,  இதற்காக  ஒரு  பேச்சுக்கும் கூடாத  இந்த அ.தி.மு.க.  என்ற கொள்ளைக்கூடாரம் பல அணிகளாய் இன்னும் நீடிப்பதுதான் வரலாற்றின் துயரம்.  சங்கபரிவாரத்தின் தமிழகத்து சுங்க பரிவாரமாய் வலம் வரும் இவர்கள் இருந்தால் என்ன? தொலைந்தால் என்ன?

ஒன்றாக இணைய நிபந்தனை விதிக்கும் பன்னீருக்கு,  மக்களின் ஒரு கோரிக்கை நிறைவேற நிபந்தனை விதித்து அரசியல் செய்ய தகுதி உண்டா?  அன்றாடம் விவசாயிகளை சாகடிக்கும் ஆட்சியை நடத்திய திடீர் யோக்கியரின்  ஒரே தாரக மந்திரம் அம்மாவின் மரணத்திற்கு நீதி விசாரணை !   இந்த டெட்பாடி அணிக்கும் எடப்பாடி அணிக்கும் கொள்ளையடித்ததை  பங்கு போடுவதைத் தவிர வேறு என்ன கொள்கை முரண்பாடு ! மக்களது பிரச்சனைக்காக வாதாட, போராட தகுதியற்ற இவர்கள்  நம்மை ஆள நினைப்பது தான் சகிக்கமுடியாத கொடூரம்.   ஒரு குடும்பத்தை மட்டுமல்ல,  களவாணிகளுக்குள் நடக்கும் தர்மயுத்தத்திற்கு  கிருஷ்ண பரமாத்மா வேலைபார்க்கும் பா.ஜ.க.வையும் சேர்த்து தமிழகத்தைவிட்டே தள்ளி வைக்கவேண்டிய நேரம் இது. சட்டவிரோத, தேசவிரோதக் கும்பல்களான இவர்களுக்கு நம்மை ஆளும் தகுதி உண்டா?

சங்கபரிவாரத்தின் தமிழகத்து சுங்க பரிவாரமாய் வலம் வரும் இவர்கள் இருந்தால் என்ன? தொலைந்தால் என்ன?

ஒரு குடம் தண்ணீருக்காக சாலையில் வந்து நாம் போராடினால் சட்டம் – ஒழுங்கு மீறக்கூடாது என்று போலீசை வைத்து அடிக்கும் இவர்கள் சட்டத்தை மதிப்பவர்களா ?  உயர்நீதி மன்றமே மதுக்கடைகளை மூடச்சொன்னாலும், மக்கள் குடியிருப்பில் வந்து திறக்கும் இவர்கள் சட்டத்தை மதிப்பதுண்டா ?  காவிரியில் தண்ணீர் திறந்துவிடச்சொல்லி உச்சநீதி மன்றமே உத்திரவிட்டாலும் மறுக்கும் கர்நாடக அரசு சட்டத்தை மதிக்கிறதா ?  இல்லை உத்திரவிட்ட உச்சநீதி  மன்றம் தான் சட்டத்தை மதித்து ஆவண செய்கிறதா ?  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கச்சொல்லி உச்சநீதிமன்றம் உத்திரவிட்டால்,  அதைச் சொல்ல நீதிமன்றத்துக்கு  உரிமை இல்லை என்கிறது மோடி அரசு !  அரசே சட்டத்தை மதிக்காத போது தாமிரவருணியில் மட்டும் சட்டத்துக்கு கட்டுப்பட்டு நாம் கோக்குக்கு  கொடுக்கவேண்டுமா நமது ஆற்றை.  அனைத்து பள்ளி, கல்லூரி, விடுதிகளிலும் கழிவறை, குடிநீர் வசதி இருக்கவேண்டும் என்கிறது சட்டம்,  நீதி மன்ற உத்திரவு.  அரசு சட்டத்தை மதிக்கிறதா ?  தொழிலாளிக்கு வரையறுக்கப்பட்ட  ஊதியத்தை வழங்கும் சட்டத்தை எந்த முதலாளியாவது மதிக்கிறானா ?  ஆளும் வர்க்கமும் அதிகார வர்க்கமும்,  முதலாளிகளும் மதிக்காத சட்டத்தை நாம் மட்டும் மதிக்க வேண்டும் என்பது என்ன நியாயம் ?

போராட்டம் தான் நமக்கு அதிகாரத்தை பெற்று தந்திருக்கிறது, அந்த அதிகாரம்தான் இன்று சட்டப்படியான உரிமைகளைக் கூட பெற்றுத் தந்திருக்கிறது.  மக்கள் திரண்டு  போராட அதிகாரத்தை கையில் எடுத்துதான் டாஸ்மாக்கை மூடி இருக்கிறார்களே ஒழிய, சட்டமும் சரக்கடித்துதான் கிடக்கிறது.  மக்கள் ஒன்று திரண்டு  போராடி அதிகாரத்தை பயன்படுத்தினால்தான் ஒரு குடம் தண்ணீர் கிடைக்கிறது.  மின்சாரம் கிடைக்கிறது.  மக்களது பிரச்சினைகளைத் தீர்க்க மக்கள் போராட்டங்கள் தான் உதவி இருக்கிறதே ஒழிய இவர்களது ஆட்சி எது ஒன்றையும் செய்ததில்லை.  மாறாக போராடும் மக்களை ஒடுக்கவும், உதைக்கவும் நமக்கு  ஒரு அரசு தேவையா ?   இவர்கள் மட்டுமல்ல இந்தக் கட்சிகளும், அரசும், அரசுக் கட்டமைப்பும் நம்மை ஆளும் அருகதையற்று போய்விட்டன என்பதுதான் இந்தத் தருணம் உணர்த்தும் உண்மை.

தமிழகம் போராட்ட அரசியலின் புதுக் குறியீடாக எழுந்து நிற்கிறது.  மக்கள் தங்களது அதிகாரத்தின் சுவையை உணர ஆரம்பிக்கும் அரசியல் திசையில் அடியெடுத்து நிற்கிறார்கள்.  இந்தக் கட்டமைப்புக்கு உள்ளேயே எந்தப் பிரச்சனையையும் தீர்க்க முடியாது என்பது திண்ணமான அனுபவமாகி வருகிறது.  ஏன் ஆளும் வர்க்கமே, அரசு உறுப்புகளே தானே வகுத்துக் கொண்ட கட்டமைப்புக்குள்ளாக மட்டுமா இயங்குகின்றன?  எந்தப் பாராளுமன்றம்,  மக்கள் மன்றத்தில் விவாதித்து மோடி  பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்தார்?  எந்த அரசமைப்பிற்குள் நின்று கொண்டு பசுவை பாதுகாக்க மனிதர்களைக் கொள்கிறது இந்துத்துவக் கும்பல்?  பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தையே நீதிமன்றத்துக்கு வெளியே பேசித்தீர்த்துக்கொள்ளச் சொல்வது  எதைக் காட்டுகிறது?  இல்லை, வெளியே வந்த ‘பணக் கன்டெய்னர்’ எந்தக் கட்டமைப்பிற்கு உள்ளே போய் நிற்கிறது !  ஆள்பவர்களே இந்தக் கட்டமைப்புக்குள்  எதையும் தீர்க்க முடியாது என தகர்த்து வெளியே போய் தமது நலன்களை அடையும் போது,  மக்களுக்கு இந்தக் கட்டமைப்பை கட்டி அழ வேண்டும் என்று எந்தத் தேவையும் இல்லை.  மக்கள் தங்களுக்கான அதிகாரத்தை கையில் எடுப்பதன் மூலம்தான் இனி ஜனநாயகமே சாத்தியம் என்ற அரசியலின் பக்கம் கவனம் கொள்ள வேண்டும் அவசியத்தை உணர்த்துவதுதான் நடக்கும் ஒவ்வொரு அரசியல் நிகழ்வும்.

அரசியல்கட்சிகள், அரசு, ஆளும் வர்க்கம் அதிகாரவர்க்கம் இந்தக் கூட்டுக்களவாணிகளை முன்னறிந்து நமக்கான அரசியல் அதிகாரத்தை மக்களிடம் திரட்டுவதுதான் மக்கள் அரசியல்.  இவர்கள் சமாதிக்கு ஓடுவதும்,  நடு ராத்திரியில் அலைவதும், அவ்வப்போது ‍ரெய்டுக்கு போஸ் கொடுப்பதும்தான் தமிழகத்து பரபரப்பு அரசியல் என்றும் அடுத்து என்ன? அடுத்து என்ன? என்றும் படம் காட்டுகின்றன ஊடகங்கள்.    மக்கள் அதிகாரம்தான் அனைத்துக்கும் என்ற முழு உண்மையையும் தமிழகம்  கண்ணில் காட்டும் வரை பிரேக்கிங் நியூசும்,  பின்னணி இசையும் இருக்கத்தான் செய்யும்!

– துரை. சண்முகம்

டாஸ்மாக் – ஏப்ரல் 25 வேலைநிறுத்தம் – களச்செய்திகள்

0

ழைய தருமபுரி பஞ்சாயத்திற்கு அருகில் உள்ள கே. என் நடு அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட மாநில நெடுஞ்சாலை பேருந்து நிறுத்தம் அருகில் இருந்த டாஸ்மாக் கடையை உச்சநீதிமன்ற உத்தரவின் படி மாவட்ட நிர்வாகம் அகற்றியது.

ஆனால் ஏற்கனவே இருந்த கடையிலிருந்து 50 அடி தூரம் தள்ளி கடையை நிறுவ பழைய தருமபுரியைச்சேர்ந்த குடவை என்கிற சின்னப்பையனின் மகன் மணிமேகன் என்பவர் தனது நிலத்தில் அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுத்து  மதுகடைவைக்க கட்டிடம் கட்டிவருகிறார். இத்தனைக்கும் சிபிஐ கட்சியைச்சேர்ந்த கிளைச்செயலாளரான சின்னராஜ் என்பவரது தைரியத்தில்தான் இவர் கட்டிடம் கட்ட அனுமதி கொடுத்துள்ளார்.

இந்நிலையில் இக்கடையை மூட ஊர்த்தலைவர்களை மக்கள் அதிகாரம் தோழர்கள் சந்தித்து பேசினர். அவர்களும் உற்சாகத்தோடு ஏற்றுக்கொண்டனர். இதன் அடிப்படையில் மனுநாளில் ஊர்தலைவர்களுடன் மக்கள் அதிகாரம் தோழர்களும் சென்று மனு கொடுத்தனர்.

மனுநாளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருக்கவேண்டும். ஆனால் அன்று பத்திற்கும் மேற்பட்ட ஊர் மக்கள் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி மனுகொடுக்க வந்திருந்த்தால் மாவட்ட ஆட்சியர் மனுவை பெறாமல் அந்த துறை அதிகாரிகளே பெற்றனர். அதன்படி கலால் மற்றும் ஆயத்தீர்வை அதிகாரியான பெண் அதிகாரியிடம் மனுகொடுக்கப்பட்டு பாதிப்புகள் பற்றி விளக்கி பேசப்பட்டது. ஆனால் இதை ஏற்காத அந்த அதிகாரி அரசாங்கம் கடைகளை வைக்கச் சொல்கிறது என்றார்.

இந்நிலையில் மக்கள் அதிகாரம் தோழர்கள் சுவரொட்டி, மெகாஃபோன் பிரச்சாரம் என்ற வகையில் மக்களிடம் பிரச்சாரம் செய்து அணிதிரட்டினர். மேலும் ஏரி வேலை செய்யும் பெண்களையும் சந்தித்து பேசினர். இந்நிலையில் ஊர் தலைவர்கள் 20 பேர் சென்று நிலம் கொடுத்த மணிமேகனிடம் பாதிப்பைக்கூறி நிலம் டாஸ்மாக்கிற்கு தருவது தவறு என பேசினர். ஆனால் அவர் திமிராக மறுக்கவும் ஊர் தலைவர்கள் ஆத்திரம் அடைந்து வந்துவிட்டனர்.

இந்த நிலையில் மணிமேகன் சிபிஐ சின்னராஜ் வழிகாட்டலில் மாவட்ட ஆட்சியருக்கு மனுகொடுத்துள்ளார். இதில் ஊர்த்தலைவர்கள் மீது பொய்க்குற்றச்சாட்டுகளையும் அவமானப்படுத்தும் வகையிலும் எழுதப்பட்டிருந்தது. இது மேலும் ஊர் மக்களை ஆத்திரம் கொள்ள வைத்தது. இது குறித்து கேட்க சென்ற மக்களை அவமதித்து நடந்து கொண்டார். இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள் அவனுக்கு தர்ம அடிகொடுத்தனர்.

மேலும் சுமார் 300-க்கும் மேற்பட்டவர்களை திரட்டி காலை 11 மணிக்கு மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டம் பகுதிமக்களிடம் கடையை உடைக்க வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளது.

(படங்களை பெரிதாக பார்க்க அதன் மேல அழுத்தவும்)

தகவல்:
மக்கள் அதிகாரம், தர்மபுரி


ஏப்ரல் 25 பந்த் – மோடியிடம் கெஞ்சாதே, தமிழகமே போராடு !

இது ஜல்லிக்கட்டில் டெல்லியை பணியவைத்த தமிழகம் !

தமிழனத்தின் எதிரிகளுக்கு பாடம் புகட்டுவோம் !

தகவல்
மக்கள் அதிகாரம்
சென்னை – 91768 01656


சத்தியபாமா பல்கலைக்கழகத் தொழிலாளர் போனஸ் வழக்கில் உயர்நீதிமன்றத்தில் வெற்றி

போனஸ் பெறுவது தொழிலாளர் உரிமையே !
கட்டணக் கல்வி சேவையாகாது !
தனியார் கல்வி நிறுவனங்கள் லாபமீட்டும் நிறுவனமே !

தொழிலாளர்களே !
புரட்சிகர சங்கத்தில் உறுப்பினாராவோம் !
தொடர்ச்சியான போராட்டமே வெற்றிக்கு வழி !!

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
புதிய ஜனநாயக வாகன ஒட்டுநர்கள் மற்றும் டெக்னீஷியன்கள் சங்கம்
சென்னை – 94871 51165

தணல்

1

ஏப்ரல் – 22 – தோழர் லெனின் பிறந்த நாள்

இந்தியாவில் புரட்சி வருமா?
ஏங்குகிறார்கள் சிலர்.

இந்தியாவிலெல்லாம்
புரட்சி வராதுங்க…
புலம்புகிறார்கள் சிலர்.

இந்தியாவில்
புரட்சி வரவேண்டுமெனில்
இங்கொரு
லெனின் வரவேண்டும்…
விரும்புகிறார்கள் சிலர்.

ஏன்,
புரட்சிக்கு நீங்கள் வருவதில்
என்ன பிரச்சினை?

புரட்சியல்லாது
உங்களுக்கு
வேறென்ன வேலை?
கேட்கிறார் லெனின்

பேசுவதல்ல
செய்வதற்கு பெயர்
லெனின்!

மெரினா
விரிந்து கிடக்கிறது
நெடுவாசல்
நீண்டு கிடக்கிறது
தில்லி ஜந்தர் மந்தர்
பிடிவாதம் பிடிக்கிறது…
உடனே புரட்சி வேண்டுமென
ஒவ்வொரு தருணமும் துடிக்கிறது.

உழைக்கும் வர்க்கம்
நீங்கள் எனில்
இதற்கென இயங்காமல்
எது உங்கள்
இதயத்துடிப்பை மறுக்கிறது?

பிஞ்சுக்குரல்கள்
டாஸ்மாக் எதிர்ப்பில் வெடிக்கிறது.
ஒரு குடம் தண்ணீருக்காக
நம் பெண்களின் கர்ப்பம்
தவிக்கிறது…
பிறப்புறுப்பையே
சாதிவெறி அறுக்கிறது…

காவிக் கொலைகாரர்களின்
கையில்
சிக்கிக்கொள்பவர்களின் குரல்
நம் ஈரக்குலையில் ஒலிக்கிறது.
மூலதனம்
தன் கோரைப் பல்லை
நம் கருவறை வரை  பதிக்கிறது…

வர்க்கப்போராட்டத்தின் தணல்
வாசல் தோறும் தகிக்கிறது..

புரட்சியின் ஒவ்வொரு அசைவினிலும்
உன்  பெயரும் சேர்ந்தே இருக்கிறது

கொடுமைகள்
எதிரியிடம் மட்டும்
உயிர் வாழ்வதில்லை
நம் இயலாமையாலும் வாழ்கிறது
அயற்சியடைய நியாயமில்லை
அச்சம் உதறி போராடு!

வர்க்கத் தாய்மடி இணைந்து கொள்ள
லெனின் பிறந்தநாள் அழைக்கிறது!

– துரை. சண்முகம்

மோடி அரசுக்கு பாடை கட்டு ! எடப்பாடி அரசுக்கு முடிவு கட்டு !

0

டெல்லியில் விவசாயிகள் தொடர்ச்சியாக 35 நாட்களுக்கும் மேலாகவும் பல்வேறு வழிகளில் கவன ஈர்ப்பு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அரை நிர்வாணமாய் தொடங்கி, முழு நிர்வாணமும் ஆனார்கள், விவசாயிகள். ஆனால் விவசாயிகள் பிரச்சினையை தீர்க்க தனக்கு வக்கில்லை என அம்மணமாய் நின்றது மத்திய மாநில அரசுகள். விவசாயிகள் போராட்டமானது அனைவருக்கும் சொந்தமானது என்பதை உணர்ந்த சென்னை மதுரவாயல் நொளம்பூர் பகுதி மக்கள் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியை அணுகினர்.

பகுதிமக்களும் புமாஇமு தோழர்களும் ஒன்றிணைந்து 19/04/17 அன்று மாலை  மதுரவாயல் ரேஷன்கடை பேருந்து நிறுத்தம் அருகில் நொளம்பூர் பகுதி செயலாளர் தோழர் கணேசன் தலைமையில் சுமார் 70 பேர் விவசாயிகளின் கதறலுக்கு பதிலளிக்காமல் அலட்சியப்படுத்தி அவமதித்து வரும் மோடி அரசுக்கு பாடைகட்டு! டாஸ்மாக்-கை முட வக்கில்லாத எடப்பாடி அரசுக்கு முடிவு கட்டு ! என்கிற தலைப்பில் போராட்டத்தை தொடங்கினர்.

சிறுவர்கள் செங்கொடியுடன் முழக்கமிட்டவாறு அணிவகுக்க, மோடி படத்திற்கு செருப்பு மாலை அணிவித்து நொளம்பூர் தொடங்கி மதுரவாயல் பேருந்து நிறுத்தம் வரை சென்றனர். போராட்டத்தை மக்களுக்கு தெரியா வண்ணம் தடுப்பரண்களை அமைத்து, மறைத்து நின்றது போலீசு. உடனே சுதாரித்துகொண்டதோழர்களும் பொதுமக்களும் பேருந்து நிறுத்தத்திற்கு நேரடியாக சென்றனர். இதை எதிர்பார்க்காத போலீசார் போராட்டத் தலைவரான தோழர் கணேசனிடம் வந்து கெஞ்சி நின்றது. முழக்கமிட்டவாறு போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது மோடியின் உருவபொம்மைக்கு ஊர் பெண்கள் செருப்பு மாலை அணிவித்தார்கள். உடனே அரசின் விசுவாசமிக்க ஏவல் படையான போலீசு, பதறியடித்துக் கொண்டு வந்து, தயவுசெய்து அத மட்டும் கீழ போடுங்க என்று கெஞ்சியது.
பின்பு புமாஇமு சென்னை கிளை இணை செயலாளர் தோழர் சாரதி பத்திரிகைகளிடம் பேசிய போது நடிகர், நடிகைகளையும், வெளிநாட்டு தலைவர்கள் சுற்றுலா வந்தாலும் உடனடியாக சென்று பார்க்கும் மோடிக்கு, நமது விவசாயிகளை சந்திக்க நேரம் இல்லையா? 35 நாட்களுக்கும் மேலாக பல்வேறு வகையில் போராடுவதை பார்த்தும் துளியும் மதிக்காத மத்திய அரசுக்கு பாடைகட்டுவதை தவிர வேறு வழியில்லை, இன்னொரு புறம் ஊர் தாலி அறுக்கும் டாஸ்மாக் கடைகளை மூட வக்கில்லாத எடப்பாடி அரசுக்கு முடிவு கட்டவேண்டும் என நேர்காணல் அளித்தார்.
 தகவல்
புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி
சென்னை-9445112675

கோக் பெப்சி புறக்கணிப்பு : சென்னையில் ஒரு கருத்துக் கணிப்பு

1

மிழகத்தில் காளைக்காக நடந்த போராட்டமானது காவிகளை மட்டுமல்ல, கார்பரேட்களையும் கலங்கச் செய்தது. அமெரிக்க மோகம் மற்றும் நுகர்வு மோகத்தாலும், கிரிக்கெட் நட்சத்திரங்கள், சினிமா நடிகர்கள் ஆகியோரின் விளம்பர மோகத்தாலும் இளைஞர்களிடையே ஒரு பண்பாடாக பரவி இருந்த கோக் – பெப்சியை அதே இளைஞர்களே சுயமரியாதை உணர்வோடு மெரினா போராட்டத்தில் சாலைகளில் ஊற்றி ”அமெரிக்க கோலா பானங்களைத் தடை செய்” என முழக்கமிட்டனர்.

இந்தியாவில் வேறெங்கும் இல்லாத வகையில் கோக், பெப்சி புறக்கணிப்பு முழக்கம் மக்களின் முழக்கமாக மாறியது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் உள்ள வணிகர் சங்கங்கள் கோக் – பெப்சியை புறக்கணிப்பதாக அறிவித்தனர்.

இந்த புறக்கணிப்பைப் பற்றி கடந்த மார்ச் மாதத்தில் வினவு செய்தியாளர்கள் மேற்கொண்ட கள ஆய்வில் கணிசமான வணிகர்கள் உணர்வுப்பூர்வமாகவே அதனை அமுல்படுத்தியிருந்தனர். பல வாடிக்கையாளர்களும் இந்திய குளிர்பானத் தயாரிப்புகளைக் கேட்டு வாங்க ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்தனர். ஆனாலும் பொதுவில் கோடைக்காலம் ஆரம்பிக்கும் போது தான் கோக்-பெப்சி குறித்த மக்களின் மனநிலை தெரியவரும் என்றனர்.

வணிகர்களைப் பொறுத்தவரை அவர்கள் அரசியல் ரீதியாக புறக்கணிக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. அவர்களுக்கு வாடிக்கையாளர் கேட்கும் சரக்கு வேண்டும். பல கடைகளில் மக்கள் வாங்குவதில்லை என்பதால் கோக் பெப்சி இருப்பில்லை என்றனர். சில கடைகளில் புறக்கணிப்பிற்கு முன்பே வாங்கிய இருப்பு இன்னும் இருப்பதாக கூறினர். சில கடைக்காரர்கள் கோக் பெப்சி தொடர்ந்து வாங்குவதாகக் கூறினர். சில வணிகர்கள் உணர்வுப் பூர்வமாகவே புறக்கணித்தனர். இருப்பினும் அனேகர் கூறியது என்னவென்றால் மக்கள் வாங்குவது, புறக்கணிப்பதை வைத்தே கோக் பெப்சி விற்பனை தொடரும் அல்லது குறையும்.

சரி, அதையும் நேரில் அறியலாம் என்று இந்த கணிப்பை மேற்கொண்டோம்.

இதோ, கோடைகாலம் தொடங்கி விட்டது. ஏப்ரல் மாத துவக்கத்திலேயே வரவிருக்கும் தண்ணீர் பஞ்சமும் நம் கண் முன்னே தெரிய ஆரம்பித்துவிட்டது. எனவே இந்த சமயத்தில் கோக் – பெப்சி பற்றி மக்களின் கருத்ததை அறிவது இன்னும் பொருத்தமாகவும் இருக்கும்.

கடந்த 9.4.2017 ஞாயிறு அன்று சுமார் 15 தோழர்கள் இக்கணிப்பை மக்களிடம் நடத்தினர். சென்னை நகரில் மட்டும் மேற்கொண்ட இக்கணிப்பில் வடபழனி, வடபழனி முருகன் கோவில், கோடம்பாக்கம், திருவல்லிக்கேணி, மீர்சாப்பேட்டை, மெரினா கடற்கரை ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் பங்கேற்றனர்.

முதன்முறையாக இக்கணிப்பை சர்வே விண்ணப்பங்களுக்கு பதில் கேள்விகளை படித்துக் காண்பித்து பதில்களை செல்பேசியில் ஒரு செயலியில் பதிவு செய்து கொண்டோம். இதன் மூலம் மக்களுக்கு கேள்விகளை தெளிவாக விளக்கி பதிலை வாங்கலாம் என்பதோடு பிறகு கருத்துக் கணிப்பு முடிந்த பிறகு தனியாக கணினியில் விவரங்களை உள்ளீடு செய்யும் பெரும் பணி மிச்சம். அந்த வகையில் இதை ஒரு சோதனை முயற்சியாகவும் மேற்கொண்டோம். எதிர்காலத்தில் இத்தகைய ஸ்மார்ட் ஃபோன் மூலம் மேற்கொள்ளப்படும் சர்வேயை பரந்து பட்ட மக்களிடம் எடுத்த கையோடு முடிவுகளை வெளியிடுவதையும் செய்ய முடியும்.

கணிப்பைப் பொறுத்த வரை பெரும்பாலான மக்கள் பொதுவில் கோக் பெப்சியை குடிப்பதே இல்லை. நடுத்தர வர்க்கம், ஐ.டி போன்ற மாதச் சம்பளம் வாங்கும் பிரிவினரைத் தாண்டி மற்றவர்களிடம் இக்குளிர்பானங்களை குடிக்கும் பழக்கம் இல்லை. டாஸ்மாக் மிக்சிங்கிற்காக சிலர் வாங்குகிறார்கள். அதிலும் நீரை பயன்படுத்தும் மக்களே அதிகம். இக்கணிப்பில் கோக் பெப்சியோடு தண்ணீர் தனியார் மயம் குறித்தும் சில கேள்விகள் இருக்கின்றன. தண்ணீருக்காக அதிகம் செலவழிக்கும் நிலை வந்தாலும் மக்கள் தண்ணீரை தனியாருக்கு விடுவதை எதிர்க்கின்றனர்.

தாமிரபரணி தண்ணீரை தாரை வாய்ப்பதை எதிர்க்கும் மக்கள் வணிகர் சங்கங்களின் கோக் பெப்சி புறக்கணிப்பை வரவேற்கின்றனர். மொத்தம் 511 பேர்களிடம் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பின் முடிவுகள் தமிழக மக்களின் மன ஓட்டத்தை காட்டுவதாக இருக்கின்றன.

கருத்துக் கணிப்பில் கேட்க்கப்பட்ட கேள்விகள் – அதற்கு மக்கள் அளித்த பதில்கள்

1. உங்கள் வீட்டில் எந்தக் குடிநீர் உபயோகிக்கிறீர்கள் ?

————————————-

2. அரசாங்கம் தண்ணீர் வியாபாரத்தை அனுமதிப்பது

—————————————–

3. அரசாங்கம் மக்களுக்கு தரமான இலவச குடிநீர் வழங்காமலிருக்கக் காரணம் ?


4. தாமிரபரணி நீரைக் கோக் நிறுவனம் எடுக்கலாம் என நீதிமன்றம் தீர்ப்பு சொன்னது சரியா ?


5. வணிக சங்கங்கள் – கோக் பெப்சி விற்பதில்லை என அறிவித்திருப்பதை ஆதரிக்கிறீர்களா ?


6. லிம்கா ஃபாண்டா போன்ற குளிர்பானங்கள் எந்த நிறுவனத்திற்கு சொந்தமானது ?


7. “பெப்சி, கோக் விற்பனைக்கு தடை விதிக்க முடியாது” என மத்திய அரசு கூறுவதை ஆதரிக்கிறீர்களா ?


8. இதற்கு முன்னால் கோக், பெப்சி குடித்து வந்திருந்த நீங்கள், தற்போது குடிப்பதை நிறுத்தியிருந்தால் அதற்கு என்ன காரணம் ?


9. கோக், பெப்சி விளம்பரத்தில் நடிகர்கள் தோன்றுவது


ஆய்வு – ஒருங்கிணைப்பு: வினவு கருத்துக் கணிப்புக் குழு

ஹிந்தியைத் திணிக்கும் மோடி ! மீண்டும் தொடங்குவோம் டெல்லிக்கட்டு !!

6

ந்திய அரசின் அலுவலக மொழியாக இந்தியை கொண்டு வருவதற்கான 117 பரிந்துரைகளைக் கொண்ட ”அலுவலக மொழிக்கான பாராளுமன்றக் கமிட்டி”யின் அறிக்கையை, சிறு  திருத்தங்களோடு சட்டமாக்குவதற்கு  குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். இந்த அறிக்கை மற்ற அமைச்சகங்களுக்கும், மாநிலங்களுக்கும் பிரதமர் அலுவலகத்துக்கும் ஒப்புதல் பெற அனுப்பப் பட்டுள்ளது . ஒப்புதல் பெறப்பட்டவுடன் இந்த அறிக்கையில் உள்ள பரிந்துரைகள் அனைத்தும் மோடி அரசால் சட்டமாக்கப்பட்டு நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும்.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஓய்வு பெறுவதற்கு முன்னர் இந்தித் திணிப்பிற்கு ஒப்புதல் கொடுக்கிறார்.

இவ்வறிக்கையின் படி, இனி அமைச்சர்கள், குடியரசுத் தலைவர் மற்றும் அனைத்து முக்கிய அரசு பிரமுகர்களும், அவர்களுக்கு ஹிந்தி தெரிந்திருக்கும் பட்சத்தில் ஹிந்தியில் மட்டுமே உரையாற்ற வேண்டும். ’ஏர்-இந்தியா’  நிறுவனத்தில் இனி டிக்கெட்டுகள், பத்திரிக்கைகள் மற்றும் செய்தித்தாள்கள் அனைத்தும் கணிசமான அளவில் ஹிந்தியில் மட்டுமே இருக்க வேண்டும். அதோடு தனியார் வான்வழிப் போக்குவரத்து நிறுவனங்களுக்கும் இதனை வலியுறுத்த வேண்டும்.

மற்றும் மத்திய அரசின் பள்ளிக் கல்வி நிறுவனங்களான, சி.பி.எஸ்.ஈ. மற்றும் கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளில்  10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஹிந்தியைக் கட்டாயப் பாடமாக்கும் திட்டத்திற்கு கொள்கையளவிலான ஒப்புதலை குடியரசுத் தலைவர் அளித்திருக்கிறார். இதனை அடிப்படையாக வைத்து மோடி அரசு மாநில அரசுகளிடம் பேசி அதனடிப்படையில் மொழிக் கொள்கையை வகுக்கும்.

ஹிந்தி மொழி பேசாத மாநிலங்களில் உள்ள பல்கலைக் கழகங்கள், தேர்விலும், நேர்காணலிலும் மாணவர்கள் ஹிந்தி மொழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் பரிந்துரைத்திருக்கிறது இந்த அறிக்கை. அதே போல அரசு, தகவல் பரிமாற்றத்திற்கு உபயோகித்துக் கொள்ள ஹிங்கிலிஸ் (ஹிந்தியை ஆங்கிலத்தில் எழுதுவது) வார்த்தைகளை உள்ளடக்கிய அகராதி ஒன்றை உருவாக்க வேண்டும் எனவும் பரிந்துரைக்கிறது.

இந்தப் பரிந்துரைகளில் சில பிரணாப் முகர்ஜிக்கே மிகவும் ‘ஓவராக’த் தெரிந்ததாலோ என்னவோ, அவரால் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன. அதாவது பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களின் அனைத்து உற்பத்திப் பொருள்களிலும் அச்சிடப்படும் தகவல்களும் ஹிந்தியிலும், பொருட்களின் பெயர் தேவநாகரியிலும் அச்சிடப்பட வேண்டும் என்ற பரிந்துரையைத் தமது கார்ப்பரேட் எஜமானர்களின் நலன் கருதி நிராகரித்துள்ளார் பிரனாப் முகர்ஜி. எனினும் அனைத்து அரசு, அரசு சார் நிறுவனங்களின் பொருட்களின் பெயரும் கண்டிப்பாக ஹிந்தியில் இருக்க வேண்டும் என்பது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  அதோடு அரசு வேலைவாய்ப்புகளுக்கு கண்டிப்பாக குறைந்த பட்ச அளவில் ஹிந்தி தெரிந்திருக்க வேண்டும் என்ற பரிந்துரையையும், நடைமுறை சிக்கல் கருதி நிராகரித்திருக்கிறார்  குடியரசுத் தலைவர்.

இந்நிலையில், ஒன்றாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கட்டாயம் ஹிந்தி சொல்லித் தர உத்தரவிட வேண்டும் எனக் கடந்த ஏப்ரல் 14 அன்று பாஜகவின் பேச்சாளரும் வழக்கறிஞருமான அஸ்வினிகுமார் உபாத்யாய் என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அவர் முன் வைத்துள்ள வாதங்களின் படி இந்தியாவில் 1968-ம் ஆண்டு மத்திய அரசு முடிவெடுத்த மும்மொழிக் கொள்கையை பல மாநில அரசுகள் பின்பற்றுவதில்லை – குறிப்பாக ஹிந்தி மொழி பேசாத மாநிலங்கள் பின்பற்றுவதில்லை. எனவே அத்தகைய நிலையைப் போக்கி ‘தேசிய மொழியான’ ஹிந்தியை அனைத்து மாநிலங்களிலும் கட்டாய மொழியாக்க உத்தரவிட வேண்டும் என்ற வாதத்தை முன்வைத்து வழக்கு தொடுத்துள்ளார்.

பள்ளிகளில்  மாணவர்களுக்கு கட்டாயமாக்கப்படும் ஹிந்தி

குறிப்பாக ”ஹிந்துஸ்தான் என்ற பெயரே, ஹிந்தி மொழியை அதிகமாகப் பேசும் மக்கள் இருப்பதால் தான் வந்தது” என்ற புதிய கண்டுபிடிப்பையும் இவ்வழக்கின் முக்கியமான வாதமாக முன் வைத்திருக்கிறார்கள் என்றால் இவ்வழக்கின் ”ஹிந்து – ஹிந்தி – இந்தியா” தன்மையைப் புரிந்து கொள்ளுங்களேன்.

இதற்கு முன்னரே, இரகசிய சுற்றறிக்கைகள் மூலம் சி.பி.எஸ்.ஈ. பள்ளிகளில் சமஸ்கிருதத் திணிப்பு, உயர்கல்வி நிறுவனங்களில் சமஸ்கிருத்த் திணிப்பு என சேட்டையைக் காட்டி வந்த பாஜக, சமீபத்தில் நெடுஞ்சாலைத் துறை, வங்கிகள் ஆகியவற்றின் மூலமும் கொல்லைப் புற வழியாக தமிழகத்திற்குள் ஹிந்தியைத் திணித்து வருகிறது.

குறிப்பாக தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து மைல் கற்களிலும் ஆங்கிலத்தை நீக்கி விட்டு ஹிந்தியில் ஊர்களின் பெயரை எழுதியது.  அதனைத் தொடர்ந்து பல இடங்களில், கருப்பு மை பூசி ஹிந்தியை அழித்தனர் தமிழக இளைஞர்கள். அடுத்த படியாக கடந்த 2 மாதங்களில் பல வங்கிகளின் ஏடிஎம்களிலும் தமிழ் மொழித் தேர்வு செய்வதற்கு இருந்த வாய்ப்பு நீக்கப்பட்டுள்ளது. ஹிந்தி அல்லது ஆங்கிலத்தில் ஏதேனும் ஒன்று மட்டுமே தகவல் பரிமாற்ற மொழியாகத் தேர்ந்தெடுக்க முடியும். இப்படி நேரடியாகவும், பின்வாசல் வழியாகவும் தமிழகத்திற்குள் ஹிந்தியைத் திணிக்க எத்தனித்து வருகிறது பாஜக – ஆர்.எஸ்.எஸ். கும்பல்.

தற்போது ஒப்புதலைப் பெற்றுள்ள அலுவலக மொழிக்கான பாராளுமன்றக் குழுவின் இந்தப் பரிந்துரைகள் கடந்த காங்கிரசு ஆட்சிக் காலத்திலேயே முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் தலைமையில் 2011-ம் ஆண்டில் சமர்ப்பிக்கப்பட்டவையே. கடந்த 6 ஆண்டுகளாக தூங்கிக் கொண்டிருந்த இவ்வறிக்கை, தற்போது மோடி அரசின் கீழ், பிரணாப் முகர்ஜியின் ஆட்சிக்காலம் முடியும் தருவாயில் அவசர அவசரமாக சட்டமாக்கப்பட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து மைல் கற்களிலும் ஆங்கிலத்தை நீக்கி விட்டு ஹிந்தியில் ஊர்களின் பெயரை எழுதியது மோடி அரசு

சுதந்திரம் அடைந்த பிறகு அலுவலக மொழியாக இந்தியைக் கொண்டு வர இந்தக் கமிட்டியால் இதுவரை 9 முறை அறிக்கைகள் சமர்ப்பிக்கப் பட்டன.   எனினும் ஹிந்தி பேசாத மாநிலங்களின் எதிர்ப்புக் காரணமாக கிடப்பில் போடப்பட்டிருந்த இத்தகைய பரிந்துரைகள், தற்போது தனிப் பெரும்பான்மையுடனும், பாசிசத் தன்மையுடனும் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துள்ள பாஜக கும்பலால் நடைமுறைப்படுத்தபட உள்ளன.

1938-ம் ஆண்டு தொடங்கி எழுச்சியுறு இந்தி எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தி தனது சுயமரியாதையை தமிழகம் நிலைநாட்டியுள்ளது. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் சிறை சென்ற போராளிகள், தாளமுத்து மற்றும் நடராசன் ஆகியோர் சிறையிலேயே தியாகிகளாகினர். 1965-ம் ஆண்டு ஹிந்தியை ஆட்சி மொழியாக மத்திய காங்கிரசு அரசு அறிவித்த போது, தமிழகம் முழுவதும் தீப்பிழம்பாக பற்றியெரிந்தது. சனவரி 25 அன்று சென்னையில் தொடங்கிய போராட்டம், நெல்லை, கோவை, மதுரை, சிதம்பரம், திருச்சி எனப் பற்றிப் படர்ந்தது . மாணவர்களை ஒடுக்க அப்போதைய பக்தவத்சலம் அரசு இராணுவத்தைக் கொண்டு வந்து இறக்கியது. இராணுவம் எங்கள் மயிருக்குச் சமானம், என ஒட்டு மொத்தத் தமிழகமும்  வெகுண்டெழுந்து போராடியது. 55 நாட்கள் நீடித்த மாணவர்களின் போராட்டம் இறுதியில் வெற்றி பெற்றது.

நமது பண்பாட்டின் மீதான தாக்குதலுக்கு எதிராக நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் தமிழ் மக்களின் ஒற்றுமையும் போர்க்குணமும் அதிகார வர்க்கத்தையும் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனக் கும்பலையும் அடிபணிய வைத்தது. அப்போது ஒட்டு மொத்த தமிழகத்திடமும் செருப்பால் அடிவாங்கிய மத்திய பாஜக அரசு மீண்டும் ஒருமுறை தன்னுடன் மோதிப் பார்க்க அறைகூவல் விடுக்கிறது. நாமும் பாஜக – ஆர்.எஸ்.எஸ். நச்சுப் பாம்பை எதிர்கொள்ள மீண்டும் ஒரு டெல்லிக் கட்டைத் தொடங்குவோம்.

– நந்தன்

மேலும் படிக்க:
President Pranab Mukherjee okays call for all speeches to be in Hindi
PIL in Supreme Court to make Hindi compulsory in class I-VIII in country
Tamil Nadu may see revival of anti-Hindi protests as Centre replaces English signages on highways
Hindi could be compulsory till Class 10 in all CBSE schools

ஆதார் – மீப்பெரும் மின்தரவுக் கிடங்கு : மக்களை ஒடுக்கும் டிஜிட்டல் ஆயுதம்

0

”உங்களுடைய வீட்டுப் பணியாளர்கள், கார் ஓட்டுநர், எலக்ட்ரீசியன், வீட்டு வாடகைக்காரர்கள், யாராயிருந்தாலும் ஆதாரை அடிப்படையாக கொண்ட எங்களுடைய ஆண்டிராய்ட் ஆப் மூலம் அவர்களது பின்னணியை பரிசோதித்துக் கொள்ளலாம்” என்கிறது அந்த ட்ரஸ்ட் ஐடி(TrustID) என்ற கம்பெனியின் விளம்பரம். “முகத்தைப் பார்த்து நம்பாதீர்கள், ட்ரஸ்ட் ஐடியைப் பாருங்கள்” என்கிற முழக்கத்தை வைத்துள்ளது அக்கம்பெனி.

டிரஸ்ட் ஐடி - யின் விளம்பரம்
டிரஸ்ட் ஐடி – யின் விளம்பரம்

அதாவது எந்த ஒரு தனிநபராக இருந்தாலும், அவரது தனிப்பட்ட தகவல்களை ஒரு தனியார் நிறுவனத்திற்கு காசு கட்டி நாம் அறிந்து கொள்ள முடியும் என்பதே மேற்படி விளம்பரத்தின் பொருள். ஆதார் அட்டைக்காக சேகரிக்கப்படும் இந்தியக் குடிமக்களின் தனிப்பட்ட தகவல்களைக் கையாள்வது குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் நிலையிலும், உச்சநீதிமன்றமே ஆதாரை மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பயன்பாடுத்தலாம் என்று அறிவுறுத்தியுள்ள நிலையிலும் தான் மேற்கண்ட விளம்பரம் வெளியாகியிருக்கிறது.

அரசின் நலத்திட்டங்கள் சிந்தாமல் சிதறாமல் (இடைத்தரகர்களுக்குச் செல்லாமல்) நேரடியாக மக்களிடம் சென்று சேர்வதை உத்திரவாதப்படுத்திக் கொள்ள ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் வழங்கப்படவுள்ள ஒரு பிரத்யேக அடையாள எண்ணாகத் தான் முதலில் ஆதாரைச் சொன்னது அரசு. ஆனால், ஆதாரின் மூளையான நந்தன் நிலேகானி ஆரம்பத்திலிருந்தே பல்வேறு சந்தர்பங்களில் பல்வேறு வகையான வியாக்கியானங்களை சொல்லி வந்திருக்கிறார்.

“ஆதார் என்பது வெறும் அடையாளம் மட்டுமல்ல – அது ”அடையாள செயற்தளம்” (Identity Platform)” என்று 2011-ம் ஆண்டு பெங்களூருவில் மென்பொருள் பொறியாளர் கருத்தரங்கு ஒன்றில் பேசும் போது குறிப்பிட்டுள்ளார். இதன் பொருள், ஆதாரை ஒட்டுமொத்த மக்களுடைய அடையாளங்களின் மீப்பெரும் மின்தரவுக் கிடங்காக அரசு உருவாக்கியுள்ளது.

மீப்பெரும் மின்தரவுக் கிடங்கு என்பதை எவ்வாறு புரிந்து கொள்வது, அதைக் கொண்டு என்ன செய்ய முடியும்?

ஆதார் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ளது; செல்போன் இணைப்பு பெற ஆதார் எண் அவசியம்; ஆதார் எண்ணை அடிப்படையாக கொண்டு நபருக்கு நபர் பணப்பரிமாற்றம் செய்து கொள்ள முடியும். இந்தப் போக்குகள் மெல்ல மெல்ல இந்தியர்களுடைய வாழ்வின் பிரிக்க முடியாத அங்கமாக ஆதார் மாற்றப்பட்டு வருகிறது.

ஒரு தனி நபரின் கடன் எவ்வளவு, யாருக்குப் பணம் கொடுக்கிறார், யாரிடம் வாங்குகிறார், சம்பளம் எவ்வளவு, அந்தச் சம்பளத்தில் வீட்டுக்கு செலவு செய்வது எவ்வளவு சேமிப்பது எவ்வளவு என்பவை உள்ளிட்டு அந்த தனிநபரின் பொருளாதார செயல்பாடுகளில் துவங்கி, அவர் ஓய்வு நேரத்தில் எந்த மாதிரியான திரைப்படங்கள் பார்க்கிறார், செல்பேசியில் எத்தனை நேரம், எதற்காக செலவிடுகிறார் என்பன போன்ற அவரது சமூக செயல்பாடுகள் வரை கண்காணிக்க முடியும்.

நூற்றி முப்பது கோடி மக்களின் தனிப்பட்ட தகவல்கள் மின்தரவுகளாக சேமிக்கப்படுவது அரசுக்கும் முதலாளிகளுக்கும் எண்ணற்ற வாய்ப்புகளைத் திறந்து விடுகிறது.

உதாரணமாக, ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து இணையத்தின் மூலம் கட்டணம் செலுத்தி நீங்கள் வாங்கிப் படிக்கும் நூல்கள், பார்க்கும் படங்கள் உள்ளிட்டவைகளைக் கொண்டு உங்களது ஆர்வம், ஆளுமை, பண்புகள் எவ்வாறிருக்கும் என்பதை கணிக்கும் கணினி செயலிகளை உருவாக்க முடியும். இது போன்ற செயலிகள் கொடுக்கும் தகவல்களின் அடிப்படையில் ஒரு முதலாளி தன்னிடம் வேலைக்குச் சேர முன்வரும் ஒருவரை வேலைக்குச் சேர்க்கலாமா அல்லது பணிநீக்கம் செய்யலாமா என்பதை முடிவு செய்ய முடியும். மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் விளம்பரத்தின் உட்பொருளும் இது தான்.

நூற்றி முப்பது கோடி மக்களின் தனிப்பட்ட தகவல்கள் மின்தரவுகளாக சேமிக்கப்படுவது அரசுக்கும் முதலாளிகளுக்கும் எண்ணற்ற வாய்ப்புகளைத் திறந்து விடுகிறது.

அரசைப் பொருத்தவரை மக்களை சதாகாலமும் கண்காணிக்க முடியும். மேலும் மீப்பெரும் மின்தரவுகளை செயற்கை அறிதிறனுடன் (Artificial Intelligence) இணைக்கும் தொழிநுட்ப சாத்தியமும் உள்ளது. அவ்வாறு செய்யப்படும் போது ஒரு குறிப்பிட்ட தருணத்தில் ஒரு குறிப்பிட்ட நபர் என்ன மாதிரியான முடிவுகளை எடுக்கும் சாத்தியங்கள் உள்ளன என்பதை (ஆதார் மூலம் இணைக்கப்பட்டு, மீப்பெரும் மின்தரவுக் கிடங்கில் சேமிக்கப்பட்டிருக்கும்) விவரங்களைக் கொண்டு கணிக்க முடியும். இவ்வாறு கணிக்கும் போது வந்தடையும் முடிவுகள் எந்தளவுக்குத் துல்லியமாக இருக்கும் என்பதும் அது சரியாக இருக்குமா என்பதும், இவ்வாறு மனிதர்கள் குறித்த தீர்மானங்களைக் கணினிகள் எடுப்பது சரிதானா என்பதும் அறிவியல் உலகில் இன்னமும் விவாதிக்கப்பட்டு வருகின்றது.

இருப்பினும் இன்றைக்கே மக்களின் வாசிப்பு, ரசனை, அரசியல் தரம், சமூக உணர்வு அத்தனையும் ஆளும் வர்க்க பண்பாட்டு நிறுவனங்களாலேயே திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. அப்படி இருக்கும் போது மேற்கண்ட ஆய்வு முற்றிலும் சாத்தியமல்ல என்று ஒதுக்கிவிட முடியாது.

அறிவியல் தொழில்நுட்பத்தின் சாத்தியங்கள் ஒருபுறமிருக்க – “எனது செயல்பாடுகளை அரசு கண்காணிப்பதில் என்ன தவறிருக்கிறது? நான் என்ன தீவிரவாதித்திலா ஈடுபட்டுள்ளேன்?” என்பது போன்ற பாமரத்தனமான, அடிமுட்டாள்தனமான வாதங்களும் இணைய விவாதங்களில் முன்வைக்கப்படுகின்றன. ஒரு சமூகத்தையும் அதன் மனிதர்களையும் கண்காணிப்பது என்பது அவர்களை மொத்தமாக கட்டுப்படுத்துவதற்கான முன்நிபந்தனை என்பதையும் அது அடிப்படையான மக்கள் சுதந்திரத்திற்கும் ஜனநாயகத்திற்கும் எதிரானது என்பதையும் “இராணுவ ஆட்சி வந்தா எல்லாம் சரியா போயிடும் சார்” என்று முந்தைய காலங்களில் பிதற்றிக் கொண்டிருந்த ஐஏஎஸ் ஐபிஎஸ் வகையான பாமர மூளைகள் புரிந்து கொள்ளவில்லை.

ஆதாரின் உள்நோக்கங்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், ஓரளவு ஜனநாயக உணர்வுள்ளவர்கள் அதைக் கேள்வி கேட்கத் துவங்கியுள்ளனர். ஆதாரைக் கேள்விக்குள்ளாக்குபவர்களையும் உச்சநீதிமன்றத்தில் ஆதாருக்கு எதிராக நடக்கும் வழக்கின் தீர்ப்பு அரசுக்கு ஆதரவாகவே இருக்கும்  என்பதையும் கணக்கில் எடுத்துக் கொண்டாலும் கூட அபாயம் என்பது ஆதாரின் வடிவத்தில் மட்டும் இல்லை.

கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் மத்திய அரசு தேசிய புலனாய்வுச் சட்டகத்தை (நேட்கிரிட் : NATGRID – Nationlan Intellingence Grid) புனரமைத்துள்ளது. வங்கிப் பரிவர்த்தனைகள், கடனட்டைகள், குடியேற்றத் துறை, இரயில்வே பயண விவரங்கள், விமான பயண விவரங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களின் காவல்துறை மாநில புலனாய்வு அமைப்புகள் மற்றும் மத்திய புலனாய்வு அமைப்புகள் உள்ளிட்டு 21 துறைகளின் மின்தரவுகளை ஒருங்கிணைக்கும் மையமாக நேட்கிரிட்டின் செயல்பாட்டை விரிவுபடுத்தியுள்ளது மோடி அரசு.

நேட்கிரிட்டுடன் ஆதார் விவரங்களையும் – ஆதார் எண்ணால் இணைக்கப்பட்ட பல்வேறு பொருளாதார பரிவர்த்தனை, செல்பேசி உரையாடல் விவரங்கள் மற்றும் இன்னபிற விவரங்களையும் இணைப்பது தொழில்நுட்ப ரீதியில் எளிதானது. அப்படி இணைக்கப்பட்டிருப்பதான செய்திகள் இதுவரை வெளியாகவில்லை எனினும், ஏற்கனவே அப்படியான ஒரு இணைப்பு செய்யப்பட்டிருந்தால் வியப்பதற்கு ஏதுமில்லை.

மனிதப் புலனாய்வையே (Human Intelligence) முந்தைய காலங்களில் அரசுகள் சார்ந்திருந்தன. இதனிடத்தில் பல்வேறு தகவல்மூலங்களில் இருந்து பெறப்பட்ட மின்தரவுகளை சேமிக்கும் மீப்பெரும் மின்தரவுக் கிடங்குகளை (Big Data Lakes) உருவாக்குவது, அதின் விவரங்களை செயற்கை அறிதிறன் பெற்ற கணினிகளின் மூலம் சலித்தெடுத்து முன்னறிப் புலனாய்வு முறையை (predictive intelligence) புகுத்தும் முனைப்புடன் அரசு செயல்பட்டு வருகின்றது. ஒரு குறிப்பிட்ட தருணத்தில், ஒரு குறிப்பிட்ட சம்பவத்தை (அது நடந்த பின் அல்லது நடக்கும் முன்) யார் செய்திருக்க முடியும் (அல்லது செய்ய முடியும்) என்பதை அனுமானிக்கும் சாத்தியங்களை தொழில்நுட்பம் வழங்குகின்றது.

அவரை கேள்விக்கேட்ட பத்திரிகையாளரை தேசவிரோதி என்று கூறிய பாரதிய  ஜனதாவின் ஹெச்.ராஜா

இது ஒரு மாபெரும் தொழில்நுட்ப பாய்ச்சல் என்று தூய அறிவியல்வாதிகள் கொண்டாடலாம். ஆனால், அந்த தொழில்நுட்பத்தை யார் எந்த நோக்கத்திற்காக எந்த மக்களின் மேல் பிரயோகிக்கிறார்கள் என்பதே நமது கவலைக்குரியதாகும். இந்த தொழில்நுட்ப சாத்தியங்களை அமெரிக்கா எந்த நோக்கத்திற்காக பயன்படுத்தியது என்பதையும் அதனால் தனிநபர் சுதந்திரம் எந்தளவுக்கு பாதிக்கப்பட்டது என்பதையும் ஸ்நோடன் அம்பலப்படுத்தினார். இங்கோ மத்திய அரசின் அட்டர்னி ஜெனரலே உச்சநீதிமன்றத்தில் தனிநபர் சுதந்திரம் என்பது அரசியல் சாசனத்தால் உத்திரவாதப்படுத்தப்பட்ட ஒன்றல்ல என வாதிடுகிறார்.

மோடி அதிகாரத்திற்கு வந்த பின் நாடு மொத்தமும் காவிமயமாக்கும் வெறியுடன் செயல்பட்டு வருகின்றது இந்துத்துவ கும்பல், தமது விரிவாக்க நடவடிக்கைகளுக்கு இடையூறாக உள்ள அனைவரையும் தேச விரோதிகளாகவும், தீவிரவாதிகளாகவும் சித்தரிக்கின்றனர் – இதற்கு அவர்கள் குறைந்தபட்சமாக கூட கூச்சப்படுவதில்லை. சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் மோடி அரசின் விவசாயிகள் விரோத கொள்கைகள் குறித்து கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர் ஒருவரை நோக்கி “தேச விரோதி” என சீறினார் பாரதிய ஜனதாவின் ஹெச்.ராஜா.

ஹெச்.ராஜா போன்றவர்களின் கட்டுப்பாட்டில் மேலே குறிப்பிடப்பட்டதைப் போன்ற தொழில்நுட்பங்கள் சென்று சேர்ந்தால் என்ன நடக்கும்? அந்த பத்திரிகையாளர் தேசவிரோதி தான் என்பதற்கான ’தரவுகளுடன்’ மறுநாள் காலை போலீசார் அவரது வீட்டுக் கதவைத் தட்டிக் கொண்டிருப்பார்.

ஆதார், மீப்பெரும் மினதரவுக் கிடங்குகள், செயற்கை அறிவு துணையுடன் மனிதர்களின் செல்நடத்தையை முன்னோக்கி அறிவதும், அந்த அறிதலை முன்வைத்து அரசியல் -பாதுகாப்பு முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை வகுத்துக் கொள்வது இவர்களது நோக்கம். இது மக்களின் சிவில் அரசியல் உரிமைகளை காவு கொடுப்பதோடு அதில் முன்னணியாளர்களாக இருக்கும் இடதுசாரி முற்போக்கு அமைப்புக்களின் தோழர்களையும் ஆதரவாளர்களையும் முடக்க நினைக்கிறார்கள். இன்னொருபுறம் பொருளாதார நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் முதலாளிகளின் ஏகபோகத்திற்கும் இந்த புதிய வகை ஆதார் திட்டம் பயன்படும். இப்படி இரண்டு புறங்களிலும் நம்மை அடிக்கப் போகிறது ஆதார் திட்டம்.

நேட்கிரிட், ஆதார் குறித்த இணைய விவாதம் ஒன்றில் ”எந்த நேரமும் சமூகத்தைக் கண்காணிப்பதும் எச்சரிக்கையாக இருப்பதும் அதன் பாதுகாப்பை உத்திரவாதிப்படுத்திக் கொள்வதற்கு தானே.. அதில் ஓரிரு நல்லவர்கள் பாதிக்கப்பட்டாலும் கூட மொத்த சமூகத்திற்குமான பாதுகாப்பு முக்கியமானதல்லவா?” என வாதிட்டுக் கொண்டிருந்தார் மோடி பக்தர் ஒருவர். அதீத பாதுகாப்புடன் உடலுக்குள் இருக்கும் நல்ல செல்களைக் கூட நோய் கிருமிகள் என சந்தேகப்பட்டு தாக்கியழிப்பதற்கு பெயர் நோயெதிர்ப்பு சக்தியல்ல – கான்சர்.

உடலை அரிக்கும் கான்சரைப் போல் நாட்டைப் பீடித்து வருகிறது இந்துத்துவ கும்பல். புற்றுநோயை வெட்டி எறியாமல் நமது ஆரோக்கியத்தை மீட்க முடியாது.

– முகில்

டாஸ்மாக் கடையை திற ! திருவாரூர் மாவட்ட பாஜக போராட்டம் !

1

மிழகம் முழுவதும் டாஸ்மாக்கிற்கு எதிராக மக்களின் கோபத்தை கண்ட தமிழக பாஜக “என் வீட்டுக்காரரும் கச்சேரிக்கு போகிறார்” என்பதாக  ஆர்பாட்டம் ஒன்றை அறிவித்தது.

அதன்படி 18-ந்தேதி (18.04.2017) காலை 10:00 மணிக்கு தமிழ்நாட்டில் உள்ள அத்தனை பிராதான மதுக்கடைகள் முன்பாக பா.ஜ.கட்சி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், கட்சி சார்பற்று மதுவை எதிர்ப்பவர்கள் என அத்தனை பேரையும் இணைத்துக் கொண்டு மிகப் பெரிய ஆர்ப்பாட்டதை நடத்தும்” என்று அறச்சீற்றம் கொண்டு தமிழிசை அறிக்கை வெளியிட்டார்.

டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டம் என்றால் கடையை சுற்றி இரும்பு தடுப்புகள்  போடப்பட்டு, காக்கிகள் குவிக்கப்பட்டு பொது மக்களை பீதியூட்டுவது போன்றவை  சமீபத்திய நடைமுறையாகும். ஆனால் ஏப்ரல் 18 அன்று பாஜக போராட்டம் அறிவிக்கப்பட்ட இடங்களில் அப்படிபட்ட பதட்டம் எதுவும் இல்லை. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை வெள்ளக்குளம் அருகில்  உள்ள டாஸ்மாக் கடை முற்றுகை போராட்டம் வித்தியாசமான நூதனப்போராட்டமாக இருந்தது.

பாஜக -வின் மாவட்டம், ஒன்றியம் என அனைத்தும் டாஸ்மாக் கடையை நோக்கி வந்து முழக்கமிட்டனர். இதில் சிலர் “பாரத் மாதாக்கீ ஜே” என்று அவ்வபோது ஈனஸ்வரத்தில் ஊளையிட்டனர். மாவட்டம், வட்டம், சதுரம், முக்கோணங்களின் சவடால்கள் கேட்கவே நாராசமாக இருந்தது.

முற்றுகைப் போராட்டம் இருப்பதால் கடை திறக்க வேண்டாம் முற்றுகை முடிந்த பின்னால் திறந்து கொள்ளலாம் என்று கடை ஊழியர்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியிருந்ததனால் 12:00 மணி கடந்தும் கடை திறக்கப்படவில்லை. “கடையை திறந்தால் தான் போராட்டம் நடத்திவிட்டு கலைந்து செல்வோம், இல்லையேல் போராட்டம் நீடிக்கும்” என காவிப்படை வானரத் தளபதிகள் கூறியதும் குடிமகன்கள் மகிழ்ச்சியை வெளிபடுத்தினர். அதாவது திறக்கப்பட்ட் டாஸ்மாக் கடை முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினால்தான் பாஜக-வினர் அதை ஃபோட்டோ எடுத்து வாட்ஸ் அப்பிலும், தலைமைக்கும் அனுப்பி தமது இருப்பை பதிவு செய்ய முடியுமாம். என்ன இருந்தாலும் செல்ஃபி நாயகனைத் தலைவனாக கொண்ட கட்சியல்லவா!

இந்த அறிவிப்பு  காவல்பணிக்கு வந்தவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் அதிர்ச்சியை  உருவாக்கிவிட்டது. டாஸ்மாக்கிற்கு எதிரான மக்களின் மனநிலையை உணர்ந்தவர்கள் ஏடாகூடமாக ஏதாவது ஆகிவிடப் போகிறது என்று அச்சப்பட்டு யோசித்து தயங்கியபடி நின்றனர். சிறிது நேரத்துக்கு பிறகு மேலதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து கடை திறக்கப்பட்டது. குடிமகன்களின் கூட்டம் வரிசை கட்ட ஆரம்பித்தது. முற்றுகை போராட்டமும் முடித்துக் கொள்ளப்பட்டது.

“இனிமேல் எந்த மதுக்கடையும் திறக்க முடியாத அளவிற்கு பா.ஜ.க ஆர்ப்பாட்டம் நடத்தும்” என்றதமிழிசையின் பேச்சைக்கேட்டு, பா.ஜ.க-வை ‘நம்பி’ போராட்டத்துக்கு வந்த மக்கள், பெண்கள் முகம் சுழித்தபடியே செய்வதறியாமல் கலைந்து சென்று கொண்டிருந்தனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

-வினவு செய்தியாளர்.

மார்க்ஸ் 200-வது பிறந்த நாள் – லெனின் 148-வது பிறந்த நாள் – புஜதொமு பிரச்சாரம்

0

மே 5, 2017 பாட்டாளி வர்க்க ஆசான் காரல் மார்க்ஸ் 200-வது பிறந்தநாள் ! ஏப்ரல் 22, 2017 பாட்டாளி வர்க்க ஆசான் லெனின் 148-வது பிறந்தநாள் !

தமிழகம் மற்றும் புதுவையில் அரங்கு மற்றும் ஆலைவாயில் கூட்டங்கள் !

ன்பார்ந்த உழைக்கும் மக்களே !

“முதலாளி இல்லாமல் தொழிலாளி இல்லை, முதலாளிகளால்தான் எல்லாமே நடக்கிறது. அவன் முதல் போட்டவன், நாம எதுவும் கேட்க முடியுமா?” என விரக்தியோடு அடங்கிக் கிடப் பவர்கள் ஏராளம். இது காலங்காலமாக நடந்து வரும் சமாச்சாரம்தானே என சலித்துக் கொண்டும், சகித்துக் கொண்டும் வாழ்வதற்கு நாம் பழகிக் கொள்ள வேண்டும் என்பதுதான் முதலாளிகளின் விருப்பம். அதனால்தான் இது போன்ற நச்சுக் கருத்துக்களைத் தமது அடிவருடிகள் மூலம் அவிழ்த்துவிட்டு நம்மை நம்ப வைத்து வருகின்றனர். இதெல்லாம் உண்மை இல்லை, மோசடி அயோக்கியத்தனம் என உலகமே அதிரும்படியாக உரக்கச் சொல்லி, உரிய ஆதாரங்களுடன் நிரூபித்தவர் காரல் மார்க்ஸ், அவர் உருவாக்கிய தத்துவம், உழைக்கும் வர்க்கத்துக்காகவே உருவாக்கப்பட்ட தத்துவம், உழைக்கும் வர்க்கத்துக்காக மட்டுமே பேசுகின்ற, போராடுகின்ற தத்துவம். அதுதான் கம்யூனிசம் அதனால்தான் கம்யூனிசம் என்ற வார்த்தையைக் கேட்டாலே முதலாளி களுக்கு மிளகாயை அரைத்து எங்கோ பூசியது போல எரிகிறது.

உழைப்பாளிக்கு உரிய கூலியைத் தரமறுப்பதன் மூலம் அவனது உழைப்பைக் கொள்ளையடித்து சேர்த்ததுதான் முதலாளிகளின் மூலதனம், என்பதை அசைக்க முடியாத ஆதாரங்களுடன் நிரூபித்துக் காட்டினார் காரல் மார்க்ஸ், முதலாளிகளின் சொத்து மட்டுமல்ல, அனைத்து உற்பத்தி சாதனங்களுமே உழைப்பாளிகளின் உழைப்பின் பயனாக உருவானவைதான் என்பதையும், அதையெல்லாம் தனது தனிப்பட்ட சொத்தாக வைத்திருப்பதன் மூலம் முதலாளிகள், உழைப் பாளிகளை அடிமைப்படுத்தி சுரண்டுகிறார்கள் என்பதையும் அம்பலப்படுத்திக் காட்டினார்.

இப்படிப்பட்ட திருட்டு முதலாளிகள் தமது சொத்தை, மூலதனத்தைப் பாதுகாக்கவும், பெருக்கிக் கொள்ளவும் உருவாக்கியது தான் தற்போதைய அரசு அமைப்பு என்பதையும், அந்த அரசிடமே கெஞ்சிக் கொண்டிருப்பதால் எந்தப் பலனும் கிடைக்காது என்பதையும் வரலாற்று அனுபவங்களில் இருந்து தெளிவாக்கிக் காட்டினார் மார்க்ஸ். எனவே, பாட்டாளி வர்க்கம் இப்போதுள்ள முதலாளித்துவ அரசமைப்பைப் புரட்சியின் மூலம் தூக்கியெறிந்துவிட்டு தனக்கான புதிய அரசை உருவாக்கிக் கொள்ள வேண்டும்; இதற்காக தொழிலாளி வர்க்கம் தன்னைப் போலவே ஒடுக்கப் படும் பெரும்பான்மை விவசாய வர்க்கத்தையும் தன்னோடு அணிசேர்த்துக் கொண்டாக வேண் டும் எனவும் வழிகாட்டினார். பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கான தத்துவத்தை உருவாக்கிக் கொடுத்ததோடு, அதைக் காப்பாற்றி நிலைநாட்டவும், நடைமுறையில் சாதிக்கவும் தனது வாழ்க்கையையே அர்ப்பணித்தார் காரல் மார்க்ஸ்.

மார்க்சின் வழிநின்று, அவரது தத்துவத்தை நடைமுறையில் சாதித்துக் காட்டி உலகின் முதல் பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசை நிறுவிக் காட்டியவர் ஆசான் லெனின், ஜார் மன்னனின் கொடுங்கோலாட்சி, அதன் பாதுகாப்பில் தொழிலாளிகளை உறிஞ்சிக் கொழுத்த முதலாளிகள், விவசாயிகளை சுரண்டிக் கொள்ளையடித்த பண் ணையார்கள் என ரஷ்ய நாட்டு உழைக்கும் மக்கள் நடுங்கித் தவித்தனர். அம்மக்களின் துயரம் தீர்க்கும் விடிவெள்ளியாக, ரஷ்ய போல்ஷ்விக் கட்சியை உருவாக்கி, தொழிலாளி – விவசாயி வர்க்கங்களின் கூட்டை உறுதியாக நிறுவினார் லெனின்.

பாட்டாளி வர்க்கத்தின் தலைமை யில் 1917- நவம்பர் 7-ஆம் நாளில் சோசலிசப் புரட்சியை வெற்றிகரமாக நடத்தி பாட்டாளிகளின் புதிய அரசு அமைக்கப்பட்டது.

உழைக்கும் வர்க்கத்தின் கையில் அரசதிகாரம் வந்தவுடன் உழுபவருக்கே நிலம், உழைப் பவருக்கே அதிகாரம் என்ற முழக்கத்தை நிறை வேற்றும் வகையில், ஆலைகள் அனைத்தும் அரசுடைமை ஆனது. பணக்கார விவசாயிகளின் நிலங் கள் பறிமுதல் செய்யப்பட்டு உழுபவர்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட்டது. உழைக்கும் மக்களின் அறியாமை போக்க அனைவருக்கும் கல்வி கொடுக்கப்பட்டது. ஆயிரம், லட்சம் என உழைப் பாளிகள் வேலையே இல்லாமல் அலைந்த நாட் டில், எங்கு திரும்பினாலும் ஆலைகளின் வாச லில் வேலைக்கு ஆட்கள் தேவை என்ற அட்டை களே தொங்கின என்னுமளவிற்கு தொழிற்துறை உற்பத்தி பெருகியது. சிறுவிவசாயிகளை ஒன் றிணைத்து கூட்டுறவுகளும், கூட்டுப்பண்ணை களும், பிறகு அரசுப் பண்ணைகளும் உருவாக்கப் பட்டன. யாரும் பட்டினியில்லை என்று சொல்லும் அளவுக்கு தானியக் களஞ்சியங்கள் நிரம்பி வழிந்தன.

தேர்ந்தெடுக்க, தவறு செய்வோரை திருப்பியழைக்க – தண்டிக்க மக்களுக்கு அதிகாரம் கொடுத்த சோவியத்துகளுக்கு தொழிலாளி களும், விவசாயிகளும் மக்கள் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, மக்கள் நலன் காக்கும் சட்ட திட்டங்களை உருவாக்கி, மக்கள் ஒப்பு தலோடு நிறைவேற்றினார்கள். தங்களது மக்கள் நலனில் கண்ணும் கருத்துமாக இருந்து, சகல வசதிகளையும் செய்து கொடுத்தன. கல்வி, மருத்துவம், குடிநீர் அனைத்தும் இலவசம், மிகச்சொற்பமான தொகையில் வீட்டுவசதியும், போக்குவரத்தும் சாத்தியமாகின. அவரவர் தகுதிக்கேற்ற வேலை, வேலைக்கேற்ற ஊதியம் ஆண் – பெண், தொழிலாளி – விவசாயி, உடலுழைப்பு – மூளையுழைப்பு, நகர்ப்புறம்-கிராமப்புறம் ஆகிய வேறுபாடுகளை ஒழித்துக்கட்டியதுடன் உழைப் பாளிகளுக்கான அனைத்து சலுகைகளும் நிலை நாட்டப்பட்டன.

சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் ஆகி விட்டதாகக் கூறப்படும் நமது நாட்டில் என்ன நிலைமை கல்வி, மருத்துவம், குடிநீர் அனைத்தும் தனியார்மயம், பகற்கொள்ளை வீட்டு வாடகையும், போக்குவரத்தும் தகவல் தொடர்பும் பாதிச் சம்பளத்தை விழுங்கும் நிலை, வாழ்க்கைக்குத் தகுதியான படிப்பில்லை, படித்தவருக்கும் வேலையில்லை, வேலையில் இருப்பவருக்கோ தக்க ஊதியமில்லை. விவசாயமே வேண்டாம் என விவசாயிகளே கிராமங்களை விட்டு ஓடும் நிலை, அப்படியும் உயிரைக் கொடுத்து விளைய வைத்தாலும் போதிய விலை இல்லை, விலையை நிர்ணயிக்கும் உரிமையுமில்லை. விளைந்த தானியங்கள் எல்லாம் அரசாங்க குடோனில் எலிக்கும், கரப்பானுக்கும் உணவாகி வீணாகின்றன. உழைக்கும் மக்களோ கோடிக்கணக்கில் இராப்பட்டினி, முழுப் பட்டினி கிடக்க, பெண்களும் குழந்தைகளும் கோடிக்கணக்கில் ரத்தசோகையில் வாட லட்சம் கோடிகளில் கொழிக்கும் கார்ப்பரேட் முதலாளிகளோ சுகவாழ்வு வாழ்கிறார்கள். அவர்களின் அடியாளாய் நிற்கும் அரசு அதிகாரிகள் அரசியல்வாதிகள் எல்லாம் ரொக்கத்தில் மிதக்கிறார்கள்.

அந்தத் திமிரில் தான், போராடும் விவசாயிகளைக் கண்டுகொள்ள மறுக்கிறார்கள் உரிமை கேட்கும் தொழிலாளர்களை ஒடுக்குகிறார்கள் மீனவர் படுகொலைகளைக் கண்டும் காணாதது போல நடிக்கிறார்கள். முதலாளிகளின் லாபத்திற்காக, ரேசன் கடைகளை மூடிப்பட்டினிப் போட்டு, தெருக்கள்தோறும் சாராயக்கடைகள் திறந்து மக்களைக் கொள்ளையிடத் துடிக்கிறார்கள். மக்கள் சிந்தனையை மழுங்கடித்து, ஊழல்படுத்த விழை கிறார்கள். மக்களோ வாழ்க்கை இழந்து வாழும் வழி தெரியாது அலைகிறார்கள்.

இந்த அவலம் இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிப்பது? நாட்டையே பீடித்துக் கொண்டிருக் கும் இந்தக் கேவலத்தை விரட்டவே முடியாதா? முடியும் என வழிகாட்டியவர்கள்தான் மார்க்சும், லெனினும். பரதேசிகள், அழுக்குச் சட்டைகள் என்றெல்லாம் ஆளும்வர்க்கம் கேவலப்படுத் திய உழைக்கும் வர்க்கத்தின் ஆட்சியைப் புரட்சி மூலம் நிறுவுவதே ஒரே வழி. நம்மால் முடியுமா? யாரும் வரமாட்டார்கள், மக்கள் சுயநலக்காரர்கள் என்பதெல்லாம் வீண்பழி, இதோ மெரீனா காட்டி விட்டது நமக்கு வழி.

உலகப் பாட்டாளி வர்க்கத்துக்கே வழிகாட்டிய ஆசான் காரல் மார்க்சின் இருநூறாவது பிறந்த ஆண்டு மே 5 அன்று தொடங்குகிறது. ஆசான் லெனினின் 149-வது பிறந்த நாளான ஏப்ரல் 22 நெருங்கிவிட்டது. இனியும் எதற்கு நம்மால் முடியுமா என்னும் தயக்கம்?

  • தொழிலாளிகளும் விவசாயிகளும் ஒன்றிணைவோம் !
  • மாணவர் – இளைஞர்களுடன் கைகோர்ப்போம் !
  • மார்க்ஸ் – லெனின் வழியில், நவம்பர் புரட்சியின் ஒளியில் தமிழகத்தையே மெரினாவாக்குவோம் !
  • உழைக்கும் மக்களின் துயர் நீக்குவோம் !

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருவள்ளூர் (கிழக்கு, மேற்கு), காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்கள்.
94444 61480, 94453 68009, 88075 32859, 84897 35841.

மக்களாட்சியா சாராய முதலாளிகளின் ஆட்சியா?

0

டந்த ஏப்ரல் முதல் நாளிலிருந்து தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளிலுள்ள சாராயக் கடைகள் அனைத்தையும் மூட வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகளும் இதை நடைமுறைப்படுத்துவதைப் போல பாவ்லா காட்டிவிட்டு போங்காட்டம் ஆடிக் கொண்டிருக்கின்றன.

இந்தத் தீர்ப்பும்கூட, நகரங்கள் எனில் நெடுஞ்சாலையிலிருந்து 500 மீட்டருக்கு அப்பால் சாராயக் கடைகளை நடத்தலாம் என்றும், 20,000 பேருக்குக் குறைவான மக்கள் தொகை உள்ள கிராமப்புற – சிறுநகரப் பகுதிகளில் நெடுஞ்சாலையிலிருந்து 220 மீட்டருக்கு அப்பால் சாராயக் கடையை நடத்தலாம் என்றும் நீர்த்துப்போன வகையில்தான் உள்ளது.

பொள்ளாச்சியில், மூடப்பட்ட சாராயக் கடையைப் புதிதாகக் கட்டிடம் கட்டித் திறக்க முயற்சிப்பதைத் தடுக்கும் பொதுமக்கள்.
பொள்ளாச்சியில், மூடப்பட்ட சாராயக் கடையைப் புதிதாகக் கட்டிடம் கட்டித் திறக்க முயற்சிப்பதைத் தடுக்கும் பொதுமக்கள்.

தொளதொளப்பான இந்த உத்தரவையும்கூட செல்லாக்காசாகிவிட்டது தமிழக அரசு. விளக்குகளை அணைத்துவிட்டு பழைய டாஸ்மாக் கடைகளில் வியாபாரத்தை நடத்துவதோடு, அருகிலேயே புதிய கடைகளைத் திறந்தும், கிராமங்களில் அவரசமாகப் புதியக் கடைகளைக் கட்டியும் வருகிறது. இவற்றுக்கெதிராக தமிழகத்தின் பல பகுதிகளில் தாய்மார்கள் துடப்பத்துடனும் செருப்புகளுடனும் முற்றுகையிட்டு போராடி வருகின்றனர். சில இடங்களில் டாஸ்மாக் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டு தீயிடப்பட்டுள்ளன. போராடும் மக்களை மிருகத்தனமாகத் தாக்கி சாராய முதலாளிகளின் அடியாள் படையாக வெறியாட்டம் போடுகிறது தமிழக போலீசு.

இதர மாநிலங்களில் சாராயக் கடைகளுக்கு எதிரான போராட்டங்கள் இல்லாத நிலையில், தமிழகத்தில் மட்டும் போராட்டங்கள் தொடர்வதற்குக் காரணமே, தமிழகத்தில் டாஸ்மாக் என்பது மிகப் பெரிய சமூகப் பிரச்சினையாக உருவெடுத்திருப்பதுதான். கடலூர் மாவட்டம், கச்சிராயநத்தம் கிராமத்திலுள்ள 450 குடும்பங்களில் 105 பெண்கள் தங்கள் கணவரை டாஸ்மாக்கினால் இழந்திருக்கிறார்கள். பள்ளி மாணவர்கள் சாராயம் குடிப்பதும்,  சாலை விபத்துகளில் உயிரிழப்புகள் பெருகுவதுமாக தமிழகமே மிகப் பெரிய சாராய சீரழிவுக்குள் தள்ளப்பட்டுள்ளது.

நேற்றுவரை இச்சீரழிவுக்கு எதிராக அக்கறை கொண்டவர்களைப் போல பேசியவர்கள், தற்போதைய உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னர் சட்டத்தை ஒழுங்காக அமல்படுத்த வேண்டுமேயன்றி, நெடுஞ்சாலைகளிலுள்ள சாராயக் கடைகள் மட்டுமின்றி நட்சத்திர ஓட்டல்களிலுள்ள பார்கள் அனைத்தையும் வேண்டுமென்று உத்தரவிடுவது சரியல்ல என்று இப்போது நாக்கைச் சுழற்றிப் பேசுகிறார்கள். குடிப்பது தனிமனிதனின் உரிமை; அதைத் தடுக்க முடியாது; அதேசமயம் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதை சட்டப்படி தண்டிக்க வேண்டுமென்கிறார்கள். சாராயக் கடைக்கு வாகனத்தில் வந்து குடிக்கலாம்; ஆனால் குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டுவதுதான் குற்றம் எனும் இக்கோமாளித்தனமான சட்டத்தைத்தான் கடுமையாக நடைமுறைப்படுத்தச் சொல்கிறார்கள். இதன்படி வாகனத்தில் வரும் குடிமகனின் வாயை ஊதச் சொல்லி அபராதம் விதிப்பதாக மிரட்டி போலீசார் மாமூல் கறப்பதுதான் நடந்து கொண்டிருக்கிறது.

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு அருகிலிருக்கும் டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கும் பொதுமக்கள்
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு அருகிலிருக்கும் டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கும் பொதுமக்கள்

ஈராண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடக் கோரி போராட்டங்கள் வலுத்த நிலையில், சாராய சீரழிவுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பத்திரிகையாளர் சஞ்சீவி குமார் எழுதிய “மெல்ல தமிழன் இனி…’’ என்ற  தொடர் கட்டுரையை தி இந்து தமிழ் நாளேடு வெளியிட்டது.  ஆனால் ஆங்கில தி இந்து நாளேடானது, தற்போதைய உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு உணர்ச்சி வேகத்தில் எடுக்கப்பட்டுள்ளது என்றும், இதனால் அரசுக்கு வருவாய் இழப்பும் சுற்றுலாவை நம்பியுள்ள சிறிய மாநிலங்களுக்குக் கடும் பாதிப்பு ஏற்படும் என்றும் தலையங்கமே எழுதுகிறது. ஓட்டுக் கட்சிகளின் சந்தர்ப்பவாதத்தை விட, இரட்டை நாக்குடன் பேசும் இந்து நாளேட்டின் ஊடக சந்தர்ப்பவாதம் மிகக் கேவலமானதாக இருக்கிறது.

நெடுஞ்சாலையிலுள்ள நட்சத்திர ஓட்டல்களின் சாராய பார்களையும் மூடச் சொல்வதால் ஓட்டல் தொழிலுக்குக் கடுமையான பாதிப்பு ஏற்படும் என்றும், சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் பல மாநில அரசுகள் நியாயவாதங்களை அடுக்குகின்றன. டாஸ்மாக் மூலம் அரசுக்குக் கிடைக்கும் ரூ. 25,000 கோடி ஆண்டு வருவாயில் ரூ.10,000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படும் என்றும், சுமார் 10,000 ஊழியர்கள் வேலையிழக்க நேரிடும் என்று கூச்சநாச்சமின்றி தமிழக அரசு வாதிடுகிறது. சாராய வியாபாரிகள் அரசாங்கத்தை நடத்தினால் எப்படியிருக்கும் என்பதை இந்த அரசுகள் நிரூபித்துக் காட்டியிருக்கின்றன.

ஆற்றுமணல் அள்ளுவதைத் தடை செய்தால், வீட்டுமனைத் தொழிலும் அதைச் சார்ந்துள்ள இலட்சக்கணக்கோனோருக்கு வேலையிழப்பும் வருவாய் இழப்பும் ஏற்படும் என்று வாதிடுவதைப் போன்ற அயோக்கியத்தனம்தான் இது. அரசுக்கு வருவாய் ஈட்டித்தரக் கூடிய லாபமீட்டும் அரசுத்துறை நிறுவனங்களை தனியாரிடம் தாரை வார்த்துவிட்டும், ஆற்றுமணல், தாதுமணல், கிரானைட் உள்ளிட்ட மூலவளங்களைத் தனியார் முதலாளிகள் கொள்ளையடிக்க ஏற்பாடு செய்துவிட்டும், சாராயக் கடைகளை மூடுவதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்று வாதிடுவதே மோசடித்தனமானது.

ஓட்டல் அதிபர்களோ, எங்கள் வாடிக்கையாளர்கள் மேட்டுக்குடியினர், கார்களில் குடிக்க வரும் அவர்கள் தனியாக ஓட்டுநரை வைத்திருப்பதால், அவர்களால் சாலைகளில் விபத்துகள் நடப்பதில்லை என்கிறார்கள். ஆனால் சென்னையில் ஐஸ்வர்யா என்ற மேட்டுக்குடி பெண், எம்.பி.டிஸ்டில்லரிஸ் நிறுவன உரிமையாளர் மகன் ஷாஜி, நாமக்கல் தொழிலதிபர் யுவராஜ் ஆகியோர் போதையில் கார் ஓட்டிச் சென்று நடத்தியுள்ள விபத்தும் பலிகளுமே இந்த அண்டப் புளுகைத் தோலுரித்துக் காட்டுகின்றன.

திருப்பூர்-சாமளாபுரம் பகுதியில் டாஸ்மாக் திறக்கப்படுவதை எதிர்த்துப் போராடிய பெண்ணை மிருகத்தனமாகத் தாக்கும் கூடுதல் போலீசு கண்காணிப்பாளர் பாண்டியராஜன்.
திருப்பூர்-சாமளாபுரம் பகுதியில் டாஸ்மாக் திறக்கப்படுவதை எதிர்த்துப் போராடிய பெண்ணை மிருகத்தனமாகத் தாக்கும் கூடுதல் போலீசு கண்காணிப்பாளர் பாண்டியராஜன்.

நெடுஞ்சாலைகளில் உள்ள சாராயக் கடைகளால் விபத்துகள் அதிகரித்து வருவதால், இக்கடைகளை அகற்றக் கோரி ஆந்திராவின் சாலைப் பாதுகாப்பு மன்றத்தின் தலைவராக இருந்த புல்லா ராவும் பல்வேறு சமூக ஆர்வலர்களும் 2003-லிருந்தே மைய அரசிடம் பலமுறை மனு கொடுத்து வலியுறுத்தி வந்த பிறகு, நெடுஞ்சாலைகளிலுள்ள சாராயக் கடைகளை அகற்றுமாறு ஒரு சுற்றறிக்கையை அனைத்து மாநிலங்களுக்கும் 2007 அக்டோபரில் மைய அரசு அனுப்பியது.

ஆனால், தமிழகம் உட்பட எந்த மாநிலமும் இக்காகிதச் சுற்றறிக்கையை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.  மறுபுறம், நெடுஞ்சாலைகளிலுள்ள சாராயக் கடைகள் காரணமாக நாடெங்கும் விபத்துகள் மேலும் தீவிரமடையத் தொடங்கின. கடந்த பல ஆண்டுகளாக நாடு தழுவிய அளவில் சாலை விபத்துகளிலும், உயிரிழப்புகளிலும் தமிழகம்தான் முதலிடத்தில் இருக்கிறது.

இந்நிலையில், மத்திய அரசின் சுற்றறிக்கையை நடைமுறைப்படுத்தும்படி அரசுச் செயலாளருக்கு பா.ம.க. வழக்கறிஞர் பாலு கடிதம் எழுதிய போதிலும் தமிழக அரசு அசைந்து கொடுக்காததால், கடந்த 2012-இல் அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றுமாறு 2013-ஆம் ஆண்டு உத்தரவிட்டது.

2003 லிருந்து 2013 வரை நெடுஞ்சாலைகளிலுள்ள சாராயக் கடைகளை அகற்ற மனு கொடுத்துப் போராடி, அதன் பிறகு மைய அரசு சுற்றறிக்கை அனுப்பிய போதிலும் தமிழகம் உள்ளிட்டு எந்த மாநில அரசும் செயல்படுத்தவில்லை. பின்னர் 2013-இல் உயர் நீதிமன்றம் உத்தரவு போட்டபோதிலும் அதையும் தமிழக அரசு செயல்படுத்தவில்லை.

நீதிமன்ற உத்தரவும் தோற்றுப் போன நிலையில்தான், தமிழக மக்கள் டாஸ்மாக் கடைகளை மூடக் கோரி வீதிகளில் இறங்கிப் போராடத் தொடங்கினர். சென்னை பச்சையப்பன் கல்லூரிக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி போராடிய மாணவர்கள் ஜெ. அரசால் கொடூரமாகத் தாக்கப்பட்டனர். டாஸ்மாக்  எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் சிறையிடப்பட்டனர். மக்கள் அதிகாரம் நடத்திய டாஸ்மாக் எதிர்ப்பு மாநாட்டில் உரையாற்றியவர்கள் மீதும், ம.க.இ.க. பாடகர் கோவன் மீதும் தேசத்துரோக வழக்கு போடப்பட்டது.

வேலூர் மாவட்டம்-அணைக்கட்டுக்கு அருகேயுள்ள அமைந்துள்ள டாஸ்மாக் கடையைப் பூட்டுப் போட்டு மூடும் பெண்கள்.
வேலூர் மாவட்டம்-அணைக்கட்டுக்கு அருகேயுள்ள அமைந்துள்ள டாஸ்மாக் கடையைப் பூட்டுப் போட்டு மூடும் பெண்கள்.

குமரி மாவட்டம் உண்ணாமலைக் கடை எனும் ஊரிலுள்ள டாஸ்மாக் கடையை மூடுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டு ஒன்றரை ஆண்டுளாகியும் அக்கடை மூடப்படாததால், முதியவர் சசிபெருமாள் 2015 ஜூலை 31 அன்று அலைபேசி கோபுரத்தின் உச்சி மீது ஏறி அக்கடையை மூடக் கோரி  போராடியபோது உயிரிழந்தார். நெல்லை மாவட்டம் கலிங்கப்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றிய போதிலும், ஜெ. அரசு அத்தீர்மானத்தை நெல்லை ஆட்சியரைக் கொண்டு ரத்து செய்தது. பின்னர் இதற்கெதிராக வழக்கு தொடுக்கப்பட்டு, டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடவேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டபோதிலும் அக்கடையை மூடாமல், இதற்கெதிராக உச்ச நீதிமன்றத்தில் ஜெ. அரசு மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கையும், நெடுஞ்சாலைகளிலுள்ள சாராயக் கடைகளை அகற்றக்கோரி பஞ்சாபைச் சேர்ந்த ஹர்மான் சித்து மற்றும் பிற சமூக ஆர்வலர்கள் தொடுத்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், நெடுஞ்சாலைகளில் உள்ள சாராயக் கடைகள் அனைத்தும் 2017 மார்ச் 31-ஆம் தேதிக்குள் மூடப்பட வேண்டும் என்று கடந்த 2016 டிசம்பர் 15-ஆம் தேதி தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி தமிழக அரசும் பத்து மாநில அரசுகளும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்தன. இவற்றைப்  பரிசீலித்து கடந்த மார்ச் 31 அன்று உச்ச நீதிமன்றம் தற்போதைய இறுதித் தீர்ப்பை அளித்துள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, பல்வேறு மாநிலங்களின் அதிகாரிகள் மாநில நெடுஞ்சாலைகளை, மாவட்ட நெடுஞ்சாலைகளாக மாற்றி வழக்கம் போல சாராய வியாபாரத்தைத் தொடர்கின்றனர். காரைத் திருடுகிறவன் நம்பர் பிளேட்டை மாற்றி போர்ஜரி செய்வதற்கும் இந்த அரசுகளுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விட்டது. தமிழக அரசோ அவசரமாகப் புதிய டாஸ்மாக் கடைகளைத் திறப்பதோடு, அதற்கெதிராகப் போராடும் மக்கள் மீது அடக்குமுறை வெறியாட்டம் போடுகிறது.

சாராயத்தால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ள போதிலும், தனது கீழ்த்தரமான நடவடிக்கைகளால் இவ்வளவு வக்கிரமாக நடந்து கொள்கிறதே, இதனை ஒரு அரசு என்று அழைக்கத்தான் முடியுமா? வறட்சியும் விவசாயிகளின் மரணமும் தமிழக அரசுக்குப் பதற்றத்தை ஏற்படுத்தவில்லை. மாறாக, நெடுஞ்சாலைகளிலுள்ள சாராயக் கடைகளை மூடவேண்டுமென்ற உத்தரவுதான் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது எனில் இது ஒரு அரசா?  தமிழகம் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் மத்திய, மாநில அரசுகள் இப்படித்தான் உள்ளன.

உச்ச நீதிமன்ற உத்தரவை செல்லாக்காசாக்க அரசுகள் செய்துவரும் அயோக்கியத்தனமான வழிமுறைகளும், அவை முன்வைக்கும் வாதங்களும் இது ஒரு அரசு என்று சொல்லிக் கொள்வதற்கான தகுதியை இழந்துவிட்டதையே காட்டுகின்றன. மாஃபியா கும்பலுக்கும் அரசுக்கும் வேறுபாடு இல்லாமல் போய்விட்டதையும், அரசு எனும் அதிகார நிறுவனம் மக்களுக்கு முற்றிலும் எதிரானதாக மாறிவிட்டதையும் துலக்கமாகக் காட்டுகின்றன. நீதிமன்ற உத்தரவுகளால்கூட டாஸ்மாக் கடைகளை மூட முடியாது, இந்த அரசியலமைப்பில் இதற்குத் தீர்வு காணவும் முடியாது என்ற நிலையில், “மூடு டாஸ்மாக்கை!” என்ற முழக்கத்துடன் போராடி தமிழக மக்கள் தங்களது அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்வதைத் தவிர இனி வேறென்ன வழி இருக்கிறது?

கருத்துச் சுதந்திரம் பயங்கரவாதக் குற்றமாம் !

1

புரட்சிகர ஜனநாயக முன்னணியின் இணைச்செயலரும், டெல்லி பல்கலைக்கழக பேராசிரியருமான தோழர் சாய்பாபா, உத்திரகண்டைச் சேர்ந்த பத்திரிகையாளர் பிரசாந்த் ராகி, ஜே.என்.யு. மாணவர் ஹேம் மிஸ்ரா, கட்சிரோலி மாவட்டத்தை சேர்ந்த பழங்குடியினரான மகேஷ் திர்கி, பாண்டு நரோதே ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், விஜய் திர்கி என்ற பழங்குடி இளைஞருக்குப் பத்து ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்துத் தீர்ப்பளித்திருக்கின்றது, மகாராட்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்ட செசன்சு நீதிமன்றம். “இதைவிட அதிகமான தண்டனை கொடுப்பதற்குச் சட்டத்தில் இடமில்லாத காரணத்தினால், ஆயுள் தண்டனைக்கு மேல் கொடுக்க முடியவில்லை” என்று நீதிபதி சூர்யகாந்த் ஷிண்டே தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார்.

குறிப்பான குற்றச்சாட்டுகளே சுமத்தப்படாத வழக்கில் தண்டிக்கப்பட்டிருக்கும் புரட்சிகர ஜனநாயக முன்னணியின் இணைச்செயலரும் பேராசிரியருமான சாய்பாபா. (கோப்புப் படம்)
குறிப்பான குற்றச்சாட்டுகளே சுமத்தப்படாத வழக்கில் தண்டிக்கப்பட்டிருக்கும் புரட்சிகர ஜனநாயக முன்னணியின் இணைச்செயலரும் பேராசிரியருமான சாய்பாபா. (கோப்புப் படம்)

சாய்பாபா 90% ஊனமுற்றவர், இதய நோயாளி. பிறர் உதவியில்லாமல் கழிவறைக்குக்கூடச் செல்ல முடியாதவர். ஹேம் மிஸ்ரா என்ற மாணவரும் ஊனமுற்றவர். சாய்பாபாவோ, மற்றவர்களோ குண்டு வைத்ததாகவோ, கொலை செய்ததாகவோ, காயம் ஏற்படுத்தியதாகவோ, குறைந்தபட்சம் ஆயுதம் வைத்திருந்ததாகவோ போலீசார் பொய்யாகக்கூடக் குற்றம் சாட்டவில்லை. இருந்த போதிலும், இந்துத்துவ பயங்கரவாதிகள், ஊழல் அதிகாரிகள், அரசியல்வாதிகள் மீதான வழக்குகளிலெல்லாம் எந்த நீதிமன்றமும் காட்டாத ஒரு ஆவேசத்தையும் ஆத்திரத்தையும் சாய்பாபா மீது காட்டியிருக்கிறார் நீதிபதி.

தடா, பொடா ஆகிய சட்டங்களைக் காட்டிலும் கொடிய, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (Unlawful Activities Prevention Act) 13-வது பிரிவு (சட்டவிரோத நடவடிக்கையில் பங்கேற்பது, தூண்டுவது அல்லது நியாயப்படுத்துவது), 18-வது பிரிவு (பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு சதி செய்வது), 20-வது பிரிவு (பயங்கரவாத அமைப்பின் உறுப்பினராக இருப்பது), 39-வது பிரிவு (பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவு தேடுவதற்காக பிரச்சாரம் செய்வது) – இவையெல்லாம் சாய்பாபா உள்ளிட்டோர் மீது போடப்பட்ட வழக்கின் குற்றப் பிரிவுகள். ஆயுள் தண்டனை பெறும் அளவுக்கு அவர்கள் செய்த குற்றம் என்ன?

அவர்கள் மாவோயிஸ்டு கட்சி மற்றும் அதனைச் சார்ந்த அமைப்புகளின் முக்கிய உறுப்பினர்கள்; மாவோயிஸ்டு கட்சியின் இலக்கியங்கள் அவர்களிடம் இருந்தன; அதன் உறுப்பினர்கள் என்ற முறையில் பொது ஒழுங்கைக் குலைக்கும் மாவோயிஸ்டு நடவடிக்கைகளுக்கு அவர்கள் உடந்தையாக இருந்திருக்கிறார்கள் – இவைதான் குற்றச்சாட்டுகள். அதாவது, சாய்பாபாவும் பிறரும் கருத்துரீதியாக மாவோயிஸ்டுகளை ஆதரிக்கிறார்கள் என்பதுதான் அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்குவதற்கு நீதிமன்றம் கூறியிருக்கும் குற்றச்சாட்டு.

எந்தவொரு குறிப்பான குற்றச்செயலில் ஈடுபட்டதற்காகவும் சாய்பாபாவோ மற்றவர்களோ தண்டிக்கப்படவில்லை. சாய்பாபா, அவர் கொண்டிருந்த கருத்துக்காகத் தண்டிக்கப்பட்டிருக்கிறார். ஒரு குடிமகனை அவர் கொண்டிருக்கும் கருத்துக்காகவே தண்டிக்க முடியும் என்ற வாய்ப்பைச் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் வழங்குகிறது. இந்திய தண்டனைச் சட்டத்தின்படி சாதாரண தண்டனை விதிக்கத்தக்க ஒரு குற்றத்துக்கு, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படுமானால், ஆயுள் தண்டனை கூட விதிக்க முடியும். இதே சட்டத்தின் கீழ்தான் மாவோயிஸ்டு சிறைக் கைதிகளுக்காக ஆஜரான வழக்கறிஞர் முருகன் மதுரையில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

சாய்பாபாவை இப்படி ஒரு வழக்கில் கைது செய்வதற்குப் பல மாதங்கள் முன்னதாகவே, மத்திய அரசு தனது நோக்கத்தை வெளிக்காட்டி விட்டது. நவம்பர் 2013-இல் உச்ச நீதிமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்த மனுவில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருந்தது.  “நகரங்களின் உள்ள மாவோயிஸ்டு கொள்கையாளர்களும் அதன் ஆதரவாளர்களும் அரசுக்கு எதிராகத் திட்டமிட்டுப் பிரச்சாரம் செய்கிறார்கள். இவர்கள்தான் மாவோயிஸ்டு இயக்கத்தை உயிருடன் வைத்திருப்பவர்கள். மாவோயிஸ்டு கொரில்லாப் படையின் உறுப்பினர்களைக் காட்டிலும், இவர்கள்தான் பல விதங்களில் ஆபத்தானவர்கள்.”

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டுள்ள (இடமிருந்து) ஜே.என்.யு. மாணவர் ஹேம் மிஸ்ரா, பழங்குடியினத்தைச் சேர்ந்த பாண்டு நரோதே, மகேஷ் திர்கி, பத்திரிகையாளர் பிரசாந்த் ராகி மற்றும் விஜய் திர்கி.

இவ்வளவு ஆத்திரமாக மத்திய அரசு பேசுவதற்குக் காரணம் இருந்தது. மத்திய இந்தியாவின் பழங்குடி மக்களிடமிருந்து அவர்களின் பாரம்பரிய உரிமையான காடுகளைப் பறித்து, பன்னாட்டு – கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு உடைமையாக்குவதற்காகப் போடப்பட்ட ஒப்பந்தங்கள் எதையும் மக்களின் போராட்டங்கள் காரணமாக அரசால் அமல்படுத்த முடியவில்லை. அதாவது, கனிம வளங்களை அம்பானிகளுக்குத் தாரை வார்க்கும் “வளர்ச்சித் திட்டங்கள்” எதையும் அரசால் அமல்படுத்த முடியவில்லை.

எனவே, மாவோயிஸ்டு கொரில்லாக்களின் ஆயுதப் போராட்டத்தை ஒடுக்குவது என்ற பெயரில் பழங்குடி மக்களை அடித்துத் துரத்தும்பொருட்டு சல்வா ஜுடும் என்ற கூலிப்படையை உருவாக்கி, இலட்சக்கணக்கான பழங்குடி மக்களைக் கிராமங்களிலிருந்து அப்புறப்படுத்தியது. அரசாங்கமே சட்டவிரோத கூலிப்படையை இயக்குவது அம்பலமாகி சந்தி சிரித்ததால், 2010-இல் காட்டு வேட்டை (Operation Greenhunt) என்ற பெயரில் அதிகாரபூர்வமான படையெடுப்பையே அறிவித்தது, மன்மோகன் அரசு.

ஒரு பகை நாட்டுக்கு எதிரான போரைப் போன்று, சொந்த நாட்டு மக்கள் மீதே வான்வழித் தாக்குதல் உள்ளிட்ட எல்லா வடிவங்களிலும் போர் தொடுக்க ஆயத்த நிலையில் இருந்த இந்திய அரசு, உள்நாட்டிலும் உலகளவிலும் எழுந்த கண்டனக் குரல்களின் காரணமாக, அந்த போரையே கைவிட வேண்டியதாயிற்று. கையாலாகாத பிரதமர் என்று மன்மோகன் சிங்கை உலக முதலாளி வர்க்கம் காறித் துப்பியது. அடுத்த பிரதமராக மோடியைத் தயார் செய்யும் முயற்சியிலும் இறங்கியது. உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த அறிக்கையின் பின்புலம் இதுதான்.

காட்டு வேட்டைக்கு எதிராகக் குரல் எழுப்பிய அருந்ததி ராய், பிரசாந்த் பூஷண் முதலானோர் முதல் நோம் சோம்ஸ்கி வரையிலான அறிவுத்துறையினர் யாரும் மாவோயிஸ்டுகள் அல்லர். வளர்ச்சி என்ற பெயரில் பொதுச்சொத்தை கார்ப்பரேட் முதலாளிகள் கொள்ளையிடுவதையும், பழங்குடி மக்களின் வாழ்வாதாரங்களைப் பறிப்பதையும், இயற்கை வளங்களையும் சுற்றுச்சூழலையும் நாசமாக்குவதையும், இதற்காக அப்பட்டமான சட்ட மீறல்களில் அரசு ஈடுபடுவதையும் மக்கள் மீது போர் தொடுப்பதையும் அவர்கள் எதிர்த்தார்கள். இதைத் தவிர, வேறு எந்த சட்டவிரோதமான காரியத்திலோ, வன்முறையிலோ அறிவுத்துறையினர் ஈடுபடவில்லை. இப்படித் தேசிய, சர்வதேச அளவில் காட்டு வேட்டைக்கு எதிராகப் பல்வேறு தரப்பினரும் எழுப்பிய குரல், அரசைத் தோற்கடித்தது. இப்படிக் குரலெழுப்பச் செய்ததில் தோழர் சாய்பாபாவின் பங்கு குறிப்பிடத்தக்கது.

இந்திய தண்டனைச் சட்டத்தின்படி சாதாரண தண்டனை விதிக்கத்தக்க ஒரு குற்றத்துக்கு, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படுமானால், ஆயுள் தண்டனைகூட விதிக்க முடியும். இதே சட்டத்தின் கீழ்தான் மாவோயிஸ்டு சிறைக்கைதிகளுக்காக ஆஜரான வழக்கறிஞர் முருகன் மதுரையில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

ஒரு மக்கள் விரோதக் கொள்கைக்கு எதிராகப் பொதுக்கருத்தை உருவாக்கினார் சாய்பாபா. இது ஒரு குடிமகனின் ஜனநாயக உரிமை என்று சட்டம் அங்கீகரிக்கிறது. குறிப்பான வன்முறை நடவடிக்கை அல்லது குற்றச்செயலில் ஈடுபட்டிருந்தால் அன்றி, தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்திற்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்த காரணத்துக்காகவோ, அவ்வியக்கத்தின் உறுப்பினர் என்பதற்காகவோ ஒருவரைத் தண்டிக்க இயலாது என உச்ச நீதிமன்றத்தின் பல தீர்ப்புகள் கூறுகின்றன.

ஆனால், சாய்பாபாவுக்கு ஆயுள்தண்டனையே போதாது என்று கூறுவதற்கு இந்த நீதிபதி குறிப்பிட்டிருக்கும் காரணம் என்ன தெரியுமா? 1982 முதல் கட்சிரோலி மாவட்டத்தில் எந்த வளர்ச்சித் திட்டத்தையும் அரசு அமல்படுத்த முடியவில்லையாம். அதற்குக் காரணம் நக்சலைட்டுகளின் வன்முறைதான் என்பதால், சாய்பாபாவுக்கு ஆயுள்தண்டனையே போதாதாம். சாட்சியங்கள், ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்பளிக்க வேண்டிய ஒரு குற்றவியல் வழக்கில், எச்.ராஜாவின் மொழியில் தீர்ப்பளித்திருக்கிறார் இந்த நீதிபதி. இவ்வழக்கு விசாரணை எப்படி நடந்திருக்கும் என்பதைப் புரிந்து கொள்வதற்கு மேற்கண்ட ஒரு வரியே போதுமானது.

ஆகஸ்டு 2013-இல் சந்திரபூர் மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட மகேஷ், பாண்டு, ஹேம் மிஸ்ரா ஆகியோரை கட்சிரோலி மாவட்டத்தில் கைது செய்ததாகப் பொய்யாகக் காட்டியது போலீசு. ஒரு மாதத்துக்குப் பின் டில்லியில் இருக்கும் சாய்பாபாவின் வீட்டுக்குள் திமுதிமுவென்று நுழைந்த மகாராட்டிர போலீசார், அவர் வீட்டிலிருந்து கணினி உள்ளிட்ட பொருட்களையும் ஆவணங்களையும் திருடிச் சென்றனர். இந்த நடவடிக்கையை சட்டபூர்வமானதாகக் காட்டும் பொருட்டு, திருட்டுப் பொருளைத் தேடுவதற்கான வாரண்ட் ஒன்றை மகாராட்டிர மாஜிஸ்டிரேட்டிடமிருந்து பெற்று வந்திருந்தது போலீசு. இந்த நடவடிக்கையை எதிர்த்து இருநூறுக்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் மாணவர்களும் அவர் வீட்டின் முன் திரண்டுவிட்டனர். அவர்களைத் தடுத்து நிறுத்திவிட்டு, யாருடைய ஒப்புதலோ சாட்சியமோ இல்லாமல்தான் இந்த தடயங்கள் கைப்பற்றப்பட்டன என்பதை போலீசு கொண்டு வந்த சாட்சிகளே நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டிருக்கின்றனர். அதாவது, சாய்பாபாவிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக போலீசு கூறுகின்ற ஆவணங்கள் எதுவும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டவை அல்ல என்று சாய்பாபாவின் வழக்கறிஞர்கள் ஆணித்தரமாக நிறுவிவிட்டனர். இதை நீதிமன்றம் பொருட்படுத்தவில்லை.

அதுமட்டுமல்ல, கணினி உள்ளிட்ட மின்னணு சாட்சியங்கள் (Digital evidence) தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டு, அவற்றின் உண்மைத்தன்மை நிறுவப்பட்டால்தான் நீதிமன்றம் அதனைச் சாட்சியமாக ஏற்கவேண்டும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் எதையும் விசாரணை நீதிமன்றம் மதிக்கவில்லை. சந்தேகத்திற்கிடமான தடயங்களை அப்படியே ஏற்றுக்கொண்டிருக்கின்றது.

போலீசார் கொண்டு வந்து நிறுத்திய சாட்சிகளுக்குக் குற்றம் சாட்டப்பட்டவர்களின் பெயர் கூடத் தெரியவில்லை. கைப்பற்றப்பட்ட பொருட்களை அடையாளம் காட்ட அழைத்துவரப்பட்ட சாட்சிகளுக்கு பென் டிரைவ், மெமரி கார்டு போன்ற சொற்களுக்கான பொருளே தெரியவில்லை. போலீசார் தங்களை விடுதியில் தங்க வைத்து, குளிப்பாட்டி அழைத்து வந்ததை, குறுக்கு விசாரணையின்போது சாட்சிகள் இயல்பாக விளக்கினர். அனைத்தும் பொய் சாட்சிகள் என்று தெரிந்தும், அவற்றை நீதிமன்றம் நிராகரிக்கவில்லை.

பேராசிரியர் சாய்பாபா மற்றும் அவரது தோழர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக் கோரியும், ஆள்தூக்கி கருப்புச் சட்டமான சட்டவிரோத நடவடிக்கைகள் சட்டத்தை நீக்கக் கோரியும் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சார்பில் மதுரையில் நடைபெற்ற கருத்தரங்கம்.

இத்தனைக்கும் மேல், சாய்பாபாவிடமிருந்தும் மற்றவர்களிடமிருந்தும் கைப்பற்றப்பட்டவை என்று போலீசார் காட்டியிருந்த ஆவணங்களும் நூல்களும் தடை செய்யப்பட்டவை அல்ல. அவற்றில் எந்த விதமான இரகசியமோ, சதித்திட்டமோ இல்லை. இலங்கை போர்க்குற்றம் குறித்த வீடியோக்கள், அருந்ததி ராய் கட்டுரைகள், கயர்லாஞ்சி படுகொலை தொடர்பான கட்டுரைகள், காஷ்மீர் குறித்த பி.பி.சி.யின் ஆவணப்படம் போன்றவைதான் கைப்பற்றப்பட்ட திடுக்கிடும் ஆவணங்கள். என்ற போதிலும் இவற்றையெல்லாம் அபாயகரமான ஆவணங்கள் என்று குறிப்பிடுகிறது தீர்ப்பு.

மாவோயிஸ்டு அமைப்பைச் சேர்ந்த நர்மதா என்ற தோழருக்கு கணினிச் சில்லு ஒன்றை ஹேம் மிஸ்ரா என்ற மாணவர் மூலம் கொடுத்தனுப்பினார் என்பதும், புரட்சிகர ஜனநாயக முன்னணி என்ற தடை செய்யப்பட்ட அமைப்பின் இணைச்செயலாளராக இருந்தார் என்பதும் சாய்பாபா மீதான கூடுதல் குற்றச்சாட்டுகள்.

பு.ஜ.முன்னணி என்ற அமைப்பு ஒரிசா, ஆந்திரா மாநிலங்களில்தான் தடை செய்யப்பட்டுள்ளதேயன்றி, மத்திய அரசால் தடை செய்யப்படவில்லை. வழக்கு நடத்தப்பட்ட மகாராட்டிரத்திலும், சாய்பாபா செயல்பட்டு வந்த டெல்லியிலும் தடை செய்யப்படவில்லை. இருப்பினும் அது தடை செய்யப்பட்ட அமைப்புதான் என்று நீதிபதியே ஆதாரமில்லாமல் குற்றம் சாட்டி, அதன் அடிப்படையில் தண்டனையும் வழங்கியிருக்கிறார். சுமார் 827 பக்கங்கள் கொண்ட இந்த தீர்ப்பு முழுவதும் இத்தகைய அபத்தங்களும் முரண்பாடுகளும் நிரம்பி வழிகின்றன என்று கூறுகிறார்கள் வழக்கறிஞர்கள்.

பொதுவாக அரசோ போலீசோ பொய் வழக்கு போடும்போது, “உங்கள் மீது குற்றம் இல்லையென்றால் நீதிமன்றத்தில் நிரூபித்துக் கொள்ள வேண்டியதுதானே” என்றொரு வாதம் எல்லோராலும் வைக்கப்படும். அதாவது, ஒருவேளை சட்டத்தை மீறி ஒரு குடிமகனின் உரிமையை அரசு பறித்திருந்தாலும், ஜனநாயகத்தின் சுயேச்சையான தூணாகிய நீதிமன்றம் அவருக்குச் சட்டப்படியான நிவாரணத்தை வழங்கிவிடும் என்பதுதான் நீதித்துறை குறித்து ஏற்படுத்தப்படும் இந்த நம்பிக்கைக்கு அடித்தளம்.

அந்த நம்பிக்கை ஒரு மூட நம்பிக்கை என்பதைப் பல தீர்ப்புகளில் நீதிமன்றங்கள் நிரூபித்து வருகின்றன. இது அத்தகையதோர் தீர்ப்பு. போதிய சாட்சியங்கள் இல்லாத போதிலும், தேசத்தின் மனச்சாட்சியைத் திருப்திப்படுத்தும்பொருட்டு அப்சல் குருவுக்குத் தூக்கு தண்டனை விதிப்பதாகக் கூறியது உச்ச நீதிமன்றம். அதே நேரத்தில், மறுக்க முடியாத சாட்சியங்கள் இருந்தும், நான் தான் செய்தேன் என்று நீதிபதியிடம் ஒப்புதல் வாக்குமூலமே கொடுத்த அசீமானந்தா போன்ற இந்துத்துவ பயங்கரவாதிகள் விடுவிக்கப்படுகின்றனர்.

நக்சலைட்டுகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். ஏனென்றால், அவர்கள் வளர்ச்சித் திட்டத்தின் எதிரிகள் என்கிறார் நீதிபதி. “ஹைட்ரோ கார்பன், மீத்தேன், கெயில் போன்ற ‘வளர்ச்சித்திட்டங்களை’ எதிர்ப்பவர்கள் அனைவரும் நக்சலைட்டுகளே” என்று வெறி பிடித்தவர்களைப் போலக் கூச்சலிடுகிறார்கள் பாரதிய ஜனதாக்காரர்கள். சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் என்பது பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்கானது என்று இன்னமும் யாரேனும் கருதுகிறீர்களா?

மண்ணைப் பறித்து, மலடாக்கி, மக்களை அகதிகளாக்கும் கார்ப்பரேட் பயங்கரவாத நடவடிக்கையின் பெயர் – வளர்ச்சி. இதற்கு எதிராக வாழ்வுரிமைக்கு குரல் கொடுப்போரின் பெயர் பயங்கரவாதிகள்.