Friday, June 19, 2026
முகப்பு பதிவு பக்கம் 535

அரசு ஆசியுடன் ஜப்பான் மாருதி நடத்தும் கொத்தடிமைத் தொழில்

2

புது தில்லி துணை நகர தொழிலாளர்கள் நிலைமை – நேரடி செய்தியறிக்கை பாகம் 2

”இது என்னுடைய கதை மட்டுமல்ல. அனைத்து தொழிலாளிகளின் கதையும் இது தான்” என்கிறார் ராம் நிவாஸ். மாருதி சுசுகி தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ராம் நிவாஸ். 2012 ஜூலை 18-ம் தேதி சம்பவத்தைத் தொடர்ந்து மாருதி நிர்வாகத்தின் வேலைப் பறிப்பு நடவடிக்கைக்கு ஆளானவர். அன்றைய தினம் ராம் நிவாஸ் இரண்டாவது ஷிப்டில் பணிபுரிய வேண்டியிருந்ததால் ஆலையைக் கொளுத்திய ‘தீவிரவாதிகள்’ பட்டியலில் இடம் பெறவில்லை.

”மானேசர் ஆலைக்கு வருவது எங்களுக்கு ஒரு இன்பக் கனவாக இருந்தது. நான் ஐ.டி.ஐ படித்து விட்டு மாருதியின் குர்காவ்ன் ஆலையில் ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிந்து வந்தேன். அங்கே இருந்த உற்பத்தி லைனில் 72 நொடிகளுக்கு ஒரு கார் உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்பது இலக்கு. உங்களுக்கு மாருதியின் வேலை நிலைமைகள் குறித்து தெரியும் தானே?” என்றார் ராம் நிவாஸ்.

ராம் நிவாஸ்

இழிபுகழ் பெற்ற மாருதியின் சுரண்டல் முறை மாருதி தொழிலாளிகளின் பல்லாண்டு காலப் போராட்டங்களுக்குப் பின்னரே அம்பலமானது. தொழிலாளிகளுக்கு விடுமுறை கிடையாது – அவசரகால விடுமுறை எடுப்பதாக இருந்தால் ஒரு நாள் விடுப்புக்கு இரண்டு நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்படும். தேனீர் குடிக்க ஏழு நிமிடங்கள், உணவுக்கு 20 நிமிடங்கள், கழிவறை செல்ல ஐந்து நிமிடங்கள் என வரையறுக்கப்பட்டிருக்கும் நேரத்துக்குள் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்.

காரின் பல்வேறு உதிரி பாகங்கள் நீண்ட கன்வேயர் பெல்டில் நகர்ந்து கொண்டிருக்கும். நகரும் கன்வேயர் பெல்டில் உள்ள பாகங்களை சம்பந்தப்பட்ட தொழிலாளி இணைப்பதற்கு சில வினாடிகள் ஒதுக்கப்பட்டிருக்கும். அதற்குள் அந்த வேலையை அவர் செய்யவில்லை என்றால், அடுத்ததாக உள்ள தொழிலாளியால் அந்த குறிப்பிட்ட உதிரி பாகத்தில் அவருக்கென ஒதுக்கப்பட்ட வேலையைச் செய்ய முடியாது.

சார்லி சாப்ளினின் மாடர்ன் டைம்ஸ் திரைப்படத்தின் காட்சியை நினைவூட்டிக் கொள்ளுங்கள்.  மானேசர் ஆலையின் உற்பத்தி அவ்வாறே நடந்தது. கன்வேயர் பெல்டின் அருகே தண்ணீர் வைக்கப்பட்டிருக்கும். தாகமெடுக்கும் தொழிலாளிகளுக்கு தண்ணீரைப் பார்ப்பதற்கு மட்டுமே நேரமிருக்கும் – குடிப்பதற்கு நகர்ந்தால் கன்வேயர் பெல்டில் அவர் இணைக்க வேண்டிய உதிரிபாகம் நகர்ந்து சென்றிருக்கும். தொழிலாளிகள் தங்களுக்குள் பேசிக் கொள்வதற்கு கூட ஆலை நிர்வாகம் தடை போட்டிருந்தது.

”குறிப்பாக குர்காவ்ன் ஆலையில் இருந்து மானேசர் ஆலைக்கு மாறுதல் பெற்று வரவேண்டும் என தொழிலாளிகள்  ஏன் விரும்பினார்கள்?”  ராம் நிவாசிடம் கேட்டோம்.

”எல்லோரும் அல்ல. ஒப்பந்த தொழிலாளிகளே அப்படி விரும்பினார்கள். மானேசர் ஆலை 2007-ம் ஆண்டு தான் உற்பத்தியைத் துவங்கியது. குர்காவ்ன் ஆலையில் பணிபுரிந்து வந்த ஒப்பந்த தொழிலாளிகளிடம் மானேசருக்குச் சென்றால் விரைவில் பணி நிரந்தரம் செய்யப்படுவோம் என சொல்லப்பட்டு வந்தது. அதை நம்பினோம். எனவே மானேசருக்கு பணிமாற்றம் விரும்பிக் கேட்டு வந்தோம்”

தாகமெடுக்கும் தொழிலாளிகளுக்கு தண்ணீரைப் பார்ப்பதற்கு மட்டுமே நேரமிருக்கும்
தாகமெடுக்கும் தொழிலாளிகளுக்கு தண்ணீரைப் பார்ப்பதற்கு மட்டுமே நேரமிருக்கும்

”மானேசரில் பணி நிரந்தரம் செய்யப்பட்டீர்களா?

“சிலருக்குக் கிடைத்தது; பலருக்கு கிடைக்கவில்லை. மொத்தம் 3000 தொழிலாளர்களில் 1100 பேர் பணி நிரந்தரம் செய்யப்பட்டார்கள். ஆனால், பிரச்சினை அதுவல்ல. இங்கே குர்காவ்னை விட ஒடுக்குமுறை அதிகமானது. குர்காவ்னில் 72 நொடிகளுக்கு ஒரு கார் என இலக்கு வைத்து கன்வேயர் பெல்ட் நகர்ந்தது என்றால் இங்கே முதலில் 60 நொடிகளுக்கு ஒரு கார் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் இது 44 நொடிகள் என குறைக்கப்பட்டது”

கன்வேயர் பெல்ட்டின் வேகம் கூட்டப்பட்டதுடன் வேறு கொடூரமான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. தொழிலாளிகள் செல்பேசிகள் வைத்துக் கொள்ளக் கூடாது, வேலைக்கு இடையே தண்ணீர் குடிக்க கூடாது, வேலை நேரத்துக்கு இடையே வரும் ஓய்வு நேரமும் உணவு நேரமும் சுருக்கப்படுவது, முந்தைய நாளின் வேலை அறிக்கையை மறுநாளின் தேனீர் இடைவெளியின் (7 நிமிடங்கள்) போது நிரப்பிக் கொடுப்பது என நினைத்துப் பார்க்கவே முடியாத வடிவங்களில் எல்லாம் தொழிலாளிகளின் மேல் அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டது மாருதி நிர்வாகம்.

”சரி.. இந்த மாதிரியான ஒடுக்குமுறைக்கு எதிராக தொழிலாளர்களின் எதிர்வினை எந்தமாதிரியாக இருந்தது?”

”முதலில் எங்களுக்கான சங்கம் துவங்க வேண்டுமென திட்டமிட்டோம்”

“உங்களுக்கான சங்கம் என்றால்…”

“ஆம், ஏற்கனவே நிர்வாகத்தின் கைக்கூலி சங்கம் ஒன்று இருந்தது. நாங்கள் அதை மஞ்சள் சங்கம் என்று அழைப்போம். இதற்கு மேல் மஞ்சள் சங்கத்தை நம்பத் தேவையில்லை என்றும் ‘சிவப்பு’ சங்கம் ஒன்றைக் கட்டுவதென்றும் 2011-ம் ஆண்டு ஜூன் 4-ம் தேதி தீர்மானித்தோம். இதனை அறிந்த நிர்வாகம், மஞ்சள் சங்கத்தின் செயல்பாடுகளில் தொழிலாளர்களுக்கும் ஒப்புதல் உள்ளதெனக் காட்ட கையெழுத்து வாங்க முற்பட்டார்கள். எனவே நாங்கள் அன்றைய தினமே வேலை நிறுத்தத்தில் இறங்கினோம்.”

2011-ம் ஆண்டு ஜூன் 4-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நடைபெற்ற தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்

தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் சுமார் 13 நாட்களுக்கு நீடித்தது. மூவாயிரம் தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட நிலையில், இறுதியில் நிர்வாகம் இறங்கி வந்துள்ளது. தொழிலாளர்கள் தாங்கள் விரும்பியபடி சங்கம் கட்டிக் கொள்வதை அனுமதித்த நிர்வாகம், 13 நாள் வேலை நிறுத்தத்திற்காக 29 நாளுக்கான சம்பளத்தைப் பிடித்தம் செய்து கொண்டது. ஆலை திறக்கப்பட்டு உற்பத்தி துவங்கிய நிலையில், மீண்டும் ஆகஸ்ட் 29-ம் தேதி கதவடைப்பு செய்தது நிர்வாகம்.

சங்கம் கேட்டுப் போராடிய தொழிலாளர்களில் 94 பேரை பணி நீக்கம் செய்த மாருதி, எஞ்சியவர்கள் நன்னடத்தை பத்திரம் ஒன்றைத் தொழிலாளர்கள் மேல் திணித்தது. ‘நன்னடத்தை’ எனச் சொல்லப்பட்டாலும், சாராம்சத்தில் அது ஒரு கொத்தடிமைப் பத்திரமாகவே இருந்துள்ளது. பணியின் போது ஏற்படும் சிறிய தவறுகளுக்கு 15 நாட்கள் பணியிடை நீக்கம், புகையிலை போடக்கூடாது, பேசக்கூடாது, கழிவறையில் அதிக நேரம் எடுத்துக் கொள்ளக் கூடாது என அடிப்படை மனித உரிமைகளுக்கே எதிரான விதிகளை மேற்படி ‘நன்னடத்தை’ பத்திரம் கொண்டிருந்தது. மைய அரசும் அரியானா மாநில அரசும் ஒரு ஜப்பானிய கார்ப்பரேட் கம்பெனி தமது சொந்தக் குடிமக்களைக் கொத்தடிமைகளாக்க ஒப்பந்தம் செய்யத் துடிப்பதை வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்த நிலையில், மாருதி நிர்வாகத்தின் பின் போலீசு உள்ளிட்ட சகல அரசு எந்திரங்களும் துணையாக நின்றன.

சுமார் முப்பத்து மூன்று நாட்களுக்குப் பின் மீண்டும் ஆலையைத் திறந்த மாருதி நிர்வாகம் உடனடியாக 1200 ஒப்பந்தத் தொழிலாளிகளை வேலை நீக்கம் செய்தது. எஞ்சிய தொழிலாளர்களையும் வேறு வேறு தொழிற் பிரிவுகளுக்கு பணியிட மாற்றம் செய்தது – அதாவது பெயிண்டருக்கு வெல்டர் வேலையும், வெல்டருக்கு டர்னர் வேலையும், டர்னருக்கு பெயிண்டிங் வேலையும், எலக்ட்ரீசியனுக்கு மிசின் மேல் வேலையும் என வேலைகளை மாற்றிப் போட்டனர். இதன் மூலம் வேலையில் ஏற்படும் தவறுகளைக் காட்டி மீண்டும் தொழிலாளர்களை பணி நீக்கம் செய்வதே நிர்வாகத்தின் தந்திரமாக இருந்துள்ளது.

2011ம் ஆண்டு அக்டோபர் 7ம் தொடங்கிய தொழிலாளர்கள் போராட்டம்
பணிநீக்கம் செய்யப்பட்ட சக தொழிலாளிக்காக 2011-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி தொடங்கிய தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்

இந்தக் கொடுமைகளை எதிர்த்தும், பணிநீக்கம் செய்யப்பட்ட சக தொழிலாளிகளை சேர்க்கக் கோரியும் மீண்டும் 2011-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் நாள் முதல் வேலை நிறுத்தத்தை துவங்கினர் தொழிலாளார்கள். 14 நாட்கள் நீடித்த போராட்டத்தை சீர்குலைக்க வேறு தந்திரங்களைக் கையாண்டது மாருதி நிர்வாகம். தொழிற்சங்கத்தின் முன்னணியில் நின்ற சில தொழிலாளிகளுக்கு விருப்ப ஓய்வுத் திட்டத்தின் அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் 16 லட்சத்தில் இருந்து 30 லட்சம் வரை கொடுத்துள்ளது. இதை அப்படியே பத்திரிகைகளுக்கும் தெரிவித்து, “தொழிற்சங்க முன்னோடிகள் தங்களையே விற்றுக் கொண்டார்கள்” என தலைப்புச் செய்தியையும் வரவழைத்தது.

நிர்வாகத்தின் நரித்தந்திரங்கள் ஒருபக்கமும், சங்க முன்னோடிகளின் துரோகத்தனம் ஒருபக்கமும் சூழ்ந்து கொண்ட நிலையிலும் சோர்ந்து போகாத தொழிலாளர்கள், மீண்டும் 12 பேர் கொண்ட தொழிற்சங்க செயற்குழு ஒன்றை 2011-ம் ஆண்டு நவம்பர் மாதம் அமைத்தனர். 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் இந்தப் புதிய சங்கம் பதிவு செய்யப்பட்டது.

“எங்களுடைய கோரிக்கையான ’சமமான வேலைக்கு சம ஊதியமும் வசதிகளும்’ என்பதை மீண்டும் கையிலெடுத்துப் போராடத் துவங்கினோம்” என்றார் ராம் நிவாஸ்.

”ஜூலை 18 சம்பவத்தின் பின்னணி குறித்து சொல்லுங்கள்..” என்றோம்.

”2012-ம் ஆண்டின் துவக்கத்தில் இருந்தே தொழிலாளர்களுக்கும் நிர்வாகத்துக்கும் இடையே முறுகலான நிலை இருந்து வந்தது. எங்களுக்குள் எப்படியாவது பிரிவினையைத் தூண்டி விடவேண்டும் என்பதில் நிர்வாகம் குறியாக இருந்தது. அதற்கு நாங்கள் இடம் கொடுக்காமல் எங்களுடைய நியாயமான  கோரிக்கைகளுக்காக விடாப்பிடியாக போராடி வந்தோம். இந்நிலையில் தான் ஜூலை 18-ம் தேதி வந்தது…” என்றவர் சற்றே இடைவெளி விட்டுத் தொடர்ந்தார்.

இறந்து போன அவினேஷ் குமாரின் சடலம்
இறந்து போன அவினேஷ் குமாரின் சடலம்

“அன்றைக்குக் காலை ஒன்பது மணிக்கு ஜியாலால் என்கிற தொழிலாளியிடம் முந்தைய நாளின் வேலை அறிக்கையை தேனீர் இடைவெளியின் போது நிரப்பிக் கொடுக்குமாறு மேலாளர் வற்புறுத்தியுள்ளார். ஜியாலால் அதற்கு மறுக்கவே தலித்தான அவரை சாதிப் பெயர் சொல்லித் திட்டியும் அடித்தும் உள்ளார் மேலாளர். ஜியாலால் உடனடியாக இதை தொழிற்சங்கத்தின் கவனத்துக்கு கொண்டு வருகிறார். சுமார் 10 மணி அளவில் 12 தொழிற்சங்க நிர்வாகிகளும் நிர்வாகத்திடம் முறையிட்டனர். இதற்கிடையே 11 மணி அளவில் நிர்வாகத்தின் அழைப்பை ஏற்று போலீசாரும், தனியார் ரவுடிப் படை ஒன்றும் வந்து சேர்ந்தது”

“தனியார் ரவுடிப் படையா?”

”ஆம். பௌன்சர்கள் கேள்விப் பட்டிருப்பீர்களே, அவர்கள் தான். தொழிலாளிகளைப் போல் உடையணிந்து வந்த அவர்களை நாங்கள் முன்பின் பார்த்ததில்லை என்பதால் விசாரித்தோம்… அவர்கள், தாங்கள் புதிதாக சேர்ந்திருப்பதாகவும், அடையாள அட்டை இன்னமும் தரப்படவில்லை எனவும் தெரிவித்தனர். ஜியாலாலுக்கு நியாயம் கேட்டு நாங்கள் முழக்கங்கள் எழுப்பிக் கொண்டிருக்கும் போது போலீசாரும் இந்தப் புதியவர்களும் உள்ளே தான் இருந்தனர். முதல் ஷிப்டில் பணிபுரிந்த தொழிலாளர்கள் அனைவரும் நிர்வாக அலுவலகம் முன்பாக நின்று கொண்டிருந்த நேரத்தில் தான் அதற்கு சற்று தள்ளியிருந்த கட்டிடம் ஒன்று தீப்பிடித்து எரிவதைப் பார்த்தோம்”

“நீங்கள் தீ வைக்கவில்லை என்கிறீர்களா?”

”நிச்சயமாக. நாங்கள் தீ வைக்கவில்லை. சொல்லப் போனால் இப்போது நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்திருக்கும் 12 பேரும் அன்றைக்கு நிர்வாக கட்டிடத்தின் முன் அனைத்து தொழிலாளர்களும், நிர்வாகத்தின் மேலாளர்களும் பார்க்க அவர்கள் கண் முன் நின்றனர். சுற்றிலும் போலீசாரும், நிர்வாகத்தின் குண்டர் படையும் நிற்க தொழிலாளிகளால் செய்திருக்கவே முடியாது. ஆனால், தீ பிடித்துக் கொண்டது. அதை நிர்வாகத்தினர் தான் வைத்திருக்க வேண்டும். தீயில் எரிந்தவைகளுக்கு அவர்கள் இன்சுரன்ஸ் இழப்பீடு பெற்றுள்ளனர். அவர்களுக்கு அனைத்தும் கிடைத்து விட்டது. ஆனால், எங்களுக்கு? எங்கள் வாழ்க்கையையே இழந்திருக்கிறோமே?” என்றவர் மேலும் தொடர்ந்தார்…

ஜூலை 19-ம் தேதி தீ விபத்துக்கு பின் மாருதி ஆலை

”இறந்து போன அவினேஷ் குமாரை தொழிலாளிகள் தாக்கியிருக்க வாய்ப்பே இல்லை. ஏனெனில், அவர் எங்களிடம் கொஞ்சம் நிதானமாகவே நடந்து கொள்வார். மேலும் அப்போது அவருக்குமே கூட நிர்வாகத்துடன் முரண்பாடுகள் இருந்து வந்தது. அவர் வேலையை இராஜினாமா செய்யவிருந்ததாக பரவலாக தொழிலாளர்கள் பேசிக் கொண்டனர். நிர்வாகத்தினர் தான் அவரைத் தாக்கி நெருப்பில் எரியும்படி விட்டுச் சென்றதாக தொழிலாளிகள் பலரும் கருதுகின்றனர். உண்மை வேறு விதமாக இருக்க வாய்ப்பே இல்லை”

”சரி, தீ விபத்துக்குப் பின் என்ன நடந்தது?”

“அடுத்து அங்கே ஒரு கலவரம் நடந்தது. குண்டர்களும், போலீசாரும் எங்களைத் தாக்கினர். எங்களில் சிலர் திருப்பித் தாக்கினோம். ஆனால், அவர்கள் ஆயுதங்கள் வைத்திருந்தனர். நாங்களோ நிராயுதபாணிகளாக நின்றோம். எனவே அனைவரும் சிதறி ஓடிப் போனோம். மறுநாள் சுமார் 91 பேரைக் கைது செய்தார்கள். சில நாட்களுக்குள் மேலும் 56 பேரைக் கைது செய்தனர்.” என்றார் ராம் நிவாஸ்.

கலவரத்தைக் காரணம் காட்டி மொத்தம் 2346 தொழிலாளர்களை நிரந்தரப் பணிநீக்கம் செய்தது மாருதி நிர்வாகம். அதில் 546 பேர் நிரந்தர தொழிலாளிகள், 1800 பேர் ஒப்பந்த தொழிலாளிகள்.

போலீசாரின் துணையுடன் தொழிலாளர்களின் மேல் கொலைப் பழி சுமத்திய நிர்வாகம், கைதுகள் மற்றும் பணிநீக்க நடவடிக்கைகளால் தொழிற்சங்க கோரிக்கைகளையும், தொழிலாளர்களின் உரிமைக் கோரிக்கைகளையும் துடைத்தழித்து விட்டதாக நம்பியது. அரசு, காவல்துறை மற்றும் நீதித்துறை மாருதி நிர்வாகத்திற்கு சேவகம் செய்யத் தயாராக இருந்தன. இதனால் தொழிலாளர்கள் தமக்கு அஞ்சிப் பணிந்து விடுவார்கள் என்றும், அவர்களைச் சுரண்டிக் கொழுப்பதற்கு எல்லையே இல்லை என்றும் மகிழ்ந்தது அந்தப் பன்னாட்டுக் கம்பெனி.

அந்த முதலாளிகளின் கனவு பலித்ததா?

வழக்கின் கதி என்னவானது?

(தொடரும்)
வினவு செய்தியாளர் குழு.

மாருதி தொழிலாளர் நிலைமை – நேரடி அறிக்கை

1

புது தில்லி துணை நகர தொழிலாளர்கள் நிலைமை – நேரடி செய்தியறிக்கை பாகம் 1

கீழமை விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது! 13 பேருக்கு வாழ்நாள் சிறை; 4 பேருக்கு 5 ஆண்டுகளும், 14 பேருக்கு 3 ஆண்டுகளும் சிறைத்தண்டனை. 117 பேர் எந்தக் குற்றமும் செய்யாதவர்கள் என விடுவிப்பு. விடுவிக்கப்பட்டவர்கள் சுமார் நான்கரை ஆண்டுகள் பழியைச் சுமந்தனர்; கொலைப்பழி. அவர்கள் அனைவரும் வாழ்விழந்து, வேலையிழந்து, வருமானமிழந்து, வாழும் வழியிழந்து நிற்கின்றனர்.

இவர்களோடு சேர்த்து சுமார் 2,347 தொழிலாளர்களின் வேலை ஒரே நாளில் பறிக்கப்பட்டு அவர்களது குடும்பங்கள் நடுத்தெருவில் நிறுத்தப்பட்டன. அவர்கள் ஹரியானா மாநிலம் குர்கான்னை அடுத்துள்ள மானேசர் மாருதி தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள்.

அவர்கள் செய்த குற்றம்? உரிமைகளைக் கோரியது.

தங்களுக்கான அடிப்படை உரிமைகளைக் கோரிப் போராடிய மாருதி தொழிலாளர்களின் மீது கொலைப்பழி சுமத்தியது போலீசு. ஜூலை 18, 2012-ம் ஆண்டு நடந்த சிறிய வாய்த் தகறாரை பெரும் தீவிபத்தாக மாற்றியது மாருதி நிர்வாகம். அப்போது மாருதி நிர்வாகத்தால் அழைத்து வரப்பட்ட குண்டர்படையால் கொல்லப்பட்ட மேலாளர் ஒருவரின் மரண கணக்கை தொழிலாளர்களின் தலையில் சுமத்தி வழக்கு நடத்தியது மாநில அரசு.

அந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகி அதில் தண்டிக்கப்பட்டவர்களுக்கான தண்டனை விவரங்கள் கடந்த மார்ச் 18, 2017 அன்று கீழமை விசாரணை நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டது. இரண்டு நாட்கள் கழித்து வினவு செய்தியாளர் குழு மானேசரில் களமிறங்கியது.

“முதலில் தீர்ப்பை அறிவித்த நீதிமன்றம், 117- பேரை விடுவித்து 31- பேரை குற்றவாளிகளென அறிவித்தது. 18-ம் தேதி தண்டனை விவரங்களை அறிவிக்க உள்ளதாக நீதிமன்றம் தெரிவித்திருந்தது. அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தால் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டவர்களுக்கு தூக்கு தண்டனை கேட்டிருந்தார். எங்கே தங்களது தோழர்களைக் தூக்கில் போட்டுக் கொன்று விடுவார்களோ என பல்வேறு ஆலைகளைச் சேர்ந்த தொழிலாளிகள் பதறி விட்டார்கள்” என்றார் இந்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பைச்(IFTU) சேர்ந்த  தோழர் அபர்னா.

இந்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பைச்(IFTU) சேர்ந்த தோழர் அபர்னா

மாருதி தொழிற்சங்க வரலாறு மட்டுமின்றி, தில்லியைச் சுற்றியுள்ள நொய்டா, கிரேட்டர் நொய்டா, காஸியாபாத், குர்கான் மற்றும் மானேசர் போன்ற துணை நகரங்களின் தொழிற்சாலை மற்றும் தொழிற்சங்க வரலாற்றைக் குறித்து கேட்டறிய அவரைச் சந்தித்தோம். தில்லி டிஃபென்ஸ் காலனியை அடுத்த கோட்லா பகுதியில் இருந்த ஒரு நெரிசலான இடுக்கினுள் அமைந்திருந்த தொழிற்சங்க அலுவலகத்தில் தோழர் அபர்னாவுடன் பேசினோம்.

“தண்டனை விவரங்களை அறிவித்த 18-ம் தேதியன்று எல்.ஜி, மோசர்பேர், என்.டி.ஐ, டென்சோ உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்களது மதிய உணவைப் புறக்கணித்தனர். சுமார் 20,000 தொழிலாளர்கள் தங்களது தொழிற்கருவிகளை ஒரு மணிநேரம் எடுக்கவில்லை (Tool Down)… மாருதியின் அனைத்து ஆலைத் தொழிலாளர்களும் அன்றைக்கு மதிய உணவையும் இரவு உணவையும் புறக்கணித்திருந்தனர். சுமார் 25,000 கலவரத் தடுப்புப் போலீசார் மனேசரில் மட்டும் குவிக்கப்பட்டிருந்த நிலையிலும் தொழிலாளிகள் அஞ்சவில்லை”

“தோழர், மாருதி ஆலையில் பற்றிய நெருப்பின் வெளிச்சத்தில் இந்தப் பகுதி தொழிலாளர்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொடூரங்கள் நாடெங்கும் அம்பலமாகியிருக்கின்றன.. பொதுவாக இப்பகுதியில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் இங்கே நிலவும் சுரண்டல்கள் குறித்து சொல்ல முடியுமா?”

மாருதி ஆலையில் பற்றிய நெருப்பு என்று குறிப்பிட்டீர்கள் – அது பற்ற வைக்கப்பட்ட நெருப்பு.

“சொல்லலாம்.. ஆனால், அதற்கு முன் இரண்டு விசயங்களை நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். மாருதி ஆலையில் பற்றிய நெருப்பு என்று குறிப்பிட்டீர்கள் – முதலில் அதைத் திருத்திக் கொள்ளுங்கள். அது பற்ற வைக்கப்பட்ட நெருப்பு. அடுத்து, அது முதன் முதலாக நிகழ்ந்த ஒரு தனித்துவமான சம்பவமும் அல்ல. அதற்கு முன்னும் வெவ்வேறு அளவுகளில், வடிவங்களில் இதே போன்ற சம்பவங்கள் அரங்கேறியுள்ளன…” என்றவர் தொடர்ந்தார்.

எழுபதுகளில் சூழலுக்குப் பொருத்தமின்றி தலைநகர் தில்லி வீங்கிச் சென்றதை உணர்ந்தது காங்கிரசு. மொத்த வளர்ச்சியையும் ஓரிடத்தில் ஒன்று குவித்த நகரமயமாக்கலின் விளைவாக ஏற்பட்ட கான்சர் கட்டி விரைவில் வெடித்துச் சிதறும் சாத்தியங்களை உணர்ந்ததால், அதை அக்கம் பக்கத்துப் பகுதிகளுக்கு விரிவுபடுத்த திட்டமிட்டதன் விளைவே நொய்டா, காஸியாபாத், குர்கான், மனேசர் உள்ளிட்ட தலைநகரத் துணை நகரங்கள்.

நகரமயமாக்கலின் ஆபாசங்களுக்கு சிறந்த உதாரணம் தில்லியும் அதன் துணை நகரங்களும். பளீர் நகரங்களுக்கும், பின்தங்கிய கிராமங்களுக்கும் ஒரு சில கிலோமீட்டர்களே தொலைவு. தில்லி தௌலா-குவானில் இருந்து குர்கான் – மானேசர் வரையிலான நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது அதன் ஓரங்களில் 21-ம் நூற்றாண்டையும் 10-ம் நூற்றாண்டையும் மாறி மாறிப் பார்க்க முடியும். வறண்ட பாலைவனத்தின் மத்தியில் எங்கிருந்தோ பிடுங்கி வரப்பட்டு நடப்பட்ட மலர்ச்செடிகளைப் போல் வானுயர்ந்த கண்ணாடிக் கட்டிடங்கள் சூழலுக்குப் பொருந்தாமல் உயர்ந்து நிற்கும். அருகிலேயே கயிற்றுக் கட்டிலில் ஹூக்கா புகைக்கும் கிராமத்து ஆதிக்க சாதிப் பெரிசுகளையும் உருவத்திலேயே வதைகளை உணர்த்தும் தலித்துகளையும் பார்க்க முடியும்.

வரலாற்று ரீதியில் உற்பத்தித் துறையுடன் எந்த தொடர்புமற்ற இந்தப் பகுதியில் பெரும் பன்னாட்டு முதலாளிகள் மற்றும் உள்நாட்டு தரகு முதலாளி வர்க்கத்தின் தொழிற்சாலைகளை நிறுவ எழுபதுகளின் மத்தியிலிருந்தே துணை நின்றது காங்கிரசு அரசு. யாதவ் மற்றும் ராஜ்புத் சாதியினர் கணிசமாகவும் ஜாட் மற்றும் குஜ்ஜார் சாதியினர் ஓரளவிற்கும் வசித்த இப்பகுதியில் முன்பு மானாவரி விவசாயம் நடந்துள்ளது. அதிகம் படிப்பறிவில்லாத மேற்குறிப்பிட்ட சாதியினரிடமே பெருவாரியான நிலம் குவிந்து கிடந்தது.

இந்நிலையில் நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் அரசு நினைத்ததைப் போல் அத்தனை எளிதாக நடக்கவில்லை. எனவே கார்ப்பரேட் நிறுவனங்கள் வேறு வழியின்றி மக்களின் முன் கருணை பிரபுக்களாக நடிக்க வேண்டியிருந்தது.

பாலைவனத்தின் மத்தியில் எங்கிருந்தோ பிடுங்கி வரப்பட்டு நடப்பட்ட மலர்ச்செடிகளைப் போல் சூழலுக்கு பொருத்தமில்லாத வானுயர் கட்டிடங்கள்

“அவர்கள் (முதலாளிகள்) முதலில் வந்த போது கேட்காமலேயே அனைத்தையும் கொடுத்தார்கள். அப்போது அவர்களுக்கு நிலம் தேவையாய் இருந்தது.. அவர்கள் கேள்விகளை விரும்பவில்லை; உரிமைக் குரல்களை வெறுத்தார்கள்; எனவே, அக்கம் பக்கத்திலிருந்தவர்களுக்கு வேலை செய்யாமலேயே காசு கொடுத்தார்கள்; மதிய உணவுக்கான இலவச டோக்கன்கள் வழங்கினார்கள்.. ஆலையின் உள்ளே இருக்கும் உணவகங்களுக்கு பொருட்கள் சப்ளை செய்யும் காண்டிராக்டுகளை வாரி வழங்கினர்.. அந்த வட்டாரத்து மண்ணின் மைந்தர்களின் சிந்தனையைக் கறைப்படுத்தினர், ஊழல்படுத்தினர்.. பின், சில ஆண்டுகள் கழித்து தங்கள் சுயரூபத்தை வெளிப்படுத்தினார்கள்..”

“நிலம் கையகப்படுத்தியவர்களுக்கு ஆலைகளிலேயே முறையான வேலை வாய்ப்புகளை ஏன் கொடுக்க வில்லை?”

“வெகுசிலருக்கு கிடைத்தது.. ஆனால் பெரும்பாலானவர்கள் படிப்பறிவில்லாதவர்கள். எனவே பெரும்பாலான தொழிலாளர்கள் வெளிமாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து ஐ.டி.ஐ படித்து விட்டு வந்தவர்கள் தான். அவ்வாறு வெளியில் இருந்து வந்தவர்களில் பெரும்பாலானவர்கள் தலித்துகள் என்பது குறிப்பிடத்தகுந்தது”

என அபர்னா சொல்லும் போது குறுக்கிட்டோம்.

“சரி பெரும்பான்மை தலித்துகளாகவே இருக்கட்டுமே. உள்ளூர் ஆதிக்க சாதியினரும் நிலத்தை இழந்திருக்கிறார்கள்.. நீங்கள் சொன்னது போல் சிலரை ஊழல்படுத்தியிருக்கலாம்.. என்றாலும் ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது கார்ப்பரேட்டுகள் தங்களை ஏமாற்றி விட்டதாக அவர்கள் உணரவில்லையா? அவர்களும் விவசாய பின்னணி கொண்டவர்கள் என்பதைக் கணக்கில் கொண்டு வர்க்க அடிப்படையில் பார்த்தால் அவர்கள் தொழிலாளர்கள் பக்கம் அல்லவா நின்றிருக்க வேண்டும்?”

“தோழர் நீங்கள் சில விசயங்களைப் புரிந்து கொள்ளுங்கள். முதலில், உள்ளூர் ஆதிக்க சாதியினரை கார்ப்பரேட்டுகள் ஊழல்படுத்தியிருக்கின்றன என்பதை பருண்மையாக புரிந்து கொள்ள வேண்டும். உதாரணமாக, இங்கே கம்பெனிகளில் லட்சத்துக்கும் மேலானவர்கள் வேலை செய்கிறார்கள்.. அதில் 80 சதவீதம் காண்டிராக்ட் தொழிலாளிகள். பத்து அல்லது சில பத்து காண்டிராக்ட் தொழிலாளிகளுக்கு ஒரு காண்டிராக்டர் இருப்பார் – அவர் உள்ளூர் ஆதிக்க சாதியைச் சேர்ந்தவராக இருப்பார். இப்படி காண்டிராக்ட் எடுத்து செய்ய அவருக்கு திறமை இருக்கிறதா இல்லையா என்பதெல்லாம் இரண்டாம் பட்சமானது”

குர்கான் – மானேசர் வரையிலான நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது அதன் ஓரங்களில் 21-ம் நூற்றாண்டையும் 10-ம் நூற்றாண்டையும் மாறி மாறிப் பார்க்க முடியும்.

“தாமே நேர்முகத் தேர்வு நடத்தி தெரிவு செய்த படித்த இளைஞர்களை ஒப்பந்த தொழிலாளியாக எடுத்துக் கொள்வார்கள் – இந்த தொழிலாளர்களைப் பிரித்து காண்டிராக்டர்களின் சம்பளப்பட்டியலில்(Payroll) சேர்த்து விடுவார்கள். இதே போல், போக்குவரத்து காண்டிராக்டு, உணவக காண்டிராக்டு, சிறியளவில் பொருட்கள் சப்ளை செய்யும் காண்டிராக்டு என பல்வேறு வாய்புகளை வீசியெறிந்து இந்தப் பகுதி மக்களின் பொருளாதார வாழ்க்கையை கம்பெனிகள் நேரடியாகவே கட்டுப்படுத்துகின்றன. சாதியைப் பொருத்தவரை, வெளியே எங்கிருந்தோ வந்த தலித் அல்லது கீழ்நிலை பிறப்படுத்தப்பட்ட சாதிக்காரன் நம்ம ஊரில் வந்து பிழைக்கிறானே என்கிற ஆத்திரம்…”

“தோழர், இந்தப் பகுதியில் துவங்கப்பட்ட தொழிலாளர் யூனியன்கள் குறித்து சொல்லுங்கள்”

“எந்தவொரு பன்னாட்டுக் கம்பெனியின் உற்பத்தி ஆலையை எடுத்துக் கொண்டாலும் செயல்படத் துவங்கிய ஒரு சில ஆண்டுகளிலேயே தங்களது சுயரூபத்தைக் காட்டிவிடுவார்கள். அதற்கு எதிர்வினையாக தொழிலாளர்களின் உரிமைக் கோரிக்கைகளும் தொழிற்சங்கங்களும் ஏற்படத் துவங்கின”

தில்லி மற்றும் அதன் துணை நகரங்களில் உள்ள உற்பத்தி ஆலைகளில் செயல்பட்டு வரும் பெரும்பாலான யூனியன்கள் அரசியல் சார்பற்றே உள்ளன – குறிப்பாக இடதுசாரிக் கட்சிகளின் சார்பற்று சுயேச்சையானவைகளாக இருக்கின்றன. சி.ஐ.டி.யூ, ஏ.ஐ.டி.யூ.சி, ஐ.எப்.டி.யூ (இ.பொ.க – மா.லெ புதிய ஜனநாயகம்) மற்றும் சி.எல்.ஐ (கம்யூனிஸ்ட் லீக் ஆப் இந்தியா) போன்ற கட்சி சார்புள்ள தொழிற்சங்கங்கள் ஓரளவுக்கு உள்ளன. என்றாலும், கணிசமாக சுயேச்சையான சங்கங்களே செயல்பட்டு வருகின்றன.

இந்தப் பகுதியில் துவக்கத்தில் இருந்தே கம்யூனிஸ்டு கட்சி அமைப்புகள் வலுவில்லாமல் இருந்தது இந்தப் போக்குக்கு முக்கியமான காரணம். இதன் விளைவாக கட்சி சார்பான தொழிற்சங்கங்களும் பல்வேறு துண்டுகளாக சிதறிக் கிடக்கின்றன. மேலும், பல்வேறு என்.ஜி.ஓ குழுக்களும் தொழிற்சங்கங்களை நடத்தி வருகின்றன. அரசியல் ரீதியில் வழிகாட்டுவதற்கு உறுதியான கட்சி அமைப்புகள் இல்லாத நிலையில் தொழிற்சங்கங்கள் மட்டும் கையை மீறி வளர்ந்ததால் இச்சங்கங்களுக்கு இயல்பாகவே சந்தர்ப்பவாத தலைமைகளே அமைந்தன. இதன் காரணமாகவே தொழிலாளர்களுக்கு கட்சி சார்பான தொழிற்சங்கங்களின் மீது ஒருவிதமான அவநம்பிக்கை நிலவுவதைக் காண முடிந்தது.

விசாரனைக்கு அழைத்துவரப்படும் மாருதி தொழிலாளர்கள் ( கோப்புப் படம் )

அரசியல் ரீதியான உறுதியான வழிகாட்டுதல் இல்லாத நிலையிலும், தொழிலாளிகள் தம் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட சுரண்டலை தன்னியல்பாகவே எதிர்த்து நின்றனர். குறிப்பாக தொன்னூறுகளின் மத்தியிலிருந்து வேலை நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் தலையெடுக்கத் துவங்கின. இரண்டாயிரங்களின் துவக்கத்தில் உரிமைப் போராட்டங்கள் மேலும் உக்கிரமடையத் துவங்கின. இந்நிலையில் அவற்றை முளையிலேயே கிள்ளியெறிய கார்ப்பரேட் முதலாளிகளும் அரசும் சதித்தனமாக கைகோர்த்தனர்.

தோழர் அபர்னா தொடர்ந்து பேசினார்…

“மாருதியின் மானேசர் ஆலையில் 18 ஜூலை 2012-ல் நடந்த வன்முறைச் சம்பவங்களுக்கு ஒரு தொடர்ச்சி உள்ளது. இங்கே நீங்கள் ஒரு மாதிரியை (pattern) கவனிக்க வேண்டும் – அதாவது ஒரு தொழிற்சாலையைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கள் உரிமைக்காக போராடுவார்கள் – முதலில் அது அமைதியான கோரிக்கையாக இருக்கும் – அந்தக் கோரிக்கை புறக்கணிக்கப்பட்ட பின், வேலை நிறுத்தம் நடக்கும், அல்லது ஊர்வலமோ ஆர்ப்பாட்டமோ நடக்கும் – அப்போது திடீரென ஒரு பதற்றமான சூழல் உருவாகும் – அந்த சூழலில் யார் செய்தார்களென்றே தெரியாமல் ஒரு தாக்குதல் சம்பவம் நிகழும் – அநேகமாக அந்த தாக்குதலில் நிர்வாகத்தைச் சேர்ந்த ஒருவர் காயம் பட்டிருப்பார் – அதற்காகவே காத்திருந்ததைப் போல் அதுவரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போலீசார் உள்ளே புகுந்து தொழிலாளர்களை அடித்து வெளுப்பார்கள் – சில பத்து பேர்கள் மேல் கொலை முயற்சி வழக்கு பதியப்படும் – அவர்கள் தொழிற்சங்கத்தின் முன்னணியில் நின்றவர்களாக இருப்பார்கள் – அதன் பின் அந்த தொழிலாளர்களின் வாழ்கையும், அவர்களின் தொழிற்சங்க முன்னெடுப்புகளும் மொத்தமாக சீரழிந்து போகும் – இறுதியாக பன்னாட்டுக் கம்பெனியின் சுரண்டல் எந்த சிக்கலுமின்றி தொடர்ந்து கொண்டிருக்கும்… “ என்று பேசிச் சென்றவரை இடைமறித்தோம்..

“நீங்கள் சொல்வது ஏதோ சதிக்கோட்பாடு (conspiracy theory) போல் இருக்கிறதே?”

“நான் சொல்வது கற்பனையல்ல; நடந்த உண்மைகளைத் தான் சொல்கிறேன். 2005-ல் ஹீரோ ஹோண்டாவில் இது தான் நடந்தது, 2008-ல் இத்தாலி கம்பெனி கிராசியானோவிலும், அதற்கு ஆறு மாதம் கழித்து ஜப்பான் நிறுவனமான நிப்பானிலும், இவ்வாறு தான் நடந்தது. இவை தவிர வேறு சில கம்பெனிகளிலும் சிறியளவில் இதே போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. இதன் தொடர்ச்சியாகத் தான் மாருதியில் நடந்த தீ வைப்புச் சம்பவத்தைப் பார்க்க வேண்டும்”

“அரசு தரப்பில் இதற்கு விசாரணைகள் ஏதும் நடக்கவில்லையா?”

”தோழர்.. அரசு வேறு கார்ப்பரேட்டுகள் வேறா? நீங்க காங்கிரசு பாரதிய ஜனதாவைக் கூட விடுங்கள்… மாயாவதியை எடுத்துக் கொள்ளுங்கள். சமூக நீதி அரசியல் பேசியவர் தானே? கிராஸியான நிறுவனம் நோய்டாவில் அமைந்துள்ளது. நோய்டா உத்திரபிரதேசத்தில் வருகிறது. சம்பவம் நடந்த போது மாயாவதி தான் ஆட்சியில் இருந்தார். என்ன செய்தார் தெரியுமா? உடனடியாக ஒரு சட்ட திருத்தம் கொண்டு வந்து உத்திரபிரதேச மாநில போலீசாரிடம் பன்னாட்டுக் கம்பெனிகளின் பாதுகாப்பை ஒப்படைத்தார். மாவட்ட தொழிலாளர் நலத்துறை அதிகாரியின் பொறுப்புகளை மாவட்ட போலீசு கமிசனரிடம் ஒப்படைத்தார். போலீசாரைக் கொண்டு துரித நடவடிக்கைக் குழு (Quick Reaction Team) ஒன்றை ஏற்படுத்தினார். முதலாளிகளுக்கு ஏதும் சிக்கல் என்றால், ஐந்து நிமிடத்தில் போலீசார் உதவிக்குச் செல்ல வேண்டுமென விதிகளை ஏற்படுத்தினார். இப்படி மொத்த போலீசாரையும் முதலாளிகளின் அதிகாரப்பூர்வ குண்டர் படையாக்கினார்… தொழிற்சங்க உரிமைகள் அனைத்தும் போலீசின் பூட்ஸ் கால்களால் மிதித்து நசுக்கப்பட்டன.”

சுரண்டலுக்கு எதிராக சங்கமாகத் திரளும் தொழிலாளர்கள் தங்களது தொழிற்சங்கங்களைப் பதிவு செய்யக் கூட முடியவில்லை – ஏதேதோ உப்பு பெறாத காரணங்களை முன்வைத்து அந்த முயற்சிகள் தடுக்கப்பட்டன. மீறினால் தொழிலாளர்களை வன்முறையாளர்களாக சித்தரிப்பது; அதையே முகாந்திரமாக கொண்டு தொழிற்சங்க உரிமைக் கோரிக்கைகளைக் குழிதோண்டிப் புதைப்பது என்ற வெற்றிகரமான சூத்திரத்தை முதலாளிகள் கையிலேந்திச் சுழற்றினர். இதற்கு அரசு, போலீசு மற்றும் நீதித் துறைகள் துணை நின்றன.

இவ்வாறான ஒரு நிகழ்ச்சிப் போக்கின் தொடர்ச்சியாகவே 2012-ம் வருடம் ஜூலை 18-ம் நாள் விடிந்தது. அன்றைய தினம் உண்மையில் நடந்தது என்ன? நெருப்பை மூட்டியது யார்? மாருதியின் மனேசர் ஆலையின் மனிதவளத் துறை மேலாளர் அவனீஷ்குமார் சிங் எப்படி இறந்தார்? தொழிலாளர்கள் ஏன் கிளர்ந்தெழுந்தனர்? வழக்கை எவ்வாறு தொழிலாளர்களுக்கு அநீதியான முறையில் அரசு தரப்பில் நடத்தினார்கள்?

(தொடரும்)

  • வினவு செய்தியாளர் குழு.

மிடாசின் சாதனை : குடிக்கும் ஆண்கள் பாட்டில் கழுவும் பெண்கள்

0

உழைக்கும் மகளிர் தினம் – புகைப்படக் கட்டுரை 7

காஞ்சிபுரம் மாவட்டம் என்றாலே பட்டு நெசவு, பாலாற்று விவசாயம் என்பதெல்லாம் இனி வெறும் கனவு மட்டுமே. ஆளும் அதிமுக குண்டர்களின்  ஆற்றுமணல் கொள்ளையால், குதறப்பட்டிருக்கும் மக்களின் வாழ்க்கைக்கு ஒரு சான்றுதான் தற்போது எச்சில் சாராய பாட்டில் கழுவும் நிலை. கிரிமினல் சசிகலாவின் மிடாசு சாராய கம்பெனிக்கு தேவையான பழைய பாட்டில் கழுவும் தொழில்தான் இப்போது இங்கு வளர்ந்து வருகிறது. காஞ்சிபுரம் – சென்னை ஆறுவழி நெடுஞ்சாலையில் உருவாகியிருக்கும் புதிய பட்டறைத் தொழில் இது.

காஞ்சிபுரம்-கருக்குப்பேட்டை வட்டாரத்தில்,  எச்சில் பாட்டில் கழுவும் கம்பெனிகள் பல குவிந்துள்ளன. கம்பெனி என்றால் அஸ்பெட்டாஸ் அல்லது ஓலையால் வேயப்பட்ட மாட்டுக் கொட்டகை. 10-க்கு 10-அடி அளவுள்ள 10-க்கும் மேற்பட்ட கழிவுத்தொட்டிகள் அடங்கிய கொட்டாய்கள்தான் கம்பனிகள். குப்பையிலிருந்தும் டாஸ்மார்க் பாரிலிருந்தும், காயலான் கடையிலிருந்தும் பொறுக்கபட்ட பழைய எச்சில் பாட்டில் மூட்டைகள்தான்,கச்சாப்பொருட்கள்போல் லோடு லோடாக கம்பெனிக்கு வரும்.

அச்சு அசலாக புதிய பாட்டில் போல் கழுவி மிடாசுக்கு அனுப்புவதுதான் இந்த கம்பெனிகளின் வேலை.
மூட்டைகளில் வந்த பாட்டில்களை ஓட்டை ஒடைசலை நீக்கி, 13க்கு மேற்பட்ட பிராண்டுகளின் வகைகளை பிரிக்க வேண்டும். பிறகு,பாட்டில்களின் வாய்புறத்தில் சுற்றியுள்ள பழையமூடியின் ரிங்கை (வளையம்) கோணி ஊசியால்  கழற்றி எடுக்கிறார்கள்.

கையை அரித்துத்தின்னும்  தண்ணிக்குள் 8 மணிநேரம்,  42 கிரேடு பாட்டில்களை கழுவினால்தான் 150 ரூபாய் சம்பளம்.

இப்படி,ஒரு கிரேடுக்கு 42 பாட்டில் பிரிக்கப்பட்டு, ஒரு தொட்டியில் ஒருமுறை 42 கிரேடு பாட்டில்கள் கொட்டப்படுகிறது. ஆசிட், சோப் ஆயில் ஊற்றப்பட்ட தொட்டியில் பாட்டிலில் ஒட்டியிருக்கும் பழைய லேபிளை விரலால் சுரண்டி எடுக்கவேண்டும். ”லேபில் கறை, பழைய பாட்டிலிலிந்து சீக்கிரம் போகவேபோகாது” என்று,நொந்து சொல்கின்றனர்,தொழிலாளர்கள். சுத்தமாக கழுவுவதற்கு அடுத்தடுத்த, மூன்று தொட்டிக்கு மாற்றப்பட்டு பளிச்சென ‘எலைட்’ பாட்டில்களாக உருவமாற்றம் அடைகிறது எச்சில் பாட்டில்கள்.

தகரம், பாத்திரமாய் மாறுவதற்க்கு நிகரான உழைப்பு இது. கையை அரித்துத்தின்னும்  தண்ணிக்குள் 8 மணிநேரம்,  42 கிரேடு பாட்டில்களை கழுவினால்தான் 150 ரூபாய் சம்பளம். ஆசிட் தண்ணீர் மேலே படாமல் இருக்க, எச்சில் பாட்டில் வரும் மூட்டைக்கோணிகளையே  உடம்பில் கவசமாக சுற்றிக் கொள்கிறார்கள்,பெண்கள். தொட்டி எட்டாத சிறுவர்கள், காலி கிரேடை காலுக்கு கீழேப்போட்டுக்கொள்கிறார்கள்.

“ஆசிட்டு தண்ணியில் தொடர்ந்து நிற்பதால், வாந்தி, மயக்கம், கண் எரிச்சல் வரும், இதற்கு, லீவு போட்டால் சம்பளம் கட்டாகும் என்ன செய்வது?” என்று பெருமூச்சுவிடுகிறார்கள்.

பவானி, வயது 55.

பாட்டில் கழுவுறது என்னுடைய வேலை கிடையாது. பட்டு தறி நெய்யறதுதான் சொந்த தொழில். பட்டு தறி அழிஞ்சிப்போச்சி, வீட்டுக்காரு பெயிண்ட் அடிக்கற வேலை, கல்யாண சமையல் வேலைன்னு போவாரு… மாசம் புல்லா வேலை இருக்காது. பெரிய பையனுக்கு வயசு 30 ஆவுது.. அவனுக்கு வலிப்பு நோய் இருக்கு… எங்கயும் தனியா விட முடியாது. மனநலம் பாதிச்ச மாதிரி இருப்பான்.. அவனுக்கு எல்லா வேலைகளையும் நான்தான் செய்யணும். கவர்மெண்ட்ல உதவிக்கு வருஷக்கணக்கா அலைஞ்சதுதான் மிஞ்சம்.. எவனும் சரியான பதில் சொல்லறதுல்ல… செங்கல்பட்டு,மெட்ராஸ்னு தூக்கினு அலைஞ்சது முடியல… குழந்தையா இருந்தா பரவாயில்லை.. 30 வயசு பையன எப்படி தூக்க முடியும் சொல்லுங்க… இப்ப கடவுள்கிட்ட வேண்டிகிறது ஒண்ணுதான் நான், உயிரோட இருக்கும்போதே என் பிள்ளை போய்டணும்… நான் முதல்ல போய்ட்டா எம் புள்ள நாறிப்புடுவான்… அதை என்னால்  நெனச்சிக்கூட பார்க்கமுடியல…

ஒரு மூட்டை பாட்டில் மூடி எடுத்தா 7-ரூபா… கோணி ஊசிய வெச்சி கழற்றணும்… அடிக்கடி,கையில பாளமா பொளந்துக்கும்.. அன்னிக்கு வேலை போய்டும்.. ஒருமுறை உடைஞ்சிப்போன பாட்டில்மேல தவறி விழுந்துட்டேன்… உடம்பெல்லாம் பொத்துக்குனு புண்ணாயிடுச்சி.. தலைவிதி, எச்சப்பாட்டில துடைக்கற வேலைய செய்யறேன்.. எங்க வீட்டுக்காரும், நானும் உட்கார்ந்தமுனா, ஒரு வாரத்துல ஒரு சேலை அறுப்போம்.. தொழில் அழிஞ்சதாலே, பட்டு புடிச்ச கையில பாட்டில புடிச்சிட்டுருக்கேன்….

ஹேமலதா, 8-ம் வகுப்பு மாணவி

என்னைய போட்டோல்லாம் எடுத்து பேப்பர்ல போடாதீங்க.. எங்க டீச்சர் பார்த்தா திட்டும்..  வெள்ளேந்தியாக சிரித்தார். பாட்டில் கழுவுற வேலையெல்லாம் நாங்க செய்ய மாட்டோம்…  அக்காங்க, கழுவி வைச்சா… கேஸ்ல அடுக்கி… எண்ணி வைக்கற வேலைய செய்வோம்.லீவு வந்தா, வாரம் 50, 100 சம்பாதிப்போம். எங்கம்மாக்கிட்ட கொடுத்து எங்களுக்கு தேவையான பொருள வாங்கிக்குவோம். எங்கம்மாவும் பக்கத்துல கம்பெனியிலதான் பாட்டில் கழுவுது. எங்க கூட பத்தாவது படிச்சிட்டிருந்த கீதா அக்கா கூட எங்கம்மாக்கூட அங்க போகுது…

பாரதி, வயது 30

வீட்டுகாரரு ஆச்சாரி வேலை பாக்கறாரு… சம்பாதிக்கறத குடிச்சிட்டு வந்துடுவாரு….. பாட்டில கழுவிதான் குடும்பத்தை பாக்கணும் நான்… இந்த அழுக்கு பாட்டிலை நோண்டி, நோண்டி கழுவுனாதான் கூலி……கையும் காலும் ஆசிட் தண்ணிலய ஊறணும். டெய்லி இந்த தண்ணியிலத்தான் நான் நீச்சலடிக்க வேண்டி இருக்கு….. எதிருல நிக்கிற பிரியாவுக்கு இரண்டு வாரமா ஜூரம் இப்பத்தான் உடம்புத் தேறி வந்திருக்கா. அதோ,அந்த அக்கா கைய பாருங்க.. .. எந்த நேரமும் ஆசிட்டும், சோப்பாயிலும் கலந்த தண்ணியிலயே ஊறி உடம்பே செல்லரிச்சு போச்சு.. எவன்.. குடிக்காதனு சொன்னா கேட்கிறான்.. இந்த பாட்டில பாத்தவே நமக்கு… ஒப்ப மாட்டேனுது…. பல சமயம், பாட்டில்ல ஓணான், அரன, பாம்பு தவளை,,, னு பூச்சிங்க செத்துவரும்…  இந்த, பிரச.. வைச்சுதான் முடிஞ்சவரைக்கும் கழுவுவோம்.

எதுக்கு, ஒப்பாம.. இங்க வர்றோம்னா, இது குடும்ப செலவுக்கு தள்ளிக்கினுப் போய்டும். இன்னிக்கு கூலி வாங்கினா  காய்கறி சந்தையில கொழந்தைகளுக்கு ஒரு வாரத்துக்கு காய் ஆக்கிப் போட்டுடலாம்…

இங்கிருந்து, கழுவுற பாட்டிலெல்லாம், பெரிய பெரிய கம்பெனிகளுக்கு போகுதாம்…. 13 கம்பெனிப் பேரு சொல்லுவாங்க… பீரு, பிராந்தி, ஒயினு, விஸ்கி-னு  மெக்டோலு, வி.எஸ்.ஓ.பி, ராயல் சேலன்ஜ் னு என்னன்மோ சொல்றாங்க. இந்த இடத்திலேயே… சுத்தி, சுத்தி, எட்டு எடத்துல பாட்டில் கழுவுறாங்க…எங்க இருந்துதான் வருதோ மலை மாதிரி இவ்ளோ பாட்டில்கள்.

இந்த வேலையும் பத்தலை, ஏதோ எக்ஸ்ட்ரா கூலி கிடைக்கும்னுட்டு, லாரில லோடு ஏத்தற வேலையும் செய்வோம்.. அது,ஆம்பளங்க செய்ற வேலைனு சொல்லுவாங்க… . என்ன பண்றது…

இதுக்கூடப் பரவாயில்லை… வயசானவங்க எல்லாம் இங்க, குப்பையில எச்ச பாட்டில பொறுக்கற வேலைதான் செய்றாங்க… ரோட்டோரத்துல பாட்டில பொறுக்கிகினு போகும்போது லாரியில மாட்டி செத்த ஆயாவெல்லாம் இருக்காங்க… குடிகாரனுங்க பக்கத்துலபோய் பாத்துகினு, எப்ப குடிச்சி முடிப்பானுங்கனு காலி பாட்டில வாங்க நிப்பாங்க… அத பாக்கவே சகிக்காது… அதுக்கு இந்த பாட்டில கழுவுற வேலை எவ்ளோ பரவாயில்ல…

இளமதி, வயது 45

எனக்கு 2 ஆம்பிள பசங்க… படிக்கறானுங்க… வீட்டுக்காரு நூல் தறி நெய்றாறு… அவன்,குடிய கத்துக்கிட்டு குடியே கதின்னு ஆயிட்டான்… வீட்டுல இருக்கற எல்லாத்தையும் வெச்சி வாங்கி குடிக்கிறதே வேலை… பிள்ளைகளோட புக்கக்கூட வெச்சி குடிச்சிடுவான்… நான்  பாட்டில கழுவுனாத்தான் குடும்பம் நடத்தமுடியும்… அதில அவன் குடிக்கவும் பிடுங்கிடுவான். எப்ப வருவேன்னு காத்திருப்பான்.

ஆசிட்டால்-பொத்தலாகிப்போன-கை

என்னத்த சொல்ல, நாள் எல்லாம், எங்க வீட்டுக்காரு சாராய தண்ணீயில….. நான் இங்க எச்சில் பாட்டில கழுவுற அழுக்கு தண்ணியில….. இப்படியே வாழ்க்கைப்போயிட்டு இருக்கு…

இந்த வேலை, உடம்புக்கு ஒத்துக்கல… அடிக்கடி பல்வலி, ஜூரம்-னு பாடா படுத்தும்… சரி விட்டுட்டு தறி வேலைக்கே போயிடலாமுனு… புடவைக்கு பார்டர் வைக்கும், பார்டர் தறியும் நெஞ்சேன்…. கூலி சரியா தரல…. வேலையும் தொடர்ந்து தரல மறுபடியும் இங்க வந்துட்டேன்… இன்னும் எவ்ளோ நாள் செய்ய முடியுமுனு தெரியல… லீவு எல்லாம் எடுத்தா நமக்குத்தான் கஷ்டம்… வேலைக்கு வந்தா கூலி… இல்லைனா கிடையாது..  ஒரு வேளை டீ மட்டும் கொடுப்பாங்க.

சின்ன வயசுல  எங்கள எங்கம்மா, சாணித் தட்டி, சுள்ளிப்பொருக்கி இட்லி சுட்டு வித்து காப்பாத்துனாங்க…… இப்ப நான் எச்ச பாட்டில் கழுவி என் புள்ளைகள காப்பாத்துறேன், என்றார் விரக்தியாக.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

– வினவு செய்தியாளர்

பகத்சிங் – புதிய சிந்தனையின் பிறப்பு

0

பகத்சிங் – புரட்சியின் புரிதல்!

கத்சிங் என்றால்
பலரையும் குறிக்கும்
பல தலைமுறைகள் சிலிர்க்கும்.

ராஜகுரு, சுகதேவ், ஆசாத்
பகவதிசரண், யதீந்திரதாஸ்
படுகேஷ்வர், யஷ்பால், துர்க்காதேவி
இன்னும்… இன்னும்…

இவைகள்
நாம் அழைப்பதற்கான பெயர்களல்ல
நம்மை அழைக்கின்ற பெயர்கள்.
உறங்கும் வேளையிலும்
நாட்டுப்பற்றை உறங்கவிடாமல்
நம்மை ஊடுருவும் கதிர்கள்.

காலனியாதிக்கத்திற்கு  எதிராக
கனன்றெழுந்த  அந்த நெருப்பு –  இன்று
மறுகாலனியாதிக்கத்திற்கு எதிராக
உளத் தீயை மூட்டும்,
மறுகணமே புரட்சி வேண்டுமென
மனதைப்படுத்தி வாட்டும்!

புரட்சி எனில்
ஆயத்தமாய் இருக்கும் ஒன்றை
அடைந்து விடும் ஆசை அல்ல
அடுத்தடுத்து செய்ய வேண்டியதின்
செயலூக்கம்.

புரட்சியை விரும்புவதே பெரிதல்ல
புரட்சிகர நடைமுறைக்குப் பொருந்த வேண்டும்
அமைப்பில் இருப்பதே நிறைவல்ல
அரசியலின் இலக்கு நோக்கி
இயங்க வேண்டும்.

முக்கியமாய்
புரட்சியை புரிந்துகொள்ளும்
தெளிவு வேண்டும்.
உருவாக்கி வைத்திருக்கும் ஒன்றை
உள்ளம் நோகாமல்
தொட்டுக் கும்பிடும்
பக்தி பரவசமில்லை புரட்சி

உருவாக்க இருக்கும்
புதிய சமூக அமைப்புக்காக
தன்னிடமிருந்து
தடைகளைத்  தகர்க்கத் தொடங்கும்,
புற உலகின் இயக்கம் அறியும்
இயங்கியலின் செயல்துடிப்பு புரட்சி.

ஒவ்வொரு நொடியும்
புரட்சி நடக்கிறது
அதன் உயிர்துடிப்பாக
என் இதயம் இருக்கிறது.
எனும்  செய்முறையின்
அழகியல் பகத்சிங்.

புரட்சி எனும்
அடைமொழி வேண்டும்
புரட்சிகர நடைமுறையிலிருந்து
விலக்கு வேண்டும்,
என்ற போலித்தனத்தை
வேரோடு வெறுத்தவன் பகத்சிங்
ஒரு பக்கம்
பிரிட்டிஷ் கோட்டை
மறுபக்கம்
காந்தியின் ராட்டை.

வரன்முறையற்ற
பிரிட்டிஷ் அடக்குமுறைக்கு எதிராக
மக்கள் கிளர்ந்த போதேல்லாம்
வன்முறை என சாடியது
மகாத்மாவின் அகிம்சை சாட்டை.

நன்முறை
புரட்சி ஒன்றே
நாட்டை மீட்கும் – என
தன்னையே
ஒரு புறநிலையாக்கி
தன் சாவையும்
மண்ணில் விதைத்தான்,
தூக்குக்கயிற்றில் துளிர்த்தான்.

பகத்சிங், ராஜகுரு, சுகதேவ்…
உயிரின் தேவையிலிருந்து
தங்களைப் பார்க்கவில்லை
உயிர்வாழும்   நோக்கத்தின் தேவையிலிருந்து
பார்த்தார்கள்.
ஒவ்வொரு தருணமும்
உழைக்கும் மக்களுக்காகவே
வியர்த்தார்கள்.

அது மரணமல்ல,
முடிந்த முடிவுமல்ல,
புதிய சிந்தனையின் பிறப்பு.
அடக்குமுறையாளர்களால்
ஆளும் வர்க்கத்தால்
ஒரு போதும் பகத்சிங்கை சாகடிக்கமுடியாது.

அவசர அவசரமாக தூக்கிலிட்டு
அறைகுறையாக வெட்டியெறிந்து
சட்லெஜ் நதியில் கரைத்தார்கள்
இதோ அவன்
மெரினா கரையில் துளிர்க்கிறான்…

அலகாபாத்
ஆல்பிரட் பூங்காவில்
வீரமரணம் எய்திய ஆசாத்தை
வெறிகொண்டு முடித்தார்கள்.
இதோ
அவன் நெடுவாசலில் வந்து  நிற்கிறான்.

நீங்களாக
திரும்பும் பகத்சிங்கை
எவனும்
நீங்கலாக  செய்ய முடியாது…

இந்த
அரசுக்கட்டமைப்பில்
இந்தியாவிற்கு ஏது விடுதலை?
முதலாளித்துவத்தை முடிக்காமல்
சோசலிசம் படைக்காமல்…
உழைக்கும் இந்தியா ஒளிராது
என்றான் பகத்சிங்.

வாடி வாசல் தொடங்கி
மோடி வாசல் வரை
மோதுகிறது அந்தக் குரல்!

புரிதலுக்கும்
புத்துயிர்ப்புக்கும்
பொருந்தாதது சமஸ்கிருதம்
என,
புறந்தள்ளினான் பகத்சிங்.
திருந்தாத ஜென்மங்கள்
மீண்டும் திணிக்கையில்
திரும்பிய பக்கமெல்லாம்
திரும்பவும் பிறக்கிறான்
ஆயிரம் பகத்சிங்!

மத உணர்வை
வர்க்க உணர்வால் வெல்வோம்!
என்ற பகத்சிங்கின் குரலை
பஞ்சாபிலேயே புதைத்துவிட்டோம்
என இறுமாந்திருந்த
இந்து பாசிசம்,
பெரியார் பிறந்த மண்ணில்
பேச்சுக் குரல் கேட்க
மீண்டும் பகத்சிங் பயத்தில்
‘பயங்கரவாதிகள், நக்சல்பாரிகள்’ என
பாராயணத்தில் உதற ஆரம்பித்துவிட்டது.

செத்தவனை அல்லவா?
புதைக்க முடியும்?
செய்யும் நற்‍செயல் ஒவ்வொன்றிலும்
நக் ‘செல்லாய்’ பிறக்கும்
பகத்சிங்கை பார்த்து
ஆளும்வர்க்கம்
பதைக்கத்தான் முடியும்!

மறைவில்லை பகத்சிங்…
காலத்தின் தேவையறிந்தால்
நீயும் ஒரு பகத்சிங்…

தேவையின் செயல் புரிந்தால்
நீயும் ஒரு பகத்சிங்…
செயலின் தொடர்ச்சியில் இணைந்தால்
நீயும் ஒரு பகத்சிங்…

அந்தத் தொடர்ச்சியின் மகிழ்ச்சியை உணர்ந்தால்
அங்கே…       அனைவரும் பகத்சிங்!

 – துரை. சண்முகம்.


மார்ச் 23 பகத்சிங், இராஜகுரு, சுகதேவ் நினைவு நாள்
ஆர்.எஸ்.எஸ்.- பி.ஜே.பி. கும்பலின் பார்ப்பன பாசிசத்தை மோதி வீழ்த்துவோம்!
அதற்கான களமாக தமிழகத்தை மாற்றுவோம்!

பென்னாகரம் பேருந்து நிலையம்
தெருமுனைக்கூட்டம்

என்ற முழக்கத்தை முன்வைத்து பென்னாகரம், தருமபுரி, சுற்றுவட்ட பகுதியில் புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி சார்பாக பள்ளி, கல்லூரி, கிராமங்களில் தொடர் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து இறுதியாக மார்ச் 23 அன்று காலை 8 மணிக்கு பென்னாகரம் பேருந்து நிலையத்திலும், மாலை 5 மணிக்கு தருமபுரி பழைய பேருந்து நிலையத்திலும் தெருமுனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

இதில் பு.மா.இ.மு. மாவட்ட அமைப்பாளர் அன்பு பேசுகையில் ஏன் பகத்சிங் பாதையை நாம் முன்னெடுக்க வேண்டும் என்றும், அன்று ஒரு பிரிட்டிஷ்காரனிடம் நாடு அடிமையாக இருந்தது, ஆனால் இன்று ஏகாதிபத்திய நாடுகள் மற்றும் பெரும் முதலாளிகளின் கையில் நாடு அடிமைப்படுத்தப்படுகிறது நம்முடைய இயற்க்கை வளங்கள் சூறையாடப்பட்டு வருகிறது மேலும் கல்வியில் சமஸ்கிருதம், நீட் தேர்வு என மாணவர்களின் கல்வி உரிமைகளை மறுக்கும் மோடியின் திட்டத்தையும் அம்பலபடுத்தினார். இதனை முறியடிக்க புரட்சிகர அமைப்பில் மாணவர்கள் இணைய வோண்டும் என அறைகூவல் விடுத்தார்.

அடுத்து பேசிய பு.மா.இ.மு. தோழர் மலர்கொடி பேசுகையில் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அனைத்து துறையும் தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டுள்ளது இயற்க்கை வளங்கள் கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்க்கப்படுகிறது. இந்த அரசு மக்களை பாதுகாக்காது எனவே இயற்க்கையை பாதுகாக்க மக்களே அதிகாராத்தை கையிலெடுத்து போராடுவதுதான் ஒரே தீர்வு என விளக்கினார்.

தகவல்:
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
தருமபுரி, தொடர்புக்கு: 81480 55539


மார்ச்- 23 பகத்சிங், சுகதேவ், இராஜகுரு நினைவு நாளையொட்டி ஓசூர் கொத்த கொண்டப்பள்ளியில் “ஆர்.எஸ்.எஸ் பி.ஜே.பி கும்பலின் பார்ப்பன பாசிசத்தை மோதி வீழ்த்துவோம்! அதற்கான தளமாக தமிழகத்தை மாற்றுவோம்!” என்ற முழக்கத்தின் கீழ் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியை சேர்ந்த தோழர்கள் 23.03.2017 அன்று விளக்கக்கூட்டத்தை நடத்தினர்.

தோழர் காந்தராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில துணைத்தலைவர் தோழர் பரசுராமன் சிறப்புரையாற்றினார்.  இன்றைய தினத்தில் தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், மீனவர்கள் என்று பலரும் இந்த அரசமைப்பினால் அதன் கொள்கையினால் கடுமையாக பாதிக்கப்பட்டு சொல்லொணாத் துயரத்தில் உள்ளனர். கார்ப்பரேட்டுகளின் கைத்தடியாக அடியாளாக பிரதமர் மோடி செய்துவரும் செயல்களை ஒவ்வொன்றாக பட்டியலிட்டு அம்பலப்படுத்திப் பேசினார். மேலும், நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவில் மணிப்பூர், கோவா இரு மாநிலங்களில் பா.ஜ.க-வின் அணுகுமுறை ஜனநாயகத்தின் வழியாகவே பாசிச சர்வாதிகாரத்தை நிறுவமுடியும் என்பதை காட்டி விட்டது.

இதன் மூலம் உலகின் மிகப் பெரிய ஜனநாயகம் , சிறந்த அரசியல் சாசனம், சட்டம் என்று இனி யாரும் பேசினால் அவர்கள் அம்பலப்பட்டே போவார்கள் என்பதையும் எச்சரிக்கையாக சொல்லி தற்போது பார்ப்பன பாசிசத்திற்கு சவாலாக இருந்துவரும் தமிழகத்தை அழிக்கும் வகையில் மோடியின் காட்டாட்சி  விகாரமாக உள்ளது. இதனை மக்களுக்கு உணர்த்தி அணிதிரட்டி இவர்களை மோதி வீழ்த்துவது ஒன்றுதான் தீர்வு அந்தவகையில் நாம் அணிதிரளவேண்டும் என்பதை வலியுறுத்திப் பேசினார். இதில் பள்ளி சிறார்கள், பெண்கள், இவ்வமைப்பின் முன்னணித் தோழர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் என பலரும் கலந்துக்கொண்டனர்.

அடுத்து, மறுநாள் 24.03.2017 மாலை 6 மணியளவில் பாகலூர் சர்க்கில் பகுதியில் தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது. புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியை சேர்ந்த தோழர் காந்தராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த தெருமுனைக்கூட்டத்தில் இவ்வமைச் சேர்ந்த தோழர் இரவிச்சந்திரன் சிறப்புரையாற்றினார். தோழர் இராணி நெடுவாசல் பிரச்சனையில் போலீசின் நடவடிக்கை மற்றும் பி.ஜே.பி பிரமுகர்களான எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன் மற்றும் தமிழிசை போன்றோர்களின் நயவஞ்சக அறிக்கைகளை அம்பலப்ப்டுத்திப்பேசினார்.

தோழர் இரவிச்சந்திரன் தனது சிறப்புரையில் பகத்சிங் ஆங்கிலேய அரசுக்கு எதிராக தன்னுடைய இளம் வயதில் வீரம்செறிந்த அளவில் போராடிய வரலாற்று நிகழ்வுகளில் சிலவற்றை எடுத்துரைத்து இன்றைய சூழ்நிலையில் இளைஞர்கள் பகத்சிங்குகளாக மாறவேண்டிய அவசியத்தை உணர்த்திப்பேசினார். பாகலூர் பிரிமியர் மில் ஆலைநிர்வாகம், ஏ.பி.எல் நிர்வாகம் ஆகியவற்றினால் தொழிலாளர்கள் வஞ்சிக்கப்பட்டு நாடோடிகளாக திரியும் அவலத்தை விளக்கிப்பேசியதோடு அல்லாமல் நாடு முழுவதும் இந்த நிலமைதான் உள்ளது. பாசிச ஆர்.எஸ்.எஸ் பி.ஜே.பியின் காட்டாட்சியில் இந்த நிலமை பன்மடங்கு முற்றி, முடைநாற்றம் வீசுவதை இனியும் நாம் பொறுத்துக்கொள்ளமுடியாது. வீதியில் இறங்கி இந்த பாசிஸ்டுகளை அவர்களின் திட்டத்தை அம்பலப்படுத்தி மோதி வீழ்த்த முன்வரவேண்டும் என்று அறைகூவி அழைத்துப்பேசினார். திரளான மக்கள் இறுதிவரை நிகழ்ச்சியை கேட்டுச்சென்றனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )


மாருதி தொழிலாளர்கள் 13 பேருக்கு வாழ்நாள் தண்டனை !


கார்ப்பரேட் முதலாளிகளின் அடியாட்களே பேலீசும், நீதிமன்றமும் !

  • தினந்தோறும் தொழிலாளர் வர்க்கத்தை அடக்கி ஒடுக்கி வருகின்ற முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டுவோம் !
  • மாருதி தொழிலாளர்களின் விடுதலைக்காகப் போராடுவோம் !

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கிருஷ்ணகிரி – தருமபுரி – சேலம் மாவட்டங்கள்.
தொடர்புக்கு : 97880 11784

சேலம் இரும்பாலை தொழிலாளர்கள் நேர்காணல்

0

“புவியியல் ரீதியில் கனிமவளம் மிகுந்த பகுதி இது தோழர். சேலம் இரும்பாலையை தனியார்மயப்படுத்துவதை வெறும் ஒரு அரசுப் பொதுத்துறை ஆலையோட பிரச்சினையாவோ, அங்கே வேலை செய்கிற தொழிலாளர்கள் தொடர்பான பிரச்சினையாவோ பார்ப்பது சரியில்லை. அரசு கிட்டே ஒருங்கிணைத்த ஒரு திட்டம் இருக்கு. அது இந்த பூமிக்கு கீழே புதைந்து கிடக்கும் வளங்களை மொத்தமாக அள்ளி தனியார் முதலாளிகள் கிட்ட கொடுக்கிறது. அவன் அந்த வளங்களை வெட்டி எடுக்கிறது ஒரு புவியியல் பேரழிவையே உண்டாக்கப் போகிறான்” என்றார் சுரேஷ் குமார். சேலம் இரும்பாலையில் செயல்படும் சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளராக இருக்கிறார் சுரேஷ்.

“பூமிக்குக் கீழே உள்ள வளங்களை வெட்டியெடுப்பதால் எப்படியும் இயற்கையின் சமநிலை குலையத்தான் போகுது.. அதை அரசே செய்தாலும் அது தானே நிலைமை?”

சேலம் இரும்பாலை சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் சுரேஷ் குமார்.

“உண்மை தான். ஆனால், அரசு செய்யும் போது அந்த நடவடிக்கையின் மேல் ஒரு கட்டுப்பாடும் கண்காணிப்பும் இருக்கும். தனியார் முதலாளிகளுக்கு லாபமே பிரதான நோக்கம் என்பதோடு அவனுக்கு  மண்ணின் மீதோ அங்கே வசிக்கும் மக்களின் மீதோ எந்தவொரு பிடிப்பும் கிடையாதே? இதே அரசாங்கம் செய்யும் போது வரம்பு மீறிப் போகும் நிலையில் தேர்தல் வெற்றி, அதிகாரம்னு குறைந்தபட்சம் சுயநல நோக்கோடவாவது ஒரு கட்டுப்பாடு இருக்கும் இல்லையா?”

“இந்த பகுதியில் எந்த மாதிரியான கனிமங்கள் கிடைக்கின்றன?”

“ஒரு விசயம் புரிந்து கொள்ளுங்கள் தோழர்… இந்தியாவில் பூமிக்குக் கீழே என்ன இருக்கு என்பதைப் பற்றி முழுமையான ஆய்வோ, தரவுகளோ அரசாங்கத்து கிட்டயே இல்லை. இது வரை கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் கனிம வளங்கள் ஒரு பத்து சதவீதம் தான் இருக்கும். வெள்ளைக்காரன் போட்டுக்கொடுத்த வரைபடங்களே இப்ப வரைக்கும் வழிகாட்டியா இருக்கு… சேலம் பகுதியை எடுத்துக்கிட்டீங்கன்னாக்க… இங்கே இரும்புத் தாது இருக்கு அப்புறம் பாக்சைட், மேக்னசைட், புளூ மெட்டேல் எல்லாம் இருக்கிறதா கண்டு பிடிச்சிருக்காங்க…”

மேநிலம் – தென் சஹ்யாதிரி பகுதிகள் மற்றும் கிழக்குக் கடற்கரைப் பகுதிகள் என தமிழ்நாட்டை புவியியல் ரீதியில் இரண்டு பகுதிகளாகப் பிரித்த வெள்ளை ஆட்சியாளர்கள், இதில் மேநிலம் – தென் சஹ்யாதிரி பகுதிகளாக தர்மபுரி, சேலம், கோவை, திருவண்ணாமலை, வேலூர், மதுரை வடக்கு மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களை இனம் பிரித்தனர். மைசூர் பீடபூமியின் தொடர்ச்சியாக அறியப்பட்ட சேலம் தர்மபுரி மாவட்டங்களை பாரோமகால் பகுதியாக ஆங்கிலேயர்கள் இனங்கண்டனர்.

சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பிரதேசங்களின் கனிம வளங்களை அறிந்து கொண்ட ஸ்டெர்லைட், ஜிண்டால் போன்ற பெரும் முதலாளிகள் கடந்த பல பத்தாண்டுகளாகவே இப்பகுதியில் சிறிதும் பெரிதுமாக இயங்கி வருகின்றனர். எனினும், சேலத்துக்குக் கீழே புதைந்து கிடக்கும் இரும்புத் தாது இன்னமும் வெட்டியெடுக்கப்படாமல் உள்ளது.

“இந்தப் பகுதியில் உள்ள இரும்புத் தாதுவை வெட்டி அந்த மூலப் பொருளில் இருந்தே சேலம் இரும்பாலையில் உற்பத்தி செய்திருக்கலாமே? ஏன் அதற்கான முயற்சிகள் எடுக்கப்படவில்லை?”

“சேலம் இரும்பாலையானது மறிநிலை ஒருங்கிணைவு (Reverse integration) முறையில் துவங்கப்பட்டது. அதாவது உருகிய இரும்புக் கூழை இரும்புப் பாளங்களாக்கி வெப்ப உருட்டாலை, குளிர் உருட்டாலைகளில் ப்ராசஸ் செய்து அதன் இறுதி வடிவத்துக்கு கொண்டு வருவார்கள். இந்த செயல்முறையில் பின் பகுதியில் வரும் யுனிட்டுகள் முதலிலும், முன் பகுதியில் வரும் யுனிட்டுகள் பிற்காலத்திலும் துவங்கப்பட்டன. இங்கேயே தாதுவை அகழ்வாய்வு செய்வதெல்லாம் நீண்டகால திட்டங்கள். ஆனால், மொத்தமாக அனைத்தையும் தனியார் முதலைகளின் கையில் ஒப்படைக்கும் திட்டத்தோடு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது” என்றார் சுரேஷ் குமார்.

“இரும்பாலை நட்டத்தில் இயங்குவதைப் பற்றி ஊடகங்களில் வந்துள்ள செய்திக்கட்டுரைகளில், இதன் வணிகப் பிரிவு கொல்கத்தாவுக்கு மாற்றப்பட்டதையும் அரசின் ஆர்டர்கள் திட்டமிட்டுக் குறைக்கப்பட்டதையும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன…” என்கிற கேள்வியை முன்வைத்தோம்.

“அந்தக் காரணங்கள் உண்மை தான் என்றாலும் அவை மட்டுமே முழு உண்மைகள் அல்ல” என்றார்..

“வேறு காரணங்களைக் கொஞ்சம் விளக்க முடியுமா?”

“முதலில், இரும்பாலைக்கென கையகப்படுத்தப்பட்ட நிலம் பெருவாரியாக பயன்படுத்தப்படாமல் கிடக்கின்றது. இதில் ஒரு ஒருங்கிணைந்த தொழிற்பூங்கா – அதாவது அரசின் கட்டுப்பாட்டில் ஸ்டீல் பொருட்களை தயாரிக்கும் சிறப்புப் பொருளாதார மண்டலம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என நீண்டகாலமாக கோரி வருகிறோம். இன்று வரை அதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கவில்லை. அப்படியான தொழிற்பூங்கா இருந்திருந்தால், எங்களிடம் மூலப்பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் அதை நாட்டின் வெவ்வேறு பகுதிகளுக்கு தரைமார்க்கமாக எடுத்துச் செல்லும் செலவும் குறையும், இங்கே வேலை வாய்புகளும் பெருகும்” என்றவர் மேலும் தொடர்ந்தார்…

“அடுத்து, குறைந்தபட்ச இறக்குமதி விலைக் கொள்கை சரியாக பின்பற்றப்படாத காரணத்தால் எங்களை விட குறைந்த விலைக்கு இரும்பு இறக்குமதி செய்யப்படுகிறது – குறிப்பாக சீனாவில் இருந்து. மேலும் வியாபாரப் போட்டிகளை முறைப்படுத்தும் கமிசனின் (Competitive commision of India) விதிகள் ஒன்று முடமாக்கப்பட்டன, அல்லது ஓரளவுக்கு காகிதத்தில் உள்ள விதிகளையும் கூட அமல்படுத்தவில்லை”

“மேலும் 2000-மாவது ஆண்டில் நடந்த விரிவாக்கப் பணிகளுக்கான நிதியை வங்கிகளில் கடன் வாங்கியே ஒதுக்கினர். சேலம் இரும்பாலை இந்தியாவின் மகாரத்தினங்களில் ஒன்று என்பதுடன், தனது லாபத்தைக் கையாளும் உரிமையும் அதற்கு உள்ளது. கடந்த ஆண்டுகளில் இந்த ஆலையின் மூலம் ஈட்டப்பட்ட பலநூறு கோடி லாபம் அரசிடம் அப்படியே இருந்த நிலையில் விரிவாக்கப் பணிகளுக்கு வங்கியில் வாங்கிய 2000 கோடி கடனுக்கான வட்டியையும் நாங்கள் முறையாக கட்டி வருகிறோம். நல்லா கவனிங்க.. மல்லையா, அம்பானி, அதானி மாதிரி பெரிய முதலாளிகள் வங்கிகள்ல கடன் வாங்கிட்டு நாமம் போட்டுட்டு போறான். நாங்க முறையா வட்டி கட்டிட்டு வர்றோம். இதனால் கடந்த ஆண்டுகளில் லாபம் குறைந்தது. இப்ப அதையே காரணமா வைத்து தனியார்மயமாக்க பார்க்கறாங்க…”

“உண்மையில் இப்போது நடப்புக் காலாண்டில் மீண்டும் லாபமீட்டத் துவங்கியிருக்கிறோம். அடுத்து ஓரிரு ஆண்டு இந்த நிறுவனத்தின் நிதி நிலைமை பழையபடி வலுப்பெற்றுவிடும். இவ்வாறு நாங்கள் எதிர்பார்த்திருந்த சமயத்தில் தான் தனியார்மயமாக்கல் நடவடிக்கையை மீண்டும் தூசிதட்டியெடுத்து துரிதப்படுத்துகின்றனர்” என்றார்.

சேலம் இரும்பாலையைக் கபளீகரம் செய்ய தனியார் முதலாளிகளுக்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. ஆலையுடன் அதனுடன் இணைந்துள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களையும் தொழில்நுட்ப அறிவில் தலைசிறந்து விளங்கும் தொழிலாளர்களையும் அபகரித்துக் கொள்வது; சேலத்தின் பூமிக்கடியில் புதைந்து கிடக்கும் இரும்புத் தாதுவை சுரண்டும் போது சேலம் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் உள்ள ஆலையும் அவர்களுக்குத் தேவைப்படுகின்றது. வளங்களைக் கொள்ளையிடும் இடத்திலேயே அதைக் கொண்டு தொழில் செய்யும் வசதியும் இருக்க வேண்டுமென்பதற்காகவே மத்திய அரசின் துணையுடன் சேலம் இரும்பாலையைக் குறிவைத்துள்ளனர்.

மிகுந்த தனிச்சிறப்புடனும் உயர்மதிப்புடனும் குறிப்பிடப்படும் ஆலைத் தொழிலாளர்களின் தொழில்நுட்ப அறிவு குறித்து ஓய்வு பெற்ற தொழிலாளி திரு மாதவனிடம் பேசினோம்.

விஸ்வகர்மா ராஷ்ட்ரீய புரஸ்கார் விருது

“இங்கே உள்ள காயில் வெட்டும் இயந்திரத்தை நாங்கள் மறுவடிவமைப்பு செய்து அதைக் கொண்டே வைண்டிங் செய்தோம்.. இயந்திரத்தை எங்களுக்கு சப்ளை செய்த ஜெர்மன் நிறுவனத்தின் பொறியாளர்களே அசந்து போனார்கள்” என்றார் மாதவன். இவர் சிறந்த தொழிலாளிக்கான மத்திய அரசின் விஸ்வகர்மா ராஷ்ட்ரீய புரஸ்கார் விருது பெற்றவர்.

“இதே போல் வேறு என்ன மாதிரியான புதிய கண்டுபிடிப்புகளைச் செய்திருக்கிறீர்கள்?”

“எத்தனையோ சொல்லலாம் சார்… பிளாங்கிங் லைனில் உள்ள இயந்திரங்களை மறுவடிவமைப்பு செய்து அதில் இருந்து வெளியேறும் கழிவுகளின் அளவைக் குறைத்திருக்கிறோம். இங்கே உள்ள தகடுகள் வெட்டும் இயந்திரம் அதிகபட்சம் 4 மீட்டர் தகடுகளைத் தான் வெட்டும்; அதை மறுவடிவமைப்பு செய்து 6.2 மீட்டர் தகடுகள் வெட்டும்படி செய்திருக்கிறோம். அப்புறம் சிலிட்டிங் லைனில் ஒரு சிப்டுக்கு அதிகபட்சம் 10 டன்கள் தான் கையாள முடியும். நாங்கள் அதில் சில தொழில்நுட்ப மறுவடிவமைப்பு செய்தோம்.. இன்று அதே லைனில் ஒரு சிப்டுக்கு 200 டன்கள் கையாளப்படுகின்றது”

“பொதுவா அரசுத் துறை, பொதுத்துறை அப்படின்னா வேலை செய்யாத சோம்பேறிகள் தான் இருப்பாங்கன்னு வெளியே ஒரு கருத்து..”

இது எங்கள் தொழிற்சாலை –  உழைப்பின் பெருமிதத்துடன் சொல்லும் முன்னாள் ஊழியர் மாதவன்

“யார் சார் சொன்னது..? இது எங்களோட ஆலை. உள்ளே போயி கேட்டுப் பாருங்க; ஒரு தொழிலாளியாவது சோம்பேறியா உட்கார்ந்து இருக்க மாட்டான். லேட்டா வர்றது, சீக்கிரம் போறது எல்லாம் இங்கே கிடையாதுங்க. தோ பக்கத்து வீட்டுக்காரன், என்னோட நண்பன் தான். சிப்டு நேரம் தாண்டி வேலை செய்துட்டு வந்து படுத்திருக்கான்..”

தொழிலாளர்களின் முன்முயற்சிகளைக் கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பதையும், அதனால் அவர்கள் உற்சாகத்துடன் செயல்படுவதையும் மாதவன் விவரித்தார்.

“சரிங்க.. தனியார் நிறுவனம் வந்தாலும் இது தானே நடக்கப் போகுது?”

“இல்லை சார்.. இப்பவே நிறைய ஒப்பந்த தொழிலாளிகளை எடுக்கிறாங்க. அவங்களுக்கு இது தங்களோட நிறுவனம்ங்கற நினைப்பு இல்லை. எப்படி இருக்கும்? சம்பளமும் குறைவு, மற்ற வசதிகளும் இல்லை. இதே தனியார் முதலாளி வந்தாச்சின்னா அவன் லாபத்துக்காக இஸ்டத்துக்கு ஒப்பந்த தொழிலாளிகளை எடுத்துப் போடுவான்… தொழிலாளிக்கு எப்படி நிறுவனத்து மேல் ஒரு பிடிப்பு வரும்? ஏதோ வந்தமா வாங்குற சம்பளத்துக்கு ஒப்பேத்திட்டுப் போனமான்னு தானே இருப்பான்?”

எனினும், மத்திய அரசு சேலம் இரும்பாலையைத் தனியார் முதலாளிகளுக்கு சல்லிசான விலையில் தள்ளி விடுவதில் குறியாக இருப்பதை தொழிலாளர்கள் சிலரிடம் பேசிய போது புரிந்து கொள்ள முடிந்தது. கடந்த சில ஆண்டுகளும் சுமார் 450 நிரந்தரத் தொழிலாளிகள் ஓய்வு பெற்றுள்ள நிலையில் அந்தப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் கிடக்கின்றன. ஆட்பற்றாக்குறை நிலவும் நிலையிலும் தொழிலாளர்கள் உற்பத்தியைக் குறையவிடாமல் பார்த்து வருகின்றனர்.

ஆனாலும் நீண்ட நாட்களுக்கு இந்த நிலை தொடர முடியாது என்பதை பலரும் வெளிப்படுத்தும் சலிப்பான வார்த்தைகளில் புரிந்து கொள்ள முடிந்தது.

ராஜேந்திரன் தனது காது கேளாத தனது குழந்தையை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று விட்டு பணிக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்..

“சார் பையனுக்கு உடம்பு சரியில்லைன்னு சொல்லிப் பார்த்தேன்.. ஆனாலும், லீவு கொடுக்கலைங்க.. நேத்து ரெண்டாவது சிப்டு முடிச்சிட்டு அப்படியே காலைல பையன ஆஸ்பத்திரிக்கு அழைச்சிட்டு போயிட்டு தூங்காம ஓடியாறேன்” என்றார்.

“இந்த ஆலையில் புதிதாக ஊழியர்கள் எவரையுமே சேர்த்துக் கொள்வதில்லையா?”

“ஏன் சேர்க்காம? ஏகப்பட்ட மேனேஜர்களை எடுத்து வச்சிருக்கான். கணக்குப் போட்டுப் பார்த்தா நாலு தொழிலாளிக்கு ஒரு மேனேஜர்னு வருது. பல பேருக்கு என்ன பதவி கொடுக்கிறதுன்னு கூட தெரியாம புதுசா பதவிகளை உருவாக்கறாங்க.. இப்ப கூட புதுசா ஒரு மேனேஜர் வந்திருக்கார்… Employee pool manager அப்படின்னு ஒரு பதவி. அவருக்கெல்லாம் எந்த வேலையும் கிடையாதுங்க. சும்மா வருவாரு போவாரு. நல்ல வசதியான அப்பார்ட்மெண்டு ஏகப்பட்ட சலுகைகள். 40 வகையான அலவன்ஸ் (சலுகைகள்)  கொடுக்கிறாங்க சார். சொன்னா  சிரிப்பீங்க.. ஜன்னல் திரைச்சீலைகள் மாத்துறதுக்கு கூட அலவன்ஸ் குடுக்குறாங்க..” என்றவர் தொடர்ந்து பேசினார்.

ஆலை தனியார்மயமாவதை தடுக்கப் போராடிவரும் தொழிலாளிகள் ( கோப்புப் படம் )

“ஒரு அதிகாரிக்கு குடுக்கும் சம்பளத்தில் பத்து தொழிலாளிகளை எடுக்கலாம்… ஆனா செய்ய மாட்டானுக. எப்படியாவது இந்த  ஃபாக்டரி நட்டத்துல போகுதுன்னு கணக்கு காட்டி தனியார்ட்ட குடுத்துடலாம்னு பார்க்கறாங்க. நாங்களும் விடாம உழைச்சிட்டு இருக்கோம். ஓட்ட வாளில தண்ணி அள்ற மாதிரி. சரிங்க, லேட் ஆயிடிச்சி… போகனும்” என்று சொல்லி விட்டு நகர்ந்தார்.

தனியார்மயமாக்கள் நடவடிக்கை தொழிலாளர்களைத் தட்டியெழுப்பியுள்ளது. தொடர்ச்சியான போராட்டங்களை அவர்கள் முன்னெடுத்து வருகின்றனர். எனினும், இன்று வரை அந்தப் போராட்டங்களும் எதிர்ப்பியக்கங்களும் ஒரு ஆலை மற்றும் அதன் தொழிலாளர்கள் என்கிற வரம்புக்குள் தான் நிற்கின்றன. போராட்டங்கள் மக்கள் மயமாவதும் சேலம் இரும்பாலைத் தொழிலாளர்கள் தங்களது கோரிக்கைகளுக்கு ஆதரவாக பகுதிமக்களைத் திரட்டுவதும், மக்கள் ஆதரவின் மேல் தங்களது போராட்டங்களைக் கட்டியமைப்பதன் மூலமே மோடி எனும் கார்ப்பரேட் கைக்கூலி அரசாங்கத்தை வீழ்த்த முடியும்.

கடினமான இரும்பை உருக்கி விரும்பும் வண்ணம் வளைத்துப் பழகிய தொழிலாளர்களின் முன் இருமாப்பில் தடித்துப் போன ஒரு அரசு இயந்திரம் மறுவார்ப்பு செய்யப்படுவதற்காக காத்துக்கிடக்கிறது.

-வினவு செய்தியாளர்

ஏர்டெல் வேலை சமத்துவத்தை தருமா ?

2
இணையத்தில் எடுக்கப்ப்ட்ட மாதிரிப் படம்.

ழகப்பன் ஏர்டெல் கம்பெனியில் வேலை பார்க்கிறார் என்று சொன்ன போது மகிழ்ச்சியோடு வேலை பற்றிக் கேட்டேன். கொஞ்ச நேரத்திலேயே அந்த வேலை அவரை சுயமரியாதை இல்லாம நடத்தறதுக்கு உதவியா இருக்குன்னு வருத்தமாயிருந்தது.

அந்தக் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில்  ‘ஏர்டெல்’ டிஷ் ஆன்டனா பழுதானதால் நிறுவனத்துக்குப் புகார் கொடுத்துருந்தாங்க. கம்பெனியோட வட்டார அலுவலகம் பக்கத்து நகரத்தில் இருந்தது. புகார் கொடுத்த அதே ஊரைச் சேர்ந்த ஏர்டெல் நிறுவனத்தின் ஊழியர் அழகப்பனைச் சர்வீஸ் செய்ய நிர்வாகம் அனுப்பியது. இதுல என்ன பிரச்சினைன்னு கேக்குறீங்களா?

டிவி ஆன்டனா பழுதானது ஆதிக்கச் சாதியைச் சேர்ந்தவர் வீட்டில். பழுது பார்க்க வந்த அழகப்பன் அதே ஊரைச் சேர்ந்த தலித் சாதியைச் சேர்ந்தவர். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தெருவுல வச்சு சோறு போடும் பாத்திரத்தையே மூணு முறை தண்ணி விட்டு தீட்ட கழிச்சு வீட்டுக்குள்ள எடுத்துட்டுப் போற பழக்கத்த இன்னும் கடைபிடிக்கும் இந்த ஊருல, வீட்டுக்குள்ள போய் டிவி ஆன்டனா ரிப்பேர் செய்றது எப்படி?

அழகப்பனுக்கு இதே ஊருல ஏற்கனவே இப்படி பழுது பார்த்த திகில் அனுபவம் உள்ளது. அது தந்த கசப்பான நினைவுகள் இருக்கும் போது மீண்டும் ஒரு பெருங்கசப்பைச் சந்திக்க அந்தத் தம்பி ரொம்பவே தயங்கிச்சு. சாதி தன் வேலைக்கு ஒரு பிரச்சனையாக இருப்பதை மேலதிகாரியிடம் சொல்ல முடியாது. பிறகு ஊருக்குள்ளதான் அதிகம் வேலை இருக்குன்னு ஆதிக்க சாதிக்காரரை வேலைக்கு போட்டுருவாங்க, வேலை போயிரும். இந்த வேலையும் போச்சுன்னா பெத்தவங்க போல கைகட்டி இவங்ககிட்ட  தான் வேல செய்யனும். பழசுக்குத் திரும்பி போறத விட புதுசுக்கு போராடி பார்க்க நினைக்கும் வயசுப்பசங்க மனசோட ஆனது ஆகட்டுமுன்னு முடிவுக்கு வந்தவர் நேராப் புகார் கொடுத்த வீட்டுக்குப் போய்விட்டார். ஆனால் வீட்டில் ஆள் இல்லை.

“நான் ஏர்டெல்லருந்து வந்திருக்கேன். உங்க டிஷ் ஆன்டனாவுல பிரச்சனைன்னு புகார் வந்துருக்கு. வீட்டுக்கு வந்து பார்த்தா ஆள் இல்லை. அதான் போன் பண்றேன். நாளைக்கு வரட்டுமா? இல்ல காத்திருக்கவா?” என்று வீட்டு உரிமையாளரிடம் கேட்டார்.

“நான் வெளியூர்ல இருக்கேன். வீட்டுச் சன்னல் சட்டத்தில் சாவி இருக்கும் நீங்க எடுத்துக் கதவை திறந்து வேலையைப் பாருங்க. எங்க அம்மா வயலுக்குத்தான் போயிருப்பாங்க வந்துருவாங்க” என்ற பதிலை கேட்ட அழக்கப்பனுக்கு தலைசுற்றியது.

வீட்ல உள்ளவங்க நேரில பார்த்தா, தான் யார்ன்னு தெரிஞ்சுரும், வேலை செய்வதா வேண்டாமான்னு முடிவு தெரிஞ்சுரும் என்று நெனச்சவருக்கு இப்படி ஒரு சோதனை.

“அது சரிபடாதுங்க ஆள் இல்லாம கதவை திறந்து எப்படிங்க உள்ளே போறது?”

“நீங்க எடுத்துட்டு போற அளவுக்கு வீட்டுக்குள்ள ஒன்னுமில்லைங்க. உங்களுக்கு சர்வீஸ் சார்ஜ் குடுக்க கூட வீட்டுல பணம் இருக்கோ இல்லியோ பயப்படாம வேலையப் பாருங்க.” என்றார் வீட்டுக்காரப் பையன்.

அழகப்பனுக்கு என்ன செய்றதுன்னு புரியல. போன்ல பேசர வீட்டுக்கார மனிதரை நேர்ல பாக்கும் போதும் பேசும் போதும் சாதி வித்தியாசம் காட்டாத மரியாதை அவர் பேச்சில் தெரியும். அது அவர் பார்க்கும் ஆசிரியர் வேலைக்கான அருகதையாய் கூட இருக்கலாம். அதை வைத்து எந்த முடிவுக்கும் வந்து விட முடியாது. வேலை நடக்க வேண்டுமே என்று வீட்டுக்குள் விடுவார்களே தவிர சாதியை விட்டு விடமாட்டார்கள் என்பது அழகப்பன் கணிப்பாக இருந்தது.

“விசயம் அது இல்லிங்க நான் யாருன்னு தெரியாம பேசறீங்க, நானு எஸ்சி தெருவைச் சேந்த அழகப்பன்.”

“அட நம்ம அழகப்பனா? ஆரம்பத்துலேயே சொல்லி இருக்கலாமே, எதுக்கு இவ்வளவு தயங்குற. உன்னோட வேலையத் தானே செய்ய வந்துருக்க நீ பாட்டுக்கு போயி வேலையப் பாரு. எந்த பிரச்சனையும் இல்ல.”

வேலைக்குச் சேர்ந்த மூன்று ஆண்டுகளில் ஊருக்குள் 20 வேலைகளுக்கு மேல் பார்க்க வேண்டி இருந்தது. முடிந்த அளவு தவிர்த்தது போக பார்த்த வேலைகளில் வீட்டுக்குள் விட யோசித்தவர்கள் தான் அதிகம். இவர் ஒருவர் தான் விதிவிலக்கு. சாதி வெறி புடிச்சு பேசற ஊருக்குள்ள அவர் படித்த படிப்பும் பார்க்கும் வேலையும் அவரை பண்புள்ளவரா மாத்திருக்கு” என்று ஆச்சரியத்துடன் சொன்னார் அழகப்பன்.

இப்படித்தான் ஊருக்குள் ஆதிக்க சாதி வீடுகளில் வேலை செய்ய வேண்டி வரும்போது அழகப்பன் மிகவும் பதட்டம் அடைகிறார். வீட்டுக்காரங்க அனுமதியோடு உள்ள போய் வேலை பார்க்கிறார். அவர்களும் இந்த வேலைக்கு வேறு வழி இல்லாமல் அனுமதிக்கிறாங்க. அதப்பாத்துட்டு இருக்க முடியல சிலருக்கு. காலம் காலமா உண்ட சோத்துக்கு திண்ண கங்குல நின்னவங்க இன்னைக்கி வீட்டுக்குள்ள வாராங்களே இனி என்ன நடக்குமோங்கற நடுக்கத்துல நெஞ்சுல ஈரம் இல்லாம இப்பவும் பேசத்தான் செய்றாங்க.

அழகப்பனும் அவர் கூட வேலை செய்யும் வேறு ஒரு இளைஞருமாக அதே ஊருக்குள்ள ஒரு வீட்டுக்கு டிஷ் ஆன்டனா பொருத்த போயுள்ளனர். வீட்டுக்காரருக்கு வந்தது யார் என்று தெரியும்.

“என்னப்பா நீ ஏர்டெல்ல தான் வேலை பாக்குறியா. பரவால்லையே நாங்க பாரு இன்னமும் வெட்டிகிட்டும் கொத்திகிட்டும் வயல் வேலை பாக்குறோம் நீ படிச்சு வேலைக்கு போற. நாடு முன்னேறிருச்சு. ஆள் அனுப்புறோம்னு சொன்னாங்க, நீதான் வருவேன்னு நெனைக்கல. பரவால்ல. ஹோம் தியேட்டர் வாங்கி இருக்கேன் அதையும் சேத்து பொருத்திக் குடுத்துட்டு போ” என்று கூறியுள்ளார்.

அழகப்பனோடு வந்தவருக்கு முதலில் புரியலேன்னாலும் அப்பால முழுக்க புரிஞ்சுக்கிட்டார்.

நடு வீட்டில் ஒயர், செட்டாப் பாக்ஸ், ஆண்டனா, ஸ்பீக்கர் எல்லாத்தையும் பரப்பி வைத்துக் கொண்டு வேலையைப் பார்க்க அழகப்பன் தொடங்கி இருக்கார். அதே தெருவைச் சேர்ந்த வேறு இரண்டு பேர் நடந்த வேலையைப் பார்த்துச் சென்றார்கள். மரத்தடியில் நின்ற வீட்டுக்கார பையனிடன் போய் “யார்ரா இது. சின்னக்கருப்பு மகனாடா இவன். நடு வீட்டுல உக்கார வச்சு என்னடா பன்னிட்டு இருக்கிங்க” என்று கேட்டுள்ளார்கள்.

“ஏர்டெல் கம்பனிலதான் வேலை பாக்குறானாம். கம்பனிலேருந்து வரச்சொல்லி இருக்காங்க. நானும் ஒரு மாசமா அலையிறேன். இந்த ஸ்பீக்கர மாட்டுவோமுன்னு ஒருத்தனும் கெடைக்கல அதான்” என்று இழுத்துள்ளார் ஏர்டெல்ல புகார் கொடுத்தவர்.

சாதிக் கொடுமை

“காலம் கெட்டுப் போச்சுடா அவங்கப்பன் காலத்துல மாட்டு கொட்டையில உட்காந்து சோறு சாப்புட அஞ்சுவான். இவன் ஏதோ பொண்ணக் கட்டுன மாப்பிளையாட்டம் நடு வீட்டுல உக்கார்ந்திருக்கான் பாரு. உங்களச் சொல்லி குத்தமில்ல எல்லாம் அந்த டிவி படுத்துற பாடு.”

அழகப்பனுக்கு காதுல விழுந்தாலும் அந்த வேலையைத் தொடர்ந்து பார்த்துள்ளார். போங்கடா உங்களுக்கு நான் வேலை பாக்க முடியாது என்று சொல்ல முடியாததற்கு காரணம் மேலதிகாரிக்கு பதில் சொல்ல வேண்டுமே என்ற பயம். காதில் விழாத மாதிரி இருந்துள்ளார். இதையெல்லாம் பிரச்சினையாக்கினால் வேலையும் போய் விடும். கம்பெனியும் இனிமேல் இது மாதிரி ஊரில் ஆதிக்க சாதியைச் சேர்ந்தவரைத்தான் போட வேண்டும் என்று முடிவு செய்து விடுவார்கள்.

கூட வந்த பையன் ஆண்டனா பொருத்திக் கொண்டு வீட்டுக்கு மேல இருந்துள்ளார். அவருக்கு காதுல விழுந்துருக்குமோ என்ற அச்சத்தோடும் அவமானத்தோடும் அழகப்பன் பதட்டத்துடன் இருந்தார்.

“இந்த அவமானத்துக்குப் பிறகு ஊருக்குள்ள வேலையின்னா பாக்க கூடாதுன்னுதான் நெனச்சேன். ஆனா இதை மேலதிகாரிகிட்ட சொல்லி வேலைக்கே ஏதாவது பிரச்சனை வந்துருமோன்னு நெனச்சுதான் மீண்டும் இங்கன வந்து நிக்க வேண்டியதா போச்சு.”

“வெளியூருன்னா பிரச்சனை இல்லை நாம யாருன்னு தெரியாது போனமா வேலையை பாத்தமான்னு வந்துட்டே இருக்கலாம். இவனுங்ககிட்ட வேலை பாக்கறதுக்கு நாண்டுகிட்டுச் சாகலாம். ஊருக்குள்ள இந்த வேலைக்கி ஆள் கெடைக்காமயும் டிவி பாத்துப் பழக்கப்பட்டு போயி சும்மாருக்க முடியாமதான்  நம்மள வீட்டுக்குள்ள விட்றாய்ங்கென்னு தெரிஞ்சதும் கோபமாதான் இருந்துச்சு. என்னடா பொழப்பு இது, எதுக்கு இந்த கேடுகெட்ட சாதி வெறி புடிச்சவங்ககிட்ட வேலை பாக்கனுமுன்னு தோணும். ஆனா எதுத்து கேக்க முடியல.”

கக்கத்துல துண்ட வச்சுகிட்டு கூழ கும்புடு போட்டு பேசுனது. தவிச்ச வாயிக்கி கையில தண்ணிய வாங்கி குடிச்சது, பாத்திரமில்லாம பன ஓலையில கஞ்சி ஊத்துனது இது போல எத்தனையோ எங்கப்பங்கூட சின்னப் பிள்ளையா போனப்ப பாத்திருக்கேன். இப்புடியேப் பழகி பழகி அந்த நடுக்கத்துலேயே எனக்கும் வீட்டுக்குள்ள போறதுக்கு ஒடம்பு கூசுது.

ஊருக்குள்ள மரக்கா நெல்லுக்காக அறுப்புக்கு போனப்ப சாதிக்கு அடிபணிஞ்சு போற நிலமை இருந்ததையும், இதுலேருந்து விடுபட தட்டுத்தடுமாறி ஏதோ கொஞ்சம் படிச்சுட்டு வேலைக்கி போன பின்னும் அதே நிலைமை நீடிப்பதையும் அழகப்பன் பேச்சு உணர்த்தியது.

ஏர்டெல்லு, செல்போனு, டிவின்னு எல்லாம் நாளுக்கு நாளு புதுசு புசுசா மாறுவதால மட்டும் நாகரீகம் வந்து விடாதுங்கிறத அழகப்பனோட அனுபவம் சொல்லுது.

– சரசம்மா

(உண்மைச் சம்பவம், பெயர் – அடையாளங்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.)

கருத்துரிமையை நசுக்கும் ஊபா சட்டததை நீக்கு ! – மதுரையில் கருத்தரங்கம்

0

பேராசிரியர் சாய்பாபாவுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய் ! கருத்துரிமையை நசுக்கும் ஊபா சட்டததை நீக்கு !

நாள் : ஏப்ரல் 02, 2017, ஞாயிறு மாலை 4.30 மணி.
இடம் : வேலாயுத நாடார் திருமண மகால், கே.கே நகர், மதுரை.

தலைமை : சே. வாஞ்சிநாதன், மாநில ஒருங்கிணைப்பாளர். ம.உ.பா.மையம்
சிறப்புரை : வழக்கறிஞர் பாலன், பெங்களூரு
நன்றியுரை : ம.லயனல் அந்தோணிராஜ், மதுரை மாவட்டச் செயலர். ம.உ.பா.மையம்

அன்பார்ந்த நண்பர்களே…

கடந்த மார்ச் 7, 2017 அன்று பேராசிரியர் தோழர் சாய்பாபா உள்ளிட்ட அய்வருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது மகாராஷ்டிரா மாநில, கட்ஜ்ரோலி மாவட்ட நீதிமன்றம். மின்னணு, கணினி சாட்சியங்களை மட்டுமே வைத்து வழங்கப்பட்டுள்ள இத்தீர்ப்பு இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், குற்றவியல் நீதிபரிபாலன முறை மீதான நம்பகத்தன்மையைத் தகர்த்திருக்கிறது. அரசின் அநீதிகளை எதிர்த்துப் போராடுவோரை மிரட்டும் இத்தீர்ப்பு குறித்து நாடுதழுவிய விவாதமும்,எதிர்ப்பும் அவசியம். இல்லையேல் நாளை அணு உலை, ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ, மீனவர் படுகொலை, கோக் எதிர்ப்பு எனப் போராடும் மக்கள் அனைவருக்கு எதிராகவும் இது போன்ற தீர்ப்புகள் விரிவாக்கப்படும். டாஸ்மாக்கை எதிர்த்த மக்கள் அதிகாரம் அமைப்பினர் மீது தேசத்துரோக வழக்கு பதியப்பட்டதையும், நீதித்துறை ஊழலை எதிர்த்ததற்காக 7 தமிழக வழக்கறிஞர்களுக்கு மின்னணு சாட்சியங்கள் அடிப்படையில் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டிருப்பதையும் நாம் மறக்கமுடியாது.

பேராசிரியர் சாய்பாபா யார்?

டெல்லிப் பல்கலைக் கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணி புரிந்த சாய்பாபா, அரசின் பல்வேறு மனித உரிமை மீறல்களை எதிர்த்துப் போராடி வந்தார். மத்திய இந்தியப் பகுதியான தண்டகாரண்யாவில் உள்ள 28 வகையான கனிம வளங்களைப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்ற இந்திய அரசு, அதற்குத் தடையாய் இருந்த பழங்குடி மக்களைக் காட்டைவிட்டு அகற்றும் நோக்குடன் மாவோயிஸ்டுகளை ஒழிப்பது என்ற பெயரில் “காட்டு வேட்டை” என்ற அதிரடி நடவடிக்கையைத் தொடங்கியது. துணை இராணுவப் படைகள் மூலம் 600 பழங்குடி கிராமங்களைக் கொளுத்தியது. 50,000 பழங்குடி மக்கள் முகாம்களில் அடைக்கப்பட்டனர். ஏராளமானோர் கொல்லப்பட்டு, பெண்கள் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டனர். அரசின் இந்த அநீதிகளை எதிர்த்து காந்தியவாதி ஹிமன்சு குமார் உள்ளிட்ட பலரும் களம் இறங்கினர். அதில் முன்னணியாய் இருந்தவர் சாய்பாபா. இவர் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கால் அரசின் அத்துமீறல்கள் அம்பலமாயின. தொடர் போராட்டங்களால் இன்றுவரை கனிம வளங்களை எடுக்கமுடியவில்லை. இதன் தொடர்ச்சியாகவே சாய்பாபா போலீசால் கடத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். 90% உடல் ஊனமுற்றவரான சாய்பாபா, சக்கர நாற்காலியில் மட்டுமே செல்ல முடிந்த மாற்றுத் திறனாளி. சிறுநீரகம், இதயம் உள்ளிட்ட உறுப்புகள் பாதிக்கப்பட்டு உயிர் வாழ்வதற்கே போராட வேண்டிய நிலையிலும், மக்களின் நலனுக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட அரியதொரு போராளி.

அரசு தரப்பு வழக்கு

“சாய்பாபா தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்ட் கட்சியின் அமைப்பான புரட்சிகர ஜனநாயக முன்னணியின் நிர்வாகி. அரசுக்கு எதிரான வெறுப்பை, வன்முறையைத் தூண்டும் நோக்கோடு பிரச்சாரம் செய்தார். மாவோயிஸ்டுகளின் புத்தகங்களை வைத்திருந்தார், கடிதம், இ-மெயில் தொடர்பும் இருந்தது. இதற்கு அவர் வீட்டில் கைப்பற்றப்பட்ட சி.டி, மெமரி கார்டு, துண்டறிக்கைகள், பென் டிரைவ், லேப்டாப் ஆகியவை ஆதாரங்கள். மாவோயிஸ்டுகள் இந்திய அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடுகிறார்கள். எனவே சாய்பாபாவின் இந்த நடவடிக்கைகள் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்,1967 பிரிவுகள் 13,18,20,38,39-ன் கீழ் குற்றம்” -இவைதான் சாய்பாபாவுக்கு எதிராக அரசு சுமத்திய குற்றச்சாட்டுகள்.

விசாரணையும், சாட்சியமும்

வழக்கில் நேரடி சாட்சி யாரும் இல்லை. மாறாக, “சாய்பாபா வீட்டில் கைப்பற்றப்பட்ட சி.டி, பென் டிரைவ், லேப்டாப் ஆகியவை உண்மையானவை” என்று காட்டுவதற்கான சாட்சிகள் மட்டுமே விசாரிக்கப்பட்டனர். விசாரிக்கப்பட்ட 23 சாட்சிகளில் 10 பேர் காவல்துறையினர்; 8 பேர் அரசு அதிகாரிகள்; 4 பேர் போலீசார் அழைத்துச் சென்ற மகஜர் சாட்சிகள்.

கைப்பற்றப்பட்ட பொருட்களின் அடிப்படையில் மட்டும் தண்டனை தருவது சரியா?

சாய்பாபா வீட்டில் சோதனை செய்யும்போது அவர் வீட்டில் இல்லை. அரசு சாட்சிகள் 2,4,5,15-ன் படிசாய்பாபா வீட்டில் என்ன பொருட்கள் கைப்பற்றப்பட்டன என்பது சாட்சிகளுக்குப் படித்துக் காட்டப்படவில்லை; கைப்பற்றப்பட்ட பொருட்கள் வைத்திருந்த பிளாஸ்டிக் பாக்ஸ் நீதிமன்றத்தில் இல்லை; நீதிமன்றத்தில் உள்ள பாக்ஸை சாட்சி பார்த்ததில்லை; சீலும், கையெழுத்தும் இல்லை. சோதனையின் போது எடுக்கப்பட்ட வீடியோ நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. கைப்பற்றப்பட்ட பொருட்கள் தடயவியல் துறைக்குச் செல்லும் முன் போலீஸ் பாதுகாப்பில் பல நாட்கள் இருந்துள்ளன. 26.02.2014-ல் சர்ச் வாரண்ட் வாங்கி ஏழு மாதங்கள் கழித்து சோதனை நடத்தியுள்ளனர். இது தவிர சாய்பாபா வீட்டில் கைப்பற்றப்பட்டதாகச் சொல்லப்படும் மாவோயிஸ்ட் கட்சித் தீர்மானங்கள் உள்ளிட்ட எவையும் ரகசிய ஆவணங்கள் அல்ல. அவற்றில் பலவும் மாவோயிஸ்டு கட்சியின் வெப்சைட்டில் உள்ளவை தான் என்பதை விசாரணை அதிகாரி குறுக்கு விசாரணையில் ஒத்துக் கொண்டுள்ளார். மேற்கண்ட சாட்சியத்தைப் படிக்கும் எவரும் டிஜிட்டல் ஆவணங்களைத் திருத்துவது, மாற்றுவது எளிது என்பதை ஏற்பார்கள்.

மாவோயிஸ்டு என்பதற்காக ஆயுள் தண்டனை விதிக்கலாமா?

ஒரு வாதத்திற்காக, சாய்பாபாவிற்கு மாவோயிஸ்ட்டுகளுடனான தொடர்பு நிரூபிக்கப்பட்டதாகவே வைத்துக் கொண்டாலும் அதற்கு ஆயுள் தண்டனை விதிக்க முடியுமா? தடை செய்யப்பட்ட இயக்கத்தில் இருப்பதோ, அதை ஆதரிப்பதோ குற்றம் இல்லை என உச்சநீதிமன்றம் பலமுறை தீர்ப்பளித்துள்ளது. மாவோயிஸ்டு என்பதற்காக மட்டும் கைது செய்யப்பட்ட ஒருவரை விடுவித்த கேரள உயர்நீதிமன்றம், அவருக்கு நட்ட ஈடு வழங்க உத்தரவிட்டது. சாய்பாபாவின் நடவடிக்கையால் குறிப்பிட்ட வன்முறை சம்பவம் நிகழ்ந்தது என்பது அரசு தரப்பு வழக்கே அல்ல. அவர் மாவோயிஸ்டுகளைக் கருத்து ரீதியாக ஆதரித்தார் என்பதற்காக, அதாவது, அவரது சிந்தனைக்காக ஆயுள் தண்டனை விதித்திருக்கிறது நீதிமன்றம். உடல் ஊனமுற்றாலும் சிந்தனை ரீதியாக சாய்பாபா வலுவானவர் என்று தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார் நீதிபதி. மேலும் “மாவோயிஸ்டு அமைப்பு உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் சொல்லியுள்ளார். மாவோயிஸ்ட் அமைப்பு இன்று நகரத்திலும் வளர்ந்து வருகிறது.அதைத் தடுக்க அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்ஜ்ரோலி மாவட்டத்தில் தொழில் வளர்ச்சி இல்லாததற்கு மாவோயிஸ்ட் அமைப்பே காரணம். எனவே சாய்பாபா உள்ளிட்டோருக்குத் தூக்குத் தண்டனை விதிக்க வேண்டும். சட்டப்படி ஆயுள் மட்டுமே விதிக்க முடியும் என்பதால், ஆயுள் தண்டனை விதிக்கிறேன்” என்கிறார் நீதிபதி. துப்பாக்கி எடுத்துச் சுடாததுதான் பாக்கி!

கொடூர UAPA சட்டம்

சாய்பாபா மீது புனையப்பட்ட வழக்கு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழானது. இந்தக் கருப்புச் சட்டம் இயற்றப்பட்டு ஐம்பது ஆண்டுகள் முடிந்துவிட்டன.1967-லிருந்து இன்றுவரை “ஊபா” சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் அரசியல் சட்டம் வழங்கும் கருத்துரிமையை மறைமுகமாக ஒழித்துள்ளது. போராடும் அமைப்புகள்,மக்களைக் குறிவைத்துக் கொண்டுவரப்பட்ட இச்சட்டம் உரிய தெளிவின்றி, எப்படி வேண்டுமானாலும் பொருள் கொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ளது.

திருத்தப்பட்ட ஊபா சட்டப்படி “நாட்டின் பொருளாதார பாதுகாப்புக்கு எதிரான செயல்கள், அத்தியாவசியப் பொருட்களைத் தடை செய்தல் ஆகியவை பயங்கரவாதக் குற்றம். இதன்மூலம் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம், விவசாயிகள், மீனவர்கள் போராட்டம் என அனைத்தும் பயங்கரவாதச் செயல்கள்தான். இதற்கு ஆயுள் தண்டனை விதிக்கலாம். ஜாமீன் இன்றி 180 நாட்கள் சிறை, 30 நாட்கள் போலீசு காவல் என எல்லாம் உண்டு. இச்சட்டத்தில்தான் மாவோயிஸ்டுகளுக்கு ஆஜரான மதுரை வழக்கறிஞர் முருகன் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இயற்கை வளக் கொள்ளையை எதிர்த்துப் போராடும் மக்கள், மக்களை ஆதரிக்கும் அமைப்புகள், அறிவுத்துறையினர் ஆகியோரை குறிவைத்துப் பாய்கிறது ஊபா சட்டம். நேற்று பிநாயக் சென், இன்று சாய்பாபா எனத் தொடர்கிறது. பாசிசத்தின் கரங்கள் அரசைத் தாண்டி நீதிமன்றங்களை நோக்கி நீள்கின்றன!

எனவே, நாட்டை, மக்களை, ஜனநாயகத்தை, உரிமைகளை நேசிக்கும் அனைவரும் ஓரணியில் திரள வேண்டிய தருணம் இது. இணைந்து சிந்திப்போம், விவாதிப்போம். சாய்பாபா விடுதலைக்குக் குரல் எழுப்புவோம் ! அநீதிகளுக்கு எதிரான போரை உறுதியுடன் தொடர்வோம் !

தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
மதுரை. தொடர்புக்கு : 94434 71003

அமெரிக்க கோக்கை அடித்து விரட்டு ! – நெல்லை ஆர்ப்பாட்டம்

0

தாமிரபரணி மக்கள் சொத்து! அமெரிக்க கோக்கை அடித்து விரட்டு!!  என்ற முழக்கத்தை முன்வைத்து 24.03.17 மாலை  திருநெல்வேலியில் பாளை ஜவகர் திடலில் மக்கள் அதிகாரம் சார்பாக தாமிரபரணியை கோக்குக்கு தாரைவார்க்கும் அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மக்கள் அதிகாரம் தோழர் ஆதி இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கினார். புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் தோழர் சிவா, மக்கள் உரிமைப்பாதுகாப்பு மையத்தின் தூத்துக்குடி தோழர் அரிராகவன், பொட்டல் கிராம இளைஞர் செல்வக்குமார், நாகர்கோவிலிலிருந்து வந்திருந்த வின்சாண்டோ (குமரி பாசனத்துறை) ஆகியோர் கண்டனங்களை பதிவு செய்தனர். மக்கள் அதிகாரம் சிவகங்கை தோழர் நாகராசன் சிறப்புரையாற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கிராமங்களிலிருந்து மாணவர்கள் – இளைஞர்களும், விவசாயிகளும் பெண்களும் கலந்துகொண்டனர். ஓட்டுக்கட்சிகள் காசு தந்தும், வண்டி அனுப்பியும் தான் கூட்டம் கூட்டுகின்றனர். ஆனால் மக்கள் அதிகாரம் நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் உணர்வுபூர்மாக நிதியளித்தும், சொந்த செலவில் வந்து கலந்துகொண்டதையும் பார்த்த பலவேறு அமைப்பினர் ஆச்சரியத்தை வெளிப்படுத்தினர்.

சிபிஎம் கட்சியைச் சேர்ந்த தோழர் “எங்க உண்ணாவிரதத்துல ஒரு கான்ஸ்டபிள்தான் குச்சிய வெச்சிக்கிட்டு நின்னார். உங்க ஆர்ப்பாட்டத்துல இவ்வளவு போலீஸ்காரங்க குவிஞ்சிருக்கராங்களே! வஜ்ரா வண்டிய வேர கொண்டாந்திட்டான்” என்று ஆச்சர்யப்பட்டார்.

சீமைக்கருவேல மரம்தான் முதன்மையான பிரச்சினை என்று தண்ணீர் பிரச்சினையை திசைதிருப்பும் அரசை கண்டித்தும், காடுகளை அழிக்கும் கும்பல்களான எஸ்டேட் முதலாளிகள் முதல் சாமியார்கள் வரை அம்பலப்படுத்தியும், பல்வேறு பிரச்சினைகளுக்கு காரணமான தனியார்மயத்தை அம்பலப்படுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் பேசிய தோழர்கள் அம்பலப்படுத்தினார். மாவட்ட ஆட்சியரிடம் கெஞ்சுவதாலோ, நீதிமன்றத்தில் வழக்கு போடுவதாலோ பலனில்லை. தாமிரவருணியை உறிஞ்சிக்கொழுக்கும் கோக் உள்ளிட்ட கார்ப்பரேட்டுகளை விரட்ட மெரினா போன்றதொரு எழுச்சியை உருவாக்க வேண்டும் என்ற சிந்தனையை இளைஞர்களிடம் உருவாக்கினார்.

கல்லூரி மாணவர்கள் “தட்டிக்கு (பதாகை) எங்கிருந்த இந்தமாதிரி போட்டோவை பிடிக்கறீங்க. முழக்கமும் அருமை” என்று பாராட்டினர். பொட்டலைச் சேர்ந்த பெண்மணியோ “ஆசியாவிலேயே முதல்முறையா நம் நாட்லதான் பெக்டெல் நுழைஞ்சிருக்கான்னு, திருப்பூரப்பத்தி சொன்னீங்க! ஒவ்வொன்னும் புது செய்தியா இருந்துச்சு!” என்றார்.

நாம் தாமிரபரணியை பாதுகாக்க இந்த அரசை கெஞ்சிப்பயனில்லை! நாமே அதிகாரத்தை கையில் எடுக்கவேண்டும்! மெரினா எழுச்சியை நெல்லையில் உருவாக்க வேண்டும் என்ற கருத்தை பதியவைத்துள்ளது இந்த ஆர்ப்பாட்டம்.

சொல்லிவைத்தாற்போல் எந்த ஒரு நாளிதழிலும் இந்த ஆர்ப்பாட்ட செய்தி வரவில்லை. “கலெக்டரே சொல்லிருப்பான். நம்மளையே ஏசுறானுங்க, ஒருத்தனும் செய்திபோடக்கூடாதுன்னு” என்று ஓய்வுபெற்ற அரசு ஊழியர் ஒருவரே ஊடக தர்மத்தையும், அரசின் ஜனநாயகத்தையும் விமர்சித்தார்.

கிராமங்களில் நம் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள்  சொன்னதைக்கேட்டு பலரும்  “என்னை விட்டுட்டு போயிட்டியே, இவ்வளவு நல்லா நடக்கும்னு தெரியல்லியே” என்று ஆதங்கப்பட்டுள்ளனர். “அடுத்து கூட்டம்னா நாங்க நிச்சயமா 100 பேர கூட்டியாருவோம்!” என்று சில ஊர்களில் மக்கள் நம்மிடம் கருத்து கூறினர்.  அடுத்தகட்ட போராட்டத்துக்கு மக்களை தயார்படுத்தும் ஆலோசனைகளை செய்துவருகிறது மக்கள் அதிகாரம்.

(படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்)

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – 80152 46753

சென்னையில் பகத்சிங் நினைவுநாள் கருத்தரங்கம் ! செய்தி – படங்கள்

0

மார்ச், 23 – பகத்சிங், சுகதேவ், ராஜகுரு நினைவுநாளை ஒட்டி புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் சென்னையில் கருத்தரங்கம் எழுச்சியுடன் நடந்தது.

தோழர் ராஜா

இந்த கருத்தரங்கிற்கு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் சென்னை செயலர் தோழர் ராஜா தலைமையேற்றார்.

அவரைத் தொடர்ந்து இளைஞர் இயக்கத்தின் நிறுவனர் டாக்டர் எழிலன், தனது உரையில் “எனது துறையிலிருந்தே ஆரம்பிக்கிறேன். நான் படிக்க சேர்ந்த போது என்னுடன் இருந்த சக நண்பர் ஒருவர் திருப்பதிக்கு மொட்டை போட்டு இருந்தார். அதே போல மற்றொருவர் சபரிமலைக்கு மாலையணிந்து இருந்தார். முதல் தலைமுறை மருத்துவராக வந்திருப்பதால் கடவுளுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதாகக் கூறினர்,  இன்று நீயும், நானும் மருத்துவர்களாக இருக்கிறோம் என்றால் அதற்கு பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் அவர்கள் பெற்றுத்தந்த இடஒதுக்கீடு தான் காரணம். அவர்களை நாம் நினைவு கூற வேண்டும்.

டாக்டர் எழிலன்

இந்த தகவலைச் சொல்லக் காரணம் இன்று ஓரளவுக்கு கல்வி நிலையங்களில் சமூக நீதி உள்ளது. ஆனால் இவற்றை அழிக்கவே மோடி அரசானது நீட் தேர்வை அமல்படுத்தியுள்ளது. மாநிலஉரிமையில் இருந்து கல்வியை பிரிக்க நினைக்கிறது. இதனை நாம் வீழ்த்த வேண்டியுள்ளது.

இன்னொருபக்கம் சுதேசி என பேசிக்கொண்டே ஆர்.எஸ்.எஸ்- கும்பல் நாட்டை தனியாருக்கு விற்றுக் கொண்டிருக்கிறது. ஆக இதையெல்லாம் முறியடிக்க நாம் பெரியாரையும், அம்பேத்கரையும், சிவப்பையும் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. அதை இந்த போராளிகளின் நினைவு நாளில் நாம் தொடங்க வேண்டியுள்ளது.” என தனது உரையை முடித்தார்.

தோழர் ரமேஷ்

அவரைத் தொடர்ந்து அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் ( சென்னை – ஐ.ஐ.டி ) நிறுவன உறுப்பினர் தோழர் ரமேஷ். “ ஸ்மிருதி இரானி, மனிதவள அமைச்சராக இருந்த போது ஐ.ஐ.டிக்களில்  சமஸ்கிருதத்திற்கு தனித்துறையைக் கொண்டுவந்தார். அதற்கு அவர் கூறிய காரணங்கள் நகைக்கத்தக்கது. நமது நாட்டின் பாரம்பரிய அறிவுச் செல்வங்கள் சமஸ்கிருதத்தில் பொதிந்துள்ளனவாம். அதனைக் கண்டுபிடிக்க மாணவர்கள் சமஸ்கிருதம் தெரிந்து கொள்ள வேண்டுமாம். எவை அந்த அறிவுச் செல்வங்கள்? பிரம்மாஸ்திரம் – அணுகுண்டு, பிள்ளையார் – பிளாஸ்டிக் சர்ஜரி என நீள்கிறது பட்டியல். அது தவிர யோகாவிற்கு தனித்துறை. அதற்கு பாடத்திட்டம் உருவாக்க அமைக்கப்பட்ட குழுவில ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், ஜக்கி, பாபா ராம்தேவ் போன்ற தற்குறிகளே உறுப்பினர்கள், இதெல்லாம் மக்கள் வரிப்பணத்தில் செய்யப்படுகின்றன.

நாட்டின் பிரதமரும் இதையே அறிவியல் மாநாட்டில் பேசுகிறார். இப்படி இவர்கள் ஏன் கல்வியை காவிமயமாக்க நினைக்கின்றார்கள். ஏனெனில் ஒருபக்கம் பார்ப்பன மேலாண்மையை உறுதிப்படுத்துவது, மற்றொன்று ஏகாதிபத்தியங்களுக்கு சேவை செய்வது. இவை இரண்டுக்குமே எதிரி தான் பகத்சிங். ஆகவே அவரது நினைவு நாளில் இரண்டையும் வீழ்த்த உறுதி ஏற்போம்.” எனப் பேசினார்.

அதன் பின்னர் பேசிய புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில இணைச் செயலர் தோழர் ம.சி. சுதேஷ்குமார் “ பகத்சிங் நாட்டின் அனைத்து பிரிவு உழைக்கும் மக்களுக்காகவும் தொழிலாளிகளின் உரிமைகள் பறிக்கப்படுவதற்கெதிராகவும் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடினார்.

தோழர் ம.சி. சுதேஷ்குமார்

ஆனால் இன்றும் தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்படுகிறது. அன்றாடம் தொழிலாளிகள் செத்துக் கொண்டிருக்கின்றனர். இன்னொருபக்கம் நாட்டையே இந்த காவிக்கும்பல் கபளீகரம் செய்து வருகிறது. நம்முன் இந்த இரட்டை அபாயங்கள் உள்ளது, இந்த கொடுமைகளுக்கு முடிவுகட்ட நாம் பகத்சிங்கின் வாரிசுகளாக மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையுடன் களத்தில் நிற்க வேண்டியுள்ளது.” என தனது உரையில் குறிப்பிட்டார்.

அவரைத் தொடர்ந்து மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழர் துரை. சண்முகம் அவரது உரையில் இன்று ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி பகத்சிங்கின் நினைவு நாள். பகத்சிங் என்ற ஒற்றைச் சொல்லானது அவரை மட்டும் குறிப்பிடவில்லை. மாறாக தன்னுள்ளே சுகதேவையும், ராஜகுருவையும், பட்டுகேஷ்வர் தத்தையும், யஷ்பாலையும், சிவவர்மாவையும், ஆசாத்தையும் இன்னும் எண்ணற்ற தோழர்களின் தியாகத்தையும் ஒரு தலைமுறையையும் குறிக்கிறது. இன்று தியாகம் என்பதையும் கூட நாம் பிரித்துப் பார்க்க வேண்டியுள்ளது. அந்த வார்த்தைக்கூட யார் வாயிலிருந்து வருகிறது என்பதை பகுத்தாய்வுக்குட்படுத்த வேண்டியுள்ளது.

நமது தோழர்கள் இந்த கருத்தரங்கப் பிரச்சாரத்திற்கு ரயிலில் சென்றிருந்த போது ஒரு வடமாநில இளைஞருக்கு தமிழ் புரியவில்லை. இருந்தாலும் படத்தைப் பார்த்து பகத்சிங் என்று கூறுகிறார். சுகதேவ், ராஜகுரு படங்களைக் காட்டி அவர்களது பெயரைக் கோட்கிறார் தனது சைகைளால் கேட்க முற்படுகிறார். அவரிடம் நமது தோழர்களும்  அந்த வார்த்தையற்ற மொழியினை புரிந்து கொண்டு பெயர்களைச் சொல்கின்றனர். அந்த வடமாநில இளைஞர் ஓ…அச்சா எனக்கூறி தனது சட்டைபையில் வியர்வையில் நனைந்திருந்த 10 ரூபாய் நோட்டை உண்டியலில் போடுகிறார்.

தோழர் துரை. சண்முகம்

ஆனால் இன்று காலை செய்தித் தாள்களில் பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு படங்களைப் போட்டு மகத்தான தியாகிகள் கண்ட கனவு இந்தியாவை உருவாக்கும் சபதமேற்போம் என தனது பற்பசைக்கும், சோப்புக்கும் விளம்பரம் செய்கிறான்.

ஆக பகத் சிங்கின் தியாகம் இவர்களில் யாருக்கானது அந்த தொழிலாளி இளைஞனுக்காகவா. இல்லை பாபா ராம்தேவுக்கானதா ? அதனால் தான் பொதுவாக தியாகம், தியாகி என்பதைவிட அதை எதற்காகச் சொல்கிறார்கள் யார் சொல்கிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டியுள்ளது. ஒரு மனிதன் தன் கடமையைச் செய்தானா இல்லையா என்பதில் இருந்து தான் அவனை மதிப்பிட வேண்டும் என தந்தை பெரியார் பகத்சிங்கின் தியாகத்தைப் பற்றி எழுதியுள்ளார்.

இன்று நாமும் கூட நம் முன் உள்ள கடமைகளைச் செய்கிறோமா என்பதில் இருந்து தான் பார்க்க வேண்டியுள்ளது. அறிவு என்பது பிறர் துன்பம் அறிதல் என்கிறார் வள்ளுவர். நாமும் பிறர் துன்பம் அறிந்து நம் கடமையைச் செய்ய வேண்டியுள்ளது. அதற்காக உழைக்க வேண்டியுள்ளது.

நம் முன் உள்ள கடமை இந்த நாட்டை விழுங்கவரும் காவிபயங்கரவாதத்தை வீழ்த்த வேண்டியது தான். அதைச் செய்யும் போது தான் நாமும் பகத்சிங்கின் வாரிசுகள்.” என பேசியமர்ந்தார்.

கூட்டத்தில் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோர் தூக்கிலிடப்பட்ட இரவு 7:35 மணியில் அவர்களுக்கு சிவப்பஞ்சலி செலுத்தப்பட்டது.

அதன் பின்னர் டெல்லி பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் சம்சுல் இஸ்லாம் ஆங்கிலத்தில் தனது உரையைத் தொடங்கினார். அதனை பு.ஜ.தொ.மு-வின் மாநிலப் பொருளாளர் தோழர் விஜயகுமார் மொழிபெயர்த்து வழங்கினார்.

தமிழகம் முதல் கம்யூனிஸ்ட்டை பெற்றெடுத்த பெருமையைக் கொண்ட மாநிலம். சமூகநீதி இயக்கங்களையும், சமூக நீதிக்காக போராடிய பெரியார் போன்ற பல்வேறு போராளிகளையும் பெற்றெடுத்தது தமிழகம். தோழர் பகத்சிங் ஒரு தனி நபர் அல்ல. அவர் புரட்சிகர அரசியலின் அடையாளம். அவர் சுகதேவ், ராஜகுரு, ஆசாத், அஷ்ஃபகுல்லா கான், ஆகிய புரட்சியாளர்களின் உள்ளடக்கம்.

பகத்சிங் மற்றும் அவரது தோழர்களின், ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபப்ளிக்கன் அசோசியேசன் அமைப்பு,  வெள்ளைக்காரனின் கைகளில் இருந்து அதிகாரம் பறிக்கப்பட்டு, இங்கிருக்கும் விவசாயிகள், தொழிலாளர்கள், உழைக்கும் மக்கள், பெண்கள், தலித்துகள் ஆகியோர் கையில் அதிகாரம் வேண்டும் எனப் பிரகடனம் செய்தது.

பகத் சிங் சிறையில் இருக்கும் போது அவர் தூக்கில் போடப்படுவதற்கு சரியாக ஒரு மாதத்திற்கு முன்பும், லாகூரில் நடைபெற்ற இளம் அரசியல் ஊழியர்களின் மாநாட்டிற்கு ஒரு கடிதம் எழுதினார். தாம் தூக்கிலிடப்படுவதற்கு முந்தைய கடைசி நொடி வரை புரட்சிகர அரசியலில் ஈடுபட்டிருந்தார்.

பகத் சிங்கும் அவரது தோழர்களும் புரட்சியில் ஈடுபட்டு சிறையும் தூக்கும் அனுபவிக்கும் போது அவரது வயது வெறும் 21 முதல் 30க்குள் தான்.

பேராசிரியர் சம்சுல் இஸ்லாம்

பகத்சிங் சிறையில் இருக்கும் போது சுமார் 20 முறை கடிதம் எழுதியுள்ளார்.  அனைத்துக் கடிதங்களும் தாம் படிப்பதற்கு புத்தகங்கள் கேட்டு எழுதப்பட்ட கடிதங்களே.

சாவர்க்கரும் தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 50 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டு அந்தமான் சிறைக்கு அனுப்பப்பட்ட சாவர்க்கர் தனது சிறை வாழ்க்கையில் 5 முறை கடிதங்கள் எழுதியுள்ளார்.  அவை அனைத்தும் மன்னிப்புக் கடிதங்களே. பிரிட்டிஷ் தாயிடம் தம்மைத் தனையனாகக் கருதி  மன்னிக்குமாறு மன்றாடிக் கேட்டுக் கொண்டார். அதன் காரணமாக வெறும் 10 ஆண்டுகளில் சிறையில் இருந்து விடுதலை பெற்று வெளியே வந்தார்.

பகத்சிங்கின் முன் சாவர்க்கர் கால் தூசி பெறுவாரா ?. இவருக்குப் பெயர் ‘வீர்’ சாவர்க்கர் என்று ஆர்.எஸ்.எஸ். கும்பல் கூறுகிறது. ஆர்.எஸ்.எஸ் தலைவரான ஹெக்டேவார் 1921இல் நடைபெற்ற கிலாபட் இயக்கத்தில் பங்கேற்று சிறை சென்று ஒராண்டு இருந்தார். வெளியே வரும்போது 25 பவுண்டுகள் அதிகரித்து விட்டது மேலும் அவர் ஜெயிலரோடு நட்பாக இருந்த்தாக அவரது சுயசரிதை கூறுகிறது.

பாஜக ஆர்.எஸ்.எஸ். கும்பல்,  பெண்கள் மற்றும் தலித்துகளுக்கு எதிரானவர்கள். பகத்சிங், மதத் துவேசத்தையும், சாதிய ஒடுக்குமுறையையும் எதிர்த்தவர். அவர் இப்போது இருந்திருந்தால், இந்த இந்துத்துவக் கும்பலுக்கு எதிராகப் போராடியிருப்பார். ஆர்.எஸ்.எஸ். கும்பல் அவர் தலையை எடுத்திருக்கும்.

பகத் சிங்கும் அவரது தோழர்களும் ஏகாதிபத்திய, பார்ப்பனிய எதிர்ப்புப் போராளிகளே. அவர்கள் வழியில் பார்ப்பனியத்தையும், ஏகாதிபத்தியத்தையும் நாமும் எதிர்க்க வேண்டும் ” என்று கூறி தமது உரையை முடித்தார்.

அதன் பிறகு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் தோழர் கணேசன் உரையாற்றினார். அதில் அவர் டெல்லியில் இருந்து வந்து கூட்டத்தில் கலந்து கொண்டு பகத்சிங் இன்று இருந்திருந்தால் என்ன சொல்லியிருப்பார் எனும் வகையில் நம்மத்தியில் உரையாற்றிச் சென்ற தோழர் சம்சுல் இஸ்லாமிற்க்கு நன்றி தெரிவித்து தனது உரையை இறுதி செய்தார்.

இறுதியாக பாட்டாளிவர்க்க சர்வதேசிய கீதத்துடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

ஓவியக் கண்காட்சியில் இடம் பெற்ற ஓவியங்கள்

கருத்தரங்க படங்கள்

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

-வினவு செய்தியாளர்

சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு : செத்த பாம்பை அடித்த வீரம் !

3

“மை லார்ட்” என்று நீதிபதிகளைப் பார்த்துச் சொல்வதில் அர்த்தமுள்ளது. பொதுவாழ்வில் நேர்மையற்ற நடைமுறை மற்றும் இலஞ்ச ஊழலில் ஈடுபடுவோர் அனைவருக்கும் எச்சரிக்கையாக இத்தீர்ப்பு அமைந்துள்ளது.  அரசியல்வாதிகளாக இருக்கக்கூடியவர்கள் பொதுவாழ்வில் எப்படித் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதை எடுத்துக்காட்டக்கூடியதாகவும், வரலாற்றுச் சிறப்புக்குரிய வகையிலும் இந்தத் தீர்ப்பு அமைந்திருக்கிறது.  ஊழல் அரசியல்வாதிகளுக்கும் ஆட்சியாளர்களைப் புற்றீசல் போலச் சூழ்ந்திருந்து அவர்களைச் சீரழிக்கும் நிழல் அதிகார மையங்களுக்கும் விடுவிக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை என்றே இந்தத் தீர்ப்பைக் கருத வேண்டும்.

வையெல்லாம் சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதி மன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் அளித்த தீர்ப்பு குறித்து தமிழக ஊடகங்களும் தமிழக எதிர்க்கட்சி தலைவர்களும் சிலாகித்துச் சூட்டியிருக்கும் புகழாரங்கள். இந்தத் தீர்ப்பின் இணைப்பாக நீதிபதி அமிதவராய் ஊழல் குறித்தும் அதனை எதிர்க்க வேண்டிய அவசியம் குறித்தும் கூறியிருக்கும் தத்துவ ஞானபோதனைகளை எடுத்துப் போட்டு, ஊழலுக்கு எதிராக உச்சநீதி மன்றம் வெட்டரிவாளைத் தூக்கிவிட்டதாகவும், அதனால் ஊழலில் ஈடுபடும் அரசியல்வாதிகளும் அதிகாரவர்க்கமும் அஞ்சி நடுங்குவதாகவும் ஊடகங்கள் சித்தரிக்கின்றன.

அந்நியன், இந்தியன் பட ரசிகர்கள் வேண்டுமானால் இத்தீர்ப்புக்கு மயங்கலாம். அரசியல்வாதிகள், அதிகார வர்க்கத்துக்கு இந்த வழக்கில் நீதிமன்றங்கள் நடந்துகொண்ட விதம் வேறொரு நம்பிக்கையை அளித்திருக்கிறது. “ஊழல் வழக்கை எப்படியெல்லாம் இழுத்தடிக்கலாம், அதற்குச் சட்டத்தையும் நீதிமன்றத்தையும் நீதிபதிகளையும் எப்படியெல்லாம் வளைத்துப் போட்டுக் கொள்ளலாம் என்பதை எடுத்துக்காட்டி, பொதுச் சொத்தைக் கொள்ளையடிக்க அஞ்சத் தேவையில்லை” என அவர்களுக்கு உணர்த்தியிருக்கிறது இந்த வழக்கு.

“புற்றுநோயைவிட மோசமானது ஊழல். இதை நீதிமன்றத்தின் தீர்ப்புகள் மூலம்தான் ஒழிக்கமுடியும்” எனத் தீர்ப்பில் அருள்வாக்கு சொல்லியிருக்கிறார், நீதிபதி அமிதவராய். இந்தியாவே கவனித்துவந்த இந்த புற்றுநோய்க் கட்டியை ஒழிப்பதற்கே 21 ஆண்டுகள் ஆகியிருக்கிறது என்றால், சமூகம் முழுவதுமே வேர்விட்டிருக்கும் ஊழலை நீதிமன்றங்கள் மூலம் ஒழிப்பதற்கு எத்தனை ஆண்டு காலம் ஆகும்? அதுவரை, “என்றாவது ஒருநாள் நீதி நிச்சயம் கிடைக்கும்” என்ற நம்பிக்கையில் மக்கள் அனைவரும் கையைக் கட்டிக்கொண்டு, நடப்பதை வேடிக்கை பார்க்க வேண்டும் போலும்!

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பை உறுதி செய்த உச்சநீதி மன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ் (இடது) மற்றும் அமிதவராய்.

“இந்தத் தீர்ப்பின் ஆவணங்கள் பருமனாக உள்ளன. இந்தப் பாரத்தை நாங்கள் எடுத்துக் கொண்டோம்” என்று இலக்கியமாய் நெகிழ்ந்திருக்கிறார் நீதிபதி அமிதவராய். பாரம் பெருத்துப் போனதற்கு இந்த வழக்கு 21 ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்டது முக்கிய காரணமில்லையா? அந்தப் பாவத்தில் நீதிமன்றங்களுக்குப் பங்கில்லையா? இந்தக் குற்றக்கும்பலின் பாரத்தைத் தமிழக மக்கள் இத்தனை ஆண்டுகள் சுமக்கக் காரணமே நீதித்துறைதான். இந்த 21 ஆண்டுகளில் உச்சநீதி மன்றமே எத்தனை முறை ஜெயாவைக் கைதூக்கிவிட்டிருக்கிறது?

ஒரு கிரிமினல் வழக்கை எப்படியெல்லாம் இழுத்தடிக்கலாம் என்பதற்கு ஜெயாவின் வழக்கைச் சட்ட மாணவர்களுக்குப் பாடமாகவே வைக்கலாம் என்று பலரும் எழுதியிருக்கிறார்கள். அது, ஜெயாவின் சாதனை மட்டுமேயல்ல.

விசாரணை நீதிமன்றங்கள் முதல் சென்னை, பெங்களூரு உயர் நீதி மன்றங்களும் உச்சநீதி மன்றமும் எப்படியாவது ஜெயாவைக் காப்பாற்றுவதற்காக நடத்திய தகிடுதத்தங்களைப் பட்டியல் போட்டால், அது வழக்கறிஞர்களுக்கே பெரிய “பாரமாக” இருக்கும் என்பதால், உச்ச நீதிமன்றம் இவ்வழக்கில் ஆற்றிய பாத்திரத்தை நினைவூட்ட சிலவற்றை மட்டும் சுருக்கமாகத் தந்திருக்கிறோம்.

வழக்கை இழுத்தடித்ததில் உச்சநீதி மன்றத்தின் பங்கு !

சொத்துக் குவிப்பு வழக்கை 2003-ஆம் ஆண்டின் இறுதியில் தமிழகத்திலிருந்து கர்நாடகாவிற்கு மாற்றிய உச்சநீதி மன்றம், இந்த வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என அந்தத் தீர்ப்பில் உத்தரவிட்டது. மேலும், எம்.எல்.ஏ., எம்.பி.க்களுக்கு எதிரான ஊழல் வழக்குகளை ஒரு வருடத்திற்குள் முடித்துவிட வேண்டும் என்று பிறிதொரு வழக்கில் உச்சநீதி மன்றம் ஆணையிட்டிருக்கிறது. ஆனால், ஜெயாவிற்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் தனது ஆணைகளை உச்சநீதி மன்றமே காற்றில் பறக்கவிட்டது.

சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையை முடக்க, இலண்டன் ஹோட்டல் வழக்கையும் இதனுடன் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று மனுச் செய்து, சாதகமான தீர்ப்பை பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் பெற்றார் ஜெயா. இதனை எதிர்த்து தி.மு.க. பொதுச் செயலர் அன்பழகன் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார். உச்சநீதி மன்றம் அது குறித்து விசாரித்து உடனே தீர்ப்பு வழங்காமல், சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிப்பதற்கே இடைக்காலத் தடை விதித்தது. இந்த இடைக்காலத் தடை காரணமாக நான்கு ஆண்டுகள் வழக்கு விசாரணை முற்றிலுமாக முடக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றமே பொறுப்பு. இது உச்ச நீதிமன்றம் ஜெயாவுக்குச் செய்த மிகப்பெரிய சேவை.

தற்போதைய தீர்ப்பையே எடுத்துக் கொள்ளுங்கள். ஜெயலலிதாவை விடுவித்த குமாரசாமியின் தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கு விசாரணை உச்சநீதி மன்றத்தில் ஜூன் 2016-இல் முடிந்து விட்டது. பிப், 2017 -இல் ஜெயா இறந்த பிறகு, அரசு வழக்குரைஞர் துஷ்யந்த் தவே நினைவூட்டிய பிறகு, சசிகலா முதலமைச்சர் நாற்காலியில் உட்கார முயற்சி செய்துகொண்டிருந்த வேளையில்தான் தீர்ப்பை எழுதிக் கொண்டிருப்பதாகக் கூறினார்கள், நீதிபதிகள்.

குன்ஹாவின் தீர்ப்பை உறுதி செய்திருப்பதற்கு மேல் இவ்வழக்கில் புதிய வெளிச்சம் எதையும் இந்தத் தீர்ப்பு பாய்ச்சவில்லை. தண்டனையைக் கூட்டவில்லை. குமாரசாமியின் முறைகேடான தீர்ப்புக்குக் கடுமையான கண்டனங்களும் இல்லை. ஜெயா மரணமடைந்துவிட்டதால், அவருக்கு எதிரான மேல்முறையீடு மட்டும் தணிக்கப்படுகிறது (abated) எனக் கூறுகிறது இத்தீர்ப்பு. தணிந்து விட்டது என்று கூறியிருப்பதனால் நூறு கோடி அபராதத்தைக் கட்டத் தேவையில்லை என்றும் ஒரு வாதம் கிளப்பப்படுகிறது. இதற்கு ஏன் இந்தத் தாமதம் என்று கேள்வி எழுப்பினாலே, கேட்பவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ஏவுவார்கள் நீதிபதிகள்.

உச்சநீதி மன்றம் ஜெயாவிற்கு வழங்கிய சலுகைகள் !

2001-இல் இந்த வழக்கு சென்னையில் நடந்தபோது, சிறப்பு நீதிமன்றத்திற்கு வந்து கேள்விகளுக்குப் பதில் அளிக்குமாறு ஜெயாவிற்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது. “தனக்குத் தொண்டை கட்டியிருப்பதால் நீதிமன்றத்திற்கு வந்து பதில் அளிக்க முடியாது” என அலட்சியமாக மறுத்தார், ஜெயா. நீதிமன்ற பெஞ்ச் கிளார்க் கேள்விகளோடு போயசு தோட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இப்படிப்பட்ட சலுகையை ஜெயாவைத் தவிர, இந்தியாவில் வேறெந்த கிரிமினலுக்கும் நீதிமன்றம் வழங்கியதாகத் தெரியவில்லை.

ஜெயாவின் திமிர் குன்ஹாவிடம் செல்லுபடியாகவில்லை. நேரில் ஆஜராகி கேள்விகளுக்குப் பதிலளிக்குமாறு அவர் ஆணையிட்டார். கோயில் கோயிலாகப் போவதற்கு நேரம் இருக்கிறது, நீதிமன்றத்துக்கு வர நேரமில்லையா என்று கேட்டார் அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா. உடனே உச்ச நீதிமன்றம் போனார் ஜெயா. “உங்களுக்கு எந்த தேதி வசதிப்படுமோ, அந்தத் தேதியில் நீதிமன்றத்திற்குச் சென்று பதில் அளியுங்கள்” என ஜெயாவிற்குச் சலுகை காட்டியது உச்சநீதி மன்றம்.

அரசு வழக்குரைஞர் பி.வி.ஆச்சார்யாவிற்கு நெருக்கடிக்கு மேல் நெருக்கடி கொடுத்து, அவரைப் பதவி விலக வைத்த ஜெயா-சசி கும்பல், கர்நாடக பா.ஜ.க. அரசைப் பயன்படுத்தி அவரது இடத்தில் பவானி சிங்கை நியமித்துக் கொண்டது. பவானி சிங்கும், அச்சமயத்தில் சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக இருந்த பாலகிருஷ்ணாவும் கூட்டுச் சேர்ந்து, ஜெயா-சசி கும்பலுக்குச் சாதகமாக வழக்கை நடத்திச் சென்றனர்.

பவானி சிங்கின் நியமனமே முறைகேடாகச் செய்யப்பட்டிருப்பதை எடுத்துக்காட்டிய தி.மு.க., அவருடைய நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என கர்நாடகா உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தது. அவ்வுயர் நீதிமன்ற நீதிபதி வகேலா பவானி சிங் நியமனத்தை ரத்து செய்தார்.

“பவானி சிங்தான் அரசு வழக்குரைஞராகத் தொடர வேண்டும், நீதிபதி பாலகிருஷ்ணாதான் வழக்கை விசாரிக்க வேண்டும்” என்று கோரி உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தார் ஜெயலலிதா. “இந்த ஏட்டய்யாவோடுதான் போவேன்” என்ற வடிவேலு காமெடியை விஞ்சிய கேலிக்கூத்து இது. தனக்கு எதிராக இந்த அரசு வக்கீல்தான் வழக்கு நடத்த வேண்டும், இந்த நீதிபதிதான் விசாரிக்க வேண்டும் என்று ஒரு குற்றவாளி கோரிக்கை வைத்த முதல் வழக்கும் இந்தியாவிலேயே இதுவாகத்தான் இருக்கும்.

இவ்வழக்கை விசாரித்த சௌஹான்-பாப்டே அமர்வு, குற்றவாளிகள் எதைக் கோரினார்களோ அதையே உத்தரவாகப் பிறப்பித்தார்கள். பவானி சிங் நியமனம் முறைகேடானது என்பது நிரூபணமான பிறகும், “புதிய வழக்குரைஞரை நியமித்தால், வழக்கு விசாரணை தாமதப்படும்” என்று கூறி பவானி சிங் தொடருவதற்கு அனுமதி அளித்ததுடன், நீதிபதி பாலகிருஷ்ணாவிற்கு, வழக்கு விசாரணை முடியும் வரை பதவி நீட்டிப்பு வழங்குமாறும் கர்நாடக அரசுக்கு சிபாரிசு செய்து, கூடுதலாகக் கூவினார்கள்.

ஜெயாவின் தரகராக தலைமை நீதிபதி தத்து !

நீதிபதி குன்ஹாவால் ஜெயா-சசி கும்பல் தண்டிக்கப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்ட மறுநிமிடமே, தீர்ப்பை நிறுத்தி வைத்து பிணை வழங்கக் கோரி, கர்நாடகா உயர்நீதி மன்றத்தில் முறையீடு செய்தனர். “குற்றவாளிகளுக்கு தற்பொழுது பிணை அளிக்க வேண்டிய அவசியமில்லை” என்பதைப் பல்வேறு சட்டங்கள், நீதிமன்றத் தீர்ப்புகளைச் சுட்டிக்காட்டி மறுத்தார், கர்நாடகா உயர்நீதி மன்ற நீதிபதி சந்திரசேகரா.

சிறப்பு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஜெயா−சசி கும்பலுக்குப் பிணை வழங்க மறுத்த கர்நாடக உயர்நீதி மன்ற நீதிபதி சந்திரசேகரா.

இத்தீர்ப்பை எதிர்த்து ஜெயா-சசி கும்பல் உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை, அப்பொழுது உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதியாக இருந்த தத்து தலைமையிலான அமர்வு விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. ஜெயாவுக்கு பிணை மறுத்த சந்திரசேகரா, ஊழல் குற்றவாளிகளுக்குப் பிணை வழங்குவது குறித்து உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே வழங்கியிருக்கும் வழிகாட்டுதல்களை விரிவாக எடுத்துக்காட்டியிருந்தார். ஆனால் தத்துவோ, அவை குறித்து எந்த விளக்கமும் அளிக்காமல், தடாலடியாக ஜெயாவுக்குப் பிணை வழங்கினார்.

இந்த தீர்ப்பு ஒரு அப்பட்டமான முறைகேடு என்று எல்லோருக்கும் தெரிந்து விடும் என்பதால், அதை மறைக்கும் விதத்திலும், ஜெயலலிதாவுக்கு இன்னொரு சலுகை வழங்கும் விதத்திலும் கூடுதலாக ஒரு பித்தலாட்டமும் செய்தார் தத்து.

தத்து பிணை வழங்கிவிட்ட போதிலும், உயர்நீதி மன்றம் நிரபராதி என்று தீர்ப்பளிக்காத வரை, ஜெயாவால் மீண்டும் முதல்வராக முடியாது என்ற நிலையே இருந்தது. ஜெயா மீண்டும் முதல்வர் நாற்காலியில் அமர்வதற்கு ஏற்பாடு செய்து தரும் விதத்தில், மேல்முறையீட்டின் விசாரணையை மூன்றே மாதங்களில் முடிக்க வேண்டுமென்றும், இழுத்தடிக்க அனுமதிக்க முடியாது என்றும், மூன்று மாதங்களுக்கு மேல் ஒரு நாள் கூடப் பிணையை நீட்டிக்க முடியாது என்றும் ரொம்பவும் கண்டிப்பான பேர்வழி போலத் தீர்ப்பில் குறிப்பிட்டார் தத்து. இதைவிடத் தரம் தாழ்ந்த ஒரு மோசடி நாடகத்தை உச்சநீதி மன்றம் கண்டிருக்காது என்றே சொல்ல வேண்டும்.

இந்தப் பிணை மனு விசாரிக்கப்படுவதற்கு முன்னரே, டிராபிக் ராமசாமி தத்துவிடம் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் ஆயிரம் கோடி ரூபாய் உங்களுக்கு இலஞ்சம் கொடுக்கப்பட்டிருப்பதாக ஒரு குற்றச்சாட்டு பரவலாக கூறப்படுகிறது என்று அதில் குறிப்பிட்டிருந்தார். இத்தகைய குற்றச்சாட்டுகள் வரும்போது, சம்மந்தப்பட்ட நீதிபதிகள் அந்த வழக்கு விசாரணையிலிருந்து விலகிக் கொள்வதுதான் பொதுவாக கடைப்பிடிக்கப்படும் மரபு. ஆனால் தத்துவோ, “அதையெல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று அந்தப் புகாரையே அலட்சியப்படுத்தினார்.

இந்தப் பிணை வழக்கில் ஜெயாவின் சார்பாக வழக்கறிஞர் பாலி நாரிமன் வாதாடினார். அவரது மகன் ரோஹிண்டன் நாரிமன் உச்சநீதி மன்ற நீதிபதியாகப் பணியாற்றுவதால், பாலி நாரிமன் அவ்வழக்கில் வாதாடுவது பார் கவுன்சில் வகுத்துள்ள நெறிகளுக்கு எதிரானது என்று டிராபிக் ராமசாமி புகார் செய்த போதிலும், அந்த முறைகேட்டையும் அனுமதித்தார் தத்து.

குமாரசாமி மட்டுமா எட்டப்பன்?

ஜெயாவை விடுதலை செய்ய “நாலும் மூணும் எட்டு” என்று கர்நாடக உயர்நீதி மன்ற நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பு, சிரிப்பாய் சிரித்த தீர்ப்பு என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஆனால், அந்த வழக்கை குமாரசாமியை வைத்து விசாரித்து, ஜெயாவுக்கு விடுதலை பெற்றுத்தர வேண்டும் என்ற திட்டத்தோடு உச்சநீதி மன்றத்தின் துணையுடன், கர்நாடகா உயர்நீதி மன்றத்தில் அரங்கேறிய முறைகேடுகளை எல்லோரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

ஜெயாவின் கைக்கூலியாகச் செயல்பட்ட அரசு வழக்குரைஞர் பவானி சிங் (இடது); சிறப்பு நீதிமன்றத்திற்கு பவானி சிங் நியமிக்கப்பட்டது முறைகேடானது எனத் தீர்ப்பளித்த கர்நாடக உயர்நீதி மன்ற நீதிபதி வகேலா.

குன்ஹா தீர்ப்பு வழங்கியதோடு, பவானி சிங்கின் பணி முடிந்து விட்டதெனினும், ஜெயலலிதாவின் பிணை மனுவையும் மேல் முறையீட்டையும் எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வாதாடுவதற்கும் பவானி சிங்கையே நியமித்து உத்தரவு பிறப்பித்தது பன்னீரை பினாமி முதல்வராக கொண்ட ஜெயா அரசு. கர்நாடக அரசால் நடத்தப்பட்ட இந்த வழக்கில் அரசு வழக்கறிஞரை நியமிக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு கிடையாது என்ற போதிலும், வேண்டுமென்றே இந்த முறைகேட்டைச் செய்தது தமிழக அரசு.

பவானி சிங் நியமனத்தை ரத்து செய்யக் கோரி கர்நாடகா உயர்நீதி மன்றத்தில் ஐந்து முறை அடுத்தடுத்து வழக்குகளைத் தொடுத்தார், அன்பழகன். இவ்வழக்குகளை மாறி மாறி விசாரித்த கர்நாடகா உயர்நீதி மன்ற நீதிபதிகளுள் வகேலா என்பவரைத் தவிர, மற்ற நீதிபதிகள் பவானி சிங் நியமனத்தை ரத்து செய்ய மறுத்துவிட்டனர்.

நீதிபதி வகேலா பவானி சிங் நியமனத்தை ரத்து செய்துவிடுவார் என்ற நிலையில் “என்னுடைய நியமனத்துக்கு எதிராக நீங்கள் ஏற்கெனவே தீர்ப்பளித்தவர் என்பதால், உங்கள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை” என்று பவானி சிங்கை வைத்து வாதாடியது ஜெயா கும்பல். வகேலா வழக்கை விசாரிப்பதிலிருந்து விலகிக்கொண்டார். மேல்முறையீட்டு வழக்கை மூன்று மாதங்களுக்குள் முடிக்க வேண்டுமென்று தத்து போட்டிருக்கும் உத்தரவைக் காட்டி, பவானி சிங்கே அரசு வழக்கறிஞராகத் தொடருவதை அனுமதித்துத் தீர்ப்பளித்தது, கர்நாடகா உயர்நீதி மன்றம்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து அன்பழகன் உச்சநீதி மன்றம் சென்றார். வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகளுள் ஒருவரான மதன் லோகூர், பவானி சிங்கின் முறைகேடான நியமனத்தை ரத்து செய்ததோடு, மேல் முறையீட்டு வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார். மற்றொரு நீதிபதியான பானுமதி, ஜெயலலிதாவை அரசு விழா மேடையிலேயே புரட்சித்தலைவி என்று துதிபாடியவர். இவர் பவானி சிங்கின் நியமனத்திற்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயாவின் தரகனாகச் செயல்பட்ட உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி தத்து (இடது); சிறப்பு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஜெயாவைத் தப்புக் கணக்கின் மூலம் விடுதலை செய்த கர்நாடக உயர்நீதி மன்ற நீதிபதி குமாரசாமி.

இந்த  முரண்பட்ட தீர்ப்பின் காரணமாக மூன்று நீதிபதிகள் அமர்வுக்கு சென்றது இவ்வழக்கு. “பவானி சிங்கின் நியமனம் முறைகேடானது, மேல்முறையீட்டு வழக்கை கர்நாடகா உயர்நீதி மன்றம் சட்டத்திற்குப் புறம்பாக அவசர அவசரமாக நடத்தி வருகிறது” என்பதை அந்த அமர்வு ஒப்புக்கொண்டாலும், வழக்கைத் தொடக்கத்திலிருந்து மீண்டும் விசாரிப்பதற்கு அனுமதி அளிக்க மறுத்துவிட்டது.

வழக்கு நீண்ட காலம் நிலுவையில் இருப்பதைக் காரணமாகக் கூறி, குமாரசாமி நடத்திய முறைகேடான விசாரணையை நியாயப்படுத்தியது. கர்நாடக அரசால் பவானி சிங்கிற்குப் பதிலாக அரசு வழக்குரைஞராக நியமிக்கப்பட்ட பி.வி. ஆச்சார்யாவும், அன்பழகனும் தமது எழுத்துப்பூர்வ வாதத்தை நீதிபதி குமாரசாமியிடம் தாக்கல் செய்யலாம் எனக் கூறி, தனது கட்டைப்பஞ்சாயத்து உத்தரவுக்கு சப்பை கட்டியது. உச்ச நீதிமன்றம் நிகழ்த்திய இத்தனை முறைகேடுகளுக்குப் பின் கடைசியாக வந்த முறைகேடுதான் நாலும் மூணும் எட்டு என்று கூறிய குமாரசாமியின் தீர்ப்பு.

பஞ்சுமிட்டாய் நீதி

குற்றவாளிகளான ஜெயா உள்ளிட்ட நால்வரும், இந்த வழக்கை இழுத்தடிப்பதற்காக ஏறத்தாழ 300 மனுக்களை அடுத்தடுத்து, ஒருவர் மாற்றி ஒருவர் மாற்றி போட்டிருக்கின்றனர். இந்த அளவுக்கு நீதிமன்றத்தைக் கேலிப்பொருளாக்கியவர்கள் யாரும் இல்லை. ஆனால் நீதிமன்றங்களோ, கைப்புள்ளை கணக்காக அவற்றையெல்லாம் துடைத்துப்போட்டுவிட்டு, இக்கட்டான தருணம் ஒவ்வொன்றிலும் ஜெயாவைக் காப்பாற்றி விட்டன. கீழிருந்து மேல் வரை சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்திக்கொண்டு நீதிமன்றங்கள் நடத்திய இந்த கள்ள ஆட்டத்தின் தீய விளைவுகளைத் தமிழக மக்கள் அனுபவிக்க நேர்ந்தது.

வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்த இந்த 21 ஆண்டுகளில், 2001, 2011, 2016 என மூன்று முறை குற்றவாளி ஜெயலலிதா முதலமைச்சர் ஆக முடிந்தது. சசிகலாவும், இளவரசியும் ‘துரைசாணிகளைப்’ போல, அதிகாரம் செலுத்த முடிந்தது. சிறை வாசமும், கொலை வழக்குகளும் தொழில்முறை கிரிமினல்களின் “அந்தஸ்தை” உயர்த்துவதைப் போல, இந்த ஊழல் வழக்கு ஜெயாவை, ஓட்டுப்பொறுக்கி கிரிமினல்கள் அனைவரும் கண்டு வியக்கும் “சொர்ணாக்கா” ஆக்கியது.

வழக்கிற்கு முன்னால் ஜெயா-சசி கும்பல் அடித்த கொள்ளையைக் காட்டிலும் அதற்குப் பின்னர் அடித்த கொள்ளை பன்மடங்காகப் பெருகியது. தானே நேரடியாகக் கொள்ளையடித்தது மட்டுமின்றி, மொத்த அ.தி.மு.க. கட்சியையும் அரசு எந்திரத்தையுமே ஒரு கொள்ளைக்கூட்டமாக ஒழுங்கமைத்து வெளிப்படையாகவே திருடியதும் இந்த இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட வளர்ச்சிதான். மொத்தத்தில் ஊழலுக்கு எதிராக நீதிமன்றம் செல்ல நினைப்பதே முட்டாள்தனம் என்ற அனுபவத்தைத்தான் இந்த வழக்கு சமூகத்துக்கு வழங்கியிருக்கிறது.

இந்த வழக்கின் முதல் குற்றவாளியான ஜெயா, குன்ஹா தீர்ப்புக்குப்பின் வெறும் 21 நாட்கள்தான் சிறைவாசத்தை அனுபவித்தார். தற்பொழுது பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவோ, சிறையிலிருந்தபடியே தனது கூட்டத்தை இயக்கும் மாஃபியாத் தலைவனைப் போலத் தமிழக அரசை இயக்குகிறார். இவையனைத்தும் இந்த வழக்கில் நீதி வென்றிருப்பதையா காட்டுகின்றன?

சொத்துக் குவிப்பு வழக்கில் கண்ணுக்குத் தெரிவது நான்கு குற்றவாளிகள்தான். இவர்கள் தவிர, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், பத்திரப் பதிவு அதிகாரிகள், பொதுத்துறை வங்கி அதிகாரிகள் என ஒரு பெரும் அதிகார வர்க்கமே இந்தக் குற்றத்தின் பங்குதாரர்களாக இருந்துள்ளனர். மேலும், தத்து, சௌஹான், பாப்டே, செல்லமேஸ்வர், குமாரசாமி, அருணா ஜெகதீசன், பானுமதி என்றொரு நீதிபதிகளின் கூட்டமே, ஜெயாவிற்கு விசுவாசமாக நடந்துகொண்டிருப்பதை இவ்வழக்கு நெடுகிலும் காண முடியும். குற்றத்தின் பங்குதாரர்களாக இருந்த இவர்கள் அனைவருமே, இப்பொழுதும் நம்மைச் சுற்றி யோக்கியவான்களைப் போல நடமாடிக் கொண்டிருக்கின்றனர்.

சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையின்போது, ஜெயாவிற்குச் சாதகமான தீர்ப்புகளை வழங்கிய உச்சநீதி நீதிபதிகள் சௌஹான் (இடது) மற்றும் பானுமதி.

இன்று சசிகலா கும்பல் சிறையில் இருக்கிறது என்றால், நிச்சயமாக அதற்கு உச்ச நீதிமன்றம் காரணமல்ல. கீழிருந்து மேல் வரை நீதித்துறையிலும், காங்கிரசு- பா.ஜ.க. கட்சிகளிலும், அதிகார வர்க்கத்திலும் நிறைந்திருந்த ஜெயலலிதாவின் ஆட்கள் இந்த வழக்கை ஒவ்வொரு படியிலும் முடக்கினார்கள். அதையெல்லாம் மீறி ஓட்டைகள் நிறைந்த இந்த சட்டத்தின் வழியாகவும் இப்படி ஒரு தீர்ப்பை வரவழைக்க முடிந்ததற்கு நான்கு பேரைக் காரணமாகச் சொல்லலாம்.

ஜெயா-சசி கும்பல் அடித்த கொள்ளையில் 66 கோடி என்பது ஒரு சிறு துளிதான். எனினும், தப்பிக்க முடியாத, ஓட்டைகள் இல்லாத, அசைக்க முடியாத சாட்சியங்களின் அடிப்படையிலான குற்றவியல் வழக்காக இதனைக் கட்டியமைத்த விசாரணை அதிகாரி நல்லம்ம நாயுடு,

ஜெயா-சசி கும்பல் மற்றும் கர்நாடக பா.ஜ.க. அரசின் மிரட்டல்களுக்கும் அவதூறுகளுக்கும் பணிந்து போகாமல் நேர்மையாகவும் ஈடுபாட்டுடனும் விசாரணையை நடத்திச் சென்ற அரசு வழக்குரைஞர் பி.வி. ஆச்சார்யா,

இந்த வழக்கில் ஒரு தரப்பாக இணைந்து கொண்டு, ஜெயாவைக் காப்பாற்ற முனைந்த நீதித்துறையின் கழுத்தில் துண்டைப் போட்டு முறுக்கி, ஒவ்வொரு கட்டத்திலும் இந்த வழக்கு செத்து விடாமல் காப்பாற்றி, குன்ஹாவிடம் கொண்டு சேர்த்த பேராசிரியர் அன்பழகன் மற்றும் தி.மு.க.வின் வழக்கறிஞர்கள்,

அசைக்கமுடியாத ஆதாரங்களோடு குற்றவியல் வழக்காகக் கட்டியமைத்த விசாரணை அதிகார நல்லம்மா நாயுடு (இடது); நேர்மையாக விசாரணையை நடத்திச்சென்ற அரசு வழக்குரைஞர் பி.வி.ஆச்சார்யா (நடுவில்); ஜெயாவின் அதிகார பலத்துக்குப் பணிந்துவிடாமல் இரும்புப் பின்னலாகத் தீர்ப்பை எழுதிய சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா.

ஜெயாவின் அதிகார பலத்தையும் ஆணவத்தையும் பார்ப்பனத் திமிரையும் எள்ளளவும் சட்டை செய்யாத, நீதிமன்ற அறைக்குள் மற்ற குற்றவாளிகள் எப்படி நடத்தப்படுவார்களோ அதே போன்று ஜெயலலிதாவையும் நடத்தும் துணிவினை இயல்பாகக் கொண்டிருந்த, உச்சநீதி மன்றத்தின் அறிவார்ந்த நீதிபதிகள் எத்தனை முயன்றாலும் அறுக்கவியலாத இரும்புப் பின்னலாகத் தீர்ப்பை எழுதும் திறமையும் கொண்டிருந்த நீதிபதி குன்ஹா.

இந்த நான்கு பேரைத் தவிர ஜெயாவின் தண்டனைக்கு காரணமான ஐந்தாவது நபரும் உண்டு. அது ஜெயா-சசி கும்பலேதான். அறிவும் சுயமரியாதையும் உள்ளவர்கள் அண்டத்தயங்கும் ஜெயாவின் அரசவை, அதில் நிறைந்திருந்த துதிபாடிகள், பாசிசக் கும்பலுக்கே உரிய திமிர், குறுக்குப் புத்தி ஆகியவை காரணமாக வழக்கினை முடிவே இல்லாமல் இழுத்து விடலாம் என்று தப்புக் கணக்குப் போட்டு, ஆச்சார்யாவிடமும், குன்ஹாவிடமும் வந்து சிக்கிக் கொண்டார்கள்.

இந்த தீர்ப்பு ஜெயா உயிருடன் இருந்திருந்தால் வந்திருக்குமா? 21 ஆண்டு வரலாறு ஐயத்தையே தருகிறது. ஜெயாவுக்கு 100 கோடி அபராதம் என்று கூறிவிட்டு, மரணத்தின் காரணமாக அவருடைய மேல்முறையீடு தணிந்திருப்பதாகவும் இத்தீரப்பு குறிப்பிட்டிருப்பது குழப்பத்தையே விதைத்திருக்கிறது. டான்சி வழக்கில் ஜெயாவின் மனசாட்சிக்கு வேண்டுகோள் விடுத்து தீர்ப்பெழுதிய பெருமை கொண்டது உச்ச நீதிமன்றம். வேண்டுகோள் விடுவதற்குத் தகுதியான மனச்சாட்சி இல்லாமலிருப்பதும், நீதி கிடைப்பதற்கான ஒரு நிபந்தனை போலும்!

-குப்பன்

புதிய ஜனநாயகம், மார்ச் 2017

கமலஹாசன் – சிபிஎம் கட்சியை அறிய உதவும் அன்பே சிவம் !

1
மாதவனின் வர்க்கத்தைப் “பன்னாட்டு நிறுவனத்தின் கூலி” என்று நல்லசிவம் சாடுகிறார். ஒண்ணாம் நம்பர் கைக்கூலிக் கட்சியான பாரதீய ஜனதாவின் தலைவர் இல.கணேசனோ படத்தைப் பாராட்டுகிறார்.

ன்பே சிவம் திரைப்படத்தில் பிரளயனின் ‘வீதி நாடகக்குழு’ இருக்கிறது; தொழிலாளிகளின் சம்பள உயர்வு கோரிக்கை இருக்கிறது; செங்கொடி இருக்கிறது; சி.ஐ.டி.யு.வின் அறிவிப்புப் பலகையே இருக்கிறது; பன்னாட்டு நிறுவனங்களைத் தாக்கும் வசனங்கள் இருக்கின்றன; மொத்தத்தில் மார்க்சிஸ்டு கட்சியினர் மனக்கிளர்ச்சியடைந்து தியேட்டர் வாசலில் தோரணம் கட்டுவதற்கான எல்லா சாத்தியக்கூறுகளும் படத்தில் இருக்கின்றன.

இருந்த போதிலும் வெள்ளித்திரையில் சிவப்புநிறம் தெரிவதாகக் கேள்விப்பட்டு விரைந்து, சினிமா கொட்டகையில் 40, 50 அபராதம் கட்டிய ரசிகர்களுக்கு  “கமலஹாசன் என்ன சொல்ல வருகிறார்” என்ற குழப்பமும் இருக்கிறது.

மார்க்சிஸ்டு கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் சீதாராம் யெச்சூரி இந்தப் படத்தைப் பாராட்டியிருப்பதிலோ, தீக்கதிர் உச்சி மோந்திருப்பதிலோ நமக்கு வியப்பில்லை. பா.ஜ.க. தலைவர் இல.கணேசனும் இதைப் பாராட்டியிருக்கிறார் என்பதுதான் இதில் சுவையான செய்தி. செங்கொடியும், சி.ஐ.டி.யு. பலகையும் தெளிவாகக் காண்பிக்கப்பட்ட பிறகும் இல.கணேசன் பாராட்டுகிறாரென்றால், ஏமாந்தது யார் என்று நமக்குத் தெரிந்தாக வேண்டும்.

நல்லசிவம் (கமல்) எனும் விகாரமான தோற்றம் கொண்ட மார்க்சியவாதி, அன்பரசு (மாதவன்) எனும் அழகான, அமெரிக்காவில் படித்த, செல்போன் பிடித்த, ஜீன்ஸ் போட்ட இளைஞனை புவனேசுவர் விமான நிலையத்தில் சந்திக்கிறான். தன்னுடைய தமிழ்ப்பெயரையே இழிவாகக் கருதி ஏ.அர்ஸ்.  என்று சுருக்கிக் கூறிக் கொள்ளும் அளவு தீவிரமான அமெரிக்க மோகியான அன்பரசு, நல்லசிவத்தைத் தீவிரவாதி என சந்தேகித்து போலீசிடம் போட்டுக்கொடுத்து, இல்லையென்று நிரூபணமானதால் அவமானப்படுகிறான்; கொஞ்சம் ‘குற்றவுணர்வும்’ அடைகிறான்.

புவனேசுவரிலிருந்து சென்னை நோக்கிய நான்கு நாள் பயணத்தில் இந்த சின்னக் குற்றவுணர்வைக் கொஞ்சம் கொஞ்சமாக நோண்டிப் பெரிதாக்குகிறான் நல்லசிவம். கிரெடிட் கார்டும், வெளிநாட்டு ஷுவும், நுனி நாக்கு ஆங்கிலமும் செல்லுபடியாகாத உண்மையான இந்தியாவை அந்த அமெரிக்க குஞ்சுக்கு அறிமுகம் செய்கிறான். அந்த இளைஞனின் இதயத்திலும் பெயரிலும் ‘இயற்கையாகவே’ குடிகொண்டிருக்கும் ‘அன்பை’, அதாவது கடவுளை, சாமார்த்தியமாகத் துழாவி வெளியே எடுத்து அவனுக்கே அறிமுகப்படுத்தியும் விடுகிறான்.

புவனேசுவரிலிருந்து சென்னைக்கு முன்நோக்கிச் செல்லும் இந்தப் பயணத்தினூடாக, நல்லசிவம் தன் நினைவுகளில் பின்னோக்கிச் செல்லும் பயணமும் வருகிறது. வீதி நாடகக் கலைஞனும், மார்க்சியவாதியும், ஓவியனும், கணினி விற்பவனுமான நல்லசிவத்தைக் கண்டு – அதாவது அவனிடம் பொதிந்துள்ள சராசரித் தொழிலாளியின் சக்திக்கு அப்பாற்பட்ட ‘திறமை’யைக் கண்டு மயங்கி அவனைக் காதலிக்கிறாள் முதலாளியின் மகள். எதிர்பாராத விபத்து அவர்களைப் பிரிக்கிறது.

சிவத்தின்(நல்லசிவத்தின்) காதலி அன்புக்கு(அன்பரசுவுக்கு) மனைவியாகிறாள். தொழிலாளர்கள் தமது சொந்தத் தியாகத்தால் வாங்க முடியாத கூலி உயர்வை, தனது காதலைத் தியாகம் செய்து அவர்களுக்கு வாங்கி வழங்கிவிட்டு, ஒரு சித்தரைப் போலத் தெரு நாயுடன் நடந்து மறைகிறான் நல்லசிவம்.

கதையின் தர்க்கரீதியான தொடர்ச்சியில் விழும் ஓட்டைகளை ஒதுக்கிவிட்டு மையக்கருத்துக்குச் செல்வோம்.

டம் உலகமயமாக்கத்துக்கெதிராகப் பேசுகிறதா? ஆம், என்கிறார் கமலஹாசன். வீதி நாடகத்திலும், மாதவனிடம் கமல் பேசும் வசனங்களிலும் ஆங்காங்கே தூவப்பட்டிருக்கும் வசனங்களை வைத்து அத்தகைய பிரமை சிலருக்குத் தோன்றக்கூடும்.

சரி, உலகமயமாக்கலை எதிர்த்து இந்தப் படம் யாரிடம் பேசுகிறது? என்ன பேசுகிறது? இந்தக் கொள்கைகளினால் ஆதாயமடைகின்ற வர்க்கத்தின் பிரதிநிதியிடம் பேசுகிறது. கணினி வல்லுனர்களாகவும், பொறியாளர்களாகவும்,  சேவைத்துறையினராகவும், வேலை செய்கின்ற நுனிநாக்கு ஆங்கிலப் பேர்வழிகளிடம், அமெரிக்காவிற்கு ஓடுவதற்குச் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் பெப்சி மாதவன்களிடம் பேசுகிறது.

“சோற்றுக்குப் போராடும் இந்த தேசத்தைப் பாருங்கள். மக்களைப் பாருங்கள். மனமிரங்குங்கள். அற உணர்வு கொள்ளுங்கள்” என்று அவர்களிடம் மன்றாடுகிறது. அவ்வப்போது நல்லசிவத்தின் சாமார்த்தியமான வசனங்களால் அவர்களை மடக்குகிறது. லேசாக இடித்துரைக்கிறது.

பிறப்பால் இந்தியனாகவும் சிந்தனையால் அமெரிக்க அடிவருடியாகவும் வளர்ந்துள்ள “யுப்பி” என்றழைக்கப்படும் நவீன மேட்டுக்குடி வர்க்கத்தின் பிரதிநிதியாகத் திரையில் தோன்றுகிறார் மாதவன். இந்த வர்க்கம் அறவுணர்வற்றுப் (Amoral) போனதற்கு காரணமென்ன என்பது நமது முதல் கேள்வி.

உலகப் புகழ் பெற்ற பங்குச்சந்தைச் சூதாடியான ஜார்ஜ் சோராஸ் எனும் கிழவனிடம் அவனுடைய ஒழுக்கம், அறவுணர்வு பற்றிய கேள்விகளை எழுப்பியபோது “சந்தைக்கு அறவுணர்வு இல்லை; எனவே எனக்கும் இல்லை” என்று பதிலளித்தானாம். அந்தக் கிழட்டுப் போக்கிரியின் வாயிலிருந்து வெளிவந்த ஒவ்வொரு சொல்லும் உண்மை.

பன்னாட்டு நிறுவனங்கள் உலகச்சந்தையைக் கைப்பற்ற எத்தகைய ‘நெறிகளைக்’ கடைப்பிடிக்கின்றனவோ அவற்றின் பிரதிபலிப்பைத்தான் நாம் இந்த யுப்பி வர்க்கத்திடம் காண முடியும். ஏனென்றால் இவர்கள் அதன் ஊழியர்கள், தரகர்கள், துதிபாடிகள் அல்லது நல்லசிவத்தின் மொழியில் சொன்னால் எலும்பைக் கவ்வக் காத்திருக்கும் கூலிகள்.

அவ்வாறிருக்க, நிஜத்தின் தலையைச் சீவுவதைத் தந்திரமாகத் தவிர்த்துவிட்டு, நிழலுக்கு முடிவெட்டி அழகுபடுத்த முனைகிறார் நல்லசிவம்.

அன்பரசுவின் (மாதவனின்) வர்க்கத்தைப் பொறுத்தவரை முதலாளித்துவ உலகச் சந்தைதான் அவர்களது கடவுள். சந்தையின் விதிகள்தான் இறைவனின் பத்துக்கட்டளைகள். இந்த ஆட்டத்தில் வெல்லும்போது அதைத் தனது திறமைக்கும், புத்திக்கூர்மைக்கும் கிடைத்த வெற்றியாக அவர்கள் கருதிக் கொள்கிறார்கள். இதில் தோற்று மடிபவர்களைக் குறித்து அவர்கள் வருத்தம் கொள்வதில்லை.

சூறாவளியில் பிடுங்கியெறியப்பட்ட தென்னை மரத்துக்காக இவர்கள் எப்படி கண்ணீர் விடமாட்டார்களோ, அவ்வாறே உலகமயமாக்கத்தால் பிடுங்கி எறியப்பட்டுச் செத்து மடிகின்ற விவசாயிகளுக்காகவும் இவர்கள் கண்ணீர் விடுவதில்லை.

“சோமாலியா முதல் தஞ்சை வரையிலான பட்டினிச் சாவுகளுக்கும் தற்கொலைகளுக்கும் காரணம் நம்மால் முன்னறிந்து சொல்ல முடியாத சந்தையின் விதிகள்தான்” என்று கூறும் உலக முதலாளித்துவத்திடம் இந்தச் சாவுகளுக்கான தார்மீகப் பொறுப்புண்ர்ச்சியை எப்படி எதிர்பார்க்க முடியாதோ, அவ்வாறே இந்த யுப்பி வர்க்கத்திடமும் அதை எதிர்பார்க்க முடியாது. “பட்டினிச் சாவா அதற்கு நான் என்ன செய்ய முடியும்?” என்று அவர்கள் தோளைக் குலுக்குவார்கள். அவ்வளவுதான்.

ஆனால் எல்லா மனிதர்களுக்குள்ளும் ஓர் அன்பு ஊற்று இருப்பதாகவும் ஏதோ சில காரணங்களால் அது அடைபட்டிருந்தாலும் அதைத் தோண்டியோ, நோண்டியோ வெளியே கொண்டு வந்து விட முடியுமென்றும் நம்மை நம்பச் சொல்கிறார் கமலஹாசன். இந்த பார்முலாவின்படி மாதவனுக்குள் இருக்கும் ‘கடவுளை’ நாலே நாளில் தோண்டி எடுத்து விடுகிறார்.

எல்லோருக்கும் ஒரு நடுநிலையான மனச்சாட்சி (கடவுள்) இருப்பதாகவும், அந்த மனச்சாட்சிக்கு விரோதமாகச் சிலர் நடந்து கொள்கின்ற காரணத்தினால்தான் சமூகத்தில் இத்தனை அநீதிகள் நிகழ்கின்றனவென்றும், எல்லோரும் மனச்சாட்சிபடி நடந்து கொள்ளத் தொடங்கி விட்டால் உலகமே அன்புமயமாகிவிடும் என்றும் கருதுகின்ற பிரபலமான மூடநம்பிக்கையை வேறு வார்த்தைகளில் விற்பனை செய்கிறார் கமலஹாசன்.

அமெரிக்க அன்பே சிவத்தை விஞ்சிய கமலின் ‘கம்யூனிச’ சிவம்!

மனச்சாட்சி என்பது என்ன? அது சமூக விதிமுறைகள் குறித்தும், தனிப்பட்ட ஒழுக்கம் குறித்தும் ஒவ்வொரு மனிதனும் தனக்குள் உருவாக்கி வைத்திருக்கும் (அல்லது உருவாக்கிய வண்ணமிருக்கும்) ஒரு கையேடு. எந்த முதலாளியும் தன் மனச்சாட்சிக்கு விரோதமாகத் தொழிலாளியைச் சுரண்டுவதில்லை; மனச்சாட்சிப்படிதான் சுரண்டுகிறான். இந்திய மக்களின் வரிப்பணத்தில் I.I.T.யில் படித்துத் தேறிய யுப்பி வர்க்கம் “இந்த நாட்டில் என் திறமைக்கு மரியாதை இல்லை” என்று திட்டிவிட்டு விமானமேறும் போதும் அதுதன் மனச்சாட்சிப்படி தான் நடந்துகொள்கிறது.

சாதி இந்துக்களின் மனச்சாட்சியைத் தட்டியெழுப்புவதாகவும், குற்றவுணர்வை உசுப்புவதாகவும் கூறிவந்த காந்தியின் பசப்பல்களை இதனால்தான் அம்பேத்கர் ஏற்கவில்லை. அரியானா முதல் மேலவளவு வரை ‘சாதி இந்து மனச்சாட்சி’ அன்றாடம் தன்னை நிரூபித்துக்கொண்டிருக்கிறது.

தீண்டாமை அல்லது மறுகாலனியாக்கம் போன்ற சமூக, அரசியல் அநீதிகள் (சமூக) அறிவியலின் துணை கொண்டு ஆராயப்பட வேண்டியவை. இவற்றை அறம் சார்ந்த பிரச்சனையாகச் சுருக்குவதும், திசை திருப்புவதும் முதலாளித்துவக் கலைஞர்கள் வழக்கமாக நடத்திவரும் கழைக்கூத்து. பெப்சி மாதவன் வர்க்கத்திடம் “அறம் செய்ய விரும்பு” எனப் போதிக்கிறார் நல்லசிவம்.

மாதவனின் வர்க்கத்தைப் “பன்னாட்டு நிறுவனத்தின் கூலி” என்று நல்லசிவம் சாடுகிறார். ஒண்ணாம் நம்பர் கைக்கூலிக் கட்சியான பாரதீய ஜனதாவின் தலைவர் இல.கணேசனோ படத்தைப் பாராட்டுகிறார்.

விசாரித்துப் பாருங்கள்! உலகமயமாக்கம் குறித்து தனது கவலையை அவரும் வெளியிடுவார். “நமது கலாச்சாரம், தர்மங்கள், குடும்ப உறவுகள் ஆகியவற்றைப் பலி கொடுத்து விடக் கூடாது” என்பதே உலகமயம் குறித்த அவரது கவலை. அறம் சார்ந்த கவலை!

மார்க்சிஸ்டு கட்சியின் தூண்களான வங்கி, காப்பீடு, பொதுத்துறை ஊழியர் சங்க முன்னோடிகளிடம் பேசிப் பாருங்கள். பையனுக்கு விசா கிடைக்காத கவலையை நெஞ்சில் தேக்கியபடியே மேற்படி அறம் சார்ந்த கவலையையும் வெளியிடுவார்கள். இதே வகைப்பட்ட அறம் சார்ந்த கவலைதான் சிலிகான் வேலி பையனுக்குச் சீரங்கத்தில் பெண் தேடுகிறது.

இவர்களது ஆன்மாவின் குரல் ஓவியர் மதனின் வசனமாகத் திரையில் சிந்துகிறது. கலப்புப் பொருளாதாரத்தின் ஆதாயங்களை அனுபவித்த மனிதனின் வர்க்கம், புதிய பொருளாதாரத்தால் தத்தெடுக்கப்பட்ட தன்னுடைய பிள்ளைகளைப் பார்த்துச் செல்லமாக கடிந்து கொள்கிறது. தங்கள் புத்திரர்களான யுப்பி வர்க்கம் கையில் தீவட்டியுடன் திரிந்தாலும் “அவர்கள் அடிப்படையில் நல்லவர்கள்தான்” என்று நம்மை நம்பச் சொல்கிறது.

“ரத்ததானம் கொடு, ஏழைகளுக்குச் சின்ன உதவி செய், இரண்டு சொட்டு கண்ணீர் விடு – முடிந்தது கதை. நீதான் கடவுள்” என்று மாதவனைத் தயார்படுத்துகிறார் கமலஹாசன். மஞ்சள், வேப்பங்கொட்டை, பாசுமதி, M.N.C., எலும்புத்துண்டு…. என்று தன் அறிவின் மேன்மையை மாதவன் மீது நிலைநாட்டுகிறார். பட்டணத்துக் கதாநாயகியைப் பட்டிக்காட்டு கதாநாயகன் சீண்டுவது போலக் கொஞ்சம் சீண்டுகிறார். இப்படியாக யுப்பி வர்க்கத்தின் பிரதிநிதியிடம் குற்றவுணர்வு தோற்றுவிக்கப்பட்டு விட்டது.

தமிழ் சினிமாவில் குற்றவுணர்வுக்கு ஆளாகின்ற பாத்திரம் அதை செண்டிமெண்டு மூலம் நிரூபிக்க வேண்டும் என்பது விதி; மாதவன் நிரூபிக்கிறார்; தோழர் நல்லசிவம் அண்ணன் நல்லசிவமாகிறார். யுப்பி வர்க்கத்தின் பிரதிநிதிக்கும் தொழிலாளி வர்க்கத்தின் ‘பிரதிநிதி’க்குமிடையிலான உறவு அண்ணன்-தம்பி உறவுதானென்று திரைக்கதையின்படியே நிரூபணமாகிறது.

நல்லசிவத்துக்கும் தொழிலாளி வர்க்கத்துக்கும் இடையிலான உறவு என்ன? “நல்லசிவம் நாடகம் போட்டால் தொழிலாளிகள் வேடிக்கை பார்ப்பார்கள்; நல்லசிவத்தை முதலாளி ஆள் வைத்து அடித்தால் அதையும் வேடிக்கை பார்ப்பார்கள்; மற்றப்படி சம்பளம் 910ஐ, 920 ஆக்க வேண்டுமென்றால் அவர்களுக்குப் புரியும், ‘முதலாளி நாசர்தான் எதிரி’ என்று தாடிவைத்து டான்ஸ் ஆடிக் காட்டினால் புரியும். தொழிலாளர் தலைவர் முதலாளி மகளை ஏன் காதலிக்கிறார் என்று கேட்கக்கூடத் தெரியாது. மற்றப்படி உலகமயமாக்கம், அமெரிக்க, ஜப்பான் இதெல்லாம் புரியாது. சொல்லவேண்டியது நம் கடமை என்பதால் நாலு வார்த்தை சொல்லி வைப்போம்”- இதுதான் தொழிலாளி வர்க்கத்தின்பால் நல்லசிவத்தின் அணுகுமுறை.

முதலாளியின் வரவேற்பரையில் ஒவியம் வரைந்து கொடுத்துக் காசு வாங்கித் தொழிற்சங்கத்துக்குப் பயன்படுத்துவதை நல்லசிவத்தின் ‘அறவுணர்வு’ தடுக்கவில்லை.

“ஏனென்றால் கதையில் அவர்கள் இல்லை” என்ற வழக்கமான கோடம்பாக்கம் பதில் நம் காதில் விழுகிறது. “எடுத்த கதையைப் பற்றிப் பேசு; எடுக்காத கதையைப் பற்றிப் பேசாதே” என்ற எச்சரிக்கைக் குரலும் கேட்கிறது.

இருந்தாலும் “உலகமயமாக்கத்துக்கு எதிரானது” என்று கூறிக் கொள்ளப்படும் திரைப்படத்தில், அதனால் பாதிக்கப்பட்ட வர்க்கம், அதை எதிர்த்துப் போரட வேண்டிய வர்க்கம் ஏன் செவிடாகவும் ஊமையாகவும் ஆக்கப்பட்டிருக்கிறது என்று கேட்காமலிருக்க முடியாது.

உலகமயமாக்கலின் விளைவாகப் பட்டினிச் சாவுக்கும், நோய்க்கும், வேலையின்மைக்கும், தற்கொலைக்கும் தள்ளப்பட்டிருக்கின்ற நாட்டின் 90 சதவீத மக்கள், தங்களுடைய தலைவிதி எங்கே, யாரால், எப்படி நிர்ணயிக்கப்படுகிறது என்று அறியாமல் இருக்கிறார்களே, அதுதான் இன்றைய அவலம். குடிநீருக்குத் தவமிருக்கும் பெண்கள் பெப்ஸி கடைகளை நொறுக்கத் தொடங்கினால், பட்டினியால் வாடும் விவசாயி மெக்டொனால்ட்ஸ் கடையை இனம் கண்டு சூறையாடினால், தற்கொலை செய்து கொள்ளும் பருத்தி விவசாயி அமெரிக்க ஜீன்ஸ் கடைகளுக்குத் தீ வைத்தால்…. அப்போது யுப்பி வர்க்கம் ‘எனக்கென்ன’ என்று தோளைக் குலுக்காது. ஒவ்வொரு மாதவனாகத் தேடிப்பிடித்து அவர்களுடைய அறவுணர்வை உசுப்பி விடும் சிரமும் நல்லசிவத்துக்கு இருக்காது. இதயத்தில் ‘கடவுள்’ உள்ளவர்கள், இல்லாதவர்கள் என்று அந்த வர்க்கம்தானே இரண்டாகப் பிளந்து விடும்.

அல்லாமல் அந்த வர்க்கத்தின் அறவுணர்வை வேண்டி மன்றாடி நின்றால், கஞ்சித் தொட்டி, உண்டைக் கட்டி அல்லது பிச்சையிடுதல் மூலம்தான் அது தன் அறவுணர்வை வெளிப்படுத்தும். ஒரு வர்க்கம் என்ற முறையில் அதன் மனநிலையும் சிந்தனை முறையும் இதுதான். அந்த வர்க்கத்திலிருந்து நீங்கிய சிலர் இருக்கலாம். ஆனால் மாதவன் அவ்வாறு நீங்கியவர்களின் பிரதிநிதி அல்ல; அந்த வர்க்கத்தின் பிரதிநிதி.

உலகமயமாக்கத்தைச் சாடுவதாகக் கூறிக்கொள்ளும் ஒரு திரைப்படம், அதை உண்மையிலேயே எதிர்த்துப் போராடக் கூடிய உழைக்கும் வர்க்கத்தையோ அதன் பிரதிநிதியையோ மையமான பாத்திரமாகத் தெரிவு செய்யவில்லை. மாறாக உலகமயத்தால் ஆதாயமடைகிற, அதை ஆதரிக்கிற ஒரு விளம்பர சினிமாத் தயாரிப்பாளனை, அதாவது யுப்பி வர்க்க பிரதிநிதியை வம்படியாக இழுத்து வைத்துக் கொண்டு அவனிடம் மூச்சைக் கொடுக்கிறது; அவன் மீது தன் மேதாவிலாசத்தைப் பொழிகிறது.

தொழிலாளி வர்க்கத்தின்பால் மார்க்சிஸ்டு கட்சியின் அணுகுமுறையும் இதுதான். “போனஸ், கூலி உயர்வு, சூரியன், இரட்டை இலை தவிர வேறெதுவும் மக்களுக்குப் புரியாது, புரியத் தேவையில்லை” என்பது அவர்கள் கருத்து.

சமீபத்தில் மாணவர் போரட்டத்தின் போது “உலக வர்த்தகக் கழகத்தின்  ஆணைப்படிதான் கல்லூரிகள் தனியார்மயமாக்கப்படுகின்றன” என்ற விசயத்தை மாணவர்களுக்கு விளக்கத் தேவையில்லை என்பதே அவர்களுடைய கருத்தாய் இருந்தது. ஏனென்றால் அதெல்லாம் மாணவனுக்குப் புரியாதாம். “கட்டணம் உயரும் என்ற ஒரு விசயம்தான் மாணவர்களின் அறிவுக்கு எட்டும்” என்பது அவர்களின் முடிவு.

எனில், அரசியல், பொருளாதாரம், தத்துவம் எல்லாம் யாருக்கு? அது ஆங்கிலம் படிக்கத் தெரிந்த மேட்டுக்குடிகளுக்கு. பிள்ளைகளை அமெரிக்காவுக்கு அனுப்பிய மற்றும் அனுப்ப விரும்புகிற வர்க்கத்திற்கு உலகமயமாக்கம் குறித்த தத்துவஞான உபதேசம்! அன்றாட வாழ்வில் பார்ப்பனியச் சாதிய சடங்கு சம்பிரதாயங்களை எதிர்த்துப் போராட முனையாத L.I.C. வர்க்கத்துக்கு வரலாற்றில் பார்ப்பனமயமாக்கம், பூகோளத்தில் சமஸ்கிருதமயமாக்கம் குறித்த ஆங்கில ஆய்வுக் கட்டுரைகள், கருத்தரங்குகள்.

களத்தில் நிற்கும் அடிப்படை உழைக்கும் வர்க்கத்துக்கு தீக்கதிர் சார்பில் தீபாவளி மலர், திருவண்ணாமலை தீபம் சிறப்பிதழ்; தொழிலாளி வர்க்கம் தன் அன்றாட வாழ்வில், கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளுக்கு வழிகாட்ட தீக்கதிர் நாட்காட்டி, அதில் இந்து, கிறித்தவ, இசுலாமியப் பண்டிகைகளின் பட்டியல், ராகு காலம், எமகண்டம், குளிகை, சூலம் இன்னபிற… இன்னபிற…

இது இரட்டை அணுகுமுறை மட்டுமல்ல, இரட்டை வேடம்! மார்க்சிஸ்டு கட்சியின் இந்த அரசியல் இரட்டை வேடத்தை அறம் சார்ந்த இரட்டை வேடமாக வெளிப்படுத்துகிறான் நல்லசிவம்.

நண்பர் மதன் தன்னை விருந்துக்கு அழைத்த இடம் முதலாளியின் வீடு என்று தெரிந்த பின்னரும் உள்ளே நுழைகிறான். (இதிலென்ன தப்பு தோழரே, நாம பேச்சுவார்த்தைக்கு முதலாளி வீட்டுக்குப் போறதில்லையா, அறிவொளி இயக்கத் தோழர்கள் கலெக்டர் விருந்துல கலந்துக்கிறதில்லையா?)

முதலாளியின் மகள் கைதவறிச் சிந்திய ஐஸ்கிரீமினால் கோலம் போட்டுக் காட்டிப் பாராட்டைப் பெறுகிறார். (நம்ம எழுத்தாளர்கள் குமுதத்தில் போட்டிக்கதை எழுதிப் பரிசு வாங்குறதில்லையா?) அவள் ‘சாரி’ என்று சொன்ன 30 நொடிகளில் காதல் வயப்படுகிறார். (B.J.P.யை ஆதரிச்சதுக்கு ‘சாரி’ன்னு ஜெயலலிதா சொன்னவுடனே நாம கூட்டணி வச்சுக்கறதில்லையா?)

இப்படி ஒரு பட்டியல் போடலாம். அன்பரசுவுக்கு அடுத்து நல்லசிவத்துடன் உறவு வைக்கும் முக்கியப் பாத்திரம் அவன் காதலி – அதாவது முதலாளியின் மகள். “தொழிலாளர்களுக்கெதிராக முதலாளி (காதலியின் அப்பா) செய்யும் சதியை அவளை வைத்து வேவு பார்க்கலாம்” என்று ஒரு தொழிற்சங்கத் தோழர் கூறியவுடனே அதை நிராகரிக்கிறான் நல்லசிவம். இதற்கு அவன் கூறும் காரணம்: தன் காதலி நேர்மையானவள்; இரண்டாவது காரணம்: இது நேர்மையற்ற வழிமுறை.

சிவன் படத்திற்குள்ளேயே மார்க்சையும் அரிவாள் சுத்தியலையும் மட்டுமின்றி ரூ.910-ஐயும் நல்லசிவன் புகுத்தி விடுகிறானே, பாராளுமன்றத்தில் 50 வருடமாகப் புரட்சியைப் புகுத்துவதுபோல!

“தொழிலாளி வர்க்கத்தின் போராட்டத்தை முதலாளி வர்க்கம் கூறிக் கொள்ளும் அறநெறிகளின்படி நடத்த வேண்டும்” என்று இலக்கணம் வகுக்கும் நபரைக் கடந்த காலத்தில் தேடினால் காந்தியிடம் பார்க்கலாம்; நிகழ்காலத்தில் அந்த தார்மீக  ஆவேசத்தை சோம்நாத் சட்டர்ஜியிடம் பார்க்கலாம்.

‘புனிதமான’ அரசியல் சட்டத்தின் மீதும் அது எழுந்தருளியுள்ள பாராளுமன்றக் கருவறையின் மீதும் சங்க பரிவாரத்தினர் காலைத் தூக்கி அலட்சியமாக ஒன்னுக்கடிக்கும்போது, சாட்டர்ஜியின் முகத்தில் ஒளிரும் தார்மீக ஆவேசத்தையும், வாஜ்பாயிடம் நீதி கேட்கும்போது துடிக்கும் அவருடைய உதடுகளையும் யாருக்கும் சொல்லி புரியவைக்க முடியாது.

பாத்திரங்களை மிக நுட்பமாக ஆய்வு செய்து தனது நடிப்புக்கு மெருகேற்றிக் கொள்ளும் கமலஹாசன் இந்தக் காட்சியைப் படமாக்குமுன் சிறிது நேரம் தூர்தர்சன் நேரடி ஒளிபரப்பை பார்த்திருந்தால் காட்சி வேறுவிதமாக மாறியிருக்கும். இப்படியொரு அறம் வழுவிய யோசனையைச் சொன்ன தோழரை ஓங்கி ஒரு அறை விட்டிருப்பான் நல்லசிவம்!

இதில் வேடிக்கை என்னவென்றால், முதலாளியின் வரவேற்பரையில் ஒவியம் வரைந்து கொடுத்துக் காசு வாங்கித் தொழிற்சங்கத்துக்குப் பயன்படுத்துவதை நல்லசிவத்தின் ‘அறவுணர்வு’ தடுக்கவில்லை. “கலை விலை போகலாம்; கலைஞந்தான் விலை போகக் கூடாது” என்று அவன் சார்பாக அவனுடைய காதலி தத்துவ விளக்கம் தந்து விடுகிறாள்.

மேலும் சிவன் படத்திற்குள்ளேயே மார்க்சையும் அரிவாள் சுத்தியலையும் மட்டுமின்றி ரூ.910-ஐயும் நல்லசிவன் புகுத்தி விடுகிறானே, பாராளுமன்றத்தில் 50 வருடமாகப் புரட்சியைப் புகுத்துவதுபோல!

மார்க்சிஸ்டு கட்சியின் அரசியலும் அவர்களது அழகியல் ரசனையும் துல்லியமாக ஒன்றுபடும் ஒரு காட்சியும் படத்திலிருக்கிறது. கமலஹாசனைக் கொலை செய்ய முதலாளி அனுப்பும் கூலிப்பட்டாளத்தைத் தன்னந்தனியே நின்று சமாளிக்கிறார் ஹீரோ. நகைச்சுவை நடிகர்களைப் போல தோழர்கள் சுற்றி நின்று வேடிக்கைப் பார்க்கிறார்கள். பிறகு சண்டையே நகைச்சுவை போல மாறுகிறது; “இந்த உதை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா?” என்று முழக்கமிட்டபடியே கமலஹாசனுக்குப் பின்னே அணிவகுக்கிறார்கள் தோழர்கள்.

“இந்தப் படை போதுமா…” என்று தி.மு.க., அ.தி.மு.க.வின் பின்னே மார்க்சிஸ்டுகள் கோஷம் போட்டுச் சென்ற காட்சிகளையும், சிரிக்கும் போராட்டம், ஒப்பாரிப் போராட்டம் எனத் தொழிலாளி வர்க்கத்துக்கு அவர்கள் கண்டுபிடித்துத் தந்திருக்கும் போராட்ட முறைகளையும் மனதில் ஓட விடுங்கள். அந்த அரசியல் இந்தக் காட்சியின் அழகியலுக்குக் கனக்கச்சிதமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளதைப் புரிந்து கொள்ளலாம்.

படத்தில் பரிதாபத்துக்குரியவர்களாக வந்துபோகும் பாத்திரங்கள் இரண்டு. முதலாவதாக, பிரளயனின் வீதி நாடகக்குழு. சகலகலா வல்லவனான ஹீரோவுக்கு அவர்கள் பக்கவாத்தியம் வாசித்திருக்கிறார்கள்.

இரண்டாவதாக, நாசர். வாய்க்கு வாய் “தென்னாடுடைய சிவனே போற்றி” என்று சொல்லிக் கொண்டே வில்லன் வேலை செய்யும் M.R.ராதா வகைப்பட்ட பாத்திரம் அவருக்கு. கமலஹாசன் கூறுகின்ற உலகமயமாக்க சகாப்தத்தின் வகை மாதிரி இவரல்ல. அது யார் என்பதை ஏற்கனவே சொல்லிவிட்டோம்.

பேச்சில் கடவுளும், செயலில் கயமையுமான கதாபாத்திரங்களை அண்ணாத்துரை காலத்துச் சினிமாக்களே போதிய அளவு சித்தரித்து விட்டன. “தென்னாடுடைய சிவனே போற்றி” என்று கூறும் இந்த முதலாளிதான் “ஜெய் சீயாராம்” என்று அலறும் இந்துத்துவச் சக்திகளின் வகை மாதிரி என்று கருதிக் கொண்டு சிலர் புளகாங்கிதம் அடையளாம். குஜராத் படுகொலைக்கு ‘பைனான்ஸ் பண்ணியவர்கள்’ N.R.I.யுப்பிகள் என்ற உலகறிந்த உண்மையை அவர்களுக்குச் சமர்ப்பிக்கிறோம்.

இந்த சூட்சமம் புரிந்த தொலைநோக்குப் பார்வை கொண்ட இல.கணேசன் படத்தைப் பாராட்டி விட்டார். நாசர் பாத்திரத்தைக் காட்டி “உங்களுக்குக் கோபம் வரவில்லையா?” என்று அவரிடம் கேட்டால் “நான் அவனில்லை” என்று பதில் சொல்லிவிடுவார்.

இத்தகைய தொலைநோக்கில்லாத ஓட்டைவாயான இராம.கோபாலன் படத்தை எதிர்க்கிறார். “யார் யார் சிவம்” என்ற பாடல் காட்சியில் கன்னிகாஸ்திரி சிலுவை போடுவது மட்டும்தான் அவரை அலைகழித்திருக்கும்.

இல.கணேசனைக் கேட்டிருந்தால் “கிறிஸ்தவர்கள் சேவை செய்வதை நாங்கள் மறுக்கவில்லையே. அதை வைத்து மதமாற்றம் செய்வதைத்தானே கண்டிக்கிறோம்” என்று மிகச் சுலபமாக இந்தக் காட்சிக்குள் நுழைந்து வெளியே வந்திருப்பார்.

“மோசமான ஒரு முதலாளியை இந்து ஆன்மீகவாதியைச் சித்தரித்ததன் மூலம் இந்துக்களின் மதவுணர்வைப் புண்படுத்தி விட்டீர்கள்” என்று கமலஹாசனைக் குற்றம் சாட்டிப் பாருங்கள். “நானே ஆன்மீகவாதிதான், நான் தான் கடவுள்” என்று கண் சிமிட்டுவார் நல்லசிவம்.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது, ‘இந்து மதவெறி’ என்று பெயர் சொல்லிக் கண்டிக்காமல் “கடவுளின் பெயரால் கலவரம் எதற்கு?” என்று நைசாக வாழைப்பழத்தில் ஊசி ஏற்றினார்கள் மார்க்சிஸ்டுகள். “எங்கள் இந்துமத உணர்வைப் புண்படுத்தி விட்டீர்கள்” என்று குற்றம் சாட்ட முடியாமல் தவித்தார்களே R.S.S.காரர்கள்! அதே உத்திதான்!

படத்தில் பாராட்டுவதற்கு எதுவுமே இல்லையா என்று நல்ல சினிமாவின் ரசிகர்கள் யாரேனும் வருத்தப்பட்டால் அவர்களுக்குக் கூறிக் கொள்கிறோம்: “ஐயா, படத்தையே பாராட்டுகிறோம். மார்க்சிஸ்டு கட்சியின் திரை அவதாரத்தை இத்தனை துல்லியமாக யாரும் வழங்கியதில்லை. ஒருவேளை C.I.T.U.வின் அறிவிப்புப் பலகையைக் காட்டாமல் இருந்திருந்தாலும் இது மார்க்சிஸ்டு கட்சிதான் என்ற உண்மை காட்சிக்கு காட்சி பொருத்தமான கலையம்சத்துடன் எடுத்தியம்பப்படுகிறது. அதற்காக மீண்டுமொருமுறை பாராட்டுகிறோம்.

– மருதையன்
புதிய கலாச்சாரம்,
பிப்ரவரி 2003

ஆயா நான் செத்துருவனா ? சிறுமி சர்மிளா கொல்லப்பட்ட கதை !

5

காஞ்சிபுரத்திலிருந்து ஒரு நகரப் பேருந்து.  பக்கத்தில்,  ஒரு பெண் அசதியாக உட்கார்ந்தார்.  உடல் நலமில்லை என்பது பார்த்ததுமே தெரிந்தது. சிறிது நேரம் கழித்து,  “உடம்புக்கு என்னாச்சு” என்றேன்.  “நாலு நாளா, பச்ச தண்ணி பல்லுல படல, மனசே ரொம்ப கஷ்டமாயிருக்கு… சாப்புட நினைச்சாலும், வாந்தி மயக்கமா இருக்கு… அதான் டாக்டரான்ட போய்ட்டு வரேன்” என்றவாறு தன்னுடைய பழைய செல்போனில் வீடியோ ஒன்றை எனக்கும் காட்டினார். அதில், இரண்டு பெண் குழந்தைகள் பள்ளி விழாவில் ஆடுவதற்காக வீட்டில் பயிற்சி செய்துக் கொண்டிருப்பது ஓடியது.  முடிந்ததும் போனை உள்ளே வைத்துவிட்டு  பேசத் தொடங்கினார்.

“சர்மிளா… எங்க பக்கத்துவீட்டுப் பொண்ணு, என் பொண்ணு மாதிரித்தான் இரண்டு பேரும் ஏகனாம் பேட்டை ஸ்கூல 7 வது  படிக்கறாங்க… போன வாரம் இன் நேரம் நினைச்சிக்கூட பார்திருக்கமாட்டோம்…சர்மிளாவ…  வெள்ள துணியில சுத்தி சுடுகாட்டுல புதைப்போம்னு…” சொல்லிக்கொண்டே அழுதார்.

சிறுமி சர்மிளா

எனக்கு, எப்படி ஆறுதல் சொல்லுவது, என்ன விசாரிப்பது என்றே புரியவில்லை… பிறகு, மெதுவாக “ஏன் குழந்தைக்கு ஏதாவது உடம்புக்கு சரியில்லையா?” என்றேன்.

“எம்பொண்ணு… வயசுக்கு வந்திட்டா,சர்மிளா… இப்பவோ, அப்பவோனு இருக்காளேனு பேசிப்போம்.. படிப்புலயும் சுட்டி, வீட்டு வேலைகளை அவ்வளோ மணி மாதிரி செய்யும்… அவங்க, அம்மாவும், அப்பாவும் வண்டியில காய்கறி வியாபாரம்  செய்றவங்க… அவங்களுக்கு மூணுப்பொண்ணு, சர்மிளாத்தான் கடைசி….  அவங்க அம்மா என்கிட்ட சொல்லிட்டு, வீட்டை போட்டதுபோட்டபடியே  விட்டுட்டு போய்டுவா… சர்மிளாத்தான் ஸ்கூல் முடிச்சி வந்ததும் வீட்டை சுத்தம் செய்யும், எல்லா வேலையும் முடிஞ்சதும் உட்கார்ந்து படிக்க ஆரம்பிச்சுடுவா… போன ஞாயிற்று கிழமை(19-3-17) லீவுங்கிறதால… வீட்டில இருந்தா,  அவளோட அப்பாவும், அம்மாவும் வியாபாரத்துக்கு போய்ட்டாங்க…   காலைல 11 மணியிருக்கும், சர்மிளா, “அக்கா, அக்கா,” னு ஓடி வந்தா. “என்னாடீ” ன்னு கேட்டேன்.. “வீட்டுக்கு பக்கத்துல ஓடு அடுக்கி வைச்சிருக்காங்கள்ள அங்கிருந்த, ஓணான இல்ல என்னனு தெரியல… கடிச்சிருச்சிக்கா…. “னு சொன்னாள்.

எனக்கு பக்குனு ஆயிடுச்சி, எங்க காட்டுனு பார்த்தேன், சோத்துக்கால்ல சுண்டு விரல்ல இரண்டு பல்லு பதிஞ்ச மாதிரி இருந்தது, உடனே குழந்தைய உட்கார வைச்சிட்டு வெளியில் இருந்த என் வீட்டுக்காரர் கிட்ட அடுத்த நொடியே எதிருல இருக்கற அய்யம்பேட்டை ஆஸ்பத்திரிக்கு (ஆரம்ப சுகாதார நிலையம்) வண்டில கூட்டிட்டு போக சொன்னேன்…குழந்த தண்ணிக் கேட்டா அதுக்கூட கொடுக்கல…. எதாச்சும் ஆயிடப்போதுனு பயத்துல…..
சீக்கிரமா போனு அவரை தள்ளிவிட்டேன்… அவரும் விழுந்தடிச்சிப் போனாரு…

அங்க போனவரு எனக்கு போன் பண்றாரு… சீக்கிரம் வா… இங்க பாக்க மாட்டாங்களாம்… காஞ்சிபுரத்துக்குத்தான் போகணுமா… ன்னுட்டு…நான் சொன்னேன்…  முதல்ல எதனா ஊசிப் போடச் சொல்லு…ஸ்கூட்டர்ல போக லேட்டாகும்… ஆம்புலன்சு கேளு… னு அவரும் கேட்டீருக்காரு…  ஆனா ஆஸ்பத்திரியில வேலை பார்க்குறவங்க… ஆம்புலன்சுக்கு டிரைவர் இல்ல…. இது,நேரா நீங்க கூப்பிட்ட உடனேல்லாம் வராது. 108-க்கு போன் பண்ணி, விசயத்த சொன்னா, அங்கிருக்கிறவங்க… டிரைவருக்கு தகவல் சொன்னாத்தான் வண்டி எடுப்பாங்க….ன்னு  சொன்னாங்க… உங்க… வண்டி இருக்கே எடுத்துகிட்டு போக வேண்டியது தானே?  என்று, துரத்திவிட்னர்.

எந்த வேதனையும் வெளிக்காட்டாமல், இதையெல்லாம் சர்மிளாவும் உட்கார்ந்து வெறித்து..பார்த்தாள்…..

பிறகு, ஸ்கூட்டரில் காஞ்சிபுரம் ஆஸ்பத்திரிக்கு சென்றதும் ஒபி சீட்டு போடச் சொன்னார்கள்.  ஓபி சீட்டு போட்டுக்கொண்டு வந்து, சர்மிளாவிடம், நடக்க வேண்டாம் தூக்கி செல்கிறேன் என்றதற்கு மறுத்து, சர்மிளா கேட்டிலிருந்து, நடந்தே வந்தாள்.
அங்கு, டாக்டர் “என்ன கடித்தது, அதை கூடவே கொண்டு வந்திருக்கலாமே,  நீங்க யாரு… குழந்தைக்கு என்ன வேண்டும்” என்று கேட்டார்.

சர்மிளாவுக்கு முதலுதவி கூட தராமல் துரத்திய உள்ளூர் சுகாதார நிலையம்

“எங்க பக்கத்து வீட்டு குழந்தை” என்றதும்… டாக்டர், “அம்மா,அப்பாவை வரச் சொல்லு அப்பத்தான் பாப்போம்… அட்மிஷனுக்கு கையெழுத்து வேணும்… என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே, “இல்ல, இல்ல,, எங்க தங்கச்சிப் பொண்ணு எது ஆனாலும் நான் பொறுப்பேத்துக்குறேன்… குழந்தைக்கு வேர்க்க, ஆரம்பிக்குது என்னான்னு பாருங்க… அப்பா, அம்மா வந்துட்டே இருக்காங்க… ” னு சொல்லி அட்மிசன் போட வைச்சிருக்கிறாரு…என் வீட்டுக்காரு.  அங்கு,  குழந்தய படுக்கவெச்சதும் வாயில நுரை தள்ளிடுச்சி…  டாக்டருங்க எங்கள வெளியில இருங்கனுட்டு இரண்டு ஊசிப் போட்டாங்க… உடனே எங்க வீட்டுக்காரு எனக்கு போன் போட்டு, குழந்தை நிலைமை பயமா இருக்கு, அவங்க அப்பா அம்மாவுக்கு சொல்லி சீக்கிரம் வரச்சொல்லுன்னாரு… நான்  பக்கத்து வீட்டு பாட்டிய அனுப்பி வெச்சேன். அப்புறம்…  நான் குழந்தை கடிப்பட்ட..அந்த இடத்துலப் போய் கிளறிப்பார்த்தேன்…. சின்ன, மெல்லிசான பாம்பு,  அதைப் பார்த்ததுமே அடிச்சி எரிச்சிட்டேன்…

உடம்பு மட்டும் தான் எங்கிட்டருந்ததே ஒழிய உசிரு எங்கிட்ட இல்ல…  உடனே நானும் ஆஸ்பத்திரிக்குப் போயிட்டேன்…  உள்ளவே விடாம.. டாக்டர் மட்டும் பேசிட்டே இருந்தாரு… குழந்தை நிலைமை மோசமா இருக்கு செங்கல்பட்டு போனா காப்பாத்திடலாமுனு அங்க இருந்து, குழந்தைய மூட்டை கட்ட ஆரம்பிச்சாங்க… ஆம்புலன்ஸ்ல குழந்தைய ஏத்துனாங்க… குழந்தை என்னய வெறிச்சி, வெறிச்சிப் பார்த்தா… அவங்க ஆயாக்கிட்ட… “ஆயா, நான் செத்துடுவேனாயா… ” னு கேட்டா… எங்களால தாங்க முடியல… இன்னுமும் அந்த வார்த்தை என் காதுல கேட்டுட்டேயிருக்கு… சாவுற வயசாம்மா அது…    கடைசில இரண்டு மணி நேர அலைக்கழிப்புக்குப் பிறகு,    செங்கல்பட்டு அனுப்பி, சாவடிச்சி, அறுத்து, வெள்ளத்துணியில பொட்டலம் கட்டி அனுப்பிட்டானுங்களே… னு சத்தமிட்டு அழுதார்.

அவரை தேற்றியபோது, “எப்படிம்மா அழாம இருக்க முடியும்… அதுக்கூட ஸ்கூல்ல படிச்ச புள்ளைங்க, சர்மிளா செத்துட்டான்றத நம்ப முடியாம தினமும் வந்து பார்த்துட்டு போதுங்க… அவங்க அம்மாக்காரி மணிக்கொருக்கா எங்கிட்ட, எம்பொண்ணு உங்கிட்டத்தான் கடைசியா பேசியிருக்கு…. என்ன சொல்ல வந்தாளோ, என்ன வேதனைய அனுபவிச்சாளோ, பக்கத்துல இல்லாம பாவியாயிட்டேனேனு பித்து பிடிச்சி பேசறாளே… எப்பிடி பதில் சொல்லுவேன் நான்… அவங்க அப்பா, அம்மா இருந்தா காப்பாத்தி இருப்பாங்களோ,  நாம வுட்டுட்டோமோனு மனசாட்சி… என்ன கொல்லுதே… என்னா அழகு, என்னா பேச்சு….அது கடைசியா, வீட்டு வேலைய செஞ்சத பார்த்தது… கண்முன்னாடிய ஓடுதம்மா…. கடைசியா பேசுன பேச்சுலயிருந்து….. என்னால மீண்டு வர முடியலேயம்மா… என்று அழுதார்.

அடுத்த நிறுத்தத்தில் இறங்க வேண்டிய நான், இறந்த குழந்தையின் தாயாரைப் பார்க்க வேண்டும் என்று மனசு பாரமாக அழுத்த, அவருடனே இறங்கிவிட்டேன்.

இறந்த சர்மிளா உடுத்திய துணி, அவளுக்கு பிடித்த பிஸ்கட், மிட்டாய் வைத்து அழுதுக் கொண்டிருந்தார்கள்.

சர்மிளாவின் ஓட்டு வீடு. அங்கு, சர்மிளா பெற்றோர்கள் இறந்த சர்மிளா உடுத்திய துணி, அவளுக்கு பிடித்த பிஸ்கட், மிட்டாய் வைத்து அழுதுக் கொண்டிருந்தார்கள்.  தெருக்காரர்கள் ஆறுதல் சொல்ல, தாங்க முடியாத துயரம் அங்கே இறுகியிருந்தது.

சிறிது நேரத்திற்குப் பிறகு, சர்மிளாவின் தந்தையிடம் மெதுவாகப் பேசினேன்.

” எப்படியோ எங்களுக்கு தகவல் வந்ததுமா….. பக்கத்தூர்ல தள்ளு வண்டில காய்கறி வியாபாரம் பண்ணிகினு இருந்தோம்.   அலறி அடித்து காஞ்சிபுரம் ஆஸ்பத்திரிக்கு ஓடினேன்.  டாக்டருங்க…  என்ன கிட்டவே சேர்க்கல….. போன உடனே குறைஞ்சது பத்து கையெழுத்துக் கேட்டாங்க…. எதையும் யோசிக்காம பொண்ணுப் பொழைச்சா போதும்னு போட்டேன்… கடைசியில….. முடியாது… செங்கல்பட்டுக்கு எடுத்துட்டு போய்டுங்கனு….. அவசரப்படுத்தி ஆம்புலன்சுல ஏத்திவிட்டுட்டாங்க….. கடைசி வரைக்கும் கடிப்பட்ட எடத்துல எந்த ட்ரிட்மெண்டும் பண்ணல…. குளுக்கோஸ் மட்டும் ரெண்டு கையிலயும் போட்டு என்னைய பிடிச்சிக்க சொல்லிட்டாங்க…… ஆம்புலன்ஸ்சுல ஏத்துனதும்… குழந்தை துவண்டு கருப்பாயிடுச்சி,  நினைவு இல்ல….  சர்மிளா… சர்மிளா……. னு கத்தினேன் “ம்ம்ம்….ம்ம்ம்……னு” ….மொனவுனா குழந்தா…….ஆம்புலன்சுல வேலை பாக்கிற தம்பி, பயப்படாதீங்க….. சீக்கிரம் போய்டலாம்….னு சொல்லி வேகமா கூட்டிட்டுப் போய் விட்டுடுச்சி……. குழந்தையின் முனகல் சுத்தமா நின்னுடுச்சி…… செங்கல்பட்டு ஆஸ்பத்திரிக்குபோனா அங்க, குழந்தய கீழ இறக்கறதுக்கு சக்கர நாற்காலி இல்லன்னாங்க…… எங்கப் போய் சொல்லுவேன்…. அந்த கொடுமைய…. சக்கர வண்டிக் கேட்டு சண்ட போடுறதா….. துவண்டு கிடக்கிற புள்ளய தூக்குறதா…… நினைச்சிப் பாருங்க.

கூட இருந்த தம்பி… மருந்து பாட்டில்களை தூக்கிகிச்சி, நான் எம்பொண் இரண்டு கையாலயும் அள்ளிக்கிட்டேன்….. பொறந்தப்ப எப்படி ஒண்ணும் தெரியாம கிடந்ததோ…… அதுபோலவே…… எந்த உணர்ச்சியும் இல்ல….. குழந்தை சில்லுனு இருந்தது………. அங்க… சின்னப் புள்ளங்கதான் டாக்டரா இருந்தாங்க…. பெட்டுல போட சொன்னாங்க… போட்டதும் ஒரு நர்சம்மா வந்து, “…ஒண்ணும் இல்ல எதுக்கு தூக்கி வந்தீங்கனு…..”  சொல்லுச்சி… கூட வந்த பக்கத்து வீட்டம்மா… கத்துனாங்க….. இப்பத்தான்மா புள்ள…. ஆயா நான் செத்துடுவேனானு கேட்டிச்சி, ….பேசிச்சிம்மா ….. பாருங்கம்மா… ன்னு அழுதாங்க. பக்கத்துல இருக்கற டாக்டருங்க “மெஷின் வேண்ணா போட்டு பாக்கலாம்..  ஒரு நாள் கழிச்சித்தான் சொல்ல முடியும்” னு சொன்னதும்…  நமக்குத்தான் படிக்கதெரியாதே,  சரி, படிச்சவங்க காப்பாத்தி குடுப்பாங்கனு… ஒத்துக்கிட்டேன்.

சர்மிளாவின் குடும்பத்தினர்.

ஒருநாள் முழுக்க மெஷினப் போட்டு ஷாக் கொடுத்தாங்க…. டாக்டருங்க எல்லாரும் அடிக்கடி வந்துப் பார்த்து நோட்டுல எழுதிப்பாங்க…. என்னன்னு நமக்கு தெரியும்…. கடைசில பெருக்கறவங்கதான் சொன்னாங்…. “அவங்களெல்லாம் படிக்கிறவங்க… அப்படித்தான் செய்வாங்கனு”…… , நான்  ஜில்லுனு இருந்த குழந்த  கையையும், காலையும் தடவி, தடவி விட்டேன்.அது என் கையே மறத்துப்போச்சி…. ஆனா எந்த பிரயோஜனமும்.. இல்ல…  அப்பத்தான் எனக்கு பட்டது இவங்க புள்ளய வைச்சி பாடம் ஏதுனாச்சும் படிக்கிறாங்கனு…. அப்புறம் கேட்டேன்…. எதனா முன்னேற்றம் தெரியுதா…. எனக்கு ஒண்ணும் புடிபடலேன்னேன்…  அவங்க, பெரிய டாக்டர வரவெச்சி சொன்னாங்க…  “நினைவு திரும்பும்னு எதிர்ப் பார்த்தோம்…. இல்ல…..மெஷன எடுத்துடுறோம்…. போஸ்மார்ட்டம் செய்ததும் வீட்டுக்கு தூக்கிட்டு போய்டுங்க….  ஆம்புலன்சுக்கு ஏற்பாடு பண்றோம்”னு சொன்னாங்  ….. வெள்ளை துணியிலருந்து எல்லாத்தையும் வெளியே வாங்கிக்கு வான்னு  எழுதிக் கொடுத்தாங்க……  மனசு பூரா கோபம் கொப்பளிச்சிது…. குழந்தைய நல்லா அடக்கம் பண்ணனுமே… என்ன செய்ய…. கத்தி கதறிட்டு வந்துட்டேன்…..

என் குழந்தைக்கு …. எந்த உதவியும் செய்யல…எம்பொண்ணு செத்துப்போச்சி….. நமக்குத்தான் ஒண்ணும்.. தெரியாது, டாக்டருக்கு படிச்சிட்டு வர்றவங்களுக்கு, பாம்புகடிக்கு என்ன செய்யணும்னு தெரியாதா? நர்சுக்கு தெரியாதா? அய்யம்பேட்டை ஆஸ்பத்தியில  டாக்டர் வெளியிலகூட வந்துப் பாக்காமா துரத்தியிருக்காங்க…. இதே அவங்க புள்ளயாவோ, பணக்காரன் வுட்டு புள்ளயாவோ இருந்திருந்தா வுட்டுருப்பாங்களா….. ஏழை புள்ளதானே என்னா செய்யப்போறாங்கனு வுட்டுடானுங்க….. நான், பொண்ண புதைச்சிட்டு, மனசு கேக்காம சொந்தகாரங்களோடு ஆஸ்பத்திரிக்கு போனேன்.  கத்தி, ஆர்ப்பாட்டம் பண்ணி டாக்டர வெளிய வரவெச்சேன்…. டாக்டரு இங்க எந்த வசதியும் இல்ல…. இங்க இருந்து டைம வேஸ்ட் பண்ண வேண்டாமுனுதான் அனுப்பினேன்னு சொல்றான்…. அங்க கூட வேலைப் பாக்கிறவங்க…. விதி….. 13 வயசுல பொம்பள புள்ளங்களுக்கு சகடை அடிச்சிருக்கும் அத நீங்கத்தான் முன்னாடிப் பார்த்திருக்கணும்னு சொல்றாங்க….. ஏண்டா பாவிகளா… முதலுதவி பண்ண வேண்டாமா?…… என்ன பண்ணா காப்பத்தலாமுனு சொல்லியிருக்கலாமே…. பாம்பு விஷம் எம்பொண்ண சாவடிக்கலடா….  உங்களோட அலட்சியம்தான் சாவடிச்சிருக்குடானு கத்திட்டு வந்துட்டேன்….

ஒரு விசயம்…. நல்லா யோசிச்சிப் பாருங்க…. எம்பொண்ண சுண்டு விரல்ல பாம்பு கடிச்சிருக்கு….. குழந்தை ஆஸ்பத்திரிக்கு போயிருக்கு, அதுக்கப்புறம் ஸ்கூட்டருல 10 கிலோ மீட்டருக்கு காஞ்சிபுரம் போயிருக்கு…. அங்க இருந்து 100 அடி உள்ள நடந்து போயிருக்கு…..அங்கயும் எந்த கவனிப்பு இல்லாம படுக்க வெச்சிட்டாங்க… நுரை தள்ளிப் போய்ட்டா…. இப்படி.. என்பொண்ணுக்கு வந்த கதி யாருக்கும் வரக்கூடாது……. என ஓவென்று வாய்விட்டு அழுதார்.

அவர்களுக்கு என்ன சமாதானம் சொல்வது?

– ஜோதி.

காஞ்சிபுரம் என்றால் பட்டுச் சேலைகளும், அந்தப் பட்டுச் சேலைகளின் சங்கமமான பாண்டி பஜாரும் தமிழக தொலைக்காட்சிகளில் அடிக்கடி விளம்பரமாய் ஒளிரும். சங்கரமடம் எனும் மேல் மட்ட அதிகாரத் தரகர் இடத்திற்கு வராத முதலாளிகளோ, அதிகாரிகளோ, அரசியல்வாதிகளோ எவரும் இல்லை. பாஜக-வின் அகில இந்திய தலைவர்கள் முதல் உள்ளூர் நாட்டாமைகள் வரை காஞ்சிபுர சங்கரமடம்தான் அவர்கள் கால் பதிக்கத் தவறாத புண்ணிய பூமி.

இங்குதான் நெசவாளிகள் எனும் பெரும் சமூகப் பிரிவே வதைபட்டு வருகிறது. அழிக்கப்படும் விவசாயத்தின் எச்சமும் மரண அவஸ்தையில் இருக்கிறது. சிறப்பு பொருளாதார மண்டலத்தின் நிறுவனங்களுக்கு அடிமாட்டுக் கூலி வேலைக்காக உடலை சிதைக்கும் இளைஞர்கள் ஏராளம்.

ஆயினும் இங்கே ஒரு பாம்பு கடித்தால் முதலுதவி செய்வதற்கு அரசு மருத்துவமனையில் எந்த வசதியும் இல்லை. ஓடாத ஆம்புலன்ஸ்,  நச்சு முறிவு மருந்தில்லாத மருந்தகம், முதலுதவி செய்யவோ இல்லை பிரச்சினை என்ன என்று விளக்கவோ புரிந்து கொள்ளவோ முடியாத மருத்துவமனை ஊழியர்கள் – மருத்துவர்கள்….. அருகாமை பகுதிகளில் மருத்துவமனையோ இல்லை வாகன வசதியோ இல்லாத தமிழக கிராமங்கள் எதுவுமில்லை. ஆனால் இங்கே ஒரு பாம்பு கடிக்காக சிறுமி ஒருத்தி சாக வேண்டியிருக்கிறது. ஜெயா எனும் ஏ 1 குற்றவாளிக்காக கோடிக்கணக்கில் மக்கள் நிதியை செலவழித்த அரசு நிர்வாகம் மக்களை நடத்தும் விதத்திற்கு இந்தக் கொடூரமான கொலை ஒரு சான்று.

செத்துப்போன குற்றவாளி பாசிச ஜெயாவின்  படத்திற்கு முன்னால் கும்பிட்டு விழுகின்ற திருடர்கள் ஒருபுறமும், உயிரோடு சிறையிலிருக்கும் குற்றவாளி சசிகலாவின் காலில் விழுகின்ற திருடர்கள் மறுபுறமும் நின்று லாவணி பாட, இக்கேடுக்கெட்ட கூட்டத்தின் காலடியில் மிதிபடும் தமிழகம் மொத்தமும் சுடுகாடாகிக் கொண்டிருக்கிறது. இந்தச் சுடுகாட்டிற்கு காரணமான கயவர்களை சுளுக்கெடுக்காமல் ஆர்.கே.நகர் தொகுதியில் சுற்றி வருகிறார்கள் ஓட்டுப் பொறுக்கிகளும், கார்ப்பரேட் ஊடகங்களும்.

மருத்துவமனைகளை செயல்படவைப்பது மட்டுமல்ல, மரத்தும் கொழுத்தும் போன இந்த அரசுக் கட்டுமானத்தை புரட்டிப் போடாமல் இங்கே மக்களுக்கு விடிவு இல்லை.

– வினவு

முல்லை பெரியாறு – திருவாரூர் களச் செய்திகள்

0
முல்லைப் பெரியாறு: காங் – பா.ஜ.க – சி.பி.எம் கும்பல்களை முறியடிப்போம்! -

கத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோரின் நினைவு நாளான மார்ச் 23, 2017 அன்று மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக தேனி லோயர்கேம்பில் ஜான் பென்னிகுயிக் மணி மண்டபத்தில் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது.

ஐந்து மாவட்ட மாவட்ட விவசாயிகளின் நீர் ஆதாரமான முல்லை பெரியறு அணையில் கேரள அரசு நயவஞ்சகமாக நீர் தேக்க பகுதியில் கார் நிறுத்துமிடம் அமைத்துள்ளது. இது அணையின் மொத்த கொள்ளளவான 152-அடி நீரை தேக்க விடாமல் செய்வதற்கான சதி செயலின் ஒரு துவக்கம்தான். இந்த செயல்பாடு நீர் தேக்க பகுதியில் பல்வேறு காரணங்களைக் காட்டி நடத்தப்படும் ஆக்கிரமிப்பு ஆகும்.

கேரள அரசானது தொடர்ச்சியாக தமிழகத்திற்கு பல்வேறு வகையில் முல்லைப் பெரியாறு விசயத்தில் துரோகம் செய்து வருகிறது. இதனை தடுத்து நிறுத்துவதற்கு மத்திய அரசோ, மாநில அரசோ எதுவும் செய்யவில்லை. இவற்றை கண்டித்து ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகள் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோரின் நினைவு நாளில் தொடர் முழக்க போராட்டத்தை மக்கள் அதிகாரம் அமைப்பினர் துவக்கினர்.
(படங்கலைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் :
மக்கள் அதிகாரம்.
தேனி மாவட்டம்.
_____
டாஸ்மாக் கடையை திறந்து மக்களின் தாலியை அறுக்காதே !
டாஸ்மாக் நிர்வாகமே !
68, காவனூர் ஊராட்சி, கருப்பூர் குடியிருப்பு பகுதியில்
டாஸ்மாக் கடையை திறக்கும் திட்டத்தை உடனே கைவிடு !
பொதுமக்களே !
ஏழை, எளிய மக்களின் வாழ்வை சூறையாடும் டாஸ்மாக்கை தடுத்து நிறுத்துவோம் !
தகவல் :
மக்கள் அதிகாரம்.
திருவாரூர் – 96263 52829.

பிர்லா – சஹாரா ஆவணங்கள் : மோடியின் உத்தமர் வேடம் கலைந்தது !

1

2013-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அப்போதைய காங்கிரஸ் ஆட்சியில் நடந்த லஞ்ச லாவண்யங்களில் முக்கியமான நிலக்கரி ஒதுக்கீட்டு ஊழலில் குற்றம் சாட்டப்பட்டிருந்த பிர்லா என்ற தரகு முதலாளியின் அலுவலகங்களில் ஒரு தேடுதல் வேட்டையை நடத்தியது, மத்திய புலனாய்வு துறை (சி.பி.ஐ). அந்தத் தேடுதலில் 25 கோடி ரூபாய் ரொக்கமாக கைப்பற்றப்பட்டதோடு, பிர்லா குழுமத்தின் தலைவர் (CEO) சுபேந்து அமிதாப்பின் கணினியில் இருந்து பல கோப்புகள் கைப்பற்றப்பட்டன.

அவற்றில் சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது தொடர்பாக குறிப்புகள் இருந்தன. சுபேந்து அமிதாபின் கணினியில் கிடைத்த ஆவணங்கள் ஒன்றில் – “Gujarat CM – Rs 25 crores. 12 paid. 13?” (குஜராத் சி.எம்.- ரூ 25 கோடி.12 கொடுத்தாச்சு. 13?) என்ற குறிப்பு காணப்பட்டது.

அதாவது மன்மோகன் ஆட்சியின் நிலக்கரி ஊழல் பற்றி புலனாய்வு செய்யப்போன இடத்தில், வேறொரு ஊழலுக்கான ஆதாரம் சி.பி.ஐ. வசம் சிக்கியிருக்கிறது. குஜராத் முதல்வருக்கு பிர்லா நிறுவனம் எதற்காகப் பணம் கொடுத்தது என்ற கோணத்தில் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் இன்னொரு விசாரணையை சி.பி.ஐ. தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் இந்த ஆவணங்களை வருமானவரித் துறையிடம் ஒப்படைத்த சி.பி.ஐ, மேற்படி 12 கோடி ரூபாய்க்கு பிர்லா வருமான வரி கட்டியிருக்கிறாரா என்று மட்டும் விசாரிக்கும்படி கோரியது.

அதன்படி வருமான வரித்துறை அமிதாபை பல முறை விசாரித்ததில் “Gujarat CM – Rs 25 crores. 12 paid. 13?” என்று எழுதியது தான்தான் என்று ஒத்துக் கொண்டிருக்கிறார். ஆனால், அது “Gujarat Alkalis and Chemicals” என்பதை (ஒரு இரசாயன நிறுவனம்) குறிப்பதாக விளக்கம் சொல்லியிருக்கிறார். அவர் பொய் சொல்கிறார் என்று வருமான வரித்துறை தனது 1287 பக்க விசாரணை அறிக்கையில் முடிவு செய்தது. ( http://indianexpress.com/article/india/india-others/regularly-routed-cash-through-hawala-top-birla-executive-tells-income-tax/ )

சஹாரா குழுமத் தலைவர் சுப்ரதா ராய் (இடது) மற்றும் ஆதித்யா பிர்லா குழுமத் தலைவர் குமாரமங்கலம் பிர்லா.

மோடிதான் அந்த அந்த காலகட்டத்தில் குஜராத் முதல்வராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆவணங்கள் பற்றிய வருமான வரித்துறையின் விரிவான விசாரணையிலிருந்து தெரிய வந்த இரண்டு முக்கிய விஷயங்கள் – ஒன்று, பிர்லா குழுமம் ஹவாலா மூலமாக பெருமளவு ரொக்கப் பணம் பெற்று வந்தது; இரண்டு, அவ்வாறு பெறப்பட்ட பணம் உயர் பதவிகளில் இருந்த பல்வேறு நபர்களுக்கு விநியோகிக்கப்பட்டது. கிடைத்த ஆவணங்கள் பற்றி வருமான வரித்துறை முறையான ஆய்வு நடத்தி இந்தத் தகவல்களை உறுதி செய்திருக்கிறது.

இரண்டாவது வழக்கு சகாரா குழுமம் தொடர்பிலானது. அந்தக் குழுமத்தின் தலைவர் சுப்ரதா ராய் நிதி நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் திட்டங்கள் மூலமாக கருப்புப் பணத்தை புழங்க விட்டதாக உச்சநீதி மன்றத்தால் மார்ச் 2014-இல் திகார் சிறையில் வைக்கப்பட்டவர்.

2014 நவம்பர் 22-ஆம் தேதி டெல்லி நொய்டாவில் உள்ள சகாரா குழுமத்தின் அலுவலகங்களில் தேடுதல் நடைபெற்றது. ரூ.137 கோடி ரொக்கப் பணமும், பெரும் எண்ணிக்கையிலான ஆவணங்களும், சுப்ரதா ராயின் தனிப்பட்ட ஊழியர்களின் கணினிகளில் இருந்து பல கோப்புகளும் கைப்பற்றப்பட்டன. பல மூத்த அரசியல் தலைவர்களுக்கு வழங்கப்பட்ட ரொக்கப் பணம் பற்றிய விபரங்கள் அவற்றில் இருந்தன.

ஒரு கணினி கோப்பின் அச்சுப் பிரதியில் ‘இன்னின்ன தேதியில் இன்னின்ன நபரிடம் இருந்து இவ்வளவு தொகை பெறப்பட்டது’ என்று பணம் வரத்து பட்டியல் ஒன்று இருந்தது. தொகைகளின் கூட்டல் ரூ.115 கோடி. அதன் பிறகு பல்வேறு நபர்களுக்கு, பல்வேறு தேதிகளில் ரொக்கம் பட்டுவாடா செய்யப்பட்ட விபரங்களும், பணம் கொண்டு கொடுக்கப்பட்ட இடமும், கொண்டு போனவர் பெயரும் இருந்தன.

பிர்லா குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுபேந்து அமிதாப்.

தேடுதலின் போது கைப்பற்றப்பட்ட அந்த அச்சுப் பிரதியில் ஒரு வருமான வரித்துறை அதிகாரி, இரண்டு சாட்சியங்கள் மற்றும் ஒரு சகாரா அலுவலர் ஆகியோர் கையொப்பமிட்டு உறுதி செய்திருந்தனர்.
இதே ஆவணத்தில் குறிப்பிட்டுள்ள விபரங்கள் சிறு சிறு மாற்றங்களோடு இன்னொரு கோப்பிலும் இருந்தன. முதல் ஆவணத்தில் “cash given at  Ahmedabad, Modiji” (அகமதாபாதில் கொடுக்கப்பட்ட ரொக்கப் பணம், மோடிஜி) என்று குறிப்பிடப்பட்டிருந்தது, பிற ஆவணங்களில் “cash given to CM Gujarat” (குஜராத் சி.எம்-க்கு கொடுக்கப்பட்ட ரொக்கப்பணம்) என்று எழுதப்பட்டிருந்தது.

“அகமதாபாதில் மோடிஜி”க்கு கொடுத்ததாக ரூ.40 கோடி, “மத்திய பிரதேச சி.எம்”-க்கு கொடுத்ததாக ரூ.10 கோடி, “சத்தீஸ்கர்  சி.எம்.”-க்கு கொடுத்ததாக ரூ.4 கோடி, “டெல்லி சி.எம்”-க்கு கொடுத்ததாக ரூ.1 கோடி என்று குறிப்பிடப்பட்டிருந்தன. இந்தப் பணப் பட்டுவாடாக்கள் 2013-க்கும் 2014 மார்ச்சுக்கும் இடையில் நிகழ்ந்திருக்கின்றன. அப்போது குஜராத் முதலமைச்சர் பா.ஜ.க.வின் நரேந்திர மோடி, மத்திய பிரதேச முதல்வராக இருந்தவர் பா.ஜ.க.-வின் சிவ்ராஜ் சிங் சவுகான், சத்தீஸ்கர் முதலமைச்சர் பா.ஜ.க.-வின் ராமன் சிங், டெல்லி முதல்வராக இருந்தவர் காங்கிரசின் ஷீலா தீட்சித்.

சகாரா நிறுவனத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை, பிரதமர் மோடியின் ஆட்சியில்தான் நடந்திருக்கிறது. ஆனால், சகாரா ஆவணங்கள் மட்டுமின்றி முன்னர் குறிப்பிட்ட பிர்லா ஆவணங்களும் இருட்டடிப்பு செய்யப்பட்டன. பிர்லா ஆவணங்கள் மீது நடத்திய விசாரணை முடிவுகளின் அடிப்படையிலும் சகாராவில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையிலும் லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யும்படி வருமான வரித்துறை சி.பி.ஐ.-க்கு பரிந்துரைத்திருக்க வேண்டும். ஆனால் விஷயம் அப்படியே இருட்டடிப்பு செய்யப்பட்டுவிட்டது. இப்படிஊழலை இருட்டடிப்பு செய்த வருமான வரித்துறை அதிகாரி கே.வி.சவுத்ரிக்கு கிடைத்த தண்டனை என்ன தெரியுமா?
வருமான வரித் துறை புலனாய்வு பிரிவின் தலைவராக இருந்த கே.வி சவுத்ரி, 2015-ஆம் ஆண்டு ஜூன் மாதம் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் (CVC) தலைமை கண்காணிப்பு ஆணையராக மோடியால் நியமிக்கப்பட்டார். ராம மோகனராவை ஊழல் கண்காணிப்பு ஆணையராக ஜெயலலிதா நியமித்தாரே அதுபோலத்தான்.

ஊழல் கண்காணிப்பு ஆணையர் நியமனத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றம் சாட்டினார் பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண்.
முதலாவதாக, வருவாய்த் துறை அதிகாரி (ஆட்சிப் பணி அந்தஸ்து – I.R.S.) இல்லாத ஒருவர் கண்காணிப்பு ஆணையராக இதுவரை நியமிக்கப்பட்டதில்லை என்ற முறைகேட்டை சுட்டிக்காட்டினார் பூஷண்.

இரண்டாவதாக,  2-ஜி ஊழல் வழக்கை சி.பி.ஐ. விசாரித்துக் கொண்டிருந்தபோது, அதோடு தொடர்புடைய பலருடன் பேரம் பேசியதாக உச்சநீதிமன்றத்தால் எச்சரிக்கப்பட்ட முன்னாள் சி.பி.ஐ. இயக்குனர் சின்ஹா-வின் வீட்டின் வருகைப் பதிவேட்டில், அப்போது வருமான வரித்துறையின் புலன் விசாரணை பிரிவின் தலைமைப் பொறுப்பில் இருந்த சவுத்ரியின் பெயர் 4 முறை இடம் பெற்றிருந்தது.

அந்தக் காலகட்டத்தில்தான் ஸ்டாக் குரு ஊழலில் (ஸ்டாக் குரு என்ற மோசடி நிறுவனத்தை ஆரம்பித்து 6 மாதத்தில் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக நடந்த மோசடி) சவுத்ரியின் பங்கு பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்திக் கொண்டிருந்தது. இன்னொரு பக்கம், சவுத்ரியால் விசாரிக்கப்பட்டு வந்த ஹவாலா டீலர் மொயின் குரேஷியும் அதே காலகட்டத்தில் ரஞ்சித் சின்ஹாவின் வீட்டுக்கு வந்து போயிருக்கிறார்.அதாவது, ஸ்டாக் குரு ஊழலுக்காக சவுத்ரியை விசாரிக்கும் சி.பி.ஐ. அதிகாரி சின்ஹாவும், ஹவாலா வழக்கில் சவுத்ரியால் விசாரிக்கப்படும் மொயின் குரேஷியும் நெருங்கிய தொடர்பில் இருந்திருக்கின்றனர். இதுதான் ஊழலை ஒழிக்கும் பொறுப்பை ஏற்றிருக்கும் மத்திய புலனாய்வுத் துறை மற்றும் கருப்புப் பணத்தை ஒழிக்கும் வருமான வரித்துறை ஆகியவற்றின் லட்சணம்.

மூன்றாவதாக, எச்.எஸ்.பி.சி. என்ற பன்னாட்டு வங்கிக் கணக்குகளில் கருப்புப் பணத்தை பதுக்கி, சுமார் 4500 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்தவர்கள் மீதான வருமான வரித்துறை விசாரணையை 3 ஆண்டுகளாக இழுத்தடித்து வருவதும் திருவாளர் சவுத்ரிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

மோடி அரசால், முறைகேடான வழியில் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள கே.வி.சௌத்ரி.

இத்தகைய ‘தூய்மை’யான பின்னணி கொண்ட சவுத்ரி, ‘தூய்மை’யான பிரதமரால் ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பதை எதிர்த்து, பிரசாந்த் பூஷண் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
பின்னர், 2016 நவம்பர் மாதம் சகாரா – பிர்லா ஆவணங்கள் பற்றிய தகவல் கிடைத்ததை ஒட்டி, அவற்றின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று அதே வழக்கில் ஒரு மனு தாக்கல் செய்தார் பிரசாந்த் பூஷண்.

உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் எந்த அவசரத்தையும் காட்டவில்லை. இந்த வழக்கில் ஆஜரான மோடி அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்கி, “இத்தகைய ஆவணங்களையெல்லாம் ஆதாரங்களாக ஏற்றுக் கொண்டால், நாட்டில் யாருமே பாதுகாப்பாக இருக்க முடியாது” என்று வாதிட்டிருக்கிறார். உச்சநீதிமன்றமோ, “இந்த ஆவணங்கள் சில உதிரித் தாள்கள் மட்டுமே. அவற்றின் அடிப்படையில் உயர் பதவியில் இருக்கும் முக்கியமான தலைவர்களை விசாரணைக்கு உட்படுத்த முடியாது. இதை எல்லாம் வைத்துக் கொண்டு உயர் பதவியில் இருப்பவர்கள் மீது விசாரணைக்கு உத்தரவிட்டால் அவர்கள் எப்படி ஆட்சி புரிய முடியும். இன்னும் வலுவான ஆதாரங்கள் இருந்தால் பேசுங்கள் என்று கூறி பல முறை இழுத்தடித்து  கடைசியில் வழக்கை தள்ளுபடியே செய்து விட்டது.

முறைகேடும் ஊழலும் நடந்திருக்கிறது என்பதற்கு இதைவிட வேறு என்ன வலுவான ஆதாரத்தை தர முடியும்? மோடி –  25 கோடி ரூபாய் என்று ஒரு துண்டு சீட்டில் யாராவது எழுதிக் கொண்டு வந்து காண்பித்தால், உடனே ஊழல் வழக்கு போட முடியுமா என்பதுதான் உச்ச நீதிமன்றம் எழுப்பும் கேள்வி. இந்த ஆவணங்கள் பிரசாந்த் பூஷண் கொண்டு வந்து காட்டிய உதிரிக் காகிதங்கள் அல்ல. பிர்லா மற்றும் சகாரா அலுவலகங்களில் சி.பி.ஐ.யும் வருமான வரித்துறையும் கைப்பற்றியிருக்கும் ஆவணங்கள். இதற்கு மேல் வலுவான ஆதாரம் காட்ட வேண்டுமென்றால், அது லஞ்சப் பணத்துக்கு பெற்றுக்கொண்டவர் வழங்கும் ரசீதாகத்தான் இருக்க முடியும். தற்போது உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு, ஊழல் வழக்குகள் பதிவு செய்வது தொடர்பாக ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்புகளுக்கு எதிராக உள்ளது.

1990-களில் பா.ஜ.க தலைவர் அத்வானி முதற்கொண்டு பல்வேறு கட்சிகளின் முக்கியமான தலைவர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது தொடர்பான ஜெயின் ஹவாலா டயரி வழக்கில் உச்சநீதி மன்றம் கொடுத்த வழிகாட்டலின்படி, ‘ஆதாரங்கள் எவ்வளவு பலவீனமாக இருந்தாலும் உயர்பதவியில் இருப்பவர்கள் தொடர்பாக ஊழல் குற்றச்சாட்டுகள்  தவறாமல் விசாரிக்கப்பட வேண்டும்’. 2013-இல் லலிதா குமாரி வழக்கில், “எந்த ஒரு ஆதாரம் கிடைத்தாலும், அந்த ஆதாரம் உண்மையானதா, போலியானதா என்று கவலைப்படாமல், அது உண்மையானது என்ற ஊகத்தின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும்” என்று உச்சநீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமர்வு ஒன்று தீர்ப்பளித்திருந்தது.

இந்த உச்சநீதிமன்ற வழிகாட்டல்களின்படி சகாரா- பிர்லா ஆவணங்கள் மீது விசாரணை நடத்தும்படி பிரசாந்த் பூஷண் தலைமை கண்காணிப்பு ஆணையம், நேரடி வரிகளுக்கான வாரியம், அமலாக்கத் துறை, மத்திய புலனாய்வு அலுவகம், உச்சநீதி மன்றத்தால் நியமிக்கப்பட்ட கருப்புப் பணத்துக்கான சிறப்பு விசாரணைக் குழு ஆகியோருக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
வருமான வரி  சட்டத்தின் 132(4A) பிரிவின் கீழ் கைப்பற்றப்பட்ட கோப்புகளில் உள்ள விபரங்கள், மேற்படி விசாரிக்கப்படுவது வரை உண்மை என்றே கருதப்பட வேண்டும். மேலும், ஐ.டி. துறையின் மதிப்பீட்டு அறிக்கையில் சகாரா தானாகவே முன்வந்து ரூ.1,217 கோடி பணத்தை ஒப்படைத்ததாக பதிவாகியிருக்கிறது.

ஜெயின் ஹவாலா டயரிகளில் இருந்ததைவிட வலுவான ஆதாரங்கள் சகாரா மற்றும் பிர்லா ஆவணங்களில் இருந்தன.ஜெயின் குறிப்புகளில் “LKA”, “HN”, “AB” என்று சில முதலெழுத்துகள் குறிப்பிடப்பட்டு பல லட்சம் கொடுக்கப்பட்டதாக பதிவாகியிருந்தது.அதன் அடிப்படையிலேயே அத்வானி உள்ளிட்ட பல கட்சித் தலைவர்கள் மீது ஊழல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டிருந்தது, உச்சநீதிமன்றம்.

பிர்லா ஆவணங்களிலோ, இன்னும் தெளிவாக, விபரமாக குறிப்பிட்ட திட்டங்களுக்கு இன்ன அமைச்சகத்துக்கு, இன்ன அதிகாரிக்கு கொடுக்கப்பட்ட லஞ்சத் தொகைகள் பற்றிய குறிப்பான விபரங்கள் காணப்படுகின்றன.இவை தொடர்பான மின்னஞ்சல் பரிவர்த்தனை விவரங்களும் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் உள்ளன. அந்த மின்னஞ்சல் எழுதப்பட்ட காலத்தில் ஆதித்ய பிர்லா குழுமத்தின் ஹிண்டால்கோ நிறுவனம் தனது அலுமினியம் ஆலைக்காக மத்திய பிரதேசத்தின் சிங்கரவுலி நிலக்கரி வயல்களின் மகான் பிளாக்கிலிருந்து நிலக்கரி பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தது. இந்த விபரங்கள் காட்டுவது என்னவென்றால், நவம்பர் 16, 2012 தேதியிட்ட “GC October/ November” என்ற ஆவணத்தில் “Gujarat CM”-க்கு பணம் கொடுக்கப்பட்டது தொடர்பான குறிப்பை ஏதோ கிறுக்கல் என்று ஒதுக்கித் தள்ளி விட முடியாது என்பதைத்தான்.

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் நியமனத்தில் நடந்த முறைகேட்டை அம்பலப்படுத்திய உச்சநீதி மன்ற நீதிபதி பிரசாந்த் பூஷண்.

“இது துரதிர்ஷ்டவசமானது. ஊழலுக்கு எதிராகவும், பொது வாழ்க்கையில் நேர்மைக்காகவும் நடத்தப்படும் இயக்கத்துக்கு மிகப்பெரிய பின்னடைவு. நிலக்கரி ஊழலிலும், 2ஜி ஊழலிலும் சுயேச்சையான விசாரணைக்கு உத்தரவிட்டு தன்னை சிறப்பித்துக் கொண்ட உச்சநீதி மன்றத்தின் பிம்பத்தின் மீதும் இது ஒரு கறுப்புப் புள்ளி. அதிகாரத்தில் இருக்கும் பலம் பொருந்தியவர்கள் சிறை செல்ல நேரிடும் என்றால், தீர்ப்பெழுதும் உச்சநீதி மன்றத்தின் கைகள் நடுங்குகின்றன” என்று கூறியிருக்கிறார் பிரசாந்த் பூஷண்.
ஆ.ராசாவையோ, கனிமொழியையோ, சாகித் பல்வாவையோ, அம்பானியின் ஊழியர்களையோ சிறைக்கு அனுப்புவதற்கு உச்ச நீதி மன்றத்தின் கைகள் நடுங்கவில்லை. ஆனால் அதே வழக்கில் அம்பானியையும் டாடாவையும் நீரா ராடியாவையும் சிறைக்கு அனுப்ப உச்ச நீதிமன்றத்துக்கு துணிவில்லை. இது நேரடி சாட்சியமே இல்லாமல் அப்சல் குருவுக்கு தூக்குதண்டனை விதித்த உச்ச நீதிமன்றம். பொய் சாட்சி என்று தெரிந்த பின்னரும் பேரறிவாளனை விடுவிக்க மறுக்கும் நீதிமன்றம்; நாலும் மூணும் எட்டு என்ற குமாரசாமியின் தீர்ப்பு சரியா தவறா என்று மாதக் கணக்கில் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் உச்ச நீதிமன்றம்; உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மீதான ஊழல் வழக்குகளை கிடப்பில் போட்டு வைத்திருக்கும் நீதிமன்றம்.

உச்சநீதி மன்றத்தின் கைகள் நடுங்குவது அதிகாரத்தில் இருக்கும் மோடி பற்றிய பயத்தால் மட்டுமில்லை, இந்த வழக்கில் இதற்கு மேல் அக்கறை காட்டினால், ஒட்டு மொத்த நீதிபதிகளின் மாண்பும் தெருவுக்கு வந்து விடும் என்ற கவலையினாலும் கூடத்தான். மோடி மீதான ஊழல் குற்றச்சாட்டும் பிர்லா முதலான தரகு முதலாளிகளின் பணப் பட்டுவாடாவும் விசாரணைக்கு அப்பாற்பட்டவை. அதை விசாரிக்க உச்சநீதிமன்றம் முயற்சித்தால் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஊழல்கள் எதிர்த்தரப்பால் தண்டவாளத்தில் ஏற்றப்பட்டு விடும் என்பது நீதிபதிகளுக்குத் தெரியும்.

சஹாரா−பிர்லா ஆவணங்கள் குறித்த வழக்கைப் புலன் விசாரணை செய்யவும் மறுத்து, அதனைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்ட உச்சநீதி மன்ற நீதிபதிகள் அமிதவராய் (இடது) மற்றும் அருண் மிஸ்ரா.

பிர்லா, சகாரா போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் பல 100 கோடி கணக்கில் ஹவாலா பணத்தை ரொக்கமாக கையாள்கின்றன என்ற உண்மை, பண மதிப்பு நீக்கத்தை கொண்டாடிய ஊடகங்களின் 24 மணி நேர கவரேஜில் வரவில்லை. இதே காலகட்டத்தில் எஸ்ஸார் நிறுவனத்திடமிருந்து கைப்பற்றப்பட்ட மின்னஞ்சல்களில் சகாராவைப் போலவே பல்வேறு தரப்பு மூத்த அரசியல்வாதிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்ட விபரங்களும் இருள் உலகுக்கு அனுப்பப்பட்டு விட்டது. நிலக்கரி இறக்குமதி மதிப்பை அதிகமாக காட்டி பணத்தை வெளிநாட்டில் பதுக்கிய அதானி, அம்பானி குழுமங்கள் பற்றிய செய்தியும் புதைக்கப்பட்டு விட்டிருக்கிறது.

500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்து தன்னிடம் உள்ள பணம் கருப்புப் பணம் அல்ல என்று ஒவ்வொரு குடிமகனும் நிரூபிக்க வேண்டும் (நிரூபிக்கப்படுவது வரை எல்லோரும் குற்றவாளிகளே) என்று கூறிய உத்தம சீலர்தான் பிரதமர் மோடி. அவரது பெயர் குறிப்பிட்டு பணப் பட்டுவாடா நடந்திருப்பது பற்றிய ஆதாரங்கள் கையில் இருந்தும் சி.பி.ஐ.யும் வருவாய் புலனாய்வுத்துறையும் விசாரிக்க மறுக்கின்றன.இவை போதுமான சாட்சியங்கள் அல்ல என்கிறது நீதிமன்றம்.

சஹாரா குழுமத்திடமிருந்து முறைகேடாகப் பணம் பெற்றுள்ள சத்தீஸ்கர் மாநில பா.ஜ.க. முதல்வர் ராமன் சிங் (இடது), ம.பி. மாநில பா.ஜ.க. முதல்வர் ‘‘வியாபம் ஊழல் புகழ்’’ சிவராஜ் சிங் சௌஹான் (நடுவில்) மற்றும் முன்னாள் டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித்.

லஞ்சம் வாங்குபவர் பிரதமர், அதை மூடி மறைத்தவர், லஞ்ச ஒழிப்பு ஆணையத்தின் தலைவர்; அதை விசாரிக்க மறுப்பவர்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள்; மொத்த விவகாரத்தையும் இருட்டடிப்பு செய்பவை ஊடகங்கள்.
இத்தகைய ஆதாரங்களின் அடிப்படையில் எல்லாம் புலன் விசாரணைக்கு உத்தரவிடுவோமானால், அரசமைப்பைக் காக்கும் பொறுப்பில் உள்ளவர்கள் இயங்கவே முடியாது. ஜனநாயகமும் பாதுகாப்பாக இருக்காது என்று நீதிபதிகள் அருண் மிஸ்ராவும் அமிதவா ராயும் தமது தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கின்றனர். உண்மைதான், ஜனங்களின் நலனைக் காட்டிலும், ஜனநாயகத்தின் நலன் அல்லவோ முக்கியம்!

-அறிவு

புதிய ஜனநாயகம், மார்ச் 2017

கீழடி அகழாய்வு : பழந்தமிழர் நாகரிகத்தின் கருவூலம் !

6
சிவகங்கை மாவட்டம், கீழடியில் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்ட பகுதி. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர் நாகரிகம் பூதமாக வெளிவந்து, ஆரிய-பார்ப்பன திரிபுகளுக்கு ஆப்பறைந்தது

ந்தியா வேதங்களின் நாடு என்றும், வேத கலாச்சாரம்தான் இந்தியக் கலாச்சாரம் என்றும் கூறிக்கொண்டு  இன்றைக்கு ஆட்சியில் உள்ள இந்து மதவெறிக் கும்பல் ஆரியப் பார்ப்பனியக் கலாச்சாரத்தை நம்மீது திணித்து வருகிறது. ஆனால், ஆரியர்களுக்கு முன்பே, அவர்களைவிடச் சமூக அமைப்பிலும், கலாச்சாரத்திலும், கலை இலக்கியங்களிலும் முன்னேறிய சமூகமாக, திராவிட சமூகம் விளங்கியது என்பது கால்டுவெல் போன்றவர்களின் மொழி ஆய்வுகள் மூலமாகவும், சங்க இலக்கிய ஆய்வுகள் மூலமாகவும், சிந்து சமவெளி அகழ்வாராய்ச்சியின் மூலமாகவும் ஏற்கெனவே நிரூபிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், ஆரிய கலாச்சாரத்திற்கு முந்தைய, அதற்குச் சற்றும் தொடர்பில்லாத, சங்க இலக்கியங்கள் சுட்டிக்காட்டும் வகையில் அமைந்த ஒரு நகர சமூக அமைப்பு தமிழ்நாட்டில் இருந்திருக்கிறது என்பதை உறுதி செய்யும் வரலாற்றுச் சான்றுகள் கீழடி அகழ்வாய்வின் மூலம் தற்போது கிடைத்துள்ளது. இந்து மதவெறிக் கும்பலின் ஆரிய பித்தலாட்டங்களுக்கு எதிரான மிக முக்கியமான இந்தக் கண்டுபிடிப்பை இருட்டடிப்பு செய்வதுடன், கீழடி ஆய்வைத் தொடரவிடாமல் முட்டுக்கட்டை போடும் வேலையிலும் மத்திய அரசு இறங்கியது. பா.ஜ.க.  அரசின் இந்த அயோக்கியத்தனத்திற்கு எதிராகத் தமிழகத்தின் அறிவுத்துறையினர்,  அரசியல் கட்சிகள், ஜனநாயக சக்திகள் எனப் பலரும் கண்டனங்கள் எழுப்பிய பிறகு, கீழடி ஆய்வுகள் தொடரும் என அறிவித்துத் தற்காலிகமாகப் பின்வாங்கியிருக்கிறது, இந்து மதவெறிக் கும்பல்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்திற்கு அருகில் உள்ள கீழடியில் மைய அரசின் தொல்லியல் துறை கடந்த இரண்டு ஆண்டுகளாக, இரண்டு பிரிவுகளாக அகழாய்வு நடத்தியது. வைகையாற்றுக் கலாச்சாரம் என ஆய்வாளர்களால் அழைக்கப்படும் கீழடி  பள்ளிச்சந்தைத் திடலில் காணப்படும் தொல்லியல் மேடு 110 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில் வெறும் 50 செண்ட் நிலப்பரப்பில் நடந்த அகழாய்வு மூலம், ஏறக்குறைய கி.மு. 1000-இல் தென்னிந்தியாவில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறை, கலாச்சாரம் போன்றவற்றை நிரூபிப்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.

வரிசை வரிசையாகக் கால்வாய்கள்; அதன் முகப்பிலே பெரும் தொட்டிகள்; தொட்டிக்குள் தண்ணீர் உள் செல்லவும் வெளி வருவதற்குமான அமைப்புகள்; கால்வாய் தடத்தை ஒட்டிச் சிறியதும் பெரியதுமான ஆறு உலைகள்; கால்வாயின் ஆரம்பப் பகுதியில் வட்டக் கிணறுகள்; மூடிய வடிகால்கள், திறந்த வடிகால்கள், சுடுமண் குழாய்களினால் ஆன வடிகால்கள் என மூன்று விதமான வடிகால் அமைப்புகள் – என்றவாறு ஒரு முழுமையான நகர அமைப்பை உறுதி செய்யும் சான்றுகள், தென்னிந்தியாவில் முதன் முறையாகக் கீழடியில்தான் கிடைத்திருக்கிறது.

சிவகங்கை மாவட்டம், கீழடியில் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்ட பகுதி. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர் நாகரிகம் பூதமாக வெளிவந்து, ஆரிய-பார்ப்பன திரிபுகளுக்கு ஆப்பறைந்தது

பத்திற்கும் மேற்பட்ட வீடுகள் அல்லது கட்டிடங்கள் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டு, அதன் மேற்கூரைகள் ஓடுகளால் வேயப்பட்டு இருந்திருக்கலாம் எனவும், வீடுகளின் அருகே பட்டினப்பாலையில் குறிப்பிடப்படும் சுடுமண் உறைகேணிகளும் இருந்திருக்கலாம் எனவும் இங்கு கிடைத்துள்ள சான்றுகள் மூலம் அறிய முடிகிறது. மேலும், ஆப்கானிஸ்தானில் கிடைக்கும் சூது பவளத்திலான மணிகளும், ரோமாபுரியைச் சார்ந்த மட்பாண்டங்களும், வட இந்திய பிராகிருத எழுத்துக்களும் கிடைத்துள்ளன. தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கருப்பு, சிவப்பு நிறங்களிலான ஏறத்தாழ 1,000 கிலோகிராம் எடையளவுக்கு மண் ஓடுகளும் அகழ்வாராய்ச்சியில் கிடைத்திருக்கின்றன.

சிந்து சமவெளி நாகரிகத்தில்கூட மட்பாண்டங்கள் வெளிப்புறத்தில் சுடப்பட்டதைக் குறிக்கும் வகையில், அவற்றின் வெளிப்புறம் கருநிறத்தில் இருந்தன. ஆனால், கீழடியில் கிடைத்த மட்பாண்டங்கள் உட்புறத்திலிருந்து சுடப்பட்டதைக் குறிக்கும் விதமாக அவற்றின் உட்புறம் கருநிறத்தில் இருக்கிறது. கீழடியில் வாழ்ந்த சமூகம் தொழில்நுட்பரீதியில் முன்னேறிய சமூகமாக இருந்திருப்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது.

பட்டினப்பாலையில் குறிப்பிடப்பட்டிருக்கும் சுடுமண் உறைகேணிகள் இருந்ததற்கான சான்று.

கீழடியில் தொழிற்பட்டறைகள் இருந்ததற்கான அடையாளங்களும் கண்டறியப்பட்டுள்ளன. நெசவுக்குரிய தக்கையில் துவங்கி எண்ணற்ற எளிய தொழில்நுட்பக் கருவிகள் கண்டறியப்பட்டுள்ளன. கீழடியில் கண்டறியப்பட்ட சுமார் 5,300-க்கும் மேற்பட்ட பொருட்களில் வணிகம், கலை, தொழில்நுட்பம், எழுத்தறிவு ஆகியவற்றின் சான்றுகளைக் காண முடிகிறது. மொத்தத்தில், ஒரு மேம்பட்ட நாகரிகத்தைக் கொண்ட சமூக அமைப்பாக கீழடி இருந்துள்ளது.

சென்ற ஆண்டு (டிசம்பர் மாதம்) திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இந்திய வரலாற்றுப் பேராயத்தின் மாநாட்டில் கீழடி அகழாய்வு தொடர வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றட்டிருக்கிறது.  அந்த அமர்வுக்குத் தலைமை வகித்த வரலாற்று அறிஞர் ரொமிலா தாப்பர், “கீழடியானது தமிழகத்தில் கிடைத்துள்ள மிக முக்கியமான கண்டுபிடிப்பாகும். இதன் மூலம் தமிழக வரலாற்றை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். அதற்கான ஆய்வு மேலும் தொடர வேண்டும்” என்று உரையாற்றியிருக்கிறார்.

கீழடியில் கிடைத்துள்ள சான்றுகள் அனைத்தும், வெறும் 50 செண்ட் நிலத்தில் நடத்தப்பட்ட அகழ்வாய்வில் கிடைத்தவை. மொத்தமாக உள்ள 110 ஏக்கர் நிலத்திலும் அகழ்வாய்வு செய்தால், அது தமிழக வரலாற்றை மட்டுமல்ல; இந்திய வரலாற்றையே திருப்பிப் போடும் ஒரு அகழ்வாராய்ச்சியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. 1970-க்குப் பிறகு தமிழகத்தில், மைய அரசின் தொல்லியல் துறையால் நடத்தப்படும் மிகப்பெரிய ஆய்வு கீழடி மட்டுமே.

கீழடியில் இதுவரை கிடைத்துள்ள பொருட்களை ஆய்வுசெய்கையில் ஒன்றில்கூட மதம் தொடர்பான அடையாளங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஏனென்றால், பழங்காலத் தமிழர்களின் பண்பாடு மூத்தோர் வழிபாடு, நடுகல் வழிபாடு சார்ந்த பண்பாடாகும். பிற்காலத்தில்தான் மதங்கள் தோன்றியிருக்கின்றன. சங்க இலக்கியங்கள் கூறுகின்ற, மதங்கள் தோன்றுவதற்கு முந்தைய நாகரிகத்தின் அடையாளம்தான் கீழடி.  “தமிழ் மொழியை ஒரு சமயச்சார்பற்ற மொழி” என்று மதிப்பீடு செய்த மொழியியல் அறிஞர் கால்டுவெல்லின் கருத்துக்குச் சான்றாக கீழடி நாகரிகம் இருப்பதை இந்த ஆய்வுகள் உறுதி செய்கின்றன. பெருந்தெய்வங்கள் மற்றும் மதமற்ற சமூகம் இந்தியாவில் இருந்துள்ளது என்பதை நிறுவுகிற ஆய்வுகளை, இந்தியச் சமூகமே வேத-வைதீக மரபுடையது எனப் பிதற்றிக் கொண்டிருக்கும் காவிக் கூட்டத்தால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

மட்பாண்டங்கள் உட்புறத்தில் சுடப்பட்டு பயன்படுத்தப்பட்டிருப்பதற்கான சான்று

அதனால்தான் இந்த ஆய்வை, அதன் துவக்க நிலையிலேயே நிறுத்தி வைப்பது என்ற முடிவை மத்திய பா.ஜ.க. அரசு எடுத்தது. குஜராத்தின் தொலவிராவில் 13 ஆண்டுகள், லோத்தலில் 5 ஆண்டுகள், ஆந்திராவின் நாகார்ஜுன கொண்டாவில் பத்து ஆண்டுகள் அகழாய்வு செய்யப்பட்டுள்ளது. ஆனால்,  கீழடி ஆராய்ச்சியை மட்டும் இரண்டே ஆண்டுகளோடு மங்களம் பாடுவதற்கு பா.ஜ.க. அரசு முனைப்புடன் செயல்பட்டது. தற்போது வேறு வழியின்றி மூன்றாம் கட்ட அகழ்வாய்வு நடைபெறும் என அறிவித்திருக்கிறது. தமிழக மக்கள் விழிப்போடு இல்லையென்றால், இந்த அறிவிப்பைக் கிடப்பில் போட்டுவிடவும் காவிக் கும்பல் தயங்காது.

மேலும், அகழாய்வில் கண்டறியப்பட்ட பொருட்களில் எத்தனை பொருட்களின் மூலக்கூறு மாதிரிகளை கார்பன்-14 (கார்பன் தேதியிடல்) பகுப்பாய்வுக்கு அனுப்ப வேண்டும் என்பதை மத்திய தொல்லியல் துறைதான் முடிவு செய்யும். இந்நிலையில் இராஜஸ்தான் காளிபங்கன் அகழாய்வில்  இருந்து 28 பொருட்களையும், தொலவிராவில் இருந்து 20 பொருட்களின் மாதிரியையும் ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். கீழடியில் கண்டறியப்பட்ட மூலப் பொருட்களின் மாதிரியில் குறைந்தது பத்து மாதிரிகளையாவது ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் என ஆய்வாளர்கள் கூறி வந்த நிலையில், இரண்டை மட்டுமே கார்பன்–14 பகுப்பாய்வுக்கு அனுப்ப மத்திய தொல்லியல் துறை அனுமதித்துள்ளது.

இல்லாத சரஸ்வதி நதியைக் கண்டறியவும், அந்நதியே சிந்து சம்வெளி நாகரிகத்திற்கான தொடக்கம் எனக் கூறி, தாங்கள் இதுவரைப் பிரச்சாரம் செய்தது அனைத்தும் உண்மை என நிரூபிக்கக் கோடிக்கணக்கில் செலவிட்டுக் கொண்டிருக்கிற இக்காவிக்கூட்டம், அறிவியல்பூர்வமாக கீழடியில் நடத்தப்படும் ஆய்வை மட்டும் மாற்றந்தாய் மனப்பாங்கு கொண்டு பார்க்கிறது. மேலும், அயோத்தியில் இராமாயண அருங்காட்சியகம் அமைக்க ரூ.151 கோடியை ஒதுக்கியுள்ள மத்திய அரசு, கீழடியில் கண்டறியப்பட்ட பொருட்களைக் காலப் பகுப்பாய்விற்கு அனுப்ப வெறும் ஒரு இலட்சத்தை மட்டுமே ஒதுக்கியுள்ளது.

ஆரியர்கள் வந்தேறிகள் என்ற உண்மையை இந்துத்துவா கும்பல் எப்போதும் ஏற்றுக் கொள்வது கிடையாது. காவிக்கு ம்பலின் வரலாற்றுத்  திரிபின் படி , ஆரியர்கள் இந்தியாவின் பூர்வகுடிகள். அதேபோன்று வேதங்களில் கூறப்பட்டுள்ள கலாச்சாரம்தான் இந்தியாவின் கலாச்சாரம், அதனைத் தாண்டி வேறு எந்த கலாச்சாரமும் இந்தியாவில் இருக்கவில்லை. சமஸ்கிருதம்தான் இந்திய மொழிகள் அனைத்திற்கும் தாய் என்றும், மற்ற இந்திய மொழிகள் அனைத்தும் அதிலிருந்துதான் தோன்றின என்று அவர்கள் கூறிவருகின்றனர்.

மேலும், திராவிடர் என்ற கருத்தாக்கம், ஆரிய-திராவிடப் பாகுபாடு, திராவிடர்களை ஆரியர்கள் அடிமைப்படுத்தியது ஆகியவை ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி எனக் கூறி,  தொன்மை வரலாறையெல்லாம் மறுத்து வருகிறது.

வட்டவடிவிலான உலைகள்

ஒரே கலாச்சாரம், ஒரே மொழி, ஒரே நாடு – இந்து, இந்தி, இந்தியா என்ற தங்களது அரசியல் நோக்கத்திற்கு ஏற்றவாறு நம் நாட்டின் வரலாற்றைக் கட்டமைக்கவே இந்துத்துவா கும்பல் விரும்புகிறது. ஆனால், இதனை உண்மை என நிறுவுவதற்கு அவர்களிடம் சான்றுகள் எதுவும் இல்லை. புராணங்களிலும், இதிகாசங்களிலும் கூறப்பட்டுள்ள கற்பனைகளை, கட்டுக் கதைகளை மட்டுமே அவர்களால் சான்றுகளாகக் காட்ட முடிகின்றது. இந்தக் கட்டுக்கதைகளை உண்மை என நிரூபிக்கும் ஆதாரங்களைத் தேடுவதையே இந்தியத் தொல்லியல் துறையின் முழுநேரப் பணியாக அவர்கள் மாற்றியிருக்கின்றனர்.

காவிக்கும்பலின் இந்தப் பொய்ப் பிரச்சாரத்திற்கு வரலாறு நெடுகிலும் தமிழகம்  ஒரு எதிர்ப்பின் அடையாளமாக இருந்து வந்துள்ளது. ஆரிய-திராவிட முரண்பாட்டையும் ஆரியர்கள் திராவிடர்களை அடிமைப்படுத்தியதையும் முன்வைத்துத் தமிழகம் தொடர்ந்து போராடி வந்துள்ளது. இந்திய மொழிகள் அனைத்திற்கும் சமஸ்கிருதம்தான் தாய் மொழி என்ற பிரச்சாரத்திற்கு எதிராக, தமிழ் மொழி சமஸ்கிருதத்தின் சார்பு இல்லாமல் தனித்து இயங்கக் கூடிய செம்மொழி என்றும், தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் அனைத்தும் சமஸ்கிருதத்துக்கு நேர் எதிர் தன்மை கொண்ட திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்றும் கால்டுவெல்லால் ஏற்கெனவே நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சமஸ்கிருத, ஆரிய கலாச்சார மேலாதிக்கத்தை நிறுவ விரும்பும் காவிக் கும்பலின் வரலாற்று மோசடியின் மீது விழுந்த சம்மட்டி அடியாக  கீழடி அகழ்வாய்வு அமைந்திருக்கிறது.  சீப்பை ஒளித்துவைத்துவிட்டுக் கல்யாணத்தை நிறுத்திவிடும் முட்டாள்தனம் போல, கீழடி அகழ்வாராய்ச்சியைத் தடுப்பதன் மூலம் திராவிட வரலாற்றை இருட்டடிப்பு செய்துவிடலாம் எனப் பகற்கனவு காண்கிறது, காவிக் கும்பல்.

-அழகு

புதிய ஜனநாயகம், மார்ச் 2017