Friday, June 12, 2026
முகப்பு பதிவு பக்கம் 593

புதுதில்லி JNU-வில் பா.ஜ.க பாசிசம் – நேரடி ரிப்போர்ட்

7

நீ ஒரு தீவிரவாதி. அதை முதலில் ஒப்புக் கொள். உன்னிடமிருந்து விளக்கங்கள் எதையும் நான் கேட்க விரும்பவில்லை. நீ ஒரு தீவிரவாதி. நீ ஒரு பயங்கவாதி. ஒப்புக் கொள்”

பிப்ரவரி 10ம் தேதி இரவு டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் அர்னாப் கோஸ்வாமியின் வெறிக்கூச்சல்களை எதிர் கொண்டு அதற்குarnab-umar-khalid விளக்கங்கள் கொடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தார் உமர் காலித். உமர் காலித் தில்லி ஜவகர்லால் பல்கழைக்கழக மாணவர். மேற்படி “விவாதம்” நடந்ததற்கு முந்தைய தினம் பல்கலைக்கழகத்தில் அவரும் அவரது நண்பர்களும் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வு ஒன்றில் “தேச விரோதிகளை” திட்டமிட்டு கலந்து கொள்ளச் செய்த காரணத்தால் அவர் ’பயங்கரவாதி’ என்பது அர்னாப் கோஸ்வாமியின் தீர்ப்பு. நீதிபதி அர்னாப் கோஸ்வாமியின் தீர்ப்பு வெளியானதற்கு மறுநாளில் இருந்து உமர் தலைமறைவாகிப் போனார்.

உமர் காலித் தலைமறைவாக இருந்ததாலும் அவரது பெயர் “உமர் காலித்” என்பதாக இருப்பதாலும் முகத்தில் மெல்லிய தாடி இருந்ததாலும் பயங்கரமான தீவிரவாதியாக உருவெடுத்திருந்தார். அவருக்கு ஜெய்ஷ் ஏ முகம்மது அமைப்போடு தொடர்பை உருவாக்கி இருந்தன ஊடகங்கள். அவரது தொலைபேசியில் இருந்து தில்லிக்கு வெளியே உள்ள சிலருக்கும், காஷ்மீரில் உள்ள சிலருக்கும் அழைப்புகள் செய்யப்பட்டிருப்பதே போதுமான ஆதாரமாக இருந்தது.

தற்போது தேசிய ஊடகங்களில் அனல் கிளப்பிக் கொண்டிருக்கும் தில்லி ஜவகர்லால் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இரண்டு தீவிரவாதிகளில் இன்னொருவர் அப்பல்கலைக்கழத்தின் மாணவர் சங்கத்தின் தலைவரான கண்ணையா குமார்.

”இதோ இவன் தான் கண்ணைய்யா குமார். இவனுக்கு ஜெய்ஷ் ஏ முகமது அமைப்போடு தொடர்பிருக்கிறது. விஷயம் தெரியுமா? இவன் கடந்த காலங்களில் காஷ்மீரில் உள்ளவர்களுக்கு தொலை பேசியிருக்கிறான். உளவுத் துறையிலிருக்கும் எங்களது “சோர்ஸ்” மூலம் இந்த தகவல்கள் எமக்குக் கிடைத்துள்ளன….”

டைம்ஸ் நவ், ஜீ மற்றும் நியூஸ் எக்ஸ் தொலைக்காட்சிகளின் நெறியாளர்கள் களத்தில் இறங்கியிருந்தனர். ”விடுதலை” கோரி கண்ணையா குமார் எழுப்பிய முழக்கங்கள் ஹாலிவுட் திகல் படங்களில் வரும் பின்னணி இசையோடு இத்தொலைக்காட்சிகளில் காட்டப்பட்டன.

”கேட்டீர்களா சேதியை? விடுதலை வேண்டுமாம் இந்த பிரிவினைவாத பயரங்கவாதிகளுக்கு…”zee-news

வட இந்திய ஆங்கில மற்றும் இந்தி தொலைக்காட்சிகள் தேசியம் மற்றும் தேசபக்திக்கான புதிய விளக்கங்களை பிப்ரவரி 9-ம் தேதிக்குப் பின் எழுதி முடித்த போது இந்த நாட்டுக்கு புதிதாய் சில தீவிரவாதிகள் கிடைத்திருந்தனர்.

உமரின் தந்தையைக் கொன்றும், அவரது இரண்டு சகோதரிகளை பாலியல் வல்லுறவு செய்தும் பாரத மாதாவின் மாண்பை தலை நிமிரச் செய்வதாக இந்துத்துவ குண்டர்கள் சவால் விடுக்கத் துவங்கியிருந்தனர். உமர் காலித் தலைமறைவாக இருந்த காரணத்தாலும் அவரது சகோதரிகள் கையில் சிக்காத காரணத்தாலும் தமது தேசபக்தியை நிரூபிக்க வாய்ப்பின்றி தவித்துக் கொண்டிருந்த நேரத்தில் பிப்ரவரி 12-ம் தேதி கைது செய்யப்பட்ட கண்ணையா குமாரை 17-ம் தேதி தில்லியின் கீழமை நீதிமன்றம் ஒன்றில் ஆஜர்படுத்த அழைத்து வந்த போது நீதிமன்ற வளாகத்திலேயே வைத்து தாக்கியதன் மூலம் தேசபக்த வெறியைத் தணித்துக் கொண்டனர் இந்துத்துவ ரவுடிகள்.

உச்சநீதிமன்றமே தலையிட்டு வழக்கறிஞர் குழு ஒன்றை கீழமை நீதிமன்றத்திற்கு அனுப்பிய பின்னர் தான் தேசபக்தி ஒரு மட்டுக்குள் வந்தது. அதற்குள் நீதிமன்ற வளாகத்துக்குள் கண்ணையா குமாரையும் அவரது தோழர்களையும் மட்டுமின்றி பத்திரிகையாளர்கள் சிலரையும் கூட கண்மூடித்தனமாக தாக்கியிருந்தனர் பாரதமாதாவின் புதல்வர்கள். சி.பி.ஐ கட்சியின் ஊழியர் ஒருவரை பாரதிய ஜனதா எம்.எல்.ஏ தாக்கும் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகின. ”தேச துரோகிகளை வக்கீல்கள் சரியாக கவனித்தனர்” என்று தமிழ்நாட்டின் தினமலம் கொண்டாடிக் கொண்டிருந்த அதே நேரத்தில் உலகளவிலான ஊடகங்களோ காறி உமிழ்ந்து கொண்டிருந்தன.

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் கருத்துப்படி பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்களான பயங்கரவாதிகளின் தீவிரவாத fake-photoஅச்சுறுத்தலை தேசம் எதிர் கொண்டிருக்கும் இந்த நெருக்கடியான நேரத்தில் ’தேசிய’ ஊடகங்கள் இரண்டாகப் பிளவுண்டு நிற்கின்றன. என்.டி.டீ.வி, சி.என்.என், ஹெட்லைன்ஸ் டுடே போன்ற ஊடகங்கள் மாணவர்கள் தரப்பிலும் ஜீ, நியூஸ் எக்ஸ் மற்றும் டைம்ஸ் நௌ போன்றவை சங்கபரிவாரத்தின் தரப்பிலும் நின்று களமாடிக் கொண்டிருக்கின்றன.

தான் பணிபுரியும் தொலைக்காட்சி மாணவர்களுக்கு எதிரான போலி வீடியோவை உண்மை போலக் காட்டி, இந்து வெறியர்களுககு ஆதரவாகப் பொய்ப்பிரச்சாரம் செய்ததைக் கண்டித்து ஜீ தொலைக்காட்சியின் நிருபர் ஒருவர் தனது வேலையை ராஜினாமா செய்திருக்கிறார். என்.டி.டீ.வி தொலைக்காட்சியின் நெறியாளர் ரவிஷ் தனது ப்ரைம்டைம் நிகழ்ச்சியின் போது கேமராக்களை அணைத்து விட்டு தொலைக்காட்சி ஊடகங்களின் இருண்ட பக்கங்களை அம்பலப்படுத்தியிருக்கிறார்.

பாரதிய ஜனதாவினரால் தேசத்துரோகிகள் என்று முத்திரை குத்தப்பட்ட பின்னரும் மேற்படி தேசத்துரோக மாணவர்களுக்கு நாடெங்கும் பெருகி வரும் ஆதரவு காக்கி அரை டவுசர்களைக் கலங்கச் செய்திருக்கிறது. இந்த சூழலை நாம் விளங்கிக் கொள்ள வேண்டுமெனில் பிப்ரவரி 9-ம் தேதி துவங்கி ஜே.என்.யுவில் நடந்த நிகழ்வுகளை மட்டுமின்றி ஜே.என்.யு பற்றியும் புரிந்து கொள்வது அவசியமானதாகும்.

முதலில் ஜே.என்.யுவில் நடந்து வரும் நிகழ்வுகளைப் பார்த்து விடுவோம்.

2001ம் ஆண்டு 13 டிசம்பர் அன்று இந்திய பாராளுமன்றம் தாக்கப்பட்டது. ஐந்து ’தீவிரவாதிகள்’, ஆறு தில்லி போலீசார் உட்பட 14 பேர் கொல்லப்பட்ட அந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களாக கருதப்பட்டு எஸ்.ஏ.ஆர் கிலானி, அப்சல் குரு அவரது உறவினர் மற்றும் மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். நீதிமன்ற விசாரனைகளுக்குப் பின் கிலானி மற்றும் அப்சல் குருவின் மனைவி ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். அப்சல் குருவுக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இல்லாத நிலையில் சந்தர்ப்ப சாட்சியங்களின் அடிப்படையில் “தேசத்தின் மனசாட்சியை” சாந்தப்படுத்த 2013 பிப்ரவரி 9-ம் தேதி தூக்கிலடப்பட்டார்.

அப்சல் தூக்கிலடப்பட்டதை ஓய்வு பெற்ற நீதிபதிகள் உள்ளிட்டு பலரும் கண்டித்துள்ள நிலையில் பாரதிய ஜனதாவின் கூட்டணி afzal-guru-protestகட்சியான பி.டி.பியும் கண்டித்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக அபசல் தூக்கிலிடப்பட்ட நாளன்று அது தொடர்பான கண்டன நிகழ்ச்சிகளை தில்லி ஜே.என்.யு மாணவர்கள் நடத்தி வருகின்றனர். அந்த அடிப்படையில் இந்த ஆண்டும் பிப்ரவரி 9-ம் தேதியன்று ”தபால் நிலையம் இல்லாத நாடு” (A Country Without Post Office) என்கிற நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடாகியிருந்தது.

நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த மாணவர்கள் மாவோயிஸ்டு கொள்கையை ஆதரிக்கும் மாணவர் அமைப்பான ஜனநாயக மாணவர் சங்கத்திலிருந்து விலகிய தனி நபர்கள். (இந்த மாணவர் சங்கம் மாவோயிச கொள்கையை ஆதரிக்கிறது என்றாலும் மாவோயிஸ்டு கட்சியோடு தொடர்புடையது அல்ல). நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களில் உமர் காலித்தும் ஒருவர். பல்கலைக்கழத்தின் முறையான அனுமதியோடு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், துவங்குவதற்கு பதினைந்து நிமிடங்களுக்கு முன் ஆர்.எஸ்.எஸ் சார்பு மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி, நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுத்து அனுமதியை ரத்து செய்ய வைக்கிறது.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்ற மாணவர் சங்கத்தினருக்கு தகவல் கொடுத்து நிகழ்ச்சியைத் திட்டமிட்டபடி நடத்த உதவி கோருகின்றனர். பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவரான கண்ணையாவும் மற்ற நிர்வாகிகளும் அச்சமயத்தில் தலையிட்டு பல்கலைக்கழக நிர்வாகம் விதித்த சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு (மைக் இல்லாமல்) நிகழ்ச்சியை நடத்த அனுமதி பெற்றுத் தருகின்றனர்.

நிகழ்ச்சியை எப்படியும் தடுத்தே தீர்வது அல்லது அதில் தலையிட்டு பிரச்சினை செய்வது என்கிற திட்டத்தோடு வெளியிலிருந்து குண்டர்களையும் ரவுடிகளையும் அழைத்து வந்திருந்த ஏ.பி.வி.பி, நிகழ்ச்சி நடந்த இடத்திற்கு எதிரே கும்பலாக நின்று கொண்டு கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர். அவர்களைப் புறக்கணித்து விட்டு நிகழ்ச்சி தொடங்கி நடந்த போது முசுலீம்களையும், மாணவர்களையும் சீண்டும் விதமாக ஏ.பி.வி.பி அமைப்பினர் கோஷங்களை எழுப்புகின்றனர். இப்போது அந்நிகழ்வுக்கு வெளியிலிருந்து வந்திருந்த காஷ்மீர் மாணவர்கள் சிலர் எதிர் கோஷங்களை எழுப்புகின்றனர்.

கூட்டத்தினுள் இருப்பவர்கள் யார் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றே அவதானிக்க முடியாத குழப்பமாக இருக்கிறது அந்த சூழல். அந்த சந்தர்பத்தில் காஷ்மீர் விடுதலைக்கு ஆதரவாகவும், இந்தியாவுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்படுகின்றது. இந்த கோஷங்களை யார் எழுப்பியது என்பது தெளிவாக தெரியாத அதே நேரம், பாகிஸ்தான் வாழ்க என்கிற கோஷம் ஏ.பி.வி.பி தொண்டர்கள் தரப்பிலிருந்து எழுப்பப்பட்டதாக இந்த வீடியோவின் மூலம் அறிய முடிகிறது (https://youtu.be/Xs1sCRVxoHY)

நிகழ்ச்சியைத் தடுப்பதற்கு வெளியிலிருந்து குண்டர்களை மட்டுமின்றி தமக்குச் சாதகமான ஊடகங்களையும் அழைத்து வந்துள்ளனர் ஏ.பி.வி.பி அமைப்பைச் சேர்ந்தவர்கள். அதில் குறிப்பாக ஜீ டீ.வி தொலைக்காட்சி நிகழ்வுகளை நெருக்கத்திலிருந்து படம்பிடித்துள்ளது. அதைத் தொடர்ந்து படம் பிடித்த வீடியோ காட்சிகளை வெட்டி ஒட்டி அதற்குப் திகிலான பின்னணி இசையைக் கோர்த்து இட்டுக் கட்டி வெறிக்கூத்தாடுகிறது ஜீ தொலைக்காட்சி. ஜே.என்.யு வளாகமே மொத்தமும் பாகிஸ்தானாகி விட்டதைப் போலவும் அதை உடனடியாக மீட்க வேண்டும் எனவும் போலியான தேசிய வெறியைத் தூண்டியிருக்கிறது.

jnu-afzal-dmoமாலை ஏழு மணி அளவில் ஜே.என்.யு வளாகத்தில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சபர்மதி தாபாவிற்கு அருகில் துவங்கிய மோதல் பின்னர் கங்கா தாபாவிற்கு அருகில் இரு பிரிவினரும் மாற்றி மாற்றி கோஷம் போட்டுக் கலைந்து செல்வது வரை தொடர்ந்துள்ளது. இதற்கிடையே 7:30 மணி அளவில் காவல் துறைக்கு தகவல் கிடைத்து அவர்களும் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். ஜே.என்.யு வளாகத்திற்குள் போலீசார் வந்த பின்னரும் மாற்றி மாற்றி கோஷங்கள் எழுப்புவது தொடர்ந்துள்ளது. மாணவர்கள் கலைந்து சென்றபின் போலீசாரும் வளாகத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.

இதில் கவனிக்க வேண்டியது – சம்பவ இடத்தில் போலீசார் இருந்த போதும், கோஷங்களை அவர்களே கேட்ட பிறகும் மறுநாளே (பிப்ரவரி 10-ம் தேதி) முதல் தகவல் அறிக்கையை போலீசார் பதிவு செய்யவில்லை. விவகாரத்தை ஜீ தொலைகாட்சி ஊதிப் பெரிதாக்கியதோடு தமது நிகழ்ச்சி ஒன்றில் பாரதிய ஜனதாவின் செய்தித் தொடர்பாளர் சோம்பித் பத்ராவை அழைத்து “சியாச்சினில் வீரர்கள் நாட்டைக் காக்க தியாகிகள் ஆகியுள்ள நிலையில் நாட்டின் உள்ளேயே தேச விரோதிகள் சுதந்திரமாகத் திரிகிறார்கள். 56 இன்ச் மார்பு என்றெல்லாம் பீற்றிக் கொண்ட நீங்கள் ஏன் தேச துரோகிகளின் மேல் நடவடிக்கை எடுக்க மறுக்கிறீர்கள்” என்று உசுப்பேற்றியிருக்கிறது.

சொல்லி வைத்துக் கொண்டு நடந்த இந்த நாடகத்திற்கு பின்னர் பிப்ரவரி 11-ம் தேதி தான் தில்லி வசந்த்குஞ்ச் காவல் நிலைத்தில் போலீசாரால் தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட ’அடையாளம் தெரியாத’ மாணவர்களின் மேல் தானாகவே முன்வந்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்கிறது போலீசு. அதே சமயம் பாரதிய ஜனதா எம்.பி கிரி மற்றும் ஏ.பி.வி.பி அமைப்பினரிடமிருந்து புகார்கள் பெறப்பட்டு பதிவு செய்யப்படுகிறது.

இதற்கிடையே பிப்ரவரி 9-ம் தேதி பல்கலைக்கழக வளாகத்திற்குள் நடந்த நிகழ்வுகள் குறித்து தில்லி போலீசாரின் தரப்பில் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு பிப்ரவரி 17-ம் தேதி அறிக்கை ஒன்று சமர்பிக்கப் பட்டுள்ளது. மேற்படி அறிக்கையில், பல்கலைக்கழக மாணவர்கள் துர்கா பூஜையன்று மகிஷாசுரனை வணங்கியதையும், பல்கலைக்கழக உணவு விடுதிகளில் மாட்டுக்கறி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததையும் சுட்டிக்காட்டி இந்த காரணங்களால் அவர்கள் தேச விரோதிகள் என்று தெரிவித்துள்ளது.

பிப்ரவரி 9-ம் தேதியன்று வளாகத்தில் நடந்த சம்பவங்களில் தாம் தனிமைப்படுத்தப்பட்டதை ஏ.பி.வி.பியால் ஜீரணித்துக் கொள்ள abvp-demoமுடியவில்லை. பல்கலைக்கழக மாணவர்களிடையே தமக்கு ஆதரவு குறைந்து வெளியிலிருந்து அழைத்து வந்த குண்டர்களைச் சார்ந்தே கலவரங்களைத் தூண்ட வேண்டிய நிலைக்கு தாழ்ந்து விட்டதை எண்ணிக் குமைந்துள்ளனர். உடனடியாக மறுநாளே “தேச பக்தியை” கடைவிரித்து அதன் மூலம் கல்லாகட்ட தமது அமைப்பின் சார்பில் ஸ்ட்ரைக் அறிவித்துள்ளனர். வெறும் 200 மாணவர்கள் மட்டுமே கலந்து கொண்ட அந்த கண்டன வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம் பரவலான மாணவர்களின் ஆதரவின்றி பிசுபிசுத்துப் போயிருக்கிறது.

தொலைக்காட்சி ஊடகங்களின் வெறுப்புப் பிரச்சாரம் ஒரு பக்கம் என்றால் ஜே.என்.யு வை இழுத்து மூட வேண்டும் என்கிற பிரச்சாரம் சமூக வலைத்தளங்களில் (#ShutdownJNU) இந்துத்துவ கும்பலால் திட்டமிட்ட ரீதியில் முன்னெடுக்கப்படுகிறது. இந்நிலையில் இந்துத்துவ கும்பல் வெளியிலிருந்து ஏற்பாடு செய்த ரவுடி கூட்டத்தை ஜே.என்.யு வாசலில் கூட்டி மாணவர்களுக்கு எதிராக கோஷங்கள் போட வைத்தது. மொத்தத்தில் மாணவர்களுக்கு எதிராக ஒரு பொது மனநிலை கட்டமைக்கப்பட்டு வந்த நிலையில் பிப்ரவரி 11-ம் தேதி ஜே.என்.யு மாணவர் சங்கம் கண்டன ஆர்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்கிறது.

கண்டனக் கூட்டத்தில் உரையாற்றிய மாணவர் சங்கத் தலைவர் கண்ணையா குமார், “மனுவாதிகளிடமிருந்து விடுதலை” “வறுமையில் இருந்து விடுதலை” “புதிய பொருளாதாரக் கொள்கைகளில் இருந்து விடுதலை” “பார்ப்பனியத்திடமிருந்து விடுதலை”, “ஆர்.எஸ்.எஸ் இடமிருந்து விடுதலை” என்கிற கோஷங்களை தனது உரையின் இறுதியில் எழுப்புகிறார். கண்ணைய்யா 11-ம் தேதி ஆற்றிய உரையை வீடியோ பதிவு செய்து கொள்ளும் இந்துத்துவ கும்பல் அதில் போர்ஜரி வேலை செய்து 9ம் தேதி கூட்டத்தில் ஏ.பி.வி,பி ரவுடிகள் எழுப்பிய கூச்சல்களில் இருந்து “பாகிஸ்தான் ஜிந்தாபாத்” “காஷ்மீர் விடுதலை” போன்ற கோஷங்களை வெட்டி ஒட்டுகிறது.

இவ்வாறு போர்ஜரி செய்யப்பட்ட வீடியோவை ஜீ தொலைக்காட்சி, டைம்ஸ் நவ் மற்றும் நியூஸ் எக்ஸ் போன்ற சேனல்கள் திரும்பத் திரும்ப ஒளிபரப்பி, ”மத்திய அரசு ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறது?” என்று கேள்வி எழுப்பி “தேச துரோக” குற்றச்சாட்டுகளுக்கு மேலும் போலியான அடித்தளம் ஒன்றை அமைத்துக் கொடுக்கின்றன. அதே நாளில் தான் (பிப் 11) பாரதிய ஜனதா எம்பி கிரி தேச துரோக குற்றச்சாட்டை பதிவு செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்து கொள்ளும் போலீசு, அதை அப்படியே பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு அனுப்புகிறது. ஆர்.எஸ்.எஸ் அடிவருடிகளால் நிரம்பிய பல்கலைக்கழக நிர்வாகம் உடனடியாக இருபது மாணவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு போலீசாருக்கு அனுப்புகின்றது. தங்களுக்கு பல்கலைக்கழக நிர்வாகத்திடமிருந்து கிடைத்த பட்டியலில் இருந்து கண்ணையா குமார், உமர் காலித், அனிபான் பட்டாச்சார்ய, ராம நாகா, அசுதோஷ் குமார் மற்றும் ஆனந்த் பிரகாஷ் நாராயணன் ஆகிய ஆறு மாணவர்களை மட்டும் பொறுக்கியெடுத்து அவர்கள் மேல் தேச துரோக வழக்கைப் புணைகிறது தில்லி காவல் துறை.

12-ம் தேதி பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழையும் போலீசார், மாணவர் விடுதிகளுக்குள் புகுந்து தேடுதல் வேட்டை நடத்தியுள்ளனர். பெண்கள் விடுதிகளுக்குள் ஆண் போலீசார் புகுந்து வெறியாட்டம் போட்டுள்ளனர். அதே நாள் கண்ணையா கைது செய்யப்படுகிறார் மற்ற ஐந்து மாணவர்கள் தலைமறைவாகின்றார்கள். இதற்கிடையே மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஆறு மாணவர்களோடு மேலும் இரண்டு மாணவர்களான ஸ்வேதா ராஜ் மற்றும் ஐஷ்வர்யா அதிகாரி ஆகியோரையும் சேர்த்து மொத்தம் எட்டு மாணவர்களை இடைநீக்கம் செய்து உத்தரவிடுகிறது பல்கலைக்கழக நிர்வாகம்.

இந்த மாணவர்களின் மேலான “குற்றத்தை” விசாரிக்க மூன்று சங்க்பரிவார் சாய்வுள்ள பேராசிரியர்களைக் கொண்ட கமிட்டி ஒன்றையும் அமைக்கிறது பல்கலைக்கழக நிர்வாகம். கமிட்டி இம்மாணவர்களை 15-ம் தேதி ஆஜராகும்படி சம்மன் ஒன்றையும் அனுப்புகிறது. இதற்கிடையே கண்ணையா குமார் கைது செய்யப்பட்டது மாணவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்துகிறது. அன்று மாலையே ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் குழுமி நிற்கிறார்கள். அங்கே மயான அமைதி நிலவுகிறது.

தங்களது சுதந்திரத்தின் சிறகுகள் வெட்டப்படும் என்பதை அம்மாணவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. தங்கள் விடுதிகளுக்குள்ளும் காவல் துறை நுழையும் என்பதையோ, சுதந்திரமாய் இரவு நெடுக விவாதித்துக் கழிக்கும் அந்த வாழ்க்கை கேள்விக்குள்ளாக்கப்படும் என்பதையோ அவர்களின் மிக மோசமான துர்சொப்பனத்தில் கூட கண்டிருக்க மாட்டார்கள். இருப்பினும் அந்த மயான அமைதியைக் கிழித்துக் கொண்டு ”இன்குலாப் ஜிந்தாபாத்” “லால் சலாம் சால் சலாம்” என்கிற முழக்கங்கள் அந்த இரவில் ஒரு புதிய அர்த்தத்துடன் ஓங்கி ஒலிக்கத் தொடங்குகின்றன.

இதற்கிடையே காவல் துறை நடவடிக்கை மற்றும் மாணவர் சங்கத் தலைவர் கைது செய்யப்பட்ட விவகாரத்தை எப்படிக் கையாள்வது என்பதை ஆசிரியர்கள் சங்கத்தினர் கூடி விவாதிக்கின்றனர். ஒரு நீண்ட போரை சங்கப் பரிவாரத்தினர் துவக்கி வைத்துள்ளனர் என்பதை ஆசிரியர்களும் மாணவர்களும் உணர்கின்றனர். இந்தப் போரில் ஆசிரியர் சங்கத்தைப் பின் தொடர்வதா மாணவர்களே முன்னின்று எதிரிகளைச் சந்திப்பதா என்கிற விவாதங்கள் துவங்குகின்றன. உடனடியாக ஆசிரியர் சங்கத்தினர் முன்னிற்க சுமார் 4000 மாணவர்கள் கலந்து கொண்ட கண்டன ஊர்வலம் ஒன்று வளாகத்திற்குள்ளேயே நடக்கிறது.

மிக அதிக அளவில் கூடிய மாணவர்கள் கூடிய போதிலும் உடனடியாக எதிர்ப்பு நடவடிக்கைகள் எதையும் துவக்காமல் ஆசிரியர் சங்கத்தினர் அந்த ஊர்வலத்தை முடித்துக் கொள்கிறார்கள். இதனைத் தொடர்ந்து அனைத்து மாணவர் சங்க கூட்டம் ஒன்று நடக்கிறது. ஆசிரியர் சங்கத்தைப் பின் தொடர்வது என்றில்லாமல், மாணவர்களே முன்னின்று எதிர்ப்பியக்கத்தைக் கட்டமைக்க வேண்டும் என்று இடது சாரி மாணவர்கள் முன்வைத்த கருத்து எல்லா சங்கத்தினராலும் ஏற்கப்படுகின்றது.

பிப்ரவரி 13-ம் பல்லாயிரக்காணவர்கள் கலந்து கொண்ட கண்டனப் பொதுக்கூட்டம் ஒன்றை மாணவர்கள் ஏற்பாடு செய்கின்றனர். டி.ராஜா, யோகேந்திர யாதவ், ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தினுள் புகுந்து தகறாரில் ஈடுபடுகின்றது ஏ.பி.வி.பி. கண்டனக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த ஆனந்த் சர்மா ஏ.பி.வி.பி ரவுடிகளால் தாக்கப்படுகிறார். கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த ஆசிரியர்களும் மாணவர்களும் மட்டுமின்றி பத்திரிகையாளர்களையும் தாக்குகின்றன ஏ.பி.வி.பி வானரங்கள். அதுவரை அடக்கி வாசித்து வந்த தொலைக்காட்சி ஊடகத்தின் ஒரு பிரிவினர், இந்த தாக்குதல் சம்பவங்களுக்குப் பின் இந்துத்துவ பாசிஸ்டுகளின் பயங்கரவாத நடவடிக்கைகளை இதற்கு மேலும் கேள்வி கேட்காவிட்டால் தம்மையும் அழித்தொழித்து விடுவார்கள் என்கிற அச்சத்திற்குத் தள்ளப்படுகின்றனர்.

பிப்ரவரி 15-ம் தேதி மாணவர்கள் தரப்பில் வகுப்புப் புறக்கணிப்பு போராட்டம் ஒன்றும் 16-ம் தேதி ஆசிரியர்கள் தரப்பில் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம் ஒன்றும் வெற்றிகரமாக நடைபெறுகின்றது. இதற்கிடையே மாணவர்களிடையே ஏ.பி.வி.பி முற்றிலுமாக அம்பலப்பட்டுப் போகிறது. தாமும் ஜே.என்.யு பல்கலைக்கழகத்திற்கு ஆதரவு தானென்றும், ஜே.என்.யுவை மூட வேண்டும் என்கிற கோரிக்கையில் தமக்கும் உடன்பாடில்லை என்றும் நோட்டீசடித்துச் சொல்ல வேண்டிய நிலைக்கு ஏ.பி.வி.பி தள்ளப்படுகிறது.

இதற்கிடையே அதே நாளில் (பிப் 15) கண்ணையா குமாரின் போலீசு காவல் முடிந்து விட்டதால் அவரை மாஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வருகின்றது தில்லி போலீசு. கண்ணைய்யா வரும் நேரம், வழி போன்றவற்றை ‘எப்படியோ’ அறிந்து கொள்ளும் இந்துத்துவ குண்டர்கள், முன்கூட்டியே நூற்றுக்கணக்கான ரவுடிகளை வக்கீல் உடையோடு நீதிமன்றத்தைச் சுற்றிவளைத்து நிறுத்துகிறது. கண்ணையா நீதிமன்றத்தில் நுழையவும் வெறித்தனமாக அவரையும் வழக்கைக் காண வந்த மற்ற மாணவர்களையும் தாக்குகின்றது இந்துத்துவ ரவுடிப் பட்டாளம்.

”பாரத் மாதா கீ ஜேய்” ”வந்தே மாதரம்” என்று வெறித்தனமாக கூச்சலிட்டுக் கொண்டே முன்னேறிய ரவுடிகள் பெண் மாணவிகளையும் விட்டு வைக்கவில்லை. கையில் செல்பேசியோடு இள வயதில் எவர் தென்பட்டாலும் அடித்துத் துவைக்கப்பட்டனர். விக்ரம் சௌகான் என்ற வானரம் இந்த தாக்குதல்களை முன்னின்று ஒருங்கிணைத்துள்ளான். கண்ணையாவும் பிற மாணவர்களும் நீதிமன்ற வளாகத்திலேயே தாக்கப்பட்டதும் அதற்கு போலீசே மௌனமாய் நின்று அனுமதி வழங்கியதையும் கேள்விப்பட்டதும் நாடெங்கும் உள்ள மாணவ சமூதாயம் கொந்தளிக்கிறது. ஏ.பி.வி.பி மேலும் மேலும் தனிமைப்படுத்தப்படுகிறது.

இந்தச் சூழலில் ஜே.என்.யு வளாகத்தினுள் வாலைச் சுருட்டிக் கொண்டு பதுங்கிக் கொள்ளும் சங்கப்பரிவாரம், வளாகத்திற்கு வெளியே வெறிக்கூத்தாடுகின்றது. கண்ணையா மற்றும் உமரின் புகைப்படங்களோடு தில்லியின் பல பகுதிகளில் போஸ்டர் அடிக்கும் சங்கப்பரிவாரம், இவர்கள் தேச துரோகிகள் என்றும் இவர்களைக் கண்டதும் தாக்குமாறும் பொதுமக்களிடம் விசமப் பிரச்சாரத்தை முன்னெடுத்திருந்தது. ஊடகங்களின் ஒரு பிரிவு மாணவர்களை பயங்கரவாதிகளாகச் சித்தரிக்க எல்லா வகையான கீழ்த்தரமான எல்லைகளுக்கும் சென்றது.

தொடர்ச்சியான ஒரு இயக்கம் போல் ஜே.என்.யு விவகாரத்தைக் கையிலெடுத்த பார்ப்பன ஊடகங்கள், ஜே.என்.யு வை மூடு என்ற முழக்கத்தை உருவாக்கி, அதனை ஒரு இயக்கமாகவே சமூக வலைத்தளங்களில் கொண்டு சென்றது. போலியான தேசிய வெறி தூண்டி விட்டு இந்திய தேசியத்திற்கு எதிராக கொந்தளிப்பான நிலை ஒன்று நிலவுவதாக மக்களை நம்பவைக்க அவை முயன்று வந்த நிலையில் தான் பிப்ரவரி 17-ம் தேதி மீண்டும் கண்ணையாவை கீழமை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துகின்றது தில்லி போலீசு.

திங்களன்று நடந்த அதே காட்சிகள் மீண்டும் அரங்கேறுகின்றன. சுமார் 200 ரவுடிகளை வக்கீல் உடையோடு களமிறக்கிய rss-thugs-attack-studentsஇந்துத்துவ குண்டர்கள் கற்களாலும் கட்டைகளாலும் கண்ணையாவைத் தாக்குகின்றனர். கண்ணையாவை மட்டுமின்றி இம்முறை பத்திரிகையாளர்களும் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். காவலுக்கு வந்த போலீசார் தங்களது சுண்டு விரலைக் கூட இந்துத்துவ கும்பலை நோக்கி நீட்டாத நிலையில் கண்ணையாவை அவரது வக்கீல்களும் தோழர்களுமே பாதுகாப்பாக கும்பலில் இருந்து மீட்டு நீதிமன்றத்திற்குள் ஒரு அறைக்குப் பாதுகாப்பாக அழைத்துச் செல்கின்றனர்.

கண்ணையா வெளியேறினால் கொல்வோம் என்கிற கூச்சலோடு வெளியே இந்து ரவுடிக் கும்பல் காத்துக் கொண்டிருந்த நிலையில் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் விசயத்தை உச்சநீதி மன்றத்தின் பார்வைக்கு எடுத்துச் செல்கிறார். கண்ணையா கொலைகாரர்களிடமிருந்து தப்பி நீதிமன்றத்தின் ஒரு அறைக்குள் சிறைப்பட்டு இருந்த அந்த சூழலில் ஊடகங்களில் பேட்டியளிக்கும் தில்லி போலீசு கமிஷனர் பாஸ்ஸி, கண்ணையா தாக்கப்படவில்லை என்றும் எல்லாம் வெறும் தள்ளு முள்ளு விவகாரம் தான் என்றும் சொல்கிறார்.

உச்சநீதிமன்றம் உடனடியாக கபில் சிபல், துஷ்யந்த் தாவே, தவான் உள்ளிட்ட மூத்த வழக்கறிஞர் குழு ஒன்றை அமைத்து மாஜிஸ்டிரேட் நீதிமன்றத்தின் நிலவரத்தை அறிய அனுப்புகின்றது. உச்சநீதிமன்ற வழக்கறிஞர் குழு கடுமையான போலீசு பாதுகாப்போடு சென்ற போதும், அவர்களை எதிர்த்து கோஷங்களையும் கற்களையும் எறிகின்றனர் ஆர்.எஸ்.எஸ் காலிகள். கண்ணையாவின் உயிருக்கு ஆர்.எஸ்.எஸ் குண்டர்களால் ஆபத்து இருப்பதை உச்சநீதிமன்றத்திற்கு அறிவிக்கும் மூத்த வழக்கறிஞர்கள் குழு, அப்படி ஏதேனும் நிகழ்ந்தால் அதற்கு தில்லி போலீசு கமிஷனரும் பதில் சொல்ல வேண்டியிருக்கும் என்று அறிக்கை சமர்பிக்கின்றனர். இவ்வளவிற்கும் பிறகு தான் போலீசார் பாதுகாப்பாக கண்ணையாவை மீட்டு சிறைக்கு அனுப்புகின்றனர்.

காவல்துறை, நீதித்துறை உள்ளிட்ட மொத்த அரசு அமைப்பும், மாணவர்களின் ரத்தம் குடிக்கும் வெறியோடு இந்துத்துவ கும்பலின் சார்பில் நிற்பதை உணர்ந்த மாணவர்கள் உடனடியாகத் திரள்கின்றனர். ஏ.பி.வி.பி மற்றும் ஆர்.எஸ்.எஸ் பரிவார அமைப்புகளை கண்டித்தும், கண்ணையாவை விடுதலை செய்யக் கோரியும் பிப்ரவரி 18-ம் தேதி தில்லி ஜந்தர் மந்தரில் ஒரு கண்டன கூட்டம் ஒன்றை நடத்துகின்றனர் மாணவர்கள். சுமார் இருபதாயிரம் மாணவர்கள் கூடிய அந்தக் கூட்டத்தில் அறிவுத்துறையினர் பலரும் கலந்து கொள்கின்றனர். அதே நாளில் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து ஊடகத்துறையினரும் கண்டன ஊர்வலம் ஒன்றை நடத்துகின்றனர்.

இதற்கிடையே ஜே.என்.யுவின் போராட்டம் இந்தியா முழுவதும் – இந்தியாவைக் கடந்தும் உள்ள பல்கலைகழகங்களுக்கும்grinell-solidarity-jnu பரவுகின்றது. பல்வேறு ஐரோப்பிய மற்றும் அமெரிக்க பல்கலைக்கழக மாணவர் அமைப்புகள் ஜே.என்.யு மாணவர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுகின்றனர். பி.சாய்நாத் உள்ளிட்ட இந்தியளவிலான அறிவுத்துறையினர் மட்டுமின்றி சர்வதேச அளவில் புகழ் பெற்ற நோம் சோம்ஸ்கி மற்றும் நோபல் பரிசு வென்ற அறிஞர்களும் மாணவர்களுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்து கடிதங்கள் எழுதுகின்றனர்.

அதிகாரம் தங்கள் கையில் உள்ளது என்கிற மமதையில் மாணவர்களையும் தங்களுக்கு எதிரான குரல்களையும் நசுக்கி விடலாம் என்ற திமிரில் மிதந்த இந்துத்துவ கும்பல், ஆப்பசைத்த குரங்காக ஜே.என்.யுவில் மாட்டிக் கொண்ட நிலையில் தங்களது நேரடி நடவடிக்கைகளைக் குறைத்துக் கொண்டு சட்டவாதத்திற்குப் பின்னே ஒளிந்து கொள்கிறது. நீதிமன்றத்தின் பார்வையில் சொத்தையான வாதங்களின் அடிப்படையில், போலியான வீடியோ ஆதாரங்களின் மேல் புனையப்பட்ட வழக்கை வைத்துக் கொண்டு ”என்ன இருந்தாலும் இது தேச துரோகமில்லையா?” “எதுவாக இருந்தாலும் நீதி மன்றத்தின் முடிவுக்கு விட்டு விடலாமே?” என்று சுதி இறங்கிய குரலில் பேசத் துவங்கியுள்ளன இந்துத்துவ வானரப் படையினர்.

சட்ட நுணுக்கங்களின் அடிப்படையில் நீதிமன்றத்தில் நிற்காத வழக்கு தானென்றாலும் இது நீதிமன்றத்தில் புகலிடம் தேடிக் கொள்ளும் சந்தர்பம் இல்லை. பல்கலைக்கழகங்களின் மீதும் சுதந்திரமான அறிவுத்துறையின் மீதும் பாசிச குரங்குகளின் பிடி கடந்த இரண்டாண்டுகளாகவே மேலும் மேலும் இறுகி வருகின்றது. பூனா திரைப்படக் கல்லூரி விவகாரமோ, ஜாதவ் பூர் பல்கலைக்கழக விவகாரமோ, சென்னை ஐ.ஐ.டியில் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்குமுறைகளோ, ரோகித் வேமுலா கொல்லப்பட்டதோ – அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக திட்டமிட்ட ரீதியில் முன்னெடுக்கப்படுகின்றன.

இது மாணவர்கள் தனித்து நின்று வெல்லக்கூடிய யுத்தமில்லை. தனித்து களமிரங்கி இன்று வரை முன்னேற்றமின்றி நிற்கும் பூனா திரைப்பட கல்லூரி மாணவர் போராட்டமும், வாரக்கணக்கில் போராடியும் கண்டுகொள்ளப்படாமல் புறக்கணிப்பாலேயே கொல்லபப்ட்ட ரோகித் வேமுலாவும் நமக்கு உணர்த்தும் பாடம் அது தான். சென்னை ஐ.ஐ.டியின் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்திற்கு ஆதரவாக பிற உழைக்கும் வர்க்க அமைப்புகள் களத்திற்கு வந்த பின்னரே ஆளும் கும்பல் பின்வாங்கியது. இன்று ஜே.என்.யு மாணவர்களுக்காக களமிறங்கியுள்ளனர் ஹோண்டா மற்றும் மாருதி தொழிலாளர்கள்.

மாணவர்களும் தொழிலாளர்களும் விவசாயிகளும் பிற உழைக்கும் வர்க்கத்தினரும் கைகோர்க்க வேண்டிய நேரம் வந்து விட்டது. பாசிஸ்டுகள் இணைந்து நிற்கும் போது நாம் மட்டும் பிரிந்து நிற்பதில் அர்த்தமில்லை.

– தொடரும்

– வினவு செய்தியாளர்

ஏனைய பாகங்கள்:

மோடி அரசின் கூலிப்படையா பத்திரிகையாளர்கள் ? விஷ்வா தீபக்

8

ஜே.என்.யு மாணவர்கள் நடத்திய அப்சல்குரு நினைவு கூட்டத்தில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷமிட்டதாக ஜீ டிவி வீடியோ வெளியிட்டு மாணவர்களை தேச துரோகிகளாக சித்தரித்து வருகிறது. கூடவே அருகிலேயே ராணுவ வீரர்களின் படங்களையும் வெளியிட்டு மாணவர்களுக்கு எதிராக தேசிய வெறியை பரப்பு வருகினறன. ஆனால் இந்த வீடியோக்கள் தங்களால் சோடிக்கப்பட்ட ஒன்று என்றும் அந்த குற்ற உணர்ச்சியின் உந்துதலில் தான் ராஜினாமா செய்வதாகவும் அறிவித்திருக்கிறார் ஜீ டிவி பத்திரிகையாளர் விஷ்வா தீபக்.

மோடி ஆட்சி பொறுப்பேற்ற பின் ஊடகங்களின் திரைமறைவில் நடந்துவரும் நிகழ்ச்சிகளையும் தன் ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். அதன் தமிழாக்கம் இது. மோடி அரசையும், ஜெயா அரசையும் நக்கிப் பிழைக்கும் நவநாகரீக நெறியாளர்கள், சானல்கள், தினசரிகள், நடுப்பக்க ஆசிரியர்களைக் கொண்ட தமிழ் கூறும் ஊடக தீயுலகில் இத்தகைய குற்ற உணர்ச்சி கொண்டவர்கள் அரிது என்பதாலும் தீபக்கின் இந்த கடிதம் முக்கியமானது.

ரு வருடம், நான்கு மாதங்கள், நான்கு நாட்கள் கடந்த நிலையில் உங்களை விட்டு விலகும் நேரம் எனக்கு வந்திருக்கிறது. நான் முன்பே செய்திருக்க வேண்டிய ஒன்று இது. என்றாலும் இப்போது செய்யவில்லை எனில், என்னை என்னால் மன்னிக்கவே முடியாமல் போகும்.

vishwa-deepak
விஷ்வா தீபக்

கோபம், எரிச்சல் மற்றும் உணர்ச்சி வேகத்தில் எடுக்கப்பட்ட ஒரு முடிவு அல்ல இது. நன்கு சீராய்ந்து எடுத்த முடிவை பற்றியே சொல்ல வருகிறேன். ஊடகவியலாளனாகவும், குடிமகனாகவும் இருந்த என்னை பயன்படுத்திக் கொண்டு கண்மூடித்தனமான தேசியவெறி நஞ்சு பரப்பப்பட்டது. அதன் மூலம் ஒரு உள்நாட்டுப் போருக்குள் இந்த நாடு தள்ளப்பட்டிருக்கிறது. இந்தியக் குடிமகன் என்ற பொறுப்புணர்வாலும், என்னுடைய பணி சார்ந்த கடமையாலும் இந்த நஞ்சு பரவுவதை தடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

பெருங்கடலை ஒரு ஓடத்தில் கடப்பதற்கு ஒப்பானது இது என்று எனக்கு நன்கு தெரியும். எனினும், நான் எனது பயணத்தை தொடங்க வேண்டும். அதன் பொருட்டு ஜெ.என்.யூ மாணவர் சங்கத் தலைவர் கண்ணையா குமாரை ஒரு சாக்காக வைத்து பரப்பப்படும் கண்மூடித்தனமான தேசியவாத உணர்ச்சியை ஆதரித்தது மற்றும் தூண்டி விடுதல் ஆகியவற்றில் நாம் ஆற்றிய பங்கை எதிர்த்து விலகுகிறேன். இந்த விலகல் கடிதத்தை தனிப்பட்ட முரண்பாடு காரணமாக எடுக்கப்பட்டதென கருத வேண்டாம் என்றும் விரும்புகிறேன்.

எந்த வகையிலும் இந்த முடிவு தனிப்பட்ட ரீதியிலானது அல்ல. இதுவொரு பணிசார்ந்த கடமை, சமூக உணர்வு மற்றும் இறுதியாக ஒரு வகையான தேசப்பற்று. கடந்த ஓராண்டில் மட்டும் மூன்று நிலைகளில் பல முறை தோல்வியடைந்ததை வருத்தத்துடன் தெரிவிக்கிறேன்.

2014 மே மாதத்துக்கு பிறகு, நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டதிலிருந்து ஏறக்குறைய அனைத்து செய்தி அரங்குகளிலும் மதவாதம் புகுந்து விட்டது என்றாலும் நமது நிறுவனத்தில் அது மோசமாகி விட்டது. நான் சற்று கடுமையான சொற்களை பயன்படுத்தியதற்காக மன்னிப்பு கோருகிறேன். அதே நேரத்தில், அதை சொல்ல உள்ளபடியே என்னிடம் வார்த்தைகள் வேறில்லை. எதற்காக செய்திகள் அனைத்தும் மோடியின் கோணத்தில் எழுதப்படுகின்றன? மோடி அரசின் நிகழ்ச்சிநிரலை முன்மொழிவது தான் செய்திகள் எழுதப்படுவதன் நோக்கம் என்றாகியுள்ளது.

நாமெல்லாம் ஊடகவியலாளர்களா? என்று மிகத் தீவிரமாக சந்தேகம் கொள்ள ஆரம்பித்து விட்டேன். அரசின் ஊதுகுழல் மற்றும் ஒப்பந்த கொலையாளிகளாக நாம் மாறிவிட்டதை போன்று உணர்கிறேன். மோடி இந்த நாட்டின் பிரதமர். அவர் என்னுடைய பிரதமரும் கூட. ஆனால், ஒரு ஊடகவியலாளனாக மோடி வழிபாட்டை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. என்னுடைய மனசாட்சி எனக்கெதிராக பிரளயம் செய்ய ஆரம்பித்து விட்டது. எனக்கு உடல்நிலை சரியில்லாதது போன்றிருக்கிறது.

ஒவ்வொரு செய்திக்கு பின்னாலும் ஒரு திட்டம் மறைந்து இருக்கிறது. ஒவ்வொரு செய்தியின் நோக்கத்திலும் மோடி அரசு எவ்வளவு பெரிது என்று காட்டும் நோக்கம் இருக்கிறது. ஒவ்வொரு விவாதமும் மோடியின் எதிரிகளை சுட்டு வீழ்த்தும் முயற்சியாக இருக்கிறது. ‘தாக்குதல்’, ‘போர்’ ஆகியவற்றுக்கு குறைந்த வார்த்தைகள் ஏற்கவியலாததாக மாற்றப்பட்டு உள்ளது. என்ன இதெல்லாம்? கொஞ்சம் நின்று யோசித்த போது, நான் பைத்தியக்காரனாகி விட்டதை போன்று உணர்ந்தேன்.

அறமற்றவர்களாக, நியாய உணர்வற்றவர்களாக, வெறுக்கத்தக்கவர்களாக நாங்கள் ஏன் மாற்றப்பட்டோம்? இந்த நாட்டின் தலைசிறந்த ஊடக நிறுவனத்தில் பயின்று, பெருமைமிகு நிறுவனங்களான பி.பி.சி, ஆஜ்தக் மற்றும் ஜெர்மனியின் டியூச் வெல் போன்றவற்றில் பணிபுரிந்து விட்டு இன்று மக்கள் என்னை, ‘சீ இவன் ஒரு செய்தி ஆசிரியன்’ என்று கூறுமளவு மாறி விட்டிருக்கிறேன். எங்கள் நேர்மை உடைந்து நொறுங்கி கிடக்கிறது. இதற்கு பொறுப்பேற்றுக் கொள்பவர் யார்?

நான் எவ்வளவு சொல்ல வேண்டும்? ஒரு எதிர் பிரச்சாரம் டில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு எதிராக தொடர்ந்து நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. எதற்காக இது? நீர் மற்றும் மின்விநியோகம், ஒற்றை – இரட்டை வண்டிகளை இயக்குவது போன்ற மக்களுக்கு பயன்படும் அடிப்படை திட்டங்கள் கூட இழிவுபடுத்தப்பட்டது. கேஜ்ரிவாலுடன் முரண்படுவது மற்றும் விமர்சிப்பது ஒருவரின் முழு உரிமை தான். ஆனால், கேஜ்ரிவாலை ஆளுமைக் கொலை செய்வது ஒரு ஊடகவியலாளரின் வேலையல்ல. கேஜ்ரிவாலுக்கு எதிராக வெளியிட்ட எதிர்மறை செய்திகளை அடுக்க ஆரம்பித்தால் அவை பல பக்கங்களுக்கு நீளும். ஊடகத்துறையின் அடிப்படை விழுமியங்களான ‘நடுநிலை’ மற்றும் நேயர்களுக்கு நேர்மையாக இருத்தல் ஆகியவற்றுக்கு எந்த மதிப்பும் இல்லையா?

தலித் மாணவர் ரோகித் வெமுலாவின் தற்கொலை பிரச்சினையிலும் இது தான் நடந்தது. முதலில் அவரை ‘தலித் கல்விமான்’ என்றழைத்தோம். பின்னர் ‘தலித் மாணவர்’ என்றோம். ரோகித்தை தற்கொலைக்கு துரத்தியதில் ஏ.பி.வி.பி.யின் தலைவர் மற்றும் பா.ஜ.க.வின் பங்காரு தத்தாத்ரேயாவின் தொடர்பு பற்றிய சந்தேகம் தீரவில்லை. (அனைத்தும் இப்போது தெளிவாகி விட்டது.) ஆனால், ஒரு ஊடக நிறுவனமாக எங்கள் பணி பிரச்சினையை நீர்த்துப் போக செய்வதிலும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பாதுகாவலர்களாக செயல்படுவதிலும் இருந்தது.

உதயப் பிரகாஷ் மற்றும் இதர முக்கிய எழுத்தாளர்கள் தங்கள் விருதுகளை திரும்ப அளித்ததற்கு காரணமான சகிப்பின்மை தொடர்பான விவாதத்தில், பிரச்சினையை விட்டுவிட்டு எழுத்தாளர்களை கேள்வி கேட்கலானோம். லட்சக்கணக்கான மக்கள் வாசிக்கும் உதயப் பிரகாஷை எடுத்துக் கொள்வோம். நம் வாழ்கைத் தேவைக்காக பேசுகின்ற மொழியின் பெருமை அவர். அவரது நூல்கள் நமது வாழ்க்கையை, நமது கனவுகளை, நமது தத்தளிப்புகளை உரைப்பவை. எனினும், நாம் இவை அனைத்தையும் ஒரு சதியின் அங்கமாக நிரூபிக்க முயன்று கொண்டிருக்கிறோம். நான் அப்போது புண்பட்டேன். எனினும், சமாதனப்படுத்திக் கொண்டேன்.

ஆனால், எவ்வளவு காலத்துக்கு நான் சகித்துக் கொள்ள வேண்டும்? மற்றும் எதற்காக?

என்னால் சரியாக தூங்க இயலவில்லை. குற்ற உணர்ச்சியாக இருக்கலாம். ராஜதுரோகம் புரிந்த துரோகி என்பது மிகப்பெரிய குற்றச்சாட்டு. ஊடகவியலாளர்களாக நமக்கு ஒருவரை துரோகி என்றழைத்து சான்றிதழ்கள் மற்றும் பட்டங்கள் வழங்கும் உரிமை இருக்கிறதா? அது நீதிமன்றங்களின் வரம்புக்கு உட்பட்டதல்லவா?

கண்ணையாவுடன் சேர்த்து நிறைய மாணவர்களை நாம் துரோகிகளாகவும், தேசவிரோதிகளாகவும் மக்களின் முன் நிறுத்தியுள்ளோம். அவர்களில் ஒருவர் நாளை கொல்லப்பட்டால், யார் எதற்கு பொறுப்பேற்றுக் கொள்வார்? நாம் வெறுமனே ஒருவரின் கொலை அல்லது சில குடும்பங்களின் அழிவுக்கான சூழ்நிலையை மட்டும் உருவாக்கவில்லை. ஒரு முழு கலவரத்துக்கு உகந்த சூழலையும், தேசத்தை உள்நாட்டுப் போருக்கு தள்ளும் நிலைமையும் உருவாக்கி உள்ளோம். என்ன மாதிரியான தேசப்பற்று இது? என்ன மாதிரியான ஊடக அறம் இது?

பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் என்ன சொன்னாலும், அதை செய்யும் ஊதுகுழல்களா நாம்? அந்த வீடியோவில் ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ முழக்கங்கள் எதுவுமில்லை. எனினும், மடத்தனமும், வன்முறையும் பரவுவதற்கு அதனை திரும்ப, திரும்ப ஒளிபரப்பினோம். இருட்டிலிருந்து ஒலிக்கும் சில குரல்கள் கண்ணையா குமார் மற்றும் அவருடைய தோழர்களுடையது என்று எதை வைத்து நம்பினோம்? நமது பாரபட்சம் காரணமாக ‘இந்திய நீதிமன்றங்கள் வாழ்க’ முழக்கம் ‘பாகிஸ்தான் வாழ்க’ என்பதாக கேட்டுள்ளது. அரசாங்கத்தின் வழியில் நாம் சிந்திக்கத் தொடங்கியதால் மாணவர்களின் நம்பிக்கைகள், எதிர்பார்ப்புகள், வேலைவாய்ப்புகள் மற்றும் சில குடும்பங்களை அழிவின் விளிம்பில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. புலனாய்வு அமைப்புகள் வேலையை செய்ய அனுமதித்து விட்டு அவற்றின் முடிவுக்கு காத்திருப்பது தான் சிறந்ததாக இருக்க வேண்டும் அல்லவா?

zee-newsஉமர் காலித்தின் சகோதரியை தேசத்துரோகியின் சகோதரி என்றும், வன்புணர்வு செய்வோம் என்றும், முகத்தில் ஆசிட் வீசுவோம் என்றும் அச்சுறுத்துகிறார்கள். அது போன்ற ஒரு சம்பவம் நடந்தால், நாம் அதற்கு காரணமாக இருக்க மாட்டோமா? கொஞ்சம் யோசியுங்கள். கண்ணையா குமார் ஒரு முறையல்ல; ஆயிரம் முறை சொல்லி விட்டார் – தேசவிரோத முழக்கங்களை ஆதரிக்கவில்லை என்று. அரசின் அடியொற்றி சிந்திப்பதால், அவர் விளக்கங்கள் யாருக்கும் சென்று சேரவில்லை. கண்ணையாவின் வீட்டை ஒருமுறையாவது உன்னிப்பாக கவனித்திருப்போமா? அவர் வீடு ஒரு ‘வீடே’ அல்ல. இந்த நாட்டின் விவசாயிகள் மற்றும் சாதாரண மக்களின் கையறு நிலையை எடுத்துக் கூறும் ஒரு குறியீடு. அவர்களின் நம்பிக்கைகள் ஒவ்வொரு விநாடியும் புதைக்கப்படும் கல்லறைகள் அவை. ஆனால், நாம் குரடர்களாகிப் போனோம்.

இதை சொல்ல நான் வருத்தப்படுகிறேன். ஆனால், என்னை போன்ற பலருடைய வீட்டு நிலைமைகள் இது தான். இந்தியாவின் கிராம வாழ்க்கை அழகற்றது. அதன் சிதிலமடைந்த சுவர்களிலும், பலகீனமான பழைய வாழ்க்கையிலும் தேசியவாத நஞ்சு அதன் விளைவுகளை பற்றி கவலை கொள்ளாது ஏற்றப்பட்டுள்ளது. முடமாகிப் போயிருக்கும் கண்ணையாவின் தந்தை அதிர்ச்சியில் மரணித்தால், அதற்கு நாம் பொறுப்பில்லையா? இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏடு மட்டும் கண்ணையாவின் குடும்பம் பற்றிய செய்தியை வழங்கவில்லை என்றால், அவர் எந்த உத்வேகத்திலிருந்து ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக பேசுகிறார் என்ற விபரம் அறியப்படாமலே போயிருக்கும்.

ராமநாமா மற்றும் பலரது நிலைமையும் இது தான். மிகவும் சாதாரணப் பின்னணியிலிருந்து வறுமைக்கெதிராகப் போராடி, இந்த பையன்கள் ஜெ.என்.யூ.வில் அரசின் உதவித் தொகையை பெற்று கல்வியை பெறுகிறார்கள். தங்களின் முன்னேற்றத்தில் இருக்கும் உறுதிப்பாட்டை நீங்கள் அவர்களிடம் காணலாம். டி.ஆர்.பி.க்கு தங்களை விற்பனை செய்யும் நபர்கள் அவர்கள் வாழ்க்கையை ஏறக்குறைய சிதைத்து விட்டார்கள்.

நாம் அவர்கள் அரசியலையும், கருத்துக்களையும் தீவிரமானவை என்று கூறி நிராகரிக்கலாம். ஆனால், அவர்கள் எப்படி தேசதுரோகிகள் ஆனார்கள்? நீதிமன்றங்கள் வழங்கும் நீதியை இந்த பிரச்சினையில் நாம் எப்படிப் பெறப் போகிறோம்? டில்லி போலீசின் முதல் தகவல் அறிக்கையில் ஜீ செய்திகள் தொலைக்காட்சியின் பெயர் இருப்பது வெறும் தற்செயலா? அல்லது, டில்லி போலீசுக்கும், நமக்கும் இருக்கும் நெருங்கிய பிணைப்பின் வெளிப்பாடா? மக்களுக்கு என்ன பதிலை வழங்கப் போகிறோம்?

எல்லாவற்றுக்கும் மேலாக ஜெ.என்.யூ அல்லது ஜெ.என்.யூ மாணவர்களுக்கு எதிராக செயல்பட நமக்கு என்ன உரிமை இருக்கிறது? ஜனநாயகம், பன்முகத்தன்மை, நவீன சிந்தனைகள் மற்றும் முரண்பட்ட கருத்துக்களின் சகவாழ்வு ஆகியவற்றால் ஜெ.என்.யூவை இந்தியாவின் ஏதேன் தோட்டம் போன்று உணர்கிறேன். ஆனால், இப்போது அதை நாம் சட்ட விரோதிகள் மற்றும் தேசவிரோதிகளின் குகை என்றழைக்கிறோம்.

சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்டிருப்பது ஜெ,என்.யூ.வா அல்லது இடதுசாரி தலைவர் ஒருவரை கோர்ட்டில் வைத்து தாக்கிய பா.ஜ.க தலைவர்களா? என்றறிய விரும்புகிறேன். பா.ஜ.க எம்.எல்.ஏ மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஒரு இந்திய கம்யூனிஸ்ட் தலைவரை தெருவில் வைத்து அடித்து துவைக்கிறார். போலீஸ் அதனை வேடிக்கை பார்க்கிறது. தாக்குதலை திரையில் நாம் பார்த்து விட்டு ‘ஓ.பி.ஷர்மாவுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்முறை’ குறித்து புகார் வாசிக்கிறோம். ஏன் இதனை ‘புகார்கள்’ என்று எழுத வேண்டும் என்று கேட்டேன். மேலிருந்து அறிவுறுத்தப்பட்டது என்று சொல்லப்பட்டது. எப்படி நமக்கு மேலிருப்பவர் மிகவும் தாழ்ந்து போனார்? மோடிக்கு எதிராக சொல்லப்படுவதாக இருந்தால்’ எப்படி சொல்லப்படும் என்று இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும். ஆனால், நிலைமை எந்தளவுக்கு முற்றியிருக்கிறது என்றால், ஒ.பி.ஷர்மா மற்றும் ஏ.பி.வி.பி ஊழியர்களை காப்பாற்றுகின்ற வேலையை நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம்.

என்னுடைய இருப்பை, ஊடகப் பணியை மற்றும் கையறு நிலையை நிந்திக்க ஆரம்பித்து விட்டேன். இதற்காகவா பல்வேறு வேலைகளை விட்டுவிட்டு ஊடகவியலாளன் ஆனேன். இல்லை தான்.

இப்போது என் முன்னால் இரண்டு வழிமுறைகளே உள்ளன. ஒன்று, என் ஊடகப் பணியை விட்டு விடுவது. இரண்டாவது, இந்த சூழலிலிருந்து என்னை விடுவித்துக் கொளவது. நான் இரண்டாவதை தேர்ந்தெடுக்கிறேன். நான் எந்த முடிவையும் எடுத்து விடவில்லை. என்னுடைய பணி மற்றும் அடையாளத்துக்காக சில கேள்விகளை மட்டும் கேட்டுக் கொள்கிறேன். இது ஒரு சின்ன விசயம். ஆனால், அதன் பொறுப்பு மிகவும் முக்கியமானது. இது மற்றவர்களுக்கு குறைவானதாகவும் எனக்கு பெரிதாகவும் இருக்கிறது. எனக்கு வேறெங்கும் வேலை கிடைக்காது என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது. நான் சொன்னவற்றை எனக்குள்ளே பூட்டி வைத்திருந்தால் ஒரு லட்சம் வரையிலும் மாத மாத ஊதியம் பெற்றிருப்பேன். என்னுடைய சம்பளம் மிக நன்று. ஆனால், அது பல்வேறு சமரசங்களுடன் கைக்கு வந்து சேர்கிறது. என்னால், அதை பெற முடியவில்லை. நான் ஒரு சாதாரண நடுத்தர வர்க்கக் குடும்பத்திலிருந்து வந்தவன். சம்பளமின்மையின் இடர்பாடுகளை நன்கு அறிந்து வைத்திருப்பவன். எனினும் எனது உணர்வை இழக்க விரும்பவில்லை.

நான் மறுபடியும் சொல்கிறேன். எனக்கு தனிப்பட்ட புகார்கள் எதுவுமில்லை. நிறுவனம் சார்ந்த மற்றும் ஆசிரியர் குழுவின் கொள்கைகள் சார்ந்த பிரச்சினைகள் இருக்கின்றன. இது அந்த கண்ணோட்டத்திலேயே புரிந்து கொள்ளப்படும் என்று நம்புகிறேன். ஒரு செய்தி நிறுவனம் தனது வலதுசாரி கண்ணோட்டத்தை புகுத்த விரும்பினால், தனிநபர்களும் அவர்களின் தனிப்பட்ட அரசியல் நிலைகளை சுதந்திரமாக பேசுவது முக்கியமானது என்று கருதுகிறேன். ஒரு ஊடகவியலாளனாக என்னுடைய பணி என்பது நடுநிலையாக நடந்து கொள்வது. ஆனால், ஒரு தனிநபராகவும் ஒரு விழிப்புணர்வடைந்த குடிமகனாகவும் எனது பாதை இடதுசாரி தன்மை கொண்டது. அது கட்சி அலுவலகங்களில் காண்பது அல்ல. என் அன்றாட வாழ்க்கையில் காண்கிறேன். இதுவே எனது அடையாளம்.
– விஷ்வா தீபக்
– தமிழில்: சம்புகன்.

மக்கள் அதிகாரம் கையிலெடு ! புதிய பாடல்

0

Kovan Song மக்கள் அதிகாரம் கையிலெடு ! கோவன் பாடல்

திருச்சியில் பிப்.14, 2016 அன்று மக்கள் அதிகாரம் நடத்திய “மூடு டாஸ்மாக்கை” – சிறப்பு மாநாட்டின் கலை நிகழ்ச்சியில், ம.க.இ.க பாடகர் தோழர் கோவன் பாடிய புதிய பாடல்! அதிகாரத்தை கையிலெடுத்தால் மக்கள் மாற்ற நினைத்ததை மாற்ற முடியும் என்பதற்கு நம்பிக்கையூட்டும் பாடல். பாருங்கள், பகிருங்கள்!

கண்ணீர் சிந்தாதே ! கலகம் செய் !!

1

“இந்தத் தருணத்தில் நான் புண்பட்டவனாக உணரவில்லை. என் மனம் துயரில் மூழ்கவில்லை. வெறுமையானவனாக, என்னைப் பற்றியே அக்கறையற்றவனாக உணர்கிறேன். இது பரிதாபத்துக்குரிய நிலைதான். அதனால்தான் இதைச் செய்கிறேன்.” “எனக்காக கண்ணீர் சிந்தாதீர்கள். இவ்வுலகில் வாழ்வதைவிடச் சாவது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.” இவை ரோகித் வெமுலாவின் இறுதிக் கடிதத்தில் காணப்படும் வரிகள்.

ரோகித் வெமுலா
ரோகித் வெமுலா (கோப்புப் படம்)

தன்னைச் சுற்றியிருந்த மாணவர்களைச் செயல் துடிப்புள்ளவர்களாக மாற்றிய ஒரு இளைஞனை வெறுமையில் தள்ளியது எது? பிரபஞ்சத்தின் தோற்றம் முதல் தற்போது தான் வாழ்கின்ற சமூகம் வரையிலான அனைத்தின் மீதும் மாளாக்காதலுடன் அக்கறையும் கொண்டிருந்த ஒரு இளைஞனை, தன் மீதே அக்கறையற்ற பரிதாப நிலைக்குத் தள்ளியது எது?

யாகுப் மேமனின் மரண தண்டனையைச் சகித்துக் கொள்ள முடியாமல் துடித்த ஒரு மாணவன், முசாஃபர் நகர் படுகொலைகளைத் தனது கண் முன் நடைபெற்ற அநீதி போல் உணர்ந்த மாணவன், ‘வாழ்வதை விடச் சாவது தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக’க் கூறுகிறானே, அதிலிருந்து நாம் புரிந்து கொள்வது என்ன?

வெமுலாவின் கடிதம் இச்மூகத்தின் மீதான ஆழ்ந்த நம்பிக்கையின்மையை வெளிப்படுத்துகிறது. தனது மரணம் ஒரு எதிர்ப்பலையை உருவாக்க வேண்டுமென்ற விருப்பம்கூட வெமுலாவின் கடிதத்தில் தென்படவில்லை. இதுதான் நம்மைக் குற்றவுணர்வில் ஆழ்த்தும் பழி. தனது முடிவுக்காக, தன்னை நேசித்தவர்களிடம் வெமுலா மன்னிப்புக் கேட்கிறான். ஆனால், தனது மரணம் மற்றவர்களிடம் குற்றவுணர்வை ஏற்படுத்தி விடாது என்ற “தெளிவு” வெமுலாவிடம் இருந்திருக்கிறது.

இறந்து போன எஸ்.வி.எஸ் கல்லூரி மாணவிகளோ, “இந்தக் கல்லூரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில்தான் தாங்கள் தற்கொலை செய்து கொள்வதாக”க் கடிதத்தின் இறுதியில் குறிப்பிட்டிருக்கிறார்கள். அது அவர்கள் எழுதிய தற்கொலைக் கடிதம் என்பது உண்மையாயின், அம்மாணவிகளின் எதிர்பார்ப்பு வெமுலாவின் மொழியில் கூறுவதெனில் மிகவும் பரிதாபத்துக்குரியது. கல்லூரியின் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் பெற்றவர்களென அம்மாணவிகள் நம்புகின்ற எல்லா நிறுவனங்களும் நிர்வாகத்தின் குற்றக்கூட்டாளிகளே என்பது புரியாத காரணத்தினால் வந்த வெகுளித்தனமான எதிர்பார்ப்பு.

இந்த அரசியல் சட்டம் வழங்கும் உரிமைகள், இந்த அரசமைப்பு உருவாக்கியுள்ள விதிமுறைகள் மரபுகள், தான் நிலைநிறுத்த விரும்புவதாக ஆளும் வர்க்கமே கூறிக்கொள்கின்ற சமூக பண்பாட்டு விழுமியங்கள், ஆளும் வர்க்கம் பீற்றுகின்ற சட்டத்தின் ஆட்சி ஆகிய இவையனைத்துமே தோற்றுவிட்டன என்பதை உணர்ந்து கொள்ளாமல், அவற்றின் வரம்பில் நின்று ஏதேனும் சாதித்துவிட முடியும் என்று நம்புகிறவர்கள், தத்தம் சூழ்நிலைகள் தோற்றுவிக்கும் நிர்ப்பந்தங்களுக்கு ஏற்ப தற்கொலை மனோபாவத்துக்கு ஆட்படுகிறார்கள். விஷ்ணுப்பிரியா முதல் வெமுலா வரையிலான மதிப்பு மிக்க பல உயிர்களை இப்படித்தான் நாம் இழந்து கொண்டிருக்கிறோம்.

தற்கொலை மனோபாவத்திலிருந்து இளைஞர்களை விடுவிக்க வல்லதும் இத்தகைய கலகப் பண்பாடுதான்!

_______________________________
புதிய ஜனநாயகம், பிப்ரவரி 2016
_______________________________

விவசாயிகளை காவு வாங்கும் கெயில் – சிறப்புக் கட்டுரை

0

விவசாயிகளை காவு வாங்கும் எரிவாயு குழாய்!

gail-pipeline-6
படம் – TheHindu

கேரளத்திலிருந்து கோழிக்கோடு வழியாக மங்களூருக்கும் தமிழ்நாடு வழியாக பெங்களூருக்கும் குழாய் வழியாக எரிவாயு கொண்டு செல்லும் ரூ.3 கோடி மதிப்பிலான திட்டத்தை மத்திய அரசு வடிவமைத்தது. இதனடிப்படையில், தமிழ்நாட்டில் கோயமுத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்கள் வழியாக குழாய் பதிக்கும் பணியை கெயில் நிறுவனம் மேற்கொண்டது.

இத்திட்டத்தின் மொத்தத் தொலைவான 884 கி.மீ.-ல் தமிழகத்தின் இந்த 7 மாவட்டங்களில் மட்டும் 310 கி.மீ. தூரத்திற்கு இக்குழாய் பதிக்கப்பட இருக்கிறது. அந்தவகையில், 175 கிராமங்களிலுள்ள சுமார் 50,000 ஏக்கர் விளைநிலங்கள் நாசமாகும். 5000 விவசாயக் குடும்பங்கள் நேரடியாகவும் பல ஆயிரம் குடும்பங்கள் மறைமுகமாகவும் பாதிக்கப்படும்.

திட்டத்தின் கோர முகம்

இது விவசாயத்தைச் சீர்குலைக்குமென்பதால், இக்குழாய்களை நெடுஞ்சாலை ஓரமாகவோ, ரயில்பாதை ஓரமாகவோ கொண்டு செல்லுமாறு கோருகிறார்கள் விவசாயிகள். அவ்வாறு கொண்டு சென்றால் “குழாய்ப்பாதையின் நீளம் அதிகரிக்கும், செலவு அதிகரிக்கும், அதனை நுகர்வோர் சுமக்க வேண்டியிருக்கும்” என்பதுதான் கெயில் நிறுவனத்தின் ஆட்சேபம். எரிவாயு விலையை விருப்பம் போல உயர்த்தி மக்களைக் கொள்ளையடிக்கும் எரிவாயு நிறுவனம், நுகர்வோர் நலன் குறித்துப் பேசுவது ஒரு பித்தலாட்டம். தற்போது இந்தக் குழாய்ப் பாதையில் செல்லும் எரிவாயுவில் கூட 50 சதவீதத்துக்கு மேல் தனியார் தொழிற்சாலைப் பயன்பாடுகளுக்குத்தான் செல்லவிருக்கிறது. இருப்பினும் இந்நிறுவனங்களின் இலாபம் ஈட்டும் உரிமையை, பல்லாயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வுரிமையைக் காட்டிலும் மேம்பட்ட பொதுநலனாக நீதிமன்றம் கருதுகிறது.

  • இத்திட்டத்திற்காக நிலத்தை மட்டும் பயன்படுத்திக் கொள்கிறது என்கிறது கெயில் நிறுவனம். அதுவும் 99 ஆண்டுகளுக்கு!
  • நிலத்திற்கு மட்டும்தான் இழப்பீடு. மரங்கள், பயிர்கள், கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள், பசுமைக் குடில்கள், வீடு போன்ற கட்டுமானங்கள் மற்றும் விவசாயத்திற்காக அந்த நிலங்களின் உரிமையாளர்களான விவசாயிகள் பட்டக் கடன்கள் போன்றவற்றிற்கு எந்தப் பாதுகாப்பும் கிடையாது.
  • அப்படியானால், இழப்பீடு எவ்வளவு தருவார்கள்? நிலத்தின் சந்தை மதிப்பிற்கு 10% மட்டுமே வழங்கப்படும்.
  • குழாயின் இருபுறமும் சுமார் 30 அடி தூரத்திற்கு வேர் ஆழமாக செல்லும் மரங்களை வைக்கக் கூடாது. அதாவது, தென்னை, மா, புளி போன்ற மரங்கள் வெட்ட வேண்டும். குறுகிய கால பயிர்களை மட்டும் தான் பயிரிட முடியும். இதனை மீறி நட்டால் அந்த விவசாயிகள் கிரிமினல்களாகக் கருதப்பட்டு தண்டனை வழங்கப்படும்.
  • இந்த இடத்திற்கு அருகில் நிலத்தை உழக் கூடாது. ஆழ்துளைக் கிணறு அமைக்கக் கூடாது.
  • குழாயைச் சுற்றி இருபுறமும் சுமார் ஒரு கி.மீ. தூரம் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படும். அதாவது, இப்பகுதிகளில் கிணறு, வாய்க்கால் அல்லது குளங்கள் வெட்டக்கூடாது.
  • ஏழு மாவட்டங்களில் இலட்சக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டும். சுமார் ஆயிரம் நீர்நிலைகள் மூடப்படும். ஆயிரக்கணக்கான வீடுகள் இடிக்கப்படும்.

இறுதியாக ஒரு கேள்வி. இந்த எரிவாயு குழாய் பாதுகாப்பானதா? இல்லை என்பதற்கு சாட்சி, சென்ற ஆண்டு ஆந்திர மாநிலத்தில் நாகாராம் என்ற கிராமத்தில் கெயில் நிறுவனம் எரிவாயு கொண்டு செல்லப் பதித்த குழாய்களில் கசிவு ஏற்பட்டு வெடித்ததால் 16 பேர் பலி ஆனார்கள் என்பதுதான்!

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இதன் பாதிப்பு

gail-pipeline-4இத்திட்டத்தின் படி விவசாய நிலங்களில்தான் குழாய் பதிக்கப்படும். அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒசூர், தேன்கனிக்கோட்டை வட்டங்களைச் சேர்ந்த உடையாண்ட அள்ளி, தொட்ட திம்மன அள்ளி, கருக்கன அள்ளி, தொட்ட மெட்டரை, போடிசிப் பள்ளி, அச்செட்டிப் பள்ளி, எடய நல்லூர், பூனப்பள்ளி ஆகிய ஊராட்சிகளின் வழியாக கர்நாடகத்திற்கு இக்குழாய் கொண்டு செல்லப்பட இருக்கிறது. தருமபுரி மாவட்டத்தின் தருமபுரி, பாலக்கோடு வட்டங்களின் வழியாக இக்குழாயின் பாதை செல்கிறது.

இக்குழாய் பதிக்கப்படும் இந்தக் கிராமங்களில் நெல், கரும்பு, வாழை, தென்னை, மா, பலா, தக்காளி, பூக்கள் மற்றும் காய்கறிகள் பயிரிடப்படுகின்றன. பல நூற்றுக்கணக்கான கிணறுகளும் ஏரிகளும் உள்ளன. பல லட்ச ரூபாய் கடன்பட்டு ஆழ்துளைக் கிணறுகளை விவசாயிகள் அமைத்துள்ளனர். இவை அனைத்தையும் நாசமாக்கும் வகையில்தான் இந்தத் திட்டம் அமைந்துள்ளது.

சர்வக் கட்சி ஒத்துழைப்பு!

2003-ம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சி (பா.ஜ.க. + திமுக + மதிமுக + பாமக கூட்டணி) காலத்தில்தான் இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டது. அறிமுகப்படுத்தப்பட்ட உடனே, கெயில் நிறுவனத்துக்காக இந்திய அரசின் எரிபொருள் மற்றும் இரசாயனத் துறை அக்டோபர் 22-ம் தேதி அரசாணை பிறபித்தது. அதனைத் தொடர்ந்து அரசிதழில் வெளியிட்டு உடனடியாக இத்திட்டத்தை அமுலாக்கும் வேலையில் இறங்கியது. கெயில் நிறுவனமும் குழாய் பதிக்க தேவையான விளைநிலங்களை கையகப்படுத்தும் முயற்சிகளைத் துவங்கியது. விவசாயிகளின் எதிர்ப்பை பொருட்படுத்தவில்லை.

இத்திட்டத்தை அமுல்படுத்துவதில் உள்ள சட்டசிக்கல்களை உணர்ந்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி (காங்கிரசு – போலி கம்யூனிஸ்ட் – திமுக கூட்டணி) தனது முதல் ஆட்சி காலத்தில் அமுல்படுத்தத் துணியவில்லை. இதனைத் தொடர்ந்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி 2ல் 2011-ல் பெட்ரோலியம் மற்றும் கனிம வளங்கள் குழாய் பதிக்கும் சட்டம் 1962-ல் ஒரு சட்டத்திருத்தத்தை எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்புடன் மேற்கொண்டது.

மினி நிலம் கையகப்படுத்தும் சட்டம்!

பெட்ரோலியம் மற்றும் கனிமவளக் குழாய் பதிக்கும் சட்டத்தில் 2011-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் படி,

  • மத்திய அரசின் குழாய் பதிக்கும் திட்டங்களுக்கு மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது.
  • இச்சட்டத்தின் படி நிலம் கொடுத்த விவசாயிகளையே குற்றவாளிகளாக்கி தண்டனை வழங்க முடியும். அதாவது, விவசாயிகளுக்கு சொந்தமான நிலத்தில் புதைக்கப்பட்டுள்ள எரிவாயு குழாய், சேதமடைந்திருந்தாலோ, வேறு எந்த வகையான பாதிப்பு ஏற்பட்டிருந்தாலோ, சம்பந்தப்பட்ட விவசாயி தான் பொறுப்பேற்க வேண்டும்.
  • தான் குற்றவாளி அல்ல என்று நிரூபிக்க வேண்டியது நில உரிமையாளரான விவசாயிகளின் பொறுப்பு.
  • குற்றம் சுமத்தப்பட்ட ஒரு விவசாயி தான் குற்றவாளி அல்ல என்று நிரூபிக்கத் தவறினால், தண்டனை மூன்று ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை விதிக்க இச்சட்டம் வழிவகை செய்கிறது.

இதில் சட்டத்துறை கட்டமைப்பு நெருக்கடி என்ன தெரியுமா? இந்திய அரசியல் சாசனம் மாநிலங்களுக்கு ‘நிலம்’ மீதான gail-pipeline-1அதிகாரத்தை வழங்கியுள்ளது. இந்தச் சட்டமும் நிலம் கையகப்படுத்தும் சட்டமும் (நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் சில திருத்தங்களைச் செய்து மோடி அரசு அமுல்படுத்த முயற்சிக்கும் மசோதா) அரசியல் சாசனம் மாநில அரசுகளுக்கு வழங்கியுள்ள நிலத்தின் மீதான உரிமையைப் பறிக்கின்றன. இந்திய அரசியல் அமைப்பின் போலித்தனத்தை அம்பலப்படுத்தாமல், போலி கம்யூனிஸ்டுகள், தமிழக அரசிடம் கெஞ்சுகின்றனர். அரசியல் சாசனம் வழங்கியுள்ள ‘உரிமை’யை நிலைநாட்டக் கோருகின்றனர்.

ஜெயலலிதாவின் நாடகம்!

இதன் பின்னர் 2013-ம் தொடக்கத்தில் இத்திட்டத்தை அமுல்படுத்தும் வேலையில் கெயில் நிறுவனம் ஈடுபட்டது. அதற்கு ஜெயலலிதா அரசு முழு ஒத்துழைப்பு கொடுத்தது. இதற்காக விவசாய நிலத்தில் உள்ள மரங்களை பொக்லைன் இயந்திரம் வைத்து வேரோடு பிடுங்கி எறிந்தது; விவசாயிகளை பலவந்தமாக மிரட்டியது; மிரட்டி கையெழுத்து வாங்கியது; பலவந்தமாக குழாய் பதிக்கும் வேலையில் இறங்கியது; போராடிய விவசாயிகளை போலீசைக் கொண்டு அடித்து விரட்டியது; பொய்வழக்கு பதிவு செய்தது; பல விவசாயிகளை வீட்டுக்காவலில் வைத்தது.

அப்போது விவசாயிகள் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். உயர்நீதிமன்றம் விவசாயிகளின் கருத்தைக் கேட்டு அமுல்படுத்துமாறு தமிழக அரசுக்கு அறிவுருத்தியது. அந்தவகையில் மார்ச் 6, 7, 8 தேதிகளில் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடுமையான எதிர்ப்புகளை பதிவு செய்தனர். கருத்துக் கேட்பு கூட்டத்தை தனக்கு சாதமாக நடத்த கெயில் நிறுவனம் எடுத்துக்கொண்ட சதி வேலைகளை விவசாயிகள் தவிடு பொடியாக்கினர்.

விவசாயிகளின் கடும் எதிர்ப்புகளைக் கண்டஞ்சிய ஜெயா நாடகமாடத் தொடங்கினார். தனது அரசியல் பகடைக்காயாக இதனைப் பயன்படுத்த முடியும் என உணர்ந்த ஜெயா, “மக்களுக்காத்தான் திட்டங்களே தவிர, திட்டங்களுக்காக மக்கள் அல்ல, விவசாயிகளை பாதிக்கக் கூடிய வகையிலான் அதிட்டங்களை எனது அரசு அனுமதிக்காது” என்று சட்டமன்றத்தில் வாய்ச்சவடால் அடித்தார். விளைநிலங்களின் வழியாக குழாய் பதிக்கக் கூடாது என தடைவிதித்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானமாகவும் நிறைவேற்றியது.

இங்கு கவனிக்க வேண்டிய விசயம், மார்ச் மாதத்தில் நடந்த கருத்துக் கேட்பு கூட்டத்திலேயே 2011-ம் ஆண்டின் சட்டத்திருத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இதில் சட்டத்திருத்தத்தை வாபஸ் பெறுவது தொடர்பாக ஜெயா வாயைத் திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், விவசாய நிலங்களின் வழியே குழாய் பதிப்பதற்கும், அதன் பொருட்டு நிலங்களைக் கையகப்படுத்துவதற்கும் அனுமதி மறுத்த தமிழக அரசு, நெடுஞ்சாலைகள் வழியாக குழாய் பதிக்குமாறு கெயில் நிறுவனத்திற்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவு சட்டப்படி செல்லுபடியாது என்று தமிழக அரசுக்கு நன்கு தெரியும்.

விவசாயிகளின் எதிரி உயர்நீதிமன்றம்

தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்த கெயில் நிறுவனத்திற்கு சார்பாக, விவசாயிகளுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. விவசாயிகளின் நலனுக்கு மேலான பொதுநலன் இந்த எரிவாயுக் குழாய்த் திட்டத்தில் இருப்பதாகவும், இந்தத் திட்டம் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுமென்றும் கூறி, விளைநிலங்களில் குழாய் பதிக்க அரசு பிறப்பித்திருந்த தடை உத்தரவை ரத்து செய்துள்ளது.

அதுமட்டுமல்ல; இத்திட்டத்தினை விவசாயிகள் ஏற்குமாறு செய்ய தமிழக அரசால் இயலுமென்றும், ஒருவேளை அவர்கள் ஏற்க மறுத்துப் போராடினால், கூடங்குளம் போராட்டத்தைக் கையாண்டதைப் போல இதையும் கையாள முடியுமென்றும், சட்டம்–ஒழுங்கை நிலைநாட்டுவதற்குத் தேவையான அளவு வலிமை அரசுக்கு இருப்பதாகவும் நீதிபதிகள் தமது தீர்ப்பில் கூறியிருக்கின்றனர். இதனை எதிர்த்து தமிழக அரசும், விவசாயிகளும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

தொடரும் ஜெயலலிதா-நீதிமன்றங்களின் கூட்டு நாடகம்

gail-pipeline-3
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கெயில் எரிவாயு குழாயில் நடந்த விபத்து. படம் -indianexpress.com

இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் 2013-ம் ஆண்டு ஜனவரியில் சென்னை உயர்நீதிமன்ற உத்திரவிற்கு இடைக்கால தடை விதித்தது. விசாரணை தொடர்ந்து நடந்து வந்தது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து மற்றும் நீதிபதி அமிதவராய் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இடைக்கால தடையை மேலும் நீட்டித்து உத்தரவிட்டது. கெயிலுக்கு எதிரானதாகத் தோன்றும் இந்த இடைக்கால உத்தரவு, முக்கியமாக அப்பொது தமிழகத்தில் நடந்து வந்த மீத்தேன் எதிர்ப்பு, ஜிண்டால் எதிர்ப்பு, தாதுமணல் கொள்ளை எதிர்ப்பு, கிரானைட் கொள்ளை எதிர்ப்பு, நியூட்ரினோ எதிர்ப்பு, ஆற்றுமணல் கொள்ளை எதிர்ப்பு, வன உயிரியல் பூங்கா அமைக்கும் கொடைக்கானல் மலைவாழ் மக்கள் எதிர்ப்பு ஆகிய போராட்டங்களின் வீச்சின் பின்னணியுடன் ஒப்பிட்டுப் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்நிலையில், தற்போது நடந்த இறுதி விசாரனையின் போது, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பாக மூத்த வழக்கறிஞர் யாரும் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தையே சீரழிக்கும் டாஸ்மாக்கிற்கு எதிராக பாடகர் கோவனை போலீசு காவலில் எடுத்து விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுத்த நிலையில், உச்சநீதிமன்றத்திற்கு சென்ற ஜெயலலிதா அரசு, அதற்கு மூத்த வழக்கறிஞர்களைக் கொண்டு வாதாடியது. ஜெயா மீதான கள்ளத்தனமான சொத்துக் குவிப்பு வழக்கில், மேல் முறையீடு செய்வதற்கு இவர்கள் நடத்திய பித்தலாட்டங்களை ஒப்பிட்டுப் பார்த்தால் ஜெயாவின் இந்தத் துரோகத்தை புரிந்து கொள்ள முடியும்.

இத்திட்டத்தை ஆரம்பம் முதலே ஜெயா கையாண்ட விதத்தையும், இது போன்ற ‘வளர்ச்சி’த் திட்டங்களான கூடங்குளம் அணுமின்நிலையத்திலும் ஜெயா அரசும் நீதிமன்றமும் மேற்கண்ட பாணியிலான நாடகத்தைத்தான் அரங்கேற்றின என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

விவசாயிகளின் முகத்தில் குத்தும் உச்ச நீதிமன்றம்!

உச்சநீதிமன்றத்தின் தற்போதைய இறுதி விசாரணையில் நீதிபதிகள் டி.எஸ்.தாக்கூர், ஏ.கே.சிக்ரி, ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு பிப்ரவரி 2-ம் தேதியன்று வழங்கிய தீர்ப்பில், “2011-ம் ஆண்டில் மத்திய அரசு கொண்டுவந்த பெட்ரோலியம் மற்றும் கனிமவளங்கள் குழாய் பதிக்கும் சட்டத்திருத்தத்தின் (பி.எம்.பி. சட்டம்)படி, மத்திய அரசு நிறுவமனமான கெயில் எரிவாயுக் குழாய் பதிக்கும் திட்டத்தில் தமிழக அரசு தலையிடுவதற்கு அதிகாரம் இல்லை; மேலும், எரிவாயு பாதையை மாற்றுவதற்கும் தமிழக அரசுக்கு உரிமையில்லை”, “தமிழகத்தில் விளைநிலங்கள் வழியாக குழாய் மூலம் எரிவாயு கொண்டு செல்லும் திட்டத்தை கெயில் நிறுவனம் செயல்படுத்தலாம்” என்று அனுமதி வழங்கியுள்ளனர். மேலும், “கெயில் நிறுவனம் எரிவாயு பதிக்கும் திட்டத்தை வரையறுக்கும் போதே தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்?”, “வாக்கு வங்கி அரசியலுக்காக இந்தத் திட்டத்தை தமிழக அரசு எதிர்க்கிறதா?” என்று கேள்வி எழுப்பி தமிழக அரசின் மனுவைத் தள்ளுபடி செய்துள்ளனர்.

gail-pipeline-2
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கெயில் எரிவாயு குழாயில் நடந்த விபத்து. படம் – thehindubusinessline

“எரிவாயுக் குழாய் திட்டத்தால் நிலங்களை இழக்கும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக மாநில அரசு ஒருகுழு அமைத்து, கையகப்படுத்தப்பட்ட நிலங்களின் தற்போதைய சந்தை மதிப்பீடு எவ்வளவு என்பதை நிர்ணயம் செய்ய வேண்டும்; அதன் அடிப்படையில் கெயில் நிறுவனம், விவசாயிகளுக்கு அவர்களது நிலத்தின் சந்தை மதிப்பில் 40 சதவீதத்தை இழப்பீடாக வழங்க வேண்டும்” என்று தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.

இடைக்காலத் தீர்ப்பு கெயிலுக்கு எதிராக, இறுதித் தீர்ப்பு விவசாயிகளுக்கு எதிராக – இதுதான் உச்ச நீதிமன்றம்! சதித்தனத்தின் ஒட்டுமொத்த உருவமாக உச்சநீதிமன்றம் விளங்குவதை இந்தத் தீர்ப்பின் மூலம் புரிந்து கொள்ள முடியும். மேலும், ஜெயலலிதா வாக்கு வங்கி அரசியலுக்காக இவ்வாறு செய்கிறாரா என்று கேட்பதன் மூலம் ஜெயாவை கெயில் எரிவாயுக் குழாய்க்கு எதிரானவராகக் காட்ட நினைக்கிறார் தலைமை நீதிபதி தாக்கூர். கெயில் திட்டத்திற்கு ஜெயா தெரிவிக்கும் எதிர்ப்பு என்பது நாடகமே என்பதை மறைக்கிறார்.

கேடி அரசு!

மோடி அரசு விவசாயிகளுக்கு எதிரானது என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. இந்த திட்டத்தை அமுல்படுத்துவதில் தீவிரம் காட்டுவது என்பது ஒருபுறம் இருக்கட்டும். இந்தப் பிரச்சனைத் தொடர்பான உச்சநீதிமன்ற வழக்கில் கெயில் நிறுவனத்திற்கு ஆதரவாக வழக்காடியது யார்? பொட்ரோல் மற்றும் எரிவாயுத் துறைக்குத் தெரியாமலேயே அத்துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜராகவிட்டார்களா? விவசாய நிலங்களின் வழியாக கொண்டு செல்வதை நாங்கள் ஆதரிக்கவில்லை என்று பா.ஜ.க.வினர் சொல்வது கடைந்தெடுத்தப் பொய் அல்லவா. ஒரு பக்கம் உச்சநீதிமன்றத்தில் விவசாயிகளுக்கு எதிராக வழக்காடும் பார்ப்பன இந்து மதவெறியர்களான பா.ஜ.க.வினர்தான் மற்றொருபுறம், விவசாயிகளுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர்.

கெயில் பொதுத்துறை நிறுவனம் தானே! ஏன் எதிர்க்க வேண்டும்?

சி.பி.எம்., சி.பி.ஐ. உள்ளிட்டு எல்லா ஓட்டுக் கட்சிகளும் கெயில் எரிவாயு குழாய் தேச வளர்ச்சிக்கானதுதான், ஆனால், அது விவசாயிகளை பாதிக்கின்ற வகையில் அமுல்படுத்தக் கூடாது என்று தெரிவிக்கின்றன. கெயில் பொதுத்துறை நிறுவனம் என்பதில் யாருக்கும் ஐயமில்லை. ஆனால், இந்தப் பொதுத்துறையை தனியார்மயமாக்கம் என்ற பெயரில் கார்ப்பரேட் கம்பெனிகளும் பன்னாட்டுக் கம்பெனிகளும் கொள்ளையடிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என்பதையும் இதற்கு இந்த ஓட்டுக் கட்சிகள் அனைத்தும் நேரடியாகவும் மறைமுகமாகவும் காரணமாக இருந்துள்ளனர் என்பதையும் நாம் உணர வேண்டும். மேலும், தற்போது கெயிலில் 30% பங்குகளை அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் கையில்தான் உள்ளது.

இது மட்டுமல்ல, மீதியையும் படிப்படியாகத் தனியார்மயமாக்குவதுதான் அரசின் கொள்கை. ஏற்கெனவே கோதாவரிப்படுகை எரிவாயுக்கிணறுகள் அம்பானிக்குத் தாரைவார்க்கப்பட்டுவிட்டன. அவற்றிலிருந்து எடுக்கும் எரிவாயுவை ஆந்திராவிலிருந்து கர்நாடகா, மகாராட்டிரா, ம.பி., வழியாக குஜராத் கொண்டு செல்லும் குழாய்ப்பாதையும் முகேஷ் அம்பானிக்குச் சொந்தமாக உள்ளது. ம.பி.யிலிருந்து உ.பி.க்கு புதிய குழாய்ப்பாதையொன்றையும் அம்பானியின் நிறுவனம் அமைக்கவிருக்கிறது. நாட்டின் பொதுச்சொத்தான கோதாவரி எரிவாயுவின் விலையை ரிலையன்சும் பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனமும்தான் இன்று தீர்மானிக்கின்றன. சொன்ன விலை தராவிட்டால் உற்பத்தியை முடக்குகின்றன.

கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும் உழைக்கும் மக்களுக்கும் பொதுவான ஒரு நிறுவனமாக இனியும் கெயில் இருக்க முடியுமா, சிந்திப்பீர்!

எரிவாயு யாருக்காக?

எரிவாயு யாருக்காக எடுத்துச் செல்லப்படுகிறது என்ற கேள்வியை நாம் எழுப்ப வேண்டும். எரிவாயு என்பது மின்சார உற்பத்தி உள்ளிட்ட தேவைகளை ஈடேற்றக் கொண்டு செல்லப்படுகிறது என்று ஆளும் வர்க்கமும் ஓட்டுக் கட்சிகளும் அதிகார வர்க்கமும் ஒரு சேர கூறுகின்றனர். இது தேச வளர்ச்சிக்கான திட்டம் என்றும் கூறுகின்றனர். இந்தக் கூற்று உண்மையா?

இந்த எரிவாயுவில் 50% தொழிற்சாலைகளுக்கு வழங்கப்பட இருக்கிறது. மீதியை யாருக்கு மக்களுக்கு என்று கருதினால் அதுவும் தவறு. ஏனெனில், அதிலும் தனியார்மயம் புகுந்து விளையாடும். ஏற்கனவே, எரிவாயுக்காக வழங்கப்பட்டு வந்த மானியங்கள் ஒழிக்கப்பட்டு வரும் நிலையில் எரிவாயு மக்களுக்கான என்று சொல்வது எவ்வளவு பெரிய மோசடி. மொத்தத்தில், எரிவாயு முழுவதும் கார்ப்பரேட் முதலாளிகளில் நலனிற்கும் கொள்ளைக்கும் தான் கொண்டு செல்லப்படுகிறது.

கூடங்குளம் அணுமின் நிலையம் திறப்பதற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பிய போது, இதே போன்ற ஒரு கருத்தைத்தான் அனைத்து ஓட்டுக் கட்சிகளும் ஆளும் வர்க்கமும் முன்வைத்தன. ஆனால், நடந்தது என்ன என்பது தமிழக மக்களுக்கு நன்கு தெரியும். 15 நாட்களின் மின் உற்பத்தி தொடங்கிவிடும், மின்வெட்டு முடிவுக்கு வந்துவிடும் என்பதெல்லாம் இன்று நகைக்கத்தக்க பொய்ப் பிரச்சாரங்கள் என்பதை மக்கள் நன்றாக உணர்ந்துள்ளனர். இந்த ஐந்து ஆண்டுகளில் மின்வெட்டு அதிகரித்திருப்பது மட்டுமின்றி மின் கட்டணம் இரு மடங்காக உயர்ந்துள்ளது. கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு மேலும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவைதான் உண்மை!

கெயிலை விரட்டியடி, நிலத்தைக் காப்பாற்ற கமிட்டி போடு!

ஏற்கெனவே ஆறு வழிச் சாலைகள், உயர் அழுத்த மின் கோபுரங்கள், இருவழி இரயில் பாதைகள், சிப்காட் போன்றவற்றுக்காக பொதுநலன் என்ற பெயரில் தமது நிலத்தை வழங்கிய விவசாயிகள், அதனால் அடைந்த பயன் என்ன? கிராமங்களுக்கு 10 மணிநேர மின்வெட்டு, நெடுஞ்சாலைகளில் டோல்கேட் வசூல், கிராமங்களில் நிற்கும் பாசஞ்சர் ரயில்கள் மென்மேலும் ரத்து செய்யப்பட்டு அதிவேக ரயில்கள் அறிமுகம் – என்பதுதான் இந்த “பொதுநலன்” விவசாயிகளுக்கு அளித்திருக்கும் பரிசு.

ஆகையால், பொது நலன், தேச நலன், வளர்ச்சி, முன்னேற்றம் என்ற வார்த்தைகளைக் கண்டு இனியும் விவசாயிகள் ஏமாறலாமா?

மாவட்ட ஆட்சியர், வி.ஏ.ஓ., நீதிமன்றம் என ஒட்டுமொத்த அதிகார வர்க்கமும் விவசாயிகளுக்கு எதிராக இராணுவம் போன்று அணிவகுத்து நிற்கின்றன. ஓட்டுக் கட்சிகள் திட்டத்தை அமுல்படுத்திவிட்டு, வெளியே நீலிக்கண்ணீர் வடிக்கின்றன. ஓட்டுக்காகவும் சீட்டுக்காவும் இலாவணி பாடுகின்றன. இந்த நாடகத்தின் மூலம் விவசாயிகளை ஏமாற்றப் பார்க்கின்றன.

மேலும், உச்சநீதிமன்றத் தீர்ப்பு அமுலுக்கு வர இருக்கிறது. இனியும் தாமதிக்காமல் உடனடியாக தீர்வுக்கு வரவேண்டும். உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு போட்டுள்ள மறுசீராய்வு மனுவின் மீதான விசாரணை முடிந்து தீர்ப்பு வருவதற்குள், நிலங்கள் கெயிலின் கட்டுப்பாட்டில் போய்விடும். எப்படியும் இது நடக்கும் எனத் தெரிந்தும், உச்சநீதிமன்றத்தின் முடிவை எதிர்ப்பார்ப்பதைவிட, உடனே களத்தில் இறங்க வேண்டும்.

இனி தீர்வு ஒன்றுதான். “யார் உத்தரவிட்டாலும் எங்கள் நிலத்தில் குழாய் பதிக்க அனுமதிக்கமாட்டோம்” என்று எதிர்த்து நின்று போராடுவது மட்டும்தான் விவசாயிகள் முன்னுள்ள ஒரே வழி.

அதற்காக, கிராமத்திற்கு கிராமம் விவசாயிகள் கமிட்டி அமைப்போம். விவசாயிகள் தமக்கான அதிகாரத்தை நிலை நிறுத்துவோம். கெயிலின் குழாய் பதிக்கும் எந்திரங்களையும் அதற்கு கங்காணிகளாக வர இருக்கும் அதிகாரிகளையும் போலீசையும் ஊருக்கு வெளியே தடுத்து நிறுத்துவோம்!

மறுகாலனியாக்கமும் விவசாயத்துறை கட்டமைப்பு நெருக்கடியும்!

விவசாயத்தை அழித்து நாட்டை கார்ப்பரேட் கம்பெனிகள், பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு திறந்துவிடுவதுதான் தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் எனும் மறுகாலனியாக்கக் கொள்கை. விவசாயத்தை அழிப்பது, இந்தியாவின் உணவுத்தற்சார்பை ஒழிப்பது, உணவுக்காக இந்தியாவை ஏகாதிபத்தியங்களிடம் கையேந்த வைப்பது இக்கொள்கையின் அடிப்படையிலான இலக்குகள். இந்த இலக்கை நிறைவேற்றும் வகையில்தான் தஞ்சை டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் திட்டம், தூத்துக்குடி கடலோர மாவட்டங்களில் தாதுமணல் கொள்ளை, மதுரை-கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கிரானைட் கொள்ளை, தேனி மாவட்டத்தில் நியூட்டிரினோ திட்டம், திருவண்ணாமலை மாவட்டத்தில் கவுத்தி வேடியப்பன் மலைகளை ஜிண்டாலுக்கு தாரைவார்த்தல், தமிழகம் முழுவதும் ஆற்றுமணல் கொள்ளை, ஆறுவழிச் சாலைகள், வனச் சரணாலயங்கள் போன்ற பல திட்டங்கள் வகுத்து அமுல்படுத்தப்படுகின்றன. இதுபோன்று நாடு முழுவதும் எல்லா மாநிலங்களிலும் பல்வேறு திட்டங்கள் அமுல்படுத்தப்படுகின்றன.

இதற்கேற்ப இந்திய அரசின் கட்டமைப்பும் மாற்றப்படுகிறது. ஏற்கனவே சொல்லப்பட்டு வந்த மக்கள் நல அரசு என்ற போர்வையை தூக்கியெறிந்து பட்டவர்த்தனமாக கார்ப்பரேட் மற்றும் பன்னாட்டுக் கம்பெனிகளின் நலன் முன்னிறுத்தப்படுகிறது. இதற்காக, விவசாயத்திற்கு வழங்கப்பட்டு வந்த மானியங்கள் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன; விவசாயத்தில் உணவு உற்பத்தி ஒழிக்கப்பட்டு வருகிறது; பயோடீசல், பூ உற்பத்தி என்ற பெயரில் ஏற்றுமதி சார்ந்து தொடங்கப்பட்ட விவசாயம் எல்லாம் நட்டமடைந்து விவசாயிகள் நடுவீதிக்குத் தள்ளப்பட்டு விட்டனர். காட்டு விலங்குகளான யானை, காட்டுப் பன்றிகளால் விவசாயம் சேதமடைவது மட்டுமல்ல, காட்டு யானைகளால் விவசாயிகள் கொல்லப்படுவதும் அதிகரித்துள்ளது.

தற்போது விவசாயிகள் தற்கொலை என்ற அவலமும் தமிழகத்தில் தலைவிரித்தாடுகிறது.

இந்தத் தனியார்மயம் – தாராளமயக் கொள்கையை கடந்த 25 ஆண்டுகளாக தீவிரமாக அமுல்படுத்தியதன் விளைவாக இயற்கை அழிக்கப்பட்டு, மழை குறைந்துள்ளது; விவசாயத்திற்கு தண்ணீர் கிடைப்பதில்லை; ரியல் எஸ்டேட் நிறுவனங்களினால் தொல்லை; உரம் பூச்சிக் கொல்லி மருந்து எல்லாம் கார்ப்பரேட் கம்பெனிகளின் கட்டுப்பாட்டில் போய்விட்டது; மரபணு மாற்றப்பட்ட விதைகள், ஹைபிரேட் விதைகள் போன்றவற்றால் விவசாயமே நஞ்சாகியுள்ளது; கால்நடைகள் குறைந்துவிட்டன; இயற்கையான உரங்கள் கிடைப்பதில்லை; இரசாயன் உரங்கள், பூச்சிக் கொல்லிகளால் நிலங்களே மலடாகிப் போயுள்ளன. இவற்றை ஒட்டுமொத்தமாக பார்க்கும் விவசாயம் என்ற கட்டமைப்பே சீரழிக்கப்பட்டுவிட்டது. விவசாயம் என்ற துறை இன்று மீளமுடியாத கட்டமைப்பு நெருக்கடியில் சிக்கியுள்ளது.

விவசாயிகளுக்கே அதிகாரம்!

அரசின் கொள்கைகள் என்பவை, கார்ப்பரேட் கம்பெனிகளுக்காக உழைக்கும் மக்கள் மீது நடத்தப்படும் யுத்தம். இதில் நடுநிலை வகிப்பதாக சொல்லிக்கொண்ட அரசு, பட்டவர்த்தனமாக இன்று கார்ப்பரேட் கம்பெனிகளின் பக்கம் தான் என்று அறிவித்துள்ளது. மற்றொருபுறம், விவசாயத் துறையில் ஏற்பட்டுள்ள இந்தக் கட்டமைப்பு நெருக்கடி என்பது, நாட்டின் அனைத்து துறைகளிலும் ஏற்பட்டுள்ள கட்டமைப்பு நெருக்கடியின் ஒரு பகுதியாக உள்ளது.

அதனால், கெயில் எரிவாயு குழாய் பதிப்பது என்பது, அதனால் பாதிக்கப்படுகின்ற விவசாயிகளின் பிரச்சனை மட்டுமல்ல, ஒட்டுமொத்த உழைக்கும் மக்களின் பிரச்சனை.

இதனால் தான் நீதிமன்றத்தில் சென்றால் நீதி கிடைக்காமல் அநீதியே நடக்கிறது; சட்டப்படியே விவசாயிகள் நிலங்கள் பறிக்கப்படுகின்றன; எதிர்ப்பவர்கள் குற்றவாளிகளாக்கி தண்டிக்கப்படுகின்றனர்.

இனி ஒரு பாதைதான் உள்ளது. விவசாயிகள் அதிகாரத்தைக் கையிலெடுக்க வேண்டும். கெயில் நிறுவனம் எரிவாயுக் குழாய் பதிப்பதற்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் என்பது, விவசாயிகள் தங்களுக்குத் தேவையானதை தீர்மானிக்கும் அதிகாரமாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும். விவசாயிகள் விளைவித்த பொருட்களுக்கு விலை நிர்ணயிப்பது உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களும் விவசாயிகள் கையில் வந்து சேரவேண்டும். அந்தவகையிலான ஒட்டுமொத்த விவசாயிகளின் எழுச்சியாக, கெயில் எரிவாயுக் குழாய் பதிப்புக்கு எதிரான போராட்டத்தை வளர்த்தெடுப்போம்!

மத்திய, மாநில அரசுகளே!

  • கெயில் எரிவாயு பதிக்கும் திட்டத்தை கைவிடு! விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பறிக்காதே!
  • பெட்ரோல்-கனிமவளக் குழாய் பதிக்கும் சட்டம் 1962ஐத் திரும்பப் பெறு!

விவசாயிகளே!

  • விவசாயத்தை அழிப்பதே தேசமுன்னேற்றமாம் – இது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு!
  • விவசாய நிலத்தில் குழாய் பதிக்க வரும் கெயில் நிறுவனத்தை விரட்டியடிப்போம்!
  • கிராமந்தோறும் கமிட்டி அமைத்து விவசாயிகளின் அதிகாரத்தை நிலைநிறுத்துவோம்!
  • விவசாயத்தை அழிக்கும் நாட்டை மீண்டும் காலனியாக்கும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கான தனியார்மய-தாராளமயத் திட்டங்களை முறியடிப்போம்!
  • விவசாயிகளைக் காக்க, விவசாயத்தைக் காக்க அனைத்து அதிகாரங்களையும் விவசாயிகள் கமிட்டிக்கே என முழங்குவோம்!

– விவசாயிகள் விடுதலை முன்னணி
தருமபுரி-கிருஷ்ணகிரி மாவட்டங்கள்
தொடர்புக்கு: 96263 96699 – 97513 78495

சட்டீஸ்கர்: பா.ஜ.க – இந்திய அரசின் தேசபக்த பயங்கரவாதம் !

0

காட்டு வேட்டை என்ற பெயரில்  இந்திய அரசு பழங்குடியினருக்கு எதிராக நடத்திவரும் போரை மேலும் மூர்க்கமாகியிருக்கிறது சத்தீஸ்கர் அரசு. மைய அரசும், மாநில அரசும் பா.ஜ.க-வின் கைகளில் இருப்பது ஒடுக்குமுறையில் கொடூர வேகத்தை அதிகப்படுத்தியிருக்கிறது.

சமஜிக் ஏக்தா மஞ்ச் என்ற போலீஸ் அடியாள் அமைப்பை ஆரம்பித்துள்ள அரசு அதைக்கொண்டு காட்டுவேட்டையின் கொடூரங்களை அம்பலப்படுத்தும் பத்திரிகையாளர்களையும் ஜனநாயக சக்திகளையும் முடக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த பின்னணியில் தான் சோனி சோரி என்ற பழங்குடி செயற்பாட்டாளர் தாக்கப்பட்டுள்ளார்.

Soni-Sori-1
சோனி சோரி

காட்டுவேட்டை என்ற பெயரில் தங்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் அடக்குமுறைகளை தொடர்ந்து அம்பலப்படுத்திவருபவர் பழங்குடிப் பெண்ணான சோனி சோரி. கடந்த 2010-ம் ஆண்டு மாவோயிஸ்டுகளுக்கு உதவியதாக இவர் மீது பொய் வழக்கு சோடித்து கைது செய்து சித்திரவதைக்குள்ளாக்கியது சத்தீஸ்கர் அரசு. 2014-ம் ஆண்டு ஜாமீனில் வெளிவந்த இவர் தொடர்ந்து அரசின் காட்டுவேட்டை அடக்குமுறைகளை அம்பலப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் இம்மாதம் 3-ம் தேதி பஸ்தாரின் மதுரம் காவல்நிலையத்திற்குட்பட்ட மலைபகுதியில்  மாவோயிஸ்டுகளுடன் நடந்த கடுமையான துப்பாக்கி சண்டையில் ஒரு மாவோயிஸ்ட் கொல்லப்பட்டதாகவும், அவரிடமிருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், தப்பியோடிய மாவோயிஸ்டுகளை தேடும் பணியை தீவிரப்படுத்தியிருப்பதாகவும் அறிவித்திருந்தார் பஸ்தார் காவல்துறை ஐ.ஜி கலூரி. ஆனால் நடந்தது ஒரு போலி மோதல் கொலை என்பதை அம்பலப்படுத்தினார் சோனி சோரி.

அதாவது ‘தேசபக்த’ காவல்துறையினர் உயிரை பணயம்வைத்து சுட்டுக்கொண்டதாக கூறியது ஹத்மா கஷ்யப் என்ற பழங்குடி என்பதும்; வீட்டில் மனைவி குழந்தைகளுடன் தூங்கிக்கொண்டிருந்தரை எழுப்பி காட்டில் வழிதெரியவில்லை வழிகாட்டுங்கள் என்று காவல்துறையினர் அழைத்து சென்றதையும்; அவரது மனைவி உறவினர்களை பத்திரிகைகள் முன்னிலையில் பேசவைத்து அம்பலப்படுத்தினார் சோனி சோரி. பாதுகாப்பு படையினரால் அழைத்து செல்லப்பட்ட கணவன் வீடு திரும்பாததை கண்டு 4-ம் தேதி காவல்நிலையத்திற்கு சென்றிருக்கிறார் அவரது மனைவி கலோ கஷ்யப். அப்போது தங்களுக்கு எதுவும் தெரியாது என்று மறுத்த காவல்துறையினர் பின்னர் 10,000 ரூபாய் கொடுத்து இறுதி சடங்கு செலவுக்கு வைத்துகொள்ள கூறிய கொடூரத்தையும் அம்பலப்படுத்தினார் சோனி சோரி.

பாதுகாப்பு படையினரால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட பெண்களுக்காக வருகிற மார்ச் 8 பெண்கள் தினத்தன்று பேரணி நடத்தும் ஏற்பாட்டிலும் இருந்திருக்கிறர் சோனி சோரி.

soni-sori-attack
சனிக்கிழமை(20-02-2016) அன்று இரவு இவர் முகத்தில் அமிலம் போன்றொதொரு பொருளைக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தான் சனிக்கிழமை(20-02-2016) அன்று இரவு இவர் முகத்தில் அமிலம் போன்றதொரு பொருளைக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தற்போது கண் திறக்க முடியாத நிலையிலிருக்கும் சோனி சோரி தன்னை தாகியவர்கள் போலீஸ் ஆதரவாளர்கள் என்பதை தெரிவித்துள்ளார். தனனை தாக்கியவர்கள் மதுரம் போலி என்கவுண்டர் விசயத்தை இனி பேசக்கூடாது என்றும், ஐ.ஜி கலூரிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யும் முயற்சிக்ககூடாது எனவும் மீறினால் சோனி சோரியின் குழந்தையையும் இதே கதிக்கு உள்ளாக நேரிடும் என்று மிரட்டியதை பதிவு செய்துள்ளார் சோனி சோரி.

இது ஏதோ தனித்த சம்பவமல்ல. இம்மாதத்தில் பஸ்தார் பகுதியில் செயல்படும் பத்திரிகையாளர் மாலினி சுப்பிரமணியமும் , ஜகதால்பூர் சட்ட உதவி மைய வழக்கறிஞர்களும் போலீஸ் மற்றும் சமஜிக் ஏக்தா மஞ்ச் போலீசு அடியாள் இயக்கத்தின் அடக்குமுறைகளை தொடர்ந்து அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அரசின் போலி மோதல் கொலைகள், பாலியல் வன்முறைகள், போலி சரணடைவு சம்பவங்களை அம்பலப்படுத்தியவர் பத்திரிகையாளர் மாலினி சுப்பிரமணியம். கடந்த ஜனவரி 10-ம் தேதி மாலினி சுப்பிரமணியத்தின் வீட்டிற்கு வந்த சமஜிக் ஏக்தா மஞ்ச் அடியாள் அமைப்பினர் ” பஸ்தார் மற்றும் போலீசாரின் இமேஜை பாதிக்கும் செயல்களில் ஈடுபட்டால் தங்களின் கோபத்தை சந்திக்க நேரிடும்” என்று மிரட்டி சென்றனர். பழங்குடி பெண்கள் மீதான் பாதுகாப்பு படையினரின் பாலியல் வன்முறைகள் குறித்த செய்தியை சில மாதங்களுக்கு முன்னர் வெளிக் கொணர்ந்திருந்தார் மாலினி சுப்பிரமணியம். தன்னை மிரட்டி சென்றவர்களில் மனிஷ் பரக் என்பவர் பாரதிய ஜனதா கட்சியின் யுவ மோர்சா பிரிவின் செயலாளர் என்பதும், சம்பத் ஜா என்பவர் காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர்கள் என்பதும் பின்னர் தெரியவந்தது என்று கூறுகிறார் மாலினி. இந்த நபர்கள் பஸ்தார் சரக ஜி.ஜி. கலூரியுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் என்பதை அம்பலப்படுத்தியுள்ளது கேரவன் பத்திரிகை.

தொடர்ந்து இரவு நேரங்களில் விசாரணை என்ற பெயரில் ஜக்தால்பூர் போலீசார் இப்பத்திரிகையாளரை தொந்தரவு செய்திருக்கின்றார். ஆயினும் அப்பகுதியிலிருந்து வெளியேறாமல் தொடந்து செயல்படவே கடந்த 8-ம் தேதி சம்ஜித் ஏக்தா மஞ்ச் அடியாட்கள் இவர் வீட்டின் மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இது குறித்து சம்பந்தப்பட்ட நபர்களின் பெயர்களை குறிப்பிட்டு காவல்நிலையத்தில் புகார் அளித்த பின்னரும் அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கியதாக வழக்கு பதிவு செய்தது காவல்துறை.

kaluri-with-samajik-ekta-manch
பஸ்தார் சரக ஜி.ஜி கலூரி கொடுத்த விருந்தில் சம்ஜிக் ஏக்தா மஞ்ச் அமைப்பின் மனிஷ் பிரகா, சம்பத் ஜா. படம் : caravanmagazine

இந்நிலையில் கேரவன் பத்திரிகை சமஜிக் ஏக்தா மஞ்ச் அமைப்பு குறித்தும், ஜி.ஜி கலூரி குறித்து பல உண்மைகளை கடந்த சில தினங்களுக்கு வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருந்தது. இந்த அடியாள் அமைப்பை இயக்கிவருவதே பஸ்தார் பகுதி ஜி.ஜி கலூரி தான் என்பதும், இந்த அதிகாரி மனிதத்தன்மையற்ற பேர்வழி என்பதையும், காவல் நிலைய பாலியல் வல்லுறவுகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்கு உள்ளானவர், இப்பகுதியில் பதவி ஏற்றதும் மக்கள் மீது உச்சகட்ட வன்முறையை ஏவி வருவதையும் ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியது அக்கட்டுரை.

சல்வாஜூடும் காலப்பகுதியில் பழங்குடியினரை கொத்து கொத்தாக கொன்றபாதுகாப்பு படையினர் சடலங்களை அப்படியே விட்டு சென்றதையும், தற்போது கலூரி பொறுப்பேற்ற பிறகு அக்கொலைகளை என்கவுண்டர் என்றூ கூறி வெற்றி செய்தியாக வாட்ஸ்-அப் மூலம் அனுப்பி பத்திரிகைகளுக்கு அறிவிப்பதையும் அம்பலப்படுத்தியது.

பஸ்தார் பற்றிய உண்மைச்செய்திகள் பத்திரிகைகளில் தொடர்ந்து வெளிவந்த சூழலில் தான் மாலினி சுப்பிரணியத்தின் வீடு தாக்கப்பட்டதோடில்லாமல் தாக்குதலில் ஈடுபட்டதாக கூறி மாலினி வீட்டு வேலை செய்யும் பெண்ணை போலீசார் விசாரணை என்ற பெயரில் அழைத்து சென்று விடுவிக்கவில்லை. இந்நிலையில் மாலினி வசிக்கும் வீட்டு உரிமையாளரை மிரட்டி மாலினியை வெளியேற்ற நிர்பந்தித்து வெளியேற்றியிருக்கிறது போலீஸ்.

JagdalpurLegalAidGroup_Guneet_Isha_Shalini_Parijatha
ஜகதால்பூர் சட்ட உதவி மையத்தினர். படம் :thewire

இதே போல பழங்குடியினரில் வழக்குகளை நடத்தி வரும் ஜகதால்பூர் சட்ட உதவி மையம் என்ற அமைப்பை சேர்ந்தவர்களையும் முடக்கும் நோக்கில் பகுதி பார் கவுன்சில் மூலம் அழுத்தம் கொடுப்பது , மிரட்டுவது என பல ஆயுதங்களை பிரயோகித்த பிறகு சில தினங்களுக்கு முன்னர் இவ்வமைப்பில் செயல்படுவர்கள் வசிக்கும் வீட்டு உரிமையாளர்களை விசாரணை என்ற பெயரில் அழைத்து துன்புறுத்தியிருக்கிறது காவல்துறை. ஆக இவர்களையும் தற்போது வெளியேற்றிவிட்டது.

அதானிக்காக அமல்படுத்தப்படும் சட்டப்படியான அடக்குமுறை

ஒரு புறம் அரச பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துவிடும் அரசு தனக்கு தடையாக இருக்கும் பெயரளவிற்கான சட்டங்களையும் மதிப்பதில்லை.

சர்குஜா மாவட்டத்தின் கட்பாரா கிராமத்தில் சுரங்க வேலைகளை செய்ய அதானி குழுமம் மற்றும் ராஜஸ்தான் அரசு நிறுவனங்களுக்கு கடந்த 2012-ம் ஆண்டு அனுமதியளித்திருந்தது சத்தீஸ்கர் அரசு. இதை எதிர்த்து கிராம மக்கள் போராடி வருகின்றனர். இங்கு மட்டுமல்ல சத்திஸ்கர், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மத்திய இந்தியாவின் காடுகளில் பன்னாட்டு நிறுவனங்களின் சுரங்க வேலைகளுக்காக பழங்குடியினர் விரட்டப்படுவதை எதிர்த்து தீரத்துடன் போராடிவருகிறார்கள். இவர்களுக்கு எதிராகத்தான் பசுமை வேட்டை என்ற பெயரில் துணை ராணுவப்படை களமிறக்கப்பட்டு மக்கள் விரட்டியடிக்கப்படுகிறார்கள்.

வன உரிமை பாதுகாப்பு சட்டப்படி பழங்குடியினரின் பாரம்பரியமான பகுதிகளில் பழங்குடியினரின் ஒப்புதலோடு மட்டுமே இந்நிலங்களை அரசு பயனபடுத்திக்கொள்ள முடியும். அப்படி அரசு அறிவித்த பாரம்பரிய வாழ்விடங்களுள் ஒன்றாக இக்கிராமம் வருகிறது. ஆனால் இக்கிராமத்தினரோ தங்கள் நிலத்தை தரகு முதலாளிகளுக்காக விட்டுத்தர தயாரில்லை.

கிராம சபையின் மூலம் அதானிக்கு நிலத்தைவிட்டுத்தர முடியாது என்று சட்டபூர்வமான வழியை கையாண்டார்கள் இக்கிராம மக்கள்.

இந்நிலையில் தான் சத்தீஸ்கர் அரசு கடந்த ஜனவரி அன்று ஒரு அரசாணை பிறப்பித்துள்ளது. அதில் அப்பட்டமாகவே ” கிரமத்தினர் தங்களுக்கு அளிக்கப்ப்பட்ட உரிமையை சுரங்கம் அமைவதிற்கு எதிராக பயன்படுத்துவதாக” ‘குற்றம்’ சாட்டி அவ்வுரிமைமை பறித்திருக்கிறது. “நிர்வாகம் சுரங்க வேலைகளுக்காக காடுகளை மாற்ற முயன்றபோது ஆட்சியரால் தங்களுக்கு அளிக்கப்பட்ட நில உரிமையை பயன்படுத்தி பழங்குடியினர் இவ்வேலைகளுக்கு இடையூறு ஏற்படுத்தினர், போராடினர். அதை பரிசீலித்தபோது இந்நிலம் பழங்குடிகளின் உரிமையாக அறிவிக்கப்படும் முன்னரே அதானி குழுமத்திற்கு வழங்கப்பட்டுவிட்டது தெரிய வந்ததை அடுத்து பழங்குடியினருக்கு இந்நிலத்தில் மீதான உரிமை நீக்கப்படுகிறது” என்று அவ்வரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக அறிவித்து செய்திருக்கிறது அரசு. அரசு தான் சொல்லிக்கொள்ளும் குறைந்தபட்ச அறநெறிகளுக்குக்கூட எதிரான மக்கள் விரோத சக்தியாக மாறியிருப்பதையே இது குறிக்கிறது. பெயரளவிற்கான சட்டங்களும் செல்லாக்காசிவிட்ட நிலையில் இந்த அரசை நம்பி பிரயோஜனமில்லை.

தேசதுரோகி என்று சொந்த நாட்டு மக்களை விளிக்கும் பா.ஜ.க மற்றும் இந்திய அரசு இங்கே நடத்தி வரும் பயங்கரவாதத்தை என்னவென்று அழைப்பது? இராணுவம், போலிசு ஒடுக்குமுறை குறித்து எவரும் வாய் திறக்க கூடாது என்பதோடு, அதானிகளை பாதுகாக்க இவர்கள் எவ்வளவு கொடூரத்திற்கும் தயாராகிறார்கள் பாருங்கள்!

பத்திரிகையாளர்கள்,ஜனநாயக சக்திகளை விரட்டியடிக்கபடுவதும்,சல்வாஜுடும் போன்று புதிய அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டிருப்பதும்,போலி மோதல்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதும் பழங்குடியினருக்கு எதிராக ஒரு மூர்க்கத்தனமான இறுதி படுகொலைகளுக்கு அரசு தயாராகிவருவதையே காட்டுகிறது. இந்த அரச பயங்கரவாதத்தை அனைவரும் கண்டிக்க வேண்டும். பழங்குடிகளுக்கு ஆதரவாக அணிதிரள வேண்டும்.

– ரவி

மேலும் படிக்க:

மூடு டாஸ்மாக்கை மாநாடு – தோழர் மருதையன், தோழர் ராஜு உரை

0
தோழர் மருதையன்

மூடு டாஸ்மாக்கை – தோழர் மருதையன் உரை

திருச்சியில் பிப்.14, 2016 அன்று மக்கள் அதிகாரம் நடத்திய “மூடு டாஸ்மாக்கை” – சிறப்பு மாநாட்டில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பொதுச் செயலர் தோழர் மருதையன் ஆற்றிய உரை! பாருங்கள், பகிருங்கள்!!

மூடு டாஸ்மாக்கை – தோழர் ராஜு உரை

திருச்சியில் பிப்.14, 2016 அன்று மக்கள் அதிகாரம் நடத்திய “மூடு டாஸ்மாக்கை” – சிறப்பு மாநாட்டில் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு ஆற்றிய உரை! பாருங்கள், பகிருங்கள்!!

எனக்கு புரியலேன்னா அது தேசத்துரோகம்தான் – கார்ட்டூன்கள்

0
jnu-student-sedition-cartoon-1
ஸ்மிருதி ஈரானி: பல்கலைக்கழக மானியக் குழு முற்றுகை, ரோகித் வெமுலா…பிறகு இந்த ஜே.என்.யு மாணவர்கள் எல்லாம் தலைவலியாப் போச்சு. மோடி: ஆமாம். நம்ம ஏபிபிவி பசங்க பயந்து போயிட்டாங்க! நம்ம பாஸ்ஸுகிட்ட எப்படி டீல் பண்ணலாமுன்னு கேப்போம். ஹிட்லர்: உன்னோட கூட்டத்தை பாக். வாழ்க!ன்னு கோஷம் போட செட்டப் பண்ணு, பிறகு ஜே.என்.யு மாணவர்கள தேசத்துரோகின்னு முத்திரை குத்து! அப்பால தேசத்துரோக வழக்குல விலங்க போடு. (படம்: https://rebelpolitikblog.wordpress.com)
jnu-student-sedition-cartoon-2
கல்வி நிலையங்களை பி.ஜே.பி அணுகும் விதம்: இங்கு வண்ணப்புத்தகம் இருக்கிறது. இங்கு உனக்கு ஒரே ஒரு நிறம் (காவி) தான் தேவைப்படும் (படம்: sanitarypanels.com)
jnu-student-sedition-cartoon-9

சார்! மாணவர்கள் எல்லாம் மீண்டும் போராடிக்கொண்டிருக்கிறார்கள்! நாம் என்ன செய்ய வேண்டும்? அமைதியாய் இரு! நாம் மீண்டும் இந்த சக்கரத்தைச் சுற்றுவோம். (சக்கரத்தில் – தேசத்துரோகி என அழைக்கலாம். பாகிஸ்தானுக்கு அனுப்பலாம், பல்கலைக்கழகத்திலிருந்து மிரட்டி வெளியேற்றலாம், தேசத்துரோக குற்றச்சாட்டு சுமத்தலாம், சிறை வைக்கலாம், காவல் துறை அடக்குமுறையை ஏவிவிடலாம், மாணவர்களது குடும்பத்தை மிரட்டலாம் அல்லது சக்கரத்தை மீண்டும் சுற்றலாம். (படம்: sanitarypanels.com)

jnu-student-sedition-cartoon-3

நபர் 1:ஜனநாயகத்தில் மாற்றுகருத்துகளுக்கு இடமளிக்க வேண்டும்; நபர் 2: அப்படி என்றால் நீ தேசதுரோகி; நபர் 1:மம். அடக்குமுறையின் மூலம் மக்களை அமைதிப்படுத்துவது ஜனநாயகமல்ல; நபர் 2: நீ தீவிரவாதி. போலி மதச்சார்பின்மைவாதி; நபர்1: நான் பேசுவவதை நீ கவனிக்ககூட மறுக்கிறாய் ;நபர் 2 : நீ இந்திய எதிரி

jnu-student-sedition-cartoon-4

நமக்கு புரியாத விசயமுன்னா அதுங்க (ஜனநாயகம், மதச்சார்பின்மை, சகிப்புத்தன்மை, பன்முகத்தன்மை, இலக்கியம், அறிவியல், சமூகவியல், நுண்கலை) எல்லாம் தேசத்துரோகம் தான்!

jnu-student-sedition-cartoon-5

பாஷி-ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைச்சிறந்த போலீசு! (படம்: https://rebelpolitikblog.wordpress.com)

jnu-student-sedition-cartoon-6
ஆர்.எஸ்.எஸ்: அடுத்து எந்த சீட்டை வைத்து விளையாடுவது? மோடி அலையா? தேசத்துரோகமா? இந்து ராஷ்ட்ரமா? கலவரமா? ஐ.ஐ.டி, ஹைதராபாத் பல்கலைக்கழகம், ஜே.என்.யு, புனே திரைப்படக் கல்லூரிகளை அழிப்பதா? ஏபிவிபி: தேசத்துரோகி, ஜே.என்.யுவை மூடு (என்பதை எடுங்கள்). (படம்: https://rebelpolitikblog.wordpress.com).
jnu-student-sedition-cartoon-7
தேசியவாத தணிக்கை வாரியம்: இங்கு எதுவெல்லாம் தேசபக்தி என்பது நிர்ணயம் செய்யப்படும். (நன்றி. தி இந்து ஆங்கில நாளேடு)
jnu-student-sedition-cartoon-8
அரசாங்கத்தை நடத்தும் ஆர்.எஸ்.எஸ் டவுசர்கள் (Chaddi என்றால் டவுசர்) ராஜ்நாத் சிங், மோடி, டெல்லி காவல்துறை ஆணையர் பாஷி எல்லோரும் அரச பாசிசத்தை ஜே.என்.யு நோக்கி திருப்பிக் கொன்டிருக்கின்றனர் (படம்: https://rebelpolitikblog.wordpress.com).

வெமுலாவின் நெஞ்சுரத்தை நொறுக்கியது யார் ?

1

ரோகித் வெமுலா – ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தின் ஆய்வு மாணவன். அம்பேத்கர் மாணவர் சங்கம் என்ற அமைப்பின் முன்னோடி. சனவரி 17-ஆம் தேதியன்று சக மாணவன் ஒருவனது அறையில் வெமுலா தற்கொலை செய்து கொண்டான். சக மாணவர்கள் யாரும் அவனது முகத்தைக் கூடக் காண விடாமல், வெமுலாவின் உடலை ஒரு அநாதைப் பிணம் போல அப்புறப்படுத்தியது பல்கலைக்கழக நிர்வாகம். வெமுலாவின் தாயை மட்டும் அழைத்து வந்த போலீசு, அவர்களுடைய குடும்ப வழக்கத்தின்படி உடலைப் புதைப்பதற்குப் பதிலாக, அவசர அவசரமாக எரியூட்டியது.

இது தற்கொலைதானா என்று சந்தேகிப்பதற்கான எல்லா முகாந்திரங்களும் இந்த நடவடிக்கைகளில் உள்ளன. இது தற்கொலைதான் என்று நம்புவதற்கான ஆதாரம் ஒன்று உண்டெனில், அது வெமுலாவின் கடிதம். அக்கடிதம் வெளிப்படுத்தும் உணர்ச்சி உண்மையானது. போலிகளைத் தயாரிக்கும் கிரிமினல்தனத்தில் பெரும் திறமை பெற்றவர்கள்தான் என்ற போதிலும், ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனக் கும்பலின் சூழ்ச்சித்திறனுக்கும் கற்பனைக்கும் அப்பாற்பட்டது அக்கடிதத்தில் வெமுலா வெளிப்படுத்தும் உணர்ச்சி.

ரோகித் வெமுலா
பார்ப்பன இந்து மதவெறிக்கு எதிரான போராளி ரோகித் வெமுலா

வெமுலா, கல்லுடைக்கும் சாதியைச் சேர்ந்த தந்தைக்கும், தாழ்த்தப்பட்ட பெண்ணுக்கும் பிறந்து, தந்தை கைவிட்டு ஓடியதால், ஏழைத்தாயால் வளர்க்கப்பட்ட பிள்ளை. மார்க்சின் மீதும், அம்பேத்கரின் மீதும் பற்றும், பார்ப்பன இந்துவெறியின் மீது கடும் வெறுப்பும் கொண்ட ஒரு மாணவன். அம்பேத்கர் மாணவர் சங்கம், யாகுப் மேமன் தூக்கிலிடப்பட்டதைக் கண்டித்ததும், முசாபர்நகர் கலவரம் குறித்த ஆர்.எஸ்.எஸ். வெறியர்களை அம்பலப்படுத்தும் ஆவணப்படத்தைத் திரையிட்டதும் ஐதராபாத் மத்தியப் பல்கலைக் கழக்தில் இயங்கி வரும் அகில பாரதிய வித்யார்த்தி பரிசத் என்ற ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பினருக்கும், பார்ப்பன வெறி பிடித்த பல்கலைக்கழக நிர்வாகத்துக்கும் விடுத்த சவாலாக அமைந்தன.

இதற்கு முன்னர் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் மாணவர்களுக்கான கலாச்சார விழாவின் போது மாட்டுக்கறி பிரியாணி பரிமாறப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வெமுலா தலைமையிலான மாணவர்கள் எழுப்பியதன் காரணமாக ஏ.பி.வி.பி.யின் தூண்டுதலின் பேரில் கலாச்சார விழாவையே ரத்து செய்தார் துணை வேந்தர். பெரும்பான்மை இந்து மாணவர்கள் மாட்டுக்கறிக்கு எதிராக வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கையில் அனைத்து மாணவர்களின் பொதுக்குழுவைக் கூட்டி முடிவெடுப்போம் என்றது பல்கலைக்கழக நிர்வாகம். பொதுக்குழுவில் பெரும்பான்மை மாணவர்கள் மாட்டுக்கறி உணவை ஆதரித்தால், அன்றாடம் உணவு விடுதியிலேயே மாட்டுக்கறி வழங்க நீங்கள் தயார் என்றால் பொதுக்குழுவைக் கூட்டுங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள் வெமுலா உள்ளிட்ட மாணவர்கள். பீதியடைந்த நிர்வாகம் பொதுக்குழு யோசனையையே தலை முழுகியது.

அம்பேத்கர் மாணவர் சங்கத்தினர் குறி வைக்கப்படுவதற்கு காரணமான சில சம்பவங்கள் இவை. நாட்டின் உயர்கல்வி நிறுவனங்கள் என்று அழைக்கப்படும் நவீன அக்கிரகாரங்கள், முற்று முழுதாக காவிக்கொடியின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்படும் இன்றைய சூழலில், ஒரு தலித் மாணவன் இந்துத்துவத்தை எதிர்த்து சவால் விடுவதை பார்ப்பன பாசிஸ்டுகள் சகித்துக் கொள்வார்களா?

ரோகித் வெமுலா தற்கொலை - போராட்டம்
ரோகித் வெமுலாவின் தற்கொலையைக் கண்டித்து மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தும் மாணவர்கள்.

வெமுலாவின் மாதாந்திர கல்வி உதவித்தொகை, ஜுலை மாதம் முதற்கொண்டே நிறுத்தப்பட்டது. தனது பராமரிப்புக்கும் தனது தாயின் பராமரிப்புக்கும் இந்த உதவித்தொகையை மட்டுமே சார்ந்திருந்த வெமுலா பட்டினிக்கும் கடனுக்கும் தள்ளப்பட்டான். பின்னர் வெமுலா உள்ளிட்ட 5 மாணவர்கள் தன்னைத் தாக்கிக் காயப்படுத்தியதாகவும், அதன் காரணமாக, தான் குடல் வால் அறுவை சிகிச்சை செய்து கொள்ள நேர்ந்தது என்றும் ஒரு ஏ.பி.வி.பி. பொய்யன் நிர்வாகத்திடம் புகார் கொடுத்தான். அவனுடைய உடலில் அடிபட்ட கொடுங்காயம் எதுவும் இல்லையென்றும், அடிபடுவதற்கும் குடல்வாலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்றும் மருத்துவர் சான்றளித்தார்.

இருப்பினும், டிசம்பர் 16-ஆம் தேதி வெமுலா உள்ளிட்ட 5 மாணவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. காரணம், “ஐதராபாத் பல்கலைக்கழகம் தேசத்துரோக, சாதிய பயங்கரவாதிகளின் கூடாரமாகிவிட்டது” என்று மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா மனிதவள மேம்பாட்டுத்துறைக்கு எழுதிய கடிதங்கள். இதன் தொடர்ச்சியாக அமைச்சர் (மனு)ஸ்மிருதி இரானியின் நடவடிக்கை.

“அவர்கள் விடுதியில் தங்கக்கூடாது, சாப்பிடக்கூடாது, வகுப்புக்கு வருவதைத் தவிர பல்கலைக்கழகத்தின் வேறு எந்த இடத்திலும் புழங்கக்கூடாது” என்று வெமுலா உள்ளிட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது ஊர் விலக்கம் செய்வது என்ற தீண்டாமை நடவடிக்கையை அப்படியே ஒத்திருப்பதை சுட்டிக் காட்டுகிறார் பேராசிரியர் கோபால் குரு. உதவித்தொகை நிறுத்தப்பட்டு, ஒண்டுவதற்கு இடமும் இல்லாமல் வெளியேற்றப்பட்ட வெமுலாவும் நண்பர்களும் பல்கலைக் கழக வளாகத்தின் வெட்டவெளியில் உறங்கினார்கள். அந்த மாணவர்கள் இரண்டு வாரங்களாகத் தொடர் உண்ணாநிலைப் போராட்டம் நடத்திய போதிலும், அவர்களை ஒரு ஆசிரியர் கூடத் திரும்பிப் பார்க்கவில்லை. “நாம் நாய்களைப் போல வீதியில் கிடக்கிறோம். யாரும் நம்மை லட்சியம் செய்யவில்லை என்று ரோகித் வருந்துவான்” என்று நினைவு கூர்கிறார்கள் நண்பர்கள்.

செந்தில்குமார்
ஆதிக்க சாதிவெறி பிடித்த பேராசிரியர்களின் புறக்கணிப்பாலும் அவமதிப்பாலும் தற்கொலை செய்து கொண்ட தமிழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சித் துறை மாணவர் செந்தில்குமார். (கோப்புப் படம்)

எதிரிகளின் தாக்குதலைக் காட்டிலும் கொடியது இந்த ஆதரவற்ற நிலை. ஆறு மாதங்களாக சோற்றுக்கு வழியில்லாமல் தவித்து, பிறகு தங்குவதற்கு இடமின்றி வீதியில் வீசியெறியப்பட்ட பின்னரும் விடாப்பிடியாகப் போராடிய வெமுலாவால் இந்தப் புறக்கணிப்பை சகித்துக் கொள்ள இயலவில்லை. தாங்கள் பல ஆண்டுகாலம் வளைய வந்த பல்கலைக்கழகத்தில், அநாதைகளைப் போல தெருவோரமாக தாங்கள் படுத்துக் கிடக்கையில், அந்தக் காட்சியால் எந்தவித சலனத்திற்கும் ஆளாகாமல், பேசிச் சிரித்தபடிக் கடந்து செல்லும் சக மாணவர்களைப் பார்த்த வெமுலாவின் மனம் நிலைகுலைந்ததில் வியப்பென்ன? வெமுலாவின் நெஞ்சுரத்தை நொறுக்கியவர்கள் எதிரிகள் அல்லர்.

இதே ஐதராபாத் பல்கலைக் கழகத்தில், சில ஆண்டுகளுக்கு முன்னர் ரெட்டி சாதி மாணவனால் காதலித்து ஏமாற்றப்பட்டு கருத்தரித்த ஒரு தலித் பெண் தற்கொலை செய்து கொண்டாள். பிரேத பரிசோதனை செய்யப்பட்ட அந்த மாணவியின் உடல் விடுதியின் வாயிலில் கிடத்தப்பட்டிருந்த அதே நேரத்தில், விடுதிக்கு உள்ளே வேறொரு மாணவியின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடந்திருக்கின்றன.

தற்போது வெமுலா மீது நடவடிக்கை எடுத்த துணை வேந்தர் அப்பாராவின் இடத்தில் நியமிக்கப்பட்டிருக்கும் ஸ்ரீவத்சவா, 2008-இல் செந்தில் குமார் என்ற தமிழக தலித் மாணவனின் தற்கொலைக்குக் காரணமான குற்றவாளி. பன்றி மேய்க்கும் சாதியில் பிறந்தவரான செந்தில் குமார் கணிதத்தில் முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர். குடும்பத்தின் முதல் தலைமுறைப் பட்டதாரி. சாதிவெறி பிடித்த பேராசிரியர்களின் புறக்கணிப்பும், அவமதிப்பும் அவரைத் தற்கொலைக்குத் தள்ளின. அன்றும் செந்தில் குமாரின் உடலைப் பார்ப்பதற்குக்கூட ஒரு பேராசிரியரும் வரவில்லை, மனித உரிமை செயற்பாட்டாளர் பாலகோபால், தலித் தலைவர் போஜா தாரகம் ஆகிய இருவர் மட்டுமே வந்தனர் என்று நினைவு கூர்கிறார்கள் மாணவர்கள்.

rohit_4பல்கலைக்கழக ஆசிரியர் குடியிருப்பின் குழாய்த் தண்ணீரை எல்லா சாதியினரும் பயன்படுத்துவதால், அது தீட்டான தண்ணீர் என்று கூறி தனது வீட்டில் தனியே கிணறு தோண்டிக்கொள்ள ஒரு பேராசிரியப் பார்ப்பனருக்கு பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதியளித்திருக்கிறது என்று சொன்னால் அந்தப் பல்கலைக் கழகத்தின் யோக்கியதை வேறெப்படி இருக்க முடியும்?

டில்லி பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத்துறை பேராசிரியரும், “ஒதுக்கீட்டின் குழந்தைகள்” என்ற நூலின் ஆசிரியருமான என்.சுகுமாரன், ஐதராபாத் பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு தலித் மாணவன் அனுபவிக்கும் கொடுமையை ஒரு சித்திரமாகத் தருகிறார். “பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்து விடுதியில் இடம் கிடைக்காத தலித் மாணவர்கள் ஏராளம். வெளியில் அறை எடுத்து தங்க அவர்களுக்கு வசதி இருக்காது. சட்டவிரோதமாக விடுதி அறைகளில் அவர்கள் தம் நண்பர்களுடன் தங்கியிருப்பார்கள். அறையில் சோறு மட்டும் வைத்துக் கொள்வார்கள். உணவு விடுதியில் எல்லா மாணவர்களும் சாப்பிட்டு விட்டு கிளம்பும்வரை காத்திருப்பார்கள். சமையல் பாத்திரங்களில் குழம்பு, பொறியல் ஏதேனும் மிச்சமிருக்கிறதா என்று அவர்கள் துழாவும் அதே நேரத்தில், நாய்களும் பூனைகளும் எச்சில் தட்டுகளை நக்கிக் கொண்டிருப்பதை நான் என் கண்ணால் கண்டிருக்கிறேன்” என்கிறார் பேரா. சுகுமாரன்.

2008 முதல் இன்று வரை அந்தப் பல்கலைக்கழகத்தில் மட்டும் 11 தலித் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். சாதி ஆதிக்கமும் தலித் மாணவர்களின் தற்கொலையும் ஐதராபாத் பல்கலைக் கழகத்தின் பழகிப்போன எதார்த்தங்களாகி யிருக்கின்றன. “ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் தலித் மாணவர்களைப் புறக்கணிக்கிறார்கள். அதேநேரத்தில், ஆதிக்க சாதி மாணவர்களோ தாங்கள்தான் பல்கலைக்கழகத்தின் உரிமையாளர்கள் என்று கருதுகிறார்கள் என்கிறார் அப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் டாக்டர் ஹரகோபால். டில்லி எய்ம்ஸ் முதல் சென்னை ஐ.ஐ.டி. வரையில் எல்லா உயர் கல்வி நிறுவனங்களின் நிலையும் இதுதான்.

சென்னை ஐ.ஐ.டி.யில் அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத்துக்கு எதிராக ஸ்மிருதி இரானி தாக்குதல் தொடுத்த போதும், அம்மாணவர்களுக்கு ஆதரவான குரல் எதுவும் உள்ளேயிருந்து எழுந்துவிடவில்லை. வெளியிலிருந்து எழுந்த எதிர்ப்புக் குரல்களும் போராட்டமும் வலுப்பெற வலுப்பெறத்தான் ஐ.ஐ.டி. பார்ப்பனக் கும்பல் அஞ்சியது, பின் வாங்கியது. போராட்டம் நாடு முழுவதும் பரவியதன் விளைவாக, மோடி அரசு பின்வாங்க நிர்ப்பந்திக்கப்பட்டது.

உயர் கல்வி நிறுவனங்களில் நிலவும் பார்ப்பன ஆதிக்கம், அந்த ஆதிக்கத்துக்கு எதிரான குரல்களை நசுக்குவதன் மூலம் அவற்றை இந்துத்துவக் கூடாரங்களாக்கும் மோடி அரசின் நடவடிக்கைகள், தாழ்த்தப்பட்ட – ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களை உயர்கல்வியிலிருந்து முற்று முழுதாகவே வெளியேற்றவிருக்கும் காட்ஸ் ஒப்பந்தத்தின் அடிப்படையிலான தனியார் உயர்கல்விக் கொள்ளையின் அமலாக்கம் – இவை தனித்தனிப் பிரச்சினைகளுமில்லை, இவற்றுக்குத் தனித்தனி தீர்வுகளும் இல்லை.

ஆனால் இவை ஒவ்வொன்றும் எண்ணற்ற வெமுலாக்களை மரணத்துக்குத் தள்ள வல்லவை. எஸ்.வி.எஸ். கல்லூரி மாணவிகளின் தற்கொலை இதனை உணர்த்த வில்லையா என்ன?

– அஜித்

_______________________________
புதிய ஜனநாயகம், பிப்ரவரி 2016
_______________________________

மூடு டாஸ்மாக்கை மாநாடு – நாடகம் , தப்பாட்டம்

0

parai aattam

மூடு டாஸ்மாக்கை – திருச்சி மாநாட்டில் தப்பாட்டம்

திருச்சியில் பிப்.14, 2016 அன்று மக்கள் அதிகாரம் நடத்திய “மூடு டாஸ்மாக்கை” – சிறப்பு மாநாட்டில் தஞ்சை ரெட்டிபாளையத்தைச் சேர்ந்த ஜான் பீட்டர் – கலா குழுவினரின் தப்பாட்டம். பாருங்கள், பகிருங்கள்!

மூடு டாஸ்மாக்கை – திருச்சி மாநாட்டில் நாடகம்

திருச்சியில் பிப்.14, 2016 அன்று மக்கள் அதிகாரம் நடத்திய “மூடு டாஸ்மாக்கை” – சிறப்பு மாநாட்டில் மதுரை மையம் வீதி நாடக இயக்கத்தின் நாடகம். பாருங்கள், பகிருங்கள்!

போதையும் தமிழனும் – சிறுமிகள் உரை

0
சிறுமிகள்

போதையும் தமிழனும் – சிறுமி பாரதி உரை.

திருச்சியில் பிப்.14, 2016 அன்று மக்கள் அதிகாரம் நடத்திய “மூடு டாஸ்மாக்கை” – சிறப்பு மாநாட்டில் கோத்தகிரியைச் சேர்ந்த சிறுமி பாரதியின் உரை. தமிழனது சிறப்பான குணம் சாராயம் அருந்துவதாக மாறிவிட்டதை எள்ளி நகையாடுகிறாள், முதலாம் வகுப்பு படிக்கும் இந்தச் சிறுமி. பாருங்கள், பகிருங்கள்!

கல்யாணத்திலும் குடி கருமாதியிலும் குடி – சிறுமி காவ்யாஸ்ரீ

திருச்சியில் பிப்.14, 2016 அன்று மக்கள் அதிகாரம் நடத்திய “மூடு டாஸ்மாக்கை” – சிறப்பு மாநாட்டில் நீலகிரி மாவட்டத்தின் அவ்வூர் கிராமத்தைச் சேர்ந்த சிறுமி காவ்யாஸ்ரீயின் உரை. டாஸ்மாக் கடையிலேயே குடியிருக்கும் தமிழனை வெளியே வருமாறு அழைக்கிறாள் ஐந்தாம் வகுப்பு படிக்கும் இந்தச் சிறுமி. பாருங்கள், பகிருங்கள்!

கோவன் பாடல் – டாஸ்மாக் கொடூரங்கள் மக்கள் நேருரை

0

கோவன் பாடல்: குடி …… சிந்திக்காதே குடி ……..!

திருச்சியில் பிப்.14, 2016 அன்று மக்கள் அதிகாரம் நடத்திய “மூடு டாஸ்மாக்கை” – சிறப்பு மாநாட்டின் கலை நிகழ்ச்சியில், ம.க.இ.க பாடகர் தோழர் கோவன் பாடிய புதிய பாடல்! சாராய போதையில் சுயமரியாதை அற்றும், தமிழக வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதைக் கண்டு கொள்ளாமல் இருக்கும் பாரமுகத்தையும் கேலி செய்கிறது இந்தப் பாடல்! பாருங்கள், பகிருங்கள்!

மூடு டாஸ்மாக்கை : சான்றிதழைக் கிழித்த டேவிட்ராஜ்

திருச்சியில் பிப்.14, 2016 அன்று மக்கள் அதிகாரம் நடத்திய “மூடு டாஸ்மாக்கை” – சிறப்பு மாநாட்டில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த டேவிட்ராஜின் உரை இது.

அவர் விளையாட்டில் சாதிக்க வேண்டும், ஒலிம்பிக் பதக்கம் வெல்ல வேண்டும் என்கிற தனது பழைய லட்சியங்களை தூக்கிப் போட்டு விட்டு மக்களை விடுவிக்க வேண்டும் என்கிற உயரிய லட்சியத்தை வரித்துக் கொண்டார். அதற்கு அடையாளமாக அவர் மாவட்ட அளவிலும், மாநில அளவிலும், தேசிய அளவிலும் வாள் வீச்சில் பெற்ற சான்றிதழ்களை மேடையின் மீதே தூள் தூளாக கிழித்தெறிந்தார். மதவெறிக்கு எதிராக மத்திய அரசு வழங்கிய விருதுகளைத் திருப்பிக் கொடுத்த ஆளும் வர்க்கங்களின் மனசாட்சியை உலுக்கிய சொரணை மிக்க அறிஞர்களின் வரிசையில் துணைக்கண்டத்தின் தென் கோடியிலிருந்து இன்னுமொரு இளைஞன். சான்றிதழ்களைக் கிழித்துப் போடு இவன் அந்த வரிசையில் சேர்ந்திருப்பதோடு செயலில் இறங்கியதன் மூலம் முன்னுதாரணமாகவும் திகழ்கிறான்.

டாஸ்மாக்கிற்கு மனைவியை பலி கொடுத்த நாகராஜ்

திருப்பூரைச் சேர்ந்த நாகராஜின் கதை கொடூரமானது. குடிமைக்கு அடிமையாக இருந்த காலத்தில் அவரது மனைவி தீ வைத்து எரித்துக் கொண்டார். அந்த துயரத்தை முன்வைத்து டாஸ்மாக்கை மூடுமாறு மன்றாடுகிறார் இந்த ஏழை! பாருங்கள், பகிருங்கள்!

குடியால் அழிக்கும் அரசை கேள்வி கேட்கிறார் தெய்வக்கண்ணு!

டலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி தெய்வக்கண்ணு தனது ஊரில் டாஸ்மாக் ஏற்படுத்திய பேரழிவை விவரிக்கிறார். கூடவே ஊற்றிக் கொடுக்கும் அரசை தூக்கி எறிய வேண்டாமா என்று மக்களிடம் கேட்கிறார். பாருங்கள், பகிருங்கள்!

எங்களை விதவைகளாக்கியது யார்? மந்திரகுமாரி

டலூர் மாவட்டத்தின் கச்சிராயநத்தம் கிராமத்தைச் சேர்ந்த மந்திரகுமாரி தனது கிராமத்தில் டாஸ்மாக் நடத்திய பேரழிவினால் தோற்றுவிக்கப்பட்ட விதவைகளில் ஒருவர். தற்போது அரசை எதிர்த்து போராடும் வீராங்கனை! பாருங்கள், பகிருங்கள்!

ஜே.என்.யு மாணவர்கள் மீது மோடி கும்பலின் பாசிசத் தாக்குதல் !

0

காவிக்கும்பலுக்கு கலவரத்தைக் கட்டவிழ்த்துவிட குறிப்பிட்ட காரணங்கள் ஏதும் தேவைப்படாது என்பது தான் வரலாறு. சான்றாக இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச்சில் நீங்கள் பாகிஸ்தானுக்கு கைதட்டினால் தேசத்துரோகி ஆகிவிடுவீர்கள் என்பது நிச்சயம். இதே கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவை ஆதரித்தால் நீங்கள் துரோகி அல்ல! அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகிற்கு அடிமைத்தனத்தை காட்டும் காவிக் கும்பல், பாக்கிடம் மட்டும் ஆண்டைத்தனம் காட்டும். காரணம், பாக்கை வைத்து இந்தியாவில் முசுலீம்களை அடிமைகளாக்குவது அவர்களின் இலட்சியம். முசுலீம் அல்லாதவர்கள் யாரெல்லாம் இந்த இலட்சியத்தை எதிர்க்கிறார்களோ அவர்களே ஆர்.எஸ்.எஸ்-ன் ஜன்ம பகைவர்கள்.

ஏ.பி.வி.பி காலிகள்
ஏ.பி.வி.பி காலிகள்

கிரிக்கெட் மேட்ச் மட்டுமல்ல, நீங்கள் மாட்டுக்கறி தின்றாலோ, முசபார்நகர் குஜராத் கலவரத்தை அம்பலப்படுத்தி பேசினாலோ, பார்ப்பனிய வேதக் கலாச்சாரத்தை எதிர்த்தாலோ, சமஸ்கிருத எதிர்ப்பு பேசினாலோ, கலப்பு மணம் புரிந்தாலோ, சாதி வர்ண ஒழிப்பு பேசினாலோ, காதலித்தாலோ, நாத்திகராக கம்யுனிஸ்டாக இருந்தாலோ, பெரியார் கொள்கையைப் பரப்பினாலோ, அம்பேத்கரை பார்ப்பனியத்தை எதிர்க்கும் ஆயுதமாக காட்டினாலோ, சிறுபான்மை மதத்தவரைச் சேர்ந்தவராக இருந்தாலோ, இந்துத்துவத்தை எதிர்க்கும் தலித்தாக இருந்தாலோ, அல்லது பஸ்தார் சட்டிஸ்கர் பழங்குடியினராக இருந்தாலோ, அமெரிக்க எதிர்ப்பு மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பைப் பேசினாலோ, இந்துப் பார்ப்பனியத்தில் பெண்களுக்கு வழிபடும் உரிமை குறித்து பெண்களே போராடினாலோ, ஏன் அறிவாளியாக பத்திரிக்கையாளனாக விருதைத் திருப்பி அளிப்பவனாக இருந்தாலோ அவர்கள் எல்லாம் ஆர்.எஸ்.எஸ் காலிகளின் வரையறைப்படி தேசத்துரோகிகள்.

afzal-guru-protest
காஷ்மீர் மக்களின் விடுதலை போராட்டத்துக்கு ஆதரவான நிகழ்ச்சி பற்றிய போஸ்டர்

ஆக இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் காவி வானரங்களைத் தவிர தேசபக்தனாக திகழ்வதற்குண்டான வாய்ப்புகள் யாருக்குமே கிடையாது. இதுதான் இன்றைய நிலைமை.

ஆகையால் தான் சென்னை ஐ.ஐ.டியில் அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம் தடை செய்யப்பட்டது; புனே திரைப்படக் கல்லூரி மாணவர்கள் அடித்து நொறுக்கப்பட்டனர்; ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் ரோகித் வெமுலா தொங்கவிடப்பட்டார்; இப்பொழுது ஒட்டுமொத்த டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகமும் பாசிச பயங்கரவாதத்திற்கு திறந்துவிடப்பட்டிருக்கிறது.

12-02-2015 அன்று (இந்தியாவின் கூட்டு மனசாட்சியை நிறைவேற்றுவதற்காக) தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவின் மூன்றுமாண்டு நினைவுக் கூட்டத்தை ஜே.என்.யு பல்கலைக் கழகத்தின் சில மாணவர் அமைப்புகள் நடத்தியிருக்கின்றனர். இந்தக் கூட்டத்தில் ‘பாகிஸ்தான் வாழ்க! இந்தியா ஒழிக!’ என்று மாணவர்கள் கோசமிட்டதாக ஏ.பி.வி.பி குண்டாந்தடிகள் வழக்கம் போல பா.ஜ.க எம்.பி.க்கு தெரிவிக்க, ராஜ்நாத் சிங், ஸ்மிருதி இராணி போன்றோரின் நேரடி தலையீட்டின் கீழ், டில்லி காவல்துறை தேசத்துரோகம் மற்றும் இந்தியாவிற்கு எதிராக சதித்திட்டம் தீட்டுதல் போன்ற வழக்குகளை குற்றம் சாட்டப்படுவர் யார் என்று பெயரைச் சொல்லாமலேயே ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிராக தொடுத்திருக்கின்றனர்.

கன்னையா குமார்
டெல்லி காவல்துறை மப்டி உடையில் ஜே.என்.யு. பல்கலைக் கழக மாணவர் தலைவர் கண்ணையா குமாரை தேசத்துரோக குற்றச்சாட்டில் கடத்திச் சென்றிருக்கிறது.

இப்படிச் செய்வதன் மூலம் யார் மீது வேண்டுமானாலும் தேசத்துரோக குற்றச்சாட்டை சுமத்தலாம் என்பதற்கு நிருபணமாக டெல்லி காவல்துறை மப்டி உடையில் ஜே.என்.யு. பல்கலைக் கழக மாணவர் தலைவர் கண்ணையா குமாரை தேசத்துரோக குற்றச்சாட்டில் கடத்திச் சென்றிருக்கிறது.

மேலும் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மற்றும் ஏ.பி.வி.பி காலிகளின் துணையோடு, டெல்லி காவல் துறை பல்கலைக் கழக மாணவர்களை சூறையாட வெறிகொண்டு அலைந்து வருகிறது. நள்ளிரவில் பெண்கள் விடுதியைச் சோதனையிடுவது, அடையாள அட்டை வைத்திருக்காத மாணவர்களை சித்ரவதை செய்து பொய் கேசு போட முயல்வது, காஷ்மீரிலிருந்து வரும் ஒட்டு மொத்த மாணவர்களையும் கைது செய்ய முனைவது, இதுவரை மோடி அரசின் பாசிசக் கொள்கைகள் மற்றும் இந்துத்துவ கும்பலின் அரசியலையும் அம்பலப்படுத்திய மாணவர்களையும் குறி வைத்து வேட்டையாடுவது என ஆர்.எஸ்.எஸ் மோடி கும்பல் பல்வேறு மாணவர் பிரச்சனையில் அம்பலப்பட்ட பிறகும் கூட அடிபட்ட நரியாக ஊளையிட்டுக் கொண்டிருக்கிறது.

காவிக் கும்பலின் பாசிச பக்தி
காவிக்கும்பல் தனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி புரளிகளைக் கிளப்பி மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி அரசின் தோல்வியை மூடிமறைத்து அகண்ட பாரதக் கனவை நிறைவேற்ற முயன்று வருகிறது.

கடந்த ஐந்து நாட்களாக நாட்டில் நடைபெற்று வரும் பிரச்சாரம் என்ன? ஏதோ பாகிஸ்தான் ஆதரவு மற்றும் இந்தியாவிற்கு எதிரான முழக்கங்களுக்கத்தான் தேசத்துரோக குற்றச்சாட்டின் கீழ் மாணவர்களின் மீது நடவடிக்கை எடுப்பதாக இந்துத்துவ பாசிச கும்பல் சமூகத்தின் பொதுப்புத்தியில் தன்னை இருத்த தவியாய் தவிக்கிறது. ஆனால் நிதர்சனத்தில் காவிக்கும்பல் தனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி புரளிகளைக் கிளப்பி மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி அரசின் தோல்வியை மூடிமறைத்து அகண்ட பாரதக் கனவை நிறைவேற்ற முயன்று வருகிறது.

சான்றாக, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அப்சல் குரு நினைவுக் கூட்டம் நடத்திய உமர் எனும் மாணவர் லஷ்கர்-ஈ-தொய்பாவுடன் நேரடித் தொடர்புடையவர் என்று ஒரே போடாக போட்டார். ராஜ்நாத்சிங்கின் இந்த புரளி, அரசின் புலனாய்வுத்துறையாலேயே நிராகரிக்கப்பட்டு இருப்பது ராஜ்நாத்சிங்கின் களவாணித்தனத்தை தோலுரித்துக் காட்டியிருக்கிறது.

இரண்டாவதாக, பாகிஸ்தானில் இருக்கும் ஹபீஸ் செய்யது நேரடியாக ஜே.என்.யு மாணவர்களுக்கு ஆதரவு தருவதாக கட்டியமைக்கப்பட்ட செய்தியும் ஹபீஸின் பெயரில் உருவாக்கப்பட்டிருக்கும் டிவிட்டர் கணக்கும் போலியானது என்பதையும் வெளிச்சத்திற்கு வந்தபிறகு ஆர்.எஸ்.எஸ் கும்பலின் நோக்கமும் அம்பலப்பட்டுவிட்டது. அதே போல பல்கலையில் “பாக் வாழ்க” கோஷம் போட்டவர்கள் ஏ.பி.வி.பியினரே என்று ஆம் ஆத்மி வீடியோ மூலம் அம்பலப்பட்ட பிறகும் அவாள் கூட்டம் ஊளையிடுவதை நிறுத்தவில்லை.

bjp-thug-mla-op-sharma-thrashing-students
மாணவரை தாக்கிய பா.ஜ.க எம்.எல்.ஏ குண்டன் ஓ.பி.சர்மா

இந்துத்துவ கும்பல் இச்சந்தர்ப்பத்தை கணிசமாக தன்பக்கம் அறுவடை செய்யவும் தவறவில்லை. டில்லியில் தற்பொழுதைய நிலையில் ஜே.என்.யு பல்கலைக்கழகத்திற்கு வெளியே இரயில் நிலையங்கள் உட்பட சங்கர்பரிவாரங்கள் ஜே.என்.யு மாணவர்களை தேசத்துரோகி எனக் குற்றம் சாட்டி தாக்கி வருகின்றனர்.

பாட்டியாலா உயர்நீதி மன்றவளாகத்தில் வக்கீல்கள் என்ற போர்வையில் நுழைந்த இந்துத்துவ வானரங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ், டைம்ஸ் ஆப் இந்தியா, டி.என்.ஏ நாளிதழ், எகனாமிக்ஸ் டைம்ஸ், கைரலி தொலைக்காட்சி, ஐ.பி.என் குழும நிருபர்களைத் தாக்கியிருக்கின்றனர். ஜே.என்.யு மாணவர் தலைவர் கண்ணையா குமாருக்கு ஆதரவாக கோர்ட் வளாகத்திற்கு வந்த மாணவர்களையும் தேசத்துரோகிகள் என்று இந்துத்துவக் கும்பல் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டதையும் காவல்துறை வேடிக்கை பார்த்ததையும் இந்தியன் எக்ஸ்பிரஸ் நிருபர் அலோக் சிங் வெளிச்சத்திற்கு கொண்டுவந்திருக்கிறார்.

hitler-modi
வெள்ளைக் காரனின் காலை நக்கிப் பிழைக்கும் ஆர்.எஸ்.எஸ் கும்பலின் பாசிச அரசியல்

பத்திரிக்கையாளர்கள் மற்றும் மாணவர்கள் மீதான வன்முறைத்தாக்குதல் தனி வழக்காக பதியப்பட்டிருக்கும் நிலையில் பாட்டியாலா கோர்ட் வளாகத்தில் இந்துத்துவ வானரங்கள், மாணவர் தலைவர் கண்ணையா குமாரைத் தாக்கியிருக்கிறது. உச்சநீதி மன்ற கெடுபிடி உத்தரவுகள்! எல்லாம் மோடியின் பாசிச பயங்கரவாதத்திற்கு முன்னால் கழிவறைக்காகிதமாக நிற்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை.

வெள்ளைக்காரனின் காலை நக்கிப் பிழைத்த ஆர்.எஸ்.எஸ் கும்பல் தான் இன்றைக்கு மிகவும் ஆபாசமாக தேசபக்தி கூச்சல் போட்டுவருகிறது என்பதை எவர் ஒருவரும் அறிவர். கடந்த வாரத்திற்கு முன்புதான் அமெரிக்க இந்தியாவிற்கு டேவிட் ஹெட்லி வாக்குமூலத்தை பரிசாக வழங்கிவிட்டு பாகிஸ்தானிற்கு எப்-1 ரக ஹெலிகாப்டர்களை வழங்கியது.

ஹெட்லியின் வாக்குமூலத்திற்கு பின் பாகிஸ்தான்-ஐ.எஸ்.ஐ உளவுப்பிரிவின் சதி வெளியில் வந்துவிட்டதாக பிரச்சாரம் செய்த மோடி கும்பல், அமெரிக்கா அதே ஐ.எஸ்.ஐ பாகிஸ்தானுக்கு ஹெலிகாப்டர் வழங்கும் என்று தெரிந்தவுடன் தேசபக்தி கூச்சலை நவதுவராங்களிலும் இருந்தும் கசியவிடாமல் அடக்கி வாசித்தது.

ராஜ்நாத்சிங்
அமெரிக்கா சம்பந்தப்பட்டிருப்பதால் பாகிஸ்தான், பாரதமாதாவின் பாவாடையைக் கூட உருவுவதை வேடிக்கை பார்த்த பாரதிய ஜனதாக் கூட்டம்தான் இன்றைக்கு வந்தே மாதரம், தேசத் துரோகம் என்று உறுப்பறுந்த விலங்காக ஜே.என்.யு பல்கலைக் கழக விவகாரத்தில் கத்திக்கொண்டிருக்கிறது.

அமெரிக்கா சம்பந்தப்பட்டிருப்பதால் பாகிஸ்தான், பாரதமாதாவின் பாவாடையைக் கூட உருவுவதை வேடிக்கை பார்த்த பாரதிய ஜனதாக் கூட்டம்தான் இன்றைக்கு வந்தே மாதரம், தேசத் துரோகம் என்று உறுப்பறுந்த விலங்காக ஜே.என்.யு பல்கலைக் கழக விவகாரத்தில் கத்திக்கொண்டிருக்கிறது.

இந்துத்துவக்கும்பலின் இந்தக் கூச்சலுக்கு இசுலாமிய மதஅடிப்படைவாதமும் ஓரளவு தீனிபோட்டு வளர்த்திருக்கிறது. இந்துமதவெறியர்களை எதிர்க்கும் இடதுசாரி, ஜனநாயக சக்திகளை பலவீனப்படுத்தும் வேலையினை இசுலாமிய அடிப்படைவாதிகள் செய்து வருகின்றனர்.

ஆர்.எஸ்.எஸ்ஸின் நுகத்தடியை சாதி இந்துக்களும் சூத்திர தலித்துகளும் ஒவ்வொரு நாளும் சுமந்துகொண்டிருக்கும் பொழுது மதச்சிறுபான்மையினர்கள் இரட்டை நுகத்தடியை சுமந்து கொண்டிருக்கின்றனர் என்பதுதான் இந்திய வாழ்நிலை.

இந்திரா-மோடி
அறிவிக்கப்படாத அவசரநிலை

சி.பி.ஐ, சி.பி.எம் போன்ற ஓட்டுப்பொறுக்கி போலி கம்யுனிஸ்டுகளின் ஓட்டாண்டித்தனம் ஜே.என்.யு விசயத்தில் இந்து-இந்தி-இந்தியா எனும் ஆர்.எஸ்.எஸ்ஸின் அகண்ட பாரதக் கனவையே உயர்த்திப்பிடிக்கிறது. இந்தியா தேசிய இனங்களின் சிறைக்கூடம் என்பதை மறைக்கும் இந்த ஓட்டாண்டிகள் ஜே.என்.யு மாணவர்களுக்கு ஆதரவாக நிற்பதாக காட்டிக்கொள்வது கடைந்தெடுத்த அரசியல் பிழைப்புவாதமாகும். மேலும் இவர்கள் தமது சந்தர்ப்பவாதத்தைக் கொண்டு இந்துமதவெறியர்களை எதிர்ப்பது உண்மையில் ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு பலத்தையே கொண்டு சேர்க்கிறது.

மறுகாலனியாதிக்க கொள்கைகளை விரைந்து தீவிரப்படுத்தும் ஆர்.எஸ்.எஸ் கும்பலின் பார்ப்பனிய இந்துத்துவத்தையும் இசுலாமிய மதவெறி அமைப்புகளின் அடிப்படைவாதத்தையும் முறியடிப்பதற்கு இவர்கள் முன்வைக்கும் தீர்வு என்ன? பாராளுமன்றத்தில் ஜே.என்.யு விவகாரத்தைக் கிளப்பி “மோடியே பதில் சொல்! மவுனத்தைக் கலை!” “அமித் ஷா பதில் சொல்! ஸ்மிருதி இராணி பாராளுமன்றத்தில் மன்னிப்பு கேள்” என்று கேள்வி எழுப்புவார்களாம்.

பா.ஜ.க எம்.எல்.ஏ ஓ.பி சர்மா சி.பி.எம் கட்சித் தொண்டரை பாட்டியாலா கோர்ட் வளாகத்தில் நேரடியாக தாக்கி இதுதாண்டா பாசிசம் என்று எடுத்துக்காட்டுகிற பொழுது பாராளுமன்றத்தில் பாசிஸ்டுகளிடமே சி.பி.ஐ, சி.பி.எம் கட்சிகள் நியாயம் கேட்பார்கள் என்ற நிலைப்பாடு புழுத்து நாறும் புண்ணுக்கு புணுகு போடுவதைப்போன்றது.

சங்கப் பரிவாரங்களின் தேசபக்தி கூச்சல் பாராளுமன்றத்தில் தீர்க்கப்படவேண்டியதல்ல. ஏனெனில் தேசபக்தி, “அயோக்கியர்களின் கடைசிப் புகலிடமா”கத்தான் இருக்கிறது. பாசிஸ்டுகளின் செயல் எந்திரம் இது. இது தான் இன்றைக்கு ஜே.என்.யு விவகாரத்தில் துலக்கமாக வெளிப்பட்டிருக்கிறது.

ஜே.என்.யு ஆசிரியர்கள், மாணவர்களின் கண்டன போராட்டம்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

ஆக இந்த மதவாத அமைப்புகளின் அடித்தளத்தையே அடித்து நொறுக்காதவரை ஜே.என்.யு மட்டுமல்ல நம் ஒவ்வொருவர் மீதும் தேசத் துரோக வழக்கு பாயத்தான் செய்யும். இதை நாட்டின் உண்மையான தேசபக்தர்களான உழைக்கும் மக்கள் உணர வேண்டிய தருணம் இது.

– இளங்கோ

அப்பாவ கெடுத்துட்டியே அம்மா – பாடல்

3

appaava keduthittiye amma jpg 700“மூடு டாஸ்மாக்கை” – திருச்சியில் பிப்.14, 2016 அன்று மக்கள் அதிகாரம் நடத்திய சிறப்பு மாநாட்டின் கலை நிகழ்ச்சியில், இளம் தோழர் ஒருவர் பாடிய பாடல்! ‘அம்மா’ என்றழைக்கப்படும் ஸ்டிக்கர் மாஃபியாவின் தலைவி குடியால் தமிழகத்தை கெடுத்ததை ஒரு சிறுமியின் பார்வையில் விவரிக்கும் பாடல்! பாருங்கள், பகிருங்கள்!