

ஜெயா விடுதலையையும். பார்ப்பனியத்துக்கும், பணத்துக்கும் கைப்பாவையாக செயல்படும் நீதித்துறையையும் அம்பலப்படுத்தி மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகள் தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இன்று காலை 11 மணிக்கு சென்னை உயர்நீதிமன்ற வாயிலில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.
கடந்த செப்டம்பர் 27 அன்று குற்றவாளி என்று நீதிபதி குன்ஹாவால் தீர்ப்பளிக்கப்பட்டு ஜெயலலிதா பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டவுடன் தமிழகம் முழுவதும் ஜெயாவின் தொண்டர்கள் என்ற பெயரில் கூலிப்படைகளால் நடத்தப்பட்ட வன்முறையை, பேருந்து எரிப்பை, கடையடைப்பை கைகட்டி, வாய் பொத்தி, ஐம்புலனடக்கி வேடிக்கை பார்த்த அதே போலிசு, இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்த விடாமல் தடுத்தது; பெண் தோழர்கள், குழந்தைகள் உள்ளிட்டு அனைத்துத் தோழர்களையும் தர தரவென இழுத்து வேனில் ஏற்றியது. வேனுக்குப் பக்கத்தில் இருபுறமும் வரிசையாக நின்று கொண்டு ஒவ்வொருவரையும் அப்படியே தூக்கி வேனில் அடைத்து கைது செய்தனர்.

66 கோடி ரூபாயை ஆட்டையைப் போட்ட ஜெயலலிதா, மீண்டும் பல கோடிகளை சுருட்ட, எம்.எல்.ஏ கூட்டம் கூட்டுவதும், மீண்டும் முதல்வராவதற்கு அனைத்து ஆயத்தங்களை செய்து கொண்டும் இருக்கிறார். உண்மையான குற்றவாளி ஜெயாவின் பதவியேற்பு விழாவிற்கு 7,000 போலிசை அனுப்பி பாதுகாக்கச் செய்யும் அதே போலிசு, தோழர்களை குற்றவாளிகளைப் போல அடித்து வேனில் ஏற்றி ’வால் டாக்ஸ்’ சாலையில், போலிசு குடியிருப்பில் உள்ள சமூக நலக்கூடத்தில் அடைத்து வைத்துள்ளனர்.

கடந்த 11-ம் தேதி கர்நாடக உயர்நீதிமன்றத்தில், ”கொடுத்த காசுக்கு மேல் குமாரசாமி கூவியதால்”, தமிழக மக்களின் சொத்துக்களை திருடிய ஜெயலலிதா ’நிரபராதி’யாக்கப்பட்டார். தீர்ப்பு வந்ததும், “தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், ஆனால் தர்மம் வெல்லும்” என மண்டபத்தில் யாரோ எழுதிக் கொடுத்த டயலாக்கை பேசினார், ஜெயா. குனிந்து கும்பிடுப் போட்டே பழக்கப்பட்ட அடிமைகள் கூட்டத்தைக் கூட்டி ஐந்தே நிமிடத்தில் ஒப்புதல் வாங்கி, இன்று ஆளுநரிடம் அரசமைக்க உரிமையும் கோரியுள்ளார் மக்கள் சொத்தைத் திருடிய ஜெயலலிதா.
எம்.எல்.ஏ-க்கள் கைத்தட்டலால் அவ்வை சண்முகம் சாலையே அதிர்ந்ததாகவும், தே.மு.தி.க-வைச் சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் 5 பேர் அ.தி.மு.க தலைமை அலுவலகத்துக்கு வந்ததாகவும் செய்திகளை அப்டேட் செய்து நெஞ்சம் குளிருகின்றன பத்திரிகைகள்.
ஆனால், இது நிதியால் வாங்கப்பட்ட நீதி என்பதையும், இது பார்ப்பனியத்துக்கு சேவை செய்யும் நீதிமன்றம் என்பதையும் புரிந்து கொண்டு தீர்ப்பையும், நீதித்துறையின் யோக்கியதையையும் எள்ளி நகையாடுகின்றனர், மக்கள்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
மக்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பதாகவும் நீதித்துறையின் யோக்கியதையை அம்பலப்படுத்தவதாகவும் அமைந்தது இந்த ஆர்ப்பாட்டம்
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
புதிய ஜனநாயகம் செய்தியாளர்கள்,
சென்னை.
தஞ்சையில் ஊழல் குற்றவாளி ஜெயா முதலமைச்சராவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம். தோழர்கள் கைது
தகவல்
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தஞ்சை
______________________
12 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசின் டான்சி நிறுவனத்திற்கு சொந்தமான நிலத்தை வாங்கிய குற்றத்திலிருந்து ஜெயலலிதாவை விடுவித்து அவரது மனசாட்சிக்கு வேண்டுகோள் விடுத்தது உச்சநீதிமன்றம். அதை ஒட்டி புதிய கலாச்சரம் இதழில் வெளியான தலையங்கத்தை இங்கு தருகிறோம்.
சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பும், உச்ச நீதிமன்றத்தின் பல உத்தரவுகளும் எந்த அடிப்படையில் வழங்கப்படுகின்றன என்பதை இந்தக் கட்டுரை தெளிவாக்குகிறது. நீதித்துறை நீதியின் பால் இயங்குவதில்லை என்பதை டான்சி தீர்ப்பும் வெளிப்படையாக தெரிவிக்கிறது.
டான்சி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை இரண்டே வரிகளில் இப்படிச் சுருக்கிக் கூறலாம். தி.மு.க உச்சநீதிமன்றத்திடம் மேல்முறையீடு செய்தது; உச்சநீதிமன்றமோ ஜெயலலிதாவின் மனசாட்சியிடம் மேல்முறையீடு செய்திருக்கிறது. ஜெயலலிதா தண்டிக்கப்பட வேண்டுமென விரும்பியவர்களும், நிச்சயம் தண்டிக்கப்பட்டு விடுவாரென நம்பியவர்களும் தீர்ப்பைக் கேட்டவுடன் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடியதையும், “நீதி தேவதைக்கு நன்றி” என அவர்கள் ஒட்டிய சுவரொட்டிகளையும் கண்டு மனம் வெதும்பிய சிலர், “பெட்டி வாங்கிட்டான்னு நாமும் போஸ்டர் அடிச்சு ஒட்டினா என்ன? நீதிமன்ற அவமதிப்புன்னு கைது பண்ணுவானா? பண்ணட்டும். எத்தனை ஆயிரம் பேரைக் கைது பண்ணுவான்னு பார்ப்போம்” என்று குமுறினார்கள்.
“நீதித்துறையைப் பெட்டிக்குள் அடக்க முடியாது” என்று அவர்களிடம் நாம் வாதாட முடியாது. நீதிபதிகளில் சுமார் 25 சதவீதம் பேர் கறை படிந்தவர்களென்று முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியே ‘தீர்ப்பளித்திடும்போது’ அவரை மறுத்து வாதாடுமளவுக்கு நம்மிடம் ஆதாரமில்லை.
எனினும், “நீதி பெட்டிக்குள் அடங்கி விட்டது” என்ற வகையிலான இந்தப் பொதுக்கருத்தை நாம் மறுப்பதற்கு வேறு காரணமிருக்கிறது. இந்த அரசமைப்பு நீதியானதென்றும், அரசியல்வாதிகளும், அதிகாரிகளும், நீதித்துறையும் சட்டத்தைக் கறாராகப் பற்றியொழுகினால் பூலோக சொர்க்கத்தை இந்தியாவில் உருவாக்கி விடலாமென்றும் ஆளும் வர்க்கம் உருவாக்கியிருக்கும் மாயையை இந்தப் பொதுக்கருத்து வழிமொழிகிறது. மாறாக, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்போ மேற்படி மாயைகளைப் பொடிப்பொடியாக நொறுக்குகிறது. பட்டப்பகலில் வழிப்பறி செய்தாலும் “ஓட்டுக் கட்சிகளையோ, அதிகாரவர்க்கத்தையோ சட்டப்படி தண்டிக்க முடியாது” என்ற உண்மையை இந்தத் தீர்ப்பு மிகவும் நேர்த்தியான முறையில் வெளிப்படுத்தியிருக்கிறது.

***
சந்தை விலையை விடக் குறைவான விலைக்குத்தான் டான்சி சொத்து விற்பனை செய்யப்பட்டிருக்கிறது என்றும், இதனால் அரசுக்கு இழப்பும், ஜெயலலிதா-சசிகலாவுக்கு ஆதாயமும் கிட்டியிருக்கிறதென்றும் சிறப்பு நீதிமன்றம் கூறியது. அதனடிப்படையில் தண்டனையும் விதித்து. “ஒரு பொருளின் சந்தை மதிப்பை யார் எப்படி நிர்ணயம் செய்ய முடியும்?” என்ற தத்துவ ஞானக் கேள்வியை எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம் ஜெயலலிதாவை விடுதலை செய்தது.
இதை வழிமொழிந்ததுடன் நில்லாமல், உச்சநீதிமன்றம் இன்னும் ஒருபடி மேலே சென்றிருக்கிறது. இந்தப் பரிவர்த்தனையில் ஜெயலலிதாவும், சசிகலாவும் தவறான ஆதாயம் அடையவில்லை. டான்சி நிறுவனம் தவறான நட்டமும் அடையவில்லையெனக் கூறியிருக்கிறது.
அப்படியானால் ஒரு வர்த்தகப் பரிவர்த்தனையில், “நியாயமான லாபம், நியாயமான நட்டம் என்பனவற்றைத் தீர்மானிக்கும் அளவுகோல் எது?” என்ற கேள்வி நமக்கு எழுகிறது. நெல்லுக்கும் கரும்புக்கும் நியாயமான விலை கேட்கும் விவசாயி, முதலுக்கு மோசமில்லாத விலையை நியாயவிலை என்று கருதுகிறான். உயிர் காக்கும் மருந்துகளுக்கு விலை நிர்ணயிக்கும் பன்னாட்டு நிறுவனங்களோ 300 சதவீத லாபத்தை நியாயமான லாபமாகக் கருதுகின்றன. இதைத் ‘தவறான லாபம்’ என்று கூறித் தடை செய்யும் அதிகாரம் அரசுக்கோ, நீதிமன்றத்துக்கோ இல்லை.
அதேபோல, 1000 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து மதிப்புள்ள மாடர்ன் ஃபுட் நிறுவனத்தை வெறும் 120 கோடி ரூபாய்க்கும், பால்கோ நிறுவனத்தை அடிமாட்டு விலைக்கும் விற்பனை செய்த அமீனாத்துறை அமைச்சர் அருண் ஷோரியும் “இந்த நிறுவனங்களின் சந்தை மதிப்பு இவ்வளவுதான்” என்று வாதாடுகிறார். ஆகவே, ஒரு பொருளின் சந்தை விலையை இன்னதென்று தீர்மானிக்கவியலாது எனும்போது அதை வாங்கியவர் எவ்வளவு லாபமடைந்தார் என்பதையும் திட்டவட்டமாக யாரும் கூற முடியாது.
இன்னதென்று கூற முடியாத சந்தை விலை, இன்னதென்று கண்டுபிடிக்க முடியாத வழிகளின் மூலம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் உருவாக்கப்படுகின்ற முன்மாதிரி விலை (guiding value) என்ற ஆதாரங்களை வைத்துக் கொண்டு எந்தச் சட்டத்தால்தான் குற்றத்தை நிரூபிக்க முடியும்? அதனால்தான், “யாரும் தவறான லாபமோ, நட்டமோ அடையவில்லை.” என்று மிகவும் எச்சரிக்கையுடன் வரம்பிட்டுக் கொள்கிறது தீர்ப்பு.
அப்படியானால் “தவறான முறையில் ஆதாயமடைவது” என்ற நோக்கமில்லாத புரட்சித்தலைவி, டான்சி நிலத்தை ஏன் வாங்கினார்? முடவர்களுக்கு மூன்று சக்கர வண்டி வழங்குவதைப் போல, நொடித்துப் போன டான்சி நிறுவனத்துக்கு அம்மா அவர்கள் தாயுள்ளத்துடன் தனது கைக்காசை வழங்கியிருக்கிறார் என்பதைத் தவிர வேறென்ன நோக்கம் கற்பிக்க முடியும்?
***
டான்சி நிலம் அரசுச் சொத்தென்றும் அதை அரசு ஊழியராகிய முதல்வர் வாங்கியது குற்றமென்றும் கூறப்பட்ட குற்றச்சாட்டையும் இத்தீர்ப்பு நிராகரித்து விட்டது. “அரசுக்குச் சொந்தமானதாக இருந்தாலும், ஒரு ‘அரசு நிறுவனம்’ என்பதற்கு தனித்த சட்ட அடையாளம் இருக்கிறது. எனவே அரசுச் சொத்தையும் அரசு நிறுவனத்தின் சொத்தையும் ஒன்றெனக் கருதவியலாது. மேலும், ‘அரசு நிறுவனத்தின் சொத்தை அரசு ஊழியர் வாங்குவது குற்றமே’ என்று சட்டத்தில் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை” என்று விளக்கமளிக்கிறது உச்சநீதிமன்றத் தீர்ப்பு.
இத்தீர்ப்பின் விளைவாக அதிகாரிகளும் அமைச்சர் பெருமக்களும் பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்களை ஒளிவுமறைவான முறைகளில் திருடவேண்டிய அவலநிலை ஒழிக்கப்பட்டு விட்டது. எடுத்துக் காட்டாக, அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துகளை, அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்களும் அதிகாரிகளும் வாங்கிக் கொள்ளலாம். அவற்றுக்கான நியாயமான விலையையும் அவர்களே நிர்ணயம் செய்து கொள்ளலாம்.

ஒருவேளை சென்னை கடற்கரை போன்ற நேரடியான அரசுச் சொத்தை வாங்க சசிகலா அம்மையார் விரும்பினால், முதலில் ஒரு அரசு உத்தரவின் மூலம் மெரினா கடற்கரையை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு சொந்தமாக்க வேண்டும். பிறகு கடற்கரையை விலைக்கு வாங்கியதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியிலிருந்து சுற்றுலாக் கழகத்தை மீட்க புரட்சித் தலைவியவர்கள் தன் சொந்தக் காசைக் கொடுத்து மேற்படி கடற்கரையை தன் பெயருக்கே மாற்றிக் கொள்ளலாம்.
அரசுச் சொத்து வேறு, அரசுத்துறைச் சொத்து வேறு என்று கூறும் இத்தீர்ப்பு, “பொதுத்துறை (Public Sector) பொது மக்களுக்குச் சொந்தமானது” என்ற மாயையைத் தகர்த்து, “அது அதிகாரவர்க்கத்தின் உடைமை” என்ற உண்மையை நிலைநாட்டியிருக்கிறது. பொதுத்துறையைத் தனியார்மயமாக்கும் மறுகாலனியாக்க நடவடிக்கைகளுக்கு நாடாளுமன்றம் / சட்டமன்றத்தின் ஒப்புதல் கூடத் தேவையில்லை என்பதற்கும் அத்தகைய முடிவுகளை அதிகாரவர்க்கமே மேற்கொள்ளலாம் என்பதற்கும் ஏற்கனவேயுள்ள சட்டத்தில் பொதிந்திருக்கும் வாய்ப்புகளை இத்தீர்ப்பு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
***
சந்தை விலை, அரசுச் சொத்து என்ற இரு கருத்தாக்கங்களையும் நிராகரித்ததுடன் உச்சநீதிமன்றம் நிற்கவில்லை. “இந்தச் சொத்தை குறைந்த விலைக்கு வாங்க ஜெ, சசி மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட ஆறு பேர் சதித்திட்டம் தீட்டினர்” என்ற குற்றச்சாட்டையும் ஏற்க மறுத்திருக்கிறது. “முதல்வர் விரும்பும் வகையில் இந்த விற்பனை இடையூறின்றி நடந்து முடிய வேண்டுமென்பதில் அதிகாரிகள் பேரார்வம் காட்டியிருப்பார்கள்” என்று ஒப்புக் கொள்ளும் இத்தீர்ப்பு வேறொரு கேள்வியை எழுப்புகிறது. “குற்றம் சாட்டப்பட்டவர்களுடைய சிந்தனைகள் வெவ்வேறு கட்டங்களில் எவ்வாறு சந்தித்தன, அவர்களுடைய பொதுத்திட்டம் என்ன என்பது தெளிவாக நிரூபிக்கப்படவில்லை” என்பதால் சதி (குற்றப்பிரிவு 120-B) என்ற குற்றச்சாட்டை நிராகரிக்கிறது.
சதியை எப்படி நிரூபிப்பது? தீவிரவாதிகளின் சதியை நிரூபிப்பது சுலபம். அவர்கள் பாலத்தின் அடியிலோ, புதர்களின் மறைவிலோ, பாழடைந்த மண்டபத்திலோ நள்ளிரவில் காடா விளக்கொளியில் ஒன்று கூடுவார்கள். “சட்டபூர்வமாக அமைந்த இந்த அரசை, செக்சன் : 120-B-யின் கீழ் தூக்கியெறிவோம்” என்று பத்தடி தூரத்தில் ரோந்து போகும் ஏட்டின் காதில் விழும்படி சபதம் செய்வார்கள். அந்த நேரத்தில் அதே இடத்திற்கு சிறுநீர் கழிக்க வரும் கிராம நிர்வாக அதிகாரியைச் சாட்சியாக்கி குற்றம் நிரூபிக்கப்பட்டு ‘தீவிரவாதிகள்’ தண்டிக்கப்படுவார்கள்.
ஆனால், ஜெ-வும், அதிகாரிகளும் தீவிரவாதிகள் அல்ல என்பதுடன் அவர்கள் பாழடைந்த மண்டபத்திலும் சந்திப்பதில்லை என்பதால் ஏட்டுகளால் அவர்களை வேவு பார்க்க முடியாது. குறிப்பாக, சட்டபூர்வமாக அமைந்த அரசின் அதிகாரபூர்வமான பிரதிநிதிகள் என்ற முறையில் அவர்கள் கோட்டையில் சந்தித்துப் பேசும் போது அது வளர்ச்சித் திட்ட விவாதமா, சதியாலோசனைக் கூட்டமா என்று சோதித்தறியும் அதிகாரமும் யாருக்கும் வழங்கப்படவில்லை. மேலும், காதலர்களின் உள்ளம் குறிப்பறிந்து செயலாற்றுவதைப் போலவே களவாணிகளின் உள்ளமும் குறிப்பறிந்து செயல்படுகிறது. சாட்சியங்களோ அரிதாக ஓரிரு வழக்குகளில் சிக்கலாம். அது சீப்பில் சிக்கிய முடியைப் போன்றது. எனவே, விளைவிலிருந்து சதியை ஊகிக்க முடியுமேயன்றி, சதித்திட்டத்தின் கூட்டக் குறிப்பை கண்டுபிடிக்க ஒருக்காலும் முடியாது. எனினும் ஊகத்தின் அடிப்படையில் குற்றம் சாட்ட முடியாது என்கிறது உச்சநீதிமன்றம். “பாபர் மசூதியை இடிக்கும் சதித்திட்டத்தில் அத்வானியின் பங்கை நிரூபிக்க ஆதாரமில்லை” என்று கூறி விடுவித்ததைப் போல.
***
அடுத்ததாக, “டான்சி சொத்தை வாங்கியதன் மூலம் அரசு ஊழியர்களுக்கான நன்னடத்தை விதியை ஜெயலலிதா மீறியிருக்கிறாரா? ஆம், எனில் அந்த நன்னடத்தை விதிமீறல் என்பது இ.பி.கோ. 169-வது பிரிவின்படி தண்டிக்கத் தகுந்த குற்றமா?” என்ற கேள்வியைப் பரிசீலிக்கிறது இத்தீர்ப்பு.

“அரசு ஊழியர் நன்னடத்தை விதி என்பது கனவான்கள் ஏற்கும் ஒரு ஒப்பந்தம்; அதனை மீறுவது நீதிமன்றத்தால் தண்டிக்கப்படக் கூடிய கிரிமினல் குற்றமாகி விடாது. மேலும், நன்னடத்தை விதியின் சொற்களை ஜெயலலிதா மீறவில்லை (டான்சி நிலம் நேரடியான அரசுச் சொத்தல்ல என்ற காரணத்தினால்); அதன் உணர்வைத்தான் மீறியிருக்கிறார்” என்று விளக்கமளிக்கிறது உச்சநீதிமன்றம்.
நன்னடத்தை விதியை மீறுவது கிரிமினல் குற்றமாகி விடாது என்று தீர்ப்பு கூறுவது ஒருபுறமிருக்கட்டும்; 1968-ம் ஆண்டு சேர்க்கப்பட்ட அந்த விதி என்ன கூறுகிறது தெரியுமா? “அசையாச் சொத்து எதையும் அரசிடமிருந்து வாங்குவதையோ விற்பதையோ அமைச்சர்கள் தவிர்க்க வேண்டும்” என்கிறது.
இதனை “விதி” என்று பெயரிட்டு அழைக்கவியலுமா? இது ஒரு நல்லொழுக்க போதனை, அவ்வளவுதான். இந்த விதி ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்டதல்ல; எனவே, இதற்காக அவரை நாம் குற்றம் சாட்ட முடியாது.
நன்னடத்தை விதி மட்டுமல்ல, குற்றப்பிரிவு : 169-ம் மேம்போக்காகவே உள்ளது. எவையெவை அரசுச் சொத்துக்களாகக் கருதப்படும் என்பதை இச்சட்டத்திலேயே தெளிவுபடுத்தியிருக்க முடியும். இது கவனக்குறைவாக நேர்ந்த தவறல்ல; கவனமாகச் செய்யப்பட்டிருக்கும் சூழ்ச்சி. சட்டத்தின் சொற்களையும், வாக்கியங்களையும் அமைக்கும் ஆளும் வர்க்கச் சட்ட வல்லுநர்கள் ஒவ்வொரு சொல்லின் பொருளையும் ஆராய்ந்து தேவையான சொற்களுக்கு அடிக்குறிப்பும் பொருள் விளக்கும் அளிக்கிறார்கள்.
வெள்ளையனால் உருவாக்கப்பட்டு இன்னும் அமலில் இருக்கும் தேசத்துரோகச் சட்டம் (பிரிவு 124-A) முதல், பொடா வரையிலான சட்டங்கள் கூறுவதென்ன? செயலால் மட்டுமல்ல, பேச்சு – எழுத்து – சைகை ஆகிய எந்த வடிவில் இருந்தாலும் ‘தேசத்துரோக – பயங்கரவாதக் குற்றங்களை’ அவை அடையாளம் காட்டுகின்றன. ஜெயலலிதாவின் ‘டெஸ்மா’வோ போராட்டத்தை ஆதரித்துக் கருத்து கூறுவது, தொழிற்சங்க உண்டியலில் காசு போடுவது உள்ளிட்ட அனைத்தையும் குற்றமாக இனம் காண்கிறது. ஆனால், இத்தகைய சட்டங்களை உருவாக்கிய மேதைகளால் அரசாங்கச் சொத்துக்கள் எவையெவை என்பதை மட்டும் தெளிவாக இனம் காட்ட முடியவில்லையாம்! ஒரு வேளை சுண்டெலிகள் தப்பிச் செல்வதற்காக வேண்டுமென்றே விடப்பட்டிருக்கும் சட்டத்தின் ஓட்டையாக அது இருந்திருக்கக் கூடும்! ஆனால், அதையே குடைந்து பெரிதாக்கி, பெருச்சாளி தப்பிவிட்டது. ஓட்டையை ஆராய்ந்த நீதிமன்றம் அதை அடைக்குமாறு உத்தரவிடவில்லை. ‘நன்னடத்தை விதியின் உணர்வு’ என்று அந்த ஓட்டைக்குப் பெயரிட்டிருக்கிறது.
ஜெயலலிதா, ‘விதி’யை மீறவில்லை; விதியின் உணர்வைத்தான் மீறியிருக்கிறார். விதியும், சட்டமும் அறிவுபூர்வமானவை; எனவே அவற்றை மீறுவது தண்டனைக்குரிய குற்றம். உணர்வோ மனம் சார்ந்தது. எனவே ஜெயலலிதாவின் மனச்சாட்சிக்கு வேண்டுகோள் விடுகிறது உச்சநீதிமன்றம். தீர்ப்பின் இரண்டாவது அத்தியாயம் இங்கே தொடங்குகிறது.
***

சட்டப்படி ஜெயலலிதா குற்றவாளியல்ல என்ற போதிலும், அவர் வகிக்கின்ற பதவி கோருகின்ற நடத்தையும், அவரது உண்மையான நடத்தையும் முரண்படுவதை உச்சநீதிமன்றம் சுட்டிக் காட்டுகிறது. “… நிபந்தனையற்ற முறையில் டான்சி சொத்தைத் திருப்பிக் கொடுப்பதன் மூலம் தனது தவறுக்கு அவர் பிராயச்சித்தம் தேட வேண்டும்… அது மட்டுமல்ல, ‘சொந்த ஆதாயத்திற்காக விதிகளை வளைக்கிறார்’ என்ற சந்தேகம் எழும் வகையில் நடந்து கொண்டதும், நன்னடத்தை விதிகளின் உணர்வை மீறியதும் சரிதானா’ என்று ஆழ்ந்து சிந்தித்து அவர் தன்னுடைய மனசாட்சிக்கே பதில் சொல்ல வேண்டும்” என்று உருக்கமாக வேண்டிக் கொள்கிறது நீதிமன்றம்.
சாட்சிகளை மிரட்டிப் பல்டியடிக்க வைத்ததன் மூலம் சொத்துக்குவிப்பு வழக்கை கர்நாடகத்துக்கு மாற்றக் காரணமாயிருந்த மனச்சாட்சியிடம், சிறைத் தண்டனை பெற்றதால் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழந்த போதும் நேரடியாக முதல்வர் நாற்காலியில் அமரத் தயங்காத மனச்சாட்சியிடம், டான்சி ஒப்பந்தத்தில் தான் போட்ட கையெழுத்தையே ‘போர்ஜரி’ என்று கூண்டிலேறிப் பொய்ச் சத்தியம் செய்யத் தயங்காத மனச்சாட்சியிடம் தான் தாம் வேண்டுகோள் விடுக்கிறோம் என்ற உண்மை நீதிமன்றத்துக்குத் தெரியாமலிருக்க வாய்ப்பில்லை. எனினும், இந்த மனச்சாட்சிக்குள்ளே இன்னொரு உண்மையான மனச்சாட்சி ஒளிந்திருக்கக் கூடுமென நீதியரசர் நம்பியிருக்கலாம். சரியாகச் சொன்னால், அத்தகையதொரு நம்பிக்கையை நமக்கு உருவாக்க அவர்கள் முனைந்திருக்கலாம்.
எவ்வாறு இருப்பினும் அந்த முயற்சியை முளையிலேயே கிள்ளி எறிந்தார் ஜெயலலிதாவின் வழக்கறிஞர் வேணுகோபால். “புரட்சித் தலைவி அவர்கள் மேற்படி சொத்தை டான்சி நிறுவனத்துக்கு ஏற்கனவே தானமாக வழங்கி விட்டார்” என்ற உண்மையை நீதிமன்றத்தின் முன் எடுத்துக் கடாசினார். இதன் மூலம் மேற்படி வழக்கின் நிலவரம் குறித்த உச்சநீதிமன்றத்தின் அறியாமையை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது மட்டுமல்ல, “தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்பே புரட்சித் தலைவியின் மனச்சாட்சி முன் தேதியிட்டு அதனை அமல்படுத்தி விட்டது” என்ற உண்மையையும் அவர்களுக்கு உணர்த்தினார்.
***
புரட்சித் தலைவியின் மனச்சாட்சிக்கு உத்தரவுகள் பிறப்பித்துக் கொண்டிருக்கும் அதே தருணத்தில் இத்தீர்ப்பில் துருத்திக் கொண்டிருக்கும் முரண்பாடுகள் நீதிபதிகளின், ‘மனச்சாட்சி’யைக் குத்தத் தொடங்குகின்றன போலும். “சாதாரண அரசு ஊழியர்களுக்கு ஒரு சட்டம், முதலமைச்சருக்கு வேறொரு சட்டமா? நன்னடத்தை விதி என்பது என்ன? அது சும்மா அருங்காட்சியகத்தில் வைத்து வேடிக்கை பார்க்கத் தக்க புராதனக் கலைப்பொருளா? இந்த விசயங்கள் எங்கள் மனச்சாட்சியை கவலைக்குள்ளாக்குகின்றன” என்று அங்கலாய்க்கிறார்கள்.
“அவை கலைப் பொருட்களல்ல, கொலைப் பொருட்கள்” என்று கதறுகிறார்கள் தமிழகத்தின் அரசு ஊழியர்கள். எந்த நன்னடத்தை விதியை “தண்டனைக்குரிய கிரிமினல் குற்றமல்ல” என்று இந்தத் தீர்ப்பு கூறுகிறதோ, அதே விதிகளின்படிதான் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். ஒப்புக் கொண்ட ஊதியத்தைத் தர மறுக்கும் தமிழக அரசின் ‘ஒப்பந்த மீறல்’ (Breach of Contract) உச்சநீதிமன்றத்தால் அன்று கேள்விக்குள்ளாக்கப்படவில்லை. மாறாக, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதன் மூலம் அரசு ஊழியர்கள் நன்னடத்தையிலிருந்து வழுவியதைச் சுட்டிக்காட்டி உச்சநீதிமன்றம் எச்சரித்தது. “வேலை நிறுத்தம் செய்வதற்கான தார்மீக உரிமையோ சட்டபூர்வ உரிமையோ அரசு ஊழியர்களுக்குக் கிடையாது” என்று மிரட்டியது. ஆனால், அரசு நிறுவனத்தின் சொத்தை முதலமைச்சர் விலைக்கு வாங்குவது சட்டப்படி குற்றமல்ல என்றும், அது தார்மீக ரீதியில் தவறு என்பதால் முதல்வர் மனம் வருந்தித் தனது சொந்த மனச்சாட்சிக்குப் பதிலளிக்க வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுகிறது. மனம் வருந்தி மன்னிப்புக் கேட்ட ஊழியர்களையோ நீதிபதிகள் இரக்கமின்றி தண்டிக்கிறார்கள்.
“சாதாரண அரசு ஊழியர்களுக்கு ஒரு சட்டம், முதலமைச்சருக்கு ஒரு சட்டமா” என்ற கேள்வி பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களிடமிருந்து வெடித்துக் கிளம்பும் கேள்வி. அந்தக் கேள்விக்கு விடை சொல்ல வேண்டிய உச்சநீதிமன்றமோ புரட்சித் தலைவியின் பாதாரவிந்தங்களில் மேற்படி கேள்வியை சமர்ப்பிக்கிறது. உச்சநீதிமன்றம், அரசியல் சட்டம், பத்திரிகைகள் போன்ற ‘சர்வ வல்லமை’ பொருந்தி இந்திய ஜனநாயகத்தின் தூண்களையெல்லாம் தன் காலால் மிதித்து அப்பளம்போல நொறுக்கிய புரட்சித் தலைவி, உலகளந்த பெருமாளாய் உயர்ந்து நிற்கிறார்.
ஒரு தத்துவஞானக் குறிப்புடன் தீர்ப்பு முடிவடைவதாகக் கூறுகிறது ‘இந்து’ நாளேடு. அதன் சாரம் பின்வருமாறு : “பொதுவாக கிரிமினல் சட்டம் என்பது கிரிமினல்களைக் கையாள்வதற்கானது; உயர்பதவிகளை வகிப்பவர்களிடமோ நாம் அதியுன்னதமான நாணயத்தை எதிர்பார்க்கிறோம்.”
அவலச்சுவை ததும்பும் இந்தத் தத்துவக் குறிப்பு வெளிப்படுத்தும் உண்மை இதுதான். சூத்திரனுக்குத் தண்டனை; பார்ப்பானுக்குப் போதனை; ஆளப்படும் மக்களுக்கு பாசிசம்; ஆளும் வர்க்கங்களுக்குப் பரிகாரம்; அசுரர்களுக்கு நஞ்சு, தேவர்களுக்கு அமிழ்தம்!
இந்திய ஜனநாயகம் எனும் பாற்கடலை டான்சி வழக்கெனும் மத்தால் எட்டாண்டுகள் இடையறாது கடைந்து, இந்த தேவரகசியத்தை உலகறியச் செய்த ‘புரட்சி’த் தலைவிக்கு நன்றி சொல்வோம்.
இனி, உண்மையானதொரு புரட்சிக்கு ஆக வேண்டிய வேலைகளைக் கவனிப்போம்!
– மருதையன்
________________________________
புதிய கலாச்சாரம், டிசம்பர் 2003
சிறப்புத் தலையங்கம்
________________________________
அரசுப் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கக்கோரி சைக்கிள் பேரணி–விழிப்புணர்வு பிரச்சாரம்
விருத்தாசலம் மக்கள் உரிமை பாதுகாப்பு மையமும், மாணவர்கள் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கமும் இணைந்து, நலிந்து வரும் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், பெற்றோர்களுக்கு அரசுப் பள்ளிகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், விருத்தாசலம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் சைக்கிள் பேரணி நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கம்மாபுரம் வட்டத்தைச் சேர்ந்த பள்ளிகளுக்கு தே.பவழங்குடியிலிருந்து கருவேப்பிலங்குறிச்சி வரை உள்ள கிராமங்களில் 19-05-2015 செவ்வாய் கிழமை அன்று சைக்கிள் பேரணி நடத்தப்பட்டது.
காலை 9.00 மணிக்கு தே.பவழங்குடி திருவள்ளுவர் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் இருந்து பேரணி தொடங்கியது. மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்க மாவட்டத் தலைவர் வெங்கடேசன் தலைமை வகித்தார். மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜு முன்னிலை வகித்தார். முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கலைமதி வாழ்த்துரை வழங்கினார். கம்மாபுரம் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பஞ்சநாதன் பேரணியை கொடியசைத்து துவங்கி வைத்து பேரணியில் கலந்து கொண்டார்.
பேரணி கீரமங்கலம் வழியாக சென்ற பொழுது அப்பகுதி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ம.தமிழ் செல்வி பேரணியை வரவேற்று அனைவருக்கும் மோர் வழங்கினார். அங்கிருந்து புறப்பட்டு காவனூர் கிழக்கு, மேற்கு, அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் லட்சுமி, ரேகா, மோகன்தாஸ் பேரணிக்கு வாழ்த்துரை வழங்கினர். பின்பு, கொடுமனூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, தேவங்குடி அரசு உதவி பெறும் துவக்கப் பள்ளி, மருங்கூர் அரசு உதவி பெறும் துவக்கப் பள்ளி , சி.கீரனூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி , மே.பாலையூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகள் வழியாக சென்ற சைக்கிள் பேரணி மதியம் 2.00 மணி அளவில் வல்லியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை சென்றடைந்தது.

அங்கு அனைவரும் மதிய உணவு சாப்பிட்டு சிறிது நேரம் ஓய்விற்கு பிறகு 3.15-க்கு புறப்பட்டு கார்மாங்குடி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி நேமம் வழியாக மாலை 5.00 மணிக்கு கருவேப்பிலங்குறிச்சி சென்றடைந்து நிறைவு பெற்றது.
பேரணியை மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்க அமைப்பாளர் தே.பவழங்குடி திருவள்ளுவர் நடுநிலைப்பள்ளி சிறுதொண்ட நாயனார் ஏற்பாடு செய்து நடத்தினார். பேரணியில் கலந்து கொண்ட அனைவருக்கும் காலை உணவு, மதிய உணவு அனைத்தும் அவரே ஏற்பாடு செய்து வழங்கினார். அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. பொன்னிவளவன் பேரணி செல்லும் பாதையை திட்டமிட்டதுடன் பேரணியில் ஆர்வத்துடன் பங்கேற்றார். அனைத்து பள்ளிகளிலும் அப்பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள் பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு குளிர்பானம் வழங்கினர்.

அப்பகுதி அரசுப் பள்ளி மாணவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் மாலை பேரணியில் பங்கேற்றனர்.

பேரணியை நடத்துவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பே கம்மாபுரம் பகுதி தொடக்கக் கல்வி அலுவலரை மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்க தலைவர் வை.வெங்கடேசன், சிறுதொண்ட நாயனார் ஆகியோர் நேரில் சந்தித்து விழிப்புணர்வு பேரணியில் அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியின் ஆசிரியர்கள் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டு கொண்டனர். உதவி தொடக்க கல்வி அலுவலர் திருமதி. ராஜேஸ்வரி, “நாங்கள் செய்ய வேண்டிய வேலையை நீங்கள் செய்கிறீர்கள். கண்டிப்பாக அனைவரும் கலந்து கொள்வாம்” என கூறினார். அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் பேரணியை வரவேற்று வாழ்த்துரை வழங்கினர்.

பேரணிக்கு 2 நாட்களுக்கு முன்பே பேரணி செல்லும் பகுதி கிராம மக்களிடம் பேரணி பற்றி விளக்கி கலந்து கொள்ள அழைப்பு விடுத்து, துண்டு பிரசுரங்கள் விநியோகித்து பிரச்சாரம் செய்யப்பட்டது.
பேரணியின் முன்புறம் Tata ace வாகனத்தில் முன்புறம் மற்றும் பக்கவாட்டு இருபுறத்திலும் அரசுப் பள்ளியில் பிள்ளைகள சேர்க்க வலியுறுத்தும் பேனர்கள் வைத்தும் பறை இசை முழங்கிய படி, மைக் செட் அமைத்து கோஷங்கள் எழுப்பி, பேரணி சென்ற பகுதிகளில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்து பிரச்சாரம் செய்யப்பட்டது.

பேரணியில் எழுப்பப்பட்ட அரசுப் பள்ளிக்கு ஆதரவான தனியார் பள்ளிகளுக்கு எதிரான கோஷங்கள் “ஆகா அரசு பள்ளி”, “ஐயோ தனியார்பள்ளி”, “தாலி அறுக்கும் தனியார் பள்ளி”, “அனைத்தும் இலவசமாய் வழங்குது அரசு பள்ளி” அனைத்தும் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன.
6-ம் வகுப்பு மாணவன் ரீத்திஷ் பல தாளங்களில் தப்பு அடித்து சைக்கிளில் வந்த மாணவர்களை உற்சாகப் படுத்தினார். “ஆகா ஓகோ அரசுப்பள்ளி அய்யோ அய்யோ தனியார் பள்ளி” என்பதற்கான தாளம் ராகமாக மாணவர்களிடம் எதிரொலித்தது. கிராமங்கள் தோறும் அரசுப்பள்ளி மாணவர்கள் நமக்காக ஆதரவு பேரணியா என மகிழ்சியோடு பார்த்தனர். கூடவே சில மாணவர்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ”சார் நாங்கள் நல்லாதான் சொல்லி கொடுக்கிறோம். இந்த கிராமத்திற்கு ஆறு தனியார் பள்ளிகளில் இருந்து வெவ்வேறு ஊர் வேன் பஸ் வருது. கவுரத்திற்காக தனியார் பள்ளி என மன நிலை மாறிவிட்டது. பிள்ளைகளை பற்றி பெற்றோர்கள் கவலைப் படாமல் சுமார் 80 கி.மீ. தூரம் சென்று படித்து வர அனுப்புகிறார்கள். பணம் கட்ட முடியாமல் பாதியில் திரும்பி இங்கே மீண்டும் சேர்ப்பது நடக்கிறது. நாங்கள் மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்த முயற்சி எடுக்கிறோம். நாளுக்கு நாள் சேர்க்கை குறைந்து வருகிறது.
ரேசன் கடையில் அரிசி மண்ணெண்ணெய் போட்டா சில மாணவர்கள் அன்றைக்கு வரமாட்டார்கள். வெளியூருக்கு மரம் வெட்ட குடும்பத்தோடு போகும் போது பிள்ளைகளை கூட்டிட்டு போய்விடுவாங்க. நாங்க வருகை பதிவேடை பராமரித்து அடுத்த வகுப்பிற்கு ஏதோ சொல்லி கொடுத்த அனுப்புவோம். சில நேரம் சில மாணவர்கள் வந்த பிறகு பாடம் நடத்தலாம் என காத்திருப்போம். வீட்டில் அப்பா அம்மாவோடு சண்டை, குடித்துவிட்டு ரகளை, அதனால் தலை சீவாமல் வருவார்கள். நாங்கள் இதை கடந்து பாடம் சொல்லி கொடுக்க தயாராக இருக்கிறோம். அரசு பள்ளிக்காக நீங்கள் சைக்கிள் பேரணி நடத்துவது, இவ்வளவு சிரமப்படுவது எங்களுக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கிறது” என எலுமிச்சை பழச்சாறை அனைவருக்கும் வழங்கி சொந்த வீட்டு விசேசம் போல் கவனித்தார்கள்.

நமது பிரசுரத்தையும், கோஷத்தையும் கேட்ட கிராமத்து மக்கள் இதுதான் சரியான முடிவு என ஆதரித்தார்கள். தனியார் பள்ளிகளின் மோகம் அதன் சாயம் வெளுத்து வருகிறது என்பதற்கான ஆதாரம் தான் நமது பிரச்சாரத்தின் இந்த பிரதிபலிப்பு. சைக்கிள் பேரணி நடத்துவது மிகவும் கடினமான ஒன்று. ஆனால் அதற்கு நல்ல பலன் இருக்கிறது.
பேரணியில் மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்தை சேர்ந்த அன்பழகன், ஆடியபாதம் ஆகிய இருவரும் அனைவருக்கும் குளுகோஸ் வழங்கினார். மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாவட்ட செயலாளர் விருத்தாசலம் வழக்கறிஞர் புஷ்பதேவன், மாவட்ட இணைச் செயலாளர் சிதம்பரம் வழக்கறிஞர் செந்தில், பொருளாளர் செந்தாமரைகந்தன், அசோக், செல்வம், செல்வகுமார், வேலுமணி, ஆச்சி குமார், பழனி, அறிவரசன், தெய்வக்கண்ணு, ஆனந்தகுமார் மற்றும் மக்கள் உரிமை பாதுகாப்பு மைய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
பத்திரிகை செய்திகள்
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
(வை.வெங்கடேசன்)
தலைவர்,
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம்,
விருத்தாசலம்

குடிவெறி தேசமாக இந்தியா மாறி வருவதாகச் சொல்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று. ’பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான நிறுவனம்’ (Organization for Economic cooperation and development – OECD) என்ற பன்னாட்டு பொருளாதார வளர்ச்சிக்கான நிறுவனம் நடத்திய உலகளாவிய ஆய்வின் படி, கடந்த 1992 – 2012 இருபதாண்டுகளில் இந்தியர்களின் குடிப்பழக்கம் 55% அதிகரித்துள்ளது.
மேற்படி நிறுவனம், அதன் உறுப்பு நாடுகள் மற்றும் உறுப்பினரல்லாத நாடுகள் என நாற்பது நாடுகளில் இந்த கணக்கெடுப்பை நடத்தியிருக்கிறது. அதிகரித்து வரும் குடிப்பழக்கத்தைப் பொறுத்தவரை, ரசியா மற்றும் எஸ்தோனியா நாடுகளுக்கு அடுத்து இந்தியா மூன்றாவதாக வருகிறது. குறிப்பாக, இளம் வயதிலேயே குடிபோதைக்கு பழக்கமாவது அதிகரித்து வருகிறது.
கடந்த இருபதாண்டுகளில் குடி பற்றிய கலாச்சார மனத்தடைகள் உடைந்து வருவதே குடிப்பழக்கம் அதிகரித்திருப்பதற்கான காரணம் என்கிறார் ஜஸ்லோக் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் ஆபா நாக்ரால். சுரா, சோம பானங்களில் வேத கால மாமுனிகள் நீச்சலடித்த பாரம்பரியம் இந்தியாவுக்கு உண்டு. எனினும் இடைக்காலத்தில் சாதிய படிநிலைக்கேற்ப பழக்க வழக்கங்களை தீர்மானித்த பார்ப்பனியம் சூத்திர-பஞ்சம சாதிகள் கள்ளுண்பதாலும் கீழானவர்கள் – என்று வரையறுத்தது. கூடவே சமண, புத்த மதங்களின் தாக்கத்தாலும் பார்ப்பனியம் இதை ஒரு ஒழுக்கப் பிரச்சினையாக மாற்றியது.
என்றாலும், இந்து பொதுப்புத்தியில் மதுப் பழக்கத்தின் மேல் இருந்த செயற்கையான புறக்கணிப்பை தொண்ணூறுகளின் துவக்கத்தில் புகுத்தப்பட்ட மறுகாலனியாக்க பொருளாதார நடவடிக்கைகள் மாற்றியமைத்தன. வரலாற்று ரீதியாகவே ஆண்டையின் அடியொற்றிச் செல்ல பழக்கப்படுத்தப்பட்ட இந்து பொதுப்புத்தி, உலகமய பொருளாதாரக் கொள்கைகளோடு சேர்ந்து அதற்குப் பொருத்தமான நுகர்வுக் கலாச்சாரத்தை மேற்கத்திய எஜமானர்களிடமிருந்து பெற்றுக் கொண்டது.
இதைத் தெளிவாக புரிந்து கொள்ள மதுவிலக்கு கடுமையாக பின்பற்றப்படும் மாநிலமாகச் சொல்லப்படும் குஜராத்தை எடுத்துக் கொள்வோம். வெளிநாட்டிலிருந்து வரும் வெள்ளைக்கார கனவான்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருப்பது (30 நாட்கள் செல்லக்கூடிய பர்மிட்) ஒரு விசயம். மற்றொரு புறம் குஜராத்தில் ஓடும் கள்ளச்சாராய ஆற்றின் ஆழமும் அகலமும் பிரம்மாண்டமானது. கடந்த மார்ச் 24-ம் தேதி வடக்கு குஜராத்தில் கள்ளச்சாராய பழக்கத்திற்கு எதிராக போராடி வரும் பாபுபாய் ஷங்கர்தாஸ் பட்டேல், குஜராத்தில் மதுவிலக்கு சரியாக பின்பற்றப்படுவதில்லை என்பதை உணர்த்தும் விதமாக, சட்டமன்றத்தின் பார்வையாளர் மாடத்திலிருந்து ஒரு பாக்கெட் சாராயத்தையும், அரசுக்கு எதிரான துண்டறிக்கைகளையும் வீசியிருக்கிறார்.
பெரும்பான்மை இந்திய மாநிலங்கள் கொள்கை ரீதியிலேயே மதுவிலக்கிற்கு எதிரானவை என்பது ஒருபுறமிருக்க, மதுவிலக்கு குஜராத்தின் லட்சணத்தை பாபுபாய் ஷங்கர்தாஸ் அம்பலப்படுத்தியிருக்கிறார்.
இது ஒருபுறமிருக்க, மொத்த இந்தியர்களில் 30 சதவீதம் பேர் குடிப்பவர்களாகவும், அதில் 50 சதவீதமானோர் அபாயகரமான அளவுகளில் குடிக்கிறார்கள் என்றும், சுமார் 4 – 13 சதவீதம் பேர் தினசரி குடிக்கும் குடிகாரர்களாகவும் இருக்கிறார்கள் என்று கடந்தாண்டு உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட இன்னொரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. தனிநபரின் வருடாந்திர மது நுகர்வு, 2003-2005 காலகட்டத்தில் 1.6 லிட்டராக இருந்தது, 2010-2012 காலகட்டத்தில் 2.2 லிட்டராக உயர்ந்திருப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
ஆக, குடிப்போரின் சதவீதம் மட்டும் அதிகரிக்கவில்லை. குடியின் அளவும் மூன்றில் ஒரு பங்கு அதிகரித்திருக்கிறது.
கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்கள், பல்வேறு வகையான புற்று நோய்கள், குடியால் விளையும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் சாலை விபத்துகள் ஒரு பக்கம் என்றால், இப்பழக்கம் பரந்து பட்ட மக்களை சிந்தனை ரீதியில் மொன்னையானவர்களாக்குகிறது. அரசநீதியில், மக்களை மதுப்பழக்கத்தில் ஆழ்த்தி வைத்திருப்பதற்கு உள்ள முக்கியத்துவத்தை சாணக்கியன் தனது அர்த்த சாஸ்திரத்திலேயே தெளிவாக விளக்கியுள்ளான். எந்தச் சரக்கை யார் காய்ச்சுவது, யார் விற்பது, எங்கே விற்பது யாருக்கு எந்த அளவு விற்க வேண்டும், விற்பவனுக்கு என்ன லாபம், அரசுக்கு என்ன வருமானம் என்று தெளிவாக ரூட்டு போட்டுக் கொடுத்துள்ளான் சாணக்கியன்.
தொண்ணூறுகளுக்குப் பின் புகுத்தப்பட்ட மறுகாலனியாக்கக் கொள்கைகள் இருபது வருடங்கள் கழித்து மக்களை அச்சுறுத்தும் பூதமாக மாறிவிட்டன. பொருளாதாரம் சீரழிவுக்குள்ளாக்கப்பட்டதற்கு இணையாக பண்பாட்டுத் தளத்திலும் மக்கள் சீரழிவுப் பாதைக்குள் திட்டமிட்ட ரீதியில் தள்ளப்படுகிறார்கள். அவ்வாறு மக்களைச் சீரழிக்கும் கருவிகளில் முதன்மையானதும் முக்கியமானதுமாக குடிப்பழக்கம் விளங்குகிறது.
தமிழக அரசு நடத்தும் டாஸ்மாக் சாராயக் கடையை எதிர்த்து மக்கள் தன்னெழுச்சியாக போராடினால் அதை ஒரு தீவிரவாத நடவடிக்கையைப் போல் பாவித்து போலீசு ஆயுதங்களோடு வந்திறங்குகிறது. அழிவிடைதாங்கி கிராமத்தில் டாஸ்மாக் சாராயக் கடையை மக்கள் உடைத்த போது அவர்கள் மேல் பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்ததாக வழக்கு பாய்கிறது. மக்கள் சேதப்படுத்திய பொதுச் சொத்தாக அரசு நீதிமன்றத்திடம் காட்டியது எதைத் தெரியுமா? உடைக்கப்பட்ட சாராய பாட்டில்களை!
2012-13 நிதியாண்டில் மட்டும் தமிழக அரசுக்கு சாராயம் விற்ற வகையில் வந்த வருமானம் ரூ 21,680 கோடிகள். இது மாநில அரசின் மொத்த வருவாயில் 20 சதவீதம். ஆனால், மதுப்பழக்கத்தினால் வரும் விளைவுகள் பற்றி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வதற்கு அரசு ஒதுக்கியுள்ள தொகை எவ்வளவு தெரியுமா? வெறும் ஒரு கோடி ரூபாய்! குடிப்பழக்கம் உடல் நலத்திற்கு தீங்கானது என்று டாஸ்மாக் பெயர்ப் பலகைகளிலும், சினிமா காட்சிகளிலும் வரும் வரிகள்தான் அந்த விழிப்புணர்வின் இலட்சணம்.
2013-ம் ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடரின் போது ம.ம.க (த.மு.மு.க) உறுப்பினர் ஜவாஹிருல்லா, “இந்த ஒரு கோடியை வைத்து என்ன விழிப்புணர்வை ஏற்படுத்தப் போகிறீர்கள்” என்று கேட்டதற்கு, ”பள்ளிகளில் கட்டுரைப் போட்டிகள் நடத்தவும் அதற்குப் பரிசுகள் வழங்கவும் இந்த ஒரு கோடி தாராளமாக போதுமானது” என்று அமைச்சர் நத்தம் விசுவநாதன் பதிலளித்துள்ளார்.
ஆக, சாராயம் வித்த காசில் தான் அரசாங்கமே நடக்கிறது. ஒரு காலத்தில் சாராயம் விற்பவனைப் பார்த்தால் ஊரே காறித் துப்பும், பெண்கள் மண்ணை வாரித் தூற்றி அவன் பரம்பரையையே சபிப்பார்கள் – இன்றைக்கு அரசே சாராயம் விற்கிறது!
கல்வி பெறும் உரிமை தனிநபர் உரிமை – சாராயம் பொது உரிமை; சுகாதாரம் தனிநபரின் தலையெழுத்து – சாராயம் விற்பது அரசின் முதல் கடமை; முன்னாள் சாராய வியாபாரி இந்நாள் கல்வி வியாபாரி; கல்வியளிக்கும் கடமையிலிருந்து கைகழுவி கொள்ளும் அரசு மூலைக்கு மூலை டாஸ்மாக்கைத் திறந்து சாராயம் விற்கிறது. சாராயம் என்பது அரசே தலையிட்டு வினியோகிக்கும் பொதுச் சொத்தாகவும், கல்வி, மருத்துவம், சுகாதாரம், வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்துவது உள்ளிட்ட அரசின் கடமைகள் மக்களின் தனிப்பட்ட விசயங்களாகவும் மாறியுள்ள ஒரு வினோதமான காலப்பகுதிக்கு நாம் வந்து சேர்ந்திருக்கிறோம்.
அதிகரித்து வரும் மதுப்பழக்கம் குறித்து செய்யப்படும் ஆய்வுகளையும் அதையொட்டி வரும் புள்ளி விவரங்களையும் வெறும் உடல் நலன் என்ற கோணத்திலிருந்தோ தனிநபரின் பழக்க வழக்கம் என்றோ அரசியலற்ற முறையில் பார்ப்பதை விட, இது ஒரு மொத்த சமூகத்தின் சொரணை உணர்ச்சியை அழித்து ஒட்டுமொத்த மக்களையும் மொன்னைகளாகவும் மழுங்கட்டைகளாகவும் மாற்றுகிறது என்பதற்கு கவலைப்பட வேண்டும். சாதாரண மக்களைப் பொறுத்த வரை குறிப்பாக பெண்களுக்கு குடும்பத்தின் பொருளாதாரம், நிம்மதி, மகிழ்ச்சியைக் குலைக்கும் ஆட்கொல்லி நோயாக குடி மாறிவிட்டது.
இறுதியில் தங்களைத் தாக்கும் பொருளாதார பிரச்சினைகளையும் அதற்குக் காரணமான அரசையும் எதிர்க்க வக்கற்றவர்களாகவும் குடி நமது மக்களை மாற்றுகிறது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். அந்தப் புரிதலின் அடிப்படையில் குடிப்பழக்கத்தையும் அதை ஊக்குவிக்கும் அரசையும் எதிர்க்க வேண்டும். இல்லையேல் பறிக்கப்பட்ட உரிமைகளுக்காக போராடும் சக்தியையும் நாம் பறிகொடுத்து விடுவோம்.
செய்திக்கான மூல சுட்டிகள்:
மேலே உள்ள இணைப்புகளைத் தவிர, 01-05-2015 தேதியிட்ட FRONTLINE பத்திரிகையில் காத்திரமான சில கட்டுரைகள் வந்துள்ளன. அவசியம் படிக்க வேண்டிய அக்கட்டுரைகளுக்கான இணைப்பு கீழே….
(தொடர் கட்டுரை: பகுதி-1)
மறுகாலனியாக்கத்தின் விளைவாக அரசுக் கட்டமைப்பு, அரசாங்கம், அவற்றின் அதிகாரங்கள்,தேர்தல் அரசியல் ஆகியவற்றில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் குறித்தும், அரசியலிலிருந்து மக்கள் மென்மேலும் விலக்கி வைக்கப்பட்டு அரசியலற்றவர்கள் ஆக்கப்படுவது குறித்தும் இந்த நீண்ட கட்டுரை விளக்குகிறது. ஓரளவு அரசியல் தெரிந்தவர்கள், அக்கறை உள்ளவர்கள் இதைப் படித்து புரிந்து கொள்ள முடியும் என நம்புகிறோம். இந்திய ஜனநாயகம் போலி ஜனநாயகமாக மட்டுமல்ல, ஒரு பாசிச அரசாகவும் மாறிவருகிறது என்பதை இந்தக் கட்டுரை தரவுகளோடும், ஆய்வுகளோடும் நிறுவுகிறது.
முதலாளிகளே அரசியல்வாதிகளாகவும், அரசியல்வாதிகளே முதலாளிகளாகவும் மாறும் நிலையில், கார்ப்பரேட் கொள்ளையர்களே அரசு, அரசாங்கம் இரண்டையும் தீர்மானிக்கும் நிலையிலும், இந்தியாவின் விதி ஏகாதிபத்தியங்களால் எழுதப்படும் நிலையில் ஒட்டுமொத்தமாக இன்று நாடு இருக்கும் நிலையில் அதை மாற்றும் கடமையும் நமக்கிருக்கிறது. இதன் பொருட்டு அரசியல் ரீதியில் நாம் செயல்படவேண்டிய கடமையையும் இத்தொடர் கட்டுரை கோருகிறது.
***
பொதுவாக, அரசியலற்ற பொதுமக்கள் மட்டுமல்ல, வர்க்கப் பார்வையற்ற அரசியல் நோக்கர்களேகூட அரசு என்பது அனைத்து மக்களுக்கும் பொதுவானதென்றும் ஜனநாயகபூர்வமானதென்றும் நம்புகிறார்கள். நமது நாட்டில் தனியார்மயம், தாராளமயம், உலகமயம், மறுகாலனியக் கொள்கைகள் புகுத்தப்பட்டதோடு சேர்த்து, அவற்றுக்கேற்ப அரசின் பாத்திரமே மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
அது, உழைக்கும் மக்களை அடக்கி ஒடுக்குவதற்கான ஒரு எந்திரம், ஒரு வன்முறைக் கருவி என்ற அதன் பாத்திரம் மேலும் மேலும் ஆக்டோபஸ் தன்மை கொண்டதாக்கப்பட்டு இறுக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது. சொல்லப்படுகின்ற போலி ஜனநாயகத்தில் வழங்கப்பட்டுள்ள ஒரு சில சிவில், ஜனநாயக உரிமைகள்கூட வெட்டிச் சுருக்கப்படுகின்றன. ஊர்வலங்கள், பேரணிகள், மாநாடுகள், பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், தெருமுனைக் கூட்டங்கள் நடத்தும் இடங்கள், மக்கள் கூடாத ஒதுக்குப்புறமான இடங்களாக வரையறுக்கப்படுகின்றன. பத்து மணிக்கு மேல் கூட்டங்கள் நடத்தப்படக் கூடாது, சுவரொட்டிகள் ஒட்டத் தடை, தொழிற்சங்க உரிமைகள் பறிக்கப்படுவது – என இதற்கு எடுத்துக்காட்டுகள் ஏராளமாக உள்ளன. இதற்கேற்ப சட்டங்களும் கடுமையாக்கப்பட்டுள்ளன. படிப்படியாக ஒரு போலீசு அரசாக, பாசிசத்தன்மை கொண்டதாக அரசு மாற்றப்பட்டு வருகின்றது.
மக்களின் வாழ்வாதாரங்களைப் பிடுங்கி கார்ப்பரேட் முதலாளிகளிடம் ஒப்படைக்கும் தரகனாக அரசு

இரண்டாவதாக, விவசாயிகள், விவசாயம் சார்ந்த துணைத் தொழில் செய்பவர்கள், விசைத்தறி, சிறு பட்டறைகள் உட்பட சிறு தொழில் நடத்துபவர்கள், சிறு வணிகர்கள் ஆகியோரிடமிருந்து அவர்களது உற்பத்தி சாதனங்களையும் வாழ்வாதாரங்களையும் பறித்தெடுத்துக் கொண்டு (பலாத்காரமாகவோ, நிர்ப்பந்தங்கள் மூலமாகவோ, பணத்தைக் கொடுத்தோ) அவர்களைக் கூலி உழைப்பை மட்டும் நம்பி வாழும் ஏதுமற்றோராக நகர்ப்புறங்களைக் நோக்கி வீசியடிக்கும் ஒரு போக்கை அரசு அமல்படுத்தி வருகின்றது.
சட்டிஸ்கர், ஜார்கண்ட் போன்ற மிகவும் பின்தங்கிய மாநிலங்கள் முதல் பஞ்சாப், மகாராட்டிரா, குஜராத், தமிழ்நாடு போன்று வளர்ந்த மாநிலங்கள் வரை, இந்தியா முழுமையும் நடக்கும் இந்த நிகழ்ச்சிப்போக்கின் விளைவாக இந்தியா முழுமைக்கும் மக்கள் வேலைதேடிச் செல்வது அதிகரித்து வருகின்றது. வேலைதேடி வெளி நாடுகளுக்கு செல்வதும் அதிகரித்து வருகின்றது. ஐரோப்பாவில் நடந்த புராதன திரட்சியை ஒத்த இந்த நிகழ்ச்சிப்போக்கின் விளைவாக, பருத்துக் கொழுத்த பன்னாட்டுக் கம்பெனிகளும், தரகு அதிகார வர்க்க முதலாளிகளும், வீடு, வீட்டுமனைத் தொழில் அதிபர்களும் பறித்தெடுத்துக் கொள்கிறார்கள். அவர்கள் மக்களிடமிருந்து உற்பத்திச் சாதனங்கள் மற்றும் வாழ்வாதாரங்களை அப்படியே அள்ளிச் சுருட்டிக் கொள்கிறார்கள். அவர்கள் விவசாயம் மற்றும் எல்லாத் தொழில்களையும் தங்களது ஏகபோக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து கொண்டிருக்கின்றனர். இதற்கான அடியாட்படையாக, ஆலோசகராக, தாதிப்பெண்ணாக, புரோக்கராக, வேலைக்காரனாக, கருவியாக அரசு மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது.
மேலும், இவ்வாறு விவசாயிகள் மற்றும் சிறு தொழிலதிபர்கள், வணிகர்களிடமிருந்து பறிக்கப்பட்ட உற்பத்திச் சாதனங்களைப் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கும், தரகு அதிகார வர்க்க முதலாளிகளுக்கும் வாங்கித் தரும் புரோக்கராக அரசு நிறுவனங்கள் செயல்படுகின்றன. விவசாய நிலங்கள், புறம்போக்கு நிலங்களை வாங்குவதற்கு கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.), வருவாய் ஆய்வாளர் (ஆர்.ஐ), வட்டாட்சியர், நில அளவை ஊழியர்கள், சொத்துப் பத்திரப் பதிவு அலுவலர்கள், ஓட்டுக் கட்சி பிரமுகர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் ஆகியோர் கூட்டணி அமைத்துக் கொண்டு செயல்படுகின்றனர். அரசே இதை ஊக்குவிக்கிறது.

உணவு தானிய உற்பத்தி, பூ, பழம், காய்கறிகள் ஆகியவற்றின் உற்பத்தி, கொள்முதல், வினியோகம், விற்பனை, பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளைத் தயாரித்தல், விற்றல் ஆகிய தொழில்களில் ஈடுபடவும் இவற்றிற்காக கொள்முதல் நிலையங்கள், குளிரூட்டப்பட்ட கிடங்குகள் கட்டிக் கொள்ளவும், முன்பேர வர்த்தகத்தில் ஈடுபடவும் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கும் தரகு அதிகார நிறுவனங்களுக்கும் அரசு தாராள அனுமதி அளித்துள்ளது.
இவர்களின் சேவைக்காக, விவசாயப் பல்கலைக்கழகங்கள், விவசாய ஆராய்ச்சிக்கான இந்திய கவுன்சில் (ICAR), வேளாண் அமைச்சகங்கள், வேளாண் விரிவாக்க அலுவலகங்கள், பல்துறை வல்லுனர் குழுக்கள் ஆகியவை பணிக்கப்பட்டுள்ளன. இவையனைத்தையும் இயக்க பன்னாட்டு மற்றும் தரகு அதிகார வர்க்க முதலாளித்துவக் கம்பெனிகளின் தலைமை நிர்வாகிகள், அரசு அதிகாரிகள், வல்லுனர்கள், அமெரிக்க – பன்னாட்டு வேளாண் உணவுக் கழக நிறுவனத் தலைவர்கள் கொண்ட உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஒவ்வொரு துறையிலும் இந்த முறையில் அரசின் பல்வேறு நிறுவனங்கள், அவர்களின் நோக்கங்கள், திட்டங்கள், பணிகள் ஆகியவை மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
மறுகாலனியாக்க சுரண்டலின் நேரடி அடியாளாக அரசு
மூன்றாவதாக, ஐரோப்பிய புராதனத் திரட்சியை ஒத்ததொரு நிகழ்ச்சிப் போக்கின் விளைவாக, நகர்ப்புறங்களை நோக்கி விசிறியடிக்கப்படும் கோடிக்கணக்கான உழைப்பாளி மக்கள் பெரும் ரிசர்வ் பட்டாளமாகத் திரண்டு நிற்கின்றனர். இதைப் பயன்படுத்தி அவர்களை மிகக் குறைந்த கூலிக்கு (ஒரு கட்டிடத் தொழிலாளியோ அல்லது வேறு ஒரு தொழிலாளியோ தினக்கூலியாக ரூ 200, 300 கூட பெறலாம். ஆனால் அவர்களின் உழைப்பைச் சுரண்டி முதலாளிகள் அடைகின்ற இலாப விகிதத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போதும், கல்வி, மருத்துவம், இருப்பிடம் போன்ற அடிப்படைத் தேவைகளுக்கு உழைப்பாளி மக்கள் செலவிடும் தொகை அதிகரித்துக் கொண்டே போவதோடும் சேர்த்துப் பார்க்கும் போதும்தான் இது மிகக் குறைந்த கூலி என்பது தெளிவாகப் புலப்படும்) அன்றாடக் கூலிகளாகவும் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவும் வேலைக்கமர்த்தி 12 மணி நேரம் 14 மணிநேரம், இரண்டு ஷிப்டுகளை தொடர்ந்தாற்போல் செய்ய வைப்பது, எந்த உரிமையும் இன்றி கொத்தடிமைகள் போல நடத்துவது – என ஒட்டச் சுரண்டிக் கொழுக்கின்றனர், பன்னாட்டுக் கம்பெனி முதலாளிகளும் தரகு அதிகார வர்க்க முதலாளிகளும்.
சாதாரண தொழிலாளர்கள், அரைத் திறனாளி தொழிலாளர்கள் மட்டுமல்ல; தகவல் தொழில்நுட்பம் மற்றும் பிற பொறியியல் துறைகளில் பணியமர்த்தப்படும் பொறியாளர்கள், கணினி வல்லுனர்கள் வரை அனைவரும் இந்த வகையான தற்காலிக ஒப்பந்தப் பணியாளர்களாக கொடுமையான கொத்தடிமைச் சுரண்டலுக்கு ஆட்படுத்தப்பட்டுள்ளனர். தொழிற்சங்கம் அமைப்பது என்ற பேச்செடுத்தாலே வேலையை விட்டு தூக்கியெறியப்படுகின்றனர். வெள்ளைக்காலர் தொழிலாளர்கள், வல்லுனர்கள் என்றழைக்கப்பட்ட இவர்கள்கூட இன்று வெள்ளை அடிமைகளாக ஆக்கப்பட்டுள்ளனர். இதற்கான அடியாளாக அரசு மாற்றப்பட்டிருக்கிறது.
மேலும், மத்திய-மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், பொதுத்துறை நிறுவனங்களின் தொழிலாளர்கள், ஊழியர்கள், அதிகாரிகளின் ஊதியத்தை திட்டமிட்டே சில மடங்குகள் அதிகமாக கொடுப்பது; அதையும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போவது; இதன் மூலம் பன்னாட்டுக் கம்பெனிகள், தரகு அதிகார வர்க்க முதலாளிகள் உற்பத்தி செய்யும் நுகர்பொருட்கள், வழங்கும் சேவைகள் ஆகியவற்றிற்கும் வீடு-மனை கட்டல், வாங்கல், விற்றல் அதிபர்களின் தொழிலுக்கும் தொடர்ந்து கிராக்கியை அதிகரித்து அவர்கள் கொள்ளை இலாபம் அடித்து கொழுக்க வைக்கும் கருவியாக அரசின் செயல்பாடு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இதன் இன்னொரு பக்கம், பல்வேறு நிதி நிறுவனங்கள் தொடங்கவும் அவை தாராள முதலீடு திரட்டவும், அன்னிய முதலீடுகளை அதிகரித்தும், மேலே சொன்ன பிரிவினர்கள் நுகர்பொருட்கள், வீடுகள், மனைகள் வாங்குவதற்கும் கல்வி, மருத்துவத்திற்கும் ஏராளமான கடன்கள் வழங்கவும், அதற்கேற்ப மத்திய ரிசர்வ் வங்கி மூலம் வட்டியைக் குறைத்தும் ஏற்பாடுகள் செய்து தரும் புரோக்கராக அரசு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வட்டியில்லா கடன், குறைந்த வட்டியிலான கடன், சுலபத் தவணைகள் என்றெல்லாம் தனது முகவர்களை இந்த நிதி நிறுவனங்களும் பிறரும் அனுப்பி, இவர்களைப் பேசி மயக்கி கடன்காரர்கள் ஆக்குகிறார்கள். கடன் அட்டை வசதியும் இதற்கான சாதனமாக வினியோகிக்கப்படுகின்றது; தவணை கட்டத் தவறினால் அடியாட்களை விட்டு வசூலிக்கவும் சொல்கிறார்கள்; இவ்வாறு அரசாங்கத்தின் பணத்தை, மொத்த மக்களின் நிதியை நிதி நிறுவனங்கள் சுற்று வழியில் சுருட்ட அரசாங்கமே ஒரு சாதனமாக மாற்றப்பட்டுள்ளது.
கார்ப்பரேட் பகற்கொள்ளைக்கான கருவியாக அரசு

நான்காவதாக, அரசின் கையில் போதிய நிதியில்லை; புதிய முதலீடுகள் செய்ய நிதிப் பற்றாக்குறை உள்ளது என்ற முகாந்திரத்திலும், “பொதுத்துறை நிறுவனங்கள் நட்டத்தில் இயங்குகின்றன; புதிய தொழில் நுட்பங்கள் புகுத்தப்பட்டு தொழில்துறை நவீனமாக்கப்பட வேண்டியுள்ளது” என்ற முகாந்திரத்திலும் கல்வி, மருத்துவம் போன்ற பல சேவைத் துறைகளிலும், பல உற்பத்தி துறைகளிலும் பருத்துக் கொழுத்த பன்னாட்டுக் கம்பெனிகளும் தரகு அதிகார வர்க்க முதலாளிகளும் புகுந்து கொள்ளை இலாபம் ஈட்ட தாராளமாக அனுமதிக்கப்படுகின்றன; பொதுத்துறை நிறுவனங்கள் அடிமாட்டு விலைக்கு அவர்களுக்கு விற்கப்படுகின்றன.
இலாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்கள் பல ஆண்டுகளாக பாடுபட்டு உருவாக்கி வைத்திருக்கும் அடிப்படைக் கட்டுமானங்கள், சாதனங்கள், பிற வசதிகளை தனியார்துறையினர் பயன்படுத்தவும், அந்தப் பொதுத்துறை நிறுவனங்களுக்கே போட்டியாக செயல்படவும், காலப்போக்கில் இந்த பொதுத்துறை நிறுவனங்களை “நட்டத்தில்” இயங்கும் நிறுவனங்களாகவும் தனியார்துறையை விட மட்டமான சேவை வழங்கும் நிறுவனங்களாகவும் (எடுத்துக்காட்டாக பி.எஸ்.என்.எல்) மாற்றுவதையும் அரசே திட்டமிட்டு செய்கிறது. பின்னர், அந்தத் துறையையே கைகழுவுவதையும் செய்கிறது. உயிர்காக்கும் மருந்துகள் தயாரிக்கின்ற, கோடிக்கணக்கான மக்களுக்கு நோய் வராமல் தடுக்கும் தடுப்பூசி மருந்துகள் தயாரிக்கும் நிறுவனங்களையும் தென்கிழக்கு ஆசியாவிலேயே அரசுத்துறையில் சிறந்து விளங்கும் இந்துஸ்தான் போட்டோ பிலிம் போன்ற நிறுவனங்களையும் கூட இந்த முறையில் தனியாருக்குத் தாரைவார்க்கும் தயாளனாக அரசு மாற்றப்பட்டுள்ளது.
தங்களிடம் நிதியில்லை, மூலதனம் இல்லை என்று சொல்லும் அரசே, இன்னொரு பக்கம், கார்ப்பரேட் பெரும் முதலாளிகள் (பருத்து கொழுத்த பன்னாட்டு முதலாளிகள் மற்றும் தரகு அதிகார வர்க்க முதலாளிகள்) தொழில் தொடங்க குறைந்த விலையில் விளைநிலங்களை வாங்கிக் கொடுப்பது, அரசு நிலங்களை அடிமாட்டு விலைக்கு விற்பது அல்லது நீண்டகால வாடகைக்கு விடுவது, மின்சாரம், தண்ணீர் போன்ற சேவைகளைக் குறைந்த விலையில் வழங்குவது, மானியங்கள், வரிச்சலுகைகள் அளிப்பது என்று அரசு நிதியை-நமது பணத்தை வாரிவாரி அவர்களுக்கு வழங்கிக் கொண்டுள்ளது. 2006-ம் ஆண்டிலிருந்து 2011-ம் ஆண்டு வரை இவ்வாறு மத்திய அரசு வழங்கிய வரிச்சலுகைகள் மட்டும் ரூ 22 இலட்சம் கோடிகளுக்கு மேல்! அதாவது, ஒரு நாளைக்கு 240 கோடி ரூபாய்களை தூக்கிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.
இன்னொரு பக்கம் கார்ப்பரேட் முதலாளிகள் வரிஏய்ப்பு செய்வதற்கும், அந்தப் பணத்தை வெளிநாடுகளுக்கு கள்ளத்தனமான வழிகளில் கொண்டு செல்வதற்கும் பல வசதி, வாய்ப்புகளை அரசு செய்து கொடுத்துள்ளது. எடுத்துக்காட்டாக, மொரிசியஸ் நாட்டிலும் இந்தியாவிலும் பதிவு செய்யப்பட்ட கம்பெனிகளுக்கு இரட்டை வரியிலிருந்து சலுகை என்ற பெயரில் பணத்தை வெளியே கொண்டு செல்ல அனுமதிப்பது; ஏற்றுமதி, இறக்குமதி விதிகளில் சலுகை போன்ற வழிமுறைகள் மூலம் அனுமதிப்பது; இவ்வாறு வரிஏய்ப்பு மூலம் கார்ப்பரேட் முதலாளிகள் கருப்புப் பணமாக ஒரு நாளைக்கு 240 கோடி ரூபாய்களை வெளிநாடுகளுக்குக் கடத்தி வருகிறார்கள். இவ்வாறு பல ஆண்டுகளாக எடுத்துச் செல்லப்பட்டு அயல்நாட்டு வங்கிகளில் இரகசிய கணக்குகளில் வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தின் அளவு ரூ 2 இலட்சம் கோடிகளுக்கு மேல்! இது அரசு தரப்பில் ஒப்புக் கொள்ளப்பட்ட விபரம்; உண்மை நிலைமை இதைவிட அதிகமாக இருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை.
அரசு வங்கிகளிடமிருந்து கார்ப்பரேட் முதலாளிகளுக்குக் குறைந்த வட்டியில் கடன் வழங்குவதும், வாங்கிய கடனில் ஒரு பெரும்பகுதியை முதலாளிகள் திட்டமிட்டே கட்டாமலிருப்பதும், வாராக் கடன் என்ற பெயரில் இவற்றை அரசாங்கம் கொள்கை முடிவெடுத்து தள்ளுபடி செய்வதும் நடந்து வருகின்றது. இவ்வாறு பல இலட்சம் கோடி ரூபாய்கள் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அள்ளிக் கொடுக்கப்பட்டு வருகின்றது. இவையெல்லாம் கொள்கை முடிவெடுத்து, பொருத்தமான சட்டத் திருத்தங்கள் செய்து பகிரங்கமாக, முறையான வழிகளிலேயே அரசாங்கம் செய்து கொடுக்கின்றது. அப்படிப்பட்டதாகவே மத்திய-மாநில அரசுகளின் செயல்பாடுகள், இயங்குமுறைகள் மாற்றப்பட்டுள்ளன.
இவை மட்டுமின்றி, நாட்டின் இயற்கை வளங்கள் எல்லாம் மிகக் குறைந்த விலைக்கு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தாரை வார்க்கப்படுகின்றது. இரும்புத்தாது, எண்ணெய் வயல்கள், பாக்சைட், தண்ணீர், மணல், நிலம், காட்டுவளம், கடல்வளம், அலைக்கற்றை – என ஐந்துவகை இயற்கை வளங்களும் மிகக் குறைந்த விலையில் விற்கப்படுகின்றன. மத்திய-மாநில அரசுகள் போட்டி போட்டுக் கொண்டு, கொள்கை முடிவெடுத்து, சட்டமன்றங்கள், நாடாளுமன்றம், அமைச்சரவைகளுக்குத் தெரியாமலேயே இரகசிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு அதனடிப்படையில் வாரிவாரி வழங்கப்படுகின்றன. இவ்வாறு கார்ப்பரேட் முதலாளிகள் நாட்டின் இயற்கை வளங்களைப் பகற்கொள்ளையடிப்பதற்கான கருவியாக அரசு மாற்றப்பட்டுள்ளது.
(தொடரும்)
___________________________
புதிய ஜனநாயகம், மே 2015
___________________________
நாட்டின் பொதுப் போக்குவரத்து முழுவதையும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தாரைவார்க்கும் கார்ப்பரேட் கைக்கூலி மோடி அரசின் சாலை பாதுகாப்பு சட்ட மசோதா 2015.
வாகன ஓட்டுனர்கள் மற்றும் மெக்கானிக், டிங்கர், பெயிண்டிங், டிரைவிங் பள்ளி, ஸ்பேர் பாட்ஸ் கடை ஆகிய சிறு குறு தொழில்கள் அதில் வேலை செய்யும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வை அழிக்கப் போகும் இந்தச் சட்டத்தை அம்பலப்படுத்தி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் இணைப்பு சங்கமான புதிய ஜனநாயக வாகன ஓட்டுனர்கள் மற்றும் டெக்னீசியன்கள் சங்கம் சென்னை முழுவதும் பரவலாக பேருந்து ஓட்டுனர்கள், மெக்கானிக், ஆட்டோ ஓட்டுனர்களிடம் பிரச்சாரம் செய்தனர்.
அன்பார்ந்த உழைக்கும் மக்களே,
வளர்ச்சி என்ற பெயரில் நாட்டையே பன்னாட்டு முதலாளிகளுக்கும், இந்திய தரகு முதலாளிகளுக்கும் கூறுபோட்டு விற்று வருகின்றது, பார்ப்பன பாசிச மோடி அரசு. இருந்தும் பன்னாட்டு முதலாளிகளின் லாபவெறி என்கின்ற அகோர பசி தீர்ந்தபாடில்லை, அதைத் தீர்க்கவும் முடியாது. இந்நிலையில் சாலைப் போக்குவரத்து சட்ட மசோதா 2015-யை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப் போகிறது, மோடி அரசு. பொதுப் போக்குவரத்து முழுவதையும் அரசின் கட்டுப்பாட்டில் இருந்து நீக்கிவிட்டு அதை கார்ப்பரேட் கம்பெனிகளின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதே இந்த சட்டத்தின் நோக்கமாகும்.
அனைத்து வாகன ஓட்டுனர்களையும் ஒழித்துக் கட்டும் சட்டம் !

RTO அலுவலகத்திற்கு மூடுவிழா !
இதுவரை RTO அலுவலகம் மூலம் செயல்படுத்தப்பட்டு வந்த ஓட்டுனர் உரிமம், தகுதி சான்று, பர்மிட் வழங்குதல், வாகனம் பதிவு செய்தல் போன்ற அனைத்து வகையான பணிகளும் இனிமேல் ஸ்டேட் சேப்ட்டி அத்தாரிட்டி, ஸ்டேட் டிரான்ஸ்போர்ட் அத்தாரிட்டி என்ற பல பெயர்களில் கார்ப்பரேட் கம்பெனிகள் மூலம் செயல்படுத்தப்படும். இதற்கான அனைத்து கட்டணங்களையும் பல மடங்கு உயர்த்தி கார்ப்பரேட் கம்பெனிகள் கொள்ளையடிக்கும். இதில் அரசு தலையிட முடியாது.
வாகன உதிரி பாகம் விற்பனை, வெல்டிங், டிங்கரிங், மெக்கானிக் போன்ற சிறு, குறு மற்றும் சுய தொழில்கள் அழியும்!
எந்த ஒரு வாகனத்திற்கும் உதிரிபாகங்கள் வாங்க வேண்டும் என்றால், அந்த வாகனம் எந்த கம்பெனியின் வாகனமோ அதே கம்பெனியின் உதிரி பாகங்களைத்தான் வாங்கி பயன்படுத்த வேண்டும் என புதிய சட்டம் சொல்கிறது.
இதன் விளைவாக அனைத்து வாகனங்களின் உதிரி பாகங்களை மட்டுமே தயாரிப்பதற்கென்றே உள்ள சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மற்றும் அதை விற்பனை செய்யும் கடைகளும் அழியும்.
வாகனம் பழுது நீக்கம் (சர்வீஸ் ஒர்க்) என்பது பல தனித்தனி சிறு, குறு தொழில்களை உள்ளடக்கியதாகும். பெயிண்டிங், வெல்டிங், டிங்கரிங், மெக்கானிக் என சுயமாக தொழில் செய்து இதன் மூலம் பிழைத்து வருபவர் பல லட்சம் பேர்.
பழுதடைந்த பொருட்களை புதுப்பித்தும் பழுது நீக்கியும் பயன்படுத்துதல் என்பது பெரிய அளவில் நடக்கின்றது. புதிய சட்டத்தின்படி வாகனங்களை இனி இங்கு சர்வீஸ் செய்ய முடியாது. மாறாக அந்தந்த வாகன தயாரிப்பு கார்ப்பரேட் நிறுவனங்கள் வைத்திருக்கும் சர்வீஸ் சென்டரில்தான் சர்வீஸ் ஒர்க் செய்ய வேண்டும். அனைவருக்கும் வேலைதர வக்கற்ற அரசு சுயமாக தொழில் செய்து பிழைத்துவரும் லட்சக்கணக்கானவர்களின் வாழ்க்கையில் மண் அள்ளிப் போடப்போகிறது. நாம் என்ன செய்யப் போகிறோம் ?
ஆணையங்களின் வழியாக கார்ப்பரேட்டுகளின் அதிகாரம் !
தற்போது நாடு முழுவதும் ஓடிக் கொண்டிருக்கும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் பர்மிட் காலம் முடிந்தவுடன் மீண்டும் புதுப்பிக்க முடியாது. இப்படி பர்மிட் பறிக்கப்பட்ட வாகனங்களை இரும்பு எடைக்குதான் போட வேண்டும். இனி பர்மிட் வழங்கும் அதிகாரம் அரசிற்கு கிடையாது. நேசனல் டிரான்ஸ்போர்ட் அத்தாரிட்டி (National Transport Authority) என்ற பெயரில் ஒழுங்கு முறை ஆணையம் அமைக்கப்பட்டு, நாட்டின் அனைத்து போக்குவரத்து வழித்தடங்களையும் ஆணையம் தனது கட்டுப்பாட்டில் வைத்து கொண்டு ஏலத்தில் விடும். இதில், பன்னாட்டுக் கம்பெனிகளும் பங்கேற்கும் உள்ளூர் முதலாளிகள் போட்டி போட்டு பன்னாட்டு கம்பெனிகளை ஏலத்தில் வெற்றி கொள்ள முடியாது. ஏலம் எடுக்கும் கம்பெனிகள் பேருந்து கட்டணத்தை தாமே தீர்மானித்துக் கொள்ளும். இலாபம் தரும் வழித்தடங்களில் மட்டும்தான் இந்த பேருந்துகள் இயக்கப்படும். கிராமங்களுக்கான போக்குவரத்து ஒழிக்கப்படும்.
போலி ஜனநாயகத்தையும் ஒழித்துக் கட்டி பாசிசத்தை சட்டமாக்கும் மோடி !
போக்குவரத்தும் அதைச் சார்ந்த தொழில்களும் நாடு முழுவதும் பரந்து விரிந்த வலைப்பின்னலை கொண்டது. அரசுக்கு பல ஆயிரம் கோடிகளை வருவாயாக ஈட்டித் தருவதாகும். இதை கார்ப்பரேட் கம்பெனிகள் கைபற்றி கொள்ளையடிக்கும் அதே நேரத்தில் இதை சார்ந்து பிழைத்து வரும் சிறு, குறு முதலாளிகள் மற்றும் கோடிக் கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படப் போகிறது. எனவே இரண்டு பக்கமும் மாபெரும் அழிவை உருவாக்கப் போகிறது மோடியின் சாலை பாதுகாப்பு சட்ட மசோதா 2015.
தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்துவதன் மூலம் தொழிலாளர்களின் உரிமை பறிக்கப்படப் போகிறது. பொதுத் துறை வங்கி, இன்சூரன்ஸ் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரைவார்ப்பதன் மூலம் மக்களின் பணம் சூறையாடப்படப் போகிறது. உணவுப் பாதுகாப்பு சட்டம் என்ற பெயரில் தெருவோர சிற்றுண்டிக் கடைகள், சிறிய உணவு விடுதிகள் ஒழிக்கப்படப் போகிறது. நிலப்பறிப்பு சட்டத்தின் மூலம் நாடு முழுவதும் விவசாய நிலங்களை அழித்து விவசாயிகளை தற்கொலைக்கு தள்ளப் போகிறது மோடியின் அரசு.
மொத்த நாட்டின் வளங்களையும் மக்களின் வாழ்வாதாரமான விவசாயம், சிறு, குறு தொழில்கள், தொழிலாளர் உரிமைகள், பொதுச் சொத்துக்கள் என அனைத்தையும் பறித்து, பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் டாடா, அதானி, அம்பானி போன்ற தரகு முதலாளிகள் கொள்ளையடிக்க சட்டப்படியே வழிவகுத்து கொடுத்து, பாருங்கள் இதுதான் ‘தேசத்தின் வளர்ச்சி’ என்று கொக்கரிக்கிறது மோடி அரசு.
கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை, ஊழல், வறுமை, வேலையின்மை, வேலை பறிப்பு, சுற்றுச்சூழல் சீர்கேடு, அதிகார முறைகேடுகள் என மொத்த சமுதாயமும் மக்கள் வாழத் தகுதியற்றதாய் மாறிப் போய் நம்மை அச்சுறுத்தி வருகின்றது. இதில் எதையும் தடுப்பதற்கு வக்கற்று போய் நிற்கிறது அரசு. பெயரளவிலான ஜனநாயத்தை ஒழித்துகட்டி பாசிசத்தை சட்டபூர்வமாக்கி வருகிறது, மோடி அரசு.
ஆளத் தகுதியற்றதாய் மாறிப்போன அரசுக்கட்டமைப்பு !
அரசு, தான் உருவாக்கிய சட்டத்தின்படியே ஆட்சி செய்வதற்கு தகுதியற்றதாய் மாறிப்போய் விட்டது. இந்த அரசும் அதன் கட்டுமான உறுப்புகளும் இனி நம்மை பாதுகாக்காது என உணர்ந்து கொண்ட மக்கள் ஆற்று மணல் கொள்ளைக்கு எதிராக, மீத்தேன் திட்டத்திற்கு எதிராக என பல்வேறு போராட்டங்களை நாடு முழுவதும் நடத்தி எதிரிகளை நேருக்கு நேர் களத்தில் சந்தித்து மோதி வருகின்றனர். ஓட்டுப் பொறுக்கிகளையும், அதிகாரிகளையும், நீதிமன்றங்களையும் அவர்கள் நம்பவில்லை. இப்படி களத்தில் நின்று போராடுகின்ற மக்களின் திசைவழியில் அனைவரும் போராட வேண்டும். ஆளும் அருகதையற்ற அரசு கட்டமைப்பை வீழ்த்திவிட்டு மக்கள் அதிகாரத்தை நிறுவ வேண்டும் !
[நோட்டீசைப் பெரிதாகப் படிக்க படங்களின் மீது அழுத்தவும்]
தகவல்
புதிய ஜனநாயக வாகன ஓட்டுனர்கள் மற்றும் டெக்னீசியன்கள் சங்கம்,
இணைப்பு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
காஞ்சிபுரம் மாவட்டம்
”விளம்பரங்கள்…. தொழில்-வர்த்தக உலகத்தின் நரம்பு மண்டலம். மனித உடலின் நரம்பு மண்டலம் எப்படி நமக்கு புற உலகின் பல்வேறு பரிமாணங்களை அறியத்தருகிறதோ அவ்வாறே, சந்தைக்கு வரும் உற்பத்திப் பண்டங்களின் வெவ்வேறு பரிமாணங்களை நுகர்வோருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் விளம்பரங்கள் அறியத் தருகின்றன” – இதுதொழில் மேலாண்மை படிப்பின் (MBA) வகுப்பு ஒன்றில் விரிவுரையாளர் சொல்லக் கேட்டது.

சமகால உலகம் விளம்பரங்களின் உலகமாயிருக்கிறது. இரத்தமும் சதையும் உணர்வுகளும் உணர்ச்சிகளும் கொண்ட மனிதர்களை சமூகங்களை நாடுகளை, முதலாளித்துவம் பொருட்களுக்கான சந்தையாகச் சுருக்கியிருக்கிறது. மனித சமூகம் மொத்தமும் நுகர்வோர்களின் கூட்டுத் தொகையாக முன்னிறுத்தப்படுகிறது.
பொருளாதாரம் மட்டுமின்றி அரசியல், பண்பாடு, கலை, கலாச்சாரம், மதம், ஆன்மீகம் அனைத்தும் விளம்பரங்கள் இன்றி நமது பார்வைக்கு வராது. அந்த வகையில் மோடியும், பாபா ராம்தேவும், ராகுல் காந்தியும், ஃபேர் & லவ்லியும், கல்யாண் ஜுவல்லர்சும், ஹமாம் சோப்பும் சந்தையின் பரிவர்த்தனைப் பொருட்கள் என்ற முறையில் ஒரே நேர்க் கோட்டில் சந்தித்துக் கொள்கிறார்கள்.
ஒபாமாவின் இந்திய வருகையின் போது பத்து லட்ச ரூபாய் மேல் கோட்டில் வலம் வந்த மோடியின் திருவுருவைப் பார்த்து முகம் சுளித்த நண்பர் ஒருவர், “இவனுக்கெல்லாம் கொஞ்சம் கூட கூச்ச நாச்சமே இருக்காதா?” என்று சலித்துக் கொண்டார். இந்தியர்களின் சலிப்பு நேபாளிகளின் வெறுப்பாக சமீபத்தில் தான் வெளிப்பட்டது. நேபாள பூகம்பம் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற இந்திய செய்தியாளர்கள் மோடியின் விளம்பரத் தூதுவர்கள் போல செயல்பட்டதை அந்தக் குட்டி நாட்டின் மொத்த மக்கள் தொகையும் சேர்ந்தாற்போல் காறித் துப்பியது.
நடிகர் பிரபு முன்னெடுத்த ’புரட்சிப் போராட்டமும்’, கல்யாண் ஜுவல்லர்ஸ் தமிழர்களின் மேல் தொடுத்த விளம்பரத் தாக்குதலும், கடந்த பத்தாண்டுகளாக நகைக்கடைகள் செய்து வரும் அதீத விளம்பரங்களும், கடந்த இருபதாண்டுகளில் அதிகரித்துள்ள பல்வேறு வகையான ஒப்பனைப் பொருட்கள் மற்றும் நொறுக்குத் தீனி விளம்பரங்களையும் நாம் அறிவோம்.

அமேசான் வனத்தில் விளைந்த அரியவகை மூலிகையிலிருந்து தயாரிக்கப்பட்ட எர்வாமேட்டினில் தொடங்கி, சென்னைக்கு மிக அருகில் வேலூரில் விற்கப்படும் வீட்டு மனை, டேபிள் மேட், டீ.வி சீரியல் பார்த்துக் கொண்டிருக்கும் போதே சிக்ஸ் பேக் வயிறை உருவாக்கும் அதிசய எந்திரம், முஸ்லி பவர், சிவராஜ் சித்த வைத்தியர், வீடு பெருக்கும் நவீன துடைப்பம், கக்கூஸ் கழுவி விடும் அதிசய எந்திரம், குஜராத் கிர் காட்டின் சிறப்புத் தயாரிப்பான நரேந்திர மோடி வரையிலான விளம்பர நிகழ்ச்சிகள் ஒருவகை என்றால், அச்சு, காட்சி, வானொலி, இணையம் வரையில் சகல ஊடகங்களையும் நிறைத்துக் கொண்டு சரோஜா தேவி பயன்படுத்திய சோப்பு டப்பாவில் இருந்து எம்.ஜி.ஆர் அணிந்த லுங்கி வரையிலான காணக்கிடைக்காத பொருட்களை விற்கும் விளம்பரங்கள் இன்னொரு வகை.
இவை தவிர டெலி காலிங், தனி மின்னஞ்சல்கள், வீட்டுக் கதவைத் தட்டும் ஆம்வே பாணி நச்சரிப்புகள், தெரு முக்கில் நீலக் குடையின் கீழ் நிற்கும் ஹெர்பா லைஃப் பாணி இம்சைகள், அலுவலக வாசல்களில் வினியோகிக்கப்படும் வங்கி லோன் பற்றிய நோட்டீசுகள்… என்று சகல திசைகளிலிருந்தும் வெள்ளமெனப் பாயும் விளம்பர வெள்ளத்தில் மக்கள் மூழ்கித் திணறுகின்றனர். அவசரத்துக்கு ஒன்றுக்குப் போகலாம் என்று ஒதுங்கினால் பேருந்து நிலையங்களின் அழுக்குப் படிந்த கழிவறையினுள் கூட விடாமல் பின் தொடரும் “மலைமேல் சித்தர்” ‘ஆணுறுப்பின் நீளத்தை அதிகரித்துத் தருகிறேன் வா’ என்று கையைப் பிடித்து இழுக்கிறார்.

ஒட்டுமொத்த விளம்பர உலகின் உத்தேசமான வருவாய் 2014-15-ம் ஆண்டில் மட்டும் $66,800 கோடி (சுமார் ரூ 41 லட்சம் கோடி). இது 125 கோடி மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவில் மத்திய அரசின் ஆண்டு செலவுத் தொகையான $20,000 கோடி (சுமார் ரூ 12 லட்சம் கோடி) விட மூன்று மடங்கு அதிகம். இந்த ரூ 41 லட்சம் கோடியில் உள்ளூர் அளவிலான விளம்பரங்கள், அரசியல்வாதிகள் தேர்தல் கமிஷனுக்காக காட்டும் போலிக் கணக்குகளையும் சேர்த்தால் மொத்த விளம்பரத்துக்கான செலவுத் துகை இருமடங்காகவும் இருக்கலாம்.
பொருளாதார உலகமயமாக்கல் நடவடிக்கைகள் வேகமெடுத்த பின் – குறிப்பாக சாட்டிலைட் தொலைக்காட்சிகளின் வரவுக்குப் பின் – விளம்பர உத்திகள் பாரிய அளவுக்கு மாற்றமடைந்தன.
விளம்பரங்கள் பொருட்களை மட்டும் தான் விற்கின்றனவா?
உடன்படித்த பால்யகால நண்பனுக்கு சமீபத்தில் திருமணமானது. நன்கு வறுத்த காப்பிக் கொட்டையின் நிறம் கொண்ட அவனுக்கு மிக நேர்த்தியான முக அமைப்பு உண்டு. களையான, எப்போதும் சிரித்தாற் போன்ற முகம். இருந்தாலும் தனது நிறத்தைக் குறித்த பெரும் தாழ்வு மனப்பான்மை அவனுக்கு உண்டு. தன்னுடைய தலையில் ஆண்டவன் தப்பாக ஏதோ எழுதி விட்டாரென்றும், தனது சந்ததியாவது சிவந்த நிறத்தில் பிறக்காதா என்ற ஏக்கதோடே வெளுத்த தோல் பெண்ணாகத் தேடி வந்தான்.

ஒரு வழியாக வெளுத்த தோலினள் ஒருத்தியை தரகர் மூலம் கேள்விப்பட்டு, நேரில் பார்த்து திருமணமும் நிச்சயமானது. திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தான் வெளுப்பின் காரணம் கனமான மேல்பூச்சு என்ற உண்மை தெரியவந்திருக்கிறது. திருமணத்தை நிறுத்தவும் முடியாத நெருக்கடியில், அந்த ஒரு நாளிலாவது பெண்ணை வெளுப்பாக காட்ட திறமையான மேல்பூச்சு நிபுணரை சென்னையில் இருந்து ஐம்பதாயிரம் ரூபாய் செலவில் இறக்கினான்.
திருமணத்தின் பின் இவனது குத்தல் பேச்சுக்களைத் தாளாமல் தோலின் மெலனின் எண்ணிக்கையைக் குறைக்க அந்தப் பெண் கிலோ கணக்கில் பேர் & லவ்லி பயன்படுத்தியிருக்கிறாள். விடிந்தும் விடியாத வேளையில் சோறு வடித்த சுடு கஞ்சியில் ஆவி பிடிப்பதில் ஆரம்பிக்கும் அவளது ஒரு நாள் பொழுது, முகத்தில் ஈஷிக் கொண்ட கார்னியர் களிம்பைக் கழுவியகற்றும் போது தான் அடையும்.
கடைசியில் முகத்தோலின் மேற்பரப்பு தனது இயல்பான நோயெதிர்ப்புத் திறன் மற்றும் சூழலுக்குத் தாக்குப் பிடிக்கும் திறனை இழந்து முகமெங்கும் திப்பித் திப்பியாய் கொப்புளங்கள் வெடித்து ரணமான நிலையில் அந்தப் பெண்ணை சமீபத்தில் காண நேர்ந்தது. நண்பனின் தீர்மானங்களை மாற்றும் அளவிற்கு நட்பு இறுக்கமானதில்லை என்றாலும், தனியே அழைத்து கடிந்து கொண்ட போது அழுதே விட்டான்.

அவன் தன்னைக் கொஞ்சம் தேற்றிக் கொண்ட பின் பேசினான். வெளிறிய முகமும், மெலிந்த உடலும், ஒட்டிய கன்னங்களும், எலும்பு துருத்திக் கொண்டிருக்கும் தோல்களுமே பெண்ணழகின் இலக்கணங்கள் என்பதாக தொலைக்காட்சி விளம்பரங்கள் விதைத்திருக்கும் கருத்துக்களின் வீரியத்தை அந்த உரையாடல் உணர்த்தியது.
நுகர்வோரைத் தம் பண்டங்களை வாங்கத் தூண்டுவது தான் விளம்பரங்களின் பிரதான நோக்கம். ஆனால், இந்தப் பிரதான நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள அவர்கள் தேர்ந்தெடுக்கும் உத்திகள் ஏற்படுத்தும் பக்க விளைவுகள் பாரதூரமானவை.
சமூகப் பொதுப்புத்தியில் நிலவும் கருத்துக்கள், படிமங்கள் மற்றும் குறியீடுகளைப் பயன்படுத்திக் கொள்ளும் விளம்பர நிறுவனங்கள், பொருட்களை நுகர்வோரின் தலையில் கட்டுவதற்கு முன் அவர்களை ஒரு குறிப்பிட்ட திசையில் சிந்திக்க பயிற்றுவிக்கின்றனர் (entraining the through process). இதற்கென அச்சமூகத்தின் பழக்க வழக்கங்கள், சமூக பொருளாதார வரலாறு, அதன் கலாச்சாரப் பண்பாடுகள் மற்றும் கொண்டாட்டங்களை விரிவாக ஆய்வு செய்கிறார்கள்.
தோலின் நிறம் குறித்து கீழ்த்திசை நாடுகளைச் சேர்ந்த மக்களிடையே நிலவும் கருத்து அழகு சாதனப் பொருட்களை சந்தைப்படுத்தும் விளம்பர நிறுவனங்களின் கச்சாப் பொருள். தமது இயல்புக்கு முரணான வெளுத்த தோலின் மீது இயல்பாக எழும் ஆச்சர்யத்தை பயன்படுத்திக் கொள்வது, அந்த இயல்பைத் தாழ்மையானதாக கட்டமைப்பது, அந்தத் தாழ்மையின் மேல் வெறுப்பு கொள்ளச் செய்வது, பின்னர் அந்த கருத்து நிலையை ஒரு குறியீடாகச் சுருக்கிக் கொள்வது என்கிற தந்திரங்களைக் கையாள்கிறார்கள்.
தொண்ணூறுகளின் துவக்கத்திலிருந்து சுமார் பத்தாண்டுகளுக்கு மேல் வெண்மையாக்கும் களிம்புகளின் விளம்பரங்களில் மிக வெளிப்படையாக கருமையை இழித்துப் பழிக்கும் காட்சிகள் இடம் பெற்றன. தற்போது வரும் விளம்பரங்களிலோ அந்தளவுக்கு கச்சாவாகவும் வெளிப்படையாகவும் கருமையை பழிப்பதில்லை என்றாலும், அவர்கள் ஏற்கனவே கட்டமைத்துள்ள கருத்து நிலையை வலுவான குறியீடாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். அப்போது கருமை என்பது இழுக்கு என்று பாடம் நடத்தியவர்கள் இப்போது வெண்மை என்பது தன்னம்பிக்கை அளிக்கக் கூடியது என்கிறார்கள்.

மோடியின் விளம்பர இயக்கத்தை மேலாண்மை செய்த ஓகில்வி மேதர் இந்தியா (Ogilvy & Mather India) மெக்கேன் உலகக்குழுமம் (McCann World Group), மேடிசன் வேர்ல்ட் ஆகிய நிறுவனங்கள் ஏறக்குறைய இதே உத்தியைத் தான் பின்பற்றினர். உலகப் பொருளாதார நெருக்கடியின் துணை விளைவாக சுருங்கிப் போன இந்திய பொருளாதாரம், ஏகாதிபத்தியங்கள் தமது நெருக்கடியைத் தீர்க்க மூன்றாம் உலக நாடுகளைச் சுரண்டச் செய்த முன்னெடுப்புகள், அதற்கு காங்கிரசு துணையாக நின்று அந்த நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் ஊழல்களாக வெடித்துக் கொண்டிருந்தது – இந்தப் பின்புலத்தில், செயல்படாதவர் என்று மன்மோகன் சிங்குக்குக் கிடைத்த பெயர் மற்றும் குஜராத்தின் செயல்பாட்டாளராக தன்னை மிக கவனமாக பத்தாண்டு காலமாக முன்னிருத்திக் கொண்ட மோடியின் பிரச்சாரங்கள்.
இந்த விதமாக ஏற்கனவே தயாராக இருந்த களத்தில் இறங்கிய இம்மூன்று நிறுவனங்களும், ’செயல்பாட்டுக்கு ஏதுவான தலைவரை’ அதாவது ஒரு மீட்பரை எதிர்பார்த்து நின்ற மக்களின் பொதுப்புத்தியில் மோடியை ஒரு சரக்காக நுழைப்பதில் வெற்றி கண்டனர். இதற்காக, மோடியின் கடந்த காலங்கள் மற்றும் குஜராத்தில் அவரது செயல்பாடுகள் குறித்த உண்மையான தகவல்கள் ஆகியவற்றை மூழ்கடிக்க வேறு தந்திரங்களைக் கையாண்டனர்.
மோடியை மீட்பராகவும், ஆம்பிள்ளைச் சிங்கமாகவும் பதிவு செய்ய அவரைக் குறித்து மிகையான மற்றும் பொய்யான தகவல்களை மீள மீளச் சொல்லி உருவேற்றும் வேலையைச் செய்தனர் (Stereotyping). இது ஒரு எல்லையைக் கடந்த போது முதன் முறையாக வாக்களிக்க காத்திருந்த சுமார் 15 கோடி இளம் வாக்காளர்கள் கிட்டத்தட்ட மூளைச்சலவை செய்யப்பட்ட நிலைக்கு வந்து சேர்ந்திருந்தனர்.

மோடியின் பிம்ப மேலாண்மை நிழல் நிறுவனங்களின் (image management) சார்பில் களமிறக்கப்பட்ட போலி சமூக வலைத்தள கணக்குகள் கணிசமானவை என்றாலும், அதனை உண்மை என்று நம்பியவர்களும் கணிசமானவர்கள் என்பது கவனத்திற்குரியது.
முகத்திலறையும் இந்த தொடர் பிரச்சாரங்களும் விளம்பரங்களும் சந்தையில் நுகர்வோரின் தலையில் திணிக்கப்படும் சரக்கோடு சேர்த்து சில கருத்துக்களையும் ஒருவிதமான சிந்தனை முறையையும் சுமத்துகின்றன.
கருத்தவன் பொய்யன்; வெள்ளையாக இருப்பவன் பொய் சொல்ல மாட்டான்; அட்சய திருதையில் தங்கம் வாங்குவது நல்லது; தமிழ்நாட்டிலேயே நேர்மையானவர் கல்யாண் ஜுவல்லர்ஸ் முதலாளி; இந்தியாவிலேயே யோக்கியர் கிங் பிஷர் மல்லையா; இந்தப் பால் வெளி மண்டலத்திலேயே நல்லவர் நரேத்திர மோடி; இளமையின் ’தவறுகளை’ பஸ் ஸ்டாண்டிற்கு எதிரே உள்ள லாட்ஜில் முகாமிட்டுள்ள சேலம் சித்த வைத்தியர் திருத்திக் கொடுப்பார்; ஹமாம் சோப்பு போட்டு குளித்தால் எய்ட்ஸ் நோய் கூட அண்டாது; பல் டாக்டர்கள் எல்லோரும் கோல்கேட் பயன்படுத்துகிறார்கள்; செண்டு வாசனைக்கு பெண்கள் மயங்குவார்கள்; குளோசப் பசையில் பல் துலக்கினால் பெண்கள் மயங்குவார்கள்; ஸ்மார்ட் போனும், அதில் ஏர்டெல் இணைப்பும் இணையமும் இருந்தால் சோம்பேறியாய் இருந்தாலும் தப்பில்லை; பிங்கோ சிப்ஸ் தின்னுவது இளமையின் அடையாளம்; வளர்ச்சி என்றாலே அது குஜராத்தும் பாரதிய ஜனதாவும் தான்; ஆணுறுப்பின் நீளத்தை மலைமேல் சித்தரால் அதிகரிக்க முடியும்; குடும்ப குத்து விளக்காக இருந்தால் பொம்மீஸ் நைட்டீஸ் தான் அணிய வேண்டும் – விளம்பரங்கள் விதைத்துள்ள அல்லது விதைக்க முற்படும் கருத்துக்களின் பட்டியலுக்கு முடிவே கிடையாது. மேலே உள்ளவை சில வகை மாதிரிகள் தான்.

நுகர்வோரின் சிந்தனையில் கருத்துக்களை விதைக்க, வியாபார நிறுவனங்கள் மீள மீளச் சொல்லி உருவேற்றம் செய்கின்றன (Stereotyping). இதற்காக சில எடுப்பான முழக்கங்களைப் பயன்படுத்திக் கொள்கின்றன – “கறை நல்லது(Arial)” “Neighbors envy, owners pride(onida)” “Just Do it(Nike)” “Connecting people (Nokia)” “My Man (Moods Condom)”, “Ab ki bar Modi sarkar / Achi din (வேற யாரு? அவரே தான்)
நுகர்வோரின் தர்க்கப்பூர்வமான அல்லது பகுத்தறியும் திறனை மூழ்கடிக்கும் விதமாக உணர்ச்சி சார்ந்த அம்சங்களையே விளம்பர நிறுவனங்கள் குறிவைக்கின்றன. அது அதீத தேசிய வெறியாக இருக்கலாம் (Jingoistic Nationalism) அல்லது பெண்ணுடல் குறித்த ஆழ்மன படிமங்களாக இருக்கலாம், அல்லது பெண்ணை உடமையாக கருதிக் கொள்ளும் கலாச்சார பின்னணியாக இருக்கலாம், அல்லது ஆண் திமிராக இருக்கலாம்.
’கடவுளை’ உணர்த்துவதாகச் சொல்லிக் கொள்ளும் ராஜ யோகம் என்பது கூட இப்போது சந்தையில் பரிவர்த்தனைப் பண்டமாக பேக்கேஜ்ஜுகளில் கிடைக்கிறது. ஜக்கி வாசுதேவின் பதினைந்து நாள் பேக்கேஜ் வேதாத்ரியின் குண்டலினி பேக்கேஜை விட விலை அதிகம். ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் பேக்கேஜ் இன்னும் அதிக விலை. இவர்களெல்லாம் பொருளாக எதையும் விற்காமல் வெறும் வாயில் வடை சுடும் கோஷ்டிகள் என்றால், பாபா ராம்தேவ் ஆன்மீக அனுபவத்தை புட்டியில் அடைத்து ரக வாரியாக விற்பனைக்கு வைத்துள்ளார். மாட்டு கோமியத்தின் நாற்றத்தை சகித்துக் கொள்ள வேண்டும் என்பது ஒன்று மட்டுமே *Conditions Apply.
”காசை எடுத்து நீட்டு கழுதை பாடும் பாட்டு.. ஆசை வார்த்தை காட்டு உனக்கும் கூட ஓட்டு” என்று நடிகர் சந்திரபாபு, ஆண்டவன் கட்டளை படத்தில் பாடி 51 ஆண்டுகள் ஆயிற்று – இப்போது நிலைமையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், காசுக்கு கழுதை மட்டுமல்ல – கடவுளே இறங்குகிறார். கடவுளே இறங்கும் போது கல்வி?

கல்வி நிறுவனங்கள் செய்யும் விளம்பரங்கள் இம்மாத செய்தித் தாள்களின் பக்கங்களை அடைத்துக் கொண்டு வருகின்றன; அதில் தங்கள் கல்வி நிறுவனத்தின் சாதனைகளைப் பட்டியலிடும் போது அழுத்தம் தாளாமல் மனச்சிதைவுக்கு ஆளானவர்கள் எத்தனை பேர், தற்கொலை செய்து கொண்டவர்கள் எத்தனை பேர் என்ற விவரங்கள் இடம்பெறுவதில்லை. ஸ்மார்ட் கிளாஸ், முழுவதும் ஏ.சி வசதி செய்யப்பட்ட வகுப்பறைகள், கராத்தே பரத நாட்டியம் நீச்சல் பயிற்சிகள், எட்டாம் வகுப்பிலிருந்தே ஐ.ஐ.டி நுழைவுப் போட்டித் தேர்வுக்கு தனிப் பயிற்சி… ஒவ்வொரு பள்ளியும் கார்ப்பரேட் நிறுவனங்களைப் போல் தாங்கள் வழங்கும் பேக்கேஜ்ஜின் சிறப்பாம்சங்களைப் பட்டியலிட்டு வருகின்றன. காசுக்கேற்ற தோசை.
சமூகத்தில் சகல துறைகளும் அவற்றின் நடவடிக்கைகளும் அவை சந்தைக்கான – காசுக்கான – பரிவர்த்தனைப் பண்டங்களாக்கப்பட்டு விட்டன. இதனையே ஒரு மேம்பட்ட கலாச்சாரம் போல் மக்களிடையே நிலைநாட்டும் முயற்சியை விளம்பரங்கள் செய்து வருகின்றன.

மனிதர்கள் கொண்டிருந்த சமூகம் சார்ந்த தார்மீக கடமைகள் இவற்றின் பாற்பட்ட ஒழுக்கம், கண்ணோட்டம், மதிப்பீடுகள் என்ற மனித சமூக சாரத்தின் கூறுகள் ஒவ்வொன்றாக உருவி எரிந்துள்ள ஏகாதிபத்திய பொருளாதார ஒழுங்கு, மொத்த மனித சமூகத்தையும் வெறும் நுகர்வோராக எந்திரமாக மாற்றியிருக்கிறது.
வங்கிகளைச் சுற்றி அலையும் ஜேப்படித் திருடர்கள், பிஸ்கட்டை மென்று அப்பாவி கோயிந்துகளின் சட்டை மேல் துப்பி விட்டு ”சார், உங்க சட்டையில ஏதோ ஆயி மாதிரி கிடக்கு சார்” என்று சொல்ல, நம் கோயிந்து ”ஙே” என்று திரும்பிப் பார்க்கும் இடைவெளியில் கையில் உள்ள பையைப் பறித்துக் கொண்டு ஓடுவார்கள்.
மோடியிலிருந்து வணிக கார்ப்பரேட்டுகள், கல்விக் கார்ப்பரேட்டுகள், ஆன்மீக கார்ப்பரேட்டுகள் என்று சகலரும் நம் சட்டையில் பின்பக்கமாக பிஸ்கோத்தை சவைத்து துப்பி விட்டு “சார், ஆப் கி பார் அச்சே தின்….” என்று செய்தித் தாளில் முழுப் பக்கத்துக்கு விளம்பரம் கொடுக்கிறார்கள்.
இன்னும் எத்தனை நாட்கள் கோயிந்துகளாக இருக்கப் போகிறோம்?
– தமிழரசன்
ஐ.பி.எல் ‘திருவிழா’வுக்கு போட்டியாக “கேம்பஸ் இன்டர்வியூ அப்பாயிண்ட்மெண்ட வழங்கல் திருவிழா” நடத்திக் கொண்டிருக்கும் பொறியியல் கல்லூரிகளின் உண்மையான நிலை என்ன? அதை வைத்து அந்த கல்லூரியில் சேருவதற்கு இழுக்கப்படும் மாணவர்களின் மன நிலை என்ன? பொறியியல் கல்லூரிகள் குறித்து செய்திகளில், தொலைக்காட்சியில், வானொலியில், இணையத்தில், சமூக வலைத்தளங்களில் விளம்பரங்களாகவும், செய்திகளாகவும் வெளியிடப்படும் தகவல்களை எப்படி சரிபார்ப்பது?

“100% வேலை நிச்சயம்” என்று கொடுக்கப்படும் வாக்குறுதிகளின் நம்பகத்தன்மை என்ன? “கட் ஆப்” 180 வாங்கினால் டியூஷன் பீஸ் இலவசம் என்கிறார்களே இதன் பின்னணி என்ன? ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்று கூவிக் கூவி விற்கும் அளவுக்கு இவர்கள் இறங்கி வந்தது ஏன்? யாரெல்லாம் இவர்களின் பணவேட்டைக்கு இரையாகிறார்கள் என்பதறிய சென்னை பூந்தமல்லி பகுதியில் உள்ள எஸ்.கே.ஆர், ராஜலட்சுமி, லொயோலா, டி.எம்.ஐ, பிரதியுஷா முதலிய பொறியியல் கல்லூரிகளுக்குச் சென்றோம்.
பிரதியுஷா கல்லூரியில் மூன்றாமாண்டு மின்னணு-தகவல் தொழில்நுட்பம் படிக்கும் ஏ. ஜவஹரிடம் பேசிய போது “அப்பா, அம்மாவுக்கு சென்னையில படிக்க வைக்கணும்னு ரொம்ப ஆசை! ஏன்னா தொழிற்துறை அனுபவம் நிறைய கெடைக்கும்; வேல தேடுவதும் ஈசி-ன்னு நெனச்சாங்க! அப்பத்தான் இந்தக் கல்லூரியில படிச்சிட்டுருந்த என்னோட சொந்தக்காரப் பையன் இங்க சேரலாமுன்னு சொன்னான்! அதான்! இங்க வந்து சேர்த்துட்டாங்க !”

“எஸ்.ஆர்.எம் மாதிரி முன்னாள் மாணவர்களுக்கு கமிஷன் கொடுத்து ஆள் பிடிச்சு அட்மிஷன் போடுவது இங்கு உண்டா?”
”இருக்கு சார்! மேனெஜ்மெண்ட் கோட்டால 45% மார்க் வாங்குனவங்களுக்குக் கூட இங்க அட்மிஷன் உண்டு!!
“சரி இப்போ மூன்று வருடங்களுக்குப் பிறகு என்ஜினியரிங் படிப்ப பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க!”
“சார்! நானும் என்னோட நண்பர்களும் ஒரு சபதம் எடுத்துருக்கோம்! எங்களை இங்க கொண்டு வந்தவங்கள போல, எங்களால யாரும் இந்தக் காலேஜுக்கு வந்துறக்கூடாதுங்குறது தான் அது! இன்னும் சொல்லப்போனா யாரையும் என்ஜினியரிங் படிப்பு படிங்க-ன்னு சொல்ல மாட்டேன்! என்னோட தம்பி கூட இப்ப தான் +2 முடிச்சுருக்கான்! என்னடா தம்பி படிக்கப்போறன்னு கேட்டப்ப ‘அண்ணா நான் டிப்ளமோ கூட படிக்கப் போறதில்ல! அதுக்குப்பதிலா ஐ.டி.ஐ படிச்சு அத வச்சு பொழச்சுக்கப் போறேன்’னு சொன்னான்!…எனக்கும் அதுல எந்த பிரச்சினையும் இல்ல! சரிடான்னு சொல்லிட்டேன்” என்று பதிலளித்தார்.
“ஃபர்ஸ்ட் டைம் காலேஜுக்குள்ள நுழைஞ்சப்ப கல்லூரியோட ப்ரண்ட் லுக் அட்ராக்டிவ்வா இருந்துச்சு! ஹாஸ்டல்ல ஃப்ரண்ட்சுங்க கூட இதையே தான் பேசிக்கிட்டு இருந்தாங்க! ஹாஸ்டல் ரூம் மேட்ஸ் ஆந்திரா பையங்களா இருந்ததுனால கொஞ்சம் ஆங்கிலம் பேச கத்துகிட்டேன்! நானா இங்க வந்து ஓரளவுக்கு கத்துகிட்டதுன்னா ஆங்கிலம் மட்டும்தான்!”

அன்று நடக்கவிருந்த “கேம்பஸ் இண்டர்வியூவில் தேர்வான மாணவர்களுக்கு offer letter வழங்கும் நிகழ்ச்சி” பற்றி கேட்ட போது,
“சார்! மொதல்ல அவுங்கள்ள முக்காவாசிப்பேர், கேம்பஸ்-ல செலக்ட ஆனவங்களே கெடையாது! அவுங்கவுங்க சொந்த முயற்சியில் அலஞ்சு திரிஞ்சு off-campus-ல செலக்ட் ஆயிருக்காங்க! இதுக்கும் காலேஜுக்கும் எந்தத் தொடர்பும் இல்ல! அப்பறம் பாத்தீங்கன்னா இந்த புரோகிராமுக்கே நெறையா பேரு வருவாங்களாங்குறதே சந்தேகம் தான்! ஏன்னா! இப்ப கெடச்ச வேலையில யாருக்குமே திருப்தியில்ல! சம்பளமும் கம்மி, வேலயும் Voice Support வேல தான்! அதனால நெறையா சீனியருங்க வர மாட்டேன்னு சொல்லிட்டாங்க!”
“காலேஜ் வெப்சைட்டுல Industry Alliance-ன்னு போட்டு ஒரு 10 கம்பெனிங்க பேற போட்டுருக்காங்களே அந்த கம்பெனி எல்லாம் வேலைக்கு எடுப்பாங்களா?”
“அதுவா! அது ஒன்னும் இல்ல சார்! இப்போ IBM ஒரு இண்டஸ்டிரி அலையன்சுன்னு வெச்சுக்கங்களேன்! வருசா வருசம் IBM-லேர்ந்து டை, சூட்டு எல்லாம் போட்டுகிட்டு ஒரு ரெண்டு மூனு பேரு வந்து, Advance C, C++ -ன்னு மூனு நாளு க்ளாஸ் எடுப்பாங்க! அப்புறம் டெஸ்ட் வச்சு, சர்டிபிகேட் எல்லாம் கொடுப்பாங்க! அவ்ளோ தான்!
இதே போல விவேகானந்தா இன்ஸ்டிடியுட்டிலேருந்து ரெண்டு நாளா ட்ரெயினிங் குடுத்தாங்க! எப்படி கோபத்தை அடக்கிக்கணும், தோல்வி ஏற்பட்டா எப்படி சமாளிக்கணும்னு சொல்லிக் கொடுத்தாங்க! எதுக்குடா இதெல்லாம் சொல்லித்தராங்கன்னு அப்ப ஒண்ணுமே புரியல…இப்ப தான் நெலவரமே புரியுது!”

கல்லூரி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் குறித்துக் கேட்டபோது “அவுங்களுக்கு காசு தான் சார் முக்கியம், ரெண்டு மூனு மாசத்துக்கு ஒருவாட்டி எதையாவது கணக்குக் காட்டி ஆயிரமோ அல்லது இரண்டாயிரமோ புடுங்கிருவாங்க! ஸ்டூடண்ட்ஸ் நல்லா படிக்கிறாங்களா இல்லயா! இதெல்லாம் அவுங்களுக்கு ஒரு பிரச்சினையே இல்ல! Staff-ன்னு பாத்தீங்கன்னா சப்ஜெக்ட நடத்தி முடிச்சோமா, போனாமோ அவ்ளோதான்! லேப் வசதி இருக்கு! ஆனா ஒரு யூசும் இல்ல!
பாத்தீங்கன்னா ஒரு சீனியர் கஷ்டப்பட்டு ஒரு டிஜிட்டல் போர்டு டிசைன் பண்ணுனாரு, ஆனா காலேஜ் அத எப்புடி பாத்துச்சு தெரியுமா? இதனால எதாவது காலேஜுக்கு பேரு கெடைக்குமான்னு பாத்துச்சு, ஒன்னும் இல்லன்னு தெரிஞ்சதும் அப்படியே விட்டுருச்சு! இன்னொரு சீனியரு Borewell Child Rescue Robot-னு ஒன்னு பண்ணாரு, ஒடனே அதை பேப்பர்ல செய்தியா போட்டு விளம்பரம் தேடிக்கிட்டாங்க. இப்படி பண்ணுனா யாருக்கு மோட்டிவேஷன் வரும்?”
“இவ்வளவு பெரிய காலேஜா இருக்கே, விளையாட்டெல்லாம் உண்டா?”
“சார்!, விளையாட்டுக்கும் இந்தக் காலேஜுக்கும் ரொம்ப தூரம்! நான் முதல்ல காலேஜுக்கு வந்த போது பெரிய கிரவுண்ட் இருக்குறத பாத்து கிரிக்கெட்லாம் விளையாடலாம்னு ஜாலியா நெனச்சுட்டு இருந்தேன், ஆனா பாருங்க இங்க இருந்த கிரவுண்டுக்கு நடுவுல ஒரு நடைபாதைய போன வருசம் கட்டி விட்டாங்க! வெளையாட்டுக்குன்னு ஒரு டிபார்ட்மெண்ட் வேற ஒதுக்கிருக்காங்க! ஆனா கிரவுண்டே இல்ல பாருங்க!”
“படித்து முடித்து என்ன வேலைக்குப் போகப் போறீங்க”

“சார்! ஏற்கனவே வேலை பிரச்சினை இருக்குது! நான் டி.என்.பி.எஸ்.சி-க்கு தயாரிக்க ஆரம்பிச்சுட்டேன்! Core-ல வேலைக்குப் போனாலும் 8,000 ரூபாய் தான். ஐ.டி-ல வேலைக்குப் போனாலும் அதே காசு தான்! இத வச்சு கட்டுன பணத்த எடுக்க முடியுமா? இல்ல மிச்சம் தான் பண்ண முடியுமா? ஐ.டி-ல ஒரு பிரச்சினை இருக்கு சார்! வேணுங்குறப்ப பயன்படுத்திக்குவான்! அப்புறம் டெக்னாலஜி மாறிருச்சுன்னா வெரட்டி விட்ருவான்! அதனால ஐ.டி கம்பெனி வேலைக்குப் போகவே மாட்டேன்…..
இத வுட இன்னொரு விசயம் சொல்லுறேன் கேளுங்க! ரெண்டு வருசத்துக்கு முன்னாடி எங்க சொந்தக்கார பையன் வேற ஒரு காலேஜுல மின்னணு-தகவல் தொழில் நுட்பம் முடிச்சிட்டு இன்ஃபோசிஸ் கேம்பஸ்-ல செலக்ட் ஆனாரு… அவுங்க வீட்டுல எல்லாருக்கும் பையனுக்கு வேல கெடச்சுருச்சுன்னு ரொம்ப சந்தோசம்!
சென்னையில தான் வேலன்னு சொல்லி ஆஃபர் லெட்டர் கொடுத்தாங்க! ஆனா வேலைக்கு சேந்தவுடனே மைசூருல ட்ரெயினிங்-னு அனுப்பி வெச்சுட்டாங்க! ஸ்டார் ஹோட்டல் மாதிரி தங்குற வசதியெல்லாம் இருந்துச்சுன்னு ஒரே ஜாலியா இருந்திருக்காப்புல! மொத்தமா 200, 300 பேரு எல்லா ஸ்டேட்லேர்ந்தும் செலக்ட் ஆனவங்க எல்லாரும் இருந்தாங்களாம்! அப்பறந்தான் எமகண்டம் ஆரம்பிச்சிருக்கு! ஆப்டிடியூட், ஜி.டி, காம் ஸ்கில் (அதான்! கம்யூனிகேசன் ஸ்கில்) இண்டர்பெர்சனல் ஸ்கில்-னு ஒரு மாசமா டெஸ்டா வெச்சுத் தள்ளி கடைசில 50, 60 பேர அன்குவாலிஃபைடு-ன்னு சொல்லி வேலய விட்டே போகச் சொல்லிட்டாங்க!, ரொம்ப மனசு ஒடஞ்சு போயி இந்த வருசம் தான் ஒரு சின்ன கம்பெனில செட்டில் ஆயிருக்காரு! அப்பவே முடிவு பண்ணிட்டேன், இவிங்க சங்காத்தமே வேணாமுன்னு!”
“உங்க பெற்றோருடைய எதிர்பார்ப்பெல்லாம் எப்படிப்பா இருக்குது”

“அவுங்க பாவம் சார்! எப்படியாவது யாரப் புடிச்சாவது வேலை ஒன்னு வாங்கித்தரணும்னு நினைக்கிறாங்க! அதுக்கு மேல அவுங்களுக்கு ஒன்னும் தெரியாது…அவ்ளோ தான்”
அதே கல்லூரியில் சிவில் இறுதியாண்டு படிக்கும் ஜெயன் பேசுகையில்.. ”சிவில் என்ஜினிரியங் முடிச்சா இங்கெல்லாம் இப்போ 7,000 ரூபாதான் தர்ராங்க! அப்ராடு போனாத்தான் சம்பாதிக்க முடியும். அதுக்கும் எக்ஸ்ட்ரா கோர்ஸ் படிக்கனும். ஏற்கனவே நெறயா என்ஜினியரிங் படிச்சவங்க இருக்கதால ஃபயர் சேஃப்ட்டி கோர்ஸ் படிச்சிட்டு வந்தா தான் வேலை தேடமுடியும்னு அங்கு போன சொந்தக்காரங்க சொல்றாங்க! அதுக்கு ஒரு வருட செலவு 1லட்சம் ஆகும்.” என்றார், வெள்ளேந்தியாக….
மெக்கானிக்கல் இன்ஜினியரிங், இறுதியாண்டு படிக்கும் தீபன் சக்கரவர்த்தி கூறுகையில்….”எங்க காலேஜ் பி கிரேடு., இந்த வருசம் எங்க பேட்சுலேருந்து 3 பேர்கூட 30,000 சம்பளத்தில கேம்பஸ்ல செலக்ட் ஆவல! போன வருசம், ஆண்டுக்கு 6 லட்சம் சம்பளம்னு வந்த கேம்பஸ் இண்டர்வியூல யாருமே செலக்ட் ஆவல. 30 மார்க்குக்கு வெறும் 7 பேர், 13 மார்க்தான் எடுத்தாங்க! கேட்டா, ஆட்டீடியுடு, பெர்ஃபாமன்ஸ், ஃபோக்கஸ் எதிர்ப்பார்த்த அளவு இல்லன்னு சொல்லிட்டாங்க!”
ராஜலட்சுமி கல்லூரியில் தேர்வு நடந்து கொண்டிருந்ததால் அரியர் எழுத வந்த இறுதியாண்டு படிக்கும் மாணவர்களைச் சந்தித்தபோது கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கும் பிரகாஷ் ”இன்ஜினிரிங் படிச்சா இப்ப ஸ்கோப் இல்ல! பி.காம், சிஏ, சீசன்! இது படிச்சா இப்ப வேலை ஈசியா கிடைக்கும்னு சொல்றாங்க, எங்க அம்மா, படிப்ப முடிடா, முடிடானு சொல்றாங்க! படிப்ப முடிச்சாக்கூட வேலையில்லைனு அவங்களுக்கு தெரியுமா?” என்று வேதனையுடன் சிரித்தார்.
“எனக்கு தெரிஞ்சவங்க யாராவது பி. இ. படிக்கனும்னு சொன்னாங்கன்னா, அவங்க கைகால்ல விழுந்து சேராதீங்கனு சொல்வேன்!” என்றார்
லொயோலா என்ஜினியரிங் கல்லூரியில் மூன்றாமாண்டு ECE படிக்கும் சோழன் திருவண்ணாமலையைச் சேர்ந்தவர். பெற்றோர் விவசாயிகள். முதல் தலைமுறை பட்டம் வாங்குபவராக இருப்பதால் ஆண்டுக் கட்டணத்திலிருந்து 20,000 வரை கழித்துக் கொள்வார்கள். முதல் வருடம் ஹாஸ்டலில் தங்கியுள்ளார், ஆனால் கட்டணம் 54,000 ரூபாயாக இருந்ததால் இரண்டாமாண்டிலிருந்து வெளியில் தங்கி விட்டதாகவும் கூறினார்.
கல்லூரி அனுபவம் குறித்துக் கூறுகையில் “ இன்ஜினியரிங் படிக்கப் போறோம், அதனால நல்லாப் படிக்கனும்னு நெனச்சுத்தான் வந்தேன்! ஆனா இங்க அதுக்கான வாய்ப்புக்கள் எதுவும் இல்ல! லேப்-ல குறைந்தபட்ச அடிப்படை வசதி கூட இல்ல! மேடம்கிட்ட நானும் நெறைய கேள்வி கேட்பேன், ஆனா மேடம் அப்புறம் சொல்லுரேன்னு ஒதுங்கிக்குவாங்க! தியரி படிக்கிறதுன்னா நாங்க ஏன் இவ்ளோ பணம் கட்டனும்? அத வீட்டுலேயே ஒக்காந்து படிச்சுக்கலாம்ல!”
“80% பாடம் ப்ராக்டிக்கல்ஸ்-ல தான் இருக்கு! இங்க தான் அப்படின்னா! எல்லா காலேஜுலேயும் இப்புடித்தான்! 20% தியரி படிக்கிறதுக்கா நாங்க இத்தன தூரம் வந்திருக்கோம்??…எங்க அப்பா அம்மாவுக்கு இதெல்லாம் நான் எப்படி புரிய வெக்க முடியும்….! ஆமா நீங்க எதுக்கு இதெல்லாம் கேக்குறீங்க??” என்றார்.
எதிர்காலம் குறித்துக் கேட்டபோது, “சீனியர்களுக்கே வேலை கிடைக்க மாட்டேங்குது, அதனால அவுங்ககிட்ட உதவியும் கேட்கமுடியாது. கோர்-ல எங்கயும் வேலையே இல்ல! ஐ.டி-ல போகலாம்னா வெறும் B.P.O. வேலையாத் தான் வருது, இப்படித் தெரிஞ்சிருந்தா +2 முடிச்சவுடனே அந்த வேலைக்காவது போயிருக்கலாம். அப்பா அம்மாவுக்கு காசாவது மிச்சமாயிருக்கும்.” என்றார்.
இரண்டாமாண்டு மெக்கானிக்கல் படிக்கும் சில மாணவர்களைப் பார்த்த போது, கெஸ்டர் என்பவர் “அங்கிள் நாங்க ப்ரொஃபஷெனல் கோர்ஸ் அப்படின்னு நெனச்சு தான் என்ஜினியரிங் ஜாயின் பண்ணுனோம்! ஆனா நாங்க சூஸ் பண்ண காலேஜ் வேஸ்ட்! இன்ப்ராஸ்டரக்சரும் கெடையாது! பாதி எக்ஸ்பெரிமெண்ட்ஸ் வேலையே செய்யாது! போதுமான ஸ்டாபும் இல்ல! ஒரு டேர்ம்-க்கு 2 லெக்சரர்ஸ் வரணும், அதுல நடுவுல ஒருத்தர் வரவேயில்ல! இன்னொருத்தர் கடைசி வாரம் தான் வந்தாரு! இன்னக்கி அந்த பேப்பரோட அரியர் தான் எழுதிட்டு வர்றோம்! கேம்பஸ்-க்கு வர்றவன் அரியர் இல்லாதவங்க மட்டும் தான் வேணும்னு கண்டிசன் போடுறான்! கடைசியில நாங்க ஒழுங்கா படிக்காம அரியர் வச்சதுமாதிரி பழி என்னமோ எங்க மேல தான் விழுது!”
எஸ்.கே.ஆர் பொறியியல் கல்லூரியில் “அட்மிசனா சார்!” என்ற கேட்டபடியே வாட்ச்மேன் வரவேற்க உள்ளே நுழைந்தோம். அலுவலகத்தில் ஒரு பெண்மணி ”சார்! எந்த பிரான்ச் வேணும்” என்றவுடன் “EEE வேண்டும்” என்றோம்.

உடனை ஒரு படிவத்தைக் கொடுத்து நிரப்பச் சொல்லி அந்தத் துறை டீனிடம் கூட்டிச் சென்றார்.
“குட்மார்னிங் சார்! நான் தான் இந்தத் துறையின் டீன், எங்க டிபார்ட்மெண்டுல 100% ஜாப் அஷ்யூரன்ஸ் இருக்கு சார்! டொனேசன் வாங்க மாட்டோம், பாருங்க இன்னக்கி தினத்தந்தில கூட நியூஸ் வந்திருக்கு! எங்க எம்.டி-க்கு நல்ல ஸ்டூடண்ட்ஸ் வேணும் அவ்ளோ தான் சார்! ஏழப்புள்ளங்கன்னா இன்னும் சலுகையெல்லாம் கொடுப்பாரு! பாத்தீங்கன்னா, விசு அரட்டை அரங்கத்துல நல்லா பேசுன ஏழைப் பெண்ணுக்கு எங்க காலேஜிலேயே இலவசமா சீட்டு கொடுத்தாரு
எங்க சிலபஸ் பாத்தீங்கன்னா பெஸ்ட் ஸ்டாண்டர்டா இருக்கும், மனப்பாடம் பண்ணி அப்படியே எழுத முடியாது! எல்லா புக்ஸும் ஃபாரீன் ஆதர்ஸ் தான்! எங்க இன்ஸ்டிடியூசனுக்கு ஃபாரீன்லேர்ந்து நெறையா அப்ரிசியேசன் வந்துருக்கு சார்! நீங்க இங்க தாராளமா படிக்க வைக்கலாம்! ஆமா….கட் ஆஃப் எவ்ளோ சார் இருக்குது?”
177 என்று சொன்னதும் உடனே ஒரு பேப்பர எடுத்து ஒர்க் அவுட் செய்து, “சார் டியூசன் பீஸ் இங்க 45 ஆயிரம் தான்! அப்பறம் பையன் ஃபர்ஸ்ட் ஜெனரேசனா?” என்று கேட்டு விட்டு, “அப்படீன்னா ஒரு 20,000 ஆயிரம் கவர்மெண்ட் ஸ்காலர்ஷிப் உண்டு, அப்பறம் நல்ல கட் ஆஃப் இருக்கதுனால இன்னொரு 20,000 டிஸ்கவுண்ட் தர்ரோம், ஃபைனலா 5,000 கட்டினா போதும், மத்த ஃபீசெல்லாம் ஸ்டாண்டர்டா உள்ளது தான்” என்று டீல் பேசி முடித்தார். என்னது ஐயாயிரத்தில் ஒரு பொறியியல் படிப்பா என்று ஆச்சரியம் மேலிட்டால், நாம் அவர்கள் விரித்த வலையில் விழுந்து விட்டோம் என்று பொருள்.
கல்வி வியாபாரமாகி, வியாபாரிகள் லாபம் குவித்துக் கொண்டிருக்க இலட்சக்கணக்கான மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தை தொலைத்துக் கொண்டு நிற்கின்றனர். அவர்களது குடும்பங்கள், தங்களது கொஞ்ச நஞ்ச சொத்துக்களையும் விற்று, அல்லது வங்கிக் கடன் வாங்கி இந்த தனியார் கல்வி முதலாளிகளின் பைகளை நிரப்புகின்றனர்.

“தனியார் வந்தால்தான், எஃபிசியன்ட், செலவு குறையும், தரம் உயரும்” என்று சொன்ன தனியார்மய தாசர்களும், தனியார் கல்வி முதலைகளுக்கு படையல் போட்ட அரசுகளும் இப்போது தமது பொறுப்பை கைகழுவி விட்டு சந்தை, திறன் மேம்படுத்தல், சுய நம்பிக்கை என்று பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றனர்.
இறுதியில் இந்த பொறியியல் கல்லூரிகளால் யாருக்கு லாபம்? நடுத்தர வர்க்கமும், ஏன் சாதாரண மக்களும் கூட தமது ஆயுட்கால சேமிப்பு அல்லது குடும்ப சொத்தை விற்று தீர்க்கிறார்கள். இவர்களிடமிருந்து இப்படிக் கொள்ளையிடுவதற்கென்றே இந்த சுயநிதிக் கல்லூரிகள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. மற்றொரு புறம் இந்த மாற்றம் ஏற்படுத்தும் சமூக ரீதியான பாதிப்புகள் தனி. இருப்பினும் ஊடகங்களும், அரசும் இந்தக் கொள்ளையை வருடந்தோறும் ஆராதித்தே வருகின்றன.
நாங்கள் திரும்பும் போது இந்த பிரச்சாரத்தை நம்பி கிராமத்திலிருந்து பையனை அழைத்துக் கொண்டு எதிர்கால கனவுகளுடன் வினோத மர்மக் கோட்டைக்குள் நுழையும் முக பாவனையுடன் பெற்றோர்கள் நுழைந்து கொண்டிருந்தனர். ஓரிரு வருடங்களில் அந்த மாணவர்கள் இந்த மர்மக் கோட்டையை புரிந்து கொள்வார்கள். ஆயினும் அதை சில இலட்சங்கள் செலவழித்துத்தான் அறிய வேண்டுமா?
– வினவு செய்தியாளர்கள்
திருப்பதி சேஷாச்சலம் வனப்பகுதியில் மலைவாழ் மக்கள் இருபது பேரை மிகவும் கொடூரமான முறையில் படுகொலை செய்திருக்கிறது ஆந்திர போலீசு. அவர்களைப் பேருந்தில் வைத்துக் கைது செய்து, தோலைத் தீயால் சுட்டுக் கருக்கி, உறுப்புகளைச் சிதைத்து, மிகவும் வக்கிரமான முறைகளிலெல்லாம் சித்திரவதை செய்து, பின்னர்தான் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள் என்பதும் மறைக்கவியலாத வண்ணம் நிரூபணமாகியிருக்கின்றது.

கொல்லப்பட்டவர்களது உறுப்புகள் சிதைக்கப்பட்டிருப்பதாகட்டும், அவர்களது உடலில் உள்ள குண்டுக்காயங்களாகட்டும், உடல்களுக்கு அருகில் மிகவும் அலட்சியமாக வீசப்பட்டிருக்கும் (ஏற்கெனவே கைப்பற்றப்பட்ட) செம்மரக் கட்டைகளாகட்டும், இந்தப் போலி மோதல் கொலை குறித்து ஆந்திர போலீசு அளித்த கட்டுக்கதையாகட்டும்; அனைத்திலும் வெளிப்பட்ட செய்தி ஒன்றுதான் – “அப்படித்தான் செய்வோம், எங்களை யார் என்ன புடுங்க முடியும்” என்று எல்லா சட்டபூர்வ நிறுவனங்களுக்கும், சமூகத்துக்கும் போலீசு விடுத்திருக்கும் சவால்தான் அந்தச் செய்தி.
ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளை விஞ்சும் ஆந்திரப் போலீசின் இந்த நடவடிக்கைக்கு எதிரான கண்டனங்கள், நீதி விசாரணை மற்றும் சி.பி.ஐ. விசாரணைக்கான கோரிக்கைகள் நீதிமன்றப் பரிசீலனையில் இருக்கின்ற அதே வேளையில், “இப்படி ஒரு படுகொலையை நடத்தி பாடம் கற்பித்தாலன்றி, செம்மரக் கடத்தலைத் தடுக்கவியலாது” என்று கூறி இந்த வெறியாட்டத்தை நியாயப்படுத்துகிறது ஆந்திர அரசு.
இன்னொருபுறம், எந்தக் குற்றத்தைத் தடுப்பதற்காக என்று கூறிக்கொண்டு இந்தப் படுகொலையை ஆந்திர அரசு நியாயப்படுத்தி வருகிறதோ, அந்தக் குற்றத்தை, அதாவது செம்மரக் கடத்தலை, சட்டபூர்வமாகவே அனுமதிக்க வேண்டும் என்றும், “செம்மரக் கடத்தலுக்கு எதிரான தடையை நீக்கிவிட வேண்டும் என்றும், செம்மரம் வெட்டுதல், விற்பனை, ஏற்றுமதி ஆகியவற்றை சட்டபூர்வமாக அனுமதிப்பதன் மூலம் மட்டும்தான் இந்தக் கடத்தலை தடுக்க முடியும் “என்றும் ஆந்திர வனத்துறை அமைச்சர் போஜ்ஜல கோபாலகிருஷ்ண ரெட்டி கூறியிருக்கிறார். (டைம்ஸ் ஆப் இந்தியா, 11.4.2015)

“செம்மர விற்பனையையும், ஏற்றுமதியையும் அனுமதிக்க வேண்டும்” என்று கூறுவதுடன் அவர் நிறுத்திக் கொள்ளவில்லை. “அருகி வரும் தாவர இனம் என்ற பட்டியலிலிருந்தே செம்மரத்தை நீக்கி விட வேண்டும்” என்றும் கோரியிருக்கிறார். சேஷாசலம் படுகொலை நடந்த மூன்றே நாட்களில் வருகிறது ஆந்திர அமைச்சரின் இந்த அறிக்கை.
இதுதான் செம்மரக் கடத்தல் குறித்த ஆந்திர அரசின் நிலை என்றால், 20 உயிர்களை ஏன் கொடூரமாகப் பறிக்க வேண்டும்? இந்தப் படுகொலையும் அமைச்சரின் அறிக்கையும் முரண்பட்டவை போலத் தோன்றுகின்றன. ஆனால், இந்த இரண்டுக்குமிடையே முரண்பாடு இல்லை என்பதே உண்மை.
செம்மரங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற அக்கறை இந்திய அரசுக்கோ, ஆந்திர அரசுக்கோ கடுகளவும் இல்லை. எப்போதும் இருந்ததுமில்லை. அருகி வரும் தாவர இனங்கள் மற்றும் விலங்கினங்களின் சர்வதேச வர்த்தகம் தொடர்பான ஒப்பந்தந்தத்தில் (The Convention on International Trade in Endangered Species of wild fauna and flora (CITES சைட்ஸ்) இந்தியா உள்ளிட்ட 179 நாடுகள் கையொப்பமிட்டிருக்கின்றன. மேற்கூறிய ஒப்பந்தத்தால் தடை செய்யப்பட்டுள்ள தாவர வகைகளில் செம்மரமும் ஒன்று.
எனவே தவிர்க்கவியலாமல் 1998 முதல் இந்தியா செம்மரக் கட்டைகளின் ஏற்றுமதியைத் தடை செய்திருக்கிறது. இதன்படி அரசுக்கு சொந்தமான காடுகள், தனியாருக்கு சொந்தமான நிலங்கள் ஆகிய எங்கிருந்தும் செம்மரங்களை வெட்டி ஏற்றுமதி செய்வது குற்றமாகும்.
இந்திய கைவினைப் பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் பொருட்டு செம்மரத்தினால் செய்யப்பட்ட கைவினைப் பொருட்களின் உள்நாட்டு விற்பனை மற்றும் ஏற்றுமதியை மட்டும் மைய அரசு அனுமதித்திருக்கின்றது.
இது சட்டப்படி உள்ள நிலை. ஆனால் நடைமுறையோ வேறு. செம்மரக் கடத்தல் ஒருபுறம் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. மறுபுறம், கைவினைப் பொருட்கள் என்று இந்திய அரசால் முறைகேடாக சான்றிதழ் அளிக்கப்பட்டு, செம்மரக் கட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுவதாக “சைட்ஸ்” சந்தேகித்தது. மேலும், அவ்வாறு கைவினைப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுவதாக இருந்தாலும் கூட, மேற்படி தாவர இனம் அருகி வரும் இனம் என்பதால், அது முற்றிலுமாக அழிந்து படாமல் புதிதாக வளர்ப்பதற்கு என்ன முயற்சி மேற்கொள்ளப்பட்டது (Non – Detriment Finding (NDF) என்பது குறித்து சோதிப்பதற்கும் இந்திய அரசு தவறிவிட்ட காரணத்தினால், ஜூன் 2010 முதல் இந்தியாவிலிருந்து செம்மரப் பொருள் ஏற்றுமதியை முற்றிலுமாகத் தடை செய்தது “சைட்ஸ்.”
தடை விதிக்கப்பட்ட கணம் முதல் இந்த தடையை அகற்றுவதற்குத் தீவிரமாக முயன்ற மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, கடத்தல்காரர்களிடமிருந்து கைப்பற்றி வைக்கப்பட்டிருக்கும் 11,806 டன் செம்மரக் கட்டைகளை ஏற்றுமதி செய்ய “சைட்ஸ்” சிடம் அனுமதி பெற்றுத் தந்தது. இதன் அடிப்படையில் பறிமுதல் செய்து வைத்திருக்கும் 8584 டன் செம்மரக் கட்டைகளை ஏற்றுமதி செவதற்கு ஆந்திர அரசு அனுமதிக்கப்பட்டது.
சென்ற ஆண்டில் மட்டும் சர்வதேச ஏலத்தில் செம்மரங்களை விற்று ஆந்திர அரசு ஈட்டிய தொகை சுமார் ரூ 1000 கோடி. இந்த ஆண்டு 3500 டன் செம்மரக்கட்டைகளை ஆந்திர அரசு சர்வதேச ஏலத்தில் விற்பனை செய்ய இருக்கிறது. இவையன்றி ஆந்திர அரசிடமிருந்து பாபா ராம்தேவ் சுமார் ரூ 207 கோடி மதிப்புள்ள செம்மரக் கட்டைகளை ஏலமெடுத்திருக்கிறார். இதுவரை பணம் கொடுக்கவில்லை. அவற்றை சர்வதேசச் சந்தையில் அதிக விலைக்கு விற்று லாபம் பார்ப்பதுதான் ராம்தேவின் நோக்கம் என்ற சந்தேகத்தையும் ஆந்திர அதிகாரிகள் வெளியிட்டிருக்கின்றனர்.
சீனா மட்டும் ஆண்டுக்கு 3000 டன் செம்மரத்தை கொள்முதல் செய்கிறது. ஜப்பான், கொரியா போன்ற மற்ற நாடுகளின் கணக்கு தனி. அதி உயர்தர செம்மரத்தின் விலை டன்னுக்கு ரூ 1.5 கோடி, உயர்தரம் ரூ 55 லட்சம், சாதாரணத் தரம் ரூ 35 லட்சம் என்று கூறப்படுகிறது.
வனத்துறை ஆவணங்களின் படி 2002 முதல் செம்மரக் கடத்தலுக்காக 12,300 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. 18,703 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 12,863 டன் கட்டைகள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. ஒரு கட்டை கைப்பற்றப்பட்டதாகக் கணக்கு காட்டப்பட்டால், கணக்கில் வராமல் ஒதுக்கப்படுபவை குறைந்தது பத்து கட்டைகளாக இருக்கும் என்பது இத்துறை சார்ந்த அதிகாரிகள் கூறும் தகவல்.

கடத்தப்படும் கட்டைகளை மடக்கிப் பிடிப்பவர்கள் ஆந்திர அரசின் வனத்துறை மற்றும் போலீசு மட்டுமல்ல. தமிழக-கர்நாடக போலீசு, மத்திய வருவா உளவுத்துறை, சுங்கத்துறை, துறைமுகம் உள்ளிட்ட எல்லா மிருகங்களுக்கும் இந்த வேட்டையில் ‘பங்கு’ உண்டு. இவர்களெல்லாம் தாங்கள் கைப்பற்றும் கட்டைகளை, ஆந்திர அரசிடம் ஒப்படைக்காமல், தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்துக் கொள்கின்றனர்.
****
செம்மரக் கடத்தல் மூலம் மஃபியாக்கள், அரசியல்வாதிகள், அதிகார வர்க்கத்தினர் கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டுகிறார்கள் என்பது தெரிந்த செய்தி. ஆந்திர அரசும் தனது நிதி வருவாய்க்கு செம்மர விற்பனையை நம்பியிருக்கிறது என்பது நாம் கவனிக்கத் தவறும் செய்தி.
ஆந்திர விவசாயிகளுக்குக் கடன் தள்ளுபடி அறிவித்திருக்கும் சந்திரபாபு நாயுடு, “கடத்தல்காரர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டிருக்கும் செம்மரத்தை சர்வதேசச் சந்தையில் ஏலம் விட்டு, கிடைக்கும் பணத்தில்தான் விவசாயிகளுக்குக் கடன் தள்ளுபடி தர இயலும்” என்று வெளிப்படையாகவே பேசியிருக்கிறார்.
அதாவது, ஆந்திர அரசுக்கு வருவா வேண்டுமென்றால் செம்மரம் விற்க வேண்டும். தற்போதுள்ள தடையின் காரணமாக அரசு வெளிப்படையாக செம்மரம் வெட்டி விற்க முடியாது. கடத்தல்காரர்கள் சட்டவிரோதமாக செம்மரம் வெட்டினால், அதனைக் கைப்பற்றி விற்றுத்தான் பணமாக்க முடியும். அப்படித்தான் சென்ற ஆண்டு சுமார் ரூ 1000 கோடி ஈட்டப்பட்டிருக்கிறது. கடத்தல் நடந்தால்தானே அரசு கைப்பற்ற முடியும், விற்றுக் காசாக்க முடியும்? எனவே செம்மரக் கடத்தலில் ஆந்திர அரசு மறைமுகக் கூட்டாளியல்ல, நேரடிக் கூட்டாளி என்பதே உண்மை.
ஆந்திர அரசு எந்த அளவுக்கு செம்மரம் விற்ற காசைச் சார்ந்து இருக்கிறதோ, அந்த அளவுக்கு கடத்தலைத் தடுக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருப்பது போலவும் நடிக்கிறது. இது கஞ்சா வியாபாரியிடம் மாமூலும் வாங்கிக் கொண்டு, கேசு போட்டு உள்ளேயும் தள்ளும் போலீசின் நடத்தையைப் போன்றது.
இது, இவ்விசயத்தின் ஒரு பரிமாணம் மட்டுமே. இதன் இன்னொரு பரிமாணம்தான் மையமானது. இந்திய ஆளும் வர்க்கங்கள் அமல்படுத்திவரும் மறுகாலனியாக்க கொள்கை, இயற்கை வளங்களையும் கனிம வளங்களையும் பொதுச்சொத்துகளையும் தனியார்மயமாக்குவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது. இதே கொள்கை காரணமாக, முதலாளி வர்க்கத்துக்கு அடுக்கடுக்காக வரிச்சலுகைகள் வழங்கப்படுவதால், மத்திய-மாநில அரசுகளின் வருவாய் குறைந்து கொண்டே வருகிறது.
சந்திரபாபு நாயுடு சொல்வது போல, விவசாயிகளுக்குக் கடன் தள்ளுபடி தருவதற்கு மட்டுமல்ல; அரசு ஊழியர்களுக்கு மாதாந்திர சம்பளம் தருவதற்கே இயலாத திவால் நிலையை பல மாநில அரசுகளும் எய்தி விட்டன. இந்த திவால் நிலையைக் காட்டித்தான் நிலக்கரி, இரும்புக் கனிம வயல்கள் முதல் பொதுத்துறை நிறுவனங்கள் வரையிலான அனைத்தையும் அடிமாட்டு விலைக்கு பன்னாட்டு நிறுவனங்களுக்கு விலைபேசுவதை நியாயப்படுத்துகின்றன மத்திய-மாநில அரசுகள். ஆற்றுமணல் கொள்ளை முதல் டாஸ்மாக் வரையிலான எல்லா அநியாயங்களும் இந்த “நியாயத்தின்” மீதுதான் நிற்கின்றன.
20 பேரின் படுகொலையை நியாயப்படுத்திப் பேசிய அமைச்சரின் அதே நாக்கு அருகிவரும் தாவரம் என்ற பட்டியலிலிருந்தே செம்மரத்தை நீக்குமாறு வெட்கமே இல்லாமல் பேசுகிறதே, இதன் பொருள் என்ன? செம்மரத்தை வெட்டிக் காசு பார்ப்பதில் கடத்தல்காரர்களை விடவும், சந்திரபாபு நாயுடு தீவிரமாக இருக்கிறார் என்பதே இதன் பொருள்.
“அரசுக்கான வருவாய் ஆதாரம்” என்ற பெயரில் இயற்கைவளக் கொள்ளைகள் அனைத்தையும் நியாயப்படுத்திக் கொண்டே, மறுபுறம் அரசுக்குச் சேர வேண்டிய வருவாயை கார்ப்பரேட் முதலாளிகளும் மஃபியாக்களும் அதிகார வர்க்கமும் ஆளும் கட்சிகளும் கூட்டு சேர்ந்து கொள்ளையிடுகின்றனர். அம்பானி விழுங்கியுள்ள கோதாவரி எண்ணெய் வயலில் தொடங்கி, கிரானைட், தாதுமணல், ஆற்றுமணல் கொள்ளை வரை இதுதான் நடக்கிறது. செம்மரக் கடத்தலில் நடப்பதும் இதுதான்.
ஆந்திர மாநிலத்தில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டிருக்கும் ரெட்டி மற்றும் கம்மா நாயுடு சாதிகளைச் சேர்ந்த மஃபியாக் கும்பல்கள், ஒய்.எஸ்.ஆர். காங்கிரசு, காங்கிரசு, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளில் அவர்கள் பெற்றிருக்கும் செல்வாக்கு, அவர்களுக்கிடையிலான கோஷ்டி மோதலின் வரலாறு, காங்கிரசு முதல்வர் ராஜசேகர் ரெட்டியின் ஆட்சிக்காலத்தில் செம்மரக் கடத்தல் மஃபியாவின் தலைவனான ராமச்சந்திர ரெட்டியே வனத்துறை அமைச்சராக இருந்து செம்மரம் கடத்தியது என்பன போன்ற விவரங்களை வாசகர்கள், “வினவு தளம்” வெளியிட்டுள்ள கட்டுரையில் காணலாம்.
தற்போது மொரிசியஸில் கைது செய்யப்பட்டிருக்கும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசை சேர்ந்த கங்கி ரெட்டி, மஸ்தான் வலி, தெலுகு தேசம் கட்சியைச் சேர்ந்த புல்லட் சுரேஷ், செம்மரக் கடத்தல் முன்னாள் எம்.பி. சவுந்திரராஜன் என்று தெற்கு ஆந்திரா, வடக்கு தமிழகம் மற்றும் கர்நாடகத்தைச் சேர்ந்த பல ஓட்டுக் கட்சி கிரிமினல்களும், சங்கரராமன் கொலை வழக்கின் முக்கியக் குற்றவாளியான அப்பு போன்ற தொழில்முறைக் கிரிமினல்களும் செம்மரக் கடத்தல் வலைப்பின்னலில் அங்கம் வகிக்கின்றனர்.
பொதுவாக, அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி பொதுச்சொத்தைக் கொள்ளையிடுவதில் ஓட்டுக் கட்சிகளிடையே வேறுபாடில்லை. அதேநேரத்தில், என்னென்ன முறைகளில், எந்தெந்தத் துறைகளில், எந்த அளவுக்குக் கொள்ளையடிப்பது என்பது போன்ற விவகாரங்களில் ஓட்டுக் கட்சிகளுக்கிடையே சில வேறுபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. இந்த வேறுபாட்டின் அடிப்படையில்தான் “ஊழலற்ற நல்லாட்சி” என்று கட்சிகள் தங்களை முன்நிறுத்திக் கொள்கின்றன.
“ஏ.டி.எம். திருடர்கள், கள்ள நோட்டுப் பேர்வழிகள், செம்மரக் கடத்தல்காரர்கள் போன்ற கிரிமினல்கள்தான் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசு கட்சி முழுவதும் நிரம்பியிருக்கிறார்கள். சந்தர்ப்பம் கிடைத்தால் இவர்கள் லார்டு வெங்கடாசலபதியையே திருடி விடுவார்கள்” என்று சமீபத்தில் பேசியிருந்தார் சந்திரபாபு நாயுடு.
அது மிகையல்ல. ஒய்.எஸ்.ஆர் காங்கிரசு என்பது அ.தி.மு.க. வுடன் ஒப்பிடத்தக்க ஒரு மஃபியாக் கும்பல்தான். செம்மரக் கடத்தலில் முக்கியப் பங்கு வகிப்போரும் அக்கட்சியினர்தான். எனவே சேஷாசலம் தாக்குதல் மூலம், ராமச்சந்திர ரெட்டி உள்ளிட்ட செம்மரக் கடத்தல் பிரமுகர்களைத் தன்னிடம் சரணடைய வைப்பதும் அக்கட்சியைப் பலவீனப்படுத்துவதும் நாயுடுவின் திட்டமாக இருக்கக்கூடும்.
ஆனால், இந்தப் படுகொலையின் பின்புலத்தில் உள்ள அரசியலாக நாம் கவனிக்க வேண்டிய முதன்மையான விசயம் இதுவல்ல. “செம்மரம் கடத்தும் ஏகபோக உரிமை அரசுக்கு மட்டுமே உரியது” என்பதுதான் இந்தப் படுகொலை மூலம் நாயுடு அரசு கூறும் செய்தி.
நாயுடு அரசு கோரியுள்ளவாறு, செம்மரத்தை வெட்டுவதன் மீதான தடை நீக்கப்படுமானால், அதனை ஆந்திர அரசு சட்டபூர்வமாகவே வெட்டி விற்பனை செய்யும். நீக்கப்படவில்லையானால், கடத்தல்காரர்கள் மூலம் மரத்தை வெட்ட அரசே ஏற்பாடு செய்யும். பின்னர், அதில் ஒரு பகுதியைக் கைப்பற்றி ஏலம் விட்டுக் காசாக்கிக் கொள்ளும். அதேநேரத்தில், கடத்தலைத் தடுத்து செம்மரங்களைக் காப்பாற்றுவதில் அரசு முனைப்பாக இருப்பதாகக் காட்டும் பொருட்டு, அவ்வப்போது ஏழைகள் சிலரை ஆந்திர போலீசு சுட்டுக் கொல்லும்; சிறை பிடிக்கும்.
மலைவாழ் மக்களைப் பொருத்தவரை, வளர்ச்சி என்ற பெயரில் அரசு காடுகளை அழித்தாலும் சரி, வனப்பாதுகாப்பு – வனவிலங்குப் பாதுகாப்பு என்ற பெயரில் காடுகளைக் காப்பாற்ற முனைந்தாலும் சரி, அதன் நோக்கம் மலைவாழ் மக்களை வெளியேற்றுவதாகவே இருக்கிறது. இந்தக் கத்தி இரண்டு பக்கமும் மலைவாழ் மக்களை வெட்டுகிறது.
மலைவாழ் மக்களைப் பொருத்தவரை, காடுகளைத் தங்களது வாழ்வின் ஆதாரமாகவும், வாழ்க்கையிலிருந்து பிரிக்கவொண்ணாத அங்கமுமாகவே அவர்கள் கருதி வந்திருக்கிறார்கள். செம்மரம் முதல் சந்தன மரம் வரை அனைத்திலும் பணம் காத்துத் தொங்குவதைப் பார்த்த முதலாளித்துவம்தான் அவற்றை வெட்டிக் காசாக்குகிறது.
இவ்வாறு ஏற்கெனவே அழிக்கப்பட்ட சவ்வாது மலைக் காடுகளின் மைந்தர்கள்தான், இன்று செம்மரம் வெட்டுவதற்குக் கூலிக்காரர்களாக அமர்த்தப்பட்டவர்கள். நாளை செம்மர ஏற்றுமதியின் மீதான தடையை நீக்குவதில் சந்திரபாபு நாயுடு ஒருவேளை வெற்றி பெறலாம். அப்போதும் திறமை வாய்ந்த மரம் வெட்டிகளைத் தேடி தரகர்கள் சவ்வாது மலைக் கிராமங்களுக்கு வருவார்கள்.
மலைவாழ் மக்களை இந்த விஷவலையில் சிக்காமல் தடுக்க வேண்டுமானால், சவ்வாது மலையின் மீது தங்களுடைய அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்வதற்கு அவர்களை நாம் பயிற்றுவிக்க வேண்டும்.
– சூரியன்
__________________________
புதிய ஜனநாயகம், மே 2015
__________________________
காவிரி நதிநீர் தீர்ப்பாயத்தின் முடிவைத் தொடர்ந்து செயல்படுத்த மறுத்துவரும் கர்நாடக அரசு, இப்போது காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு மற்றும் இராசிமணல் ஆகிய இடங்களில் புதிதாக அணைகள் கட்டத் தீர்மானித்துள்ளது. இவ்விரு அணைகளும் கட்டப்பட்டுவிட்டால், மேட்டூருக்கு ஒரு சொட்டுத் தண்ணீர்கூட கிடைக்காமல், விவசாயம் அழிந்து தமிழகம் பாலைவனமாக மாறிப்போகும் அபாயம் ஏற்படும்.

கடந்த நவம்பர் 2014-ல் கர்நாடக நீர்வளத் துறை அமைச்சரான எம்.பி.பாட்டீல், “பெங்களூரு மக்களின் குடிநீர்த் தேவைக்காகவும், பெங்களூரு புறநகர மக்களின் மின்சாரத்திற்காகவும், கரும்பு விவசாயத்தை விரிவுபடுத்துவதற்காகவும் தமிழக எல்லையிலிருந்து ஏறத்தாழ 3 கி.மீ. தொலைவிலுள்ள மேக்கேதாட்டு (ஆடு தாண்டும் காவேரி) என்ற இடத்திலும், மைசூரின் சுற்று வட்டாரப் பகுதியிலும் அணைகள் கட்ட” இருப்பதாக அறிவித்தார். “மேக்கேதாட்டு அணையானது, கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நிகரான கொள்ளளவைக் கொண்டதாக இருக்கும்” என்றும், “சுமார் 2,500 ஏக்கர் வனப்பகுதியில் அமைக்கப்படவுள்ள இந்த அணையானது சமநிலை நீர்த்தேக்கமாக இருக்கும்” என்றும் அவர் அறிவித்துள்ளார். இது தவிர, இராசிமணல் பகுதியிலும் கர்நாடக அரசு ஒரு அணை கட்டத் திட்டமிட்டு களப்பணிகளையும் தொடங்கியுள்ளது. காவிரியின் குறுக்கே புதிய அணைகள் கட்டுவதற்காக கர்நாடக அரசு உலக அளவில் ஒப்பந்தப் புள்ளிகளைக் கேட்டு அவற்றில் மூன்று நிறுவனங்களைத் தெரிவு செய்துள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன.
ஏற்கெனவே கிருஷ்ணராஜசாகர் அணை நிரம்பி அதிலிருந்து வழியும் நீரும், கிருஷ்ணராஜசாகரிலிருந்து மேக்கேதாட்டு வரையிலான சுமார் 110 கி.மீ. தொலைவுக்கு காவிரிக்கரையில் பெய்யும் மழைநீரும்தான் மேட்டூர் அணைக்குக் கிடைத்து வருகிறது. மேக்கேதாட்டு மற்றும் இராசிமணல் பகுதிகளில் அணைகள் கட்டுவதன் மூலம் இதுவரை கிடைத்துவந்த காவிரிநீரையும்கூட இனி கர்நாடகம் தடுத்து வைத்துக் கொள்ளும். இதனால் தஞ்சை டெல்டா மாவட்டங்களின் வாழ்வாதாரத்துக்கு அடிப்படையாக உள்ள காவிரி நீரானது இனி கானல் நீராக மாறிவிடும்.

மேக்கே தாட்டு பகுதியில் காவிரியின் குறுக்கே அணை கட்டும் திட்டத்துக்கு ஒப்புதல் கேட்டு கர்நாடக அரசு 2011-லிருந்து மைய அரசிடம் தொடர்ந்து மனு செய்து வந்துள்ளது. இக்காலகட்டங்களில் கர்நாடகத்தில் பா.ஜ.க. ஆட்சியும், மத்தியில் காங்கிரசு கூட்டணி ஆட்சியும் அதிகாரத்தில் இருந்துள்ளன. இப்போது கர்நாடகத்தில் காங்கிரசு ஆட்சியும் மத்தியில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சியும் அதிகாரத்தில் உள்ளன. காங்கிரசு, பா.ஜ.க. ஆகிய இரு “தேசிய” கட்சிகளுமே இத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் தீவிரமாக இருப்பதையே இவை காட்டுகின்றன. போதாக்குறைக்கு, “எங்கள் மாநிலத்தில் அணைகட்ட தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவிப்பது எந்தவகையிலும் நியாயமானதல்ல” என்கிறார், கர்நாடகத்தின் முக்கிய கட்சிகளில் ஒன்றான மதச்சார்பற்ற ஜனதாதளக் கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவேகவுடா.
கர்நாடக ஆட்சியாளர்கள் மேக்கேதாட்டு அணையின் மூலம் பெங்களூருவின் குடிநீர் தட்டுப்பாட்டைத் தீர்க்கப் போவதாகவும், விவசாயிகளின் நலனுக்காக கரும்பு விவசாயத்தை விரிவாக்கப் போவதாகவும் கூறுவது கடைந்தெடுத்த மோசடியாகும்.

உலக வங்கி – உலக வர்த்தகக் கழகத்தின் கட்டளைப்படி, தண்ணீரை வர்த்தகப் பொருளாக்கி அதற்கு விலை நிர்ணயிக்க வேண்டுமென்பதுதான் மைய அரசின் கொள்கை. தேசிய நீர்க்கொள்கையும் இதைத்தான் வலியுறுத்துகிறது. இதன்படி, உலகமயமாக்கம் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டதிலிருந்து பெங்களூரு நகரை குளோபல் சிட்டியாக்குவது என்ற முடிவின்படி எஜ்ஜிபுரா, எல்.ஆர்.நகர், அம்பேத்கர் நகர், சாஸ்திரி நகர் போன்ற பகுதிகளிலிருந்து இலட்சக்கணக்கான ஏழைகள் கட்டாயமாக வெளியேற்றப்பட்டதோடு, பெங்களூரின் குடிநீரைத் தனியாருக்குத் தாரைவார்ப்பதும் வேகமாக நடந்தேறி வருகிறது. 2002-ல் பெங்களூரு ஏரிகள் வளர்ச்சி ஆணையம் தொடங்கப்பட்டு ஹெப்பல ஏரியானது ஓபரா குழுமத்தின் ஈஸ்ட் இண்டியா ஓட்டலுக்குக் குத்தகைக்கு விடப்பட்டது.
பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களின் பிடியில் உள்ள பெங்களூருவின் குடிநீர் விநியோகத்தின் காரணமாக காவிரியின் துணை ஆறான ஆர்க்காவதியிலிருந்தும், ஏரிகள்-குளங்களிலிருந்தும் வரைமுறையின்றி நீர் உறிஞ்சப்பட்டு, ஷாப்பிங் மால்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள், பேரங்காடிகள், சுற்றுலா விடுதிகள், நட்சத்திர ஓட்டல்கள், மேட்டுக்குடியினருக்கான ஆடம்பர குடியிருப்புகள், வாட்டர் தீம் பார்க்குகள் – என தாரை வார்க்கப்பட்டு வருகிறது. பெங்களூரு நகர எல்லைக்குள் சாரக்கி அக்கிரகார ஏரி, சம்பங்கி ஏரி, கதிரேனஹள்ளி ஏரி, தர்மபூதி ஏரி, கோரமங்களா ஏரி முதலான ஏரிகள் இருந்த இடம் தெரியாமல் வீட்டுமனைகளாக மாற்றப்பட்டுள்ளன. பெங்களூருவின் குடிநீர் தேவையை ஏரிகள் மூலம் கணிசமாக ஈடு செய்ய வாய்ப்பிருந்த போதிலும், தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களின் கொள்ளைக்காகவும், வீட்டுமனைத் தொழிலில் ஈடுபட்டுள்ள புதுப்பணக்கார மாஃபியா கும்பலின் ஆதாயத்துக்காகவும் ஏரிகள் தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டன; அல்லது, அவை வீட்டுமனைகளாக மாற்றப்பட்டன. இதனால்தான் பெங்களூரு நகரில் குடிநீர் தட்டுப்பாடும் கட்டணக் கொள்ளையும் தீவிரமாகியுள்ளது.
அடுத்து, கர்நாடகத்தில் கரும்பு விவசாயிகளின் தற்கொலை தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில் மேக்கேதாட்டு அணைத் திட்டத்தின் மூலம் 4.5 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் கரும்பு விவசாயத்தை விரிவாக்கப் போவதாக அமைச்சர் எம்.பி.பாட்டீல் அறிவித்துள்ளார். கர்நாடக விவசாயிகளின் தற்கொலைச் சாவுகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை காரணமல்ல. கரும்புக்கு உரிய விலை கிடைக்காததாலும், உரம்-பூச்சிமருந்துகளின் விலையேற்றத்தாலும், இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டதாலும், கொள்முதல் செய்யப்பட்ட கரும்புக்கு சர்க்கரை ஆலை முதலாளிகள் ஆண்டுக்கணக்கில் பாக்கியைத் தராமல் விவசாயிகளை வஞ்சித்து வருவதாலும்தான் கரும்பு விவசாயிகள் கடன் சுமை தாளாமல் தற்கொலை செய்து கொள்கின்றனர். தற்போது கரும்பு விவசாயத்தை விரிவுபடுத்துவதன் மூலம் சர்க்கரை மற்றும் கரும்புச் சக்கையிலிருந்து மின்சாரம் மற்றும் சாராயத்துக்கான கச்சாப்பொருள் முதலானவற்றின் மூலம் கார்ப்பரேட் முதலாளிகள் மேலும் கொழுப்பதற்குத்தான் மேக்கேதாட்டு அணைக்கட்டு திட்டமே அன்றி, அது விவசாயிகளின் நலனுக்கானதல்ல.
ஏற்கெனவே சுற்றுலாத் தலம் என்ற பெயரில் யானைகளின் வழித்தடங்களை ஆக்கிரமிப்பது, காட்டை அழிப்பது, கிரானைட் குவாரிகள் அமைப்பது, சட்டவிரோதமாக மரங்களை வெட்டுவது முதலானவற்றால் யானைகளும் காட்டு விலங்குகளும் வாழ்விடம் பாதிக்கப்பட்டு உணவுக்கும் குடிநீருக்குமாக அலைபாய்ந்து கிராமங்களையும் விவசாயப் பயிர்களையும் நாசமாக்குவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மேக்கேதாட்டு அணை கட்டப்படுமானால் இப்பகுதியில் வாழ்ந்துவரும் யானைகள், குரங்குகள் முதலான விலங்கினங்களின் வாழ்விடம் பறிக்கப்பட்டு அவை எதிர்த்தாக்குதலை நடத்தும் அபாயம் ஏற்படும். மேலும், ஏறத்தாழ ஐயாயிரத்துக்கும் மேலான மரங்கள் வெட்டப்பட்டுதான் மேக்கேதாட்டு அணையையே கட்ட முடியும் என்பதால், ஒட்டுமொத்த சுற்றுச்சூழலும் கடுமையாகப் பாதிக்கப்படும்.
இந்த உண்மைகளை மூடிமறைத்துவிட்டு, கூடங்குளம் அணு மின் நிலையம் செயற்படுத்தப்பட்டால் தமிழகத்தின் மின்தட்டுப்பாடு நீங்கிவிடும் என்ற மாயத் தோற்றத்தை ஜெயா கும்பலும் பார்ப்பன ஊடகங்களும் ஏற்படுத்தியதைப் போலவே, மேக்கேதாட்டு அணைக்கட்டு திட்டத்தால் பெங்களூருவின் குடிநீர் பற்றாக்குறை தீர்ந்து குடிநீர் கட்டணம் குறைந்துவிடப் போவதைப் போன்றதொரு பிரச்சாரத்தை ஊடகங்களின் துணையோடு கர்நாடக ஆட்சியாளர்கள் நடத்தி வருகின்றனர்.
மேலும், “காவிரியில் நீர் கேட்டால், நாங்கள் ஒகேனக்கல்லை திருப்பிக் கேட்போம்” என்று இனவெறியைக் கிளறிவிடுகின்றனர். தமிழகத்தில் கடந்த மார்ச் 28 அன்று முழு அடைப்பு நடந்த அதேநாளில், கன்னட இனவெறியர்கள் தமிழக அரசியல் தலைவர்களின் படங்களை வைத்து பாடைகட்டி ஊர்வலம் நடத்தி அவற்றைக் கொளுத்தியதோடு, தமிழகத்துக்கு எதிராகக் கன்னட இனவெறியைத் தூண்டும் வகையில் கடந்த ஏப்ரல் 18-ம் தேதியன்று கடையடைப்புப் போராட்டத்தையும் நடத்தியுள்ளனர். கர்நாடக காங்கிரசு முதல்வரான சித்தராமையாவும் எதிர்க்கட்சித் தலைவர்களும் கன்னட இனவெறி அமைப்புகளுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவிக்கின்றனர். தங்களைத் “தேசிய” கட்சிகளாகக் கூறிக் கொள்ளும் காங்கிரசும் பா.ஜ.க.வும் கன்னட இனவெறி அமைப்புகளை வெளிப்படையாகவே ஆதரிக்கின்றன. இது எங்களது மாநில உரிமை என்று அவை வாதிடுகின்றன. ஆனால் தமிழகத்தில் காவிரி நீருக்கான நியாயவுரிமைக்காகப் போராடினால், அது குறுகிய இனவாதம், பிராந்தியவாதம் என்கின்றன.
காவிரி நதிநீர் தீர்ப்பாயத்தின் முடிவைச் செயல்படுத்த மறுத்து வருகிறது கர்நாடகம். இந்த விவகாரத்திலும், மேக்கேதாட்டு அணை விவகாரத்திலும் கர்நாடக காங்கிரசு, பா.ஜ.க., மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆகிய முக்கிய கட்சிகளின் தலைவர்கள் அரசியல் வேறுபாடுகளைக் கடந்து ஓரணியில் நிற்கின்றனர். அனைத்து மாநிலங்களின் உரிமைகளையும் சமமாக மதிப்பதாக நாடகமாடும் மோடி அரசு , தமிழகத்தின் வாழ்வுரிமையைப் பறிக்கும் மேக்கேதாட்டு அணைத் திட்டத்துக்காக பன்னாட்டு நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்க ஒப்புதல் அளிப்பதன் மூலம் கர்நாடகத்துக்கு ஆதரவாகவும் தமிழகத்துக்கு எதிராகவும்தான் செயல்படுகிறது.
ஏற்கெனவே காவிரியில் உரிய நீரைத் தராமல் தமிழகத்தின் நியாயவுரிமையை கர்நாடகம் தொடர்ந்து மறுத்து வருவதற்கெதிராகப் போராடி வருகிறோம். தற்போது அரைகுறையாகக் கிடைக்கும் நீரையும் கர்நாடகம் பறித்துக் கொள்ளக் கிளம்பியுள்ளது. தமிழகத்தின் உயிர்நாடியான காவிரி பிரச்சினையில் மட்டுமல்ல; முல்லைப்பெரியாறு, தமிழக மீனவர் பிரச்சினை பிரச்சினை முதலானவற்றிலும் “தேசிய” கட்சிகளும் மைய அரசும் தமிழகத்தின் நலன்களுக்கு எதிராகவே உள்ளன. நாட்டு நலனுக்கானது, மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்கானது என்ற பெயரில் கூடங்குளம், மீத்தேன் திட்டம், கெய்ல் எரிவாயுக் குழாய் பதிப்பு, நியூட்ரினோ திட்டம் – என அடுத்தடுத்து தமிழகத்தின் மீது கார்ப்பரேட் கும்பலின் கொள்ளைக்கான நாசகாரத் திட்டங்கள் திணிக்கப்படுவதும், தமிழர்களின் வாழ்வுரிமை பறிப்பும் கேள்விமுறையின்றித் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதர மாநிலங்களில் எதிர்க்கப்படும் பேரழிவுக்கான திட்டங்கள் எல்லாம் தேசியம், தேசிய ஒருமைப்பாடு, தொழில் வளர்ச்சி என்ற பெயரில் தமிழகத்தில் திணிக்கப்படுகின்றன.
இந்நிலையில், கார்ப்பரேட் கொள்ளைக்கான நாசகாரத் திட்டங்களைத் திணிக்கும் இன்றைய ஆட்சியை எதிர்த்தும், தேசியம் பேசும் ஓட்டுக்கட்சிகளின் துரோகத்தை அம்பலப்படுத்தியும், குருட்டுத்தனமான தேசியத்தை நிராகரித்தும், தமிழகத்தின் நியாயவுரிமையை நிலைநாட்டும் வகையில் போர்க்குணமிக்க மக்கள் போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும். தமிழகத்தின் நியாயவுரிமையை மறுக்கும் மைய அரசுக்கு எதிராக, தமிழகத்தில் எந்தவொரு அதிகாரத்தையும் அது செயல்படுத்த முடியாதபடி, அவற்றின் அதிகார அமைப்புகளும் அலுவலகங்களும் செயல்படாவண்ணம் தொடர் முற்றுகைப் போராட்டங்கள் மூலம் நிர்ப்பந்தித்தும், மைய அரசுக்கு வரி கொடுக்க மறுத்தும் பெருந்திரளான மக்கள் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்லவும் வேண்டும். அத்தகைய தொடர்ச்சியான விடாப்பிடியான போராட்டங்கள் மூலம்தான் வஞ்சிக்கப்படும் தமிழகத்தின் நியாயவுரிமையை நிலைநாட்ட முடியும்.
– குமார்
___________________________
புதிய ஜனநாயகம், மே 2015
___________________________
வங்க தேசத்தின் அறிஞர் பெருமக்களை கொன்று ஒழிப்பதை இசுலாமிய மதவெறியர்கள் தொடர்ந்து செய்து வருகின்றனர். கடந்த பிப்ரவரி மாதம் 26-ம் தேதி அவிஜித் ராய் கொல்லப்பட்டார். வங்க தேச தலைநகரான டாக்காவில் நடந்த புத்தக கண்காட்சி ஒன்றிற்கு தனது மனைவியான ரஃபீதா அஹமது பான்யாவுடன் சென்று விட்டுத் திரும்பும் போது தான் அந்தக் கொலைவெறித் தாக்குதல் நடந்தது. ராய் தம்பதியினர் பயணித்த சைக்கிள் ரிக்ஷாவைச் சூழ்ந்து கொண்ட கொலையாளிகள், இருவரையும் இழுத்துக் கீழே தள்ளியுள்ளனர். முதல் வெட்டு ராயின் தலையில் விழுந்துள்ளது. தொடர்ந்து அவரது உடலெங்கும் சராமாரியாக வெட்டிக் கிழித்து கொடூரமாக கொன்றுள்ளனர்.

அவிஜித் கொல்லப்பட்டு சரியாக 75 நாட்கள் கழித்து கடந்த 12-ம் தேதி அனந்தா பிஜோய் தாஸ் தாக்கப்பட்டார். வங்க தேசத்தின் வடமேற்குப் பகுதியில் சூர்மேய் நதிக்கரையில் அமைந்துள்ள சில்லேத் நகரைச் சேர்ந்த 33 வயதே நிரம்பிய இளைஞரான அனந்தா, வங்கி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 12-ம் தேதியன்று காலை 8:30 மணிக்கு அலுவலகம் சென்று கொண்டிருந்தவரை அரிவாள்கள் ஏந்திய கும்பல் ஒன்று சுற்றி வளைத்து கொடூரமான முறையில் வெட்டிக் கொன்றுள்ளது.
கொடூரமாக கொல்லப்படும் அளவுக்கு இவர்கள் இழைத்த குற்றம் என்ன?
அவர்கள் உண்மையாக இருந்தார்கள்; நாத்திகர்களாக இருந்தார்கள் என்பதே ‘குற்றம்’. இந்திய துணைக்கண்டமெங்கும் இசுலாமியர்களிடையே விஷம் போலப் பரவி வரும் இசுலாத்தின் வஹாபி மதவெறி பலி வாங்கிய எண்ணற்ற உயிர்களின் பட்டியலில் சமீபத்திய சேர்க்கை தான் இவ்விரு உயிர்களும்.
பலியானவர்கள் இருவரும் நாத்திகர்கள் மட்டுமின்றி, நாடறிந்த பதிவர்களாகவும் களச் செயல்பாட்டாளர்களாகவும் இருந்துள்ளனர். வங்கதேச முற்போக்காளர்கள் மத்தியில் இவர்கள் பரவலாக அறியப்பட்டவர்கள். அவிஜித் ராய் முக்தோ மோனா (சுதந்திரச் சிந்தனையாளர்கள்) என்ற இணையதளத்தை துவங்கியவர். பொறியியலாளரான அவிஜித் ராய் தாக்கா பல்கலைக்கழகத்தின் பிரபல இயற்பியல் பேராசிரியர் அயோய் ராயின் மகன். தத்துவம், அறிவியல் சிந்தனைகள், மனித உரிமைகள் தொடர்பாக பல்வேறு புத்தகங்களை எழுதியிருக்கிறார்.
இசுலாமிய அடிப்படைவாதத்திற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவரான அவிஜித் ராயின் புத்தகங்களை விற்கத் தடை விதித்து, ஜமாத் ஏ இசுலாமி என்கிற தீவிரவாத இயக்கம் வெளிப்படையாகவே மிரட்டியுள்ளது. அவர் நடத்தி வந்த முக்தோ மோனா இணையதளம், தொடர்ந்து நாத்திகத்தை முன்வைத்ததோடு இசுலாமிய அடிப்படைவாதத்தை அம்பலப்படுத்தி வந்துள்ளது.

முக்தோ மோனா தளத்தில் அனந்தா கட்டுரைகள் எழுதியுள்ளார். மேலும் காலாண்டிதழாக வெளி வந்து கொண்டிருக்கும் ஜூக்தி (தர்க்கம்) என்ற பத்திரிகையின் ஆசிரியராகவும், செல்லேத் நகரின் அறிவியல் மற்றும் பகுத்தறிவுக் கழத்தின் தலைவராகவும் செயல்பட்டுள்ளார். தொடர்ந்து இசுலாமிய அடிப்படைவாதத்தை அம்பலப்படுத்தும் கட்டுரைகள் எழுதி வந்த அனந்தா, தீவிரவாத வஹாபிகளின் தாக்குதல் பட்டியலில்(Hit List) முதலிடத்தில் இருந்து வந்துள்ளார்.
முற்போக்காளர்கள் மேல் நடத்தப்படும் தாக்குதல் வங்கதேசத்திற்குப் புதிதல்ல, தொண்ணூறுகளில் தஸ்லிமா நஸ்ரினும் இரண்டாயிரத்தின் துவக்கத்தில் ஹுமாயுன் ஆஸாத்தும் அடிப்படைவாத வஹாபிகளின் தாக்குதல் இலக்காக இருந்துள்ளனர். எனினும், 2013-ம் ஆண்டிற்குப் பின் இத்தாக்குதல்கள் ஒரு புதிய வேகத்தில் நடக்கத் துவங்கியுள்ளன. 2013-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஆஸிஃப் மொகியுத்தீன் குறுவாட்கள் ஏந்திய கும்பலால் தாக்கப்பட்ட சம்பத்திலிருந்து தொடர்ந்த இடைவெளிகளில் முற்போக்கு எழுத்தாளர்களும் வலைப்பதிவர்களும் தாக்கப்பட்டு வருகின்றனர்.
2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அஹ்மத் ரஜீப் ஹைதர் கொல்லப்பட்டார். அதே ஆண்டு மார்ச் மாதம் சன்னியுர் ரஹ்மான கொடூரமான தாக்குதலுக்கு உள்ளானார். 2014-ம் ஆண்டு நவம்பரில் ஷஃபியுள் இஸ்லாம் பேராசிரியர் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். இந்தாண்டு பிப்ரவரி மாதம் அவிஜித் ராயும், மார்ச் மாதம் வாஷிகுர் ரஹ்மானும் கொல்லப்பட்டுள்ளனர்.

பொதுவாக கொல்லப்பட்ட அனைவரும் முற்போக்காக இருந்தவர்கள் என்பதோடு, குறிப்பாக ஷஃபியுள் ரஹ்மானைத் தவிர மற்ற அனைவரும் 2013-ம் ஆண்டின் ஷாபாக் போராட்டம் என்று பிரபலமாக வருணிக்கப்படும் போராட்டங்களில் பங்கேற்றவர்கள்; அந்தப் போராட்டங்களுக்கு ஆதரவாக இணையத்தில் பிரச்சாரம் செய்தவர்கள். இசுலாமிய வஹாபிய அடிப்படைவாதிகளைப் பொறுத்தவரை, ”ஒப்பந்தம் போட்டு மேடையில் விவாதிக்கலாம் வாங்க” என்று ‘நாகரீகமாக’ கையைப் பிடித்திழுப்பதெல்லாம், அம்பலமாகும் வரை தான். அம்பலமாகி விட்ட பின் அரிவாள் மொழியில் தான் இயல்பாக பேசுவார்கள்.
அந்த வகையில் ஷாபாக் போராட்டங்களின் போது, வங்க தேச மக்களிடையே இசுலாமிய அடிப்படைவாதிகள் கடுமையாக அம்பலப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர். தாங்கள் அம்பலப்பட்டதற்கு கருத்தியல் ரீதியாக பதிலளிக்கத் துப்பில்லாததால் குறுவாட்களைத் தீட்டி தருணம் பார்த்துக் காத்திருந்துள்ளனர்.
அது என்ன ஷாபாக் போராட்டம்?
அன்றைய கிழக்கு பாகிஸ்தானில், 1970-இல் நடந்த தேர்தலில் வங்கதேசத்துக்குக் கூடுதல் தன்னாட்சி உரிமை வேண்டுமென்ற மக்களின் கோரிக்கையை முன்வைத்துப் போட்டியிட்ட ஷேக் முஜிபுர் ரஹ்மான் தலைமையிலான அவாமி லீக் கட்சி கிழக்கு பாகிஸ்தானில் 99 சதவீத அளவுக்கு வாக்குகளைப் பெற்று மிக அதிக இடங்களைக் கைப்பற்றியது. இப்பெரும்பான்மையைக் கொண்டு முஜிபுர் ரஹ்மான் ஒட்டுமொத்த (கிழக்கு,மேற்கு) பாகிஸ்தானுக்கும் பிரதமராகும் நிலை ஏற்பட்டது. முஜிபுர் ரஹ்மானின் வெற்றியை மேற்கு பாகிஸ்தானின் இராணுவ ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் ஏற்க மறுத்தனர்.

அதைத் தொடர்ந்து, வங்கதேசத்தில் நாடு தழுவிய போராட்டங்கள் வெடித்துப் பின் தேச விடுதலைப் போராக வளர்ந்தது. பாகிஸ்தான் இராணுவ ஆட்சியாளர்கள் வங்கதேச மக்கள் மீதும் அவாமி லீக் கட்சியினர் மீதும் மிகக்கொடிய இனப்படுகொலையைக் கட்டவிழ்த்துவிட்டனர். இசுலாமிய அடிப்படைவாத கட்சியான ஜமாத் -இ-இஸ்லாமி, பாகிஸ்தான் ஆட்சியாளர்களுடன் வெளிப்படையாகக் கைகோர்த்தது. தமது மாணவர்-இளைஞர் அமைப்புகளைக் கொண்டு ரசாக்கர்கள் எனப்படும் இரகசிய குண்டர்படைகளையும், அல்-பதார் எனும் கொலைக்குழுக்களைக் கட்டியமைத்தனர்.
தேச விடுதலையை ஆதரித்து களத்தில் நின்ற முன்னணியாளர்களையும் அறிவுத்துறையினரையும் கோரமாகக் கொன்றொழித்தனர் ரசாக்கர்கள். அந்த சமயத்தில் சுமார் இருபதிலிருந்து முப்பது லட்சம் வரையிலான வங்காளிகள் கொல்லப்பட்டனர். சுமார் பதினைந்து லட்சத்திற்கும் அதிகமான வங்கப் பெண்கள் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டனர் (25 லட்சம் வரை இருக்கலாம் என்றும் சிலர் மதிப்பிடுகிறார்கள்). சுமார் ஒரு கோடி வங்க மக்கள் அகதிகளாக இந்தியாவுக்குள் புகுந்தனர்.
1971-ம் ஆண்டு வங்காளிகளின் நினைவுகளில் ஆறாத வடுவாக நிலைத்தது. ஒவ்வொரு ஆண்டும் வங்க தேச விடுதலைக் கொண்டாட்ட நிகழ்வுகள் மரித்தோரைக் குறித்த நினைவுகளாலும் கண்ணீராலும் அலங்கரிக்கப்பட்டன. தொடர்ந்து நடந்த வங்க தேசத் தேர்தல்கள் ஒவ்வொன்றிலும் பாகிஸ்தானோடு கைகோர்த்து கொலைவெறியாட்டம் போட்ட இசுலாமிய அடிப்படைவாதிகளுக்குத் தண்டனை பெற்றுத் தரும் கோரிக்கை ஒரு முக்கிய பேசு பொருளாக அமைந்தது.

இந்நிலையில், 2008-ம் ஆண்டுத் தேர்தலில் அவாமி லீக் கட்சி போர்குற்ற விசாரணையை தேர்தல் வாக்குறுதியாக முன்வைத்து வென்றது. தொடர்ந்து பன்னாட்டு போர் குற்ற விசாரணை நீதிமன்றத்தின் முன் நடந்த விசாரணைகளின் முடிவில், 2013-ம் ஆண்டு ஜனவரி மாதம், ஜமாத் இ இஸ்லாமி கட்சியின் முக்கியத் தலைவரும், மீர்பூரின் கசாப்புக் கடைக்காரன் என்று மக்களால் காறி உமிழப்படும் போர்க்குற்றவாளியுமான அப்துல் காதர் மொல்லாவுக்கு போர்குற்ற நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது.
தீர்ப்புக்குப் பின் தெனாவெட்டாக இரட்டை விரல்களைக் காட்டியவாறே நீதிமன்றத்திலிருந்து அப்துல் காதர் வெளியேறும் காட்சி ஊடகங்களில் வெளியாகின. வங்க தேச மக்களின் நினைவடுக்குகளில் வெறுப்பின் குறியீடாக நீங்காத இடம் பிடித்த கொலைகாரனின் வெளிப்படையான கொக்கரிப்பு மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தலைநகர் டாக்காவின் ஷாபாக் சதுக்கத்தில் மக்கள் சாரிசாரியாகக் குவிந்தனர். மக்களின் உணர்வுகளைத் தங்கள் படைப்புகளால் தட்டியெழுப்பும் வேலையை முற்போக்குப் பதிவர்கள் கையிலெடுத்தனர் – அந்தப் படைப்பாளிகளின் படையில் முன்னணியாளர்களாக முக்தோ மானோ தளத்தின் பதிவர்கள் நின்றனர்.
ஏற்கனவே வேலையிழப்பு, விலைவாசி உயர்வு என்று பல்வேறு திசைகளில் தாக்கப்பட்டு கொந்தளிப்பான தருணம் ஒன்றின் விளிம்பில் நின்றிருந்தனர் வங்க தேசத்து மக்கள். வறண்டு கிடக்கும் வனத்தின் மத்தியில் காய்ந்த சருகுகளின் மேல் தீக்குச்சியைக் கொளுத்திப் போட்டார் அப்துல் காதர் மொல்லா. வழக்கம் போல் மத அடிப்படைவாதம் தன்னைக் காப்பாற்றி விடும் என்று அவர் தப்புக் கணக்குப் போட்டிருக்க வேண்டும். கலைந்த தேன்கூட்டிலிருந்து ஆத்திரத்தோடு பாய்ந்து வரும் தேனீக்களைப் போல் மக்கள் சாரிசாரியாக ஷாபாக் சதுக்கத்திற்கு அணிவகுத்தனர்.
அப்துல் காதர் மொல்லாவைத் தூக்கிலிட வேண்டும் என்ற முழக்கம் விண்ணதிர எழுந்தது. ஷாபாக் சதுக்கத்தில் பற்றிய நெருப்பு வெகு விரைவில் வங்க தேசத்தின் மூலை முடுக்குகளெங்கும் பற்றிப் படர்ந்தது. சிட்டகாங், சில்லேத், பாரிசால், மேய்மென்சிக், கூல்னா, ராஜ்பாரி, ராஜ்ஷாஹி, ரங்பூர், கோமில்லா, போக்ரா, நாராயன்கஞ், நவகாளி, நார்சிங்தி போன்ற பகுதிகளில் உக்கிரமான போராட்டங்கள் எழுந்தன.

இப்போராட்டங்கள் பின்னர் கனோஜாக்ரன் மன்ச் (Gonojagran mancha – சமூக விழிப்புணர்வு இயக்கம்) என்ற இயக்கமாக வளர்ந்து, ஜமாத் ஏ இசுலாமி கட்சியைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையாக எழுந்தது. பின்னர் டிசம்பர் 12-ம் தேதி 2013-ம் ஆண்டு அப்துல் காதர் மொல்லா தூக்கிலிடப்படும் வரை ஷாபாக் எழுச்சியின் தீவிரம் குறையவே இல்லை. இறுதியில் இசுலாமியர்களைப் பெரும்பான்மையினராக கொண்ட வங்க தேசத்தில் இசுலாமிய அடிப்படைவாதம் பேசும் ஜமாத் ஏ இசுலாமி கட்சி தனிமைப்பட்டு நிற்கும் நிலை ஏற்பட்டது.
கடந்த இருபது ஆண்டுகளில் இசுலாமிய உலகினுள் வைரஸ் கிருமியைப் போல் பரவி வரும் வஹாபிய அடிப்படைவாதமானது, வங்கத்து மக்கள் விட்ட நாக்-அவுட் பன்சில் மூக்குடைபட்டு நின்றது. குரானின் எந்த அத்தியாயத்தில், எந்த வரியில் எத்தனை எழுத்துக்கள் இருக்கின்றன எத்தனை நிறுத்தக்குறிகள் இருக்கின்றன அவை ஒவ்வொன்றுக்கும் நபி என்ன விளக்கம் கொடுத்திருக்கிறார், அதில் எதை எடுப்பது எதை விடுவது என்று பீராய்ந்து மயிர் பிளக்கும் வாதங்களை முன்வைத்து இசுலாமியர்களை மதவெறியூட்டுவதில் கில்லாடிகளான வஹாபியர்கள் இதை எதிர்பார்க்கவில்லை.
என்றாலும், நபி மொழியை விட பரந்துபட்ட மக்களின் மொழியே வலுவானது என்ற உண்மையை வங்க தேச வஹாபியர்கள் புரிந்து கொள்ளவில்லை. அவர்கள் வஞ்சம் தீர்ப்பதற்கான தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். மக்களை தங்களுக்கு எதிராக அமைப்பாக்குவதில் கருத்துத் தளத்தில் செயல்பட்டு முன்னணியில் நின்றவர்கள் என்ற முறையில் முக்தோ மானோ தளத்தின் பதிவர்களின் மீது கொலை வெறியில் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
அரசியல் ரீதியில், கருத்து ரீதியில் வெல்ல முடியாத கோழைகளின் கடைசி ஆயுதம் தான் அடிப்படைவாதக் கொலைவெறி. அந்தக் கொலை வெறியிடம் தான் அவிஜித்தும் அனந்தோவும் ஏனையோரும் களப்பலியாகி உள்ளனர். என்றாலும் இவர்கள் தனித்தவர்கள் இல்லை.. அவர்கள் மக்களின் நலனுக்காக பேசியவர்கள். அதனால்தான் இக்கொலைகளைக் கண்டித்து வங்க தேசத் தலைநகரில் நடக்கும் போராட்டங்களுக்கு மக்கள் திரள்கிறார்கள்.
அடிப்படைவாதிகளை அரசியல் அடிப்படையிலும் மக்களின் வாழ் நிலையின் பாற்பட்டும் எதிர்ப்பதே சரியானது என்பதை வங்க முசுலீம்கள் உணர்த்தி வருகின்றனர்.
ஷாபாக் சதுக்கம் இன்னும் விழ வில்லை; ஒவ்வொரு முறை ஒரு முற்போக்கு ஜனநாயகவாதி கொல்லப்படும் போது அது மக்களின் நினைவுகளில் ஓயாத அலையைப் போல் இடையறாது எழுந்து கொண்டேயிருக்கும். ஏனெனில் அவர்களே மக்களின் நம்பிக்கைக்குரிய ஒளிபொருந்திய எதிர்காலத்தின் குழந்தைகள். பாசிஸ்டுகளும் மதவாதிகளும் இன்னபிற பிற்போக்காளர்களும் கடந்த காலத்தில் செத்து, நாளுக்கு நாள் மட்கி அழுகி வரும் பிணங்கள்.
வங்க தேச எழுத்தாளர்கள் கொல்லப்பட்ட ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மக்கள் தெருவிலிறங்கி போராடுகிறார்கள் – ஒவ்வொரு கொலையின் பின்னும் வஹாபியர்கள் மக்களின் தீராத வெறுப்புக்காளாகிறார்கள். இசுலாத்தின் மாண்பைக் காப்பாற்றும் நடவடிக்கை என்ற வஹாபியர்களின் மாய்மாலங்களை மக்கள் புறந்தள்ளுகின்றனர்.
வரலாற்றில் ஜனநாயகவாதிகளை, முற்போக்காளர்களை, நாத்திகர்களை, சோஷலிசவாதிகளை, கம்யூனிஸ்டுகளை மக்கள் விரோதிகள் கொன்று குவித்த ஒவ்வொரு சந்தர்ப்பங்களின் போதும் எதிரிகள் தனிமைப்படுத்தப்பட்டே வந்துள்ளனர். மீண்டும் ஒரு முறை அந்த வரலாற்று உண்மையை வஹாபியர்கள் மெய்ப்பித்து வருகிறார்கள்.
ஏனெனில் அவர்கள் (மத அடிப்படைவாதிகள் / எதேச்சாதிகார பாசிஸ்டுகள்) அளவற்ற வெறுப்புடையோராகவும் நிகரற்ற தீயோராகவும் இருக்கிறார்கள்.
– தமிழரசன்
மேலும் படிக்க..
தமிழ் நாட்டில் 06-05-2015 முதல் பொறியியல் படிப்புக்கான விண்ணப்பம் வழங்கப்பட்டு 16-05-2015 முடிய மொத்தம் 1.69 இலட்சம் விண்ணப்பங்கள் விற்றுத் தீர்ந்துள்ளன. கடந்த ஆண்டு 2014-ல் மட்டும் மொத்தம் 2.11 இலட்சம் பொறியியல் இடங்கள் இருந்தன. இந்த ஆண்டு இது இன்னும் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பான ஓர் அதிர்ச்சிகரமான விசயம், ஜெயா கும்பலின் விடுதலையை ஒட்டிய பரபரப்புகளுக்கு மத்தியில் சத்தமேயில்லாமல் புதைக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் 90% சுயநிதி பொறியியல் கல்லூரிகள் போலி ஆசிரியர்களைக் கொண்டிருக்கின்றன. அதாவது 8,842 சுயநிதி பொறியியல் கல்லூரி ஆசிரியர்கள், விரிதாளில் (எக்சல் (Excel) சீட்டில்) உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். ஆள் இல்லாத கடைக்கு டீ ஆத்துவதைப் போன்று, போலி பெயர் பட்டியலைக் கணக்கு காட்டி கல்வி வியாபாரம் செய்துவருகின்றன மேற்படி டூபாக்கூர் கல்லூரிகள்.
ஒவ்வொரு சுயநிதி பொறியியல் கல்லூரியும் தங்கள் கல்லூரியில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ள ஆசிரியர்களின் பட்டியலை அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக் கழகத்திடம் (AICTE) சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட பட்டியலை ஆய்வு செய்த ராக்கேஷ் துப்புடு குழுவினர் இந்தியா முழுவதும் 50,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் பெயர்கள் போலியானவை என்பதை “கண்ட்ரோல் சர்ச் பட்டன்” மூலமாக அம்பலப்படுத்தி இருக்கின்றனர். இந்தக் கூத்தின் படி ஒரே ஆசிரியரின் பெயர் பல சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் சம்பளப் பட்டியலில் உள்ளது!
இதைப் புரிந்து கொள்ள ஓர் எளிய உதாரணம் உள்ளது. பல்வேறு பண்பலை வானொலி நிலையங்கள் ஒரே வாசகரின் பெயரை நேயர் விருப்பம் என்று பல பாடல்களுக்கு ஒலி பரப்புவார்கள். கேள்விப் பட்டிருக்கிறீர்களா? பத்தமடை எஸ் கந்தசாமி, குளப்பாக்கம் எஸ் கஜேந்திரன் என்ற பெயர்களையே நாள் முழுக்க வாசிப்பார்கள். இதே போன்று தமிழ்நாட்டில் மட்டும் உள்ள 90% சுயநிதி பொறியியல் கல்லூரிகள் 8,800-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் பெயர்களை அடித்துத் தள்ளியுள்ளன.
சான்றாக கன்னியாகுமரியில் வேளாளர் அறக்கட்டளை நடத்தும் KNSK பொறியியல் கல்லூரி மற்றும் NSK பாலிடெக்னிக் கல்லூரியில் மட்டும் 11 ஆசிரியர்களின் பெயர்கள் போலியானவை எனத் தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் மட்டும் ஐநூறுக்கும் மேற்பட்ட சுயநிதி பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன. இவற்றில் கனகசுந்தரி நினைவு பொறியியல் கல்லூரி, அம்சவல்லி அறக்கட்டளை பாலிக்டெக்னிக், ஜேகே குஞ்சராம்பாள்-மீனாட்சி முதலியார் கல்வி அறக்கட்டளை பொறியியல் கல்லூரி என்று தினுசு தினுசான பெயர்ப்பலகை கல்லூரிகள் அரசியல் பினாமிகளாலும் சாராய வியாபாரிகளாலும் குற்றக்கும்பல்களாலும் நடத்தப்பட்டு வருகின்றன என்பதை பச்சைக் குழந்தை கூட அறியும். இக்கும்பல்கள் கேலிக்கூத்தாக்கியிருக்கிற மற்றொரு விசயம் தான் போலி பேராசிரியர்கள்.
ஏற்கனவே புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி பல சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் வண்டவாளத்தை தண்டவாளம் ஏற்றியிருப்பதை அறிந்திருப்பீர்கள். சான்றாக துணைநடிகர்களை பேராசிரியர்கள் என்று செட்டப் செய்து அங்கீகாரம் பெறுவது, தெர்மாகூல் அட்டையை வளைத்துப்போட்டு கம்யூட்டர் லேப் என்று கணக்கு காட்டுவது என்று நடக்கிற மோசடிகளை மாணவர்கள் மற்றும் புரட்சிகர இயக்கங்களின் போராட்டங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக வெளிக்கொண்டு வந்திருக்கின்றன. ஆனால் தற்பொழுது வெளிவந்திருக்கிற பெயர் பட்டியல் மோசடி ஒட்டு மொத்த இந்தியாவில் தனியார்மயக்கல்வி அழுகி நாறுவதை ஒரேசேர படம் பிடித்துக் காட்டுகிறது. இது கல்வித் துறையில் தலைக்குமேலே வெள்ளம் போவதைக்காட்டுகிறது.
போலி ஆசிரியர்கள் விசயத்தில் ஒடிசாவிலும் உத்தரப்பிரதேசத்திலும் எல்லா சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளிலும் சிக்கியிருக்கின்றன. கல்லூரிகளின் சதவீதக் கணக்கில் 89% ஆந்திராவிலும், 91% தமிழ்நாட்டிலும், 96% மகாராஷ்ட்ராவிலும், 92% கர்நாடகாவிலும், 97% குஜராத்திலும், 100% ஒடிசாவிலும், 99% உத்தரப்பிரதேசத்திலும் போலி ஆசிரியர்களைக் கொண்டிருப்பதாக தெரிவிக்கிறது ராக்கேஷ் துப்புடுவின் ஆய்வு.

இங்கு அமைப்பு முறை குறித்து ஒரு நியாயமான கேள்வி எழ வேண்டும். ஏ.ஐ.சி.டி.ஈ என்பது யாருக்கானது? இது யாருடைய நலன்களை பிரதிபலிக்கிறது? ராகேஷ் துப்புடுக் குழுவினரின் ஆதங்கப்படியே சொல்வதனால் “ஏ.ஐ.சி.டி.ஈ இணையத்தில் FACULTY (ஆசிரியர்கள்) என்பதைக் கிளிக் செய்து எங்களாலேயே மிக எளிதாக போலி ஆசிரியர்களை அடையாளம் காணமுடிகிற பொழுது ஏ.ஐ.சி.டி.ஈ-யால் ஏன் இதை இனங்கண்டு விசாரணை நடத்தமுடியவில்லை” என்று கேள்வி கேட்டிருக்கிறார்கள்.
அரசக்கட்டமைப்பு தகர்ந்து போய் முற்றிலும் ஆளத் தகுதியில்லாமல் குற்றக்கும்பல்களும் அரசியல் கூட்டங்களும் நீதித்துறையும் பத்திரிகையும் அழுகிநாறும் காலம் இது. இந்த அமைப்பால் சுயநிதி பொறியியல் கல்லுரிகளின் அடாவடித்தனத்தை கட்டுப்படுத்த இயலுமா?
சான்றாக, கன்னியாகுமரியைச் சேர்ந்த வைரம் சந்தோஷ் என்பவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் அண்ணா பல்கலைக்கழகம் ஒவ்வொரு ஆண்டும் பொறியியல் கல்லூரிகளின் தரமதிப்பீட்டை வெளியிடவேண்டும் எனவும் இதனால் மாணவர்களால் கல்லூரிகளின் தரம் குறித்து தெரிந்துகொள்ள முடியும் எனவும் ஆனால் அரசு இந்த பட்டியலை வெளியிடாதது உள்நோக்கம் கொண்டது எனவும் மனு ஒன்றை தாக்கல் செய்திருக்கிறார். இதை விசாரித்த டி.எஸ்.சிவஞானம் மற்றும் ஜி.சொக்கலிங்கம் அமர்வு, தரப்பட்டியலை வெளியிடவும் இரண்டுவாரங்களுக்குள் அரசு பதில் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருக்கிறது. கடந்த ஆண்டும் நீதிமன்ற தலையீட்டின் காரணமாகவே இப்பட்டியல் வெளியிடப்பட்டது.
ஒரு தரப்பட்டியல் வெளியிடுவதற்கே ஒவ்வொரு ஆண்டும் இந்த அரசை நிர்ப்பந்திக்கும் பொருட்டு நீதிமன்றத்தின் படிகளை மிதிக்க வேண்டியிருக்கிறது என்றால் போலி பேராசிரியர்களை கொண்டிருக்கும் 91% தமிழ்நாட்டு பொறியியல் கல்லூரிகளின் கிரிமனல் குற்றங்களையும் நாடெங்கிலும் உள்ள 90%-க்கும் மேற்பட்ட அரசியல் பினாமிகளின் பொறியியல் கல்லூரிகளையும் இந்த அமைப்பால் தண்டிக்க முடியுமா?

பொதுவாக ஹேபியஸ் கார்பஸ் என்பது ஆட்கொணர்வு மனுவாகும். இதன்படி நாடெங்கிலும் உள்ள சுயநிதிபொறியியல் கல்லூரிகளில் காணாமல் போன 50,000 பேராசிரியர்களை “கொமாரசாமி-தத்து” நீதித்துறை கொண்டுவருமா? கிணற்றைக்காணவில்லை என்று வடிவேல் கொடுத்த பிராது ஒருவர் இருவர் என்றால் பார்க்கலாம். ஊரையே காணவில்லை என்றால் இந்த அமைப்பு யாருக்கானது?
இந்த இலட்சணத்தில் சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் நாற்றம் வெளிவந்த பிறகும் கூட இதில் சம்பந்தப்பட்டவர்களும் இந்த அரசும் பதில் சொல்லாமால் வாய்மூடி மவுனம் சாதித்து வருவதுடன் கல்லா கட்டும் நோக்கத்தில் கலந்தாய்வை நடத்த திட்டமிட்டிருக்கிறது.
சொல்லப்போனால் ஏ.ஐ.சி.டி.ஈ ஒரு போலியான அமைப்பாக இருக்குமோ என்று இந்த விசயம் நம்மை சந்தேகிக்க வைக்கிறது. இவ்வமைப்பின் கல்விக்கொள்கையின் படி பதினைந்து மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் இருக்க வேண்டும் என்பது விதியாகும். மேலும் பேராசிரியர், இணைப்பேராசிரியர் மற்றும் துணைபேராசிரியரின் விகிதம் ஒவ்வொரு கல்லூரியிலும் 1:2:6 என்ற விகிதத்தில் இருக்க வேண்டும்.
போலி பெயர்பட்டியலின் விகிதங்களைக் கணக்கில் எடுக்கிற பொழுது தமிழ்நாட்டில் 91% பொறியியல் கல்லூரிகள் கிரிமினல்கள் ஆவர். இந்த நிலையில் இதைப் பற்றி விசாரிக்காமல் கலந்தாய்வு நடத்துவது என்பது முழுக்கவும் கல்லா கட்டும் வியாபாரமே! இது ஒரு கிரிமினல் மோசடியே!
உயர் கல்வி கொடுப்பது அரசால் மட்டும் சாத்தியமல்ல, தனியார் இன்றி பொறியியலாளர்களை உருவாக்க முடியாது என்று பிலாக்கணம் பாடியவர்கள் இப்போது என்ன சொல்வார்கள்? ஒருக்கால் இந்த மோசடி கல்லூரிகள் இல்லை என்றால் தமிழ்நாட்டில் கட்டிடம் கட்டும் தொழில் வளர்ந்திருக்காது, வேலை வாய்ப்பு கிடைத்திருக்காது என்று கூட அவர்கள் வாதிடலாம்.
அதன் பொருள் என்ன? பெருச்சாளியைக் கொல்ல வீட்டைக் கொளுத்துவதுதானே?
– இளங்கோ
செய்தி ஆதாரங்கள்
கடந்த மார்ச் மாத இறுதியில் குஜராத் சட்டமன்றத்தில் ஒரு கருப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டு, அரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அச்சட்டத்தின் பெயர் குஜராத் பயங்கரவாத மற்றும் அமைப்புரீதியான குற்றங்களைக் கட்டுப்படுத்தல் சட்டம் “(GCTOC)”. தடா, பொடா மற்றும் ஊபா போன்ற கருப்புச் சட்டங்களின் வரிசையில் களமிறக்கப்பட்டிருக்கும் இந்தச் சட்டத்தைப் பற்றிப் பார்ப்பதற்கு முன்னர், இச்சட்டத்தின் தோற்றப் பின்னணியைப் பார்ப்போம்.

குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு பெருந்திரளான அப்பாவி இஸ்லாமியர்களைக் கொன்று குவித்து வெறியாட்டம் போட்ட மோடி கும்பல், அதன் தொடர்ச்சியாக பல நூறு இஸ்லாமியர்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரித்துக் கைது செய்து பல போலி மோதல் கொலைகளையும் அரங்கேற்றியது. அக்காலகட்டத்தில்தான் பல்வேறு அப்பாவி இஸ்லாமியர்கள் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். பொடா சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் நடத்திய போராட்டங்களின் விளைவாக 2004-ம் ஆண்டில் மத்திய அரசால் பொடா சட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. அதன் பின்னர் பொடாவிற்கு சற்றும் குறையாத விதிகளைக் கொண்டதொரு கருப்புச் சட்டத்தை “குஜராத் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் கட்டுப்படுத்துதல் சட்டம்” என்ற பெயரில் இயற்றியது மோடி அரசு. இச்சட்டம் முறையே 2004, 2008 மற்றும் 2009 ஆகிய ஆண்டுகளில் அரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட போதிலும், அவரால் நிராகரிக்கப்பட்டு திருப்பியனுப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்தச் சட்டம் நான்காவது முறையாக புதிய அவதாரமெடுத்து அரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
காலாவதியான தடா மற்றும் பொடா போன்ற ஆள்தூக்கிச் சட்டங்களுக்கு எந்த வகையிலும் குறைவில்லாமல் இயற்றப்பட்டிருக்கும் இந்தச் சட்டத்தின்படி, போலீசார் சந்தேகப்படும் எவருடைய தொலைபேசியையும் ஒட்டுக்கேட்பதோடு, மின்னஞ்சல்களையும் நோட்டமிட்டு அவற்றை ஆதாரமாகக் காட்டலாம். எஸ்.பி. பதவிக்கு குறையாத தகுதி உள்ள போலீசு அதிகாரியின் முன்னிலையில் குற்றம் சாட்டப்பட்டவர் அளிக்கும் வாக்குமூலம் சாட்சியமாக ஏற்றுக் கொள்ளப்படும். அதாவது, குற்றம் சாட்டப்பட்டவரை சித்திரவதை செய்து பெறப்படும் வாக்குமூலம் நீதிமன்றத்தில் சாட்சியமாக ஏற்றுக் கொள்ளப்படும். கிரிமினல் சட்டவிதிகளின் படி 90 நாட்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்பதற்கு மாறாக, இச்சட்டப்பிரிவின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளில் கைது செய்யப்படுபவர்களைக் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யாமலேயே போலீசின் விசாரணையில் 180 நாட்கள் வரை வைத்திருக்கலாம்.
விசாரணைக் காலம் முடிந்த பின்னர் இயல்பாகவே பிணை வழங்கப்படும் என்று எதிர்பார்த்து இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் மனு செய்ய முடியாது. இக்குற்ற வழக்கை விசாரிக்கும் நீதிபதியிடம் பிணை கோருவதற்கான காரணங்களைத் தெரிவித்து, அவருக்கு அது ஏற்புடையதாக இருந்தால் மட்டுமே பிணை வழங்கப்படும். இல்லையேல், குற்றம் சாட்டப்பட்டவர் வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைபட்டுக் கிடக்க வேண்டும்.
தீவிரவாதத்தைத் தடுத்து நாட்டு மக்களைக் காப்பாற்றக் கொண்டு வரப்பட்டதாக கூறப்படும் தடா சட்டத்தின் கீழ் குஜராத்தில் 1993-க்கு முன்பு வரை மட்டுமே சுமார் 19,263 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்கள் யாரும் குண்டு வெடிப்பில் ஈடுபட்ட தீவிரவாதிகள் அல்லர். மாறாக, நர்மதை அணை எதிர்ப்புப் போராட்டம் மற்றும் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்ற விவசாயிகளும், மலைவாழ் மக்களும், தொழிலாளர்களும், சிறுபான்மையினரும் தான். தடா பரிசீலனைக் கமிட்டியின் ஆய்வறிக்கையின்படி இந்தியா முழுக்க தடாவின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் சுமார் 75,000 பேர். ஆனால், இவர்களில் குற்றம் நிரூபிக்கப்பட்டவர்கள் சுமார் 750 பேர் மட்டுமே.
இந்நிலையில் குஜராத்தில், இந்துவெறி பாசிச மோடியின் ஆட்சியில் பொடா சட்டம் எப்படிச் செயல்பட்டிருக்கும் என்பதைச் சொல்லவே தேவையில்லை. கோத்ரா இரயில் எரிப்பு, அக்சர்தாம் கோவில் மீதான தாக்குதல் வழக்கு, ஹரேன் பாண்டியா கொலை வழக்கு ஆகியவற்றில் பொடா சட்டம் ஏவப்பட்டது. அனைத்து வழக்குகளிலும் சம்பவம் நடந்த இடத்தைச் சுற்றி இருந்த அப்பாவி சிறுவர்கள் உள்ளிட்ட பல நூறு இஸ்லாமியர்களைக் கைது செய்து பல ஆண்டு காலம் சிறையில் அடைத்தது மோடி அரசு. பல்வேறு வழக்குகளில் உச்ச நீதிமன்றமும் இதனைச் சுட்டிக் காட்டி கண்டித்துள்ளது. பொடா சட்டம் குஜராத்தில் நடைமுறையில் இருந்த 2002-2004 காலகட்டத்தில் அச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 240 பேர்களில் 239 பேர் இஸ்லாமியர்கள். மீதி இருந்த ஒருவர் சீக்கியர். ஆனால் 3 நாட்களில் 1,500-க்கும் அதிகமான இஸ்லாமியர்களை வெட்டியும் எரித்துக் கொன்றும் வெறியாட்டம் போட்ட எந்த இந்து பயங்கரவாதியின் பக்கமும் திரும்பவில்லை இந்தப் பொடா.
எனவே, தற்போது புதிய பெயரில் கொண்டுவரப்பட்டுள்ள இக்கருப்புச் சட்டத்தின் உண்மையான நோக்கத்தை கடந்தகால தடா, பொடா சட்டங்களின் அனுபவத்திலிருந்து எவரும் புரிந்து கொள்ள முடியும். சிறுபான்மை இஸ்லாமியர்களையும், மறுகாலனியாதிக்கத்துக்கும் கார்ப்பரேட் கொள்ளைக்கும் எதிராகப் போராடும் உழைக்கும் மக்களையும் ஒடுக்கும் இந்துத்துவ போலீசு ராஜ்ஜியமாக குஜராத் மாற்றப்பட்டுள்ளதையே இப்புதிய கருப்புச் சட்டம் மீண்டும் நிரூபித்துக் காட்டுகிறது.
– கதிர்
____________________________
புதிய ஜனநாயகம், மே 2015
____________________________