Friday, June 12, 2026
முகப்பு பதிவு பக்கம் 641

மதுரை கந்து வட்டி – காவல்துறை கூட்டணிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

3

துரை செல்லூர் பந்தல்குடியில்கொலை வெறித்தாக்குதலில் ஈடுபட்ட கந்துவட்டி கும்பல் ஆஷா, மகா, செல்வம், சதீஷ், பூஜா ஆகியோரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்கவும், இந்த அராஜகத்திற்கு துணை நிற்கும் செல்லூர் எஸ்.ஐ. அன்பழகனை பணி நீக்கவும் வலியுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக 30.01.2015 வெள்ளிக்கிழமை காலை 11.00 மணி அளவில் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மதுரை மாவட்ட துணைத் தலைவர் வழக்குரைஞர் பா நடராஜன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

செல்லூர், பந்தல்குடி கந்துவட்டி அராஜகம்பந்தல்குடியில் பாதிக்கப்பட்ட மக்களும், வழக்குரைஞர்களும், மக்கள் கலை இலக்கியக் கழகம், விவசாயிகள் விடுதலை முன்னணி, இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை போன்ற அமைப்பைச் சேர்ந்த தோழர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

செல்லூர் – பந்தல்குடி – சுயராஜ்யபுரம் பகுதி பெரும்பான்மை தலித் மக்கள் குடியிருந்து வரும் பகுதியாகும். கூலிவேலை, சிறு வியாபாரம் செய்துவரும் ஏழை உழைக்கும் மக்களே அதிகம் உள்ளனர். விலைவாசி முதல், எல்லா செலவினங்களும் அதிகரித்துவிட்ட இன்றைய சூழலில் வருவாய் பற்றாக்குறை காரணமாகவும் மருத்துவ சிகிச்சை, நல்லது கெட்டது போன்ற அவசரத் தேவைகளுக்காக கடன் வாங்குவது என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.

செல்லூர், பந்தல்குடி கந்துவட்டி அராஜகம்இதைப் பயன்படுத்திக் கொண்டு பந்தல்குடி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆஷா, மகாலட்சுமி, செல்வம், சதீஷ், செல்வராஜ், ரமேஷ் போன்றவர்கள் கந்துட்டித் தொழிலில் தங்களது சொந்த மக்களையே கடுமையாகச் சுரண்டி வருகின்றனர். ரன் வட்டி, மீட்டர் வட்டி, நாள் வட்டி, நேர வட்டி எல்லாவற்றையும் தாண்டி அவர்கள் கேட்சிற வட்டியைத் தராவிட்டால் நடுத்தெருவில் இழுத்துப் போட்டு அடிப்பது, ஆபாச வார்த்தைகளில் திட்டுவது, வீடு புகுந்து சாமான்களை அள்ளுவது, மானபங்கப்படுத்துவது போன்ற அடாவடிகளில் ஈடுபடுவதே இவர்களது வாடிக்கை. இந்தக் கும்பலிடம் சிக்கிக் கொண்டவர்கள் ஒருபோதும் மீண்டதில்லை.

வட்டிப்பணம் மாலை 4 மணிக்குள் தர வேண்டும். 1 மணி நேரம் தாமதமானாலும் வட்டித் தொகை 2 மடங்கு ஆகிவிடும். ஏன் என்று கேட்டால் அடி உதை. செல்லூர் காவல் நிலையத்தில் இவர்கள் மீது புகார் கொடுத்தால் அதிகாரிகள் கண்டுகொள்வதே இல்லை. செல்லூர் எஸ்.ஐ.அன்பழகன் இந்த கும்பலுக்கு மிக மிக நெருக்கம். அவரை மகா குடும்பத்தினர் செல்லமாக “மொட்டை மாமா” என்று அழைக்கிற அளவுக்கு நெருக்கம். எந்நேரமானாலும் மகா வகையறாக்கள் வீட்டுக்கு அவர் வந்து போவார். அன்றாடம், அவருக்கு விருந்துதான். கந்துவட்டியில் அவர் பங்காளி.

kanthu-vatti-hrpc-demo-09கடந்த 08.01.2015 அன்று கந்து வட்டி கேட்டு பாண்டிமகன் பாஸ்கரன் என்பவரை ஆபாச வார்த்தைகளால் திட்டி, அடித்து, கொலை மிரட்டல் விடுத்த சதீஷ், செல்வம், ஆஷா, பூஜா ஆகியோர் மீது பாஸ்கரன் புகார் அளித்த போது வழக்குப் பதிவு செய்த செல்லூர் காவல் அதிகாரிகள் கந்துவட்டி கும்பலிடம் ஒரு புகாரைப் பெற்று முதலில் புகார் கொடுத்த பாஸ்கரனின் மருமகன் அசோக் என்பவரைக் கைது செய்தது. அவர் ஜாமீனில் வந்துள்ளார். இப்படி இந்தக் கும்பல் மீது பல புகார்கள் கொடுத்தும் செல்லூர் காவல் நிலையம் செவிடன் போல உள்ளது. இந்த கும்பலின் அராஜகம் தொடர் கதையாக உள்ளது.

கந்துவட்டி கும்பலுக்கு நெருக்கமான எஸ்.ஐ.அன்பழகனிடம் அவர்களைக் கைது செய்யும்படி கேட்டபோது, “ஏன்டா நான் கூப்பிட்டா அவளுங்க வீட்டுல 5 பொம்பளைங்களும் வருவாளுங்க, உன் வீட்டில் எவளாச்சும் வருவாளா?” என்று திமிருடன் ஆபாசமாக திட்டியிருக்கிறார். ஆஷா, பூஜா, செல்வம் கும்பல் “போலீஸ் ஸ்டேசன் எங்க கண்ட்ரோல்ல இருக்குடா, நீ எத்தனை புகார் கொடுத்தாலும் உன்னால் எங்க மயிரக் கூட புடுங்க முடியாது” என்று சொல்லியுள்ளனர்.

‘காவல் நிலையங்கள் மக்களுடைய பாதுகாப்புக்கானது, காவலர்கள் உங்கள் நண்பர்கள்’ என்று அரசும் அதிகாரிகளும் சொல்கிறார்கள். ஆனால் காவலர்கள் யாருடைய நண்பர்களாக இருக்கிறார்கள். காவல் நிலையம் யாருக்காக இருக்கிறது என்றால் அது கிரிமினல்களுக்காகத்தான் என்பது இந்த கந்து வட்டி கிரிமினல் கும்பலின் பிரச்சனையில் பளிச்சென்று தெரிகிறது. கிரிமினல்களும் காவல் துறையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிற இந்தக் கூட்டணி மறைமுகமானது அல்ல. வெளிப்படையானது. காவல் நிலையத்தில் புகார் கொடுத்தவர் ஏழையாக இருந்தால் நிச்சயம் அவர்தான் சிறைக்குப் போவார். அவர் மீது பொய் வழக்கு போடப்படும் என்பதுதான் உண்மை நிலை. சதீஷ், செல்வம், ஆஷா, பூஜா இவர்கள் மீது 08-01-2015 அன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது ஆனால் யாரும் கைது செய்யப்படவில்லை.

செல்லூர், பந்தல்குடி கந்துவட்டி அராஜகம்மேலும் இதே கும்பல்,  “பாதிக்கப்பட்டவர்கள் அவர்களுக்கு எதிராக போராடத் துணிந்துவிட்டார்கள். காவல் நிலையம், மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையரிடம் புகார் கொடுக்கிறார்கள்” என்பதை அறிந்தவுடன் கடந்த 17.01.2015 அன்று அந்தப் பகுதியில் பயங்கர கலவரம் நடத்தி வினோத்குமார், சுந்தர்ராஜன் ஆகிய இரண்டு பேரை தலையில் அரிவாளால் வெட்டி அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகின்றனர்.

மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் தலையீட்டின் பேரில் கொலை முயற்சி செய்த ஆஷா, மகா, செல்வராஜ், செல்வம், சதீஷ், ரமேஷ், பூஜா உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளனர். எஸ்.ஐ.அன்பழகன் மீது நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் அவ்ரைப் பாதுகாக்கின்றனர்.

அதன் பொருள் என்ன? கந்து வட்டி கும்பலின் செல்வாக்கு எஸ்.ஐ. அன்பழகனோடு நின்றுவிடவில்லை. அது மேல்மட்டம் வரை பரவியிருக்கிறது என்பது தான்; அதுமட்டுமல்லாமல் பகுதியில் நடக்கும் விபாச்சார தொழிலில் அன்பழகன் பங்காளிதான் என்றும் சொல்கிறார்கள். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை வீட்டுக்கு அனுப்ப காவல்துறை நெருக்கடி கொடுத்து வருகிறது. இதை அம்பலப்படுத்தி ம.உ.பா. மையம் சுவரொட்டி ஒட்டியதற்காக துணை ஆணையர் புகார் கொடுக்கச் சென்ற மக்களைக் கடிந்து கொண்டுள்ளார்.

கந்து வட்டிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது என்று அரசு சொல்கிறது. ஆனால் அரசின் சட்டம் ஒழுங்கு பாதுகாவலர்களான காவல் துறைதான் கந்துவட்டி கும்பலைக் காப்பாற்றுகிறது. இப்போது சிறையிலிருக்கும் கிரிமினல்களை விரைவில் மீட்டுக் கொண்டுவந்து திரும்பவும் ஆதிக்கத்தில் அமர்த்த முயற்சி செய்கிறது செல்லூர் காவல்துறை.

கந்து வட்டி பிரச்சனை இங்கு மட்டுமல்ல எல்லா இடங்களிலும் ஏழைகளின் ரத்தத்தை உறிஞ்சி வருகிறது. எனவே இதற்கு எதிராக மக்கள் ஒன்றிணைந்து உறுதியுடன் போராடி கந்து வட்டிக் கும்பலை அந்தப் பகுதியை விட்டே விரட்டியடிக்க வேண்டும். ஏற்கனவே இந்த கும்பல் ஒருமுறை ஊரைவிட்டு விரட்டியடிக்கப்பட்டுள்ளது. ஆனால் செல்லூர் காவல் நிலையத்தின் ஆதரவுடன் மீண்டும் அந்த கும்பல் வந்துவிட்டது. இந்த கிரிமினல் கூட்டணியை விரட்டியடிப்பது ஒன்றே இந்தப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வாகும்.

ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய ம.க.இ.க தோழர் ராமலிங்கம் “இன்று மதுரையில் பல பகுதிகளில் கந்துவட்டிக் கும்பல் ஒரு தனி அரசாங்கத்தையே நடத்திக் கொண்டிருக்கின்றன. பந்தல்குடியில் 8 பேர் கொண்ட ஒரு கும்பல், செய்கின்ற அராஜகத்திற்கு எல்லையே இல்லாமல் போய்விட்டது. ஒரு சிறிய கும்பல், அந்தப்பகுதியிலுள்ள 1000 பேரையும் கட்டுப்படுத்தி, ரவுடித்தனம் செய்ய முடிகிறது என்றால் அதற்குக் காரணம் காவல் துறைதான். கந்துவட்டிக் கும்பலுக்கும் காவல் துறைக்கும் உள்ள கள்ள உறவு தான் இத்தனை அராஜகத்திற்கும் அடிப்படையாக இருக்கிறது” என்று பேசினார்.

kanthu-vatti-hrpc-demo-06“கந்து வட்டி வன்கொடுமைக்கு எதிராகப் பல சட்டங்கள் இயற்றப்பட்டாலும், காவல்துறை அதைக் கண்டு கொள்வதேயில்லை. பந்தல்குடியில் கந்துவட்டிக் கும்பல் அராஜகத்திற்குக் காரணமே செல்லூர் எஸ்.ஐ அன்பழகன் தான். அவரை தட்டிக் கேட்காத மாவட்ட காவல் துறை நிர்வாகம் போலீக்கு எதிராக ஏன் போஸ்டர் போட்டாய் என்று கேட்கிறது” என்று இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறை மாவட்ட துணை அமைப்பாளர் தோழர் தென்னரசு கேள்வி எழுப்பினர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

வி.வி.மு. உசிலை வட்டம் தோழர் குருசாமி பேசியதாவது

செல்லூர், பந்தல்குடி கந்துவட்டி அராஜகம்“கந்து வட்டிக்கு மதுரை சிறப்புத் தகுதி பெற்றது. தமிழ் நாட்டிற்கே மதுரை தான் வழிகாட்டி. இந்தக் கந்து வட்டியால் ஏழை மக்களின் வாழ்க்கையே நாசமாகிப் போய்விடுகிறது. சொந்த சாதிக்காரன், உறவுக்காரன் ஊர்க்காரன் என்றெல்லாம் பார்ப்பதில்லை. எல்லோரையும் உறிஞ்சிக் கொழுக்கவே அவர்கள் விரும்புகின்றனர்.

மக்கள் பிரிந்து கிடப்பதும், பலவீனமாக இருப்பதும் தான் அவர்களுக்கு பலம். புகார் கொடுத்தால் புகார் கொடுத்தவர் மீதே காவல்துறை வழக்குப் போடுகிறது. வட்டிக்கு கடன் வாங்கும் ஏழை மக்கள், ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு வாங்குவதில்லை. நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கின்றனர். ஆனால் கந்துவட்டியில் சிக்கியவுடன் அவர்களது வாழ்க்கை நிலை கீழாகப் போய் விடுகிறது. மீளவே முடியாத அளவிற்கு மேலும் மேலும் வட்டி அவர்களை அழுத்துகிறது. இதனால் வட்டி கட்ட முடியாமல் தடுமாறுகின்றனர்.

கந்து வட்டிக் கும்பலோ வீட்டிற்குள் நுழைந்து இரக்கமின்றி சூறையாடுகிறது. கேவலமாகத் திட்டுகின்றது. மானபங்கம் நடக்கிறது. இத்தனையும் காவல் துறையின் உதவியோடு நடக்கிறது என்பது தான் கொடுமை.”

கந்துவட்டிக் கும்பலால் நேரடியாக பாதிக்கப்பட்ட மூதாட்டி மகாராணி தனக்கு ஏற்பட்ட கொடுமைகளைக் கண்ணீர் மல்கப் பேசினார்.

செல்லூர், பந்தல்குடி கந்துவட்டி அராஜகம்“பேங்க் புத்தகத்தை அடமானம் வைத்து ரூ 4,000 கடன் வாங்கினேன். தின வட்டி 100-க்கு 10 ரூபாய். இது வரை ரூ 75,000 கட்டிவிட்டேன், இன்னமும் கடன் தீரவில்லை. எனக்கு வரும் 6,000ரூபாய் பென்சனில் 2,500 ரூ வங்கியில் வாங்கிய கடனுக்காக எடுத்துக் கொள்வார்கள். மீதப் பணத்தை இந்த கந்து வட்டிக்காரங்க எடுத்துக்கிறாங்க. எனக்கு கஞ்சி குடிப்பதற்குக் கூட வழியில்லை. மேலும் பணம் கேட்டு, என் வீட்டிற்குள் புகுந்து பாத்திரங்களையும் சூறையாடியுள்ளனர். இதே நிலை தான் பலருக்கும் ஏற்பட்டிருக்கு” என்று கண்ணீர் மல்கக் கூறினார் அந்த மூதாட்டி.

ம.உ.பா. மையம் லயனல் அந்தோணிராஜ், மதுரை மாவட்டச் செயலர்

“கந்து வட்டிக் கொடுமை நாடுமுழுவதும் இருக்கிறது. பந்தல் குடியிலும் நடக்கிறது. எல்லை மீறும் பொழுதுதான் போராட்டமாக வெடிக்கிறது. பொறுத்துப் பொறுத்து பார்த்த பந்தல்குடி பகுதி மக்கள், இனிமேல் பொறுக்க முடியாது என்ற நிலையில் தான் வீதிக்குப் போராட வருகிறார்கள்.

kanthu-vatti-hrpc-demo-11பந்தல்குடியில் சுரண்டுபவர்களும், சுரண்டப்படும் மக்களும் ஒரே சாதியைச் சார்ந்தவர்கள். பணம் கட்டினாலும் கடன் மட்டும் தீருவதேயில்லை. அசல் அப்படியே நிற்கிறது. செல்லூர் எஸ்.ஐ அன்பழகனை இந்தக் கந்துவட்டிக் கும்பல் “மொட்டை மாமா” என்று செல்லமாக அழைத்துக் கொஞ்சுகிறது என்றால் அவர்களுக்கிடையிலான உறவைப் புரிந்து கொள்ளுங்கள். மேல் மட்டம் வரை மாமூல் பிரித்துக் கொடுக்கப்படுவதால் உயர் அதிகாரிகள் எஸ்.ஐ அன்பழகனைத் தட்டிக் கேட்பதேயில்லை.

இன்றைய உலகமய சூழலில் 4 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். விதர்பா, கர்நாடகம், ஆந்திரா, பஞ்சாபில் இது நடந்தது. காரணம் கந்து வட்டிதான். வறட்சியினாலும் விவசாயிகள் செத்தனர். அதிகமாக விளைந்தும் விலை இல்லாமலும் செத்தனர். அங்கேயும் கந்துவட்டி பலரை பலி வாங்கியது.

இங்கேயும், கீரைத் தோப்பு, வாழைத்தோப்பு, அண்ணா தோப்பு, ஜெய்ஹிந்துபுரம், அவனியாபுரம், செல்லூரிலும் பலி கேட்கிறது. இந்த கந்து வட்டிக் கும்பலுக்கு எதிராக இங்கே உள்ள அரசியல் கட்சிகள் போராட மாட்டார்கள். ஏனெனில் இவர்களும் அந்தக் கும்பலுக்குப் பின்புலமாக இருக்கிறார்கள். எனவே அரசியல் கட்சிகளை நம்பிப் பயன் இல்லை.

விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்ட மக்கள் எல்லாம் ஒன்றிணைந்து ஒரே சக்தியாக திரண்டு, எழுந்து ம.உ.பா.மையம் மற்றும் மக்களுக்காக சமரசமின்றி போராடும் புரட்சிகர இயக்கங்களின் பின் நின்றால் இந்தக் கும்பலை ஓட ஓட விரட்டி அடிக்க முடியும்.

kanthu-vatti-hrpc-demo-10தமிழக அரசே ! காவல்துறையே !

  • செல்லூர் – பந்தல்குடி கந்துவட்டி கும்பலை உடனே குண்டர் சட்டத்தில் சிறையிலடை !
  • எஸ்.ஐ.அன்பழகனைப் பணி நீக்கம் செய் !
  • தாக்குதலுக்கு ஆளானவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கு !
  • கந்து வட்டிக் கொடுமையை ஒழிக்க விரைந்து நடவடிக்கை எடு !

தகவல்
மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு
மதுரை மாவட்டக்கிளை

இராணிப்பேட்டை : 10 தொழிலாளிகள் மரணம் – நேரடி ரிப்போர்ட் !

4

இராணிப்பேட்டை :

விடியலைத் தேடி வந்தவர்கள் விடிவதற்குள் மாண்டு போனார்கள்.

ரவு 12.10 மணி. தூங்கிக் கொண்டிருந்த அவர்களை, சேறும் சகதியுமான இரசாயனக் கழிவு திடீரென சுனாமியாய் தாக்குகிறது; என்ன நடக்கிறது என தெரிந்து கொள்வதற்கு முன்பாகவே அவர்களை புதைத்து மூடிய கழிவுச் சகதி நெஞ்சில் பேயாய் அழுத்துகிறது; மூச்சுக் குழாய்க்குள் சேறு புகுந்து திணறடிக்கிறது; சகதியில் இருந்த இரசாயனக் கழிவுகள் உடலை அரிக்கின்றன; அருகில் இருந்த தொழிற்சாலை பேனல் போர்டு உள்ளிட்ட மின்சாதனங்கள் சகதியில் மூழ்கி பரவிய மின்கசிவு தப்பிக்க சிறிதளவு வாய்ப்பிருந்திருந்தால் அதையும் காலி செய்கின்றன; அனைவரும் கொடூரமாக கொல்லப்படுகின்றனர்.

இரசாயன சகதி சுனாமி
இரசாயன சகதி சுனாமியில் கொல்லப்பட்டவர்கள் (படம் : நன்றி தினத்தந்தி)

அவர்கள் மேற்கு வங்க மாநிலம் மிதினாப்பூரிலிருந்து வேலூர் மாவட்டத்தில் உள்ள இராணிப்பேட்டைக்கு பஞ்சம் பிழைக்க வந்தவர்கள். பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் என்பதைவிட கான்பூரைச் சேர்ந்த ஒரு முதலாளியால் இராணிப்பேட்டையில் இயங்கும் ஆர்.கே.லெதர்ஸ் என்கிற தனது தோல் தொழிற்சாலையில் வேலை செய்வதற்காக அழைத்து வரப்பட்டவர்கள் என்பதுதான் உண்மை.

தொழிற்சாலைகளுக்கு புதிதாய் வேலைக்கு வருபவர்களுக்கு உடனடியாக வீடு கிடைக்காது என்பதால் அவர்களை தொழிற்சாலையிலேயே தங்க வைப்பது வழக்கமாம். 2015 சனவரி மாதம் 30-ம் தேதி அன்று  வந்து சேர்ந்த அவர்களும் இரவு ஆலையிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். சுமார் 1500 கிமீ தூர நெடுந்தொலைவு தொடர்வண்டிப் பயணக் களைப்பில் இருந்த அவர்கள் அனைவரும் ஆர்.கே லெதர் ஆலையில் தோலுக்கு சாயம் ஏற்றும் உருளைகளுக்கருகில் படுத்துறங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆர்.கே லெதர் ஆலைக்கு அருகில் இருக்கும் தோல் தொழிற்சாலைகளின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் கழிவு சகதியை சேகரிக்கும் தொட்டியின் பக்கவாட்டுச் சுவர் உடைந்து சுமார் 4 டன் வரையிலான  நிறை கொண்ட சகதி சுனாமி போல வெளியாகியிருக்கிறது.

விடியலைத் தேடி வந்தவர்கள் விடிவதற்குள் மாண்டு போனார்கள்.

மிதினாபூர் மாவட்டத்தின் வித்யாபூர் சல்பதவானி கிராமத்தைச் சேர்ந்த 50 வயதான அபீப் கான், அவரது மகன்கள் 25 வயதான அலி அக்பர் மற்றும் 23 வயதான அலி அங்கர், பல்ராம்பூரைச் சேர்ந்த 27 வயதான ஷாஜகான் மற்றும் அவரது சகோதரர் 18 வயதான குதூப் கான் மற்றும் அக்ரம், அசியான், ப்யார், ஹபீப் ஆகிய அவர்கள் ஒன்பது பேருடன், தொழிற்சாலை இரவுக் காவலாளியாகப் பணிபுரிந்து வந்த தமிழ்நாடு ஆரணி தாலுகா கண்ணமங்கலத்தைச் சேர்ந்த சம்பத் (45) என்பவரையும் சேர்த்து பத்து பேரை பலிவாங்கியுள்ளது இந்தச் சகதி சுனாமி.

சம்பவ இடத்தில் இருந்த 21 வயதான அமீனுல் அலிகான் மற்றும் 50 வயதான ரவி என்ற சூப்பர்வைசர் இருவர் பிழைத்துக் கொண்டனர். வெளியில் ஓடிச்சென்ற தொழிலாளிகள் தகவல் தெரிவித்து தீயணைப்புப் படையினர் விரைந்து வந்தனர்;

தீயணைப்புப் படை வீரர்கள்
போராடி 2 உயிர்களை காப்பாற்றிய தீயணைப்புப் படை வீரர்கள் (படம் : நன்றி thehindu.com)

தொட்டியிலிருந்து வெளியான கழிவுச் சகதி 60 அடி அகல சாலையில் 300 அடி வரை 3 அடி உயரத்துக்கு தேங்கியிருக்கிறது. தீயணைப்புப் படை வீரர்கள் பாதுகாப்பு கவசங்களுடனும், பொக்லைன் எந்திரத்தை வரவழைத்தும் அதன் உதவியுடன் நள்ளிரவு முதல் காலை 9 மணி வரை மீட்புப் பணியில் ஈடுபட்டனர்; உயிர் பிழைப்பதற்காக தொழிற்சாலையின் உயரமான சுவரின் மீது ஏறியிருந்த ரவியை மீட்டனர்.

ranipet-leather-waste-disaster-14தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் கழிவுநீரில் மூழ்கியதாலும், தொடர்ந்து துர்நாற்றம் வீசியதாலும் அவர்களின் உடல்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. நீண்ட போராட்டத்திற்கு பிறகு 10 பேரின் உடல்களையும் ஒவ்வொன்றாக மீட்டனர். உடல்கள் அனைத்தும் சகதியில் சிக்கியதால் தோல்கழிவுகள் ஒட்டியபடி கருப்பு நிறத்தில் காணப்பட்டன.

ranipet-leather-waste-disaster-10 இந்த கழிவுச் சுனாமி எங்கிருந்து வந்தது?

பச்சைத் தோலை பதப்படுத்தப்பட்ட தோலாக (வெட்புளூ -wet blue) மாற்றும் தோல் தொழிற்சாலைகள்  இராணிப்பேட்டை – முத்துக்கடைக்கு கிழக்கில் பெருமளவில் இயங்குகின்றன. பதப்படுத்தப்பட்ட தோலை அழகுபடுத்தப்பட்ட தோலாக (finished leather – ஃபினிஷ்ட் லெதராக) மாற்றும் தொழிற்சாலைகள் இராணிப்பேட்டை சிப்காட் தொழில் வளாகத்தில் பெருமளவில் உள்ளன. அழகுபடுத்தப்பட்ட தோலை பொருட்களாக (காலணி, செருப்பு உள்ளிட்ட) மாற்றும் சில தொழிற்சாலைகளும் ராணிப்பேட்டையில் இயங்குகின்றன.

இவற்றில் முதல் இரண்டு வகை ஆலைகளிலிருந்து வெளியேறும் கழிவுகள் மிகவும் ஆபத்தானவை. பதப்படுத்தும் தொழிற்சாலைகளிலிருந்து அதிக அளவு உப்பு (சோடியம் குளோரைடு), சுண்ணாம்பு, அமிலம் மற்றும் குரோமியம் உள்ளிட்ட இரசாயனங்கள் கலந்த கழிவுநீர் வெளியாகிறது. அழகுபடுத்தும் தொழிற்சாலைகளிலிருந்து பலவகையான உப்புகள், சாயங்கள், நிறமித் துகள்கள், கொழுப்பு இரசாயனங்கள் கலந்த கழிவுநீர் வெளியாகிறது.

1980-களிலும், 1990-களிலும் இந்த கழிவுநீரை பெயரளவுக்குக் கூடச் சுத்திகரிக்காமல் வெளியேற்றி நிலத்தையும், நீரையும் நஞ்சாக்கின இந்தத் தொழிற்சாலைகள். விவசாயம் பாழ்படுவது, கால்நடைகள் உயிரிழப்பு என அழிவுகளைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் எதிர்ப்பு வலுக்கவே மத்திய-மாநில அரசுகளின் நிதி உதவி மற்றும் தோல் தொழிற்சாலை முதலாளிகளின் நிதியைக் கொண்டு ராணிப்பேட்டே சிட்கோ தோல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிறுவனம் (RANIPET SIDCO FINISHED LEATHER EFFULENT TREATMENT COMPANY LTD) டிசம்பர் 6, 1990-ம் ஆண்டு நிறுவப்பட்டது. அதன் சுத்திகரிப்பு ஆலை தனியாரின் பராமரிப்பில் இயங்கி வருகிறது.

கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலையின் முகப்பு
கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலையின் முகப்பு

சுற்று வட்டாரத்தில் செயல்படும் பயனியர் லெதர், ஆன்ட்லர் லெதர்ஸ், வசந்த் லெதர்ஸ், ஆர்.கே.லெதர்ஸ், ஐ.வி.லெதர்ஸ், அலெக்கியா லெதர்ஸ் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தோல் அழகுபடுத்தும் ஆலைகளின் இரசாயனக் கழிவ நீர் இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் பல நிலைகளில் சுத்திகரிக்கப்படுகிறது; கழிவுகளிலிருந்து நீர் தனியாக பிரித்தெடுக்கப்பட்டு, சேறும் சகதியுமான இரசாயனக்கழிவுகள் ஓரிடத்தில் கொட்டப்படுகின்றன; நாளடைவில் காய்ந்த பிறகு அங்கிருந்து அப்புறப்படுத்தப்படுகின்றன.

கூழ் போன்ற இந்தச் சகதி பல வகையான நச்சு இரசாயனங்கள் கலந்தது. இதை நிலத்தில் புதைத்தால் அவை நிலத்துக்கடியில் பரவி பல கிலோமீட்டர் தூரம் வரை நஞ்சாக்கி விடும். ராணிப்பேட்டை சுத்திகரிப்பு நிலையத்தில் சகதி மற்ற இடங்களுக்கு பரவாமல் தடுக்க 100 அடி நீளம், 100 அடி அகலம் கொண்ட தொட்டிக்கு 15 அடி உயரத்தில் முக்கால் அடி தடிமனில் சுற்றுச்சுவரை எழுப்பியுள்ளார்கள். இதைத்தான் கழிவு நீர்த்தொட்டி என்கிறார்கள்.

ராணிப்பேட்டை தோல் தொழிற்சாலை படுகொலை
சுத்திகரிக்கப்படும் கழிவுகளை சேகரிக்கும் இடம்.

ஏற்கனவே காய்ந்து போன மலை போல குவிந்துள்ள கழிவுகள் அகற்றப்படாததால் இடமின்மை காரணமாக புதிய கழிவுகளைக் கொட்ட ஆறு மாதங்களுக்கு முன்புதான் தென்பகுதியில் ஒரு சுவர் எழுப்பி உள்ளார்கள். அந்தச் சுவர்தான் தற்போது உடைந்து உள்ளிருந்த கழிவுகள் ஒரே நேரத்தில் வெளியேறி சுனாமியைப் போல சீறிப்பாய்ந்து பத்து உயிர்களை பலிவாங்கி உள்ளது.

ராணிப்பேட்டை தோல் தொழிற்சாலை படுகொலை
சேகரிக்கப்படும் கழிவுகள் கொட்டப்படும் இடம்

விபத்தா? கொலையா?

அதிக அளவில் கழிவுகள் தேக்கி வைக்கப்பட்டதால் சுவற்றில் ஏற்கனவே ஆங்காங்கே கசிவுகள் ஏற்பட்டுள்ளதையும் காண முடிந்தது. கழிவுகள் கசியாமல் இருக்க சுவற்றின் உட்புறமாக கருப்பு நிற பாலிதின் ஷீட்டுகள் போடப்பட்டுள்ளன. இந்தக் கசிவுகளைப் பார்த்தாவது எச்சரிக்கை அடைந்திருந்தால் இத்தகைய விபத்தை தடுத்திருக்க முடியும்.

ராணிப்பேட்டை தோல் தொழிற்சாலை படுகொலை
தேக்கி வைக்கப்பட்டிருக்கும் இரசாயனக் கழிவு சேற்றில் ஒரு பகுதி.

சுத்திகரிப்பு ஆலையில் அமைக்கப்பட்டிருக்கும் கழிவு நீர்த் தொட்டியின் சுற்றுச் சுவர் மற்றும் அங்கே அப்புறப்படுத்தப்படாமல் குவிந்து கிடக்கும் காய்ந்து போன கழிவுகள் இவற்றை பார்த்த போது அதிர்ச்சியாக இருந்தது. எந்தவித பாதுகாப்பும் இன்றி ஒரு நிலையம் எப்படி இயங்குகிறது? தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் என்ன செய்கிறது.

தொழிற்சாலைக்குள் தேங்கியிருக்கும் இரசாயன கழிவு சகதி
தொழிலாளர்களை ஆலைக்குள்ளேயே தங்க வைத்த ஆர்.கே.லெதர்ஸ் முதலாளி காரணமா?

நடந்தது விபத்தல்ல. தெரிந்தே நடத்தப்பட்ட பச்சைப் படுகொலை. இதற்குக் காரணமானவர்களை கைது செய்வதோடு மேலும் இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் தடுக்க வேண்டுமானால் குற்றவாளிகள் அனைவரையும் கொலை வழக்கில் கைது தண்டிக்க வேண்டும்.

இங்கே நடந்த உயிர்ப்பலிக்கு யார் காரணம்?

தொழிலாளர்களை ஆலைக்குள்ளேயே தங்க வைத்த ஆர்.கே.லெதர்ஸ் முதலாளி காரணமா?

சுத்திகரிப்பு நிலையத்தை பாதுகாப்பற்ற முறையில் இயக்கி வரும் அதன் மேலாண்மை இயக்குநர் ஆர் அமிர்தகடேசன், இயக்குநர்கள் இரகுநாதன், ஜெயச்சந்திரன், சொக்கலிங்கம் பிள்ளை, சரவண குமார் மற்றும் இரகுபதி ஆகியோர் காரணமா?

சுத்திகரிப்பு நிலையம்
சுத்திகரிப்பு நிலையத்தை பாதுகாப்பற்ற முறையில் இயக்கி வரும் அதன் மேலாண்மை இயக்குநர் ஆர் அமிர்தகடேசன், இயக்குநர்கள் இரகுநாதன், ஜெயச்சந்திரன், சொக்கலிங்கம் பிள்ளை, சரவண குமார் மற்றும் இரகுபதி ஆகியோர் காரணமா?

மிகமோசமாக இயக்கப்படும் சுத்திகரிப்பு நிலையத்தை நடத்துவதற்கு அனுமதி அளித்து வேடிக்கை பார்க்கும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் காரணமா?

ஆட்சி பொறுப்பில் உள்ள ஊராட்சி, நகராட்சி, ஆர்.டி.ஓ, வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் இவர்களை எல்லாம் வழிநடத்தும் தமிழக அரசும் காரணமா?

இரசாயன கழிவு சகதி
ஆட்சி பொறுப்பில் உள்ள ஊராட்சி, நகராட்சி, ஆர்.டி.ஓ, வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் இவர்களை எல்லாம் வழிநடத்தும் தமிழக அரசும் காரணமா?

அரசு அதிகாரிகளும் அரசு நிர்வாகமும், சுத்திகரிப்பு நிலையத்தை நடத்தும் தனியார் நிர்வாகமுமே முதல் நிலைக் குற்றவாளிகள். தொழிலாளர்கள் தங்குவதற்கு வசிப்பிடத்தை ஏற்படுத்தி தராமல் ஆலைக்குள்ளேயே அவர்களை தங்கவைத்த ஆர்.கே.லெதர்ஸ் முதலாளி இரண்டாம் நிலைக் குற்றவாளி.

ராணிப்பேட்டை துயரம்
கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலையை கண்காணித்து முறைப்படுத்த வேண்டிய கடமையை வேண்டுமென்றே கடந்த 30 ஆண்டுகளாக புறக்கணித்து வரும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும், தமிழக அரசும் இப்போது மக்கள் கோபத்துக்கு பயந்து அவசர அவசமாக இப்படி ஒரு உத்தரவை பிறப்பித்திருக்கின்றன.

பலி வாங்கும் மறுகாலனியாக்கம்

ஆலைகள் தொடங்கினால் வேலை வாய்ப்பு பெருகும்; மக்களிடம் காசு புழங்கும்; அவர்களின் வாழ்க்கைத் தரம் உயரும்; அதுவும் தோல் பொருட்களை செய்து ஐரோப்பியர்களுக்கு ஏற்றுமதி செய்தால் அன்னியச் செலாவணி கிடைக்கும் என்று நம்மை ஆளும் அரசுகளும், மேற்கத்திய உலகுக்கு சேவை செய்யும் தரகு முதலாளிகளும் கூக்குரலிடுகிறார்கள். இப்படிச் சொல்லித்தான் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு இராணிப்பேட்டையில் தோல் தொழிற்சாலைகளையும் இரசாயனத் தொழிற்சாலைகளையும் தொடங்கினார்கள்.

இந்திய பன்னாட்டு தோல் கண்காட்சி
இந்திய வர்த்தக வளர்ச்சி நிறுவனம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் நடத்தும் தோல் கண்காட்சி (படம் : நன்றி http://www.indiatradefair.com )

தோல் பதனிடுதல், அழகுபடுத்தல் இவற்றுக்கான ஆலைகள் வெளிப்படுத்தும் இரசாயனக் கழிவுகளுக்கு எதிராக மேற்கத்திய நாடுகளில் போராட்டங்கள் வலுக்க, அவற்றை இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தன பன்னாட்டு நிறுவனங்கள். பளபளப்பான தோல் பொருட்களை செய்வித்து மேற்கு நாடுகளுக்கு இறக்குமதி செய்து ஆண்டுக்கு பல லட்சம் கோடி ரூபாய் வியாபாரம் செய்கின்றன அந்நிறுவனங்கள்.

அவர்களுக்காக நமது மண்ணையும், நீரையும், மக்களின் உயிரையும் பணயம் வைத்து உள்நாட்டில் தொழில் செய்யும் முதலாளிகள் தமது பங்காக கணிசமான லாபத்தை குவித்துக் கொள்கின்றனர். சந்தைப் போட்டியைத் தூண்டி விலைக்குறைப்பு என ஒரு புறமும், உயர்ந்த விலையிலான இரசாயனங்கள், எந்திரங்களை விற்பது என்று மறுபுறமும் அன்னிய நிறுவனங்கள் நமது நாட்டையும் சிறுமுதலாளிகளையும் ஒட்டச் சுரண்டிக் கொண்டிருக்கின்றன.

தோல் கண்காட்சி
மேற்கத்திய வசதிக்காக பளபளக்கும் தோல் கண்காட்சி (படம் : நன்றி http://www.indiatradefair.com)

10 தொழிலாளர்களை கொடூரமாக கொன்று குவித்த விபத்து நடந்த இடத்திலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சென்னையில், உயிர்ப்பலி நடந்து 24 மணி நேரத்துக்குள், ஜனவரி 31-ம் தேதி மாலை 6 மணிக்கு 30-வது இந்திய பன்னாட்டு தோல் கண்காட்சியின் தொடக்க விழா நடைபெற்றிருக்கிறது. அதில் ஏற்றுமதி சாதனைகளுக்கான விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அதாவது 30 ஆண்டுகளாக இந்திய மண்ணும், நீரும், மக்களும் சிறுகச் சிறுக கொல்லப்பட்டு வரும் சாதனை கொண்டாடப்பட்டு வருகிறது.

 ராணிப்பேட்டையில் வெளியாகும் தொழிற்சாலை கழிவு
ராணிப்பேட்டையில் வெளியாகும் தொழிற்சாலை கழிவு (படம் : நன்றி http://www.livescience.com/4226-world-10-polluted-places.html )

இந்தியாவின் தோல் துறையின் முக்கியமான உற்பத்தி மையமாக வேலூர் மாவட்டம் உள்ளது. தோல் தொழிற்சாலைகள் கக்கும் கழிவுகளால் வேலூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் சுற்று வட்டாரப் பகுதிகளில் நீரும் நிலமும் கெட்டுப் போனதால் வேளாண்மை அற்றுப் போனது. நிலத்தடி நீரைக் குடிக்கும் மக்கள் மட்டுமல்ல ஆடு மாடுகள்கூட நோயினால் அவதியுறுகின்றன. காற்றும் நஞ்சாகிப் போனதால் நுரையீரல்களெல்லாம் நடுங்குகின்றன.

நூற்றுக்கணக்கான ஆலைகள் குவிந்து இயங்கும் இராணிப்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதி ஏரிகளின் நீர் நிலைகளில் முற்கால மன்னர்களின் மனைவிமார்கள் நீராடியது அந்தக் காலம். உலகின் ஆக மோசமான மாசடைந்த நகரங்களில் 3-ம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது இந்தக் காலம்.

இரசாயனக் கழிவுகளை வெளியேற்றும் ஆலைகள் குவிந்துள்ள ராணிப்பேட்டையின் பகுதிகளில் காற்றையே வடிகட்டித்தான் சுவாசிக்க வேண்டும். வடிகட்டிய காற்றுகூட நுரையீரலைத் துளைத்துவிடும் என்பதால் எதிர்காலத்தில் இப்போது குடிநீருக்கு கொடுப்பது போல காற்றைக்கூட காசு கொடுத்துதான் வாங்க வேண்டி வரும். “காற்று வேண்டுமா காசை எடு; இல்லையேல் ஊரைவிட்டே ஓடு!” என்பதுதான் எதிர்காலமாக இருக்கும். எங்கே ஓடுவது?

இது போன்று விவசாயம் அழிக்கப்பட்டு வாழ்க்கை பறிக்கப்பட்ட மேற்கு வங்கம் மற்றும் பிற வடமாநில கிராமங்களிலிருந்து சோற்றுக்காக லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தொழிற்சாலைகள் இயங்கும் நகரங்களை நோக்கி பஞ்சம் பிழைக்க ஓடுகின்றனர். எந்தவித பணிப்பாதுகாப்பும் இன்றி, கொலைக்களங்களாக இயங்கும் தொழில் மையங்களில் தொழிலாளர்கள் பலி கொடுக்கப்படும் சம்பவங்களின் தொடர்ச்சிதான் ராணிப்பேட்டையில் இப்போது நடந்திருக்கும் கொடூர சம்பவம்.

நெஞ்சை உருக்கும் இத்துயரச் சம்பவத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியும், தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகமும் 30.01.2015 சனிக்கிழமை ராணிப்பேட்டை சிப்காட் பேருந்து நிலையத்தில் சாலைமறியல் செய்தனர். சுமார் 150 பேர் கைதாகி பிறகு மாலையில் விடுவிக்கப்பட்டனர். மாண்டு போனவர்கள் வடஇந்தியர்கள்,  இஸ்லாமியர்கள் என்பதால் பிற கட்சிகள் இந்த உயிர்க்கொலைகளை அலட்சியப்படுத்துகின்றனரா?

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையை மூட உத்தரவிட்டிருக்கிறது. அதில் இணைக்கப்பட்டிருந்த 79 உறுப்பினர் ஆலைகளையும் மூடியிருக்கிறது. கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலையை கண்காணித்து முறைப்படுத்த வேண்டிய கடமையை வேண்டுமென்றே கடந்த 30 ஆண்டுகளாக புறக்கணித்து வரும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும், தமிழக அரசும் இப்போது மக்கள் கோபத்துக்கு பயந்து அவசர அவசமாக இப்படி ஒரு உத்தரவை பிறப்பித்திருக்கின்றன.

ராணிப்பேட்டை தோல் தொழிற்சாலை படுகொலை
சுனாமியை நினைவுபடுத்தும் வெளியேறிய கழிவின் ஒரு பகுதி.

தமது கடமையை புறக்கணித்து, மக்களின் வாழ்வாதாரங்கள் பறிபோவதற்கு துணை நிற்கும் தமிழக, மேற்கு வங்க மாநில அரசுகள் இறந்து போன தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு சில லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளன. கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை இயக்கும் நிறுவனங்களின் சங்கமும் சில லட்சங்களை அறிவித்துள்ளன. அரசும், முதலாளிகளும் தோல் கண்காட்சிக்கு மட்டும் செலவிடும் தொகையில் ஒரு துளிதான் இந்த நிவாரணத் தொகை.

மக்கள் நலனை பாதுகாக்காத, கார்ப்பரேட் கொள்ளைக்கு ஆதரவாக செயல்படும் இந்த அரசு உறுப்புகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள், எதிர்த்து வாதிட பல லட்சம் ரூபாய் ஊதியத்தில் முதலாளிகளின் வழக்கறிஞர்கள், ஒரு சில ஆண்டுகளுக்கு ஒரு முறை சில தீர்ப்புகள், அவற்றை அமல்படுத்துவதற்காக பல நூறு கோடி ரூபாய் அரசு மானியம், வெளிநாட்டு சுத்திகரிப்பு நுட்ப நிறுவனங்களின் சுரண்டல், சுத்திகரிப்பு முறையாக நடைபெறுகிறதா என்று கட்டுப்படுத்த வேண்டிய அரசு உறுப்புகளின் ஊழல் என்று அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், நீதிமன்றங்கள், முதலாளிகள் என்று இந்த ஒட்டுமொத்த கட்டமைப்புமே தொடரும் இந்த படுநாசத்தை இணைந்து நடத்துகின்றனர்.

தோல் துறை முதலாளிகளும், அவர்கள் சேவை செய்யும் மேற்கத்திய எஜமானர்களும், குளிரூட்டப்பட்ட வர்த்தக மையத்தில் வணிக பேரங்களை நடத்திக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் அவர்களது லாபத்துக்காக கொடூரமாக கொல்லப்பட்ட தொழிலாளர்களின் உடல்கள், தகப்பனையும் இரண்டு மகன்களையும் ஒரே நேரத்தில் இழந்த குடும்பத்தை சென்றடையும்; இரண்டு சகோதரர்களையும் இழந்த குடும்பத்தை சென்றடையும். கொல்லப்பட்டவர்களுக்கு வாய்க்கரிசியாக முதலாளிகளும் அரசும் போட்ட சில லட்சம் ரூபாய்களும் விரைவில் அந்தக் குடும்பங்களை போய்ச் சேர்ந்து விடலாம்.

ராணிப்பேட்டை தோல் தொழிற்சாலை படுகொலை
கழிவால் மூழ்கடிக்கப்பட்ட ஆர்.கே லெதர்ஸ் ஆலையும் சாலையும்

ஆனால், நம் நாட்டையும், மக்களையும் மேற்கத்திய நிறுவனங்களுக்கு அடகு வைத்து தரகு வேலை பார்க்கும் இந்த அரசமைப்புக்கு எதிராக மக்கள் பெருமளவில் வீதியில் இறங்கிப் போராடாத வரை, உயிரின் விலை என்னவென்று குற்றவாளிகளுக்கு உணர்த்தாத வரை, பேரழிவுகளை தடுத்து நிறுத்துவதற்கான அதிகாரத்தை மக்கள் தாமே கையில் எடுக்காத வரை இத்தகைய பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்வதைத் தடுக்க முடியாது.

ராணிப்பேட்டை தோல் தொழிற்சாலை படுகொலை
சாலைகளை மூழ்கடித்து நிற்கும் கழிவுகள்

பேஸ்புக்கில் புகைப்படத்தொகுப்பு

தகவல்
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
வேலூர்

Ranipet-Murder-2இது தொடர்பான செய்திகள்

 

மணல் கொள்ளை : ஆற்றில் இறங்கு ! அதிகாரத்தைக் கையிலெடு !!

6

ணற்கொள்ளை தோற்றுவிக்கும் பேரழிவு என்ன என்று தெரிந்த போதிலும், குடிநீரின்றி விவசாயமின்றி நாடே பாலைவனமாகிவிடும் என்ற அபாய எச்சரிக்கை  கண் முன்னே உண்மையாகி வந்தபோதிலும், எதைப்பற்றியும் அக்கறையோ கவலையோ இல்லாமல், இந்தக் கொள்ளை தொடர்கிறதே ஏன்?

கொள்ளையடிப்பதற்காகவே பதவிக்கு வருகின்ற அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட ஓட்டுக்கட்சி தலைவர்கள், ஆறுமுகசாமி, படிக்காசு, கே.சி.பி., பி.ஆர்.பி., வைகுந்தராசன் போன்ற கிரிமினல்கள், காசுக்காக எதையும் விற்கத் தயாராக இருக்கும் ஐ.ஏ.எஸ். முதல் வி.ஏ.ஓ. வரையிலான அதிகாரிகள், மணல் கொள்ளையர்களுக்கு அடியாள் வேலை பார்க்கும் போலீசு, பெட்டி வாங்கிக்கொண்டு தீர்ப்பு எழுதும் நீதிபதிகள்  போன்ற நேர்மையற்ற பலரின் நடவடிக்கைகள்தான் மணற்கொள்ளை தொடர்வதற்குக் காரணம் என்று பலர் எண்ணுகிறார்கள்.

இதில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனால், தண்ணீரை விற்பதும், மணலை விற்பதும், மலைகளை விற்பதும் கண்ணில் பட்ட இயற்கை வளங்களையெல்லாம் வெட்டி விற்பதும் முன்னெந்தக் காலத்திலும் இல்லாத அளவுக்குத் தமிழகத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் நடப்பது ஏன்? ஏனென்றால், இந்தக் கொள்ளையைத்தான் வளர்ச்சிக்கான கொள்கை என்று மத்திய, மாநில அரசுகள் அமல் படுத்துகின்றன. எந்த விதமான ஆக்கபூர்வமான உற்பத்தி நடவடிக்கையும் இல்லாமல், இயற்கை வளங்களைக் கொள்ளையடித்து விற்பதே ஒரு தொழிலாகவும், அதுவே முன்னேற்றத்துக்கு வழியாகவும் அரசால் சித்தரிக்கப்படுகிறது.

மணல் கொள்ளையை எதிர்த்து கொல்லப்பட்டவர்கள்
மணற்கொள்ளையை எதிர்த்துப் போராடியதற்காக வெட்டிக் கொல்லப்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் – மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்கள் கார்த்திக் மற்றும் ராஜேஷ். நம்பியாற்றில் நடந்து வரும் மணற்கொள்ளையை அம்பலப்படுத்திப் போராடியதால் கொல்லப்பட்ட திசையன்விளையைச் சேர்ந்த சதீஷ்குமார் (கோப்புப் படங்கள்)

தண்ணீரைப் பாட்டிலில் அடைத்து விற்றால் அது தொழில் வளர்ச்சி, ஏரி குளங்களை அழித்துப் பல மாடி கட்டிடங்கள் கட்டினால் அது ரியல் எஸ்டேட் வளர்ச்சி, இரும்பையும் பாக்சைட்டையும் ஏற்றுமதி செய்தால் அது அந்நியச் செலாவணி ஈட்டும் நடவடிக்கை, பொதுத்துறை நிறுவனங்களை விற்றால் அது பொருளாதார முன்னேற்றம் – இப்படிப் பன்னாட்டு கம்பெனிகள் மற்றும் டாடா, அம்பானி, அதானி போன்ற தரகு முதலாளிகளுக்கு காடுகளையும் மலைகளையும் சொந்தமாக்கி விட்டு, அவற்றை வெட்டும் “வேலைவாய்ப்பு” மக்களுக்குக் கிடைப்பதைக் காட்டி இதுதான் நாட்டின் வளர்ச்சி என்கின்றன மத்திய, மாநில அரசுகள்.

இந்த அநீதியை விவசாயிகளும் மீனவர்களும் பழங்குடி மக்களும் நாடு முழுவதும் எதிர்ப்பதால், மக்களைக் கட்டாயமாக அவர்களுடைய நிலங்களிலிருந்து வெளியேற்றுவதற்கு ஏதுவாக அவசரச் சட்டம் கொண்டு வந்திருக்கிறது மோடி அரசு. எனவே, நாட்டின் முன்னேற்றத்துக்காக என்ற பெயரில் ஆளும் வர்க்கம் வகுத்திருக்கின்ற இந்தக் கொள்கைதான் கொள்ளையர்களை உருவாக்குகிறது. வளர்ச்சி என்ற பெயரில் அரசு முன்தள்ளும் இந்தக் கொள்கையைத் தடுத்து நிறுத்தாதவரை இத்தகைய கொள்ளையர்கள் உருவாவதைத் தடுக்கவியலாது என்பதைப் புரிந்து கொள்ள வேண் டும்.

மணற்கொள்ளையார்கள் கொன்ற கனகராஜ்
மணல் கடத்தப்படுவதைத் தடுக்க முயன்றபொழுது, மணற் கொள்ளையர்களால் டிராக்டரை ஏற்றிக் கொல்லப்பட்ட வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த போலீசு கான்ஸ்டபிள் கனகராஜ் (கோப்புப் படம்)

இயற்கை வளக்கொள்ளை என்பது அரசே நடத்தும் கொள்ளை. நிலக்கரி, இரும்பு, பாக்சைட் சுரங்கங்களை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு எழுதிக் கொடுத்து விட்டு, மத்திய-மாநில அமைச்சர்கள் இலஞ்சம் வாங்கிக் கொள்கின்றனர். தமிழகத்தின் மணற்கொள்ளையோ நேரடியாக அரசாங்கத்தாலும், அதிகார வர்க்கத்தாலும் நடத்தப்படுகிறது.
மாநில முதல்வர் தான் இந்த மணல் மாஃபியாவின் தலைவர். அதற்கு கீழே உள்ளவர்கள் ஏஜென்டுகள். அமைச்சர், எம்.எல்.ஏ., எதிர்க்கட்சிகள், கனிமவளத்துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள், போலீசு, ஊடகங்கள், சாதிக்கட்சித் தலைவர்கள், உள்ளூர் கையாட்படையினர் என இந்தக் கொள்ளைப் பணம் எல்லா மட்டங்களிலும் பாந்து பரவுகிறது. பணம் வாங்க மறுப்பவர்கள், மணற்கொள்ளையை எதிர்ப்பவர்கள் மிரட்டப்படுகிறார்கள், கொல்லப்படுகிறார்கள்.

ஓட்டுக்கட்சிகளைப் பொருத்தவரை, எதைச் சொல்லியாவது ஓட்டு வாங்கி பதவியில் அமர்ந்து விட்டால், 5 ஆண்டுகளுக்கு இந்த நாடே தங்களுக்குச் சொந்தம் என்றும், எந்த பொதுச்சொத்தையும் தமது விருப்பப்படி விற்க உரிமை உண்டென்றும் அவர்கள் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். சட்டவிரோதமாக இதைச் செய்கிறார்கள். அல்லது இதற்குத் தோதான சட்டத்திருத்தங்களை ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் செய்து கொடுக்கிறார்கள்

அவர்கள் தாங்களே இயற்றிய சட்டங்களை மீறுகிறார்கள். 35 அடி தோண்டி மணலை அள்ளிவிட்டு, 3 அடிதான் தோண்டியிருக்கிறோம் என்று சாதிக்கிறார்கள். இதனைக் கேள்விக்குள்ளாக்கினால், இது மூன்றடியா முப்பதடியா என்று முடிவு செய்யும் அதிகாரம் மக்களுக்கு இல்லை, அதனை சம்மந்தப்பட்ட அதிகாரிகள்தான் முடிவு செய்ய முடியும் என்று கூறி போலீசை வைத்து மிரட்டுகிறார்கள். சம்மந்தப்பட்ட அதிகாரிகளோ, எந்த தவறும் நடக்கவில்லை என்று அறிக்கை தாக்கல் செய்கிறார்கள்.

பொதுச்சொத்தை திருடுவது மட்டுமல்ல, அதைத் தட்டிக் கேட்கும் மக்களிடம் “அப்படித்தான் செய்வோம், உன்னால் என்ன செய்ய முடியும்?” என்று இவர்கள் சவால் விடுகிறார்கள். கிரானைட், தாதுமணல், ஆற்றுமணல் அனைத்து விவகாரங்களிலும் நடப்பது இதுதான். இவர்களிடமே மனுக்கொடுத்து மணற்கொள்ளையைத் தடுக்கவியலுமா? ஒருக்காலும் முடியாது.

“பொதுச்சொத்துக்கு நீ உரிமையாளன் அல்ல, மக்களின் சொத்தை விற்கும் அதிகாரம் உனக்கு கிடையாது. இது மக்கள் சொத்து. சட்டம் சோல்கின்றபடியே கூட அரசும் அரசாங்கமும் இதன் காப்பாளர்களேயன்றி உரிமையாளர்கள் அல்ல. உரிமையாளர்கள் மக்கள்தான்” என்று அரசாங்கம் மற்றும் அதிகார வர்க்கத்தின் அதிகாரத்தை நாம் கேள்விக்குள்ளாக்க வேண்டும்.

நமது நாட்டின் வளங்களைக் கொள்ளையடித்துச் சென்ற பிரிட்டிஷ்காரனிடம் கொள்ளையை நிறுத்துமாறு நாம் மனு கொடுக்கவில்லை. அவனை வெளியேற்றவேண்டும் என்று விடுதலைப் போராட்டம் நடத்தினோம். இப்போது சுதந்திர நாடு என்கிறார்கள். ஜனநாயகம் என்கிறார்கள். அரசு ஊழியர்கள், அதிகாரிகள் எனப்படுவோர் மக்கள் ஊழியர்கள் என்கிறார்கள். நடப்பது என்ன? மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் கொடுத்து வைக்கப்பட்டுள்ள வேலைக்காரர்களான இவர்கள், மக்களை ஏறி மிதிக்கிறார்கள். அதிகாரம் செய்கிறார்கள். மக்கள் சொத்தைக் கொள்ளையடிக்கிறார்கள்.

வேலூர் பாலாறு மணல் கொள்ளை எதிர்ப்பு
களத்தூர் கிராமப் பகுதியில் ஓடும் பாலாற்றில் நடந்து வரும் மணற்கொள்ளையைத் தடுக்கக் கோரி, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், ஆட்சியரின் காரை முற்றுகையிட்டு முழக்கமிடும் பொதுமக்கள் (கோப்புப் படம்)

பொதுச்சொத்துகளையும் பாதுகாப்பவர்கள் என்று தம்மை கூறிக்கொள்ளும் அமைச்சர்களும் அதிகாரிகளும்தான் அவற்றை விற்பதில் முன் நிற்கிறார்கள். கட்டிய மனைவியையே விபச்சாரத்தில் ஈடுபடச் சொல்லி கட்டாயப்படுத்தும் கணவனின் அதிகாரத்துக்கு மனைவி கட்டுப்பட்டு நடக்க முடியுமா? நாட்டின் வளங்களைக் கூட்டிக்கொடுக்கும் இவர்களின் ஆணைக்கு மக்கள் அடிபணிய முடியுமா?

மணற்கொள்ளைக்கு எதிராகப் போராடும் மக்கள் இவர்களிடம் மன்றாடுவதை தவிர வேறு வழியில்லை என்று எண்ணுகிறார்கள். எல்லோரும் திருடர்கள் என்பது உண்மைதான் என்றாலும், தப்பித்தவறி யாராவது ஒரு நேர்மையான அதிகாரி இருந்து மணல் கொள்ளையைத் தடுத்துவிட மாட்டாரா என்று ஏங்குகிறார்கள்.

அப்படி அரிதினும் அரிதாக மிச்சமிருக்கும் ஒரு சிலர்தான் லாரி ஏற்றிக் கொல்லப்படுகிறார்கள். தாசில்தார் முதல் போலீசு ஏட்டு வரை பலர் மணற்கொள்ளையர்களால் கொல்லப்படவில்லையா? நேர்மையான அதிகாரி என்று பெயர் பெற்ற சகாயம் கிரானைட் கொள்ளையை விசாரிக்கிறார். அவருடைய அறையிலேயே உளவுக்கருவியைப் பொருத்தி வேவு பார்க்கிறது அரசு. சகாயத்துக்கு அருகிலேயே நிற்கும் உளவுத்துறை அதிகாரிகளும், கனிமவளத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளும் சகாயத்திடம் புகார் கொடுப்பவர்கள் பெயரைக் குறித்துக் கொண்டு பி.ஆர்.பி.க்கும் அமைச்சர்களுக்கும் உளவு சோல்கிறார்கள்.

மலைக்குன்றுகளைக் காணவில்லை, கண்மாய்கள், குளங்கள், விளைநிலங்களைக் காணவில்லை. இவற்றை காணாமல் போகச் செய்ததில் கலெக்டர் முதல் தலையாரி வரை, முதல்வர் முதல் ஊராட்சி தலைவர் வரை அனைவருக்கும் பங்கு உண்டு. சகாயத்தின் அறிக்கை இவர்களை என்ன செய்து விடும்? தாதுமணல் கொள்ளை குறித்த ககன்தீப் சிங் பேடி அறிக்கை என்ன ஆனது? மொத்த அரசுமே ஒரு கிரிமினல் கொள்ளைக் கூட்டமாக இருக்கும்போது சகாயத்தின் அறிக்கை மீது நடவடிக்கை எடுக்கப்போவது யார்? நீதிமன்றமா?

முதலில் கிரானைட், தாதுமணல், ஆற்றுமணல் கொள்ளை அனைத்தையும் விசாரிக்குமாறு கூறிய சென்னை உயர் நீதிமன்றம், கிரானைட் விவகாரத்தை மட்டும் விசாரித்தால் போதும் என்று மற்றவற்றை மர்மமான முறையில் கைவிட்டு விட்டது. அரசாங்கமோ சகாயத்துக்கு அலுவலகம் ஒதுக்கவே மறுக்கிறது. நீதிமன்றத்தின் அதிகாரத்தை எள்ளி நகையாடுகிறது. பெரும் சவடால் அடித்த நீதிமன்றமோ அரசின் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதில் பின்வாங்குகிறது.

மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் தலைமையில் கார்மாங்குடி மணல் குவாரிக்கு எதிராகப் போராடிய மக்களிடம், “போராட்டத்தைக் கைவிடுங்கள், நீதிமன்றத்துக்கு செல்லுங்கள்” என்று போலீசு – வருவாய்த்துறை அதிகாரிகள் திரும்பத் திரும்ப வலியுறுத்தினார்கள். நீதிமன்றத்தின் மீது மணல் கொள்ளையர்களுக்கு அவ்வளவு நம்பிக்கை. பொக்லைன் வைத்து மணல் அள்ளுவதை அனுமதிக்கும் தீர்ப்புகளை உயர்நீதி மன்றமும், உச்ச நீதிமன்றமும் வழங்கியுள்ளன. தடையில்லாமல் இயற்கை வளங்களைக் கொள்ளையிடும் நோக்கத்துக்காகவே பசுமைத் தீர்ப்பாயம் என்ற சிறப்பு நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. நீதிமன்றத்துக்குப் போனால் என்ன நடக்கும் என்பது ம.உ.பா.மைய வழக்குரைஞர்களுக்கு தெரியுமாதலால், அதிகாரிகள் பின்னிய சதிவலையில் அவர்கள் சிக்கவில்லை.

விவசாயி ராஜா
கிரானைட் குவாரிக்கு நிலத்தைத் தர மறுத்ததால், கிரானைட் கொள்ளையர்களால் தனது கை வெட்டப்பட்டதை ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்திடம் சாட்சியமாக அளிக்கும் இ.மலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராஜா.

நீதித்துறை, கட்சிகள், அதிகாரிகள் உள்ளிட்ட இந்த மொத்த அரசமைப்பும் ஆட்சி செய்யும் அருகதையை இழந்து விட்டது. இந்த அரசமைப்பு தோற்றுவிட்டது. இது ஜனநாயகம் என்பது பொய். இது ஊடகங்களும் அறிவுத்துறையினரும் திட்டமிட்டே உருவாக்கும் ஒரு மாயை. இந்த நாட்டின் விவசாயிகளுக்கும் உழைக்கும் மக்களுக்கும் இந்த அரசமைப்பு எதையும் வழங்கவில்லை என்பது மட்டுமல்ல, காடுகள் மீதும் கடலின் மீதும் நீர்நிலைகளின் மீதும் மேய்ச்சல் நிலங்களின் மீதும் அவர்களுக்கு இருந்த பாரம்பரிய உரிமையையும் சூறையாடுகிறது, திருடுகிறது. எதிர்த்துக் கேட்பவர்களைக் கொன்று போடுகிறது. இதுதான் மன்மோகன் சிங்கும், மோடியும், ஜெயலலிதாவும் முன்வைக்கின்ற வளர்ச்சிப்பாதை. மக்கள் சொத்தைக் கொள்ளையிடுவதென்பது இதன் வழிமுறை.

இப்படிப்பட்ட ஒரு அரசமைப்பை ஜனநாயகம் என்று அழைப்பது அயோக்கியத்தனமில்லையா? இந்த அமைப்பின் அதிகாரத்தின் கீழ் மக்கள் தமக்கான நீதியைப் பெற முடியும் என்று நம்புவது மடமையில்லையா?

மக்கள் தமது வாழ்வாதாரத்தையும், இயற்கை வளங்களையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்றாலே, தங்களது சொந்த அதிகாரத்தை நிறுவிக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆற்று மணலாகட்டும் தாது மணலாகட்டும் அவை மக்களின் உடைமைகள். ஆறுகள், மலைகள், காடுகள் உள்ளிட்ட இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் பொறுப்பை அந்தந்த பகுதிகளில் உள்ள விவசாயிகளே மேற்கொள்வது ஒன்றுதான் இந்தப் பேரழிவைப் தடுப்பதற்கான ஒரே வழி. அந்தந்த வட்டாரத்து விவசாயிகள் தமக்கான பேராயம் ஒன்றை நிறுவிக்கொண்டு தமது அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்ள வேண்டும்.

மணல் எடுக்கலாம் என்று பொதுப்பணித்துறை ஒரு உத்தரவு பிறப்பித்தால், அதனை ரத்து செய்யுமாறு மணற்கொள்ளையர்களின் கூட்டாளிகளான அதிகாரிகளிடம் மன்றாடுவது தவறு. மனுக்கொடுப்பதும், உண்ணாவிரதம் இருப்பதும் பயனற்ற நடவடிக்கைகள். அவர்களுடைய அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கும் நடவடிக்கைகளில் இறங்க வேண்டும்.

மணல் குவாரிக்குத் தடை விதித்து விவசாயிகள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். தங்களது உத்தரவை அமல்படுத்தவும், மணல் மாஃபியாவுக்கு அவர்களுடைய மொழியிலேயே பதிலடி கொடுக்கவும் பாதுகாப்புக் குழுக்களை கிராமம் தோறும் கட்டவேண்டும். தமிழகம் முழுவதும் மணற்கொள்ளைக்கு எதிராகப் போராடும் விவசாயிகள் தமக்குள் ஓர் ஒருங்கிணைவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

இது நடக்க முடியாத கனவல்ல. மக்கள் போராட்டத்தின் வலிமையால் சுமார் ஒரு மாத காலமாக கார்மாங்குடி மணல் குவாரி மூடப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் ஒவ்வொரு மணல் குவாரியையும் நாம் மூட முடியும். இந்தப் போராட்ட முறை எந்த அளவுக்கு எல்லா இடங்களுக்கும் பரவுகிறதோ அந்த அளவுக்கு வெற்றிகளையும் ஈட்ட முடியும்.

– சூரியன்
__________________________________
புதிய ஜனநாயகம், ஜனவரி 2015
__________________________________

ஆப்பு-ரெய்சல் !

3

”மச்சி அப்ரெய்சல் ரேட்டிங் (appraisal rating) பலம்ம்மா விழுந்திருக்கும் போல இருக்கே?”

”டேய்.. வெந்த புண்ல வெரலைப் பாய்ச்சாதடா. சாவடிச்சிட்டானுக”

“சும்மா பீலா விடாதடா.. நீ உன்னோட ப்ராஜக்ட் மேனேஜருக்கு செமயா சொம்படிப்பியே.. போன வருசம் அவுட்ஸ்டேண்டிங் (outstanding) தானே?”

பெர்பார்மன்ஸ் அப்ரைசல்
“ஆல் த பெஸ்ட்” “எனக்கு 40% ஹைக் கிடைக்கும்னு நினைக்கிறேன்” “ஒனக்கு நாங்க கொடுக்கணும்னு நெனைச்ச 1% கூட்டித் தர இந்த வருசம் பணம் இல்ல. ஆனாலும், நல்லா வேல செய்றவங்கள ஊக்குவிக்கணும் என்கிற நிறுவன கொள்கைப்படி, ஒரு நாளைக்கு உனக்கு ஒரு நாளைக்கு இன்னும் ரெண்டு இலவச பெப்சி தர சண்ட போட்டு அனுமதி வாங்கியிருக்கேன் ” “அதுக்கப்பறம், அவரு ஒரு போர்ஷ் (கார்) தர்றதா சொன்னாரு, ஆனா அதோட நிறம் எனக்கு பிடிக்கல. வேண்டாம்னுட்டேன்”

”எவன்டா சொன்னான்? வருசா வருசம் அப்ரெய்சல் மீட்டிங் போகும் போதும் எப்டியாவது இம்ப்ரெஸ் (impress) பண்ணிடலாம்னு பார்ப்பேன்.. ஒவ்வொரு வருசமும் ‘ஆப்பு’ரெய்சல் பண்ணி அனுப்பிடறானுங்க.. பேசாம ஊர்லயே இருந்து அப்பாவோட சேர்ந்து பெயிண்டிங் காண்ட்ராக்ட் எடுத்து செய்திருக்கலாம்..”

“என்னாச்சி மச்சி.. இந்த வருசம் ரெண்டு பெஸ்ட் பெர்பார்மர் அவார்டு (best performer award) கூட வாங்கியிருந்தியேடா?”

”ஆமாமா.. ரெண்டையும் நீள நீளமா வெட்டி நாக்கு வழிக்க வச்சிக்கலாம்.. வேணா சொல்லு உனக்கும் தர்றேன்”

“சரி மீட்டிங் எப்டி போச்சின்னு சொல்லு.. எங்களுக்காவது பயன்படும். அடுத்து எங்களைத் தான் கூப்டுவானுங்க.. ஆமா அவனுங்க அப்ரெய்சல் பன்றதுக்கு முன்னாடி நாமளே செல்ப் அப்ரெய்சல் (Self Appraisal – தனது பணித்திறன் குறித்து ஒவ்வொரு ஊழியரும் சுயமதிப்பீடு செய்து நிர்வாகத்திற்கு அனுப்புவது) செய்யணுமே.. அதில் நீயே உனக்கு கொடுத்த ரேட்டிங் எவ்வளவு?”

பெர்பார்மன்ஸ் அப்ரைசல்
பெர்பார்மன்ஸ் அப்ரைசல் – நோக்கமும் விளைவும்

”மச்சி.. எல்லாத்துக்கும் என்னோட செல்ப் அப்ரெய்சல் ரேட்டிங்கா நான் அவுட்ஸ்டாண்டிங் தான் போட்டிருந்தேன்.. ங்கொய்யால எல்லாத்தையும் நீட் இம்ப்ரூவ்மெண்டா (need improvement) மாத்திட்டானுங்கடா”

”எப்டி மச்சி?”

”டிரெய்னிங் அண்ட் சர்டிபிகேசன் காலம்லே (training and certification column) 5 ஸ்டார் போட்டுருந்தேன். நான் தான் RHCE சர்டிபிகேசன் பண்ணிருந்தேன்ல?”

”ஆமா?”

“அவனுங்க ப்ளேட்டை அப்டியே தலைகீழா போட்டுட்டானுங்க. நீ சர்டிபிகேசன் பண்ணிருக்கே… ஆனா, அதை வச்சி டீம்ல இருக்கிற மத்தவங்களுக்கு ட்ரெய்னிங் குடுத்து அவங்களை டெவலப் (develop) பண்ணலையேன்னு கேட்டு மடக்கிட்டானுங்க”

“ம்..ம்ம்”

”அதே மாதிரி டாகுமெண்டேசன் காலம்ல (Documentation column – பணி விவரங்களை ஆவணப்படுத்துதல்) 5 ஸ்டார் போட்ருந்தேன்.. அவன், ஹார்ட் காப்பி டாக்குமெண்டேசன் (hard copy documentation) மட்டும் போதாது.. உன்னோட மெயில் பாக்ஸ் பேக்கப் (mail box backup) எடுக்கலை. அதுக்காக 3 ஸ்டார் தான் தருவேன்னு சொல்லிட்டான்”

“ம்..ம்ம்”

“என்னோட கம்யூனிகேசன் பத்தி எல்லாருக்கும் தெரியும்ல? இவன் என்னடான்னா நான் அனுப்பற ஈமெயில் ரெண்டுல எஸ்.எம்.எஸ் லேங்குவேஜ் (s.m.s language) இருந்ததுன்னு சொல்லி அதையும் குறைச்சிட்டான்.. ங்கொய்யால… இவனுக்கு இங்கிலீசே தெரியாது மச்சி.. நான் தான் இவன் க்ளையண்டுக்கு அனுப்பற மெயில் எல்லாத்தையும் அடிச்சிக் குடுத்தேன்.. எனக்கே ஆப்பு வச்சிட்டான்டா”

“அப்புறம்?”

”வேற என்ன.. இதே மாதிரி எல்லாத்தையும் ப்யூஸ் புடுங்கி விட்டுட்டானுங்கடா..”

”டேய்.. நீ அந்தாளுக்கு ஹட்ச் டாக் (Hutch Dog) மாதிரி ஆச்சேடா.. அந்தாளு டீ குடிக்கப் போனா நீ தான் க்ளாஸ் தூக்கப் போவே.. அந்தாளு தம்மடிக்கப் போனா நீ தான் பத்த வச்சி குடுப்பே.. அந்தாளு கக்கூஸ்ல என்னைக்கு எத்தினி பாம் போடுவான்ங்கற வரைக்கும் உனக்கு அத்துப்படியாச்சேடா.. உனக்கே அல்வா குடுத்துட்டானாடா?”

”மச்சி ப்ரெண்டுனு கூட பாக்காம அசிங்கசிங்கமா திட்டிறப் போறேன். நான் வேணும்னா கூட போனேன்.. அவந்தாண்டா எங்க போனாலும் கூட்டிட்டே சுத்துனான்.. இவனுங்களுக்கு நாம வேலையும் செய்யணும்.. எடுப்பு மாதிரி இவனுங்க போற வர்ற எடத்துக்கும் போகணும்.. கஸ்டமர்கிட்டே இவனுக்கு டெக்னிக்கலா பேச தெரியாதுன்றது எனக்கு மட்டுந்தான் தெரியும் மச்சி”

”அப்ப போன வருசமெல்லாம் அப்ரெய்சல் ரேட்டிங்கை லாரில வாங்கி எறக்குன மாதிரி கெத்தா சுத்திட்டு இருந்தே?”

கூட்டு பேரம்
நிறுவனத்தோடு சமமாக பேசுவதற்கு கூட்டு பேரம்தான் ஒரே வழி

”எல்லா வருசமும் ஒக்கார்ற எடத்துக்கு ஆப்பு தான்டா.. நானும் இந்த வருசம் ஒழுங்கா நடக்கும் அடுத்த வருசம் ஒழுங்கா நடக்கும்னு பாத்துப் பாத்து ஓஞ்சி போய்ட்டன்டா. மொதோ வருசம் என்னா சொன்னானுங்க.. கம்பெனி நஷடத்துல போகுதுன்னானுங்க. அடுத்த வருசம் லாபம் தான், ஆனா புதுசா ஒரு கம்பெனியை வாங்கி இன்வெஸ்ட் பண்ணிருக்கோம், அதனால இந்த வருசம் சம்பளத்தை கூட்ட முடியாதுன்னு சொன்னானுங்க. அதுக்கடுத்த வருசம் புதுசா வாங்கின கம்பெனியால நஷடம்னு சொன்னானுங்க. போன வருசம் நஷடத்தை சரி பண்ணிட்டோம், புதுசா இன்வெஸ்ட் பண்ணப் போறோம்னு சொன்னானுங்க. இந்த வருசம் புது இன்வெஸ்ட்மெண்ட் வொர்க் அவுட் ஆவலைன்னு பழைய கதையையே திரும்பவும் சொல்றானுங்க..”

”அப்ப எங்களுக்கும் ஆப்பு தானாடா?”

”அதுல மட்டும் பாரபட்சமே பாக்க மாட்டானுங்க மச்சி. எல்லாருக்கும் ஒர்ரே மாதிரி ஆப்பு தான்”

”எல்லா கம்பேனியும் இதே போங்காட்டம் தாண்டா ஆடறானுங்க. எங்க போன கம்பெனில எனக்கும் இதான் நடந்திச்சி. அப்ரெய்சல்ல நான் எனக்கு போட்ருந்த எந்த ரேட்டிங்கையும் அவனால குறைக்க முடியலை.. கடைசில உனக்கு ஆட்டிட்யூட் ப்ராப்ளம் (attitude problem), அதனால நீட் இம்ப்ரூவ்மெண்ட் போடறேன்னு சொருவிட்டான்”

“உனக்காச்சிம் பரவால்ல.. நம்ம விவேக் இருக்கான்ல அவன் கம்பேனில அப்ரெய்சல்ல ஒரு பாயிண்டா “எபக்டிவ் ப்ரசண்டேசன் – (effective presentation)” அப்படின்னு ஒண்ணு வச்சிருக்கானுங்க.. அதுல இவனுக்கு பாடி லேங்குவேஜ் (body language) சரியில்லேன்னு பாயிண்டைக் குறைச்சிருக்கான் அவனோட மேனேஜர். என்னடான்னு கேட்டதுக்கு உன்னோட பாடி லேங்குவேஜ் டீமுக்கு உள்ளே பாசிட்டிவ் ரேடியேசன (positive radiation) கொண்டார மாட்டேங்குதுன்னு சொல்லியிருக்கான்…. பி.ஈ படிச்சதுக்கு சாமியார் கோர்ஸ் படிச்சிருந்தா நித்யானந்தா மாதிரி வைப்ரேசன் மோட்லயே இருந்திருக்கலாம்னு நொந்து போயிட்டான்டா விவேக்கு”

”அப்புறம் என்னாத்துக்குடா இவனுங்க வருசத்துக்கு ஒரு வாட்டி அப்ரெய்சல்னு ஒன்னை வச்சி நம்மளை நம்ப வச்சி ஏமாத்தறானுங்க?”

”கேரட்டைக் காட்டினாத் தானே கழுதை முன்னே போகும்? ஏற்கனவே எந்த டீமுக்கு எவ்வளோ குடுக்கணும்.. எவனுக்கு ஆப்பு வைக்கணும்னு பேசிட்டு தான்டா அப்ரெய்சல் மீட்டிங்கே வைக்கிறானுங்க.. இதெல்லாம் சும்மா கண் துடைப்பு தான்டா… இப்ப பாரேன் நான் கோடிங் எழுதறேன்; அதனால என்னோட டார்கெட் படி குறைவா தப்பு வர்ற மாதிரி கோடிங் எழுதணும். நீ அதே டீம்ல டெஸ்டிங்ல இருக்கிறே நான் எழுதற கோடிங்லே எவ்ளோ அதிகமா தப்பு கண்டுபிடிக்க முடியுமோ அந்தளவுக்கு உனக்கு ரேட்டிங்”

”அப்ப டெக்னிக்கலா பார்த்தா… எனக்கு நீ எதிரி, உனக்கு நான் எதிரி”

”அது மட்டும் இல்லே.. நம்ம ஜெய் இருக்கான்லே அவன் மார்கெட்டிங்ல இருக்கான்… என்னதான் நான் எழுதற கோடிங் கரெக்டா இருந்தாலும் அடிக்கடி ஒரு புது லாஞ்ச் காட்டணும் (மென்பொருட்களுக்கு சந்தையில் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அதன் இடைமுகத்தை (UI / UX) அடிக்கடி மாற்றுவது).. அவன் புது லாஞ்ச் கொண்டு வர மொக்கையா எதாவது காரணத்தை உருவாக்கலேன்னா அவனுக்கு ஆப்பு, உருவாக்கினா எனக்கும் உனக்கும் ஆப்பு”

“ஆக மொத்தத்துல நாம எல்லாரும் பாரபட்சமே இல்லாம ஒருத்தனுக்கு ஒருத்தன் விரோதிங்க தான்; இல்லே? இந்த மாதிரி போங்காட்டம் ஆடறதுக்கு பேசாமே இதான் கம்பேனியோட வருச லாபம்.. அதுல இந்த இந்த டிபார்ட்மெண்ட் இந்தளவுக்கு லாபம் சம்பாதிச்சிருக்கு.. அதுல மேனேஜ்மெண்டுக்கு இவ்ளோ எம்ப்ளாயிக்கு இவ்ளோனு இருக்கிற ஒவ்வொருத்தனுக்கும் சம்பளத்துல சமமா இவ்வளவு கூட்டறோம்னு வெளிப்படையா சொல்லிடலாம்ல?”

“செய்ய மாட்டானுங்க. அப்டி செஞ்சா டீம்ல இருக்கிற எல்லாரும் ஒன்னா சேர்ந்துக்குவாங்க இல்ல? இப்ப இருக்கிற மெத்தட்ல அவனவன் அவனவனோட பெர்பார்மென்சை மட்டும் பாத்துட்டு அமைதியாயிடறான். அதே மாதிரி ஒவ்வொரு வருசமும் கம்பேனிக்கு டார்கெட் செட் பண்றதும் பிரச்சினை தான்.. அவனோட பிசினஸ் டார்கெட்டை நாம எப்படி அடைய முடியும்? முடியுமா முடியாதான்னு நம்ம கிட்ட கேட்டா டார்கெட் செட் பண்றான்? அடையவே முடியாத டார்கெட்டை நம்ம கிட்ட கேக்காமலேயே செட் பண்ணிட்டு.. அதை அடைய முடியலைங்கறதுக்கு பழியையும் நம்ம தலைலயே கட்றானுங்க”

”கரெக்டு மச்சி.. ஒவ்வொரு வருசமும் டாப் மேனேஜ்மெண்ட்ல இருக்கறவன் எல்லாம் வீங்கிட்டே போறானுங்க நாம ராத்திரி பகலா கண்ணு முழிச்சி கோடிங் எழுதிக் கொடுத்துட்டு நாய் மாதிரி எப்படா பொறை வீசுவான்னு தேவுடு காக்க வேண்டியிருக்குடா”

”நீ வேணா பாரேன்… பிசினஸ் எடுக்கறது அவன் வேலை.. ரெவின்யூ கொண்டாறது அவன் வேலை.. அதுக்கு டார்கெட் செட் பண்றதும் அவன் வேலை.. ஆனா, லாபத்துல கொஞ்சம் குறைஞ்சிடுச்சின்னா நமக்கு அப்ரெய்சல்ல ஆப்பு. நம்மளுக்கு குறைச்சி குடுத்துட்டு மிஞ்சின அமௌண்டை பல்க்கா அவனுங்க எடுத்துக்கறானுங்க”

“இல்ல மச்சி.. நீ தப்பா சொல்றே.. அவனுங்களுக்கு தேவையானதையெல்லாம் முதல்லயே எடுத்துட்டு மிஞ்சின கொசுறை நமக்கு போடுறானுங்கடா..”

”டேய் உன் போன் அடிக்குது பாரு”

”எனக்கும் அழைப்பு வந்துடுச்சு மச்சி.. போய் இருக்கறதுலேயே நல்ல ஆப்பா பாத்து வாங்கிட்டு வர்றேன்.. நான் வர்றதுக்குள்ளே போய்டாத வெய்ட் பண்றா..”

”ஓக்கே மச்சி.. பை”

– தமிழரசன்

நீதியின் பலிபீடங்களாக நீதிமன்றங்கள்!

0

நீதி – நியாயத்தை மக்கள் பெறுவதற்கான கடைசி புகலிடமாகச் சித்தரிக்கப்படும் நீதித்துறையானது, வழக்குகளைக் கையாளும் முறையே குற்றவாளிகளைக் காப்பாற்றும் நோக்கில்தான் உள்ளது என்பதை ஜெயலலிதா – சசிகலா கும்பலுக்குப் பிணை வழங்கிய தீர்ப்பு அம்பலப்படுத்தியிருக்கிறது. இது ஏதோ விதிவிலக்கான விவகாரமாகக் கருத முடியாது. இப்படித்தான் ஏறத்தாழ எல்லா வழக்குகளையும் நீதித்துறை கையாள்கிறது . சாலைப் பணியாளர்கள் வேலை பறிக்கப்பட்ட வழக்கே இதற்குச் சான்று கூறப் போதுமானது.

சகாயம் குழு
இதர மாவட்டங்களில் கனிம வளச் சூறையாடலில் ஈடுபட்டு வரும் கொள்ளையர்கள் தப்பிக்கவும், முறைகேடுகளை மூடிமறைக்கவும் கால அவகாசத்தை ஏற்படுத்திக் கொடுத்து, தற்போதைக்கு மதுரை மாவட்டத்தில் மட்டும் விசாரித்தால் போதுமென்ற மொன்னையான நீதிமன்ற உத்தரவுப்படி, கிரானைட் முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்யும் முன்னாள் மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயம்

தி.மு.க. ஆட்சியின்போது நியமிக்கப்பட்ட 13 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்களை ஆட்சிக்கு வந்ததும் ஜெ. கும்பல் பணி நீக்கம் செய்து வீதியில் வீசியெறிந்ததை எதிர்த்து அப்பணியாளர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி சுகுணா, பணிநீக்கத்துக்கு இடைக்காலத் தடை விதித்தார். இத்தீர்ப்புக்கு எதிராக ஜெ. அரசு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அதை விசாரித்த தலைமை நீதிபதி இக்பால், சிவஞானம் ஆகியோர், நீதிபதி சுகுணா பிறப்பித்த உத்தரவை நீக்க முடியாது என்றும், மக்கள் நலப் பணியாளர்களை டிஸ்மிஸ் செய்யக் கூடாது என்றும் தீர்ப்பளித்தனர். பின்னர் இதை எதிர்த்து ஜெ அரசு உயர் நீதிமன்றத்தில் சீராய்வு முறையீடு செய்தது. இதை விசாரித்த நீதிபதி அனில்தவே, தீபக் மிஸ்ரா அடங்கிய அமர்வு, மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கத் தேவையில்லை என்று ஜெ. அரசுக்கு ஆதரவாக தீர்ப்பு கூறி உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது.

இதை எதிர்த்து மக்கள் நலப் பணியாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கை மீண்டும் சென்னை உயர் நீதிமன்றமே விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, கடந்த ஆகஸ்ட் 19 அன்று இந்த வழக்கை விசாரித்த பால்வசந்தகுமார், சத்திய நாராயணன் ஆகிய நீதிபதிகள், மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டுமென்றும், பணி ரத்து செயப்பட்டதால் அவர்களில் 26 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதைக் குறிப்பிட்டு, அவர்களுக்கு அரசுப்பள்ளிகள், மதுஒழிப்புப் பிரச்சாரம் போன்ற வேறு பணிகளையாவது வழங்க வேண்டுமென்றும், இவற்றை 31.10.2014க்குள் நிறைவேற்ற வேண்டுமென்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஜெ. அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த மனு செப்.23 அன்று உச்ச நீதிமன்ற நீதிபதி அனில் தவே தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, உயர் நீதிமன்ற உத்தரவுக்குத் தடை விதித்து விசாரணையை ஜனவரி முதல் வாரத்துக்கு நீதிபதிகள் தள்ளி  வைத்துள்ளனர்.

கடந்த மூன்றரை ஆண்டுகளாக மக்கள் நலப் பணியாளர்களை உச்ச நீதிமன்றம் வரை இழுத்தடித்து படாதபாடு படுத்தியிருக்கிறது ஜெ. அரசும் நீதித்துறையும். அவர்களில் பெரும்பாலோர் தாழ்த்தப்பட்ட மிகவும் பிற்பட்ட சமூகப் பின்னணியைச் சேர்ந்தவர்கள். கடந்த 20 ஆண்டுகளாகப் பணியாற்றியுள்ள அவர்கள் இத்தனை வருடங்களுக்குப் பிறகு வயதையும் தொலைத்துவிட்டு வேலையுமிழந்து பரிதவிக்கிறார்கள். ஆனாலும் ஜெ. அரசுக்குச் சாதகமாக இந்த வழக்கை இன்னமும் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது மனித உணர்ச்சியே இல்லாத நீதித்துறை. நீதித்துறை வழக்கைக் கையாளும் முறையைப் புரிந்துகொள்ள இதுவொரு உதாரணம்தான்.

சாலைப் பணியாளர்கள்
ஜெ. அரசால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள சாலைப் பணியாளர்கள், தங்களை மீண்டும் பணியில் அமர்த்தக் கோரி விழுப்புரம் அருகே தூக்குக் கயிறுடன் நடத்திய சாலை மறியல் போராட்டம். (கோப்புப் படம்)

தனியார் பள்ளிப் பேருந்துகளை முறைப்படுத்தக் கோரும் வழக்கு, குடியிருப்புப் பகுதிகளிலிருந்து டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரும் வழக்கு, பெண்கள் மீதான பாலியல் கொடுமைகளைத் தடுக்கக் கோரும் வழக்கு, பேருந்து நிழற்குடைகளை அமைப்பதில் நடந்துள்ள ஊழல் குறித்த வழக்கு, விதிமுறைகளை மீறி அடுக்குமாடிக் குடியிருப்புகள் – வணிக வளாகங்கள் கட்டப்பட்டுள்ளதை எதிர்த்த வழக்கு, ஆக்கிரமிப்பாளர்களால் புழல் ஏரிப் பகுதியில் 18 கிணறுகளைக் காணவில்லை என்ற வழக்கு – என இப்படி எல்லா பொதுநல வழக்குகளையும் கண்டுகொள்ளாது தட்டிக்கழிப்பது, ஒத்திவைப்பது, அரசிடம் விளக்கம் கேட்டு வழக்கை இழுத்தடிப்பது, தானே போட்ட உத்தரவுகளைச் செயல்படுத்த எந்த நடவடிக்கையும் இன்றிச் செயலற்றுக் கிடப்பது – என்பனவற்றின் மூலம் மேற்படிக் குற்றங்களுக்கு  நீதித்துறையே உடந்தையாக மாறிப்போவிட்டது.

அண்மையில் டிராபிக் ராமசாமி தொடுத்த பொதுநல வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கனிமவள முறைகேடுகள் பற்றி விசாரிக்க மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த சகாயம் தலைமையில் குழு அமைக்க உத்தரவிட்டதோடு, இரண்டு மாதங்களுக்குள் தனது அறிக்கையை அளிக்க வேண்டுமெனவும் கூறியது. இதனை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செத மனுக்கள் உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனால் சகாயம் தலைமையில் குழுவை அமைத்து விசாரணை நடத்த தமிழக அரசு வேறுவழியின்றி உத்தரவிட்டுள்ள அதேசமயம், அதனைச் சீர்குலைக்கும் வேலையையும் செய்து வருகிறது.

இதையடுத்து கனிமவள முறைகேடு குறித்து மதுரை மாவட்டத்தில் மட்டும் விசாரிக்க வேண்டுமா, அல்லது தமிழகத்தின் 32 மாவட்டங்களிலும் விசாரணை நடத்த வேண்டுமா என்பதைத் தெளிவுபடுத்தக் கோரி சகாயம் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி கவுல் அடங்கிய அமர்வு, மதுரை மாவட்டத்தில் நடந்துள்ள கனிம வள முறைகேடுகள் பற்றி முதற்கட்டமாக விசாரித்தால் போதுமானது, இது பெரிய விவகாரம் என்பதால் கொஞ்சம் கொஞ்சமாக விசாரணையை விரிவுபடுத்திக் கொள்ளலாம் என்று மொன்னையாக தீர்ப்பளித்துள்ளது.

சிறிய பேருந்து
சிறிய பேருந்துகளில் வரையப்பட்டிருப்பது இரட்டை இலை ஓவியம் அல்ல, மாசு இல்லாத பேருந்தைக் குறிக்கும் பசுமை இலை ஓவியம் என்ற ஜெ. தரப்பின் வாதத்தை ஒருபுறம் ஏற்றுக் கொண்டு, மறுபுறம் ஏற்காடு தேர்தல் முடியும்வரை தற்காலிகத் தடை விதித்து ஜெ. மனங்கோணாதபடி பவ்யமாகத் தீர்ப்பளித்தது சென்னை உயர்நீதி மன்றம்.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பொதுப்பணித்துறையின் துணையுடன் தனியார் நிறுவனங்கள் சட்டவிரோதமாக கனிமவளக் கொள்ளையில் ஈடுபட்டு வருவது யாவரும் அறிந்த உண்மை. ஆற்று மணல், செம்மண், கல் குவாரிகள், தாதுமணல், கிரானைட் உள்ளிட்ட அனைத்து வகையான கனிம வளக் கொள்ளையையும் சகாயம் குழு விசாரிக்க வேண்டுமென கோரிக்கைகள் வலுத்துள்ள நிலையில், தற்போதைக்கு மதுரை மாவட்டத்தில் மட்டும் விசாரித்தால் போதுமென நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளதன் மூலம் இதர மாவட்டங்களில் கனிம வளக் கொள்ளையில் ஈடுபட்டுவரும் கொள்ளையர்கள் தப்பிக்கவும், முறைகேடுகளை மூடிமறைக்கவும் கால அவகாசத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது, நீதித்துறை.

இதுவொருபுறமிருக்க, அரசு கணக்கின்படியே 16,000 கோடி ரூபாய் அளவுக்கு கிரானைட் ஊழலில் ஈடுபட்ட பி.ஆர்.பி. நிறுவனம், மதுரை தவிர இதர மாவட்டங்களில் குவாரி தொழிலில் ஈடுபடலாம் என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிபதி ராஜா அண்மையில் உத்தரவு பிறப்பித்துள்ளார். உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த ஒரு வழக்கில், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கையாண்டு வரும் வழக்கில் குறுக்கே புகுந்து தனியாக இப்படியொரு அயோக்கியத்ததனமான உத்தரவைப் பிறப்பித்து பி.ஆர்.பி. கும்பலின் பகற்கொள்ளை தொடர மதுரைக் கிளை நீதிபதியான ‘வசூல்’ ராஜா பச்சைக் கொடி காட்டியுள்ளார். மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சார்பில் வழக்குரைஞர் வாஞ்சிநாதன் இதில் தலையிட்டு மனு தாக்கல் செய்த போதிலும், அதனை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமலேயே தீர்ப்பளித்திருக்கிறார் ராஜா.

இப்படித்தான் தூத்துக்குடி ஸ்டெர்லைட்  ஆலையை மூடச்சோல்லி சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2010-ம் ஆண்டு அளித்த தீர்ப்பை முற்றாக ரத்து செய்து 2.4.2013-ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தமிழக அரசு மன்னார் வளைகுடாவைத் தேசிய கடல் பூங்காவாக அறிவித்திருப்பதை மைய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் இன்னும் அங்கீகரிக்கவில்லை என்று மொன்னையான காரணத்தை முன்வைத்து, ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்க தாராள அனுமதி அளித்தது. அதேசமயம் தனது அநீதியான தீர்ப்பு அம்பலமாகாமலிருக்க, ஸ்டெர்லைட் ஆலை கடந்த 15 ஆண்டுகளில் ஏற்படுத்திய சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்து தன்னை யோக்கியவானாகக் காட்டிக் கொண்டது. குற்றவாளிகளுக்கு அபராதம் விதித்து அவர்களைத் தண்டனையின்றித் தப்பிக்கவைக்கும் கட்டப்பஞ்சாயத்து நாட்டாமைகளின் தீர்ப்புக்கும் இதற்கும் வேறுபாடு ஏதும் இருக்கிறதா?

மவுலிவாக்கம் கட்டிட இடிவு
கடந்த ஜூன் இறுதியில் 11 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்து 61 பேரைப் பலிகொண்டு, 27 பேரைப் படுகாயப்படுத்திய சென்னை-மவுலிவாக்கம் பயங்கம் : இப்பகுதியை சீல் வைத்து விசாரணை நடத்த உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், விசாரணை முழுமையாக நிறைவடையாத நிலையில் அவசரமாக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யக் கூடாது என்று கூறி குற்றவாளிகளைக் காப்பாற்ற இன்னமும் இந்த வழக்கை இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது.

இப்படி கட்டப்பஞ்சாயத்து நடத்தும் நீதிபதிகள், பொதுநல வழக்கு தொடுப்பவர்கள் மீதே குற்றம் சாட்டித் தண்டிக்கவும் தவறுவதில்லை. பத்திரிகையாளர் அன்பழகன், வழக்கத்துக்கு மாறாக சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 2015-ஆம் ஆண்டில் தீபாவளிக்கு 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. “உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி வடமாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால், வடமாநிலக் கலாச்சாரத்தை இங்கு திணிக்க முயற்சிக்கும் வகையில் கூடுதலாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதை ரத்து செய்ய வேண்டுமெனக் கோரி” அண்மையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இதை தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் அடங்கிய முதன்மை அமர்வு விசாரித்தபோது, தீபாவளி பண்டிகைக்குக் கூடுதல் விடுமுறை அவசியமா, இல்லையா என்பதையோ, இது வடமாநிலக் கலாச்சாரத்தைத் திணிக்கும் செயல்தானா என்பதையோ பரிசீலிக்காமல், மனுதாரர் மீது பாய்ந்தனர். மனுதாரர் பிரிவினைவாதத்துடன், நாட்டைப் பிரிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் என்று அபாண்டமாகக் குற்றம் சாட்டினர். இவர் விளம்பரத்துக்காக மனு தாக்கல் செய்து மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்துகிறார் என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்து, எதிர்காலத்தில் இதுபோன்ற மனுக்கள் தாக்கல் செயப்படுவதைத் தடுக்கும் நோக்கில் வழக்கு செலவுக்காக மனுதாரருக்கு ரூ 20,000 அபராதம் விதித்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

இப்படி கடுமை காட்டும் நீதிபதிகளின் அணுகுமுறையும் தீர்ப்பும் ஆளும் ஜெ. தரப்பின் வழக்கு என்றால் வேறு மாதிரியாக மாறிவிடுகிறது. ஏற்காடு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சென்னை மற்றும் புறநகரில் இயக்கப்படும் சிறிய பேருந்துகளில் ஆளும் கட்சியின் இரட்டை இலை சின்னம் வரையப்பட்டிருந்ததை எதிர்த்து, அதை நீக்கக் கோரி மு.க. ஸ்டாலின் தொடர்ந்த வழக்கை இழுத்தடித்த சென்னை உயர்நீதி மன்றம், பின்னர் இது இலை ஓவியம் அல்ல, மாசு இல்லாத பேருந்தைக் குறிக்கும் பசுமை இலை ஓவியம் என்ற ஜெ. தரப்பு வாதங்களைக் கேட்டுவிட்டு, இலை ஓவியத்தை உள்நோக்கம் எதுவும் இல்லாமல் தமிழக அரசு வரைந்துள்ளதாகக் கூறுவதை ஏற்பதாகவும், இருப்பினும், இது வாக்காளர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் கருதுவதால், அதன் முடிவை ஏற்று வழக்கைத் தள்ளுபடி செவதாகவும் ஜெ. மனங்கோணாதபடி பவ்யமாகத் தீர்ப்பளித்தது. ஜெ. கும்பல் திமிர்த்தனத்தைக் கண்டிக்கவோ, நீதிமன்ற நேரத்தை வீணடித்ததற்காக அபராதம் விதிக்கவோ அது முன்வரவில்லை.

குற்றவாளிகளைத் தப்புவிக்க வழக்கை ஆண்டுக் கணக்கில் இழுத்தடிப்பது, எதிர்த் தரப்பு வாதங்கள் எதையுமே கேட்காமல் தீர்ப்பு கூறுவது, வழவழா கொழகொழாவென தீர்ப்புகளை எழுதுவது, குற்றவாளிகளை எச்சரிப்பதுபோல நாடகமாடி சலுகை காட்டுவது, நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காத மத்திய-மாநில அரசுகளுக்குக் கண்டனம் தெரிவிப்பது, அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுப்பது, பிறகு மன்னிப்பு வாங்கிக் கொண்டு வழக்கைத் தள்ளுபடி செவது என்பன போன்ற நடைமுறைகளெல்லாம் நீதித்துறையின் வாடிக்கையாகிவிட்டன. இந்த மானக்கேடான நிலைமை பற்றி மாட்சிமை தங்கிய நீதிபதிகள் கடுகளவும் வெட்கப்படுவதில்லை.

– மனோகரன்
________________________________________
புதிய ஜனநாயகம், ஜனவரி 2015
________________________________________

மோடியின் ‘தேசபக்த’ கோட் – கார்ட்டூன்

1

modi-special-coat-cartoonபடம் : ஓவியர் முகிலன்

போலீசு அடக்குமுறையுடன் மொழிப்போர் நினைவுநாள்

0

மிழ்நாட்டு மாணவர்களின் இந்தித்திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின் பொன்விழா ஆண்டினை நினைவு கூர்ந்து அப்படி ஒரு மொழிப்போரினை மீண்டும் துவக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தமிழகம் முழுவதும் பேருந்து, ரயில், குடியிருப்புப் பகுதிகள் என எல்லா இடங்களிலும் மக்களிடம் பிரச்சாரம் செய்து வருகிறது.  சைக்கிள் பேரணி, கல்லூரிகளில் வாயில் நாடகம் என பல வடிவங்களில் பிரச்சாரம் செய்யப்பட்டது.

ஜனவரி 25, 2015 அன்று மொழிப்போர் தியாகிகள் நாள் புரட்சிகர அமைப்புகளால் தமிழகத்தின் அனைத்து முக்கிய நகரங்களிலும் கடைப்பிடிக்கப்பட்டது. அது தொடர்பான தகவல்கள், புகைப்படங்களின் நான்காவது பகுதி.

9. தருமபுரி மாவட்டம்

ருமபுரி மாவட்டத்தில் ஜனவரி 25 தமிழக மாணவர்களின் வீரம் செறிந்த போராட்டத்தை நினைவு கூரும் வகையில் பேருந்துகளிலும், பள்ளி கல்லூரிகளிலும் சுவரொட்டிகள் ஒட்டி, பிரசுரம் வினியோகிக்கப்பட்டது. தெருமுனைக் கூட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டது.

anti-hindi-imposition-dharmapuri-2பென்னாகரம், தருமபுரி, சேலம் பகுதிகளில் பேருந்து பிரச்சாரம் செய்யப்பட்டது. பென்னாகரத்தில் சுவரொட்டி ஒட்டி, தியாகிகள் புகைப்படத்தை பிடித்துக் கொண்டு பேருந்து நிலையம் நடுவில் செஞ்சட்டையும், செங்கொடியும் பிடித்துக் கொண்டு வீரம் செறிந்த முழக்கமிட்டனர். கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் கலந்து கொண்ட கூட்டத்தை தருமபுரி மாவட்ட அமைப்பாளர் தலைமை தாங்கி நடத்தினார். மாணவர்கள், பொதுமக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பிரசுரத்தை கேட்டு வாங்கி போனார்கள். கூட்டம் முடிந்து தியாகிகள் புகைப்பட பேனரை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.

anti-hindi-imposition-dharmapuri-1திட்டமிட்டபடி மாணவர்கள் செங்கொடியைக் கட்டிக் கொண்டு சைக்கிள் பேரணியாக 40 கிலோமீட்டர் பிரச்சார பயணம் மேற்கொண்டனர். மாணவர்களின் பிரச்சார பயணம் வழிநெடுகிலும், பாதசாரிகளையும், இரு சக்கர ஓட்டுனர்களையும், பேருந்து பயணிகளையும் திரும்பிப் பார்க்க வைத்தது; வண்டியை நிறுத்தி பிரசுரங்களை கேட்டு வாங்கிக் கொண்டு ஆதரவு தெரிவித்து சென்றனர். ஒரு இளைஞர் பிரசுரத்தை வாங்கிக் கொண்டு தானும் உறுப்பினர் என்று அடையாள அட்டையைக் காட்டிக் கொண்டு சென்றார்.

anti-hindi-imposition-dharmapuri-3செல்லும் வழியில் இருந்த முக்கிய பேருந்து நிலையங்களிலும், பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் தெருமுனைக் கூட்டம், வாயிற்கூட்டம் நடத்தப்பட்டது. ஆசிரியர்கள் நிதியளித்தனர். மாணவர்கள் பிரசுரம் கேட்டுப் பெற்றனர். “இப்படி எல்லாம் செய்தால்தான் நாட்டைக் காப்பாற்ற முடியும்” என்று ஒருவர் கூறினார். ஒரு அம்மா, “எங்க பிள்ளையும் இந்த மாதிரி விஷயத்துக்கு அனுப்பணும். நம்ம தாய்மொழியை அழிக்க விடக் கூடாது” என்றார். கல்லூரி வாயிற் கூட்டத்தில் மாணவர்கள் ஆர்வமாக கலந்து கொண்டனர்.

சனவரி 25 காலை மாணவர்கள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து முழக்கமிட்டு உரை நிகழ்த்தினர்.  செங்கொடியை உயரப் பிடித்து டவுன் பஸ் ஸ்டாண்டிற்கு சென்றனர். வழியில் பிரசுரம் வினியோகித்தனர். முழக்கமிட்ட போது போலீஸ் வந்து இன்னொரு முறை செய்தால் கைது செய்வோம் என்றனர்.

anti-hindi-imposition-dharmapuri-4ராஜகோபால் பூங்கா அருகில் கூட்டம் தொடங்கப்பட்டது. போலீஸ் வந்து கைது செய்யப் போவதாக கூறியது.

“வண்டியில் ஏற முடியாது. பேசுவது எங்கள் உரிமை” என்று மாணவர்கள் கூற வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் மாணவர்களை குண்டுக் கட்டாக தூக்கி வண்டியில் போடப்பட்டனர். நெற்றியில் அடிபட்டது, கால் நகம் பிய்ந்தது, சட்டை கிழிந்தது என்று தோழர்கள் காயமடையும் அளவுக்கு முரட்டுத்தனமாக வண்டியில் தூக்கிப் போடப்பட்டனர்.

“போலீஸ் அராஜகம் ஒழிக” என்று மாணவர்கள் முழக்கமிட்டனர். போலீஸ் வண்டியிலும் ஆர்ப்பாட்டம் தொடர்ந்தது.  காவல் நிலையத்திலும் மரியாதைக் குறைவாக பேசிய போலீசை அடக்கி உணவு, காயமடைந்தவர்களுக்கு மருத்துவம் என தமது உரிமைகளை பெற்றனர் தோழர்கள். போராட்டத்தின் மூலம்தான் எதையும் சாதிக்க முடியும் என்பதை நடைமுறையில் உணர்ந்தனர்.

மாலையில் விடுவித்த போது கொடியை கேட்ட போது, “வெப்பன்ஸ் எல்லாம் கொடுக்க முடியாது” என்றார்.

“கத்தியா, துப்பாக்கியா, வெப்பன்ஸ் என்று சொல்றீங்க. கொடிய கொடுக்காட்டா இந்த இடத்தை விட்டுப் போக முடியாது” என்று கூறியதும்,

“குடுக்க முடியாது, உங்க மேல எஃப்.ஐ.ஆர் போட்டிருக்கு, கிளம்புங்க” என்றார்.

இந்த “வெப்பன்”ஸை கண்டு போலீஸ் பயப்படுகிறது. எனவே செங்கொடி என்ற ஆயுதத்தை எடுத்து பார்ப்பன ஆரிய சாம்ராஜ்ய கனவை ஒரே போடாக ஒழிப்போம்.

கைது செய்யப்பட்ட மாணவர்களின் அனுபவத்தைக் கேட்ட பிற மாணவர்கள் தாமும் போராட்டத்தில் கலந்து கொண்டிருக்க வேண்டும் என்று ஆர்வம் தெரிவித்தனர்.

தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
தருமபுரி மாவட்டம். செல் : 8148055539

10. புதுச்சேரி

புதுச்சேரி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பில், நகரின் முக்கிய பகுதியில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கும், மொழிப்போர் தியாகிகளின் உருவப்படத்திற்கும் மாலை அணிவித்தல், ஆரிய – பார்ப்பன ஆதிக்கத்திற்கு, இந்து மதவெறி பாசிசத்திற்கும் முடிவு கட்ட உறுதிமொழி ஏற்றல் ஆகிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

புதுச்சேரி புஜதொமு தலைவர் தோழர். சரவணன் தலைமை ஏற்று பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார். புஜதொமு செயற்குழு உறுப்பினர் தோழர். கருப்பையா மொழிப்போர் தியாகிகளின் உருவப் படங்களுக்கு மாலை அணிவித்தார்.

புதுச்சேரி புஜதொமு பொதுச் செயலாளர் தோழர். பழனிசாமி மொழிப்போர் தியாகிகளின் போராட்டத்தை நினைவு கூரும் விதமாகவும், இன்றைய போராட்டத்தின் அவசியத்தைப் பற்றியும் விளக்கினார்.  அவர் உறுதிமொழியை வாசிக்க தோழர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

இணைப்பு சங்கத் தோழர்கள், பகுதி தோழர்கள் கலந்து கொண்டனர்.

தகவல்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புதுச்சேரி.
தொடர்புக்கு : 95977 89801.

11. புதுவை பல்கலைக் கழகம்

மொழிப்போர் தியாகிகள் நினைவேந்தல் மற்றும் பார்ப்பனிய எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்வு கடந்த 23 சனவரி-2015 வெள்ளி அன்று பிற்பகல் 3.30 மணி அளவில் பல்கலைக்கழகத்தின் இரண்டாவது நுழைவாயில் முன்பாக நடைபெற்றது.

puduvai-uni-gate-meeting-11நிகழ்கலைத்துறை மாணவர்களாகிய நமது தோழர்களின் பறையிசை முழக்கத்தோடு தொடங்கிய இந்தஎழுச்சிமிகு நிகழ்வினை பல்கலைக்கழக மாணவர்களும், ஊழியர்களும், அருகாமைப் பகுதிமக்களும் ஆர்வத்துடன் பார்த்துச் சென்றனர்.

puduvai-uni-gate-meeting-05பறையிசை தொடங்கிய சிறிது நேரத்திற்கெல்லாம் மாணவர்களைக் காக்கவோ, பல்கலைக்கழகத்தில் நடைபெறும் மாணவர் விரோதச் செயல்களைத் தடுக்கவோ வராத காவல்துறை நம்மிடம் வந்து “அனுமதிக் கடிதம் கொடுங்கள்” என்று கேட்டது.

“ஒலிபெருக்கி வைக்காத நிகழ்விற்கு போலீஸ் அனுமதி எதற்கு?” என்று நமது தோழர்கள் திருப்பிக் கேட்க,

“நாளைக்கு எதாச்சும்னா எங்ககிட்ட வரமாட்டிங்களா?” என்று நைச்சியமாகப் பேசியது காவல்துறை.

அதற்கு நாடகத்துறை ஆய்வாளர் தோழர் ஆனந்தன் “உங்ககிட்ட வர மாட்டோம் போங்க! வந்துமட்டும் எங்களுக்கு என்ன பாதுகாப்பு கொடுத்துட்டீங்க? ஒரு அப்பாவி ஏழை மாணவன பல்கலைக்கழக அதிகாரிகள் 4 பேர் சேந்து அடிச்சிருக்காங்க, அப்போ நீங்க எங்களுக்கா பாதுகாப்புக் கொடுத்தீங்க? இப்போ நீங்க பேசுற மொழி வாழணுமின்னு 50 வருஷத்துக்கு முன்னாடி இவ்வளவு பேரு செத்திருக்காங்கன்னு அவுங்களுக்கு விழா எடுக்கறோம், நீங்க இதுல கலந்துக்காம அனுமதி கடிதம் கேக்குறிங்க?” என்று சீற்றத்துடன் பதிலளிக்க பம்மியது போலீசு.

puduvai-uni-gate-meeting-02“சரி சரி, சீக்கிரம் முடிங்கப்பா” என்று சொல்லிவிட்டு நிகழ்வைப் பார்த்துக்கொண்டு நின்றனர் காவலர்கள்.

பறை முழக்கத்தைத் தொடர்ந்து மொழிப்போர் தியாகிகளின் நினைவைப் போற்றி வீரவணக்கம் செலுத்தியும் பார்ப்பனப் பகைமுடிக்கச் சூளுரைத்தும் விண்ணதிர முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

puduvai-uni-gate-meeting-07தோழர்கள் எழுப்பிய பறைமுழக்கம் நிகழ்வின் மையமாக அமைந்து அனைவரையும் ஈர்த்தது.

  • We are not against Hindi, but we are against imposition of any language!
  • Salute to martyrs of anti Hindi imposition struggle! let us carry forward their anti-Hindutva struggle!
  • Make all 22 languages as official languages of India!
  • Not only Tamil people but people of Maharashtra, Punjab, West Bengal, Karnataka and Andhra Pradesh also protested against Hindi Imposition
  • மொழிப்போர் தியாகிகளின் பொன்விழா நினைவாண்டில் பார்ப்பனியப் பகைமுடிக்கச் சூளுரைப்போம்!

ஆகிய வாசகங்கள் எழுதப்பட்ட அட்டைகளைக் கையிலேந்தி நின்றது நமது நினைவேந்தல் நிகழ்வின் நோக்கத்தை மக்களுக்கு அறிவிப்பதாக அமைந்திருந்தது.

இது பல்வேறு மொழிபேசுவோர், குறிப்பாக இந்திமொழி பேசுவோர் அதிகம் படிக்கும் பல்கலைக்கழகம் என்பதால், நாம் இந்தி மொழியை எதிர்க்கவில்லை என்பதும், இந்தி மொழி மற்றும் இந்து/காவி/பார்ப்பனப் பண்பாட்டுத் திணிப்பையே எதிர்க்கிறோம் என்பதும் விளக்கப்பட்டது. பலரும் அதனை ஏற்றதோடு இந்திமொழி பேசும் மாணவர்கள் சிலர் நிகழ்விலும் பங்கேற்றனர்.

puduvai-uni-gate-meeting-06குறிப்பிடத்தக்க நிகழ்வாக, இந்திமொழித்துறையின் பேராசிரியர் ஒருவர் நமது இந்திமொழி எதிர்ப்புப் போராட்டத்தின் நியாயத்தை தொடர்ந்து ஆதரித்து வந்திருப்பதோடு, இந்த நிகழ்விற்கும் தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்தார்.

தமிழ்த்துறை ஆய்வாளர் தோழர் சிவராஜ் பார்ப்பன எதிர்ப்பு உறுதிமொழியை வாசிக்க எல்லோரும் பார்ப்பன இந்துவெறிப் பாசிச எதிர்ப்புக் கோட்டையாக தமிழ் மண்ணை கட்டியமைக்க உறுதிபூண்டனர்.

puduvai-uni-gate-meeting-08பார்ப்பனிய எதிர்ப்பு உறுதிமொழி:

தமிழ்நாட்டு மாணவர்களின் இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தின் பொன்விழா ஆண்டு

  • மொழிப்போர் தியாகிகளின் நினைவை நெஞ்சில் ஏந்தி வீறுகொண்டெழுவோம்!
  • தமிழ் தேசிய இனத்தின் கடவுள் – ஆன்மீக மறுப்பு, வேத, வைதீக – பார்ப்பன, சமஸ்கிருத – இந்தி எதிர்ப்பு பாரம்பரியத்தை போர்வாளாக ஏந்துவோம்!
  • மீண்டும் படையெடுத்து வருகிற ஆரிய – பார்ப்பன, வேத, வைதீக, சமஸ்கிருத – இந்தி ஆதிக்க பண்பாட்டை போரிட்டுவீழ்த்துவோம்!
  • ஆரிய – பார்ப்பன எதிர்ப்புப் போரின் தளப்பிரதேசமாக தமிழ்நாட்டை மீண்டும் கட்டியமைப்போம்! என்று மொழிப்போர் தியாகிகளின் பொன்விழா ஆண்டில் உறுதியேற்போம்!
  • பெரியாரின் சுயமரியாதை தமிழ் மண்ணிலிருந்து பார்ப்பனியத்தையும், சாதி ஆதிக்கத்தையும், மொழி, இன, பண்பாட்டு ஒடுக்குமுறைகளையும் அடியோடு அறுத்தெறிந்து, பார்ப்பனப் பாசிச எதிர்ப்பின் கோட்டையாக தமிழகத்தை மீண்டும் மாற்றவும் இந்த மொழிப்போர் தியாகிகளின் பொன்விழா நினைவாண்டில் சூளுரைப்போம்!

ஆங்கிலத்துறை ஆய்வாளர் தோழர் முருகானந்தன் மொழிப்போர் தியாகிகளை நினைவுகூரவேண்டியதன் அவசியத்தையும் இன்று நாடு எதிர்நோக்கியுள்ள பார்ப்பன இந்துவெறி அபாயத்தினை ஒன்றுசேர்ந்து எதிர்த்துப் போராடி வீழ்த்தவேண்டியதன் அவசரத் தேவையையும் விளக்கிப் பேசினார். மேலும் நாம் எந்த ஒரு மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல, ஆனால் எந்தவொரு மொழியும், பண்பாடும், ஒடுக்குமுறையும் பிறர்மீது திணிக்கப்படுவதற்கு எதிரானவர்கள் என்றும், இந்தியின் மூலம் இந்திய ஆளும் வர்க்கம் திணிக்க முயல்வது ஒரே அகண்ட பாரதம் என்ற தமது காவிக் கனவினைத்தான் என்றும் விளக்கினார்.

puduvai-uni-gate-meeting-04இறுதியாக தோழர் ஆனந்தன் வந்திருந்தோருக்கு நன்றியும் வாழ்த்தும் கூறி இதுபோன்றே எல்லா மாணவர், சமூக, அரசியல் போராட்டங்களிலும் அனைவரும் பங்கேற்று தங்களின் கடமையை ஆற்றவேண்டுமென்று கேட்டுக்கொண்டு நிகழ்வினை நிறைவுசெய்து வைத்தார்.

puduvai-uni-gate-meeting-02தமிழ்த்துறை, நாடகத்துறை, பொருளாதாரத்துறை பேராசிரியர்கள் பலரும் இந்த மொழிப்போர் வரலாற்றை இன்றைய மாணவர்களிடம் எடுத்துச்செல்லும் நமது பணியை வாழ்த்தியதோடு ஆதரவும் நிதியும் நல்கினர்.

“தமிழ் படிக்கும் மாணவர்களுக்கே மொழிப்போராட்ட வரலாறு தெரியவில்லை, இந்த மாணவர்களுக்கு நன்றாக விளக்கிச் சொல்லுங்கள்” என்று தமிழ்த்துறை பேராசிரியர்கள் கூறினர்.

பெண்கள்/மாணவிகள் அதிக எண்ணிக்கையில் நிகழ்வில் பங்கேற்றது நமது பார்ப்பன எதிர்ப்புப் போராட்டத்திற்கு உற்சாகம் ஊட்டுவதாக இருந்தது.

puduvai-uni-gate-meeting-01முழக்கங்கள்

வீர வணக்கம் வீர வணக்கம்!
தியாகிகளுக்கு வீர வணக்கம்!
உழைக்கும் மக்களின் உரிமைக்காக,
உயிர்நீத்த தியாகச் சுடர்கள்,
எல்லோருக்கும் வீரவணக்கம்!

வர்க்கப் போரில் தன்னுயிர் ஈந்த,
தியாகிகளுக்கு வீரவணக்கம்!
சாதி தீண்டாமை இழிவுகள் போக்கி,
பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மை நீக்கி,
மானமும் அறிவும் புகட்ட உழைத்த
தியாகிகளுக்கு வீரவணக்கம்!

பார்ப்பனிய எதிர்ப்புப் போராளிகள் தந்தை பெரியாருக்கும்,
அண்ணல் அம்பேத்காருக்கும் வீரவணக்கம்!
வீர வணக்கம் வீர வணக்கம்!
மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம்!

தமிழ் மக்களின் மொழி உரிமை காக்க,
தமிழினத்தின் தன்மானம் காக்க,
தன்னுயிரீந்த தியாகிகளுக்கு,
வீரவணக்கம் வீரவணக்கம்!

puduvai-uni-gate-meeting-10சாதி இழிவை தீண்டாமையை,
நியாயப்படுத்தும் பார்ப்பனியத்தின்,
கொலைக்கருவியான சமஸ்கிருதத்தையும்,
அதன் குழந்தையான இந்தியையும்,
தமிழ் மண்ணில் நுழையவிடாமல்,
தன்னுயிர் இழந்தும் பார்ப்பனியம் எதிர்த்த,
மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்!

சாதி மத எல்லைகள் கடந்து,
தமிழ் மக்களின் மொழியையும் பண்பாட்டையும்,
காக்கப் போராடிய தியாகிகளுக்கு,
வீரவணக்கம் வீரவணக்கம்!

தந்தை பெரியார் தொடங்கிவைத்த,
பார்ப்பன ராஜாஜியின் இந்தித்திணிப்புக்கு
எதிரான போராட்டத்தில்,
சிறையில் மாண்ட நடராசனுக்கும்,
தாளமுத்துவுக்கும் வீரவணக்கம்!

பெரியாரின் தளபதியாக,
இந்தி எதிர்ப்பு பார்ப்பனிய எதிர்ப்பு,
படைநடத்திய பட்டுக்கோட்டையார்,
அழகிரிக்கு வீரவணக்கம்!

தமிழைக் காக்க இந்தித் திணிப்பை எதிர்க்க,
தீயிலேரிந்து தன்னுயிரீந்த,
சிங்கத் தமிழன் சின்னசாமிக்கு,
வீரவணக்கம் வீரவணக்கம்!

காவல்துறையின் துப்பாக்கிக்கு,
பலியாகி தன்னுயிரீந்த,
ராஜேந்திரனுக்கு வீரவணக்கம்!

கோடம்பாக்கம் சிவலிங்கத்திற்கும்
விருகம்பாக்கம் அரங்கநாதனுக்கும்,
வீரவணக்கம் வீரவணக்கம்!

puduvai-uni-gate-meeting-09தமிழ் இனத்தின் தமிழ் மொழியின்,
உரிமை காக்கவும் இழிவுபோக்கவும்,
தன்ன்னுயிரீந்த உழைக்கும் மக்கள்,
யாவருக்கும் வீரவணக்கம்!

நெஞ்சில் ஏந்துவோம், நெஞ்சில் ஏந்துவோம்!
மொழிப்போர் தியாகிகளின் வீரத்தை,
தியாகத்தை நெஞ்சிலேந்துவோம்!

தமிழினத்தின் தமிழ் மொழியின்,
பார்ப்பனிய எதிர்ப்புப் பண்பாட்டை,
பகுத்தறிவு பாரம்பரியத்தை நெஞ்சில் ஏந்துவோம்!

போர்வாளாய்க் கைய்யிலேந்துவோம், போர்வாளாய்க் கைய்யிலேந்துவோம்!
தமிழ் மண்ணின் சாதி மறுப்பு,
பார்ப்பனிய எதிர்ப்புப் பண்பாட்டை, போர்வாளாய்க் கைய்யிலேந்துவோம்!

முறியடிப்போம், முறியடிப்போம்!
தந்தை பெரியாருக்கும் அண்ணல் அம்பேத்காருக்கும்,
பூலேவுக்கும் அடங்கி ஒடுங்கி,
வாலைச் சுருட்டிய பார்ப்பனியத்தின்,
மறுபடைஎடுப்பை முறியடிப்போம்!

வெட்டி வீழ்த்துவோம், வெட்டி வீழ்த்துவோம்!
சாதி மத ஒடுக்குமுறைகளால்,
சனாதனத்தின் கொடுங்கரங்களால்,
தாழ்த்தப்பட்ட சாதி மக்களை,
சிறுபான்மை மதத்தவரை,
பல்தேசிய இனங்களை மொழிகளை,
உழைக்கும் மக்களை ஒடுக்க நினைக்கும்
காவிவெறி இந்துவெறி மதவெறி,
ஆதிக்கத்தை வெட்டி வீழ்த்துவோம்!

பார்ப்பனியப் பாசிசத்தை,
வேரோடு வெட்டி வீழ்த்துவோம்!
22 மொழிகள் பட்டியலில்,
சமஸ்கிருதம் இந்திக்கு உயரிடமா?

ஒரே நாடு ஒரே மொழி,
ஒரே மதமென்னும் காவிகளின்
அகண்ட பாரதக் கனவினையும்,
அடியோடு வெட்டி வீழ்த்துவோம்!

சாதி மத இனத் தடை கடந்து,
மாணவராய் உழைக்கும் மக்களாய்,
ஒன்றிணைவோம் ஒன்றிணைவோம்!

பார்ப்பனியப் பாசிச சாதி எதிர்ப்பின்,
பாசறையாக தமிழ் மண்ணை மாற்றுவோம்!
மொழிப்போர் தியாகிகளின் வரலாற்றை,
நினைவுகளை நெஞ்சில் ஏந்தி,
இந்தி சமஸ்கிருதத் திணிப்பையும்,
இன அடையாள அழிப்பையும்,
சாதி மத ஒடுக்குமுறை இழிவையும்,
வேரோடும் வேரடி மண்ணோடும்,
வேரோடும் வேரடி மண்ணோடும்,
வெட்டி வீழ்த்தச் சூளுரைப்போம்!
வெட்டி வீழ்த்தச் சூளுரைப்போம்!

மொழிப்போர் தியாகிகளின் பொன்விழா நினைவாண்டில்,
பார்ப்பனியப் பகைமுடிக்கச் சூளுரைப்போம்!

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி வாழ்க!
புதுவைப் பல்கலைக்கழக மாணவர் வாழ்க!
மாணவர் ஒற்றுமை ஓங்குக!

தகவல்:
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதுச்சேரி.
தொடர்புக்கு: அலைபேசி 9486391209
மின்னஞ்சல்: rsyfront.pu@gmail.com

12. கரூர்

ரூர் லைட்ஹவுஸ் கார்னரில் உள்ள பார்ப்பன சித்தாந்ததிற்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய பெரியாரின் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தி உறுதியேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி கரூர் மாவட்ட செயலாளர் தோழர் இரா பாக்கியராஜ் தலைமை ஏற்றார். மனித உரிமை பாதுகாப்பு மையம் தோழர் இராமசாமி முன்னிலை வகித்தார்.

karur-rsyf-anti-hindi-imposition

தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
கரூர்

13. விருத்தாசலம்

னித உரிமை பாதுகாப்பு மையமும், மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கமும் இணைந்து சனவரி 25, 2015 மாலை 6 மணிக்கு விருத்தாசலம் பெரியார் நகர் பேருந்து நிறுத்தத்தில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கமும், உறுதியேற்பு நிகழ்ச்சியும் நடத்தினர்.

virudai-parents-association-1இந்நிகழ்ச்ச்சிக்கு திருச்சி மாவட்டம் மொழிப்போர்த்தியாகி கீழப்பழவூர் சின்னசாமியின் துணைவியாரும், மகள் திராவிடச்செல்வி இருவரும் கலந்து கொண்டனர். அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக பொன்னாடை போற்றிச் சிறப்பிக்கப்பட்டனர்.

virudai-parents-association-2

மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத் தலைவர் வை.வெங்கடேசன் தலைமை ஏற்க, எழுத்தாளர் இமையம், மனித உரிமை பாதுகாப்பு மைய செயலர் புஷ்பதேவன், திராவிடர் கழகத்தைச் சார்ந்த செழியன், ஓய்வுபெற்ற தலைமையாசிரியரான சிவராமசேது முதலியோர் தியாகிகளை நினைவு கூர்ந்து பேசினர்.

தியாகி சின்னசாமியின் மகள் திராவிடச்செல்வி உணர்ச்சிபூர்வமாக பேசினார்.

பேசிய பிற பேச்சாளர்கள்

  • மக்கள் மொழியில் கோயிலில் கூட தமிழ் அர்ச்சனை மறுக்கப்பட்டு மொழி இழிவுபடுத்துவதற்கு எதிராக போராடி தமிழை நிலை நாட்டவேண்டிய கடமைகளை பேசி தெளிவுபடுத்தினர்.
  • பெயர் வைப்பதில் கூடதமிழை தவிர்த்து வரும் கொடுரத்தை தமிழர்கள் நாம் அனுமதிக்ககூடாது என புரியவைத்தனர்.
  • பள்ளிகளில் தமிழை படிக்காமல் பட்டம் பெறும் அவலத்தை தோலுரித்தனர்.

இறுதியில் ஆரிய பார்ப்பன எதிர்ப்புப் போரின் தளப்பிரதேசமாக கட்டியமைப்போம் என்று உறுதிமொழி ஏற்கப்பட்டு, கூட்டம் நிறைவடைந்தது.

தகவல்
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர்கள் சங்கம்,
விருத்தாசலம்

அறந்தாங்கியில் பொதுக்கூட்டம்

pala-rsyf-poster-mozhipor-2முந்தைய பகுதிகள்

  1. மொழிப்போர் தியாகிகள் நாள் – மக்களைத் திரட்டிய பு.மா.இ.மு
  2. மொழிப்போர் தியாகிகள் நாள் – கோவை, கடலூர், சிதம்பரம், விருத்தாசலம்
  3. திருச்சி, வேதாரண்யம், விழுப்புரம் – மீண்டும் துவங்கியது மொழிப்போர்

இறுதிப் பகுதி – தஞ்சை நிகழ்வு மற்றும் அறந்தாங்கி பொதுக்கூட்டம் தொடரும்

கஜினியை சந்தித்த ரஜினி – தி இந்து சுட்ட கதை

28
anton-chekhov
ஆன்டன் செகாவ்

“ஃபில்டர் காஃபியும், தி இந்துவும் இல்லாத காலைப் பொழுதை கற்பனை செய்ய முடியாது” – இது தன்னைப் பற்றி நடுத்தர வர்க்கம் கொண்டிருக்கும் பெருமை என மவுண்ட்ரோடு மஹாவிஷ்ணு கருதுகிறது.

ஆங்கில இந்துப் பத்திரிகையின் எடையில் மூன்றாம் பக்க மாநகர அக்கப்போர் தீனிகளே ஆக்ரமித்திருக்கும் நிலையில் தமிழ் இந்துவின் நிலை எப்படி இருக்கும்? ஏற்கனவே விகடன், குமுதம் வகையறாக்கள் நொறுக்குத் தீனி வாசிப்பையும், வீக் எண்ட் சமூக உணர்வையும் உருவாக்கி விட்ட நிலையில் இப்பேற்பட்ட பத்திரிகைகளில் பயிற்சி எடுத்து “தி இந்து”-வில் பணியில் சேர்ந்திருக்கும் அறிஞர் பெருமக்கள் என்ன சாதனையை ஏற்படுத்த முடியும்?

தி இந்துவின் 29.01.2015 இதழைப் பிரித்து இரண்டாம் பக்கத்திற்கு செல்லுங்கள். “கில்லாடி கேவான்” படக்கதையின் கீழே வலதுபுறம் முதல் பெட்டி செய்தியை படியுங்கள்!

“ஆண்டன் பாவ்லோவிச் செக்கோவ்” எனும் தலைப்பில் ராஜலட்சுமி சிவலிங்கம் என்பவர் எழுதியிருக்கிறார். புகழ் பெற்ற எழுத்தாளரான செகாவின் பிறந்த தினைத்தை முன்னிட்டு அவரைப் பற்றிய பத்து துணுக்கு செய்திகளை தொகுத்திருக்கிறார்கள்.

இலக்கிய வட்டத்திலும், இடதுசாரி கட்சிகளிலும் பிரபலமான செகாவைப் பற்றி என்ன எழுதியிருக்கிறார்கள் என்று பார்த்த போது………….

“‘இலக்கிய உத்தியிலும், வடிவமைப்பிலும் செகோவை மிஞ்சக் கூடியவர்கள் யாருமே இல்லை,” என்று ஷேக்ஸ்பியர் இவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.” –

இந்த வரிகள் தூக்கி வாரிப் போட்டன. (தற்போது “தி இந்து” இணையத்தில் இந்த கட்டுரையின் மேற்கண்ட வரிகளை சத்தம் போடாமல் தூக்கிவிட்டார்கள். அச்சு இந்துவில் மட்டும் இருக்கிறது)

பதினாறாம் நூற்றாண்டின் சேக்ஸ்பியர் (26.04.1564 – 23.04.1616) பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த செக்காவை (29.01.1860 – 15.07.1904) எப்படி சந்தித்தார்?

இந்த அநீதியை புரிய வைக்கவே தலைப்பில் 11-ம் நூற்றாண்டில் வாழ்ந்த கஜினி முகமது, 21-ம் நூற்றாண்டில் வாழும் நடிகர் ரஜினியை சந்தித்தார் என்று வைத்திருக்கிறோம். தமிழ் கூறும் நல்லுலகம் மன்னிக்க!

பிறகு “தி இந்து” செய்தியை கூர்ந்து படித்த போதே இது சொந்த புரிதலில் எழுதாத ஒரு சுட்ட எழுத்து என்பது தெரிந்தது. சரி, எங்கே சுட்டிருப்பார்கள்? ஆங்கில விக்கிபீடியாவில் பார்த்த போது அதில் சுடுமளவு “தி இந்து” அறிஞர்களுக்கு அறிவில்லை என்பது உடன் தெரிய வந்தது. பிறகு தமிழ் விக்கிபீடியாவில் பார்த்தோம்.

ஆங்கில விக்கிபீடியாவில் ஒரு உண்மை குறித்து ஆராய்ந்தால் ஒன்றுக்கு பதில் பல பத்து ‘உண்மைகள்’ இருக்கும். எது உண்மை என்று குழப்பம் வந்துவிடும். தமிழ் விக்கி பீடியாவில் அந்தக் குழப்பம் இல்லை. முழுப் பொய்யையே அறுதி உண்மை போல அடித்து விடுவார்கள். இந்த அடித்து விடுதலை செய்பவர்கள் இந்துமதவெறியர்கள். உண்மை தெரிந்த தமிழ் விக்கி பீடியா நண்பர்கள் செய்வது அறியாது திகைத்து நிற்பார்கள் என்று ஊகிக்கிறோம். இது குறித்து தனியே எழுத வேண்டும்.

சரி இரண்டிலும் இல்லை என்று ஆன பிறகு பத்து நிமிட ஆராய்ச்சியில் “தி இந்து” சுட்ட செக்கோவ்  கதையை கண்டுபிடித்து விட்டோம். தோழர் மாதவராஜின் “தீராத பக்க”ங்களில் அந்தக் கட்டுரை இருக்கிறது. “செகாவுக்கு வயது 150” எனும் அந்தக் கட்டுரை மாதவராஜின் நண்பரும் விமரிசகருமான எஸ்.ஏ.பெருமாள் எழுதியிருக்கிறார்.

இந்த கட்டுரையை “தி இந்து” அறிஞர்கள் நிச்சயம் படிக்கவில்லை. பார்த்திருப்பார்கள். பிறகு அதில் ரேண்டமாக சில பத்திகளை எடுத்து அதை சுருக்கி போட்டிருக்கிறார்கள். வழக்கமாக “மண்டபத்தில் எழுதப்படும்” கவிதைகளுக்கு கூட இடையில் மானே, தேனே என்று போட்டு ஒரிஜினாலிட்டி காட்டுவார்கள். இந்தக் கருமத்தில் அதுவும் இல்லை. சரி மூலத்தையாவது சரியாக காட்ட வேண்டாமா?

இனி சில சாம்பிள்கள்……

இது பெருமாள் சொன்னது:

“அன்டன் செகாவின் கதைகள் மாஸ்கோ, பீட்டர்ஸ்பர்க் பத்திரிகைகளில் வெளிவந்தன. ஐந்தாண்டு காலத்தில் தங்குதடையின்றி நானூறு சிறுகதைகளுக்கு மேல் எழுதிவிட்டார். 1884ம் ஆண்டு செகாவுக்கு டாக்டர் பட்டம் கிடைத்தது. அதன்பின் அவர் பீட்டர்ஸ்பர்க் நகருக்குச் சென்றார். அங்கு செகாவின் எழுத்துக்கள் பிரபலமடைந்து புகழ்பெற்றிருந்தார்.”

இது தி இந்து சுட்டது:

“1879-ல் நிதியுதவி கிடைத்ததால், மருத்துவம் பயின்றார். மருத்துவராகப் பணியாற்றிக்கொண்டே சிறுகதைகள் எழுதத் தொடங்கினார். இவரது கதைகள் மாஸ்கோ, பீட்டர்ஸ்பர்க் பத்திரிகைகளில் வெளிவந்தன. ஐந்தே ஆண்டுகளுக்குள் 400-க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதினார்.”

இது பெருமாள் சொன்னது:

“44 ஆண்டு வாழ்க்கையில் செகாவ் 24 ஆண்டுகள் எழுதியிருக்கிறார்….

செகாவ் வாழ்ந்த காலத்தில் எழுத்தாளர்களுக்கும் நாடகம் எழுதும் ஆசை தீவிரமாக இருந்தது. அவரும் நாடகங்கள் எழுதினார். “இவானோவ்” என்ற அவரது நாடகம் 1887ம் ஆண்டு மாஸ்கோவில் அரங்கேற்றப்பட்டது. நாடக ரசிகர்களுக்கு அந்த நாடகம் புரியவில்லை………

பீட்டர்ஸ்பர்க்கில் அரங்கேற்றியபோது “கடல்நாரை” நாடகம் படுதோல்வியடைந்தது. பின்பு புகழ்பெற்ற இயக்குனர் ஸ்டானிஸ்லாவ்ஸ்கி தனது மாஸ்கோ ஆர்ட் தியேட்டர் மூலம் கடல் நாரை நாடகத்தை மாஸ்கோவில் மீண்டும் மேடையேற்றினார். நாடகம் பெரும் வெற்றி பெற்றது. ஸ்டானிஸ்லாவ்ஸ்கியுடன் நட்பு ஏற்பட்ட பின்பு செகாவ் மேலும் மூன்று நாடகங்கள் எழுதினார்.மூன்றும் பெரும் வெற்றி பெற்றன….”

இது தி இந்து சுட்டது:

ஒரு கட்டத்தில் மருத்துவத் தொழிலை விட்டுவிட்டு, முழு நேர எழுத்தாளராகிவிட்டார். 44 ஆண்டுகால வாழ்க் கையில் 24 ஆண்டுகள் எழுதிக்கொண்டே இருந்தார். இவரது படைப்புகள் தமிழிலும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. நாடகங்களும் எழுதியுள்ளார். இவரது முதல் நாடகம் தி சீகல் படுதோல்வி அடைந்தது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு புகழ்பெற்ற நாடக இயக்குநர் ஸ்தனிஸ்லாவ்ஸ்கி தனது மாஸ்கோ ஆர்ட் தியேட்டர் மூலம் இவரது நாடகம் மீண்டும் மேடையில் அரங்கேறி வெற்றி பெற்றது. அவருடன் நட்பு ஏற்பட்ட பிறகு, செகோவ் மேலும் மூன்று நாடகங்களை எழுதினார். அனைத்தும் வெற்றி பெற்றன.”

(ஆங்கில மொழியில் கல்வி பயின்றிருக்கும் “தி இந்து” அறிஞர்களுக்கு கடல் நாரை என்ற பெயர் தெரிந்திருக்காது. அதனால் அதை சீகல் என்று போட்டிருக்கிறார்கள்.)

இது பெருமாள் சொன்னது:

“புகழும் பணமும் மரியாதையும் செகாவுக்கு குவிந்த நேரத்தில் அவரது உடல்நலம் வேகமாகக் கெட ஆரம்பித்தது. காசநோயும் ரத்த வாந்தியும் அதிகரித்தது. அவரது கடைசி நாடகமான “செர்ரிப் பழத்தோட்டம்” 1904ல் அரங்கேறியபோது பல தடவை ரத்தமாக வாந்தி எடுத்தார். ஒரே நாளில் பல கதைகளை எழுத முடிந்த அவருக்கு ஒரு நாளில் நான்கு வரிகள் கூட எழுத முடியாமல் போய் விட்டது. ஆனால் அவரது நோயும் துன்ப துயரமும் அவரது இலக்கியப் படைப்புகளில் வெளிப் பட்டதேயில்லை. வாழ்க்கையை அதன் இயல் போடு ஒட்டியதாக நுட்பமான தகவல்களை மிக எளிமையாக எழுதினார். சுருக்கமாகவும், நகைச் சுவையோடும் மிகுந்த பரிவோடும் எழுதியிருப்பதை இன்றும் நாம் வாசித்து உணரலாம்.”..

இது தி இந்து சுட்டது:

“பணமும் புகழும் குவிந்த நேரத்தில் காசநோய் தாக்கியது. ஆனாலும் தங்கு தடையின்றி எழுதி வந்தார். வாழ்க்கையில் எவ்வளவு துன்பங்களை எதிர்கொண்டாலும் அவை எதையும் தன் எழுத்துக்களில் அவர் கொண்டு வந்ததேயில்லை. லியோ டால்ஸ்டாய், மக்ஸிம் கார்கி ஆகியோர் இவரது நண்பர்கள்.”

இது பெருமாள் சொன்னது:

“ஊழல் குடும்பம், ஊழல் அரசு,ஊழல் சமூகம் இவற்றைச் சகித்துக் கொள்ள முடியாத வராக செகாவ் திகழ்ந்தார். மனிதகுலம் இவற்றைச் சகித்துக் கொள்வதை அவர் ஒரு போதும் ஏற்கவில்லை. அதே சமயம் அவர் தன்னை ஒரு சீர்திருத்த வாதியாகவோ, தர்மோபதேசியாகவோ எண்ணிக் கொண்டதில்லை. வாழ்க்கையில் திறமையோடு வாழ வேண்டும். எதிலும் ஒரு அளவும், அழகும் வேண்டும். அனைவரும் நல்ல மனிதராக இருக்க வேண்டும் என்பதே அவரது லட்சியமாக இருந்தது. வாழ்க்கை எவ்வளவு மோசமானதாக, சாரமற்றதாக இருக்கிறது என்பதை உறைக்கச் செய்வதே தனது நாடகங்களின் குறிக்கோள் என்றும் கூறினார். அதற்காக நான் நீதிகளைப் புகுத்தவில்லை என்று கூறினார்.”

தி இந்து கொடூரமான எடிட்டிங்கில் சுட்டது:

“தன் எழுத்துகளில் சீர்திருத்தக் கருத்துகளையோ தர்ம நெறிகளையோ உபதேசம் செய்ததில்லை. திறமையோடு, எதிலும் ஓர் அளவோடும் அழகோடும் செயல்பட வேண்டும். நல்ல மனிதனாக இருக்க வேண்டும் என்பதே இவரது வாழ்க்கைத் தத்துவம்.”

(அடப்பாவிகளா சுடுவதைக் கூட ஒழுங்காக செய்ய தெரியவில்லையே. இந்த பத்தியில் செகாவ் சமூக நேயமுள்ள மனிதராகவே பெருமாளால் காட்டப்படுகிறார். அதை எந்த பொருளுமின்றி ஏனா தானோவென்று எழுதி அந்த எழுத்தாளரையே கொலை செய்திருக்கிறார்கள்.

இது பெருமாள் சொன்னது:

“வாழ்க்கையில் போலித்தனத்தையும், போலித்தனமான மனிதர்களையும் செகாவ் வெறுத்தார். நாடக மேடையில் நடிகர்கள் நடிப் பதைப் பார்த்து “இந்த நடிகர்கள் இன்னும் கொஞ்சம் குறைவாக நடித்தால் நன்றாக இருக்கும்.” என்பார். மாக்சிம் கார்க்கியைக் கூட செகாவ் கண்டித்துள்ளார். “உங்கள் எழுத்தில் அடக்கம் குறைவு. இயற்கையை வர்ணிக்கும் போது உரையாடலில் குறுக்கிடுகிறீர்கள். உங்கள் வர்ணனைகளைப் படிக்கும் போது அவை இரண்டு மூன்று வரிகளில் சுருக்கமாக நறுக்குத் தெறித்தாற் போல இருக்கலாம் என்று தோன்றுகிறது” என்று கார்க்கியிடம் கூறியுள்ளார். ஆனால் கார்க்கியை அவர் ஒரு போதும் புறக்கணித்ததில்லை. கார்க்கிக்கு எழுதிய கடிதமொன்றில் “நீங்கள் ஒரு அற்புதக் கலைஞர், அறிஞர், வாழ்வின் விசயங்களை அற்புதமாக உணர்ந்து எழுதுகிறீர்கள்” என்று செகாவ் குறிப்பிட்டுள்ளார்.”

“செகாவின் கதைகள், நாடகங்களில் சொற்கள் சிக்கனமாய் கையாளப்பட்டுள்ளதைக் காணலாம். அவரது நாடகங்களில் “மௌனம்” என்ற குறிப்பு இருக்கும். செர்ரிப் பழத்தோட்டத்தில் மட்டும் 35 மௌனங்கள் உள்ளன. முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ சமூகத்தின் ஊழல்களையும், அராஜகங் களையும் அம்பலப்படுத்தியதால் லெனினும், ஸ்டாலினும் செகாவைப் பிற்காலத்தில் கொண்டாடினர். செகாவின் ‘ஆறாவது வார்டு’ தோழர் லெனினுக்கு மிகவும் பிடித்தமான கதையாகும்.”

இது தி இந்து சுட்டது:

போலித்தனத்தை வெறுத்தவர். வாழ்க்கையின் மிக நுட்பமான விஷயங்களை மிக எளிமையாக எழுதியவர். இவரது படைப்புகள் அதிக வார்த்தைகளில் இல்லாமல் மிகவும் சுருக்கமாகவும் நகைச்சுவையோடும் இருக்கும்.”

(போலித்தனத்தை வெறுத்தவர் என்ற வார்த்தைகளுக்கு பொருள் தெரிந்திருந்தால் இப்படி சுட முடியுமா? இல்லை ஒரு விசயத்தை புரிந்து கொண்டு சுருக்கமாக எழுத தெரிந்திருந்தால் இப்படி செகாவை குற்றுயிரும் கொலையுயிருமாய் சிதைத்திருக்கமுடியுமா?)

இது பெருமாள் சொன்னது:

சேக்ஸ்பியர்
சேக்ஸ்பியர்

“டால்ஸ்டாய், செகாவைப் பற்றி “எனக்கு ஷேக்ஸ்பியரின் நாடகங்களை உனது நாடகங்கள் தூக்கியடித்து விடுகின்றன. ஷேக்ஸ்பியர் வாசகனை எங்கேயோ அழைத்துச் செல்வது போல் உணர முடிகிறது. ஆனால் உனது படைப்புகளோடு எங்கே போவது? இங்கேதான் இருக்க வேண்டும்” என்று செகாவிடம் கூறினார். அதே டால்ஸ்டாய் “இலக்கிய உத்தியிலும் உருவ அமைப்பிலும் செகாவை மிஞ்சக்கூடியவர்கள் எவருமில்லை அவர் ஈடு இணையற்றவர்” என்றும் கூறினார். டால்ஸ்டாய் மணிக்கணக்காகப் பேசுவதை செகாவ் மௌனமாகக் கேட்டுக் கொண்டிருப்பார். இந்தச் செகாவ் ஒரு நாத்திகன் என்று கூறிவிட்டுப் போவார்.”

இது தி இந்து கொலை செய்து கொடூரமாக சுட்டது:

“‘இலக்கிய உத்தியிலும், வடிவமைப்பிலும் செகோவை மிஞ்சக்கூடியவர்கள் யாருமே இல்லை,” என்று ஷேக்ஸ்பியர் இவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். வார்ட் நம்பர் 6, தி லேடி வித் தி டாக் உள்ளிட்ட மொத்தம் 568 சிறுகதைகளும் நாடகங்களும் எழுதியுள்ளார்.”

____________

நண்பர்களே,

ராயல் விக்டோரியன் மொழியில் படித்து தென்னிந்தியாவிலேயே தாங்கள்தான் அறிவுள்ளவர்கள் என்று “தி இந்து”வில் எழுதுபவர்களும், படிப்பவர்களும் கருதிக் கொள்கிறார்களே, அதன் யோக்கியதை எப்படி இருக்கிறது பாருங்கள்!

ஐந்து ரூபாய் கொடுத்து வாங்கும் வாசகரை தமிழ் “தி இந்து” பத்திரிகை மதிக்கும் இலட்சணம் இதுதான். இது ஏதோ இந்த துணுக்கை எழுதிய ராஜலட்சுமி சிவலிங்கத்தின் தவறாக நாம் பார்க்கவில்லை. “தி இந்து” இதழின் ஆசிரியருக்கே கூட மாஸ்கோ எங்கு இருக்கிறது, சேக்ஸ்பியர் எந்த மொழியில் எழுதினார், செகாவ் எந்த காலத்தில் வாழ்ந்தார் போன்ற பொது அறிவு விவரங்கள் தெரியுமா என்பது சந்தேகமே.

பொது அறிவே இருக்காது என்றால் இவர்கள் வரலாறு, அறிவியல், அரசியல் போன்ற துறைகளின் அரிச்சுவடி கூட அறிந்திருக்கமாட்டார்கள். செகாவை விடுங்கள், இதே தேதியிட்ட “தி இந்து”வில் 11-ம் பக்கத்தில் வந்த செய்தியைப் பாருங்கள்.

“மேடைகளில் ஆங்கிலத்தில் சரளமாக பேச மோடிக்கு உதவும் அதிநவீன ‘டெலிபிராம்டர்’ “ எனும் செய்தியை படியுங்கள். ஆங்கிலம் சரளமாக பேச தெரியாத மோடி தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர்களைப் போல கண்ணுக்கு முன்னே ஓடும் பெரிய எழுத்துக்களை படித்து உரையாற்றுகிறாராம். அவர் படிக்கும் கருவியை நாம் பார்க்க முடியாது என்பதால் அவர் நம்மை பார்க்கிறார் என்று நாம் நினைக்கிறோம். இது செய்தி.

இந்த செய்தியை கண்ணோட்டமின்றி இந்த அளவில் போட்டால் கூட தொலையட்டும் சனியன் என்று விட்டுவிடலாம். மாறாக இத்தகைய நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில் மோடி முன்னணியில் இருக்கிறார் என்று அடித்து விடுகிறார்கள். இது செய்தியல்ல, கண்ணோட்டம். அதாவது மோடிக்கு ஜால்ரா அடிக்கும் வெட்கம் கெட்ட தனம்.

ஆங்கிலம் தெரியாது என்று காட்டினால் அது ஒன்றும் பிழையில்லை. மாறாக அப்படி ஒரு பிரமையைக் காட்டி ஷோ பண்ணும் மோசடியான மனிதராக மோடி திகழ்கிறார். கோட்டு சூட்டிலேயே தனது பெயரை போட்டு ரசிக்கும் அந்த நார்சிச மனிதனைக் கண்டிக்காமல் அல்லது அற்பத்தனமாக நடக்கிறார் என்று கூட பேசாமல் ஏதோ சமூக வலைத்தளங்கள் உள்ளிட்டு டெக்னாலஜியில் பட்டையைக் கிளப்புகிறார் என்று ஏன் எழுத வேண்டும்?

ஆகவே விளம்பரம் தரும் முதலாளிகள், அரசு, ஆளும் கட்சிகளின் தயவில் பிழைக்கும் இந்த கனவான்களுக்கு சொந்த அறிவு என்பது எப்படி இருக்க முடியும்?

கோயம்பேட்டில் கருவாடு விற்பதற்காக இவர்கள் நடத்திய அழுகுணி ஆட்டத்தை ஏற்கனவே எழுதியிருக்கிறோம். அதில் பெரும்பான்மை மக்களின் கருவாட்டை விட சில பத்து மூக்குகளின் பிரச்சினையே இவர்களை அழச் செய்கிறது.

நம்மைப் போன்றவர்களுக்கு செகாவை படிக்கவும் பிடிக்கவும் தேவை இருக்கிறது. இவர்களுக்கு? “அஜித் படத்துக்கு வந்த மிரட்டல் கடிதம்” என்று அரைப்பக்கத்தில் செய்தி போட்டு தமிழுக்கு சேவை புரியும் “தி இந்து” கனவான்களுக்கு செகாவுக்கும் செக்குமாட்டுக்கும் என்ன வித்தியாசம் தெரியும்?

சரி, போகட்டும் விடுங்கள்!

உலகம் போற்றும் ஒரு எழுத்தாளரின் பிறந்த நாளில் அவரை எழுத்தில் கொலை செய்த “தி இந்து” அதற்கு பிராயச் சித்தம் செய்ய வேண்டும்.

கீழ்க்கண்ட மூன்றில் ஒன்றை தெரிவு செய்யலாம்.

1.   இளம் வாசகருக்கு செகாவைப் பற்றி அழகாக அறிமுகம் செய்த தோழர் பெருமாள் மற்றும் மாதவராஜுக்கு தலா ஒரு இலட்சம் அபராதத் தொகை கட்ட வேண்டும். இந்த தொகை “தி இந்து” சேர்மேன், ஆசிரியர், இலவச இதழ் ஆசிரியர், நடுப்பக்க ஆசிரியர் போன்ற இதர ஆசிரியர்களின் ஊதியத்திலிருந்து அளிக்க வேண்டும்.

2.   அபராதம் அதிகம் என்று கருதினால் வினவு அலுவலகத்திற்கு ஏதேனும் ஒரு  அதிகாலையில் வந்து அனைத்து ஆசிரியர்களும் 100 தோப்புக் கரணம் போடவேண்டும்.

3.   இதுவும் சரியில்லை என்றால் மூன்று நாட்களுக்கு “தி இந்து” பத்திரிகையை நிறுத்த வேண்டும்.

இப்படியெல்லாம் நடக்காமல் செகாவை செதுக்கி எழுதிய அந்த நபரை திட்டிவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கவும் அவர்கள் போகலாம். நம்மைப் பொறுத்த வரை எழுதியவரை விட எடிட்டரையே குற்றம் சாட்டுகிறோம்.

“தி இந்து” தமிழ் இதழ் வெளியான போது உலக அரசியலை “குலோப் ஜாமூன்” என்று பா.ராகவன் எழுதிய தொடரை பார்த்த போதே குமட்டிக் கொண்டு வந்தது. டவுண்லோடு பதிப்பகத்திலிருந்து பல்வேறு டவுண்லோடு அதுவும் அமெரிக்க பிரச்சாரக் குப்பைகளை டன் டன்னாக தரவிறக்கி வரலாறு என்று உளறும் ஒரு நபரை போய் உலக அரசியலை எழுத வைக்கிறார்களே என்று அதிர்ச்சியடைந்தோம்.

பத்திரிகை, பத்திரிகையாளர்கள் என்ன தரத்தில் இருக்கிறார்கள் என்பதற்கு இதுவும் ஒரு சான்று. உண்மையில் இளைஞர்களுக்கும், மக்களுக்கும் சேவையாற்ற கூடிய அறிஞர்கள், செய்தியாளர்கள் அனைவரும் வெளியே வேறு வேறு வேலையில் இருக்கிறார்கள். விளம்பரக் கம்பெனியில் பிழைப்பவர்கள் பத்திரிகைகளை நடத்துகிறார்கள்.

எனினும் செகாவுக்கு இழைக்கப்பட்ட மகாவிஷ்ணுவின் அநீதியை அம்பலப்படுத்தியிருக்கிறோம் என்பதுடன் முடித்துக் கொள்கிறோம்.

வினவில் வெளிவந்த செகாவ் சிறுகதை: சிறுகதை: எழுத்தரின் மரணம்! – ஆன்டன் செகாவ்

பதிவர் தீபா மொழிபெயர்த்த செகாவ் சிறுகதைகள்:

அண்ணலும் நோக்கினான் அம்பானியும் நோக்கினான் !

2

ராமாயண குடியரசு

மோடி, ஒபாமா, வீடணன்
வீடணன் என்றால் என்ன மோடி என்றால் என்ன தேசத்துரோகம் ஒன்றுதான்!

ராமா என்றால் என்ன
ஒபாமா என்றால் என்ன
ராமாயணம் ஒன்றுதான்!

வீடணன் என்றால் என்ன
மோடி என்றால் என்ன
தேசத்துரோகம் ஒன்றுதான்!

அசுரநிலத்தை ஆக்கிரமிக்கும்
ஆரண்ய காண்டத்து காட்சிகளை
குடியரசு தின அணிவகுப்பில்
கண்டு மகிழ்கிறான்
அந்நிய ராமன்…

நிதி மூலதனத்தின் ராமாயணத்தில்
தசரதனுக்கு மட்டுமல்ல
தரகு முதலாளி, கார்ப்பரேட்டுகளுக்கும்
அறுபதினாயிரம் ‘கம்பெனிகள்’

அண்ணலும் நோக்கினான்
அம்பானியும் நோக்கினான்….
ஒத்த ரூபாய் தேசியக்கொடியை
உனக்கும் எனக்கும்
குத்திவிட்டு
ஒட்டுமொத்த தேசத்தையும்
பத்தி விட்டது
பலராமன் கீர்த்தி!

ஒபாமா, டாடா, அம்பானி
அண்ணலும் நோக்கினான் அம்பானியும் நோக்கினான்…. ஒத்த ரூபாய் தேசியக்கொடியை உனக்கும் எனக்கும் குத்திவிட்டு ஒட்டுமொத்த தேசத்தையும் பத்தி விட்டது பலராமன் கீர்த்தி!

வெள்ளை மாளிகையின்
விரல் அசைவிலேயே
ஒடிந்துவிட்டது சிவ தனுசு!

கொள்ளை கொள்ளும்
பராக்கின் பார்வையிலேயே
முடிந்து விட்டது
மோடியின் மனசு!

நாட்டின் நலன்களை அறுத்து
நரமாமிசம் படைக்கும்
குஜராத் குகனைப் பார்த்து
‘மோடியுடன் அய்வரானோம்’
என முதுகில் தட்டிய காட்சியில்
அயோத்தி ராமனையே அசத்திவிட்டான்

அமெரிக்க ராமன்!?
திடுக்கிடும் காட்சிகளுக்கு
பஞ்சமில்லை….

அன்னிய மூலதனத்தால்
தேசமே நிர்வாணம்,
பண்ணிய கைகளுக்கு
பரிசாக
பனாரஸ் பட்டுபுடவை நூறு!

 ஒபாமாவுக்கு குடை
மோடியால் ஒபாமா மேல் விழுந்த ஒரு சொட்டு மழைத்துளியை தாங்க முடியவில்லை!

தாயின் வயிறு கிழித்து
சிசுவைக் கொன்ற
மதவெறியையே
தாங்கிக் கொள்ள முடிந்த மோடியால்,
ஒபாமா மேல் விழுந்த
ஒரு சொட்டு
மழைத்துளியை தாங்க முடியவில்லை!

குடியரசு தின விழாவில்
குடைபிடிக்க நேர்ந்த சங்கடத்திற்காக
டுவிட்டரில் இதயம் கனக்கிறது,

இயற்கை அறியா
இந்த அடிமைத்தனத்தில்
விழுந்த மழைத்துளி துடிக்கிறது!

அனுமானுக்காவது
நெஞ்சை திறந்து காட்ட வேண்டிய
நிர்ப்பந்தம் இருந்தது
மோடிக்கு முகமே பிம்பம்!

இனி
ஒபாமா இருக்கும் இடம்தான்
மோடிக்கு அயோத்தி.

அனுமானுக்கு கணையாழி…
ஆர்.எஸ்.எஸ். சுக்கு அணு உலை…

அத்வானிக்கு பத்ம விபூஷண்
பரதனுக்கு செருப்பு அத்வானிக்கு பத்மவிபூஷன்

உள்ள சுயசார்பனைத்தும்
உருவப்பட்ட பிறகும் கூட
“கண்டேன் சீதையை” என
களிப்புடன் கத்தும்
‘சுதேசி’ குருமூர்த்தி!

உருக்கமான காட்சிகளும்
உண்டு…
பரதனுக்கு செருப்பு
அத்வானிக்கு பத்மவிபூஷன்
ஒபாமாவிடம் முறையிட
கைகேயியைக் காணோம்…

“நான் சாதாரண
சமையல்காரர் பேரன்”
-இது ஒபாமா!

“நான் சாதாரண
தேநீர் விற்றவன்”
-இது மோடி

இடி அமீன் கூட
ஒரு சமையல்காரர்,
ஓ.பி.கூட
ஒரு டீக்கடைக்காரர்!
அதுக்காக?

இந்தத் தகுதிக்கு
நீங்கள் ஓட்டல் வைக்கலாம்,
நாட்டை விற்கலாமா?

வெற்றிலைப் பொட்டலத்தில்
பழைய அய்ந்து ரூபாய் தாளை
பார்த்து பார்த்து
பத்திரப்படுத்தும்
ஒரு உழைப்பாளிக்கு தெரியாது

அமெரிக்காவக்கு அடிபணியும் மோடி
இப்படியெல்லாம் பேசி வங்கியை விற்க…ரயில்வேயை விற்க… ராணுவத்தை அமெரிக்காவிற்கு விற்க… வரும் அன்னியனுக்கு நாட்டையே காட்டிக் கொடுக்க..

இப்படியெல்லாம் பேசி
வங்கியை விற்க…
ரயில்வேயை விற்க…
ராணுவத்தை அமெரிக்காவிற்கு விற்க…
வரும் அன்னியனுக்கு
நாட்டையே காட்டிக் கொடுக்க..
ஒரு உழைப்பாளிக்கு தெரியாது!

புரிந்து கொண்டோம்,
ராம ராஜ்யத்தின்
குறியீட்டு எண்
தேசத்துக்கே நாமம்!

எல்லா இழவையும்
எடுத்துவிட்டு
கங்கைக் கரையில்
கம்பீரமாக ஒலிக்கிறது…
திவச மந்திரம்…

ஆதிக்க ஆவியில் கலக்கிறது காவி
ஒபாமா பிதா….
அமெரிக்க கோத்திரம்…
ஆர்ய பிதுர் யஹா..!

– துரை. சண்முகம்

வெள்ளாறு : உயிர் போனாலும் ஒரு பிடி மணலை எடுக்க விடமாட்டோம் !

0

டலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி வட்டம், முடிகண்ட நல்லூர் மணல் குவாரியை நிரந்தரமாக மூடவேண்டும் என காவாலக்குடி, சாந்தி நகர் மற்றும் பல கிராம மக்கள் 22-01-2015 அன்று  ஜேசிபி எந்திரத்தை மறித்து வெள்ளாற்றில் முற்றுகை போராட்டம்  நடத்தினர். குவாரி தற்காலிகமாக மூடப்பட்டது.

மணல் குவாரி முற்றுகை
காவாலக்குடி, சாந்தி நகர் மற்றும் பல கிராம மக்கள் 22-01-2015 அன்று ஜேசிபி எந்திரத்தை மறித்து வெள்ளாற்றில் முற்றுகை போராட்டம் நடத்தினர். குவாரி தற்காலிகமாக மூடப்பட்டது.

போராடிய மக்கள் மீது பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் வெற்றிச்செல்வன் சோழதரம் போலீசில் பொய்புகார் மனு கொடுத்துள்ளார்.

அதன் அடிப்படையில் செங்குட்டுவன், இளங்கோவன், ரவீந்திரன், சிவக்குமார், கவியரசன் என 30 பெயரை குறிப்பிட்டு, வழக்கறிஞர் ராஜு ஆகியோருடன் பெயர் விலாசம் தெரிந்த 100 ஆண்கள், 70 பெண்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மணல் குவாரி முற்றுகை போராட்டம்
மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் ராஜு, புஷ்பதேவன் ஆகியோர் வாழ்வாதாரத்திற்க்காக போராடுகின்ற மக்களுக்கு உதவி செய்ய சென்றனர்.

அரசு அங்கீகாரம் பெற்ற குவாரியில் பொதுப்பணித்துறை, காவல்துறை, வருவாய்துறை இவர்களை வேலை செய்யாமல் தடுத்தும், அனுமதி பெற்ற பொக்கலைன் மீது ஏறிக் கொண்டும்,வேலை செய்ய விடாமல் தடுத்து நிறுத்தியும், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியும் எங்களை மிரட்டியும் உள்ளார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. (குற்ற எண்  :13/2015), (இ.த.ச.பிரிவு 188,147,341,353,506(1).)

women-at-quarry-siege“மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் ராஜு, புஷ்பதேவன் ஆகியோர் வாழ்வாதாரத்திற்க்காக போராடுகின்ற மக்களுக்கு உதவி செய்ய சென்றனர். அவர்கள் மீதும் பொய்வழக்கு போடப்பட்டது கண்டிக்கதக்கது” என சோழதரம் போலீசு ஆய்வாளர் முரளி மற்றும் பொதுப்பணி துறை உதவி செயற்பொறியாளர் வெற்றிச்செல்வன் ஆகியோரை கண்டித்து விருத்தாசலம் வழக்கறிஞர்கள் ஒரு நாள் நீதிமன்றத்தை புறக்கணித்தும், பொய் வழக்கை வாபஸ் வாங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வழக்கறிஞர்கள் போராட்டம்
விருத்தாசலம் வழக்கறிஞர்கள் ஒரு நாள் நீதிமன்றத்தை புறக்கணித்தும், பொய் வழக்கை வாபஸ் வாங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அதைத் தொடர்ந்து 27/01/2015 அன்று சிதம்பரம் நீதிமன்றத்திலும் வழக்கறிஞர்கள், “வெள்ளாற்றை பாதுகாக்க போராடும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து வழக்கறிஞர்கள் மீது போடப்பட்ட பொய்வழக்கை திரும்ப பெற வேண்டும்” என நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நட்த்தினர்.

மணல் குவாரி மூடுவது குறித்து அமைதி பேச்சுவார்த்தை
மணல் குவாரி மூடுவது குறித்து அமைதி பேச்சுவார்த்தை

27/01/2015 அன்று சிதம்பரம் சார் ஆட்சியர் அரவிந்த் முன்னிலையில் சேத்தியாதோப்பு டி.எஸ்.பி சுரேஷ்பாபு , ஆய்வாளர் முரளி, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் வெற்றிச்செல்வன், தாசில்தார் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் மணல் குவாரி மூடுவது குறித்து அமைதி பேச்சுவார்த்தை நடந்தது.

மணல் அள்ள வேண்டும் என முடிகண்ட நல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெகஜீவன்ராம் மற்றும் சிலருடன் பேச்சுவார்த்தை நடந்தது.  மணல்குவாரியை மூடக்கோரி பல்வேறு கிராமங்களிலிருந்து 300-க்கும் மேற்பட்ட மக்கள் டிராக்டர், வேன், இருசக்கரவாகனம் என பெருந்திரளாக வந்திருந்தனர்.

மக்கள் திரள்
பல்வேறு கிராமங்களிலிருந்து 300-க்கும் மேற்பட்ட மக்கள் டிராக்டர், வேன், இருசக்கரவாகனம் என பெருந்திரளாக மக்கள் வந்திருந்தனர்.

நமது மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் செந்தில் மற்றும் சேத்தியாதோப்பு பாலுமகேந்திரன் ஆகியோர் இறுதிவரை நின்று மக்களுக்கு நம்பிக்கையூட்டினர்.

வெள்ளாற்று பாதுகாப்பு இயக்க காவாலக்குடி ஒருங்கிணைப்பாளர்  செங்குட்டுவன் மற்றும் 8 பேர் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.

“மணலை கொள்ளையடிக்க பாசனத்திற்க்கு வெள்ளாறு வழியாக பெருமாள் ஏரிக்கு தண்ணீர்   செல்லவிடாமல் பாழ் வாய்க்கால் வழியாக கடலுக்கு திருப்படுகிறது. அதிகாரிகள் மனசாட்சிக்கு விரோதமாக நடக்கிறார்கள் .

முடிகண்டநல்லூர் மணல் குவாரி 15 வருடமாக செயல்பட்டு வருகிறது. 3 அடி மணல் எடுக்கலாம் என சட்டம் சொல்கிறது. 25 அடி 30 அடி என ஆற்றை சின்னா பின்னமாக்கி உள்ளார்கள். நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு போர்செட்டு தண்ணீர் இறைக்கவில்லை. சேட்டிலைட்டு கருவி ஒரே இடத்தையா 15 வருடமாக காட்டுகிறது” என இடித்துரைத்து  பேசினர்.

மணல் கொள்ளை பேச்சுவார்த்தை
மணல் கொள்ளை குறித்து இடித்துரைத்து பேசிய பிரதிநிதிகள்.

“முப்போகம் செய்யும் சாகுபடி இன்று இரண்டு போகமாக மாறியுள்ளது. குடி நீருக்கே தட்டுப்பாடு வரும்போல் உள்ளது. 37,500 யூனிட் மணல்தான் எடுக்கவேண்டும். கடந்த பத்து மாதமாக நாள் ஒன்றுக்கு 500 யூனிட் என வைத்தால் 125,000 லோடு மணல் எடுத்துள்ளார்கள். அரசு கஜானாவிற்கு 10-ல் ஒரு பங்குகூட  செல்லவில்லை. அனைத்து பணமும் மணல்கொள்ளையர்களிடம்தான் சென்றுள்ளது.

பொதுப்பணித்துறை ஏ.இ புரோக்கர்கள் போல் செயல்பட்டு வருகின்றார்கள். மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் அதிகாரியாக செயல்படவில்லை . எங்களை எதிரிபோல் பார்க்கின்றனர். நாங்கள் பஞ்சம் பிழைக்க ஊரை காலிசெய்யும் நிலை  வந்துவிடும்.

உயிரே போனாலும் ஒரு பிடி மணலை கூட அள்ள விடமாட்டோம். எத்தனை பொய்வழக்கு போட்டாலும், கைது செய்து சிறையில் அடைத்தாலும் மணல் கொள்ளைக்கு எதிராக போராடுவோம்” என உறுதியாக தெரிவித்தனர்.

பேச்சு வார்த்தையில் கலந்து கொண்ட பிரதிநிதிகள் சார் ஆட்சியரை மக்களை சந்திக்க அழைத்தனர். 300-க்கும் மேற்பட்ட மக்கள் வளாகத்தில் உணர்ச்சிப் பிழம்பாக காட்சியளித்தனர்.

உணர்ச்சிப் பிழம்பாக மக்கள்
உணர்ச்சிப் பிழம்பாக மக்கள்

“ரேஷன் கார்டு வேண்டாம், வாக்காளர் அட்டை வேண்டாம், நாங்கள் எங்காவது போகிறோம் நீங்கள் ஆற்று மணலை முழுவதையும் அள்ளிக் கொள்ளுங்கள்” என உரத்த குரலில் பேசினர்.

செய்வதறியாது திகைத்த இளம் வயது சார் ஆட்சியர், “எங்களுக்கு மக்கள்தான் முக்கியம் கண்டிப்பாக என்னால் ஆனதை செய்வேன்” என உறுதி சொல்லி அனுப்பினார்.

வெள்ளாற்று பாதுகாப்பு இயக்கம் கருவேப்பிலங்குறிச்சி தொடங்கி 20-க்கும் மேற்ப்பட்ட வெள்ளாற்று கரையோர கிராம மக்களிடையே  தொடர்ந்து  நம்பிக்கையுடன் பயணித்து வருகிறது.

இன்று சேத்தியாதோப்பு டி.எஸ்.பி போராடும் முன்னணியாளர்களை அழைத்து “மணல்குவாரி விதிமுறைகளுடன் சரியாக செயல்பட்டு வருகிறது, பாதுகாப்பு கொடுக்கசொல்லி எங்களுக்கு மேலிடத்து உத்தரவு. நாளை நீங்கள் மறித்தால் கைது செய்வோம். போலீசு மீது வருத்தபடாதீர்கள்” என சொல்லியுள்ளார். இப்படி அதிகார வர்க்கம், போலீசு அனைத்தும் மணல் கொள்ளையர்களுக்கு ஆதரவாக இருக்கின்றது. எனினும் மக்கள் இந்த தடைகளை முறியடித்து தமது வாழ்வாதாரப் போராட்டத்தில் வெல்வார்கள்.

விருத்தாசலம் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு மற்றும் மணல் குவாரி மூடுவது குறித்த பேச்சுவார்த்தை – பத்திரிகை செய்திகள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

அடுத்த கட்ட போராட்டம் பற்றி மனித உரிமை பாதுகாப்பு மையமும், வெள்ளாற்று பாதுகாப்பு இயக்கமும் கலந்து பேசி முடிவு செய்ய உள்ளனர்.

தகவல்
மனித உரிமை பாதுகாப்பு மையம்,
விருத்தாசலம்

திருச்சி, வேதாரண்யம், விழுப்புரம் – மீண்டும் துவங்கியது மொழிப்போர்

4

மிழ்நாட்டு மாணவர்களின் இந்தித்திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின் பொன்விழா ஆண்டினை நினைவு கூர்ந்து அப்படி ஒரு மொழிப்போரினை மீண்டும் துவக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தமிழகம் முழுவதும் பேருந்து, ரயில், குடியிருப்புப் பகுதிகள் என எல்லா இடங்களிலும் மக்களிடம் பிரச்சாரம் செய்து வருகிறது.  சைக்கிள் பேரணி, கல்லூரிகளில் வாயில் நாடகம் என பல வடிவங்களில் பிரச்சாரம் செய்யப்பட்டது.

ஜனவரி 25, 2015 அன்று மொழிப்போர் தியாகிகள் நாள் புரட்சிகர அமைப்புகளால் தமிழகத்தின் அனைத்து முக்கிய நகரங்களிலும் கடைப்பிடிக்கப்பட்டது. அது தொடர்பான தகவல்கள், புகைப்படங்களின் மூன்றாவது பகுதி.

6. திருச்சி

திருச்சியில் மாநகரம் தழுவிய அளவில் சுவரெழுத்து பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஸ்ரீரங்கம் தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறுவதையொட்டி தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி சுவரெழுத்துக்களை போலீசார் அழித்து விட்டனர்.

trichy-mozhipor-campaign-01தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் போதே பாசிச கோமாளி எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள், சுவரெழுத்துக்கள் உள்ளிட்டவற்றை அனுமதித்த போலீசு, மொழிப்போர் தியாகிகளின் நினைவேந்தலை தடுப்பதில் முனைப்புடன் செயல்பட்டது. நக்குற நாய்க்கு செக்கு வேறு சிவலிங்கம் வேறு என்பது தெரியாது என்பதை நிரூபித்தது ஜெயா போலீசு.

இதனைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் பிரச்சாரங்களை கொண்டு செல்லும் விதமாக ஆயிரக்கணக்கான துண்டு பிரசுரங்களை அச்சிட்டு மக்கள் மத்தியில் கொண்டு சென்றோம். குறிப்பாக, கல்லூரி மாணவர்கள் மத்தியில் பிரச்சாரங்கள் விரிவாக முன்னெடுக்கப்பட்டது. கல்லூரி விடுதிகளில் குறும்படங்கள் திரையிட்டு மொழிப்போர் தியாகிகளின் நினைவை நெஞ்சில் ஏந்தி செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும், ஆரிய பார்ப்பன எதிர்ப்பு போரின் தளப்பிரதேசமாக தமிழ்நாட்டை கட்டியமைக்க உறுதியேற்கும் உணர்வினை உருவாக்கியும் சிறப்புக்கூட்டங்கள் பு.மா.இ.மு தோழர்களால் நடத்தப்பட்டன.

trichy-mozhipor-campaign-03மொழிப்போர் தியாகிகளை நினைவு கூறுவது கூடவே, தந்தை பெரியாரின் இந்தி எதிர்ப்பு போராட்ட பங்களிப்பை உயர்த்தி பிடிக்கும் வகையில், சனவரி 25 அன்று காலை 10 மணி அளவில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் இணைப்பு சங்கமான பாய்லர் ப்ளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியனின் பொதுச்செயலாளரான தோழர் சுந்தர்ராஜ் தலைமையில் ம.க.இ.க, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு மற்றும் பெ.வி.மு தோழர்கள் மாலை அணிவித்தனர். சுமார் 15 நிமிடம் எழுச்சிகரமாக முழக்கமிட்டு உரையாற்றினர்.

trichy-mozhipor-campaign-02அதன் பின்னர் அங்கிருந்து இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களில் செங்கொடிகளுடன் முழக்கமிட்டு ஊர்வலமாக புறப்பட்டனர். அமெரிக்கன் மருத்துவமனை, நீதிமன்றம், புத்தூர் 4 ரோடு, தென்னூர் உள்ளிட்ட பகுதிகளின் வழியே ஆயிரக்கணக்கான பிரசுரங்களை மக்கள் மத்தியில் விநியோகித்துக் கொண்டே சென்ற ஊர்வலம், தென்னூர் அருகில் உள்ள தக்ஷின பாரத ஹிந்தி பிரச்சார சபா வளாகத்தின் முன் முடிவுற்றது.

சுமார் அரை மணி நேரம் அங்கே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் மாவட்ட பொருளாளர் தோழர் ஓவியா தலைமை தாங்கி நடத்தினார். ம.க.இ.க தோழர் ஜீவா உள்ளிட்டோர் எழுச்சியுரையாற்றினர்.

trichy-mozhipor-campaign-20“தி.மு.க, அ.தி.மு.க, ம.தி.மு.க, நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போலீசிடம் முன் கூட்டியே அனுமதி பெற்றும், (மக்கள் நடமாட்டம் இல்லாத உழவர் சந்தை அமைந்துள்ள பகுதி வழியாக) அமைதி ஊர்வலமாக செல்லும் போது நீங்கள் மட்டும் சர்ச்சைக்குரிய இடத்தில் இவ்வாறு உரிய முன் அனுமதி பெறாமல் ஊர்வலம் ஆர்ப்பாட்டம் நடத்துவது சரியல்ல” என்று போலீசார் தோழர்களை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

“சீழ் உள்ள இடத்தில் தானே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்! இது எங்கள் உரிமை இதற்கு யாரிடமும் அனுமதி பெறவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை” என்று உறுதியான குரலில் மறுப்பை தெரிவித்துவிட்டு இந்தி பிரச்சார சபாவின் முன்பு முற்றுகையிடும் விதமாக விண்ணதிரும் முழக்கங்களை எழுப்பினர் தோழர்கள்.

trichy-mozhipor-campaign-12“இந்தி என்பது மொழியல்ல
பார்ப்பன ஆதிக்க அடையாளம்!

இந்தி கற்றால் வேலை என்பதை
ஏற்றுக்கொள்வது அவமானம்!
வேலைவாய்ப்பு என்பதற்காக
நடத்தலாமா விபச்சாரம்?

இந்தி என்பது மொழியல்ல
சமஸ்கிருதத்தின் மறுஉருவம்!
சமஸ்கிருதம் மொழியல்ல – அது
சாதியைத் திணித்த மனுதர்மம்!

பல மொழியை கற்பது வேறு
பார்ப்பன மொழிக்கு பணிவது வேறு!
பார்ப்பனியத்தை ஏற்க மாட்டோம்
பார்ப்பன இந்தியை எதிர்த்து நிற்போம்!

பார்ப்பனியத்தின் பிடரியைப் பிடித்து
உலுக்கி எடுத்த தமிழ்மண்ணில்
மீண்டும் திரும்புது வரலாறு!
கொட்டமடிக்குது ஆர்.எஸ்.எஸ்!

அனுமதியோம்! அனுமதியோம்!
தியாகிகள்மண்ணில்தமிழ்மண்ணில்
பார்ப்பனியம்கொட்டமடிக்க
அனுமதியோம்! அனுமதியோம்!

சபதமேற்போம்! சபதமேற்போம்!
மொழிப்போர்தியாகிகளே
உங்கள் பெயரால் உறுதியேற்போம்!

வீழ்த்துவோம்! வீழ்த்துவோம்!
ஆரிய – பார்ப்பன, வேத, வைதீக,
சமஸ்கிருத இந்தி
ஆதிக்கபண்பாட்டை
போரிட்டு வீழ்த்துவோம்!

ஆணையிடு! ஆணையிடு!
தமிழ்வழி கல்வி பயின்றோர்க்கு
தமிழகத்தில் அரசு வேலை என்று ஆணையிடு!

கல்வி நிலையங்களில் தமிழ் பயிற்று மொழி
அரசு தமிழே நிர்வாக மொழி
நீதி மன்றங்களில் தமிழே வழக்காடுமொழி
என ஆணையில் தமிழை வைப்போம்!

என முழங்கி போராட்டத்தை தொடர்ந்தனர்.

அடுத்தடுத்து வந்த காவல்துறை உயர்அதிகாரிகள் வேறு வழியின்றி பேரணியை அனுமதித்து மொழிப்போர் தியாகிகளின் நினைவிடத்திற்கு செல்ல அனுமதித்தனர்.

பெண்கள் குழந்தைகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் உணர்வுப்பூர்வமாக முழக்கமிட்டு பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து கீழப்பழுர் சின்னசாமி, விராலிமலை சண்முகம் ஆகிய மொழிப்போர் தியாகிகளின் கல்லறையில் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாவட்ட தலைவர் காவிரிநாடன் மற்றும் ம.க.இ.க மையக்கலைக் குழு தோழர் சத்யா உள்ளிட்டோர் நினைவேந்தல் உரை நிகழ்த்தி உறுதி மொழியேற்று உணர்வூட்டினர்.

trichy-mozhipor-campaign-24மாற்று கட்சிகள் அனைத்தும் இந்நாளை துக்க தினம் போல் அமைதி ஊர்வலமாக நடத்துகையில் புரட்சிகர அமைப்புகள் முழக்கமிட்டு பறையடித்து போராட்டக் களம் போல் மாற்றின.

trichy-mozhipor-campaign-23

செய்தி:
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
திருச்சி பகுதி.

7. வேதாரண்யம்

 வேதாரண்யம் பகுதியின் விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பாகவும், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் சார்பாகவும் இந்தி-பார்ப்பன எதிர்ப்பு போரின் அடையாளமாக பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து இந்தி எதிர்ப்பு, மொழிப்போர் தியாகிகளின் தியாகத்திற்கு வீர வணக்க முழக்கம் இடப்பட்டது.

அதனையொட்டி நடந்த அரங்கக் கூட்டத்தில் ஆசிரியர்களும், மாணவர்களும் கலந்து கொண்டு, இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாற்றை இளைஞர்களிடமும், மாணவர்களிடமும் கொண்டு செல்ல வேண்டிய காலச் சூழலின் அவசியத்தை விளக்கினர்.

தகவல்:
விவசாயிகள் விடுதலை முன்னணி,
வேதாரண்யம்

8. விழுப்புரம்

விழுப்புரம் நகரம் முழுவதும்  பேருந்து,  ரயில் நிலையம், அறிஞர் அண்ணா அரசினர் கலைக்கல்லூரி,  விவேகானந்தா கலைக்கல்லூரி,  ES பொறியியல் கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரி, நீதிமன்றம்,  மாவட்ட ஆட்சியர் வளாகம்,  மக்கள் குடியிருப்பு பகுதி என அனைத்து இடங்களிலும் முழு வீச்சில் பிரச்சாரம் செய்யப்பட்டது.

tttewqqகுறிப்பாக தமிழர் திருநாள் என்று அழைக்கப்படும் பொங்கலையொட்டி 13,14,19 ஆகிய தினங்களில் விடுமுறை என்பதால் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் அனைத்திலும் பிரச்சாரம் செய்யப்பட்டது. பேருந்தில் இருந்த பல இளைஞர்கள் நமக்கு வாழ்த்து கூறி ஆதரவளித்ததோடு, மட்டுமல்லாமல் தமிழ் வாழ்க! என்று பேருந்திலேயே ஒரு இளைஞர் முழக்கமிட்டு தனது உணர்வை வெளிப்படுத்தினர்.

mozhipor-rsyf-vpm-420, 21, 22 -ஆகிய தேதிகளில் நகரத்தில் உள்ள 10 – பள்ளிகளிலும்,  4 – கல்லூரிகளிலும் அனைத்து ஆசிரியர்களுக்கும் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் விளக்கி பேசி பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.  குறிப்பாக அரசு உதவி  பெரும் சம்ஸ்கிருத பள்ளியின் தலைமை ஆசிரியர் ஒருவரை சந்தித்து பேசுகையில் ‘நாங்களே சமஸ்கிருதம் சொல்லி தருகிறோம், எங்க பள்ளியிலேவா’  என்று கேட்டார். அதற்கு நாம் ‘இது தமிழ்நாடு!  தமிழுக்குத்தான் முதல் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்’ என்று விளக்கி கூறியதும் நம் பிரசுரத்தை வாங்கிகொண்டார்.

mozhipor-rsyf-vpm-223-ம் தேதி நீதிமன்றத்திற்கு சென்று பிரச்சாரம் செய்தோம்.  அன்றைய தினம்  விழுப்புரம் மற்றும் திண்டிவனம் வழக்கறிஞர்கள் சங்கங்கள் திண்டிவனம் போலீஸ் இரண்டு வழக்கறிஞர்களை தாக்கியதை கண்டித்து எஸ்.பி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் அறிவித்து இருந்தனர்.  இதனால் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் உள்ள வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்கு  வந்திருந்தனர். இதனால் நீதிமன்றத்தில்  பரபரப்பான சூழல் நிலவியது.

mozhipor-rsyf-vpm-1நெருக்கடியான சூழலிலும்  நாங்கள் நீதிமன்ற வளாகத்துக்குள் சென்று பிரசாரத்தை செய்தோம்.  வழக்கறிஞர்களுக்கு பிரசுரம் கொடுக்கும்போது அங்கு ஒரு குழுவாக நின்று பேசிக்கொண்டு இருந்த வழக்கறிஞர்கள் பிரசுரத்தை ஆர்வமாக வாங்கி படித்தனர். அவர்களில் ஒருவர் இவர்கள் மட்டும்தான் எந்த இடத்திலும் துணிச்சலுடன் பிரச்சாரத்தை செய்கிறார்கள் என்று தங்களுக்குள் பேசிக்  கொண்டிருந்தனர். இந்த பிரச்சாரம் வழக்கறிஞர்களிடமும் அங்கே  இருந்த மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது.

அன்று மாலை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகம் முழுவதும் பிரச்சாரம் செய்யப்பட்டது. குறிப்பாக ஆட்சியர் அலுவலகம்,  கருவூலம், வனத்துறை, ஊனமுற்றோர் நலத்துறை, பதிவுத்துறை, அஞ்சல்துறை, என  அனைத்து  அலுவலகங்களிலும் பிரசுரம் விநியோகிகப்பட்டது. அப்போது அரசு ஊழியர் ஒருவர்  ‘நான் கள்ளக்குறிச்சியில் வேலை பார்க்கிறேன், எங்கள் அலுவலகத்தில் உள்ளவர்களுக்கு பிரசுரம் கொடுக்கவேண்டும். கொஞ்சம் கூடுதலாக பிரசுரம் வேண்டும்’ என்று கேட்டு ஆர்வத்துடன் வாங்கி சென்றார்.

mozhipor-rsyf-vpm-524-ம் தேதி விழுப்புரம் நகரின் மையப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் பிரச்சாரம் செய்யப்பட்டது. அப்பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட தோழர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இதனை பார்த்த அந்த பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, கல்லூரி மாணவர்கள் மற்றும் புதிய இளைஞர்கள் நம்முடன் சேர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.இதனை பார்த்த மக்கள் உற்சாகமாக நம் பிரசுரத்தை வாங்கி படித்தனர்.  ஒவ்வொரு வீடாக சென்று விளக்கி பேசியதும் மக்கள் ஆர்வமாக கவனித்தனர்.  மேலும் நமக்கு டீ, வடை கொடுத்து தோழர்களின் களைப்பை போக்கி நம்மை மேலும் உற்சாகப்படுதினர்.
இந்த பிரச்சாரம் தமிழ் மொழியையும்,  தமிழரின் வாழ்வையும்,  பண்பாட்டையும் தாக்கி அழிக்க ஆரிய-பார்ப்பன கூட்டம் மீண்டும் படையெடுத்து வரும்போது  உழைக்கும் தமிழ் மக்கள் அதற்க்கு எதிராக போராட எழ வேண்டும் என்ற கருத்தை போர்க்குணத்தோடு வலியுறுத்துவதாக இருந்தது.

ஊர்வலம்  தொடக்கம்

சனவரி 25-ம் தேதி காலை 10.00 மணிக்கு ரயில் நிலைய வாயில் முன் 100 -க்கும் மேற்பட்ட மாணவ, இளைஞர்கள் ஊர்வலத்திற்கு ஆயத்தமானார்கள். ஊர்வலம்  ரயில்வே நிலையத்திலிருந்து  சென்று காமராசர் வீதியில் உள்ள பெரியார் சிலைக்கும், மற்றும் மொழிப்போர்த் தியாகிகளின் உருவப்படத்திற்கும் மாலை அணிவித்து உறுதியேற்பது என திட்டம்.  எனவே அதற்கான வேலையை தொடங்கினோம். மொழிப்போர் தியாகிகளின் படங்களை கட்டுவது,  தங்களுடைய சட்டையில் பேட்ஜ், தலையில் தொப்பி அணிவது மேலும்  தட்டிகளும், பேனர்களும் பேரணிக்கு தயார் செய்யப்பட்டன. எப்பொழுதும் மக்கள் அதிகம் வரும் அப்பகுதியில் புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணியின் ஊர்வலம் களை கட்ட தொடங்கியது. அந்த “வீரன் இன்னும் சாகவில்லை” என்ற பகத்சிங் பாடல் ஓங்கி ஒலித்துக்கொண்டு இருந்தது. அங்குமிங்கும் நடந்துகொண்டிருந்த மக்கள் நின்று கவனித்தனர்.  மேலும் நம்மிடம் இருந்த பிரசுரத்தை ஆர்வமாக வாங்கி படித்தனர்.

mozhipor-rsyf-vpm-6சரியாக 11.00மணிக்கு ஊர்வலம் ரயில் நிலையத்தில் தொடங்கியதை அடுத்து கம்பீரமாக எழுப்பபட்ட முழக்கம்  தமிழ்நாட்டு மாணவர்களின் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தின் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சி எதற்காக என்பதை ஊர்முழுக்க அறிவிப்பதாக இருந்தது. மொழிப்போர் தியாகிகளின் உருவப்படத்தை இரு தோழர்கள் வழிகாட்டியாக எடுத்து செல்ல, செங்கொடிகள் மற்றும் தட்டிகளுடன் தோழர்கள் பின்தொடர குருசாமிப்பிள்ளை வீதி, நாப்பாளையம் வீதி, திருவிக வீதிகளின் வழியாக காமராசர் வீதியில் உள்ள பெரியார் சிலைக்கு ஊர்வலம் சென்றடைந்தது. மேலும் கடைகளில் இருந்தும்,  சாலையின் இருபுறம் நின்றும் வீட்டின் மாடிகளில் இருந்தவாறும் மக்கள் ஊர்வலத்தை  கவனித்தனர்.  இரு தோழர்கள் அவர்களுக்கு பிரசுரம் விநியோகித்தார்கள். ஊர்வலத்தில்  எழுப்பப்பட்ட   முழக்கத்தை கவனித்த அப்பகுதி மக்களுக்கு இந்த ஊர்வலத்தின்  நோக்கம் என்ன  என்பதை உணர்த்தும் வகையில் அமைந்தது. ஊர்வலம் முழுவதையும் தோழர்கள் ஸ்ரீராம், தம்பிதுரை இருவரும் தொண்டர்படையாக  இருந்து வழிகாட்டியதோடு   மட்டுமல்லாமல், தோழர்கள் சோர்வடையாமல் இருக்க தொடர்ந்து தண்ணீரும் வழங்கியபடியே வந்தனர்.

mozhipor-rsyf-vpm-3சரியாக 11.45 மணிக்கு பெரியார் சிலைக்கு வந்தடைந்தோம்.

அங்கு வந்த காவல் துறை ஆய்வாளர்  பு.மா.இ.மு செயலரிடம் “நீங்கள் ஊர்வலத்திற்கு  மட்டும்தான் அனுமதி வாங்கினீர்கள் ஒலிபெருக்கி  அனுமதி வாங்கவில்லையே” என்றார்.

அதற்கு நாம் “நீங்க மனுவை இன்னொரு முறை பாருங்கள் அதில்  தெளிவாக குறிப்பிட்டுள்ளோம்”  என்றதும்

அதன்பின் சமாளிக்கும் விதமாக “நேரம் அதிகமாகிவிட்டது” என்றார்.

அதற்கும்  “நீங்கள்தான் 11.00 மணிக்கு அனுமதி தந்தீர்கள்” என்று   கூறியவுடன்

“சரிங்க தம்பி நீங்கள் நடத்துங்கள்” என்று கூறி ஒன்றுமே தெரியாத அப்பாவி போல் நைசாக பின்வாங்கினர்.

அதன் பின் உறுதியேற்பு கூட்டத்தை பு.மா.இ.மு செயலர் தோழர். மோகன்ராஜ் தலைமையேற்று நடத்தினார். தோழர்கள் பெரியார் சிலைக்கும்,  மொழிப்போர் தியாகிகளின் சிலைக்கும் மாலை அணிவித்து உறுதியேற்றனர்.

இறுதியாக பேசிய தோழர். செல்வக்குமார்  மொழிப்போர் வரலாற்றையும், அதற்கான தற்போதைய தேவையையும்  விளக்கினார்.   மேலும் உலகில் வளர்ந்த பல முன்னணி நாடுகள் அனைத்து துறைகளிலும் தன்னுடைய தாய் மொழியை தான் பயன்படுத்துகின்றனர். தாய்மொழியில் படிக்கும் போதுதான் சுயமாக சிந்திக்கும் ஆற்றல் வளரும். அதனால் தான் அவர்களால் முன்னணி நாடாக விளங்க முடிகிறது. பி.ஜே.பி-ஆர். எஸ்.எஸ் கும்பல் கூறுவது  போல இந்தி,சமஸ்கிருதம் படித்தால் நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லலாம் என்பது சுத்த பொய்.அனைத்து தேசிய இன, மொழி, பண்பாடு, கலாச்சாரம் அனைத்தையும் ஒழித்து இந்தி-இந்து-இந்தியா என்ற ஆர்.எஸ்.எஸ்-ன் அகண்ட பாரத கனவை நனவாக்குவது தான் இவர்களின் திட்டம்.

எனவே மீண்டும் படையெடுத்து வரும் ஆரிய-பார்ப்பன கூட்டத்தை தமிழகத்தை விட்டே விரட்ட உழைக்கும் மக்களாகிய நாம் புரட்சிகர அமைப்புகளின் பின்னால் ஓரணியில் திரள வேண்டும். இதுவே மொழிப்போர் தியாகிகளுக்கு நாம் செலுத்தும் உண்மையான நினைவேந்தலாகும் என கூறி முடித்தார்.

தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
விழுப்புரம்

  1. சென்னையில் நடந்த பிரச்சாரம், தெருமுனைக்கூட்டம்
  2. கோவை, கடலூர், சிதம்பரம், விருத்தாச்சலம் நிகழ்வுகள்

– தொடரும் (கரூர், பென்னாகரம், புதுச்சேரி பு.ஜ.தொ.மு, புதுவை பல்கலை பு.மா.இ.மு, சிதம்பரம் பெற்றோர் சங்கம் நிகழ்வுகள் மற்றும் அறந்தாங்கியில் நடக்கவிருக்கும் பொதுக்கூட்டம் பற்றிய செய்திகள்)

ஐ.பி.எம் கொலைகார கில்லட்டினின் ஆட்பலி தொடர்கிறது

1

“1,12,000 பேரை ஆட்குறைப்பு செய்யப் போவதில்லை. பல ஆயிரம் ஊழியர்களைத்தான் வீட்டுக்கு அனுப்பப் போகிறோம். அதுவும், 2014-ம் ஆண்டில் வேலை நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை விட குறைவான ஊழியர்கள்தான் 2015-ம் ஆண்டில் வேலை நீக்கம் செய்யப்படுவார்கள்” என்று ஐ.பி.எம் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஐ.பி.எம் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் தனது ஊழியர்களில் 26% பேரை ஆட்குறைப்பு செய்யப் போகிறது என்ற செய்திக்கு மேற்சொன்னவாறு மறுப்பு தெரிவித்திருக்கிறது அந்நிறுவனம்.

ஐ.பி.எம் ஆட்குறைப்பு
“பல ஆயிரம் ஊழியர்களைத்தான் வீட்டுக்கு அனுப்பப் போகிறோம்.”

ஐ.பி.எம் வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில் 2012-ம் ஆண்டு இறுதியில் 4,34,246 ஆக இருந்த ஊழியர்களின் எண்ணிக்கை 2013-ம் ஆண்டு இறுதியில் 4,31,212 ஆக குறைந்திருக்கிறது. இவர்களில் 1.3 லட்சம் பேர் இந்தியாவில் பணிபுரிகின்றனர். 2014-ம் ஆண்டில் இன்னும் அதிகமான எண்ணிக்கையில் வேலை இழப்பு நடந்திருப்பதால் 2014-ம் ஆண்டு இறுதிக்கான புள்ளிவிபரத்தை இன்னும் வெளியிடவில்லை.

கடந்த 7 ஆண்டுகளில் ஆண்டுக்கு சுமார் $45 கோடி முதல் $150 கோடி வரை (ரூ 27,000 கோடி முதல் ரூ 90,000 கோடி வரை) ‘ஊழியர் மறுசீரமைப்புக்கு’ செலவழித்திருப்பதாக முதலீட்டாளர்களுக்கான தனது அறிக்கைகளில் தகவல் வெளியிட்டிருக்கிறது, ஐ.பி.எம். 2014-ன் கடைசி மூன்று மாதங்களில் மட்டும் $60 கோடி செலவில் ஆட்குறைப்பு நடத்தியிருக்கிறது. இது ஆண்டு முழுவதற்குமான $100 கோடி செலவிலான மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதி. 2013-ம் ஆண்டிலும் அதே அளவிலான ஆட்குறைப்பு செய்யப்பட்டுள்ளது.

ஊழியர்களை வேலை நீக்கம் செய்வதற்கு எத்தனை ஆயிரம் கோடி செலவழிக்கிறோம் என்று முதலீட்டாளர்களுக்கு சொல்ல வேண்டிய பொறுப்பு ஐ.பி.எம்முக்கு உள்ளது. ஆனால், எத்தனை ஊழியர்கள் வேலை இழக்கப் போகிறார்கள் என்ற விபரத்தை ஊழியர்களிடமோ, அரசிடமோ, பொதுவான சமூகத்திடமோ சொல்ல வேண்டிய பொறுப்பு இல்லை.

$100 கோடி மறுசீரமைப்பு செலவு என்றால் சுமார் 13,000 ஊழியர்கள் வேலை இழக்கிறார்கள். அதாவது, கடந்த 7 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 6,500 ஊழியர்களிலிருந்து 21,500 ஊழியர்கள் வரை ஐ.பி.எம்மால் வேலைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். (மொத்தம் குறைந்தது 45,500 முதல் அதிக பட்சம் 1.5 லட்சம் ஊழியர்கள்). இந்தக் கணக்கின் படி 2015-ல் 8,000 பேருக்கு சீட்டு கிழிக்கத் திட்டமிட்டுள்ளது ஐ.பி.எம். சுமார் 5,000 பேர் இந்தியாவில் வேலை இழப்பார்கள் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

10 ஆண்டுகளுக்கு முன்பு தனது தனிநபர் கணினி (personal computer) பிரிவை சீனாவின் லெனோவோவுக்கு விற்றதைத் தொடர்ந்து சென்ற ஆண்டு அதன் நிறுவன கணினி (server hardware) பிரிவையும் விற்றிருக்கிறது. வன்பொருள், மென்பொருள், பராமரிப்பு சேவை என்ற பிரிவுகளை கலைத்துப் போட்டு, புதிய துறைவாரியான பிரிவுகளாக, மேகக் கணிமை (cloud computing), பேரளவு தரவு மேலாண்மை (big data), பாதுகாப்பு (security) என மறுசீரமைத்து வருகிறது. அதற்காக, ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான ஊழியர்களை வேலை நீக்கம் செய்து வருகிறது.

ஐ.பி.எம் நிறுவனத்தின் நடவடிக்கைகளை தொடர்ந்து கவனித்து எழுதி வரும் ராபர்ட் கிரிஞ்சிலி என்ற இணைய பத்திரிகையாளர் (வலைப்பதிவர்) மறுசீரமைப்பு நடவடிக்கையின் அடுத்த கட்டமாக ஐ.பி.எம் தனது 4.3 லட்சம் ஊழியர்களில் 26% பேரை ஆட்குறைப்பு செய்ய முடிவு செய்திருக்கிறது என்று ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் இணையதளத்தில் எழுதினார். இது புராஜக்ட் குரோம் என்ற திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த ஐ.பி.எம் “பொதுவாக நாங்கள் வதந்திகளுக்கும், ஊகங்களுக்கும் பதில் சொல்வதில்லை. ஆனால், வதந்தி முட்டாள்தனமாக இருக்கும் போது அதை சுட்டிக் காட்ட வேண்டியிருக்கிறது” என்று ஆரம்பித்து, “நாங்கள் 1,12,00 பேரை ஆட்குறைப்பு செய்கிறோம் என்பது சுத்தப் பொய். நாங்கள் பல ஆயிரம் ஊழியர்களைத்தான் வீட்டுக்கு அனுப்புகிறோம்” என்று விளக்கம் சொல்லியிருக்கிறது.

கிரிஞ்சிலியோ “10,000 பேரை ஆட்குறைப்பு என்ற பெயரிலும் இன்னும் பல ஆயிரம் ஊழியர்களை விருப்ப ஓய்வு, தானாக கடிதம் கொடுத்து விட்டு போவது என்ற முறையிலும் வீட்டுக்கு அனுப்பவிருக்கிறது ஐ.பி.எம்” என்கிறார். திறமை போதாது என்று காரணம் காட்டி வெளியேற்றுவதற்காக பல ஆண்டு வேலை செய்து வரும், திறமையான ஊழியர்கள் பலருக்கு குறைவான மதிப்பீடு கொடுக்கும்படி மேலாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகிறார்.

ஐ.பி.எம் ஆட்குறைப்பு
ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான ஊழியர்களை வேலை நீக்கம் செய்து வருகிறது, ஐ.பி.எம்

ஆனால், “4.3 லட்சம் பேரை வேலைக்கு வைத்திருக்கும் ஐ.பி.எம் தனது மொத்த ஊழியர்களில் 3% பேரைத்தான் வீட்டுக்கு அனுப்புகிறது”, “வேலை இழப்பு 1 லட்சம் பேருக்கு இல்லை, 10,000 பேருக்குத்தான்” என்பதுதான் பத்திரிகைகளில் விவாதமாகவும் எதிர் விவாதமாகவும் உள்ளது.

மேலும் உலகெங்கிலும் சென்ற ஆண்டு புதிதாக 45,000 புதிய ஊழியர்களை எடுத்ததாகவும், தற்போது 15,000 பேரை எடுப்பதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன என்றும் கூறுகிறது, ஐ.பி.எம். அதாவது, “10,000 பேர் வீட்டுக்கு அனுப்பப்படுவதை பற்றி கேள்வி கேட்கிறீர்களே, புதிதாக 15,000 பேரை எடுக்கப் போகிறோமே அவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதை எதிர்க்கிறீர்களா” என்று மடக்குகிறது.

இந்தச் செய்தியை டி.சி.எஸ் ஆட்குறைப்புடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். டி.சி.எஸ் 25,000 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்ய முடிவெடுத்து அமல்படுத்தி வருகிறது என்ற செய்தியை மறுத்த அந்நிறுவனம், “25,000 பேர் எல்லாம் இல்லை, 2,500 பேரைத்தான் நீக்கியிருக்கிறோம்” என்றும் “விலகிச் செல்லும் ஊழியர்கள் மொத்த ஊழியர் எண்ணிக்கையில் 1-2% தான்” என்றும் விளக்கியிருந்தது.

மேலும் “அனுபவம் வாய்ந்த ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பி புதிதாக நாங்கள் எடுக்கவிருக்கும் 55,000 பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுகிறதே, அதை எதிர்க்கிறீர்களா” என்று மடக்கியது.

“workforce restructuring” அல்லது “reorganization” என பெயர் எதுவானாலும் ஐ.பி.எம் முதல் டி.சி.எஸ் வரை ஒரே கார்ப்பரேட் தர்மம்தான் செயல்படுகிறது.

அடுத்த காலாண்டில் என்ன லாபம், அது சென்ற ஆண்டில் அதே காலாண்டை விட அதிகமா, குறைவா, முந்தைய காலாண்டை விட அதிகரித்திருக்கிறதா குறைந்திருக்கிறதா, அது தொடர்பாக முதலீட்டாளர்களுக்கு என்ன விளக்கம் சொல்வது என முதலாளிகளின் லாபத்துக்காக மட்டும்தான் கார்ப்பரேட்டுகளின் இயக்கமும் பொறுப்பும்.

வாடிக்கையாளருக்கு சிறப்பான சேவை, வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், பொருளாதாரத்தை வளர்த்தல் என்றெல்லாம் பளபளப்பான கார்ப்பரேட் விளம்பரங்களிலும், அரசியல்வாதிகளின் தேர்தல் பிரச்சாரங்களிலும் காட்டப்படும் பில்ட் அப் உண்மையில் பண முதலைகளுக்கு லாபம் கிடைக்கிறதா என்பதை மட்டுமே மையமாகக் கொண்டு செயல்படுகிறது. தேவைப்பட்டால், மலிவான விலையில் அமர்த்திக் கொள்ள ஆள் வேண்டும்; அல்லது விருப்பப்படும் எண்ணிக்கையில் ஊழியர்களை வேலை நீக்கம் செய்து கொள்ள வேண்டும். இதை ஏற்பாடு செய்து கொடுப்பதுதான் அரசுகளின் வேலையாக இருக்க வேண்டும்.

ஹிட்லரின் நாஜி ஜெர்மனி யூதர்களுக்கு எதிராக நடத்திய கூட்டுப் படுகொலை திட்டத்துக்கு தேவையான கணக்கிடும் கருவிகளை வழங்கிய போதும் முதலீட்டாளருக்கு லாபம் தர வேண்டும் என்ற ‘புனிதமான’ நோக்கம்தான் ஐ.பி.எம்முக்கு இருந்தது. தனது லாப வேட்டையின் விளைவாக கொன்று குவிக்கப்படும் மக்கள் எத்தனை பேர், வாழ்வாதாரங்களை இழக்கும் ஊழியர்கள் எத்தனை பேர் என்று எந்த கார்ப்பரேட்டும் கணக்கு பார்ப்பதில்லை.

ஜின்னி ரோமெட்டி
சதுரங்கத்தில் காய்களை வெட்டி எறிவது போல, லாபம் ஈட்டுவதற்காக ஊழியர்களை வேலையை விட்டு நீக்குகின்றன கார்ப்பரேட்டுகள் – ஐ.பி.எம் முதன்மை செயல்பாட்டு அதிகாரி ஜின்னி ரோமெட்டி

ஏதாவது செய்து முதலீட்டாளர்களை சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்த ஐ.பி.எம் நிர்வாகம் சென்ற ஆண்டு $1500 கோடி (சுமார் ரூ 90,000 கோடி) செலவில் சந்தையிலிருந்து பங்குகளை வாங்கி முடக்கியிருகிறது. இதற்கான செலவு, புதிய தொழில்நுட்பங்களில் செய்த முதலீட்டை விட அதிகமானதாகும்.

சதுரங்கத்தில் காய்களை வெட்டி எறிவது போல, லாபம் ஈட்டுவதற்காக ஊழியர்களை வேலையை விட்டு நீக்குகின்றன கார்ப்பரேட்டுகள். ஆண்டு தோறும் 2% முதல் 3% வரை ஊழியர்களை ஆட்குறைப்பு செய்வது சகஜம்தான் என்று ஊழியர்களையும் மக்களையும் ஏற்றுக் கொள்ளச் சொல்கின்றன.

ஐ.பி.எம் இந்தியாவில் நிரந்தர ஊழியர்களை நீக்கி விட்டு அவர்களையே ஒப்பந்த ஊழியர்களாக சேர்க்க திட்டமிட்டுள்ளது. அதன்படி, புராஜக்ட் முடிந்தவுடன் சம்பளம் வருவது நின்று விடும். அடுத்த புராஜக்ட் கிடைத்தால் மீண்டும் சம்பளம் தொடங்கும். ஆள் நீக்கம், புதியவர்களை எடுப்பது, பயிற்சி அளிப்பது போன்ற தொல்லைகள் ஏதும் இன்றி பயன்படுத்தி தூக்கி எறிபவர்களாக (Use and Throw) ஊழியர்கள் வேண்டும் என்பது கார்ப்பரேட்டுகளின் தேவை.

நோக்கியா, ஃபாக்ஸ்கான், மாருதி, பஜாஜ் போன்ற உற்பத்தித் துறை நிறுவனங்கள் முதல் ஐ.பி.எம், டி.சி.எஸ், இன்ஃபோசிஸ் வரையிலான ஐ.டி நிறுவனங்கள் வரை மூலதனமே கடவுள், பங்குச்சந்தையே அதை ஆராதிக்கும் கோயில் என்ற நோக்கத்தில் செயல்படுகிறார்கள், முதலாளிகள். அதை மூடி மறைத்து, வேலை வாய்ப்பு, வளர்ச்சி, சமூகப் பொறுப்பு என்று மோசடி பிரச்சாரம் செய்கிறார்கள்.

மூலதனத்தின் பசிக்கு இரை போடும் வெப்ப இரத்த பிராணிகளாக ஊழியர்களை கருதும் இந்த முதலாளித்துவ நடைமுறையை முறியடிக்க ஊழியர்கள் தொழிற்சங்கங்களாக ஒன்று சேர்வதுதான் ஒரே தீர்வு.

இது தொடர்பான செய்திகள்

ஒபாமா அடிமை மோடி – புதுச்சேரியைக் குலுக்கிய பு.ஜ.தொ.மு

0

மோடியின் ஆட்சி! நாட்டிற்கே பேரழிவு!

ஜனவரி 26-ல் ஒபாமா வருகையைக் கண்டித்து பாண்டிச்சேரியில்  ஆர்ப்பாட்டம்.

ந்த ஆண்டு இந்தியாவின் குடியரசு தினக் கொண்டாட்டத்தில், சிறப்பு விருந்தினராக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கலந்து கொள்வது, இந்நூற்றாண்டின் சிறப்புமிக்க நிகழ்ச்சி என்று பத்திரிகைகளும், காட்சி ஊடகங்களும் பரபரப்பு செய்தி  வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன.

ஜனவரி 26-ல் ஒபாமா வருகையைக் கண்டித்து பாண்டிச்சேரியில்  ஆர்ப்பாட்டம்.ஒபாமாவின் இந்திய வருகையில், நாட்டிற்கும் மக்களுக்கும் நன்மை பயக்கும் விசயமே இல்லை, உண்மையில் ஒபாமாவின் வருகை, தனது கார்ப்பரேட் நலனுக்கு ஏற்றவாறு மோடியின் ஆட்சி நடைபெறுகிறதா என்பதை மோப்பம் பிடித்து உறுதி செய்வதற்குத் தான் என்பதை மக்களுக்கு விளக்கும் விதமாகவும், “மோடியின் ஆட்சி, கார்ப்பரேட்டுகளுக்கான ஆட்சி, இந்து மத பயங்கரவாத ஆட்சி, ஒட்டு மொத்த உழைக்கும் மக்களுக்கும் விரோதமான ஆட்சி, இந்த ஆட்சி நாட்டிற்கே பேரழிவு” என்பதை விளக்கும் விதமாகவும், குடியரசு தினம் அன்று (26.01.2015) புதுச்சேரி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பில் பழைய பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு மாநில புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தோழர்கள் பங்கேற்புடன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. பல்வேறு பகுதியின் தோழர்களின் அணிவகுப்பில் ஆர்ப்பாட்டப் பகுதியே சிவப்பானது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் புதுச்சேரி மாநிலத் தலைவர், தோழர். சரவணன் தலைமை தாங்கினார். புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் தமிழ்நாடு மாநிலத் துணைத் தலைவர் தோழர். விளவை ராமசாமி மற்றும் தமிழ்நாடு மாநிலத் தலைவர் தோழர். முகுந்தன் மற்றும் புதுச்சேரி மாநில இணைச் செயலாளர் தோழர். லோகநாதன் ஆகியோர் கண்டனவுரை நிகழ்த்தினர்.

puducheri-ndlf-against-obama-modi-04

ஆர்ப்பாட்டத்தில் மக்களின் உணர்வுகளைத் தட்டி எழுப்பி சிந்திக்கும் விதமாக தங்களது பாடல்களின் மூலம் மோடியின் ‘அருமை – பெருமை’களையும், மோடியின் கார்ப்பரேட் மாமாத்தனத்தையும் எள்ளி நகையாடினர் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மையக் கலைக்குழு தோழர்கள்.

puducheri-ndlf-against-obama-modi-02

நமது நாட்டில் பெரும்பான்மை உழைக்கும் மக்கள், வாழ வழியில்லாமல் தவிக்கும் போது, நமது நாட்டை மோப்பம் பிடிக்க வந்த ஒபாமாவின் மனைவிக்குப் பனாரஸ் பட்டுப் புடவை பிடிக்கும் என்பதை அறிந்து, ஒரு சேலை லட்ச ரூபாய் என 100 சேலைகள் தயார் செய்து கொடுத்து தனது அடிமைத் தனத்தை நிரூபித்துள்ளார்.

யூனியன் கார்பைடு என்பது விசவாயு தயாரிக்கும் அமெரிக்க நிறுவனம் என தெரிந்தே அந்நிறுவனத்தை இரசாயன தொழிற்சாலை என்ற பெயரில் போபாலில் அனுமதித்தது இந்திய அரசு. 1984-ம் ஆண்டு அத்தொழிற்சாலையில் ஏற்பட்ட கிரிமினல் கவனக்குறைவால் ஒரே இரவில், 20,000 இந்திய மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இன்று வரை அந்த விசவாயுவின் தாக்கத்தினால், பற்பல நோய்களுடனும், அங்கப் பிறழ்வுகளுடனும் குழந்தைகள் பிறக்கின்றனர். இதுவரை அம்மக்களுக்கு எந்த நிவாரணமும் அந்நிறுவனத்தால் வழங்கப்படவில்லை. அப்படிப்பட்ட கொலைகார நிறுவனத்தின் முதலாளி ஆண்டர்சனைக் காப்பாற்றிய அமெரிக்க அரசின் ஜனாதிபதியை இந்தியாவிற்குள் அனுமதிப்பது வெட்கக் கேடு.

puducheri-ndlf-against-obama-modi-08

இப்படிப்பட்ட சாவுகள் மீண்டும் நிகழ்ந்தால், அதற்கு நிவாரணத்தை யார் தருவது என்ற பிரச்சினையால் கடந்த 8 ஆண்டுகளாக முடிவுக்கு வராத அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்ற, அணு உலைகளால் ஏற்படும் ஆபத்து மற்றும் விபத்துக்களுக்கு அந்த நாட்டு அரசாங்கமே பொறுப்பு என்பதை உறுதி செய்ய நேரில் வந்தவர் தான் ஒபாமா. அதாவது தனது கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்காகத் தான் ஒபாமா இந்தியா வந்துள்ளார்.

இப்படிப்பட்ட ஒபாமா வருவதை எப்படி எதிர்க்காமல் இருக்க முடியும். இன்று ஏதோ ஒரு மூலையில், புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம் நடத்துவதால் ஒபாமா வருவதைத் தடுக்க முடியாது. ஆனால், இது போன்ற ஆர்ப்பாட்டங்களை நாடு முழுவதும் பரவச் செய்வதன் மூலம், மக்களை உணர்வு ரீதியாக மாற்றுவதன் மூலம் மீண்டும் வருவதைத் தடுக்க முடியும்.

இந்தியாவின் கடற்கரையெங்கும் 50 கி.மீ.-க்கு ஒரு அணு உலை என்ற எண்ணிக்கையில் நிறுவப்படவிருக்கும் அணு உலைக்காக, அந்த அணு உலைகள் அமைக்கப் போகும் கார்ப்பரேட் முதலாளிகளின் லாபத்தை உறுதிப் படுத்தும் விதமாக அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றத் தான் ஒபாமாவின் இந்திய வருகை. ஒபாமாவின் வருகையால், இந்திய நாட்டு மக்கள் அனைவருக்கும், நாட்டிற்குமே பேரழிவு. இந்தப் பேரழிவைப் பற்றிக் கவலைப் படாமல், கார்ப்பரேட் சேவையே தனது கொள்கை என பகிரங்கமாக அறிவித்துள்ளார் கார்ப்பரேட்டுகளின் அடிமை மோடி.

puducheri-ndlf-against-obama-modi-09‘அணுசக்தி ஒப்பந்தம், பொருளாதார ஒப்பந்தங்கள், தொழிலாளர் சட்ட திருத்தம் என அரசு புதிதாக எதைச் செயல் செய்தாலும், கம்யூனிஸ்டுகளுக்கு எதிர்ப்பது தான் வேலை’ என இப்பிரச்சாரத்தின் போது சில படித்த அறிவு ஜீவிகள் அங்கலாய்த்தனர். கம்யூனிஸ்டுகள், இயங்கியல் ரீதியாகவும், அறிவியல் பூர்வமாகவும் சிந்திப்பவர்கள். அறிவியல் பூர்வமான அணுகுமுறை தூக்கிப் பிடிப்பவர்கள். மோடி சொல்லும் வளர்ச்சி யாருக்கானது என்பதை அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து, பரந்துபட்ட மக்களின் வாழ்வை மேம்படுத்துவதாக வளர்ச்சி இருக்க வேண்டும். ஆனால், மக்களை அரைப் பட்டினியில் வைத்து விட்டு கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்கு நாட்டை திறந்து விடுகிறார் மோடி; இன்னும் கொஞ்சம் பொறுத்துக் கொள்ள வேண்டும் என மக்களுக்கு ஆலோசனை வழங்குகிறார்.

மோடியின் இந்திய வருகைக்கு ஒரு மாதத்திற்கு முன்னதாக, டில்லி நகரையே அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் கைப்பற்றி ஒபாமாவின் பாதுகாப்பை உறுதி செய்தனர். ஒபாமா என்ற ஒரு மனிதரைப் பாதுகாக்க வக்கற்றவர்கள் என இந்திய பாதுகாப்பை ஏளனம் செய்துள்ளது அமெரிக்கப் பாதுகாப்புத் துறை. சாதாரண மக்கள் தங்களது வாழ்வுரிமைக்காகப் போராடும் போது, பாய்ந்து குதறும் காவல்துறை, இப்போது கைகட்டி வாய்பொத்தி நின்று, அடிமை போல சலாம் போடுகிறது.

மோடி ஆட்சிக்கு வந்த ஆறுமாதங்களில், கார்ப்பரேட்டுகளுக்குச் சேவை செய்வதற்காகவே, நில அபகரிப்பு சட்ட திருத்தம், தொழிலாளர் சட்ட திருத்தம், கார்ப்பரேட் மசோதா என எல்லாவற்றையும் பெயரளவு நாடாளுமன்ற விவாதத்தைக் கூட பொறுக்க முடியாமல் அவசர சட்டங்களாக அமல் படுத்தி வருகிறார். ‘ஸ்மார்ட் சிட்டி’ என்ற பெயரில் இந்திய நகரங்களை மேம்படுத்துவதாக சொல்லிக் கொண்டு நகரங்களில் வாழும் குடிசை மக்களை வெளியேற்றப் போகிறது மோடி அரசு. இதற்காக மக்கள் வரிப்பணத்தில் முதல் தவணையாக 7000 கோடியை அமெரிக்க முதலாளிகளுக்கு தூக்கிக் கொடுத்துள்ளது மோடி அரசு.

puducheri-ndlf-against-obama-modi-22இந்திய மக்கள் அனைவரும் வங்கிக் கணக்கு வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ‘நல்ல’ நோக்கத்தில் “ஜன் தன் யோஜனா” திட்டத்தை மோடி கொண்டு வரவில்லை. இத்திட்டத்தின் மூலம், அம்மக்களின் மானியங்களை, கார்ப்பரேட்டுகள் நேரடியாக பிடுங்கிக் கொள்ளும் வகையில் தான் இத்திட்டத்தை அமல்படுத்தினார். இத்திட்டத்தின் மூலம் வங்கிக் கணக்கு துவங்கிய ஏழைகள், அந்த வங்கிக் கணக்குகளில் போட்டு வைத்த அவர்களது சேமிப்பான ரூ. 6000/- கோடி ரூபாயை, இன்னொரு கையால் அதானி என்ற தரகு முதலாளிக்கு தூக்கிக் கொடுத்துள்ளார் மோடி. அந்தப் பணத்தை வைத்து ஆஸ்திரேலியாவில் நிலக்கரி சுரங்கங்களை வாங்கி தனது சொத்தைப் பெருக்கியுள்ளார் அதானி. இவ்வாறு பன்னாட்டு கார்ப்பரேட் முதலாளிகளும், உள்நாட்டு தரகு முதலாளிகளும் மக்கள் பணத்தை நோகாமல் கொள்ளை அடிக்க வழிவகை செய்து, தான் கார்ப்பரேட்டுக்களின் அடிமை என்பதை தனது ஒவ்வொரு செயல்களின் மூலமும் நிரூபித்து வருகிறார் மோடி.

மறுபுறம், சமஸ்கிருத வாரம், தாய்மதம் திரும்புதல் (கர் வாபஸி), கோட்சேவுக்கு கோயில், ராமனை ஏற்காதவர்கள் முறைதவறிப் பிறந்தவர்கள் என்று பேசுவது இவற்றை விவாதப் பொருளாக்கி மதவெறியைத் தூண்டுவதன் மூலம் தனது கார்ப்பரேட் சேவையை தங்கு தடையின்றி நடத்தி வருகிறது மோடி தலைமையிலான இந்து மதவெறிக் கும்பல்.

puducheri-ndlf-against-obama-modi-01மோடியின் இந்த கார்ப்பரேட் பாசிசத்தையும், காவிப் பாசிசத்தையும் எதிர்க்க வக்கற்றவர்களாக அனைத்து ஓட்டுக் கட்சிகளும் மாறிவிட்டனர். ஏனெனில், எல்லாக் கட்சிகளுக்கும் இது தான் கொள்கையாக உள்ளது.

இந்தக் கார்ப்பரேட் பயங்கரவாதத்திலிருந்தும், காவி பயங்கரவாததிலிருந்தும் நாட்டை விடுவிக்க வேண்டுமெனில், புரட்சிகர அமைப்புகளில் அணிதிரண்டு புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுப்போம்!

என்று தங்களது கண்டனவுரையை தோழர்கள் பதிவு செய்தனர்.

இந்த ஆர்ப்பாட்டம் நடந்த போது ஆங்காங்கே நின்றிருந்த மக்களின் கருத்துக்கள்:

  • எதுக்கு அவனை (ஒபாமாவை) அழைக்கணும்? அவன் நமது ராணுவ ரகசியத்த தெரிஞ்சுக்க வர்றான்.
  • மோடி நல்லவன்னு நெனச்சு ஓட்டுப் போட்டது. ஏன் இப்படி நாட்டையே விக்கிறான்? கம்யூனிஸ்டுகள் போராட்டம் நடத்துவது நல்லது தான்.
  • இங்க பேசுறது ஒபாமாவுக்கு கேக்கவா போகுது? இருந்தாலும் கம்யூனிஸ்டு நல்லாப் பண்றாங்க. நல்லாப் பேசுறாங்க.
  • கம்யூனிஸ்டு அடிக்கடி கூட்டம் போடுவாங்க. இப்போ கொஞ்சம் அதிகமாத் தான் இருக்காங்க.
  • ஒபாமா வந்தத எதிர்த்துப் பேசுறாங்க. ஒபாமா வர்றது இவங்களுக்குப் தப்பா தெரியுது. வரவைக்கிறவங்களுக்கு சரியா தெரியுது.
  • நம் நாட்டுல காரே இல்லாத மாதிரி, வெளிநாட்டுக் காரனுக்கு இவ்வளவு பாதுகாப்பு ஏன்? இவங்க நல்லாப் பேசுறாங்க. ஒபாமாவ எதிர்க்குறாங்க.
  • வெளிநாட்டுக் காரனுக்கு இவ்வளவு பாதுகாப்பு தர்றாங்க. நம்ம நாட்டு மக்கள் சாவுறாங்க. கவனிக்க மாட்றாங்க. இவனுங்கள சுடணுங்க.
  • நம்ம குடியரசு தினத்துக்கு இவன அழைச்சி நடத்தக் கூடாது. அவன் சீனாவ கிளப்பி விடுகிறான். நமக்கு எதிரியே அவன் தான்.
  • இவங்க நல்லாப் பேசுறாங்க. ஆனா, மோடி, ஒபாமாவ ஒருமையில் பேசுறது பிடிக்கல. மக்களால தேர்ந்தெடுக்கப்பட்டவங்கள இப்படிப் பேசக் கூடாது.
  • சரியாத் தான் பேசுறாங்க. மக்கள் காது கொடுத்துக் கேட்டத்தாங்க. அவங்கவங்க வேலையப் பாக்குறாங்க. இங்க பேசுறதால, அவனுக்கு (ஒபாமாவுக்கு) என்னங்க. நல்ல பாதுகாப்பாத்தான் போறான்.

தகவல்:

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புதுச்சேரி.
தொடர்புக்கு: 95977 89801.

மொழிப்போர் தியாகிகள் நாள் – கோவை, கடலூர், சிதம்பரம், விருத்தாசலம்

1

மிழ்நாட்டு மாணவர்களின் இந்தித்திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின் பொன்விழா ஆண்டினை நினைவு கூர்ந்து அப்படி ஒரு மொழிப்போரினை மீண்டும் துவக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தமிழகம் முழுவதும் பேருந்து, ரயில், குடியிருப்புப் பகுதிகள் என எல்லா இடங்களிலும் மக்களிடம் பிரச்சாரம் செய்து வருகிறது.  சைக்கிள் பேரணி, கல்லூரிகளில் வாயில் நாடகம் என பல வடிவங்களில் பிரச்சாரம் செய்யப்பட்டது.

ஜனவரி 25, 2015 அன்று மொழிப்போர் தியாகிகள் நாள் புரட்சிகர அமைப்புகளால் தமிழகத்தின் அனைத்து முக்கிய நகரங்களிலும் கடைப்பிடிக்கப்பட்டது. அது தொடர்பான தகவல்கள், புகைப்படங்களின் இரண்டாவது பகுதி.

2. கோவையில் மொழிப்போர் தியாகிகள் தின அரங்குக் கூட்டம்

பிறந்திருக்கும் 2015 இந்தித் திணிப்பிற்கு எதிரான மாணவர் போராட்டத்தின் பொன்விழா ஆண்டு.

50 வருடங்களுக்கு முன்பு இதே தமிழகத்தில் மொழிக்காக மொழியின் தனித் தன்மையை காக்க மத்திய அரசை எதிர்த்து  ஒரு போராட்டத்தை ஒரு தேசிய இனம் நடத்தியது. அது அமைதியான உண்ணா விரத போராட்டம் அல்ல. உள் நாட்டுக்குள்ளேயே மக்களை, ஒரு தேசிய இனத்தை கட்டுப்படுத்த முடியாமல் ராணுவத்தை ஏவும் அளவுக்கு வீரியமான பிரமாண்டமான போராட்டமாக விரிந்தது. இந்த இந்தித் திணிப்பிற்கு எதிரான போராட்டத்தின் கேந்திரமான கண்ணி மாணவர்களும் இளைஞர்களுமே.

மொழி என்னும் ஒரு தொடர்பு ஊடகத்திற்காக, ஒரு போராட்டத்துக்கு இத்துணை உயிர் இழப்பு, அரச ஒடுக்கு முறை என்பதை இந்தித் திணிப்பிற்கு எதிரானது என்று மட்டும் அல்லாது, பண்பாட்டு ரீதியான பார்ப்பனிய இந்துத்துவா பண்பாட்டு படையெடுப்புக்கு எதிரான ஒரு போர் என கொள்ள வேண்டும். அப்படி பாரிய பொருளில் புரிந்து கொள்ளும் போதே இதன் முழுப் பரிமாணத்தையும் நம்மால் விளங்கிக் கொள்ள இயலும்.

ஒரு வகையில் பார்த்தால் முழு இந்தியாவிலும் இந்தி பேசாத மக்களையும் அவரவர்தம் தேசிய இனத்தையும் பாதுகாக்க தூண்டியதே தமிழக மாணவர் போராட்டம் தான். அப்போதே, பிற மாநில மாணவர் அமைப்புகளுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு அதன் வாயிலாக போராட்டங்களை முன்னெடுத்து சென்றவர்கள் தமிழகத்தில் உருவாகிய தமிழ்நாடு மாணவர் இந்தி ஆதிக்க எதிர்ப்பு போராட்டக் குழுவினர். தமிழகத்தில், தேசியக் கட்சிகளுக்கு மாற்றாக முதன் முதலாக ஒரு மாநிலக் கட்சி மாநிலத்தில் ஆட்சியில் அமர காரணமாய் இருந்ததும் இந்தப் போராட்டமே. அப்படி தமிழகம் முழுவதும் வீச்சான போராட்டத்தில் தமிழகம் கனன்று கொண்டிருந்த தருணங்கள் அவை.

தமிழ் மக்களின் மரபிலேயே மறை பொருளாக இருந்த பார்ப்பனிய எதிர்ப்புணர்வை ஊதுகுழல் கொண்டு வெளிக் கொணர்ந்த திராவிடக் கட்சிகளின் கை மீறி தமிழகமெங்கிலும் தன்னெழுச்சியாக நடை பெறத் துவங்கியது போராட்டம். பல நூறு மாணவர்கள் ராணுவத்தின் வெறியாட்டத்திற்கு பலியாயினர். சுடச்சுட மிளிரும் பொன் போல,  உயிர்பலிகள் போராட்டத்தின் அடியுரமாக மாறி ஆளும் வர்க்கத்தை கலக்கத்திற்குள்ளாக்கியது. வேறு வழியே இல்லாது இறுதியில் அரசு பணிந்தது. இந்தியுடன் ஆங்கிலமும் தொடரும் என அறிவித்தது.

பார்ப்பனியத்தை தோற்கடிக்க வீரஞ்செறிந்த போராட்டத்தை நடத்திய தேசிய இனம் இன்று உலகமயமாக்கலின் கீழ் படிப்படியாக சிதைந்து வருகிறது. இந்த போராட்டத்தின் முழுப் பலனையும் அறுவடை செய்த திராவிடக் கட்சிகளையும் விழுங்கி செரித்திருக்கிறது இந்த உலகமயமாக்கல்.

நிலவும் பாரதிய ஜனதா ஆட்சி வந்து 7 மாதங்களுக்குள் மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு அம்பலப்பட்டு வருகிறது. மக்கள் நாளுக்கு நாள் நெருக்கடிக்குள் சிக்குண்டு வருகின்றனர். இந்த அரசு எந்திரமும் அதன் கட்டமைப்பும் மீள முடியாத நெருக்கடிக்குள் சிக்கி வருகிறது. மக்களின் போராட்டங்களின் வரைமுறைகளும் எல்லைகளும் உடைந்து வருகின்றன.

எதிர் வரும் 2015-ம் ஆண்டு முழுக்க முழுக்க மக்கள் உரிமைக்கான போராட்டங்களின் ஆண்டாக திகழும் என்று அதன் துவக்க மாதத்திலேயே நினைவுபடுத்துகிறது பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்து மாணவர்கள் நடத்தும் இந்த போராட்டம்.

கோவையில் சனவரி 25 அன்று ஆரிய பார்ப்பன எதிர்ப்பு தமிழ் மரபின் வீரியமான குறியீடான தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தும் மொழிப்போரின் அவசியம் குறித்து முழக்கமெழுப்பியவாறு ஊர்வலமும், மொழிப் போர் தியாகிகள் நாள் நினைவேந்தல் அரங்குக் கூட்டமும் நடைபெற்றது.

கோவை பெரியார் மாலை
மொழிப்போர் நினைவு நாளில் கோவையில் காந்திபுரத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த பு.மா.இ.மு. தோழர்கள்

காலை 10:00 மணிக்கு கோவை காந்திபுரத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து நாற்சந்திகளும் அதிர முழக்கமிட்டோம். அதன் பின்னர், பேருந்து நிலையத்துக்குள் சென்று பரவலாக துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தோம்.

கோவை பேரணி
மொழிப்போரை நினைவு கூர்ந்து முழக்கங்கள் – கோவை வீதிகளில்

காந்திபுரத்திலிருந்து வி‌.கே‌.கே மேனன் சாலை வழியாக சித்தாபுதூர் சாலையைச் சுற்றி மீண்டும் காந்திபுரம் வரை முழக்கமிட்டபடியே ஊர்வலமாகவும் பிரசுர விநியோகமும் செய்யப்பட்டது.

போக்குவரத்து நெரிசலான கோவையின் பிரதானமான சாலைகளான அவற்றில் நம் தோழர்கள் முழக்கமிட்டபடியும் இரு மருங்கிலும் உள்ள கடைகளிலும் வீடுகளிலும் பிரசுரங்களை விநியோகித்த வாறும் இளம் மாணவர்களிடம் விளக்கி பேசியவாறும் வந்தது, மக்கள் மத்தியில் பரவலான கவன ஈர்ப்பை ஏற்படுத்தியது. பலரும் துண்டுப் பிரசுரங்களை கேட்டு கேட்டு வாங்கினர். போக்குவரத்து காவலர்களும் துண்டுப் பிரசுரங்களை வாங்கினர்.

ஊர்வலம் முடிந்தவுடன் டூவீலரில் அமர்ந்து இரு புறமும் கொடிகளை பிடித்தவாறே அரங்குக் கூட்டத்திற்கு சென்றோம்.

காலை 11:30 வாக்கில் கூட்டம் துவங்கியது. கூட்டத்திற்கு பு.மா.இ.மு வின் கோவை மாவட்ட அமைப்பாளர் தோழர் பாபு தலைமை தாங்கினார். அவர் தனது தலைமை உரையில், இந்தித் திணிப்பு போராட்டத்தை பற்றியும் அது இந்தித் திணிப்பு மட்டுமல்ல, பார்ப்பன பண்பாட்டு திணிப்பு என்பதனை பற்றி விளக்கி பேசினார்.

பு.மா.இ.மு வின் கோவை மாவட்ட அமைப்பாளர் தோழர் பாபு
பு.மா.இ.மு வின் கோவை மாவட்ட அமைப்பாளர் தோழர் பாபு

அடுத்ததாக சிறப்புரையாற்றிய மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் கோவை மாவட்ட செயலர் மணிவண்ணன் இந்தித் திணிப்பு போராட்டத்தை பற்றியும் தனது 12-வது வயதில் தான் அதில் கலந்து கொண்டதை பற்றியும் காங்கிரஸின் துரோகத்தையும் விளக்கிப் பேசினார். அடுத்து அவர் தற்போதைய மாநில மற்றும் தேசிய அரசியல் கட்சிகளும் தமிழ்த்தேசிய இயக்கங்களும் இந்த நிகழ்வை ஒட்டி கடனுக்கென்று செய்வதை போல் மக்களிடம் பிரச்சாரம் செய்வதை அம்பலப்படுத்தி பேசினார். இத்துடன் சமீபத்திய விடயங்களான பெருமாள் முருகன் விவகாரம் முதலியவற்றில் இந்துத்துவ நடவடிக்கைகளை விளக்கி பேசியது இளைஞர்களுக்கு பலனுள்ளதாக இருந்தது.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் கோவை மாவட்ட செயலர் மணிவண்ணன்
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் கோவை மாவட்ட செயலர் மணிவண்ணன்

இறுதியாக பு.மா.இ.மு வின் தோழர் திலீபனின் நன்றியுரையுடன் கூட்டம் நிறைவு பெற்றது.

தோழர் திலீபன்
பு.மா.இ.மு வின் தோழர் திலீபனின் நன்றியுரை

தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
கோவை.

3. கடலூரில் பேரணி, உறுதியேற்பு, பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பு

23/01/15 அன்று கடலூர் பெரியார் கலை கல்லூரி மாணவர்கள் மத்தியில் துண்டு பிரசாரம் அடித்து விநியோகம் செய்து பெரியார் சிலை முன் மாணவர்கள் கூடி சமஸ்கிருத மயமாக்கலுக்கு எதிராக உறுதி மொழி ஏற்றனர்.

கடலூரில் சமஸ்கிருத மயமாக்கலுக்கு எதிராக உறுதிமொழி
கடலூரில் சமஸ்கிருத மயமாக்கலுக்கு எதிராக உறுதிமொழி

கடலூர் நகரம் முழுவதும்

  • மொழிப்போர் தியாகிகளின் நினைவை நெஞ்சில் ஏந்தி வீறுகொண்டெழுவோம்!
  • தமிழ் தேசிய இனத்தின் கடவுள் – ஆன்மீக மறுப்பு, வேத, வைதீக – பார்ப்பன, சமஸ்கிருத – இந்தி எதிர்ப்பு பாரம்பரியத்தை போர்வாளாக ஏந்துவோம்!
  • மீண்டும் படையெடுத்து வருகிற ஆரிய – பார்ப்பன, வேத, வைதீக, சமஸ்கிருத – இந்தி ஆதிக்க பண்பாட்டை போரிட்டுவீழ்த்துவோம்!
  • ஆரிய – பார்ப்பன எதிர்ப்புப் போரின் தளப்பிரதேசமாக தமிழ்நாட்டை மீண்டும் கட்டியமைப்போம்!

என்ற முழக்கங்களைக் கொண்ட சுவரொட்டிகள் பரவலாக ஒட்டப்பட்டன.

கடலூரில் சமஸ்கிருத மயமாக்கலுக்கு எதிராக
பெரியார் சிலைக்கு மாலை

துண்டு பிரசுரம் அடித்து அரசு பள்ளிகளிலும்,  K.N.C பெண்கள் கலை கல்லூரிகளிலும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம், ஜனநாயக சிந்தனையாளர்களிடம் விநியோகிக்கபட்டது.

25/01/15 அன்று பகுதி இளைஞர் மாணவர்கள் கலந்து கொண்டார்கள். அன்று பெரியார் சிலை குப்பை கூளங்களாக இருந்ததை தோழர்கள் சுத்தம் செய்தனர்.

அப்போது அங்கு வந்த தமிழ் உணர்வாளர் ஒருவர் அந்த சிலை சுத்தம் செய்த தோழர்களிடம், “இன்று என்ன நாள் பெரியாரை சிலையை சுத்தம் செய்றீங்க” என்று கேட்டார்.

“மொழிப்போர் தியாகிகளின் பொன்விழா” என்றதும்,

“பெரியாரை வைத்து பிழைக்கிறவர்கள் ஒன்றும் செய்யாதபோது கம்யுனிஸ்டு தோழர்கள் ஆன நீங்கள் வந்து செய்றீங்க” என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

காலை 10.30 மணிக்கு உழவர் சந்தையில் பேரணி  தொடங்கியது  தோழர்கள் போர்க்குணத்தோடு முழக்கமிட்டு நடந்து வந்தனர்.

தோழர் புருஷோத் வரவேற்று பேசினார். தொடர்ந்து தோழர் கருணாமூர்த்தி தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

மீண்டும் படையெடுத்து வருகிற பார்ப்பன பயங்கரவாதிகளை தமிழகத்தில் அனுமதிக்க கூடாது என்றும் தமிழில் பயின்றவர்களுக்கே வேலை வாய்ப்பில் முன்னுரிமை தரவேண்டும் என்றும் பள்ளிகளில் பயிற்று மொழியாக தமிழை முன்னிறுத்த வேண்டும், வழக்காடும் மொழியாக நீதிமன்றங்களில் தமிழே பயன்படுத்த வேண்டும், அலுவலகங்களில் தமிழே அலுவல்மொழியாக பயன்படுத்த வேண்டும் என்றும் விளக்கவுரையாற்றினார்.

கடலூர் மொழிப்போர் நினைவுநாள்
பெரியாரின் சிலைக்கு தோழர் செந்தமிழ் மாலை அணிவித்தார்

பெரியாரின் சிலைக்கு தோழர் செந்தமிழ் மாலை அணிவித்தார்.  பார்ப்பனிய எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது.

வீர வணக்கம்! வீர வணக்கம்!
மொழிப்போர் தியாகிகளுக்கு!
வீர வணக்கம்! வீர வணக்கம்!

நெஞ்சிலேந்துவோம்! நெஞ்சிலேந்துவோம்
மொழிப்போர் தியாகிகளின்
நினைவை நெஞ்சிலேந்துவோம்!
போர்வாளாக ஏந்துவோம்!
தமிழ் தேசிய இனத்தின்
கடவுள் மறுப்பு – ஆன்மீக மறுப்பு,
வேத, வைதீக – பார்ப்பன,
சமஸ்கிருத – இந்தி எதிர்ப்பு
பாரம்………பரியத்தை
போர்வாளாக ஏந்துவோம்!

போரிட்டு வீழ்த்துவோம்!
மீண்டும் படையெடுத்து வருகிற
ஆரிய – பார்ப்பன, வேத, வைதீக,
சமஸ்கிருத – இந்தி
ஆதிக்க பண்பாட்டை
போரிட்டு வீழ்த்துவோம்!

கட்டியமைப்போம்! கட்டியமைப்போம்!
ஆரிய – பார்ப்பன எதிர்ப்புப் போரின்
தளப்பிரதேசமாக தமிழ் நாட்டை
கட்டியமைப்போம்! கட்டியமைப்போம்!

இவன்
புரட்சிகர மாணவர்
இளைஞர் முன்னணி
கடலூர்
தொடர்புக்கு
:9791776709

4,5. சிதம்பரம், விருத்தாசலம்

சிதம்பரத்தில் கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி பிரச்சாரம் செய்து மாணவர்களுக்கு சமஸ்கிருத பண்பாட்டு படையெடுப்பை எதிர்ப்பதற்கு உறுதிமொழி செய்வித்தனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

விருத்தாசலம் பகுதியில்  தியாகி இராசேந்திரன் சிலைக்கு மாலை அணிவித்து உறுதியேற்புப் கூட்டம் நடத்த திட்டமிட்டு மக்கள் கூடும் இடங்களிலும் கல்லூரியிலும் சுவர்விளம்பரம் எழுதப்பட்டது.  பேருந்து, தாலுக்கா அலுவலகம், மற்றும் தனிநபர்களிடமும் பிரசுரம் கொடுத்து மீண்டும் படையெடுத்து வருகிற வேத, வைதீக, சமஸ்கிருத இந்தி ஆதிக்க பண்பாட்டை போரிட்டு வீழ்த்த வேண்டிய அவசியத்தை விளக்கி பிரச்சாரம் செய்யப்பட்டது.

virudai-anit-hindi-imposition-protest-01கல்லூரி, பள்ளிகளுக்கு சனவரி 25 விடுமுறை நாள் என்பதால் 23-1-2015 அன்று பள்ளி கல்லூரிகளில் உறுதியேற்பு கூட்டம் நடத்தப்பட்டது. காலை 7 மணிக்கு விருத்தாசலம் நகரிலிருந்து பல்வேறு கல்லூரிகளுக்கு செல்லும் பேருந்துக்கு காத்திருந்த மாணவர்களிடம் பிரசுரம் கொடுத்து பேருந்துகளிலும் மொழிப்போர்த் தியாகிகளின் தியாகத்தையும், இன்றைய சூழ்நிலையில் மீண்டும் அப்படிபட்ட தியாகம் தேவைப்படுவதையும் விளக்கிப் பேசியவுடன் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

virudai-anit-hindi-imposition-protest-02விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி நுழைவாயிலில் மாணவர்களிடம் இந்தித் திணிப்புப் எதிர்த்து போராட உறுதியேற்க கூறியபோது ஆளும்வர்க்கம் சொல்லக்கூடிய சடங்குத்தனமான உறுதிமொழி மட்டுமே பழகியிருந்த மாணவர்களிடம் கையை மேலே உயர்த்தி வர்க்க ரீதியான உணர்வைவூட்டும் உறுதிமொழியை மாணவர்கள் ஏற்றனர். அதேபோன்று அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் வகுப்பறைகளுக்கு சென்று மாணவர்களிடத்தில் பேசியதில் இந்தித் திணிப்பை எதிர்த்து போராட உறுதிமொழி ஏற்றனர்.

virudai-anit-hindi-imposition-protest-03விருத்தாசலம் புமாஇமு தோழர்களும், அண்ணாமாலை பல்கலைக் கழகக மாணவர்களும் பங்கேற்று மொழிப்போர் தியாகி ராசேந்திரன் சாலையில் துவங்கி ராசேந்திரன் சிலையை நோக்கி சென்ற பேரணி ஆரிய – பார்ப்பன எதிர்ப்புப் போருக்கு மக்களை அறைகூவி அழைக்கின்ற முழக்கங்களை விண்ணதிர முழக்கமிட்டு சென்றது அப்பகுதி மக்களுக்கும் மாணவர்களுக்கும் புதிய விசயமாக இருந்தது.

virudai-anit-hindi-imposition-protest-06தி.மு.க, அ.தி.மு.க தொடங்கி எல்லா ஓட்டுக்கட்சிகளும் மொழிப்போர் உணர்வை ஊட்டுவதற்கு மாறாக சவக்களையுடன் அமைதி ஊர்வலமாகவே சென்றனர்.

  • அரசுப் பள்ளிகளில் ஆங்கிலத்தை திணித்து தழிழை ஒழிக்கமுனையும், தில்லைக் கோவிலை சிந்தாமல் சிதறாமல் பார்ப்பன தீட்சிதர்க்கு அள்ளிகொடுத்த பார்ப்பன பாசிச ஜெயாவின் பாதந்தாங்கிகள் தியாகி இராசேந்திரன் சிலைக்கு மாலை அணிவித்தது வெட்ககேடான ஒன்று.
  • தமிழை வைத்து பிழைப்பு நடத்தும் கருணாநிதி தமிழுக்காக தமிழ் வளர்ச்சிக்காக துரும்பைக்கூட அசைக்காதவர் அவருடைய உடன்பிறப்புகள் பிழைப்புக்காக மாலை அணிவித்தனர்.
  • தமிழ் மொழியின் விரோதியான பாஜக வின் ஐந்தாம் படைகளான தேமுதிக, பாமக, மதிமுக, ஆகியவர்களும் சம்பிரதாயத்துக்கு வந்து மாலை அணிவித்தார்கள்.
  • வாண்டையார் சாதிவெறிக் கும்பலோ  ஊளையிட்டுக்கொண்டு சென்றன.

அம்மா, தளபதி கேப்டன் வாழ்க என்று முழக்கமிட்ட இந்த ஓட்டுப் பொறுக்கிகள் இன்று நடக்கும் பார்ப்பன – சமஸ்கிருத பண்பாட்டு ஆக்கரமிப்புக்கு எதிராக மறந்தும் குரல் கூட எழுப்பவில்லை. இதற்கான தகுதியோ உணர்வோ ஆற்றலோ கிடையாது என்பதை பட்டவர்த்தனமாக அம்பலப்படுத்திக் கொண்டனர்.

தமிழ் தேசிய இனத்தின் கடவுள் – ஆன்மீக மறுப்பு, வேத, வைதிக – பார்ப்பன, சமஸ்கிருத – இந்தி எதிர்ப்பு போராட்ட பாரம்பரியத்தை போர்வாளாக ஏந்த அறைகூவி அழைத்த புமாஇமு பேரணி சிலையை அடைந்ததும் உணர்ச்சி ஊட்டும் வகையில் இந்தித் திணிப்பு எதிர்புப் போராட்டத்திற்கு அறைகூவி மாணவர்கள் முழக்கமிட்டனர்.

மொழிப்போர் தியாகி ராசேந்திரன் சிலைக்கு விருத்தாசலம் பு. மா. இ. மு அமைப்பாளர் தோழர் முருகானந்தம், மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு, அண்ணாமலை பல்கலைகழக பு.மா.இ.மு மாணவர் அஞ்சாநெஞ்சன் ஆகியோர் மாலையிட்டு முழக்கமிட்டனர்.

virudai-anit-hindi-imposition-protest-05அதன்பின் தோழர் ராஜு சிறப்புரையாற்றினார்.

“தமிழறிஞர்களை விட தமிழ் உழைக்கும் மக்களே மொழியைக் காக்க போராடி உயிர் துறந்து பார்ப்பன பண்பாட்டு ஆக்கிரமிப்பை முறியடித்தனர். 1000 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இந்த ஆரிய பார்ப்பன பண்பாட்டு ஆக்கிரமிப்புக்கு எதிரான போர் இன்று வரை தொடர்கிறது.

1965-ல் வீறுகொண்டெழுந்த மாணவர்கள், இளைஞர்களின் மொழியை காப்பதற்கான போராட்டம் இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து தேசிய இனங்களின் தாய்மொழிகளையும் காத்தது. உலகில் வேறெங்கும் இல்லாத அளவு மைய அரசு ராணுவத்தை ஏவி நூற்றுக்கணக்கான மாணவர்கள் இளைஞர்களை சுட்டுப் பொசுக்கி மொழியை காப்பதற்கான போராட்டத்தை ஒழித்துக்கட்ட முனைந்தது.

தோழர் ராஜூ உரை
தோழர் ராஜூ உரை

சுட்டு கொல்லக் கொல்ல போராட்டத் தீ மேலும் மேலும் பற்றி படர்ந்து இந்திய அரசை ஆட்டம் காண வைத்தது. பயந்து போன மத்திய அரசு இந்தி திணிப்பை கைவிட்டு, அனைத்து தேசிய இனங்களின் மொழிகளை அங்கிகரித்தது.

இன்றோ பார்ப்பன பாசிச பாஜக மீண்டும் ஒரு பண்பாட்டு ஆக்கிரமிப்புப் போரை தொடுத்துள்ளது.

  • பிறப்பிலேயே ஏற்றத்தாழ்வை கற்பிக்கும் மனுதர்மம், பகவத்கீதை உட்பட பல பிற்போக்கு மூடத்தனத்தை கற்பிக்கும், இவற்றிற்காக கொலை, களவு, பொய், கற்பழிப்பு போன்ற கிரிமினல் குற்றங்களை செய்யத்தூண்டும் வேத நூல்களை கொண்டதே சமஸ்கிருத மொழியின் பண்பாடு.
  • ”யாதும் ஊரே யாவரும் கேளிர்” , “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என சமத்துவத்தை உயர்த்திப் பிடித்த “பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்” கொல்லாமை, கள்ளுண்ணாமை, பொய் சொல்லாமை, பிறன்மனை நோக்காகமை போன்ற உயரிய அறங்களை கற்பிக்கின்ற பண்பாடுதான் நமது பண்பாடு.

இந்த தமிழையும் தமிழ் பண்பாட்டையும் காக்க ஆரிய பார்ப்பன பண்பாட்டு ஆக்கிரமிப்புக்கு எதிராக மொழிப்போர் தியாகிகளின் வழியில் மீண்டும் வீறுகொண்டெழ உறுதியேற்போம்” என அறைகூவி அழைத்து தனது உரையை முடித்தார்.

அதன்பின் ஆரிய பார்ப்பன எதிர்ப்பு போரின் தளப்பிரதேசமாக தமிழகத்தை கட்டி அமைப்போம் என மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுகொண்டனர்.

virudai-anit-hindi-imposition-protest-12தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
அமைப்புக் குழு
விருத்தாசலம்

(சென்னையில் நடந்த பிரச்சாரம், தெருமுனைக்கூட்டம்)

– தொடரும் (திருச்சி, வேதாரண்யம், விழுப்புரம், கரூர், பெண்ணாகரம், புதுச்சேரி நிகழ்வுகள் மற்றும் அறந்தாங்கியில் நடக்கவிருக்கும் பொதுக்கூட்டம் பற்றிய செய்திகள்)